மின் நூல்

Thursday, July 14, 2016

அழகிய தமிழ் மொழி இது!...

பகுதி--17

யார் இந்த மாடலன் என்று தெரிந்து கொள்வதற்கு முன்னால் இந்த சிலப்பதிகார நாவலின் போக்கைக் கொஞ்சம் அலசிப் பார்ப்போம்.

இந்த நாவல் எழுதப்படுவதற்கான நோக்கம் மூன்று கருத்துக்களை வலியுறுத்துவதற்காக
என்று தெள்ளந்தெளிவாக பதிகத்திலேயே பறைசாற்றப்படுகிறது.

என்ன அப்படியான மூன்று கருத்துக்கள்?..


  1. செய்த காரியங்களுக்கான வினை தான் ஒரு மனிதனை வாழ்க்கை பூராவும் தொடர்ந்து வந்து அவனுக்கான நல்லது கெட்டதுகளைத் தீர்மானிக்கின்றனவினைக்கு முடிவே இல்லை. அது ஒரு தொடர் சங்கிலி. சொல்லப் போனால் செய்த வினைகளின் தொடர் சங்கிலி தான் வாழ்க்கையே. அடுத்தத்த பிறவிகள் தான் அடுத்தடுத்த வாழ்க்கை என்பதினால், ஒரு பிறப்பில் செய்த நல்லவை தீயவைக்கான வினை, பிறவிதோறும் முடிவே இல்லாமல் தொடர்ந்து வரும் ஆற்றல் பெற்றிருக்கிறது. ஆக, பிறவி முற்றுப்பெற்றால் தான் அந்தப் பிறவிக்கான வினைத்தொடரும் முற்று பெறும். அதாவது வினைகளின் முற்றுப்பெறுதலே வாழ்க்கையின் முற்றுப் பெறுதலாகி மனிதப்பிறவி தெய்வ நிலையை அடைகிறது.
     2.  அரசாட்சியில் பிழை செய்தோருக்கு அறமே கூற்றுவனாகிறான் என்ற கருத்து.
இதிலும் வினை, அறத்தின் தோற்றம் கொண்டு அப்படிப் பிழை செய்தோருக்கு காலனாகிறது.

     3.  கற்பின் அணிகலான பத்தினிப் பெண்களை உயர்ந்தோர் போற்றிப் புகழ்வோர் என்பதின் மூலம் அவர்களும் தெய்வநிலையை அடைகிறார்கள்.

முதல் கருத்தில் பிறவி தோறும் செய்யும் செயல்களுக்கான நல்லது—கெட்டது, வாழ்க்கை பூராவும் தொடர்ந்து வருகிறது என்று தெரிந்தது. அதாவது ஒருவர் தன் சங்கிலி வாழ்க்கையில் செய்யும் நல்லவையும் தீயவையும் அவறிற்கேற்ப வினைகளாக அவர் வாழ்க்கையில் செயல்பட்டு அதுவே அவர் வாழ்க்கையாக உருக்கொள்கிறது.
வாழ்க்கை என்று தனியே வேறு இல்லை. செய்யும் செயல்களின் வினைச் சேர்க்கைகளே வாழ்க்கை. வினைகள் தாம் செயல்படுவதற்கு இந்த பிரபஞ்சம் சம்பந்தப்பட்ட எதையும் உபயோகப்படுத்திக் கொள்கின்றன என்பது தான் வேடிக்கையான உண்மை. இந்த உபயோகப்படுத்திக் கொள்ளலும் காரண காரியங்களோடு நடைபெறுகிறது. அப்படி வினையின் செயல்பாடாக செயல்பட்டது, செயல்பட்டவரின் வினையாகி அதற்கான நல்லவை தீயவைகளை அவை அவருக்கு அளிக்கின்றன.

