இந்த மாதிரியான இணைய செளகரியங்கள் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்திற்கு முன்னால் கதைகள் எழுதுவோருக்கு பத்திரிகைகளில் தங்கள் எழுத்து பிரசுரமானால் தான் ஒரு அங்கீகாரம் கிடைத்த மாதிரியான எண்ணம் இருந்தது. எழுத்தாசை கொண்டோருக்கு தாங்கள் என்ன எழுதினாலும் பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கு பத்திரிகை தவிர வேறு சாதனம் இல்லாத காலகட்டத்து நிர்பந்தம் அது.
நல்ல சிறுகதைகளையும் தொடர்களையும் பத்திரிகைகள் பிரசுரித்த அந்த பொற்காலத்திலும் இந்த பத்திரிகைக்கு இந்த மாதிரியான கதைகள் தான் பொருந்தும் என்று சொல்கிற அளவில் பத்திரிகைகள் தங்கள் பிரசுர உள்ளடக்கங்களில் வித்தியாசம் கொண்டிருந்தன., எழுதுவோரும் அந்த வித்தியாசத்தை நன்கு புரிந்து கொண்டு அந்தந்த பத்திரிகைக்கு ஏற்றவாறு எழுதத் தலைப்பட்டனர்.
அப்படியான காலகட்டத்தின் நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு பகுதி இது.
இங்கு நீங்கள் படிக்கவிருப்பது எனது சிறுகதை தான்.
பின்னூட்டங்களைப் பார்த்து விட்டுப் போட்ட முன்னோட்டம் இது. தாமதமான இந்தக் குறிப்பிற்கு மன்னிக்கவும்.
.
ஒரு குமுதக் கதை
பார்க் அவென்யூ செண்ட்டை சட்டையில் ஸ்பிரே பண்ணிக் கொண்டு இன்னொரு தடவை தலையை அழுந்த வாரிக்கொண்ட பொழுது, பீரோ கண்ணடியில், ஹாலில் கிழிந்த சேலையைத் தைத்துக் கொண்டிருந்த மனைவியின் உருவம் தெரிந்தது. உடனே ரெளத்திரமானான் தங்கப்பன்.
நல்ல சிறுகதைகளையும் தொடர்களையும் பத்திரிகைகள் பிரசுரித்த அந்த பொற்காலத்திலும் இந்த பத்திரிகைக்கு இந்த மாதிரியான கதைகள் தான் பொருந்தும் என்று சொல்கிற அளவில் பத்திரிகைகள் தங்கள் பிரசுர உள்ளடக்கங்களில் வித்தியாசம் கொண்டிருந்தன., எழுதுவோரும் அந்த வித்தியாசத்தை நன்கு புரிந்து கொண்டு அந்தந்த பத்திரிகைக்கு ஏற்றவாறு எழுதத் தலைப்பட்டனர்.
அப்படியான காலகட்டத்தின் நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு பகுதி இது.
இங்கு நீங்கள் படிக்கவிருப்பது எனது சிறுகதை தான்.
பின்னூட்டங்களைப் பார்த்து விட்டுப் போட்ட முன்னோட்டம் இது. தாமதமான இந்தக் குறிப்பிற்கு மன்னிக்கவும்.
.
ஒரு குமுதக் கதை
பார்க் அவென்யூ செண்ட்டை சட்டையில் ஸ்பிரே பண்ணிக் கொண்டு இன்னொரு தடவை தலையை அழுந்த வாரிக்கொண்ட பொழுது, பீரோ கண்ணடியில், ஹாலில் கிழிந்த சேலையைத் தைத்துக் கொண்டிருந்த மனைவியின் உருவம் தெரிந்தது. உடனே ரெளத்திரமானான் தங்கப்பன்.
"ஏய்! உனக்கு சேலையத் தைக்க நேரம் காலம் தெரியாது?" என்று எரிந்து விழுந்தான்.
"ஸாரிங்க.." என்று கெளசல்யா துணுக்குற்று சேலையோடு எழுந்து கொண்டாள்.
