அத்தியாயம்--19
இன்னிக்குக் காலைலே படுக்கைலேந்து எழுந்துக்கறச்சேயே மனசுக்கு ரொம்ப புத்துணர்ச்சியா இருக்கு.. வழக்கமா முன்னேல்லாம் கண் பார்வை இருக்கறச்சே, உள்ளங்கை ரெண்டையும் தேய்ச்சு,, பின்னாடி அதைப் பாத்துத் தான் விழிக்கறது வழக்கம். பிற்பாடு பார்வை போனதுக்கு அப்புறம் கொஞ்ச நாட்கள் வெறுமனே உள்ளங்கைகளை ஒண்ணோடு ஒண்ணு தேய்க்கறதை மட்டும் செஞ்சிண்டு மனசில் உள்ளங்கைகளைப் பார்க்கறதா பிரமையை மட்டும் பதிச்சிண்டிருந்தேன். நாளாவட்டத்திலே அந்தப் பழக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாது போனது..
இன்னிக்கு என்னவோ எழுந்திருக்கறச்சேயே அந்தப் பழக்கம் நினைவுக்கு வந்து உள்ளங்கை இரண்டையும் தேய்ச்சிண்டு, அதை கண் ஒத்திப் பாக்க முடியாட்டா லும், சீக்கிரத்தில் முன்னே மாதிரியே பாக்கற சக்தியைக் கொடு தாயேன்னு தெய்வத்தை வேண்டிண்டேன். இன்னைலேந்து ஆரம்பிக்கற இந்த புதுமாதிரியான சிகித்சை வெற்றிகரமா முடிஞ்சு எனக்கு பார்வை பழையபடி வந்திடும்ன்னு அசாத்திய நம்பிக்கை மனசில் அதுவாகவே துளிர்விட்டது. பாஸிட்டிவாக அந்த நம்பிக்கையைக் கெட்டியாப் பிடிச்சிக்கணும்னு உறுதி பிறந்ததும் என்னைக்கும் இல்லாத உற்சாகம் மனசில் பொங்கி வழியறது...
காலைக் கடன்கள் முடிச்சு பல் தேய்த்து முகத்தைத் துண்டால் துடைசிண்டிருக்கறச்சே, "காப்பி கொண்டு வரட்டுமா?"ன்னு சுசீலா கேட்டது, கேட்கிறது..
"கொண்டு வாயேன்.. அவங்கள்லாம் எழுந்தாச்சா?"
"அவா மாடிலே தூங்கப்போனா. சித்த நேரத்துக்கு மின்னாடி குழாய் சத்தம் மட்டும் கேட்டது. உங்க தம்பி எழுந்திட்டார் போலிருக்கு. இப்போத் தான் கலந்தேன். உங்களுக்குக் கொண்டு வர்றேன்."
"தம்பியும் வந்திடட்டுமேன்னு பாக்கறேன்."
"கலந்திட்டேன். ஆறிடப் போறது. அவா கீழே இறங்கி வந்ததும், புதுசா கலந்து தர்றேன். டிகாஷன் இறங்கிண்டிருக்கு."
"சரி.."
சித்த நேரத்தில் வந்தவ, விரித்த என் கையில்லே காப்பி டம்ளரைக் கொடுக்கிறாள். ஒரு மடக்கு உள்ளே போனதுமே, தேவாமிர்தம் போலிருக்கு..
"ராத்திரி போன்லே சாந்தி பேசினான்னா"
"அப்படியா?.. என்ன சொன்னா? புது வைத்தியத்தைப் பத்தியா?"
"இல்லேன்னா. விவேகானந்தனைப் பத்தி."
"ஓ. வெரிகுட்.."ன்னு திடீர்னு ஏற்பட்ட உற்சாகத்தில் எனக்கே வியப்பா இருக்கு.. "டாக்டரம்மா விவேகானந்தனைப் பார்த்தாங்களாமா?"
"ஆமான்னா.. இங்கேயிருந்து சாந்தி கிளம்பினதுமே நேரே விவேகானந்தன் வீட்டுக்குத் தான் போயிருக்கா. நல்லவேளை, அவனும் வீட்லே இருந்திருக் கான்."
"அங்கங்கே நிறுத்தாமா சொல்லு.."
"அப்படிச் சொல்லித் தான் எனக்கு பழக்கம். அதைத் தெரிஞ்சே வேறே மாதிரி சொல்லுன்னா, எப்படிச் சொல்றது, சொல்லுங்கோ."
"சரி. அதுக்காக சிணுங்காதே. உன் வழிலேயே சொல்லு."
