மின் நூல்

Saturday, March 31, 2018

பாரதியார் கதை --16

                                         அத்தியாயம்-- 16

ழை விட்டும் தூவானம் விடவில்லை.  பிரஞ்சு போலீசாரிடம் சுதேசிகள் பதிவு செய்து கொண்டும் அவர்களை எப்படியாவது புதுச்சேரியிலிருந்து  வெளியே கொண்டு வந்து  கைது செய்து விடவேண்டுமென்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சதித் திட்டம் தீட்டினர்.  என்ன விலை  கொடுத்தும் தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வதற்கு தயாராக இருந்தனர்.

மேற்கிந்திய தீவுகளில் சில இடங்கள் பிரிட்டிஷாருக்குச் சொந்தமாக இருந்தன.   அந்த இடங்களில் சிலவற்றை பிரஞ்சு அரசுக்குக் கொடுத்து விட்டு ஒரு பண்டமாற்று போல புதுவையை தங்கள் வசப்படுத்திக் கொள்ளலாமா என்ற ஒரு யோசனையும் அவர்களுக்கிருந்தது.  பிரஞ்சிந்தியா ஆட்சியாளர்களும் இந்த வலையில் சிக்கி விடுவார்கள் என்ற நிலையும் இருந்தது தான் பரிதாபம்.  அதற்கான உயர்மட்ட பேச்சு வார்த்தைளும் அரசு புரசலாக நடக்க ஆரம்பித்தன.

பாரீஸில் புகழ்பெற்றிருந்த புரூஸன், லா போர்த் போன்ற பிரமுகர்களுக்கு அரவிந்தர் கடிதமெழுதி இந்த ஏற்பாட்டை ஆரம்பத்திலேயே முறியடிக்க முயற்சி செய்தார். பாரதியாரின்  அருமை நண்பர் பொன்னு முருகேசன் பிள்ளைக்கு பிரஞ்சு அரசியல் வட்டாரத்தில் சில தொடர்புகள் இருந்தன.  வியாபார நண்பர்கள் சிலரின் உதவியையும் நாடி பிரிட்டிஷாரின் சூட்சிகளை  முறியடிக்க முருகேசன் வெகுவாக முயன்றார்.

இந்த சமயத்தில் தான் தெய்வாதீனமாக அந்தக் காரியம் நிகழ்ந்து.. பிரஞ்சு மந்திரி சபையில் மிகப்பெரும்  மாற்றம் ஒன்று நிகழ்ந்தது.  ப்வாங்கரே என்றொரு புண்ணியவான் ஆட்சி அதிகாரத்தின் தலைமைப் பதவிக்கு வந்தார்.  இன்றைய சுதந்திர யுகத்தில்  கூட 'நான் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து இதுவாகத் தான் இருக்கும்' என்று சில அரசியல் வாதிகள் அறிவிப்பு செய்கிறார்கள் அல்லவா,  அந்த மாதிரி சாகச அறிவிப்புகள் எல்லாம் செய்யாமலேயே பிரஞ்சு ஆட்சிப்  பிரதேசங்களின்   மேல் ஆழமான பிடிப்பு வைத்திருந்த ப்வாங்கரே ஆட்சிப் பொறுப்பேற்றதும்  இந்திய சுதேசிகளில் வயிற்றில்  பால வார்க்கிற மாதிரி ஒரு காரியத்தைச் செய்தார்.

"பிரஞ்சுக் கொடி பறக்கும் எந்த  நாட்டையும்  எந்த
பரிவர்த்தனை என்ற பெயலும் இழக்க நான் சம்மதிக்கப் போவதில்லை.." என்று பிரஞ்சு  பார்லிமெண்டில்  ப்வாங்கரே சூளூரைத்தார்... "பிரஞ்சு வீரர்கள் இரத்தம் சிந்திப்  பெற்ற பிரதேசங்கள் அவை.  எங்களைப் பொறுத்த மட்டில் அந்த வீரர்களின் தியாகத்தில் கிடைத்த புனிதமான பூமி அது.  அதுவும் எங்கள் போர்த்தளபதி  துய்ப்ளெக்ஸ் உருவச் சிலை கம்பீரமாக கடற்கரையில் நிற்கும் புதுவை மண்ணை எந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் இழக்க நாங்கள் சம்மதிக்கவே மாட்டோம்.." என்று வீராவேச பிரகடனம் செய்தார்.

ப்வாங்கரேயின் பிரஞ்சுப் பார்லிமெண்ட் உரை புதுவை சுதேசிகள் அத்தனை பேருக்கும் உவப்பான சேதியாக இருந்தது.  புதுவைப்  பிரதேச பிரான்சு அதிகாரிகளுக்கும் சுதேசிகளின் பால் வெளிக்காட்டிக் கொள்ளமுடியாத ஒரு அந்நியோன்யம் நிலவ ஏதுவாயிற்று.
முத்தியாலுப்பேட்டை புதுவையைச் சார்ந்த ஒரு  பகுதி.
கிருஷ்ணசாமி செட்டியார் என்றொரு இளைஞர் முத்தியாலுப் பேட்டையிலிருந்து பாரதியாரைப் பார்க்க அடிக்கடி வருவார்.   கிருஷ்ணசாமி அடிப்படையில் நெசவுத்  தொழிலை மேற்கொண்டிருந்தார்.  அதோடு சேர்ந்து துணி வியாபாரமும் உண்டு.  முத்தியாலுப்பேட்டையில் நிலபுலன்களும் அவருக்கு  இருந்தன.  இவர் பாரதியாரைப் பார்க்க வருவது மனசுக்குப் பிடித்த அன்பர்  ஒருவரை தரிசிக்க வருவது  போல இருக்கும்.

பாரதியாருக்கு இவர் மேல் நிரம்பப்  பிரியம்.  தான் இயற்றிய பாடல்களை இருபது வயது இளைஞர் கிருஷ்ணசாமிக்கு பாடிக் காட்டுவதில்  பாரதியாருக்கு அலாதியான  சந்தோஷமும் திருப்தியும் உண்டு.  ஆனால் கிருஷ்ணசாமியோ முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் பாரதியார் எதைச் சொன்னாலும் கேட்டுக் கொள்கிற மாதிரியான தோற்றம் கொண்டிருப்பார்.  பாரதியின் கவிதகளை கேட்பதற்கென்றே முத்தியாலுப்பேட்டை யிலிருந்து இங்கு வந்திருப்பவர் போலவும் சமயங்களில் காட்சி தருவார்.  பார்க்கிறவர்களுக்கு இந்த பாரதி இவரிடம் போய் ஏன் இவ்வளவு சாங்கோபாங்கமாக தன்  கவிதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று தோன்றும்.

புதுச்சேரி வாசமே பாரதியாரின்  கவிதா மனோபாவத்திற்கு சிறைவாசம் போல இருந்தது.  பாரதியாருக்கு எந்த  இடத்திலும் அடைந்து கிடப்பது பிடிக்காது.  காலாற நடக்க வேண்டும்.  இயற்கையின் கொடையை செடி, கொடிகள், வயல், வரப்பு, கடற்கரை என்று ரசித்து புளகாங்கிக்க வேண்டும் என்று உள்ளக்கிளர்ச்சி கொண்டவர் அவர்.

முத்தியாலுபேட்டையில் கிருஷ்ணசாமிக்கு பச்சை பசேலென்று தோட்டம் ஒன்றிருந்தது.  இந்த  தோட்டத்திற்கு வந்து ஆனந்திப்பதில்  பேரின்பம் கண்டார் பாரதி.   உணர்வே இல்லாத இறுகிய  முக மனிதர்களுடன் உரையாடுவதை விட  கிளி, குருவி, குயில் என்று கொஞ்சுவது  இயற்கையை
நேசித்த பாரதியாருக்கு இன்ப பொழுதாக இருந்தது.  இதற்குள் புரிந்து  கொண்டிருப்பீர்கள்.  இந்தத் தோட்டத்தில் தான் பாரதி தனது இறவாப் புகழ் பெற்ற குயில் பாட்டை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தினார்.

பாரதியார் தம் கவிதைகளை எப்படி இயற்றுவார்?.. எழுதி வைத்துக் கொண்டு பாடுவாரா?.. எழுதி வைத்துக்  கொள்ளவில்லை என்றால் வேறு யார் அவர் பாடுவதை எழுதி வைத்தார்கள்?.. எப்படி அவை நமக்குக் கிடைத்தன?-- போன்ற கேள்விகளை முந்தைய பதிவில் பெரியவர் ஜி.எம்.பீ. அவர்கள் எழுப்பியிருந்தார்.  பாரதியாருடன் கூடப் பழகி இருப்பவர்களுக்குத் தான்  இதெல்லாம் தெரியும் என்ற அடிப்படை உண்மையில் வ.ரா. அவர்கள் இது பற்றி எழுதியிருப்பவற்றை இந்த இடத்தில்   எடுத்துச் சொல்கிறேன்.    அவர் சொல்லியிருப்பதை அப்படியே இங்கு எடுத்தாண்டு விட்டால் உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்ற கேள்வி எழாமலும் இருக்கும் தான்.

