மின் நூல்

Showing posts with label இசைப்பாடல்கள். Show all posts
Showing posts with label இசைப்பாடல்கள். Show all posts

Sunday, June 8, 2008

அழகன் முருகன் ஆறுமுகன்

பரிந்துரைக்கும் ராகம்: மணிரங்கு
தாளம்: ஆதி


எடுப்பு:

எந்தத் துன்பம் வந்தாலும் எனைக் காக்கும்
இவன் தாள் பணிவேன்; மறவேன் கருணையை
கந்தன் கதிர்காம வேலன் அழகு பாடுவேன்

(எந்தத் துன்பம்)


தொடுப்பு

நெஞ்சே நீ அறிவாய் சிங்காரவேலனை
அஞ்சேல் என்றென்னை ஆட்கொண்ட கதையை
எட்டுக்குடி முருகன் தட்டாமல் அருள்வான்
விட்டு விலகாமல் அவன் தாள் சரணம்

(எந்தத் துன்பம்)



வயலூர் முருகன் திருமால் மருகன்
மயில்வாகனன் கைவேல் காணீரோ?
வள்ளி தெய்வானை வலமும் இடமுமாக
சொல்லி மாளாதய்யா சொக்கநாதன் மகன் அழகை

(எந்தத் துன்பம்)

தணிகைச் செல்வனை தண்டாயுத பாணியை
தகப்பனுக்கு உபதேசித்த சுவாமிமலை சுவாமியை
எண்கண் சண்முகனை முத்துக் குமரனை
பண்ணால் பாட்டால் பாடிப் பரவி
(எந்தத் துன்பம்)

முடிப்பு
செந்தில் வேலவனை சேவல் கொடியோனை
முந்தி வந்த வினையறுக்கும் வள்ளி மணாளனை
பன்னிரு கையனை சூரபத்ம சம்ஹாரனை
உமையம்மை செல்வனை சிவகுமாரனை

(எந்தத் துன்பம்)

Sunday, June 1, 2008

தெய்வமாய் வந்தவன்

பரிந்துரைக்கும் ராகம்: கல்யாணி
தாளம்: ஆதி

எடுப்பு

மஹாதேவன் அருள் புரிவான்
மனமெலாம் நிறைந்தவன் அவன்
ஜனமெலாம் காத்திடுவான்

(மஹாதேவன்)

தொடுப்பு

கைலாசநாதன் கபாலி முக்கண்ணன்
காஞ்சி ஏகாம்பரன்; ஜொலிக்கும் கனக சொரூபன்
உமையொரு பாகன் ஊர்த்துவத் தாண்டவன்
நமைக்காக்கும் நஞ்சப்பன்; தேவாதிதேவன்

(மஹாதேவன்)

குஞ்சிதபாத தில்லை சிதம்பரநாதன்
நெஞ்சம் கவர்ந்த சிவகாமி நேசன்
ஐயா என்றழைக்க அருளும் ஐயாரப்பன்
தயாநிதீஸ்வரன்! கங்காதரன்! வைத்தீஸ்வரன்!

(மஹாதேவன்)


முடிப்பு

தில்லை சிவசிதம்பர சபாநாயகன்
முல்லை சிரிப்பு மோகன சுந்தரன்
தூக்கிய பத பொன்னம்பல நடராஜன்
தேக்கிய கருணையாய் தெய்வமாய் வந்தவன்

(மஹாதேவன்)

Sunday, May 25, 2008

ஒப்பில்லாத அப்பன்



ராகமாலிகை
தாளம்: ஆதி

பிலஹரி

பங்குனி சிரவணம் பரிசுத்தம்
விண்ணகரப்பன் விஸ்வரூப தரிசனம்
கோடி சூர்யப் பிரகாசம்

ஹம்ஸாநந்தி

ஒப்பில்லாத அப்பன் நம் ஒப்பிலியப்பன்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன்
என்னப்பன் என் விண்ணகரப்பன் என்று
நம்மாழ்வார் துதித்த செல்லப்பன் இவன்

சாருகேசி

வலக்கரம் காட்டும் தாமரைப் பூம்பாதம்
இடக்கரம் தொடும் தொடை அலங்காரம்
ஸ்ரீவைகுண்டம் இதுதான் என்ற துளசிஷேத்திரம்
பூலோக வைகுண்டம்; புரிந்து கொண்டோம்

சாரங்கா

உப்பில்லாத உணவு விரதமோ? வரதா!
உன் விளையாட்டோ? கொண்டல் வண்ணா!
மார்க்கண்டேயர் வளர் மகளை மணக்க வழியோ?
மகாலஷ்மி மனம்கவர் செல்வா! சொல்வாய்!


ஹிந்தோளம்

ஐப்பசி சிரவணம் ஐயனின் திருமணம்
பூமிதேவி கைத்தலம் பற்றும் கல்யாண கோலம்
வைகானஸ ஆகமம்; ஆத்மானந்த வைபவம்
வித்தாக நெஞ்சில் விழுந்து விழுதான வேதம்!

ஆனந்தபைரவி

ஆளவந்தாயோ? அடியார் ஆளவந்தார் தொண்டரடி
அடியார் மனராஜ்யம் தொட்டு ஆளவந்தாயோ?
பொடிபடும்; அடியார் படுதுயரம் தூளாகும்
பூரண சந்திர வதனா! வரதா! வைகுண்டநாதா!

