மின் நூல்

Saturday, January 28, 2012

பார்வை (பகுதி-23)

                     அத்தியாயம்--23

ரு வினாடி தான்.  இத்தனை நேரம் படித்த அந்த 'பார்வை' நெடுங்கதை, காட்சி காட்சியாக மனத்தில் பதிந்துப் படர,  லஷ்மணன் இதழ்க் கடையில் புன்முறுவல் தவழ்ந்தது.

"எதற்காக இந்த முறுவலோ?" என்றாள் ஊர்மிளா.

"ஒரு அப்ரிசியேஷன் தான்.  அந்தக் கதையை மனசில் ஓட்டிப் பார்த்தப்போ சில பகுதிகள் மறக்க முடியாம நினைவுக்கு வந்தது.. வார்த்தைக்கு கொஞ்சமும் வேலையில்லாம, மனசுக்குள்ளேயே அந்த பாராட்டு மலர்ந்தது, இல்லையா?.. அப்படி எனக்குள்ளேயே ரசிச்சது தான் என்னை அறியாமலேயே புன்முறுவலா வெளிப்பட்டிருக்கு போல இருக்கு. அது சரி, ஒண்ணு கேக்கறேன். மறைக்காம சொல்லணும். இந்தக் கதைலே உனக்கு ரொம்ப பிடிச்ச அம்சம் எதுன்னு நீ நினைக்கறே?" என்று குறுகுறுப்புடன் அவளைப் பார்த்தபடி லஷ்மணன் கேட்டான். அந்தக் கேள்விக்கான அவளது பதிலை ஒருவித எதிர்பார்ப்புடன் அவன் விரும்புகிறான் என்பதை மறைக்க முடியாமல் அவன் முகம் வெளிப்படுத்தியது..

"ரொம்ப பிடிச்சதா?.." என்று ஒரு வினாடி யோசித்தாள் ஊர்மிளா. இருந்தாலும் உடனடியா அவன் கேட்டதற்கு பதில் சொல்வதைத் தவிர்த்து, "அதை அப்புறமாச் சொல்றேனே!...  அதுக்கு முன்னாடி இந்தக் கதைலே என்னைக் கவர்ந்த ஒண்ணைச் சொல்லியே ஆகணும்"ன்னு அதை அவனிடம் உடனே சொல்றத்துக்கு அவசரப்படுகிற தோரணையில் ஊர்மிளா பரபரத்தாள்.

'அவளுக்குத் தான் நினைக்கிறதை உடனே சொல்லியாகணும்.  அப்படிச் சொல்லலேன்னா,   அது பற்றிச் சொல்ல வந்தது அவளுக்கு மறந்து    போய்விடும்'ங்கறதைத் தெரிந்து கொண்டே, அப்படியான ஒரு குறைபாட்டை தவிர்க்க அவளுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்கிற உத்தேசத்தில், "ஒரு விஷயம் நம்மைக் கவர்வதால் தானே அது பிடிச்சுப் போறது? அப்படி அந்த விஷயம் நம்மைக் கவர்வதும், அதனாலேயே அது பிடிச்சுப் போறத்துக்கும் வித்தியாசம் இருக்குன்னு நெனைக்கறே?.." என்று லஷ்மணன் தெரியாது மாதிரிக் கேட்டான்.

அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று ஊர்மிளா ஒரு வினாடி யோசித்தாள். கவர்வதற்கும், பிடிச்சுப் போறதுக்கும் இருக்கும் நூலிழை வித்தியாசத்தை அவள் உணர்ந்தாள். இருந்தாலும் இந்த சொல் ஆராய்ச்சியில் இப்பொழுது இறங்கினால், தான் சொல்லவந்தது வேறு திசையில் போய்விடுமே என்கிற கவலையில் "நான் சொல்ல வந்தது என்னன்னா.." என்று இழுத்தாள்.

"சரி. சொல்லு.." என்று திடுதிப்பென்று லஷ்மணன் வழிவிடுவான் என்று ஊர்மிளா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அந்த எதிர்ப்பார்பின்மையின் ஊடேயே கொஞ்ச நேரத்திற்கு முன்னால் அவன் தன்னிடம் என்ன கேட்டான் என்பதை மனத்தில் நினைவு படுத்திக் கொண்டு அதை அவனிடமே நிச்சயப்படுத்திக் கொள்கிற தோரணையில், "இந்தக் கதையில் எனக்கு ரொம்ப பிடிச்ச அம்சத்தைத் தானே கேட்டீங்க?"என்று அவனிடமே கேட்கற மாதிரி கேட்டாள்.

"ஆமாம்.." என்றான் அவன்.

"ஆரம்பத்திலேந்து கடைசி வரை இந்தக் கதையை ரெண்டு தடவை படிச்சிட்டேன்.  அந்தப் பார்வை பறிபோனவருக்கு பெயர்ன்னு ஒண்ணைக் கொடுக்காமலேயே கடைசிவரை எழுதினவர் சமாளிச்சிருக்கிறார் இல்லையா, அதான் என்னை ரொம்ப கவர்ந்தது. இதைச் செக் பண்ணறத்துக்காகவே ரெண்டாம் தடவையும் இந்தக் கதையைப் படிச்சேன்னா, பாத்துக்கோங்க"

பகபகவென்று சிரித்தான் லஷ்மணன்."என்ன சொல்றே? பேர்லே அப்படி என்ன இருக்கு?.. பேர்ன்னு ஒண்ணை அவருக்கு வைக்காதது, உன்னைக் கவர்ந்ததா?..  நீ என்ன சொல்ல வர்றேன்னு புரியலையே?.."

"எஸ். புரியும்படியா சொல்றேன்.  அந்தப் பார்வையற்றவரோட நினைவிலேயே இந்தக் கதை முழுக்கச் சொல்லப்படறதாலே,  அவருக்குன்னு ஒரு பெயரை இட்டிருந்தால், எழுதறவருக்கு ரொம்ப சுலபமாப் போயிருக்கும்.  மற்றவர்கள் அவரை விளிக்கற நேரத்திலெல்லாம், இவர் பெயரைச் சொல்லிக் கூப்பிடுகிற மாதிரிச் செய்திருந்தால், எழுதவருக்கு ஈஸி.  ஆனா, தெரிஞ்சிண்டே அந்த ஈஸியைத் தவிர்த்து, கடைசி வரை அவருக்குன்னு பேர் ஒண்ணைக் கொடுக்காம, ஏதோ அப்படித்தான் எழுதணும்ங்கற ஒரு சவாலை ஏத்திண்ட மாதிரி சமாளிச்சிருக்காரே, அதுக்காக அவர் பட்டிருக்கிற சிரமம் தான் என்னை ரொம்பக் கவர்ந்தது" என்று நிறுத்தாமல் படபடப்பாகச் சொன்னாள் ஊர்மிளா.

"நீ சொல்றது கூடச் சரிதான்.. அதான் அந்த டாக்டர் சாந்தி கூட அங்கிள்ன்னு இவரைக் கூப்பிடற மாதிரி குறிப்பிட்டு அந்த சமயங்களிலும் அவர் பெயரைக் குறிப்பிடாம தவிர்த்திருக்கிறார்.  எழுதினவர் எதுக்காக இப்படியெல்லாம் மெனக்கிட்டிருக்கார்ன்னு தான் தெரிலே."

"சில பேருக்கு இப்படில்லாம் ஒரு ஆசை! புதுமாதிரி எழுதணும்ங்கற முயற்சி தான். வேறு என்னத்தைச் சொல்றது?"

