மின் நூல்

Monday, January 29, 2018

படித்ததில் பகிர நினைத்தவை

புதிய பகுதி  ஆரம்பம்           

                                       1
விஷயம் நல்லதோ,  கெட்டதோ ஒரு அலசல் செய்யத் தோன்றுகிறது.

ரீ கலெக்ஷன் ஆஃப் தாட்ஸ் மனுஷனுடைய பெரிய சொத்து.  நடந்ததை நினைவுக்குக் கொண்டு வந்து யோசனை பண்ணத்  தன்னை பக்குவப் படுத்திக்கறது மனுஷனுக்கு மட்டுமே உண்டு.  மிருகம் மாதிரி சட்டென்று கோபமோ காமமோ வந்திடறதில்லே;  வாலை மிதிச்ச உடனே பாஞ்சிடறதில்லே.  கோபப்பட்டா என்னாகும்ன்னு நம்மாலே யோசிக்க முடியும்.  தொடர்ந்து யோசிக்கிறவன் ஞானி.

முடியாதவன்  மிருகம்.  யோசனை பண்ணினதின் விளைவு, ஏன் என்ற கேள்வி  கேட்டதின் பதில் இன்றைய வாழ்க்கை வளர்ச்சி.  அன்றையிலிருந்து இன்று வரைக்கும் மிருகத்திற்கு பசி தான் பிரச்னை.  நமக்கு ஆயிரம்.  வளர்ச்சின்னா இடைஞ்சல் உண்டு.  இடைஞ்சலைத் தாண்டறது தான் வளர்ச்சி.                                                                                                     

நாய்க்குட்டியை நிலைக்கண்ணாடிக்கு  முன்னாடி வச்சா என்ன  பண்ணும்?.. நக்கிப் பாத்துட்டு தின்ன முடியலேன்னு  போயிடும்.  மனுஷன் நின்னா, அடடா,  நான் இவ்வளவு அழகான்னு யோசிப்பான்.  தன் இருப்பும் தெரிந்து எதிர்ப்பக்கம் போய் தன்னையே பாத்துக்கற சுபாவம் வர்றது.

நாய்க்குட்டிக்கோ இருப்பு  மட்டும் தான் முக்கியம்.   மனுஷனுக்கு இருப்பும் தொலைவும் உண்டு.  தொலைவுப் பார்வை இருக்கறதாலே வீடும், அரிசி சேமிப்பும் அல்லது ஏதாவது ஒண்ணு வந்திடறது.  இதற்குண்டான  பிரச்னையும் வளர்ந்திடறது.  படருவதால், வளர்வதால் வரும் பிரச்னை. படர்ந்த இடம் மரமோ,  முள்ளுச் செடியோ,  மலையோ, தரையோ அந்த சூழ்நிலை பிரச்னை.

மனிதனுக்கு சந்தோஷம் என்பது என்ன?..  தன்னைப் பிறரிடமிருந்து உயர்த்திக் காட்டிக் கொள்ளுதலா?  எதையும் பிறரிடம் பகிர்ந்து கொள்ளுதலே சந்தோஷம்.   இந்தப் பகிர்தலின் பொருட்டே உறவும், உறவுக்கான சடங்கும்.  பகிர்ந்து கொள்ள மறுப்பவன்  பயமுள்ளவன்.

'தனிமை கண்டதுண்டு; அதிலே சாரமிருக்குதம்மா'   என்கிற  த்வனியிலேயே ரகசியம் பரிமாறும் உணர்வு இருக்கிறது.

                                                                                                                  --  பாலா

                                     2

ள்ளங்கையில் ஓர் அற்புதம்!

ஒருவனின் கைரேகையைப் போலவே மற்றொருவனின் கைரேகை இருக்காது என்பதை முதன் முதலில் கண்டுபிடித்தவர் சர் பிரான்ஸிஸ் கால்டன் என்பவர்.  ஆண்டு:  1892.                                                 
                                                                                                           
'எந்த இரு கைரேகைகளும் ஒரே மாதிரியானவை அல்ல' என்பதை முதன்  முதலாக உலகத்துக்கு நிரூபித்துக் காட்டினார்.  கைரேகையைக் கொண்டே குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறைஒயை சர் எட்வர்ட் ஹென்றி என்பார் பிரபலப்படுத்தினார்.

அப்பா மாதிரியே மூக்கு இருக்கலாம்  அம்மா மாதிரியே கண் இருக்கலாம். ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் கூட ஒரே மாதிரி  இருக்கலாம்; ஆனால் கைரேகை மட்டும் இந்த உலகத்தில் வாழும் கோடிக்கணாக்கான மக்களுக்கும் வெவ்வேறு தான்.

கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் கொஞ்சம் யோசித்தால் நல்லது.


                                    3
காதுகளின் மீது  மச்சம் இருப்பது மிகவும் நன்மையைத் தரும். இரண்டு  காதுகளின்  மீதும் மச்சம் இருந்தால், அவன் மிக்க செல்வ குடும்பத்தில் பிறந்தவன்.  தன் முயற்சியாலும் மென்மேலும் செல்வத்தை வளர்த்து மிகவும் பாக்கியசாலி என பாராட்டப் பெறுவான்.


செவிகளின்  பின்புறத்தில் மச்சம் இருந்தால் வாழ்க்கைக்குத்  தேவையான  சகல வசதிகளும் பெற்றவனாகவும், பித்ரார்ஜிதம், ஸ்வார்ஜிதம், இரண்டும் நிறைந்தவனாகவும்,  தனக்கு ஈடான  ரூபமும் , குணமும், செல்வமும் நிரம்பப் பெற்ற மனைவியை மணப்பவனாகவும் நீண்ட ஆயுள் உள்ளவனாகவும் புகழுடன்  வாழ்வான்.

வலது செவி நுனியில் மச்சம் இருப்பவர்களுக்கு ஜலகண்டம் ஏற்படுமென்று சாஸ்திரம் கூறுகிறது.  மற்றும் இயற்கையாகவே இவர்களுக்குத் தண்ணீர் உள்ள இடங்களில் பயம் ஏற்படும்.

இடது செவி நுனியில் மச்சம் இருந்தால்---  இது வேண்டாம்.

வலது  செவியின் அடியில் மச்சம் இருந்தால் , அவனுக்கு வாழ்க்கைக்குரிய வசதிகள் இருந்தும் வீணாகப் பலவிடங்களில் கடன் வாங்கி கடன்காரர்களின் தொந்தரவுகளால் மனம் கலங்குவான்.

இடது செவியின் அடியில் மச்சம் இருந்தால்,  எந்த வசதியும் இல்லாமல் ஏழ்மையால் வருந்துவான்.

==  உடல் மச்சங்களும் உங்கள் வாழ்க்கை ரகசியங்களும் என்ற நூலிலிருந்து.
ஆசிரியர்:  கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார். வெளியீடு:  லிஃப்கோ.




                                    4     

எது எது எங்கும் இருந்தாலும் காணக்  கிடைக்காததோ

எது அறியப்படாவிட்டாலும் நம்மை அதைப்பற்றியே பேச வைக்கிறதோ அது கடவுள்.

எது உணர்வில் மட்டும் வசிக்கிறதோ எது உணர்வு மயமானதோ அது கடவுள்.

மனிதனை நேசிக்க கற்றுக் கொடுப்பது,  இந்த வாழ்க்கையை மேலானதாக மாற்றக் கற்றுக் கொடுப்பது கடவுள்.

இலக்கியமும் கடவுள் வடிவந்தான்.  மனிதனையே கடவுளாகப் பார்க்கச் செய்வது தான் இலக்கியம்.

                                                                                       
                                                                                                                                                 --- ஜெயகாந்தன்



                                       5

ஷியாம் பெனகல் நேதாஜி பற்றிப் படம் எடுத்தார்.  வடநாடு ஞான ராஜசேகரன் அவர்.  மிகப் பொருத்தமான தலைப்பு--  'BOSE FORGOTTEN HERO'.

இது பற்றிய 'ஹிந்து' விமரிசனம் வரிக்கு வரி நெஞ்சில் சுட்டது நினைவுக்கு வருகிறது.  நேதாஜியை இந்நாடு எவ்வளவுக்கு மறந்து விட்டது என்பதை அந்த விமர்சகர் அழகான வார்த்தைகளில் அங்கலாய்த்திருந்தார்.

போஸ் மட்டும் தானா?..'UNSUNG HEROS' என்கிற 'ரெடிமேட்' தலைப்பை இதற்காகவே தயாரித்திருந்தார்கள்.  காய்ந்த பனை மட்டைகள் எழுப்புகிற சலசலப்பு இங்கே ரொம்ப அதிகம்.  அந்தப் பெருங்கூச்சலில் இனிமை மிகு வீணை நாதங்கள் அமுங்கிப் போகின்றன.                               

நாட்டுக்காக சர்வ பரித் தியாகம் செய்து தங்களின் எல்லாவற்றையும் இழ்ந்தவர்கள் அடியோடு மறக்கப்பட்டாயிற்று.  இப்போது 'மேலே' இருக்கிற பலர், தகுதித் தராசிலும் 'மேலே' இருக்கிற தட்டுகள் தான்.

