மின் நூல்

Friday, November 25, 2011

பார்வை (பகுதி-13)

                    அத்தியாயம்--13

ரு பெரிய நீண்ட கதையைச் சொல்கிற மாதிரியான தோரணையுடன் விஸ்வநாதன் சொல்லிக் கொண்டுவந்ததைக் கேட்க எனக்கும் சுவாரஸ்யத்தைத் தாண்டி வெளியூர்களில் இவன் என்ன கஷ்டமெல்லாம் பட்டு வளர்ந்து வந்திருக்கிறான் என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருந்தது. அதனால் இடையிடையே குறுக்கிடாமல் அவன் சொல்வதை மனசில் வாங்கிக் கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தேன். சினிமா சம்பந்தப்பட்டு அவன் வாழ்க்கை அமைந்ததாலோ என்னவோ அந்த கதை சொல்லும் நேர்த்தி அவனிடம் ஆழப் பதிந்திருந்திருப்பது அவன் பேச ஆரம்பித்தாலே எனக்குத் தெரிந்தது.

"சினிமாவைப் பற்றி அதுவரை எதுவும் தெரியாத என்னை படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்ற போது பார்ப்பது எல்லாமே வேடிக்கையாக இருந்தது. பம்பாயின் பிரபல ஸ்டூடியோ ஒன்றின் எக்ஸ்டன்ஷன் மாதிரி இருந்த தனி இடத்திற்கு என்னைக் கூட்டிச்சென்றார் சிவநேசன். அந்த ஸ்டூடியோவின் எல்லா பகுதிகளிலும் இவர் வந்ததும் ஒதுங்கி நின்று வணக்கம் சொல்கிற மாதிரியான ஒரு மரியாதை மற்றவர்களுக்கு இவரிடம் இருந்தது அங்கு நுழைந்தவுடனேயே எனக்குப் புலப்பட்டது.." என்று அவன் சொன்ன போது திருவையாறை விட்டு அவன் போனது கூட ஒருவிதத்தில் நல்லதுக்குத் தான் என்று எனக்கு அந்தசமயத்தில் தோன்றியது. பல இடங்களுக்குப் போனால் தான் பல விஷயங்கள் தெரிய வருகிறது என்கிற அர்த்தத்தில் அப்படி நினைத்துக் கொண்டேன் போலிருக்கு.

"அந்தக் கட்டடத்திற்குள் போனதும் நடு ஹாலில் ஜமக்காளம் போட்டு ஏழெட்டுப் பேர் அமர்ந்திருந்தனர். நடுநாயகமாக இருந்தவர் ஆர்மோனியப் பெட்டிக்கு முன்னால் உட்கார்ந்திருந்தார். பிடிலைப் பிடித்திருந்தவனுக்கும் கிட்டத்தட்ட என் வயசு தான் இருக்கும். அப்புறம் புல்லாங்குழலுடன் இன்னொரு இளைஞன். மற்றும் தபலா, சாரங்கி போன்றவற்றுடன் இன்னும் இருவர். ஆர்மோனியப் பெட்டியுடன் இருந்தவர் சிவநேசனைப் பார்த்தவுடன் அவர் வந்ததை அங்கீகரித்த மாதிரி ஒரு புன்முறுவலுடன் உட்கார்வதற்கு தீண்டுகள் இருந்த பக்கம் கை காட்டினார்.

"அன்று தான் ஒரு திரைப்படப் பாடலுக்கு எப்படி இசை அமைக்கிறார்கள் என்று நான் தெரிந்து கொண்டேன். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேல் அங்கு உட்கார்ந்திருப்போம். உட்கார்ந்த அந்த இரண்டு மணி நேரமும் நேரம் போனதே தெரியவில்லை. ஆர்மோனியப் பெட்டியின் சுருதி கூட்டிய வாசிப்பிற்கேற்ப ஒவ்வொரு வாத்தியமும் தனித்துவமாய் இசைக்கப்படுவதைப் பார்ப்பதே தனி அனுபவமாய் இருந்தது. பாதியில் சடக்கென்று என்னைப் பார்த்து கிளம்பலாம் என்கிற மாதிரி சைகை செய்தார் சிவநேசன். எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் அங்கிருக்கலாமே என்று தோன்றியது. இருந்தாலும் நான் விரும்புவதைச் சொன்னால் ஒருகால் சிவநேசனுக்கு அது பிடிக்காமலிருக்கலாம் என்று பேசாமல் இருந்து விட்டேன். எல்லாவற்றையும் தீர்மானிப்பது அவராகவே இருந்தார். இடையில் என்னை ஏதாவது கேட்பது அவர் அடுத்து செய்யப் போவதைத் தெரியப்படுத்துகிறார் என்றே நான் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று புரிந்து கொண்டிருந்தேன். ஆகவே அவர் அங்கிருந்து கிளம்புவதற்காக எழுந்திருந்ததும், நானும் அவருடன் கிளம்பி வெளியே வந்து விட்டேன்.

"வெளியே வந்ததும், "நன்றாகப் பார்த்துக் கொண்டாயா? நாளைக்கு நாம் இங்கு வருகிறோம். இந்த குரூப்பில் நீதான் வயலின் வாசிக்கிறாய்.." என்றார்.

"எனக்கு வயலினைத் தனியாக வாசித்துத் தானே பழக்கம்?.. ஒரு குருப்பில் அவர்கள் வாசிக்கிற மாதிரி துண்டு துண்டாக வாசிக்க.." என்று நான் சொல்லி முடிப்பதற்குள் "போகப்போக எல்லாம் பழக்கமாகி விடும்; நான் சொல்லித் தருகிறேன்" என்றார். எனக்கும் அப்படி வாசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருந்ததால் "சரி" என்றேன்.

"அந்தக் குரூப்பில் வாசித்து பழகியது போக, காலையும் மாலையும் தனிப்பட்ட முறையில் சிவநேசன் எனக்கு பயிற்சியளித்தார். சில நேரங்களில் ஆர்மோனியப் பெட்டியை என்னிடம் தந்து விட்டு அவர் வயலின் வாசித்துச் சொல்லித்தருவார். என்னை இப்படியான முறையில் பயிற்றுவிப்பதில் என்னை விட அவர் அக்கறை கொண்டிருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. அதுவே எனக்கு ஆச்சரியத்தைத் தந்து அவரிடம் மதிப்பும் கூடியது.

ஒரு வாரம் போயிருக்கும். ஒரு நாள் காலை சிவநேசன் என்னை அருகில் அமர வைத்து நிறைய விஷயங்கள் சொன்னார். அவர் சொல்லச் சொல்ல எனக்கு கேட்க ஆர்வமாக இருந்தது. "மொத்தம் பத்து குரூப்கள். ஒவ்வொரு குருப்புக்கும் பத்து பேர். ஆக, நூறு பேர். எக்ஸ்ட்ராவாக ஒன்றுக்கு மேற்பட்ட வாத்தியங்களை வாசிக்கத் திறமை பெற்றவர்கள் இருபத்தைந்து பேர். உன்னைச் சேர்த்து நூற்று இருபத்தைந்து பேர்கள். நான் திருவையாறு வந்திருந்த பொழுது உன்னைப் பார்த்தது, அந்த தியாகராஜ சுவாமிகள் கருணைன்னு தான் நெனைக்கிறேன். 'நீ தேடிண்டிருக்கற கலைஞன் இதோ இருக்கிறான், பார்'ன்னு அவரே எனக்குக் காட்டிக் கொடுத்த மாதிரி இருக்கு. இந்த பத்து குரூப்பிலும் வயலின் வாசிக்கத் தெரிந்தவர்கள்லே நீ தான் டாப். ஆர்மோனியத்தை அழகா வாசிக்க நான் கத்துக் கொடுத்திடறேன். நீ நன்னா வருவே பார்" என்றார்.

"எனக்கு ஒண்ணும் புரிலே. 'எதுக்கு இந்த க்ரூப்பெல்லாம்?.." என்று அவரிடம் கேட்டேன்.

"'ஒரு இலட்சியத்தை சாதிக்க'.. என்றார் சுருக்கமாக. 'பத்து க்ரூப்பைச் சேர்ந்த நூறு பேரும் நூறு வீரர்கள். வீணை, புல்லாங்குழல், கஞ்சிரா, வயலின்ன்னு ஒவ்வொருத்தர் கைலேயும் ஒவ்வொரு ஆயுதம். அத்தனை பேரும் இந்த இசைக்காக தங்களையே தத்தம் பண்ணினவங்க.. அதிலே நீயும் ஒருவங்கறதே உனக்குப் பெருமை. உனக்கிருக்கிற திறமைக்கு, இந்த இலட்சியப் பிடிப்பும் ஏற்பட்டுட்டா, நீ எல்லாருக்கும் தலைமை தாங்குவே" என்றார்.

"என்ன இலட்சியம்ன்னு நீங்க சொல்லவே இல்லையே?"ன்னு கேட்டேன்.

"சொல்றேன்னு சொல்லிட்டு நிதானமாச் சொன்னார். அவர் சொல்லச் சொல்ல கொஞ்சம் கொஞ்சமாக நானும் அந்த இலட்சியத்திற்கு இழுக்கப்படுவது எனக்கே நன்றாகத் தெரிந்தது.." என்றான் விஸ்வநாதன்.

பொறுமை இழந்து, "அது என்ன இலட்சியம்னு நீயும் சொல்லவே இல்லையே, விஸ்வநாதா?" என்று கேட்டேன்.

இப்பொழுது விஸ்வநாதன் எனக்குக் கைக்கெட்டும் தூரத்தில் நகர்ந்து வந்து உட்கார்ந்து கொண்ட மாதிரித் தெரிந்தது. கொஞ்சம் தீர்க்கமான குரலில் அழுத்தமாக, "சொல்றேன், அண்ணா" என்றான்.


(இன்னும் வரும்)


Friday, November 18, 2011

பார்வை (பகுதி-12)

                    அத்தியாயம்--12

குரு பக்திக்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். விஸ்வநாதன் தன் குரு மீது கொண்டிருந்த அன்பு அத்தனையிலும் சேராமல் தனித்து தெரிவதாக எனக்குத் தோன்றியது. வயலினை எப்படிப் பிடிப்பது என்பதிலிருந்து விஸ்வநாதனுக்கு பாடத்தை ஆரம்பித்து வைத்தவர் அவர். குருகுல வாசம் மாதிரி அவருடனையே தங்கி, வேண்டிய பணிவிடைகள் செய்து தனயன் தந்தையைப் பார்த்துக் கொள்வது போல அவரைப் பார்த்துக் கொண்டவன் அவன். அவருக்காக தான் பிறந்த வீட்டையே மறந்து வித்தை கற்றுக் கொடுத்த அவரே தனக்கு சகலமும் என்று மனசார எண்ணியவன் அவன்.