லஷ்மணன் சிரித்தான். "மத்தவங்கள்லேந்து தன்னை வித்தியாசப்படுத்திக் காட்ட இந்த எழுதவறங்க இப்படித் தங்களை சிரமப்படுத்திக்கறது உண்டு தான். இருந்தாலும் அந்த இன்னொரு விஷயத்தை சொன்னா இந்த சிரமமெல்லாம் ஒண்ணுமில்லேன்னு சொல்லலாம்."

"நீங்க தான் ஒண்ணுமில்லாததையும் பெரிசு படுத்தறதிலே கில்லாடி ஆச்சே!  சொல்லுங்க.."

"என்னைப் பாத்தா உனக்கு அப்படி ஆகிப்போச்சா?.. அப்ப ஆளை விடு.  கதையைப் படிச்சோமா போனோமான்னு இல்லாம, நீ தானே என்னை வம்புக்கு இழுத்தே."

"ச்சும்மாச் சொன்னா, அதுக்கெல்லாம் இப்படிக் கோவிச்சிக்கறதா?.. ப்ளீஸ்.. சொல்லுங்க.."

"அடடா! என்னக் கெஞ்சல்?.. ஆதாயம் இல்லாம இப்படி சடார்னு நீ இறங்கி வர மாட்டியே.. என்ன விஷயம், ஊர்மிளா?"

"ஆதாயம்னா புருஷன் பெண்டாட்டிக்குக் கூடத் தனித்தனியாவா?..  எந்த ஆதாயத்தை நான் மட்டும்னு தனியா இதுவரை அனுபவிச்சிருக்கேன்.  விரலை மடக்குங்க, பாக்கலாம்.."

"மடக்கிடலாம்.  ஆனா, ஆண்டவன் பத்து விரல் தானே கொடுத்திருக்கான்னு யோசிக்கிறேன்."

"ஒகோ.. பத்து முடிஞ்சதும்   மறுபடியும் ஒண்ணு ரெண்டுன்னு மடக்கிக்கலாம்.   நீங்க கவலையேப் பட வேண்டாம்.  நான் கணக்கு வைச்சிக்கறேன்.."

"வைச்சிப்பேன்னு நம்பிக்கை இருக்கு, ஊர்மிளை!  இருந்தாலும் இப்ப வேணாம்னு பாக்கறேன். ஏன்னா.."

"பாத்தீங்களா, ரூட் மாத்தறீங்களே!  விஷயத்துக்கு வாங்க..  உங்களுக்குப் பிடிச்ச அந்த இன்னொரு விஷயம் என்ன?"

"என்ன ஆதாயம்ன்னு நீ சொன்னா சொல்றேன்."

"சரி. சொல்லித் தொலைக்கறேன்.  பரீட்சைக்கு இன்னும் பதினைஞ்சு நாள் தான் இருக்கு.  அதாவது தெரியுமில்லையா?"

"அடடா! உன்னோட ஜர்னலிசப் படிப்பு பத்திச் சொல்றையா?"

"அதே! வர்ற வெள்ளிக்கு அடுத்த வெள்ளி பரீட்சை.  ஒரு பேப்பர்,  ஸ்டோரி அனலைசிங் பத்தி..  முழுசா அம்பது மார்க்! ஏதாவது ஒரு கதையை எடுத்திண்டு,  அக்கு வேறா ஆணி வேறா கழட்டிப் போட்டு அலசணும்..  அந்தக் கதை ஏதாவது பத்திரிகைலே பிரசுரமாகியிருக்கணும்.  அது ஒண்ணு தான் கண்டிஷன். அந்த அலசலுக்கு இந்தக் கதையை எடுத்துக்கப் போறேன்.  அதான் விஷயம். நீங்களும் உங்க பார்வைலே நாலு சமாச்சாரம் எடுத்துச் சொன்னா என் வேலை ஈஸியாப் போயிடும் இல்லையா? அதுக்குத் தான் கேட்டேன்."

"ஓகோன்னானாம்.  கஷ்டப்பட்டு நான் சொல்றது.. நீங்க அதை நோகாம எழுதிட்டு மார்க்கைத் தட்டிண்டு போர்றது..  இதெல்லாம் எந்த ஊர் நியாயம்மா?"

"இந்த பரீட்சை பாஸ் செஞ்சா இப்பப் பாக்கற வேலைலே ரெண்டு இன்ங்கிரிமெண்ட் போட்டுத் தருவாங்க.. பெண்டாட்டி சம்பாதிச்சிண்டு வர்றதும் குடும்பச் செலவுக்குத் தானே போர்றது.. அது எந்த ஊர் நியாயமோ அந்த ஊர் நியாயம் தான் நான் கேக்கறதும்.."

படபடவென்று கை தட்டினான் லஷ்மணன். "சும்மா வெளையாட்டுக்குக் கேட்டா என்ன சீறு சீர்றே?.. ஒக்கே..  ரெடியா?.. குறிச்சிக்க.. இப்ப சொல்றேன். இந்தக் கதையை எழுதின போக்கிலே பிரமாதமா எனக்குத் தெரியறா விஷயம் என்ன தெரியுமா?"

"சொல்லுங்க.. தெரிஞ்சிக்கறேன்..." என்று அவன் சொல்லப் போவதைக் கேட்கத் தயாரானாள் ஊர்மிளா.


(இன்னும் வரும்)





Tuesday, January 10, 2012

பார்வை (பகுதி-22)

                       அத்தியாயம்--22

ல்ல கூட்டம்.

பிரபல இசைக்கலைஞர்கள் பலரை முன்வரிசையிலேயே பார்க்க முடிந்தது.  நேற்றைய கல்யாண ரிஷப்ஷனுக்கு நிறைய டாக்டர்கள் வந்திருந்தார்கள்.  அவர்களில் பலரை எனக்குத் தெரியாது என்றாலும், என்னிடம் வந்து விசாரித்து விட்டுப் போனார்கள்.  'ம்யூசிக் தெரபி' வைத்தியத்தின் ஒரு நடமாடும் வெற்றிச் சின்னம் போல நான் ஆகியிருப்பது ஒருவாறு எனக்குப் புரிந்தது.  'இப்பொழுது தொந்தரவு ஒண்ணும் இல்லையே?.. பார்வையெல்லாம் நன்னாத் தெரியறதா?.. கண்ணாடி போட்டுக்கலையா? இல்லை, போட்டுக்கணும் னு சொல்றாங்களா?' போன்ற கேள்விகள்.  ' முன்னாடி நீங்க பார்த்ததுக்கும், இப்போ பாக்கறத்துக்கும் ஏதாவது வித்தியாசம் தெரியறதா?'ன்னு ஒருத்தரே ஒருத்தர் கேட்டார்.  முன்னாடி பார்த்ததெல்லாம் வெற்றுப் பார்வை; இப்போ பாக்கறது நிறைய விஷயம் தெரிந்து கொண்ட பார்வை'ன்னு அவருக்கு பதில் சொன்னேன்.  புரிந்த மாதிரி தலையாட்டிக் கொண்டார்.  என்ன புரிந்ததுன்னு நான் கேக்கலை.

தம்பி கல்யாண சத்திர வாசலில் பெரிய போர்டு வைத்திருந்தான்.   அதில் ஹரிஹரன் பெயரையும் என் பெயரையும் குறிப்பிட்டு இவர்கள் இல்லத் திருமணம் என்கிற மாதிரி இருவீட்டார் அழைப்பாக எழுதியிருந்தது.   மணமக்கள் விவேகாந்தன்-சங்கரி பெயர்கள் ஜிலுஜிலுவென்று ஜிகினா எழுத்துக்களில் ஜொலித்துக் கொண்டிருந்தது.