இளைய தலைமுறைக்கு நம் சுதந்திரப் போராட்ட வரலாறு உரிய முறையில் சொல்லப்படவே இல்லை.  சுதந்திரம் கிடைத்த கையோடு, பொறுப்பில் இருந்தவர்கள் இதைச் செய்யத் தவறி விட்டார்கள். இரண்டு மூன்று தலைமுறைகள் திசை திரும்பி விட்டதற்கு இதுவே முதற் காரணம்.  இந்தப் பெரும் குறை இனியாவது சரி செய்யப்பட வேண்டும்.  ஏற்கனவே சிலர் களத்தில் இருப்பது உண்மை தான்.  போதாது. இது ஒரு இயக்கமாகவே நடத்தப் பட வேண்டும்.  மூத்த--இளைய தலைமுறைகள் இணைந்து முனைய வேண்டும்.
                                                                   
                                                                                                               --  பாஹே
                                                                       


                                                                     6

னது முதலாவது ஆசிரியப் பணி ஜவ்வாது மலைக் காடுகளில் பஸ் போக்குவரத்து இன்று வரை கூட இல்லாத புலியூர் என்ற ஆதிவாசி ஊரின் வனத்துறைப் பள்ளியில் ஓராசிரியப் பள்ளியில் தான் தொடங்கியது.  என்னைச் சென்னைக்குப் போகச் சொன்னவர்கள் நான் வனவாசம் போனதைப் பார்த்து வருத்தப் பட்டார்கள்.  அங்கு வாழ்ந்த ஓராண்டில் அந்த கானக வாசம் தந்த கற்பனை தான்  'இன்று  புதிதாய்ப்  பிறந்தோம்' என்ற தமிழக அரசின் இரு ஆண்டுகளுக்குமான நாவல் பரிசினைப் பெற்றது.  1967-ல் மலேசியா தின ஏடான தமிழ் நேசன் இதழில் ஓராண்டு வெளியான அந்த நாவலுக்கு வருடா வருடம் ஒரு வாசகர் கடிதமாவது வந்து கொண்டே இருக்கும்.  எங்கள் ஊரிலே என் ஆப்த நண்பரின் அண்ணன் நடத்திய ஹோட்டலில் அடிக்கடி சென்று அவரோடு காலம் கழித்த நாட்கள் ஏராளம். அந்த ஹோட்டல் ஒரு குடும்பமாக விளங்கியதையும் அந்தக் காலத்தில் மனித மதிப்பீடுகளுக்கு இருந்த மரியாதையும் என் 'ஜமுனா' நாவலில் வடிவம் பெற்றன.

எட்டு ஆண்டுகள் பள்ளிகொண்டா என்ற பெரிய கிராமம் ஒன்றில் பணியாற்றிய பொழுது சுற்றியிருந்த ஊர்களின் தோல் ஷாப்புகளால் ஆற்றங்கரையும் விவசாயமும் அழிந்து கொண்டு வரும் காட்சியைக் கண்டு மனம் பதறிய அனுபவம் 'கன்னியராகி நிலவினிலாடி'   என்ற நாவலாக வெளிப்பட்டது.  அங்கு  சந்திக்க நேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டர் 'மணல்வெளி மான்கள்' நாவலில் கதாபாத்திரமானார்.                                           
                                               
                   
இப்படி ஒவ்வொரு படைப்புக்கும் பின்னால் ஒரு கதை உண்டு.  சொல்லிக் கொண்டே போகக் கூடிய கதை.  புகழ் தேடியோ பணம் தேடியோ எழுதாதே என்று எனக்கு நான் போதித்துக் கொண்ட கதை புகழ் பொருளற்றுப் போகிறது.  போட்டி பொறாமையை வளர்த்து பொல்லாங்கி விடுகிறது. நான் கண்ட அனுபவம் இது.

பணம் அர்த்தமிழக்கிறது.  அர்த்தங்களை மேன்மையான மதிப்பீடுகளை அழிக்கிறது.  மனித மதிப்பீடுகளை மண்ணுக்குள் வீழ்த்தித் தேய்ந்து மாய்த்து விடுகிறது.  இதுவும் கண்ணார நான் கண்ட அனுபவம்.  இதையெல்லாம் வெளியிட்டுக் கொண்டு போனால் பைத்தியக்காரன் என்றோ  போலிப் பாசாங்குக்காரன் என்றோ கெட்ட பெயர் தான் மிஞ்சுகிறது.  நல்லது.  அப்படிச் சொல்வதில் ஒரு நஷ்டமுமில்லை.  எல்லாக் காலங்களிலும் சில பைத்தியக்காரர்கள் இருந்து கொண்டே தான் வருகிறார்கள்.  ஒரு பாதிப்பும் இல்லை.  காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. எனக்குத் தோன்றுவதை வெளியிட்டு மன ஈடுபாட்டோடு உழைக்க வேண்டியது தான் எனக்கு விதிக்கப்பட்ட பணி.  இந்த நெடிய அனுப்வங்களுக்குப் பின் எனக்கு விளங்கியது இது தான்.

வேதனைகளை வெளியேற்று.

பரவசங்களைப் பகிர்ந்து கொள்.

வெளிச்சத்தைச் சுட்டிக் காட்டு.

வேலையைப் பார்த்துக் கொண்டு போ.

-- இவை தான் எனக்கு நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட சாலைத் திருப்பங்கள். ஆத்ம கெளரவம் என்ற பாதையை நோக்கி நடந்தது என் பயணம்.

ஆத்ம கெளரவம் என்ற சொல் மனித மதிப்பீட்டின் உச்சிப் படிக்கட்டு.


                                                                                                            ----  வையவன்.



படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.

Friday, January 26, 2018

பாரதியார் கதை --7

                                                 அத்தியாயம்-- 7


ட்டையபுரத்து அரண்மனை வேலையை உதறித் தள்ளிய பாரதியை மதுரை 'வா,வா'  என்றழைத்தது.  மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் உத்தியோகம்.  1904 ஆகஸ்ட் மாதத்திலிருந்து நவம்பர் வரை நாலே மாதங்கள்.  நிரந்தர தமிழாசிரியர் விடுப்பில் இருந்ததால் அவரிடத்தில் பாரதியார் பணியேற்ற தற்காலிக வேலை.   ஊதியமாக மாதம் பதினேழரை ரூபாய்.

பள்ளி வேலைக்கு போன ஒழிந்த நேரத்தில் பாரதியார்  27 நட்சத்திரங்களை வைத்து விருத்த பாக்களிலே அமையுமாறு 'மூட சிகாமணிகள் நட்சத்திர மாலை'  என்றொரு நூலை இயற்றினார்.   அந்த நூலிலே மூட சிகாமணிகள் என்று சில பேரைக் குறிப்பிட்டுத் திட்டித் தீர்த்திருந்தார்.   மதுரையில் கந்தசாமி,  சங்கப்பா என்று இரு நண்பர்கள் பாரதிக்கு வாய்த்திருந்தனர்.
கந்தசாமி ஒரு கவிராயர்.  சங்கப்பாவோ வயதான ஒரு பிராமணர்.  வேதாந்தி.  இருவரும் பாரதி இயற்றிய மூட சிகாமணி நட்சத்திர மாலையை  படிக்கக் கேட்க வேண்டும் என்று மிகவும் விரும்பி அவரை வற்புறுத்திக் கேட்டனர்.  மதுரை பேரையூரில் இருந்த பங்களா ஒன்றில் பாரதி தனது 'மூட சிகாமணிகள் நட்சத்திர மாலை'யைப் படிக்க,  இருவரும் கேட்டனர்.  அந்த நூலை கந்தசாமிக் கவிராயர் மிகவும் ரசித்தாலும். சங்கப்பா  'இந்த நூலில் உள்ள விஷயங்கள் உண்மைதான். இருந்தாலும் உம்மைப்
போன்றவர்களுக்கு இதனால் பல தொல்லைகள் விளையும். அதனால் உடனே கிழித்தெறிந்து விடுங்கள்' என்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்.  பாரதியும் பதில் பேசாமல் தாம் எழுதியிருந்த அந்த விருத்த கவிப்பாக்களை அப்படியே சுக்கு நூறாகக் கிழித்தெறிந்து விட்டார்.  முற்காலத்து பாரதியிலிருந்து விடுபட்டு பிற்காலத்து பாரதி எப்படி உருவாகிறார் என்பதற்காக இதை குறிப்பிட்டேன்.

இந்த சமயத்தில் மதுரையிலிருந்து வெளிவந்த  'விவேகபானு' என்னும் இதழில் பாரதியாரின் 'தனிமை இரக்கம்'  என்ற கவிதை பிரசுரமாகிறது.  எட்டையபுரம் ஸி. சுப்பிரமணிய பாரதியார் என்ற பெயரில் வெளிவந்த இந்தக் கவிதை தான் பாரதியாரின் அச்சில் பிரசுரமான முதல் கவிதை.  அவரது 22 வயதில் அந்தக் கவிதை பிரசுரமானாலும் அதற்கும் முந்தைய இளம் பருவத்தில் அரும்பு மீசை பருவத்தில் எழுதியிருப்பாரோ என்று எண்ண வைக்கும் கவிதை.

சேதுபதி பள்ளியிலிருந்து விடுபட்ட பாரதிக்கு அந்நாளைய பிரபல அரசியல் செய்தித் தாள் 'சுதேச மித்திரனி'ல் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது.  இன்றும் நாம் நினைத்துப் பார்க்கிற பாரதியின் வாழ்க்கையில் நிகழ்ந்த பெரும் திருப்பம் இது.