அவர் இல்லாத உலகம் சூன்யமாக அவனுக்குப் பட்டதில் ஆச்சரியமில்லை. அவரது காரியம் முடியும் வரை இழுத்துப் போட்டுக்கொண்டு எல்லாமும் செய்திருக்கிறான். சகலமும் அவரே என்று எண்ணியவனுக்கு அவரது கடைசி காலத்தில் சகலமும் அவனே ஆனான். எல்லாமும் முடிந்த பிறகு தஞ்சை மாவட்ட பிரசித்திபெற்ற ஒவ்வொரு கோயிலுக்கும் சென்று அவரின் நற்கதிக்காக இறைவனை வேண்டி உருகி உருகி வாசித்திருக்கிறான். எல்லாக் கோயிலிலும் அவன் பிரார்த்தனை முடிந்த பிறகு கடைசியில் தியாகையர் சமாதிக்கு வந்து, 'சகல வாத்தியக்காரர்களு க்கும் குருவான குருவே! இவன் குரு, இவன் இப்படி வாசிக்க என்ன பேறு பெற்றானோ என்று என் குருவிற்கு பெருமையளிக்கும்படி வாசிக்க அருள் பாலியும்" என்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்து அவரை வணங்கியிருக்கிறான்.

எப்பொழுது எழுந்தானோ, எப்பொழுது தன் பிடிலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தானோ யாருக்கும் தெரியாது. தன் நினைவு மறந்து, தன் நிலை மறந்து ஆவேசம் வந்தவன் போல் அவன் வாசித்து முடித்து அவனுக்குள்ளேயே அந்த வாத்தியம் இசைத்த இசை அடங்கிய தருணம், "தம்பி.." என்று அன்போடு அவனை அழைத்த குரல் அரைகுறை நினைவில் அவனுக்குக் கேட்டிருக்கிறது.

மலங்க மலங்க விழித்தபடியே நிமிர்ந்து பார்த்தவன் ஆஜானுபாகுவாய் செக்கச் செவேலென்று முகம் நிறைய பூத்துக் குலுங்கும் சிரிப்புடன் தன் எதிரே நின்றிருந்த வரை நிமிர்ந்து பார்த்தான். அவருக்குத் தாராளமாய் ஐம்பது வயது இருக்கலாம். பஞ்சக்கச்சம், இடுப்பில் சுற்றிய அங்கவஸ்திரம், திறந்த மார்பு, நெற்றி நிறைய கோணல் மாணல் இல்லாமல் அளவெடுத்துப் பூசியதே போன்ற வீபூதிக் கீற்றுகள், தீர்க்கமான விழிகளின் துளைத்தெடுக்கும் பார்வை என்று ஒரே வினாடியில் உள்வாங்கிக் கொண்ட அவரின் தோற்றம் அவனுள் மிகுந்த மரியாதையைத் தோற்றுவித்திருக் கிறது.

'தாங்கள் யாரோ?' என்று அவன் கேட்க நினைத்ததை பார்வையிலேயே புரிந்து கொண்டவர் மாதிரி, "எனக்கு பம்பாய். ஆராதனைக்குத் தவறாமல் ஜனவரி மாதத்தில் இங்கு வந்து விடுவேன். இந்த முறை முதல் தடவையாகத் தப்பிப் போய்விட்டது. போகாமல் இருக்க மனசு கேட்கவில்லை. அதனால் தான் ஆராதனையெல்லாம் முடிந்து போனாலும் ஓடி வந்து இந்தக் கட்டையை இங்கே சேர்ப்பித்து விட்டேன்" என்றார்.

"அப்படியா?.. தங்கள் அறிமுகம் கிடைத்ததில் ரொம்ப சந்தோஷம்."

"தம்பீ! அற்புதமாக வாசித்தீர்கள். உங்கள் பிடில் பேசுகிறது. வழக்கமாக ஆராதனைக்கு இங்கு வரும் பொழுதெல்லாம் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை வித்வான்கள் எல்லாம் சேர்ந்து பாடும் பாக்யத்தை கண்ணால் பார்க்கவும், காதால் பருகவும் அதிர்ஷ்டம் கிடைக்கும். வித்யாசமாக இப்போ வந்த பொழுது உங்களின் தனிப் பிடில் வாசிப்பைக் கேட்டு புளகாங்கிதம் அடைய சந்தர்ப்பம் கிடைத்தது" என்றார்.

"எல்லாம் என் குருநாதர் அருள்" என்று பவ்யமாகச் சொன்ன விஸ்வநாதனை ரொம்பவும் பிடித்து விட்டது அவருக்கு.

அவர் பம்பாயில் திரைப்படத் துறையில் இருப்பவராம். இங்கு தஞ்சாவூரில் தான் பிறந்திருக்கிறார். சிறுவயதிலேயே அவருக்கு இசையில் மிகுந்த ஆர்வமாம். அந்த ஆர்வம் அவரைத் திரைப்படத்துறைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. கோடம்பாக்கம், கோவை பஷிராஜா ஸ்டூடியோ, சேலம் மார்டன் தியேட்டர்ஸ் என்று சுற்றித் திரிந்ததில் சேலத்தில் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. ஒரு வேலையாக மார்டன் தியேட்டர்ஸ் வந்த பம்பாயைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர், திரும்பிப் போகும் பொழுது தன்னுடன் கூட்டிச் சென்று விட்டாராம். எல்லாம் அவர் சொல்லி விஸ்வநாதனுக்குத் தெரிந்தவை.

விஸ்வநாதனைப் பற்றியும் எல்லா விவரங்களையும் விசாரித்திருக்கிறார். எங்களைப் பற்றி, தன் குருவைப் பற்றி, அவர் காலமானதைப் பற்றி, அவர் அருகாமையை மறக்க முடியாத துயரத்தில் தான் அலைந்து திரிவது பற்றி என்று எல்லாவற்றையும் அவரிடம் சொல்லியிருக்கிறான். அத்தனையையும் கேட்ட அவர், "விஸ்வநாதா! ஒன்று கேட்பேன். மறுக்காமல் சரியென்று சொல்ல வேண்டும்" என்று கேட்டிருக்கிறார்.

இவன் தயங்கியபடியே, "என்ன சொல்லுங்கள்" என்று அவரிடம் கேட்டிருக்கிறான்.

"புதிதாக ஒன்றுமில்லை. இருபது வருடங்களுக்கு முன் சேலம் மார்டன் தியேட்டர்ஸ் படப்பிடிப்பு அரங்கில், அந்த பம்பாய்க்காரர் என்னிடம் கேட்டது தான். நீ என்னுடன் பம்பாய் வந்து விட வேண்டும். அது தான் நான் உன்னிடம் கேட்கும் வரம்" என்றிருக்கிறார்.

"வந்து?..."

"ஹிஸ்ட்ரி ரிபீட்ஸ் என்று சொல்வார்கள். நான் உச்சாணிக்கொம்பில் ஏறிய கதை உனக்கு நடக்கப் போகிறது. உன்னிடம் இருக்கும் இந்த வாசிப்புத் திறமை தேசமெல்லாம் பவனி வர வேண்டும். அதற்கு நானாச்சு.." என்றிருக்கிறார்.

அந்த சமயத்தில், 'மறுக்காமல் அவருடன் போ!' என்று தன் உள்மனம் தனக்கு உத்திரவிட்டதாக விஸ்வநாதன் என்னிடம் சொன்னான்.

விஸ்வநாதன் இதைச் சொல்லும் பொழுது,"அந்த சமயத்தில் எங்கள் ஞாபகமே உனக்கு இல்லையா?.. வீட்டுக்கு வந்து அதை எங்களிடம் சொல்லிவிட்டுக் கூட அவருடன் நீ சென்றிருக்கலாமே? ஏன் அப்படிச் செய்யவில்லை?" என்று கேட்டேன்.

அதற்கு விஸ்வநாதன் சொன்ன பதில் என்னையும் திகைக்கச் செய்தது. "நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் திருச்சியில் ப்ளைட்டைப் பிடிக்க உடனே கிளம்ப வேண்டும் என்று அவர் அவசரப்படுத்தினார். அதேசமயம், 'ஏன் தாமதிக்கிறாய், உடனே அவருடன் கிளம்பு' என்று தன்னில் ஒரு அறிவுறுத்தல் கிளர்ந்ததாக விஸ்வநாதன் என்னிடம் சொன்னான்.

இன்னொன்றும் சொன்னான். இப்பொழுது தான் அவர் பெயரைக் கேட்க வேண்டும் என்றும் அவனுக்குத் தோன்றியதாம். அந்த உணர்வு வந்ததும் அவர் பெயரைக் கேட்டிருக்கிறான்.

"சிவநேசன்.." என்று அவர் தன் பெயரைச் சொன்னதும், ஆச்சரியத்துடன் மறுபேச்சு பேசாமல் அவருடன் கிளம்பிவிட்டான். இறந்து போன அவனின் குருவின் பெயரும் சிவநேசன் தான். குருவே இன்னொருவர் உருவில் வந்து தன்னை அழைத்துப் போவதாக அவன் உணர்ந்ததாகச் சொன்னான். 'எதுக்காக போகிறோம்' என்பதெல்லாம் அவன் நினைவில் அவ்வளவு சரியாகப் படிந்ததாக அவனுக்குத் தெரியவில்லையாம். 'குரு கூப்பிடுகிறார்; மறுக்காமல் அவருடன் போகவேண்டும்' அது ஒன்றுதான் அவன் நினைவில் நித்யமாகி அவனை உந்தித் தள்ளித்தாம்.

அவனது அந்த நிலைலை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. தான் வேறு, தன் மனம் வேறு என்று இருக்க முடியாது. தன்னின் எல்லா செயல்களுக்கும் மனம் ஒத்துழைக்கும் என்றும் சொல்ல முடியாது. மனம் வழிகாட்டியாக செயல்படும் தருணங்களில், அந்த வேலை அற்புதமாக முடிந்து விடுவதைக் காணலாம். உடல், உள்ளம், செயல்பாடு என்று மூன்றும் ஒன்று குவியும் தருணங்கள் அவை. அப்படிப் பட்ட சமயங்களில் அது அதை அது அதன் போக்குக்கு விட்டுவிடுவதே புத்திசாலித்தனம் என்பதை அறிந்து, "அப்புறம்?" என்றேன்.

'திருச்சி போகையில் வழியெல்லாம் நிறைய பேசிக் கொண்டே வந்தார். என் குரு மாதிரியான தீர்க்கமான பேச்சு இல்லை அவரது. அவர் பேசுவதில் நிறைய காரியார்தமான விவரங்கள் இருந்தது. அவர் பேசியதில் நிறைய எனக்குப் புரியவே இல்லை. இருந்தாலும், என் குரு என்னில் சொன்னதால் போகிறோம் என்கிற நினைப்பிலேயே இருந்தேன். அப்புறம் தான் உணர்ந்தேன். என் குரு அவரில் இல்லை; என்னில் இருந்து தான் என்னை வழிநடத்துகிறார் என்று. அந்த நினைப்பு வந்ததும் மானசீகமாக குருவை வணங்கினேன்' என்று விஸ்வநாதன் சொன்னான்.

