மின் நூல்

Tuesday, April 30, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                       18


வாழ்க்கையில் நிறைய நட்புகள் அந்தந்த  காலகட்டங்களில் குறுக்கிடலாம்.  அந்நியோன்யமாகப் பழகலாம்.  ஆனால் இளம் வயதில் யாராவது ஒருவரிடம் கொள்ளும் நட்பு மட்டும் காலாதிகாலத்திற்கு  வாழும் ஒரே நட்பாக அமையும்.  அந்த நண்பர்களுக்குள் அடிக்கடி பேசிக் கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை; ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற தேவையுமில்லை.. நீண்ட கால இடைவெளி கூட அந்த நட்பை ஒன்றும் செய்து விட முடியாது...  எப்பொழுது   வேண்டுமானாலும் ஒருத்தரை ஒருத்தர்  பார்த்தாலும், பேசினாலும்  இல்லே இந்த ரெண்டுமே இல்லேனாலும் அந்த நட்பு வாடாமல் வதங்காமல் என்றும் துளிர்த்த நிலையிலேயே பச்சைப் பசுமையாக இருக்கும் ' என்று காண்டேகர் சொல்லுவார். 

வாழ்க்கையில் ஒரே ஒருத்தர் இடத்தில் தான் இப்படியான அந்தப் பரஸ்பர நட்பு ஏற்படுமாம்.  காண்டேகர் சொல்வது சரி தானா?.. உங்கள் அனுபவத்தில் யோசித்துப் பார்த்துச்  சொல்லுங்கள்..

காண்டேகர் சொன்ன மாதிரி எனக்கமைந்த நண்பன்  ரகுராமன்.   பாரதி வித்தியாலயா பள்ளியில் இருவரும் ஒன்றாகப் படித்தோம்.   ஜிப்மரில் பணியாற்றி ஓய்வு பெற்று இப்பொழுது புதுவையில் இருக்கிறான். திடீரென்று ஃபோன் பண்ணி, "எப்படிடா இருக்கே?" என்று எங்களில் யாராவது ஒருவர் கேட்டால் போதும். நேற்று தான் பேசி விட்ட இடத்தில் தொடர்கிற மாதிரி பேச்சுத் தொடரும்;  பாசம் பொங்கும்.  மனைவி, மக்கள், குடும்பம் என்று பின்னால் ஏற்பட்ட பந்தங்களுக்கு முன்னால் ஏற்பட்ட அந்த உறவில் என்றும் பங்கம் ஏற்பட்டதில்லை.

சேலத்தில் ரகுராமன் பீஷர் காம்பவுண்டு பக்கத்திலிருந்த இரத்தினம் பிள்ளை வளாகத்தில் குடியிருந்தான்.  ராஜாஜி பிறந்த ஊரில் பிறந்தவன்.   நாங்கள் இரண்டு பேருமே அந்தக் காலத்தில் எஸ்.ஏ.பி.யின் எழுத்துப் பைத்தியங்கள்.  எனது நிறைய கதைகளில்  ரகுராமன் என்று கதை மாந்தருக்குப் பெயர் வைத்திருக்கிறேன்.   நல்லதோ,  கெட்டதோ நிறைய விஷயங்களை கதைகளில் அவன் தோளில் ஏற்றிச் சொல்லியிருக்கிறேன்.

திடீரென்று ஒரு நாள் போன் பண்ணி, "இன்னுமாடா எழுதிண்டு இருக்கே?" என்று ஆச்சரியத்துடன்  கேட்டான்.    நிறைய வாசிக்கத் தொடங்கி, ஆங்கில நாவல்களில் மனம் புதைந்து.. புதைந்து..  எழுதுவதையே நிறுத்தி விட்டான்.

"ஏண்டா  நிறுத்திட்டே?" என்று இரண்டு வருஷங்களுக்கு முன் ஒரு நாள் கேட்டேன்.

"ப்ச்.. என்னத்தைச் சொல்றது?.. ஏதோ நிறுத்திட்டேன்.." என்று விட்டேர்த்தியாக பதில் சொன்னான்.

"எப்படிடா நிறுத்திட்டே?.." என்று அடுத்த கேள்வியை அடக்க மாட்டாமல் கேட்டேன்.

"இங்கிலீஷ் நாவல் நிறையப் படிச்சேன்டா.  சாப்பிட்டுட்டு ராத்திரி 9 மணிக்கு ஆரம்பிச்சா  ரெண்டு, ரெண்டரை ஆயிடும்.. முடிக்காம தூக்கம் வராது.  படிக்க படிக்க.. என்னத்தைடா சொல்றது?.. நாமல்லாம் என்ன எழுதறோம்ன்னு ஆயிடுச்சு..  சத்தியமா சொல்றேண்டா.  நாமல்லாம் ஜீரோடா..   அந்த உண்மை உறைத்ததும் என்னாலே எழுத முடிலேடா..."

"சாவி இருந்த காலத்திலே நீ குங்குமத்திலே எழுதினதெல்லாம் இன்னும் நெனைப்புலே இருக்குடா.. நீயே ஒன்னைக் குறைச்சு மதிப்பிடற மாதிரி இருக்கு.."

"நோ..." என்று ஆவேசமாக மறுத்தான்.  "நாமெல்லாம் உண்மைக்கு ரொம்ப விலகியிருந்து பாசாங்கா நிறைய எழுதறோம்டா.  பட்டவர்த்தனமா  கதைலே கூட எதையும் யாரையும்  எதுவும் சொல்ல முடியாத நிலைடா இங்கே.  அங்கேலாம் அது இல்லேடா.. எழுத்துன்னா அதுலே சத்தியம் இருக்கணும்.. அது இல்லாத பட்சத்திலே..  ஆல்ரைட்.. விட்டுத் தள்ளு.." என்று சர்வ சாதாரணமா அந்த டாபிக்கையே கத்தரித்து விட்டான். .

ரகுராமனால் முடிந்தது நம்மால் முடியவில்லையே என்ற நினைப்பு தான் இப்பொழுதும் ஓங்கியிருக்கிறது.

சைக்கிள் விடக் கற்றுக் கொண்ட ஆரம்ப காலத்தில்  குரங்கு பெடல் தான்.    சீட்டில் உட்கார்ந்து பழக ஆரம்பித்த போது ரகுராமன்  தான் பின்னாலேயே   பாதுகாப்பாக ஓடி வருவான். ஓரளவு எதிரில் வருபவர் மீது மோதாமல் வளைத்து  ஹேண்டில் பாரை ஒடைக்கத் தெரிந்து பாலன்ஸ் கிடைத்ததும்
ஒரு நாள் திடீரென்று "ஏற்காடு போகலாமா?" ஏன்று என்னைக் கேட்டான்.

"ஏற்காடா? எப்போடா?"

"நாளைக்குத் தாண்டா..  காலம்பற சைக்கிளை   எடுத்திண்டு வந்திடு.   சாயந்தரத்துக்குள்ளே திரும்பிடலாம்.."

"சைக்கிள்லேயா?.. இப்பத்தானேடா விடவே கத்திண்டிருக்கேன்?.. மலை மேலே போக முடியுமாடா?' பயந்தேன்.

"உன்னாலே முடியும்டா.." என்று அபயக்கரம் நீட்டினான் ரகுராமன்.

அடுத்த நாள் அதிகாலைலேயே வீட்டில் ஏதோ சாக்குபோக்கு சொல்லி விட்டுக் கிளம்பி  விட்டேன்.  இன்னொரு சைக்கிளில் ரகுராமன்.  மலைலே கொஞ்ச தூரம் கூட என்னாலே சைக்கிள்லே ஏற முடிலே. அநியாயத்திற்கு ஹேண்டில் பார் ஒரு பக்கம் ஒடிந்தது.   தொடக்கத்தில் பத்தடி பள்ளத்தைப் பார்த்தாலே பயமாக இருந்தது.

"டே.. இது ரிஸ்க்குடா..."
                                                                                                                         

"ஒரு மண்ணும் இல்லே.." என்று மறுத்தான் அவன்.

அதற்கு மேல் மலை ஏற சைக்கிளும் மனமும் ஒத்துழைக்க வில்லை.

"பேசாம தள்ளிண்டு வா.." என்று சொல்லி விட்டு அவனும் என்னோடையே தன் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தான்.

பின் பக்கமோ, எதிர்த்தாற்போலவோ வண்டி ஏதாவது வந்தால் ஒதுங்கிக் கொண்டு வண்டி போனதும் சைக்கிளைத் தள்ளிக் கொண்டே... வழியில் பயங்கர தண்ணீர் தாகம்.  வேர்த்து வழிய  ஒரு மதகடியில் உட்கார்ந்து விட்டேன்.

மலையிடுக்குகளில் சுனை நீர் வழிகிறது.  கையைக் குவித்து குடிக்க முடியவில்லை.  கடைசியில் ரகு தான்    அதற்கு ஒரு வழி கண்டு பிடித்தான்.  சைக்கிள் பெல் கப்பைக் கழட்டினான்.   சுனைநீர் வழியற இடத்தில் ஒட்டிப் பிடித்தான். கப் கொஞ்சம் கொஞ்சமாக நிறைந்ததும், "குடிடா.." என்று என்னிடம் கொடுத்தான்.  தானும் அந்த மாதிரியே குடித்தான்.

"போலாமா?.."

"உம்.."

சைக்கிளைத் தள்ளியபடியே ஏற ஏற ஹேர்பின் பெண்டுகள் வளைந்து கொண்டே இருந்தன.  ஈ காக்காய் இல்லை.  ஹோவென்றிருந்தது.   கொஞ்ச தூரம் போனதும், "சைக்கிள்லே ஏறி மிதிடா.." என்றான்.

ஏறினேன். மிதித்தேன். அவனும் கூட வந்தான்.  இப்பொழுது காலுக்கு பெடல் பழக்கப்பட்ட மாதிரி இருந்தது.  ஹேண்டில் பாரை இறுகப் பற்றிக் கொண்டு வண்டி சாய்ந்து விடாமல் பேலன்ஸ் பண்ணி மிதித்தேன்.   மலையின் கீழ்ப் பக்கமோ, மேல் பக்கமோ ஏதாவது வண்டி-- லாரி வர்ற  சத்தம் கேட்டால் டக்கென்று  சைக்கிளிலிருந்து இறங்கி ஓரமாக ஒதுங்கிக் கொள்வோம்.   சில்லென்று காற்று வீசுகிற சூழ்நிலை  உற்சாகமாக இருந்தது.  அதற்கடுத்து பத்தே நிமிடங்களில் மலையின் மேல் பகுதிக்கு வந்து ஏரிக்கு வந்து  விட்டோம்.

ரகுராமன் அவன் வீட்டில் கொடுத்து காசு எடுத்து  வந்திருந்தான்.  ஏரிக் கரையில் ஆரஞ்சுப் பழம் வாங்கினான்.  அப்புறம் கொய்யா. அதற்கப்புறம் மாண்ட் போர்ட் ஸ்கூல் பக்கத்திலே சப்போட்டா.  ஏற்காட்டில் இரண்டு மணி நேரம் இருந்திருப்போம்.

"போலாமாடா?"  எதையும் தீர்மானிப்பது அவன் தான்.

எனக்கும் சீக்கிரம் மலையிறங்கி அடிவாரத்திற்குப் போய் விட்டால் நல்லது என்றிருந்தது.  எப்படிப் இறங்கப் போகிறோமோ என்ற மலைப்பில் விளைந்த எண்ணம் அது.

ஏரி  தாண்டி வந்தோம்.  மலையிலிருந்து இறங்கற வளைவில், "சைக்கிளில் ஏறிக்கோ.." என்றான். "பிரேக்கை இறுக்கமா பிடிச்சிண்டா போதும்.  சைக்கிள் நகர்ற அளவில் வைச்சுக்கோ.  வளைவில் மட்டும் பாத்து குறுக்கமா திரும்பாம அகலமா திரும்பற மாதிரி பாத்துக்கோ.  எதிர்த்தாற் போலேயோ, பின்னாடியோ லாரி வந்தா பிரேக் பிடிச்சு ஒதுங்கிக்கோ.  முடிலேனா இறங்கிக்கோ.  நான் பின்னாடியே வர்றேன்.. பயப்படாதே.." என்று தைரியம் கொடுத்தான்.

என்ன மாயமோ தெரிய வில்லை.  இருபதே நிமிஷத்தில் அடிவாரம் வந்து விட்டோம்.  பாதி  தூரத்தில் வழியில் ஒரே ஒரு லாரி மட்டும் பின்னாடி ஹாரன் அடிச்சு மெதுவாத் தாண்டி எங்களைக் கடந்தது.

கீழே வந்ததும்  மலையை நிமிர்ந்து பார்த்த பொழுது,  நாமா மேலே ஏறி கீழே  அதுவும் சைக்கிளில் இறங்கி வந்தோம் என்றிருந்தது.

"அவ்வளவு தாண்டா..  இதுக்கு போய் என்னவோ யோசிச்சையே?  பூச்சி பூச்சின்னா ஒண்ணும் வேலைக்கு  ஆகாது..  துணியணும்.. துணிஞ்சு இறங்கணும்.  என்னாயிடப் போறது?" என்றான் ரகுராமன்.    "இனிமே டவுன்லே எங்கே வேணா நீ சைக்கிள் ஓட்டலாம்.  அதான் ஏற்காடு மலைலேயே ஏறி இறங்கிட்டியே?" என்றான் அவன் சிரித்துக் கொண்டே.

இன்னொரு தடவை இந்த ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று என் மனம் மட்டும் என்னிடம் லேசா கிசுகிசுத்தது.  நானும் சிரித்துக் கொண்டேன்.