தமிழகத்தின் பத்திரிகை உலகின் முன்னோடிகளில் மறக்கவே முடியாதவர் ஜி. சுப்பிரமணிய அய்யர்.   தஞ்சை மாவட்ட திருவையாரில் 1855- ஆண்டில் பிறந்தவர்.  கல்விமானும் கல்வியை  எளியோருக்குப் போதித்தவரும் கூட.  சமூக சீர்திருத்தக் கொள்கைகளில்  தீவிரமாக இயங்கியவர்.  ஆங்கிலம் அறிந்தோரிடையே அன்றைய அரசியல் நிலமைகளைத் தீவிரமாகப் பிரச்சாரம் பண்ண வேண்டும் என்ற நோக்கில் 'தி இந்து' பத்திரிகையை தோற்றுவித்தவர்.  தமிழர்களிடையேயும் அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த 'சுதேச மித்திரன்' என்ற நாளேட்டையும் 1882-ல் தமிழகத்தில் வலம் வரச் செய்தவர்.   அப்படியான சுப்பிரமணிய  அய்யர் வேறு ஒரு வேலையாக மதுரை சென்ற பொழுது பாரதியாரைப் பார்க்கவும் அவருடன் அளவளாவுமான ஒரு சந்தர்ப்பம் நடக்க வேண்டிய ஒன்றாக இயற்கையின் ஏற்பாட்டின்படி நடக்கிறது..  ஒற்றைச் சந்திப்பிலேயே அய்யர் பாரதியாரின்  புலமையைப் புரிந்து கொண்டார்.  இவரை எப்படியாவது சென்னை அழைத்துச் சென்று தனது தமிழ்ப் பத்திரிகையில் ஒரு பொறுப்பைக் கொடுக்க வேண்டும் என்று மிகவும் விரும்பினார்.

பாரதியின் வாழ்க்கையை ஊன்றிக் கவனிக்கும் பொழுது நமக்கே ஆச்சரிய மூட்டும் சம்பவங்கள் நிறைய உண்டு.  பாரதியை  உபயோகப்படுத்திக் கொள்ளவே மற்றவர்கள் விரும்பி  அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் பாரதியின் வாழக்கையில் நிகழ்ந்த பல நிகழ்வுகள் பின்னப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.  காசியில் சுற்றித் திரிந்த வாலிபனை எட்டையபுர ஜமீந்தார் எப்படியாவது தன் ஜமீனுக்கு அழைத்து வந்து விட வேண்டும் என்று விரும்பி எ.புரத்துக்கு கூட்டி   வந்தார்.  இப்பொழுது பார்த்தால்   சுதேசமித்திரன் சுப்பிரமணிய அய்யர் பத்திரிகைப் பணியில் பாரதியை அமர்த்தி விட வேண்டும் என்று வேட்கை கொள்கிறார்.

பாரதியும் ரொம்பவும்  மற்றவர்களின் விருப்பங்களுக்கு இணங்கிப் போகக் கூடிய சுபாவம் கொண்டவராகவே தெரிகிறார்.   எட்டையபுர ஜமீன்தார் ஆசை எப்படி நிறைவேறியதோ அதே போலத் தான் சுப்பிரமணிய அய்யர் ஆசைப்பட்டதும் நிறைவேறுகிறது.

பாரதி மதுரை நீங்கி சென்னையில் 'சுதேச மித்திரன்' இதழில் துணை ஆசிரியர் பொறுப்பேற்றார்.  ஜார்ஜ் டவுனில் அரண்மனைக்காரத் தெருவில் அந்நாளைய சுதேசமித்திரன் அலுவலகம் இருந்தது.  பாரதி பிறந்த ஆண்டும், சுதேச மித்திரனின் தொடக்க ஆண்டும் ஒன்றே என்பது ஓர் அரிய ஒற்றுமை.  பாரதியின்  திரு நாமமும் மித்தரன் பத்திரிகை ஆசிரியரின் பெயரும் ஒன்றே என்பதும் இதை வாசிப்போருக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்த இடத்தில் சுதேச மித்திரன் நாளிதழைப்  பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.   தமிழகத்தில்  தமிழில் செய்தித்தாள் வெளிவரும் நிகழ்வை ஆரம்பித்து வைத்த பெரும் பெருமை  சுதேசமித்திரனின் பெருமையாகும்.  விற்பனையும் கொடிக்கட்டிப் பறந்தது.   பாரதியார் பத்திரிகையில்  பொறுப்பேற்றுக் கொண்ட காலகட்டத்தில் பர்மா, சீனாவிலெல்லாம் அதற்கு வாசகர்கள் இருந்திருக்கிறார்கள்.   பினாங்கு, சிங்கப்பூர், மலாய், சுமத்திரா தீவுகள், போர்னியோ, இலங்கை என்று அப்பத்திரிகையின் திக்விஜயம் எட்டுத் திக்கும் நிகழ்ந்திருக்கிறது.   அந்நாளைய தமிழர்களின் செய்தித்தாள் வாசிப்பு ஆச்சரியமூட்டுவதாய் ஒரு பொற்காலம் போலத் தெரிகிறது.

பாரதியார் வாழ்க்கையிலும் ஒரு நட்சத்திர கீற்று மினுக்கி அந்த தம்பதியரின் சந்தோஷத்திற்கு ஒரு ரோஜா மலர்ந்தது.  சுதேச மித்திரனில் பணியாற்றத் தொடங்கிய காலத்தில் தான் பாரதியாருக்கு தலைமகள் பிறக்கிறாள்.  குழந்தைக்கு தங்கம்மாள் என்று பெயரிட்டு தம்பதியினர் மகிழ்கின்றனர்.

பாரதியார் சுதேசமித்திரனில் பணியில் சேர்ந்த காலத்திலேயே 'சர்வஜன மித்திரன்' என்று திருநெல்வேலியிலிருந்தும், திருச்சியிலிருந்து 'திருச்சி நேசன்',  'திராவிட போதினி', 'பிரஜானுகூலன்', 'லோகவர்த்தமானி', 'சுபோத பாரிஜாதம்', 'அமிர்தவர்ஷினி',   சேலத்திலிருந்து தட்சிண தீபம்', 'திராவிடாபிமானி', சென்னையிலிருந்து 'சுதேசி' என்று இதழ்கள் வெளிவந்து கொண்டிருந்தன.

சுதேசமித்திரன் அதிபர் பாரதியாரிடம் மிகவும்  பரிவுடனும், அன்புடனும் நடந்து கொண்டார்.   இருபத்திரண்டே வயதான பாரதி பத்திரிகை வேலகளுக்கும் புதுசு.  அதனால் மித்திரனில் மொழிபெயர்ப்பு, பிழைதிருத்தல் போன்ற வேலைகள் பாரதியாரின் பொறுப்பில் இருந்தன.  'பத்திரிகைத்  துறையில் பழக்கமும், தேர்ச்சியும் பெறும்படிச் செய்தவர் அவர் தான்.  அவரை நான் ஒரு வகையில் பரம குருவாக மதிக்கிறேன்.." என்று பாரதியாரும் அய்யரைக் குறித்துச் சொல்லியிருக்கிறார்.  பத்திரிகை பணிகளைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக பாரதி அனுபவமும் ஆற்றலும் பெற்றதும் சுதேசமித்திரனில் தான்.                                                             

பாரதியின் மனம் எதிலும் நிலைகொள்ளாமல் இதற்கு மேல் ஏதாவது செய்தாக வேண்டும் என்று அலைபாய்ந்து  கொண்டிருந்தது போலும்.

1905-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம்.

சென்னை திருவல்லிக்கேணி  எண்:100, வீரராகவ முதலியார் தெரு  என்ற முகவரியிலிருந்து  'சக்ரவர்த்தினி' என்ற மாதப்  பத்திரிகையின் முதல்
இதழ்  வெளிவருகிறது.  சுதேச மித்திரனில் பணியாற்றிக் கொண்டிருந்த பாரதிக்கு  மித்திரனில் வெளியிட முடியாத விஷயங்களுக்கு  'சக்ரவர்த்தினி'  நிலைக்களனானது மட்டுமில்லை,   'சக்ரவர்த்தினி'யின் *ஆசிரியர் பொறுப்பையும் ஏற்றுக்  கொள்ள  வேண்டியது காலத்தின்  கட்டாயமாகிறது. இந்தப் பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்வதற்கு ஜி.எஸ்.அய்யரின் பின்புல அழுத்தமும், ஆதரவும்  இருந்திருக்கும் என்றும் யூகிக்க முடிகிறது.

பிரித்தானிய அரசின் இந்திய வைஸ்ராயாய்  கர்ஸான் பிரபு  கோலோச்சிய காலம் அது.                                                               

1905-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 'சக்ரவர்த்தினி' இதழ் பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது என்றால்,  1905 அக்டோபர்  16-ம் தேதி கர்ஸான் பிரபுவின் ஆணைக்கிணங்க  வங்காளம் இரண்டாகப்  பிரிக்கப் படுகிறது.

இந்திய தேசியத்தின் கேந்திரமாக விளங்கிய வங்காளத்தில் தேசிய உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கில் இந்த பிரிவினை ஆளும் பிரித்தானிய அரசின் வஞ்சக நாடகம் என்பதை தேசிய சக்திகள் புரிந்து கொண்டன.  ஒன்றாக இருந்த குடும்பத்தை இரண்டாகப் பிளந்தது போன்ற இந்தப் பிரிவினை சூழ்ச்சியை  பாரத தேச புதல்வர்கள் ஏற்றுக் கொள்ளாமல் தேசமெங்கிலும் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கிளர்ச்சி வெடித்துக் கிளம்பியது.  பிரிவினைக்கு எதிரான போராட்ட சக்திகள் ஒன்றாக இணைந்ததின் பெரும் பலனாய் சுதேசி இயக்கம் வலுப்பெற்று  தேசமெங்கும்  அதன் கீர்த்தி பற்றிக் கொண்டது.

