மின் நூல்

Tuesday, May 31, 2016

அழகிய தமிழ் மொழி இது!....

பகுதி--12


நாடு காண் காதை புகார் காண்டத்தின் கடைசிக் காதை.  இந்தக் காதையில் கண்ணகியும்  கோவலனும் பூம்புகார் நகரை விட்டு நீங்கி அவர்கள் உறையூரை அடையும் வரை சொல்லப்படுகிறது. உறையூர் சோழ நாட்டில் தான் இருப்பதால் அவர்கள் இருவரும் இன்னும் சோழ நாட்டை விட்டு முழுதாக நீங்க வில்லை.

இந்தக் காண்ட முடிவில் இன்னொரு சிறப்பு. ** கவுந்தி அடிகள் என்னும் பெண் சமணத்துறவி அறிமுகமாகிறார்.  கோவலனும் கண்ணகியும் அவரைச் சந்தித்த யோகம் அவர்களுக்கு அவரின் நட்பு கிடைக்கிறது.  உருவும், உயர்பேர் ஒழுக்கமும் பெருமகன் அருகப் பெருமானின் திருமொழி பிறழா நோன்பும் உடையவர் கவுந்தி அடிகள். 

“எதன் பொருட்டு புகார் நீங்கி மதுரை செல்கிறீர்கள்?” என்று கோவலனிடம் கேட்கிறார் கவுந்தி அடிகளார்.. 

“அடிகளாரே! மன்னிக்க வேண்டும். எதையும் விவரமாகச் சொல்வதற்கான மன நிலையில் நான் இல்லை. இப்போதைக்கு மதுரை மாநகர் சென்று வாணிபம் செய்து பொருள் ஈட்டும் எண்ணத்தில் இருக்கிறேன்..” என்று அவருக்கு மறுமொழி சொல்கிறான் கோவலன். 

“ஓ! அப்படியா! நல்லது.  பெருமான் அருகனை வழிபடுவதற்காக நானும் தென் தமிழ்நாட்டு தீதுதீர் மதுரை நகர் செல்ல விருப்பம் உடையவனாய் இருக்கிறேன். ஆதலின்    நாம் சேர்ந்தே பயணப்படலாம்..” என்கிறார். கவுந்தி அடிகளார்.

அடுத்த நாள். கீழை வானில் ஞாயிறு கூட இன்னும் எழும்பி செக்கச் செவேலென்று சிவப்பு வண்ணம் தீட்டவில்லை. தோளில் உறி மாட்டி, ஒரு கையில் மயில் பீலியும் இன்னொரு கையில் பிச்சைப் பாத்திரமும் ஏந்தி அடிகளார் மதுரை கிளம்ப ஆயத்தமாகி விட்டார். தவப்பள்ளியை விட்டுக்  கிளம்பும் முன், ‘மொழிப்பொருள் தெய்வம் வழித்துணையாக அமைய வேண்டும்’ என்று பஞ்ச நமஸ்கார மந்திரம் துதிக்கிறார்.  கோவலனும் கண்ணகியும் அடிகளார் போலவே பஞ்ச பரமேஷ்ட்டிகளைத் துதித்து அடிகளாருடன் சேர்ந்து மதுரைப் பயணத்திற்கு தயாராகின்றனர்.

வழிபூராவும் இயற்கைக் காட்சிகள்.  சோலைகளும், பூத்துக்  குலுங்கும் மலர் வனங்களும்,, நீர்ச்சுனைகளும் மனசுக்கு தெம்பு கூட்டுவனவாய் வழி நெடுகிலும் வருகின்றன.  மெல்லிய இயல்புடைய கண்ணைகியின் பாதங்கள் நோகுமே என்று வழித்துன்பத்தை அவர்களுக்கு விளக்கி ஓரளவு துன்பம் குறைவாக இருக்கிற வழிப்பாதையில் மேற்கொண்டான பயணத்தைத் தொடர்ந்தால் நல்லது என்று கவுந்தி அடிகளார் நினைக்கிறார்.. 

காப்பியத்தை  இயற்றிய  இளங்கோ அடிகளோ, சமண மத ஈடுபாடுகளையும் வழிபாடுகளையும் காப்பியத்தில் சொல்லிச் செல்வதற்கு வசதியாக கவுந்தி அடிகளாரை உபயோகப்படுத்திக்  கொள்கிறார். அதைத் தவிர வயுதான அந்த மூதாட்டி, பெண் என்கிற கோணத்தில் எல்லாவிதங்களிலும் தன் காதல் மனைவிக்கு உதவியாக இருப்பார் என்றும் நினைக்கிறான்.

அவர்கள் வழியில் சமண மத சாரணர்களைச் சந்திக்கின்றனர். அவர்களிடம் கோவலனும், கண்ணகியும் ஆசி பெறுகின்றனர்.  ஓடம் கொண்டு காவிரி ஆற்றைக் கடக்கின்றனர்.  வழிப்பயண களைப்பு நீங்க வழியில் கண்ட சோலையில் சற்று இளைப்பாறுகின்றனர்.  அப்பொழுது  தான் தொழிலை மேற்கொண்டாள் போலத் தோற்றமளிக்கும் பரத்தை ஒருத்தியையும் அவளை நெருங்கி நின்ற காமுகன் ஒருவனையும் வழியில் எதிர் கொள்கின்றனர்.  அந்தப் பரத்தை, கோவலனையும் கண்ணகியையும் சுட்டி“காமனும் அவன் தேவிபோலவும் காணப்படுகிற இவர்கள் யார்?” என்று கவுந்தி அடிகளாரிடம்  கேட்கிறாள்.

“காமனும் இரதியும் அல்லர். மானிடர் தாம்; இவர்கள்  என் மக்கள். அவர்களை நெருங்காது விலகிச் செல்வீர்..” என்கிறார் அடிகளார்.

அவர் சொன்னது கேட்டு கலகலவென்று சிரிக்கிறாள் அந்தப் பரத்தை. “உம் மக்களா?.. ஒரு வயிற்றில் பிறந்தோர் கணவனும் மனைவியும் போலக் கூடியும் வாழ்க்கை நடத்துதல் கூடுமோ?” என்று கூறி மறுபடியும் எள்ளலாய் நகைக்கிறாள்.

அந்தத் தீமொழி கேட்டு  கண்ணகி செவிகள் பொத்திக் கண் கலங்குகிறாள். அதைப் பார்த்த கவுந்தி அடிகள், “எம் பூங்கோதை போன்ற பெண்ணை இகழ்ந்தனர் போலும்! மு;ள் நிறைந்த காட்டிலே நீவிர் முது நரியாகுக!” என்று சபிக்கிறார்.. தவப்பேறு  பெற்றவர் ஆதலின் அவர் இட்ட சாபம் உடனே பலித்தது. 

தம் அருகே கேட்ட நரி ஊளையைக்  கேட்ட கோவலனும் கண்ணகியும் மனம் இறங்கி அடிகளார் அவர்களுக்கு சாப விகோசனம் அளீக்க இறைஞ்சுகின்றனர்.  “தம் அறியாமையால் உளறிய இவர்கள் பன்னிரண்டு மாதங்கள் உறையூரின் புறத்தேயுள்ள காவற்காட்டில் திரிந்து பின் பழைய உரு அடைவர்!” என்று அவர்களுக்கு கவுந்தி அடிகளார் சாபவிடுதலை அளிக்கிறார். 

