மின் நூல்

Sunday, October 30, 2011

பார்வை (பகுதி-6)

                    அத்தியாயம்--6

டாக்டர் சாந்தி அமெரிக்கா போய்த் திரும்புவதற்குள் தேவையான அத்தனை டெஸ்ட்டுகளையும் எடுத்து ரெடியாக வைத்திருந்தார்கள். சாந்தியும் அமெரிக்காவில் இது விஷயத்தில் பிரபல மருத்துவர்களை கலந்தாலோசித்து இருப்பார் என்று தெரிந்தது. அவர் இந்தியா திரும்பிய அடுத்த நாளே எனக்கான தீவிர சிகித்சைகள் ஆரம்பமாகி விட்டன. உள்ளூர் வெளி ஆசுபத்திரிகளிலிருந்து வேறே நாலைந்து பிரபல சர்ஜன்கள் வந்திருப்பதாக சுசீலா சொன்னாள்.

எனக்கு நீரிழிவு நோய் இல்லாதது நல்லதாகப் போயிற்று. சாந்தியே வியக்கும் மனஉறுதியும் சேர்ந்து கொள்ள எல்லாவிதமான சிகித்சைகளுக்கும் என்னை உட்படுத்திக் கொள்வதில் சிரமம் இல்லாது போயிற்று. நல்ல தெரிந்த மருத்துவர், சிறப்பான மருத்துவமனை, நல்ல சிகித்சைகள் என்று அமைந்ததில் என் உள்ளத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் போயிற்று. இதனால் பார்வை இல்லையே தவிர மற்றபடி ஆரோக்கியமான சூழ்நிலையில் உடல் வளப்பம் கூடியது.

சுசீலா என்னிடம் சாந்தி பற்றிச் சொல்கையில் பாவமாக இருக்கும். 'சாந்திக்கு எந்நேரமும் உங்கள் குறையைப் பற்றியே நினைப்பு தாங்க. ராத்திரி பகல் வித்தியாசம் பார்க்காம நிறைய மெடிகல் ஜர்னல்கள் படிப்பதாகவும் இதற்கு ஏதாவது தீர்வு கண்டு விடத் துடிப்பதாகவும்' சொல்வாள்.

இரு மாத சிகித்சைக்குப் பின் ஒருநாள் நானே சாந்தியிடம் நேரடியாகக் கேட்டு விட்டேன். "டாக்டர்! எனக்காக இவ்வளவு கஷ்டப்படுகிறீர்களே?.. உங்களுக்கும் எவ்வளவு சிரமம்?.."

"அங்கிள்! இதுவே என் தொழில் இல்லையா?.. அதனாலே, சிரமம் என்று கிஞ்சித்தும் இல்லை; ஆயிரத்தில் ஒருவருக்குத் தான் இந்தளவுக்கு பார்வை நரம்புகள் சேதமடையும். அதில் நீங்கள் ஒருவராகப் போய் விட்டீர்கள். அதான் என் வருத்தம். எப்படியாவது உங்கள் குறையை நிவர்த்தி செய்து விடவேண்டுமென்று பார்க்கிறேன். அதான்.."

"ரொம்ப சரி. ஆனா இப்போ என் நிலைமை என்ன தெரியுமா, டாக்டர்?"

"சொல்லுங்க.." என்று சொன்ன சாந்தியின் குரலில் ஆர்வம் நிறைய இருப்பதாக எனக்குப் பட்டது.

எச்சில் கூட்டித் தொண்டையை ஈரப்படுத்திக் கொண்டு தொடர்ந்தேன். "எனக்கு அதை குறையாக உணராத மனசு வந்து விட்டது, டாக்டர்!" என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னேன்.

"என்ன, அங்கிள், சொல்றீங்க.. எனக்குப் புரியலே."

"புரியற மாதிரி சொல்ல முயற்சிக்கிறேன், டாக்டர்! நான் சொல்றது குழந்தைத் தனமா இருந்தாலும், அது என் உணர்வுகள்னும், என் பார்வைக்காக இவ்வளவு சிரமப்படற உங்ககிட்டே அதைச் சொல்லாம, வேறு யாருகிட்டே சொல்லியாகணும் னும் எனக்குத் தோண்றதாலே, ரொம்ப யோசனைக்குப் பிறகு இன்னிக்கு சொல்லணும்னு தீர்மானிச்சிட்டேன்.." என்று நான் சொன்னபோது, "ஓ..எஸ்.. வெல்கம்! சொலுங்க, அங்கிள்" என்று டாக்டர் சாந்தி என்னை உற்சாகப்படுத்துகிற மாதிரி சொன்னார்.

அவர் கொடுத்த உற்சாகத்தில் தொடர்ந்தேன். "டாக்டர்! ஆரம்பத்தில கண் பார்வை போன போது ஐயோன்னு இருந்தது வாஸ்தவம் தான். இனிமேல் இந்த உலகத்தில் ஒண்ணையுமே நான் பாக்க முடியாதாங்கற இயலாமையை உணர்ந்த நேரத்தில் அந்த எண்ணம் இருந்தது உண்மை தான்." என்று சொன்னவன் மேற்கொண்டு தொடரக் கொஞ்சம் தயங்கினேன்.

சுசீலா, டாக்டர் இரண்டு பேருமே ஏதும் பேசாமல் நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

"ஆனா, நாளாக நாளாக, குறிப்பா உங்க ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சதும் அது கொடுத்த சக்தியோ என்னவோ தெரியலே.. கொஞ்சம் கொஞ்சமா என் மனநிலை மாறிட்டது. சொல்லப்போனா, பார்வைங்கறது இல்லைங்கறதை சகஜமா, அது ஒரு குறையா நினைக்காத மனப்பாங்கு வந்திட்டது. நான் சொல்ல நினைக்கறதை சரியாச் சொல்லலைன்னு நெனைக்கிறேன்."

"ஏங்க! மனத்தளர்ச்சி அடையாதீங்க.. சாந்தி உங்களுக்காக ரொம்ப கஷ்டப்படறா.
பார்வை கிடைச்சிடும் நம்பறா.." என்றாள் சுசீலா.

"கிடைக்காட்டாலும் பரவாயில்லைங்கறத்துக்காகச் சொல்ல வர்றேன்"ன்னு நான் சொன்ன போது,

"என்ன சொல்றீங்க?" என்று கேட்ட சுசீலாவின் குரலில் தடுமாற்றம் இருந்தது.

"டாக்டர்.. மனசார ஒண்ணு சொல்றேன். நான் சொல்லப் போறது உங்க ட்ரீட்மெண்டின் சிறப்பில் எந்தக் குறையும் நான் கண்டுட்டதா நீங்க நினைக்கக் கூடாது.. அப்படினா சொல்றேன்."

"அப்படி ஏதாவது நினைச்சா உங்களுக்கும் எனக்கும் எந்த விமோசனமும் இந்தப் பிறவிலே கிடையாது. பாவம், அவ அவ்வளவு கஷ்டப்படறா.." என்று அழுதே விட்ட குன்றிய குரலில் சுசீலா தடுமாற,

"ஓ.கே. அதான் நானும் சொல்ல வந்தேன். டாக்டர் சாந்தியின் சாந்தி நிலையம் ஆஸ்பத்திரிக்கு வந்ததும் எனக்குப் பார்வை கிடைச்சிருச்சின்னு சொல்ல வந்தேன்." என்றேன்.

"என்னங்க சொல்றீங்க?.." என்று திகைத்துப் போன குரல் சுசீலாவிடமிருந்து வெளிப்பட்டது.

" இப்போ என்னாலே தெளிவாச் சொல்ல முடியும்னு நெனைக்கிறேன்.." என்று சொன்னவன் நிறைய பேசுவதற்கு தயாரானேன். "டாக்டர்! நீங்க மருத்துவ சாத்திரம் படிச்சவர். அதுவும் மனித உடல் அமைப்பில் கண்ங்கறதை ஸ்பெஷலா எடுத்திண்டு அந்தத் துறைலே நிறைய ஆராய்ச்சிகள் செஞ்சவர். நிறைய நோயாளிங்களுக்கு சிகித்சை செஞ்சு இழந்து போன அவங்க பார்வையை மீட்டுக் கொடுத்தவர். இவ்வளவு தெரிஞ்ச உங்க கிட்டே இந்த சப்ஜெக்ட்லே ஞானசூன்யமான நா சொல்றது தத்துபித்தான உளறலா இருந்தாலும் பொறுத்திண்டு கேட்டுக்க கேட்டுக்கறேன்"ன்று நா சொன்னப்போ, "நோ..நோ.."ன்னு அவசர்மா குறுக்கிட்டார் சாந்தி டாக்டர். "அங்கிள்! நீங்க என்ன நெனைக்கிறீங்களோ, அதைத் தாராளமாச் சொல்லலாம். மருத்துவத் துறைலே பேஷண்ட்டுகளோட ரிப்போர்ட் தான் மிக முக்கியம். பயாலஜிகல் ரிப்போர்ட்களோடு அவங்க சொல்றதை இணைச்சுத் தான் நாங்க எந்த முடிவுக்கும் வர்றோம். என்ன, ரொம்ப நோயாளிகளுக்கு தங்கள் அவஸ்தையை அவங்களாலேயே சரியாச் சொல்லத் தெரியலே. அதனாலே, சில சந்தர்ப்பங்கள்லே அதுனாலே இதுவோன்னு குருட்டாம் போக்கில் சில முடிவுகளுக்கு நாங்க வர்ற வேண்டியிருக்கு.." என்று சொன்னவர், திடீரென்று, "சாரி.. 'குருட்டாம் போக்கு'ன்னு நா அந்த வார்த்தையை உபயோகிச்சிருக்கக் கூடாது. அதுவும் கண் டாக்டரான நான் அந்த வார்த்தையைச் சொல்லியிருக்கக் கூடாது. அதுக்காக மன்னிப்புக் கேட்டுக்கறேன்" என்று சொன்ன போது அவரது மனிதாபிமானத்தில் மிகவும் நெகிழ்ந்து போய்விட்டேன்.