சிலப்பதிகாரக் காப்பியத்தின்படிப் பார்த்தால் 'எந்தப் பிறவியிலோ தான் செய்த வினைக்கான பலனை கோவலன் அனுபவிக்க வேண்டும்; அவன் செய்த வினைக்கான பலன் மதுரையில் நடைபெற வேண்டும்' என்று தீர்மானிக்கப் பட்டிருப்பதால் அவன் மதுரை செல்ல வேண்டும். அவன் மதுரை செல்வதற்கு அவன் மனம் ஒத்துழைக்க வேண்டும். அதற்கான மனத்தூண்டுதலை பல்வேறு நபர்களாலும் காரியங்களினாலும் தடையின்றி அவன் பெற வேண்டும். அப்படிப் பெறுவதற்கான தூண்டுதலாக அமைந்த ஒருவனே இந்தப் பகுதியில் நாம் பார்க்கப் போகிற மாடலன்.

தீர்க்கமாகப் பார்க்க போனால் கோவலனோடு சம்பந்தப்பட்ட அத்தனை பேருமே கோவலனின் வினைப்பயனுக்காக செயல்படுபவர்கள் ஆகிறார்கள். அப்படிச் செயல்படுவதே அவரவருக்கான வினைகளின் செயல்பாடுகளாகிறது. ஒவ்வொருவர் செயல்படுவதும் அவரின் சொந்த வினைக்கான செயல்பாடாகி   அவரவரின் வினைப்பலன்களும்  பூர்த்தியாகின்றனஅவரவர் தம் செயல்பாடுகளின் வினைகளுக்கான பலன்களை, நல்லவையோ-- தீயவையோ அவரவர் அறுவடை செய்கின்றனர். என்னன்ன அறுவடை செய்கின்றனர் என்பதனை அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்தால் தான் தெரியும்.

பாண்டியன் நெடுஞ்செழியன், அவனைத் தொட்டு அவன் மனையாட்டி கோப்பெருஞ்செல்வி, கோவலனைத் தொட்டு அவன் தாலிகட்டிய மனைவி கண்ணகி, காதலி மாதவி, மாதவியைத் தொட்டு அவள் மகள் மணிமேகலை என்று சிலர் அறுவடை செய்தவை மட்டும் அவரவர் வாழ்க்கைக் கதை தெரிந்ததினால் தெரிகிறது.

உலகமே நாடக மேடை; அதில் நாமெல்லாம் நடிகர்கள்' என்று ஆங்கில நாடகத் தந்தை ஷேக்ஸ்பியர் சொல்லியிருப்பது நினைவுக்கு வருகிறது. இதோ மாடலன் வந்தாச்சு; வாழ்க்கையான நாடக மேடையில் கோவலன் தன் வினைப்பயனை அனுபவிக்கக் காத்திருக்கையில் மாடலன் அதில் எப்படி சம்பந்தப்படுகிறான் என்று பார்ப்போம்.

அதற்கு முன்னால் மாடலனைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம்; இளங்கோவடிகளார் அறிமுகப்படுத்தி இருப்பதை அப்படியே ஒற்றி எடுத்து ...

நீரையே வேலியாகக் கொண்ட ஊர் தலைச்செங்கானம். அந்தத் தலைச்செங்கானத்தில் பிறந்தவன் மாடலன். நான்கு வேதங்களையும் ஓதி உணர்ந்தவன். பிறருக்கு நன்மை செய்வதையே கொள்கையாகக் கொண்டவன். மாமறை முதல்வன். அவனே மாடலன் என்போன். மாதவ முனிவனான அகத்தியர் வாழ்ந்த பொதிய மலையை வலம் வந்து குமரியின் பெரிய துறையிலே முறைப்படி நீராடி தன் ஊர் திரும்புவன். திரும்பும் வழியில் பயணக் களைப்பு தீர எதிர்ப்பட்ட சோலையைப் பார்த்து உள்ளே நுழைய அதுவே கவுந்தி அடிகள் தங்கியிருந்த இடமாகி கோவலனையும் சந்திக்க நேரிடுகிறது...

யாரை எங்கு கொண்டு சேர்க்க வேண்டும், எதற்காகக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்
யாருக்காக யார் செயல்பட வேண்டும் அப்படிச்  செயல்பட்ட வினைப்பயன்கள் எப்படியெல்லாம் பங்கு போடப்படுகின்றன  என்பதெல்லாம் முன்னமையே தீர்மானைக்கப்பட்ட ஒன்றாய் வினையின்  செயல்பாட்டுகளுக்குரிய  அட்டவணைப்படியே நடக்கிறது.

