மின் நூல்

Friday, December 22, 2017

பாரதியார் கதை -3

                                                                           3


பாரதியாரின் அத்தை குப்பம்மாளுக்கு ருக்மணி என்று இன்னொரு பெயரும் உண்டு.   அவரைப் பற்றிய  பல குறிப்புகளில் ருக்மணி என்றே காணப்படுவதால் பெயர்க் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க நாமும் ருக்மணி என்றே பாரதியாரின் அத்தையை இனி குறிப்பிடுவோம். பாரதியின் அத்தை ருக்மணியின் கணவர் பிரம்மஸ்ரீ கிருஷ்ணன் சிவன்.

பாரதியாருக்கு ஒரு தங்கை உண்டு.  அவர் பெயர் லஷ்மி.  லஷ்மியின் கணவர் பெயர் கேதர்நாத் சிவன்.

கேதர் நாத் சிவனின் அண்ணன் விஸ்வநாதன் சிவன்.  இவரின் மனைவி பார்வதி.  இந்தப் பார்வதி பாரதியாரின் துணைவியார் செல்லம்மாவின் சகோதரி.

1897-ம்  வருடம்  ஜூன் மாதம்  27-ம்  தேதி.  இந்தத் திருநாள்  தான்  சுப்பிரமணிய பாரதியாருக்கும்  செல்லம்மாவுக்கு திருமண நன்னாள்.

அதே நன்னாள் அன்று  பாரதியாரின் தங்கை  லஷ்மி-- கேதர்நாத் சிவன் திருமணமும்,  விஸ்வநாதன் சிவன்-- பார்வதியின் திருமணமும் நடந்திருக்கின்றன.

பாரதியாரின் தங்கை கணவரின் அண்ணன் பாரதியாரின் துணைவியார் செல்லம்மாவின் தமக்கையை மணந்து கொண்டார்.

ஒரே நாளில் ஒரே மேடையில் குடும்ப உறவுகளுக்குள்ளேயே நடைபெற்ற மூன்று திருமணங்கள். 

அக்காலத்தில் ராமேஸ்வரம் தீர்த்த யாத்திரை போகும் பக்தர்களுக்கு  அன்னதானம் செய்யும் கைங்கரியத்தை  பாரதியாரின் தாத்தா புலி சுப்பையரும்,  கிருஷ்ண சிவனின் தந்தை மீனாட்சி வல்லபரும் செய்து வந்தனர்.   அவர்களின் தருமச்  செயல்களை  மெச்சும் காரியமாக அந்நாளைய ராமநாதபுரம் சேதுபதி ராஜா தன் ராஜாங்க பிரதிநிதிகளை அனுப்பி வைத்து இந்த மூன்று திருமணங்களையும் சிறப்பாக நடத்தி வைத்தார்.

தூத்துக்குடி செல்லும் வழியில் உள்ள சின்ன கிராமம் மாகுளம். இந்த கிராமத்தில் கிருஷ்ண சிவனின் முன்னோர்கள் காலத்திலிருந்து அவர்களுக்குச் சொந்தமான நிறைய நிலபுலன்கள் இருந்தன.   1857- 58 காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தில் நீர் வற்றிப் போய் பயிர் நிலங்கள் எல்லாம்  தரிசுகளாகி மிகப் பெரிய வறட்சியில்  அந்தப்  பகுதியே சிக்கிக் கொண்டது.  இனிமேல் இங்கிருந்து வாழ முடியாது என்ற சூழலில் மீனாட்சி வல்லபரின் தமையனார் வெங்கடேஸ்வர சிவன் கடுமையான வழிப்பயணங்களை மேற்கொண்டு  ஒரு வழியாக காசிக்கு வந்து சேர்ந்தார்.

காசியில் காலூன்றி அவர் காலத்தில் வாங்கிப்  போட்ட மனைகளில் சங்கர மடமும் சிவ மடமும் கட்டப்பட்டன.   பிரிட்டிஷார் காலத்தில் கூட கோயில் சார்ந்த மனைகள், மடங்கள் இவற்றிற்கு வரி விலக்குகள்  அளித்திருந்தார்கள்.   அதனால் வீட்டோடு சேர்ந்து  கோயிலும் உருவாகின.   சிவ மடத்திலும் சித்தேஸ்வரன், சித்தேஸ்வரி  என்று மூர்த்திகளை பிரதிஷ்டை செய்தனர்.  இன்றும் இக் கோயில்களை சிவ மடத்தில்  காணலாம்.   காஞ்சிப் பெரியவர் இந்த மடத்திற்கு வந்து ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை பண்ணி வைத்திருக்கிறார்.  இக்கோயிலில் நந்திகேஸ்வரர் மீது நாகம் இருப்பது இன்னொரு அதிசயம்.