"ஆமாம். ஸாரியைத்தான் சொல்றேன். புருஷன்காரன் ஆபீஸூக்குப் போகும் போது பழசை தைச்சு புதுசு வேணும்னு சிக்னல் கொடுக்கறையா?" என்று அவன் உறுமினான்.
"ஸாரிங்க.. நான் புடவையைச் சொல்லலே.. மன்னிச்சிக்குங்க.. " என்று சமையலறைப் பக்கம் பம்மிப் பதுங்கினாள் கெளசல்யா.
"ஏய்! எல்லாம் எனக்குத் தெரியும்டி. உன்னை மாதிரி எத்தனை பேரை நா பாத்திருப்பேன்?" எகத்தாளத்த்கோடு காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு வாசல் பக்கம் வந்து செருப்பை மாட்டிக் கொண்டான் தங்கப்பன்.
வாஸ்தவம் தான். எத்தனையோ இல்லாவிட்டாலும் நாலைந்தை நைச்சியம் பண்ணி ஆசைகாட்டி படுக்கையில் தள்ளியவன் தான் தங்கப்பன். அந்த செயலாற்றல், பொம்பிளை என்றால் தூக்கி எறிந்து பேசச் சொல்லியது.
அதுவும் கெளசல்யா என்றால் அவனுக்குத் தொக்கு. வீட்டுக்குள் நுழைந்தாலே 'தாம் தூம்' தான். அவள் முகத்தை பார்த்தாலே இவனுக்குப் பற்றி எரியும்.
வெளியில் போய்விட்டு வீடு திரும்பும் புருஷனை வளைத்துப் போட்டுக் கொண்டு "என்னங்க.. என்னங்க' என்று கொஞ்சத் தெரியாது. உங்கள் வருகைக்காகத்தான் வழிமேல் விழிவைத்துக் காத்கிருக்கிறேன் என்று புளுகத் தெரியாது. பீச்சுக்குப் போவோமா, பிக்சருக்குப் போவோமா என்று கேட்கத் தெரியாது. குறைந்த பட்சம் முகம் அலம்பி, தலைவாரிப் பூச்சூடி பளபளக்க கூடத் தெரியாது.
புத்தம் புதுசாக மனைவிக்கு மாற்றுப்புடவை வாங்கித் தர வக்கில்லாதவன், மனமில்லாதவன் மாசத்தில் நூற்றுக்கணக்கில் செண்ட்டுக்காகவும், லேகியங்களுக்காகவும் செலவழிப்பான்.
இன்றைய செண்ட் ஸ்பிரே சமாச்சாரத்திற்கும் அதான் காரணம். சுகன்யா என்றொரு சுந்தரி. சொந்த ஊர் திருவனந்தபுரத்திலிருந்து இவனது சென்னை தலைமை அலுவலகத்திற்கு மாற்றலாகி வந்திருக்கிறாள். மாலை ஐந்து மணிக்கு முடியும் ஆபீஸ் நேரம், காலை ஐந்து மணிக்குத் துவங்கினாலும் அவனுக்கு சம்மதமே. அந்த அளவுக்கு சுகன்யா தரிசனத்தில் தேன்மாந்திய குரங்காகிப் போனான் தங்கப்பன்.
இந்த லட்சணத்தில் சுகன்யாவின் கழுத்தில் தடித்த தாலிச்சரடு ஸ்பஷ்டமாகவே வெளியே தெரியும். தங்கப்பனைப் பொருத்த மட்டில் தாலியெல்லாம் வேலியல்ல.
சுகன்யா இந்த ஆபீஸில் சேர்ந்த மறுநாளே யாருக்கும் இல்லாத துணிச்சலாய் 'டைனிங் ரூம்' அருகே வழிமறித்து தங்கப்பன் கேட்டான்: "ஹலோ! ஒண்டர்புல்! பிரமாதமாயிருகே! என்ன ஸாரி இது, எங்கே வாங்கினீங்க?" முகபாவம் பூராவும் கண் வழியே புடவையின் நேர்த்தியை ரசிக்கிற மாதிரி காட்டிக் கொண்டு, அவன் உள் மனசு அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதற்கு ஏங்கியது.