பங்கிம் சந்திரரின் புகழ்பெற்ற பாடலான 'வந்தேமாதரம்' கீதத்தை  தமிழில் மொழிபெயர்த்து நவம்பர் மாத 'சக்ரவர்த்தினி' இதழில் பாரதியார் வெளியிடுகிறார்.  தமிழர்களின் நாடி நரம்புகளில் முறுக்கேற்றி 'வந்தேமாதரம்' அவர்கள்  உதடுகள் ஜபிக்கும் மந்திரமாகிறது.  அந்நாட்களில் தமிழக வீதிகளில் இந்திய விடுதலை இயக்கக் கொடி ஏந்தி,  'வந்தேமாதரம்' கோஷமிட்டு  தமிழர்கள்  உணர்வுப்  பிழம்பாய் ஜொலித்தனர்.

(வளரும்)


======================================================================
* 1905 செப்டம்பர் மாத 'செந்தமிழ்' என்ற பத்திரிகையில் 'சக்ரவர்த்தினி' இதழ் பற்றி ஒரு மதிப்புரையே காணப்படுகிறது.   'சுதேச மித்திரன் பதிப்பாசிரியர் ஜி.சுப்பிரமணிய அய்யர் முதலிய நல்லறிஞர்கள் விஷயமெழுதி வருகின்றனர்.  இந்த பத்திரிகையின் ஆசிரியர் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் அவர்கள்' என்று காணப்படும் குறிப்பினால் பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு 'சக்ரவர்த்தினி' இதழ் வெளிவந்திருப்பதாகத் தெரிகிறது.

**
1961-ம் ஆண்டில் சைவ சித்தாந்தக் கழகம் வெளியிட்டிருக்கும் புலவர் இராமசாமியின் 'நாள், கிழமை, திங்கள் இதழ் விளக்க வரிசை' என்ற நூலில்  காணப்படும் தகவல்கள்.

 'சக்ரவர்த்தினி'யின் முதல் இதழ் 1905- ஆண்டு ஆகஸ்ட்டில் வெளிவந்திருக்கிறது.  பெண்கள் முன்னேற்றத்திற்கான சிந்தனையுடன் வெளியிடப்பட்ட  மாத இதழ் என்று ஒரு குறிப்பு கிடைக்கிறது.  பார்வைக்குக் கிடைத்த 1907 ஏப்ரல் மாத 'சக்கரவர்த்தினி' இதழ்  எம்.எஸ். நடேச அய்யரை ஆசிரியராகவும், பி. வைத்தியநாத அய்யரை வெளியீட்டாளராகவும் கொண்டு  ஏ.எல்.வி. அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்ததாகத் தெரிகிறது.  இதழின் விலை 3 அணா என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


இந்த இரண்டு குறிப்புகளிலிருந்தும் 'சக்ரவர்த்தினி'  இதழின் தொடக்க காலத்தில் பாரதியார் அதற்கு ஆசிரியராகவும் 1907-ம் ஆண்டு காலகட்டத்தில் நடேச அய்யர் அவர்கள் இந்த இதழின் ஆசிரியர்  பொறுப்பில் இருந்திருந்திருக்கிறார் என்றும் அறிய வருகிறோம்.


=======================================================================




Wednesday, January 24, 2018

றெக்கை கட்டிப் பறக்குதய்யா அண்ணாமலை சைக்கிள்!...

ம்ம தமிழ் பத்திரிகைகளின் இன்றைய நிலை பற்றிச் சொல்லவே வேண்டாம்.   சினிமாவையும்,  அரசியலையும் சுவாசமாகக் கொண்டவை.

இருந்தாலும் எதைச் செய்தாலும் சுவாரஸ்யமாகச் செய்வதில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் தமிழ்ப்  பத்திரிகைக்காரர்கள்.

இன்று காலையிலிருந்து மாலை வரை சில பத்திரிகைகளைப் படிப்பதிலேயே பொழுது போயிற்று.  படித்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

இனிமேல் உங்கள் பாடு, அந்தப் பத்திரிகைகள் பாடு.

1.    'பின் காலனியத்துக்கு எதிரான குரல்' என்று தன் கவிதைகளை அடையாளப்படுத்திக்  கொள்ளும் யவனிகா ஸ்ரீராமின் கவிதைகள், மூலதனத்தின் வன்முறைகளைப் பேசுபவை;  காட்சிப் படிமங்களின் வழியே நம்மைப்  பல்வேறு உணர்வு நிலைகளுக்கு ஆட்படுத்துபவை. பூமிப்பந்தின் மீது விரிக்கப்பட்ட வணிகக் கம்பளமாய் உலகமயமாக்கல்,  ஆன்மிக வியாபார மத நிறுவனங்கள், மாண்பற்ற நுகர்வுக் கலாச்சாரம், பெருகி விட்ட அதீத தொழில் நுட்பச் சாகனங்களுக்கிடையேயான நெருக்கடி மிக்க அன்றாடம்,  பாலியல் ஒடுக்கு முறை.. என மனித வாழ்வின் அபத்தங்களை, அரசியலுடனும் அழகியலுடனும் பதிவு செய்திருக்கும் இந்தக் கவிதைத் தொகுப்பு,  இந்த ஆண்டின் முக்கியமான ஆக்கம்.

....  பக்கத்து வீட்டுப்  பெரியவர் "எங்க குடும்பப் பத்திரிகை இது.  இப்போலாம் என்ன எழுதறாங்கனே, படிச்சுத் தெரிஞ்சிக்க முடியலே, தம்பி..  உங்களுக்கு புரிஞ்சா,  சொல்லுங்களேன்" என்று  ஒரு காலத்தில் பத்திரிகை உலகில் சாதனைகள் பல நிகழ்த்திய   அந்தப் பத்திரிகையின் நடு பக்கம் ஒன்றில் எழுதியிருந்த மேற்கண்ட வாசகங்களை என்னிடம் காட்டினார்.  

படித்துப்  பார்த்து விட்டு, "ஒரு கவிதைத் தொகுப்புக்கு மதிப்பீடு மாதிரி எழுதியிருக்கிறது" என்றேன்.

"என்ன   மதிப்பீடு, தம்பி?..  வாசிச்சா புரியணுமிலே?.. அப்படி என்ன தான்     எழுதியிருக்காங்கன்னு சொல்லுங்களேன்.." என்று அவர் கேட்ட பொழுது தான் வாசித்ததைப் புரிந்து கொள்கிற சிரமம் எனக்குப் புரிந்தது.  "எனக்கும் சரியாப் புரிலே.." என்று அசட்டுச் சிரிப்புடன் கழண்டு கொண்டேன்.

உங்களுக்குப் புரிந்ததை விட்டுத் தள்ளுங்கள்..  எந்தப் பத்திரிகையாக இது இருக்கும் என்றாவது யூகிக்க முடிகிறதா?..


2.     குமுதம் பத்திரிகை 'ரஜினி கட்சிக்குப்  பெயர் சொல்லுங்கள்!  ஒரு லட்சம் பரிசு வெல்லுங்கள்!!'  என்று ஒரு போட்டியே வைத்திருக்கிறது.

ரஜினி மக்கள் கட்சி,  அகில இந்திய மக்கள் கட்சி,  தமிழக மக்கள் கட்சி
என்று அந்த பத்திரிகையே சில மாதிரிப் பெயர்களைக்  கொடுத்து உதவியிருக்கிறது..  எப்படியும் கட்சியின் பெயரிலேயே 'மக்கள்' என்ற வார்த்தை வருமாறு  பெயர் இருக்கும் என்று ஆருடமும் சொல்லியிருக்கிறது.


3.  ரஜினியை பற்றி எழுதிட்டு கமலைப் பற்றிச் சொல்லாமல் இருந்தால் எப்படி?...  

ஆனந்த விகடனில் 'என்னுள் மையம் கொண்ட புயல்'ன்னு கமல்ஹாசன் ஒரு தொடர் எழுதுகிறார்.  

"அரசியல் அறிவிப்புக்கு என்னென்ன மாதிரியான எதிர்வினைகள் வருகின்றன?" என்கிறார்கள் என்று  குறிப்பிட்டு விட்டு அவர் மகள் ஸ்ருதி கேட்டவை என்று அப்பாவுக்கும் மகளுக்கும் நடந்த உரையாடலைச் சொல்கிறார்:

"அப்ப, அப்பா என்ன ஆவார்?" என்றாராம்  ஸ்ருதி..

"அவர் அப்படியேதாம்மா இருப்பார்.  கொஞ்சம் நரை கூடிட்டா அப்பா இல்லேனு சொல்லிடுவியா?" என்றேன்.   "என்னை உனக்கு  அப்பாவாகத்  தெரியுமா, உலக நாயகனாகத் தெரியுமா?  அதே அப்பாவாகத்தான் எப்பவுமே இருப்பேன்.." என்றதைத் தொடர்ந்து....

தமிழன்னா வேட்டி சட்டையுடன் தான் இருப்பான் என்பது கணியன்  பூங்குன்றானார் காலத்திலிருந்தே சொல்லிச் சொல்லிப் பழகிப்  போய் விட்டது போலும்.

வேட்டி சட்டையுடன் கமலின் போஸ்கள் மூன்று.  இளமை ஊஞ்சலாடுகிறது.

படங்கள்: ஜி.வெங்கட்ராம் என்று போட்டிருந்தது மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்து போனது.

'குமுதம்'  லைஃப்  இணைப்பில்  'நம்ம ஊரு  டைட்டானிக் பயங்கரம்!' என்ற பரபர தொடர்  ஒன்று வருகிறது.

மலையாளத்தில் பி.ஜே. ஆப்ரஹாம்  எந்தக் காலத்திலோ எழுதியதை தமிழில் எந்தக் காலத்திலோ ஹேமா ஆனந்த தீர்த்தன் மொழி மாற்றம் செய்தது.