பாரதியின் தகப்பனார் சின்னசாமி அய்யர் இறந்த பொழுது காசியிலிருந்த சின்னசாமி அய்யரின் சகோதரி ருக்மணி தம்பியின் இறுதிச் சடங்குகளுக்காக எட்டையபுரம் வந்தவர்,  காசி திரும்பும் பொழுது தன்னுடன் பதினாறு வயது பாரதியையும் அழைத்துச் செல்கிறார்.  பாரதி மட்டுமல்ல, பாரதியாரின் பாட்டி, கிருஷணன் சிவத்தின் தாயார், பாட்டி என்று அத்தனை பேரையும் கூட்டிச் செல்கிறார்.   ருக்மணி அம்மையாரின் அன்பையும் விட்டுக் கொடுக்காத குடும்ப பாசத்தையும் இந்தக் காலப் பார்வையில் நினைத்துப்  பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.


பாரதிக்கு காசியில் புத்தகங்களில் மேல் இருந்த காதலைத் தீர்த்து வைத்தது தியாசாபிகல் சொசைட்டி தான்.    ஷேக்ஸ்பியர், ஷெல்லி, பைரன் என்று எல்லா எழுத்துச் சிற்பிகளின் நூல்களும் பாரதியாருக்கு அங்கு வாசிக்கக்  கிடைத்தன.    அதற்காகவே தினமும்  மாலை வேளைகளில் நாள் தவறாமல் பாரதி காசி தியாசாபில்  சொசைட்டிக்குச் செல்வார்.  சொசைட்டியும் பாரதியார் வீட்டுக்கு அருகாமையில் இருந்திருக்கிறது..   சொசைட்டிக்கு போகும் வழியிலேயே அன்னி பெசண்ட் அம்மையார் தங்கியிருந்த வீடு இருந்தது.    கோட்டு, வேஷ்டி, தலைப்பாகை என்று  வித்தியாசமான உடை அலங்காரத்துடன் தன்  வீட்டைக் கடந்து  செல்லும் அந்த இளைஞன்  அன்னிபெசண்ட் அம்மையாரின்  கவனத்தைக்  கவர்ந்திருக்கிறான்.

ஒரு நாள் தன் வீட்டு ஜன்னல் அருகே அமர்ந்திருந்த அம்மையார்  அவர் வீட்டின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த தலைப்பாகை  இளைஞனைப்  பார்த்ததும் தன்னை மீறிய ஆவலில், "ஹலோ.. " என்று உரக்கக் கூவி அழைத்திருக்கிறார்.   திரும்பிப்  பார்த்த பாரதியை, 'இங்கே வா' என்று சைகை காட்டி அழைத்து, "நீ யார்ன்னு நான்  தெரிஞ்சிக்கலாமா?"  என்று கேட்டிருக்கிறார்.

"நான் சுப்பிரமணிய பாரதி..." என்று நெஞ்சை நிமிர்த்தி தன்னை அம்மையாருக்கு அறிமுகப்படுத்திக்  கொண்டார். "எனக்கு வரலாற்று நாயகர்களையும்,  ஷெல்லி போன்ற கவிஞர்களையும் மிகவும் பிடிக்கும்.  அவர்கள் எழுத்தைப் படிக்கவும், அவர்களைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளவும் தான் தினசரி தியாசாபிகல் சொசைட்டிக்கு செல்கிறேன்.   இங்கே அருகில் என் அத்தை வீட்டில் தங்கியிருக்கிறேன்." என்று பாரதி தன்னைப்  பற்றிச் சென்னனும் அவரை வீட்டுக்குள் அழைத்து அம்மையார் பேச்சுக்  கொடுத்திருக்கிறார்.;

"எனக்கு ஆங்கிலேயரின் நடவடிக்கைகள் ஒன்றும் சுத்தமாகப்
பிடிக்கவில்லை.  அவர்களை எப்படியாவது இந்த நாட்டை விட்டுத் துரத்தி விட வேண்டும் என்று அல்லும் பகலும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  அதற்காக என் பள்ளித் தோழர்கள் எட்டு பேரைக்  கொண்டு இளைஞர் காங்கிரஸ் என்ற அமைப்பை அமைத்திருக்கிறேன்.  ஆங்கிலேயரை இந்த நாட்டை விட்டு விரட்டுவதில் நாம் பயம் கொள்ளலாகாது.   துணிந்து ஏதாவது  செய்தாக வேண்டும்.." என்று பாரதியார் தன்  மனத்தை உறுத்தும் சிந்தனைகளை அம்மையாரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.   

பாரதியார் நுழைவுத் தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மத்திய  இந்துக் கல்லூரி  (Central Hindu  College)     அன்னிபெசண்ட் அம்மையார் நிறுவியது.  தான் அந்த அம்மையாருடன் தான் பேசிக்  கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த பாரதியாருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை..

"நான்  மதன் மோகன் மாளவியா அவர்களைச் சந்திக்க வேண்டுமே.. அந்த சந்திப்புக்கு உங்களால் ஏதாவது உதவி செய்ய முடியுமா?" என்று கேட்டிருக்கிறார்.