தம்பி சொல்வதை சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டே வந்தவன், "அப்புறம்?.." என்றேன்.


(இன்னும் வரும்)

Tuesday, November 15, 2011

பார்வை (பகுதி-11)

                        அத்தியாயம்--11
ங்கு-- தம்பி வீட்டிற்கு-- வந்து நாலு நாளுக்கு மேலாகி விட்டது. கடந்து சென்ற இந்த நாலு நாளில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி. எனக்குத் தான் கொட்டு கொட்டென்று உட்கார்ந்திருக்க மிகவும் சிரமமாக இருந்தது. போதாக்குறைக்கு என்னை மாதிரி வெறுமனே உட்கார்ந்திருக்கிற இன்னொரு ஜீவன் வேறே. தம்பி சம்சாரத்தின் அம்மாவைத் தான் சொல்கிறேன்.

'என்ன, ஏது'ன்னு எங்கிட்டே யாராவது கேட்டால் தான் என் மனசிலிருப்பதைப் பதிலாகச் சொல்வது என் வழக்கம். ஆனால் விஸ்வநாதனின் மாமியார் அப்படி இல்லை என்று தெரிந்தது. தனக்குச் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ வீட்டில் நடக்கிற அத்தனை விஷயங்களும் அவங்களுக்குத் தெரிஞ்சாகணும். 'என்னடி அம்மா, ஏது'ன்னு எல்லாத்தையும் கேட்டுத் தெரிஞ்ச்சிக்கலைன்னா அவங்க மண்டை வெடிச்சிடும். நேற்று பூரா சுசீலாவைப் பற்றி, எனக்குப் பார்வை போனது பற்றி என்று எல்லாவற்றையும் சுசீலாவிடம் கேட்டுத் தொணதொண த்துக் கொண்டே இருந்தார்கள். சிலருக்கு சில விஷயங்களை அனுதாபத்தோடு சொல்லவும் தெரியவில்லை, கேட்கவும் தெரியவில்லை என்று அவர்கள் பேசியதிலிருந்து புரிந்தது. எந்நேரமும் 'லொட்டு, லொட்டு'ன்னு சின்ன உரலில் பாக்கு இடிக்கற சப்தம் தான் அவங்க எங்கே இருக்காங்கன்னு காட்டிக் கொடுக்கும்.

வந்தவர்கள் விருந்தாளி மாதிரி உட்கார்ந்து கொண்டு, எல்லாருக்கும் பொங்கிப் போடும் வேலையை தேவியிடம் மட்டும் சுமத்த சுசீலாவால் முடியவில்லை. சுசீலா என்று மட்டும் இல்லை, எல்லாப் பெண்களின் இயல்பும் அது தான். சமையல் அறைங்கறது அவங்க இடம் மாதிரி; ஒண்டியாக ஒருத்தர் மட்டும் மல்லாடுவதற்கு விட்டு விடமாட்டார்கள். இது தெரிந்து சுசீலா கூட மாட தேவிக்கு ஒத்தாசை செய்வதை அங்கீகரிக்கற எண்ணமே என்னில் படிந்திருந்தது. அதனால் சுசீலாவை எதிர்ப்பார்ப்பதான எனது தேவைகள் பலவற்றைக் குறைத்துக் கொண்டேன். இதனால் தட்டுத்தடுமாறி எனக்கு நானே என்று ஆனதில் இன்னும் கொஞ்சம் தன்னம்பிக்கைக் கூடியது என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.

மாடியில் தான் விஸ்வநாதனின் தனி அறை இருந்தது. முந்தாநாள் கைபிடித்து மாடிக்கு அழைத்துப் போனான். நாலாபக்கமும் ஜன்னல்கள் போலிருக்கு. காத்து பிச்சிண்டு போனது. என்னை ஈஸிச்சேரில் அமர வைத்து தானும் என் காலடியில் அமர்ந்து கொண்டான். "முன்பெல்லாம் அடிக்கடி கால் வலிக்கிறது என்பீர்களே, அண்ணா? இப்போ எப்படியிருக்கு?" என்று கேட்டபடியே லேசாக அமுக்கிற மாதிரி என் காலைப் பிடித்து விட்டான். 'இப்போ அந்த வலி மார்புக்கு வந்து விட்டது' என்று சொல்லவில்லை; அதற்கு பதில், "இப்போ அதெல்லாம் போயே போச்சு. ஏன் கீழே உக்காந்துட்டே?.. ஒரு சேர் போட்டு பக்கத்தலே உக்காந்துக்கறது தானே?" என்றேன். "பரவாயில்லேண்ணா! இதான் வசதியாயிருக்கு.." என்று சொல்லிச் சிரித்தான். அவனை விட அஞ்சே வயசுப் பெரியவன் நான். எந்த நேரத்திலும் சரிசமமாக எனக்கு எதிர்த்தாற் போல் அவன் அமர்ந்து நான் பார்த்ததில்லை. நின்னுண்டே பேசுவான்; இல்லைனா 'படக்'னு தரைலே உக்காந்திடுவான்.

"அண்ணா.. திருவையாறிலே நாமல்லாம் ஒண்ணா இருக்கும் போது திடீர்ன்னு ஒரு நாள் ஊரை விட்டேப் போயிட்டேனே, எங்கே போனேன்னு நீங்க கேக்கவே இல்லையே?" என்றான்.

"நீயே சொல்லுவேன்னு இருந்தேன்" என்றேன்.

"ஆமாண்ணா.. நானேத் தான் சொல்லணும். ஆனா என்னாலே உங்களுக்கு இப்படி ஆன குற்ற உணர்ச்சியை என்னாலே தாங்கிக்கவே முடிலே, அண்ணா.. இப்படிலாம் நடக்கறத்துக்கு நான் என்ன பாவம் செஞ்சேன்னு தெரிலே அண்ணா.." என்றவன் குரல் தழுதழுத்தது.

அவன் கலங்குவதை உணர்ந்ததும் துடித்துப் போய்விட்டேன்.. "விஸ்வநாதா..
இதோ கொஞ்சம் என் பக்கத்தில் வா.." என்று அழைத்து கைநீட்டித் துளாவி அவன் தோள் பாகம் கைக்குப் பட்டதும் லேசாகத் தட்டி ஆறுதல் அளித்தேன். "இப்போ நான் ஒண்ணு சொல்லுவேன். அதை நன்னா மனசிலே வாங்கிக்கணும், என்ன?" என்றேன்.

"சரிண்ணா..."

"யாருக்கு எது நடக்கறத்தும் யாரும் காரணமில்லை. அதை முதல்லே நீ தெரிஞ்சிக்கணும். இப்படி நடக்கணும், கொஞ்ச காலத்தை இப்படிக் கழிக்கணும்னு எனக்கு இருந்திருக்கு. அதனால் அது நடந்திருக்கே தவிர, அதுக்கு நீ காரணமில்லை. நீ காரணம்னு நெனைச்சையானா, வாழ்நாள் பூரா அந்த குற்ற உணர்வு உன்னை உறுத்திண்ட்டே இருக்கும். அப்படியான ஒரு அவஸ்தை விலங்கை உனக்கு நீயே பூட்டிக்கக் கூடாது. அதுக்காகச் சொல்றேன்."

"அதுக்காகத் தானே சொல்றீங்க, அண்ணா.. ஆனா, நான் ஓடிப்போனதாலே தானே, என்னைத் தேடித் திரிய வேண்டியதாயிற்று உங்களுக்கு. என் மேலே அத்தனை பாசம் வைச்சிருந்ததாலே தானே, வேறே யாரோ விஸ்வநாதனை யாரோ கூப்பிடப் போக... ம்.. எல்லாத்தையும் அண்ணி சொல்லிக் கேட்க, எனக்குத் தாங்கலை."

கை நீட்டி அவன் வாயைப் பொத்தினேன். "திருப்பித் திருப்பி அதையே சொல்லாதே. இதெல்லாம் நடக்கணும்னுட்டு... நேத்திக்கு மத்தியானம் இதைப் பத்தித்தான் யோசிச்சிண்டிருந்தேன். எனக்குத் தோணினதைச் சொல்றேன், கேளு. கேட்டால் எதுக்கும் யாரும் காரணமில்லேன்னு நான் சொல்றது உனக்குப் புரியும்.."ன்னு சொல்லிட்டுக் கொஞ்சம் நிதானிச்சு நேற்று யோசித்துத் தெளிந்ததை ஞாபகப்படுத்திக் கொண்டேன்.

"எதை நினைக்கறச்சே எது ஞாபகத்துக்கு வந்திருக்கு, பாரு! இது இராமயணத்திலே வர்ற ஒரு கிளைக் கதை தான். உனக்குக்கூடத் தெரிஞ்சிருக்கலாம்"ன்னு சொன்னவன் கொஞ்சம் நிதானிச்சுதுத் தொடர்ந்தேன். "எனக்கு இப்போலாம் காதுங்கற சமாச்சாரம் ரொம்ப தீட்சண்யமாயிடுத்து.. கண்ணுங்கறது நன்னா இருக்கறச்சே, ஒருத்தர் சொல்றதை இன்னொருத்தர் கேக்கறத்துக்கு மட்டும் தான் இறைவன் இந்தக் காதுகளை நமக்கு வழங்கியிருக்கிறான்ன்னு நெனைச்சிப்பேன். இப்போ என்னடான்னா, கண் பார்வை போன பிறகு அதன் வேலையையும் சேர்த்துக் காது செய்யறது புரிஞ்சது. எஸ். ஓரளவு பாத்துத் தெரிஞ்சிக்கற மாதிரி, இந்தக் காதால் கேட்டுத் தெரிஞ்சிக்கவும் முடியறது.." என்றவன் மூச்சை இழுத்து உள்வாங்கிக் கொண்டு சொல்ல ஆரம்பித்தேன். "விஸ்வநாதா.. இந்தக் காதுகளின் மகாத்மியத்தை நினைக்கறச்சே தான் அந்தக் கதையும் கூடவே ஞாபகத்துக்கு வந்தது. சிரவண குமாரன்னு ஒரு சின்னப் பையன். அவன் மூப்படைஞ்ச கண் போன தன் தாய்-தந்தையை காவடி மாதிரியான ஒரு ஏணையில் தூக்கிக்கிண்டுப் போறான். ஒரு ஆற்றங்கரை பக்கம் போகைலே குடிக்க தண்ணி கேட்ட பெத்தவங்களோட தாக சாந்திக்காக அவங்களைக் கீழே இறக்கிட்டு ஆத்திலே தண்ணீர் மொண்டு வர குவளை மாதிரி ஒரு பாத்திரத்தை எடுத்திண்டு நீர் இருக்கற இடத்துக்குப் போறான்.."ன்னு சொல்லிண்டு வந்தவன், "உனக்குக் கூட அந்தக் கதை தெரிஞ்சிருக்கலாம்" என்று சொல்லி நிறுத்தினேன்.