இதே குமுதத்தில்  இதே தொடர்  'தீப்பிடித்த கப்பலில் அம்மணியும் நானும்' என்று  எந்தக் காலத்திலோ வெளிவந்தது தான்.
                                                                                                                               
இப்ப எழுதறவங்களுக்கு   வாசகர்களைக்  கவர்கிற மாதிரி             சுவாரஸ்யமா எதையும் சொல்லத் தெரியாது போனது தான் ஏற்கனவே வெளிவந்த சரக்கையெல்லாம் இப்படி மடை மாற்றி மீண்டும் பிரசுரிக்கறதுக்குக்  காரணமோ?..

போகட்டும்.   நதி மூலம் ரிஷி மூலம் பார்க்க வேண்டாம்.

 தமிழ் எழுத்துலகின் பொற்கால   'பொக்கிஷங்கள்'  இப்படியாவது  வாசிக்கக் கிடைக்கிறதே என்று சந்தோஷப்பட முடிகிறதே...  அது போதும்.

சின்ன வயசில் நிறைய தீப்பெட்டி லேபிள்களை சேகரித்திருக்கிறேன்.
அந்த வயதில் அதெல்லாம் ஒரு  பொழுது போக்கு.  லேபிள் சேமிப்புக்காக தீப்பெட்டிக்குக் கூட அலைய வேண்டாம்.   எங்கள் லேபிள் சேர்க்கும் ஆர்வத்தைத் தெரிந்து கொண்டோ என்னவோ  கத்தை கத்தையான வெவ்வேறு தீப்பெட்டி கம்பெனிகளின் லேபிள்களை தனியாக விற்பார்கள்.

குங்குமம் பத்திரிகையில்  தீப்பெட்டிகளை சேகரம் பண்ணும் ரோஹித் காஷ்யாப் அவர்களைப் பற்றித் தெரிந்து கொண்ட பொழுது எனது சின்ன வயசு அந்த ஞாபகம் தான் வந்தது.

திரு. ரோஹித்துக்கு சொந்த ஊர்  உத்திரப்பிரதேசத்து ஜான்சி கிராமமாம்.
சின்ன வயசில் ஆரம்பித்த தீப்பெட்டி சேகரிக்கும் பழக்கம் இன்றைய 40 வயசிலும் தொடர்கிறதாம்.  வெளிநாடுகளுக்கு போன போது கூட விடாமல் அந்த நாட்டு தீப்பெட்டி அட்டைகளை சேகரித்திருக்கிறார்.  கிட்டத்தட்ட 108  நாடுகளைச் சேர்ந்த 83 ஆயிரம் தீப்பெட்டிகள்  இது வரை சேர்ந்திருக்கிறதாம்.

இந்திய அளவிலே அதிக எண்ணிக்கைலே மேட்ச் பாக்ஸ் கலெக்ட் செய்திருப்பது இவர் தானாம்.  ஒரு மில்லியன் தீ.அட்டைகளைச் சேகரம் பண்ணியிருக்கும் இங்கிலாந்து நாட்டுக்காரர்  ஒருத்தர் தான் இந்த சமாச்சாரத்தில் டாப்பாம்.  அவரோட சாதனையை முறியடிக்கணும்ன்னு தன்னோட இலட்சிய கனவைச் சொல்கிறார் ரோஹித்.

லிம்கா லிம்கா என்று ஒன்றிருக்கிறதல்லவா?..  அது வேறு இவரது கனவுத்தீயை வளர்க்கிறதாம்.  அதற்குப்  பிறகு  இருக்கவே இருக்கிறது கின்னஸ் சாதனை.

விஷ் யூ பெஸ்ட் ஆஃப் லக், மிஸ்டர் ரோஹித்!


படங்கள் உதவியவர்களுக்கு நன்றி.


Tuesday, January 16, 2018

பாரதியார் கதை --6

                                                         அத்தியாயம் -- 6


மீனில் ஒரு நல்ல பதவி கொடுத்து பாரதியாரை தன் பக்கத்திலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் தான் எட்டையபுர ஜமீந்தார் வேங்கடேசுவர எட்டப்ப நாயக்கர் காசியிலிருந்து பாரதியாரைத் தம்முடன் எட்டையபுரத்திற்கு அழைத்து வந்தார்.

தாம் எண்ணியபடியே  பாரதியை அரசவைக் கவிஞராக்கி அழகும் பார்த்தார்.  ஆனால் பாரதியாரால் தான்  அந்த 'சுகமான' பதவியில் ஒட்டிக் கொண்டு காலந்தள்ள முடியவில்லை.   இரண்டே வருடங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் 'போதுமடா, சாமி' என்பது போல ஜமீந்தார் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் சம்மதிக்காமல் பாரதி அரசவைக் கவிஞர் பதவியைத் துறந்தார்.
                                                       
காரணம் என்ன?  வேறு யாரேனுமாக இருந்தால், 'செய்த பெருந்தவப்  பயன் இது' என்று அந்த அரசவைக் கவிஞர் பதவியில் ஒட்டிக் கொண்டு உண்டு களித்து ஒரு சுற்றுப் பெருத்திருப்பார்கள்..   பாரதி அப்படிப் பட்ட சாதாரண மனிதர் இல்ல என்பது தான் அவர் பதவியைட்ய் துறப்பதற்குக் காரணமாயிற்று.  'வேடிக்கை மனிதரை போல வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்று பிற்காலத்தில் பாரதி பாடிய வரியின் நிகழ் உண்மை தான் அவர் அரசவைக் கவிஞர் பதவியைத் துறந்தது.

சாதிக்கப்  பிறந்த அவரால் அன்றாட அந்த அரண்மனைக் கூத்துக்களை சகித்துக் கொண்டு  ஜமீந்தாருடன், அவர் துதி பாடிகளுடன் ஒன்றரக் கலக்க முடியவில்லை.   சாதாரணமானவர்களுக்கு 'சின்ன'க் காரணமாக இருக்கும் இந்தச் சின்னத்தனங்கள் அசாதரணமான பாரதிக்கு சகிக்க முடியாத நித்ய வெறுப்பாகிப் போய் அரண்மனை உத்தியோகமும் வேண்டாம், ஆஸ்தான கவிஞர் அலங்கரிப்பும் வேண்டாம் என்று பதவியை  உதறித் தள்ளி வெளியேறுகிறார்.

அரண்மனை வாழ்க்கையில் அப்படி என்ன வெறுப்பு பாரதிக்கு?..

எழுதுகோலைப் பிடித்த எழுத்தாளர்கள் தாம் எழுதுவதற்கான பொருளுக்காக தேடி அலைய  மாட்டார்கள்.  தங்கள் வாழ்க்கை அனுபவங்களை வேறு ஒருத்தரின் அனுபவங்கள் மாதிரி மூன்றாம் மனிதரின் தோளுக்கு மாற்றி,  தானடைந்த அனுபவங்களை  அப்படியேயும் தராமல் அந்த அனுபவங்களுடன் கற்பனையைக் கலந்து மெருகேற்று கதைகளாக்குவார்கள்.

பாரதி பிற்காலத்தில் எழுதிய 'சின்ன சங்கரன் கதை' என்ற நெடுங்கதையில்  அவருக்கு வெறுப்பேற்படுத்திய அந்த அரண்மனை  அனுபவங்களோடு கற்பனையையும் வேண்டிய அளவுக்குக் குழைத்து நையாண்டிக் கலையில் கொடி கட்டிப் பறக்கிற திறனோடு அந்நாளைய அரண்மனை ஜமீன்களின் பொதுவான  வாழ்க்கை ரசனைகளை உரைச் சித்திரமாய் தீட்டியிருக்கிறார்.  எழுது கலையில் மிக சாகசமாக எழுதத் தொடங்கிய இந்த சி.ச.கதை முற்றுப்பெறாமல் அரைகுறையாக பாதியில் நிற்பது தான் இதை வாசிக்கும் நமக்கேற்படும் பெருங்குறை.

அந்நாளைய அரண்மனை ஜமீந்தார்களின் அநாவசிய ஆடம்பரங்கள்,  அவர்களைப் புகழ்ந்து பாடும் உருப்படாத காக்காய் கூட்டத்தின் உள்ளீடற்ற உரையாடல்கள்,  ஒன்றுமில்லாததெற்கெல்லாம் வளைந்து நெளியும் உடல் மொழி  என்று விஷய ஞானமுள்ளவர்களுக்கு 'உவ்வே'யாகும் பல செய்திகளை தமக்கே உரிய கிண்டலும், கேலியுமாய் பாரதி நமக்குச் சொல்லும் கதை, 'சின்ன சங்கரன் கதை';   முடிவுறாத கதை ஆயினும் பாரதியின் உரைநடை புதுமை  நடைக்கு எடுத்துக் காட்டாய்த் திகழ்கிறது.