"இவ்வளவு வயசாச்சே தவிர நம்மளுக்கும் பல விஷயம் தெரிலேன்னா."
"என்ன தெரியாம போயிடுச்சுன்னு சொல்லு."
"சின்னஞ்சிறுசுகள் ரெண்டும் எப்படா இந்த கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சு அடுத்தாப்பலே நடக்க வேண்டியதெல்லாம் நடக்கும்ன்னுட்டு காத்திண்டிருக்கறது உண்மை தான்... அந்த பரபரப்புக்கு நடுவேயும் இந்தப் பையன் கொஞ்சம் கூட பதட்டப் படாம முறையா எல்லாம் நடக்கணும்ங்கற திலே எவ்வளவு அக்கரையா இருக்காங்கறது தான் எனக்கு ஆச்சரியமா இருக்கு."
"எதுக்குத் தான் நீ ஆச்சரியப்படலே, இதுக்கு ஆச்சரியப்படாம இருக்கறதுக்கு!
அவனுக்கு குடும்ப பாசம் ஜாஸ்தி. எதுவும் முறைப்படி நடக்கணும்னு தான் விரும்புவான்னு எனக்குத் தெரியும்."
"தெரிஞ்சு என்ன பிரயோஜனம்? அவனுக்கும் அவனைப் பெத்த அப்பா அம்மா இருக்கா, அவா கிட்டே பேசி அவா சொல்றதையும் கேட்டுண்டு அவங்க ஒப்புதலோட அதுக்கு மேலே உங்க தம்பி கிட்டே விஷயத்தை ஆரம்பிக்கணும்னு கொஞ்சமாவது நீங்களோ நானோ நெனைச்சுப் பாத்தோமா? சொல்லுங்கோ.."
சுசீலா கேக்கறது நியாயம் தான். விஷயம் நடக்கணும்ங்கற வேகம் பலதை யோசிச்சுப் பாக்க வைக்காம புத்தியை பல நேரங்கள்லே மழுங்கடிச்சிடுது. "சுசீலா, ஒப்புத்துக்கறேன். நமக்குன்னு எதுவும் இல்லாம போயிட்டதனாலே, இந்த அனுபவமெல்லாம் புதுசாப் போயிட்டது. தப்பு என் மேலே தான். மேற்கொண்டு என்ன நடந்தது, டாக்டர் அம்மா என்ன சொன்னாங்கங்கன்னு நீ சொன்னேன்னா புண்ணியமாப் போகும்.."
"அதைத் தானே சொல்ல வந்தேன். நீங்க வேறே குறுக்கே குறுக்கே ஏதாவது சொன்னா, எனக்கும் அவ சொன்னதெல்லாம் மறந்து போயிடும். கொஞ்சம் இருங்கோ. டிகாஷன் எறங்கிடுத்தான்னு பாத்திட்டு வந்திடறேன்."
"நடந்ததை சொல்லிட்டு அதைப் பாக்கப் போகக்கூடாதா?"
"தோ வந்திட்டேன்.." என்று போனவள் தான். ஆளையே காணோம்.
ஹாலில் தம்பியோட குரல் கேக்கறது. எழுந்திட்டான் போலும்.
"அண்ணி.. ரொம்ப நாளாச்சு இப்படி வாகா காப்பி குடிச்சு.."ன்னு அவன் சொன்னது கேட்டதும் தான், அவனுக்கும் காப்பி கலந்து கொடுத்து விட்டாள்னு தெரியறது. பாவம். ஒண்ணு மாத்தி ஒண்ணுன்னு அவளும் எத்தனையைத் தான் சமாளிப்பாள்ன்னு எனக்கும் அவளை நெனைச்சு இரக்கமா இருக்கு..
இருந்தாலும் சட்டுபுட்டுன்னு அவளும் டாக்டர் சாந்தி போன் பண்ணிச் சொன்னனதைச் சொல்லிட்டுப் போயிருக்கலாம்னு தான் திருப்பித் திருப்பி மனசு நெனைக்கிறது. சுசீலா சொன்னதிலேந்து, அடுத்த வேலை விவேகானந்தனோட அப்பாக்கு அவரோட பையன் சம்பந்தமாய் நம்ம புரோப்பசலை வைக்க வேண்டியது தான்னு தோண்றது. பெண்ணுக்குப் பெரியப்பா நான்; இந்த கல்யாணத்தைப் பொறுத்த மட்டில் இங்கேயும் அங்கேயும் ரெண்டு பக்கமும் பேசி அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டியது என்னோட பொறுப்புன்னு மனசார நெனைக்கறேன். அதுக்காக அடுத்தது அடுத்ததுன்னு நெறைய வேலைகள் பாக்கி இருக்கு..