இதோ பாரதியார் பாடத் துவங்குவதை அதைப் பார்த்த அனுப்வத்தில் வ.ரா. எப்படி வர்ணிக்கிறார், பாருங்கள்:

ஸரிக-க-காமா  என்று அவர் வாய்க்குள் சொல்லிக் கொண்டால்,  புதிய பாட்டுக்குத் தாளம் கோலிக் கொண்டிருக்கிறார் என்று பக்கத்திலிருப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம்.  மரத்தை வெறித்துப் பார்ப்பார்;   குளத்தை உற்றுப் பார்ப்பார்; ஆகாயத்தை முட்டுகிறாற்போல மார்வை வெளியே தள்ளி. தலையை எவ்வளவு தூரம் நிமிர்த்தி உயர்த்த முடியுமோ அவ்வளவு தூரம் நிமிர்த்தி உயர்த்திப் பார்ப்பார்;  ஸஸ்ஸ - ஸஸ்ஸ- ஸஸ்ஸ என்று மூச்சு விடாமல், உரக்கக் கத்துவார்.  வலக்காலால் தாளம் போடுவார்; தவறிப் போனால் இடக்காலால் பூமியை  உதைப்பார்.  ஒரு நிமிஷம்- மெளனம்.  "சொல் ஆழி வெண் சங்கே' என்ற கூக்குரல். கூப்பாடு.   இல்லாவிட்டால் தாயுமானவரின் கண்ணிகளில் ஒன்று.  "மத்த கஜம் எனை வளர்த்தாய்" என்ற சந்தோஷ முறையீடு.  மீண்டும் ஒரு முறை ஸரிக-க-காமா.

குழந்தையைப்  பெற்றெடுக்கும் பிரசவ வேதனை தான். உற்சாகமும், சோர்வும் ஒன்றையொன்று பின்னிக் கொண்டு வெளி வருவதைப் பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.  மனித உலகத்தோடு பாரதியாருக்கு அப்பொழுது உறவே கிடையாது என்று சொல்லி விடலாம்.  புதுப்பாட்டு வருகிற வேகத்தில், அது அவருடைய கூட்டையே முறித்து விடுமோ என்று தோன்றும்.  பாரதியாரின் கீதங்களில் ரத்தப் பசை, ஜீவக்களை இருக்கிறது என்று சொல்லுவதில் பொய்யே கிடையாது.

கலைஞர்கள், மேதாவிகள் புதுக்கருத்துக்களை உலகத்துக்கு அறிவிக்கையில் என்ன பாடுபடுகிறார்கள் என்பதை உலகம் தெரிந்து கொள்ள முடியாது.  புதுக்கருத்து ஒன்று--ஜீவ களை நிறைந்த கருத்து; மேதாவிகளின் உள்ளத்திலிருந்து வெளி வருவதற்குள் அதே உடல் முழுவதையும் குலுக்கி, நடுநடுங்கச் செய்து பிராணனை அரைகுறைப்  பிராணனாகச் செய்து விடுகிறது.  உலகத்துக்காக மேதாவிகள் ஒவ்வொரு நிமிஷமும் உயிரை விடுகிறார்கள் என்பது பல வகைகளிலும் உண்மை.

'நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை' என்ற உண்மையை எந்த மனிதன் உணர்கிறானோ, அவன் கவி. அவனுக்குப்  பகைமை கிடையாது.  எனவே, பலவீனம் துளிக் கூடக் கிடையாது.  'நோக்க நோக்கக் களியாட்டம்' அவனுக்கு  ஏற்படுவதற்கு என்ன ஆட்சேபணையிருக்கிறது?

முத்தியாலுப்பேட்டை கிருஷ்ணசாமி செட்டியாரின் தோட்டத்திலே,  நோக்கி நோக்கி களியாட்டம் ஆடுவார் பாரதியார்.  அவருடைய ஆனந்தம் வர்ஷ தாரையாகப் பெருக்கடையும்.  உன்மத்தனைப் போல- வெறி கொண்டவனைப் போல - சில சமயங்களில் அவர் ஆகிவிடுவார்.  இயற்கையின் மின்சார சக்தி, கவிதை உணர்ச்சி என்ற கம்பி மூலமாகப் பாரதியாரின் உடலிலும் உள்ளத்திலும் நுழைந்து பாய்ந்து, பரவி, பூரித்துப் போகும் பொழுது, அவர் ஆனந்தக் கூத்திடாமல் சும்மா இருக்க முடியுமா?..   குரலிலே  ஸரிக-க-காமா; காலிலே தாளம்; கைகள் கொட்டி முழங்கும்.  உடல் முழுவதும் அபிநயம் தான். தேகமும் மனமும் அனுபவிக்கும் ஆனந்தத்தையும் சக்தியையும் கண்கள் வெளிக் காண்பிக்கும்.

குழந்தை பிறந்தவுடன் சோர்ந்து நித்திரையில் ஆழ்ந்து விடும் தாய்மார்களைப்  போல, கவிதை பிறந்தவுடன் பாரதியார் சோர்ந்து போய், மண் தரையில் படுத்துக் கொள்வார். தலைக்குயரமாய் எதையும் வேண்டார்.  எதையும் கொடுக்க எங்களுக்குத் தைரியமும் உண்டானதில்லை,  இயற்கைத் தாய் நர்த்தனம் செய்த உடலுக்கு இயற்கையான சயனந்தான் வேண்டும் போலும்!..

வ.ரா.வின் பார்வையே அலாதி தான்.   அதுவும் பாரதியாருக்கு அணுக்க நண்பராய் இருந்து அவரது சோர்விலும் சந்தோஷத்திலும் பங்கு கொண்டவர்.  பாரதியாரின் வாழ்க்கைச் சரிதத்தை  வ.ரா.அவருக்குத் தெரிந்தவாறு உள்ளது உள்ளபடி எழுதி வைக்கவில்லை என்றால் இந்த சரித்திரமெல்லாம் நமக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது என்ற  ஆற்றாமையில் மனம் நெகிழ்ந்து  போகிறது.


(வளரும்)

படங்கள் அளித்தவர்களுக்கு நன்றி.

Sunday, March 25, 2018

பாரதியார் கதை...--15

                                         அத்தியாயம்-- 15

புதுவையில் ஈஸ்வரன்  தர்மராஜா கோயில் தெருவில் தான் பாரதியார் தங்கியிருந்த  வீடு இருந்தது.  விளக்கெண்ணை செட்டியார் வீடு.

அந்த வீட்டிற்கு இரண்டு வீடுகள் தள்ளி பொன்னு முருகேசன் பிள்ளையின் வீடு.  பிள்ளையவர்கள் பாரதியாரின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.  இவ்வளவுக்கும் அவர் கடவுள் மறுப்பாளர்.   பாரதியாரோடு கட்சி வாதம் செய்வதில் பிள்ளையவர்களுக்கு மிகுந்த ஈடுபாடு.   இருந்த போதிலும் இருவருக்குமிடையே பிணக்கு  ஏற்பட்டதே இல்லை.  வாதங்கள் ஒருவொருக்கொருவர் தம் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்காகத் தானே தவிர தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை என்ற தெளிவு அவர்கள் இருவருக்கும் இருந்தது.  அதனால் அவர்களுக்கிடையான அன்பு நாளுக்கு நாள் இறுகிக் கொண்டே வந்தது.

பிள்ளையவர்கள் பிரன்ஞ்சு மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்.  சொல்லப் போனால் இவரோடு பேசிப்பேசித் தான் பாரதியார் பிரன்ஞ்சு மொழியில் தேர்ச்சி பெற்றார் என்று சொல்ல வேண்டும்.   விளக்கெண்ணைய் செட்டியார் வீட்டில் பாரதியார் இல்லையென்றால் நிச்சயம் பிள்ளையவர்கள் வீட்டில் தான் இருப்பார் என்று நம்பலாம்.  அந்தளவுக்கு பாரதியாருக்கும் முருகேசன் பிள்ளைக்கும் நெருக்கம்.  இதில் இன்னொரு வேடிக்கையும் உண்டு. முருகேசன்  பிள்ளையின் மூத்த மகன் ராஜா பகதூர் பாரதியாரின் அணுக்கத் தொண்டன்.  இளையவன் கனகராஜா விளையாட்டுப் பிள்ளை.

முருகேசன் பிள்ளையின் வீட்டினருக்கோ பாரதியாரும் அந்த வீட்டு உறுப்பினர்களில் ஒருவர் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. சமயங்களில்  பாரதியார் வெறும் வயிற்றோடு  இருப்பது எப்படித் தான் பிள்ளையவர்களின் துணைவியாருக்குத் தெரியுமோ தெரியவில்லை, வற்புறுத்தி அவருக்கு அன்னம் அளிப்பதை பரிவான தன்  கடமையாகவேக்  கொண்டிருந்தார் அவர். அந்த அம்மாவைப் பொறுத்த மட்டில் பாரதியாரைத் தன் தம்பி போல போஷித்து வந்தார்.

பிள்ளையவர்களின் வீடு மாடி வீடு.  அந்த மாடியில் பாரதியாருக்கென்றே ஒரு பிரத்யேக அறையும் உண்டு. அந்த வீட்டில் கோவிந்தன் என்றொரு அற்புதமான  பையன் வேலை செய்து கொண்டிருந்தான்.  கோவிந்தனுக்கு இரண்டு  சகோதரர்களும் உண்டு.  கோவிந்தனின் தாய் தான் அம்மாக் கண்ணு.  அம்மாக்கண்ணு அந்த வீட்டில் சுற்று  வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்.