இந்த   இடத்தில்  மதன்  மோகன்  மாளவியா எப்படி பாரதியாரின் உள்ளத்தைக் கவர்ந்தவராய்  இருந்தார் என்பதைச் சொல்ல வேண்டும்.  பாரதியார்  காசி  மத்திய  இந்துக்  கல்லூரியில் படித்துக்  கொண்டிருந்த காலத்தில் காசியில் ஒரு பல்கலைக் கழகத்தை நிறுவ மதன்  மோகன் மாளவியா வீடு வீடாகச் சென்று நிதி  திரட்டிக் கொண்டிருந்தார்.  அவர் நிதி திரட்டிய பட்டியலில் பெரும் பணக்காரர்களும் உண்டு;  பரம ஏழைகளும் உண்டு.  அவரது அயராத  அந்த முயற்சியால் தான் காசி பல்கலைக் கழகம்   (Banaras  Hindu University)  உருபெற்றது.

அன்னி பெசண்ட் அம்மையார்  மாளவியாவிடம் சொல்லி பாரதியார் அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறார்.

அந்த நாளும் வந்தது.



(வளரும்)

உசாத்துணை:  பாரதியாரின் அத்தை ருக்மணி அம்மாளின் பேரன் பெரியவர் கே.வி. கிருஷ்ணன் நினைவிருக்கிறதா?..  அவர் ஒரு பேட்டியில் சொன்ன தகவல்களைத்  துணையாகக் கொண்டு.

படங்கள் உதவியவர்களுக்கு நன்றி.



Monday, December 18, 2017

பாரதியார் கதை - 2

                                                                         2

வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் நம்மைக் கேட்டுக் கொண்டு வருவதில்லை.

அதிலும் ஒரு விசேஷம் என்னவென்றால்  எந்த நெருக்கடியிலும் அடுத்து நடக்க வேண்டியது இது தான் என்று ஏற்கனவே யாரோ தீர்மானித்து வைத்திருக்கிற மாதிரி அந்த அந்த நேரத்து அது அது நமது எந்த பிரயாசையும் இன்றி சொல்லி வைத்தாற் போல நடப்பது தான். 


இதை பகவான் கிருஷ்ணர் உபதேசித்ததாகச் சொல்லப்படும் 'எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது' என்ற கீதாச்சாரம் வரியோடு இணைத்துச் சொல்லலாம்.  நடப்பது எதுவும் நம் தேவைகளுக்காக நம்மை இணைத்துக் கொண்டு தான் செயல்படுகின்றன.  இது இந்துத்வா என்றால் இந்துத்வா; இல்லை,   நம்மை நாமே புரிந்து  கொள்வதற்கான ஞானம் இது என்றால் ஞானம்.

தன்  தந்தை மறைவுக்குப் பிறகு அலமந்து நின்ற பாரதியார் வாழ்விலும் அவர் அடுத்தப்படியாக என்ன செய்ய வேண்டும் என்பதற்கு வழிகாட்டல் கிடைக்கிறது.  பாரதியாரின் தந்தை சின்னசாமி அய்யரின் சகோதரி  காசிமாநகரில் இருந்தார்.   அந்த மாதரசியின் பெயர் குப்பம்மாள்.  குப்பம்மாளும் அவர் கணவர் கிருஷ்ணசிவனும் தமிழ் நாட்டிலிருந்து சிவ ஸ்தலமான காசிக்கு வரும் யாத்திரிகர்களுக்கு வேண்டுகிற உதவிகளை தாமாக முன் வந்து செய்யும்  மேன்மயான குணம் பெற்றிருந்தார்கள்.   சொந்த  சகோதரனின்  மகன் நிலை புரிந்ததும்  'நீ  காசிக்கு வந்து விடு' என்று அத்தையிடமிருந்து பாரதியாருக்கு அழைப்பு வந்தது.  எந்த சக்தி பாரதியை உந்தித் தள்ளியதோ  தெரியவில்லை,  மறுக்காமல் பாரதியும் உடனே காசி கிளம்பி விட்டார்.

'யாதும் ஊரே; யாவரும்  கேளிர்' என்பது  தமிழ்ச் சான்றோனின்  அமுத
வாக்கு.  யாதும் ஊராயினும்  ஒவ்வொரு தலத்திற்கும் இயற்கையின்  கொடையால் விதவிதமான நேர்த்திகள் கிடைத்திருக்கின்றன என்பதும் நமது புரிதல்களில் ஒன்றாகியிருக்கிறது.  காசி 15000 வருடங்களுக்கு மேலான பழைமை வாய்ந்த இடம்.

