இருப்பத்தாறு அத்தியாயங்கள் கொண்ட ஒரு பத்திரிகை தொடர்கதையை 'ஒரு வரி' கதையா நினைத்து ஆரம்பிக்கிறது ரொம்ப சுலபம். நாலாவது அத்தியாயம் வரும் பொழுதே நாலு வேறு வேறு கதையா உருமாற அது முயற்சிக்கும். அந்த முயற்சியை புறந்தள்ளி கற்பனையின் பல நோக்குப் பார்வையைக் கட்டு ஆண்டு ஒரே பாதையில் மொத்த தொடர்கதையையும் ஒரே நேர்கோட்டில் இழுத்துச் சென்று நிறைவு செய்வது என்பது ஆரம்ப சுலபத்தை விட கஷ்டமான காரியம்.
இந்த இலட்சணத்தில் ஆயிரக்கணக்கான கிளைக் கதைகள் நெரிசலான நெய்வாகக் கொண்ட முழு மகாபாரதத்தை சுவை குன்றாமல் சொந்த எழுது முறை சாகசத்தில் முக்கி எடுத்து உதறி உலர்த்துவது என்பது எமகாதக வேலை. துணிச்சலாக அந்த வேலையை கையிலெடுத்திருக்கிறார் ஜெயமோகன்.
இன்றைய தலைமுறையின் ஆகச்சிறந்த எழுத்தாளர் ஜெயமோகனுக்கு அறிமுகம் தேவை இல்லை. என்ன தான் சிறப்பாக எழுதினாலும் அவர் சினிமா மூலமாக பிரபலமானால் தான் வெகுஜன பார்வையில் பதிவார் எங்கிற தமிழகத்தின் தலைவிதிக்கு ஜெயமோகனும் தப்பவில்லை. இது வரை வெளிவந்த 'நான் கடவுள்' 'அங்காடித்தெரு', 'நீர்ப்பறவை', 'கடல்' தாண்டி வசந்தபாலனின் 'காவியத்தலைவன்', கமலின் 'பாபநாசம்' படங்களிலும் இவரின் பங்களிப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இந்திய பண்பாட்டுத் தளத்தில் ஊறித் திளைத்த மகாபாரதம் 'வெண்முரசு' என் கிற பதாகையின் கீழ் ஜெயமோகனின் இணைய தள பதிவுகளில் மிடுக்காக உலா வந்து கொண்டிருக்கிறது. சந்தேகமில்லாமல் இது ஒரு அசுர முயற்சி. ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எடுத்துக் கொண்ட இந்த மகா முயற்சி ஒரு பத்து வருடப் பிரொஜக்ட் என்கிறார் ஜெயமோகன்.
வருடத்திற்கு குறைந்தது ஐந்து பாகங்கள். ஆக பத்து வருடத்திற்கு ஐம்பது பாகங்கள். ஒவ்வொரு பாகமும் ஆயிரம் ப க்கங்களுக்கு குறையாது என்கிற பொழுது ஐம்பது பாகங்களும் ஐம்பதாயிரம் பக்கங்கள். ஐம்பதாயிரம் பக்கங்களா என்று மலைக்க வேண்டாம். ஜெயமோகனின் எழுதும் வேகம்
அறிந்தவர்களுக்கு இதெல்லாம் ஜெயமோகனுக்கு ஜூஜூபி என்று தெரியும். ஆனால் அந்த ஐம்பதாயிரம் பக்கங்களையும் மூலத்திலிருந்து வழுவாமல் பாரதம் முழுதும் அதன் பரந்து பட்ட குக்கிராமபகுதிகளிலெலாம் செல்வாக்கு பெற்றிருக்கிற எளிய மக்கள் நேசிக்கிற அந்த மகாபாரதத்தின் செறிவை குலைத்து விடாமல் ஜெயமோகன் எப்படித் தரப்போகிறார் என்பது தான் மிலியன் டாலர் கேள்வி.