"அதுனாலே இந்த சமயத்திலே நீங்க என்ன உணர்றீங்களோ அதைத் தாராளமாச் சொல்லலாம்.. அது மேற்கொண்டு செய்யற ட்ரீட்மெண்டுக்கும் ரொம்பவும் உதவியா இருக்கும்" என்று டாக்டர் சாந்தி கொடுத்த லைசன்ஸில் மேற்கொண்டு துணிவோடு பேசத் துணிந்தேன். "டாக்டர்! கண்ங்கறது எதையும் பாத்து பிரதிபலிக்கிற ஆடின்னு தான் நெனைக்கிறேன். அப்படி பிரதிபலிக்கிற பிம்பம் இன்னதுன்னு பார்வைநரம்புகளின் உதவியோட மூளைக்குத் தெரிஞ்சு.." என்று சொல்ல ஆரம்பித்தவன் மேற்கொண்டு சொல்ல லேசாகத் தயங்கவே, "சொல்லுங்க.. அங்கிள்!" என்று டாக்டர் சாந்தி என்னை மேலே பேசத்தூண்டினார்.

அந்த உற்சாகத்தில் தொடர்ந்தேன். "எனக்கேற்பட்டிருக்கிற கோளாறு-- பார்வை நரம்பு கள் அதன் சக்தியை இழந்திடிச்சு, இல்லையா?.. அதனாலே மேற்கொண்டு காரியம் நடக்கலே. அவ்வளவு தானே?.. பார்வை நரம்புகள் செய்யற அந்தக் காரியத்தை என்னோட தொடு உணர்ச்சியால் பத்து பிரசெண்டாவது செய்யமுடியும், இல்லையா? அந்த பத்தை நாப்பது அம்பதுன்னு நாளாவட்டத்லே நான் உயர்த்திக்க முடியும் இல்லையா?" என்றவன் நான் உணர்வதை வார்த்தைகளில் எப்படி விவரித்தால் அது சரியாக இருக்கும் என்று யோசித்துத் தொடர்ந்தேன்..

"டாக்டர்! பிறவிலேயே பார்வை இல்லாம இருந்தாக்கூட அது பெரிசாத் தெரிஞ்சிருக்காது. ஒண்ணைப் பாத்திட்டு ரசிச்சிட்டு அந்த பாக்கியம் கிடைக்கறதுக்கு காரணமா இருந்த அந்த ஒண்ணு போயிட்டதுன்னா அது சோகமாத் தான் இருக்கும்ங்கறது எனக்குத் தெரியறது.. இராமாயணத்லே கம்பர் கூட இதைப் பத்திச் சொல்லியிருப்பார். இராமனை, விஸ்வாமித்திர முனிவர் காட்டுக்குக் கூட்டிப் போறேன்'ன்னு சொன்னப்போ, அவன் கொண்ட புத்திர சோகத்தை 'கண்ணிலான் பெற்று இழந்தாற்போல்'ன்னு சொல்லியிருப்பார். அவர் சொன்னதையே வைச்சு மேற்கொண்டு நான் யோசிச்சேன்.. பிறவிலேயே எனக்கு கண் போகலே. பாதிலே தான் இப்படி ஆயிடிச்சு. இந்த உலகத்தை இத்தனை நாள் பார்த்த பார்வை நினைவுகளா என் ஞாபகத்தில் தேங்கியிருக்கு.. அதோட வாசனை நித்யமா நெறைஞ்சிருக்கு. அந்த நம்பிக்கைலே சொல்றேன்.. அப்படி பார்வை எனக்குக் கிடைக்காமப் போயிட்டாலும் பரவாயில்லை; நான் சமாளிச்சிப்பேன்" என்று நான் நினைச்சதை ஒருவழியா சொல்லி முடிச்சேன்.

ஒரு வினாடி டாக்டரிடமிருந்தும் சுசீலாவிடமிருந்தும் பதிலே இல்லை. ஏதாவது தப்பாக, டாக்டரின் மனசை வாட்டுகிற மாதிரி பேசி விட்டேனோ என்று எனக்குத் தடுமாற்றமாக இருந்தது. இன்னொரு பக்கம் நான் நினைப்பதை சொல்லாமலும் இருந்திருக்கக் கூடாதென்று பட்டது.

அந்த சமயத்தில், "அங்கிள்!..." என்று குழைவாகக் கூப்பிட்ட டாக்டரின் குரல், ஆகப் பெரிய சக்தியாக என்னில் நம்பிக்கை ஜோதியை ஏற்றியது.


(இன்னும் வரும்)

Saturday, October 29, 2011

பார்வை (பகுதி-5)

                    அத்தியாயம்--5

"நீ சுசீலா இல்லை?" என்று சுசீலாவை முதலில் அடையாளம் கண்டுகொண்டது தலைமை மருத்துவர் தான். அவரின் பெண் குரலைக் கேட்டு, 'ஓ! தலைமை மருத்துவர் பெண் போலும்' என்று நினைத்துக் கொண்டேன்.

"ஆமாம், நீங்க?.."

"அந்த மரியாதையெல்லாம் வேண்டாம், சுசீலா.." என்று சிரித்த மருத்துவர், "என்னடி இப்படி என்னை நீ அடியோடு மறந்து போய்ட்டே?" என்று உரிமை கலந்த அங்கலாய்ப்புடன் சொன்னது எனக்குக் கேட்டது.

சுசீலாவிடமிருந்து பதிலே இல்லை. யோசிக்கிறாள் போலும். நானும் அவர் யாராயிருக்கும் என்று யோசிக்கலானேன். சுசீலாவைத் தெரிந்தவர்களில் பாதிப்பேரை எனக்கும் தெரியும்.

"சரியான 'இதுடி' நீ!" என்று தலைமை மருத்துவர் சுசீலாவைக் கிண்டல் செய்த பொழுது, "ஓ.. கண்டுபிடிச்சிட்டேன்.." என்று சுசீலா சொல்கின்ற பொழுதே, "நீங்க சாந்தி தானே?" என்று நான் கேட்டதைக் கேட்டு "குட்.. அங்கிள் கரெக்டா கண்டுபிடிச்சிட்டாரே!" என்று பதில் வந்ததில் வியப்பின் பூச்சு வெளிப்படையாக எனக்குத் தெரிந்தது.

"நானே சொல்லியிருப்பேன்; அதுக்குள்ளாற அவர் சொல்லிட்டார்!" என்று சுசீலா சொன்னாலும், அவள் தான் அவளுடைய சிறுவயது பிரியத் தோழி சாந்தி என்று நம்புவதில் சிரமப்படுவது போல குரலில் தெரிந்தது.

"எப்படி கண்டுபிடிச்சீங்க, அங்கிள்?"

"உங்கள் பேமஸ் அந்த 'இதுடி' தான் காட்டிக் கொடுதிட்டது."

"பாத்தையா.. இது கூட உனக்குத் தெரியலையே?.. அங்கிளுக்குப் பாரு. எவ்வளவு ஆப்ஸர்வேஷன் பாரு."

"அது தான் இப்போ அவருக்கு ரொம்ப உதவியாயிருக்கு.." என்று கைத்துப்போன சிரிப்பொன்றை சுசீலா உதிர்த்த பொழுது, சாந்தி அவளைத் தேற்றினாள். "கவலையை விடு. அங்கிளோட மெடிகல் ரிப்போர்ட் அத்தனையும் படிச்சிட்டேன். இங்கேயும் சில நவீன டெஸ்ட்கள் எடுக்கறதுக்கு வசதிகள் இருக்கு. நல்ல நல்ல எக்ஸ்ப்ரட் டாக்டர் டீமும் இருக்கு. புண்ணலாம் கிட்டத்தட்ட குணமாயிட்டதாலே கவலை இல்லே.. இதுக்கு மேலே பார்வை கிடைக்கறத்துக்கு நம்மாலே முடிஞ்சதைச் செய்யலாம். இறைவன் கருணையும் ஒண்ணு சேர்றச்சே எல்லாம் நல்லபடியா நடக்கும்"

"எனக்கு எல்லாமே கனவு போல இருக்கு, சாந்தி! உன்னை இங்கே பார்ப்பேன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலே. நீ இப்போ சொன்னையே இறைவன் கருணைன்னு.. அதோட முழு அர்த்தத்தை இப்போ நா உணர்றேன்".

"நானும் உன்னை எதிர்பார்க்கலே, சுசீ! ஒண்ணை நெனைக்கறச்சே தான் எனக்கு ஆச்சரியமா இருக்கு. நான் முந்தாநாளே ஒரு கான்பரன்ஸூக்காக அமெரிக்கா போயிருக்கணும். கடைசி நேரத்லே அது ஒரு வாரம் ஒத்திப்போனதாலே நாலு நாள் கழிச்சுன்னு பிளைட் டிக்கெட்டை மாத்திகிட்டேன். நேத்து தான் அங்கிள் மெடிக்கல் ரிப்போர்டைப் பாத்தேன். பேஷண்ட் ஊர் திருவையாறுன்னு தெரிஞ்சதும் ஏதுடா நம்ம ஊராச்சே, யாரா இருக்கும்னு மனசிலே ஒரு குறுகுறுப்பு இருந்திச்சு. ஆனா, அது அங்கிளா இருக்கும்னு நான் நெனைச்சுக் கூடப்பாக்கலே."

"அப்படியாம்மா.. அப்போ அடுத்த வாரம் நீ--நீங்க-- அமெரிக்கா போயாகணுமா?"

"ஆமாம், அங்கிள்! போயே ஆகணும். இந்த சான்ஸை மிஸ் பண்ணக்கூடாது. இரண்டே வாரத்திலே திரும்பிடுவேன். அதுக்குள்ளே பிரிலிமினரி எக்ஸாம்லாம் பண்ணி முடிச்சிடலாம். டோண்ட் ஒர்ரி.." என்றாள் சாந்தி.

நடக்கற நிகழ்ச்சிகளைப் பாத்து எல்லாமே எனக்கு பிரமிப்பா இருந்தது. எங்கள் கல்யாணத்திலேயே 'இவ தாங்க என் க்ளோஸ் ப்ரண்ட் சாந்தி'ன்னு சுசீலா சாந்தியை கைபிடித்து அணைத்து எனக்கு அறிமுகப்படுத்தியது நினைவுக்கு வந்தது. திருவையாற்றில் எங்கள் வீட்டிற்கு அடுத்த தெருவில் இருந்தாள் சாந்தி. சுசீலாவும் அவளும் ஒண்ணா மியூசிக் கிளாஸுக்கு போய்க் கொண்டிருந்தார் களாம். ப்ளஸ் டூக்கு அப்புறம் சாந்திக்கு மெடிகல் சீட் கிடைத்ததாம். அவள் அப்பா வசதிமிக்க குடும்பத்தைச் சேர்ந்த வியாபாரி ஆகையால் கிடைச்ச வாய்ப்பை சந்தோஷத்தோட ஏத்துக்க முடிஞ்சதாம்.