சாம்பிளுக்கு 'சின்ன சங்கரன் கதை'யிலிருந்து ஒரு பகுதி:

மகாராஜ ராஜபூதித மகாராஜ ராஜஸ்ரீ ராஜமார்த்தாண்ட சண்டப் பிரசண்ட அண்ட பகிரண்ட கவுண்டாதி கவுண்ட கவுண்டனூரதிப ராமசாமிக் கவுண்டரவர்களுக்கு வயது சுமார் ஐம்பதிருக்கும்.  நல்ல கருநிறம்.  நரை பாய்ந்த மீசை, கிருதா, முன்புறம் நன்றாகப் பளிங்கு போல் தேய்க்கப்பட்டு, நடுத் தலையில் தவடு பாய்ந்து, பின்புறம் ஒரு சிறிய முடிச்சுப் போட்டு விளங்கும் முக்கால் நரையான தலை.  நெடுந்தூரம் குழிந்த கண்கள்.  இமைப் புறங்களில் 'காக்கைக்கால்' அடையாளங்கள்.  பொடியினால் அலங்கரிக்கப்பட்ட மூக்கு. வெற்றிலைக் காவியினாலும், புகையிலைச் சாற்றினாலும் அலங்கரிக்கப்பட்ட பற்கள்.  குத்துயிரோடு கிடக்கும் உதடு. ஆபரணங்கள் பொருந்திய செவிகள்.  பூதாகாரமான உடல்.  பிள்ளையார் வயிறு.  ஒருவிதமான இருமல்.  அரையில் பட்டு ஜரிகை வேஷ்டி.  விரல் நிறைய மோதிரங்கள்.  பக்கத்திலே வெற்றிலை துப்புவதற்கு ஒரு காளஞ்சி. ஒரு அடைப்பக்காரன்--  இது தான் ராமசாமிக் கவுண்டர்.  இவர் காலையில் எழுந்தால் இரவில் நித்திரை போகும் வரை செய்யும் தினசரிக் காரியங்கள் பின் வருமாறு.."  என்று பாரதியார் பட்டியலிடும் போது,  பிற்காலத்து புதுமைப் பித்தனின் எழுத்தைத் தான் படிக்கிறோமோ என்று திகைப்பு..

சின்ன சங்கரன் கதை இப்படியாகத் தொடர்கிறது:

"...  அந்தப்புரத்தை விட்டு வெளியேறி இவருடைய சபா மண்டபத்திருகேயுள்ள ஒரு கூடத்தில்  சாய்வு நாற்காலியின் மீது வந்து படுத்துக்கொள்வார்.  ஒருவன் கால்களிரண்டையும் பிடித்து கொண்டிருப்பான்.   இவர் வெற்றிலைப் போட்டு காளாஞ்சியில் துப்பியபடியாக இருப்பார்.   எதிரே  அதாவது உத்தியோகஸ்தர், வேலையாட்கள், கவுண்டனூர் பிரபுக்கள் இவர்களீல் ஒருவன் வந்து கதை, புரளி, கோள் வார்த்தை, ஊர் வம்பு, ராஜாங்க விவகாரங்கள்--  ஏதேனும் பேசிக் கொண்டிருப்பான்.  சில நாட்களிலே வெளி  முற்றத்தில் கோழிச்சண்டை நடக்கும்.  வெளியூரிலிருந்து யாரேனுமொரு கவுண்டன் ஒரு நல்ல போர்ச் சேவல் கொண்டு வருவான்.  அரண்மனைச் சேவலுக்கும் அதற்கும் சண்டை விட்டுப்  பார்ப்பார்கள்.  அரண்மனைச் சேவல் எதிரியை  நல்ல அடிகள் அடிக்கும் போது, ஜமீந்தாரவர்கள் நிஷ்பஷ்பாதமாக இரு பக்கத்துக் கோழிகளின் தாய், பாட்டி, அக்காள், தங்கை எல்லோரையும் வாய்  குளிர வைது  சந்தோஷம் பாராட்டுவார்.   களத்திலே ஆரவாரமும் கூக்குரலும், நீச பாஷையும் பொறுக்க  முடியாமலிருக்கும்.

"பெரும்பாலும் சண்டை  முடிவிலே அரண்மனைக்  கோழி தான் தோற்றுப்  போவது வழக்கம்.  அங்ஙனம் முடியும் போது வந்த கவுண்டன் தனது வெற்றிச் சேவலை ராமசாமிக் கவுண்டரவர்கள் திருவடியருகே வைத்து சாஷ்டாங்கமாக விழுந்து  கும்பிடுவான்.  இவர் அச்சேவலைப் பெற்றுக்  கொண்டு அவனுக்கு பாகை, உத்தரீயம், மோதிரம், ஏதேனும் சன்மானம் பண்ணி அனுப்பி விடுவார்.   பிறகு பழைய அரண்மனைச் சேவலைத் தள்ளி விட்டு புதிதாக வந்த சேவலைச் 'சமஸ்தான வித்வானாக'  வைப்பார்கள். அடுத்த  சண்டையில்  இது தோற்றுப் போய் மற்றொன்று வரும்.  எத்தனை வீரமுள்ள சேவலாக இருந்தாலும் கவுண்டனூர் அரண்மனை வந்து ஒரு மாதமிருந்தால் பிறகு சண்டைக்குப் பிரயோஜனப்படாது.   ஜமீன் போஷணையிலேயே அந்த
நயமுண்டாகிறது...."

காசியிலிருந்து   எட்டையபுரத்திற்கு  வந்தவுடனேயே, கடையத்தில் விட்டு விட்டு வந்த தன் அருமை மனைவி செல்லம்மாவை எட்டையபுரத்திற்கு அழைத்து வந்து மிகுந்த பொறுப்புடன் குடித்தனம் வைக்கிறார் பாரதியார்.

1897-ம் வருடம்  பாரதிக்கும் செல்லம்மாவுக்கும் திருமணம்.  14 வயது பாரதி ஏழே வயது சிறுமி செல்லம்மாவை மணக்கிறார்.

1898-ல் காசிப் பயணம்.   ஆறு வருடங்கள் காசி வாழ்க்கை.

நடப்பதெல்லாம் நன்றாகவே நடக்கின்றன.  காசியில் கல்விக் கேள்விகள் தேர்ந்து  ஞானம் பெறுவதற்காகவே அமைந்த வாழ்க்கை போலவான காசி வாழ்க்கை பாரதிக்கு பெருமை சேர்ப்பதற்காக அமைகிறது.  மதன் மோகன் மாளவியா, அன்னி பெசண்ட் சந்திப்புகள் எதிர்கால அரசியல் பங்களிப்புக்கு அச்சாரமாகிறது.

ஆறு வருடங்கள் பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்கின்றனர்.

பிற்காலத்தில் 'பாரதியாரின் சரித்திரம்'  என்ற நூலை எழுதிய செல்லம்மா.  "அந்தக் காலத்தில் அவர் 'ஷெல்லி தாசன்'  என்ற புனைப்பெயரில் பத்திரிகைகளுக்கு சில வியாசங்கள் கூட எழுதியதுண்டு.." என்று தன் கணவருடனான எட்டையபுர வாழ்க்கையை நினைவு கொள்கிறார்.  "மன்னருக்கு பத்திரிகைகள், புத்தகங்கள் இவற்றைப் படித்துக் காட்டுவது,  அரசவைக்கு வருகின்ற வித்வான்களுடன்  கலந்துரையாடுவது,  வேதாந்த தமிழ் நூல்களை ஆராய்ச்சி செய்வது-- இவற்றையே தமது அன்றாட அலுவல்களாக பாரதியார் கொண்டிருந்தார்"

அரண்மனையின் அன்றாட சூழ்நிலை ஒத்து வராத எரிச்சலை ஊட்டியதால் மன்னருக்கு பக்குவமாக அதைத் தெரிவித்து விட்டுப் பணிகளிலிருந்து விலகிக் கொள்கிறார் பாரதியார்.

என்றைக்கு ஜமீனை விட்டு பாரதி வெளியேறினாரோ அக்கணமே அவரை மேலான உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்ல வெவ்வேறு அவசர வேலைகள்  அவருக்காகவே காத்திருந்திருந்தன போல ஒவ்வொன்றாக நடக்கின்றன.

நடப்பவைகள் நன்றாக நடக்க வேண்டாமா?..   அதற்கான ஏற்பாடுகள் தாம் இவைகள் என்றும் தெரிகிறது.


(வளரும்)

படங்கள் உதவியோருக்கு நன்றி.           

Monday, January 8, 2018

பாரதியார் கதை --5

                                                                           5


பிரிட்டிஷ்  ஆட்சியின் பிரதிநிதி கர்ஸான் பிரபு வைஸ்ராயாய் இருந்த கால கட்டம் அது.  ஆண்டு 1903.

நாடு பூராவும் ஆங்கில அதிகாரத்திற்கு ஆட்பட்டிருந்த சமஸ்தான  மன்னர்களை தில்லி மாநகருக்கு வரவழைத்து  கர்ஸான்  ஒரு கூட்டம் போட்டார். இந்த மாதிரியான கூட்டங்களை தர்பார் என்று அந்நாளில் அழைப்பார்கள்.
                                                                                                                           
எட்டையபுரம் மகாராஜாவும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அதற்காக தலைநகர் வந்திருந்தவர் கூட்டம் முடிந்ததும்  காசிக்குப் புறப்பட்டு வந்தார்.  காசிக்கு அவர்   வந்த காரணம் பாரதியை  எப்படியாவது தன்னுடன் அழைத்துப் போக வேண்டும் என்பதே.   சமஸ்தானத்தில் பாரதிக்கு ஏதாவது வேலை போட்டுக் கொடுத்து தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் மன்னர் குறியாக இருந்தார்.   அது பற்றி பாரதியிடம் அவர் பேசிப் பார்த்த பொழுது எட்டையபுரம் வர பாரதி ஒப்புக் கொண்டு விட்டார்.  அதில் மன்னருக்கு மிகவும் மகிழ்ச்சி.    தன்னுடன் பாரதியையும் எட்டையபுரம் அழைத்து வந்து விட்டார்.                                                       

'பிரிட்டிஷ் வைஸ்ராயைச் சந்திக்க வந்த ஒரு சமஸ்தான மன்னர் 'சின்னப் பையன்' பாரதியை தன்  சமஸ்தானத்திற்கு  அழைத்துப்  போக வேண்டி காசி வருவதாவது?..    இதெல்லாம் என்ன கட்டுக்கதை'  இந்தப் பகுதியை வாசிக்கும் அன்பர்களுக்கு ஐயம் தோன்றலாம்.   ஆனால் நடந்தது அது தான்.

