மின் நூல்

Sunday, February 25, 2018

நேரில் வந்த தெய்வம்

ன் மனைவிக்கு ஷேத்திராடனங்கள் செல்வதில்  ஆர்வம் மிகவும் அதிகம்.
இறை பக்தியும் அதிகம்.

தெற்கு பக்கம் நாங்கள் வந்தாலே ஏதாவது ஷேத்திராடனம் செய்ய
வேண்டும் என்று வற்புறுத்துவாள்.  எனக்கு அதில் அவ்வளவாக ஈடுபாடு கிடையாது.  அதற்காக நான் நாத்திகன் என்பது அல்ல.  பயணம் செய்வது என்பதே என்னை மிகவும் சோர்வு கொள்ள வைக்கும் விஷயம்.

என்னால் கூட்டங்களில் சிக்கிக் கொள்ள முடியாது.  முண்டியடித்து முன்னேறிச் செல்லும் சாமர்த்தியமும் கிடையாது.   வாயை வைத்துக் கொண்டு வெறுமனே மென்று கொண்டிருக்காமல்  எதையாவது சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்வது போன்ற விஷயங்களில் மட்டுமே ஆனந்தம் அடைபவன்  நான்.

அது 1944 என்று நினைக்கிறேன்.  எனக்கும் அப்படியொரு ஷேத்திராடனம் மேற்கொள்ளும் வாய்ப்பு நேர்ந்தது.  கூடவே, ஒரு அதிர்ஷ்டமும் வாய்த்தது. அது என் நண்பர் கிருஷ்ணமூர்த்தி சிலாக்கியமான ஆஞ்சநேய  உபாசகர். குருவாயூர், திருவனந்தபுரம் முதலிய ஷேத்திரங்களுக்கு அவருடன் நானும் என் மனைவியும் கிளம்பினோம்.

சரி.. மறப்பதற்கு முன் உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லி ஆக வேண்டும். எங்களுடன் வருவதற்கு கிருஷ்ணமூர்த்தி முன் வந்ததற்கு முக்கியமான  காரணம் ஒன்று  இருந்தது.  அவர் ஆஞ்சநேய உபாசகர் என்று சொன்னேன், அல்லவா?..

என் மனைவியின் சொந்த  ஊர் தாராபுரம்  அருகிலிருக்கிறா கொளிஞ்சவாடி என்னும் கிராமம்.    அங்கு  ஒரு  ஆஞ்சநேயர் கோயில் மிகவும் பிரசித்தம்.  வனவாசத்தின் போது ராமபிரானும் சீதாபிராட்டியும் லஷ்மணனும் அங்கே வந்து தங்கியதாக ஐதிகம்.  எங்கள் ஷேத்திராடனத்தை முடித்ததும்  தாராபுரம் செல்வதாக எங்கள் திட்டம்.  அந்த ஊர் அஞ்சநேயர் கிருஷ்ண மூர்த்தியை இழுத்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

சரி,  மீண்டும் எங்கள் பயணத்திற்கு வருவோம்.  கன்யாகுமரியில்  அதி அற்புதமான தரிசனம்.  அதை  முடித்து திருவனந்தபுரம் செல்ல ஒரு வாடகை காரை அமர்த்திக்  கொண்டு மிகவும் ஆவலுடன் கிளம்பினோம்.   அந்த ஆவலில் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள தவறி விட்டோம்.

நாங்கள்  கிளம்பிய அன்று திருவனந்தபுரத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் மறியல் போராட்டம்.  கார் திருவனந்தபுரத்தில் நுழைந்தது. அங்கு பார்த்தால் மிகப்  பெரிய  கும்பல் ஒன்று கைகளில் சகலவிதமான ஆயுதங்களையும் ஏந்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.  எங்கும் ஒரே களேபரம்.  அப்பாவிகளாக உள்ளே நுழைந்த எங்களைச் சூழ்ந்து  கொண்டது, அந்தக்  கும்பல்.  எங்கும் வெறிக்  கூச்சல்கள். கட்டைகளால் எங்களின் காரைத் தாக்க ஆரம்பித்தது, அந்தக் கும்பல்.  நாங்கள் நடுநடுங்கி விட்டோம்.  விவரிக்க முடியாத பதற்றம்.  உயிர் பயம்.

எந்த நேரமும் எங்களை வெளியே இழுத்துத் தாக்கத் தயாராக இருந்தது அந்தக் கூட்டம்.   எங்கள் ஓட்டுநர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்.  மன்றாடிப் பார்த்தார்.  கேட்பதற்கு யாரும் அங்கு தயாராக இல்லை.  நான் நடிகணாகவும் (மேடைகளில் தான்!)  இருந்திருக்கிறேன், இல்லையா?.. மனதில் ஒரு  நல்ல யுக்தி  தோன்றியது.  கால்கள் ஊனமானவன் போன்ற பாவனையில் காரை விட்டு இறங்கினேன்.

அந்த  மறியல் கூட்டத் தலைவனின்  கால்களை இறுகப் பிடித்துக் கொண்டு "ஐயா!  நாங்கள் தெரியாமல்  இந்த ஊருக்குள் நுழைந்து விட்டோம்.  பத்மநாப சுவாமியை தரிசிக்கத் தான் நாங்கள் வந்தோம்.  நான் ஒரு பத்திரிகையாளன்.  இதோ, என்னுடைய அடையாள அட்டை.  எங்களுக்கு சுவாமி தரிசனம் கூட வேண்டாம்.  நாங்கள் திரும்பிச் செல்ல அனுமதியளித்தால் போதும்.." என்று அழாக்குறையாக மன்றாடினேன்.

கொஞ்ச நேரத்திற்கு நீண்ட அமைதி.  கோபமான பார்வைகள்.  அப்புறம் என்ன தோன்றியதோ தெரியவில்லை.. "போய்க்கோடா.." என்று வெறுப்புடன் சொல்லி நகர்ந்தான்.  தப்பித்தோம், பிழைத்தோம் என்று எங்கள் காரைக் கிளப்பிக் கொண்டு கிளம்பினோம்.  அடுத்து இன்னொரு ஆபத்தை நோக்கிப் போகிறோம் என்பது தெரியாமலேயே.