சாந்தி மெடிகல் முடிக்கறத்துக்குள்ளேயே எங்கள் கல்யாணம். லீவ்லே திருவையாறு வந்தா எங்களை வந்து சந்திக்காம இருக்க மாட்டாள். சாந்தியோட பந்தா இல்லாத ரொம்ப சிம்பிளான குணம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவள் குடும்ப சூழ்நிலைகளோட ஒப்பிட்டுப் பார்க்கறச்சே நாங்கள் ரொம்ப கீழே. இருந்தாலும் சுசீலா மேலே சாந்தியும், சாந்தி மேலே சுசீலாவும் வைச்சிருக்கிற அன்புக்கு இந்த சமூக அந்தஸ்த்தெல்லாம் குறுக்கே வரலே.

சாந்தியோட அப்பா காலமானதற்கு அடுத்த வருஷம் அவங்க கல்யாணம். சென்னைலே தான். நாங்க ரெண்டு பேருமே போயிருந்தோம். அவள் கணவனும் டாக்டர் தான். கல்யாணமான கொஞ்ச நாள்லே ஏதோ ரிசர்ச்சுக்காக ரெண்டு பேருமே லண்டன் போகப்போவதாக சாந்தி சொல்லியிருந்தாள். எப்போ திரும்பி வந்தாங்கன்னு தெரியாது. ஊரில் இருந்த சொத்துக்களையும் விற்று அவங்க எல்லாருமே மெட்ராஸில் செட்டில் ஆயிட்டதாலே அவ்வளவு தொடர்பு இல்லாம போச்சு.

அறுந்த தொடர்பு இப்போ மறுபடியும் சேர்ந்திருக்கு. ஒவ்வொண்ணும் நடக்கறச்சே எதுக்கு இதெல்லாம்னு தெரியறதில்லே. நாமும் இதான் வாழ்க்கை போக்கு போலன்னு ரொம்ப மூளையை கசக்கிக்கறதில்லே. ஆனா பிறந்து ஞாபகம் தெரிஞ்சதிலேந்து, இப்போ வரைக்கும் நடந்த ஒவ்வொண்ணையும் நெனைச்சுப் பாத்தா ஏதோ இழைப்பின்னல் மாதிரி ஒண்ணுக்கு ஒண்ணு சம்பந்தப்படுத்தி முடிச்சு போட்டிருக்கோன்னு நெனைக்கத் தோண்றது. இதுக்கு அப்புறம் அதுன்னு ஒவ்வொண்ணும் ஏதோ வரிசைக்கிரமத்திலே வரிசைபடுத்தி வைச்சிருக்கிற மாதிரி தெரியறது. எதுக்கு அப்புறம் எதுன்னு தெரியாததினாலே தான் இந்த அல்லாடல் எல்லாமே. தெரிஞ்சிட்டாலும் நிம்மதி நிச்சயம் குலைஞ்சு போய்டும் போலவும் இருக்கு'.

எதுக்கோ சாந்தி சிரித்த பொழுது என் நினைவிழை அறுந்தது. அந்த சிரிப்பைத் தொடர்ந்து, "சரியான இதுடி நீ"ன்னு சுசீலா சொன்ன போது, நானும் சிரித்து விட்டேன்.

"என்ன அங்கிள்?"

"ஒண்ணுமில்லேம்மா. உன்னைப் பார்த்த குஷிலே உன்னோட 'இதுடி' இவளுக்கும் தொத்திகிட்டது பாத்தையா?"

"கரெக்ட் அங்கிள்.."

"நாங்க ரெண்டு பேரும் சிரிச்சே ரொம்ப நாள் ஆயிட்டதும்மா.. அந்த சந்தோஷத்தை எங்களுக்கு மீட்டுக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றிம்மா.." ன்னு நான் சொன்னப்போ, அங்கே நிலவின ஒரு நிமிஷ மெளனம் அசாத்திய கனம் கொண்டிருப்பதாகத் தோன்றியது.

"அங்கிள்! உங்களுக்கு ஒண்ணு சொல்லணுமே," என்றாள் சாந்தி திடுதிப்பென்று.

"என்னம்மா?.."

"மெடிகல் பக்கம் நான் போய்ட்டாலும், சின்ன வயசிலே சங்கீதத்லே வைச்சிருந்த ஈடுபாட்டை விட்டுடலே.. அவருக்கும் இதிலே ரொம்ப பிடித்தம். நேரம் கிடைச்ச போதெல்லாம் சபா, கச்சேரின்னு போயிடுவோம். தவிர, தியாகராஜ சுவாமிகள் பேர்ல மைலாப்பூர்லே ஒரு மியூசிக் ஸ்கூல் வேறே நடத்திண்டு வர்றோம். கிட்டதட்ட இருநூறு ஸ்டூண்ட்ஸ் படிக்கறாங்க.." என்று மூச்சு விடாமல் சாந்தி சொல்கையில் ரொம்பவும் பெருமையா இருந்தது.

கண்ணால அதையெல்லாம் பார்க்காட்டா என்ன, மனசளவில் அத்தனையையும் ரசிச்சா போச்சுன்னு நெனைச்சிண்டேன். அப்படி ரசிக்கறத்துக்கும் ஒரு சக்தி கிடைச்சிட்ட மாதிரி எனக்கே நன்னா தெரிஞ்சது.

(இன்னும் வரும்)

Wednesday, October 26, 2011

பார்வை (பகுதி-4)

                     அத்தியாயம்--4

ந்த அலறல் என்னுள் ஏற்படுத்திய கிளர்ச்சி விவரிக்க இயலாத ஒண்ணு. 'விஸ்வநாதன் வந்துவிட்டான்' ங்கற சந்தோஷத்தில அந்தஷணமே மோட்டார் மரக்கூடின் வெளிய வரத் துடிச்சுத் திரும்பினேன். தூக்கிய வெல்டிங் மிஷின் தூக்கியபடி அப்படியே 'ஆன்' நிலைலே இருந்தது தான் தப்பாப் போய்ட்டது. முகத்தை மூடியிருந்த கவசம் சரிஞ்சு கீழே விழ, பாதுகாப்பற்றிருந்த என் முகத்தை பளபள பிரகாசத்தோடு வெல்டிங் மிஷினிலிருந்து புறப்பட்ட ஜோதி பொசுக்க, அலறித் துடிச்சு மயங்கி விழுந்திருக்கிறேன்.

என்ன நடந்ததுன்னு பின்னால் தான் தெரிஞ்சது.. என் அலறலைக் கேட்டு வெல்டிங் செக்ஷனின் இருந்த அத்தனை பேரும் ஓடி வந்திருக்காங்க.. மரக்கூண்டைப் புரட்டிப் போட்டு அடியிலே விழுந்து கிடந்த என்னை ஆசுபத்திரிக்குத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். அங்கு போய்த் தான் என் இரண்டு கண்களையும் குறி வைச்சுநெருப்பு சுட்டிருப்பது தெரிஞ்சு, முதலுதவி மட்டும் செஞ்சிட்டு, 'ஆப்தமாலஜி' சர்ஜனின் பார்வைக்கு அனுப்பியிருக்காங்க.. அந்த கண் டாக்டரின் சிபாரிசின் பேரில் தான், இந்த ஆசுபத்திரியை விட கூடுதலா வசதிகொண்ட தஞ்சாவூர் கண் மருத்துவமனை ஒண்ணுலே உடனடியாக என்னை அட்மிட் செஞ்சிருக்காங்க...

பார்வை நரம்புகள் முழுசா டேமேஜ் ஆனது தான் பெரிய விஷயமாப் போயிட்டது. இல்லாட்டா, மாற்றுக்கண் அறுவை சிகித்சை செய்திருக்கலாமாம். ஆசுபத்திரியிலலே நெனைவு திரும்பினதும், முதலிலே என நினைவுக்கு வந்தது தம்பி விஸ்வநாதன் தான். உடனே அந்த அலறல் மங்கலா தேய்ந்த நினைவில் தட்டுப்பட்டு விட்டுப்பட்ட தொடர்ச்சியா கொஞ்சம் கொஞ்சமா பீறிட்டுக் கிளம்பித்து. என்னைப் பாக்க பாக்டரிக்கு வந்த விஸ்வநாதன் இப்போ இங்கே தான் இருக்கிறானான்னு தெரிஞ்சிக்கற பாசத்தில் கை பரபரத்தது. அந்த நிமிஷமே அவன் அருகாமையை மனசு ரொம்பவும் விரும்பியது. அவனைப் பார்த்து ஆரத்தழுவ விழைந்த பொழுது தான் அந்தகார இருட்டு சூழ்ந்து என்னை அடிச்சுப் போட்ட உண்மை தெரிஞ்சது.. மனசுக்குள்ளேயே தவிக்கும் என் தவிப்பைக் காணப் பொறுக்காம, நடந்த விவரங்கள சுசீலா தேம்பலுக்கிடையே சொல்லக் கேட்டு மனசு இருண்டது.

கடைசியில் என் தம்பி திரும்பி வரவேயில்லைன்னு தெரிஞ்சது.. மெஷின் செக்ஷனில் இருந்த மெக்கானிக் விஸ்வநாதனை ஒரு வேலைக்காகத் தேடித் தவிச்சிண்டிருந்த போர்மேன் தணிகாசலம் அவனைப் பார்த்த வேகத்தில் அப்படி ஆத்திரத்தில் கூவி அழைத்து அலப்பறை செஞ்சிட்டாராம்.. மெக்கானிக் விஸ்வநாதனைத் தேடிண்டிருந்த ஆத்திரத்தில் தணிகாசலம் கத்த, அந்த விஸ்வநாதன் என் தம்பி விஸ்வநாதன்னு தப்பா புரிஞ்சிண்டு பதட்டத்தில வெல்டிங் மிஷினை என் மேலே நானே போட்டுக்கொள்ள, சை! என்ன ஒரு வேதனை?.. எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போட்டு என்னலாம் நடந்து போச்சுங்கறதை நெனைச்சுப் பார்க்கையில் தன்னிரக்கத்தில் தொய்ஞ்சு போயிட்டேன்.. தொடர்ந்த யோசிப்பு, எனக்கு நானே வருந்துவதை முதலில் நிறுத்தியது. யோசிப்பதைத் தாண்டியதான நிதர்சனம் என்னை நிலைகுலைய வைக்காமல் காப்பாற்றியது. 'இதெல்லாம் நடக்க வேண்டியிருக்கிறது, அதனால் நடந்தது' என்கிற வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக கீற்றாக மனத்தில் சுடர் காட்டி, ஞானத் தீயாகப் பற்றிக் கொண்டது... மன வெளிச்ச விளக்கேற்றி இந்த இருட்டை வெல்ல வேண்டும்ங்கற உத்வேகம் பிறந்தது.