(வளரும்)


                  அனைவருக்கும்  மே தின  வாழ்த்துக்கள்.

Monday, April 29, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                   17

ன்று தபாலில் வந்திருந்த  அந்தப் புத்தகம் தான் என் மகிழ்ச்சிக்குக் காரணம்.

அது கதம்பம் என்ற  மாத   இதழ்.  இலங்கை கொழும்புவிலிருந்து அந்நாட்களில் பிரசுரமான  இதழ்.  இன்றைய  குங்குமம் பத்திரிகை சைஸூக்கு இருக்கும்.  அந்த இதழின் ஆசிரியர் பெயர் மோகன்.  வாலிபர்.  கல்கண்டு தமிழ்வாணனின் மேல் அளப்பரிய அன்பு கொண்டவர்.  தமிழ்வாணன் மாதிரியே அதே பாணியில்  குளிர்க் கண்ணாடி அணியும் பழக்கம் கொண்டவர்.  சின்னத் தமிழ்வாணன் என்றே அவரை அழைப்பாரும் உண்டு.

அந்த கதம்பம் பத்திரிகைக்கு சேலம் பகுதிக்கு முகவர் நமது எம்.என்.ஆர். தான். எனக்கு கதம்பம் காரியாலயத்திலிருந்து  அனுப்பி வைத்திருந்த அந்தக் குறிப்பிட்ட இதழ் சேலம் விற்பனைக்காக அவருக்கு வந்து சேரவில்லை.  அதற்குள்  இலங்கையில் போஸ்ட் செய்யப் பட்டு காம்ப்ளிமெண்ட் காப்பியாக என் கைக்கு வந்து சேர்ந்து விட்டது.

அதில் என்ன விசேஷம் என்பதைச் சொல்கிறேன்.  இந்தப் பத்திரிகையில் 'எனக்குப் பிடித்த எழுத்தாளர்'   என்று ஒரு  போட்டியை வைத்திருந்தார்கள்.  அந்தப் போட்டியில்  நானும் கலந்து   கொண்டிருந்தேன்.  பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தால்  அந்தப் போட்டியில் முதல் பரிசு  எனக்குத் தான் என்று தெரிந்தது.  அந்த நல்ல செய்தி தான் அன்றைய என் மகிழ்ச்சிக்குக் காரணம்.

அந்நாளைய  குமுதம் பத்திரிகையின் பரம  ரசிகன் நான்.  அதுவும் ஆசிரியர்  எஸ்.ஏ.பி. அவர்கள் குமுதத்தில் தொடர்கதை  எழுதுகிறார் என்றால் என் எதிர்பார்ப்பு எகிறும்.  அவர் தொடர்கதைப் பகுதியைப்  பத்திரிகையிலிருந்து   பிரித்தெடுத்து  சேர்த்து வைத்து பின் மொத்தமாக பைண்ட் பண்ணி  பாதுகாப்பாக வைத்துக் கொள்வேன்...  இப்படிச் சேர்த்து வைத்துக் கொண்ட குமுதம் பைண்டிங்கள் பல ஆண்டுகள் கழித்தும் என் கைவசம் இன்றும் உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  தோன்றிய பொழுதெல்லாம் அவர் எழுத்தை ஆசையுடன் படிப்பதில் அலாதியான சுகத்தை இன்றும் அனுபவிக்கிறேன்.  நான் என்றும் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வாசகர்களுக்கு சொல்ல வேண்டிய அந்தக் கதை எப்படிச் சொல்லப் பட்டிருக்கிறது என்பதில் அதிகம் கவனம் கொள்வேன்.  இந்த இரகசியம் தெரிந்தால் எந்தக் கதையையும் வாசிக்கறவர்களுக்குப் பிடித்த மாதிரிச் சொல்லி விடலாம் எனபது என் அபிப்ராயம்.  அப்படிச் சொல்லத்  தெரியவில்லை என்றால் எப்படிச் சிறப்பான கதையம்சமும் வாசகர் வாசிக்கையில் அவர்களைக் கவராது போய் விடும்.

பெரும்பாலான வாசகர்களுக்கு வேண்டுமானால் ஒரு பத்திரிகையின் ஆசிரியர் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமோ அக்கறையோ இல்லாது இருக்கலாம்.  ஆனால் படைப்பாற்றல்  மிக்க வாசகர்களுக்கு ஒரு பத்திரிகையின் ஆசிரியர் பற்றிய விவரங்கள் அறிவதில் இயல்பான ஈடுபாடு உண்டு.  அது அவர்களின் வாசக  உள்ளத்தின் வெளிப்பாடு.   மாதவி பத்திரிகை பற்றி நான் மேலோட்டமாகச் சொல்லும்  பொழுது அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் யார், அந்தப் பத்திரிகையின் உள்ளடக்கம், யார் யாரெல்லாம் எழுதினார்கள் என்று 'எங்கள் பிளாக்' ஸ்ரீராம் விசாரித்தார் இல்லையா?.. இது தான் வாசக உள்ளத்தின் நேர்த்தியான வெளிப்பாடு.  அவருக்குக் கூட நான்  மாதவி பத்திரிகையில் பிரசுரித்திருந்த பொறுப்பாசிரியரின் பெயரை மட்டுமே சொன்னேன்..  அதற்குக் காரணம்: 1. ஒரு பத்திரிகையின்  முகவர் சம்பந்தப்பட்ட  பிரச்னைகளுக்கும் அந்தப் பத்திரிகையின்  ஆசிரியருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது.  2. ஸ்ரீராமைப் பொறுத்த மட்டில் சொன்ன தகவலே போதும் என்று நான் நினைத்ததால்.  எழுத்து, பத்திரிகை என்று வந்து விட்டால்,  நாம் கோடு போட்டாலே போதும், ரோடு போடும் திறமை கொண்டவர் அவர்.  அந்த அளவுக்கு   அவருக்கு பத்திரிகை விஷயங்களில் ஈடுபாடு என்று எனக்குத் தெரியும்.

ஒரு பத்திரிகையின்  சாகச விற்பனை,  அதில் எழுதுபவர்களின் எழுத்தாற்றல், உள்ளடக்க விஷயங்கள் என்பதையெல்லாம் கணாக்கில் எடுத்துக் கொண்டு அந்தப் பத்திரிகையின் ஆசிரியர், அவர் பற்றிய தகவல்கள், தோற்றம் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்   என்ற ஆவல் இயல்பானதே. இலட்சக்கணக்கான விற்பனை கொண்ட குமுதம்   இதழின் ஆசிரியர் எப்படியிருப்பார்  என்று அவரோடு நெருங்கிப் பழக நேர்ந்த ஒரு சிலரைத் தவிர யாருக்கும் தெரியாது.  அந்த அளவுக்கு தனது புகைப்படம் எதுவும் வெளியில் வராது தம்மை மறைத்துக் கொண்டவர் அவர்.   ஒரு தடவை  மிகவும் ஆசையுடன் அவர் புகைப்படம் அனுப்ப  வேண்டி குமுதத்திற்குக் கடிதம் எழுதியிருந்தேன்.  அடுத்த சில நாட்களில்,

அன்புடையீர்,                                                                                                     29-8-60

வணக்கம்.  தங்களுடைய  அன்பான கடிதத்துக்கு ஆசிரியர் தமது நன்றியைத் தெரிவிக்கச் சொன்னார்.  அவரது கைவசம் புகைப்படம் எதுவுமில்லை.  அன்பு கூர்ந்து மன்னிக்கவும்.
                                                                                                                                                                                        ரா.கி. ரங்கராஜன்                                                             
 --- என்று ரா.கி.ர. கையெழுத்திட்டு எனக்கு கடிதம் வந்தது.


அப்பொழுது எனக்கு 17 வயது தான்.  அந்த வயதில் பத்திரிகைகள் மீதும் மனங்கவர்ந்த எழுத்தாளர்கள் மீதும் இப்படி ஒரு ஆசையும், அன்பும்!

அந்நாட்களில் பொங்கல் திருவிழா வந்தால்  எம்.ஜி.ஆர்.,  சிவாஜி கணேசன் படங்கள் போட்ட வாழ்த்து அட்டைகள்  தாம்  கடைகளில் குவியலாகக் காணக் கிடைக்கும்.  எந்த அட்டையை யார் வாங்குகிறார்கள் என்பதைக் கொண்டு அவர்களின் அரசியல் கட்சிகளின் சார்பு நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவான இயற்கைக் காட்சிகள் கொண்ட வாழ்த்து அட்டைகளை வாங்கி நான் பத்திரிகை ஆசிரியர்களுக்கு அனுப்புவது வழக்கம்.  அந்த அளவுக்கு பத்திரிகைகளும்,  அதன் ஆசிரியர்களும் அந்த வயதில் என்னை ஈர்த்திருந்தார்கள்.                                                                                   

என் ஆர்வத்திற்குத் தீனி போடுகிற நிகழ்வு ஒன்று  நடந்தது.  ஆனந்த விகடன் பொன்விழா  பரிசுப் போட்டிகளின் போது சிறந்த  நாவலைத் தேர்ந்தெடுக்கும்      குழுவில் எஸ்.ஏ.பியும்  இருந்தார்.  அந்தத் தேர்வுக் குழுவின் புகைப் படத்தையும் விகடனில் வெளியிட்டிருந்தார்கள்.   அந்த குரூப் போட்டோவின் கீழே இடமிருந்து வலமாக என்று ஒவ்வொருவரின் பெயரையும் பிரசுரித்திருந்தார்கள்.  அவர்கள் சொல்லியிருந்தபடி இடமிருந்து  வலமாக என்று ஒவ்வொருவராக எண்ணிக் கொண்டு வந்தவன்,  ஆறாவது நபர் வரும் பொழுது அவர் தோற்றம்  மங்கலாக  நிழல் போல தேசலாகத்  தெரிந்து உற்று உற்றுப் பார்த்து சலித்துப் போனேன்.   சென்னைக்கு  வந்த பிறகு ஒரு நாள் எஸ்.ஏ.பி. அவர்களைப்  பார்த்தே விடுவது என்று விடாப்பிடியாகத் தீர்மானித்து  குமுதம் அலுவலகத்துக்கே போனேன்.  அதெல்லாம் பற்றி இன்னொரு சமயம் எழுதுகிறேன்.

எஸ்.ஏ.பி. அவர்கள் அமெரிக்காவில் காலமான பொழுது தான் தொலைக்காட்சியில் அவர் புகைப்படம் பார்த்து 'ஓகோ, நம் எழுத்தாசான் இப்படித் தான் இருப்பாரோ' என்று அவர் தோற்றதை உள் வாங்கிக்  கொண்டேன்.

குமுதத்தில் எஸ்.ஏ.பி.  எழுதிய முதல் தொடர் 'பிரம்மச்சாரி'..  அடுத்து  காதலெனும் தீவினிலே'. அதற்கடுத்து 'நீ'.  இந்த 'நீ'க்கு நிகராக எந்தத் தொடரும் இதுவரை எந்தப்  பத்திரிகையிலும் வரவில்லை என்பது என் சொந்த அபிப்ராயம்.  தொடர்ந்து, 'சொல்லாதே'', 'இன்றே இங்கே இப்பொழுதே',  'கெட்டது யாராலே', 'சின்னம்மா' 'பிறந்த நாள்',  'மலர்கின்ற பருவத்திலே',  நகரங்கள் மூன்று,  சொர்க்கம் ஒன்று-- என்று நிறையத் தொடர்களை எழுதியுள்ளார்.  ஓவியம் என்றொரு தொடர்கதை.  நிகழ்காலத்திலேயே எழுதப் பட்ட தமிழின் முதல் முயற்சி.  

சொல்லப்போனால்  எஸ்.ஏ.பி. அவர்கள் தான்  அந்த இளம் பிராயத்திலேயே மானசீக குருவாய் இருந்து  எனக்கு எழுதக் கற்றுக் கொடுத்தவர்.  ஒரு அத்தியாயத்தை எங்கு தொடங்குகிறார், பின்னால் சொல்ல வேண்டிய விஷயத்தை முன்னால் சொல்லி, அல்லது முன்னால் சொல்ல
வேண்டியதைப் பின்னால் சொல்லி முன்னுக்கும் பின்னுக்கும் எப்படி முடிச்சுப் போடுகிறார் அதையும் எவ்வளவு லாவகமாக சொல்லி விடுகிறார்  என்றெல்லாம் ஏதோ பி.எச்.டி. க்கு  ஆய்வு ஏடுகள் சமர்ப்பணம் பண்ணுகிற மாதிரி அவர் எழுத்தை அணுஅணுவாக ஆராய்ந்திருக்கிறேன்.

இலங்கை கதம்பம் பத்திரிகைக்கு எனக்குப் பிடித்த எழுத்தாளராய் அவரைத் தான் வரித்து எழுதியிருந்தேன்.  எனது கட்டுரை முதல் பரிசு கட்டுரையாகத் தேர்வான செய்தி அந்த இதழில் அறிவிக்கப்பட்டு  பரிசுக் கட்டுரையை பிரசுரம் செய்த இதழைத் தான் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்கள்.

இதெல்லாம் விட முக்கியமான விஷயம்  அந்தப் பத்திரிகையின் தார்மீக உண்ர்வு தான்.   அந்த இதழுடன் ஒரு கடிதத்தையும் ஆசிரியர் மோகன் தன் கையொப்பத்துடன் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.