பி.கே. பாலகிருஷ்ணனோட 'இனி நான் உறங்கட்டும்' (இனி ஞான் உறங்ஙட்டே?') மகாபாரதத்து கர்ணனை முக்கிய பாத்திரமாகக் கொண்ட நாவல். எம்.டி.வாசுதேவன் நாயரோட 'இரண்டாம் இடம்', ('இரண்டாமூழம்') மகாபாரதத்து பீமனை மையமாகக் கொண்டது. எம்.வி.வெங்கட்ராமின் 'நித்ய கன்னி'யோ மகாபாரத்தின் துணைப்பாத்திரமான மாதவியின் அவலத்தை மனம் இரங்கச் சொல்லி பதைபதைக்க வைப்பது. பிரபல கன்னட நாவலாசிரியர் எஸ்.எல். பைரப்பாவின் 'பருவம்', மனம் கவர்ந்த மராட்டிய எழுத்து மேதை காண்டேகரின் 'யயாதி' என்று மகாபாரத கதை மாந்தர்களை நடமாட விட்ட கதைக்களன்களை நாம் அறிவோம். மகாபாரத்தை நிலைக் களனாகக் கொண்டு கிட்டத்தட்ட முன்னூறு நாவல்களுக்கு மேல் எழுதப் பட்டிருப்பதாக விஷயம் தெரிந்தவர்கள் கணக்கு சொல்கிறார்கள்.
ஆனால் இப்பொழுது ஜெயமோகன் மொத்த மகாபாரத்தையும் தன் எழுத்தில் எழுதப் புகுந்திருக்கும் முயற்சி இதற்கு முந்தைய முயற்சிகளிலிருந்து வேறுபட்டது. தனது 'வெண்முரசு' புதினத் தொடரில், மாகாபாரத்தின் ஒவ்வொரு பிரதான பாத்திரத்தையும் ஒவ்வொரு பாகத்திலும் அந்தப் பாத்திரத்தின் தனித்தன்மையை தூக்கி நிறுத்திக் காட்டி ஒட்டு மொத்த மகாபாரதத்தை நிறைவு செய்யப் போகிறார் என்பது அசகாய முயற்சி தான். மகாபாரத வரலாற்று நாயகர்களின் வரிசை அவரவர் சிறப்பியல்புகளால் எழுதுபவனின் எண்ணத்தில் ஓங்கி நிற்க எழுதுபவன் எழுதும் கதைக்கான பிரிவுகளின் எண்ணிக்கையைக் கூட்டவும் செய்யலாம்.. 'இருபத்து நான்கு மணி நேரமும் இவர் எழுதிக்கொண்டே தான் இருப்பாரா' என்று நாம் நினைத்து அதிசயிக்கத் தக்க அளவில் எழுதி சாதித்திருக்கும் ஜெயமோகனுக்கு எல்லாமே சாத்தியம் தான். இதுவே இவரின் பலமும் கூட.
தனது www.jeyamohan.in தளத்தில் நாள் தோறும் ஒரு அத்தியாயம் என்று ஜெயமோகன் மகாபாரதத்தை எழுதிக் கொண்டிருக்கிறார். இப்பொழுது வெளிவந்து கொண்டிருப்பது ஐந்தாம் பாகம். 'பிரயாகை' என்னும் தலைப்பு கொண்டது. 'முதற்கனல்', 'மழைப்பாடல்', 'வண்ணக்கடல்' 'நீலம்' என்று நான்கு பாகங்கள் எழுதப்பெற்று தனித்தனியாக புத்தகங்களாகவும் வெளிவந்து விட்டன. அவற்றை செம்பதிப்புகளாக நற்றிணை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. (முகவரி: 6/84, மல்லன் பொன்னப்பன் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5. www.natrinaibooks.com -லில் ஆன்லைனிலும் வாங்கிக் கொள்ளலாமாம்.)
ஜெயமோகன் தளத்திற்குப் போனால் ஏக பிரமிப்பு தான். மகாபாரத வாசிப்பின் தொடர்புகளாக 'வெண்முரசு விவாதங்கள்' 'வெண்முரசு வாசகர் விவாத குழுமம்', 'மகாபாரத அரசியல் பின்னணி' என்று தனித்தனிப் பகுதிகளாக மகாபாரத கொண்டாட்டம் களை கட்டியிருக்கிறது.