முதலில் அம்மாக்கண்ணுவை அறிமுகப்படுத்தி விட்டுத் தான் அவளுடைய பையன்களைப் பற்றிச் சொல்லியிருக்க வேண்டும்.  அம்மாக்கண்ணுக்கு அவ்வளவு பாசம் பாரதியார் மீது.   அம்மாக்கண்ணோ கல்வியறிவு அற்றவர்; கிழப் பருவம்.  நோஞ்சலான உடம்பு; காது கேட்காது;   ஜாடை மாடையில்  தான் பேச வேண்டும்.  கூலி வேலை செய்து பிழைப்பவர். அப்படிப்பட்டவர் பாரதியார் மீது பேரன்பு கொண்டிருந்தார்.  பாரதியாருக்கு தொண்டு  செய்வதை பெரும் பேறாக மனசுக்குள் கொண்டிருந்திருக்கிறார்.


பாரதியாரின் கல்யாண குணங்களோ தனி.  தன்  காரியங்களைத் தானே பார்த்துக்  கொள்ளத் தெரியாது. சட்டை துணிமணிகளைக் கூட யாராவது தோய்த்துத் தந்தால் சரி.  வேளைக்கு சாப்பிட வேண்டும் என்ற நினைவு  கூட அவருக்கு இருக்காது.   யோசனையில் இருக்கிறார் என்றால் அவரை நெருங்கவே யோசிக்க வேண்டியிருக்கும்.   ரோஷமும், ஆத்திரமும் ஜாஸ்தி.  ஆனால் அம்மாக்கண்ணு  எது சொன்னாலும் பாரதியார் அதைக் கேட்டுக் கொள்வார்.

பாரதியாரின் இத்தனை குண விசேஷங்களையும் தாண்டி   முருகேசன் பிள்ளை வீட்டினர்  பாரதியாரிடம்  அன்பு  கொண்டிருந்தனர் என்றால் அது ஜென்மாதி  ஜென்மத் தொடர்பு ஏதாவது இல்லையெனில்  சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.  இந்த சமயத்தில்----


** திருநெல்வேலி கலெக்டராக இருந்த  ஆஷ் துரை  1911-ம் வருடம் ஜூன் 17-ம் தேதியன்று மணியாச்சி ரயில்வே ஜங்ஷனில் சுட்டுக் கொல்லப்பட்டார்.  அந்தக் கொலை தொடர்பாக 13 பேர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கின் விசாரணையில் கொலைக்கான திட்டம் புதுவையில் தீட்டப்பட்டது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.  புதுவையிலிருந்த தீவிரவாதிகளுடன் நீலகண்டன் (பிரம்மச்சாரி), கொலையாளி  வாஞ்சி ஆகியோர் நெருங்கிய தொடர்பில் இருந்தனர்.  இவர்கள் புதுவைக் கடற்கரையில் ஒன்றாகக் கூடி ஆலோசனைகள் நடத்தினர் என்பதற்கு ஆதாரங்களை போலீசார் உருவாக்கி வைத்திருந்தனர்.

'புதுவையிலிருந்த  வி.வி.எஸ். அய்யர், சுப்பிரமணிய பாரதி, மண்டயம் ஸ்ரீநிவாச்சாரி, நாகசாமி ஆகியவர்கள் பிரிட்டிஷ் கவர்மெண்ட்டுக்கு விரோதமான அபிப்ராயங்கள் கொண்டிருந்தனர்.  இவர்களுக்கு வரும் கடிதங்கள் தபால் ஆபீசில் ரகசியமாக பிரிக்கப்பட்டு வாசித்த பின்பே சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கவும் உத்திரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது' என்று ஆஷ் துரையின்  கொலை வழக்கு விசாரணைக் குறிப்புகள்  நீளுகின்றன.  'நாட்டிலெங்கும் சுதந்திர வாஞ்சையை ஊட்டினாய் -- கனல் மூட்டினாய்' என்ற பாரதியின் கவிதை வரிகள் கூட விசாரணை அறிக்கையில் குறிக்கப்பட்டது.. 

@ 1911-ம் வருடம் செப்டம்பர் 11-ம் தேதியன்று கலெக்டர் ஆஷ் கொலை  வழக்கின் விசாரணை ஆரம்பமானது.

ஆஷ் துரையின் கொலையும் சேர்ந்து கொள்ளவே,  பாரதியார் மீதிருந்த கண்காணிப்புகெடுபிடிக்கள்  அதிகமாகவே இருந்தது.  புதுச்சேரி தேசபக்தர்களை கூண்டோடு கைது செய்து பிரித்தானிய இந்தியப் பகுதிக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் நாளுக்கு நாள் நெருக்கடிகள் கூடிக் கொண்டே வந்தன.

இந்த சமயத்தில் உலக அரங்கிலும் பிரான்ஸ் சில நெருக்கடிகளில் சிக்கியிருந்தது.   ஜெர்மானியத் தலைவர்  கெய்ஸரின் அதிரடி நடவடிக்கைகளினால் பிரான்ஸ் அரண்டு போயிருந்தது..  இந்த சிக்கல்களில் பிரிட்டாஷாரின் உதவியும் உறவும் அவர்களுக்கு மிகவும் அவசியமாக இருந்தது.  இந்த நிதர்சனப் புரிதலில் பிரஞ்சு -- ஆங்கில பகைமைகள் பூசி மெழுகப்பட்டு அல்லது  மறக்கப்பட்டு உறவு புதுப்பித்தலுக்கான கைகுலுக்கல்கள் அரங்கேறின.

இந்த புது உறவின் உடனடிப் பயன்பாட்டாய் பிரித்தானிய அரசு பிரன்ஞ் இந்தியாவில் தன் தலையீட்டை அதிகரித்தது. புதுவையில் ஒரு பங்களாவை  வாடகைக்கு எடுத்துக் கொண்டு தனியொரு பிரிட்டிஷ் இந்தியாவின்  போலீஸ் படையே இயங்கிக் கொண்டிருந்தது. இதில் குருவப்ப நாயுடு, ரங்கசாமி ஐயங்கார் என்ற இரு போலீஸ் அதிகாரிகள் குறிப்பிடத் தக்கவர்கள்.  அதுவும் ரங்கசாமி ஐயங்கார் ரொம்ப சகஜமாக அடிக்கடி பாரதியார் வீட்டிற்கு வந்து ஆஷ் கொலை வழக்கில் ஏதாவது துப்பு கிடைக்காதா என்று மோப்பம் பிடிக்க ஆரம்பித்தார்.

அன்னியர்  சட்டம் என்ற ஒரு  சட்டத்தை பாண்டிச்சேரியில் அமுல் படுத்த பிரித்தானிய அரசு பிரெஞ்சு அரசைத் தூண்டியது.   இந்திய பிரஜா உரிமை பெற்றவர்கள் சுதேசிகளாய் பிரெஞ்ச் இந்தியாவில் அடைக்கலமாகியிருந்த படியால் இந்த சட்டத்தின் மூலம் அவர்களுக்கு நெருக்கடிகள் கொடுக்க்லாம் என்று எண்ணியது.

சில தேசங்களுக்கென்று சில அடிப்படை கொள்கைகள்  உண்டு.  அதை எந்த நெருக்கடியிலும் விட்டுக்  கொடுக்க மாட்டார்கள்.  பிரென்ஞ் தேசத்திற்கென்று அப்படியாக வாய்த்த கொள்கைகளில் ஒன்று, சுதந்திர  தாகம்.  தன்  நாட்டின் சுதந்திர தாப வேட்கையில் பாதுகாப்பிற்காக தங்கியிருந்த சுதேசிகளை உடனடியாக வெளியேற்ற பிரெஞ்ச் அரசாங்கம் மிகவும் யோசித்தது.

அன்னியர் சட்டத்தின் பிரகாரம்  பிரன்ஞ் அரசாங்கத்திடம் அடைக்கலமாகியிருந்த அன்னிய தேசத்தவர் உடனடியாக தங்கள் நாடு திரும்ப வேண்டும் என்பது சட்ட வரை வடிவு.
அந்த சட்ட வரை வடிவில் பிரஞ்சிந்தியா அரசினர் ஒரு திருத்த ஷரத்தைச் சேர்த்தனர்.  இந்த சட்டம் அமுலுக்கு வந்த நாளுக்கு ஒரு வருடம் முன்பு பிரென்ஞ் இந்தியாவில் வசிப்பவர்கள், தங்களின் ஒரு வருடத்திற்கு மேலான தங்கலுக்கு சாட்சியாக ஐந்து மாஜிஸ்ட்ரேட்டுகளிடம் கையெழுத்து  பெற்று பிரெஞ்ச் அரசிடம் தங்களைப்  பதிவு செய்து கொண்டு பிரெஞ்சிந்தியா பிரதேசத்திலேயே தங்கலாம் என்ற ஒரு ஷரத்தை அந்த அன்னியர் சட்டத்தில் சேர்த்தனர்.