புனித கங்கை நதியின்  அருட்கொடை பெற்ற காசி மாநகரம் கல்விச்சாலை களுக்கும் வேத விற்பன்னர்களுக்கும் பெயர் பெற்ற நகரமாக விளங்கியது தான் பாரதியின் எதிர்கால வாழ்க்கைத் திருப்பங்களுக்கு பெரும் கொடையாக அமைந்தது. 

அத்தையின் வீடு கங்கைக்கரையோரம் இருந்தது.  ஹனுமந்த் காட் படித்துறைக்கு வெகு அருகில்.  பாரதிக்கு கங்கைக்கரையே மனம் லயிக்கும் இடமாக மாறிப் போனது.

"இன்னது  நீர்க்கங்கை யாறு எங்கள் ஆறே
இங்கிதன் மாண்பினுக்கு எதிரெது வேறே.." என்று கவிதை அவர் சிந்தனையில் கொப்பளித்துக் கிளம்பியது.  காசி மிஷன் கல்லூரியும், ஜெயின் நாராயண் கல்லூரியும் பாரதியின் கல்விச்சாலைகள்.  அலகாபாத்
சர்வ கலாசாலை நுழைவுத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார்.
 ஹிந்தியும், சமஸ்கிருதமும் இயல்பாகவே அவரது கல்வி கற்றலுக்கு துணை நின்று பரந்து விரிந்த பார்வையைத் தந்தன.  காசி நகரில் சில காலம் பள்ளி  ஒன்றில் பாரதியார் ஆசிரியப்பணியும் ஆற்றியிருக்கிறார்.

வாலிப வயதின் ஆரம்பப் பருவம் என்பது மிக முக்கியமான ஒன்று. சிறுவன் நிலையிலிருந்து வாலிபத்தின் தலை வாசலில் நிற்கும் பொழுது புதுச் சிந்தனைகளும், கருத்துக்களும் மிகச் சுலபமாக மனசை ஆக்கிரமிக்கின்றன.   ஒரு  முழு  மனிதன் உருவாகத் தொடங்குகிற ஆரம்ப காலத்தில் உளவியல் பாங்கில் இந்தப்  பருவம் புதுக்கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு தன்னில் விதைத்துக் கொள்ள விளைநிலமாய் காத்திருக்கிறது.  அந்த பருவத்தில் பாரதிக்குக்  கிடைத்த பேறாய் வடபுலத்துக் கல்வியும் அமைந்த வாழ்க்கை அனுபவங்களும் மன விசாலத்தை உருவாக்குவதில் பெரும் பங்களிப்பைத் தந்திருக்கின்றன.

இமயம் முதல் தெற்குக் கோடி குமரி வரை ஒரே நாடு-- அது எங்கள் பாரதம் என்ற இருமாப்பு மனசில் ஏறி அமர்ந்தது.  'காவிரியும் நமதே; கங்கையும் நமதே' என்ற அகண்ட பாரதப்  பார்வை.  இந்த 'ஏக இந்தியா' உணர்வு தான் பாரதி காசி போய் படித்ததின் பெரும் பலன் என்று இன்றும் என் எண்ணமாய் இருக்கிறது.  தமிழகத்தில் எனக்கமைந்த வாலிபப் பருவ கல்விச் சூழல்களின் அனுபவங்கள் இந்த எண்ணத்தை உறுதிபடுத்துகின்றன.

கங்கையாற்று ஹனுமான் காட்டிற்கு வெகு அருகில் சின்ன சந்து போல இருக்கும் தெருவில்  இன்றைய சங்கர மடத்திற்கு எதிரில் இருக்கும் * 'சிவ மடம்' என்று பெயர் பொறித்திருக்கும் நீண்ட குடில் தான் பாரதியின் அத்தை வீடு.  மாமா கல்விமான்.  வீட்டிற்கு வேதம் படித்த  பண்டிதர் நிறைய பேர் வந்து போவார்கள்.  அவர்களுடன் பேசிக்  களிக்கவும்,  கருத்து விவாதங்கள் நடத்தவும் பாரதிக்கு அந்த இளம் வயதிலேயே வாய்ப்புகள் அமைந்தன.

அந்த வயதில் ஆங்கிலக் கவிஞன் ஷெல்லி விடுதலை உணர்வைப் போதித்த  பாரதியின் உள்ளம் கவர்ந்த கவிஞானான்.  கங்கைக்கரை படிக்கடிக்கட்டுகளில் ஷெல்லியின் கவிதைப் புத்தகமும் கையுமாக உலாவிக் கொண்டிருப்பாராம் பாரதி.  வாசித்து அறிந்திருக்கிறேன்.  பிற்காலத்தில் 'ஷெல்லி தாசன்'  என்றே அவர் புனைப்பெயர்  கொண்டார்.  இருப்பினும்  ஷெல்லியிடமிருந்து பெற்ற கவிதானுபவம்  பாரதியின் காதல் கவிதைகளில் மட்டும் அவனது நீட்சியாயிற்று.  அந்தக் காதலையும் கண்ணன் மேல் கொண்ட  காதலாக ஆண்டாளைப் போன்ற இறைக்காதலாக உருமாற்றிக் கொண்டவர் பாரதியார்.   அவரது முதல் காதலையும் இறைக்காதலாக உருவகம் கொள்ளவும் முடியும்.   'ஆங்கோர் கன்னியைப் பத்துப் பிராயத்தில் ஆழ நெஞ்சில் ஊன்றி வணங்கினன்' என்று  கன்னியை வணங்குவதாக மானசீகமாக  அந்த தெய்வக் கன்னிகைக்கு மரியாதை கொடுக்கிறார் என்று இப்பொழுதிய ஞானோதயம்.