'இமைகள் மருத்துவமனை' ஸ்டாஃப்கள் வரவேற்பு குழு பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.   ஒரு விஷயம் சொல்ல மறந்திட்டேன்.  'இமைகள்' மருத்துவமனையின் பக்கத்துக் கட்டிடம் இப்பொழுது ம்யூசிக் தெரபி வைத்திய சென்ட்டராக மாறியிருக்கிறது.  புரொபசர் மித்ரா தான் அதன் தலைமை மருத்துவர்.  அந்த வைத்திய நிலையத்தின் 'ம்யூசிக் டிபார்ட்மெண்டை' கவனித்துக் கொள்ளும் மேற்பார்வையாளர் பொறுப்பு எனக்கு.  என் தம்பி, சங்கரி, சுசீலா இன்னும் இரண்டு மூன்று இசைக் கலைஞர்கள் விசிட்டிங் ஆர்ட்டிஸ்ட்டுகள்.    பொதுவாக மனநல மருத்துவத்திற்குத் தான் இந்த 'ம்யூசிக் தெரபி' என்று அறியப்பட்டு இருந்த நிலையில், அந்த வைத்தியத்தை வேறுபட்ட கோணத்தில் அணுகி சோதனை மேற்கொண்டு புரொபசர் வெற்றியும் பெற்றதினால், இந்த சிகித்சை முறையைப் பற்றி அறிய பலரும் ஆர்வம் காட்டினர்.  இந்த ஆர்வம் புரொபசருக்கும், டாக்டர் சாந்திக்கும் மருத்துவத் துறையில் மிகுந்த மரியாதையையும் மதிப்பையும் அளித்திருந்தது.   ஆனால் எனக்கென்னவோ என் மன ஈடுபாட்டைக் கிளறச் செய்து அதை சரியான முறையில் தூண்டி அந்தத் தூண்டலையே நோய் தீர்க்கும் மருந்தாக ஆக்கிய புரொபசரின் திறமையும், டாக்டர் சாந்தியின் அயராத முயற்சிகளுமே வெற்றிக்கான காரணமாகத் தெரிகிறது.  இந்த ம்யூசிக் தெரபி வைத்தியம் தான் என்றில்லை, வேறு ஏதாவது பெயர் கொண்டு இதே மாதிரியான ட்ரீட்மெண்ட்டை எனக்குச் செய்திருந்தாலும்,  இந்த வெற்றி இவர்களுக்குக் கிடைத்திருக்கும் என்று தான் நினைக்கிறேன்.

பார்வை இருந்தது பின்பு அது போனது மீண்டும் வந்ததுன்னு என் வாழ்க்கை யிலும் தான் இந்த பார்வை விஷயத்தில் ஏகப்பட்ட அனுபவங்கள்.ஆரம்பத்தில் அது இருந்த பொழுது எல்லாவற்றிலும் எனக்கு இருந்த தன்முனைப்பு ,அது இல்லாத போது இல்லாது போனது என்பது பார்வையில்லாத நேரத்தில் நான் தரிசித்த தரிசனம்! பார்வை கிடைத்து விட்ட இந்த நேரத்தில் அந்த அவலம் மீண்டும் வந்து விடக் கூடாது என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

எனக்கேற்பட்ட பார்வை இழப்பால் இன்னொன்றையும் தெரிந்து கொண்டேன்..  டாக்டர் சாந்தி, புரொபசர் மித்ரா போன்றவர்கள் சாதாரண மனிதர்கள் போன்று வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும், ஆகப்பெரும் சக்தியின் ஊற்றாக, உறைவிடமாக, கேந்திரமாகத் தெரிகிறார்கள். அப்படிப்பட்ட மானுடர் கூட்டத்தின் செயல்பாடுகளின் மேன்மையிலிருந்து  ஆயிரக்கணக்கானவர் பெறும் போதமும் ஞானமும் தான் இந்த உலகத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

இந்தக் கல்யாணம் நடக்க வேண்டுமென்று மனசார நான் விரும்பினேன்.  சங்கரியின் விருப்பத்தை நிறைவேற்றுவது என் விருப்பமாயிற்று. என் விருப்பத்தைப் பூர்த்தி செய்வது தம்பியின் விருப்பமாயிற்று.  தம்பியின் விருப்பமே அவர்கள் குடும்பத்தின் விருப்பமாயிற்று. 'வரப்புயர' என்கிற மாதிரி எல்லாம் ஒன்று தொட்டு ஒன்று.  மனிதர்கள் என்றுமே தனித்தனி யூனிட்டுகள் இல்லை என்று தெரிகிறது. எல்லாருமே எல்லாமுமே ஒன்றைத் தொட்டு ஒன்று தான்.  இந்த ஒன்றைத் தொட்டு ஒன்று தான் ஆகப்பெரிய நம் மேன்மைக்கான சக்தியாக உருவாகிறது என்று நினைக்கிறேன்.

இதோ கெட்டி மேளம் கொட்டும் நேரம் நெருங்குகிறது.  கையில் மங்கல அட்சதையுடன், அவர்கள் எல்லா நலங்களும் பெற்று வாழட்டும் என்று மனசார நினைத்துக் கொள்கிறேன்.


"ர்மிளா!" என்று உரக்கக் கூவினான் லஷ்மணன்.

"இங்கே தானேங்க, இருக்கேன்;  அதுக்கேன் அப்படி கத்தறீங்க?" என்று முணுமுணுப்புடன் வந்தாள் ஊர்மிளா.

"இந்தக் கதை படிச்சையா?" என்று அந்த பிரபல பத்திரிகையின் தீபாவளி மலரை பிரித்த நிலையில், "பார்வை" என்று கொட்டை எழுத்துக்களில் தலைப்பிட்டிருந்த அந்தக் கதை அச்சிட்டிருந்த பக்கத்தைக் காட்டினான் லட்சுமணன்.

"இப்போத் தான் இதைப் படிச்சீங்களா?"

"நான் உன்னைக் கேட்டா, நீ என்னைக் கேக்கிறீயா?.. படிச்சிட்டியா, படிக்கலையா, அதைச் சொல்லு, முதல்லே.."

"கேக்கற கேள்விக்கு நேரிடையா பதில் சொன்னாத்தான் உங்களுக்குப் புரியுமா?.. 'இப்போத் தான் இதைப் படிச்சீங்களா?'ன்னு நான் கேட்டதிலேந்தே தெரியலே, நான் எப்பவோ இதைப் படிச்சிட்டேங்கறது.."

"சே! சரியான இதுடி நீ!"

"நீங்க மட்டும் என்னவாம்?.. சரி, போகட்டும்.. கதை எப்படிங்க?"

"பாத்தையா?.. அதைக் கேக்கத் தான் நான் உன்னைக் கூப்பிட்டா,  நீ  கேள்வியை எனக்கே திருப்பறயே?"

"இதே வழக்கமா போயிடுச்சி, உங்களுக்கு!  எதைப் படிச்சாலும், அது எப்படின்னு என் வாயைக் கிளர்றது..  அப்புறம், நான் கூட அப்படித் தான் நெனைச்சேங்கறது!  இந்த வாட்டி, வழக்கத்தைப் போல இல்லே! நீங்க தான் முதல்லே உங்க ஒப்பீனியனைச் சொல்றீங்க.. பின்னாடி தான் நான்! அப்பத் தான் படிச்சீங்களா, சும்மா பக்கத்தை திருப்பிக்கிட்டுப் போனீங்களான்னு தெரியும். ஆமா!"

"சரியான...."

"'இதுடி' தானே?.. அது எதுன்னு கேட்டா பேச்சை மாத்திடுவீங்க!.. சொல்லுங்க..  கதை எப்படி?"