அரவிந்தர், அய்யர், பாரதியார், சீனிவாஸாச்சாரியார்-- நாலு பேருக்கும் திருத்தப் பட்ட இந்த ஷரத்தினால் பலன் உண்டு. இருந்தாலும் ஐந்து மாஜிஸ்ட்ரேட் கையெழுத்து சமாச்சாரம் இம்சையாக இருந்தது.  'சுதேசி'களுக்கு எந்த மாஜிஸ்ட்ரேட்டைத் தெரியும்? தெரிந்தாலும் யார் கையெழுதிடுவார்கள்'- என்ற  விஷயம் திகைப்பாயிருந்தது.   இது பற்றி என்ன செய்யலாம்  என்று யோசிக்க அரவிந்தர் வீட்டில் கூடியிருந்தவர்களால் இரவு 7 மணியாகியும் எந்த முடிவையும் எடுக்க முடியாத பொழுது 'நாளை காலை பார்க்கலாம்..' என்று சொல்லி பாரதியார் அந்த இடத்தை விட்டுக் கிளம்புகிறார்.  போகும் பொழுது, "ஓய்! வ.ரா! நாளைக்குக் காலமே எட்டு மணிக்கு என் வீட்டுக்கு வாரும்!" என்று சொல்லி விட்டுப் போகிறார்.

எப்பொழுதுடா விடியும் என்று காத்திருந்த வ.ரா. சரியாக எட்டு மணிக்கு ஈஸ்வரன் தர்மராஜா கோயில் தெரு பாரதியார் வீட்டில் ஆஜர்.

வ.ரா.வைப் பார்த்ததும், "புறப்படுவோமா?"  என்று பாரதி   உடனே வெளியே வருகிறார்.  இவர்   எங்கு போகிறார், என்ன செய்யப் போகிறார்  என்று தெரியாமலேயே வ.ரா. பாரதியாரைப் பின் தொடர்கிறார்.

பாரதியார் நேரே போய்ச் சேர்ந்தது சங்கர செட்டியார் வீட்டிற்கு.  நடுக்கூட ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த சங்கர செட்டியார் உள்ளே நுழைந்த பாரதியாரைப் பார்த்ததுமே  பணிவுடன் எழுந்து, வணங்குகிறார்.

எப்பொழுதும் பாரதியார் பாணி அது தான்.  நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறார்."நீங்கள் எல்லோரும் இருந்தும், நாங்கள் புதுச்சேரியை விட்டுப் போக வேண்டுமா?.. புதுச் சட்டம் செய்திருப்பது தங்களுக்கு தெரியுமோலியோ?" என் கிறார்.

என்ன சட்டம் ஏது என்று செட்டியாருக்குத் தெரியாது. அவர் அந்த நேரத்தில் ஊரில் இல்லை.

பாரதியார் பிரஞ்சு அரசாங்கம் இயற்றியிருக்கிற புதுச் சட்டத்தின் ஷரத்துக்களை விளக்கிச் சொன்னதும், "அவ்வளவு தானே?" என்கிறார் செட்டியார்.

செட்டியார் கெளரவ மாஜிஸ்ட்ரேட். 'என் கையெழுத்து சரி.  இன்னும் ஐந்து பேர் கையெழுத்தும் வாங்கித் தருவதற்கு நானாச்சு.." என்றதுடன், "கையெழுத்து இட வேண்டிய காகிதங்களை மட்டும் என்னிடம் தாருங்கள்.  இன்னும் இரண்டே மணி நேரத்தில் உங்கள் வீட்டில் வந்து பார்க்கிறேன்.." என்று பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.

பாரதியாரை அனுப்பி வைக்கும் முன்  செட்டியார்        திடீரென்று ஏதோ ஞாபகத்திற்கு வந்தது போல, "புதுப்பாட்டு ஏதாவது பாடுங்களேன்.." என்று ஆசையாகக் கேட்கிறார்.  பாரதியாரும் "ஜெயமுண்டு பயமில்லை மனமே.." என்ற பாட்டைப் பாடுகிறார்.  செட்டியார் சிலிர்த்துப் போய் நிற்கும் பொழுதே பாரதியார் கிளம்பி விடுகிறார்.

கொடுத்த வாக்கை எந்தக் குறையுமில்லாமல் நிறைவேற்றுவதற்கு செட்டியார் பெயர் பெற்றவர். அதுவும் பாரதியார் தன் வீட்டிற்கே வந்து கேட்டாரே என்று நெகிழ்ந்து போகிறார்.

அன்று மாலை மூன்று மணிக்குள்  அரவிந்தர், அய்யர், பாரதியார், சீனிவாச்சாரியார், வ.ரா. உட்பட இன்னும் சிலர்  சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை   சமர்ப்பித்து  பிரெஞ்சுப் போலீசாரிடம் பதிவு செய்து கொள்கிறார்கள்.

வ.ரா. இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு எழுதும் பொழுது  'மனங்கலங்காதவர்கள் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் அந்தச் சந்தர்ப்பத்தில்  இலேசாக 'சப்பையாய்'ப் போய் விட்டார்கள்.  காரியம் செய்யத் தெரியாதவர் என்று பெயர் வாங்கி வந்த பாரதியார் தான் இந்த நெருக்கடியில் முதல் பரிசு பெறக்கூடிய மனோதிடத்தைக் காண்பித்தார்' என்று சொல்லியிருப்பதை வாசிக்கும் எவருக்கும் ஒரு 'க்ளுக்' சிரிப்பாவது வராமல் இருக்காது.

(வளரும்)


படங்கள் உதவியவர்களுக்கு நன்றி.

=======================================================
**  தினமணிக் கதிர் பத்திரிகையில் ரகமி (ரங்கசாமி அய்யங்கார்)  அவர்கள் தொடராக  ஆஷ் கொலை வழக்கு பற்றி எழுதிய குறிப்புகளிலிருந்து.

@  பிற்காலத்தில்  பாரதியாரின் மறைவு நாளும்  ஒரு  செப்டம்பர் 11 தான்.

Monday, March 19, 2018

பாரதியார் கதை -- 14

                                                     அத்தியாயம்-- 14

கிட்டத்தட்ட 16 பக்கங்கள்.  புதுமையாக சிவப்புத் தாளில்   அச்சிடப்பட்ட பத்திரிகையாக 'இந்தியா'  வார இதழாக புதுவையிலிருந்து புது எழுச்சி கொண்டு வெளிவரத் துவங்கியது.

இன்றைய புதுவை நேரு வீதியில்  வாடகைக்கு ஒரு கட்டிடத்தைப் பிடித்து மண்டயம் சீனிவாச்சாரியார் பத்திரிகை வெளிவருவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.  மக்களின் குறைகள், பொது விஷயங்கள், வெளியூர் செய்திகள்,  புத்தக மதிப்புரைகள், முதல் பக்கத்தில் கேலிச் சித்திரம் என்று அந்த 16 பக்கங்களில் ஒரு பத்திரிகைக்குண்டான சகல இலட்சணங்களையும் பொருத்தி தேசிய எழுச்சிக்கான உள்ளடக்கங்களை பத்திரிகையின் ஜீவனாக்கியிருந்தார்கள்.

தேச சுதந்திரத்திற்கான வழியை பாரதி தீர்க்கமாகத் தீர்மானித்திருந்தான்.  'மந்திரத்திலே மாங்காய் விழாது. பயந்து செய்யும் ஓரிரண்டு செய்கைகளால் நம் நாட்டிற்கு சுயாதீனம் கிடைக்காது. விடாமுயற்சியும் சித்த சுத்தியுமே துணையாகும்' என்று இந்தியாவில் எழுதுகிறான். மிதவாதிகளின் போக்கு பிடிக்காமல் துடிக்கிறான்.   இந்தியாவில்  பாரதி எ ழுதிய 'சுதேசிய ஒளிக்கு அஞ்சும் ஆந்தைகள்', 'சென்னையில் ஆட்டு மந்தை', 'பசுத்தோல் போர்த்திய புலிக்குட்டி' போன்ற கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன.  பாரதியின் எழுத்துச் சீற்றத்திற்கு அன்னி பெசண்ட் கூட தப்பவில்லை.  இந்தப் பக்கம் அந்தப் பக்கம் சாயாது அவனின் எழுத்து மேன்மை தராசுக் கோலாய் கொண்ட கொள்கையில் லவலேசமும் சமரசம் செய்து கொள்ளாது போராடியது.  'வந்தேமாதரம்', 'அமிர்தபஜார்' போன்ற வடபுலத்துப் பத்திரிகைகளின் அரசியல் கட்டுரைகளை 'இந்தியா'வில் மொழியாக்கம் செய்து வெளியிடவும் ஆரம்பித்தான்.  இத்தனைக்கும் இடையே இந்தியா பத்திரிகையில்  'மலைப்பாம்பும் குரங்குகளும்', 'ஓநாயும் நாயும்', 'பஞ்சகோண கோட்டையின் கதை' என்று சிறுவர்களுக்கும் பக்கங்களை ஒதுக்கி அவர்களின் மனவளத்திற்கு அடிகோலும் கதைகளை வெளியிட்டான்.