ஒரு நாளைக்கு பலமுறை கங்கை நீரில் மூழ்கி எழுவாராம் பாரதி.  கங்கை அவர் மனசில் ஒரு நதியாக தோற்றம் கொள்ளவில்லை.  காற்றும் தெய்வம்; கங்கையும் தெய்வம் தான் அவருக்கு. 

காசி வாழ்க்கை இளம் வயது பாரதியிடம் உடை மாற்றத்தையும் கொடுத்திருக்கிறது.   கச்சம் வைத்துக் கட்டிய வேஷ்டி, கோட், தலைப்பாகை என்று அந்நாளைய பேராசிரியர்கள் தோற்றம் கொடுத்திருக்கிறது.   பால கங்காதர திலகரின்  சுதந்திர வேட்கை கொண்ட வீர  உரைகள் அவர் நாடி நரம்புகளில் முறுக்கேற்றியது.  காசி வாசம் அவருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.

வாழ்க்கையின் போக்குகள் நாம் நினைக்கின்ற மாதிரி அமைவதாகப் போக்குக் காட்டினாலும் இந்தப் பகுதியின் ஆரம்பத்தில் சொன்ன மாதிரி வாழ்க்கையின் திருப்பங்கள் நம்மைக் கேட்டுக் கொண்டு வருவதில்லை.

காசி வாழ்க்கையை மிகவும் நேசித்த பாரதி மீண்டும் எட்டையபுரம் திரும்ப நேரிட்டது.


(வளரும்)


========================================================================


 *  சென்ற தடவை காசி ஷேத்திரத்திற்குச் சென்ற பொழுது,  பாரதி இளம் பருவத்தில் வாழ்ந்த 'சிவ மடம்'  குடிலில் நுழைந்து பார்க்கும் பாக்கியம் கிட்டிற்று.  வீட்டின் நுழைவுப் பகுதியில் ஆர்ச் மாதிரியான வளைவுக்குக் கீழே இந்தியிலும் தமிழிலும்  'சிவ மடம்' என்று சிமெண்ட் எழுத்துக்களில் பொறித்திருக்கிறது.  நான் போயிருந்த பொழுது பெரியவர் ஒருவரைச் சந்திக்கும் பேறு கிடைத்தது.  பெரியவரின் பெயர் கே.வி. கிருஷ்ணன். பாரதியாரை காசி வாழ்க்கைக்கு அழைத்து பெருமை பெற்ற பாரதியின் அத்தை குப்பம்மாள் அவர்களின் பேரனாம் இவர்.  காசி தமிழ்ச் சங்கத்தின் தலைவர்.  தான் பாரதியின் குடும்ப உறவுமுறை  என்பதில் ஏகப்பட்ட பெருமிதம் அந்தப் பெரியவருக்கு.  பாரதிக்குப் பிற்காலத்தவர் இவர் ஆயினும் இவரிடமிருந்து  பாரதியைப்  பற்றி நிறைய அந்நாளைய தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் முடிந்தது.  மடத்தில் பாரதியின் மார்பளவு சிலை ஒன்றும் உண்டு.
========================================================================

படங்கள் உதவியோருக்கு நன்றி.

Wednesday, December 13, 2017

பாரதியார் கதை

                                                                   
                                      1 








தென்பாண்டித் தமிழகத்தில் தேரோடும் வீதிகள் கொண்ட ஊர்  திருநெல்வேலி.

திருநெல்வேலி என்று அந்த ஊர் பெயர் பெறுவதற்குக் காரணங்கள் பலவாக இருக்கலாம்.   இருப்பினும் அந்த ஊரின் பெயரிலிருந்து  பெறப்படுகின்ற காரணம் எளிமையானது.   நெல் வயல்களே அந்த ஊரை வேலியாகச் சூழ்ந்து  இருந்ததால்  அவ்வூர் திருநெல்வேலி என்று பெயர் கொண்டது எனலாம்.

இப்பொழுது மாவட்டம் என்று அழைக்கப்படும்    பெரிய நகரங்கள் எல்லாம்  இதற்கு முன்னால் ஜில்லா என்று அழைக்கப்பட்டன..  திருநெல்வேலியும் ஒரு  ஜில்லா தான்.