நாடுகாண் காதையோடு புகார்க் காண்டம் நிறைவுற்றாலும், மதுரை செல்லும் அவர்களின்  வழிப்பயணம் காடும் காடுசூழ்ந்த பகுதிகளில் தொடர்கிறது. அதனால் தொடரும் அப்பயணத்தின் தொடர்ச்சி அடுத்த மதுரைக் காண்டத்தில் காடுகாண் காதையாக ஆரம்பிக்கிறது.

விடியற்காலையில்  மூவரும் உறையூரை விட்டு நீங்கி தெற்கு திசையில் செல்கின்றனர்.  வழி நெடுக சோலைகளும், வயல்களும் ஆதலால் பயணக்  களைப்பு  அவ்வளவாக தெரியாத சூழலில் எதிர்ப்பட்ட ஒரு மண்டபத்துள்  நுழைந்த போது அங்கு முதிர்ந்த மறையோன் அமர்ந்திருக்கக் காண்கின்றனர்.

“வேத முதல்வரே! மதுரை செல்லும் வழி யாது?” என்று கோவலன் அவரிடம் கேட்க, அந்த  மறையோனோ 'இந்த கடும் வேனிற்காலத்தில் இந்த பூம்பாவையுடன் பயணம் மேற்கொண்டீரே!” என்று கண்ணகியைப் பார்த்து நெகிழ்ந்து போகிரார். “இந்தப் பகுதி  தாண்டினீர்கள் என்றால் பாறைகளும், சிறு குன்றுகளும் கானல்நீர் வேலிகளைக் கடந்து காணப்படும். இந்த நீண்ட பாலை போன்ற பகுதி நீங்கினால் கொடும்பாளூர், நெடுங்குளம் என்று  இரு ஊர்களுக்குப் பொதுவாக இருக்கும் ஏரிக்கரையை அடைவீர்கள்.  அங்கு சிவபெருமானின் திரிசூலம் போல மூன்று வழிகள் பிரியும்..” என்று செல்லப் போகிற வழிப்பாதையை அவர்கள் நங்கு புரிந்து கொள்ளும்  விதத்தில் மேற்கொண்டு விளக்கிச் சொல்கிறார்:

தற்கால உறையூரிலிருந்து மதுரை செல்லும் வழிப்பாதைகளை நினைவில் கொண்டால், அந்த மாமுது மறையோன் சொன்ன வழிகளின் நேர்த்தியை நாமும் அனுமானித்து மகிழலாம். ஒரு நாவல் என்றால் கதை நிகழும் இடங்களின் தன்மைகளையும் அதற்கான இயற்கைச் சூழல்களையும் எப்படி உள்ளடக்கிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதை நமக்கும் சொல்லும் விதத்தில் இளங்கோ அடிகளார் தம் காப்பியத்தை நடத்திக் கொண்டு செல்கிறார்.  வாசிக்கும் நமக்கும் அது பற்றித் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் அவற்றைப்  பற்றி விளக்கமாகவே பார்க்கலாம். 

“வலப்புற வழியாகச் செல்லத் துணிந்தால் வரிசை வரிசையாக கடம்ப மரங்களும், காய்ந்த ஓலையும் பெருத்த தாளினையும் கொண்ட வாகை மரங்களும், மூங்கிலும், நீரற்ற சுள்ளியும் வழிநெடுகக் காண்பீர்கள். நீர் வேட்கை மிகுந்து தடுமாறும் மான் கூட்டங்கள் நிறைந்த காட்டையும், எயினர் குடியிருப்புகளையும் கடந்து செல்வீர்கள் என்றால் தென்னவன் சிறுமலை கண்களுக்குத் தட்டுப்படும்.

ஐவன என்னும் நெல்லும் அறைக்கண் கரும்பும்
கொய்ப்பூ தினையும் கொழும்புன வரகும்
காயமும் மஞ்சளும் ஆய்க்கொடி கவலையும்
வாழையும் கம்பும் தாழ்குலைத் தெங்கும்
மாவும் பலாவும் சூழடுத்து ஓங்கிய
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்..

--- அந்தச் சிறுமலையின் வலப்புறமாகச் செல்வீர்கள் என்றால் மாமதுரையை அடைவீர்கள்”  என்கிறார் மாமுது மறையோன்.

"அவ்வழி செல்லாது இடப்புற வழியாகச் செல்வோம் என்று எண்ணினீர்கள் என்றால்---" மாமுது மறையோன் லேசாகச் செருமிக் கொண்டு மேற்கொண்டு சொல்லத் தொடங்குகிறார்.

=============================================================================
**  கலைஞரின் கைவண்ணத்தில் சிலப்பதிகாரக் கதையே திரைக்கேற்ப 'பூம்புகார்' என்று திரைப்பட வடிவம் கொண்ட பொழுது அதில் கவுந்தி அடிகளாராகத் தோன்றியவர் கே.பி. சுந்திராம்பாள் அவர்கள். நடித்தார் என்று சொல்வதை விட கவுந்தி அடிகள் இப்படித்தான் இருந்திருப்பாரோ என்று நம் மனம் தோயும் அளவுக்கு கவுந்தி அடிகளுக்கு உருவமும் அசைவும் கொடுத்தவர் அவர்..   அதே மாதிரி ஜெமினியின் ஒளவையார் திரைப்படத்தில் ஒளவையாராகத் தோன்றி நம் மனம் கவர்ந்தவர்.

கொடுமுடி பாலாம்பாள் சுந்திராம்பாள் அவர்கள் குரல் வளம் மிக்க ஏழிசை வல்லபி. தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னராக தமது எட்டுக்கட்டை சுருதியில் பாடலிசைத்து கலக்கிய எஸ்.ஜி. கிட்டப்பா அவர்களே இவருக்குக் கணவராக வாய்த்த பொழுது இரு இசைக்குயில்கள் தமிழ்த் திரையுலகை தம் கீதத்தால் வசப்படுத்தின.

பத்மஸ்ரீ கே.பி. சுந்திராம்பாள் அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரரும் கூட.  
கதர் இயக்கம், வெள்ளை ஏகாதிபத்ய எதிர்ப்பு என்பதையெல்லாம் ஜீவ சக்தியாகக் கொண்டு நாட்டின் விடுதலைக்கான அரசியல் மேடைகளிலும் தம் குரலால் மக்களைத் திரட்டியவர். தோழர் ஜீவாவின் 'காலுக்குச் செருப்புமில்லை' என்ற மனதை உருக்கும் பாடலை இவர் மேடையில் பாடும் பொழுது, மீண்டும் மீண்டும் அந்தப் பாடலைப் பாடச் சொல்லி மக்கள் விரும்பிக் கேட்பார்கள். 
============================================================================

(தொடரும்)

படங்கள் உதவியோருக்கு நன்றி.

Thursday, May 19, 2016

அழகிய தமிழ் மொழி இது!...