கடைசியிலே சிதைஞ்ச பார்வை நரம்புகளை மீட்டெடுக்க முடியாதுன்னு உறுதியாச் சொல்லிட்டாங்க.. இருந்தாலும் வெப்பம் பொசுக்கினப் புண்களை ஆற்றுவதற்கும் மேற்கொண்டான மேம்பட்ட சிகித்சைக்கு சென்னைக்குப் போய் பார்த்துக்கறது அவசியமான ஒண்ணுன்னு அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அபிப்ராயப்பட்டார். தனக்குத் தெரிஞ்ச ஒரு கண் ஆசுபத்திரி முகவரியும் கொடுத்து அறிமுகக் கடிதமும் தந்தார். நான் வேலைபார்த்த மோட்டார் தொழிற்சாலையின் முதலாளி மேற்கொண்டாகும் அத்தனை வைத்தியசெலவுகளையும் மனமுவந்து ஏத்துக்கத் தயாரா இருந்தார்.

சென்னை வந்தோம். 'இமைகள் மருத்துவமனை'ங்கற அந்த ஆஸ்பத்திரி ஆழ்வார் பேட்டைலே இருந்தது. அங்கே போனப்ப்போ தான் கண் சிகித்சைக்கு மிகவும் கியாதி பெற்ற மருத்துவமனை அதுன்னு தெரிஞ்சது.. மருத்துவமனையை ஒட்டியே மருத்துவ மனை சார்ந்த தங்கும் விடுதி ஒன்றும் இருந்தது. கம்பெனி முதலாளி நாங்க ரெண்டு பேரும் அங்கேயே தங்கிண்டு நான் சிகித்சை பெறுவதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செஞ்சிருந்தது, மனுஷ ரூபத்லே கிடைச்ச இறைவனின் கருணைன்னு தான் சொல்லணும்..

முதல் நாள் என்னைப் பற்றி எனக்கு ஏற்பட்ட விபத்து பற்றின்னு எல்லாக் குறிப்புகளையும் தயாரிச்சு, உதவி மருத்துவர் ஒருவர் என்னை ஆரம்ப சோதனைகளுக்கு உட்படுத்தி அன்னிக்கே உள்நோயாளியா அந்த ஆசுபத்திரியில் சேர்த்திட்டாங்க.. அடுத்த நாள் தலைமை மருத்துவர் என் கண்களை சோதனை செய்வார்ன்னு சொல்லியிருந்தாங்க...

அடுத்த நாள் அவங்க குறிச்சிருந்த நேரத்தில தலைமை மருத்துவர் எனக்காக ஒதுக்கியிருந்த அறைக்கு வந்தப்போ தான் எங்களுக்கு ஒரு ஆச்சரியம் இங்கே வந்த இந்த ரெண்டு நாளாக் காத்திருந்தது தெரிஞ்சது.


(இன்னும் வரும்)


Friday, October 21, 2011

பார்வை (பகுதி-3)

                                          அத்தியாயம்--3

ங்கரி என் தம்பி பெண். என் தம்பி விஸ்வநாதனின் ஒரே பெண். விஸ்வநாதன் பேர் சங்கீத உலகிலே மிகப் பிரபலம். 'பிடில் மேதை' ங்கற பட்டம் அவன் பேரோடு சேந்த ஒண்ணு. வெளியுலகிலே அவன் பேரை மட்டும் தனியாக் குறிப்பிட்டு யாரும் சொன்னதா நெனைவில்லை. பட்டத்தோடு சேத்துத் தான் அவன் பேர் யாராலேயும் உச்சரிக்கப்படும்.. அந்த அளவுக்கு பிராபல்யம்.

அவனுக்கு அவன் பிடில் பெத்த குழந்தை மாதிரி. ஆசையா, அன்பா, இறைவன் தனக்குக் கொடுத்த சீதனமா அந்தப் பிடிலை நெனைச்சான். அதை மடிலே சாச்சிண்டிட்டான்னா, அவன் சொல்கிறபடி அது கேக்கும். சிரிக்கறது, அழறது, சிணுங்கறது, சீற்றது, பேசறது, கொஞ்சறது எல்லாமே செய்யும். பெற்ற குழந்தை சங்கரி கூட அந்த பிடிலுக்கு அப்புறம் தான். அதனிடத்தில் அப்படி ஒரு நேசம். இந்த உலகுக்கு அவனை அது தான் அடையாளம் காட்டினதாலே இருக்கலாம்.

எல்லாரும் ஒரே குடும்பமாக திருவையாற்றில் இருந்தோம். எங்க சின்ன வயசிலேயே தந்தை காலமாயிட்டதாலே தாயால் வளர்க்கப்பட்ட குழந்தைகளா இருந்தோம். ரொம்ப கஷ்ட ஜீவனம். வயசு வந்ததும் பள்ளிப் படிப்போடு முடிச்சிண்டு வேலைக்குப் போக வேண்டிய சூழ்நிலை. ஏதோ கிடைச்ச வேலைக்குப் போய் தாயாரை உட்காரவைச்சு சாப்பாடு போடணும்ன்னு மனசார நெனைச்சது வீண் போகலே. ஒரு பெரிய மோட்டார் கம்பெனிலே வேலை கிடைச்சது. மோட்டார்களுக்கு பாடி பில்டிங் செய்கிற கம்பெனி அது. வேலை கிடைச்ச அடுத்த வருஷமே, சுசிலாவைக் கைப்பிடிச்சேன். வீட்டுக்கு வந்த மருமகள், என் தாயாரை தன் தாயார் போல் பார்த்துக் கொண்டாள். சிறு வயசிலேயே கணவனை இழந்த, பெத்த பிள்ளைகளோட எதிர்கால மகிழ்ச்சிக்காக கடுமையா உழைச்ச அம்மாக்கு சுசீலாவோட பரிவும் பாசமும் கடைசி காலத்திலே ரொம்ப நிம்மதியைத் தந்தது..

அந்த நிம்மதி ரொம்ப நாள் நீடிக்கக் கொடுத்து வைக்கலே. ரெண்டே வருஷத்லே போய்ச் சேர்ந்தாள். தம்பிக்கு படிப்பு ஏறலேன்னாலும் சங்கீதத்திலே ரொம்ப ஈடுபாடு இருந்தது. நாங்க குடியிருந்த பகுதிலே ஒரு வயலின் வித்வான் இருந்தார். கட்டை பிரம்மச்சாரி. அவருக்கு வயலின் தான் வாழ்க்கையே. அவருக்கு சமைச்சுப் போட்றது, துணி துவைச்சு உலர்த்தி மடிச்சு வைக்கறது வரை என் தம்பி தான்.. கிட்டத்தட்ட அந்தக்கால குருகுல வாசம் மாதிரி தம்பி அவரோட தான் எப்பவும் இருப்பான். சில சமயங்களில் சாப்பாட்டுக்குக் கூட வீட்டிற்கு வரமாட்டான். அவரோடையே இருந்து அவர்கிட்டேயே வயலின் கத்திண்டு அசுர சாதகம் செஞ்சு பிரமாதமா வயலின் வாசிக்கக் கத்துகிட்டான்..

அவரோடையே அவன் இருந்தாதாலே என் தம்பி வீட்டிற்கு வர்றதே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைஞ்சு போச்சு.. போகப்போக நாட்கணக்கில் வீட்டுக்கு வராம ஆனது.. "என்னடா எங்கே போயிருந்தே; நாலைஞ்சு நாளாக் காணோமே" ன்னா, "வயலின் மாமாவோட கச்சேரிக்கு தஞ்சாவூருக்குப் போயிருந்தேன்; கும்மோணத்துக்குப் போயிருந்தேன்"ன்னு ஏதாவது ஊர்களின் பெயரைச் சொல்வான்.

ஒருதடவை இப்படித்தான். நாகை பக்கம் எங்கோ கோயில் உற்சவ விழாவிற்காக வாசிக்கப் போயிருந்த பொழுது ரயிலிருந்து இறங்கறச்சே வயலின் மாமா தடுமாறி கீழே விழுந்துட்டார். நல்லவேளை, பிளாட்பாரத்தில் விழுந்தார். அதனால ஃப்ராக்ச்சரோடு போனது.. அந்த எலும்பு முறிவு கையிலே ஏற்பட்டது தான் அவர் மனசைப் பாதிச்சிடுத்து. படுத்த படுக்கையாக அவஸ்தைப் பட்டவர், பிடிலை எடுத்து வாசிக்க முடியலேயேங்கற சோகத்திலேயே விபத்து நடந்து சரியா மூணே மாசத்திலே நினைவு தப்பி மரித்துப் போனார்.

அவர் காரியமெல்லாம் முடிஞ்சதுக்கு அடுத்த நாள் விஸ்வநாதன் வீட்டுக்கு வந்தான். ஏதோ பித்துப் பிடிச்சவன் மாதிரி காணப்பட்டான். பெயருக்காக சாப்பாடு தட்டுக்கு முன்னாடி உக்கார்ந்து எழுந்துட்டான். கொஞ்ச நாள் ஆனா மனசு சரியாகப் போயிடும்னு நெனைச்சோம்.. ஆனா அடுத்த நாள் வெளிலே போனவன் இருட்டியும் வீட்டிக்குத் திரும்பலே.. எங்கே போனான் என்னவானான்னு தெரியலே. யாரோ தியாகையர் சமாதி பக்கத்லே பாத்ததாச் சொன்னார்கள். அவனுக்கு இதமாகச் சொல்லி அழைச்சு வரலாம்னு போய்ப்பார்த்தோம். அங்கேயும் அவன் இல்லைன்னு தெரிந்ததும் ஏமாற்றத்தில் இடிந்து போய் விட்டோம். காவிரி படித்துறை, ஐயாரப்பர் கோயில் பிரகாரங்கள், தேரோடும் வீதிகள்ன்னு சுசீலாவும் நானும் தேடாத இடம் பாக்கியில்லை. விஸ்வநாதன் எங்கேயும் தட்டுப்படலே. சோர்ந்து போய் வீடு திரும்ப அந்தி சாய்ந்துவிட்டது.