எங்கள் காருக்கு முன்னால் ஒரு பெட்ரோல் டாங்க்கர் சென்று கொண்டு  இருந்தது.  அதிலிருந்து எண்ணெய் வழியெங்கும் கசிந்து கொண்டே இருந்தது.  எங்கள் ஓட்டுநர் ஓட்டிய வேகத்தில், அந்த வழுக்கலில் சக்கரங்கள் சறுக்கி, நிலை  தடுமாறி, அருகில் மிகவும் ஆவேசத்துடன் ஓடிக்கொண்டு இருந்த காட்டாறு ஒன்றில் இறங்கி விட்டது எங்கள் கார்.

'இதோடு நம் ஆயுள் முடிந்தது' என்ற தீர்மானத்திற்கு வந்தோம்.  நடுங்கிய பயத்தில் கண்களை இறுக்க மூடிக் கொண்டோம்.  நண்பர் கிருஷ்ண மூர்த்தி பரபரப்புடன் ஆஞ்சநேய ஸ்தோத்திரத்தை ஜபிக்க ஆரம்பித்து விட்டார். எங்களுடன் ஒட்டியிருந்த கொஞ்சமான நல்ல நேரம் என்னவென்றால்,  எங்களுடைய கார் ஆற்றின் ஊடாகத் துருத்திக் கொண்டு, உயர்ந்து வளர்ந்திருந்த ஒரு மரத்தின் பிர்மாண்டமான கிளைகளின் இடையே சிக்கி இருந்தது.

ஓட்டுநர் தன்  பலத்தையெல்லாம் பிரயோகித்து, பிரேக்கை அழுத்திப்  பிடித்துக் கொண்டிருந்தார்.  விட்டால், அதோகதிதான்... ஆற்று வெள்ளாத்தின் வேகம் எங்கள் காரை இழுத்துக் கொண்டு போய்விடும்.  எங்கள் உயிர்கள் மீண்டும் எங்கள் கைகளில் இல்லை, .  நண்பர்  கிருஷ்ணமூர்த்தியைத் தவிர, நாங்கள் எல்லோரும் "ஆபத்து.. ஆபத்து" என்று உதவிக்காகக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தோம்.  அவர், தன்னுடைய ஸ்தோத்திரத்தைத் தொடர்ந்து  கொண்டிருந்தார்.  யாரையும்  காணோம்  எங்கள் பதைப்பு இன்னும்  கூடியது.

திடீரென்று அந்தச் சாலையின் இடது புறத்தில், எங்கோ வெகுதொலைவு தள்ளி வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த சுமார் ஐம்பது பேர் ஓடோடி வந்தார்கள்.  எல்லோரும் சேர்ந்து காரை இந்தப்  பக்கம் இழுக்க முயற்சிதார்கள்.  பாதி நம்பிக்கை வந்தது.  ஆனால், மூச்.. கார் ஒரு இம்மி கூட நகரவில்லை!  கார் போட்ட ஆட்டத்தில் எங்களுக்குப் பாதி உயிர் போய்விட்டது.  மரணத்தின் நிழல் கொஞ்ச்சம் கொஞ்சமாக எங்களின் மீது படர ஆரம்பித்தது.

அப்பொழுது அந்த வழியாக லாரி ஒன்று வந்தது.  உதவிக்கு வந்த விவசாயத்  தொழிலாளர்கள், அந்த லாரியை வலுக்கட்டாயமாக மறித்து நிறுத்தி, நிலைமையை விளக்கினார்கள்.  அந்த லாரியின் ஓட்டுனர் தன்னுடைய லாரியை எங்கள் காருக்கு சரியாக நிறுத்தி, ஒரு கயிற்றைக் கட்டி மிகவும் சாதுர்யமாக எங்கள் காரை  இழுக்க ஆரம்பித்தார்.

கார் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வர ஆரம்பித்தது.  நாங்கள் ஒரு வழியாக மரணத்தை தூர விரட்டி விட்டு மேலே வந்தோம்.  கரணம் தப்பினால் மரணம் என்று சொன்னால் மிகையாகாது.  நன்றியுடன் பெருமூச்சு விட்டோம்.   நானும் என் மனைவியும் போட்டது வெறும் கூச்சல்.  கிருஷ்ணமூர்த்தி சொல்லிக் கொண்டிருந்தது ஆஞ்சநேய ஸ்தோத்திரம்.

அதன் சக்தி தான் இவர்களை இங்கு அனுப்பியதா?..

அந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு எப்படி  நன்றி சொல்வது?.. ஆயிரம் ரூபாயை எடுத்துத் தந்து, அவர்களிடம் வைத்துக் கொள்ளச் சொன்னேன்.  அதில் ஒருவர், என் கண்களையே   உற்றுப் பார்த்து, "நாங்கள் என்ன பிச்சைக்காரர்களா?.. நீங்கள் பத்திரமாக ஊர் போய்ச் சேருங்கள். எங்களுக்கு அது போதும்.." என்றார்.

என்ன ஒரு பண்பாடு!  என்ன ஒரு கருணை உள்ளம்!  ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டேன்.   நெக்குருகிப் போனேன்.  அந்தக் கருணை உள்ளங்களில் நான் மிகவும் நம்பிக்கை வைத்திருக்கும் என்னுடைய தெய்வத்தை நேரில் கைகூப்பித் தரிசித்தேன்!                                                               


                                                                     
    ----  பிரபல இசை விமரிசகர்
                  சுப்புடு அவர்கள்
                                                                                        நன்றி: ஆனந்த விகடன்
                                                                                                                    3--11--2002  இதழ்                                                                                                           
               
 
படங்கள் உதவிய அன்பர்களுக்கு மனம் கனிந்த நன்றி.


Wednesday, February 21, 2018

தமிழகக் கோயில்கள்


கோயில் கட்டிடக் கலை சோழ மன்னர்கள் காலத்து நாளும் வளர்ந்து, நாயக்க மன்னர்கள் காலத்து விரிந்து பின்னர் தேய்ந்திருக்கின்றன என்று சொல்லி காலவரையைக் கணக்கிட்டு விடலாம்.