பகுதி--11


புகார் காண்டத்தின் எட்டாம் பகுதியான வேனிற்காதை முழுக்க கோவலனைப் பிரிந்த மாதவியின் மனப்புழுக்கம் தான்.  யாழாலும், இசையாலும் அவள் காம தாபத்தைத் தணிக்க முடியவில்லை. தணிப்பதற்கு பதில் யாழும் இசையும் விரகதாபத்தை விசிறி விடவே செய்தன. மாதவி நிரம்ப யோசித்து கோவலனுக்கு ஒரு மடல் எழுதத் துணிகிறாள். தாழை மடல் தான் எழுது தாள்,  பித்திகை என்ற மலரின் அரும்பு எழுதுகோலாகிறது. சாதிலிங்கப் பூவின் குழம்பு எழுது மை என்று உபயோகமாகி மடல் தயாராகி விட்டது.   ‘

‘உயிரே! உயிரே... என் நிலை அறிவீரா.? உன்னோடு கலக்கத் துடிக்கிறேன். காம வேதனை கொடுந்தீயாய் என்னை வாட்டுகிறது. இளவேனிலோ அனுபவமில்லாத இளவரசனாகிப் போனான்.  திங்கள்ச் செல்வனும் சரியில்லை.. நீங்கள் வந்து தான் என் தாபத்தைத் தணிக்க வேண்டும்..’ என்ற அர்த்தத்தில் உணர்வு கொட்டும் மடல் தயாராகி விட்டது. தோழி வசந்தமாலையை  அழைத்து ‘என் தலைவனிடம் இதைக் கொண்டு போய்க்  கொடுத்து கையோடு அவரை  அழைத்து வருக” என்று அனுப்புகிறாள்.

கோவலனைத் தேடிப்போன வசந்தமாலைக்கு ஒருவழியாக கடைவீதியில் அவன் கிடைக்கிறான்.  வ.மாலை மடலைத் தந்ததும் அதில் என்ன எழுதப் பட்டிருக்கும் என்று கோவலனுக்குப் புரிந்து  போயிற்று. மடலைக் கையில் வாங்காமலேயே சீறுகிறான்: “ஆடல் மகளே ஆதலின் அவள் நடிப்பைக் கண்டு நான் மயங்கேன்” என்று மடலை வாங்க மறுத்து வசந்த மாலையை திருப்பி அனுப்புகிறான். ‘பாவம் மாதவி, கோவலனின் கோபம் கண்டு எப்படிக்  கலங்கப் போகிறாளோ’’ என்று பெரும் வருத்தத்தோடு வந்த வசந்தமாலை, திருப்பப்பட்ட மடலை மாதவியிடம்  தருகிறாள்.  ஆனால் மாதவியோ, ‘இன்று மாலை வராவிட்டாலும், நாளை காலை வருவார்’ என்று நம்பிக்கையோடு  சொல்கிறாள்.

இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.  கோவலனுக்கும் மாதவிக்கும் ஏற்பட்ட சந்திப்பு ஓர் ஈர்ப்பாக இருவரிடமும் பலப்பட்ட்த்தற்காக காரணம் ரொம்பவும் நேர்த்தியானது.  அந்தக் கால கணிகையர் நாட்ட வழக்கப்படி என்ற மேம்போக்கான பார்வையைத் தாண்டியது இது. 

இருவருமே இளம் வயதினர். இந்த வயதில் இருவருமே இசைக்கலையில் மேம்பட்ட ஞானம் கொண்டவர்கள்.  அவர்களின் இசை ஞானத்தை நமக்குத் தெரியப்படுத்தவே அரங்கேற்றுக் காதை, அந்தி மாலைச் சிறப்புச்செய் காதை, இந்திரவிழ்வூரெடுத்த காதை, கடலாடு காதை, கானல்வரி, வேனிற்காதை என்று ஆறு காதைகளை அர்ப்பணம் செய்திருக்கிறார் அடிகளார்.. போதாக்குறைக்கு மாதவி ஆடற்கலையில் அதி அற்புதமான திறமை கொண்ட பெண்ணாய் திகழ்ந்தவள்.  சொல்லப் போனால் கடைவீதியில் மாதவிக்கு ஈடாக கோவலன் வாங்கிய ஆயிரத்து எண் கழஞ்சு மதிப்பிலான பச்சை மாலை அவள் சோழ மன்னனின் அவையில் பரிசாகப் பெற்றது தான். சோழமன்னனின் அவையில் அவளது ஆடற்கலையின் அரங்கேற்றமே நடந்த அளவுக்கு நாட்டியக் கலையில் தேர்ச்சி பெற்றவள் மாதவி..

ஆண்—பெண் உடல் ஈர்ப்பை தாண்டி இசைக்கலைஞன் கோவலனின் மனதை ஆரம்பத்தில் ஆக்கிரமித்தது மாதவியின் இந்த கலைத்திறமைகள் தாம். உடல் இச்சைக்காக மாதவியை கோவலன் விலைகொடுத்து வாங்கினான் என்று கொச்சையாகக் கொள்ளக்கூடாது.  சோழமன்னின் அரசவையில் போற்றப்பட்ட ஆடல் அணங்கு கடைவீதியில் விலை பேசப்பட்ட பொழுது, இசையில்  நாட்டமில்லாத வேறு எந்த வசதிபடைத்த குணக்கேடனுக்கும் இவள் உரிமையாகி விடக்கூடாது என்ற கலைஞான அக்கறையிலும் கோவலன் மாலையை வாங்கி அவளை  உரிமையாக்கிக் கொண்டிருக்கலாம்.  இரண்டு கலைஞர்களின் இசை மீதான ஈடுபாடு ஆண்-பெண் என்பதால் அதற்கேற்பவான ஈர்ப்பைக் கொண்டு அடுத்த கட்ட வளர்ச்சியை இயல்பாக்க் கொண்ட்து என்றே கொள்ள வேண்டும்.  .  


வேனிற்காதையில் மாதவி என்றால் அடுத்த கனாத்திறம் உரைத்த காதையில் கண்ணகி.  கோவலனைப் பிரிந்த அவள் வருத்தம் இந்தக் காதையில் உரைக்கப்படுகிறது. 

மாலை நேரத்துப் புகார் நகர்..   மலர் தூவி விளக்கேற்றி இறைவனை வழிப்படும் மகளிர் கூட்டத்தின் கலகலப்பில் களைகட்டுகிறது. தேவந்தி என்ற பெண் கண்ணகியின்  தோழி.. கோயிலுக்குச்  செல்லும் அவள் தன் கூட வர கண்ணகியையும் அழைக்கிறாள். தேவந்தி பற்றிய சுவாரஸ்யமான கதை ஒன்றை இந்த இடத்தில் சொல்கிறார் அடிகளார்.  மாலதி என்பவள் மாற்றாள் குழ்ந்தைக்கு பாலூட்டும் பொழுது அந்தக் குழந்தை விக்கி இறந்து விடுகிறது.  இப்படி அபவாதம் நேரிட்டு விட்டதே! மாற்றாளுக்கும் அவள் கணவனுக்கும் என்ன பதில் சொல்வேன் என்று அலமந்து போகிறாள் அந்த ஆரணங்கு. குழந்தையின் உயிர்ப்பிச்சை கேட்டு கோயில் கோயிலாக படி ஏறி இறங்குகிறாள்.