அடிகளார் தங்கியிருக்கும் குடிலுக்குள் நுழைந்த மாடலன் கவுந்தி அடிகளுக்கு வணக்கம் சொன்னான். கவுந்தி நான்மறையோனின் நலம் விசாரித்தார். கோவலன் பக்கம் மாடலன் திரும்ப கோவலன் அவரை வணங்கினான்.. கோவலனைப் பார்த்த்தும் நான்மறையோன் மகிழ்ச்சி கொண்டான்.

கோவலன் தானே?..” என்று கோவலன் யார் என்று  தனக்குத் தெரியும் என்பது போல நிச்சயப்படுத்திக் கொண்டான் நான்மறையோன். “மாந்தளிர் மேனி மாதவி மடந்தை பச்சிளம் குழந்தையை ஈன்றெடுத்ததும் ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையான களிப்பில் குழந்தைக்குத் தொட்டிலிட்டு பெயர் சூட்டும் விழாவை மிகச் சிற்ப்பாக நீ கொண்டாடியது ஊர் அறியும். 'முன்பு ஒரு நாள் இருள் சூழ்ந்த நள்ளிரவில் அலை மோதும் பெருங்கடலில் என் முன்னோன் சென்ற மரக்லம் உடைந்தது. கடலில் தூக்கி வீசப்பட்ட அவன் கரைகாணாது தத்தளித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது நடுக்கடலில் தெயவமகள் ரூபத்தில் ஒரு கடல் தேவதை தோன்றி 'செய்தவப்பயனாய் நீ உயிர்ப்பிழைப்பாய்' என்று ஆசி கூறி என் முன்னோனை கரைச் சேத்துக் காப்பாற்றியது. அந்த எம் முன்னோனைக் காப்பாற்றிய எங்கள் குலதெய்வத்தின் பெயராகிய 'மணிமேகலை' என்னும் பெயரை என் குழந்தைக்குச் சூட்டுவீர்களாக' என்று நீ கேட்டுக் கொள்ள ஆயிரம் கணிகையர் ஒன்று கூடி வாழ்த்திசைத்து குழந்தைக்கு மணிமேகலை என்று பெயர் சூட்டினர்கள். பொன்னும் மணியும் அந்த விழாவில் வரியவற்கு வாரி வழங்கிய கருணை மிகுந்த வீரன் நீ!” என்று மாடலன் மகிழ்ச்சியோடு சொன்னான்.

உண்மையில் பார்க்கப்போனால் மாதவிக்கு பெண் குழந்தை பிறந்த சேதியே சிலப்பதிகார காப்பிய வாசிப்பின் இந்த இடத்தில் தான் நமக்குத் தெரிகிறது. பிறந்த குழந்தைக்கு மணிமேகலை என்று கோவலன் பெர்யரிட்டதையும், அப்படி அவன் பெயரிட்டதற்கான காரணத்தையும் இந்த இடத்தில் தான் இளங்கோ அடிகளார் நமக்குத் தெரியப்படுத்துகிறார். அதுவும் கோவலன் வாயிலாக அல்லாமல் கோவலனின் சொந்த வாழ்க்கை நிக்ழ்ச்சி ஒன்றை அவனிடமே பிரஸ்தாபித்து மாடலன் நினைவு கொள்கிற மாதிரி மாதவிக்கு பெண் குழந்தை பிறந்த சேதியை அடிகளார் வெளிப்படுத்துவது இந்த காப்பிய வடிவமைப்பின் மிகச் சிறந்த ஒரு உத்தி. அதுவும் இனி நிகழவிருக்கும் சம்பவங்களுக்கு முன்னால் கோவலனுக்குப் பிறந்த குழந்தை பற்றி சொல்ல வேண்டிய அவசிய அவசரத்தை கருத்தில் கொண்டு அந்தச் செய்தியை காப்பியத்தில் நுழைப்பதற்கு தகுந்த இடத்திற்காகக் காத்திருந்து தக்க இடம் வந்ததும் அந்தக் காரியத்தை அற்புதமாகச் செய்தது தான் காப்பியத்தை இயற்றிய ஆசிரியனின் சாமர்த்தியம்.