தமிழ் நாட்டுக் கோயில்களின்  காலத்தை அங்குள்ள மண்டபங்களை, அந்த மண்டபங்களில் நிற்கும் தூண்களை, அத் தூண்களில் உள்ள போதிகைகளை வைத்தே நிர்ணயித்தல் கூடும்.  இவற்றைப் பற்றியெல்லாம் விரிவாக இச் சுருங்கிய நேரத்தில் நான் பேச விரும்பவில்லை.  கோயில்  கட்டிட அமைப்பில் உள்ள உறுப்புகள் அதன்  பெயர்கள் எல்லாம் சாதாரண மக்களும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேணும் என்று ஆசைப்படுகிறவன் நான்.

நீண்டுயர்ந்த மலையைக்  கண்டு எப்படி கோபுரம் அமைக்க விரும்பினார்களோ அதுபோல மனிதனது உடல் அமைப்பைப் பார்த்தே கோயிலை நிர்மாணிக்க முனைந்திருக்கிறார்கள் சிற்பிகள்.  நீண்டு நிமிர்ந்த பெருங்கோயில் உறுப்புகள் நல்ல தமிழில் அடி, உடல், தோள், கழுத்து, தலை, முடி  என்று ஆறாகும்.  இதையே சிற்ப சாஸ்திரத்தில் அதிஷ்டானம், பாதம், மஞ்சம், கண்டம், பண்டிகை, ஸ்தூபி என்று நீட்டி முழக்கி வடமொழியில் சொல்வார்கள்.   நல்ல தரை  அமைப்பே அடியாகும்.  இதனையே அதிஷ்டானம், மசூரகம், ஆதாரம், தலம், பூமி என்றெல்லாம் கூறுவார்கள்.  இந்த அடி மேல் எழுந்த உடலே கருவறை.  இதனையே கால், பாதம், ஸ்தம்பம், கம்பம் என்று கூறுவார்கள்.
கருவறையை திரு உண்ணாழி என்று கல்வெட்டுகளில்  குறித்திருக்கும்.  இந்தக் கருவறையின் மேல் நிற்பதே தோள்  என்றும் பிரஸ்தரம்,  மஞ்சம், கபோதம் எல்லாம்.  அதற்கும் மேலே கண்டம், களம், கர்னம் எனப்படும் கழுத்து.  இதன் மேலே இருக்கும் ஸ்தூபியே முடி.  இவைகள் எல்லாம் என்ன என்ன அளவில் இருக்க வேண்டும் என்பதற்கெல்லாம் விதிகள் உண்டு.இன்னும் இந்த உறுப்புகளை  ஒட்டிய  பல பகுதிகள்  பல  பெயர்களில் விளங்கும்.  திருவுண்ணாழி என்னும் கருவறைச் சுவரின்  வெளிப்  பக்கத்திலே கோஷ்ட பஞ்சரம், கும்ப  பஞ்சரம் என்னும் மாடக்குழிகள் அமைக்கப்படும்.  கருவறை அர்த்த மண்டபம் இரண்டையும் சுற்றி  ஐந்து கோஷ்ட பஞ்சரங்கள்.  இவைகளில் கணபதி, தஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை உருவங்கள் இருத்தப்படும்.  கோஷ்ட பஞ்சரத்திலே இந்த தெய்வ உருவங்களை அமைக்கும் வழக்கம், சோழ மன்னர்கள் காலத்திலே தான் ஆரம்பித்திருக்க வேண்டும்.   கோஷ்ட பஞ்சரங்களுக்கு இடையிடையே கும்ப பஞ்சரம், கும்ப  பஞ்சரம், அடியில் குடமும் மேலே சிற்ப  வேலையோடு கூடிய கொடியும் இருக்கும்.   தோள் என்னும் பிரஸ்தாரத்தின் மேலே  கர்ண கூடு, பஞ்சரம், சாலை என்னும் உறுப்புகள் இவைகளின் அமைப்பை எல்லாம் விவரிப்பதை விட கோயிலுக்குச் செல்லும் போது நேரே பார்த்துத் தெரிந்து  கொள்ளுதல் நலம்.

கோயிலுக்குள் இருக்கும் மற்ற பரிவார ஆலயங்களைப் பற்றியும் ஒரு சில வார்த்தைகள்.  பத்தாம் நூற்றாண்டில் சோழன் விஜயாலயன் காலத்திற்குப் பின் தான் சிவன் கோயில்களீல் அம்பிகைக்கென்று தனி ஆலயங்கள் கட்டப் பட்டிருக்கின்றன.  அதற்கு முந்திய காலத்தில் அம்பிகைக்கு என்று தனிக் கோயில்கள் இருக்கவில்லை.  காஞ்சியில் உள்ள அத்தனை சிவன்  கோயிலிலும் இன்றும் அம்பிகைக்கு சந்நிதி கிடையாது.  எல்லோருக்கும் சேர்த்து ஒரே அம்பிகையாய், ஒப்பற்ற அம்பிகையாய் தனிக் கோயிலில் இருப்பவள் தான் அன்னை காமாட்சி.  சோழ மன்னர்கள் காலத்தில் தான் அம்பிகைக்குத் தனி சந்நிதி அமைத்தார்கள்.  முதலில் பிரதான  கோயிலிலேயே ஒரு சிறு கோயில் கட்டி தெற்கே பார்க்க நிறுத்தினார்கள்.  அதன் பின் அம்பிகை கோயிலை இறைவன் வலப்பக்கத்திலே கட்டினார்கள்.
செய்த தவறை உணர்ந்து பின்னர் அநேகமாக எல்லாக் கோயில்களிலும்
இறைவனுக்கு இடப்பக்கத்திலேயே அம்பிகைக் கோயிலையும் கட்டி இருக்கிறார்கள்.  சோழர்கள் காலத்தில் இறைவனுக்கு இடப்பாகத்திலேயே அம்பிகை கோயிலைக் கட்டியிருக்கிறார்கள்.  சோழர்கள் காலத்தில்  இறைவனுக்கு இடப்பக்கத்திலிருந்த அம்பிகை நாயக்க மன்னர்கள் காலத்திலே திரும்பவும் வலப்பக்கத்திற்கே வந்து கோயில் கொண்டிருக்கிறாள்.  பெரிய சிவன்  கோயில்களிலே ஆதியிலே கணபதி, முருகன் முதலியவர்களுக்குத் தனித்தனி கோயில்கள் இல்லை.  பின்னர் தான் கோயிலின் தென்மேற்கு மூலையிலே சுப்பிரமணியரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.  நடராஜருக்குத் தனி சந்நிதி என்பதெல்லாம் மிகவும் பிற்பட்ட காலத்தில் எழுந்தது தான். தெய்வத் திருமுறைகளை எல்லாம் வகுத்த பின்பே, அடியார்கள், நாயன்மார்கள் எல்லாம் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  நவகிரக வழிபாடு மிகவும் பிற்காலத்திலே தான் ஏற்பட்டிருக்க வேண்டும்.