'தங்களுடைய கட்டுரை முதல் பரிசுக்குரிய கட்டுரையாகத் தேர்வானதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.  சேலத்தில் எம்.என்.ஆர். என்பவர் எங்கள் முகவராக செயல்படுகிறார்.  உங்கள் முகவரியை அவருக்குத் தெரியப்படுத்தி இருக்கிறோம்.  முதல் பரிசுக்கான தொகையை எங்கள் சார்பில் உங்களுக்கு அவர் வழங்குவார்.  அருள் கூர்ந்து பெற்றுக் கொள்ள வேண்டுகிறோம்.  மேலும் தங்கள் படைப்புகளை  'கதம்பம்' பத்திரிகைக்கு அனுப்பி எங்கள் வளர்ச்சியில் பங்கு பெற வேண்டுகிறோம்.  நன்றி.'

-- என்று அந்தக் கடிதம் எனக்கு சேதி சொன்னது.

முதல் பரிசு கட்டுரையாகத் தேர்வானது,  அதற்கான பரிசுத் தொகையை எம்.என்.ஆரே எனக்கு வழங்கப் போகிறார் என்று இரட்டை சந்தோஷம் எனக்காயிற்று.

அந்தக் காலத்தில் விஷய தானம் என்று சொல்வார்கள்.  சன்மானமெல்லாம் எதிர்பார்க்காமல் எழுதுவது.   அந்த மாதிரி இலட்சிய வேகத்தில் எழுதிய காலங்களும் உண்டு என்பதையும் சொல்ல வேண்டும்.

ஆனால்  இலங்கை-- இந்திய பணப் பரிமாற்ற  விஷயங்களைக் கருத்தில் கொண்டு தனது  தமிழக முகவர் மூலம்  எனக்கு பரிசை அளிக்க தீர்மானித்து  அதனைச் செயல்படுத்தவும் செய்த கதம்பம் பத்திரிகையின்   தார்மீக உணர்வு தான் இத்தனை காலம் கழித்தும்  நினைவில் வைத்திருந்து அதை இப்பொழுது   பகிர்ந்து கொள்ளவும் செய்திருக்கிறது.


(வளரும்)

Friday, April 26, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                                 16     


 வுன் ரயில் நிலைய பார்ஸல் செக்ஷன் பொறுப்பாளர் என்னைப் பார்த்தவுடனேயே  பில்லைப் பார்த்து என்னைக் கையெழுத்துப் போடச் சொல்லி பார்ஸலைத் தந்து விட்டு லேசாகப் புன்னகைத்தார்.  இரண்டு பேரும் பழக்கமாகிவிட்டோம் என்பதற்கு அடையாளம் அது என்று நினைத்து நானும் புன்னகைத்து, "தேங்க்ஸ்.. வரேன், சார்.." என்று விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தேன்.

டவுன் ரயில் நிலையத்திற்கு இடது பக்கம் அதல பாதாளத்திற்கு இறங்குகிற மாதிரி கீழே இறங்கி  திருமணி முத்தாறு தரைப்பாலம் தாண்டி மறுபடியும் சின்ன மேடேறினால் இரண்டாவது அக்கிரஹார-- தேரடித்  தெரு-- சந்திப்பு வந்து விடும். என் ஆஸ்தான  இடம் வந்து கதவு திறந்து பார்ஸலை  டேபிளின் மேல் வைத்தேன்.

எம்.என்.ஆர். அப்பொழுது தான் அவரது கடையின் உள்ளிருந்து வெளியே வந்தார்.  எப்பொழுதுமே அவர் அதிகம் பேச மாட்டார்.  நான் பேச்சுக்  கொடுத்தால் விளக்கம் மாதிரி நிறைய சொல்லுவார்.  இன்றைக்கோ அதிசயமாக "மாதவி வந்து ஒரு வாரம் ஆகப்போறதில்லையா?" என்றார்.

"ஆமாம், சார். அடுத்த வார இஷ்யூ கூட வந்து விட்டது.  இப்போத் தான் ஸ்டேஷன் போய் வாங்கிக் கொண்டு வந்தேன்.." என்றேன்.

"ஒண்ணும் ப்ராபலம் இல்லியே?" என்று சந்தேகக் கொக்கி போட்டார்.

"இல்லே, சார். வாசுதேவன் என்னைப் பார்த்ததுமே கொடுத்திட்டார்.."என்றேன்.

"நல்லது. அப்படியே போகட்டும்.." என்றவர் "நான் சாயந்திரம் வரமாட்டேன். கொஞ்சம் வீட்லே வேலை இருக்கு.. நாளைக்குப் பாக்கலாம்.." என்று சைக்கிளின் ஸ்டாண்டை விடுவித்தார்.

நானும் "பாக்கலாம், சார்.." என்று சொல்லி விட்டு  அவர் கிளம்பியதும் உள் பக்கம் வந்து பார்ஸலைப்  பிரித்தேன்.  இந்தத் தடவை  மாதவியின்  முதல்  பக்கத்தை நீலக்கலரில்  பிரமாதப்படுத்தியிருந்தார்கள்.    எண்ணிப் பார்த்தேன். 30 பத்திரிகைகளும் 3 சின்ன போஸ்டர்களும் இருந்தன.   நாளைக்குத் தான் டெலிவரி பண்ண வேண்டும்.

பொதுவாக பத்திரிகைகளின் கடைகளுக்கான  விற்பனை வழக்கம் முகவர்களுக்கும் கடைக்காரர்களுக்குமான  உறவு  முறையில் அமையும்.  அடுத்தடுத்த இதழ்களை கடையில்  விநியோக்கிக்கும் பொழுது அதற்கு முதல் இதழுக்கான விற்பனைத் தொகையை வசூலித்து விடுங்கள் என்று எம்.என்.ஆர். சொன்ன அறிவுரையின் படி செய்யலாம்  என்றே தீர்மானித்திருந்தேன்.

அடுத்த நாள் மாதவியின் இரண்டாவது இதழை கடைகளுக்கு  விநியோகிக்கும் பொழுது தான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி திருப்பப்பட்டு விட்டன.  அதாவது  30-ல் பதினைஞ்சோ, பதினாறோ தான் விற்றிருந்தது.  ஒரிரண்டு கடைகளிலேயே முப்பதையும் பிரித்துப் போட்டு விட்டால், விற்காது  போய் விடப்போகிறதே என்று பயந்து தான் பரவலாக பலரின் பார்வையில் படட்டுமே என்று பல கடைகளுக்கு விநியோகித்தேன்.   இருந்தும் தேங்கி விட்டது.

பத்திரிகையை விற்ற கடைக்காரர்களுக்கு 10% கமிஷன் தர வேண்டும்.  கமிசனைக் கழித்துக் கொண்டு நாலைந்து பேர் தந்திருப்பார்கள்.  ஓரிருவர்  "நீயே கணக்கு வைச்சுக்கோ.  அடுத்த தடவை சேர்த்து  வாங்கிக்கோ.." என்று சொன்னார்கள்.  அதெல்லாம் போகட்டும்.  செவ்வாய்ப்பேட்டையில் ஒரு  கடைக்காரப் பெரியவர் சொன்னது  பொட்டில் அடித்த மாதிரி இருந்தது.

"தம்பீ!  இது புதுப் பத்திரிகை..  நிறைய விளம்பரம் பண்ணனும்.  கடைக்குக் கடை விக்கறதோ இல்லையோ போஸ்டர் தொங்கி ஒரு பரபரப்பு ஏற்படுத்தணும்.   பிரகாசமான விளக்குகள் எரியும் போது இது சிம்னி விளக்கைக் கொளுத்தி வைச்ச மாதிரி இருக்கு.  பத்திரிகைகாரங்க கிட்டே நிறைய  கடைலே மாட்ற போஸ்டர் கேட்டு வாங்கு.   பிக்-அப் ஆறதுக்கு இதான் நேரம்.  ஆயிடுச்சின்னு வைச்சுக்கோ.. அப்புறம் தன்னாலே ஜனங்களே கேட்டு வாங்குவாங்க.. தெரிஞ்சிக்கோ..." என்று அவர் சொன்னது அலிபாபா குகைக் கதவைத் திறந்த மந்திரமாக எனக்குப் பட்டது.

அதே வேகத்தில் விற்காத  இதழ்களைச் சுமந்து கொண்டு  நூலகம் வந்தவன்  உடனே மாதவி பத்திரிகை பொறுப்பாளர்களுக்கு   இருக்கும் நிலையை அறிவுறுத்தி  இப்படி 3 போஸ்டர்கள் அனுப்பினீர்கள் என்றால் விற்பனை
பாதிக்கும்.  தாரளமாக போஸ்டர்கள் அனுப்புங்கள்.  என்னாலான முயற்சிகளைச் செய்கிறேன்.." என்று கடிதம் எழுதி பெரிய கடை வீதி தபால் ஆபிஸில் போஸ்ட் செய்தேன்.

இரண்டு நாட்கள் கழித்து மாதவி பத்திரிகையிலிருந்து   கடிதம் வந்தது.    'பத்து பிரதிகளுக்கு  ஒரு போஸ்டர் என்ற கணக்கில்  தான் போஸ்டர் அனுப்ப முடியும்.  எல்லா முகவர்களுக்கும் எந்தக் கணக்கில் போஸ்டர்கள் அனுப்புகிறோமோ அந்தக் கணக்கில் தான் உங்களுக்கும் அனுப்பப் பட்டிருக்கிறது.  உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலாக அதிக போஸ்டர் அனுப்ப முடியாது...' என்று கறாராகக் கடிதத்தை முடித்திருந்தார்கள்.

கடிதத்தின் வாசகங்கள் என்னை உறுத்தினாலும் இதற்குள் அடுத்த வாரத்திற்கான 30 பத்திரிகைகள், அதற்கான 3 போஸ்டர்கள் என்று வழக்கம் போல வந்து  சேர அவற்றைக் கடைகளுக்கு வழங்கும் போது இந்தத் தட வை சென்ற இதழின் 20 பிரதிகள் திரும்பி விட்டன.

அதற்குள் மாதவி பத்திரிகை அலுவலகத்திலிருந்து இதுவரை அனுப்பி வைத்திருந்த பிரதிகளைக் கணக்கிட்டு அதற்காக நான் அனுப்ப வேண்டிய தொகையை குறிப்பிட்டு உடனே அனுப்பி வைக்க அறிவுறுத்தி கடிதம் வந்து விட்டது.  ஆக, அந்த பத்திரிகை அலுவலகத்தைப் பொறுத்த மட்டில் அவர்கள் பத்திரிகையை வெளியே அனுப்பி விட்டால் போதும். அது விற்ற மாதிரி தான் கணக்கு என்பது புரிந்தது.  அந்தப் புரிதல் எனது அடுத்த கடித வாசகத்தில் பிரதிபலித்தது.

"அது என்ன 10 பிரதிகளுக்கு ஒரு போஸ்டர் என்று கணக்கு?.. இது புது பத்திரிகை.  இப்படி ஒரு பத்திரிகை வெளிவருகிறது என்ற செய்தியை மக்களுக்குத் தெரிவிப்பதே கடைகளில் தொங்க விடப்படும் அந்த குட்டி போஸ்டர்கள் தான்.  அதனால் போஸ்டர்கள் அனுப்புவதில் கஞ்சத்தனம் வேண்டாம்.  30 பிரதிகளைக் கடைகளில் போடும் போதே 20 பிரதிகள் திரும்பி வந்து விடுகின்றன.  சிரிக்கத் தான் வேண்டும்.." என்று கடிதத்தை முடித்திருந்தேன்.

இந்த எனது கடிதம் அவர்களைச் சீண்டியிருக்க வேண்டும்.  கடிதப் போர் போல பதில் வந்தது.. "சேலம் போன்ற பெரிய  நகரத்தில் வெறும் 30 பிரதிகள் கூட விற்க முடியாத உங்கள் நிலை கண்டு எங்களுக்கு சிரிப்பதற்கு நேரமில்லை.." என்ற நக்கல்.  அவ்வளவு தான் அவர்களால்    சொல்ல முடிந்தது போலும்.   அல்லது இதே போல பல ஊர்களில்   பத்திரிகை விற்பனையாகாத நிலை இருந்ததோ தெரியவில்லை.

'என் முகவர் நியமனத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். அடுத்த இதழ் பத்திரிகைகளை எனக்கு அனுப்ப வேண்டாம்.  அனுப்பினால் பெற்றுக் கொள்ள மாட்டேன்..' என்று மணியாடர் பாரத்தில் குறிப்பு எழுதி, எம்.என்.ஆரிடம் கைமாற்றாக பணத்தை வாங்கி அவர்களுக்கு  அனுப்ப வேண்டிய முழுத்  தொகையையும் பைசா பாக்கியில்லாமல் தீர்த்து வைத்தேன்.

அடுத்த நாள்  என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கிய அந்த சம்பவம் நிகழ்ந்தது..


(வளரும்)
Wednesday, April 24, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                 15

'சிவகெங்கைச் சீமை'  என்றொரு படம்.  மருது சகோதரர்களைப் பற்றிய இந்தப் படத்தை கண்ணாதாசன் தன் சொந்த முயற்சியில் எடுத்திருந்தார்.  படத்திற்கு திரைக்கதை, வசனம், பாடல்கள் அத்தனையும் கவியரசரே!  அந்தப் படத்தின்  கடைசி  தூக்குமேடை காட்சியில் நாயகன்  எஸ்.எஸ்.ஆர். பேசுகிற மாதிரி ஒரு நீண்ட வசனம் வரும்.                                               

முரசொலிக்கட்டும்.,  நம் நாடு தழைக்கட்டும், மன்றத்திலே மக்கள் கூட்டம் திரளட்டும்,  மலரட்டும், விடுதலை மலரட்டும்,  தவழட்டும் தென்றல் தவழட்டும்,  திராவிட நாடு வாழட்டும்!

இந்த வரிகளில் வரும்  முரசொலி, நம் நாடு,  மன்றம், விடுதலை, தென்றல், திராவிட நாடு -- இதெல்லாம் அந்தாளைய  திராவிட இயக்கத்தின் பத்திரிகைகளின் பெயர்கள்..