என் கனவிலே வந்து அம்மா கண்ணீர் விட்டார்கள். இப்படி உயிரோடு ஒருத்தனைத் தொலைச்சிட்டு நிற்கறையேன்னு அவர்கள் இடித்துரைச்ச போதுதான் கனவென்றும் தெரியாம 'ஓ'ன்னு அலறிட்டேன். 'என்னங்க.. என்னங்க' ன்னு சுசீலா உலுக்கின போதுதான் கனவென்று கண் கலங்கினேன். ஆனால் சுசீலாக்கும் எனக்கும் இந்த ஆயுசில் எப்படியாவது தம்பியைக் கண்டு பிடிச்சிடுவோம் அல்லது விஸ்வநாதன் வீட்டிற்குத் திரும்பி வருவான்ங்கற நம்பிக்கை இருந்தது.

அடிக்கடி விஸ்வநாதனின் நினைவு வந்து என்னை வாட்டியது. அவன் நினைவு வந்தா சுத்தியிருக்கற உலகம் மறந்துடும். இனம் புரிகிற வேதனையிலே மனசு கிடந்து அல்லாடும். அவன் திரும்பி வந்துட்டா எந்தக் கவலையும் அவனுக்கு இல்லாம ராஜா போல வைச்சுக் காப்பாத்தணும்னு மனசுக்குள் சூளுரைத்துக் கொள்வேன்.

ஒரு நாள் மோட்டார் பாக்டரி லேத்தில் நடந்தது தான் அநியாயம். அசெம்பிளி செக்ஷ்னுக்கு அடுத்தாப்லே வெல்டிங் செக்ஷன். அங்கே தான் எனக்கு அன்னிக்கு ட்யூட்டி. அஞ்சடி உயரத்துக்கு கட்டி முடிக்கப்படாத மோட்டார் கூடு தூக்கி நிறுத்தப் பட்டிருக்கு. அதற்கு அடிபாகத்தில் எட்டுக்கு இரண்டாக பத்து இரும்புச் சட்டங்களைப் பொருத்த வேண்டும். வெல்டிங் செட்டுடன் மோட்டார் மரக் கூடுக்கு கீழே நுழைஞ்சிட்டேன். இரண்டு தகடுச் சட்டங்களைப் பொருத்தி முடிச்சிட்டேன். மூணாவது சட்டத்தை எடுத்து சரிபார்த்து வெல்டிங் மிஷினை உயிர்ப்பித்து முகத்திற்கு பக்கவாட்லே நிமிர்த்தி சட்டத்தை நோக்கித் தூக்கறச்சே...

வெளியே, "விஸ்வநாதா! எங்கெல்லாம் உன்னைத் தேட்றது?.. எங்கேடா போயிட்டே?" என்ற குரல் யானைப் பிளிறல் போன்ற அலறலுடன் எனக்குக் கேட்டது.


(இன்னும் வரும்)












Monday, October 17, 2011

பார்வை (பகுதி-2)

                      அத்தியாயம்--2       

'கா, கா'ன்னு அடித்தொண்டை விரியக் கத்திண்டு போறதே, இந்தக் காக்கையை எந்த ஊரிலே கொண்டு போய் விட்டாலும், அது தான் வாழ்ந்த பிரதேசத்திற்கே வந்திடுமாம்; அதே போலத் தான் இந்த மனசும். எப்படில்லாமோ வளைய வளைய எங்கே செலுத்தினாலும், அந்த சபா நிகழ்ச்சிக்குத் தானே வந்து சேர்றது? சே! அதை நெஞ்சுக்குள்ளேயே போட்டுப் புதைச்சிக்கணும்னா அது நடக்கற காரியமாத் தெரியலையே?... 'ங்கொய்..'ன்னு வண்டு சுத்துமே, அது போலத் திருப்பித் திருப்பி.........

சும்மா சொல்லக்கூடாது. அத்தனையும் உண்மை. நேத்திக்கு சபாலே நல்லக் கூட்டம்னு தான் அந்த கசகசலேந்து தெரிஞ்சிக்க முடிஞ்சது... சுசீலா பாட்டு, அதோடு விவேகானந்தன் பிடில்ன்னு வேறு தெரிஞ்சதோ, இல்லையோ, அதான் அப்படி ஒரு கூட்டத்துக்குக் காரணம்.

அந்த விவேகானந்தனோட பிடில் தான் அவ பாட்டோட எவ்வளவு அழகா இழைஞ்சு போறது? சுசீலா சாரீரம் கூட அவன் பிடிலுக்கு ஏத்தாப்பலே குழைஞ்சு-- வாழ்க்கைலே சுசீலாக்கும் எனக்கும் ஏற்பட்ட பந்தம் மாதிரி, சங்கீதத்திலே அவா ரெண்டு பேருக்கும் ஏற்பட்ட ஒரு பாந்தமாய் இது தெரியறது..

முன் வரிசை சோபாலே தான் உக்கார்ந்திருந்தேன். அந்த விவேகானந்தனோட தம்பி தான் கையைப் பிடிச்சிண்டு வந்து என்னை உக்காத்தி வைச்சான். எப்பவுமே நா இப்படித்தான். அவள் கச்சேரிக்கு அவளோடையே வந்துடுவேன். சங்கீதத்லே எனக்கிருக்கிற மோகம் என்னைப் பிடிச்சு இந்த நிலைலேயும் ஆட்டிண்டு தான் இருக்கு.

"தாயே யசோதா.." கீர்த்தனையில்,

"காலினில் சிலம்பு கொஞ்ச
கைவளை குலுங்க முத்து
மாலைகள் அசையத் தெரு
வாசலில் வந்தான்.."

----ங்கற இடத்திலே சுசீலா அற்புதமா நிரவல் செஞ்சு அமுத கானத்தைப் பொழிஞ்சா. 'தாயே யசோதா' கீர்த்தனமும், 'ஒருமையுடன்'ங்கற இராகமாலிகை பாடலும், 'பாருக்குள்ளே நல்ல நாடு', 'ஆசைமுகம்'ன்னு பாரதியார் பாடல்களும் நேத்திக்கு காலைலே பூஜை அறைலே உக்கார்ந்து சுசீலா மெய்மறந்து பாடிண்டு இருக்கறச்சையே சாயந்திர கச்சேரிலே இதெல்லாம் வரும்னு தெரியும்.

விவேகானந்தனோட பிடில் அன்னிக்கு ஏ ஒன்! அதுவும் பின்னாடி ராகம்-தானம்-பல்லவியில் சங்கராபரணம் இழைஞ்சப்போ இந்த வயசிலே இவ்வளவு ஞானமான்னு பிரமிப்பு தான் ஏற்பட்டது.. நாத சுகத்திலே மெய்மறந்து, லயிச்சு, கட்டுண்டு அந்த இசைக்கே தன்னைத் தத்தம் கொடுத்த மாதிரி அவன் வாசிச்சப்போ மனசெல்லாம் எங்கையோ இழுத்திண்டு போனது.

வாசஸ்பதி ராகத்தை சுசீலா அற்புதமா தன் குரல்லே இழையவிட்டு, கம்பீரமா 'பராத்பரா' கீர்த்தனம் பாடி, நிரவலை 'அரி அயனும் காணா அரிய ஜோதி'யில் செஞ்சு, 'தத்தா', 'தத்தா' என்ற தைவதத்தில் அடிக்கடி வந்து நின்னு பாடினப்போ எனக்கு 'அம்மாடி'ன்னு இருந்தது. ஆபோஹி ராகம் ஆலாபனம் செஞ்சு 'கிருபாநிதி'ன்னு ஸ்வரப் பிரஸ்தாரம் செஞ்சப்போ, சபாவே கட்டுண்ட மாதிரி அப்படி ஒரு அமைதி.

பின்னாடி அற்புதமான சங்கராபரண ராகத்தை விஸ்தாரமா, கம்பீரமா ஆலாபனம் செஞ்சு, 'தூக்கிய திருவடி' கிர்த்தனையில் 'எத்தனையோ பிறவி'யில் நின்று நிரவல் செஞ்சப்போ கச்சேரி களை கட்டிடுத்து. அந்த நிரவலோட அழகும், பின்னாடி வந்த ஸ்வர பிரஸ்தாரத்தையும் நெக்குருக நெஞ்சாரப் பருகிக் கொண்டிருக்கச்சே தான் ஒரு குடம் பால்லே ஒரு துளி விஷம் கலந்திட்ட திடுக்கிடல் என்னைச் சாச்சுப் போட்டது.

பின்னாடி முணுமுணுத்த குரல்கள் நாராசமாய் என் செவிப்பறைய கிழிச்சு, கீழே கால் ஊனிண்டிருந்த பூமி பிளந்து அதல பாதாளத்தில் என்னை அமிழ்த்திய மாதிரி இருந்தது.

"கட்டின புருஷன் கெட்டான் போ! பாடறச்சேயே அந்த விவேகானந்தனைப் பாக்கறச்சேலாம் புன்முறுவலோட அவ பாடறதைப் பாத்தையாடீ?"

"பாத்து முறைக்கறத்துக்கு புருஷனுக்கு சக்தி இருந்தாத்தானேடீ? அவன் தான் கபோதி ஆச்சேங்கற தைரியம் அவளுக்கு."

"கச்சேரிலேல்லாம் பக்க வாத்தியக்காராளைப் பாத்து அப்படிச் சிரிச்சிண்டே பாடறது வழக்கம் தான்.. எல்லாம் டீம் ஸ்பிரிட்.. உற்சாகம் கொடுக்க வேண்டி.."

"நல்ல உற்சாகம் கொடுத்தாங்க போ!.. எனக்கு ஏதாவது வாயிலே வந்திடப் போறது.."

"என்னதான் ஆயிரம் இருந்தாலும் பொம்பளைன்னா கொஞ்சம் கட்டுப்பாடு வேணும்டி. திரைக்கு பின்னாடி இதெல்லாம் வைச்சிக்கட்டுமே?.. யார் வேணாங்கறது?.. இப்படியா பொது மேடைலே காட்டிப்பா.."

"அவளை விட்டுடுடி! அவனுக்கானும் கொஞ்சம் தெரிய வேண்டாமோ?.. ஏதுடா, கல்லாட்டமா புருஷன் தன் எதிரிலேயே உக்காந்திருக்கானேன்ட்டு?.. எல்லாம் காலம் செய்யற கோலம்."