சிவன் கோயில்களைப் போலவே பெருமாள் கோயில்களிலும் பத்தாம் நூற்றாண்டிற்கு முன்பு தாயார் சந்நிதி இருந்ததில்லை.  இன்றும் ஒப்பிலியப்பன்,  நாச்சியார் கோயில் முதலிய இடங்களில் தனித்த தாயார் சந்நிதி இல்லை என்பது பிரச்சித்தம்.  கருவறைக்குள்ளேயே இருந்த தாயாரைப் பிரித்து அவளைத் தனிக் கோயிலில் இருத்தியதெல்லாம் பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்பு தான்.  ஆழ்வார்களும்,  ஆச்சாரியார்களும் மற்றும் ராமன், கண்ணன், விஸ்வக்சேனர் எல்லாம் தனிக் கோயில்களில் அமர்ந்தது  இன்னும் பிந்திய காலத்திலேயே. 


சமுதாய வாழ்வினை வளர்க்க இக்கோயில்கள்  எப்படி  உதவியிருக்கின்றன என்று தெரிந்து கொள்ளாவிட்டால் இந்தப் பேச்சு பூரணம் அடைந்ததாகாது. நகர நிர்மாணத்திலேயே கோயில்கள் முக்கிய ஸ்தானம்
வகித்திருக்கின்றன.  எந்த ஊரிலும் ஊருக்கு நடுவில் தான்  கோயில். அதைச் சுற்றிச் சுற்றித் தான் தெருக்கள், கடைவீதிகள், வீடுகள் எல்லாம். மதுரையைப் பாருங்களேன்.    நகர நிர்மாணத்திற்கே சிறந்த  எடுத்துக்காட்டு என்றல்லவா மேல் நாட்டு அறிஞர்கள் பாராட்டுகிறார்கள். கோயிலின் நான்கு  திசைகளிலும் நான்கு  வாயில்கள். வாயில் ஒவ்வொன்றிலும் உயர்ந்த கோபுரங்களை எழுப்பி நாட்டையும் நகரத்தையும் காத்து நிற்கும் காவல் கூடமாக அல்லவா கோயிலை உருவாக்கியிருக்கிறார்கள், தமிழர்கள்?..

கோயில்களைச் சுற்றிய வீதிகளில் வியாபாரங்கள் வலுத்திருக்கின்றன. 
வியாபாரம் பெருகப் பெருக நாட்டின் வளம் பெருகியிருக்கிறது.  பல நாடுகளிலிருந்து வியாபாரிகள் தங்கள் தங்கள் பண்டங்களைக் கொண்டு வந்து கொடுத்து தங்கள் நாட்டில் கிடைக்காத பண்டங்களை இங்கிருந்து வாங்கிப்  போயிருக்கிறார்கள்.  இப்படி வருகிறவர்களது வசதிகளைத் தெரிந்தே கோயிலை ஒட்டிய சந்தைகள், உத்சவங்கள், திருவிழாக்கள் எல்லாம் வளர்ந்திருக்கின்றன.  நல்ல பொருளாதாரக் கண்கொண்டு நோக்கினால் ஒவ்வொரு திருவிழாவுமே ஒரு பெரிய சந்தை தான்.. கூட்டுறவு சம்மேளனம் தான்.

பல பக்கத்திலிருந்தும் மக்கள் இப்படி வந்து கூடக்கூட நாட்டின் வளம்,
நகரத்தின் வளம் பெருகியிருக்கிறது.  வந்தவர்களுக்கு உணவளிக்க அன்னச் சத்திரம் தோன்றியிருக்கின்றன.  கோயிலை ஒட்டிக் குளங்கள், குளங்களை ஒட்டி நந்தவனங்கள் உருவாகியிருக்கின்றன.  இவைகளை நிர்மாணித்தவர்கள் அவரவர்கள் காலத்திற்குப் பின்னும் இவைகள் சரியாக நடக்க நிலங்களை, செல்வங்களை மானியமாக வழங்கியிருக்கிறார்கள். இப்படித் தான் தேவதானங்கள், தேவபோகங்கள் எல்லாம் எழுந்திருக்கின்றன.

கோயில்களால் விவசாயம் விருத்தியடைந்திருக்கிறது. கைத்தொழில் பெருகியிருக்கிறது.   கட்டிட நிர்மாணத்தில் கைதேர்ந்த தச்சர்கள், சிற்பிகள், வர்ண வேலைக்காரர்களுக்கு எல்லாம் கோயில்கள் தக்க ஆதரவாய் இருந்திருக்கின்றன.  கோயில்கள் கலாநிலையங்களாக, கலைக் கூடங்களாக வளர்ந்திருக்கின்றன.  இசையும் நடனமும் கோயில்களின் நித்யோத்சவத்தில் பங்கு பெற்றிருக்கின்றன.  கல்விச் சாலைகள், பொருட்காட்சி சாலைகள் எல்லாம் கோயிலுக்குள்ளேயே அமைந்திருக்கின்றன.  வியாக்யான மண்டபம்,  வியாகர்ண மண்டபம், சரஸ்வதி பண்டாரங்கள் முதலியன கோயில்களுக்குள்ளேயே நிர்மாணிக்கப் பட்டிருக்கின்றன.   தென்னார்காடு ஜில்லாவில் எண்ணாயிரத்திலும்,  செங்கற்பட்டு ஜில்லாவில் திருமுக்கூடலிலும்  பெரிய  பெரிய கலாசாலைகளே கோயில்கள் ஆதரவில் நடந்திருக்கின்றன.  எண்ணாயிரம் கோயிலில் ஒரு சமஸ்கிருத பாடசாலை நடத்த முன்னூறு ஏக்கர் நிலம் மான்யமாக விடப்பட்டிருக்கிறது.  340 மாணவர்களுக்கு  தங்க இடமும், உண்ண உணவும், உடுக்க உடையும் இனாமாக வழங்கப்பட்டிருக்கின்றன.