 "அதை எப்படி ஒத்தை வார்த்தைலே சொல்றது!  இருபத்திரண்டு அத்தியாயம்!
பத்துக்கு படிக்க ஆரம்பிச்சேன்;  இப்பத்தான் முடிச்சேன்!  இந்தப் பக்கம் அந்தப் பக்கம் திரும்பலே.. "

"இப்படில்லாம் ஜகா வாங்குவீங்களே! எனக்காத் தெரியாது?  எப்படின்னு கேட்டேன்லே?"

"அதைத் தான் சொல்ல வர்றேன்.. அதுக்குள்ளாற நீ.." என்ற லஷ்மணன், படித்த கதையை மனசுக்குள் ஒருமுறை ஓட்டிப் பார்த்தான்.



(இன்னும் வரும்)







Sunday, January 8, 2012

பார்வை (பகுதி-21)

                    அத்தியாயம்--21

ரியா மூணு வாரங்கள். ஓடிப்போனதே தெரியலே..

ஒருபக்கம் மாத்திரை, மருந்து, விழிச் சோதனைன்னும் இன்னொரு பக்கம் பாட்டு, அரட்டை, அளவலாவல்ன்னும் நாள் போனதே தெரியலே...

தினம் காலை பத்துக்கெல்லாம் சொல்லி வைச்சாற் போல புரொபசர் மித்ரா ஆஜர்.  புரொபசரின் மருத்துவ ஞானமும், அத்தனை பேரையும் ஆட்கொண்ட மருத்துவ உரைகளும் எங்களை மயக்கின.  அப்படிப்பட்ட அந்த புரொபசர் எங்க டீமில் கலந்துக்கறச்சே மட்டும் புல்லாங்குழல் வித்துவான் ஆகிடுவார்.  அவரது வாசிப்பு அற்புதமான வாசிப்பு.  அதே மாதிரி விவேகானந்தனின் அப்பா ஹரிஹரன் பிடிலைத் தொட்டாலே அது கொஞ்சியது. அதைக் கண்டு என் தம்பிக்கு ஏகப் பெருமை.  தந்தைக்கும் தனயனுக்கும் போட்டியாய் ஒருத்தரை ஒருத்தர் விஞ்ச வாசிக்கும் பொழுது, இடையில் என் தம்பி நுழைந்து புது சங்கதியுடன் இரண்டு பேரையும் ஓரம் கட்டுவான்.   மேடையில் சேர்ந்து பாடிப் பாடி சுசீலாவுக்கும் சங்கரிக்கும் ஏக ஒட்டுதல்.  இரண்டு பேர் சாரீரமும் இழைகையில், எங்கள் மனமெல்லாம் இளம் பாகாய் உருகும்.

எல்லா நாட்களும் தம்பி சம்சாரம், அவர் அம்மா என்று காலையிலேயே தம்பியுடன் வந்திருந்து அத்தனை பேருக்குமான சாப்பாட்டுத் தயாரிப்பு விஷயங்களில் ரொம்பவும் ஒத்தாசையாக இருக்காங்கங்கறதைத் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்லணும்..  அவங்க மட்டும் இல்லைன்னா, சுசீலா ரொம்பவும் சிரமப்பட்டுப் போயிருப்பாள்.   எல்லாருக்குமான ஒரே கோரிக்கை எனக்கு எப்படியாவது பார்வை திரும்பிடணும்ங்கறத்தான் இருந்திருக்கணும்.  இல்லைன்னா இந்த அளவுக்கு ஒவ்வொரு காரியமும் எந்த தடங்கலும் இல்லாமல் அந்தந்த நேரத்தில் நடந்திருக்காது..  எனக்கோ இறைவனிடம் அதற்கு மேலான ஒரு கோரிக்கை இருந்தது.  பார்வை திரும்பி விவேகானந்தன்-சங்கரி திருமண வைபோகத்தை நான் கண்டு களித்து அவங்களை ஆசிர்வதிக்க வேண்டுங்கறது தான் அது.

எப்படி சங்கரி மேல எனக்கு இப்படி ஒரு பிடிப்பு வந்ததுன்னு தெரியலே.  அவள் என் தம்பி மகள்கறதாலயா?.. அதுவும் வாஸ்தவம்தான்னாலும் அதுக்கும் மேலே ஏதோ இருக்கறதாத் தோண்றது.  தன்னோட அப்பா-அம்மாகிட்டே இந்த மாதிரி காதல் சமாச்சாரங்களை நேரிடையாச் சொல்ல எந்தப் பொண்ணுக்கும் இருக்கறா தயக்கம் தான் சங்கரிக்கும் இருந்திருக்கு..  இந்த சமயத்திலே திடீரென்று கிடைசா பெரியம்மாவும், பெரியப்பாவும் அவள் மனசிலே நெருக்கமான ஒரு இடத்தைப் பிடிக்கவே, அவளுக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது. இவர்கள் சொன்னால் அப்பா தன் விஷயத்தை அனுதாபத்து டன் கேட்டு முடித்து வைப்பார்ங்கற நம்பிக்கை.  அதனால தான் எனக்கும் எல்லா விஷயங்களையும் விட இந்த திருமணத்தை எப்படியாவது முடிச்சு வைக்கணும்கற நினைப்பே மனசில் உறுதியாய் உருக்கு போல வலிமை பெற்றது.

டாக்டர் சாந்தி ரூபத்தில் தெய்வம் தான் கருணை பொழிஞ்சிருக்கணும்..  இல்லைன்னா தனி ஒரு மனுஷிக்கு இத்தனை சக்தி கிடைச்சிருக்காது.  அவரிடம் இருக்கும் சக்தி, எல்லோருக்கும் பங்கிட்டு பகிர்ந்தாற் போல அத்தனை பேரிலும் பரிமளிக்கிறது.  எல்லாருக்கும் ஏதோ ஒரு வகையில் டாக்டர் சாந்தி வேண்டப்பட்டவராகவே இருக்கார்... ஒவ்வொரு நாளும் காலைலே வந்து கண் சோதனைகள் நடத்திட்டு மருத்துவ சம்பந்தமான வழிகாட்டல்களைச் சொல்வார்.  மருந்துகளை மாற்றித் தர வேண்டுமானால், சங்கரியிடம் அது பற்றி விவரமாகச் சொல்லி அவற்றை நான் உட்கொள்ளும் விஷயங்களில் உதவியாக இருக்க ஏற்பாடுகள் செய்வார்.  திரும்பவும் மாலை நான்கு மணி அளவில் வந்து, இரவு வரை எங்களுடன் இருந்து விட்டுத்தான் செல்வார்.  அவருக்காகத் தோன்றினால் ஏதாவது பாடுவார்.  பெரும்பாலும் அவை மெல்லிசைப் பாடல்களாக இருக்கும்.

டாக்டர் என்னிடம் சொல்லிவிட்டுப் போன அன்றைக்கு ராத்திரி சாப்பாடு ஆனதும் தம்பி என் அறைக்கு வந்து கொஞ்ச நேரம் பேசிண்டிருந்தான்.அப்போ யதேச்சையா விவேகானந்தனோட அப்பா ஹரிஹரனைப் பத்தி பேச்சு வந்தது.

"அந்த பையன் அப்பா தங்கமானவர்.  ஹரிஹரன்னுட்டு பேர்.  கொஞ்ச காலம் எங்கிட்டே தான் பிடில் வாசிக்கக் கத்திண்டார்.  அதைப் பத்தி உனக்குச் சொல்லிருக்கேனோ"ன்னு தம்பி கேட்டான்.

