மின் நூல்

Thursday, March 28, 2019

வசந்த கால நினைவலைகள்


                                                                                     6


அடுத்த வாரமே அடுத்த புத்தகத்தை  NBT-காரர்கள்  தமிழ் மொழிபெயர்ப்புக்காக அனுப்பி வைத்து விட்டார்கள்.

புத்தகத்தின்  பெயர்:  WIND  ENERGY.    எழுதியவர்:   SUNEEL  B. ATHAWALE

சுனில் பி. அதாவாலே இந்தப் புத்தகத்தை தம்  பெற்றோருக்கு அர்ப்பணம் செய்திருக்கிறார் என்று தெரிந்தவுடனேயே நம் மதிப்பில் பெரிதும் உயர்ந்து போய் விடுகிறார்.   இந்த நூலின் முதல் பதிப்பை  2000 ஆண்டு நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா வெளியிட்டிருக்கிறது.

இந்த நூலை 'காற்று ஆற்றல்' என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்து அடுத்த இரண்டு மாதங்களில் NBT-யின்  தலைமையகத்திற்கு ஜீவாவால் அனுப்பி வைக்கப்பட்டது.    \

சூரியன் ஒவ்வொரு நிமிடமும் ஐந்து மில்லியன் டன் அளவு ஜடப் பொருள்களை ஆற்றலாக மாற்றுகிறது.  இந்த ஆற்றலில் மிகச் சிறிய அளவு பல்வேறு வடிவங்களில் பூமியை வந்தடைகிறது.  அவற்றில் காற்று  ஆற்றலும் ஒன்று. காற்றின் ஆற்றலானது  காற்றின் இயக்க ஆற்றல் சக்தியிலிருந்து  உருவாக்கப்பட்டு, இயந்திர அல்லது மின்சர ஆற்றல்
போன்றதொரு பயனுள்ள சக்தியாக மாற்றப்படுகிறது.  கி.மு. 4000 ஆண்டிலேயே காற்றின் ஆற்றலை  பூவுல வாசிகள் உணர்ந்திருந்தனர். பழங்கால எகிப்தியர்கள் பயன்படுத்திய பாய்மரப் படகிலிருந்து தற்கால தென்பகுதித்  தமிழகத்தில் மிகப் பிரபலமாக இருக்கும் காற்றாலைகள் (Windmills) வரை காற்றின் பன்முகப்பட்ட ஆற்றல்களை இந்த நூல் விவரிக்கிறது.

இடைப்பட்ட காலத்தில் இரண்டு நூல்களுக்குமான மொழிபெயர்த்த ஆசிரியருக்கான  தொகை+ இதர செலவுகள் எல்லாவற்றையும்  NBT தனது  பிரசுரங்களுக்கு வரையறுத்திருந்த பிரகாரம் அனுப்பி வைத்திருந்தார்கள்.    அத்துடன் அடுத்த நூல் மொழியாக்கம் பற்றியும் கேட்டிருந்தார்கள்.   AMIE,  IETE  தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்தலால்  மொழியாக்கப் பணியைத் தொடர முடியாமல் இருந்தது.   NBT-காரர்களும் சூழ்நிலையைப் புரிந் து கொண்டார்கள்.

AMIE- தேர்வும் சரி, IETE- தேர்வும் சரி,   கல்லூரி   பொறியியல் படிப்பை விட எந்தந்த  கோணங்களில் கடினமானது என்பதை ஏற்கனவே கோடி காட்டிக் குறிப்பிட்டிருக்கிறேன்.  ஆண்டுக்கு 6 பாடங்கள் என்று எடுத்துக்  கொண்டாலும் 4 ஆண்டிற்கு  24 பாடங்கள்.  ஒவ்வொரு பாடத்திலும் குறைந்த பட்சம் 40%  மதிப்பெண் வாங்கினால் தான் அந்தந்த பாடத்தில் தேர்ச்சி என்கிற விஷயத்தை கண்டிப்பாக அமுல் படுத்துகிற நிருவனங்கள்...  இயல்பாகவே ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டு தேர்வுக்கும் முயல்கிற பெரும் பகுதியினர் இந்த இரண்டு அகில இந்தியத் தேர்வுகளையும் எழுதுவதால் பாக்கி (arrears) வைத்துக் கொண்டு முழுமையான தேர்வு பெறாதவதர்களையே அதிகமாகக் கொண்ட பொறியியல் பட்டத்திற்கான  முயற்சியாக இந்த இரண்டு தேர்வுகளும்  இருந்தது இயல்பே.

நல்லவேளை வாசித்த நான்கு ஆண்டு தேர்வு  காலங்களில்  இரண்டு பகுதி வாசிப்புக்கும் ஒரே நாளில் எந்தத் தேர்வும் குறுக்கிடாதது நல்லதுக்கு ஆயிற்று.  (An Examination for AMIE or IETE was not held on the same date)  அப்படி நடந்திருந்தால், இதுவா அதுவா என்ற தடுமாற்றம் ஏற்பட்டு இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க நேரிட்டிருக்கும்..  அப்படி நடக்காததும் நல்லதே.

வரையறுத்திருந்த  நான்கே ஆண்டுகளில் நல்ல மதிப்பெண்களுடன் AMIE, IETE இரு  தேர்வுகளிலும் தேர்ச்சி..  பொறியியலில் மேற்படிப்பு என்ற அடுத்த இலட்சியத்தை நோக்கி நகர அண்ணா பல்கலைக் கழக பொறியியல் மேற்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தான்.  அந்தத் தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற்றுத் தேர்வாகி  M.E. பட்டப் படிப்புக்கான கவுன்சிலிங்  போகும்  பொழுது தான் அந்த சிக்கல் தலையெடுத்தது.  அந்த  நேர்முக ஆலோசனைக் குழுவினரிடம்  பொறியியல் படிப்பில் தேர்வானதின் மூலச் சான்று (original certificate) அளிக்க வேண்டும்.  பொறியியல் பட்டத்திற்காக இரண்டு தேர்ச்சிகள் பெற்றும்  அவ்வளவு சீக்கிரத்தில் வழக்கமாக மூலச் சான்று கிடைக்கும் என்பதே கனவாக இருந்தது.  சென்னை  AMIE தலைமை அலுவலகத்தில் நேரே போய்க் கேட்டதற்கு  எப்படியும் ஆறு மாதங்கள் ஆகலாம். அதற்கிடையில் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லி விட்டார்கள்.  அடுத்த பதினைந்தே நாட்களில்  கெளன்ஸிலிங்..

அப்போ பொறியியல் மேற்படிப்பு என்பது கானல் நீர் தானா என்று கலங்கியிருக்கிற நேரத்தில் அடுத்த  நாள் கவுன்ஸிலிங் என்றால் அதற்கு முதல் நாள் பதிவுத் தபாலில் IETE படிப்பு தேர்ச்சிக்கான மூலச் சான்று வந்து  சேர்ந்தது இறைவனின் கருணை என்று தான் சொல்ல வேண்டும்.  ஒரே பட்டப் படிப்புக்காக இரண்டு விதத்தில் படிப்பானேன் என்று அறியாமையில் நான் கேட்ட கேள்விக்கு 'இதற்காகத் தான் அது' என்ற பதில் தீர்க்கமாகக் கிடைத்து  விட்டது.  கவுன்ஸிலிங்கில் ஜீவா விரும்பிய Instrumentation  Engineering  பாடத்திட்டமே கிடைத்தது.   அதுவும் அப்துல் கலாம் ஐயாவும், எழுத்தாளர் சுஜாதாவும் வாசித்துப் பெருமை அடைந்த  MIT  (Madras Institute of Technology, Crompet) கல்வித் தலத்தில்!