அன்றைய காலத்தில்  புகார் நகரில் இருந்த திருக்கோயில்களின் ஒரு  பெரிய பட்டியலே அடிகளார் மூலம் நமக்குத்  தெரிய வருகிறது.  என்னன்ன கோயில்கள்?.. தேவலோகத் தருவான கற்பக மரம் நிற்கும் கோயில், ஐராவதம் நிற்கும் கோயில், அழ்கான பலதேவர் கோயில், சூரிய தேவனின் கோயில், ஊர்க்காவல் தெய்வத்தின் கோயில், முருகன் கோயில், வச்சிரப்படை நிற்கும் கோயில், மாசாத்தன் கோயில், அருகன் கோயில், சந்திரன்  கோயில் என்று திசை தோறும் திசை தோறும் இருக்கும் கோயில்களைச் சொல்கிறார். ஒவ்வொரு கோயிலிலும் “தெய்வமே! என் துயர் துடையுங்களேன்..” என்று மாலதி வேண்டுகிறாள்.

கடைசியாக பிச்சாண்டர் கோயில் அடைகிறாள். பிச்சாண்டர் கோயிலில் அந்த  அதிசயம் நடந்தது.  மாலதி முன் ஒரு பெண் தோன்றி “அந்தக் குழந்தையை என்னிடம் தா!” என்று கேட்டு வாங்கிக் கொள்கிறாள். குழந்தையை வாங்கிக் கொண்டவள் சக்கரவாளக் கோட்டமாகிய இடுகாடு நோக்கி விரைகிறாள். அப்பொழுது  தான் மாலதிக்கு தெரிகிறது, தன்னிடம் குழந்தையை வாங்கிக் கொண்டவள் பெண்ணலல, பேய்—அதுவும் இடாகினிப் பேய் என்று தெரிகிறது. இடுகாடு அடைந்ததும் இடாகினிப்பேய் இருகரம் தூக்கி குழந்தையை வாயில் போட்டுக் கொண்டு விழுங்குகிறது.

அந்தக் காட்சியைக் கண்ட மாலதி நடுங்கிப் போகிறாள்.  அந்த நேரத்து பாசாண்ட சாத்தன் என்னும் தெய்வம் அவள் முன் தோன்றுகிறது. “பயப்படாதே! நீ  செல்லும் வழியில் உன் கண் எதிரிலேயே குழந்தையைக் காண்பாய்!” என்று அருள்பாலிக்கிறது.  பாசாண்ட சாத்தன் சொன்னபடியே வழியில் ஒரு மரத்தடியில் மாலதி அந்தக் குழந்தையைக் காண்கிறாள். குழந்தையை வாரி எடுத்து மார்பில் அணைத்து பெற்றவர்களிடம்  சேர்ப்பிக்கிறாள்.

அந்த பாசாண்ட சாத்தன் தெய்வமே குழந்தையாக வந்தது என்று மாலதிக்குத்  தெரியாது.  பாசாண்ட சாத்தன் வளர்ந்து கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்குகிறான். மறைநூல் ஓதுகிறான். தேவந்தி என்ற பெண்ணை மணக்கிறான்.  இல்லற வாழ்க்கை இனிதே சென்று கொண்டிருக்க திடீரென்று ஒரு நாள் தேவந்தியிடம் தன் தெய்வத் தன்மையைச் சொல்லி, “இனி எம் கோயிலுக்கு வந்து எம்மைக் காண்பாயாக..” என்று  சொல்லி மறைகிறான்.

தேவந்தி மனம் தெளிகிறது.  கணவன் தீர்த்த யாத்திரை சென்றிருப்பதாக மனதில் கற்பிதம் கொண்டு அவன் நலமுடன் திரும்பி வருவதற்காக தினமும் பாசாண்ட சாத்தன் கோயிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாக்கிக் கொள்கிறாள்.

தன்னைப் போலவேயான கணவனைப்  பிரிந்து வாழும் கண்ணகியின் துயரும் தேவந்தியைக்  கலக்குகிறது. ‘தோழியின் கணவனும் நலமே திரும்பி வர வேண்டும்’ என்று கண்ணகிக்காக தெய்வத்திடம் வேண்டி வழிபடுகிறாள். அந்த நம்பிக்கையில் ஒருநாள் கண்ணகியிடம், ‘கணவனின் பிரிவுத்  துயரம் நீங்கி உனக்கு நலமுண்டாகட்டும் என்று வாழ்த்துகிறாள். அதற்கு கண்ணகி, உன் வாழ்த்தின் பலனாய் என் கணவனைப்  பெறுவேன்.  இருந்தாலும் என் மனம் ஒருநிலையில் இல்லை.. நேற்று இரவு நான் கண்ட கனவு அச்சம் அளிப்பதாய் இருக்கிறது..” என்று தான் கண்ட கனவை தேவந்தியிடம் விவரிக்கிறாள்.

அப்படி என்ன கனவு தான் கண்ணகி கண்டாள்?.. கண்ணகியே தேவந்தியிடம் சொல்கிறாள் கேளுங்கள்:  “தேவந்தி! நேற்றிரவு என் கணவனைக் கனவில் கண்ட பாக்கியம் பெற்றேன்.  என் இருகை பற்றி அவர் அழைத்துப் போனார்.  இதற்கு முன் பார்த்திராத ஒரு புதிய நகரில் நாங்கள் நுழைந்தோம்.  அந்நகர மக்கள்  பொய்த்தேளை எங்கள் மீது தூக்கிப் போடுவது  போல பழிச்சொல்லை எங்கள் மேல் இட்டனர்.  கனவு என்று அறியவில்லை. நனவு  போலவே இருக்கிறது. என் கணவனுக்கு ஏதோ  தவறு நேரிட்ட உணர்வு என்னைப் பற்றிக் கொண்டது. அவ்வூர் அரசனிடம் போய் என் கணவன் குற்றமற்றவர் என்று வழக்குரைத்தேன். அந்த அரசனையும்  அந்த ஊரையும்  தீங்கு பற்றிக் கொண்டது. என்ன தீங்கு நேர்ந்தது என்று கூறக்கூடாது. அதனால் அந்தத் தீங்கை உன்னிடம் சொல்வதைத் தவிர்க்கிறேன். நான் பெற்ற தீவினையின் பலன் தான் அந்த தீங்கு போலும். அதற்குப் பிறகு எனது கரம் பற்றியவனுடன் நான் பெற்ற  நற்பேற்றை நான் சொன்னால் நீ  நகைப்பாய்!” என்கிறாள்.

கண்ணகியின் கனவைக் கேட்ட தேவந்தி,”கண்ணகி! உன் கணவன் உன்னை எக்காலத்தும் வெறுத்தானில்லை. உன் கணவன் பொருட்டு செய்ய வேண்டிய ஏதானும் நோன்பைச் செய்யத் தவறியிருப்பாய். அதனால் தானோ என்னவோ இத்துயரெல்லாம்... போகட்டும். புகார் நகர் தாண்டி நெய்தல் நிலச் சோலையிலே இருபொய்கைகள் உள்ளன.  சோமகுண்டம், அக்னி குண்டம் என்று அவற்றைச் சொல்வார்கள். அந்தப் பொய்கைகளில் மூழ்கி நீராடி காமக்கோட்டம் சென்று காமதேவனை தொழு! உன் துன்பம் போகும். உன் கணவரும் மீண்டு வருவார்!  நானும் வருகிறேன். நாம் இருவரும் சென்று அந்த குண்டங்களில் நீராடி பெற்ற துன்பம் நீங்கப் பெறுவோம்” என்றாள்.