கோவலன் வாழ்க்கையில் நடந்த இன்னும் சில நிகழ்வுகளை கோவலனே ஆச்சரியப்படும்படி சொல்லி கோவலன் மனசில் இனி அவனுக்காக அமையபோவதான வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி அடுத்த கட்ட நகர்வுக்கு அவனைத் தயார்படுத்துகிறான் மாடலன். மாடலனின் எதிர்ப்பார்ப்பின்படியே கோவலனும் அவன் சொல்வதை ஆர்வத்துடன் கேட்கிறான்:

முன்பொருநாள் வயது முதிர்ந்த ஞானவானான ஒருவன் கோலூன்றிய தளர்ந்த நடையுடன் ஏதாவது பொருள் உதவி நீ அவனுக்குச் செய்வாய் என்கிற எண்ணத்துடன் உன்னிடம் வந்தான். அந்த சமயத்தில் யாருக்கும் அடங்காத மதயானை ஒன்று அட்டகாசத்துடன் தெருவில் பிளிறலுடன் ஓடிவந்தது. இந்த கோலூன்றிய முதியவன் எங்கும் ஓட முடியாது தடுமாறி நிற்க வேகமாக வந்த யானை தன் துதிக்கையால் அவனைப் பற்றித் தூக்கியது. அதைப் பார்த்து பாய்ந்து வந்த நீ, அந்த முதியோனை யானையிடமிருந்து காப்பாற்றினாய்; அதன் நீண்டிருந்த துதிக்கை பிடித்து மேலேறி தந்தங்கள் பற்றி யானையின் பிடறியில அமர்ந்தாய்! உன் வீரசாகச நடவடிக்கையில் யானையும் அடங்கியது.. முதியோனைக் காப்பாற்றிய உன் கருணையும் போற்றப்பட்டது...    இதெல்லாம் உனக்கு நினைவிருக்கில்லையா?” என்று கோவலன் வியக்க அவன் வாழ்க்கையில்  நடந்தவற்றைச் சொன்ன மாடலன், மேலும் தொடர்ந்தான்.

கொடும் பாம்பின் தீண்டலிருந்து குழந்தையைக் காப்பாற்றியது கீரி ஒன்று. அதை அறியாமல் குழந்தையின் தாய் அந்தக் கீரியை அடித்துக் கொன்றாள். இதைப பார்த்த அவள் கணவன் மனம் நொந்து அவள் சமைத்த உணவைக் கூட உண்ண விரும்பாதவனாய் தேசாந்திரம் கிளம்பினான். அவன் செயலைப் பொறுத்துக்கொள்ள முடியாத அவன் மனைவி அவன் பின்னே ஓடினாள். அவள் கணவனோ, “இனியும் உன் கை உணவு வாங்கிச் சாப்பிட்டு வாழும் வாழ்வு முறையன்று; இந்தா! இந்த ஏட்டினைப் பிடி!” என்று வடமொழி வாசகங்கள் எழுதப் பெற்ற ஒரு ஏட்டினை அவளிடம் தந்தான். “நன்றாகக் கேட்டுக் கொள்.. மக்கள் பிறப்பின் மாண்பினை, அதன் தாத்பரியத்தை அறிந்தவர் எவரின் கையிலாவது இந்த ஏட்டைக் கொடு! அதுவே நீ செய்ய வேண்டியது" என்று அறிவுறுத்தி வடதிசை ஏகினான். கணவன் சொன்னபடியே அவளும், 'என் கொலைப்பாதகம் ஒழிய தானம் செய்வதற்கான பொருட்செல்வம் கொடுத்து புண்ணியம் பெருங்கள்..' என்று கடைவீதிகளில் புலம்பித் திரியலானாள். அந்த வழியாகச் சென்ற நீ அந்தப்பெண்ணை அழைத்து, “என்ன துன்பம் உனக்கு நேர்ந்தது?.. அது என்ன கையில் ஏடு?” என்று அந்தப் பெண்ணைக் கேட்டாய். அந்தப் பெண் நடந்த விஷயங்களை உனக்குச் சொல்லி, “பொருள் பொதிந்த இந்த ஏட்டினை வாங்கி, கைப்பொருள் தந்து எனக்கு நேர்ந்த துன்பத்தைக் களைய வேண்டுகிறேன்" என்றாள் நீயும் அந்தப் பெண்ணின் கவலையைப் போக்கும் விதமாக அக்கணமே அறநூல்கள் வகுத்த நெறிப்படி அவள் பாவம் தொலையுமாறு தானம் செய்து அவள் துன்பம் நீங்க வழி செய்தாய்! அதுமட்டுமன்று; கோபித்துக்கொண்டு கிளம்பிய அவள் கணவனைத் தேடிக் கண்டுபிடித்து இருவரையும் ஒன்று சேர்த்து அவர்கள் வாழ்க்கைச் செல்வுக்கான பொருட்செல்வமும் வழங்கியவன் நீ!” என்று வரிசையாகக் கோவலனின் அருமை பெருமைகளை ஒவ்வொன்றாய் அந்த நான்மறையோன அடுக்கலானான்.