இரண்டு வருடங்களில்  பொறியியல்  மேற்படிப்பு முடித்து  VIVA  முடித்து TCS  வளாகத் தேர்வில் (Campus selection)   தேர்ந்தெடுக்கப்பட்டு மும்பையில் வேலையில்  சேர்ந்து அவர்கள் பணிக்காக  New Jersy, America சென்று TCS-ல் அவர்கள் ஒப்பந்த வருடப் பணி நான் கு ஆண்டுகளை  திருப்தியோடு முடித்து அவர்களிடமிருந்து வாழ்த்துடன் விடைபெற்று அமெரிக்காவில் நிரந்தர பணி வாய்ப்பு பெற்றதெல்லாம் அடுத்தடுத்து நடைபெற்றவை.  எல்லாத்  தகுதிகளும் நல்லவர்களின் ஆசியால் தான் என்பதும் நினைப்பை விட்டு அகலாத வாசகமாய் நினைவலைகளில் தவழ்கிறது...

இதில் ஒரு வேடிக்கை பாருங்கள்.  அடிப்படைக் கல்வி என்பது பொறியியல் படிப்பு.  இடையில் அந்தத் தகுதியும் இருக்கட்டுமே என்று கற்றது கணினி அறிவியல்.  அந்த இருக்கட்டுமே என்ற கற்ற கல்வி தான் இன்று நிரந்தரப் பணிக்கு அடித்தளமாய் இருக்கிறது.  இந்த உண்மையை அலட்சியப்படுத்தி இன்றும் நம் நாட்டில் அடிப்படைக் கல்வியை (Academic Education) தேர்ந்தெடுப்பதிலும் அதற்கு அநாவசிய முக்கியத்துவம் கொடுப்பதினால் எதிர்மறை வாழ்க்கைச் சூழல் அமைவதற்கும் காரணமாகிப் போகிறோம் என்ற நிதர்சன உண்மையை என்னால் இந்த இடத்தில் நினைத்துப் பர்க்காமல் இருக்க முடியவில்லை.

அமெரிக்க கல்வி அமைப்பில் இப்படி இருப்பதில்லை.  அடிப்படைக் கல்வி என்பது ஏதோ ஒரு தகுதிக்காகத் தான்.  அந்தத்  தகுதியைப் பெறுவதற்கும் மற்ற துறை சார்ந்த தகுதிகள் காரணிகளாக இருக்கின்றன.  Extra curricular activities play a major role in education.   அங்கு சித்திரம் கற்றுக்  கொண்டு ஒரு சைத்திரீகனாக  வாழ முடியும்.  ஆனால் இங்கு அப்படியல்ல.  அப்படியான ஒரு நிலைமை நம் நாட்டிலும் வந்தால் இந்த மெகாலே கல்வி முறைக்கு ஒரு முடிவு கட்டலாம்.



(நண்பர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.  ஆங்கில வார்த்தைகளுக்கான சரியான தமிழ்ச் சொற்கள் தேர்வு செய்யத்  தடுமாறி வாசிப்பவரின் புரிதலுக்காக அப்படித் தேர்வு செய்த வரிகளைத் தவிர்த்தும்  அங்கங்கே ஆங்கிலச் சொற்களையே  உபயோகிக்கும்படி ஆயிற்று. )


Tuesday, March 26, 2019

வசந்த கால நினைவலைகள்

                                                 5

சீட்டுப் பணம், எல்.ஐ.ஸி. வீட்டுக் கடன், GPF அட்வான்ஸ்கள் என்று எல்லாம் சேர்ந்து  இரண்டே வருடங்களில்   சென்னையில்  நகர்ப்புறத்தில்  730 சதுர அடி புத்தம் புது வீடாக உருவெடுத்தது.  எல்லாமே மூன்று இலட்சத்திற்குள் அடக்கம்.   அந்த மூன்று  இலட்சத்திற்குத் தான்  அந்தக் காலத்தில் அவ்வளவு படாத பாடு.!..

சென்னை மீனாட்சி கல்லூரியில் தனியொரு கட்டிடத்தில் AMIE படிப்புக்காக வகுப்புகள் நடந்தன.  பெரும்பாலும் வெளியூர் மாணவர்கள்.  ஹாஸ்டல் தங்கல்.  என் பையனுக்கோ  +2 வில் கிடைத்த அனுபவம் ஹாஸ்டல் என்றாலே வெறுத்துப் போய்விட்டது.  சொந்த வீடு, சொந்த சமையல் என்று தீர்மானித்து விட்டான்.  அந்த நேரத்தில் Datapro என்ற கணினி நிருவனத்தில்  கணினிக் கல்வியும் கற்று வந்தான்.  அதற்காகவே தினமும் மைலாப்பூர் சென்று வந்தான்.  AMIE படிப்புக்காக சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடில் இருந்த ஒரு கல்லூரி விரிவுரையாளரிடம் காலை நேரத்தில் ஓரிரண்டு பாடங்களுக்கு  ட்யூஷன்.

AMIE படிப்பை முடித்தால் சார்ட்டர்டு இன் ஜினியர் பட்டம் கிடைக்கும்  அதற்கு மேல்  தொழிற்கல்விக்கான  மேற்படிப்பு படிக்க முடியும். ஆனால் ரெகுலர் வகுப்புகள் இல்லாமல் சொந்தத் திறமையில் படிக்க வேண்டியிருப்பதாலும் கல்லூரிக்குப் போகும் சந்தோஷம் இல்லாத வெறுமையினாலும் இளையோர் மத்தியில் இந்தக் கல்விக்கு ஆர்வம் இல்லாமலும் பெரும்பாலும் தெரியாமலும் இருந்தது.   பல தொழிற்கூடங்களில் AMIE  முடித்தால் இன்ஜினியருக்கான பதவி உயர்வு உண்டு என்பதாலும் ரெகுலர் கல்லூரிக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை என்பதினாலும் தொழிற்கூடங்களில் பணியாற்றும் பல வயதானவர்கள் வீட்டுப் படிப்பாகக் கொண்டு AMIE கல்வி கற்று வந்தனர்.  அதனால் இந்த படிப்புக்கே ஒரு வயதான களை என்றும் உண்டு.  தேர்வுக் கூடங்களில் கூட 40 வயதிற்கு மேலானவர்களே பெரும்பாலும் இருப்பர்.  அவர்களுக்கிடையே சிறு வயது  இளைஞர்களைக் கற்பனை பண்ணிக் கூடப் பார்க்க முடியாது.  என்றாலும் இந்தச் சூழ்நிலைகள் எல்லாம் என் மகனின் AMIE படிப்பு ஆர்வத்தைக் குலைத்து விடவில்லை  தனக்கு மறுக்கப் பட்டதை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்ற கூடுதல் உழைப்பார்வம்  மனத்தின் அடி ஆழத்தில்  பசுமரத்தில் பொறித்த எழுத்துக்கள் போலப் படிந்து  போய் விட்டது.

AMIE படிக்கும் பொழுதே என் மகன்  AMIETE என்ற கல்வியும் கற்று வந்தான்.
AMIE,  AMIETE என்ற இரண்டுமே ஒரே மாதிரியானவை தான்.  இரண்டுமே நான்கு வருட படிப்பு.  இரண்டுமே தொழிற்கல்வியில் மேற்படிப்புக்காக தகுதி உள்ளவை.  AMIE-க்கு தலைமையகம் கல்கத்தாவிலும்,  AMIETE-க்கு தலமையகம் தில்லியிலும் இருந்தது.  AMIETE  என்பதற்கு விரிவு,  Associate Member of Institute of  Electronics and Telecommunication Engineers.  அதனால் தொலைபேசித் துறையில் வேலை செய்வோருக்கு பதவி உயர்விற்கான வாய்ப்பளிக்கும் தேர்வாகவும் இது இருந்தது.   AMIE மற்றும் AMIETE இரண்டிலும் எடுத்திருந்த பாடம் என்னவோ Electonic and Telecommunication  கல்வி தான்.