அந்த சமயத்தில் வேண்டிய  வீட்டு  வேலைகளுக்குத் துணையாக இருக்கும் சிறு பெண்  ஒருத்தி அங்கு வந்து, “கடைவாயிலில் நம் காவலன் போலும்.. வந்துள்ளார்..” என்று சொல்லிக் கொண்டிருக்கையில் கோவலன் வீட்டின் உள்புறம் வந்து கண்ணகியின் பள்ளியறைக்குள் நுழைகிறான்.

பரபரப்புடன் அவன் பின் சென்ற கண்ணகியின் வாடிய மேனி கண்டு கோவலன் வாடிப்போனான்.  உள்ளம் நொருங்கிப் போனான். “வஞ்சம் பொதிந்த மாயத்தாளோடு கூடி ஆடிக்களித்த தீய ஒழுக்கத்தால் எல்லா செல்வத்தையும் தொலைத்தேன். இன்றைய வறுமை என்னை நாணச் செய்கிறது..” என்று வருத்தத்தில் நொந்து கொள்கிறான்.


கணவன் சொல் கேட்டு கண்ணகி,”வருந்தற்க...என் காற்சிலம்பு உள்ளது. கொள்மின்” என்கிறாள். கோவலனுக்கு தெளிவு பிறக்கிறது. “சேயிழையே கேள்..” என்று கிடைத்த தெம்பில் கண்ணகியிடம் சொல்கிறான்: “இந்தச் சிலம்பை முதலாகக் கொண்டு வணிகம் செய்து இழந்த பொருளை மீட்டெடுப்பேன்.  வணிகச் சிறப்பு கொண்ட மதுரை மாநகர் சென்றால் வழியுண்டு. நீயும் என்னுடன் புறப்படுக..” என்கிறான்.

எந்த வினைக்கும் அதன் விளைவான மறுவினை உண்டு.  அந்த மறுவினை தான் செய்த வினைக்கான வினைப்யன். அறிந்தோ அறியாமலோ கோவலன் செய்த வினை அதற்கான பயனை முடித்து வைக்க அவனைத் துரத்துகிறது. அந்தத் துரத்தலின் தூண்டுதலில் பொழுது புலர்வதற்கு முன் கோவலன் புகார் நகரம் நீங்கி மாடமதுரைக்குச் செல்லப் புறப்படுகிறான்.

ராமன் இருக்குமிடமே அயோத்தி என்ற வாக்கிற்கேற்ப  கண்ணகியும் அவனைத் தொடர்ந்து செல்கிறாள்..

கோவலன் செய்த தீவினை என்ன?.. காதல் மனைவி இருக்க கணிகையை நாடியது...  அல்லது அவன் கோவலனாகப் பிறந்ததே எந்தப் பிறப்பிலோ செய்த வினையின் பயனை அனுபவிப்பதற்காக இருக்கலாம் என்று மறுபிறவியில் நம்பிக்கை கொண்டோர் கொள்ளலாம். அவனின் வினைக்கான துன்பம் அவன் மனைவியையும் சேர்த்து விரட்டுவது தான் கணவன்—மனைவிக்கான உறவின் தாத்பரியம்.  இதுவே கண்ணகிக்கும் மாதவிக்குமான வித்தியாசமாகவும் போகிறது.. கண்ணகி தீவலம் வந்து அவனின் கரம் பிடித்தவள் ஆகையால் அவளுக்குத் தான் கணவனுடன் கலந்த நேரடியான அதிக பாதிப்பு. 

கண்ணகி தான் கண்ட தீக்கனவை தேவந்திக்கு உரைத்த இந்த கனாத்திறம் உரைத்த காதையிலேயே ஒரு உள் கதையாக மாலதியின் கதையையும், தேவந்தியின் கதையையும் நுழைத்திருக்கிறார் அடிகளார்.  இதனால் நாவலுக்கான செழுமை இன்னும் கூடிப்  போகிறது..
  
இந்த இடத்தில் ஜெயமோகன் சொன்ன நாவலுக்கான இலக்கணத்தை நினைவு கொள்வோம்.  கதைகளும் கதை  மாந்தர்களும் பெருகிப் பெருகிச் செல்லும் பிரவாகமாக நாவலில் இருக்க வேண்டும் என்ற சாத்தியப்பாடு இங்கு நிகழ்ந்திருக்கிறது.  கோவலன்—கண்ணகி—மாதவி என்று இவர்களைச் சுற்றியே கதை போகாமல் பல கதை மாந்தர்கள்,  சுற்றுப்பட்ட சிறுசிறு  கதைகள், அது சம்பந்தப்பட்ட செய்திகள் என்று கூடை முடைவது போல சிலப்பதிகார நாவலை முடைகிறார் இளங்கோ.

தேவந்தி கதை மாதிரி இன்னும் நிறைய நிறைய குறுங்கதைகள் இந்தக் காப்பியத்தில் நீங்கள் வாசிக்கக் காத்திருக்கின்றன.  ஒரு காப்பியத்தை வடிக்கும் போக்கில் இளங்கோ அடிகள் நேர்த்தியாக வெகு நுணுக்கமாக என்னவெல்லாம் நகாசு வேலைகளைச் செய்திருக்கிறார் என்று வரும் பகுதிகளை ரசிப்பதற்கு ஏதுவாக முன்கூட்டியே சொல்லப்பட்ட இந்த நாவல் வரையறைகள் உதவும்.

(தொடரும்)

படங்கள் உதவிய நண்பர்களுக்கு  நன்றி.




Saturday, May 14, 2016

அழகிய தமிழ் மொழி இது!...

பகுதி-- 10


கோவலன் இன்னொருத்தியை மனசில் நினைத்துப் பாடுகிற மாதிரி யாழிசைத்துப் பாடி முடித்ததும் மாதவியின் முகத்தில் எந்த சலனமும் இல்லை.  கோவலனின் அருகாமை கிடைக்கும் போதெல்லாம் மகிழ்ந்திருப்பதைப் போலவே வெளிக்குக் காட்டினா;லும் உள்ளத்தின் உள்ளே ஊடல் கொண்டவளாய் கோவலனின் கையிலிருந்த யாழை வாங்கினாள். வாங்கி அதை. மீட்டி, அவனுக்கு எந்தவிதத்திலும் கானல்வரி பாடல் பாடுவதில் தானும் சளைத்தவள் அல்ல என்று காட்டும் வித்த்தில் பாடத் தொடங்கினாள்.

பாடலுக்கான உட்பொருளை கோவலனே கொடுத்திருந்த்து அவளுக்குக் கொண்டாட்டமாகியது.. அதே பொருளில் அவள் இசைப்பதற்கும் அதுவே சுலபமும் ஆயிற்று.

மாதவிக்கும் வழக்கமான இளங்கோவின் கணக்குப்படி மூன்று தான்.  கோவலன் பாடியதற்கு மாற்றுப் பாடலாக மாதவி தன் முதல் பாடலிலேயே பூடகமாக உள் அர்த்தத்தைச் சொருகிப் பாடுகிறாள். 