அந்நாளைய  அந்தப் பத்திரிகைகளின் தோற்றமே எடுப்பாக இருக்கும்.  இன்றைய செய்தித்தாட்களின் ஒரு பக்கத்தை இரண்டாக மடித்த மாதிரியான அளவில் (கிட்டத்தட்ட A-4 சைஸில்)   அன்றைய நாட்களுக்கு புது மாதிரியான தோற்றத்துடன்,  கவிதை--இயக்கச் செய்திகள்-- கட்டுரைகள் என்று    எதுவானாலும் நேர்த்தியான  அச்சில் கடையில் தொங்கும் பொழுதே வாங்கி வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிற மாதிரி இருக்கும்.

'மாதவி'  பத்திரிகையும் அந்த மாதிரி தான் இருந்தது. 

புதுப் பத்திரிகை,  ரிடர்ன் காப்பி  கிடையாது  என்று குறிப்பிட்டிருந்தார்கள்.  அதனால்  30 பிரதிகளுக்கு விண்ணப்பித்து  விற்பனையைப் பார்த்து  அதற்கு மேல் பிரதிகளைக் கூட்டிக் கொள்ளலாம் என்ற எண்ணியிருந்தேன்.

முந்தின வாரமே மாதவி பத்திரிகைக் காரியாலயத்திலிருந்து எனக்கு ஒரு கடித உறை வந்திருந்தது.  பிரித்துப் பார்த்தால்  ரயில்வே பார்ஸல் பில்.  சேலம் பகுதிக்கு மாதவியின் முகவராக என்னை நியமித்திருப்பதாகவும், பார்ஸலில் மாதவியின் முதல் இதழை அனுப்பி  வைத்திருப்பதாகவும் பில்லைக் காட்டி பார்ஸலை   டெலிவரி எடுத்துக் கொள்ளச்  சொல்லியிருந்தார்கள்.  அத்துடன் முப்பது பிரதிக்கான விற்பனைத் தொகையில் எனக்கான கமிஷன் 20% கழித்து பாக்கித் தொகையை  பதினைந்து நாட்களுக்குள் அனுப்பி வைக்கச் சொல்லியிருந்தார்கள்.

புதுப் பத்திரிகையின் முதல் இதழ்.  அதைப் பார்க்க வேண்டும் என்று மனது அடித்துக் கொண்டது.  உடனே சைக்கிளை எடுத்துக் கொண்டு சேலம் டவுன் ரயில் நிலையத்திற்குப் பறந்தேன்.  அங்கு  பார்ஸல் பகுதிக்குப்  போய் பில்லைக் காட்டினேன்.  ஏதாவது ஐடி இருக்கிறதா என்று கேட்டார்கள். இல்லை என்று தெரிந்ததும் உங்களை ஏஜெண்ட்டாக நியமித்த கடிதமாவது இருக்கிறதா என்று கேட்டார்கள்.  கொண்டு   வரவில்லை என்று தெரிந்ததும்  உங்கள் ரப்பர் ஸ்டாம்பு சீலாவது கொண்டு   வந்திருக்கிறீர்களா என்று லேசான எரிச்சலுடன் கேள்வி வந்தது.

அந்த எரிச்சலில் நியாயம் இருந்தது என்று எனக்குப் புரிந்தது.  16 வயசு சின்ன பையன்.  அதுவும் டிராயர்-சட்டை. (சிரிக்காதீரக்ள்.  அமெரிக்காவின் இந்நாளைய இன்ஃபார்மல் டிரஸ்ஸே இது  தான்!)  நாலைந்து தடவை வந்து பழக்கமாகியிருந்தாலும் பரவாயில்லை; அதுவும் இல்லை.  நான் தான்  அந்தப் பத்திரிகையின்  முகவர் என்று நம்புவதே அவர்களுக்கு சிரமமாக இருந்தது.

நல்ல வேளை! நம்ம எம்.என்.ஆர்.  அவர்   பத்திரிகை பார்ஸலை எடுத்துப் போக  அந்தப் பக்கம் வந்திருந்தார்.  குருவிடம்  போய் விஷயத்தைச் சொன்னேன்.   "அப்படியா?.. நான் சொல்கிறேன்.." என்று   வந்து பார்ஸல் கிளர்க்கிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.  எம்.என்.ஆர்.   சேலத்தில் கிட்டதட்ட இருபது பத்திரிகைகளுக்கான ஏஜெண்ட்.  தினப்படி இங்கு ஆஜராகிறவர்.  அவர் அறிமுகம் முழு மனத்துடன் ஏற்றுக் கொள்ளப் பட்டது.  "எந்த ஐடியும் வேணாம் சார்.. நீங்கள் வந்தாலே பார்ஸலை எடுத்து கொடுத்து விடுவேன்.." என்று சிரித்துக் கொண்டே சொன்னார் அந்த பி.ஸி.

எம்.என்.ஆரிடம்  விடைபெற்றுக் கொண்டு என் ஆஸ்தான இருப்பிடம் வாடகை நூல் நிலையத்திற்கு வந்தேன்.  ஆர்வத்துடன் பார்ஸலைப் பிரித்தேன்.  இது தான் 'மாதவி' என் கைக்கு வந்து சேர்ந்த கதை.

பொதுவாக பத்திரிகை வந்ததும் கடைகளுக்கு விநியோகிப்பது ஒரு அனிச்சை செயலாய் முகவர்களுக்கு இருக்கும்.  ஆனால் நானோ ஒரு வாசகன் போலவான உணர்வில் பக்கம் பக்கமாக புரட்டி  ஆர்வத்துடன் படித்தேன்.  பத்திரிகையின் தோற்றம்,  அதன் பிரசண்டேஷன்  எல்லாம் எனக்குப் பிடித்திருந்தது.  நாம் இந்தப் பத்திரிகையின் வளர்ச்சிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.   பத்திரிகைக் கட்டோடு போஸ்டர்கள் என்று சொல்லப்படும்  தாள்கள் மூன்றை  அனுப்பி வைத்திருந்தார்கள்.  அந்த போஸ்டர்களில் தலைப்புச் செய்திகள் மாதிரி பத்திரிகையின் உள்ளடக்க விஷயங்கள் சிலவற்றை கொட்டை எழுத்தில் அச்சடித்திருந்தார்கள்.

அன்றே நூலகத்தின் ஓய்வு நேரத்தில்  அந்த 30  பிரதிகளையும் சேலம் டவுன்,  அஸ்தம்பட்டி, குகை, செவ்வாய்ப்பேட்டை,   அம்மாபேட்டை பகுதிகளில் கடைக்கு இரண்டே பிரதிகள் கணக்கில் விநியோகித்தேன்.    ஜனசந்தடி  மிகுந்த  இடத்தில்  இருந்த மூன்று பெட்டிக் கடைகளுக்கு அந்த மூன்று  போஸ்டர்களையும்  கொடுத்து கடையில் பார்வையாக மாட்டி வைக்கச் சொன்னேன்.  இரண்டு கடைகளில் "நீயே மாட்டு..." என்று என்னிடம் கொடுத்தார்கள்.  மற்றப்  பத்திரிகை குட்டி போஸ்டர்கள்  மாட்டி வைத்திருக்கிற பாணியைப் பார்த்தேன்.   க்ளிப் கேட்டேன்.  கிளிப்பெல்லாம்  இல்லை என்று என்னிடம் சொல்லிக் கொண்டே வியாபாரத்தைப் பார்த்தார் கடைக்காரர்.   சிகரெட் பற்ற  வைக்க  வந்த யாரோ ஒருவர், "இந்தா.. இங்கணே தீக்குச்சி இருக்கு பாரு.. அதைக் குத்தி வைச்சு மாட்டு.." என்றார்.  "ஆங்!.. இது தெரியாம போச்சே.." என்று புண்யவான்கள் சிகரெட்டுக்கு கொளுத்தி அணைத்துப் போட்டிருந்த இரண்டு தீக்குச்சிகளை எடுத்து  கடை முன்பக்கம்  இருந்த கம்பியில் போஸ்டரை நுழைத்து  இரண்டு பக்கமும் தீக்குச்சிகளை குத்தி மாட்டி  கச்சிதமாக வேலையை முடித்தேன். 

பெட்டிக்கடைகளில் எம்.என்.ஆருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது.  அவர் பெயரைச் சொன்ன போது நல்ல ரெஸ்பான்ஸ்  இருந்தது.  அவர் பத்திரிகை போலவே 'சரி' என்று வாங்கிக் கொண்டார்கள்.    சில கடைகளில் "வைச்சிட்டுப் போ..". சிலர்,அலட்சியமாக ஒரு  மூலையில் வீசி விட்டு  கடையின் மற்ற வியாபாரத்தைக் கவனிப்பார்கள்.  அந்த மாதிரி நபர்களிடம்,  "அண்ணே! இது புது பத்திரிகை.. ஜனங்களுக்கு   தெரியாது.  நீங்க தான்  அவங்களுக்கு கண்லே படற மாதிரி மாட்டி  வைக்கணும்.." என்று பணிவாகத் தெரிவிப்பேன்.   சிலர் 'இரண்டே ரெண்டு பேப்பர் கொடுத்திட்டு இந்தப் பையன் என்னவெல்லாம் பேசறான்?' என்கிற மாதிரி ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள்.   சிலர் 'சரி, தம்பி'  என்று அன்போடு சொல்வார்கள்.  வியாபாரம் என்று வந்து விட்டால் எல்லாம் தான் இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன்.

மாதவி வெள்ளிக் கிழமை வெளிவருகிற ஏடு.  அடுத்த புதன் கிழமையே  தபாலில் அடுத்த வார பத்திரிகை  பார்ஸலை எடுத்துக் கொள்வதற்காக பில் வந்து விட்டது.

(வளரும்)


Monday, April 22, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                           14


பொதுவாக எது நமக்குப் பிடித்திருக்கிறதோ அதன் மேலேயே ஆழ்ந்த கவனம் செல்லும். நமக்குப் பிடித்திருப்பதே இன்னொருவருக்கும் பிடித்திருப்பது நமக்குத் தெரியவந்தால் அவருடன் நெருக்கம் அதிகமாகும். நமக்குப் பிடித்திருப்பதில் பாண்டித்தியம் பெற்றவர்களைக் கண்டால் அவர் மேல் நமக்கு ஒரு மரியாதையும் அன்பும் பெருகும்.  இப்படித் தான் தமிழ் எழுத்தாளர்கள் பலர் என் உள்ளம் கவர் கள்வர்கள் ஆனார்கள்.  தமிழ்ப் பத்திரிகைகளை வாசிப்பதும் நேசிப்பதுமே பொழுது போக்கைத் தாண்டிய என்னை இயக்கிய ஆதார சுருதி ஆயிற்று.

எழுத்து சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு எப்படி அந்நாளைய தமிழ் எழுத்தாளர்கள் பிடித்துப் போனதோ  அப்படியே மேடைப் பேச்சில் பல புதுமைகளைப் புகுத்திய அந்நாளைய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் மனசுக்கு மிகவும் பிடித்துப் போனவர்கள் ஆனார்கள்.  அவர்கள் பேசிய  தமிழ் மனதைக் கவர்ந்தது.  மேடைப் பேச்சிலும் உரைநடையிலும் அடுக்கு மொழியைப் புகுத்திய அண்ணாவின் தமிழ் கேட்டு தேன் மாந்திய  வண்டானேன்.  வீட்டு வெளித் திண்ணையில் படுத்துக் கொள்வதாக  சொல்லி விட்டு பாயும் தலையணையையும் போட்டு  விட்டு முன் இரவு தாண்டியதும்  அண்ணா பேசுகிறார் என்றால் பொதுக் கூட்டத்  திடலுக்குப் போய்விடுவேன்.

அண்ணா மைக்கைப் பிடிக்க எப்படியும் பதினொன்றுக்கு மேலாகி விடும். 
பாரதி சொன்னானே, தேன் வந்து  பாயுது  காதினிலே என்று.  அப்படித் தமிழ்த் தேன் காதில் பாய்வதைக் கேட்டு பரவசம் அடைந்தவன்  நான்.  அது ஒரு ரசவாத  வித்தை தான்.  எப்படி இப்படி  ஆற்றொழுக்காக ஒருவரால் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் தொடர்ச்சியாகப் பேச முடியும் என்பது அந்நாட்களில் புரியாத புதிராக இருந்தது.  சிலர் வரவழைத்துக் கொண்டு அடுக்கு மொழியாய் பேச முயற்சிப்பார்கள்.  அண்ணாவுக்கோ இயல்பாக வாய்த்த திறமை அது.   வடமொழி வார்த்தைகள் இயல்பாய்த்  தமிழோடு பின்னிப்  பிணையும்.   அ-வில் ஒரு வார்த்தை ஆரம்பித்தால் அவர் சிந்தனையில் தொடர்வண்டித் தொடர் போலத் தொடரும் அடுத்த வார்த்தை அ-வில் ஆரம்பிக்கும் வடமொழி  வார்த்தையாக இருக்கிறதே என்று அந்த வார்த்தையைத் தவிர்க்க மாட்டார்.  வடமொழியும் தமிழும் கலந்து ஆற்றொழுக்காக அவர் பேசுவது தமிழ்ச் சங்கீதத்  தாலாட்டு போல இருக்கும்.   சீர்திருத்த கருத்துக்களை இயல்பான நம் அன்றாட   நிகழ்வுகளில் பொறுத்தி   அவர் சொல்லும் பொழுது மாற்றுக் கருத்து கொண்டோரும் கேட்டு மகிழும் வண்ணம் இருக்கும்.  எனக்கோ கட்சி, கொள்கை, கோட்பாடு  என்றெல்லாம் ஆழ்ந்த ஈடுபாடுகள் ஏதுமில்லை.  ஈடுபாடுகள்  கொள்வதற்கான வயதும்  இல்லை.   அரும்பு  மீசை பருவத்தை,  adolescent  பருவம் என்று  சொல்வார்களே, அந்த மாதிரியான எதையும்  ரசிக்கும் கேளிக்கை பருவம்.   இன்றும் அண்ணா தனித்தன்மை கொண்டவராக  மனத்தில் பதிந்திருக்கிறார்.