"இல்லை.  ஆனா, சுசீலா சொல்லிருக்கான்னு நெனைக்கறேன்.  என்னிக்கோ சாபாலே அந்தப் பையன் எங்கிட்டே வந்து 'நமஸ்காரம்'ன்னுட்டு ஆசிர்வாதம் வாங்கிண்டப்போ, அவன் அப்பாவைப் பத்தி சுசீலா சொன்னா.  அப்பத்தான் எனக்குத் தெரியும்"ன்னேன்.

"அப்படியா? ரொம்ப சந்தோஷம்.  அந்தப் பையனும் ரொம்ப சூடிகை.  அதான் எனக்கும் அவனை ரொம்பவும் பிடிச்சுப் போச்சு."

கொஞ்ச நேரம் நான் எதுவும் சொல்லலே.  தம்பியே தொடர்ந்து சொன்னான்:
"பாக்கறதுக்கு அழகாவும் இருப்பான்.   சங்கரிக்கு அவனையே முடிச்சிடலாம் -னுங்கற யோசனைலே இருக்கேன். ஆனா..."

"என்ன ஆனா?.. தேவிக்கு இந்த சம்பந்தம் பிடிக்கலையா?"

"நோ..நோ..  இப்படிச் செய்யலாம்னுட்டு முதல்லே எங்கிட்டே சொன்னதே அவ தான்."

"பின்னே என்ன தயக்கம்?.. சிஷ்யனா இருந்தவன் பையன்னுட்டு யோசிக்கறையா?"

"இல்லேண்ணா... அப்படில்லாம் இல்லே."

"பின்னே?"

"மனசிலே ஒரு வைராக்கியம்."

"என்னனுட்டு?"

"இந்த ட்ரீட்மெண்ட் உனக்கு இப்போ நடந்திண்டுருக்கு இல்லையா?.. இது முடிஞ்சு நமக்கு சாதகமா ரிசல்ட் வந்ததுக்கு அப்புறம் தான் அவங்க கல்யாணம்."

"தத்துப்பித்துன்னு பேசாதே.. இதுக்கும் அதுக்கும் ஏன் முடிச்சு போடறே?..  ஏதோ சொல்வாளே;  'அலை ஓஞ்சப் பின்னாடி தான் குளிப்பேன்னுட்டு'-- அந்த மாதிரி தான் இதெல்லாம்.  இது பாட்டுக்க இது.  அது பாட்டுக்க அது.  நீங்க ரெண்டு பேரும் சேந்து ஒரு நல்ல காரியத்துக்கு முடிவெடுத்தா, அதை ஒத்திப் போடக் கூடாது.  முதல்லே அது விஷயமா அடுத்தாப்லே ஆகற காரியத்தைப் பாரு."

"இல்லேண்ணா.. உங்க வார்த்தைக்கு எதிர்ப்பா பேசறதா நெனைக்க வேண்டாம்.  நீங்க தான் எனக்கு எல்லாம். நீங்க இருந்து அவ கல்யாணத்தை..."

"நான் எங்கேடா போனேன்?.. முதல்லே அந்த நல்ல காரியத்தை ஜாம்ஜாம்ன்னு நடத்த ஆக வேண்டியதைப் பாரு. உன் மன்னியும் எட்டூருக்கு ஒத்தாசையா இருப்பா. ."

"இல்லேண்ணா..."

"என்ன, இல்லேண்ணா?.."

"இந்த ட்ரீட்மெண்ட்லே உங்களுக்கு பழையபடி பார்வை வரப்போறது.  அப்பறம் தான் சங்கரி கல்யாணம் நடக்கப் போறது.."

"எப்படி அப்படித் துல்லியமா சொல்றே?.."

"என் மனசிலே தோண்றது.."

"மனசிலே தோண்றதெல்லாம் நடந்துடுமா?"

"அப்படி ஒண்ணு ரெண்டு கரெக்டா நடந்திருக்கு.  அதனாலேத் தான் சொல்றேன்."

விஸ்வநாதனை அப்படியே தழுவிக்கணும் போல இருக்கு. இருந்தாலும் அதை வெளிக்குக் காட்டிக்காம, "சங்கரிக்கு அவள் மனம் போல மாங்கல்யம் அமைஞ்சா எனக்கு அதை விட சந்தோஷம் கொடுக்கக் கூடியது வேறே ஒண்ணு இல்லைப்பா"ன்னேன்.

"என்னண்ணா! சங்கரி சொல்ற மாதிரியே சொல்றே..?"

"சங்கரியா? அவ என்ன சொன்னா?"

"பெரியப்பாக்கு பார்வை கிடைச்சா அதை விட சந்தோஷம் கொடுக்கக் கூடியது தனக்கு வேறே ஒண்ணும் இல்லேன்னு சொன்னா.."

அவன் சொல்றதைக் கேட்டு மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. "அந்தக் குழந்தை அப்படியா சொன்னா?..   அந்த நல்ல மனசுக்கு எல்லாமே நன்னா நடக்கும்ப்பா..  எனக்கும் பார்வை கிடைச்சிடும்னு நம்பிக்கை இப்போ வந்திடுத்து.."ன்னு சொல்றச்சே என்னையறியாம குரல் தழுதழுத்தது..

"அந்த நம்பிக்கை தான் அண்ணா இப்போ உனக்கு வேணும்.  இதைத் தான் சாந்தி டாக்டரும் படிச்சு படிச்சு எங்கிட்டே சொன்னாங்க.."ன்னவன், திடீர்னு நெனைச்சிண்டது போல, " நேரமாச்சே?.. நீ படுத்துக்க வேணாமா?"ன்னான்.

"சரிப்பா.."ன்னு அவனுக்குச் சொன்னேனே தவிர, படுக்கையில் படுத்தும் லேசில் தூக்கம் வரலே.

அப்புறம் எப்போத் தூங்கினேனோ, எனக்கேத் தெரியலே.


காலை எப்போவும் போலத் விடிஞ்சதா எனக்குத் தோணினாலும், நடக்கறதெல்லாம் ஏதோ விறுவிறுன்னு வேகமாக நடக்கற மாதிரி இருக்கு..

இன்னிக்கு ரெண்டு டாக்டரும் சேர்ந்தே வந்திருக்கறது ஒரு அதிசயம்;  வேறே எங்கேயும் போகாம டாக்டர் சாந்தி இங்கேயே இருந்தது இன்னொரு அதிசயம்.  அதை விட அதிசயம், சுசீலா-சங்கரி கூடச் சேர்ந்திண்டு டாக்டர் நிறையப் பாட்டு பாடினாங்க..  இன்னிக்கு முழு செஷனுக்கும் புல்லாங்குழலை கீழேயே வைக்கப் போறதில்லைன்னு புரொபசர் வெளுத்துக் கட்டினார்.

ராத்திரி ரொம்ப நேரம் நாங்க ரெண்டு பேரும் பேசிண்டிருந்தது தம்பிக்கு ரொம்ப உற்சாகத்தைக் கொடுத்திருக்கு போல இருக்கு.  என்னமாய், அவன் பிடில் பேசித்துங்கறீங்க?.. விவேகானந்தனும், ஹரிஹரனும் இருக்கிற இடம் தெரிலே.  விஸ்வநாதன் வாசிக்கறதை மெய்மறந்து கேட்டிண்டிருப்பா போலிருக்கு.