"தேங்க் யூ.. சாதாரண ஆர்கண்டிதான். இது எங்க ஊர்லே எடுத்தது."
"அப்படியா? வெரிகுட்! நீங்க ஆயிரம் சொல்லுங்க.. அழகாயிருக்கறவங்க, சாதாரணப் புடவையைக் கூட கட்றபடி நேர்த்தியா கட்டினா, 'டாப்'பாத்தான் இருக்கு!" என்று வார்த்தைகளைத் தேனில் தோய்த்தெடுத்து மனசாரப் பாராட்டினான். வெகு இயல்பாகப் புடவை முந்தானை பாகத்தைக் கையிலெடுத்து நூல் நைஸ் பார்க்கிற மாதிரி விரல்களுக்கிடையே புரட்டினான். 'இதுவே அதிகம், ஜாக்கிரதை!' என்று உள்மனசு எச்சரித்தது. உடனே சடக்கென்று புடவைத் தலைப்பை விட்டு விட்டான்.
"தேங்க்யூ..தேங்க்யூ.." என்று சிரித்துக் கொண்டே சுகன்யா போய்விட்டாள்.
இந்த மாதிரியான நாலைந்து சம்பவங்கள்.. அத்தனையிலும் தனக்குத்தான் வெற்றியாக தங்கப்பன் நினைத்துக் கொண்டான். பல நேரங்களில் நினைப்பு தான் மனிதனைக் குடைசாய்த்து விடுகிறது. அதுவும், தன் செயல்களுக்கு சாதகமாக நினைக்கும் நினைப்புகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
ஆச்சு; இன்னும் சில நிமிடங்களில் சுகன்யா வந்து விடுவாள். இன்று சற்று முன்னாடியே ஆபீசுக்கு வந்து விட்டான் தங்கப்பன்.
'டப்டப்'பென்று அடித்துக் கொண்டு வந்த ஆட்டோ அலுவலக வாசலில் நின்றது. ஆட்டோவிலிருந்து சுகன்யா வெளிப்பட்டது ரதத்திலிருந்து இறங்கிய தேவதையாய்த் தோன்றியது அவனுக்கு.
சுகன்யாவின் தோற்றம் தான் அன்று வெள்ளிக்கிழமை என்பதையே அவனுக்கு நினைவுபடுத்தியது. (தேங்காய்) எண்ணெய் தேய்த்துக் குளித்ததினால் புஸூபுஸூத்தக் கூந்தலைக் கோடலி முடிச்சிட்டு ரிப்பன் போட்டுக் கட்டியிருந்தது அவனைக் கட்டிப்போட்டது. சிகப்பு நிற மேனிக்கு ஏற்ற கத்தரிப்பூக் கலர் புடவை; வாடாமல்லி நிற ஜாக்கெட். தழதழத்த சேலைக்குக் கீழே செருப்பணியாத ரோஸ் பாதங்கள்... அவள் ஹாலுக்குள் நுழையும் பொழுதே சரியான ஐடியா தங்கப்பன் மனசில் கிளிக் ஆகிவிட்டது.
சடாரென்று தன் சீட்டிலிருந்து எழுந்து தனியே அவளை எதிர் கொண்டு 'குட்மார்னிங்' என்றான்.
"மார்னிங்.." என்று அவள் ஒரு நிமிடம் தயங்கிய பொழுது ஒரு வினாடி கூட விரயம் பண்ணாமல், "உங்கள் வீடு ஆழ்வார்பேட்டை ஸ்ரீமான் ஸ்ரீநிவாசன் தெருவில் தானே இருக்கிறது?" என்று கேட்டான்.