உண்மையில் சொல்லப் போனால் சமஸ்தானம், மன்னர் என்பதெல்லாம் பெத்தப் பெயர்கள் தாம்.   மன்னர் என்று அழைக்கப்பட்டவர் அந்நாளைய ஜமீன்தாரர்கள்.  அவர்கள் கையகப்பட்ட பகுதியில் ஆங்கில ஆட்சியின் ஆசிர்வாதத்தில் அவர்கள் கோலோச்சி வந்தார்கள்.  அவர்களை குதிரையின்  மேலமர்ந்த வீரர்களாய் தோன்றங்கொள்ளச் செய்து குதிரையின் லகானையோ பிரிட்டிஷ் பேரரசின் இந்தியத் தலைமை தன் கையில் பிடித்திருந்தது.  அவர்கள் சுண்டினால் தான் குதிரை அசையும் என்ற நிலையில் ஜமீன்தாரர்கள்  தங்கள் நிலப்பகுதியில் கோலோச்சி வந்தனர்.

பாரதியார் காலத்து சில எட்டையபுர ஜமீன்தார்களைப் பற்றிப் பார்ப்போம்.

பாரதி பிறந்த பொழுது எட்டையபுர சமஸ்தானத்து ஜமீன்தாரராய் இருந்தவர்
ஜகவீர  ராம குமார எட்டப்ப நாயக்கர்.  இவரின் நம்பிக்கைக்குரியவராய் சின்னசாமி ஐயர் சமஸ்தான பணிகளைச் செய்து வந்தார்.  சமஸ்த்தானப் பணி என்றால்  சின்னசாமி ஐயர் ஒரு பஞ்சாலையை நடத்தி வந்தார்.    அதில் பெருமளவு முதலீடு சமஸ்தானத்தினுடையதாய் இருந்தது.  இந்த ஜமீன்தார் காலமாகும் பொழுது பாரதிக்கு எட்டு வயது.  அதனால் பாரதிக்கு  இந்த ஜமீன்தார் அவ்வளவு அறிமுகம் ஆனவர் இல்லை.

ஜகவீர ராம குமார எட்டப்ப நாயக்கரின்  மகன் தான் ராஜ ஜெகவீர ராம வேங்கடேசுவர எட்டப்ப நாயக்கர்.  இவர் கிட்டத்தட்ட பாரதிக்கு நான்கு வயது மூத்தவர்.  ஓரளவு சமவயதுச் சிறுவர்கள் என்பதினால்  தந்தையின் செல்வாக்கில் சமஸ்தானக்கு அறிமுகமாகியிருந்த  பாரதிக்கு இவருடன் தான் நெருக்கம் அதிகம்.  காசியிலிருந்து பாரதியாரை எட்டையபுரத்திற்கு அழைத்து வந்தவரும் இவரே. 

பிரிட்டிஷார் நாட்டை ஆண்ட காலகட்டத்தில் தேசத்தின் கால் வாசி நிலப்பரப்பு  இப்படியான சமஸ்தானங்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.  சமஸ்தானம் என்பது பிரிட்டிஷாரின் ஆட்சி நலனைக் காப்பாற்றும் ஓர் அமைப்பு.  அவ்வளவு தான்.   இயல்பாகவே நிலவுடமை சமுதாயத்தின் எச்சங்களைப் பண்புகளாய்க் கொண்டிருக்கும் ஜமீந்தார் வர்க்கத்தை நவீன ஆங்கிலோ- இந்திய சிந்தனைகளைக் கொண்ட  பிரிட்டிஷ் ஆட்சிக்கு ராஜ விசுவாசமாக இருப்பவர்களாக மாற்ற வேண்டும் என்ற முயற்சிகளும் மேற்கொள்ளப்  பட்டன.   யாராவது சமஸ்தான ஜமீன்தார் இறக்கும் பொழுது அவர் வாரிசு வயசுக்கு வராத மைனராக இருப்பின், அவர்களுக்கு சிறுவயதிலிருந்தே கல்வி போதிக்கும் பொறுப்பையும் மிக கவனமாக பிரிட்டிஷ் அரசாங்கம்
ஏற்றுக்  கொண்டது.
                                                                                                                                         
உதாரணத்திற்கு நம் பாரதியாருக்கு சிறார் பருவத்திலிருந்தே பழக்கமான எட்டையபுர சின்ன ஜமீந்தார் வேங்கடேசுவர எட்டப்ப நாயக்கருக்கு பன்னிரண்டு வயதாகும் பொழுது அவர் தந்தை ராம குமார எட்டப்ப நாயக்கர் காலமாகி விட்டார்.  அதனால் இளம் ஜமீந்தார் எட்டையபுரத்திலும் சென்னை நியூவிங்டன் கல்லூரியிலும் கல்வி கற்றார்.   கலாசாலையில் கற்கும் கல்வி பாதி, வெளியிடங்களுக்கு சுற்றுப் பயணம் போல அழைத்துச் சென்று பயிற்றுவிக்கும் கல்வி பாதி என்பது போல இளம் ஜமீன்தார் வேங்கடேசுவரனை வங்காள மகாணங்களுக்கும் கொழும்புவிற்கும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.   ஆள வேண்டிய ஜமீன்தார்கள் கல்வி கற்கும் சூழ்நிலைகளில்  திவான் என்ற பொறுப்பிலிருந்த அதிகாரிகள் சமஸ்தான நிர்வாகத்தைக் கவனித்து வந்தனர்.

சின்னசாமி ஐயர் வாழ்க்கையில் நொடித்துப் போய் விக்கித்து நின்ற பொழுது  இதே வெங்கடேசுவரன் ஜமீந்தாருக்கு தமது கல்வித் தொடர்ச்சிக்காக பொருள் வேண்டி பாரதியார் சீட்டுக் கவிதை எழுதியது தான் காலத்தின் கோலம்.

சீட்டுக்கவிதையை 'தென்னிளசை நன்னகரிற் சிங்கம் வெங்கடேசு ரெட்ட கன்னன சுமூக சமூகம்'  என்று விளித்து ஆரம்பித்து,  கவிதைக்குக்  கீழே 'இளசை சுப்பிரமணியன்' என்று அட்டகாசமாகக் கையெழுத்திட்டு சமஸ்தானத்திற்கு அனுப்புகிறார் பாரதியார்.

இதோ அந்த சீட்டுக் கவிதை:

கைப்பொருள்  அற்றான் கற்பது எவ்வகை?

பொருளால் அன்றிக் கல்வியும் வரவில;

கல்வியால் அன்றிப் பொருளும் வரவில;

முதற்கண் கல்வியே பயிறல் முறைமையாம்

அதற்கு பொருள்இலை ஆதலின் அடியேன்

வருந்தியே நின்பால் வந்து அடைந்தனன்

மாந்தர்ப் புரத்தல் வேந்தர்தம் திருஅருட்கு

இலக்கியம்  ஆதலின் எளியேற்கு இந்நாள்

அரும்பொருள்  உதவிநீ அனைத்தும் அருள்வையால்...



'வேங்கடேசு ரெட்ட கன்னன சுமூக சமூகத்தின்' பார்வைக்கு சீட்டுக் கவிதை போய்ச் சேர்ந்ததோ என்னவோ தெரியவில்லை.   சமஸ்தானத்திலிருந்து பாரதிக்கு  அவரது கல்விக்கான எந்தப் பொருளுதவியும்  கிடைக்கவில்லை.

ஒருகால் இளம் ஜமீன்தார்  பார்வைக்கு இந்த சீட்டுக்கவிதை போய்ச் சேரவே இல்லையோ, தெரியவில்லை.  இல்லை,  பின்னால்   இது பற்றித் தெரிய வந்து தான்  தில்லி தர்பாருக்குப் போனவர் திரும்பும் பொழுது காசிக்கு வந்து  பாரதிக்கு தன் சொந்த சமஸ்தானத்தில் ஏதாவது  செய்தே ஆக வேண்டும் என்ற உருத்தலில்  பாரதியை கையோடு எட்டையபுரத்திற்கு தன்னுடன் அழைத்து வந்தாரோ, தெரியவில்லை!..



=======================================================================

எட்டையபுர சமஸ்தானம்  கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் புகலிடமாகத் திகழ்ந்தது என்பது வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து ஓரளவு நமக்குத் தெரிய வருகிறது.   உமறுப்புலவர்,  கடிகை முத்துப் புலவர்,  முத்துசாமி தீஷிதர்,  சுப்பராம தீஷிதர் என்று கலைஞர்களுக்கு ஆதரவு நல்கிய சமஸ்தானம் அது.

=======================================================================


(வளரும்)


படங்கள் அளித்தவர்களுக்கு நன்றி.

Wednesday, January 3, 2018

பாரதியார் கதை ---4

                                                                          4


து  1899-ம் ஆண்டு.    சரஸ்வதி  பூஜை  நாள்.

காசி சிவ மடத்தில் சரஸ்வதி பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சிவ மடத்து சரஸ்வதி பூஜையில் பலமொழி வித்தகர்கள் பலர் கலந்து கொண்டனர்.    பூஜைக்கு வந்தவர்கள் சீதாராம் சாஸ்திரி தலைமையில்
சிறிய  அளவில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடும் செய்திருந்தனர்.