“காவிரிப் பெண்ணே!  இருமருங்கிலும் வண்டுகள் ரீங்கரிக்க, பூவாடை போர்த்தி கயல் போலவான விழிகள் அசைத்து நீ அசைந்து வரும் அழகு  தான் என்னே! உன் கணவன் சோழ மன்னனின் வளையாத செங்கோலின் வல்லமையே அசைந்தாடி வரும் உன் அழகுக்கு அழகு சேர்த்ததோ?”” என்று மாதவியின் உதட்டிலிருந்து கசிந்த இசையும் பாடலும் ஓர் உருக்கொண்டு இசைப்பாடலாய் அந்த இடத்தை நிறைத்தது.

மாதவி பாடிய இந்த கானல்வரிப் பாட்டின் ஆரம்பம் கோவலனுக்குப் புரிந்தும் புரியாததும் மாதிரி இருந்தது.

‘கற்பையே அணிகலனாய்க் கொண்ட பெண்கள், பிற பெண்டிருடன் தம் கணவர் கூடினாலும் அவர்களை வெறுக்க மாட்டார்கள்; அப்படி வெறுக்காமல் இருபதும் அத்தகைய பெண்டிரின் கற்பின் சிறப்பே!’ என்று கோவலன் பாடியதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டுமென்பது மாதவியின் எண்ணம். அதைத் தனது இரண்டாவது பாடலில் குழைத்துத் தருகிறாள்:  ‘

ஆடவரின் ஒழுக்கமே பெண்ணின் கற்பிற்கு அடித்தளம்’ என்ற அர்த்த்த்தில் சோழனின் செங்கோல் வழுவாத  சிறப்பே காவிரியின் ஒசிந்து வரும் நடையழகுக்கு காரணமாயிற்று’ என்பதைத் தான் பாடிய  பாட்டினுள் ஊடாடிய கருத்தாகக்  கொண்டாள்  மாதவி.

மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூவாடை அது போர்த்துக்
கருங்கயல்கண் விழித்து ஒல்கி நடந்தாய் வாழி, காவேரி!
கருங்கயல்கண் விழித்து ஒல்கி நடந்தவெல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி!

பூவார் சோலை மயில் ஆலப்புரிந்து குயில்கள் இசை பாடக்
காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி!
காமர் மாலை அருகசைய  நடந்த எல்லாம் நின் கணவன்
நாம வேலின் திறங்கண்டே அறிந்தேன் வாழி காவேரி!

‘காவிரிப் பெண்ணே!  பூக்கள் நிறைந்த  சோலையில் மயில்கள் ஆட, குயில்களோ இசை இசைக்க, மலைகள் இடையே நீ ஒயிலாய் அசைந்து அசைந்து வந்தனை!  பகைவர்க்கு அச்சம் தரும் சோழமன்னனின் வேலின் சிறப்பே உன் அசைந்து வந்த நளினத்திற்குக் காரணம் என்பதை நானறிவேன் காவிரி!’’ என்று மாதவி ஊடலில் விளைந்த சிணுங்கலில் உள் அர்த்த்த்தைப் பாட்டில் பொதித்து வைத்துப் பாடுகிறாள்!

---இந்த இடத்தில் தான் சிலப்பதிகாரக் காப்பியத்தில் தற்கால நாவல் போக்கில் காணபடுவதே போன்ற ஒரு அழுத்தமான முடிச்சு விழுகிறது.  காவிரியை பார்த்து தன் காதல் மனைவி கண்ணகி நினைப்பில் பாடிய கோவலன், சோழமன்னனை காவிரியின் கணவனாய்க் கொண்டு மாதவி பாடிய கானல்வரிப் பாட்டில் இவளும் இன்னொருவனை நினைத்துப் பாடுகிறாளே’ என்று கொதிப்பு கொண்டான்.  ஆற்றாமை அவனை  அள்ளி விழுங்கியது.

காவிரியில் கோவலன் கண்ணகியைக் கண்டான் என்றால், மாதவியோ நேரடியாக சோழ மன்னனையே காவிரியின் கணவனாக்கிப் பாடுகிறாள். மனத்திற்குள் அவளே காவிரியானது போல கோவலன் அர்த்தம் கொள்ளும்படிப் பாடுகிறாள்.

உரைநடை போலவே இந்த இடத்தில் இளங்கோவின் வரிகள் வந்து விழுகின்றன:

--- எனக்கேட்டு,
கானல்வரி யான் பாடத் தான் ஒன்றின் மேல் மனம் வைத்து
மாயப்பொய் பல கூட்டு மாயத்தாள் பாடினாள் என
யாழிசை மேல் வைத்துத் தன்  ஊழ்வினை வந்து உருத்த்தாகலின்
உவவுற்ற திங்கள் முகத்தாளைக் கவ்வுக்கை ஞெகிழ்ந்தனனாய்ப்
பொழுதீங்குக் கழிந்ததாகலின் எழுமென்று உடனெழாது-----

‘பொழுது போயிற்று; புறப்படலாம், எழுக!’ என்று மாதவியிடம் கூறிவிட்டு எழுகிறான் கோவலன். எழுநதவன் தன்னுடன் மாதவியும் வருகிறாள் என்று நினைத்தே ஏவலாளருடன் அவ்விடம் நீங்குகிறான். ஆனால் அவனுடன் மாதவி செல்லவில்லை.  கோவலன் போன பின்னர் தான் மாதவி தன் நிலை அறிந்து  திகைக்கிறாள். இருந்தும் தன் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.  அவள் தோழிகளின் ஆரவாரம் அடங்குமாறு கை கவித்து உள்ளுக்குள் புழுங்கும் நெஞ்சத்துடன் காதலனுடன்  செல்லாது  தனியே தன் இல்லம் அடைந்தாள்.

‘மாயப்பொய் பல கூட்டு மாயத்தாள்’ என்ற வரியில் தனது அத்தனை உளைச்சலையும் கோவலன் கொட்டுவது போல அழுத்தமாக அந்த ஒற்றை வரியைப்  போடுகிறார் இளங்கோ.  ‘மாய்ப்பொய் பல கூட்டு மாயத்தாள்!’—ஆஹா.... என்னே அர்த்தம் பொதிந்த வரி!  கோவலனின் வெள்ளை உள்ளத்தில் கரும் புள்ளி விழுந்து விட்டதைத் துல்லியமாகத் தொட்டுக் காட்டுகிறார் அடிகளார்!..“ஊழிற் பெருவலி யாவுள?’ என்னும் பிற்காலத்து வள்ளுவர் சொன்னது நம் நினைவுக்கு வருகிறது.

‘பொழுது  போயிற்று, புறப்படலாம், எழுக!’ என்று மாதவியிடம் கோவலன் சொல்லும் பொழுதே அவளுடன் சேர்ந்து அவள் இல்லம் செல்லத்தான் அவன் நினைத்திருக்கிறான் என்று புரிகிறது. ‘உடனெழாது...’ என்று ஒன்றை வார்த்தையில் மாதவியின் அந்த நேர  மன நிலையை படம் பிடித்துக் காட்டுகிறார் இளங்கோ.