"அதே!" என்று அவள் ஆச்சரியப்பட்டு திகைக்கும் பொழுது, "இன்னிக்கு ஈவினிங் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்.. ஐ'ம் கம்மிங்.." என்றான்.
"வித் பிளஷர்.. ஆழ்வார்ப்பேட்டைலே வேறு ஏதானும் ஜோலியோ?.."
"எஸ்.. வீனஸ் காலனிலே ஒரு கதாகாலேட்சேபம்... மிஸ் பண்ணக்கூடாது.. அதான்.. அப்படியே.." ஆஸ்திக சமாச்சாரங்களை குழைத்துப் பேசுவது அயோக்கியத்தனத்தைப் பாதியாகக் குறைத்துவிடும் என்பது அவன் அகராதியின் பாலபாடம்.
""ஓ... பக்தர்களை வரவேற்பது கடவுளையே வரவேற்கிற மாதிரி.." என்று அழகாகச் சிரித்தாள் சுகன்யா. "யூ ஆர் கார்டியலி வெல்கம்" என்று அவள் சொன்னது ஐஸ்கிரீமை சுவைப்பது போலிருந்தது தங்கப்பனுக்கு.
அவள் அவனைத் தாண்டிச் செல்கையில் மீண்டும் அந்தச் செருப்பணியாத ரோஸ் நிறப் பாதங்களைப் பார்த்தான். இவ்வளவு நேர்த்தியாக டிரஸ் பண்ணிக் கொள்ளும் இவள் ஏன் காலுக்கு எப்பொழுதும் செருப்பணிவதில்லை?.. நன்றாக இப்பொழுது நினைவூட்டிப் பார்த்தான். ஊஹூம்.. ஒரு நாள் கூட சுகன்யாவை அவன் செருப்போடு பார்த்ததில்லை என்பது நிச்சயமாயிற்று.
தீர்மானம் உருப்பெற்று மாலை ஆறுக்கு ஆழ்வார்ப்பேட்டை பேட்டா ஷூ மார்ட்டில் இருந்தான் தங்கப்பன். சுகன்யாவின் மலர்ப்பாதங்களை முத்தமிட காஸ்ட்லியாகவே செருப்பு வாங்கி அட்டைப் பெட்டியில் 'பாக்' செய்வித்து கைப் பையிலிட்டுச் சுமந்தான்.
"வாங்க, ஸாரே... வாங்க..." என்று வாய் நிறையப் புன்னகையுடன் சுகன்யா வரவேற்றது முக்கால் வாசி காரியம் முடிந்த மாதிரி இருந்தது தங்கப்பனுக்கு. உள்ளே நுழைந்தான்.
லேசாகப் பேச்சுக் கொடுத்து பையிலிருந்து செருப்பு அட்டைப் பெட்டியை எடுக்கலாமென்று தங்கப்பன் எண்ணியிருந்தான். அந்தத் தாமரைப்பூ பாதம் பிடித்து செருப்பை மாட்டி விடுவது அவன் உத்தேசம். அதுவே ஆரம்பம்.
"எத்தனை மணிக்கு காலட்சேபம், ஸாரே?" என்றாள்.
"ஏழு, ஏழைரைக்கு ஆரம்பம்," என்றவன், "உங்க ஹஸ்பெண்ட் வீட்டில் இல்லையா?" என்று கேட்டான்.
"ஓ" என்று அழகாக உதடுகளைக் குவித்தவள், "இருக்காரே! மாடியில்..." என்று மாடிப்பக்கம் கை காட்டினாள். "வாங்க, மேலே போய்ப் பார்க்கலாம்" என்று உள் பக்கமிருந்த மாடிப்படியில் அவன் பின்னால் வருவதற்கு வழிகாட்டுகிற மாதிரி ஏறினாள். தங்கப்பன் கைப்பையை ஊஞ்சலிலேயே வைத்து விட்டு அவளைத் தொடர்ந்தான்.