நான் தொலைபேசித்  துறையில் இருந்தாலும் இதெல்லாம் பற்றிய ஞானம் இல்லாமலேயே இருந்தேன்.  எல்லாமே தன் முயற்சியில் என் மகன் தானே தெரிந்து கொண்டது தான்.   மவுண்ட் ரோடில் இருந்த  British  Consulate General அலுவலத்திலிருந்த  நூலகத்தில்  உறுப்பினராக பதிவு செய்து கொண்டான்.   அந்த வாசகசாலையில் தான் இந்த படிப்புகளுக்கான reference புத்தகங்கள் கிடைக்கும் என்று எனக்குப் பின்னால் தெரிந்தது.    மகனைப் பார்க்க  சென்னை வந்திருந்த பொழுது   ஒரு நாள் "ஏம்ப்பா.. இப்படி ஒரே மாதிரியான ரெண்டு படிப்பு படிக்கறதுன்னு  ஏன் அவஸ்த்தைப் படறே? . . படிப்பைக் குறுக்கிக்கோ.. ரொம்ப சிரமப்படாதே.." என்று அஞ்ஞானத்தில் நான்  சொன்ன போது, "இருக்கட்டும்ப்பா.. ஒண்ணும் சிரமமில்லை.." என்று ஒரே வரியில் பதில் சொல்லி விட்டான்.

ஒரே பாடதிட்டத்தில் அப்படியான இரண்டு கல்வி இறைவனின் ஏற்பாடு என்பது பின்னால் தெரிந்த பொழுது சிலிர்த்துப் போனேன்.   முன்னால் நடந்த சில செயல்களின் தாத்பரியம் முகத்தில் அறைந்த மாதிரி பின்னால் தெரியும் போது நாம் பல சமயங்களில் திகைத்துப் போகிறோம்.  இறைவனின் இருப்பு அப்பொழுது தான் நமக்கு புலப்படுகிறது.   இதற்காகத் தான் இதுவா என்று   கைகூப்பித் தொழுகிறோம்.

IETE கல்வியினுடனான தொடர்பு  National Book Trust, India-வை என் மகனுக்கு அறிமுகப்படுத்தியது.  தேசத்தின் தலைநகரிலிருந்த  NBT-யின் தலைமையகத்துடன் பழக்கம் ஏற்பட அவர்கள்  வெளியிட்ட சில ஆங்கில  புத்தகங்களை தமிழில் மொழியாக்கம் செய்ய  முடியுமா என்று கடிதத்  தொடர்பு கொண்டு என் மகனைக் கேட்டனர்.   அவனின் சம்மதம் கிடைத்ததும்   அவர்கள் அனுப்பி வைத்த முதல் புத்தகம்,   ROBO AND  ROBOTICS . இந்தப் புத்தகம் ஐஇடிஇ - எம்பிடி இணைந்த பதிப்பாக வெளியிடப் பட்டிருந்தது.

மூலப் புத்தகத்தை  ஆங்கிலத்தில் எழுதியவர் திரு. எம்.ஆர். சிதம்பரா.  கர்னாடக மாநிலம் 'சிரா'வில் பிறந்தவர்.  அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் பத்தாண்டுகள் பணியாற்றியவர். பின்னர் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின்  (Indian  Institute of Science)  கணினித் துறையில் பேராசிரியராக இருந்தவர்.  இங்கு ரோபோ பற்றிய கல்விக்காகவே  இளநிலை பட்டப்படிப்பைத் தொடங்குவதில் ஆர்வம் கொண்டிருந்தவர். இவரது  பெயர் அமெரிக்க அறிவியல் துறைசார் ஆண்கள், பெண்கள்  (American Men and women of Science)   பட்டியலில்  இடம் பெற்றுள்ளது. 

இந்த அறிஞரின் ROBOTS  AND  ROBOTICS  நூலை ஜீவா NBT-க்காக  தமிழில் மொழியாக்கம் செய்தான்.  'இயந்திர மனிதனும் அதன் இயக்கவியலும்' என்று தலைப்பிட்டிருந்தான்.  அந்நாளைய நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவில்  திருமதி சுப்புலஷ்மி என்ற அறிஞர் தமிழ் மொழிபெயர்ப்புக்கான பிரிவில் தலைமைப் பதவியில் இருந்தார்.  இந்த நூல் தலைப்பை அவர் மிகவும் பாராட்டி தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியிருந்தார்.

எந்த ஒரு மொழிபெயர்ப்பும் வார்த்தைக்கு வார்த்தை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றுவதில்லை. சொல்லும் கருத்தை உள்வாங்கிக் கொண்டு அர்த்தம் சிதைந்து விடாமல் இன்னொரு மொழியில் எடுத்துச் சொல்வது தான் நல்ல
மொழியாக்கத்திற்கான இலக்கணம்.  அந்த லாவகம் இந்த நூலில் மிகச் சிறப்பாக மிளிர்ந்தது என்றே சொல்ல வேண்டும்.

அறிவியல் நூலை மொழிபெயர்ப்பது மற்ற மொழியாக்கங்களை விட கொஞ்சம் சிரமம்.  பாடப்புத்தகங்கள்  மாதிரி வரட்டுத்தனமான நடை  அமைந்து விடக் கூடாது.  அதே நேரத்தில் நம் சொந்தக் கற்பனையில் எதுவும் எழுதி விடலாகாது.    அறிவியல் விஷயம் தான். இருந்தாலும் பண்டிதர்களின் கட்டுரை போலவும் இருந்து விடக் கூடாது.  படக் குறிப்புகளிலிருந்து முன்னட்டை, பின்னட்டை, முன்னுரை என்று  எல்லாவற்றையும் வாசிப்பவர் பார்த்தவுடன் இயல்பாய் வாசிக்கிற நடையில் அமைக்க வேண்டும்.   புதுப்புது தமிழ்ச் சொற்களை நம் மொழியில் நாமே தேர்ந்தெடுத்து அங்கங்கே மொழியாக்கத்தில் உபயோகப்படுத்தினால் இன்னும் எடுப்பாக இருக்கும்.  மொத்தத்தில்  பிற மொழிப் படைப்பை நம் மொழியில் ஆக்கப்பெற்ற நூல் போலவே  படித்துக் களிக்கிற நேர்த்தியில் அமைக்க வேண்டும்.

கன்னி முயற்சி தான்.  இருந்தாலும் தனக்கென்று தொற்றிக் கொண்ட உற்சாகத்திலும்,  ரோபோ இயக்கத்தை தமிழில் தெளிவாக எடுத்துரைக்க ஒரு அகில இந்திய அமைப்பின் ஆதரவில் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்ற தாகத்தில்  எந்தத் தவறும் நேர்ந்து விடக் கூடாது என்ற பொறுப்புணர்ச்சியுடன்  மொழியாக்கம் நிறைவுற்று  கையெழுத்துப்   பிரதியை தட்டச்சு செய்து    பதிவுத் தபாலில் NBT தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தாயிற்று...  ஒரே வாரத்தில் உங்கள் மொழிபெயர்ப்பு பிரமாதம் என்று என்பிடி தமிழ்ப் பதிப்பிலிருந்து கடிதம் வந்து விட்டது. அந்தக் கடிதத்திலேயே அடுத்து இன்னொரு அறிவியல் நூலை தங்களால் மிகச் சிறப்பாக தமிழில் மொழியாக்கம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது;  நூலை தங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கலாமா  என்றும் கேட்டிருந்தார்கள்..