"மகாபாரத்துல இடம் பெற்ற எல்லோருக்குமே ஒரு கதை இருக்கு.. அவங்களோட செயல்களுக்கு ஒரு நீதி, நியாயம் இருக்கு. இதை எல்லாம் விரிச்சு எழுத நினைச்சேன்" என்கிறார் ஜெயமோகன். "அப்ப நடந்தது தானேன்னு எதையும் ஒதுக்க முடியாது. இன்றைய வாழ்க்கைக்கான தரிசனங்கள் அதுலே அடங்கியிருக்கு... பெரிய கேரக்டரோ, சின்ன கதாபாத்திரமோ, மகாபாரதத்துலே இடம் பெற்ற எல்லோருக்குமே ஒரு கதை இருக்கு.." என்று ஜெமோ சொல்லிக்கொண்டே வருகையில் கதையைத் தாண்டிய அந்த இதிகாச வரலாற்று நிகழ்வின் ஜீவன் நமக்குப் புலப்படுகிறது.
அந்த வெளிச்சக் கீற்றின் ஒளிச்சுடரில் அஸ்தினாபுரமும், யுத்தபூமியான குருஷேத்திரமும் நிழலாடுகின்றன. வாழ்க்கைக்கான உபதேசமான கிருஷ்ண பரமாத்மாவின் பகவத் கீதையின் நிலைக்களனான இதிகாசம். இது வெறும் கதையன்று, இந்த புண்ணிய பூமியில் நிகழ்வுற்ற வரலாற்று நிகழ்வன்றோ?' என்று புரண்டு புரண்டு நம்மில் யோசனையாகிறது. வரலாறு என்றவுடனே என்னதான் ஒரு வரலாற்று நிகழ்வை கதைங்கற பாண்டத்தில் அடைத்து தந்தாலும் நிகழ்வுற்ற நிகழ்வுகளான அந்த வரலாற்று நிகழ்வுகளுக்குக் குந்தகம் விளையாமல் கதையின் போக்கும் அந்தக் கதைக்கான சொல்லாடல்களும் அமைய வேண்டுமே என்கிற பொறுப்பும் கூடுகிறது,.
ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று உண்மைகள் கூட எப்படியெல்லாம் மாற்றியும் திருத்தியும் புதினங்களாகியிருக்கின்றன என்கிற நிதர்சனங்கள் நம்மை அயர்வுக்குள்ளாக்குகின்றன. தமிழிலோ கேட்கவே வேண்டாம். எதற்காக இப்படித் திரித்து எழுத வேண்டிய அவசியம் நேரிட்டது என்று அந்த வரலாற்று உண்மைகளை அறிந்திருக்கும் வாசகன் எரிச்சலோ அயர்ச்சியோ கொள்ளும் அளவுக்கு திரிபுகளின் அரங்கேற்றம் தமிழில் நிகழ்ந்திருக்கின்றன. எந்த எழுத்தும் வெகுதிரள் பார்வையில் பட வேண்டும் என்றாலே அவை பத்திரிகைகளின் மூலமாகத் தான் நடக்க வேண்டும் என்கிற சாபத்தீடு வேறே. பத்திரிகை விற்பனைக்கான போட்டுக் கொள்ளும் வேஷங்களுக்கு ஏற்ப பத்திரிகைகளின் உள்ளடக்கமும் இருந்தாக வேண்டிய கட்டாயங்களுக்கு எழுதுபவனும் தன் எழுத்தை அந்த சட்டத்திற்குள் உள்ளடக்க வேண்டிய நிர்பந்தமும் இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது. இந்த நிர்பந்த வேலிகளுக்குள் தன்னை உட்படுத்திக் கொள்ளாமல் ஜெயமோகன் இந்த மகாபாரத வெளியீடுகளுக்கு களனான தனது வலைத்தளத்தைத் தேர்ந்தெடுத்திருப்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழின் எதிர்கால எழுத்தின் போக்குகளை அறுதியிட்டு நிச்சயிக்கப் போகிற வலைத்தள எழுத்துக்களின் செம்மாந்த வளர்ச்சிக்கும் அதன் சிறப்பிற்கும் தகுதி சேர்க்கக்கூடிய ஜெயமோகனின் அயராத சாதனைகளை இருகரம் நீட்டி ஆரத்தழுவி வரவேற்க கடமைப்பட்டுள்ளோம். ஜெயமோகனின் வெற்றி தமிழ் வலையுகத்தின் வெற்றியாகப் பரிமளித்திருக்கிறது என்கிற உண்மை எல்லாவற்றிற்கும் ஊடேயே பதிந்து போயிருக்கிற நிகழ்வுலக சரிதமாகும்.