டாக்டர் சாந்தி ரொம்பவும் இண்ட்லிஜெண்ட். அடுத்தாப்லே அவங்க என்ன செஞ்சிருக்காங்க்ன்னு தெரிலே. போன்லே சுசீலாகிட்டே சொல்லியிருக்கலாம்.
அதையாவது இவள் சொல்லிட்டுப் போயிருந்தா, மேற்கொண்டு என்ன செய்யணும்னு முடிவெடுக்கலாம்னா, அதுவும் சொல்லாம போயிட்டாளே..' ன்னு நெனைச்சிண்டிருக்கறச்சேயே..
"என்னண்ணா, எழுந்தாச்சா?"ன்னு கேட்டுண்டே விஸ்வநாதன் ரூமுக்குள் நுழையறான்.
"வாப்பா.. எழுந்து காப்பியெல்லாம் கூட ஆச்சு."
"அப்படியா?.. ஃபைன். மணி ஏழாறது. பத்துக்கெல்லாம் எல்லாரும் வந்திடுவா.
அதுக்குள்ளே நாம எல்லாரும் ரெடியாகணும் இல்லையா?"ன்னு அவன் கேட்கிற பொழுது தான், இன்னிக்கு எனக்கு ஆரம்பிக்கப்போற புது வைத்தியம் நினைப்பிலேயே இவன் இருக்கான்னு தெரியறது. எனக்கும் இப்போத் தான் அதுவும் நினைப்புக்கு வர்றது.
நல்ல வேடிக்கை.. இவன் பெண்ணோட எதிர்கால நலனைப் பத்தி நான் யோசிச்சிண்டிருக்கேன். இவன் என்னடான்னா, என்னோட நலனைப் பத்தியே சிந்தனைலே இருக்கான்!
எதுக்கு எது முந்தின்னு தெரிலே. எல்லாம் முக்கியம் தான். ரெண்டையும் போட்டுக் குழப்பிக்காம ரெண்டுலேயும் முழு கவனத்தைப் பதிக்கணும்னு நெனைச்சிக்கறேன்.
இப்பவே சங்கரி கல்யாணம் பத்தி நாங்க நினைச்சிருக்கறதை இவனிடம் சொல்லிடலாமான்னு நெனைக்கிறேன். நான் சொன்னா இவன் அதுக்கு மறுப்பு ஒண்ணும் சொல்லப் போறதில்லை. அவன் மறுப்பு சொல்றத்துக்கும் எது ஒண்ணும் இருக்கறதா எனக்குத் தெரிலே. அவனைப் பொருத்தமட்டில் நான் எது சொன்னாலும் சரிதான். இவன் என்ன சொல்றான்னு தெரிஞ்சிண்டு, அதுக்கு அப்புறம் விவேகானந்தன் அப்பாவை அப்ரோச் பண்ணறதும் நல்லது தான்.
எக்குத் தப்பா பேச்சு வார்த்தைலே எதாச்சும் மாறிப் போனாக் கூட, சொந்த தம்பிக்கு சமாதானம் சொல்றது சுலபம். எல்லாம் நினைப்பாவே இருக்கறது ரொம்ப தப்பு. அடுத்த கட்டத்திற்கு மூவ் ஆனால் தான், அதுக்கு அடுத்த கட்டத்திற்கு அதை நகர்த்தலாம். எத்தனை கட்டம் தாண்டணுமோ, அதுவும் தெரிலே. இப்போதைக்கு தம்பி கிட்டே லேசா கோடி காட்டி, ஆரம்பிச்சு வைக்கலாம்னு நான் நெனைச்சிண்டிருக்கறச்சே, வாசல் காலிங்பெல் கணகணக்கிறது.
புரொபசர் பத்து மணிக்கு வர்றதாச் சொல்லியிருந்தாலும், டாக்டர் சாந்தி கொஞ்சம் முன்னாடியே வந்திட்டாங்க போல இருக்கு. அவங்க குரல் தான் உற்சாகமா கேக்கறது.
ஏன் அப்படி முன்னாடி வந்தாங்கன்னு பின்னாடி தான் தெரிஞ்சது. தெரிஞ்சது அது மட்டுமில்லே, ஒவ்வொரு விஷயத்தையும் நான் எவ்வளவு மேலோட்டமா பாக்கறேங்கறதும் எல்லாத்தையும் எங்கிட்டே அவங்க சொல்லறப்போத் தான் தெரியறது..
(இன்னும் வரும்)