(தொடரும்)


நூல் வேண்டுவோருக்கு:

இயந்திர மனிதனும் அதன்  இயக்கவியலும்   (ISBN 81-237-1905-1)

தமிழாக்கம்:  ஜீவா

நேஷனல் புக் ட்ரஸ்ட்,  இந்தியா

ஏ-5,  கிரீன் பார்க்,  புதுதில்லி -  110016

விலை:  ரூ. 24/-





Sunday, March 24, 2019

வசந்த கால நினைவலைகள்

                                                4


விக்கிரமன் சார் வந்ததும்  அனிச்சையாக எழுந்து கொண்டேன்.  கையில் பிடித்திருந்த அமுதசுரபி அப்படியே இருந்தது.

"உட்காருங்க, ஜீவி....." என்று சொன்னபடியே அவரும் இன்னொரு ஆசனத்தில் அமர்ந்தார்.  "என்ன இந்தப் பக்கம்?"

நான் வந்த வேலையே மறந்து போனது.  அந்த விளம்பரத்தைச் சுட்டிக் காட்டி, "இந்த இடம் எப்படி? உங்களுக்கு ஏதாவது இது பற்றித் தெரியுமா?"  என்று கேட்டேன்.

"ஏன் வாங்கற உத்தேசம் உண்டா?  நான் கூட ஒரு அப்பார்ட்மெண்ட் புக் பண்ணற யோசனை இருக்கு.." என்று  ஒரே போடாகப் போட்டார்.

"அப்படியா?.." என்று ஆச்சரியத்தில் மலர்ந்தேன்.

"எடம் தெரியுமோல்யோ?.. இப்படியே ஆர்ய கவுடர் ரோடிற்குப் போய் இடது பக்கம் திரும்பி நேரேப் போனா, லேக் வ்யூ ரோடெல்லாம் தாண்டி... நேராப் போகணும்.  நாயக்கமார் தெரு வந்தவுடன் அந்தத் தெருவில் போய் இடது பக்கம் திரும்பினேன்னா கன்ஸ்ட்ரக்ஷன் இடத்தின்  பின்புறம் வரும். கட்ட்டம் முன் பக்கம் பத்தாவது அவென்யூ மெயின் ரோடிலேயே இருக்கு.." என்று கட்டடம் எழும்பப் போகும் இடத்தை அடையாளம் காட்டினார்.

"ரேட்டெல்லாம் எப்படி, சார்?" என்று இதெல்லாம் நாம் இருக்கும் நிலைக்கு சரிப்பட்டு வருமா என்ற பயத்தோடையே கேட்டேன்.

"அதெல்லாம் அவா ஆபிள்லே தான் கேக்கணும்..  ஆபீஸ் பாண்டிபஜார்லே இருக்கு.  மணிமேகலை பிரசுரம்.. தணிகாசலம் தெரு தாண்டி.. விளம்பரத்திலேயே அட்ரஸ் இருக்கு, பாரு. குறிச்சிக்கோ.. நீ என்ன செய்யறேனா,  கட்டடம் எழும்பப் போற இடத்தை மொதல்லே போய்ப் பாரு.  அஸ்திவாரம் போட இப்போத்தான் தோண்டிண்டு இருக்கான்னு கேள்விப்பட்டேன்.  இடம் உனக்குப் பிடிச்சிருந்தா, அவா ஆபிஸ்லே போய் பேசிப் பாரு.."

"சரி.. அப்படியே செய்யறேன்.." என்ற பொழுது தான் கைப்பையில் வைத்திருந்த கதை ஞாபகம் வந்தது.  பழுப்பு நிற உரையிலிட்டிருந்த கதையின்  கையெழுத்துப்  பிரதியை எடுத்துக் கொடுத்தேன்.  "உங்க பரிசீலனைக்கு.." என்று இழுத்தேன்.

"கதையா?" என்றவர் "சரி.. நாளைக்குத் தான்  போறேன்.. ஆபீஸ்லே கொடுத்திடறேன்.." என்று வாங்கிக் கொண்டார்.

நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தேன்.

அந்தக் கதை என்னவோ அமுதசுரபிலே பிரசுரம் ஆகாம,  ஒரு  மாசம் கழித்து  என்னோட காஞ்சீபுரம் முகவரிக்கே திரும்பி வந்து விட்டது.   அதேக் கதையை இன்னொரு பிரதி எடுத்து, 'வாஷிங் மெஷின்' என்றிருந்த கதைத் தலைப்பை  'இன்று செருப்பு;  நாளை சேலை' என்று மாற்றி,  குமுதத்திற்கு அனுப்பி வைத்து அது   குமுதத்தில் அட்டகாசமாக பிரசுரமானது இன்னொரு கதை.   ஆக, எந்தப் பத்திரிகைக்கு எந்த மாதிரி கதையை அனுப்பணும்ன்னு தெரிஞ்சிக்கிறதே கதைப்  பிரசுரங்களின் பாலபாடம்.  நிறைய அனுபவப்பட்டுத் தான் இந்தக் கல்வியும்
நாளாவட்டத்தில் எனக்கு வசமாச்சு.  பிரபல எழுத்தாளர் அகிலன் சொல்லுவார்:  'ஆரம்ப கால எழுத்தனுபவம்ங்கறது பரிதாபம். பத்திரிகை ஆபிஸூக்கு அனுப்பற கதைகள், ஒண்ணு கிணத்லே போட்ட கல் மாதிரி எந்தத் தகவலும் தெரியாம இருக்கும்;  இல்லேனா, சுவத்திலே அடிச்ச பந்து மாதிரி திரும்பி வந்துடும்'ன்னு.  இந்த உபதேசம்லாம் முக்காலும் உண்மை.

விக்கிரமன் சார் வழி காட்டின மாதிரி கட்டடம் கட்டப் போற இடத்துக்குப் போய்ப் பார்த்தேன்.  மெயின் ரோடிலேயே அசோக் பில்லருக்கு அருகிலேயே இருப்பது மிகவும் பிடித்துப் போனது.  பாண்டி  பஜார் போகலே.  மாம்பலத்தில் பஸ் பிடித்து பாரீஸ் கார்னர் போய் காஞ்சீபுரம் திரும்பி விட்டேன்.

ஊர் போய்ச் சேர்ந்து எல்லாவற்றையும் மனைவியிடம் சொன்னேன்.  அடுத்த வாரம் இரண்டு பேரும் சென்னை வந்தோம்.  கட்டிடம் எழும்பப் போகிற இடத்தைப் பார்த்ததும் அவளுக்கும் பிடித்துப் போயிற்று.  அன்றே அவளையும் கூட்டிக் கொண்டு ஆட்டோவில் பாண்டிபஜார் போய் ஸ்ரீராம் கேபிடல் டிரஸ்ட் இருந்த  காம்ப்ளைக்ஸைக் கண்டு பிடித்து விட்டோம்.   அவர்கள் அலுவலகம் 3-வது மாடியில் இருந்தது..

இன்னொன்றையும் இந்த இடத்தில் சொல்ல வேண்டும்.  பத்திரிகைகளுக்கு ஏற்ற கதை மாதிரி,  எந்த விஷயத்தையும் செயல்படுத்துவதற்கு நமக்கு ஏற்ற மாதிரியான நபர்கள் தேவைப்படுகிறது.  அந்த மாதிரி அமைந்தவர் அந்த நிறுவனத்தில் பொதுஜனத் தொடர்பில் இருந்தவரில் ஒருவர்.. அவர் பெயர் கிருஷ்ணமூர்த்தி என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன்.  அவருடன்   பிளாட் தொடர்பாக எல்லா விஷயங்களையும் பேசி முடித்து விட்டோம்.   கையோடு காசோலை புத்தகம் கொண்டு  போனது நல்லதாயிற்று.  இரண்டு பக்கமும் அதற்கேற்பவான  கடிதங்களைப் பகிர்ந்து கொண்டு அவர்கள் கேட்ட தொகையைக் குறிப்பிட்டு  (இன்றைக்கு அந்தத் தொகையைக் கேட்டீர்கள் என்றால் சிரிப்பீர்கள் என்பதால் சொல்ல வில்லை)  காசோலையும் கொடுத்தாயிற்று.