"தெரியும் அண்ணா. இருந்தாலும் நீங்க சொல்லி அதைக் கேக்கறது ஒரு அனுபவம். அதுவும் தவிர, இந்தக் கதையை எப்படி நீங்கள் காதைப் பத்திச் சொல்ல வந்த விஷயத்தோடு இணைக்கிறீர்கள்ன்னு தெரிஞ்சிக்க ஆசை"ன்னான் விஸ்வநாதன்.

தம்பி சொன்னதைக் கேட்டு குலுங்கிக் குலுங்கிச் சிரிச்சேன். "எது ஒண்ணையும் இன்னொருத்தர் சொல்லிக் கேக்கறதிலே சின்ன வயசிலேந்தே உனக்கு ரொம்ப இஷ்டம். விஸ்வநாதா! நீ கொஞ்சம் கூட மாறவே இல்லைடா.. அப்படியே இருக்கே.." என்று அவன் தோள் தொட்டுத் தட்டிப் பாராட்டி விட்டு,"இப்படி கதை சொல்லிக் கேட்க தயாரா இருக்கறவங்களைப் பாத்து யாருக்குத் தான் கதை சொல்லத் தோணாது?"ன்னு கேட்டுட்டுத் தொடர்ந்தேன்."சிரவண குமாரன் ஆற்றிலே நீர் மொள்ற சப்தத்தை அந்தப்பக்கம் வேட்டையாட வந்த தசரதன் கேட்டு, மான் தான் நீர் அருந்துகிறது போலும்ன்னு தவறா நினைச்சு அந்த மானை வீழ்த்த சப்தம் வந்த திசையை நோக்கி அம்பை எய்ய... விஸ்வநாதா! ஒண்ணு மட்டும் நிச்சயம்ப்பா.. தசரதன் கண்ணால்அந்தச் சிறுவனைப் பார்த்திருந்தா, நிச்சயம் அந்தச் சிறுவனுக்கு நீர் மொள்ள உதவி செஞ்சு, அவனோட பெற்றோரைத் தான் தூக்கிண்டு அவங்க சேருமிடம் கொண்டு போய் சேர்ப்பித்திருப்பான். ஆனா, அந்தக் கொடுப்பினை அவனுக்கு இல்லை. ஒண்ணு தெரியறது பாரு.. இந்தக் கதைலே தசரதனோட காதுங்க தான் அவனோட கண்களா செயல்பட்டிருக்கு.. சாதாரணமா கண்ணால பாத்துத்தானே குறி வைச்சு அம்பை எய்வாங்க? ஆனா தசரதனோ, அந்த ஒலியைக் கேட்ட வாக்கில் அம்பை எய்ய, சிரவண குமாரனின் மேல் அது பாய்ஞ்சு அவன் 'ஐயோ'ன்னு அலறப் பதறி அந்த இடத்துக்கு பாய்ஞ்சு போறான் தசரதன். எதுக்குச் சொல்ல வந்தேன்னா, தசரதன் மாதிரி, காதுங்க தான் எனக்குக் கண்ணாயிடுச்சோன்னு நினைச்சிண்டேன். அது போகட்டும். விஷயத்திற்கு வருவோம்.. தசரதன் தெரிஞ்சு எந்தப் பாவமும் செய்யலே; ஆனா மான்னு நெனைச்சு அவன் எஞ்ச அம்பு சிரவணக் குமரனின் உயிரை மாய்ச்சுடுத்து. அதே நேரத்திலே, அன்னிக்கு அந்தப் பெரியவங்க இட்ட சாபத்தினால, பின்னாடி மகனைப் பிரிஞ்சு காட்டுக்கு அனுப்ப வேண்டியதாச்சு.. அதனால எதனால எந்த காரியம் எதுக்காக நடக்கிறதுங்கறது தெரியலே.. நம்மளை அறியாம நடந்த எதுக்கும் இதனால தான் இது நடந்ததுன்னு நம்ம போக்கில் எதுவும் சொல்றத்துக்குமில்லே"ன்னு சொன்னேன்.

"நல்லக்கதை, நல்ல நீதி!" என்று பெருமூச்செறிந்தான் விஸ்வநாதன். கொஞ்ச நேரம் அவன் எதுவும் பேசவே இல்லை. எதையோ சொல்றத்துக்காகத் தான் தயங்கறான்னு எனக்குப் பட்டது.

பாவம், படார்னு எதையும் சொல்லித் தெரியாத பக்குவம். அதான் அவனை அவஸ்தைப்படுத்தறதுன்னு தெரிஞ்சிண்டேன். அவன் தயக்கத்தைப் போக்கறத்துக்காக "அப்புறம், நீ எங்கேலாம் போனே? என்னலாம் நடந்தது?"ன்னு நானே ஆரம்பிச்சு வைச்சேன்.

வாய்க்கால் வெட்டி வழிபண்ணினதும் தேங்கியிருக்கற தண்ணீர் குபுக்னு பாயற மாதிரி, விஸ்வநாதன் சொல்ல ஆரம்பித்தான்.


(இன்னும் வரும்)
Friday, November 11, 2011

பார்வை (பகுதி-10)

                       அத்தியாயம்--10
'சடக்'கென்று கார் நின்று விட்டது. தம்பியின் வீடு வந்து விட்டதாக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

"போச்சுடா.. கூட்ஸ் ட்ரையின் போலிருக்கு.. எப்போ வந்து, எப்போ கேட்டைத் திறக்கப் போறானோ?" என்று டாக்டர் சாந்தி லேசான சலிப்பில் சொன்னதும், ரெயில்வே கேட் அடைத்திருப்பதால் கார் நின்றிருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.

"அங்கிள்! இன்னும் அஞ்சே நிமிஷம் தான். இந்த ரயில்வே கேட்டைத் தாண்டி வரும் மெயின் ரோடில் வலது பக்கம் திரும்பினால் நாலாவது வீடு என்று விஸ்வநாதன் சொல்லியிருக்கிறார்" என்றார் டாக்டர் சாந்தி.

"சரி. டாக்டர்.."

"இன்னொரு தடவை சொல்றத்துக்கு மன்னிக்கணும். அவரைப் பார்த்தவுடனே-- சாரி, உங்களை உங்க தம்பி பார்த்தவுடனே கொஞ்சம் நெர்வஸ் ஆகலாம். முன்னாடியே ஒரு தடவை உங்களை இப்படிப் பார்த்திட்டார் இல்லையா, இது இரண்டாவது தடவை.. இருந்தாலும் கொஞ்சம் அதிகமாகவே அவர் சஞ்சலப் படலாம். பட், நீங்க தம்பியின் நெருக்கத்தில் நெகிழ்ந்திடக் கூடாது. பல வருஷம் கழிச்சு தம்பியோட அருகாமை கிடைக்கப் போறது.. கட்டுப்படுத்த முடியாது; வாஸ்தவம் தான். இருந்தாலும் நீங்க எதுவும் உங்களைப் பாதிக்காத மாதிரி நடந்திக்கணும். என்ன, சரியா?"

எந்த சலனமும் இல்லாமல், "சரி, டாக்டர்.." என்றேன்.

'குட்.." என்று டாக்டர் சொல்லவும், 'கூ..' என்று கூவிக்கொண்டே கூட்ஸ் ட்ரையின் 'தடக், தடக்' என்று தடதடத்து கடக்கும் ஓசை கேட்கவும் சரியாக இருந்தது.

நிறைய போகிகள் போலிருக்கு... மனசுக்குள் ஒவ்வொரு 'தடக்'குக்கும் ஒன்றாக உத்தேசமாக எண்ணி கொண்டு வந்தேன். நாற்பதைத் தாண்டியது.

'கேட்' திறந்தாச்சு போலிருக்கு. இத்தனை நேரம் காத்துக் கிடந்த வண்டிகளுக்குக் கிளம்பும் அவசரம். ஹார்ன் ஒலிகள் கர்ண கடூரமாக இருந்தன.

டாக்டரும் வண்டியை எடுத்து விட்டார். லைன் தாண்டினதும் 'சில்'லென்ற காற்று மனசை லேசாக வருடியது. அந்த திருப்பம் வந்ததும், சுசீலா என் இடது கை மணிக் கட்டை இறுகப் பற்றினாள். "உங்களை நீங்க தான் பாத்துக்கணும்"ன்னு கிசுகிசுப்பாக அவள் சொன்னதும், "என்னைப் பாத்துக்க நீ தான் இருக்கையே!" என்று சொல்லிச் சிரித்தேன். தம்பியைப் பார்க்கப் போகிறோம் என்கிற குஷி மூட் கிளம்பும் போதே வந்து விட்டது என்று சுசீலாக்கும் தெரியும்.

அதற்குள் ஒரு திரும்பு திரும்பி லேசாகக் குலுங்கி வண்டி நின்று விட்டது. வீடு வந்தாச்சு போலிருக்கு.

கதவு திறந்து சுசீலா இறங்கி விட்டாள் என்று உணர்ந்தேன். தம்பி வீட்டில் டாக்டரை மரியாதையுடன் உபசரிக்க வேண்டுமே என்று திடீரென்று மனசில் ஒரு எதிர்பார்ப்பு!

அதற்குள்,"தேவி! தேவி! எங்கே போயிட்டே?.. அண்ணன்லாம் வந்தாச்சு, பாரு!" என்று தம்பியின் குரலும், தடதடத்து வாசல் கதவு திறக்கும் ஓசையும் இங்கு எனக்குக் கேட்டது. என் காதுகள் எப்படி இப்படி ஷார்ப் ஆனது என்று எனக்கே ஆச்சரியமாய் இருந்தது.

"வாங்க.. மெதுவா பாத்து இறங்குங்க.." என்று சுசீலா என் கைபற்றி வண்டியிலிருந்து இறங்குவதற்கு உதவி செய்தாள். "சுசீலா.. டாக்டர்.."

"அவங்க இறங்கி முன்னாடி போய்க்கிட்டு இருக்காங்க.."

அதற்குள், "வாங்க, டாக்டர்.. வரணும்.. வரணும்.."ன்னு தம்பியின் குரல் கேட்டது. அடுத்த வினாடியே, "அண்ணா.." என்று என்னை அணைத்துக் கொண்ட அவன் புஜத்தை இறுகப் பற்றிக் கொண்டேன். அஜானுபாகுவாக அவன் இருப்பதாக மனதுக்குப் பட்டது. "நல்லாயிருக்கையா, தம்பீ?" என்று கம்மிப் போன என் குரல், எனக்கே வேறே யாரோ அப்படிக் கேட்பது போல இருந்தது.

"நல்லாயிருக்கேன், அண்ணா.. வாங்க, வாங்க, வீட்டுக்குள்ளாறப் போகலாம்.. அண்ணி வாங்க, வாங்க..."

"வாங்க.. வாங்க.." என்று கீச்சுக் குரலாய் ஒரு பெண்ணின் குரல் கேட்டது. குரலில் மரியாதை தெரிந்தாலும் பேசியது வேற்று மொழிக்காரர்கள் உச்சரிப்பில் இருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. தம்பி சம்சாரம் போலும்.