ஆண்களுக்கு நீடித்த ஊடல் என்று எப்பொழுதுமே கிடையாது.  சும்மாக்காச்சும் புருபுருவென்று வரும் கோபம் அது.  இன்னொரு சுகமான ஆசையும் அந்த ஊடலோடையே ஒட்டிக் கொண்டிருக்கும். 'இந்த ஊடலின் முடிவு கூடல் அல்லவா?’ என்று ஒரு கற்கண்டு ஆசை!  ஊடல் என்பது ஊடலுக்காகவே என்றும் அதுவும் கூடலுக்கு வழிநடத்திச் செல்லும் துணையே என்ற கற்பனை கொடுக்கும் தணியாத தனிச்சுகம் அது!  அதனால் ஆடவருக்கு ஆசையுடன்  கூடியதான சாதாரண பொய்க்கோபம் தான், அவர்களின் ஊடல் என்று ‘பெரிய பெயர் கொள்கிறது.. 

ஆனால் பெண்களுக்கு அப்படியல்ல. அழுத்தத்தில் வடிகட்டிய அழுத்தமானவர்கள் அவரகள் பொய்க்கோபத்திற்கும் நிஜக் கோபத்திற்கும் அதிக இடைவெளி இல்லாதவர்கள். வித்தியாசம் தெரியாதவர்க்ள்.  பொய்க் கோபம் நிஜக் கோபமாவது அவர்களில் சர்வ சாதாரண நிகழ்வு.  'போகிற வரை போகட்டும், கடைசியில் அவன் மண்டியிடும் வரை போகட்டுமே' என்று நினைக்கிற அகங்காரம் அது. 

போதாக்குறைக்கு காதலரைத் துன்புறுத்திக் காதல் கொள்வதும் ஊடலில் ஒரு கலை என்று எண்ணம் கொண்டவர்கள் பெண்கள்.  அவர்களுக்கு ஆண்களை எந்த நேரத்தும் தன் பிடியில் வைத்துக் கொள்ளும் வசியக் கலை அது.. . ஆறாம் வேதத்தின் ஆரம்ப அத்தியாயமே அவர்களுக்கு  அது தான்!..

இந்த ஆண்—பெண் மனநிலைகளை மிகச் சரியாக இந்த இடத்தில் உபயோகப்படுத்திக் கொள்கிறார் இளங்கோ.   இன்றைய நாவலுக்கான கூறுகளை அன்றே அவரது காப்பியத்தில் எவ்வலவு அழகாகப் பதித்திருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

தீவலம் வந்து மாமுது பார்ப்பான் முன்னிலையில் தாலி கட்டிய திருமணத்தில் கோவலனுக்கு வாய்த்தவள் கண்ணகி.  ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் மதிப்பு வாய்ந்த மாலையை வாங்கியதற்கு ஈடாக வணிகர் வீதியில் அவனுக்குக் கிடைத்தவள் மாதவி.

ஆடவன் ஒருவன்.  ஆனால் அவனுக்கு வாய்த்த காதல் துணைகளோ இருவர். திருமண பந்தத்தால் உறவானவள் ஒருத்தி...  கொடுத்த பொற்கழஞ்சுகளுக்கு ஈடாகப் பெறப்பட்டவள் இன்னொருத்தி.. அந்த இருவரும் வெவ்வேறு நிலைகளில் அவனுக்கு உரிமையாகிறார்கள். இருவரிடம் தன் மனம் ஏங்கும் அன்பைப்  பெறத் துடிக்கும் ஆடவனாக கோவலன் இடையே மாட்டிக் கொள்கிறான்.

விளையாட்டின் ஆட்டக்காரர்கள் கண்ணகியும் மாதவியும். ஆட்ட சுகத்திற்காக அவர்கள் கையில் கிடைத்த பந்தாகிறான் கோவலன். பந்து, ஆட்டக்காரர் இருவர் கையிலும் மாறி மாறிப் போவது இயல்புதான். ஆக மாதவி விசிறி எறிந்த பந்து கண்ணகி கைக்குப் போகிறது.

ஊடலின் முடிவு கூடல் தான்.  இருந்தாலும் தப்பாட்டம் ஆடுகிறவர்களுக்கு அப்படியே தான் முடிவு சாசுவதமாக இருக்கும் என்பதும் இல்லை.

(தொடரும்..)
படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.

. . 

Wednesday, May 4, 2016

அழகிய தமிழ் மொழி இது!..

பகுதி: 9

சிலப்பதிகாரம் தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் முன் தோன்றியது.  ஐந்து பெரும் காப்பிய குடும்பத்திற்கும் தலைமை தாங்குகின்ற தலைமகன் மாதிரி சகல இலட்சணங்களும் பொருந்திய படைப்பாக இது இருக்கிறது. அதுவும் தவிர ஒரு காப்பியம் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று தன் மனத்திற்குள் வடித்துக் கொண்டு பார்த்துப் பார்த்து இழைத்த காவியமாய் பிற்கால நாவல் இலட்சணங்களையும் கொண்டு இளங்கோவடிகள் இந்தக் காப்பியத்தைப் படைத்திருப்பது அவரது அளப்பரிய புலமையின் சிறப்புகளை எடுத்துக் காட்டுவதாய் உள்ளது.

சிலப்பதிகாரமே முன் தோன்றிய முதல் காப்பியமாதலால், அந்தக் காப்பியத்தை வரையறைப்படுத்துவதற்கும் வழிகாட்டுவதற்கும் இதற்கு முன் தோன்றிய காப்பியங்கள் தமிழில் ஏதுமில்லை.  இருந்தாலும் இதற்கு பின் தோன்றும் இந்த மாதிரி படைப்புகளுக்கு வழிகாட்டுகிற சகல இலக்கியச் சிறப்புகளுடன் அடிகளார் இதைப் படைத்திருப்பது தான் இந்தக் காப்பியத்திற்கான சிறப்பாகிப் போகிறது.

இளங்கோ அடிகளுக்குப் பிடித்த எண் மூன்று  போலிருக்கிறது. 

முத்தான மூன்றாய் அமைந்த செய்திகள் இந்த சிலப்பதிகாரத்தில் நிறைய உண்டு. அந்நாளைய தமிழகத்தை ஆண்ட மாமன்னர்கள் மூன்றாக இருந்ததுவும் இந்த சிறப்புகளுக்குச் சிறப்பு சேர்க்கிறது. அடிகளார் சிலப்பதிகாரத்தை மூன்று காண்டங்களாகப் பிரித்திருக்கிறார் என்று முன்பே பார்த்தோம். அந்த மூன்று  காண்டங்களில் உள்ளடக்கப்பட்ட முப்பது காதைகள்.  காண்டம் என்பதைப் பெரும் பிரிவுகள் என்று கொண்டால் காதைகளை அவற்றுள் அடக்கப்பட்ட சிறு பிரிவுகள் என்று கொள்ளலாம்.  மூன்று பெரும் பகுதிகளுக்குள் அடக்கப்பட்ட முப்பது உள்  தலைப்புகளான சிறு பிரிவுகள்.

இந்த முப்பது காதைகளையும் காண்டத்திற்கு பத்து காதைகளாக அடிகளார் பிரிக்கவில்லை. புகார் காண்டத்தில் பத்து காதைகளும், மதுரைக் காண்டத்தில் பதின்மூன்று காதைகளும், வஞ்சிக் காண்டத்தில் ஏழு காதைகளுமாக முப்பது காதைகள். ஆக மதுரைக் காண்டத்திற்குத் தான் அதிக காதைகள்.  