பாக்கி பணத்தை 10 தவணைகளில் கொடுக்க வேண்டும். 10 தவணைகள் என்றாலும் பாக்கிப் பணம் அன்றைக்குப் பெருந்தொகை.  அந்த பெருந்தொகைக்கு இந்த ஷணமே கடன் பட்ட மாதிரி ஒரு கவலை வந்து சேர்ந்தது.  அதற்கெல்லாம் எப்படி ஏற்பாடு பண்ணப் போறோம் என்று குழப்பமாக இருந்தது.

"அந்தச் சீட்டுக் கம்பெனியும் இவங்களோடது தானே?.. கேட்டா கடனாத் தர மாட்டார்களா?" என்றாள்  மனைவி.  இன்னும் இரண்டு மாதத்தில் அடுத்த தவணை பணத்திற்கே என்ன ஏற்பாடு செய்வது என்ற கவலை அவளுக்கு.

"சீட்டுக் கம்பெனிலே கடன் தர மாட்டாங்க.. சீட்டு தான் கட்டச் சொல்லுவாங்க.. அது வேறே ஆரம்பிச்சிட்டோம்னா  மாசா மாசாம் கசிறு போகத் தவணைத் தொகை கட்ட வேண்டியதாகி விடும்.." என்றேன்.

"நான் எது சொன்னாலும் அதுக்கு ஒரு பதிலை  ரெடியா வைச்சிருப்பீங்களே..  ஏதோ எனக்குத் தெரிஞ்சதைச் சொன்னேன். கேட்டுத் தான் பார்ப்போமே.." என்றாள்.

எல்டா ம்ஸ் ரோடில் இருந்த உறவினர் ஒருவரை பார்க்க வந்து அப்போது தேனாம்பேட்டை ஜங்ஷன் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.  மூகாம்பிகா காம்ப்ளெக்ஸ் என்று சர். சி.பி. ராமசாமி ஐயர் ரோடின் ஆரம்பத்தில் இருக்கிறது.  அந்த காம்ளக்ஸில் ஸ்ரீராம் சிட்ஸின் ஒரு அலுவலகம் இருப்பது எனக்குத் தெரியும். 

"உன் ஆசையைத் தான் கெடுப்பானேன்.." என்று அந்த அலுவலகத்திற்குக் கூட்டிச் சென்றேன்.  எங்கள் பணத்தேவையைப் பற்றி அந்த அலுவலக தலைமை அதிகாரியிடம் சொன்னோம்.

"ஒண்ணு வேணா நீங்க செய்யலாம்.." என்றார் அவர்.  "இப்போத்தான் ஒரு லட்ச ரூபாய் சீட்டு க்ரூப் ஒண்ணு இந்த மாசம் ஆரம்பிச்சிருக்கு.  மொத்தம் 60 இன்ஸ்டால்மெண்ட்.  முதல் தவணையில் குலுக்கல் கிடையாது. அடுத்த தவணையிலிருந்து  அடுத்த மாசத்திலிருந்து குலுக்கல். அந்த  சீட்டில் இரண்டு பேர் இடம் காலியாயிருக்க்கு.. நீங்க வேணா அந்த சீட்டில் சேர்ந்துக்கங்க..
சீட்டு  விழுந்திடுத்துன்னா பிடித்தம் போக மொத்தமா பணம் கிடைக்கும். உங்க தேவைக்கு அது உபயோகப்படலாம்.." என்றார்.

நான் பேசாமலிருந்தேன்.

"அதுலே நாங்க சேரணும்ன்னா என்ன செய்யணும்?" என்றாள் என் மனைவி.

"முதல் தவணை பணத்தை கேஷா கட்டணும்.. "

"எவ்வளவு?"

அவர் தொகையைச் சொன்னார்.

அந்தத் தொகை கைவசம் இருக்கிறதா என்று  தெரிந்து கொள்ள மனைவி என்னைப்  பார்த்தாள்.  "இருக்கு.." என்றேன்.

"அப்போ கட்டிடுங்கோ.." என்றாள்.

முதல் சீட்டுத் தவணை கட்டி விட்டு அதற்கான  ரசீது,  பாஸ் புக்குடன் வெளியே வந்தோம்.  எங்கள் சீட்டு எண் 67 என்று கொட்டை எழுத்தில் பாஸ்புக்கில் குறித்திருந்தது.

"இனிமே மாசாமாசம் சீட்டுப் பணத் தவணை கட்டணும்.  இரண்டு மாசத்துக்கு ஒரு முறை வீட்டுக்கான தவணை பாக்கியும் கட்டணும்.." என்றேன்.

"பார்க்கலாம்.." என்றாள் அவள்.

'காமராஜர் சொல்கிற மாதிரி இருக்கே!' என்று நினைப்பில் தோன்றியதைச் சொல்லவில்லை.

ஊர் வந்து சேர்ந்தோம். 

அடுத்த மாதம் முதல் வாரம்.  தேதி 7 என்று நினைக்கிறேன்.

நாங்கள் சீட்டில் சேர்ந்திருந்த க்ரூப் புரசைவாக்கம் கிளை சம்பந்தப்பட்டது என்று  சொல்லியிருந்தார்கள்.   இந்த மாதிரி சீட்டு விஷயங்களில் இதற்கு முன் எனக்கு எந்த அனுபவமும் இல்லை.  அதனால் நேரிடையாகவே அனுபவப்பட்டு விடலாமே என்று என் மகனுடன் புரசைவாக்கம்  சென்றிருந்தேன்.  வேறு ஏதேதோ க்ரூப் சீட்டுகளுக்கான குலுக்கல்கள் நடந்து கொண்டிருந்தன.  எங்கள் சீட்டுக்கான குலுக்கல் 6 மணிக்கு என்று போர்டில் போட்டிருந்தது.

மணி 5.30.  அரை மணி நேரம் இருக்கிறதே என்று எதிர்புறத்திலிருந்த ஹோட்டலில் காபி சாப்பிட்டு வரலாம் என்று கிளம்பினோம்.

ஹோட்டல் பெயரும் ஸ்ரீராம் கபே என்றிருந்தது  சூசகமாக மனசில் எதையோ பரிமாறிக் கொண்ட மாதிரி இருந்தது.

நாங்கள் திரும்பி வருவதற்குள் எங்கள் குரூப்  சீட்டில் கலந்து கொள்ள வந்திருந்தவர்கள் குலுக்கல் நடக்கும் அந்த அறைக்குள் அடைந்து விட்டார்கள்.

அந்த ரூமுக்குள் நாங்களும் நுழைந்து கிடைத்த இடத்தில் அருகருகே அமர்ந்தோம்.

சீட்டுக் குலுக்கலைப் பற்றி பொதுவான அறிவிப்பு செய்தார்கள்.  அந்த குரூப்புக்கான சீட்டு எண்கள் பூராவும் டோக்கன் எண்களாக பிளாஸ்டிக் டப்பாவில் இருப்பதாகச் சொல்லி அந்த டப்பாவைக் குலுக்கிக் காட்டினர்கள்.

யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், தங்கள் சீட்டு எண்  கொண்ட டோக்கன் அந்த டப்பாவில் இருக்கிறதா என்று சோதனை செய்து கொள்ளலாம் என்று அறிவித்தார்கள்.  யாரோ எழுந்து போய் தன் எண் டோக்கன் இருப்பதை சோதித்து விட்டு வந்து புன்னகையுடன் தன்  இருக்கையில் அமர்ந்தார். என் சீட்டு எண் 67 என்பது என் நினைவில் பளிச்சிட்டுப் போனது.

யாரோ எதற்கோ சிரித்தார்கள்.

எனக்கோ ஒரு நிமிடம் போவது ஒரு யுகம் போலிருந்தது.  சீக்கிரமாக குலுக்கி யாருக்கு என்று அறிவியுங்களேன் என்று மனம் கூப்பாடு  போட்டது.