"படிங்க.. பாத்து.." என்று சுசீலா என் கை பற்றி வெகு ஜாக்கிரதையாக வீட்டினுள் அழைத்துப் போனாள்.

விஸ்வநாதன் பரபரப்பில் இருப்பதாகப் பட்டது. 'டாக்டர்! அவனைக் கொஞ்சம் அமைதியாக இருக்கச் சொல்லுங்கள்' என்று சொல்லலாம் போலிருந்தது.

"யாருங்க! மாப்பிளையோட அண்ணனுங்களா?" என்று இன்னொரு பெண் குரல். "ஆமாம்மா.. அவரோட அண்ணன் வந்திருக்காரு.." என்று முதலில் பேசிய கீச்சுக் குரல். ஆக, விஸ்வநாதனின் மாமியாரும் அவன் வீட்டிலேயே இருப்பதாகப் புரிந்து கொண்டேன்.

விஸ்வநாதன் உள்ளே நுழைந்த பொழுது பற்றிய என் கையை விடவே இல்லை. எனக்கும் அவன் கையை விட மனமில்லை. இரு நதியாய்ப் பிரிந்த ஒரு தாய் இரத்தத்திற்கு கனக்ட்டிவிட்டி கிடைத்த உணர்வு. என்னை அப்படியே தாங்கலாகக் கூட்டி வந்து ஒரு மர நாற்காலியில் விஸ்வநாதன் அமர வைத்தான். "டாக்டர், நின்று கொண்டே இருக்கிறீர்களே, நீங்களும் இப்படி உட்காருங்கள்!" என்று அவன் சொன்னது கேட்டது.

"தேவி, வா.. சங்கரி எங்கே?.. பக்கத்து வீட்டுக்கு விளையாடப் போயிருக்காளா? அவளைக் கூட்டிவா.. எல்லாரும் அண்ணனுக்கு நமஸ்காரம் செய்யணும்.." என்று விஸ்வநாதன் உத்திரவிட்டான்.

"இதோ.." என்று தேவியின் கீச்சுக்குரல் கேட்டது. பெண்ணைக் கூட்டி வரப் போகிறாள் போலும்.

"அண்ணி! இப்படிப் பாய்லே உட்காருங்க, அண்ணி.. ஒரு நிமிஷம்.. இதோ அவங்களும் வந்தாச்சு.. நீங்களும் இப்படி வந்து அண்ணன் பக்கத்லே நில்லுங்க, அண்ணி" என்று விஸ்வநாதன் ஏக குஷியில் இருந்தான். "இப்படி அண்ணி, இதான் கிழக்கு.. அண்ணா! தேவி, சங்கரி, நான் எல்லாம் நமஸ்காரம் செய்யறோம்.. ஆசிர்வதிங்க, அண்ணா!" என்று கேட்டுக் கொண்ட அடுத்த வினாடி, என் கால் விரல் பகுதியில் விஸ்வநாதன் கைவிரல்கள் பட்ட உணர்வில் உடல் சிலிர்த்தது.

"தீர்க்காயுசா, நோய் நொடியில்லாம எல்லாரும் ஆரோக்கியத்தோட இருங்க!" என்று ஆசிர்வதித்த பொழுது, " நம்ப அப்பாவும் இப்படித்தானே அண்ணாஆசிர்வதிப்பார்?" என்று விஸ்வநாதன் கேட்ட போது, அப்படியே கை நீட்டி அவனைத் தழுவத் துடித்தேன். டாக்டர் சாந்தியின் கட்டளை நினைவுக்கு வந்து உணர்வுகளை அடக்கிக் கொள்வதற்கு ரொம்ப சிரமப்பட்டுப் போனேன். விஸ்வநாதன் அவன் பெண் சங்கரியின் கையை என் கைக்குள் வைத்து, "என் பொண் சங்கரிண்ணா.." என்றான். "அப்படியா! ரொம்ப சந்தோஷம்.." என்று அவளை அணைத்துக் கொண்டேன். குழந்தையே இல்லாத எனக்கும் ஆண்டவன் இப்போ ஒரு குழந்தையைக் கொடுத்திருக்கிறானே என்று மனசு மலர்ந்தது.

ஒருவாறு என்னை சமனப்படுத்திக் கொண்டு, "விஸ்வநாதா! டாக்டர் அம்மா இல்லைன்னா நான் இல்லேப்பா.." என்று சுருக்கமாகச் சொன்னேன்.

"அவர் அப்படித்தான் சொல்வார்.. அதையெல்லாம் அப்படியே எடுத்துக்காதிங்க.." என்று சொன்ன டாக்டர் சாந்தி, "உங்க ரெண்டு பேர் பாசத்தைப் பார்த்தும் எனக்கு என் அண்ணன் ஞாபகம் வந்திட்டது.. சொல்லப்போனா, என் அண்ணனும் உங்க அண்ணன் ஜாடைலேயே இருப்பார்.." என்று டாக்டர் சாந்தி சொன்ன போது, "இத்தனை நாள் உங்க அண்ணன் பத்தி எனக்குச் சொல்லவே இல்லையே, டாக்டர்!" என்றேன்.

"டாக்டர் அம்மா எங்கிட்டே சொல்லியிருக்காங்க.." என்று சொன்னாள் சுசீலா.

(இன்னும் வரும்)
Thursday, November 10, 2011

பார்வை (பகுதி-9)

                     அத்தியாயம்--9

டாக்டர் சாந்தி தான் டிரைவர் சீட்டில். பின்னால் நானும் சுசீலாவும்.

நடுநடுவே டாக்டர் பேசிக்கொண்டு வந்தாலும், கார் செல்லும் வேகத்தில் பாதி காதில் விழலே. சுசீலா தான் பதில் சொல்லிக் கொண்டு வந்தாள். சுசீலா, டாக்டருக்கு பக்கத்திலேயே முன் சீட்டிலேயே உட்கார்ந்திருக்கலாம். நானும் அதைத்தான் சொன்னேன். டாக்டர் தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். எனக்கு ஏதாவது தேவைப்பட்டால் உடனே அதை கவனிப்பதற்கு வாகாக சுசீலா பின் சீட்டில் என்னுடன் அமர்ந்து கொள்வதே செளகரியமாக இருக்கும் என்று சொல்லி விட்டார்கள்.

டாக்டர் எது சொன்னாலும் அதற்கு வெளிப்படையா தெரியற காரணத்தைத் தாண்டி அதை விட முக்கியமானதா உள்ளார்ந்து வேறே ஏதாவது இருக்கும். இது இந்த நாலு வருஷப் பழக்கத்திலே நான் தெரிஞ்சிண்ட ஒண்ணு. அதனாலே பல விஷயங்கள்லே அவர் சொல்ற மாதிரியே இருக்கட்டும்னு நினைத்துக் கொள்வேன்.

அன்றைக்கு திடுதிப்புனு "நானும் சுசீலாவும் உங்க தம்பி விஸ்வநாதனைப் பாக்கப் போறோம். நீங்களும் வர்றீங்களா?"ன்னு டாக்டர் சாந்தி கேட்டப்போ திகைச்சுப் போயிட்டேன்.

அவர் சொன்னதை மனசில் கொஞ்சம் மீண்டும் ஓட்டிப் பார்த்து, "நல்ல கேள்வி கேட்டீங்க.. நான் வராமலையா?.. அதுக்குத் தானே இத்தனை நாளாக் காத்திருக்கேன்" என்றேன். 'எந்த தலைபோற காரியமா இருந்தாலும் பதட்டப்படக் கூடாது. அது உங்கள் உடல் நலனுக்கு ஆகாது..'ன்னு டாக்டர் படிச்சுப் படிச்சுச் சொல்லியிருந்தது பாடமா மனசில் தீர்க்கமா படிஞ்சிருந்தது. அதனாலே அவர் கேட்டதற்கு அப்படி அமைதியா பதில் சொல்லிவிட்டு, "நிஜமாவா சொல்றீங்க.. என் தம்பி எங்கே இருக்கான்? அவன் இருக்கற இடம் தெரிஞ்சிடுத்தா?" என்று கேட்டேன்.

"இந்த ஊர்லே தான் இருக்கார். நல்லா வசதி இருந்தும், நல்லவராக இருக்கிறார். அதான் முக்கியம்.. வயலின்லே அவர் ஒரு சாதனையாளர், தெரியுமோ?.." என்று சொல்லி நிறுத்தினார். மேற்கொண்டு அவரே சொல்லட்டும் என்று பேசாமலிருந்தேன்.

"எல்லாத்தையும் சொல்லிடறேன். ஆனா, அதுக்கு முன்னாடி என்னையும் சுசீலாவையும் நீங்க மன்னிக்கணும்" என்றார்.

"என்ன டாக்டர்! பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க?.. மனசளவிலே நான் ரொம்பவும் குன்றிப் போயிருந்தவன். எனக்குள்ளே தன்னம்பிக்கை விதையை விதைச்சு ஆளாக்கினவங்க நீங்க.. நீங்க போய் என்கிட்டே இப்படியெல்லாம் பேசலாமா?"

"இல்லே. அதெல்லாம் என் தொழில் தர்மம். ஒரு பேஷண்ட்டுக்கு என்னலாம் ட்ரீட்மெண்ட்ன்னு செய்யணுமோ அதெல்லாம் செஞ்சேன். அப்படிலாம் செய்யணும்னு எனக்கு விதிக்கப்பட்டிருக்கு. அவ்வளவு தான். இது உங்க தனிப்பட்ட சொந்த விஷயம். அது எனக்குத் தெரியவந்தும், ஒரு வார காலமா அதை உங்க கிட்டே மறைச்சிட்டேன். ஆனா, அது கூட..."

நான் ஒண்ணும் பேசலே. டாக்டரே தொடர்ந்தார்: "ஆனா அது கூட உங்கள் உடல் நலன் கருதித் தான். மெதுவா கொஞ்சம் கொஞ்சமா சொல்லலாம்ன்னு தீர்மானிச்சேன்" என்றார்.

"எல்லாம் தெய்வ அனுக்கிரகம் டாக்டர். எனக்கு எது நல்லதுன்னு உங்களுக்கு நன்னாத் தெரியும். அதனாலே நீங்க எது செஞ்சாலும் சரி. சொல்லுங்க.."

"எஸ். எதையும், குறிப்பா உங்க மனசைப் பாதிக்கற எதையும் இப்படி ஒரு தயார் நிலைக்கு நீங்க வந்ததும் தான் சொல்லணும். அதுக்குத் தான் காத்திருந்தேன்" என்றவர், "உங்க தம்பியை நானும் சுசீலாவும் பார்த்துப் பேசினோம். எப்போ தெரியுமா?.. போன வாரம் தான். சுசீலாவின் மேற்பார்வைலே இருக்கற மியூசிக் க்ளாஸ்லே ஒரு விழாவுக்கு ஏற்பாடு செஞ்சிருந்தோம் இல்லையா? அப்போத் தான்."