திருநெல்வேலி  ஜில்லாவில்  எட்டையபுரம்  சின்ன ஊர்.   இப்பொழுது தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பேரூராட்சியாக  இருக்கிறது.   எட்டையபுரம் இளசை என்றும் அழைக்கப்படுகிறது.   பாண்டிய மன்னரின் ஆளுகைப்  பகுதியாக இருந்த இடம்.   பின்னர் பாளையக்காரர்கள் வசம் வந்தது.  ஆங்கிலேயர்கள் காலத்தில் சமஸ்தான மன்னர்கள்.

அது  1882-ம்  ஆண்டு.  எட்டையபுரத்தில் வாழ்ந்த சின்னசாமி ஐயருக்கும்,  இலஷ்மி அம்மாளுக்கும் பிறந்த குழந்தைக்கு சுப்பிரமணியன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.  குழந்தையை சீராட்டி வளர்த்தனர்.  சுப்பிரமணியனை செல்லமாக சுப்பையா என்று அழைத்தனர்.   சின்னசாமி அய்யர் சமஸ்தானத்தில் கணக்கு வழக்குகளை மேற்பார்வை செய்யும் பணியில்  இருந்தார்.  வசதியான குடும்பம் தான்.  குழந்தையின் ஐந்து வயது பிராயத்தில் தாயார் இலஷ்மி அம்மாள் இயற்கை எய்தினார்.

*தாய்வழி பாட்டனாரின் வளர்ப்பில் குழந்தை சுப்பையா வளர்ந்தான்.  ஆங்கிலம், தமிழ்,  கணிதப்  புலமையில்  தேர்ச்சி பெற்றிருந்த சின்னசாமி ஐயர் தன் அருமை மகனும் இப்படியான கல்விக்கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.  ஆனால் சுப்பிரமணியனுக்கோ கணிதம் என்றால் அது வேப்பங்காயாகக் கசந்தது.  அவனுக்கோ கவி புனையும் ஆற்றலில் பெரும் ஈடுபாடு இருந்தது.  கண்டிப்பு கொண்ட தந்தை தெருப் பிள்ளைகளுடன் கூடி ஆடி விளையாட தன்னை அனுமதிக்காமல் இருந்த நேரத்து தன் மனதில் குவிந்த ஏக்கத்தை பிற்காலத்தில் தன் கவிதை வழியே வெளிப்படுத்தவும் செய்திருக்கிறார்.#

பாரதிக்கு ஏழு வயதாகும் பொழுது சின்னசாமி அய்யர், வள்ளியம்மாள்என்னும் மங்கையை மறுமணம் புரிகிறார்.  வழக்கமான சீற்றம் கொண்ட சிற்றன்னையாக இல்லாமல் வள்ளியம்மாள் தாயில்லா சிறுவன்  சுப்பிரமணியனுக்கு பெற்ற தாயாகத் திகழ்ந்தாள்.  சிறுவனுக்கு உபநயனம் செய்து வைக்கின்றனர்.

சமஸ்தான பணிகளுக்குச் செல்லும் பொழுது சிறுவன் சுப்பிரமணியனையும் கூடவே அழைத்துச் செல்லும் பழக்கமும்  சின்னசாமி அய்யருக்கு இருந்தது.  அதுவே சுப்பிரமணியனுக்கான சமஸ்தான அறிமுகத்தையும் ஏற்படுத்தியது.

எட்டையபுர மன்னருக்கு தமிழ்க்காதல் உண்டு.  சமஸ்தானத்து மன்னர் அவையில் தமிழ் மொழியில் ஆற்றல் மிகுந்தவர்கள் கெளரவிக்கப்பட்டனர்.  சமஸ்தானப் புலவர்கள் தரும் ஈற்றடிக் கொண்டே முழுக்கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தான் சிறுவன் சுப்பிரமணியன்.

இந்த ஆற்றல் சுப்பிரமணியனின் பதினோரு வயதில் கவிதைப் பிழம்பாய் ஜொலித்து நாம் இன்றும் முண்டாசுக் கவிஞனை நினைவு கொள்கிற 'பாரதி' என்ற பட்டப்பெயர்  எட்டையபுர அவைக் களத்தில் அவன் கொள்ள ஏதுவாயிற்று.

சிவஞான யோகியார் அக்காலத்தில் சிறப்புப் பெற்ற புலவர்.  அவர் தலைமையில் எட்டையபுர தமிழ்ச் சான்றோர் கூடியிருந்த அரசவையில் பதினோரு வயது சுப்பிரமணியனின் கவிதை புனையும்  ஆற்றலைக் கண்டு மகிழ்ந்து  எட்டையபுர மன்னர்  'பாரதி' என்ற பட்டத்தை அவனுக்கு அளிக்கிறார்.   சிறுவன் சுப்பிரமணியன், சுப்பிரமணிய பாரதி ஆகிறான்.