தமிழ் வாழும் இடமெல்லாம் நமக்கான இடம் என்ற பரந்த வட்டத்தை எனக்குள் போட்டுக் கொண்டது மனதுக்குப் பிடித்திருந்தது.  அந்த பெரிய வட்டத்துள் வருவோரில் வேண்டுவோர், வேண்டாதோர் என்று யாருமில்லை. எனது நேசிப்பு, தமிழை நேசித்தோருடையேயான பிணைப்பு சங்கிலி ஆயிற்று.

ணி புக் ஸ்டால் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், அல்லவா?.. அவர்களின் விற்பனைக்காக புத்தக நிலையங்களிலிருந்து  வந்திருந்த ஏகப்பட்ட புத்தகங்களில் விற்பனையானவை  தவிர்த்து நிறைய புத்தகங்கள்  தேங்கிப் போயிருந்தன.  அவற்றையெல்லாம் திரட்டி சேலம் தேரடித்  தெருவிலேயே ஒரு வாடகை நூல் நிலையத்தைத் துவங்கினர்.  புத்தகம் வாசிக்கும் என் ஆர்வத்தைப் பார்த்து இந்த வாடகை நூல் நிலையத்தைப் பார்த்துக் கொள்ள  இவனே சரியான நபர் என்று தீர்மானித்து என்னிடம் விஷயத்தைச் சொன்னார்கள்.

காலை எட்டு மணியிலிருந்து மாலை எட்டு மணி வரை நூல் நிலையத்தின் வேலை நேரம்.  இடையில் மதியம் 1 மணியிலிருந்து 4 மணி வரை  ஓய்வு நேரம் என்றும் அந்த  நேரத்தில் என் தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சிகளைப் பெறலாம் என்றும்  ஆலோசனை சொன்னார்கள்.   நான் தட்டச்சு பயின்ற கணேஷ் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டும் அடுத்த கட்டிட மாடியிலேயே இருந்தது.  தட்டச்சு+சுருக்கெழுத்து இரண்டுக்குமான பயிற்சிக்காக மாதம் பத்து ரூபாய் செலவாயிற்று.   அந்தத் தொகையையே நூலகத்தைப் பார்த்துக் கொள்வதற்கான சம்பளமாகத் தருவதாக  நண்பர் மணி சொன்னார்.  அறுபது ஆண்டுகளுக்கு முன் பத்து ரூபா காசுக்கு அவ்வளவு மதிப்பு இருந்தது.

எனது புத்தக வாசிப்பு ஆர்வம் கரும்பு தின்னக் கூலியா என்று தான் இருந்தது. இருந்தாலும் வீட்டில் கேட்டுச் சொல்வதாகச் சொல்லி வீட்டில் சொன்னேன்.

அவர்களோ "அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.  பேசாமல் டைப்ரைட்டிங் இன்ஸ்டியூட்டுக்கு போனோமா, வந்தோமா என்றிரு.." என்று சொல்லி விட்டார்கள்.  அவர்களுக்கு படிக்கிற வயசில்  வேலைக்குப் போய் பையன் மனசை இறுக்கமாக்கிக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணம்.  எனக்கோ  புத்தகம் வாசிக்கும் நேரம் தான்  பொன்னான நேரம் என்ற எண்ணம். கடைசியில் எப்படியோ வீட்டாரை சரிப்படுத்தி அந்த வாடகை நூல் நிலையத்தை நிர்வகிக்கும்  பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.

அம்மாடி!. என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான காலம் அது.  நிறைய வேற்று மொழி இந்திய எழுத்தாளர்களை வாசித்துத் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்த  காலம்.  காண்டேகர், சரத்சந்திரர்,  கே.ஏ. அப்பாஸ், பங்கிம் சந்திரர், பிரேம்சந்த், எம்.டி. வாசுதேவன் நாயர், தகழி, முகமது பஷீர், பொற்றேகாட் என்று யாரையும் விட்டு  வைக்க வில்லை.   அத்தனை பேர் எழுத்தையும் தமிழில் தான்  படித்தேன்   என்பது இன்னொரு அதிசயம்.   அந்நாட்களில் அகில இந்திய எழுத்தாளர்களின்  அறிமுகம் தமிழில்
கிடைத்ததும் இப்பொழுது  அந்த வாய்ப்பு சுருங்கிப் போனதும் நம் மொழிக்கான இன்னொரு இழப்பு.  இதனால் தான் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு கதையாய் நமக்குள்ளேயே முடங்கிப் போகும் அவலமும் இங்கு அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

அந்த வாடகை நூல் நிலையத்திற்கு இன்னொரு பக்கத்தில் பத்துக்கு பத்து அளவில் சின்ன கடை மாதிரியான இடம் இருந்தது.   அங்கு எம்.என்.ஆர். ஏஜென்ஸி  என்ற பெயரில் பத்திரிகைகளின்  ஏஜெண்டாக ஒரு  பெரியவர்  செயல்பட்டுக்  கொண்டிருந்தார்.  கதர் வேட்டி,  கதர் ஜிப்பா, நல்ல உயரம், கொஞ்சம் தாட்டியான   உடல்வாகு.  சைக்கிளில் வந்து கால் ஊன்றி இன்னொரு காலை சைக்கிள் முன் பக்க பார் வழியாக வெளிக் கொண்டு வந்து இறங்குவார்.  முன்பக்க ஹாண்ட் பாரில் ஒரு பெரிய காக்கிப் பை நிறைய புத்தகங்கள் இருக்கும்.  பின் பக்க கேரியரில் நிறைய   புத்தகங்கள்   அடுக்கிக் கட்டப் பட்டிருக்கும்.  சாதுவான முகம்.  நெற்றியில் ஒற்றைக் கோபிக் கோடு.    அவரை முதன் முதலாகப் பார்த்த பொழுதே எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.  சந்தர்ப்பம் கிடைத்த பொழுதெல்லாம் அவருடன் பேசி மிகவும் பிடித்துப் போய் விட்டது.   பத்திரிகை ஆபிஸ்கள், பிரபல எழுத்தாளர்கள் இவர்கள் பற்றியெல்லாம் நிறைய தகவல்கள் சொல்வார்.  அவருடனான பழக்கம் நாமும் ஏன் ஒரு பத்திரிகைக்கு  உள்ளூர் முகவராக செயல்படக் கூடாது என்ற எண்ணத்தை  என்னுள் விளைவித்தது.   அடுத்த நாள் 'தினமணி' செய்தித்தாளில் ஒரு விளம்பரம் பார்த்தேன்.    புதிதாக  திருவாரூரிலிருந்து   வெளிவரவிருக்கும்  'மாதவி' என்ற  ஏட்டிற்கு    முகவர் தேவை என்ற விளம்பரம்  பார்த்து எம்.என்.ஆரிடம் எப்படி விண்ணப்பிப்பது போன்ற சடங்கு நடவடிக்கைகளைத் தெரிந்து கொண்டு விண்ணப்பித்தேன்.


(வளரும்)


Saturday, April 20, 2019

வசந்த கால நினைவலைகள்

                                               13


ன்பதாவது வகுப்பு  அரை ஆண்டுத் தேர்வை எழுதிய கையோடு டி.ஸி. வாங்கிக் கொண்டு சேலம் வந்தாச்சு.  அந்தக் காலத்தில் ஒரு வகுப்பில் வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது பாதியில் வெளியேறுவதோ, சேர்வதோ சிரமமான காரியம்.    இருந்தாலும்  யார் செய்த புண்ணியமோ தெரியவில்லை,  சேலம் பாரதி வித்தியாலயா உயர் நிலைப் பள்ளியில் என்னை ஒன்பதாம் வகுப்பில் சேர்த்துக் கொண்டார்கள்.

சேலம் நகர அமைப்பே விசித்திரமானது.  மிகப் பெரிதும் அல்லாத அதே நேரத்தில் மிகச் சிறிதும் அல்லாத அமைப்பைக் கொண்ட நடுவாந்திர நகரம் அது.  மூன்று இரயில் நிலையங்களைக்  கொண்ட விசேஷம் கொண்ட ஊர்.  மெயின் இரயில் நிலையம் இருந்த இடம்  சூரமங்கலம் என்று  அழைக்கப்பட்ட பகுதி.  இரண்டாவது ரயில் நிலையம் முற்றிலும் வியாபார போக்குவரத்துக்கு ஒதுக்கப்பட்டு மார்க்கெட் இரயில் நிலையம் என்றிருந்தது.  சேலத்தின் மிகப் பெரிய வியாபார ஸ்தலமான லீபஜார் அருகிலேயே இருந்தது.  இந்த இடத்தில் நடப்பது என்பது லாரிகளுக்கிடையே புகுந்து வெளி வருவதாகத் தான் இருக்கும்.  மூன்றாவது இரயில் நிலையம் டவுன் ரயில்வே ஸ்டேஷன்.   நகர்ப் புறத்து  மக்கள் வாழும் பகுதி.   சென்னைக்கு அடுத்தபடி சேலத்தில் தான் திரையரங்குகள் அதிகம் என்று சொல்வார்கள்.    அந்த அளவுக்கு சினிமா பார்ப்பதில் பிரியம் கொண்டவர்கள். 

சேலத்தில் மரவனேரி என்ற பகுதியில் பாரதி வித்தியாலயா  பள்ளி இருந்தது.  எங்கள் வீடு இரண்டாம் அக்கிரஹாரத் தெருவில் இருந்தது.  சேலத்தில் முதல் அக்கிரஹாரம், இரண்டாவது அக்கிரஹாரம், மூன்றாவது  அக்கிரஹாரம் என்று மூன்று அக்கிரஹாரத் தெருக்கள் உண்டு.  முதல் அக்கிரஹாரத்தில் பாதிப் பங்கு கடைகளுக்கு ஒதுக்கப் பட்டதாயும் மீதிப் பகுதியில் மக்கள் வாழ்வதாகவும் இருந்தது.  இரண்டாம் அக்கிரஹாரம் முழுவதும் குடியிருப்புகள்.    இப்பொழுது இந்தத் தெருவில் மருத்துவர்களின் கிளினிக்கும் பட்டு ஜவுளி வியாபாரமும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.  மூன்றாவது அக்கிரஹாரத் தெரு மற்ற இரண்டு அக்கிரஹாரத் தெருக்களை விட அளவில் சிறியது.  அதில் பெரும்பாலும் குடியிருப்புகள் தாம் இப்பவும் இருக்கின்றன என்றே  எண்ணுகிறேன்.

இரண்டாம் அக்கிரஹாரத்திலிருந்து  முதல் அக்கிரஹாரம் நோக்கி நடந்து இடது பக்கம் திரும்பி கொஞ்ச நேர நடையில் மைதானம் போன்ற மிகப்  பெரிய திடல் ஒன்று  வரும்.  பாரதத்தின் முதல் பிரதமர் நேரு அவர்கள் அந்த பரந்த பிரதேசத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் சொற்பொழிவு ஆற்றிய நினைவில் கொஞ்சம் தூக்கிக் கட்டிய  இடத்தில்  அதைக்  குறித்த கல்வெட்டு
ஒன்று  காணப்படும்.    அந்த நாட்களில் பீஷர் காம்பவுண்ட் என்ற பெயரில் அழைக்கப்பட்ட மைதானம் அது.   அந்த மைதானம் இப்பொழுது என்னவாகியிருக்கிறது என்று தெரியவில்லை.  சேலத்துக்காரர் யாராவது சொன்னால் தான்  தெரியும்.

சேலத்துச் செல்லமான திருமணிமுத்தாறு மிகப் பழைமையான புராண காலத்து ஆறு.  பஞ்ச பாண்டவர்களால் பூஜிக்கப் பட்ட ஆறு என்று ஸ்தலப் புராணம் கூறுகிறது.   திருமணி முத்தாறு  என்பது  காரணப் பெயர். முத்துச் சிப்பிகள் நிறைந்திருந்த ஆறாகையால் திருமணி முத்தாறு என்று பெயர் ஆயிற்று.   சென்னை கூவம் போல இன்னொரு   கூவமாக இன்று  உருக்குலைந்து போயிருக்கிறது.   தமிழன் ஏமாளி. அவனுக்கு பொய்யான  இனப்பெருமை பேசினாலே திருப்தி அடைந்து  விடுவான் என்கிற அளவுக்கு ஏமாளி.  இதற்கு மேல் சொல்வதற்கு ஏதுமில்லை.

சேலம் டவுன் இரயில் நிலையத்திற்கு அருகில் திருமணிமுத்தாற்றின்  மேல் போடப்பட்ட இரயில் தண்டவாளப் பாதையை அடுத்து இந்த பீஷர் காம்பெளண்ட் மைதானம் அமைந்திருக்கும்.  அதைத்  தாண்டினால் சிற்றாறு போகக் கூடிய அளவில் தரைப்பாலம்,  அதைத் தாண்டி மேடு  தூக்கிய பாதை  என்று மரவனேரிப் பகுதிக்கு சாலை போகும்.  அந்தப்  பகுதியில் தான் பாரதி  வித்தியாலயா பள்ளி அமைந்திருந்தது.