கல்கத்தாவில்  'இந்தியா'  நிருபர் அரவிந்தரைப் பேட்டி கண்ட கட்டுரை,  அரவிந்தரின் 'கடல்' கவிதையின்  மொழிபெயர்ப்பு போன்ற பத்திரிகைக்கு  பொலிவு  தந்த விஷயங்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

'வெள்ளைத் திரையாய்,  வெருவுதரு தோற்றத்தாய்
கொள்ளை ஒலிக்கடலே நல்லறம் நீ கூறுதிகாண்
விரிந்த பெரும்புறங்கள்மேலெறிந்து உன் பேயலைகள்
பொருந்தும்  இடையே புதைந்த பிளவுகள் தாம்
பாதலம் போல் ஆழ்ந்திருப்பப் பார்க்கரிதாய் அவற்றின்
மீது அலம்பி நிற்கும் ஒரு வெள்ளைச் சிறுதோணி..'

-- என்று அந்த  ' கடல்' கவிதை பாரதியின் மொழியாக்கத்தில் துள்ளலுடன் தனி வாசிப்பு சுகத்தைக்  கொடுக்கும்.  ஸ்ரீமான்
அரவிந்த கோஷ்  ஆங்கில பாஷையில் சில கண்ணிகள் புனைந்து 'மாடர்ன் ரெவ்யூ' என்ற கல்கத்தா பத்திரிகையில் எழுதியதை தாய் சோறு சமைப்பதைப் பார்த்து குழந்தையும் விளையாட்டு சமையல் செய்வது போல அந்த மஹானுடைய செய்யுளை அன்பினால் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறேன்' என்று மிகுந்த அடக்கத்துடன் பாரதி அந்த மொழிபெயர்ப்புக் கவிதையை வெளியிட்டிருக்கிறான்.

அலிப்பூர் சிறை வாசத்திற்குப் பிறகு ஆன்மீகத் தேடலின் உந்துதலில் அரவிந்தர் புதுவை வந்து சேர்ந்தது, பாரதியாருக்காகத் தான் என்பது போல அரவிந்தரின் அருகாமை பாரதியாரின் வாழ்க்கையில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது.   பாரதியாரின் ஊனிலே ஏற்கனவே கலந்து ஒன்றியிருந்த ஆன்மீக உணர்வுகள் அரவிந்தரின் நட்பிலே  வீர சுதந்திர வேட்கையினூடே இன்னொரு திசை வழிப் போக்காய் ஊதி விட்ட  கனலாயிற்று.

பிரன்ஞ் ஆதிக்கப் பகுதியில் வாழ்ந்து கொண்டு பிரிட்டிஷ் ஆதிக்கப் பகுதிக்கான சுதந்திரத்திற்காக ஏங்குவதும் அதற்காக இங்கு துடிப்பதும் பாரதியின் இயல்பான நேரடி நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் பாங்குக்கு தகிப்பாக இருந்திருக்கும்  தான்.  'வீர சுதந்திரம் வேண்டி  நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ?' என்று அவரின் உள்ளம் வெதும்பியது அதனால் தான்.

ஆனால் நட்பு வட்டாரமும் சூழ்நிலைகளும் வாழ்க்கையின் போக்குக்கு வாய்க்காலாக அமையும்  என்பது உளவியல்  ரீதியான உண்மையாயிற்றே!  பாரதியின் ஆன்மிக சிந்தனை கவிதா விலாசத்தோடு கலந்துறவாடும் பொழுதுகளாக அரவிந்தரோடு அவர் இருக்கும் நேரங்கள் அமைந்தன.

'பாரதியார் - அரவிந்தர் சம்பாஷணையில் நவரசங்களும் ததும்பும்;  ஒழுகும்.  கவிதை, சரித்திரம், தத்துவம், அனுபவம், கற்பனை, ஹாஸ்யம்,  குறுக்கு வெட்டு, விஸ்தாரம், உண்மையை வெளிப்படுத்தும் ஆவல்,  அபரிமிதமான இலக்கியச் சுவை,  எல்லை இல்லாத உடல்  பூரிப்பு-- எல்லாம் சம்பாஷணைக்கிடையிடையே இடைவிடாது நர்த்தனம் செய்யும்.  அந்தக் காலத்திலே குறுக்கெழுத்து நான் பழகிக் கொள்ளவில்லையே என்று வருந்துகிறேன்.  சம்பாஷணையில் சிற்சில கட்டங்களும் குறிப்புகளும் தான் இப்பொழுது என் நினைவில் இருக்கின்றன.   தினசரி டயரி எழுதும் பழக்கம் என்னிடம் இல்லை.  அளவற்ற நஷ்டம்.. இப்போது என்ன செய்வது?'  என்று வருந்திக் கூறுவார் வ.ரா.

'அய்யர் (வ.வே.சு அவர்கள்)  பாரதியார், சீனிவாச்சாரியார் முதலியோர் அரவிந்தர் வீட்டுக்குச் சென்று பேசத் தொடங்கினால் பொழுது போவதே தெரியாது. மாலை நான்கு
மணிக்கு பேச ஆரம்பித்தால் இரவு பத்து மணி வரைக்கும்  வேறு சிந்தனையே இருக்காது. சாப்பாட்டைப் பற்றிக் கவலை எதற்கு?'  என்று வ.ரா. சொல்லும் பொழுது நமக்கும் அந்த கூட்டத்தோடு இருந்த உணர்வு தோன்றும்.

பாண்டிச்சேரிகாரர்களுக்கு புஷ் வண்டியைப் பற்றித் தெரியும்.   இப்பொழுதெல்லாம் பரவலாகத் தென்படும் ஷேர் ஆட்டோ மாதிரி தான்.  புதுவை புஷ் வண்டிகள் சிலதுக்கு மூன்று சக்கரங்களும், சிலவற்றிற்கு நான்கும் இருக்கும்.  இந்த புஷ் வண்டிக்காரர்களுக்கு பாரதியாரைப்  பார்த்து விட்டால் பரமானந்தமாக இருக்கும்.  பாரதியாருக்கு முன்னே வண்டியை நிறுத்தி அவர் ஏறிக்கொள்ளாமல் விடமாட்டார்கள்.  போக வேண்டிய இடத்திற்கு போய்ச் சேர்ந்ததும்  பாரதியார் காசு கொடுத்தால் வாங்க மாட்டார்களாம்.

"என்னத்துக்குங்க எனக்குக் காசு?" என்பான்.

"ரூபாய் வேண்டுமோ?" என்று சொல்லி பாரதியார் சிரிப்பார்.

"எதுக்குங்க, ரூபாய்?"

புஷ் வண்டிக்காரனுக்குக்  கட்டிக் கொள்ள துணி வேண்டும்.   சிறிது நேரம் பாரதியாரும்  அவனுடன் சம்பாஷணை சல்லாபம் செய்வாராம்.   தான் மேலே போட்டுக் கொண்டிருப்பது  பட்டாயிருந்தாலும் சரி, கிழிந்த அங்கவஸ்திரமாக இருந்தாலும் சரி, சரிகை துப்பட்டாவாக இருந்தாலும் சரி, அது அன்றைக்கு புஷ் வண்டிக்காரனுக்கு போய்ச் சேரும்.  பாரதியாருக்கு அங்கவஸ்திரமில்லையே என்று பரிவு  கொண்ட நண்பர்  யாரேனும் அவருக்கு புதிய அங்கவஸ்திரம் கொடுக்க பாரதி வழியாக அது புஷ் வண்டிக்காரனுக்குப் போய்ச் சேருவது வாடிக்கையான ஒன்று.  அவர்களிடம் பாரதியாருக்கு அளவுகடந்த அன்பாம்.

இதெல்லாம் எப்படித் தெரிந்தது என்று கேட்காதீர்கள். எல்லாம் வ.ரா.  சொல்லித் தான்.

(வளரும்)

படங்கள் அளித்த நண்பர்களுக்கு நன்றி.

Sunday, March 11, 2018

சுஜாதாவைத் தொடர்ந்து....

புதிய பகுதி:

                                ஆரம்பித்து வைக்கும் முன்னுரை             

நாம்    நினைப்பதை எப்படி வார்த்தைகளில் பிறருக்குத் தெரிவிக்கிறோம்  என்பது மிகப் பெரிய கலை.   அதனால் தான் பேச்சுக்கலை அரசியல்வாதிகளுக்கு மிகப் பெரிய  வரப்பிரசாதமாய் அமைந்திருக்கிறது.   அரசியல்வாதிகளால் வெகுதிரள் மக்களுக்கு  பலன் கிடைக்கிறதோ இல்லையோ, அது பெரிய விஷயமில்லை,  பேசத்தெரிந்திருந்தால் போதும் அவர் தன் ப்ரொபஷனில் ஜெயித்து விடுவார் என்று நிச்சயமாய் சொல்லி விடும்  அளவுக்கு அரசியல் உலகில் பேச்சுக்கலை வெற்றிகரமாக வலம் வருகிறது.                                                                                                     

பேச்சுக்கலையைப் போலத் தான் எழுதுகலையும்.  வாசகர்கள் ரசித்துப் படிக்கிற மாதிரி எழுதத் தெரிந்தால் போதும்,  இந்தத் துறையில் வெற்றிக்கொடி நாட்டி விடலாம் என்பது வாசிப்புலகில் பலர் ஏற்றுக்  கொள்கிற கருத்தாகியிருக்கிறது.

'வாசகர்கள் ரசிக்கிற மாதிரி' என்பதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.