புரந்தரதாசரின் 'கஜவதனா பேடுவே'யை ஹம்சத்வனியில் சுசீலா ஆரம்பித்ததுவே எடுப்பாக இருந்தது.  அடுத்து கோபாலகிருஷ்ண பாரதியின் 'வருவாரோ வரம் தருவாரோ'.வை ஸ்யாமாவில் சங்கரி பாடத் தொடங்கினது மே மனசிலே சிலிர்த்த அந்த சிலிர்ப்பு சடார்னு மூளைக்குத் தாவி அங்கேந்து நெற்றி மேட்டுக்கு இறங்கின மாதிரி இருந்தது.  அந்த இறங்கல் ஒரு வினாடி தான் அங்கே தங்கித்து.. அடுத்த சொடக்கிலேயே கொஞ்சம் பக்கவாட்டில் கீழ் இறங்கி அந்தப் பிரதேசம் முழுவதையும் தன் ஆளுகையில் எடுத்துண்ட மாதிரி இருந்தது.   என்ன நடக்கிறதுங்கறதைத் தெரிஞ்சிக்க முடியவில்லையே தவிர நான் என் வசத்தில் இல்லைங்கறது நன்னாத் தெரிஞ்சது.

இந்த சமயத்தில் தான், அது நடந்தது.  சுசீலாவா, சங்கரியா சரியாத் தெரிலே.
அந்தத் தேன் குரல் திவ்ய கானத்தில் குழைந்து என் செவிப்பறையில் வழிந்தது.  "மானஸ சஞ்சரரே.. ப்ரஹ்மனி.. மானஸ சஞ்சரரே..." என்று ஆரம்பிச்சப்போ அகிலமே சொக்கி என்னில் வசப்பட்டாற் போலிருந்தது.

'இந்த புத்தி தறிகெட்டுத் திரியறது.  அதை இங்கே அங்கே தாவ விடாம கட்டுக்குள் அடக்கி...   அடக்கி?.. பிரமத்தில், பிரமத்தைப் பத்தின விஷயங்களில் பொருத்தணும்ன்னு என்னையே இழுத்துண்டு போகிற சொக்கலில் அரைகுறை நினைவில் நான் தீர்மானிக்கும் முன், அடுத்த வரி
கானாமிர்தமாய் காற்றில் தவழ்ந்து தவழ்ந்து வர்றது.  "மனசிகி பின்ச்சா அலங்க்ருத சிகுரே.. மஹநீய கபோல விஜிய முகுதே.."

சாட்சாத் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரரே எதிரே நிற்பது போல பிரமை. அந்த நினைவுத் தப்பலிலும் அந்த 'ஸ்யாமா'வை உணர்வு தப்பவிடலே. 'ஹரி காம்போதியின் ஜன்ய ராகம் தானே இது?'ன்னு எனக்குள் நானே கேட்டுண்ட மாதிரி இருக்கு.  இன்னொரு பக்க ஞாபகத்தில், 'ஹரிகாம்போதி 28-வது மேளகர்த்தா தானே?'ன்னு என்னையே கேட்டுக்கறது.

"ஸ்ரீ ரமணிகுச துர்க விஹாரே.. ஸேவக ஜன மந்திர மந்தாரே.." தம்பி தான்; இந்த குழைவு தம்பிக்குத் தான் வரும்ன்னு நினைவில் வயலினின் வழுக்கல் நர்த்தனமிடுகையில், பார்வையிலும் மேலே உயர்ந்து தாழ்ந்து படியற அந்த வில் பட்றது. அந்த வயலின், அந்த வில், மசமசன்னு தேசலா இங்கே அங்கே உட்கார்ந்திருக்கறவங்களோட நிழல் தரிசனம், ஆ! அதோ அங்கே..
அம்பது பைசா அளவில் நெற்றியில் வட்டமா பொட்டு இட்டுண்டு சுசீலா...
அம்மாடி.. கடவுளே.. பார்வை வந்தாச்சா..

"மானஸ சஞ்சரரே.. ப்ரஹ்மனி.. மானஸ சஞ்சரரே..." சங்கரியின் குரல் இழைகையில் என்னுள் எல்லாம் அடங்கிப் போன மாதிரி இருக்கு...

அதேசமயம் என் தோளை ஆதரவாத் தொடறவர் புரொபசராத் தான் இருக்கணும்.   மலங்க மலங்க அவரையே பாக்கறேன். அடுத்த வினாடி, டாக்டர் சாந்தியைத் தேடி என் கண்கள் அலைபாய்கின்றன.


(இன்னும் வரும்)




















Tuesday, January 3, 2012

பார்வை (பகுதி-20)

                அத்தியாயம்--20

புரொபசர் இன்னும் வரலே.  கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி சுவர் பெண்டுல கடியாரத்தில் அடிச்ச மணியை எண்ணினதிலே ஒன்பதுன்னு தெரிஞ்சது.  அதற்கப்புறம் கால்மணி நேரம் ஆகியிருக்கலாம்.

எல்லாரும் டிபன் சாப்பிட்டாச்சு.  டாக்டரும் இங்கேயே தான் சாப்பிட்டாங்க..
தம்பி மாடிப்பக்கம் தன்னோட வயலினை எடுத்து வைச்சிண்டு சுருதி கூட்டிண்டிருக்கான் போலிருக்கு.  .அவன் சின்ன வயசிலிருந்தே இப்படித்தான். ஒவ்வொண்ணுலேயும் முழுமை வேணும் அவனுக்கு.  அடுத்தாப்லே செய்ய வேண்டிய காரியத்திற்கு அரைமணி முன்னாடியே அதுக்காகத் தயாராயிடு வான்.  சங்கரியும், சுசீலாவும் இந்த செஷனில் என்ன என்ன பாட்டு பாடலாம்னு லிஸ்ட் தயாரிச்சிண்டிருகாங்கன்னு அப்பப்ப கேக்கற அவங்க குரல்லேந்து தெரியறது.

"வர்றீங்களா, அந்த ரூம்லே உக்காந்திண்டு டிரீட்மெண்ட் பத்தி முன்னோட்டமா கொஞ்சம் பேசிண்டிருக்கலாம்.."என்று டாக்டர் சொன்னதுமே புரிகிறது.  அவர் என்னிடம் தனியாக பேச வேண்டும் என்று நினைக்கிறார்ன்னு..

என் ரூமிற்கு வந்ததும், "நேத்து விவேகானந்தன் வீட்டிற்குப் போயிருந்தேன்" என்கிறார் டாக்டர்.

"எப்படா நீங்கள் அதைப்பத்திச் சொல்லுவீங்கன்னு அதுக்குத் தான் காத்திருக்கேன்.  சுசீலா அரையும் குறையுமா சொன்னா. அதிலே புரிஞ்சது கொஞ்சம் தான்.  நீங்க தான் விவரமா சொல்லணும்"ங்கறேன்.

"எதிலேந்து சொல்லணும்?.." என்று ஏதோ விட்ட கதையைத் தொடருகிற மாதிரி கேக்கறாங்க.

"ம்.. அவ எங்கே சரியாச் சொன்னா.. இங்கே ஒண்ணும், அங்கே ஒண்ணுமா..  இந்த விஷயத்தில் முதல்லே விவேகானந்தனின் பெற்றோர்கள் சம்மதம் தெரிஞ்சிண்டு, மேற்கொண்டு என் தம்பிகிட்டே இதைக் கொண்டு போகலாம்ங்கற மாதிரி சொன்னா.  நீங்க அங்கே போயிருந்தப்போ, அவங்ககிட்டே இதுபத்திச் சொல்லிட்டீங்களா?" -- என் குரலில் பூசியிருந்த ஆவலும் அக்கறையும் வெளிப்படையாக எனக்கேத் தெரியறது.

"பின்னே?" என்று டாக்டர் அந்த 'ன்'னில் ஒரு அழுத்தம் கொடுத்து, 'னே'யை நீட்டினார்கள். "நா அவங்க வீட்டுக்குப் போனதே அதுக்காகத் தான்.  விவேகானந்தன் அங்கே இருந்ததும் நல்லதாச்சு.  இவன் வேறே அப்பாகிட்டே இந்த விஷயத்தைச் சொல்ல தயங்கித் தயங்கி பின்னாடி தடுமாற வேண்டாம் பாருங்க.." என்று அவர் சொன்ன பொழுது சிரித்தே விடுகிறேன்.