மக்களது அறிவு  விருத்திக்குக் கல்விச் சாலைகள் ஏற்பட்டது போலவே மக்கள் உடல் நலத்தைப் பாதுக்காக்க மருத்துவ சாலைகளும் கோயில்களுக்கு உள்ளேயே இருந்திருக்கின்றன.  பதினோராம் நூற்றாண்டில் உள்ள ஒரு சோழனது கல்வெட்டிலிருந்து 15 படுக்கைகள், ஒரு மருத்துவர், ஒரு ரண சிகித்சை வைத்தியர்,   இரண்டு தாதியர் கொண்ட ஒரு மருத்துவ சாலையே நடந்திருக்கிறது ஒரு கோயிலில் என்று அறிகிறோம்.    கால்நடை மருத்துவ சாலைகள் கூட கோயில் ஆதரவில் நடந்திருக்கின்றன.

கோயிலை ஒட்டி எழுந்த இந்த ஸ்தாபனங்களையும் நிர்வகிக்க ஸ்தானீர்களும்  காரியஸ்தர்களும் இருந்திருக்கிறார்கள்.  பொருளைக் காவல்  காக்க பண்டாரிகள், பூசைகள் எல்லாம் சரியாய் நடக்கிறதா என்று பார்க்க தேவகர்மிகள், இவர்களுக்கெல்லாம் மேலே அதிகார புருஷர்கள், அவர்களுக்கு ஆலோசகர்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள்.  இப்படி மக்களை எல்லாம் சமுதாய வாழ்விலும், கலை ஆர்வத்திலும், பொருளாதார துறையிலும் ஒன்று சேர்க்கும் பெரிய நிலையமாக அல்லவா இக்கோயில்கள்  உருவாகியிருக்கின்றன?..  இப்படிப்பட்ட ஒரு கலா நிலையத்தை நடு நாயகமாகக் கொண்டே மக்கள் வாழ்வு சிறந்திருக்கிறது என்பது தெரிகிறது.


-- தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் ரேடியோ உரை.
    திருச்சி வானொலி நிலையத்தார்  ஒலிபரப்பு.                 


தொ,மு. பாஸ்கரத் தொண்டைமானின்  சில வானொலி உரைகள் புத்தக வடிவில்:

  தமிழ்க் கோயில்கள் தமிழர் பண்பாடு

 நிவேதிதா பதிப்பகம்,  அசோக் நகர், சென்னை-83நெல்லையம்பதி தரணிக்களித்த தவச்செல்வன்
தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்.  இவரது இளவல் தான்  பிரபல பொதுவுடமைவாதியும் நெசவாளர்களின் வாழ்வு நிலையை உருக்கமுடன் படம் பிடித்துக் காட்டும்  'பஞ்சும் பசியும்' என்ற அற்புத தமிழ் நாவலின் படைப்பாளியுமான  தொ.மு.சி. ரகுநாதன்.

பாஸ்கரன் இளமையில் நெல்லை'மதுரை திரவியம்  தாயுமானவர் இந்துக் கல்லூரி 'கல்விச்சாலையில் கல்வி பயின்றார்.  சாதாரண எழுத்தராக அரசுப் பணியில் சேர்ந்த இவர் மாவட்ட ஆட்சித் தலைவராக தமது குன்றாத ஆற்றலால் பதவி  உயர்வு பெற்றவர்.

ரசிகமணி டி.கே. சிதம்பரநாதரின் புகழ்பெற்ற 'வட்டத்தொட்டி'  நண்பர்களில் இவரும் ஒருவர்.   கோயில்கள் இவருக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட்.   பிரபல 'வேங்கடம் முதல் தென்குமரி வரை' நூல்
இவரின் படைப்பு தான்.  அதே மாதிரி 'வேங்கடத்துக்கு அப்பால்' என்ற அருமையான நூலும் இவரது தான்.  நம் கையைப்  பிடித்துக் கொண்டு கோயில் கோயிலாக படியேறி இறங்கும் உணர்வு இவரது நூல்களை வாசிப்போருக்கு ஏற்படுவது உறுதி.   பாஸ்கர தொண்டைமான்  தஞ்சைக் கலைக்கூடம்  அமைவதற்குப் பாடுபட்டவர்களில் ஒருவர்.

Monday, February 19, 2018

கடவுள்.. மறுபிறவி.. ஊழிக்காலம்

டாக்டர்!  உயிர், மரணம், ஆத்மா, மறுபிறவி.. போன்ற விஷயங்களைப் பற்றி அறிவியல் உலகம் என்ன மாதிரியான கருத்துக்களை முன் வைக்கிறது?..


மறுக்க முடியாத நிலையான உண்மைகள் (concret facts)  என்று உண்டு.  உங்கள் கேள்விகளில் உள்ள விஷயங்கள் எல்லாம் அரூபமான -- அப்ஸ்ட்ராக்ட் -- விஷயங்கள்.  இவற்றுக்கான விளக்கமும் அப்ஸ்ட்ராக்டாகத் தான் இருக்க முடியும்.  ஓரளவு தர்க்கத்தோடு உண்மைகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம் என்றாலும் நாம் சொல்வதே இறுதி  முடிவல்ல. விவாதத்துக்கு உரியது தான்.