1.  வாசகர்கள்  பொதுவாக ரசிக்கக்  கூடியவைகள் என்று சிலது இருக்கின்றன.  (உ-ம்)  'காதல்' போன்ற இனக்கவர்ச்சி விஷயங்களை கையாளுகிற  விதத்தில் கையாளுகிற மாதிரி எழுதுவது,  எதை எழுதினாலும் அதல் நகைச்சுவை கலந்து  எழுதுவது என்பது மாதிரி சில விஷயங்கள்  இருக்கின்றன. இந்த மாதிரி சில சொக்குப்பொடிகளைத் தூவி வாசிப்பவர்களை மயக்கவும் செய்யலாம்.

2.  இரண்டாவது தான் எழுதுவதை வாசகர்கள் ரசிக்கிற மாதிரி எழுதுவது.  வாசகர் பிடிக்குத் தான் போகாமல் தன் பிடிக்கு வாசகர்களை வளைத்துப் பிடிப்பது.  பிடித்த பிறகு தன் ரசிப்புகளை வாசகர்களின் ரசிப்பாக்குவது.

 இந்த இரண்டாவது சொன்ன விஷயத்தில்   எழுத்தாளர் சுஜாதா சமர்த்தர். அவர் அவரது லான்ட்ரி கணக்கை எழுதினாலும்  சுவைபட எழுதுவார் என்பது தெரிந்த விஷயம்  சொல்லப்போனால் சுஜாதாவின் வெற்றியே எழுதுகலையில் துறைபோகிய ஞானத்துடன் தனக்குப் பிடித்ததைச் சொல்லி அதைக் கையாண்ட ரகசியத்தில் அடக்கம்.

இந்த விஷயத்தில் தமிழ் எழுத்துலகில்  சுஜாதா ஒரு  துருவ நட்சத்திரம்.  தனக்கு முன்னாலும் பின்னாலும் தன்னைப்போல் பிரிதொருவர் இல்லாமல் தனித்த நட்சத்திரமாய் ஜொலித்த  தனித்தன்மையான ஆளுமை கொண்ட  தமிழ் எழுத்தாளர்.

அதனாலேயே  தமிழ் எழுத்துலகின்  அவரது இனிய வாசகர்களுக்கு அவர் வாத்தியார் ஆனார்..  பத்திரிகைகளில் கதை  எழுதுவது  தான் எழுத்தாளர்களின் வேலை என்ற நிலையை மாற்றி தாயினும் சாலப்பரிந்து தன் அனுபவத்தில் தான்  பெற்ற கல்வியை தனது அருமை வாசகர்களுக்கும் புகட்டிய  விநோதமான வாத்தியார் அவர்.

எந்தத் துறையிலும் வெற்றி ஒரு போதை.  அந்தப் போதையிலிருந்து விலகத் தெரிந்தவர்கள்,  செய்யும் காரியங்களில் ஒரு தார்மீக பலத்தைப் பெற்றிருப்பார்கள்.  விலகத் தெரிந்திருந்தாலும் சில நிர்பந்தங்களினால் சில சுமைகளை ஏற்க நேரிடவும் கூடும்.   யார் யாரை உபயோகப்படுத்திக்  கொள்கிறார்கள் என்பதின் அடிப்படையில் வேண்டாத சுமைகளையும் ஏற்க நேரிடும்.

அப்படி வேண்டாத சுமைகளாக பத்திரிகைகளின் விருப்பத்திற்கும்  அந்தந்த பத்திரிகைகளின் வாசக வட்ட   எதிர்பார்ப்புகளுக்கும்  ஏற்ப எழுத வேண்டிய நிர்பந்தங்களும் அவருக்கு ஏற்பட்டதை புரிந்து   கொள்ள முடிகிறது. இருந்தும்   பொழுது போக்கு வாசகர்களையும் அணைத்துக்   கொள்கிற விதத்தில் தன் படைப்புகளை வார்த்தெடுத்தது தான் அவரது அசாத்தியமான சாமர்த்தியம்.

சுஜாதாவுக்கென்றே தனித்த ஒரு பாணி உண்டு.  அந்த பாணியை அவருக்கு முன்னால்  நடந்தவர்களின் பாணியாக  இல்லாமல் வெகு ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டது மட்டுமல்லாமல்,  பின்னால் வந்தவர்களும் தன் அளவுக்குத் தன் பாணியை கைக்கொள்ள முடியாத அளவுக்கு தனக்கே உரித்ததாக அமைத்துக் கொண்ட சிறப்பு சுஜாதாவுக்கு உண்டு.

தனக்கு அறிமுகமான அறிவியல் உலகையும்  தமிழ் மரபுக்கென்றே வாய்த்த ஞானச்செல்வங்களையும் சம அளவில் கலந்து பிசைந்து தன் ரசவாத எழுத்தில் புதைத்து எளிமையான கட்டுரைகளாய் தனது வாசகர்களுக்கு அவர் பரிமாறிய நேர்த்தி  அவருக்கான நமது நன்றியாய் நிலைத்து நிற்கிறது.

அறிவியல் உலகு நாள்தோறும் தன்னுள் வளர்ச்சி கொள்வதையே விஞ்ஞான உண்மையாய் கொண்ட ஒன்று.  ஞான மரபுப் புதையல்களோ அவற்றின் விழுமிய நெறிகளைக் கற்கக்கற்க புதிய கல்வியாய் நம்முள் புதைந்து நம் செயல்பாடுகளில் மாற்றங்களை விளவிக்க சக்தி கொண்டதாய் திகழ்வது.  இந்த இரண்டையும் கலந்து பிசைந்து தனக்கே உரிய பாணியில்  சுஜாதா சொன்ன விஷயங்கள் சுஜாதாவோடு போய் விடக் கூடாது என்பது தான் இந்தத் தொடர் பதிவுகளுக்கான நோக்கம்.

அதனால் சுஜாதா எழுதிய விஷயங்களில் சுஜாதைத்  தொடர்ந்து அவர் விட்ட இடத்திலிருந்து சொல்ல நாம் முயற்சிப்போம்.  ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதிய விஷயங்களின் தொடர்ச்சியாய் காலத்தின் வளர்ச்சிப் போக்கில் அந்தந்த விஷயங்களில் நாம் கற்றுக் கொண்டதை அலசுவோம்.  இதுவே சுஜாதாவுக்கான பெருமையும் ஆகும்.

வழக்கமான ஓரிரு வரி பின்னூட்டங்களை மறந்து விடுங்கள்.   சுஜாதா சொன்ன விஷயங்களில் அவர் சொன்னதற்குத் தொடர்ச்சியாய் ஒரு கலந்துரையாடல் போலக் கலந்து கொள்ளுங்கள்.

ஒருவர் சொன்னதைத் தொட்டோ, இல்லை சுஜாதா சொன்னதின் நீட்சியாகவோ கருத்துக்கள் அமைந்து அவற்றை அலசும் போக்கில் உங்கள் கருத்துக்கள் நீண்டால் சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' கட்டுரைகளின் பிற்கால தரிசனமாய்  அமையும்.

வாருங்கள், நண்பர்களே!  கலந்துரையாடலைத் தொடர வாருங்கள்!


கட்டுரை-- 1

றிவியலில் முக்கியமான கேள்விகளில் ஒன்று மனித குணங்கள்  உருவாவது  பிறப்பிலா, வளர்ப்பிலா என்கிற கேள்வி.

சென்ற இருபதாம் நூற்றாண்டின் பாதிவரை விஞ்ஞானிகள் 'எல்லாமே சூழ்நிலை தான்.  சூழ்நிலை சரியாக அமைந்தால் ஒரு நல்ல மனிதனை உருவாக்க முடியும்.   பிரச்னையே இல்லை' என்று நம்பினார்கள்.  இந்த நம்பிக்கை டி.என்.ஏ. ஆராய்ச்சி வலுப்பட்டதும் கொஞ்சம் பின்வாங்கி விட்டது.   மெல்ல மெல்ல பிறப்பில் நம் வியாதிகள் மட்டுமல்ல குணாதிசயங்களின் காரணங்களும் இருக்கின்றன'  என்று கண்டு கொண்டு  இருக்கிறார்கள்.

பல ஈக்கள், எலிகளிலிருந்து   மானுட இரட்டையர்கள் வரை கவனிக்கும் பொழுது பல ஆச்சரியங்கள் வெளிப்பட்டிருக்கின்றன.  ஒரே தோற்றமுள்ள இரட்டையர்கள் ஒரே சமயத்தில் பிறந்து தோற்றத்தில் வேறுபட்ட  Fraternal twin-- இரட்டையர்கள் இரு வகையினரையும் ஒரே சூழ்நிலையிலும் வேறுபட்ட சூழ்நிலையிலும் வளர்த்து கிடைத்த விவரங்களிலிருந்து தெரியும் தகவல் -- நம் பிறப்பு, குணாதிசயங்களை முப்பதிலிருந்து எழுபது சதவீதம் வரை நிர்ணயிக்கிறது என்பதே.

ஆனால் ஒரு குணத்திற்கு ஒரு ஜீன் என்று சொல்ல முடியவில்லை.  ஒரு வியாதிக்கு  ஒரு ஜீன் என்று சொல்ல முடிகிறது.   உதாரணம் சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ்.  ஆனால் குடிப்பழக்கத்திற்கு என்று ஒரு ஜீன் இருக்கிறதா, கோபத்திற்கு  ஒரு ஜீன் உண்டா?--  இப்படி திட்டவட்டமாக சொல்ல முடியவில்லை. 