மாடி ஹால் நீண்டு காற்றோட்டமாக இருந்தது. ஹால் கோடியில் ஜன்னல் பக்கமிருந்த, ஸ்டாண்ட் பூட்டிய கேன்வாஸ் துணியில் யாரோ ஓவியம் வரைந்து கொண்டிருந்தார்கள். பக்கத்தில் நெருங்க, நெருங்க அவருக்கு ஒற்றைக் கால் இல்லை, கட்டை ஊன்றி நின்று ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறார் என்று தங்கப்பனுக்குத் தெரிந்தது.
மனித அரவம் கேட்டு, சிந்தனை கலைந்து திரும்பியவன் போல அந்த மனிதன் இவர்கள் பக்கம் திரும்பினான்.
"மீட் மை ஹஸ்பெண்ட் மோகன்!" என்று தன் கணவனை தங்கப்பனுக்கு அறிமுகப்படுத்தியவள், "இவர் தங்கப்பன்! புதுசாக இந்தக் கிளைக்கு மாற்றலாகி வந்தவளுக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருந்தது. இவர் தான் மிகவும் உதவிகரமாக இருந்தார். சகோதரர் போல உரிமையுடன் பழகுவார்," என்று சுகன்யா கணவனிடம் சொன்ன போது, கூனிக் குறுகிப் போனான் தங்கப்பன்.
"ஹலோ.. உட்காருங்க..." என்று அங்கு கிடந்த சோபா பக்கம் கை நீட்டி விட்டு, ஊன்று கோல் சப்திக்க தாண்டி வந்த மோகன், உயரமான ஒரு சேரில் கட்டைகளை அருகில் பற்றியபடி சாய்ந்து உட்கார்ந்தான். இப்பொழுது தான் தங்கப்பனால் அவனது ஒரு பக்கக் காலை நன்கு பார்க்க முடிந்தது. அது தொடைக்குக் கீழே நறுக்கப்பட்டு ஒன்றுமில்லாமல் சூம்பிக் கிடந்தது. ஆனால் மோகன் அதைப் பற்றிக் கவலைப்பட்டதாகவோ, அசெளகரியப்பட்டதாகவோ தெரியவில்லை. பேச்சில் உற்சாகம் கொப்பளித்தது.
ஓவியம் பற்றித் தனக்கு ஒன்றும் தெரியாது என்றாலும், கேன்வாஸில் வரையப்பட்டிருந்த அவனது ஓவியத்தைப் பார்த்து மிகவும் சந்தோஷப்படுவதாகச் சொன்ன தங்கப்பனுக்கு, இவன் வரையும் ஓவியப் பாணிகளைப் பற்றி 'டீடெய்ல்லா'கச் சொன்னான் மோகன். உலக ஓவிய பாணிகளும், அவை பற்றிய சித்தாந்தங்களும் அவன் பேச்சில் ஆற்றோட்டமாக பொங்கி வந்தது. பூபன் கக்கர், ரமேஷ்வர் ப்ரூடா, ஸதீஷ் குஜரால், ஓரொஸ்கோ என்று நிறைய பேர்கள் அவன் பேசும்போது குறுக்கே குறுக்கே வந்தார்கள். அத்தனையும் ஓவியர்களின் பெயர்கள் என்று ஒருவாறு யூகித்தான் தங்கப்பன். மோகன் சொன்னதில் தங்கப்பனுக்கு ஆதிமூலம் என்கிற பெயரை மட்டும் எங்கோ கேட்ட மாதிரி இருந்தது. நீலம், கருஞ்சிவப்பு, கரும் பழுப்பு என்பவை சாதாரணமாக நாம் வழக்கில் எண்ணிக் கொண்டிருக்கும் வெறும் நிறங்கள் மட்டுமல்ல; கான்வாஸ் ஓவியங்களில் அவை கொள்ளும் தீட்டல்களின் பங்கு பற்றி மோகன் சொல்லிக் கொண்டு வரும் பொழுது 'அம்மாடி, எம்மாம் பெரிய சப்ஜெக்ட் இது' என்கிற திகைப்பு தான் தங்கப்பனுக்கு ஏற்பட்டது. கட்டக் கடைசியாக அவனுக்கு இருக்கும் வித்வத்துவத்தில் தான் தம்மாத்துண்டு தூசி என்று தங்கப்பன் கூனிக் குறுகிப் போனாள்.