பாரதியின் தந்தைக்கோ தன் மகன் ஆங்கிலப் புலமையும், கணித மேன்மையும் கொண்டு தன்னை போல அரசவையில் அதிகாரி தோரணையில் உலா வர வேண்டும் என்ற கனவு.   அந்தக்  கனவை நனவாக்க  பாரதியை  திருநெல்வேலி திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியின் உயர்நிலைப் பள்ளியில் சேர்த்திருந்தார்.   அந்த வயதிலேயே ஆங்கிலக் கல்வி கற்பதில் பாரதிக்கு உள்ளூர ஒரு வெறுப்பு படிந்திருந்தது.@

காதற் வயப்பட்டோருக்கு விநோதமான அனுபவங்கள் உண்டு.  காதலில்  முதற் காதல் என்பதும் உண்டு என்போர் அனுபவப்பட்டோர்.  மராத்திய எழுத்தாளர் காண்டேகர் 'முதல் காதல் என்பது வெட்டி விட்டுப் போகும் மின்னல்' என்று சொல்லுவார்.  'ஏதோ பருவக் கோளாறு; அது காதலே அல்ல' என்பது அவர் கட்சி..  ஒருவிதத்தில் அவர் சொல்வது நியாயம் தான்.  முதல் காதலுக்கு வாழ்க்கை பூராவும் அதை நினைத்து உருகுகிற, தேகம் பூராவும் உருக்குகிற சக்தி கிடையாது..  காண்டேகர் அகராதியில் முதல் காதல் உப்புக்கு சப்பாணி காதல்.   நிஜக்காதல் என்பது அதுக்குப் பின்னால் வருவது.  இது  தான் காதல் என்று காதலுக்கான அர்த்தம் என்னவென்று தெரிந்து கொண்ட பின்னாடி அர்த்தபூர்வமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் விளைவது.

'காதல், காதல், காதல் போயிற்-- சாதல், சாதல், சாதல்' என்று காதல் பொய்த்துப் போயின் சாதல் தான் என்று பரிந்துரைத்த பாரதிக்கும் முதல் காதல் அனுபவம் அவனது பத்து வயசில் வாய்த்ததாம்.  பத்து வயசில் வாய்ப்பதெல்லாம் காதலா என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. ஆனால் பாரதி தனது அந்தப் பிள்ளைக் காதல் உணர்வைப் பற்றித் தெளிவாகச் சொல்கிறான்..

"ஆங்கோர் கன்னியைப் பத்து பிராயத்தில்
ஆழ நெஞ்சிற் ஊன்றி வணங்கினன்;
ஈங்கோர் கன்னியைப் பன்னிரண் டாண்டனுள்
 எந்தை வந்து மணம் புரிவித்தனன்..

அதெல்லாம் சரி;  அதற்கப்புறம் அவன்  சொல்வது தான் முக்கியமானது:

"மற்றோர் பெண்ணை மணஞ்செய்த போழ்துமுன்
 மாதரா ளிடைக்  கொண்டதோர் காதல் தான்
 நிற்றல் வேண்டுமென உளத்தெண்ணிலேன்.."  என்கிறான்.

அந்தக் காதலை தன் தந்தையிடம் எடுத்துக் கூறும் திறனற்றுப் போயினேன் என்றும் சொல்கிறான்.   காண்டேகர் சொல்கிற மாதிரி முதல் காதல் காதலே இல்லை என்பதினால் அதைப் பற்றி அதிகமாகச் சொல்வதற்கும் ஏதுமில்லை.

'முதல் காதலாவது, இரண்டாவது காதலாவது?.. காதல் என்பது ஒன்று தான் ஐயா!'  என்பவர்களால் காண்டேகர் சொல்லும் இந்த முதல் காதலைப் புரிந்து கொள்ள முடியாது என்பது வாஸ்தவம் தான்.

பாரதிக்கு வாய்த்தது அவன் தந்தையார்,  சிற்றன்னை பார்த்து முடித்து வைத்த திருமணம்.

&நெல்லை இந்துக் கல்லூரி சார்ந்த உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுதே பாரதியாரின் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்தார் சின்னசாமி அய்யர்.  அந்தக் கால இளம் பருவ விவாகம்.   கடையம் செல்லப்பா அய்யரின் புதல்வி செல்லம்மாள் பாரதியின் கரம் பற்றும் பாக்கியம் பெற்றாள்.   திருமணத்தின் போது பாரதிக்கு 14 வயது;  செல்லம்மாவுக்கோ  ஏழே வயது.   பிற்காலத்தில்  அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைப் பெருமையைப் பார்க்கும் பொழுது  போட்டி போட்டுக் கொண்டு இருவரும் ஒருவர் பெருமையில் இன்னொருவரின் பெருமையைக் கரைத்ததாகவே தெரிகிறது.