"அந்த விழாவுக்குத் தான் என்னையும் கூட்டிக்கிட்டுப் போயிருந்தீர்களே?"

"நீங்க வந்ததுக்கு முதல் நாள். மெயின் விழாவுக்கு முதல் நாள் ஒரு ரிகர்சல் மாதிரி வைத்திருந்தோம். எனக்கு வயலின் மேதை விஸ்வநாதனைத் தெரியும். ஆனா அவர் தான் உங்க தம்பி விஸ்வநாதன்னு தெரியாது; அது தெரியாமலேயே விழா அழைப்பிதழை அவருக்கும் அழைச்சிருந்தோம். அடுத்த நாள் அவர் மும்பாய் போக இருந்ததால், இன்னிக்கு வரட்டுமான்னு போன் போட்டுக் கேட்டு விட்டு வந்தார். ரிகர்சல் ஹாலுக்குள் நுழைந்ததும், சுசீலாவைப் பார்த்து திகைச்சுப் போயிட்டார். "அண்ணி.."ன்னு பாசத்தை அடக்க முடியாம தடுமாறினார். நட்ட நடு ஹாலில் நாலு பேருக்கு முன்னாலேயே காலில் விழுந்து நமஸ்கரித்தார்" என்றார்.

அதைக் கேட்டதும் எனக்குப் பெருமை பிடிபடவில்லை.. "டாக்டர், அவன் ரொம்ப.. என்ன சொல்றது.. ரொம்ப பிரமாதமானவன், டாக்டர்" என்று பெருமிதத்துடன் சொன்னேன்.

"ஆமாம். ஹி இஸ் ஜெம்! எல்லாக் கதையும் கேட்டு விக்கித்துப் போயிட்டார். ரிகர்சல் ஹாலில் இருக்கவே இருப்புக் கொள்ளவில்லை அவருக்கு. உடனே உங்களைப் பார்க்க வேண்டுமென்று துடியாச் துடிச்சார். எங்களுடன் வந்து இதே இடத்தில் உங்களைப் பார்த்ததும் தான் ஒரு நிலைக்கு வந்தார். உடனே உங்களையும் சுசீலாவையும் தன்னுடன் அழைத்துப் போக விரும்பினார்.
ஆனால், நான் தான் இப்போ வேண்டாம். நானே பக்குவமாக எல்லாவற்றையும் சொல்லி அவரைக் கூட்டி வருகிறேன், என்றேன். சுசீலாவிடமும் இதுபற்றி எதுவும் உங்களிடம் சொல்லக் கூடாதுன்னு ஒரு எச்சரிக்கை மாதிரி சொல்லி வைத்திருந்தேன். எல்லாம் ஒரு காரணத்திற்காகத் தான் என்றாலும், உங்கள் தனிப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் அளவுக்கதிகமாகவே தலையிட்டு விட்டதற்குத் தான் மன்னிப்பு கேட்டேன்," என்று டாக்டர் சொன்ன போது, எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

"என் தம்பியை எனக்குக் காட்டி என் வாழ்க்கையின் மிகப்பெரிய பரிசு ஒன்றை எனக்கு அளித்திருக்கிறீர்கள், டாக்டர்!" என்றேன் உணர்ச்சி வயப்பட்டு.

"நோ.. டோண்ட் ஃபீல் டூ மச்.. பதட்டம் போலத் தான் இப்படியெல்லாம் ஃபீல் பண்ணறதும். வாழ்க்கைலே எல்லாம் தான் இருக்கும்" என்றவர், "வாங்க, உங்க தம்பி வீட்டிற்குப் போகலாம்" என்றார்.

"இதெற்கெல்லாம் உங்களுக்கு கைமாறாக என்ன செய்யப் போகிறேனோ, தெரியவில்லை.. வெறும் நன்றி மட்டும் தான்னா மனசு கேக்கலை" என்று சொன்னதற்கு டாக்டர் சிரித்தார்.

"என்ன சிரிக்கிறீர்கள்?.. சும்மாவானும் அப்பப்போ இப்படி உபசார வார்த்தை போலச் சொல்கிறேனே, என்றா?"

"நோ, அங்கிள்!" என்று சொன்னவர், "அங்கிள்! நாம ரெண்டு பேருமே கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், இல்லையா?" என்று புதுசாகக் கேட்பது போல ஒரு கேள்வியைக் கேட்டார்.

"அதிலென்ன சந்தேகம்?"

"சந்தேகம்னு இல்லே. இதுக்கு அடுத்தாப்பலே அதுன்னு ஒரு ஆர்டரா ஒவ்வொண்ணும் நடக்கறது யாராலேன்னு நம்ம ரெண்டு பேருக்குமே தெரியும், இல்லையா?" என்றார்.

"அவன் ஆட்டுவிக்கிறான், நாம் ஆடுகிறோம்.. அதைத் தானே சொல்ல வருகிறீர்கள்?" என்று நான் சொல்லி முடிப்பதற்குள், "அப்படி இருக்கறச்சே,நாம ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் நன்றி சொல்லிக்கறது தான் புரியலை; என் போர்ஷன் இது; உங்கள் போர்ஷன் அது'ன்னு கொடுத்த போர்ஷனை ஒழுங்கா செஞ்சிட்டுப் போவோம்" என்றார் டாக்டர்.

"ஆனா எதற்காக இதெல்லாம்னுட்டுத் தான் தெரியலை!" என்றேன்.

"எதுக்காகவேனும் இருக்கட்டும். காரணம் பெரிசில்லை. இந்த ஆட்டம் தான் வாழ்க்கைன்னு எடுத்திண்டு போவோமே.. இன்னைக்கு இந்த சீன்; நாளைக்கு என்ன சீனோ? ஒழுங்கா ஆடிட்டு அவன் கொடுக்கற பரிசை ஏத்துப்போம்; என்ன சொல்றீங்க?" என்று டாக்டர் என்னையே மடக்கினார்.

"நான் என்ன சொல்றது, டாக்டர்?" என்று அப்பாவியாகக் கேட்டேன்... "தம்பியைப் பாக்கலாம்னுட்டுக் கூப்பிட்டீங்க.. அடுத்தப்பலே வர்றது அந்த சீன் தானே, டாக்டர்.. போலாமா, சுசீலா!" என்று சுசீலாவைக் கூப்பிட்டேன்.

"இதோ.." என்று என் கண்ணான துணைவி ஓடிவந்து என் கைப்பற்றினாள்.

அங்கே தான் போய்க் கொண்டிருந்தோம்.


(இன்னும் வரும்)


Tuesday, November 8, 2011

பார்வை (பகுதி-8)

                       அத்தியாயம்--8

வாழ்க்கையில் தான் எத்தனை விஷயங்கள் நமக்குத் தெரியாமல் இருக்கின்றன? ஒவ்வொரு விஷயமும் அதுவே ஒரு புது அனுபவமாய் தெரியவரும் பொழுது ஆச்சரியமாய் இருக்கிறது. இத்தனை வயது வளர்ந்து விட்டோம், இப்போத் தானே இதுபற்றி தெரியறதுன்னு சில சமயம் அதெல்லாம் தெரியவர்ற போது வெக்கமாக் கூட இருக்கு. அப்படி ஒண்ணு தெரிய வர்றத்தையே இன்னும் இது போலத் தெரியாதது எத்தனை இருக்கோன்னு மலைப்பும் ஏற்படறது. எல்லாத்தையும் தெரிஞ்சிக்க முடியாதுங்கறது உண்மைதான். அதுக்கேத்த சந்தர்ப்பம் வரும் போது தான் எதுபத்தியும் தெரிஞ்சிக்க முடியதுங்கறதும் தெரியறது..

'பிரெய்லி' எழுத்துக்களை பத்திக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா, அப்படி அந்த எழுத்துக்களை தடவித் தடவி வாசிக்கக் கத்துக்க வேண்டிவரும்ன்னு நெனைச்சுக் கூடப்பார்த்ததில்லை. பாரதி பிரெய்லி முறை என்று சொன்னார்கள். நம் தேசக்கவி பாரதியார் பெயரைக் கேட்டவுடன் மனத்தில் இதைக் கற்றுத் தேர்வது என்று உறுதி தன்னாலே வந்தது. மொத்தம் ஆறு புள்ளிகள். ஒரு வரிசைக்கு இரண்டாக மொத்தம் மூன்று வரிசைக்கு ஆறு புள்ளிகள். ஆரம்பத்தில் கஷ்டமாகத் தான் இருந்தது. கை வரிசையை விட்டு அடிக்கடி விலகியது. 'முதல் நாள் இந்தளவுக்கு எழுத்துக்களைச் சரியாகச் சொன்னது ஆச்சரியம் தான்' என்று கற்றுக் கொடுத்த ஆசிரியை சொன்ன பொழுது கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகமாயிற்று. ஒரே வாரத்தில் தமிழ் எழுத்துக்களை வேகமாகப் படிக்கிற அளவுக்கு மனசில் படிந்து விட்டது.

'இமைகள் மருத்துவமனை'யின் அடுத்த கட்டிடம் தான் பிரெய்லி பள்ளி என்று சுசீலா சொன்னாள். இதுவும் பெரிய கட்டிடம் தான் என்று அவள் மூலமாகத் தெரிந்தது. நிறையப்பேராம்; வகுப்பு வகுப்பா பிரிச்சிருக்காங்களாம். எல்லாம் சுசீலா சொல்லித் தெரிந்தது தான். தொட்டுப்பாத்துத் தெரிஞ்சிக்கிறது தவிர பார்த்துத் தெரிஞ்சிக்கறது அத்தனையும் சுசீலா பார்த்துத் தெரிஞ்சிண்டு எனக்குச் சொல்றது தான். என் கண்களே இப்போ அவள் தானே. அவள் மூலமாத் தான் இப்போல்லாம் பாக்காமயே தெரிஞ்சிக்கறதுன்னு ஆயிடுச்சு. சுசீலா எதையும் எப்பவும் மேலோட்டமாத் தான் பார்ப்பா; அதான் அவ வழக்கம். இப்போ எனக்குச் சொல்லணும்ங்கறத்துக்காக எனக்கும் சேர்த்து எல்லாத்தையும் கொஞ்சம் ஆழமாப் பாத்து விவரமா சொல்றா. அப்படி அவ சொல்றது நான் பாத்துத் தெரிஞ்சிக்கற மாதிரியே திருப்தியா இருக்கு. நேரடியா எதையும் நான் பாக்கலையே தவிர, நானே எல்லாத்தையும் பாத்துப் புரிஞ்சிக்கற மாதிரி என் பார்வை சுசீலாக்கு வந்தாச்சு. கண்ணதாசன் சொன்னாரே, 'நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்' என்று; அதுபோல.