பிரபஞ்சம் (Universal) என்பது ஒன்று தான் என்கிற கருத்து முன்பு நிலவி வந்தது.  இப்போது குறைந்தது பத்துப் பிரபஞ்சங்களாவது இருந்தால் தான் நமது அரிய சூரிய குடும்பம் இவ்வளவு ஒழுங்காக இயங்க முடியும்' என்று கூறுகிறது நவீன பெளதீகம்.

இங்கே தான்  'கடவுள்'  என்கிற கருத்து (கான்செப்ட்)  வருகிறது.

பத்துப் பிரபஞ்சங்கள் என்கிற பிரமாண்டத்தின் முன்னால், பூமி என்கிற சிறு கிரகத்தில் உயிரினங்கள் வந்தது எப்படி?..

வேறு ஏதோ கிரகத்திலிருந்து நம்மை விடச் சக்தி வாய்ந்த சூப்பர் உயிரினம் வந்து தான் பூமியை உருவாக்கியதா?..
                                                                                                                   
'நெபுலா'விலிருந்து சூரியன் பிரிந்து, சூரியனிலிருந்து பூமி பிரிந்தது.  உஷ்ணக் கோளமாக இருந்த பூமி பிறகு வெறும் நீர்ப்பரப்பாக மாறியது.  தொடர்ந்து எல்லாமே ஜடமாக இருந்த நிலையில் ஏதோ ஒரு மூலக்கூறுக்கு மட்டும் உயிர் வந்தது.  அதிலிருந்து நீர்வாழ் உயிரினங்கள் பரிணாமம் கொண்டன.  நீர் அளவு குறைந்து தரைப்பகுதி உருவானவுடன் நீரிலும் நிலத்திலும் வாழும் தவளை போன்ற உயிர்கள் தோன்றின.  பிறகு நிலத்தில் வாழும் உயிர்களுக்கு பழம் பறித்துத் தின்ன கைகள் வளர்ந்தன.  பிற உயிர்களைக் கொன்றாவது தன்னைக் காத்துக் கொள்ள 'தந்திரங்கள்' வந்தன.  இது தான் இன்றைய அறிவியல் கண்ணோட்டம்.

'அந்த முதல் மூலக்கூறுக்கு உயிர் கொடுத்த 'சக்தி' எது?  அதைக் 'கடவுள்' என்று சொல்லலாம்' என்று விஞ்ஞானிகளே ஒப்புக்  கொள்கிறார்கள்.

எலெக்ட்ரான் மிகச் சிறியது.  கண்களால் பார்க்க முடியாதது.  அந்த எலெக்ட்ரான் பல க்வார்க்குகளை உள்ளடக்கியது.  இந்த கிவார்க்கின்  உள்ளே பல க்ளுவான்ஸ் இருக்கின்றன. அவை  தானாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன.  அந்த க்ளுவான்ஸிடம் போய் 'மனிதன் என்று ஒருவன்  இருக்கிறான் என்று சொன்னால் அது ஒப்புக்கொள்ளுமா?..

இதேபோல் நம்மை விட பெரிதான் ஒரு சக்தி இருக்கலாம்.  'தீமை செய்யாதே' என்று பயமுறுத்துவதற்காகவும், 'நன்மை நினை' என்று உபதேசிக்கவும்  அந்த  சக்திக்கு மதவாதிகள் 'கடவுள்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

உலகில் சுமார் 3,50,00 உயிர் வகைகள் இருக்கும் சூழலில் மறுபிறவி என்கிற சிந்தனையை மனிதன் வளர்த்துக்  கொண்டதற்கும் இதே 'நன்மை--தீமை' தான் காரணமாக இருக்க முடியும்.

அறிவியல் பிரகாரம் 'மரணம்' என்பது உயிரின் நிறுத்தம்!

எனில், உயிர் என்பது சூழலை உள்வாங்கிக் கொள்ளுதல், அதற்கேற்ப நடந்து கொள்ளல்,  உயிரோடு இருக்க நடத்துகிற போராட்டம் (Survival Instinct)   தன்னைப் போன்ற உயிரினத்தை உருவாக்குதல் --- இத்தனை தான்.

மேலே சொன்ன நான்கு தவிர சில மனித உயிர்களுக்கு சில அதிகபட்ச சக்திகள் கிடைக்கின்றன.   உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால்  'Psycho Kinesis'  என்கிற அதீத மனோசக்தி.  இதை  வைத்துக்  கொண்டு தான் மாயமான, புதிரான காரியங்களைச் சிலர் செய்கிறார்கள்.  பிக்பென் கடிகாரத்தை ஒரு பெண்  முறைத்துப் பார்த்தே நிறுத்தியது இந்த அடிப்படையில் தான்.

இது போன்ற அதீத சக்திகள் அல்லாமல் சாதாரணமான மனித செயல்பாடுகளையும் மூளை தான் கட்டுப்படுத்துகிறது.  மனிதன்  கம்ப்யூட்டர் என்றால் மூளை தான் ஹார்டுவேர்.  மனம் தான் சாஃப்ட்வேர்.

மூளை அப்படிச் செய்கிற பணி நியாயமானதா என்று பார்ப்பது மனசாட்சி.

இதெற்கெல்லாம் பின்புலமாக இருக்கும் ஈகோவின் உயர்ந்த வடிவத்தை ஆன்மா என்று சொல்லலாம்.   மனித உயிரின் அறிவியல் பெயர் 'ஹோமோ ஸேபியன்ஸ் ஸேபியன்ஸ்'!..  'எனக்குத் தெரியும், எனக்கு தெரியும் என்பதும் எனக்குத் தெரியும்' என்பது இதற்குப் பெயர்!  இந்த உணர்வு இல்லாத மூளை நோய் நிலை தான்  'ஸ்கீஸோஃப்ரீனியா!  நினைவுத் திறன், அறிவுத் திறன், தீர்மானிக்கும் அறிவு, பிரக்ஞை  இவற்றையெல்லாம் ஒட்டு மொத்தமாகச் சேர்த்து ஆன்மா என்று அழைக்கலாம் என்றால். அந்த ஆன்மா இருக்குமிடம் நம் மூளையின் 'லிம்பிக் சிஸ்டம்'.