'வெண்முரசு' உலாவை மிகச் சிறபாக உலவ விட வேண்டுமென்ற அக்கறையில் தனது அன்றாட வெண்முரசுக்கான பதிவுகளை வெகு நேர்த்தியாக ஜெயமோகன் அமைத்திருக்கும் பாங்கு வியக்க வைக்கிறது.மிகச் சிறந்த ஓவியரான திரு.ஷண்முகவேல் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் சித்திரம் வரைந்து வருவது கதைக்கான வெளியீட்டு அழகைக் கூட்டுகிறது.
"இப்படி சித்திரம் வரைந்து தருவதற்காக ஷண்முகவேல் ஒரு பைசா கூட வாங்குவதில்லை. அதனால புத்தக விற்பனையில் வரும் ராயல்டி தொகையை அப்படியே அவருக்கு வழங்க இருக்கிறோம். எனக்கு மகாபாரதத்தை எழுதற திருப்தி போதும்" என்று வெளிப்படையாய் ஜெயமோகன் சொல்லியிருப்பது ஒரு சத்திய எழுத்தாளனின் தார்மீக வெளிப்பாடாய் மனசைப் புளகிக்கச் செய்கிறது.
வில்லிப்புத்தூராரின் 'வில்லிபாரதம்' பக்தியை மையமாகக் கொண்ட கவிதை ஊற்று. ராஜாஜியின் 'வியாசர் விருந்தோ' குழந்தைகளையும் கவரும் விதத்தில் மிக எளிமையாக எழுதப்பட்ட ஒன்று. இந்த மாதிரி தமிழில் மகாபாரதம் அறிமுகமான களத்தைத் தாண்டி ஜெயமோகனின் வெண்முரசு வேறு வேறு எல்லைகளைப் பற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பு கூடுகிறது. இந்திய தத்துவ ஞான மரபில் மிகுந்த பரிச்சயம் கொண்டவர் ஜெமோ. இதுவே தனிச் சிறப்பாக ஜெயமோகனை மற்றவர்களிடமிருந்து பிரித்த தனி அடையாளமாகத் திகழ்கிறது. இந்த 'வெண்முரசிலும் தனது தனித்த முத்திரையை ஜெயமோகன் பதித்து மற்ற பகுதி மகாபாரதங்களிலிருந்து விலகிய ஓர் அடையாளத்தை தமிழுக்கான பதிப்பில் பதிப்பார் என்கிற எதிர்பார்ப்பு உற்சாகம் ஊட்டுகிறது.
ஜெயமோகன் என்கிற ஒரு தமிழ் எழுத்தாளரின் தனிப்பட்ட உன்னத சிறப்புகள் மேலோங்கி, அவர் தன் எழுத்துக்களில் வடித்துத் தருகின்ற ஒரு மாபெரும் நூலுக்கான சிறப்பாகவும் 'வெண்முரசு' மிளிரப் போகிறது. நாம் வாழும் காலத்தின் ஆகச் சிறந்த ஒரு எழுத்தாளரின் பெருமையெல்லாம் நம் மொழிக்கான பெருமையாய் மலரப் போவதின் சாத்தியங்கள் நம் சந்தோஷத்தைக் கூட்டுகிறது.
உலகின் இயற்கை சக்திகள் அத்தனையும் உங்களுக்குத் துணையாக இருக்கட்டும்!.. உங்கள் அரிய பணி சீரும் சிறப்பும் கொண்டு மிளிரட்டும்.
இது தமிழின் பெருமை; தமிழனின் பெருமை. வாழ்த்துக்கள், ஜெயமோகன்!
குறிப்பு: படம் உதவிய நண்பருக்கு நன்றி.