பொருளுக்காக பத்தினிப்பெண் ஒருத்தி பற்றி அவள் கணவனைடமே ஒருத்தன் பழி கூறினான். அப்படிப் பழி கூறியவனை, தவறு செய்பவர்களைத் தண்டிக்கும் பூதம் ஒன்று பற்றியது. பூதத்திடம் அகப்பட்டவனின் நிலை குறித்து வருந்திய நீ, 'என்னுயிரைக் கொண்டு இவன் உயிரை விடுவிப்பாயாக' என்று வேண்டிக் கேட்டாய். ஆனால் அந்த பூதமோ நல்லவன் உன் உயிரைக் கொள்ள மறுத்து அத்தீய்வனின் தாயின் முகத்துகெதிரேயே அவனை அடித்துத் துவம்சம் செய்தது. அதைப் பார்த்து செயலற்று நின்ற அந்தத் தாயையும் அவன் சுற்றத்தாரையும் உன் சுற்றம் போல் நினைத்து பல்லாண்டு அவர்களைப் பேணிக் காத்த வறியவர்களின் தலைவன் நீ!..” என்று கோவலனைப் புகழ்படப் பேசிய மாடலன், அவனை நெருங்கி, “கோவலனே! இப்பிறவியில் நீ செய்தவை எல்லாம் போற்றத்தக்க புண்ணிய காரியங்களே! அவற்றை நானும் நங்கு அறிவேன். ஆயினும் கொடி போன்ற இந்தப் பெண் காலடி வருந்த மாமதுரை வந்தது முற்பிறவியில் நீ செய்த வினைப்பயன் போலும்..” என்று வருந்திக் கூறினான்.

''இப்பிறவியில் நீ செய்தவை எல்லாம் போற்றத்தக்க புண்ணிய காரியங்களே' என்று மாடலன் சொன்னதும் தான் தெம்பு வந்த மாதிரி இருந்தது கோவலனுக்கு. 'புண்ணிய காரியங்கள் என்றால் நல்ல விளைவுகள் தானே ஏற்பட வேண்டும்?.. பின் ஏன் அப்படி ஒரு கனவு சமீபத்தில் தனக்கு வந்தது' என்று மாடலனிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும் என்ற எண்ணம் அவன் மனசில் தலைதூக்கியது.  இருந்தும் 'முற்பிறவியில் செய்த வினைப்பயன் என்று புதுசாக வேறு சொல்கிறானே' என்ற புதுக் குழப்பமும் அவனுக்கு வந்து சேர்ந்தது. இருந்தும் கேட்டுத் தெரிந்து கொண்டு விடலாம் என்ற தெளிவில் லேசாகத் தொண்டையைச் செருமிக் கொண்டு தான் கண்ட பொல்லாக் கனவை மாடலனிடம் கோவலன் சொல்ல ஆரம்பித்தான..


(தொடரும்)


படங்கள் வழங்கிய நண்பர்களுக்கு நன்றி.



Related Posts with Thumbnails