நேரம் ஓடிப்போனதே தெரியவில்லை. மணி ஏழரை. "சாரே, காலட்சேபத்திற்குப் போக வேண்டாம்?" என்று சுகன்யா ஞாபகப்படுத்தவே எழுந்து கொண்டான் தங்கப்பன். "அடிக்கடி வந்து போங்கள்.. உண்மையிலேயே நீங்கள் ஒரு சுவாரஸ்யமான நபர்.." என்று விடை கொடுத்தான் மோகன்.
"போன வருஷம், பத்மனாப சுவாமி கோயிலுக்குப் பக்கத்தில் ஸ்கூட்டர் ஆக்ஸிடெண்ட்... காலைத் துண்டிக்காவிட்டால், பிழைப்பது கஷ்டம் என்றதும் ஒற்றைக் காலை எடுத்து விட்டோம். அவர் அப்படி இருக்கையில் எனக்கெப்படி சாரே, செருப்பு அணிய மனசு வரும்? அன்னிக்கு விட்டது" என்று மாடி ஹாலைக் கடக்கையில் சுகன்யா சொன்னது பளாரென்று யாரோ கன்னத்தில் அறைந்த மாதிரி தங்கப்பனுக்கு இருந்தது. 'புருஷன் செருப்பு போட முடியாது போய்விட்டபடியால் தானும் செருப்பு போடாமலிருப்பது...' அவளைக் கையெடுத்துக் குப்பிட்டுத் தொழ வேண்டும் போலிருந்தது அவனுக்கு. 'பெண்டாட்டி கிழிசல் புடவையைத் தைத்து அணியும் போது, செண்ட் போட்டு கோயில் காளை போல் ஊர் மேயறயாடா, பாவி!' என்று உள் நெஞ்சு ஓலமிட்டது.
மாடிப்படியிறங்கும் போது தங்கப்பன் புது மனிதன். துணி துவைக்கிற கல்லில் நாலு அடி போட்டு கசக்கி அலசிய துணி போல அழுக்குகள் நீங்கி மனம் வெளுத்திருந்தது. இந்த ஆதர்ச தம்பதிகளின் நட்பு கிடைக்கத் தான் புண்ணியம் பண்ணியிருக்க வேண்டுமென தங்கப்பன் நினைத்துக் கொண்டான்.
வீட்டுக்கு வந்து கதவைத் தட்டிய பொழுது கெளசல்யா ஓடி வந்து கதவு திறந்தாள். உள்ளே நுழைந்து, வலது கை திருப்பி கதவு சாத்தியவன் இடைக்கழியிலேயே கெளசல்யாவை இறுக அணைத்துக் கொண்டான்.
"என்னங்க.." என்று மூச்சு திணறியவளை குண்டு கட்டாகத் தூக்கி வந்து, சோபாவில் கிடத்தி, அட்டைப் பெட்டி திறந்து, பரபரவென்று காகிதப் பார்ஸலைப் பிரித்து, புத்தம் புது வண்ணச் செருப்புகளை அவள் கால்களில் ஆசையோடு அணிவித்தான்.
"நா என்ன வேலைக்கா போறேன்? எனக்கு எதுக்குங்க புது செருப்பு?.. இதுக்குப் பதில் சேலை வாங்கியாந்து இருக்கலாமில்லே?" என்றவளுக்கு
"நாளை சேலை... இன்று செருப்பு." என்று ஆசையோடு அவளை அணைத்துக் கொண்டான் தங்கப்பன்.
"நாளை சேலை... இன்று செருப்பு." என்று ஆசையோடு அவளை அணைத்துக் கொண்டான் தங்கப்பன்.
படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.
நண்பர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!...
நண்பர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!...