மனம் என்பது உடல் சாராதது என்றும் அது மருத்துவ அறிவியலுக்கு அப்பாற்பட்டது என்றும் சொல்லப்பட்டுக் கொண்டிருந்த கருத்துகள் மெல்ல மெல்ல காலாவதியாகி வருகின்றன.  'குறிப்பிட்ட வகை மனநோய் இருந்தால் மூளையின், குறிப்பிட்ட இடத்தில் பாதிப்பு இருக்கிறது' என்று சொல்வது வரை அறிவியல் முன்னேறியிருக்கிறது.  சி.டி.ஸ்கான் யுகத்திலிருந்து எம்.ஆர்.ஐ. ஸ்கான், பெட் ஸ்கான்,  ஸ்பெக்ட்,  எம்.ஆர்.ஸ்பெக்ட்ரோஸ்கோபி, அல்ட்ரா ஸ்ட்ரக்சுரல்  ஸ்டடீஸ்  என்று முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.  இன்னும் ஐம்பது வருடங்களுக்குள்  சைக்கியாட்ரி என்ற ஒரு சிறப்புப் பிரிவே  வழக்கொழிந்து போகப்  போகிறது. சைக்காலஜியையும் நரம்பியலோடு சேர்த்து 'காக்னிட்டிவ் நியூராலஜி' என்றே படிப்பு வந்து விட்டது.

எல்லாவற்றையுமே சாதுரியமான  விஞ்ஞான  தர்க்கத்துக்குள் அடக்கி விடலாம் என்று சொன்னால் 'ஊழிக்காலம் வந்து உலகம் அழிந்து விடும்' என்ற கருத்தைக் கூட விளக்க முடியும். 

முழுப்  பிரபஞ்சமும் விரிவடைந்து கொண்டிருப்பதாக அறிவியல் நம்புகிறது.  ஒரு நாளில் எல்லாமே வெடித்துச் சிதறி விடலாம்!..

சூரியக்  கதிர்களின் தீமையை வடிகட்டிக் கொடுக்கும் 'ஓஸோன் படலம்' அங்கங்கே கிழிந்து வருகிறது.  இது ஒரு நாள் ஒட்டு மொத்தமாக உலகை அழித்து விடலாம்.

பூமிக் கிரகம் தனது இயல்பான வெப்பநிலையிலிருந்து குறைந்து வருகிறது. உலகமே அண்டார்டிகா போல பனி மயமாகி, உயிர்கள் வாழ முடியாமல் போய் விடலாம்!..

ஜப்பானில் இப்போது முதியவர்களின் ஜனத்தொகை அதிகமாகவும் குழந்தைப் பிறப்பு குறைவாகவும் இருப்பதாகக்  கணக்கு எடுத்திருக்கிறார்கள்.  அப்படியே மெள்ள மெள்ள இனப்பெருக்கமே நின்று போய் விடலாம்.

இது மாதிரி ஏதாவது ஒன்று தான் ஊழிக்காலம்!  கல்கி அவதாரம்!  யுக முடிவு!


       
              ---  டாக்டர் கே. லோகமுத்துக்கிருஷ்ணன்                      பிரபல நரம்பியல் அறுவை சிகித்சை நிபுணர்

நன்றி:  ஆனந்த விகடன்  பிரசுரம், 'உச்சி  முதல் உள்ளங்கால் வரை' நூல்.

படம் அளித்த அன்பர்களுக்கு நன்றி.

Saturday, February 17, 2018

ஆன்மீக அரசியல்

ரசியல் என்கிற வார்த்தை அரசின் சகல தன்மைகளைப் பற்றியும் அவற்றின் இயல்பு பற்றியும் இலக்கணம் வகுத்தாற் போல சொல்லும் சொற்றொடராக பொருள் கொள்ளும் காலம் ஒன்றிருந்தது.

ஆனால் எது பற்றியும் விவரிக்கும் வார்த்தையாக 'அரசியல்' என்ற வார்த்தை சமீபகாலமாக மாறிப் போயிருக்கிறது.   உணவு அரசியல், வியாபார அரசியல்,  வாழ்க்கை அரசியல்,  பொழுது போக்கு அரசியல், நடைமுறை அரசியல் என்று வழக்கத்தில் அரசியல் வார்த்தை உபயோகப்பட்டு வருகிறது.

இந்த வழக்கத்தில் ஆன்மிக வாழ்க்கை முறையின் சகல அம்சங்களையும் அலசி ஆராய்வதின் வெளிப்பாட்டையும் ஆன்மிக அரசியல்  என்று சொல்லலாம்.

நேரடியான அர்த்தத்தில் ஆன்மிகம் என்பது அரசியலா என்பது அடுத்த கேள்வி.

ஆன்மிகம் அரசியலோ இல்லையோ ஆன்மிகத்திற்கு எதிராக நிறுத்தப்படும் ஒன்று இருந்து அந்த எதிரான ஒன்று அரசியலாக உபயோகபடுத்தப்பட்டால் இயல்பாகவே ஆன்மிகவும் அரசியலாக உபயோகமாகிப் போவது நேரிடும்.

ஆன்மிகத்திற்கு எதிர் நாத்திகம் என்றால் ஆன்மிகம் அரசியலாவதைத் தவிர்க்க அல்லது தடுக்க நாத்திகமும் அரசியலாகக் கூடாது.  நாத்திகம் மட்டும் அரசியலாகும் ஆனால் ஆன்மிகம் அரசியலாகக்கூடாது என்றால் நாளடைவில் நாத்திகம் அரசியல் ஆவதில் எந்தப் பயனும் இன்றிப்  போகும்.

அதாவது பாம்பில்லாமல் கீரி இல்லை;   கீரி இல்லாமல் பாம்பில்லை என்கிற நிலை இது.  இன்னொரு விதத்தில் இதையே சொல்லப்  போனால் பாம்புக்கு எதிராக கீரியை நாம் நிறுத்தும் வரை பாம்பும் கீரியும் எதிர் எதிர் நிலையில் நிற்கும். 

கீரியை மட்டும் நிறுத்துவோம்,  பாம்புக்கு இங்கு வேலையே இல்லை என்றால்  கீரிக்கும் வேலை இல்லாது போவதைத் தவிர்க்க இயலாது போகும்.