ஒன்பது, பத்து . பதினொன்று வகுப்புகளில்  நான் வாசிக்கும் பொழுது  பாரதி வித்தியாலயா  பள்ளியில்   தமிழாசிரியராய் இருந்த கங்காதரன் அவர்கள்  மறக்க முடியாதவர்.  பாடம் நடத்தும் பொழுது தான் நடத்துகிற பாடத்திலேயே தோய்ந்து  போய்விடுவார்.  வகுப்பு நேரம் முடியும் போது கணகணக்கும் மணியோசை கூட பாதிப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்றால் கர்ண கடூரமாய் அவருக்கு இருக்கும். தான் எடுத்துக் கொண்ட விஷயத்தை மாணவர்களுக்கு புரிகிற மாதிரி விளக்கி விட்டுத் தான் அடுத்த வகுப்புக்குப் போவார்.  அப்படிப் போவதும் பாதிப் பாடத்தில் விட்டு விட்டுப் போகிறோமே என்று மனசில்லாமல் எங்களை விட்டுப் பிரிகிற மாதிரி இருக்கும்.

நான் ஒன்பதாவது வகுப்பு படிக்கும் பொழுது  தமிழ்க் கட்டுரை வகுப்பில் ஒற்றுமை என்ற தலைப்பில் ஆசிரியர் எழுதச் சொல்லியிருந்தார்.   நான் எழுதிய கட்டுரையில்,  'பறவைகளைப் பார்த்து பறக்கக் கற்றுக் கொண்ட மனிதன்,  காக்கைகளைப் பார்த்து  ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை எப்பொழுது  கற்றுக் கொள்ளப் போகிறானோ?' என்று ஒரு வரி எழுதியிருந்தேன்.  ஆசிரியர் கங்காதரன் அந்த வரியைக் கட்டுரையைத் திருத்தும் பொழுது மிகவும் ரசித்திருக்கிறார் போலும்.   அடுத்த நாள் வகுப்பில் இந்த வரியை வைத்துக் கொண்டு ஒரு வகுப்பு நேரம் பூராவும் பேசிக் களித்தார். என்னை அருகே அழைத்து மற்ற மாணவர்கள் முன்னால் வெகுவாகப் பாராட்டினார்.  அந்தப் பாராட்டு தான் தொடர்ந்து  நான் எழுதிய தமிழுக்கு ஆதி உந்துதலாய் இருந்து  தொடங்கி வைத்தப் பாராட்டு.  இதை எழுதும் பொழுதும் கங்காதரன் ஐயா நினைவில் மனம் நெகிழ்கிறது.    இளம் வயதில் கிடைக்கும் இப்படிப்பட்ட பாராட்டெல்லாம் தொடர்ந்த வளர்ச்சிக்கு அந்தச் சிறார்களை நெறிப்படுத்துவதாக உணர்கிறேன்.

தமிழில் சொந்தமாக நிறைய எழுதுவதற்கான திறமை கொஞ்சம் கொஞ்சமாக கைவரப் பெற்றது என்றே சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில்
மாணவர்களுக்குத் தோன்றாத் துணையாய் இருந்தது கோனார் நோட்ஸ் தான். பாட நூல்களுக்கான வழிகாட்டி உரை நூல்கள் எழுதிய திரு. அய்யம் பெருமாள்
கோனாரின் பங்கு அளப்பரியது.  தமிழ்க் கட்டுரைகளுக்கு கோனாரைப் படித்து மனனம் செய்து எழுதும் மாணவர்களின் ஒரே மாதிரியான  வாசக அமைப்பு கொண்ட கட்டுரைகளைத் தொடர்ந்து ஒருவித சலிப்புடன் வாசித்து மதிப்பெண் போடும் ஆசிரியர்களுக்கு எனது கட்டுரை வித்தியாசமாக இருக்கும் என்று எண்ணிக் கொள்வேன்.  எல்லாம் நினைப்பு தான்.  நடைமுறை வேறு மாதிரியாக இருந்தது.   ஆசிரியர்களின் பிள்ளைகள் கூட தேர்வுத்தாளைத் திருத்தும் அதிர்ச்சிகளைப் பிற்காலத்தில் கண்டதுண்டு.

1959-ம் ஆண்டில் வெற்றிகரமாக பள்ளி இறுதித் தேர்வை முடித்தேன்.  கல்லூரி படிப்பெல்லாம் சிந்தனையிலேயே இல்லை.  அந்நாட்களில் வேலைக்குப் போவதற்கு உதவியாக இருக்கும் என்று தட்டச்சு, சுருக்கெழுத்து  கற்பது மாணவர்களின் பழக்கமாக இருந்தது.   வெள்ளைத்  தாள் ஒன்றை சுருட்டி கையில் எடுத்துக் கொண்டு தட்டச்சு வகுப்புக்குச் செல்வது அக்காலத்து ஸ்டைல்!..

சேலம் தேரடித் தெருவில் இருந்த ராஜ கணபதி கோயில் 400 ஆண்டுகளுக்கு மேலான  பழமை வாய்ந்த கோயில்.  அந்தப் பக்கம் செல்லும்  பொழுதெல்லாம் கணபதி  தான் கண் கண்ட  தெய்வமாய் அருளாசி வழங்குவார்.  சின்னக் கோயில் தான்.   போக்குவரத்து நெரிசல்களுக்கு இடையே நகரத்தின்  ஜனசந்தடியான இடத்தில் கோயில் அமைந்திருந்தது.  பக்கத்தில்  தேர் நிலை. இன்னொரு பக்கத்தில் அந்நாட்களில் காஃபிக்கு க்யாதி பெற்ற ஹோட்டலான வில்வாத்ரி  பவன்.  இடையில்  மணி புக் ஸ்டால் என்ற வாரப்பத்திரிகைகள், வெற்றிலை--பாக்கு இத்யாதி விற்கும் கடை இருந்தது.  இந்தக் கடை அந்தக் காலத்தில்
எனக்கு  தாய் வீடு மாதிரி இருந்தது.  கல்கி, விகடன், குமுதம், தினமணிக் கதிர், கலைமகள், கல்கண்டு,   கண்ணன் என்று  அவை வெளி வந்த புத்தக வாசனையோடையே ஒரு புரட்டு புரட்டிப் பார்த்து விடுவேன்.  இந்தக் கடைக்கு நேர் எதிரே ராஜன் புக் ஸ்டால் என்று இன்னொரு இதே மாதிரியான கடையும் இருந்தது.  அதற்கு அருகில்  பெரிய பெட்டிக் கடை மாதிரி அமைந்திருந்த  A.V.S.  புக் செண்டரைப் பற்றி நிறையச் செல்ல வேண்டும்.  பழைய ஆங்கில, தமிழ்  நாவல்களை வாடகைக்கு விடுவதும், விற்பதும்  பிரதான தொழில்.  இந்த புக் செண்டரின் உரிமையாளர் சிவராமன் நாளாவட்டத்தில் நெருங்கிய நண்பரானார். எல்லா
ஆங்கில புத்தகங்கள் பற்றியும் விரல் நுனியில் விவரங்கள் வைத்திருப்பார்.  சிவராமனின் பழக்கத்தில் ஆங்கில புத்தகங்களின் வாசிப்பு   மேலோங்கியது.  அந்நாட்களில்  Erle Stanley Gardner- ரின் பைத்தியமாகத்  திரிந்திருக்கிறேன்.   கார்டனரின்  கோர்ட் உலகத்தையும்,  பெர்ரி மேஸனையும் மறக்கவே முடியாது.   தமிழ்வாணனின் சங்கர்லாலின் வளர்ச்சி பெர்ரி மேஸனில்  கொண்டு போய் விட்டிருக்கலாம்.

இந்த நேரத்தில் நடந்த இன்னொரு விஷயம் தான் முக்கியமானது.


(வளரும்)


Tuesday, April 16, 2019

வசந்த கால நினைவலைகள்

                                                                              12
                                                                           

திண்டுக்கல் செயிண்ட் மேரீஸ் பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்வு எழுதிய கையோடு திருநெல்வேலி வந்து விட்டேன்.  திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில்  பாரதியார் வாசித்த மதுரை  திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி சார்ந்த உயர்நிலைப்  பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிப்பு  துவங்கியது.

அந்நாட்களில் தாமிரபரணி ஆற்றில் என் உயரத்திற்கு முட்டி அளவே தண்ணீர் போகும்.  குளிப்பதற்கு வேறு சில ஆழமான இடங்கள் உண்டு.   வண்ணாரப் பேட்டைப் பகுதியில்  இருக்கும் தாமிரபரணி ஆற்றுப் படித்துறையிலிருந்து  தண்ணீரில் நடந்தே எதிர் கரைக்குப் போய் விடலாம்.  எதிர்ப்பக்க மணல் வெளியைக் கடந்து ஒரு  மேட்டுப் பகுதியில் ஏறினால்... ஓ.. மாமரங்கள் நிரம்பிய சோலை ஒன்று உண்டு..  மா பழுக்கும் பருவ காலங்களில் சோலையில்  சருகுகளுக்கிடையே தரையில்  விழுந்து  நிறைய மாம்பழங்கள் சிதறிக் கிடக்கும்.  அந்த இடமே வனாந்திரப் பகுதி மாதிரி
ஹோவென்றிருக்கும்.  கேள்வி கேட்பார் இல்லாத  சுதந்திரம்.  காலையில்  ஒன்றும் மாலையில்  ஒன்றுமாக அந்தப்  பகுதியைக் கடக்கும் பொழுது எடுத்துச் சாப்பிடுவது   எங்கள் வழக்கம்.  எங்கள் கோட்டா அவ்வளவே.  அந்தக் கட்டுப்பாடும் அந்த வயதில் பயின்ற ஒரு பாடம் என்றே சொல்ல வேண்டும்.    ஆற்றைக் கடந்து போக முடியாத சூழ்நிலைகளில்  அந்நாட்களில் வண்ணாரப் பேட்டை பிரதான சாலைக்குப் போய் சுலோச்சனா முதலியார் பாலத்தைக் கடந்து ஜங்ஷன் பகுதிக்குப் போக வேண்டும்.

ம.தி.தா. இந்துக் கல்லூரிப் பள்ளியில் மிகப்பெரிய  நூல் நிலையம் உண்டு.  புதுமைப் பித்தன்  அந்த வயதிலேயே அறிமுகம்.   தண்டி தண்டியான புத்தகங்களை வீட்டு  வாசிப்புக்காக எடுத்து வரும் பழக்கத்தை அப்பொழுதே ஏற்படுத்திக்  கொண்டு  விட்டேன்.   பள்ளி நூலகத்திலிருந்து ஒரு தடவை பரிமேலழகர் உரையுடன் கூடிய திருக்குறளை  எடுத்து வந்து அது நழுவி  ஆற்றுத் தண்ணீரில் விழுந்து பதறி எடுத்து வீட்டுக்கு வந்ததும் தொடர்ந்து இரண்டு நாட்கள் வெயிலில்
வைத்து நிவாரணம் கண்டது இன்னும் நினைவில் நிழலாடுகிறது.  மணியம் ஓவியத்துடன் கல்கியில் தொடராக வந்த பொன்னியின்  செல்வனை வாராவாரம் ஆவலுடன் படித்ததும் நெல்லை வண்ணாரப்பேட்டை வீட்டில் தான்.   தனியார் நூலகம் ஒன்றிலிருந்து  இரண்டு நாட்களுக்கு  ஒரு தடவை என்ற கணக்கில் வார, மாத பத்திரிகைகளை வீட்டிற்கே வந்து வழங்குவார்கள்.   தமிழ்வாணனின் கல்கண்டு பத்திரிகையில் அந்தாட்களில் தொடராக  வெளிவந்த கதைகள் மனசைக் கவர்ந்தன.  இரகசியம் என்ற தமிழ்வாணனின் துப்பறியும் கதை இன்றும் நினைவில் இருக்கிறது என்றால் 'பயங்கர நகரம்' என்ற அவரது இன்னொரு தொடர் என்னை அந்த சிறுவயதில் வேறொரு உலகத்திற்கே அழைத்துச் சென்றது.   வாழ்க்கை மிகவும் பூடகமானது.  அடுத்து  வந்த சில ஆண்டுகளில் ஆசிரியர் தமிழ்வாணனின் தேர்வில் எனது முதல் சிறுகதைப் படைப்பு   கல்கண்டு பத்திரிகையிலேயே பிரசுரம் ஆகும் என்பது அப்பொழுது தெரிந்திருக்கவில்லை.

நெல்லை   வண்ணாரப் பேட்டையில்  நாங்கள் குடியிருந்தது ஸ்டோர் வீடுகள் என்று அந்நாட்களில்  அழைக்கப்பட்ட வரிசை வீடுகள்.  வரிசையாக பதினைந்து தனித்தனி குடித்தன வீடுகள்.  மேடு தூக்கிய தனித்தனி  வீட்டு வாசல்கள்.  கம்பி போட்டு மூடின திண்ணை, சின்ன  இடைக்கழி, ஹால், ஹாலின் இருப்பக்கமும் அறைகள், பின்பக்கத்தில்  கிணறு, அடி பைப், கழிப்பறை, சின்ன தோட்டம் என்று அட்டகாசமான கட்டுமானம்.