அந்த  டப்பாவை கேட்பவர் கையில் எல்லாம் கொடுத்து அவர்கள் திருப்திக்கு குலுக்கச் சொன்னார்கள்.  நடப்பதையெல்லாம் ஒரு பார்வையாளர் போல பார்த்துக் கொண்டிருக்கும் உணர்வே என்னிடம் எஞ்சியிருந்தது.

இப்பொழுது அந்த டப்பா ஒரு மேஜையின்  மீது  இருந்தது. " யாராவது வந்து இந்த டப்பாவிலிருந்து ஒரு டோக்கன் மட்டும் எடுங்கள்" என்று  அறிவித்த பொழுது எனக்கு இரண்டு  நாற்காலிகள் முன்னிருந்தவர் சென்று ஒரு டோக்கனை எடுத்து அறிவிப்பாளர் கையில் கொடுத்தார்...

அவர் எடுத்துக் கொடுத்த டோக்கன் எண்  67  என்று அறிவித்த பொழுது  "ராமா..." என்று அனிச்சையாக என் உதடுகள் முணுமுணுத்தது  இத்தனை வருஷங்கள் கழித்தும்  இன்னும் என் நினைவில் தேங்கியிருக்கிறது.

(தொடரும்)


Saturday, March 23, 2019

வசந்த கால நினைவலைகள்

                                                  3

நேற்று கூட +2 க்குப் பிறகு என்ன படிப்பது என்று தொலைக்காட்சி சேனலில் ஒரு புண்ணியவான் மாணவர்களுக்கு ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார்.

என் காலத்திலெல்லாம் எஸ்.எஸ்.எல்.சி--க்குப் பிறகு படிப்பைத் தொடர்கிறவர்கள் ரொம்பவே குறைச்சல்.  வசதியுள்ள குடும்ப வாரிசுகள் கல்லூரிப் படியேறுவார்கள்.

அந்தக் காலத்தில் வசதியில்லாத குடும்பக் குழந்தைகள் ஏதாவது வேலை செய்து குடும்பத்திற்கு தன்னாலான உதவி செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தில் பள்ளி இறுதித் தேர்வோடு தங்கள் படிப்பை நிறுத்திக் கொள்வார்கள்.   இப்போலாம் வேலைக்காகத் தான் கல்வி என்று ஆன பிறகு
இந்த மாதிரி ஆகலாம் என்று முன் கூட்டியே தீர்மானித்து அதற்கேற்பவான கல்வித் தகுதியை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

+2 கல்வியே  சி.பி.எஸ்.சி. வழியா, மெட்ரிகுலேஷனா, இல்லை ஸ்டேட் போர்டா என்று வகை வகையாகப் பிரிந்திருக்கிறது.  பத்தாவது வகுப்பு வரை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில்  படித்து விட்டு +2க்கு ஸ்டேட் போர்டுக்குத் தாவு-- அப்பத்தான்  மதிப்பெண்கள் நிறைய அள்ளலாம் -- என்று பெருவாரியான கல்வியாளர்கள் அறிவுரைகளாய் அள்ளி வீசுகிறார்கள்.

ஆனால் என் மகன் ஜீவா செய்தது அதற்கு நேர் எதிர்...  எஸ்.எஸ்.எல்.சி வரை ஸ்டேட் போர்டு ஸ்கூலில்  (காஞ்சீபுரம்  ஆண்டர்ஸன் உயர்நிலைப் பள்ளி).  மேல் நிலைப் படிப்புக்கு சென்னைக்கு வந்து சிபிஎஸ்சி சிலபஸ்ஸூக்கு மாறினான்.  வீட்டுச் சாப்பாடு கிடையாது. ஹாஸ்டல் தான்.   இன்றும் கல்வியாளர்கள் சொல்வது தான் அன்றும் நடந்தது.   சிபிஎஸ்ஸியில் கல்வித் தரம் அதிகம் என்றாலும் மதிப்பெண்கள் அதிகம் தர மாட்டார்கள்.   நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் இன்ஜினீயரிங் ஸீட் கிடைப்பதில் சிக்கல்.   காரணம் நீங்கள் நினைக்கிற காரணம் தான்.  இப்பொழுது கிடைத்திருப்பது போல அப்போ ஒரு மோடி கிடைத்திருக்கவில்லை.

என்  மகனோ ஆர்ட்ஸ் கல்லூரியில் சேர விருப்பம் இல்லாது இருந்தான்.  வேறு என்ன செய்வது, என்பதற்கு அவன் பதில் வேறு மாதிரி இருந்தது.   "நான் AMIE படிக்கப் போகிறேன்.." என்றான்.

"அப்படீன்னா?"                                                                               

"Associate Member of  the Institution of  Engineers."

எனக்குப் புரியவில்லை.  இன்ஜினீயர்ஸ் என்று அவன்  சொன்ன வார்த்தை மட்டும் பிடித்திருந்தது.  'இது ஒருவகை இன்ஜினியரிங் படிப்பாக்கும்' என்று நினைத்தேன்.

கல்வி பயில ஏதாவது கல்லுரியில் இடம் கிடைக்க வேண்டுமே என்ற கவலை.  அதனால் கேட்டேன். "எந்தக் கல்லூரியில் சேர்வதாக உத்தேசம்?"

"இந்தப் படிப்புக்கு கல்லுரிக்கே போக வேண்டாம்.. வீட்டிலேயே படிக்கலாம்.. Home Study தான்" என்றான்.  "சென்னையில், அதுவும் சிபிஎஸ்ஸி போன்ற பள்ளிகளில் பயிலும் பொழுது தான்  இந்த மாதிரி படிப்பெல்லாம் இருக்கிறது  என்பதே தெரியறது, அப்பா!" என்று கூடுதல் தகவலையும்  சொன்னான்.
                                                                                                                                     
"அப்படி கூட ஒரு தொழிற்கல்வி இருக்கிறதா?" என்று  திகைத்தேன். ஆனால் பாவம் இளம் வயதில் தனது சொந்த சாப்பாட்டிற்கும் வழி பண்ணிக் கொண்டு  படிக்கவும் வேண்டுமே?.. ஏதாவது கல்வி நிருவனத்தில் சேராமல் சொந்தப் படிப்பு சாத்தியமாகுமா?--" என்ற கேள்விக் குறிகள் வேறே.

என்  மனைவி  பள்ளி ஆசிரியை. நான் தொலைபேசி  இலாகா.  பெண்ணோ காஞ்சீபுரத்தில்  மேல்நிலை கல்வி படித்துக் கொண்டிருந்தாள்..

இந்த இரண்டு பேர் கல்விக்காக நாங்களும் சென்னை குடிபெயர்வது என்று தீர்மானித்தோம்.  ஆனால் வேலை மாற்றல் இருவருக்கும்  அவ்வளவு சீக்கிரத்தில் கிடைகும் என்ற நம்பிக்கை இல்லை.             

அமுதசுரபி பத்திரிகை ஆசிரியர் எழுத்தாளர் விக்கிரமன் (வேம்பு அவர்கள்) எனக்கு பழக்கமானவர்.  சென்னை மாம்பலம் ஜெய்சங்கர் தெருவில் வசித்து வந்தார். மாம்பலம் பக்கம் வரும் பொழுது அவர் வீட்டில் இருந்தால் அவரையும் பார்த்து விட்டுப் போவது வழக்கம்.  அமுதசுரபிக்காக சிறுகதை ஒன்றை எழுதி வைத்திருந்தேன்.  அதை அவரிடம் கொடுத்து விட்டுப் போகலாம் என்ற எண்ணத்தில் அவர் வீட்டுக்குப் போனேன்.  நல்ல வேளை, அவர் வீட்டில் இருந்தார்.

