மின் நூல்

Friday, March 26, 2010

ஆத்மாவைத் தேடி…. 39 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


39. மனத்துக்கண் மாசிலன் ஆதல்....


மதிய உணவிற்குப் பிறகு தொடங்கவிருந்த தேவதேவனின் உரையைக் கேட்கும் ஆவலில் கூட்டம் தொடங்குவதற்கு குறைந்த அவகாசம் இருக்கையிலேயே அவை நிறைந்து விட்டது. குறித்த நேரத்தில் உள்ளே நுழைந்த தேவதேவன், கைகூப்பி நமஸ்கரித்தவாறே மேடையேறினார். ஆர்வத்துடன் அமர்ந்திருந்த அத்தனை பேரையும் கண்டு அலாதி உற்சாகத்துடன், " விட்ட இடத்திலிருந்து தொடரலாமா?--" என்று கேட்டபடி தேவதேவன் பேச ஆரம்பிதார்..


"இப்பொழுது ஒவ்வொன்றாகப் பார்ப்போம்" என்று மேல்துண்டை சரிசெய்தவாறே, குறிப்புப் புத்தகத்தைப் புரட்டினார் அவர். "தூய்மையான புத்தியால் துலக்கப்பட்ட மனம் என்னும் தீபம், ஆத்மாவின் மூலை முடுக்கெல்லாம் தெளிவாகக் காட்டக்கூடிய வல்லமை படைத்தது என்று சுவாமி விவேகானந்தர் சொன்னதை நினைவு கொண்டோம், அல்லவா?.. இப்பொழுது ஆத்மா பற்றி தெரிந்து கொள்ள முற்படும் முன் அது பற்றிய சில அனுமானங்களை அறிந்து கொள்ளலாம்" என்று தொடர்ந்தார் அவர். கட்டவிழ்வதற்கு முன்பான, இதழ்களால் மூடப்பட்டிருக்கும் ஒரு தாமரைமொட்டு போல ஆத்மாவை இப்போதைக்கு ஒரு உத்தேசமாக அனுமானித்துக் கொள்வோம். இது வெறும் அனுமானிப்பு மட்டுமே தான். ஆத்மாவை மூடியிருக்கும் அல்லது அதனைப் போர்த்தியிருக்கும் ஐந்து உறைகளும் ஆத்மாவை நோக்கி உள்ளடங்கிச் செல்லச் செல்ல ஒன்றிற்கு ஒன்று நுண்மையானவை என்று தெரிந்திருக்கிறது; அடுத்து அந்த உறைகளை ஒவ்வொன்றாகத் தூய்மைபடுத்திக் கொண்டு சென்றால் ஆத்ம தரிசனம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். இப்போதைக்கு இந்த இரண்டு குறிப்புகள் தான்--" என்றவர், விஞ்ஞானப் பரிசோதனைக் கூடத்தில் பரிசோதிப்பவர் தான் செய்து காட்டிய ஒரு சோதனையை விவரிப்பது போல, இரு கைகளையும் முன்னால் நீட்டி விரல்களை மேலும் கீழும் தாழ்த்தியும், உள்ளங்கையில் கோடியிழுத்தும் அபிநயித்து சொல்லலானார்.


"முன்னாலேயே நாம் பார்த்த இன்னொரு தகவல், மனம் கொண்டு தான் ஆத்மாவை அறியமுடியும் என்று முண்டக உபநிஷதம் மூலம் தெரிந்தது. இப்பொழுது மனம் பற்றிப் பார்ப்போம். அதாவது மனம் என்பது மனிதனில் எப்படி வளர்ச்சியடைகிறது என்று பார்ப்போம். பிறக்கையில் பரிசுத்தமாக, பளிங்கு போலத்தான் இருக்கிறது மனம். அது குழந்தை மனம். சூது வாது அறியாதது. பின் மனிதன் வளர வளர புலனுறுப்புகளால், அது அறியப்படுத்தும் புறவயக்காட்சிகளால் பெறும் கல்வியால் மனமும் தன்னை வார்த்தெடுத்துக் கொள்கிறது. சுருங்கச்சொல்லவேண்டுமானால், பெறும் அனுபவங்களே மனத்தைப் படைப்பதில் பெரும் பங்கு பெறுகிறது. இந்த மனம் உருவாவது புறவுலக நிகழ்வுகளைப் பார்த்து, கேட்டு, உணர்ந்து உள்வாங்கிக் கொள்ளும் அனுபவத்தின் அடிப்படையில். அதனால் தான் ஒரே விஷயத்தைக் கூட பார்க்கும் பார்வையில், உணரும் தன்மையில் மன உணர்வுகள் மனிதர்க்கு மனிதர் வித்தியாசப்படுகிறது. அடுத்து அறிவைப் பார்ப்போம். அதுவும் ஒருவன் தன் வாழ்க்கை நெடுகவும் அவ்வப்போது பெறும் அனுபவத்தின் அடிப்படையிலும் உலக அறிவை உள்வாங்கிக் கொள்ளும் பாங்கிலும் அமையும். ஒரு தேசத்தின் சீதோஷ்ண நிலை, வாழ்க்கை அமைப்பு, பழக்க வழக்கங்கள், அந்த தேசத்தின் பொருளாதார வளப்பம், அந்த வளப்பத்தை மக்களுக்கு பங்கிடும் முறைகள் இன்னபிற விஷயங்களும் வெகுஜன மக்களின் மனநிலையை, அறிவின் உச்சத்தைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்றன. அதனால் தான் பொதுவான அறிவின் தீட்சண்யமும், மனப்பாங்குகளும் தேசத்திற்கு தேசம் கூட வித்தியாசப்படுகின்றன. ஆக, ஒரு காலகட்டத்தின் மனமும், அறிவும் பெரும்பாலும் புறவுலகின் வளர்ச்சியின் வீச்சில், அதன் பாதிப்பில் இருப்பதுமட்டுமல்ல, புறவுலகின் ஆக்கிரமிப்பின் பிடியிலும் அமைந்து போகின்றன. பெறுகின்ற அனுபவமும், கல்வியும் பெரும்பாலும் புறஉலக விஷயங்களையேச் சார்ந்திருப்பதால், படிப்படியாக ஒருவன் பெறும் கல்வியும் புறவுலகையேச் சார்ந்திருக்கும்.