காலை  எழுந்தவுடன்  படிப்பு என்பது ஆன்றோர் வாக்கு.  ஆனால் நெல்லையில் இருந்தவரை காலை எழுந்ததும் என் வயதொத்த சிறுவர் பட்டாளத்திற்கு ஆற்றுக் குளியல் தான்.    வண்ணாரப்பேட்டை எங்கள் பகுதியிலிருந்து கிளையாகப் பிரிந்து செல்லும் நீண்ட தெரு வழியே நடந்தால், ஐந்து நிமிட நடை தூரத்தில் படித்துறை வந்து விடும். படித்துறையில் பிள்ளையார். காலையில் ஆற்றுக்கு வந்துக் குளித்துவிட்டுச் சென்றிருக்கும் பெண்கள் கூட்டம் வழிபட்டிருக்கும் சங்குப்பூக்கள் திருமேனியில் செருகப்பட்டிருக்கும் பிள்ளையாரை உற்றுப்பார்த்தால் சிரித்துக் கொண்டிருப்பது போலத் தோற்றமளிப்பார். நாங்களும் பிள்ளையாரை ஒரு சுற்று சுற்றித் தோப்புக்கரணம் போட்டுவிட்டு படித்துறைப் படிகளில் இறங்கி தாயின் மடி நோக்கி ஓடும் குழந்தைகள் போல, மணல்வெளி தாண்டி ஆறு
நோக்கி ஓடுவோம்.

அந்த ஏழுமணிக் காலையில் கணுக்கால் நீரில் படும் பொழுதே உற்சாகம் உள்ளத்தில் கொப்பளிக்கும்.   நதியின் உள்பகுதிக்குப் போய்  இடுப்பும், மார்புப்பகுதியும் நீரில் அழுந்தி, இருகைகளையும் நீட்டி நீரைத் துளாவுகையில் பரம சுகமாக இருக்கும். ஜிலுஜிலுப்பு என்பது அறவே இல்லாமல், அந்த வெதுவெதுப்பு எப்படித்தான் தாமிரபரணிக்கு வந்தது என்பது அந்த வயதில் எங்களுக்குப் புரியாத அதிசயம்.

ஆற்றின் வடகிழக்குப் பக்கம் இக்கரையிலிருந்து முக்கால்வாசி தூரத்தில் ஒரு பெரிய யானையே நீரில் நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிற மாதிரி, யானைப்பாறை என்று அழைக்கப் படும் மிகப்பெரிய பாறை ஒன்று உண்டு. யானையின் முதுகு மட்டுமே வெளித் தெரிகிற மாதிரி முண்டும் முடிச்சுமாக நீரில் அமிழ்ந்திருக்கும் அந்த பெரிய பாறையின் மேல் பகுதி மட்டும் கண்ணுக்குத் தெரியும்.

பாறையைச் சுற்றி சுழல் போல் ஆற்றுநீர் சுழித்துக் கொண்டோடும். மின்சாரம் தேக்கிய நீரல்லவா?..கேட்கவே வேண்டாம். அந்தச் சுழலின் போக்குக்கு எதிராக நீந்தி யார் முதலில் யானைப் பாறையின் முகட்டுக்கு ஏறுகிறார்கள் என்பது தினம் தினம் எங்களுக்குள் போட்டி.

எந்த முயற்சியும் வேண்டாம். அந்தச்சுழல் பக்கம் லேசாக உடலைக் கொடுத்தாலே போதும். பாறையைச் சுற்றி அது இழுத்துக் கொண்டு போகும் வேகத்தில், நீரில் அழுந்திய பாறையின் துருத்திக் கொண்டிருக்கும் ஏதாவது முனை பற்றி, பாறையின் பக்கவாட்டு பள்ளத்தில் கால் புதைத்து எழும்பி பாறை பற்றி ஏறி விடலாம். சில நேரங்களில் பாறையின் முதுகு கையில் படாமல் வழுக்குவதும் உண்டு. அந்த நேரங்களிலெல்லாம், ஆற்றின் சுழலின் போக்குக்குப் போய், இன்னொரு சுற்று சுற்றி வேறு பகுதியில் ஏற வேண்டும். சில நேரங்களில் பச்சை நிறம் படிந்த நீரின் அடி ஆழத்திற்குப் போய் விடுவதுண்டு. ஆழத்திற்குப் போனால் மறக்காமல் ஆற்றின் அடி ஆழ மணலை உள்ளங்கையில் வாரி எடுத்து வெளியே வருவோம். நீரின் மேற்பரப்புக்கு வந்து மணலை வீசி வெற்றி வீரரகள் போல விளையாடுவதுண்டு.

ஒருதடவை இப்படித்தான் யானைப் பாறையின் பிடி கைக்கு சிக்காமல் வழுக்கி ஆற்றின் அடி ஆழத்திற்குப் போனவன், சுழலின் போக்குக்கே இழுத்துக்கொண்டு போய், தட்டுத்தடுமாறி எப்படியோ இன்னொரு பக்கம் பாறை பிடித்து மேலேறி விட்டேன். கால் வெடவெடவென்று நடுங்குகிறது. இப்படிப்பட்ட அனுபவம், இதற்கு முன் எப்போதும் ஏற்பட்டதில்லை. மறுபடியும் நீரில் குதித்துத்தான் கரைக்கு மீளவேண்டும். என்னைத் திடப்படுத்திக்கொண்டு தைரியத்துடன் நீரில் குதித்து சுழல் தாண்டி மீண்டேன்.

எனது வலது கை ஆயுள் ரேகையில் வெட்டிச்செல்லும் தீவுக்குறி ஒன்றுண்டு. பின்னாளில் என் கைபார்த்த ரேகை ஜோதிடர் ஒருவர், 'உங்களுக்கு பதிமூன்று-பதினாங்கு வயதில் கண்டம் ஒன்று வந்திருக்குமே' என்றார். நானும் இதுதான் அந்த கண்டம் போலும் என்று நினைத்துக் கொள்வதுண்டு.

இப்படிப்பட்ட இளமை நினைவுகளையொத்த இன்னொன்றைப் படிக்கும் பொழுதோ, கேட்கும் பொழுதோ, அந்த செய்தி தரும் இன்ப அனுபவத்தில் நம்து முழு மனசும் ஒன்றித்திளைத்து வார்த்தைகளில் வடிக்க இயலா மகிழ்ச்சியளிக்கிறது.

மாறிச் செல்லும் கால வேகத்தில் கூட இளமைக்கால சில விளையாட்டுகள் எக்காலத்தும் மாறுதலற்ற நிலையானவை போலும்! இளையோர் ஆற்றில் குளிக்கையில், ஆற்றின் அடிச்சென்று கைநிறைய மணல் அள்ளி, தான் ஆற்றின் அடிஆழம் வரைச் சென்றதற்கு சான்று போல அந்த மணலை மற்றையோருக்குக் காட்டி மகிழ்வது சங்ககாலத்தில் கூட இருந்த ஒரு விளையாட்டு தான் என்று 'தொடித்தலை விழுத்தண்டினாரி'ன் புறப்பாடலின் மூலம் நமக்குத் தெரிய வந்து வியப்பு மேலிடுகிறது...

தொடரும் இருமலுக்கிடையே, தமது இளமை நினைவுகளை எவ்வளவு அழகாக அந்த புலவர் பெருந்தகை நினைவு கூர்ந்திருக்கிறார் பாருங்கள்:


இனி நினைந்து இரக்கம் ஆகின்று; திணி மணல்
செய்வுறு பாவைக்குக் கொய் பூத் தைஇ,
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து,
தழுவுவழித் தழீஇ, தூங்குவழித் தூங்கி,
மறை எனல் அறியா மாயம் இல் ஆய்மொடு
உயர் சினை மருதத் துறை உறத் தாழ்ந்து,
நீர் நணிப் படி கோடு ஏறி, சீர்மிக,
கரையவர் மருள, திரையகம் பிதிர,
நெடு நீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
குளித்து மணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே! யாண்டு உண்டு கொல்லோ--
தொடித் தலை விழுத் தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இரும் இடை மிடைந்த சில் சொற்
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே?


(புறநானூறு--243)

இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் வருத்தம் மேலிடுகிறது
மணல் பிடித்துச் செய்த உருவிற்கு
கொய்த பூவைச் சூட்டியும்
பொய்கையில் இளம் பெண்களின் கைகோர்த்துக் களித்ததுவும்
அவர் தழுவும் பொழுது தழுவியும்
அசைந்தாடுகையில் அசைந்தாடியும்
ஒளிவு மறைவற்ற வஞ்சனையறியா
நண்பர் குழாமொடு விளையாடி மகிழ்ந்ததுவும்
மருத மரத்தின் உயர்ந்த கிளைகள் உயரம் தாழ்ந்து
நீரோடு படிந்தவிடத்து அக்கிளை பற்றி ஏறி
உச்சிக் கிளை அடைந்து
கீழே நிற்போர் வியக்க, அவர் மீது நீர் திவலை விழ
'தொடும்' என நீரில் குதித்து, மூழ்கி
ஆழ் அடிச் சென்று அடிமணல் அள்ளிக் காட்டியும்
---இப்படியான கள்ளமிலா
இளமைக்காலம் கழிந்து சென்றதுவே!
ஊன்று கோலை ஊன்றி, நடுக்கத்துடன்
இருமலுக்கிடையே சில சொற்கள் மொழியும்
முதியவனான எமக்கே
இனி எப்போது கழிந்த அக்காலம் வாய்க்கும்?...இளமை வாழ்க்கையை நினைவு கொள்ளும் அற்புதமான இப்பாடலை இயற்றியவரின் பெயர் தெரியவில்லை.. ஆனால் அவர் தன்னைத் தானே வர்ணித்த கோலேந்திய அவரின் தோற்றம், இலக்கிய ஏடுகளில் அழியாது அவரை நினைவு படுத்தும் சொல்லாக---'தொடித்தலை விழுத்தண்டினார்' என்று---அவரின் பெயராகவே ஆகிவிட்டது!

'சென்ற காலம் மீளாது இனி' என்பது சித்தர்களின் வாக்கு.  ஆனால் சென்ற காலம் நெஞ்சில் பதித்த தடங்களின் வடுக்கள் நிலையாக நினைவில் பதிந்தவை; குறைந்த பட்சம் எப்பொழுதாவது அமைதி வேண்டிடும் போதோ, அல்லது அமைதியாக இருக்கும் பொழுதோ அவற்றை நினைவுச் சுருள்களில் ஓட்டிப் பார்த்து மகிழும் பொழுது அடையும் இன்பமே அலாதி தான்!

அப்படி அடிக்கடி மகிழ்ச்சியில் ஆழ்வது இந்தக்காலத்துக்கே வாய்த்த 'டென்ஷனை'க் குறைக்கும் அருமருந்து என்பது மட்டும் நிச்சயம்.

(வளரும்)


Saturday, April 13, 2019

வசந்த கால நினைவலைகள்

                                       11


ரு சித்ரா பெளர்ணமி அன்று அழகர் கோயில் செல்வதாக ஏற்பாடு.  பக்கத்து  வீட்டு அம்மா தன் தம்பியுடன்  கூட வந்ததாக நினைவு.  பஸ்ஸில் தான் சென்றோம்.

சித்ரா அன்னம்  என்று சொல்வார்களே, அந்த மாதிரியான ஏற்பாடுகளுடன்  தான் சென்றிருந்தோம்.  காலையில் கிளம்பி மாலையில் மதுரை திரும்பி  விடுவதாக திட்டம்.  மலை  அடிவாரத்திலியே கோயில் இருந்தது.  சித்ரா பெளர்ணமி தினம் ஆதலால் கோயிலில் நல்ல கூட்டம்.  டூரிஸ்ட் பஸ்களில்  நிறைய வெளியூர்க்காரர்கள் வந்திருப்பது தெரிந்தது.

 கோட்டை மாதிரியான அமைப்பில் உள்பக்கம் சென்ற நினைவு இருக்கிறது.   உள்ளே போய் கள்ளழகரைத் தரிசித்து விட்டு  வாகனங்கள் இருந்த இடத்தில் சற்று சிரமப்பரிகாரமாக எல்லோரும் உட்கார்ந்திருந்தோம்.  சிறிது நேரத்தில் எங்கள் பக்கத்து வீட்டு அம்மாவின் தம்பி வெளிக்குழாயில்  தண்ணீர் பிடித்து வருவதாகச் சொல்லிக் கிளம்பினார்.  நானும் அவருடன் போய்விட்டு வருகிறேன் என்று என் அம்மாவிடம் சொல்லி விட்டு அவருடன் சென்றேன்.

கொஞ்ச தூரம் போனவுடன் 'நீ இங்கேயே நிழலில் உட்கார்ந்திரு.  அந்த சரிவில் இறங்கி நான் தண்ணீர் பிடித்து வருகிறேன்" என்று என்னை அங்கேயே விட்டு விட்டு அவர் மட்டும்  சென்றார்.   கொஞ்ச நேரம் ஆயிற்று.  சென்றவர் வரவில்லை.   நான் சுற்றும்முற்றும் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.   அந்த சமயத்தில் பக்கத்தில் மேடை மாதிரி இருந்த இடத்தில் நாலைந்து பேர் அமர்ந்திருந்தனர்.   அவர்கள் பேசிக் கொண்டிருந்தது நான் இருந்த இடத்தில் கேட்கிற மாதிரி உரக்கப்  பேசிக் கொண்டிருந்தனர்.  அழகர் கோயில் பற்றி புராண விஷயங்களை கதை மாதிரி ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். நானும் கதை கேட்கிற ஆவலில் அவர்கள் இருந்த பக்கத்துச் சென்று கேட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன்.   கண்கள் மட்டும் பக்கத்து  வீட்டு அங்கிள் வருகிறாரா என்ற கவனத்தில் இருந்தன.