வெளிச்சமும் நிழலும் போல ஒன்றில்லாமல் இன்னொன்றில்லை என்பது  போல ஆன்மிகமும் நாத்திகமும் ஒரு  நாணயத்தின் இருபக்கங்கள் போல ஒன்றிலேயே ஒன்றாக இருந்து கொண்டு இரண்டு போல நமக்குக்  காட்சி அளிப்பது.

வெகு எளிமையாகச் சொல்ல வேண்டும் எனில், ஆன்மிகம் என்பது அகவயமானது என்ற புரிதலில் நாத்திகத்தை புறவயமானது என்று புரிந்து கொள்ளலாம்.

அகவயமான உணர்வுகளை புறவயமான நிரூபிப்புகளைக் கொண்டு நிரூபிக்கவும் முடியாது,  புறவயமான நிரூபிப்புகளை வரிசைபடுத்திக் கொண்டு அகவயமான உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும் முடியாது.
புறவய அளவுகோல்களைக் கொண்டு அகவய உணர்வுகளை அறிந்து கொள்ளவும் முடியாது.

அகவய உணர்வுகளை சுயபரிசோதனைகளின் மூலம் அதற்கான முயற்சிகளில் ஆட்பட்டுத்தான் அறிய முடியும்.   அதனால் ஆன்மீகம் என்பது சுய அனுபவங்களின் மூலமாகவே அறிய வேண்டிய ஒன்றாகிறது.  அதாவது ஆன்மிகத்தை அறிவுபூர்வமாக அணுக வேண்டுமெனில் ஆன்மீக உணர்வுகளில் தன்னை நிலைக்களனாக வைத்துக் கொண்டு தன் அறிவு சார்ந்து அகவயமாக  ஆராய வேண்டியிருக்கிறது.  சரியாகச் சொல்ல வேண்டுமானால் உணர வேண்டியிருக்கிறது.

அறிவியல் உண்மைகளோ புறவயமானது.  அதாவது அகவய உணர்வுகளுக்கு நேர் மாறானது.   அதனால் அறிவியல் இயல்பாகவே நாத்திகத்தைச் சார்ந்து நிற்பது.    புறவய ஆய்வுகளின் மூலம் அறிவுலகம் நாள்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.   புதுப்புது நிரூபணங்கள் அறிவுலக வெளிச்சத்தில் அறிமுகமாகி உண்மைகளாகின்றன.  அப்படி உண்மையானவைகளை மட்டுமே அறிவுலகம் ஏற்றுக்  கொள்ளும்.  உண்மையாகாதவைகள் அறிவுலக எல்லைக்குள்ளேயே வராது வெளியேயே நின்று விடும்.  அல்லது நாளைய அறிதலுக்காகக் காத்திருக்கும்.  இதான் அறிவுலக விதி.

இதைப் புரிந்து கொள்ளாது ஆன்மிகத்தை அறிவியலோடு கலந்து அவியலாக்குவதோ,  அறிவியல் உண்மைகளை அடுக்கிக் கொண்டு ஆன்மிகத்தை உரசிப்  பார்ப்பதோ  சரிப்பட்டு வராது.

அதே மாதிரி உளவியலும் இன்று அறிவியல் சார்ந்த ஒரு  ஞானமாகிப் போன  நிலையில் உளவியல் சோதனைகளில் ஈடுபடாமல் ஆன்மிகத்தைப் புறந்தள்ளும் நாத்திக வாதங்களும் எடுபடாது.

அதனால் அகவயப் பார்வை கொண்ட ஆத்திகமும்,  புறவயப்  பார்வை கொண்ட நாத்திகமும் இன்றைய தேவையாகிப் போகிறது.

யோகா என்ற வார்த்தை சர்வ சாதாரணமான புழக்கத்தில் இருக்கும் வார்த்தையாக  இன்று மாறிப்  போயிருக்கிறது.  யோக நிலைகள் ஆன்மிக உணர்வுகளைத் திறக்கும் வாசல் என்ற உண்மைகள் மறக்கப்பட்டு நாத்திக, ஆத்திக வித்தியாசமில்லாமல் அனைவர் வாழ்க்கையிலும் ஒன்றிப் போயிருக்கிறது.

யோகா மாதிரியான, ஆன்மிகம் என்று ஒதுக்கி விடாத, மனதையும் உடலையும் செம்மை படுத்துகின்ற வாழ்க்கைக் கல்வி நிறைய மக்களுக்கு அறிமுகமாக வேண்டும்.

ஆன்மிகம் என்பது வெறும் கடவுள் வழிபாடு  மட்டுமில்லை.  அதே மாதிரியாக நாத்திகம் என்பது வெற்று கடவுள் மறுப்புக் கொள்கை மட்டுமில்லை. 

உண்மையான நாத்திகம் என்பது மார்க்ஸீய சிந்தனையில் புடம் போடப்பட்டு ஜொலிக்க வேண்டும்.   கடவுள் வழிபாடு என்பதும் ஆரம்பப் பள்ளி வகுப்புப் பாடம் மாதிரி தான்.  உண்மையான ஆன்மிகம் என்பதும் கடவுள் வழிபாட்டைத் தாண்டி கடவுள் வழிபாடு மேலும் இட்டுச் செல்கின்ற மகத்தான நல்லுணர்வுகளுக்கு நல்ல செயல்பாடுகளுக்கு வழி நடத்தக் கூடியதாக அமைய வேண்டும்.

ஆன்மிகமும்,  நாத்திகமும் செழுமையான வளர்ச்சி காணும் போது தான் இரண்டையும் ஒன்று சேர்க்கிற  மனித நேயம் என்கிற  ஒற்றைப் புள்ளியை நம்மால் இனம் காண முடியும். 

அறிவார்ந்த ஆன்மிகப் பார்வையும்,  அறிவார்ந்த நாத்திகமுமே இன்றைய தேவையாகிப் போய் அதுவே மனித குல மேன்மைகளுக்கும்,  உன்னதங்களுக்கும்  வழிநடத்திச் செல்கிற உண்மையான அர்த்தமும் ஆகிறது.


Related Posts with Thumbnails