"சேச்சே! அவ வயசு என்ன? அவன் வயசு என்ன?.. பாக்கறத்துக்கு அவ தம்பி மாதிரி இருக்கான்! மிஞ்சி மிஞ்சிப் போனா, இருபது--இருபத்திரண்டு இருக்குமா?..அந்தப் பையனைப் போய்..."

"இவளுக்குக் கூட, என்ன முப்பதைத் தாண்டியிருக்கும்ங்கறே?.. இல்லை, மேக்-அப் மறைச்சுக் காட்டறதா?"

"முப்பத்தைஞ்சுக்கு மேலே தான்! புருஷனைப் பாத்தா நாப்பதைத் தாண்டியிருப் பான்னு நன்னா தெரியறது.."

ஈரத்துணியை முறுக்கின மாதிரி இதயம் முறுங்கினதும், இரத்தம் தான் வடிஞ்சிருக்கணும். இல்லேனா, நெஞ்சிலெ ஏன் இப்படி ஒரு வலி?.. 'பெண்களே! ஒரு பெண்ணைப் பற்றி இப்படியெல்லாம் பேச எப்படி முடிகிறது உங்களால்?..' என்று பேச்சு வந்த பக்கம் திரும்பிக் கத்த உதடுகள் படபடத்தன.. கைகள் பரபரத்தன.. இமைகள் தான் படபடத்ததே ஒழிய, பார்வை பதிக்க முடியாத இயலாமை மனசை வாட்டி எடுத்தது...

சாதாரணமா இன்னொருத்தரைப் பத்தி ஒரு வம்பு மாதிரி பேசறது, எவ்வளவு மட்டமா அந்த இன்னொருத்தரைப் பாதிக்கறதுன்னு இவங்களுக்கு ஏன் தெரியமாட்டேங்கறதுன்னு குமைஞ்சு போயிட்டேன். அதுவும் இந்தக் கச்சேரியின் நாயகியான ஒரு பெண்ணைப் பத்தி இப்படி அபாண்டமா பேசிச் சிரிக்கணும்னா அவங்க எவ்வளவு நாகரிகமில்லாதவங்களா இருப்பாங்கன்னு நினைச்சுப் பாக்க நினைச்சுப் பாக்க ஆத்திரமா வந்தது.. இதைப் பொருட்படுத்தக் கூடாதுன்னு அலட்சியமா நினைக்கணும்னாலும், என்னை மாதிரி இன்னும் எத்தனை பேர் இதைக் கேட்டு, கேட்டதும் இல்லாம அப்படியும் இருக்குமோன்னு இளக்காரமாய் எடை போட்டு... ஈஸ்வரீ! என்னம்மா இதெல்லாம்..'ன்னு மனசு கலங்கிப் போச்சு.

அத்தனை கலக்கத்திலும் உள்ளறிவு விழிச்சிண்டுதான் இருந்தது. இப்படி இவங்க நாலு பேருக்குக் கேக்கற மாதிரி பேசணும்னா அதுக்கும் ஏதோ காரணம் இருந்தே ஆகணும்னு புத்தி சலனப்படாம யோசிச்சது. சுசீலாவோட ஈடு இணையற்ற சங்கீத ஞான்ம் இவங்களைப் பொறாமைப் பட வைச்சிருக்குமா?.. அதனால் தான் இப்படிப் புழுதி வாரித் தூத்தறாங்களா?.. இல்லே, இப்படி இவங்களைப் பேச வைச்சதே வேறே யாரோவானுமா இருக்குமா?.. சுசிலா பாட்டு- விவேகானந்தன் பிடில்னா, சபை நிறைஞ்சு வழியறதைப் பாக்கப் பொறுக்காத யாரேனும்...

எனக்குக் கண்ணு தான் போச்சே தவிர, காதெல்லாம் கேட்டுண்டு தானே இருக்கு?.. கண்ணு போனது தான், அவங்களுக்கு அந்தத் துணிச்சலைக் கொடுத்திருக்கு. காது போகாதது தான் அவங்களுக்கு சாதகமா போயிடுத்து.. இவ்வளவு பக்கத்திலே உக்காந்திண்டு இவ்வளவு கேவலமா என்னோட பெண்டாட்டியைப் பத்திப் பேசணும்னா, அது எனக்குக் கேக்கணும்னு தான் வேணும்னே செஞ்சிருக்கறதா உள்மனசு ஓங்காரமிட்டது... கண்ணு போனதுமில்லாம, தாலி கட்டின புருஷன் பைத்தியம் பிடிச்சு அலையட்டுமேங்கற எண்ணமா?..

யோசிக்க யோசிக்க ஒண்ணு தெளிவாத் தெரிஞ்சது... பாக்கற வெளிப்பார்வை வெறும் பாக்கறதின் பிரதிபிம்பமா ஒரு உருவத்தைத்தான் கொடுக்குமே தவிர, அது என்ன ஏதுன்னு தெரியப்படுத்தறத்துக்கு மூளை தான் ஒத்தாசை செய்யணும்னு தோணித்து. சாதாரண பொருளைப் பாக்கறத்துக்கே இப்படின்னா, பாத்ததை ஊடுருவிப் பாத்து உள்ளார்ந்து உள்விஷயத்தை அலசி ஆராயணும்னா, வெறும் இந்தக் கண்பார்வை மட்டும் இருந்தாப் போதானுன்னு புரிஞ்சு போச்சு. 'கண்ணிருந்தும் குருடர்களாய்'ன்னு யாரோ சொல்லியிருக்காளே! அதான்!
பார்வைங்கறது வேறே ஒண்ணு! வெறுமனே பாக்கற விஷயம் மட்டுமே இல்லே! வெறுமனே பாக்கறது போட்டோ பிடிக்கிற மாதிரியான ஒண்ணு.. ஆனா பார்வைங்கறது அது மட்டுமே இல்லே.. அதைத் தாண்டின ஒண்ணு. அது ஞானம் சம்பந்தப் பட்ட ஒண்ணு'ன்னு ஏதேதோ நெனைச்சிண்டிருகறச்சே, கச்சேரி முடிஞ்சதேத் தெரியலே..

"பெரிப்பா.. எப்படி இருக்கேள்?.."ன்னு நெருக்கத்லே குரல் கேட்டதும், நினைவு இழைகள் அறுந்து அத்தனை குரூரங்களையும் மறந்து மனசு மலர்ந்தது.

"யாரு.. சங்கரியா.. எப்போ வந்தேம்மா?"

"நான் அப்பவே வந்திட்டேம்ப்பா.. அந்தப் பக்கம் உக்கார்ந்திருந்தேன்."

"கூட அம்மா வந்திருக்காளா?"

"இல்லேப்பா. நீ போய்ட்டு வான்னு அம்மா சொல்லிட்டா. நான் மட்டும் தான் வந்திருக்கேன். பெரிம்மா தான் கட்டாயம் வந்திடணும்னு சொன்னா.. அவர் பிடில் வேறேயா?.. எப்படி வராம இருக்க முடியும், சொல்லுங்கோ.."

"நீ சொல்றது சரிதான். விவேகானந்தனோட அப்பா, உங்கப்பாவோட சிஷ்யன் தான்.. தெரியுமோல்யோ?"

"அப்பா சொல்லித் தெரிஞ்சது தான். 'அப்பா போலவே பையனும்; அதே அடக்கம்,
அதே பதவிசு; நன்னா வருவான்'ன்னு அப்பா அடிக்கடி சொல்வார்."

"அப்படியா?.. நல்ல குணங்கள்லாம் வளர்றத்தேயும் வளர்ப்புலேயும் கூட வந்து ஒட்டிக்கறதுன்னாலும், அந்த சங்கீத ஞானத்தைச் சொல்லுமா.. சோழநாடு, தஞ்சாவூர்ன்னா அத்தனையும் தன்னாலே வரும் போலிருக்கு.."ன்னு நா சொல்லிண்டிருக்கறச்சேயே, சுசீலா குரல் கேட்டது.

"சங்கரி! நன்னா தாளம் போட்டு ரசிச்சிண்டு உக்கார்ந்திருந்தியே?.. மேடைலேந்து நன்னாத் தெரிஞ்சே.. போதாக்குறைக்கு 'சங்கரி வந்திருக்காங்க. பாத்தீங்களாம்மா' ன்னு விவேகானந்தன் வேறே எங்கிட்டே கேட்டான்.." என்று சுசீலா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, "நமஸ்காரம், ஐயா!"ன்னு விவேகானந்தனின் குரல் பக்கத்தில் கேட்டது. சங்கரிக்கோ, 'வந்திருந்தாங்க'ன்னு விவேகானந்தன் தன்னை மரியாதையோடு பேசினதைக் கேட்டதே கூச்சத்தைக் கொடுத்து நாணத்தில் அவள் தலை கவிழ்ந்தது.

கை நீட்டி கைபற்றி விவேகானந்தன் தோள் தொட்டு அ வனை ஆசிர்வதித்தேன். "நன்னா இருக்கணும்.. இன்னிக்கு பிரமாதப்படுத்திட்டேப்பா.. என்னிக்கும் அப்படித்தான்னாலும் இன்னிக்கு ஒரு படி மேலேன்னு தோணித்து.. கண் பார்வை வேறே இல்லியா?.. மேடைலே வாசிச்சது 'நீ'ங்கற-- பார்வைலே உருவம் பட்டு நிச்சயப்படுத்தற சமாச்சாரம் கூட இல்லே இல்லையா?-- அதுனாலே நீதான் வாசிக்கறேங்கற நெனைப்பே போயிடுத்து. சங்கதி, சஞ்சாரம் அந்த நெளிவு சுளிவு எல்லாம் அப்படியே டிட்டோவா உங்கப்பா தான்.. ஒண்ணு எனக்குத் தெரிஞ்சாகணும். பிடில்ங்கறது பேசக்கூட செய்யுமாப்பா.. அது எப்படிப்பா பேசறது?.. அதைப் பேச வைக்கறது நீங்கறதாலே கேக்கறேன்.. பரம்பரை பரம்பரையா படிஞ்சு போன இந்த கலை ஞானம்லாம் வாரிசு சொத்து மாதிரி இருக்குப்பா.. அப்பாக்கு பிள்ளை, பிள்ளைக்கு அவன் பிள்ளைன்னு ஸ்தாவர சொத்துக்கள்லாம் டிரான்ஸ்வர் ஆகி வருமே, அது போல கருவிலேயே திரு போல இதெல்லாம் டிரான்ஸ்வர் ஆகிடுமோ?.. நீ என்ன சொல்றே?"ன்னு நான் அவன் கிட்டே கேட்ட போது, "எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்களோட ஆசிர்வாதம்"ன்னு அடக்கமாச் சொன்னான் விவேகானந்தன்.