"பரவாயில்லை.. விவேகானந்தன் உங்களை மனசுக்குள் வாழ்த்தியிருப்பான்.
அவனுக்கும் ஒரு பளு குறைஞ்சது பாருங்கள்!  அவங்க அப்பா, அவர் பேர் என்ன, ஹ.. ன்னு ஆரம்பிக்குமே, ஆங்..  ஹரிஹரன்,  இதைக் கேட்டதும் அவர் ரியாக்ஷன் எப்படி இருந்தது?"

"ஒவ்வொண்ணா நீங்க கேட்டுச் சொல்றதை விட, நெட் ஷெல்லா விஷயத்தைச் சொல்லிடறனே?.. அவருக்கு இதில் ரொம்ப சந்தோஷம் தான்.  ஆனா, ரொம்பத் தயங்கறார்..."

"தயங்கறாரா?"

"எஸ்.  இந்த திருமணத்திற்குப் பின்னாடி இருக்கற ஒரு விஷயத்தை டோட்டலா நாம எல்லாருமே மறந்து போயிட்டோம்.  விவேகானந்தனோட அப்பாவும் ஒரு பிடில் வித்வாங்கறது எனக்குத் தெரியும்.  ஆனா, உங்க தம்பி தான் அவருக்குக் குருநாதர்ங்கறது தெரியாது.  உங்க தம்பி மேலே ரொம்ப ரொம்ப மரியாதை வைச்சிருக்கார் அவர்.    தான் இன்னிக்கு நாலு பேருக்குத் தெரியற மாதிரி மேடைலே உக்காந்து வயலினை மடிலே சாச்சுக்கறத்துக்கு உங்க தம்பி தான் காரணம்ங்கற மரியாதை அது.  சொல்லப் போனா, மரியாதைங்கற ஸ்டேஜைத் தாண்டி அவர் மனசிலே இது ஒரு பக்தியாகவே வளர்ந்திருக்கு."

இப்போ என்ன சிக்கல்ங்கறது தெளிவா எனக்குப் புரியறது.  தன் குருவின் பெண் தன் வீட்டுக்கு மருமகளா வர்றாங்கற மகிழ்ச்சியைப் பூரணமா உணரமுடியாத அளவுக்கு, என் தம்பி மேலே அவருக்கு இருக்கற மரியாதை குறுக்கே நிக்கறது.

"எனக்குப் புரிஞ்சிடுத்து,  டாக்டர்!"ங்கறேன்..  "ஆனா நான் இதை எதிர்பார்க்கலே."

"நானும் தான்.."ங்கறார் டாக்டர்.  "அவங்க அப்பா சொல்றதைக் கேட்டதும், எனக்கு அந்தக் கால சினிமாக் காட்சிகள் மனசிலே ஓடித்து.  எஸ்.வி.சுப்பையா தானே அவர்?.. கிராமத்து பண்ணையாளா இருப்பார்.  அவர் மகள் பண்ணையாரின் மகனைக் காதலிப்பதைக் கேட்டு அதிர்ந்து, என்ன பாதகம் இதுன்னு துடிப்பாரே, அந்த மாதிரி தான்.   அதே ஸீன்!  ஒருவழியா அவரை சரி பண்ணியிருக்கேன்.   உங்க தம்பி என்ன சொல்லப்போறார்ங்கறதைப் பொறுத்து இருக்கு, அவர் எப்படி இதை ஏத்துப்பார்ங்கறது.."

"என் தம்பியா?.."

"ஆமாம்.  அதே மாதிரி உங்க தம்பியும் நெனைக்கலாமில்லையா?  என்ன இருந்தாலும், அவர் இவர் சிஷ்யனா வயலின் கத்திண்டவர் தானே?  அப்படிப்பட்டவர் பையனுக்கு தன் பெண்ணைக் கொடுக்கலாமான்னு.."

"அட ராமா..  இப்படில்லாம் கூட இடைஞ்சல் இருக்கா?.. இப்படில்லாம் இருக்கும்னு நான் அனுமானிக்கவே இல்லையே?"

"இதுக்கு மேலேயும் இருக்கும்.  எனக்கு ஒரு வழி தான் தெரியறது."

"சொல்லுங்க, டாக்டர்.."

"உங்க தம்பி அப்படி இப்படி எப்படி இருந்தாலும் அவரை வழிக்குக் கொண்டு வர்றது உங்க கையிலே தான் இருக்கு.  வீட்டுப் பெரியவர்ங்கற அசைக்க முடியாத ஒரு ஸ்தானம் உங்களுக்கு இருக்கறதை மறந்திடாதீங்க.."

"அதெல்லாம் கவலை வேண்டாம், டாக்டர்..  என் தம்பி நான் கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டான்.  நான் என்ன சொன்னாலும் கேப்பான்."

"தம்பி மட்டும்னா சரி.  தம்பி சம்சாரமும் இருக்காங்க;  அவங்க அம்மாவும் இருக்காங்க..  எல்லாரும் சேர்ந்து எடுக்கற முடிவு நமக்குப் பாதகமா இருந்திடக் கூடாது.  அதான் விஷயமே.   உங்க தம்பி குடும்பம் இதுக்கு ஓக்கேன்னா, விவேகாந்தன் குடும்பமும் இதுக்கு ஓக்கே.  அதெல்லாம் நான் விவரமா பேசிட்டேன்.  எந்த விதத்திலே, எப்படிப் பார்த்தாலும், நீங்க தான் இந்தக் கல்யாணத்தை நடத்தி வைக்கிறதிலே பிரதான பங்கு வகிக்கிறீங்க.. அதுனாலே நீங்க என்ன செய்வீங்களோ, ஏது செய்வீங்களோ..."

"நான் என்ன செய்யணும், டாக்டர்?.. அதைச் சொல்லுங்க.  செய்யத் தயரா இருக்கேன்."

"அவசரமில்லே.  உங்க தம்பி அவரோட பேமலி மெம்பர்ஸோட இதுபத்தி டிஸ்கஸ் பண்ணட்டும்.."என்று டாக்டர் சொல்லறச்சேயே எனக்கு 'அவரோட பேமலி மெம்பர்ஸ்'ன்னு அவங்க சொன்னது 'சொரேல்' ன்னு இருக்கு.. தம்பியை இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்தவன்னு தனியாப் பிரிச்சுப் பாக்க முடியலே.  அப்படி நினைக்கறதே மனசுக்கு சங்கடமா இருக்கு. இருந்தாலும் அடுத்த நிமிஷமே,  அது தான் உண்மைங்கற யதார்த்ததின் சூடு சுரீர்ன்னு சுடறது.

இப்படி நான் நெனைச்சிண்டிருக்கறச்சேயே, டாக்டர் சாந்தி சொல்றதும் மனசில் படியறது.  "எனக்குப் பார்வை கிடைக்கறச்சே, அவங்களை மாலையும் கழுத்துமா சேர்ந்து பாக்கறதுதான் என் மனசுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்'ன்னும்-- இதுக்குக் கொடுக்கற சம்மதம் தான், உங்கிட்டே நான் எதிரிபார்க்கிற ஒண்ணுன்னும் உங்க தம்பி கிட்டே அழுத்தம் திருத்தமா அவர் மனசிலே பதியற மாதிரி சொல்லிடுங்க.  மத்ததை அவர் பார்த்துப்பார்."