இந்தத் திருமணம் நடந்து முடிந்த ஓராண்டிலேயே இதற்காகவே காத்திருந்து நடத்தி வைத்த கடமையை முடித்தாற் போல  பாரதியின் தந்தையார் சின்னசாமி அய்யர் காலமானார்.    'தந்தை தாய்  இருந்தால்  உமக்கிந்த        தாழ்வெல்லாம் வருமோ, ஐயா?'--  என்று சிவபெருமானை நினைத்து பொன்னையா பிள்ளை இயற்றி,  என்.ஸி. வஸந்த கோகிலம் பாடிய பாடல் ஒன்று உண்டு.   அம்பலவாணனின் அப்படியான நிலைதான் பாரதிக்கும்.

ஐந்து வயதில் தாயை இழந்து, பதினைந்து வயதில் தந்தையையும் இழந்து  தன் துயரம் தன்னையே சுமக்க  வறுமை சூழ்ந்த நிலையில் அநாதை போல  வாழ்க்கையின் வாசல் படிகளில் பாரதி நின்றார்.

தனது சுயசரிதைக் கவிதையில் பாரதி இதை சொல்லும் பொழுது இறுக்கிப் பிழிந்த துணி மாதிரி நம் மனமும் துவண்டு போகும்.  +


தன் பிள்ளைகள் பெரியவர்கள் ஆகும் வரை தன் பெற்றோர் வாழக் கொடுத்து வைத்தவர்களாலும்  இந்த உணர்வைப் புரிந்து கொள்ள முடியாது.



(தொடரும்)


=======================================================================


*  என்னை ஈன்று எனக்கு ஐந்து வயது பிராயத்தில்
    ஏங்க விட்டு விண் எய்திய தாய்   

               (தனது சுயசரிதையில் பாரதியார்)




#   ஆண்டோர் பத்தினில் ஆடியும் ஓடியும்
            ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும்
     ஈண்டு பன்மரத்து ஏறி இறங்கியும்
             என்னொடு ஒத்த சிறியர் இருப்பரால்;
      வேண்டு தந்தை விதிப்பினுக்கு அஞ்சியான்
              வீதி ஆட்டங்கள் ஏதினும் கூடிலேன்,
       தூண்டு நூற் கணத்தோடு தனியனாய்த்
               தோழமை பிரிதின்றி வருந்தினேன்.

                                                                               (சுயசரிதை: 4)

@     பள்ளிப் படிப்பினிலே மதி
         பற்றிட வில்லை எனினும் தனிப்பட 
         வெள்ளை மலரணை மேல் அவள்
         வீணையும் கையும் விரிந்த முகமலர்
          விள்ளும் பொருள் அமுதும் கண்டேன்
          வெள்ளை மனது பறிகொடுத்தேன் அம்மா

                                                                                 ('ஸரஸ்வதி காதல்'--1)



   
&   செலவு தந்தைக்கு ஓர் ஆயிரம் சென்றது;
                 தீது எனக்கு பல்லாயிரம் சேர்ந்தன;  
       நலம் ஓர் எள்துணையும் கண்டிலேன் அதை
                 நாற் பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்.

                                                                                  (சுயசரிதை: 29)



#  +     தந்தை போயினன்,   பாழ்மிடி  சூழ்ந்தது
                தரணி மீதினில்  அஞ்சல் என்பார் இலர்;
     சிந்தையில் தெளிவு  இல்லை;  உடலினில்
                திறனும் இல்லை; உரன் உளத்து இல்லையால்
       எந்த மார்க்கமும் தோற்றிலது  என் செய்கேன்?
                ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?..


                                                                                     (சுயசரிதை)சுயசரிதை)




Sunday, December 10, 2017

பாரதியாரின் கதை



                                         



                                                               



தென் பாண்டித் தமிழகத்தில் தேரோடும் வீதிகள் கொண்ட ஊர் திருநெல்வேலி.

திருநெல்வேலி என்று அந்த ஊர் பெயர் பெறுவதற்கு காரணங்கள் பலவாக இருக்கலாம்.  இருப்பினும் அந்த ஊரின் பெயரிலிருந்து பெறப்படுகிற காரணம் எளிமையானது.  நெல்வயல்களே அந்த ஊரை வேலியாகச் சூழ்ந்திருந்ததினால், அவ்வூர் திருநெல்வேலி என்று  பெயர் கொண்டது எனலாம்.

இப்பொழுது மாவட்டம் என்று அழைக்கப்படும் பெரிய நகரங்கள் எல்லாம் இதற்கு முன்னால்  ஜில்லா என்று அழைக்கப்பட்டது.  திருநெல்வேலியும் ஒரு ஜில்லா தான்.




                                                         விரைவில்  ஆரம்பம்


                                 இதுவரை பரவலாகத் தெரியாத பல  தகவல்களுடன்



                                              பாரதியாரின்  கதை

                                                                                   
                           
                                                             (நெடுந்தொடர்)         






Related Posts with Thumbnails