நான் வந்திருப்பது அறிந்து "ஜீவி, இதோ வந்திட்டேன்.. " என்று உள் பக்கமிருந்தே குரல் கொடுத்தார்.  அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தேன். பக்கத்து டேபிளில் பளபள அட்டையுடன் அமுதசுரபி  இருந்தது.  எடுத்து லேசாகப் புரட்டினேன். பின் பக்க அட்டை பின்புறம் ஒரு விளம்பரம் வெளியாகியிருந்தது.

அமுதசுரபி பத்திரிகையை நடத்துவது ஸ்ரீராம் சிட்ஸ் என்ற நிருவனம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே.    ஸ்ரீராம் சீட்டு  நிருவனம் ஸ்ரீராம் கேபிடல் டிரஸ்ட் என்ற பெயரில் கட்டுமானத் தொழிலிலும் ஈடுபட்டிருந்தது.  அவர்கள்  'பாலாஜி டவர்ஸ்' என்ற பெயரில் சென்னை அசோக் நகரில் புதிதாகக் கட்டபோகும் ஒரு அப்பார்ட்மெண்ட் பற்றிய விளம்பரமாக அந்த இதழ் அமுதசுரபியின் அந்த விளம்பரம் இருந்தது.

அது பற்றிய விவரங்களைப்  பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது 'நந்திபுரத்து நாயகி' புகழ் விக்கிரமன் சார் வந்து விட்டார்.


(தொடரும்)




Friday, March 22, 2019

வசந்த கால நினைவலைகள்...


                                                                                  2


39 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசுப் பணி.  1963-ம் ஆண்டு மத்தியில் தொலைபேசி இலாகாவில் , தொலைபேசி இயக்குனராக பாண்டிச்சேரியில்
சேர்ந்து  30-1-2003 அன்று சென்னையில் தலைமை தொலைபேசி கண்பாளிப்பாளராக பணி ஓய்வு பெற்றேன்.   58 வயதில்  பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.   மத்திய அரசின் 60 வயது பணி ஓய்வு உத்திரவினால் மேலும்  இரண்டாண்டுகள் 'நீடித்த'  அரசுப் பணி.  நான் இலாகாவில் பணியில் சேர்ந்த பொழுது 'நம்பர் ப்ளீஸ்' இணைப்பகங்களாக  (Mannual Exchanges)  இருந்த தன்மை மாறி இப்பொழுது பி.எஸ்.என்.எல். ஆகி செல்போன் கையாளக்கூடிய அளவுக்கு மிகப் பெரிய அசுர மாற்றம்.                                             

பணி ஓய்வு பெற்ற சில நாட்களில் என் மனைவிக்கு ஒரு நாள் என்ன தோன்றியதோ என்னவோ, எனது சஷ்டியப்த பூர்த்தியை திருக்கடையூரில் அருள்மிகு ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் உடனாகிய ஸ்ரீஅபிராமி அம்மன் கோயிலில் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டு என்னிடம் சொன்னாள்.  அமெரிக்கா, அட்லாண்டாவில் மென்பொருள் வல்லுனராகப் பணிபுரியும் என் மகனும்   
(  jeevagv.blogspot.com  )இதையே வலியுறுத்தி  தானும் விடுப்பில் இந்தியா வருவதாகச் சொன்னான்.

அறுபது வயது நிறைவுறும் என் ஜென்ம நட்சத்திர நன்னா ளில் (11-2-03) சஷ்டியப்த பூர்த்திக்கு நாள் குறித்தாயிற்று.  சென்னையில்   எங்கள் குடும்பத்தினர்  20 பேருக்கு சென்னையிலிருந்து மயிலாடுதுறை போக வர ரயிலில் பயணச் சீட்டு பதிவு செய்தாயிற்று.   வேறு சில உறவினர்களும் நண்பர்களும் நேரடியாகவே திருக்கடையூர் வந்து விடுவதாகச் சொன்னார்கள்.  நாங்கள்  மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து  திருக்கடையூருக்கு வேனில் செல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள்.

திருக்கடையூரிலிருந்து  முதல் நாள் காலை   காரில் எங்கள் குல தெய்வமான ஒப்பிலியப்பன் கோயிலுக்குச் சென்று  இந்தப் பிறவி கொடுத்த பேற்றுக்கு நன்றி  சொல்லி வணங்கினோம்.  மதியம் திருக்கடையூர்  திரும்பி விட்டோம்.   ஒரு நாளில் கிட்டத்தட்ட இருபது சஷ்டியப்த பூர்த்தி விழாக்கள் இங்கு கொண்டாடப்படுவதால் குடும்பம் குடும்பமாகத் தங்கிட, அவர்கள் உணவருந்த, பிற செளகரியங்களுக்கு எந்தக் குறையும் ஏற்படாதவாறு அவ்வளவு அருமையாக ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.

வானளாவிய கோபுரங்கள்.   ஊரின் மத்தியில்  கிழக்குக் கோபுரம்  முனீஸ்வரக் கோபுரம் பக்கத்தில்   அமுத புஷ்கரணி, மேற்கு கோபுர வாயிலுள் இடது புறம்  நூற்றுக்கால் மண்டபம்.   அமிர்தகடேஸ்வரர் மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார்.    அன்னைக்குத் தனி ஆலயம, தென் மேற்கு மூலையில்.  அன்னை அபிராமி, கிழக்கு நோக்கி ஈசனைப் பார்த்த வண்ணம் பட்டாடை ஜொலிக்க ஆபரண பூஷிதையாய் அருள் பாலிக்கிறாள்.

கொடிமரத்தில் பிள்ளையார்.  ஆலயத்தின் நுழைவாயிலில் அதிகார நந்தி.  இடது புறம் சுப்பிரமணியர்.  அடுத்து மஹாலஷ்மி.  அமிர்த கடேஸ்வரருக்கு தனி சந்நிதி.  ஈஸ்வரனின் திருமேனியில் பாசக்கயிற்றின் தழும்பு.  யமன், மார்க்கண்டேயர் உயிர் குடிக்கப் போட்ட பாசக்கயிறின் தழும்பு.  இன்னொரு பிரகாரத்தில் வில்வனேஸ்வரர், பஞ்ச பூதங்கள். யமன், அறுபத்து மூவர். சப்த மாதர்களும் இங்கேயே.

கள்ளவாரண பிள்ளையார், மஹா மண்டபத்தில்.     மற்றொரு புறம் யமனை எட்டி உதைத்த கோலத்தில் கால சம்ஹார மூர்த்தி. யமன் தலைகுப்புற விழுந்திருக்கிறார்.    திருமகள், கலைமகள் புடைசூழ பாலாம்பிகை.   என்றும் பதினாறு என்று மார்க்கண்டேயருக்கு ஈஸ்வரன் வரம் கொடுத்த ஸ்தலமாதலால்,  கோயிலில் எல்லாமே பதினாறு எண்ணிக்கை கொண்டிருக்கின்றன.

முதல் நாள் மாலை ருதர ஏகாதசி.  அடுத்த நாள்,  பொலபொலவென்று பொழுது விடிய நீராடி, புதுமணத்தம்பதிகளைப் போல் புத்தாடை பூண்டு, சுற்றம் சூழ மேளதாளத்துடன் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர்.  கோயில் நுழை வாயிலேயே கோயில் யானையுடன் வரவேற்பு.  கஜபூஜை,  கோபூஜை முடித்து, அம்மன் சந்நிதி பிராகாரத்திற்கு அழைத்துச் சென்று   மிருத்யுஞ்சய ஹோமம் முதலான ஹோமங்கள் செய்வித்து கோயில் பிராகாரத்திலேயே அதற்காக நிர்ணயிக்கப் பட்ட இடத்தில்  தம்பதிகளுக்கு ஹோமஜல ஸ்நானம் செய்வித்து,  மிகச் சிறப்பாக  பூரண திருப்தியுடன் எங்கள் சஷ்டியப்தப் பூர்த்தி விழாவை நடத்தி வைத்தனர்.