(இன்னும் வரும்)





Saturday, October 15, 2011

பார்வை (பகுதி-1)

                      அத்தியாயம்--1

மாடிக்கு வந்து ரொம்ப நேரமாச்சு. அந்தி சாயறத்துக்குத்தான் காத்திருக்கற மாதிரி இந்த முன்னிரவு நேரத்லே சாப்பிட்டானதும் மொட்டை மாடிக்கு வந்து காத்தாட உட்காந்துக்கறது இப்பல்லாம் ஒரு பழக்கமாவே ஆகிப் போச்சு.

சுசிலா தான் கைப்பிடிச்சு படியேத்தி விட்டுட்டுப் போனா. சாஞ்சு படுக்க ஈஸிச்சேர் செளகரியமா இருந்தாலும், வண்டாக் கொடைஞ்சு மூளையக் கசக்கின சிந்தனைப்பாரம் முழுசும் நெஞ்சில ஏறி அமர்ந்த மாதிரி கனத்தது. சில்லுன்னு சிலுசிலுப்புக் காத்து தேகத்திலே பட்டதும் தான் தெரிஞ்சது. இத்தன நேரம் முகம் பூரா வேத்துப் போயிடுத்து போல; மேல்த்துண்டால துடைச்சிண்ட போது, மனசில ஆற்றாமையின் கைப்பு கூடி அமிழ்ந்து கனத்தது.

பெண்ணுக்குத் துணை ஆண்னு ஊர் கூடித் திருமணம் செஞ்சு வைச்ச கத மாறிப் போய், நன்னா ராஜாவாட்டம் இருந்தவன் பார்வை பறிபோய் இப்போ புருஷனுக்கு துணை மனைவியாப் போன அவலத்தை எண்ணி நெட்டுயிருப்பு தான் மிஞ்சிப் போனது.

கீழ் ஹாலுக்குப் பக்கத்லே தான் பூஜை ரூம். ஒலிக்கு கால் கை இல்லேனாலும் ரெக்கை உண்டு போலருக்கு. கீழே சுசீலா பாடறது காற்றலைகள்லே தவழ்ந்து தவழ்ந்து இங்கேத் தெளிவா கேக்கறது. அவளுக்குத் தான் என்ன திவ்யமான குரல் வளம்?.. பிசிறில்லாத என்ன அழகு?.. குழைவு?..

மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம் போல என்னையே மறந்து ஈஸிச்சேரோட இரு கைப்பிடிலேயும் காலை நீட்டிப் போட்டுண்டு சாயறேன். இமைகள் ரெண்டையும் லேசா மூடிக்கறேன். இதென்ன அசட்டுத்தனம்?.. இமைகள மூடினாலும், மூடாட்டாலும் ரெண்டும் ஒண்ணு தானேன்னு சமயத்திலே தெரியறதில்லே..

அந்த பைரவியும் தோடியும் குழைஞ்ச அழகு தான் என்ன?.. 'ஜானகி ரமண.. மாமவ பட்டாபி ராமா'வில் ஆரம்பிச்சு 'யாரோ இவர் யாரோ'ன்னு அருணாசல கவிராயரின் கேள்விக் கணைகளில் நிதானமா சஞ்சரிஞ்சு, தீஷிதரரோட 'ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே'லே லயிச்சதும், கோபால கிருஷ்ண பாரதியின் 'சபாபதிக்கு வேறு தெய்வம்' சரியான காலப்பிரமாணத்தில பொருத்தமான சங்கதிகளோட அற்புதமா சுசீலாவின் குரல்ல குழைஞ்சு வந்தது. அது என்ன மாயமோ தெரியலே. திருஞான சம்பந்தரின் திருவெண்காட்டுப் பதிகம் 'கண் காட்டும் நுதலானும்' கரகரப்பிரியாலே கர்ணாமிர்தமாய்ப் பொழிஞ்ச போது மனசு இலேசாகி ஆகாசத்லே மெதந்தது.

அந்த நாலு பேர் சொன்னதெல்லாம் 'பொய் பொய்'ன்னு உள்ளம் சப்திக்கிறது. இவளை மனைவியாய் அடைய நான் எவ்வளவு பாக்கியசாலின்னு மனசு குதியாட்டம் போட்றது. அப்படியே கீழே போய் அவளை அணைச்சிண்டு, அவளோட அழகான கைகளுக்குள்ளே என்னோட கையைக் கோர்த்திண்டு, விரல் வருடி, ஆசை தீர அவள் முகத்தை விழுங்குவது போல் பார்த்து--- பார்ப்பதா?.. அது எப்படி என்னால் சாத்தியமாகும்? அது எப்படி என்னால் இயலும்?ங்கற திகைப்பு ஆளையே விழுங்கற மாதிரி மிரட்டியது.

பார்த்தவன் தான். இப்போ பார்க்க முடியாதே? 'இப்படியா பத்திரகாளி மாதிரி இட்டுக்கறது'ன்னு பொய்க் கோபத்தோட கடிஞ்சிண்டு, அவ நெத்திக் குங்குமத்தை அளவா சரி செஞ்சவன் தான். இப்போ முடியாதே?.. 'ஒண்ணு, ரெண்டு, மூணூ'ன்னு 'அடேடே முப்பத்திரண்டு இருக்கே'ன்னு அண்டப்புளுகு ஆகாசப் புளுகுடன் அவள் பற்களை எண்ணினன் தான். இப்போ அப்படி என்னாலே விளையாட முடியாதே!

விளையாடறத்துக்கும் இப்போ மனசு ஒத்துக்கலே. இதுக்கெல்லாம் காரணம், 'அந்த நாலு பேர்' சபைலே பேசின அந்த நாலு வார்த்தைகளோட தீச்சுடல் தான். சுசீலாவுக்கு இது தெரியவந்தா தாங்குவாளான்னு பயமா இருக்கு.. என்ன காரணம் கொண்டும் இது அவளோட காதுக்கு வரக்கூடாதெங்கற உறுதி நெஞ்சில் கூடித்து. கேட்டதெல்லாம் என்னோடையே போகட்டுங்கறங்கற உள்விழுங்கல் மனசிலே படர்ந்த உறுதியாச்சு.. இந்த உறுதி வந்ததும் தான் அதைக் கேட்ட பின்னாடியும் என்னாலே செளஜன்யமாய் உக்காந்து முழுக் கச்சேரியும் ரசிச்சு அனுபவிக்க முடிஞ்சதுன்னு இப்போத் தோண்றது.

உடம்பு உறுப்பின் ஒண்ணோட செயல்பாடு இல்லாம போனாலே இன்னொண்னுக்கு கூடுதல் சக்தி கிடைக்கும் போல. குருட்டு விழிகள் சாஸ்வதமாப் போன அந்தகாரத்தில் அமிழ்ந்த போது செவிப் புலன்கள் கூர்மையடைஞ்சது நன்னாத் தெரியறது. 'சிலுங் சிலுங்'ன்னு படியேறி வந்த கொலுசு சத்தம் பக்கத்திலே வந்ததும் நின்னு போய், 'பால் இந்தாங்கோ.." ங்கற குரல் கேட்டது--- சுசீலா தான்.

அந்தக் குரலில் இருந்த குழைவு மனசுக்கு இதமா இருந்தது. தேவிக்குப் பிரசாதம் பண்ணின பால். சுசீலா என் கைப்பற்றிக் கொடுத்ததை வாங்கிக் குடிச்சேன்..

அம்மனுக்கு வழிபட்டப் பாலை விரல்களில் ஒத்தியெடுத்து மூளியான என் கண் இமைகளின் மேலே சுசீலா வைச்சிருக்கணும். 'ஜில்'ன்னு இருந்தது. உடல் சிலிர்த்தது. ஜில்லிட்டது அவள் விரலா, இல்லை, பாலா?---

"இதென்ன பச்சைக் குழந்தையாட்டம் அடம்?.. எவ்வளவு நேரம் இங்கேயே ஒக்காந்திருக்கறதா உத்தேசம்?.. பனி கொட்ட ஆரம்பிச்சாச்சு. கீழே போலாம், வாங்கோ.."

"----------------------"

"என்ன, போலாமா?"

நான் பதிலே பேசலே. பேசினால் தப்பித் தவறி ஏதாவது சொல்ல நேர்ந்திடுமோங் கற பயம் மனசை வாட்டித்து. இதுவரை சுசீலா என்னிடமோ இல்லை சுசீலாவிடம் நானோ எதையும் மறைச்சுப் பழக்க்கப்படாத குணம் ஆளை அசக்கிப் பாத்தது. அந்த அசக்கலின் அழுத்தத்தில் தனிமைலே இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இந்த மொட்டை மாடியிலேயே உட்கார்ந்திருக்கணும் போலத் தோணித்து.

கொஞ்ச நேரம் கழிச்சு, "என்ன, போலாமா?"ன்னு கேட்டதையே மறுபடியும் சுசீலா கேட்டது உரைத்தது. அவளுக்கும் என்ன பேசறதுன்னு தெரிலே போலிருக்கு. அல்லது என்னை மாதிரியே பேசறத்துக்கும் ஒண்ணுமில்லாம இருக்கலாம். இல்லே, ஆற்றாமையின் பாஷையே மெளனம் தானோ?.. இப்படி பேசாம இருக்கறது தான் மனசுக்கு பிடிச்சும் இருக்கு. மாத்தி மாத்தி ஒருத்தருக்கொருத்தர் பேசறதை விட இந்த மாதிரி இருந்துட்டுப் போறது எவ்வளவோ தேவலாம்.

"என்ன, நா மனுஷியாத் தெரியலையா? காதுலே விழலே?"-- உரிமை குழைஞ்சது.

பிடிக்காததைச் செய்யற ஒரு வீம்புத்தனத்தோட உள்ளேந்து எழுந்த ஒரு குரல் பிடிக்கு அடங்காம ஓலமிட்டது.

"வாயிலே என்ன கொழுக்கட்டையா? பேசினா முத்தா உதிர்ந்திடும்?"

"ஆமாம், முத்துதான் உதிர்ந்திடும்"ன்னு அடித்தொண்டையில் கொஞ்சம் அதிர்ந்து வெளிப்பட்ட வார்த்தைகள் என்னோடது மாதிரியே தெரியலே "மனுஷனைக் கொஞ்சம் நிம்மதியா விடமாட்டே?"ன்னு சீறின சீறலில் அவளை மனம் நோகடிக்கக் கூடாதுங்கற பரிதாபமே முழுசா என்னை வியாபிச்சிருந்தது..