டாக்டர் சாந்தி ரொம்ப நல்லவங்க. அவங்க சம்பந்தப்பட்ட அந்த சங்கீதப் பள்ளிலேயே சுசீலாக்கும் ஒரு வேலை போட்டுத் தந்திட்டாங்க. சின்ன வயசில் தொடர்ச்சியா ஒரு நாள் தப்பாம கிளாஸுக்குப் போய் சங்கீதம் கத்துக்கிட்டது இப்போ உதவியா இருக்கு. என்னை பிரெயில் கிளாஸ்லே விட்டுட்டு, ஆஸ்பத்திரி வண்டிலேயே சங்கீத கிளாஸூக்கு சுசீலா போயிடுவா. மத்தியான சாப்பாடு எனக்கு இங்கே மெஸ்ஸிலேயே. என்னைப் போல நிறையப் பேர் சாப்படற பெரிய மெஸ்ஸூ! இப்போலாம் யார் உதவியும் இல்லாம தனியாச் சாப்பிடக்கூடப் பழகிண்டுட்டேன்.

சுசீலா அங்கேயே சாப்பிட்டுப்பா. அங்கே வகுப்பெல்லாம் முடிஞ்சு அவள் பிரெயில் கிளாஸுக்கு வர சாயந்திரம் ஆயிடும். அவள் வந்ததும், ஆசுபத்திரி வண்டிலேயே வீட்டிற்கு வந்திடுவோம். வீடு?.. 'சாந்தி நிலையத்திற்கு பக்கத்திலேயே தான்.எல்லா ஏற்பாடுகளையும் பாத்துப் பாத்து செளகரியமா செஞ்சி கொடுத்திருக்கறது சாந்தி டாக்டர் தான். சின்ன வயசில் சுசீலாவோட பழகின பழக்கத்தை அவங்க எதையும் மறக்கலே.. இப்போ அவங்க இருக்கிற இந்த வசதியான நிலைமைலேயும் அப்படியே இருக்கறது ரொம்ப அதிசயம்.

விளையாட்டு போல நாங்கள் சென்னை வந்து ஒன்றரை வருடத்திற்கு மேலாகி விட்டது. திருவையாறு வீடு, இருந்த கொஞ்ச நிலம் எல்லாத்தையும் வித்து இங்கேயே செட்டில் ஆயிட்டோம். எனக்கும் பிரெயில் பள்ளிலேயே வேலை. புதுசா அட்மிஷன் ஆகிறவர்களுக்கு பிரெயில் எழுத்துக்கள் மூலமா படிக்கக் கற்றுக் கொடுக்கிற வேலை. அதைத்தவிர ஆசுபத்திரி வளாகத்திலேயே தியாகராஜர் பெயரில் சின்னதா ஒரு சங்கீதக் குழுவை அமைச்சிருந்தேன். பாட, பாட்டுக் கற்றுக்கொள்ள, பாட பயிற்சி கொடுக்க என்று ரொம்பப்பேர் சந்தோஷத்தோட முன் வந்தாங்க. பார்வை பறிகொடுத்தவர்களுக்கு இந்த சங்கீத வகுப்புகள் அவர்களின் இழப்புணர்ச்சியை இட்டு நிரப்புவதாக இருந்தது. கற்பனா வளம் பெருகி மனோலயம் ஆக்கபூர்வமாக மீட்டப்பட்டது. இந்த மருத்துவமனை இதோட சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் மனச்சாந்தி கொடுக்கற இடமா மாறி வந்தது.

இங்கே எங்கிட்டே பிரெயில் கத்துக்கற மாணவர்களில் (!) ஒருத்தர் பேர் விஸ்வநாதன். என்னை விடப் பெரியவர். அவர் பெரியவர் என்கிறதாலேயே தம்பியா நினைக்கத் தோணாது. இருந்தாலும் அவர் பெயரைச் சொல்லிக் கூப்பிடும் பொழுது மனசு கனக்கும். எந்தக் குறையும் இல்லாம எங்கிருந்தாலும் கால்-கை விளங்க அவன் நல்லா இருக்கட்டும்னு நினைச்சிப்பேன். நல்ல வேளை எல்லாருக்கும் நினைப்புன்னு ஒண்ணு இருக்கு. அதுமட்டும் இல்லேனா, அத்தனை பேரும் அம்போ; வேண்டிய மனுஷா கூட இல்லாட்டியும், அவங்களைப் பத்தின நினைப்பு, அவங்களாகவே நம்ம கூட இருக்கிற மாதிரி உணர்விலே படறது. மனுஷா மட்டுமில்லை, பழகின இடங்கள் கூட மனுஷா மாதிரியே ஒரு உறவோட மனசிலே எங்கையோ பதுங்கி இருக்கு. திடுதிப்புன்னு நெனைப்புக்கு வந்திட்டாப் போதும். அங்கே போக மாட்டோமான்னு தோணும். எங்க போய் என்னத்தைச் செய்யப் போறோம்னு எதார்த்த நிலை மனசிலே உறைச்சு ஆளையே அடிச்சுப் போட்டிடும். உடனே அந்த அடியை சமனப்படுத்தற மாதிரி 'போனாப் போறது, அடுத்த ஜென்மத்திலே பாத்துக்கலாம்'னு சில நேரங்கள்லே என்னையே சமாதானப் படுத்திப்பேன். சிரிக்கத்தான் வேணும்; எல்லாமே பேத்தல்!

பேத்தல்னாலும் இதுக்கெல்லாம் ஏதோ சக்தி இருக்கிற மாதிரி தான் இருக்கு. ஏன்னா, வேலையில்லாத சில பொழுதுகளில் சும்மா வெறிச்சிண்டு நான் உக்காந்திருக்கச்சே, ஏதேதோ நினைச்சிக்கறதெல்லாம், 'நடப்பா நிகழுமா என்ன?' ன்னு நெனைச்சிண்ட நெனைப்புக்கு முதல் அடி கிடைச்சது. ஏதோ என்னோட அஜாக்கிரதையாலே அந்த விபத்து நடந்தது; அதுக்கு எங்க தொழிற்சாலை முதலாளி என்ன செய்வார், பாவம்! மாசம் தப்பாம அஞ்சாயிரம் ஆசுபத்திரிக்கு பணம் அனுப்பிச்சிண்டிருந்தார். மாசம் பொறந்தா இரண்டு தேதிக்குள்ளே கரெக்டா அவர்கிட்டேயிருந்து செக் வந்திடும்னு டாக்டரம்மா சொல்லுவாங்க. எனக்கும் ஒரு வேலைன்னு கிடைச்சாச்சு; சுசிலாவும் வேலைக்குப் போறதாலே, 'ரொம்ப நன்றி, செக் இனிமே அனுப்ப வேண்டாம்'னு சுசிலாவை விட்டு அவருக்கு லெட்டர் போடச் சொன்னேன். லெட்டர் போய்ச் சேர்ந்தததோ இல்லையோன்னு நெனைக்க ஆரம்பிச்ச நெனைப்பு, எங்க முதலாளியைப் பத்தின நெனைப்பா நீண்டு, பாவம் அவர், சூது வாது தெரியாத எவ்வளவு தங்கமான மனுஷர்னு நெனைச்சிண்டிருக்கிறச்சேயே, நல்ல மத்தியான வேளை, முதலாளியே நேர்லே வந்திட்டார்ன்னு கேள்விப்பட்டு பதறிப் போயிட்டேன்.. சென்னைலே நினைச்ச நெனைப்போட சக்தி வேகம் திருவையாறு போய்த் தொட்டிருக்கு. சாந்தி டாக்டரும் ஊரிலே இல்லே. என்னோட கூட வேலை செய்யற ஒருத்தர் சுசீலாவுக்கு போன் போட்டு பிரெயில் பள்ளிக்கு அவளை வரவழைச்சார்! ஒரு ரெண்டு மணி நேரம் எங்களோட இருந்து, மனசார நிறைய பகிர்ந்திண்டு போனார். நாங்க ரெண்டு பேரும் நல்லபடி வாழ்க்கைலே எங்களுக்கு ஏத்த மாதிரி செட்டில் ஆகிட்டது குறிச்சு அவருக்கு ரொம்ப திருப்தி. போகறச்சே, பிரெயில் பள்ளி வளர்ச்சிக்கு ஒரு பெரிய தொகைக்கு செக் கொடுத்திட்டுப் போனார். என்ன சொல்றது, சொல்லுங்கோ.. இந்த மாதிரி நல்ல மனசு கொண்டவங்க இருக்கறதாலே தான் மழை பெய்யறது போலிருக்கு.

அவர் வந்து எங்களைப் பாத்திட்டுப் போனது தீவிரமான நெனைப்பா என்னுள் பத்திண்டிடுச்சு. டாக்டர் சாந்தி கிட்டே இந்த நினைப்புகளைப் பற்றி நான் யோசிச்சு வைச்சிருந்ததையெல்லாம் கொட்டின போது, அவரும் 'டெலிபதி'ன்னு இதுவரை எனக்குத் தெரிஞ்சிராத சில தகவல்களைச் சொன்னார். அதெல்லாம் கேட்டபோது எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம்! வெளிப்புலனுக்குத் தட்டுப்படாத நிறைய விஷயங்கள் இந்த பிரபஞ்ச மர்மங்களில் பொதிந்திருப்பதாக எனக்குப்பட்டது.

தினம் ஒரு தடவையாவது அதிகாலை தியானத்திற்குப் பிறகு என் தம்பி விஸ்வநாதனை பற்றி அவன் எங்கள் கூட இருந்த காலங்களில் நடந்ததையெல்லாம் பற்றி தீவிரமாக நினைத்துக் கொள்ள வேண்டும் என்று மனத்தில் சூளூரைத்துக் கொண்டேன்.

அப்படியான நினைப்பு உளப்பூர்வமாக என்னில் நிகழ்ந்ததும், விரைவில் என்னைத் தேடி அவன் வந்து விடுவான் என்று மனசில் சந்தோஷம் பூத்தது.

(இன்னும் வரும்)


Saturday, November 5, 2011

பார்வை (பகுதி-7)

                      அத்தியாயம்--7

டாக்டர் சாந்தியின் குரல் இப்பொழுது எனக்கு அருகில் மிகத் தெளிவாகக் கேட்டது. "அங்கிள்! நீங்க சொன்னது ஒரு வகையான நிம்மதியை எனக்குக் கொடுக்கறது. அது இந்த ட்ரீட்மெண்ட்டுக்கு ரொம்பவும் முக்கியம்.." என்று முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்வது போலச் சொன்னார். 'பார்வை கிடைச்சாலும் சரி, கிடைக்காட்டாலும் சரி; எல்லாத்துக்கும் தயாரா நான் இருக்கேன்'ன்னு மனசார நான் சொன்னது தான் டாக்டர் சாந்திக்கு மன நிம்மதியை கொடுத்திருக்கிற ஒண்ணா இருந்திருக்கும்'ன்னு நினைத்துக் கொண்டேன்.