(படத்தில் மகள் கவிதா, மனைவி கீதா, நான், மகன் ஜீவா)


--  ஜீவி



குமுதம் பத்திரிகையின் தொடர்பு கொண்ட இதழாக 'ஜங்ஷன்' வெளிவந்து கொண்டிருந்தது.. அந்தப் பத்திரிகைக்கு விகடன்  புகழ்  திரு.  ராவ் அவர்கள் ஆசிரியராக இருந்த காலத்தில் எனது சஷ்டியப்த பூர்த்தி      நிகழ்வு பற்றி  வெளியிட்டிருந்தார்கள்.

Wednesday, March 20, 2019

வசந்த கால நினைவலைகள்

                                 ஆரம்ப அத்தியாயம்                         
                                  
னந்த விகடனுக்கென்று அலாதியான   பாணி ஒன்று உண்டு.  தனது எல்லா உறவுகளை விட வாசகர் உறவைப் பெரிதினும் பெரிதாய் நினைக்கிற உயர்ந்த எ ண்ணம் அது.. மற்ற பத்திரிகைகளில் அவ்வளவு எதிர்ப்பார்க்க முடியாத இந்த ஆகச் சிறந்த குணம் எஸ்.எஸ்..வாசனின் திருமகனார் எஸ். பால சுப்பிரமணியன் காலத்தில் கொடிகட்டிப் பறந்தது என்பதை என் இளம் வயதில் விகடனுடான எனது பழக்கத்தில் தெள்ளந் தெளிவாக பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன்.  விகடனில் எனது சில கதைகள் பிரசுரமாகியிருப்பினும்  ஒரு எழுத்தாளன் என்ற ஹோதாவில் விகடனுடான நெருக்கத்தை விட அதன் பெருமைமிக்க வாசகன் என்ற மேலான உறவில் திளைப்பதே எனக்கும் மிகவும் பிடித்திருந்தது.

1974-ம் ஆண்டு பிற்பகுதி  அது.  அந்நாளைய  தமிழக கல்வியமைச்சருடன் கூட இருந்து விகடன் நிருபர் அவரின் ஒரு நாள் பணியை விவரிப்பது போல அநதக் கட்டுரை அமைந்திருந்ததாக நினைவு.  அந்தக் கட்டுரையில் அமைச்சரின் பேரனின் படங்கள் காணக்கிடைத்தன. அதைப் பார்த்தவுடன்  வாசக உள்ளம் பொருமிய நிலையில் விகடனுக்கு ஒரு நாலு வரிக் கடிதம் எழுதி என் மகன் ஜீவாவின்  புகைப்படத்தையும் இணைத்து அனுப்பி வைத்திருந்தேன்.



அமைச்சரின் பேரன் என்றால் ஆனந்த விகடனில் புகைப்படம்!  நேருவின் பிறந்த நாளான உலகச் சிறுவர் தினத்தன்று (14-11-74) சாதாரணக் குடிமகனான எனது ஒன்றரை வயது மகன் ஜீவா,  இதோ ஜெய்ஜவான் உடையில்!  பிரசுரிப்பீர்களா?....

காஞ்சீபுரம்                                                                                      ஜீவி


--- இதான் அந்தக் கடித வாசகம். 





அடுத்து வந்த 8-12-74  இதழிலேயே என் மகனின் புகைப்படமும் எனது அந்தக் கடிதத்தையும் அப்படியே வெளியிட்டு  உயர்ந்த தனது வாசக மரியாதையை எளிமையாய் தெரியப்படுத்தியது விகடன்..


னந்த விகடனுடனான அதன் வாசகர் ரீச் மிகப் பிரமாதமான ஒன்றாக அந்த நாட்களில் இருந்தது.   சொல்லப்போனால்  ஆனந்த விகடனின் பொன்விழாக் கொண்டாட்டங்கள்  வாசகர் திருவிழாக்களாகவே  தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் கோலாகலமாகக்கொண்டாடப்பட்டன உள்ளூர் விகடன் பத்திரிகை ஏஜெண்டுகள்   தங்கள் வீட்டுத் திருமண வைபவங்கள் போலவே வாசகர் திருவிழாவை திறம்பட நடத்துவதில் பெரும் பங்காற்றினர்.

நான் அப்பொழுது காஞ்சீபுரம்  தொலைபேசி இணைப்பகத்தில் பணியாற்றி வந்தேன்.  19-7-80  சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் காஞ்சீபுரம் அண்ணா அரங்கில் விழா களைகட்டியது.  மனைவி, மகன், மகள் என்று  குடும்பத்துடன்  விழாவிற்குச் சென்றிருந்தேன்..  என் மகனை  மட்டும்  அழைத்துக் கொண்டு   அரங்க மேடையின் பின்புறம் சென்று  விகடன்  ஆசிரியர் பாலுவைச் சந்தித்தேன்.   கையில் ஆனந்த விகடனின் 8-12-74  தேதியிட்ட இதழின் 16-ம் பக்கத்தில் பிரசுரமாகியிருந்த என் மகனின் புகைப்படத்தை ஆசிரியரிடம் காட்டியதில் அவருக்கு ஏகப்பட்ட சந்தோஷம்..  என் மகனை அணைத்துக் கொண்டு "ஜீவியை ஜீவாவுடன் பார்த்ததில் ரொம்பவும் சந்தோஷம்" என்றார்..  'பெரியவனானவுடன் நீயும் விகடனில் எழுதணும்.. செய்வியா?" என்று என் மகனிடம் கேட்டார்.  அவன் 'சரி' என்கிற பாவனையில்.  தலையாட்டிய பொழுது பரவசத்துடன் என்னைப் பார்த்தார்.  ஐந்து ஆண்டுகள் கழித்தும் விகடனின் அந்த இதழை புதுக்கருக்கு அழியாமல் நான் வைத்திருப்பதை அந்த பத்து நிமிட சந்திப்பில் இரண்டு முறை சொல்லி மகிழ்ந்தார்.

விழா  தொடங்கியதும் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு அரங்கில் என் மனைவியும் மகளும் அமர்ந்திருந்த இடத்திற்கு  வந்தேன்.  அண்ணா அரங்கம் செம கூட்டத்தில் நெளிந்தது.   ஜோக்குகளும் விகடனும் பிரிக்க முடியாத இரட்டைக் குழந்தைகள்.  மொத்தக் கூட்டமும் அன்று வாயெல்லாம் பல்லாக .      இருந்தது.  பொன்விழா ஆண்டு விகடன் வைத்திருந்த போட்டிகளில் கலந்து கொண்டு அதன் வாசகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தார்கள்  என்று தான் சொல்ல வேண்டும்.   அரங்க மேடையிலேயே விகடனுக்கு வாசகர்கள் அனுப்பியிருந்த (காஞ்சீப்ரத்தில் 85037)  கடித உறைகளை குலுக்கிப் போட்டு         9 அதிர்ஷ்டசாலிகள் பரிசுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது மொத்தக் கூட்டமுமே உற்சாகத்தில் பீரிட்டது...  முதல் பரிசு என்னவோ அந்த கூட்டத்தில் இல்லாத பம்பாய் வாசகர் ஒருவருக்கு கிடைத்து அவர் பெயர் படிக்கப்பட்ட பொழுது  அரங்கமே ஆர்ப்பரித்தது...



புகைப்படத்தின்  மூன்றாவது வரிசையில் நான், என் மனைவி கீதா, மகன் ஜீவாவும்--மகள் கவிதாவும்  (ஒரே இருக்கையை பகிர்ந்து கொண்டு) அமர்ந்திருக்கிறோம்.
Related Posts with Thumbnails