இது நாள் வரை நா இப்படிக் கத்திப் பேசினது கிடையாது. அதனால் எல்லாம் உள்ளுக்கு ஒட்டாத வெளிக்குத்தான்னு எனக்கு நன்னா தெரிஞ்சது. ஆனா சுசீலா பயந்து போயிட்டாள்ங்கறதை என்னாலே யூகிக்க முடிஞ்சது. ஒரே நிமிஷத்லே பயம் விசும்பலா மாறி, அடுத்த நிமிஷம் 'ஓ'ங்கற குமுறலோட அவளோட பூ முகம் என் மடிலே புதைக்கப்படும்னு நா எதிர்ப்பார்க்கவே இல்லை.

பூப்பந்தைக் கட்டிண்ட மாதிரி இடுப்புப் பிரதேசத்தில் மெத்துன்னு தோணி அடுத்த வினாடியே இலேசாகிப் போனது. நாங்கள் சாரையும் சர்ப்பமும் போலக் கொஞ்சிக் குலவின நாட்கள்லேலாம்-- ஒருவித மனசுக்குப் புடிச்ச வெதுவெதுப்பு தான் உடம்பைக் கதகதக்க வைக்கும். அந்த வெப்பம் இப்போ இல்லே; படபடப்பிலே தான் உடம்பு என்ன செய்றதுன்னு தெரியாமல் திகைச்சது...

'நீங்க--நீங்களே-- இப்படி என் மேலே எரிஞ்சு விழுந்தா நா என்ன செய்வேன்?.. நா என்ன தப்பு செஞ்சேன்?"ன்னு குழந்தை மாதிரி சுசீலா கேவறா.

எனக்கு என்ன பேசறதுனே தெரியலே; நானும் அவளுமேன்னு பழக்கப்பட்டுட்ட பந்தத்தில அரக்கன் மாதிரி இப்படி நடந்து கொள்ளலாமான்னு என் மனசே என்னை இடிச்சுக் காட்டினது. எங்க ரெண்டுபேருக்குமே சொந்தமான உலகத்தில வெளிமனுஷாளின் பேச்சும் நடவடிக்கைகளும் புகுந்து கொள்ள எப்படி நா அனுமதிச்சேங்கற திகைப்பு என்னைச் சுட்டது. யாரோ எதுவோ சொன்னது பாதிக்கற அளவுக்கு அவ்வளவு பலஹீனமானதா எங்கள் உள்ளப் பிணைப்புன்னு உள்ளம் சமயம் பார்த்து இடிச்சுக் காட்டினது. 'வாரி அணைச்சுக் கொள்ற தருணம் இது'ன்னு உணர்வில்ஜோதி பத்திண்டதும் அவளைத் தூக்கி ஆசுவாசப்படுத்த கை நிமிர்ந்த பொழுது, மடியில சுமந்திண்டிருந்த கனம் குறைஞ்சது. தலையை நிமித்தி மடிலேந்து தூக்கிண்டுட்டாங்கறதை உணர்ந்தேன். பொட்டுன்னு கையிலே ஒரு துளி சூடான ஜலம் விழுந்த உணர்ச்சி. கண்ணீரோ?..

அந்தக் காலத்தில்-- அந்தக் காலத்தில் என்ன அந்தக் காலத்தில்-- ஒரு மாசத்துக்கு முன்னாடி கூட அவள் ஆனந்தக் கண்ணீர் விடறதை மனசாலே பாத்து நெகிழ்ந்திருக்கேன். பச்சை மரத்திலே ஆணியாலே கோடிழுத்த மாதிரி
இன்னும் பசுமையா அது நெனைவிலே நிக்கறது.

"சுசீ!.. இன்னும் டிரஸ் முடிஞ்சபாடில்லையா? கச்சேரிக்கு நேரமாகலே.. ஹாரன் சப்தம் கேட்டதே.. வாசல்லே கார் கூட வந்தாச்சு போலிருக்கு.."ன்னு சொல்லிண்டே நாற்காலிலேந்து தட்டுத் தடுமாறி எழுந்திருந்தேன்.

அடுத்த நிமிஷம் நெருப்பை மிதிச்ச மாதிரி 'வீல்'னு வீரிட்ட சுசீலாவோடக் குரலைத் தான் கேட்டேன். "என்ன சுசீ என்ன?"ன்னு தடுமாறியவனை, "நல்லவேளை"ன்னு ஆசுவாசப்படுத்திண்ட அவள் குரலில் அமைதி தெரிந்தது.

"என்ன-- என்ன, சுசீலா?"

"ஒண்ணுமில்லே.. நீங்க எழுந்திருந்தப்போ, ஒங்க ஒடம்பு கொஞ்சம் ஆட்டம் கண்டுட்டது. எங்கே விழுந்திடுவேளோன்னு பயந்து போய் கத்திட்டேன். மன்னிச்சிக்கோங்கோ..."

"சுசீலா.."ன்னு வாத்சல்யத்தோடக் கூப்பிட்டேன், அடித்தொண்டை தடுமாற.

"உம்?.. என்ன?.."

"இங்கே வாயேன்."

"உம்.. என்ன விஷயம்?" அவள் நெருக்கத்தோட அருகாமையை நா உணர்லே. அவள் அழகின் ஒவ்வொரு அணுவையும் அணுஅணுவா ரசிச்சிட்டு இப்போ அவளைக் கடைக்கண்ணாலே கூட பாக்க சக்தியில்லாத நான் எத்தகைய பெரும்பாவின்னு நெனைச்சிண்டேன்.

"இங்கே பக்கத்திலே வாயேன்.. சொல்றேன்."

சுசீலா வந்தா. கையைத்தூக்கி வெத்து வெளியைத் துழாவினவன், அவளோட தாமரை முகம் கையிலே தட்டுப்பட்டதும் ஆதரவோடத் தாங்கிண்டேன்.
சலவைக்கல்லைத் தடவின மாதிரியான வழுவழுப்பை உணர்ந்த ஸ்பரிசம் தொட்ட விரல்கள்ல பரவி என் தேகத்துக்கும் தாவித்து.

"சுசீ..."

"க்குங்."

"சுசீ! உண்மையிலேயே நான் ரொம்பக் கொடுமைக்காரன். மகாபாவி. உன்னை எப்படியெல்லாம் கஷ்டப்படுத்தறேன்?.. காலைலே படுக்கைலேந்து எழுந்திருக்கறதிலேந்து, ராத்திரி படுக்கையை உதறிப் போடறது வரைக்கும்..."

"உஷ்!"ன்னு அவளோட சீறலைத் தொடர்ந்து என் வாய் அவள் அழகுக் கையாலேயே பொத்தப்பட்டது.

"அப்படியெல்லாம் இனிமே பேசாதீங்கோ.."

"பேசினா?"

"பேசினாவா-- பேசினாவா?.. அப்புறம்"னு குரல் தழுதழுக்க தடுமாறிய அவள் கன்னத்தைத் தொட்டவுடன் சடாரென்று பின் வாங்கினேன்.

"என்ன சுசீலா, அழறியா என்ன?"

"இல்லையே..." அவள் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டியிருப்பாள் போலும். காது ஜிமிக்கிகள் சலசலத்தன.

"இல்லே.. பொய் சொல்றே.. கன்னத்திலே ஜலம்."

"இல்லே.. இது ஆனந்தக் கண்ணீர்! ஒவ்வொரு கச்சேரிக்குப் புறப்படறத்தேயும் என்னைக் கட்டுப்படுத்திக்க முடியலே.. உங்க பரிவையும் பாசத்தையும் நெனைச்சு.."

"நான் சொல்ல வேண்டியதை நீ சொல்றையா?"

இப்படிப்பட்ட நினைப்புகளெல்லாம் அந்தந்த சமயம், அதுக்கப்புறம்ன்னு நெனைச்சு நெனைச்சு சந்தோஷப்படடது. ஆனால், இப்பவோ....

"என்ன, ஒரேயடியா தியானத்லே ஆழ்ந்துட்டேள்?.. பனி கொட்டறதுன்னு கிடந்து அடிச்சிக்கறேனே, காதிலே விழலே?"

எண்ணச் சுழலிலிருந்து விடுபட்டவன், "என்ன சொல்றே?"ங்கறேன்.

"கீழே வாங்கோ.."

"இல்லே. நான் வரலே."

"ஏன்?"

"எனக்கு இதான் பிடிச்சிருக்கு."

"எது?"

"இங்கே-- இப்படியே உக்காந்துக்கத்தான்.."

"ஏன் இன்னிக்கு இப்படித் திடீர்னு மாறிப் போயிட்டேள்?"

சுசீலா இப்படி வெளிப்பட கேட்கற அளவுக்கு என்னை மீறி அவங்க சொன்னது என்னை பாதிச்சிட்ட்டதோன்னு நடுங்கித் துடிச்சுப் போயிட்டேன். பாவம் இவள். இவள் மட்டுமல்ல, பெண்களே பாவம் தான். இன்னொருவரைச் சார்ந்திருக்கிற சார்புப் பாவம். அயோக்கியனோ, அப்பாவியோ, முடவனோ, குருடனோ இன்னொருவரைச் சார்ந்திருக்கிற தலைவிதி.

"வர்றேளா?.. கீழே போலாம். வழக்கமா விமரிசனம் பண்ணி துளைச்செடுத்துடுவேளே?.. இன்னிக்குக் கச்சேரி எப்படி இருந்தது? அதுபத்தி சொல்லவே இல்லையே?" ன்னு ஆதுரத்துடன் என் கை பற்றினாள்.

மாட்டிக் கொள்ள தூண்டில் நெருங்கி விட்டதே போன்று மனசு படபடத்தது. அந்த படபடப்பைப் புறந்தள்ளி, "அந்த தாயே யசோதவில் நீ பண்ணின நிரவல் பிரமாதம்போ.." என்று சொல்லி அவள் பற்றின கையை குழந்தை போல் நழுவ விடப் பயந்து இறுகப் பற்றினேன்.

"முன்பனி கொட்டறது.. உங்களுக்கு ஆகாது.. கீழே போய் பேசலாம்.." என்று சுசீலா எழுந்திருந்த போது கொலுசு சிணுங்கியது.

அவள் கைபற்றி மாடிப்படிகளில் மெதுவே இறங்கினேன்.


(இன்னும் வரும்)



Related Posts with Thumbnails