கிருஷ்ணன் சிவனின் தாத்தாவுக்கு  மடத்து  சரஸ்வதி பூஜையில் கலந்து கொள்ளும்  அறிஞர்கள் மத்தியில் 17 வயது இளம் பாரதியை சிறப்பாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆசை இருந்தது.   அதனால் அவர் சரஸ்வதி பூஜைக்கு கூடிய கூட்டத்தில் மத்தியில் திடுதிப்பென்று, "பாரதி! கல்விக் கடவுள் சரஸ்வதி பற்றி ஏதாவது நாலு வார்த்தை பேசப்பா.  இங்கு பல மொழிக்காரர்கள் வந்திருக்கிறார்கள்.  உனக்குத் தெரிந்த ரெண்டு மூணு பாஷைலேயும் நீ பேசலாம்" என்று சொல்லி பாரதியை கூட்டத்தின் மையப் பகுதிக்கு அழைத்துப்  பேச வைத்திருக்கிறார்.

அந்தக் கூட்டத்தில் பாரதி தமிழிலும் இந்தியிலும் பேசியிருக்கிறார்.
காலையில் சிவ மட கடவுளர் சன்னிதானத்து படிகளில் அமர்ந்து தான்
இயற்றிய  'வெள்ளைத் தாமரை பூவிலிருப்பாள்; வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்..' கவிதையைப் பாடியிருக்கிறார். 

கூட்டம் அமைதியாக அவர் பாடலைக் கேட்டிருக்கிறது.  பாடி முடித்ததும்
இந்தி மொழியில் அந்தப்  பாடலுக்கு பாரதி விளக்கமும் கொடுத்திருக்கிறார்.
மொத்தக் கூட்டமும் அவர் உரையைக் கேட்டு அசந்து  போயிருக்கிறது.
குறிப்பாக,

"வந்த னம் இவட் கேசெய்வ தென்றால்
வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்!
மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்த னத்தை மலரி டுவோர்
சாத்திரம் இவள் பூசனை யன்றாம்..."    என்ற வரிகள்!

அந்த வயதில் அத்தனை அறிஞர்கள் மத்தியில் இப்படியான கருத்துக்களைப் பதிவதற்கு அந்த பாரதிக்குத் தான் எவ்வளவு நெஞ்சத் துணிவும்,

"வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி;
நாடு முற்றிலும் உள்ளவ வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி"

---- என்று எது உண்மையான சரஸ்வதி
தேவிக்கான பூசனைக்கான அர்த்தம்
என்று  சொன்ன தீர்க்க தரிசனமும்
அவருக்கு இருந்திருக்கும் என்று நினைத்து நினைத்து அந்த இளம் வயது  பாரதியின்
மேல் பெரும் மதிப்பு  கூடுகிறது.


பாரதி பேசப்பேச அங்கு கூடியிருந்த மக்கள் தங்கள் மகிழ்ச்சியையும் பாரதியின் புரட்சிகர எண்ணங்களை புரிந்து கொண்டதான வெளிப்பாடையும் தம் கரவொலியால் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

கூட்டத்தினருக்கு ஒரு சின்னஞ்சிறு சந்தேகம்.

".... அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்           

நிதி மி குத்தவர் பொற்குவை தாரீர்!
நிதிகு  றைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு  மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!----"

என்ற வார்த்தைகளில் தெளிவு வேண்டி, "எதற்காக இப்படிக் குறிப்பிடுகிறாய்?" என்று கேட்டார்களாம்.

உடனே எந்தக் காரணத்திற்காக அந்த வரிகள் இந்தப்  பாடலில் தம் மனசில் உதித்ததோ அந்தக் காரணத்தைக் கூட்டத்தினருக்குச் சொல்கிறார், பாரதி.

காசி இந்து பல்கலைக்கழகக் கனவிற்காக மதன் மோகன் மாளவியா என்னும் ஏழை மகான் செய்கின்ற அரும் பணிகளை விவரிக்கிறார்.  பாரதி எடுத்துச் சொல்லச் சொல்ல மாளவியாவின்  அரும் பணிகளுக்காக தம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய அந்த கூட்டத்தினரும்  ஒருமித்த முடிவுகள் எடுக்கின்றனர்.

மாளவியாவை நேரில் சந்தித்த பொழுது இந்து பல்கலைக் கழக நிர்மாணத்திற்காக தம் சிந்தனையில்  பூத்தக்  கருத்துக்களை அவரிடம் எடுத்துரைக்கிறார் பாரதி.

'பல்கலை கட்டிட நிர்மாண்த்தில் இந்து சிற்பக் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து சர்வகலாசாலையை வடிவமைக்க வேண்டும்'  என்று பாரதியார் மாளவியாவைக் கேட்டுக் கொள்கிறார்.   'கற்கும் கல்வியில் காலத்திற்கேற்பவான நவீனத்துவம் இருக்கட்டும்;  ஆனால்  கலாசாலைக்கான கட்டிடக் கலை சுதேசித்தன்மை மிகுந்து இருக்க வேண்டும்'  என்று  சொல்லி மாளவியாவின் மனத்தில் படியும் படியாக அதற்கான காரணங்களை விளக்குகிறார்.  'பகுதி பகுதியாகக் கட்டப்படும் கட்டிடத்தின் உச்சியில் கோபுர வடிவம் அதன் மேல் சிகரங்கள் என்பதான இந்திய கலையழகைக்  கொண்டிருக்க வேண்டும்.

கலாசாலைக் கட்டிட அமைப்பைப் பார்த்தாலே நம் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு  இவையெல்லாம் என்ன என்பதனை அந்த கட்டிட வடிவமைப்புகளே சொல்வதாக இருக்க வேண்டும்.    தமிழ் நாட்டு சிற்பக்கலை வல்லுனர்கள் இப்படியான கட்டிடங்களை வடிவமைப்பதில் கைதேர்ந்தவர்கள்.    ரவீந்தர நாத் தாகூரின் சகோதரர் அபநீந்தரநாத் தாகூர் கூட சமீபத்தில் தமிழ்நாட்டு ஸ்தபதிகளைப் பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார்.
அவர்களிடம் இந்தக் கலாசாலைக் கட்டிட அமைப்பு வேலைகளைக் கொடுத்தால் சிறப்பாகச் செய்து முடிப்பார்கள்.." என்று தமிழ்நாட்டு சிற்பக்கலைஞர்களை பரிந்துரைத்துமிருக்கிறார்.




மாளவியாரும் பாரதியார் சொன்னதற்கு முக்கியத்துவம் கொடுத்து மிகுந்த
கவனத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.  அதற்கு சாட்சி இன்றும் காசி இந்து சர்வகாலாசலையை பார்க்கும் எவரும் நம் தேசத்துப் பண்பாடும், நாகரீகமும்,  சிற்பகலையின் மேன்மையும் எவ்வளவு அழகாக செங்கல், சிமிண்ட் கலவை கொண்டு வடித்தெடுக்கப்பட்டிருக்கிறது என்பதனை உணரலாம்.


பாரதி இளமையில் காசியில் வாழ்ந்த காலம் ஆறே ஆண்டுக் காலம்.   அவன் சிந்தையில் விடுதலை இயக்கமும்,  சுதேச எண்ணங்களும் தடம் பதித்தது இந்தக் காலத்தில் தான்.

நடை பாவனைகளில், உடையில், உள்ள வளர்ச்சியில்,
சமூகம் குறித்த  ஞானத்தில்,  வாசிப்பில்,  பிற மொழிப் புலமையில்  பாரதி தேர்ந்து சிறந்ததற்கு அச்சாரம் போட்ட காலமும் இது தான்.


வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வாய்க்கிறது.  இதற்காகத்தானோ இது என்று எதையும் எதோடும் முடிச்சுப் போடவும் முடியாவிட்டாலும் நடந்தவை நடந்த பிறகு நினைத்து இதற்காகத் தானோ இது என்று ஓரளவு அனுமானிக்க முடிகிறது.  அப்படி அனுமானிப்பதும் நடந்தவைகளின் அடிப்படையிலான நமது  புரிதல் என்று புரிந்து கொள்வது தான் இவற்றில் இருக்கிற விசேஷம்.


மஹாகவி பாரதியாரையே எடுத்துக் கொள்ளுங்களேன்.

அவரது ஐந்து வயதில் தாய் மரணம்.   அவருக்கு ஏழு வயதாகும் பொழுது தந்தை மறுமணம்.   14  வயதில் 7 வயது சிறுமியுடன் திருமணம்.  திருமணமான அடுத்த ஆண்டே தந்தை மரணம்.  15 வயதில் தந்தையின் இறப்பு காரியங்களுக்கு வந்த அத்தை அழைத்து காசிப்  பயணம்.
காசியில் பல்மொழிகளைக் கற்கின்ற வாய்ப்பு.  அந்த மொழிப்புலமையில் விளைந்த ஞானம்;  அன்னிபெசண்ட்,  மாளவியா போன்றோருடனான அறிமுகங்கள்,  மொழி அறிஞர்கள் மத்தியில் தமிழ் மொழிக்கான ஏற்றத்தைப் புலப்படுத்தியது என்று நிறையச் சொல்லலாம்.  மொத்தத்தில் காசியில் பாரதியாருக்கு அவரது இளமைப்பருவத்தில் ஏற்பட்ட அனுபவங்கள், தொடர்புகள் எல்லாம்  பிற்காலத்து பாரதியாரை உருவாக்குவதற்கு பெரும் பங்களிப்பைத் தந்திருக்கின்றன என்பது மட்டும் நிச்சயம்.



(தொடரும்)


படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.


Related Posts with Thumbnails