இந்தப் பழக்கங்களுக்குக் காரணம் பிறப்பும் வளர்ப்பும் கலந்தது என்று  சொல்கிறார்கள்.   இருபத்து மூன்று க்ரோமோசோம்களில்   எந்த க்ரோமோசோம் எந்த குணத்தை நிர்ணயிக்கிறது என்பதை  குத்து மதிப்பாகத் தான் சொல்ல முடிகிறது.   உதாரணம்:   'ஆட்டிசம்'  என்னும் ஒரு  மனோவியாதிக்குக் காரணம் க்ரோமோசோம் என்பது  தெரிகிறது.

இந்த ஆராய்ச்சி ஆரம்ப நிலையில் இருக்கிறது-- மாலிக்யுலர் பயாலஜியின் உதவியுடன்.   இந்த தகவல் வங்கி சேரச் சேர  எதிர்காலத்தில் ஒரு ஆள் உங்களைக் கடக்கும் போது காரணமில்லாமல் விரல்களை முறுக்கி  முஷ்டியை உயர்த்தி  '....த்தா டேய்'   என்றால், உன்னுடைய பதிமூன்றாவது க்ரோமோசோம் சரியில்லைப்பா...' என்று சொல்ல முடியும்  என எதிர்பார்க்கிறார்கள்.


                                                                                                        ---  சுஜாதா



படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.

Sunday, March 4, 2018

பாரதியார் கதை -- 13

                            அத்தியாயம்-- 13


ந்திய விடுதலைப் போராட்டத்திற்கான உந்து சக்தியாக இருந்தது கர்ஸான் காலத்திய வங்காளப் பிரிவினையே.  வங்காளப் பிரிவினை ஏற்றி வைத்த இந்திய சுதந்திரத்திற்கான தீபம் எந்த அரசியல் சுழற் காற்றிலும் அணையவில்லை.  மேலும் மேலும் பிரித்தினிய அரசுக்குக்கு எதிராக மக்கள் எழுச்சியாக கிளர்ந்து ஜொலித்துக் கொண்டே இருந்தது.

அந்தப் போராட்டங்களின் எழுச்சியை கொஞ்சமாகவேனும் மட்டுப்படுத்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் படாத பாடு பட்டனர்.   இந்தியர்களுக்கு பெயருக்காகவேனும் சில உரிமைகளை வழங்க வேண்டும் என்று 1909-ல் ஐக்கிய ராஜ்யத்தின் நாடாளுமன்றத்தில்  Indian Councils Act - என்பதான சட்டம் ஒன்று இயற்றப் பட்டது.  இந்த சட்ட ஆக்கத்திற்கான பரிந்துரைகளை  அந்நாளைய இந்திய துறைச் செயலாளர் ஜான் மார்லேவும் இந்திய வைஸ்ராய் மிண்டோவும் இணைந்து தயாரித்திருந்த அறிக்கையின் அடிப்படையில் சட்டம் நிறைவேற்றப் பட்டது.   அதனால் Indian Councils Act-ல் பரிந்துரைக்கப்பட்ட சீர்த்திருத்த நடவடிக்கைகள்  "மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள் என்று வரலாற்றில் பெயர் கொண்டது.

இந்த சீர்திருத்த நடவடிக்கைகளால் அதுவரை நியமன அடிப்படையில் இருந்த உறுப்பினர் தேர்வுகள்  தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றாயிற்று.  இதனால் பல்வேறு அமைப்புகளில் இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடியது.  இது   இந்த சட்டத்தின் முக்கிய அம்சம்.

அரவிந்தர் கல்கத்தாவில் இருந்த பொழுது நடத்திய பத்திரிகை 'கர்மயோகி'. அந்தப் பத்திரிகை வெளிவருவதில் சில காரணங்களால் சுணக்கம் ஏற்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது.    அரவிந்தரும் புதுவை வந்து விடவே,  புதுவையில் பாரதியின் பார்வையில் 'கர்மயோகி' பத்திரிகை புனர் ஜென்மம் எடுத்தது.

மிண்டோ மார்லி சீர்த்திருத சட்டத்தினால் அரவிந்தர் 'கர்மயோகி'யின்  முந்தைய இதழ்களில் சில கருத்துக்கள் தெரிவித்திருந்தார்.  சீர்திருத்தங்கள் என்ற பெயரில்  சிறுசிறு விஷயங்களில் கட்டுப்பாடுகளை நெகிழ்த்துவது முக்கியமான விஷயங்ளுக்கான தீர்வுகளை மறக்கடிப்பதற்கான ஏற்பாடு என்பது மாதிரியான அரவிந்தரின் கருத்துக்களின் அடிப்படையில் பாரதியார் தீவிரமாக 'கரிமயோகி'யில் கட்டுரைகள் எழுதினார்.

ஏற்கனவே விவேகானந்தர் 'பதஞ்சலி யோக
சூத்திரத்தை' ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருந்தார்.  பாரதியாரோ இன்னும் செழுமைபடுத்தி பதஞ்சலி யோக சூத்திரத்தின் 'ஸமாதிபாகம்' என்னும் முதல் பகுதியை சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு நேராக மொழி மாற்றம் செய்திருக்கிறார்.  'கர்மயோகி'யில் பதஞ்சலி யோக சூத்திரத்திற்காக பாரதியின்  தமிழாக்கம் தொடராக வெளிவந்தது.

அநேகமாக மாலை நேரங்களில் கலவை சங்கரன்  செட்டியார் வீட்டிற்கு  அரவிந்தரை சந்திப்பதற்காக பாரதியார் செல்வதுண்டு.  நேரம் போவது தெரியாமல் இருவரும் பல விஷயங்கள் பற்றி பேசிக்  கொண்டிருப்பார்களாம்..   இது பற்றி வ.ரா. சுவையாக வர்ணிப்பதை இங்கு எடுத்தாளுவது பொருத்தமாக இருக்கும்.   இந்த தேசத்து சுதந்திர போராட்ட காலத்து தலைவர்களின் உரைகள் எப்படியெல்லாம் இருக்கும் என்று இந்தக் காலத்து வாசகர்கள் தெரிந்து ரசிக்கவும் வாய்ப்பாக இருக்கும் என்பதினால் வ.ரா.வின் எழுத்துக்களை அப்படியே இந்த  இடத்தில் எடுத்தாளுகிறேன்.

'திலகர் சம்பாஷணையில் பொருளும் சக்தியும் இருக்கும்;  ஆனால் வழவழப்பும், இனிப்பும்,   நகைச்சுவையும்   இருக்காது.  தோழர் கபர்தேயின் பேச்சில் வியக்கத்தக்க  நகைச்சுவையும்,  சிங்காரமும்   செழித்து இருக்கும்.  சுரேந்திர நாதரின்  பேச்சே   பிரசங்கம்.  விபின் சந்திரபாலரின் பேச்சில்  கசப்பும்,  சுளிப்பும் கலந்திருக்கும்.  ஆனால், சக்தியும் நவீனமும் கூட இருக்கும்.  கோகலேயின் பேச்சு தங்கக் கம்பி இழை சன்னப் பேச்சு.  பிரேஸ்ஷா மேத்தாவின் பேச்சு  தடியடி முழக்கம்.  லஜபதிராய், அமரிக்கையுடன், முன்னெச்சரிக்கை நிறைந்த  பேச்சு பேசுவார்.  ஜி. சுப்ரமணிய அய்யர் விஸ்தாரமாகப் பேசுவார்.  சேலம் விஜயராகவாச்சாரியார் சட்ட மேற்கோள், சரித்திர மேற்கோள் இல்லாமல் பேசவே மாட்டார்.



'பாரதியார் --அரவிந்தர் சம்பாஷனைகளில் நவரசங்களும் ததும்பும்.  ஒழுகும்.  கவிதை, சரித்திரம், தத்துவம், அனுபவம், கற்பனை, ஹாஸ்யம் குறுக்கு வெட்டு, விஸ்தாரம், உண்மையை வெளிப்படுத்தும் ஆவல், அபரிதமான இலக்கியச் சுவை, எல்லையில்லாத உடல் பூரிப்பு-- எல்லாம் சம்பாஷனையினிடையே இடைவிடாது நர்த்தனம் செய்யும்.  அந்தக் காலத்திலே குறுக்கெழுத்து நான் பழகிக் கொள்ளவில்லையே என்று வருந்துகிறேன்.  சம்பாஷனையில் சிற்சில கட்டங்களும் குறிப்புகளும் தான் இப்போது என் நினைவில் இருக்கின்றன.  தினசரி டயரி எழுதும்  பழக்கம் என்னிடம் இல்லை.  அளவற்ற நஷ்டம்.  இப்போது என்ன செய்வது?..