உன்னிப்பாக அவையில் அமர்திருப்போரைப் பார்த்தபடி தேவதேவன் தொடர்ந்து பேசலானார்: "ஆக, மனம் மட்டுமில்லை; அறிவும் புறவுலகச் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளனவோ அவற்றின் அடிப்படையிலேயே அவ்வகையிலேயே வார்த்தெடுக்கப்படுகிறது. அறிவும், அது பற்றிய கல்வியும் பெரும்பாலும் புற உலகின் தகவல்களால் ஆக்கிரமிக்கப்பட்டவை. இருப்பினும் இப்பொழுது நமது வேலை, அகத்தைத் துலக்குதல்; அதைத் தூய்மையான புத்தி கொண்டு செய்தல். ஆத்ம தரிசனம் பெற இதை சாத்தியப்படுத்த வேண்டும்."


அவையில் அமர்ந்திருந்தோர் தேவதேவன் சொல்லும் விஷயங்களின் விவரணையில் கட்டுண்டு கிடந்தனர். அந்த அமைதியில் தேவதேவனின் குரல், அவரது தனித்துவமான உச்சரிப்பில் ஏற்ற தாழ்வோடு ஒரு நல்ல இசையைக் கேட்கிற அனுப்வத்தை அந்த நேரத்தில் அளித்தது. "எப்படி சாத்தியப்படும் என்னும் கேள்விக்கு விடைகாண இரண்டுக்கும் பொதுவான ஒரு அம்சத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலோட்டமாகப் பார்க்கையிலேயே மனம், அறிவு ஆகிய இந்த இரண்டும் இன்று இருக்கிற நிலையில் புறவுலகு பற்றியே அறிவு கொண்டிருக்கின்றன.. இந்த இரண்டின் இத்தகைய போக்குக்குக் காரணம், புறவுலகச் செயல்களைப் பார்த்துப் பார்த்து பழகிய அனுபவத்தின் அடிப்படையில். கண்கள் காட்சியைப் பார்க்கின்றன. பார்க்கும் காட்சியின் பிம்பம், அல்லது அந்தக் காட்சியின் தாத்பரியமான உணர்வுகள் பார்வை நரம்புகள் மூலம் மூளையில் பதிந்ததும் அது பற்றிப் புரிந்து கொள்ளும் அறிவு, தான் புரிந்து கொண்ட விதத்தில் மனத்திற்கு அதைத் தெரியப்படுத்துகிற விதத்தில் மனம் அதை அனுபவிக்கிறது. இது தான் விஷயம்.


"எப்பொழுதுமே மனம் என்பது அறிவின் ஆட்டுவிப்புக்கு ஆட்படுகிற சமாச்சாரம். ஆட்டுவிக்கும் சூத்திரதாரி அறிவு தான். முதலில் அந்த சூத்திரதாரியின் தன்மையை அலசி அராய வேண்டும். அதற்கு அக்கு அக்காக அதனைப் பிரித்துப் பார்க்க வேண்டும்" என்று சொல்லியபடியே அவையைச் சுற்றிலும் தன் பார்வையைச் சுழல விட்ட தேவதேவன், அப்பொழுது தாவரவியல் அறிஞர் முத்துக்குமார் ஏதோ விளக்கம் கேட்க எழுந்து நிற்பதைக் கண்டு, தன் தொடரும் உரையை நிறுத்திக் கொண்டு அவரைப் பார்த்தார்.


(தேடல் தொடரும்}

Related Posts with Thumbnails