புகார் காண்டம் கோவலன்—கண்ணாகி திருமணம், அவர்களது இல்லற வாழ்வின் சிறப்புகளும் என்று ஆரம்பமாகிறது.  மூன்றாவது காதையான அரங்கேற்றுக் காதையில் கணிகையர் குலத் தோன்றல் மாதரசி மாதவியின் அறிமுகம். சோழ மன்னன் முன்னிலையில் அவள் நாட்டிய அரங்கேற்றம். அந்த அரங்கேற்றத்தில் சோழன் ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் மதிப்புடைய ஒரு மாலையை மாதவியின் அரங்கேற்ற நாட்டியத்திற்கான பரிசாக அளிக்கிறான்.  

சிலப்பதிகாரத்திலும் ஒரு கூனி வருகிறாள். இவள்  ஆடலரசி மாதவியின் தோழி.  மாதவியின் தாய் சித்திராபதி, கூனியிடம் தன் மகளுக்கு அரசன் அளித்த மாலையைக் கொடுத்து ‘இந்த மாலையை வாங்குவதற்கு வசதி படைத்தவன் மாதவியை அடையட்டும்’ என்று  கூனியை ஆடவர் திரியும் வீதியில் மாலையும் கையுமாக நிறுத்தி வைக்கிறாள். 

விதி சதி செய்ய வீதியில் நின்ற கூனியிடம் அந்த மாலையை வாங்கி மாதவியை அடைகிறான் கோவலன்.  புதுக்கருக்கு கலையாத மண வாழ்க்கையில் இன்னொரு பெண் நுழைந்தது விதி வசத்தால் என்றாலும் மனைவி இருக்க கணிகையரையும் அவ்வப்போது நாடும் அக்கால காளையரின் காம இச்சைக்கு கோவல வண்டின் மலர் தாவுதல் சாட்சியம் கூறுகிறது.

ஆனால் மாதவி வித்தியாசமானவள் என்பது தான் இந்த காப்பியத்திற்கான எதிர்பாராத  ஆரம்ப முடிச்சாக அமைகிறது. நிலா முற்றத்தில் கோவலனுடன் கூடிக் களித்த மாதவி அவனையே தன் கணவனாக மனசில் வரிக்கிறாள். கூடலும் ஊடலுமாய் மாதவியுடன் நேர்ந்த சுகத்தொடக்கம், கோவலனுக்கு கண்ணகியை மறக்கும் அளவுக்கு பேரின்பமாய் இருக்கிறது. கணவனைப் பிரிந்த கண்ணகியின்  நிலையோ அனலின் அருகாமை கண்ட மெழுகின் நிலை.

இடையே இந்திரவிழா வந்து ஊரெல்லாம் விழாக்கோலம் பூணுகிறது. ஒரு நாவலில் ஊடாடிய நிகழ்வு கொண்டாடங்களை விவரிக்க அடிகளாருக்கும் அட்டகாசமான வாய்ப்பு கிடைக்கிறதுஇந்திர விழவூரெடுத்த காதை என்று இந்திர விழா நிகழ்ச்சிகளை விவரிப்பதற்காகவே ஒரு தனிக் காதை ஒதுக்கி சிறப்பு செய்கிறார் இளங்கோ


கடலாடு காதையை அடுத்த கானல்வரியில் மாதவியின் பிரிவு.  நிறைமதி நன்னாளில் புதுப்புனல் விழாவைக் கொண்டாடும் தலை நாளில் புகார் நகரத்து கடலில் விளையாடிக் களிக்கும் ஆசையில் மக்கள் கடற்பரப்பு நோக்கி விரைகின்றனர். மஞ்சத்தில் கோவலனுடன் கூடிக் களித்திருந்த மாதவி  கடலாடி வருவோம்என்ற தன் ஆசையைச் சொல்ல கோவலன் அவள் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறான். அவர்களைத் தொடர்ந்து வரும் விதியும் அந்தக் கடற்பரப்பில் தன்  கைவரிசையைக் காட்டி விளையாடுகிறது.

கானல்வரிக் காதையை அழகான வரிப்பாட்டுகளால் நிரப்புகிறார் அடிகளார். கடல்காட்சியுடனான பின்னணியில் அந்தப் பின்னணி தந்த களிப்பில் மாதவி கோவலனிடம் யாழைத் தந்து, யாழிசைக்க வேண்டுகிறாள். அவள்  களிப்பு கோவலனுக்கு உன்மத்தமூட்டுகிறது. கோவலன் மகிழ்ச்சியுடன் யாழை வாங்கி அதை இசைக்கத் தொடங்குகிறான்.  

இங்கும் இளங்கோவுக்குப் பிடித்த அந்த மூன்று எண்ணிக்கை. காவிரியை  தலைமகளாகக் கொண்டு மூன்று ஆற்றுவரிப் பாடல்கள்.!  சிலப்பதிகாரத்தின் வாசிப்பு சுகத்திற்காக கோவலன் காவிரியை வாழ்த்திப் பாடும் இரு ஆற்றுவரிப் பாடல்களை மட்டும் இங்கு எடுத்தாளுகிறேன்:::

திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அது ஓச்சி  
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி!
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயற்கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற்பென்று அறிந்தேன் வாழி காவேரி!

மன்னு மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அது ஓச்சி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி!
கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழில் கயற்கண்ணாய்
மன்னு மாதர் பெருங்கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி!

கற்பை அணிகலனாகக் கொண்ட பெண்கள் தங்கள் கணவர் பிற பெண்களுடன் கூடினாலும் தம் கணவனை வெறுக்க மாட்டார்கள். அப்படி வெறுக்காமல் இருப்பதும் அவர்களின் கற்பின் சிறப்பே!” என்ற அர்த்ததில் யாழிசைத்துப் பாடுகிறான்.  அவன் அப்படிப் பாடியதில் வேறு யாரோ பெண்ணை அவன விரும்புவது போல குறிப்பு இருப்பதாகக் கருதி மனச்சுணக்கம் கொள்கிறாள் மாதவி.

ஆனால் கோவலன் பாடிய அந்த ஆற்றுவரிப் பாடலில் அவன் மனச்சாட்சி அவனைக் குத்திக் காட்டுவதாக என் எண்ணம். தன் செயலுக்கு நியாயம் கற்பிக்க கண்ணகியின் கற்பைத் துணைக்கழைக்கிறான் அவன்.. காதல் மனைவியைத் தனித்து விட்டுத் தான்  மாதவியுடன் உல்லாசத் தொடர்ப்பு கொண்டிருப்பினும் தன்னைக் காத்துக் கொண்டிருப்பது கண்ணகியின் கற்பே என்று கண்ணகியின் கற்பின் நிழலில் ஒதுங்குகிறான்.

---- இந்தக் கருத்து சிலப்பதிகாரத்திற்கு இதுவரை உரை எழுதிய எந்த ஆசிரியரும் சொல்லாத கருத்து.  ஆதலின் இதனை என் கருத்தாகவே கொண்டு உங்கள் எண்ணத்தையும் சொல்லுங்கள்.

(தொடரும்)

படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.
Related Posts with Thumbnails