புதுச்சேரித்  தேசபக்தர்களுக்குள் வ.வே.சு. அய்யரைப் போல் நூல் பயிற்சி உள்ளவர்கள் யாருமே இல்லையெனச் சொல்லலாம்.  அபாரமாகப் படிப்பார். வீரரகளின் சரித்திரம், இலக்கியம், யுத்த சாஸ்திரப் புத்தகங்கள், பழைய தமிழ்க் காவியங்கள், பிற நாட்டு நல்லறிஞர்களின் நூல்கள் இவைகளை அய்யர் இடைவிடாது படித்துக்  கொண்டிருப்பார்.  கஸ்ரத் செய்வதில் அவருக்கு ரொம்ப  ஆவல்.  நீந்துவார். ஓடுவார். பாரதியாருக்கு இவைகளில் எல்லாம் நிரம்ப ஆசை தான்.  ஆனால், செய்வதேயில்லை. எல்லாவற்றையும் பக்கத்திலிருந்து கொண்டு உற்சாகத்துடன்  வேடிக்கை பார்ப்பார்.


-- என்று வ.ரா. வர்ணிப்பதையெல்லாம் வாசித்துக் கொண்டே இருக்கலாம் போல அவர் எழுதுவதில் ஒன்றிப் போவோம்.

திரைப்படங்களின் பாதிப்பு நம்மில் மிகப்  பெரிது.  பாரதியார் என்றால் எஸ்.வி. சுப்பையா அவர்கள் நினைவும், கப்பலோட்டிய  தமிழனில் அவர் நடித்த பரபரத்த நடிப்பும் தான் பொதுவாக நம் நினைவுக்கு வரும்.

இதோ பாரதியார் எப்படியிருப்பார் என்று நம் கண்முன்  கொண்டு வந்து வ.ரா. நிறுத்துகிறார், பாருங்கள்!..

பாரதியார் சுந்தர ரூபன்.  மாநிறம்.  ஐந்தரை அடிக்குக் கொஞ்சம் அதிகமான உயரம்.  அவரது மூக்கு மிகவும் அழகான மூக்கு.   அவருடைய கம்பீரமான முகத்துக்கு அளந்து அமைக்கப் பட்டிருப்பதைப் போலிருக்கும்  அந்த அழகிய  நாசி,  ஸீஸர், ராஜகோபாலாச்சாரியாருடையது போல கருட மூக்கு அல்ல.  ஸீஸர் மூக்கு, நடுவில் உயர்ந்து, நுனியில் கூர்மையாகி கண்டவர்களைக் கொத்துவது போலத் தோன்றும்.  பாரதியாரின் மூக்கு கடைசல் பிடித்தது  போல இருக்கும்.   நீண்ட நாசி.  அந்த நீளத்தில் அவலட்சணம் துளி கூட இருக்காது.

பாரதியாரின்  கண்கள் செவ்வரி படர்ந்த செந்தாமரைக் கண்கள்.   இவைகளின் நடுவே, அக்னிப் பந்துகள் ஜொலிப்பதைப் போலப் பிரகாசத்துடன்  விளங்கும்.   அந்தக் கண்களை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் தெவிட்டாது.

அவரது நெற்றி பரந்த நெற்றி.  நெற்றியின்  இரண்டு  கங்குகளிலும், நிலத்தைக் குடைந்து  கொண்டு போயிருக்கும்  கடலைப் போல முகம் தலைமயிரைத்  தள்ளிக் குடைந்து  கொண்டு போயிருக்கும்.     கங்குகளின்   மத்தியில், முகத்தின் நடு  உச்சியில், மயிர் கொஞ்சம் நிமிர்ந்து நிற்கும்.  நெற்றியிலே இந்த சேர்மானம் அவருக்கு வர்ணிக்க முடியாத அழகை கொடுத்தது.   பேர் பாதிக்கும் அதிகமாக  அவர்  தலை  வழுக்கை.

இடுப்பிலே 'தட்டு சுற்று' வேஷ்டி.   சாதாரணமாய் சொல்லப்படும் 'சோமன் கட்டு' அவர் கட்டிக் கொண்டதில்லை.  உடம்பிலே எப்பொழுதும் ஒரு  பனியன்.  பனியனுக்கு  மேல் ஒரு ஷர்ட்டு.  அது கிழிந்திருக்கலாம்.  அநேகமாக பித்தான்  இருக்காது.  இதுக்கு மேல் ஒரு  கோட்டு.  அதற்கு மரியாதைக்காக ஒரு பித்தான் போட்டுக் கொள்வார்.

ஷர்ட்டின்  இடப்பக்கப் பித்தான்  துவாரத்த்தில் ஏதாவது ஒரு  புதிய  மலர் செருகி வைத்துக்  கொள்வார்.  ரோஜா, மல்லிகைக்கொத்து  முதலிய மணம் கமழும் பூக்கள் அகப்பட்டால்  நல்லது தான்.  இல்லாவிட்டால் வாசனை இல்லாத புதுப்பூ எது அகப்பட்டாலும்  போதும்.  வேப்பம்பூவாய்  இருந்தாலும்  பரவாயில்லை.   'நாள் மலர்' ஒன்று அந்த பித்தான் துவாரத்தில் கட்டாயமாக இருந்துதான் ஆக வேண்டும்.

இடக்கையிலே ஒரு நேட்டுப்  புத்தகம், சில காகிதங்கள், ஒரு புஸ்தகம்-- இவை கண்டிப்பாய் இருக்கும்.  கோட்டுப் பையில் ஒரு பெருமாள் செட்டி பென்ஸில் இருக்கும்.  பவுண்டன் பேனா அவரிடம் தரிப்பது இல்லையோ என்னவோ, பவுண்டன் பேனாவினால் அவர் எழுதி, நான் பார்த்ததில்லை. எப்பொழுதும் பென்ஸில் எழுத்துத் தான்.

எழுத்து குண்டு குண்டாக இருக்கும்.  ஒரு எழுத்தின் மேல் இன்னொரு எழுத்து படாது;  உராயவும் உராயாது.  க-வுக்கும் ச-வுக்கும் வித்தியாசம் இல்லாமல் நம்மில் பலர் எழுதுகிறார்களே, அத்தகைய அலட்சியப் புத்தியைப் பாரதியார் எழுத்தில் காண முடியாது.  ஒற்று எழுத்துக்களுக்கு மேல் நேர்த்தியான சந்தனப் பொட்டைப் போல புள்ளி வைப்பார்.

உடை விஷயத்தில் ஒன்று  பாக்கி.  வடநாட்டு சீக்கியர்களைப் போல முண்டாசு கட்டிக் கொள்வதில் அவருக்கு ஆசை அதிகம்.  அந்தத் தலைப்பாகையுடன் அவர் ஹிந்துஸ்தானி பேசினால், அவரைத் தமிழன் என்று யாருமே சொல்ல முடியாது;  அவ்வளவு தெளிவான உச்சரிப்பு.

பாரதியார் இடக்காலைக் கூசாமல் தரையில் வைக்க மாட்டார்.  இடக்கால் பாதத்தில் அவருக்கு முக்கால்  பைசா அகலத்தில் ஆணி  விழுந்திருந்தது. சில சமயங்களில் கவனக் குறைவால் அவர் இடக்கால் கல்லிலோ வேறு கடினமான பொருளிலோ  பட்டு விட்டால், அவர் துடிதுடித்து அந்த இடத்திலேயே சிறிது நேரம் உட்கார்ந்து விடுவார்.

பாரதியார்  குனிந்து நடந்ததே கிடையாது.  "கூனாதே, கூனாதே..." என்று அடிக்கடி இளைஞர்களிடம் சொல்லுவார்.  கொஞ்சங்கூட சதைப்பிடிப்பே இல்லாத மார்பை, பட்டாளத்துச் சிப்பாய் போல முன்னே தள்ளித் தலை நிமிர்ந்து பாடிக் கொண்டே நடப்பதில் பாரதியாருக்கு ரொம்பப்  பிரியம்.

"லா மார்ஸேய்ஸ்,  லா ஸாம்பர் தே மியூஸ்.." என்ற பிரஞ்சுப்  படைப் பாட்டுகளைப்  பாடிக்கொண்டு, அவைகளின் தாளத்திற்கேற்ப நடப்பதில் பாரதியாருக்கு பிரம்மானந்தம்;  இந்தப்  பாட்டுக்களின் மெட்டுகளைத் தழுவி தமிழில் பல பாட்டுகள் பாட வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருப்பார்.  இரண்டொரு பாட்டுகள் பாடியுமிருக்கிறார்.

பாரதியார் இருக்கும் இடத்தில் கூட்டத்திற்கு  ஒரு நாளும் குறையிருக்காது.. வெளியே புறப்பட்டால் இரண்டொருவரேனும் அவரைப் பின் தொடர்ந்து கூடவே செல்லாமலிருப்பதில்லை.   ஆனால் எட்டத்திலேயே போய்க்  கொண்டிருக்கும் ரகசியப் போலீஸாரைப் பற்றிக் குறிப்பிடத் தேவையா?....

-- பாரதியாருடன்  நெருங்கிப் பழகிக்  கூடவே இருந்து களித்த வ.ரா. அவர்களின் அனுபவப் பகிர்வாக பெரும்பாலும் இந்த அத்தியாயச் செய்திகள் வாசிப்பவர்களின் ரசனைக்காக  எடுத்தெழுதப்பட்டன.

பாரதியாரின் புதுவை வாழ்க்கையைத்  தொடர்ந்து பார்ப்போம்.


(வளரும்)


படங்கள் உதவிய  அன்பர்களுக்கு நன்றி.




Related Posts with Thumbnails