கதை கேட்கும்  சுவாரஸ்யத்தில் தவற விட்டேனோ தெரியவில்லை, அந்த அங்கிள் வரவேயில்லை.  லேசான பதட்டம் என்னைத்  தொற்றிக் கொண்டது. அந்த  அங்கிள் போனப் பக்கம் போய் அவரைத் தேடலாமா இல்லை என் அம்மா இருந்த இடத்திற்கு திரும்பி விடலாமா என்ற தடுமாற்றம். சரி, திரும்பி விடலாம் என்ற முடிவுக்கு வந்து  திரும்பிப் போனால் அவர்களை விட்டு விட்டு வந்த இடம் வரவேயில்லை.  ஐந்தே நிமிட நடை தூரத்தில் இருந்ததைக் கண்டு பிடிக்க முடியவில்லையே என்று அந்த வயதிற்குரிய பதட்டம்.  திருவிழா கூட்டம் வேறு கொஞ்சம் கொஞ்சமாக சேர ஆரம்பிக்க 'ஏண்டா  இப்படி மாட்டிக் கொண்டோம்' என்று வியர்த்து விட்டது.  ஒருக்கால் எல்ளோரும் என்னைத் தேடிக் கொண்டு திரிகிறார்களோ என்ற குழப்பம் வேறு சேர்ந்து கொள்ள நான் இப்படி தெரியாத்தனமாய் வந்திருக்கக் கூடாது என்று  என்னை நானே நொந்து கொண்டேன்.

அந்த நேரத்தில், "அதோ, அங்கே இருக்கான், பாருங்க.." என்று அந்த அங்கிளின் குரல்.. என் குடும்பமே இன்னொரு பக்கத்திலிருந்து பதறி அடித்துக் கொண்டு வந்ததைப் பார்த்ததும், நிம்மதி வந்தது.  பிரிந்த தாயைக் கண்ட சந்தோஷத்தில் திக்கு  முக்காடிப் போனேன்.  என் தாயும் எதுவும் பேசாமல் என்னை அணைத்துக் கொண்டார்கள்.  "ஏண்டா, இந்தப் பக்கம் வந்தே?" என்று அந்த பக்கத்து வீட்டு அம்மாள் கேட்டதும் பதில் சொல்லத் தெரியாது விழித்தேன்.

அழகர் கோயில் இரண்டு கோட்டைகளால் சூழப்பட்டுள்ளாதாம்.  உட்பக்கமிருந்த கோட்டை இரண்யங்கோட்டை எனவும், வெளிப்பக்க கோட்டை அழகாபுரி கோட்டை எனவும் என்னவெல்லாமோ பேசிக் கொண்டார்கள்..  எனக்கோ அந்த வயதில் ஒன்றும் புரியவில்லை.  தெய்வாதீனமாய் சொந்தங்களோடு சேர்ந்தது மட்டுமே போதுமானதாக இருந்தது.

கொண்டு போயிருந்த கலவை சாதங்களை செளகரியமான இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு வேறு எங்கேயும் போகாமல் ஊருக்குத் திரும்பி விட்டோம் என்றே நினைவு.

னது ஏழாம், எட்டாம் வகுப்பு வாசிப்புகள் திண்டுக்கல்லில் நிகழ்ந்தது.

திண்டுக்கல் செயிண்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளி விரிந்து பரந்த விசாலமான நிலப்பரப்பில் கட்டப்பட்ட பள்ளிக்கூடம்.  பள்ளியின் நட்ட நடுப்பகுதியில் பெரியதொரு மணிக் கூண்டு இருக்கும்.  இரண்டு பக்க வாசல் திறப்புகள்.  சாலையிலிருந்து உள்ளடங்கி வெளிச்சத்தமெல்லாம் அடங்கி பெயருக்காக கட்டப்பட்ட ஒரு பள்ளி அல்லாது  ஒரு பள்ளிக்கூடம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் கட்டப்பட்ட  பள்ளி.   சகல விளையாட்டுகளும் விளையாடுகிற மதிரியான பெரிய நிலப்பரப்பு.  நல்லதொரு நூல் நிலையம்.   பள்ளிக்கு  நேர் எதிரே வெளியூர் மாணவர்கள் தங்கிப் படிக்க ஹாஸ்டல்.

ஏழாவது வகுப்பாசிரியர் பெயர் லாசர்.  ஒழுக்கத்தையும் ஆங்கிலத்தையும் ஒருசேரக் கற்றுக் கொடுத்த ஆசான்.  தமிழாசிரியர் பெயர் பூவராகன்.  இளம் வயக்தில் என் மனத்தில் தமிழின் ஓசை நயத்தை பதித்தப் பெருந்தகை...  தமிழ்ச் செய்யுளை எப்படி எதுகை வழி அழுத்தம் கொடுத்து வாசித்து மகிழ வேண்டும் என்ற கல்வியைக் கற்றுக் கொடுத்தவர்.  அவ்வாறே இன்று வரை தமிழ்ச் செய்யுளை வாசிக்கும் பழக்கம் என் மனத்தில் படிந்திருக்கிறது.

இதோ கம்பனின் கைவண்ணம்:   நீயும் இராமபிரான் அருளை நாடி அவர் பக்கம் வந்து  விடு என்று அழைக்கும் விபீஷணனுக்கு கும்பகர்ணன் நிறைய காரணங்களை அடுக்கி என்னால் அப்படிச் செய்ய முடியாது என்று மறுக்கிறான்.  அப்படி கும்பகர்ணன்  விபீஷணனுக்குச் சொல்வதாய் ஒரு  பாடல்:

செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்ச் செல்வம் தேறி
வம்பிட்ட தெரியல் எம்முன் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி
அம்பிட்டுத் துன்னம் கொண்ட புண்ணுடை நெஞ்சோடைய!
கும்பிட்டு வாழ்கிலேன் யான்;  கூற்றையும் ஆடல் கொண்டேன்!

இந்தப் பாடலில் ஒவ்வொரு வரியிலும்  இரண்டாம் எழுத்தாகிய 'ம்' எதுகைக்கு அழுத்தம் கொடுத்து வாசித்து பாருங்கள்.  பிரமாதமான ஓசை நயத்துடன் வெகு இயல்பாக மனத்தில் பதியும்.  என் ஞாபகத்திலிருந்து தான் மேற்கண்ட கம்ப ராமாயனச் செய்யுளை எழுதியிருக்கிறேன். இத்தனை வருடங்கள் ஆகியும் நெஞ்சில் பதிந்தது பதிந்தது தான்.  மறக்கவில்லை.  எல்லாம் பூவராகன் ஐயாவின் கருணை!

சாலையில் நடக்கும்  போதே  நிமிர்ந்து எதிரே பார்த்தால் உயரத்தில் மலைக்கோட்டை!  சோழப் பேரரசர்கள் காலத்திலிருந்து பிரிட்டிஷார் காலம் வரை தொடர்ந்து போரையும் படையெடுப்பு களையும் சந்தித்த பிரதேசம் இது.  ஆர்வம் கொண்டோர் திண்டுக்கல்லின் வரலாற்றை கூகுள் தேடலில் வாசித்து தெரிந்து கொள்ளலாம்.

நாங்கள் திண்டுக்கல்லில் மேட்டு  ராஜப் பட்டி என்ற இடத்தில் குடியிருந்தோம்..   சின்ன கிராமம் போன்ற பகுதியாய் அப்போது இருந்தது.  அங்கிருந்த ஆழக் கிணறு ஒன்று மனத்தில்  சித்திரமாய் பதிந்திருக்கிறது. பாறைகளைப் பிளந்த  மிகப்  பெரிய கிணறு.  நாலு பக்கமும் பக்கத்திற்கு பத்து பேர் நின்று தோண்டியை கயிற்றில்  கட்டி நீர் இறைப்பார்கள்.  அந்தப் பகுதி மக்கள் குடிநீருக்கு இந்தக் கிணற்று நீரைத் தான்  நம்பி இருந்திருக்கிறார்கள்.

சில நேரங்களில் பெண்கள் அந்தக் கிணற்றின் கைப்பிடிச் சுவர் மேல் ஏறி நின்று கயிற்றில் கட்டி கீழே விடும் குடம் எந்தப் பாறையிலும் மோதி விடாமல் லாவகமாக விட்டு குடம் நிரம்பியதும் மேலே தூக்குவதும் பார்க்க பயமாக இருக்கும்.  இந்த பயம் பிற்காலத்தில் இதைப்  பற்றி நினைக்கும் பொழுது பரிதாபமாக மாறியது.  சக  எளிய  மனிதர்களை நேசிப்பதும் அவர்களின் துயரங்களில் பங்கு கொள்ளத் துடிப்பதும் பிற்காலத்தில் நான் பங்கு கொண்ட அரசியல் இயக்கங்கள் கற்றுக் கொடுத்த  பாடமாயிற்று. மனிதர்கள் பிச்சைக் காரர்கள் அல்ல.  அவர்கள் உழைத்து முன்னேற வாய்ப்புகள் ஏற்படுத்துவதும் அதனாலான பலன்களை அவர்கள் துய்ப்பதற்கு திட்டங்கள் தீட்டுவதும் தான் ஒரு அரசின் வேலையாக இருக்க வேண்டுமேயன்றி  காகித  நோட்டுக் கரன்ஸிகளை நீட்டி பேரம் பேசுவதல்ல; அப்படியான  பேரங்கள் அவர்களை மேலும் இழிவுபடுத்துவையே'  என்றெல்லாம் சிந்தனை ஓடுகிறது..  இதெல்லாம் பற்றி  பின்னால் நிறையப் பேசலாம்.

 பிறகு நாகல்நகர் பகுதியில் இரயில் நிலையத்திற்கு நேர் எதிரே இருந்த வரிசை வீடொன்றில் (நான்கு வீடுகள் வரிசையாக; அதைச் சுற்றி சுற்றுச் சுவர்)  வசித்து வந்தோம்.  நாங்கள் இருந்த இடம் பள்ளமாகவும், மேடேறினால் இரயில் நிலையத்திற்கு  சொந்தமான இடமாகவும்  இருக்கும்.   இரயில் நிலையத்திற்கு சொந்தமான அந்தப் பகுதி  shunting yard- ஆக பயன்பாட்டில்  இருந்தது.   இரயில் என்ஜின்கள்  வட்ட வடிவமான அந்த இடத்தில் திருப்பப்படும் காட்சி  அந்நாட்களில் கண்கொள்ளாக் காட்சி!  கீழே கான்கிரீட் பள்ளமாகவும்  மேலே  ஒரு இன்ஜின் நிற்கும் அளவுக்கு தண்டவாளம் பொருத்தியும் இருக்கும்.  வட்ட வடிவமாக இன்ஜினைச் சுற்றித் திருப்பி  பின்-முன்னாக இன்ஜினின் முகப்பகுதியை மாற்றி  அமைப்பார்கள்.

நிறுத்தப்படிருக்கும் இன்ஜினில் திடீரென்று பிஸ்டனைத் திறந்து விடும் பொழுது பூந்துளிகளாக  வெந்நீர் பீச்சியடிக்கப்படும்.  நீர் மேலே படும் இடத்தில் நின்று ஓடி விளையாடுவோம்.   அந்தப் பகுதி பூராவும் கரித்தூள் மலைபோலக் காட்சியளிக்கும்.  அந்த இடத்தில் மறைந்திருப்பவரை கண்டுபிடிக்கும் விளையாட்டில் நேரம் போவதேத்  தெரியாது!

அந்தப் பகுதியில் இருந்த பிள்ளையார் கோயிலை மறக்கவே முடியாது.  எங்கள் வீட்டு முன் பகுதியில் செம்பருத்தி செடி வளர்த்து  வந்தோம்.  தினமும் வாசல் கேட்டின் மேல் ஏறி ஒரு குடலில் செம்பருத்தி மலர் பறித்து  காலையில் பிள்ளையார் கோயிலில்  கொண்டு  போய் கொடுப்பது வாடிக்கை.

கமலக் கண்ணன் என் வகுப்புத் தோழன்.  மேலே அஸ்பெஸ்டாஸ் பலகையும், மரச் சட்டங்கள் பொருத்தியுமான குடிசையுமில்லாத, வீடுமில்லாத ஒரு தடுப்புப் பிரதேசத்தை வீடாகக் கொண்டு வாழ்ந்து  வந்தார்கள் தாயும், மகனும்.  நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு  பின்பக்கம் ஒரு சரிவில் இறங்கினால் கமலக் கண்ணனின் 'அந்த' வீடு   வந்து விடும்.

காலையில் எட்டரை மணியளவில் டிபன் பாக்ஸூடன் ஸ்கூலுக்குக் கிளம்புவேன்.  நேரே கமலக் கண்ணன் வீடு  தான்.  அந்த சிறிய குடியிருப்பின் வெளிப்பகுதியில் தகரத்தை வைத்துத் தடுத்த விறகடுப்பில் கமலக்கண்ணனின் தாயார் வடை சுட்டுக் கொண்டிருப்பார்கள்.  என்னைப் பார்த்ததும் ஒரு காகிதத்தில் மசால்  வடை ஒன்றைச் சுற்றி "ராஜா! சாப்பிடு.." என்று மிகவும்  அன்பாக என்னிடம் தருவார்கள்.  வடை சுடச்சுட தேவாமிர்தமாக இருக்கும்.  அந்த மாதிரி சுவையுடனான மசால் வடையை என் வாழ்நாட்களில் அதற்குப்  பிறகு சாப்பிட்டதே இல்லை.  அந்த அன்னையை நினைத்தால் மனம்  இப்பொழுது கூட நெகிழ்ந்து போகிறது.    இந்த  மாதிரியான நிகழ்வுகள் தாம் அந்த வயசிலேயே  பிற்கால  வாழ்க்கைப் பயணத்திற்கான  சரியான  பாதையைப் போட்டுத் தந்திருக்கின்றன.

அதெல்லாம் பற்றி வரும்  பகுதியில் சொல்கிறேன்.


(வளரும்)


நண்பர்கள்  அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு  நல் வாழ்த்துக்கள்..
Related Posts with Thumbnails