 "அப்படி கேக்கறது 'ஒரு மாதிரி' இருக்குமே, டாக்டர்?.. பாவம், அவன் வேறே மாதிரி ஏதாவது ஐடியா வைச்சிருந்தான்னா..."

"இதிலே ஒண்ணும் தப்பில்லை;  ஒரு நல்லதுக்காக எடுக்கற நடவடிக்கை; அவ்வளவு தான்.  நீங்க இப்படி சொல்றது, உங்க தம்பி அவங்க சம்பந்தப்பட்ட வங்களோட பேசறதிலே, உறுதி காட்ட உதவும்.  எல்லாம் சங்கரிக்காகத் தான்;  அவ மன சந்தோஷத்திற்காகத் தான்."

டாக்டர் இதைச் சொன்னதும், 'சரி'ன்னு நான் சொன்னது அனிச்சையா சொன்ன மாதிரி இருக்கு. .   எந்த சக்திக்கோ ஆட்பட்டு உதடு பிரியற மாதிரி.

"விவேகானந்தன் அப்பா ஹரிஹரன், உங்க தம்பியோட சம்மதம் ஒண்ணுக்குத் தான் காத்திருக்கார்.  நம்மகிட்டேயிருந்து கிரீன் சிக்னல் கிடைசதும், அவர் சைடு ஓக்கே ஆயிடும்.  உண்மைலே ஹரிஹரன் சாரும் இந்த ம்யூசிக் பார்ட்டிலே கலந்துக்கணும்னு விரும்பறார்.  உங்களுக்கு பார்வை கிடைக்கற வேள்விலே ஒவ்வொருத்தரும் அவங்களாலே முடிஞ்ச ஏதோ ஒண்ணைச் செய்ய விரும்பறாங்க.  இது எல்லாமே பாஸிட்டிவ் சிக்னல்ஸ்.  இறைவன் கருணை இருக்கறச்சே, நமக்குத் தெரிஞ்சு பாதி, தெரியாது பாதின்னு ஒவ்வொண்ணா வரிசையா நடக்க ஆரம்பிக்கும்.  அதெல்லாம் தான் நாம தயங்காம முன்னே செல்ல தூண்டுகோலா இருக்கும்"ன்னு டாக்டர் சொன்னபோது என் உடல் ஒருதடவை சிலிர்த்து அடங்குகிறது.

"இந்த புரொபசர் மித்ரா இருக்காரே.. அசகாய புலி.  அவர் சாகசத்தையெல்லாம் ஜெர்மன் மாகாநாட்டிலே நான் பாத்திட்டேன்.  அங்கே அவருக்கு என்ன மரியாதைங்கறீங்க..  அவர் உங்களுக்கு டாக்டரா அமைஞ்சது நமக்கு பெரிய சாதகமான விஷயம்.  டாக்டர் என்னதான் திறமையானவரா இருந்தாலும், பேஷண்ட்டோட ஒத்துழைப்பு வேணும். அது இல்லேனா எல்லாமே ஜீரோ!"

"............................."

"ஒத்துழைப்புன்னு மொட்டையா சொன்னா உங்களுக்குப் புரியாது.  ஒத்துழைப்புன்னா, நான் குறிப்பிடறது மன ஒத்துழைப்பை.  உங்க முழு மனசையும் குவிச்சு, இன்ஞ்ச் பை இன்ஞ்ச்சா இந்த ட்ரீட்மெண்ட்லே இன்வால்வ் ஆகணும்.  சொல்லப்போனா, உங்களுக்கெல்லாம் இதை வைத்தியம்னே சொல்லப்படாது.  சங்கீதம்ங்கறது உங்க ஏரியா.  நான் சொன்னாலும் சொல்லாட்டாலும் நடக்கற விஷயத்திலே இழைச்சு போயிடுவீங்க.  அதுக்குச் சொல்லலே.."

"நான் என்ன செய்யணும்னுட்டு தெரிலே; எதுனாலும் செய்யத் தயாரா இருக்கேன்.  எல்லாம் சங்கரிக்காக.  அவ கல்யாணம் நல்லபடி அவ விரும்பறவனோட நடக்கறதுக்காக."

"எல்லாருக்கும் அந்த எண்ணம் தான்.  ஆனா, அதைத் தாண்டி உங்களுக்குன்னு வேறோண்ணு இருக்கு."

"எனக்குத் தெரிலியே, டாக்டர்.. என்னன்னு சொல்லக் கூடாதா?"

"சொல்றேன்.  எப்படிச் சொல்றதுன்னு யோசிச்சேன். அவ்வளவு தான்.
இப்படிச் சொல்லலாமா?..  மாலையும் கழுத்துமா சங்கரியும் விவேகானந்தனும் புதுமணத் தம்பதிகளா மேடையில் அமர்ந்திருக்கும் போது, அத்தனை பேரும் அதைக் கண்ணாரக் கண்டு வாழ்த்துவார்கள்.  எல்லாரும் மாதிரியே, நீங்களும் பெரியவரா அவங்களை கண்ணாரக் கண்டு சந்தோஷத்தோட வாழ்த்தப் போறீங்க.. இந்தக் காட்சியை நீங்க காணறத்துக்காகத் தான் இந்த ட்ரீட்மெண்ட்.   இதை மனசிலே உறுதியா அப்பப்ப நெனைச்சிக்கங்க.. அந்தக் காட்சியை கற்பனையில் கண்டு அடிக்கடி சந்தோஷப்படுங்க.. எல்லாம் நல்லபடி நடக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு."  

"என்ன சொல்றது டாக்டர்!  என் சோகம் ரொம்ப ஆத்மார்த்தமானது.   சங்கரியை நான் பார்த்ததில்லை; விவேகானந்தனைப் பார்த்ததில்லை;  விவேகானந்தனின் தகப்பனாரை- தாயாரைப் பார்த்ததில்லை.  ஏன், என் தம்பி சம்சாரம், அவங்க அம்மா.. எல்லாருமே இவங்க இவங்கன்னு தான் என் ஞாபகத்துக்கு அறிமுகம் ஆகியிருக்காங்களே தவிர, யாரையும் நான் கண்ணால் பார்த்ததில்லைங்கறது எவ்வளவு ஆழமான சோகம்ங்கறது மனசிலே படிஞ்சு இருக்கு.  இந்த ட்ரீட்மெண்ட் என்னோட எல்லா இழப்புகளுக்கும் பதில் சொல்ற ட்ரீட்மெண்ட்டா அமையும்னா, எனக்கு அது எவ்வளவு சந்தோஷமா  இருக்கும்ங்கறதை வார்த்தைலே வர்ணிக்க முடியலே, டாக்டர்!  நீங்க சொல்றது எல்லாம் புரியறது.  மனசில் ஆழ அது பதிஞ்சு போயிடுத்து.  நல்ல முடிவுக்கு தயாரா காத்திருக்கேன்.." என்று நான் சொன்னதும்,  டாக்ட்ர் சாந்தி, "இதைத் தான் நான் எதிர்ப்பார்க்கிறேன்.. ஆல் தெ பெஸ்ட்.." என்கிறார்.

அவர் சொன்னதை ஆமோதிக்கற மாதிரி பெண்டுலம் கடிகாரம் ஒலிக்கத் தொடங்க, வாசல் காலிங் பெல் அதனிலிருந்து வேறுபட்ட ரீங்காரத்துடன் கணகணக்கிறது. என் காதுகளுக்கு எல்லாமே இன்னிசையாய் மயக்கறது.  அதேசமயம், "புரொபசர் கூட இதோ வந்திட்டாரே" என்கிறார் டாக்டர் சாந்தி.


(இன்னும் வரும்}





Related Posts with Thumbnails