அதையேத் தான் குறிப்பிட்டுத் தொடர்ந்தார்."இப்படியான ஒண்ணை ஒரு ஸ்டேட்மெண்ட் மாதிரி பேஷண்ட்டே அவர் நினைவோடு இருக்கும் பொழுதே அழுத்தம் திருத்தமாச் சொல்றது ரொம்பவும் விசேஷம். இது, எந்தத் தயக்கமும் இல்லாம டாக்டர் செயல்படறதுக்கு கொடுக்கற சுதந்திரத்தைத் தாண்டி பேஷண்ட் தனக்குத் தானே சொல்லி நிச்சயப்படுத்திக் கொள்கிற மாதிரி பெரிய சக்தியா அவருக்குக்குள்ளே செயல்படறது. அதான் முக்கியமான விஷயம்.."என்றவர் எதையோ யோசிப்பவர் போலக் கொஞ்சம் நிறுத்தி விட்டுத் தொடர்ந்தார்.

"அங்கிள், நீங்க சொன்னீங்க இல்லையா, 'பார்வை கிடைக்காட்டாக் கூடப் பரவாயில்லை, தொடு உணர்ச்சியைக் கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சிண்டு சமாளிச்சிப்பேன்'ன்னு-- அப்படி நீங்க சொன்னப்போ நிஜமா எனக்கு சந்தோஷம் தாங்கலே. நடந்த ஒண்ணுக்கு குமைஞ்சு குன்னிப் போகாமா, கடவுள் கொடுத்த இன்னொரு கொடையை வைச்சு சரிக்கட்டிங்கிறேன் என்கிறாரேன்னு மகிழ்ந்து போயிட்டேன். அந்த வில்பவர் தான் வேணும். அது நிறைய உங்ககிட்டே இருக்கு. இதுக்கு மேலே என்னன்னா..

"ஆங்! அந்தக் கடவுளுக்கு நன்றி சொல்லாமல் எப்படி?.. இறைவனோட படைப்புலே ஒவ்வொண்ணும் அதிசயம். நினைச்சு நினைச்சு பிரமிக்கறதாத்தான் ஒவ்வொண்ணும் இருக்கு. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு டிபார்ட்மெண்டைக் கவனிச்சிக்கற மாதிரி என்ன ஒழுங்கு, என்ன முன்னேற்பாடு என்கிறீங்க?.. ஒண்ணு பழுதடைஞ்சா ஆல்டர்நேடிவ்வா இன்னொண்ணை உபயோகப்படுத்தலாம்ங்கறது ஓரளவுக்குத் தான். அதாவது அந்த இன்னொண்ணு அதுக்கானதைப் போல முழுமையான சப்போர்ட்டா இருக்க முடியாதுங்கறத்துக்குச் சொல்ல வந்தேன்.."என்று டாக்டர் சொன்ன போது இனி என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கவனமாகக் கேட்டுக் கொள்ளத் தயாரானேன்.

"இப்போ கண்ணால் பார்த்து நெருப்புன்னு தெரிஞ்சிக்கறதைத் தொட்டுத் தெரிஞ்சிக்க முடியாதில்லையா?.. அதுபோல சிலதுகள்.. ஆனா ஒண்ணுக் கொண்ணு இணைப்புப் பாலமா இருக்கற, இறைவன் ஏற்பாட்டை புரிஞ்சிண்டு எவ்வளவோ தேத்திக்கலாம். கண்ணாலே பாத்துத் தான் தெரிஞ்சிக்கணும்ங்கறத்துக்கு தேவையில்லாததையெல்லாம் காது பாத்துக்கும். உதாரணமா, சங்கீதத்தை அனுபவிக்கறச்சே, பாத்துத் தெரிஞ்சிக்கறத்துக்கு அங்கே எதுவும் இல்லை. அது கேட்டு ரசிக்கிற விஷயம். உண்மைலே சில நேரத்லே பாக்கறது கூட கேக்கறத்துக்கு இடைஞ்சலா அமைஞ்சு கவனத்தை எங்கேயானும் திருப்பிடும். அந்தத் தொந்தரவு வேண்டானுட்டுத்தான் பலபேர் அதை முழுமையா அனுபவிக்கறச்சே கண் இமைகளை மூடிண்டு அனுபவிக்கறாங்க. கடவுள் கிட்டே வேண்டிக்கறச்சே கூட கையைக் குவிச்சிண்டு கண்களை மூடிண்டு தான் தரிசிக்கறோம்.." என்று டாக்டர் சாந்தி மனத்தில் தைக்கிற மாதிரி சொல்லிண்டு வர்றத்தே, குறுக்கிட்டுக் கேட்டேன்.

"ஏன் டாக்டர், கடவுள் கண்ணுக்குத் தெரிய மாட்டார்ங்கற நிச்சயத்திலேயா வேண்டிக்கறச்சே கண்ணை மூடிக்கிறோம்?"

"எஸ்.." என்று டாக்டர் சொன்ன போது அந்த 'எஸ்'ஸை அழுத்திச் சொன்ன மாதிரி எனக்குப் பட்டது. "எஸ். கண்ணுக்குத் தெரியறத்துக்கு அவர் காட்சிப்பொருள் இல்லை தானே?.. புலனுறுப்புகளால் அடையாளப்படுத்தி தெரியப்படுத்த இயலாத அளவுக்கு அவர் ரொம்பவே அகம் சம்பந்தப்பட்டவர். உள்ளுக்கு உள்ளேயே நம் உணர்வில் தங்கி இருப்பவர் அவர். சொல்லப்போனா, அந்த உணர்வுமயமானவரே அவர் தானே!.." என்று டாக்டர் சொன்ன போது ஏதோ வேதாந்த சென்டரில் உட்கார்ந்திருப்பது போலவான உணர்வு எனக்கு ஏற்பட்டது.. அதே நேரத்தில் ஏதோ காரணத்தோடத்தான் இதையெல்லாம் எனக்கு அவர் சொல்லிக் கொண்டிருப்பது போலவும் பட்டது. அவர் குரலின் மென்மை எந்த முரண்டு பிடிக்கும் வன்மையையும் அடக்கிவிடும் தன்மை பெற்றிருப்பதாக எனக்குப் பட்டது. என்னை விட வயதில் சிறியவர் ஆனாலும், மனம் ஒப்பி மரியாதையுடன் அவர் சொல்வதைக் கேட்க மனம் மிகவும் விரும்பியது.

சுசீலா இந்த அறையில் தான் இருக்கிறாளா அல்லது இல்லையா என்று தெரியவில்லை. டாக்டரிடம் அவள் பக்கத்தில் தான் இருக்கிறாளா என்று கேட்டுத் தெரிந்து கொள்வதற்கும் ஒருமாதிரி இருந்தது.. இப்படியெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருக்கையில் டாக்டரின் குரல் எங்கோ வெகு தூரத்தில் கேட்பது போல சன்னமாக ஆனால் தெளிவாக எனக்குக் கேட்டது.

"அங்கிள்! நன்றாக இருந்த பார்வை பறிபோய்விட்டதே என்று ரொம்ப ஃபீல் பண்ணுகிறீர்களா?"

'நோ.." என்று தெளிவாக தலையை மறுப்பது போல அசைத்தேன். "என்னால் ஆகக்கூடியது எதுவுமில்லேன்னு நன்னாத் தெரியறது. இதில் நான் ஃபீல் பண்ணி போனது கிடைச்சிடவாப் போறது?.. இன்னும் மனத்துக்கம் அதிகமாகும். அவ்வளவு தான். 'இதை ஏத்துக்கறதைத் தவிர'ன்னு நீட்டி முழக்கவும் முடியாது. யதார்த்த உண்மையை உணர்ந்து, பார்வை கிடைக்காதுங்கறது நிச்சயமானா அடுத்த காரியத்தைப் பாக்கறதுதான் விவேகம். என்ன சொல்றீங்க.." என்று அதையும் ஒரு கேள்வியாக அவரிடமே நான் கேட்ட பொழுது, எழுந்த கேவல் ஒலி, சுசீலா அங்கே தான் இருக்கிறாள் என்பதை எனக்குத் தெரியப்படுத்தியது.

சுசீலாவின் சலனம் எதுவும் டாக்டரைப் பாதித்ததாகத் தெரியவில்லை. அவர் என்னிடமே பேசிக் கொண்டிருந்தார். "அங்கிள் எனக்கு வேறே ஒரு பயம்.."

"என்ன?"

"எதுனாலே உங்களுக்கு இந்த விபத்து ஏற்பட்டது.. காணாமல் போன தம்பி வந்திட்டார்ங்கற சந்தோஷத்தில் சூழ்நிலை மறந்து அவசரப்பட்டு..."

"ஆமாமாம். அதுக்கென்ன இப்போ?"

"அதுக்கென்னவா?.. சொல்றேன். தொலைந்த தம்பி வந்துட்டான்னு தெரிஞ்சதும் அவரைப் பார்க்க பட்ட பதட்டத்தில் கண் போயிட்டது. ஒருகால் உங்க தம்பி திரும்ப வந்திட்டார்னா, அவரை கண்ணாறப் பாக்க முடியலையேன்னு ரொம்ப வருந்துவீங்களோன்னு..."

இன்னொரு 'நோ'வை அழுத்தம் திருத்தமாகச் சொன்னேன். "எனக்கு இப்போ சுத்தி சுத்தி நீங்க பேசற உண்மை நிலமை தெரிஞ்சிடுத்து. எதையும் எதிர்கொள்ள நான் தயாராத்தான் இருக்கேன். எனக்குப் பார்வை திரும்பச் சான்ஸ் இல்லை. அதானே?"

"அப்படியும் தடாலடியாச் சொல்லிட முடியாது. சான்ஸ் இல்லைங்கற பிரசண்டேஜ் அதிகமா இருக்கு. ஆனா, அதுக்காக ட்ரிட்மெண்டை நிறுத்தறதுக்கும் முடியாது. இடைலே எந்த மிரக்கிளும் நடக்கலாமில்லையா?"

நான் சிரித்தே விட்டேன். "டாக்டர்! என் மேலே இருக்கிற பரிவுனாலே இப்படிச் சொல்றிங்க, போலிருக்கு. நான் உறுதியாத் தான் இருக்கேன். பார்வை கிடைச்சு தம்பி வந்தான்னா, அவனைப் பாத்து சந்தோஷப்பட்டுப் போறேன். பார்வை கிடைக்காது போயிட்டாலும், அவன் வந்திட்டானா, அவன் திரும்பி வந்ததுக்கு சந்தோஷப்பட்டுப் போறேன். அதுனாலே அவன் எப்போ வந்தாலும் எனக்கு சந்தோஷமே. எனக்கு பார்வை கிடைக்கறத்துக்கும், கிடைக்காம போறதுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமில்லை. ஓ.கே?.."

"ஓ... ஃபைன்.." என்ற டாக்டரின் குரலில் மகிழ்ச்சி கலந்திருந்தது வெளிப்படையாக எனக்குத் தெரிந்தது.

(இன்னும் வரும்)Related Posts with Thumbnails