(பங்குனி சிரவணம்)

ஒப்பிலியப்பன் திருக்கல்யாண அசைபடம்:
நன்றி: ஒப்பிலியப்பன்

Monday, May 12, 2008

இயற்கையே நீ தானே அம்மா!....


எடுப்பு

புவனேஸ்வரி தாயே
புதுகையில் அபயவரம் அனுகிரகித்தாயே.....

(புவனேஸ்வரி)

தொடுப்பு

புவனம் விழித்ததம்மா--உன்கருணை
பூவாய் குலுங்குதம்மா
பறவைக் கூட்டம் பாடிப் பறக்குதம்மா
கறவைப் பசுக்கள் கழுத்துமணி ஒலிக்குதம்மா..

(புவனேஸ்வரி)

புவனேஸ்வரி தாயே
புவனத்தை சிருஷ்டித்தாயே
இகம் பரமெலாம் உன் ஆட்சிதானே
இன்முகம் காட்டி இரட்சித்தாயே

இயற்கையே நீதானே அம்மா
இதயாகாசத்தில் ஒளிர்ந்தாயே
மாயை மறைந்ததே; மெஞ்ஞானம் தெரிந்ததே
தாயே தெய்வமே தடுத்தாட் கொள்வாயே

(புவனேஸ்வரி)

முடிப்பு

இத்தனை படைப்பும் உன் எழில்தானே அம்மா---அம்மா
இதை உணரத்தான் இப்பிறவியோ அம்மா

(புவனேஸ்வரி)

Tuesday, April 29, 2008

கலைமகள் தாயே!.. கலைத் தாயே!..

எடுப்பு

நீயே எல்லாம் அல்லவோ--என்
நெஞ்சில் இசையின் நிலை நீயல்லவோ?--தாயே

(நீயே எல்லாம்)
தொடுப்பு

கூத்தனூரில் கோயில் கொண்டவள் அல்லவோ?
கூத்தனுக்கு வரம் கொடுத்தவள் அல்லவோ?
தக்கயாகப் பரணி தலைவி அல்லவோ?
தஷிண திரிவேணி தெய்வம் அல்லவோ?

விஜயதசமி தரிசனம் தவப்பயன் அல்லவோ?
ஜெயமுண்டு பயமில்லை நினது கருணை அல்லவோ?
அட்சரமாலை அமிர்த கலசம் அழகல்லவோ?
அன்னை சரஸ்வதி அறிவுக் கடவுள் அல்லவோ?



(நீயே எல்லாம்)

முடிப்பு

கலைமகள் தாயே கலைகளுக்குத் தாயே
நிலைகுலைந்த மனதுக்கு நிம்மதி தந்தாயே
சகலகலாவல்லி சதுர்முகதேவி
சகலவித்யாமயி ஞானத்தவச்செல்வி
(நீயே எல்லாம்)


Thursday, April 24, 2008

தேரோட்டம் திருவீதி உலா

எடுப்பு
திருத்தேரைக் காண வாருங்களேன்
திருவாரூர் ஐயன் திருக்கோலம்
நேரில் காண வாருங்களேன்
(திருத்தேரைக்)


தொடுப்பு
அசைந்தாடி அசைந்தாடி ஐயன்
திசைதோறும் திருவிளையாடல் காட்டி
திரிபுரம் எரித்த விரிசடை திருவிடங்கன்
தரிசனம் காண வாருங்களேன்....

குறுஞ்சிரிப்பு தவழும் கூத்தனின் முகமோ
கொள்ளை அழகு; அவன் தோளழகு அதைக்
கொண்டாடிக் களிக்க ஓடி வாருங்களேன்
கமலாலயம்; அன்னை கமலாம்பிகை
தவக்கோல மாட்சி; ஞானலோகக் காட்சி
காண வாருங்களேன் கண்பெற்றப் பேற்றை
கண்டு களிக்க வாருங்களேன்

கவலைகளும் நோய்களும் காணாமல் போகும்
புவனமாளும் தியாகேசன் முகதரிசனம்

(திருத்தேரைக்)

முடிப்பு
பட்டு பீதாம்பரம் பளீரிடும் வைர அலங்காரம்
பஞ்சமுக முரசும் பாரி நாகஸ்வரமும்
கொண்டாடிக் களிக்க கோலாகலம் காண

(திருத்தேரைக்)

Thursday, April 10, 2008

நெஞ்சில் நிறைந்தவன்



எடுப்பு
அழைப்பாயோ என்னை அணைப்பாயோ--உந்தன்
அருகினில் வந்து இளைப்பாற....இப்போது
(அழைப்பாயோ..)

தொடுப்பு
கருவாகி உருவாகி கசிந்துருகி காதலாகி
மருவெலாம் நீங்கி உனை மருவத் துடித்தேன்
மனமெலாம் உன்னைத் தழுவ மயங்கித் தவித்தேன்
மோனம் கலைந்து நீயாக வந்து எனை
(அழைப்பாயோ..)

முடிப்பு
புவியாளும் ஜகன்நாதா! கோவர்த்தன கோபாலா!
தஞ்சம் அடைந்தேன்; என் நெஞ்சம் கவர்ந்தவ னல்லவோ?..
தணியாத தாபம் தீர தழுவிக் களித்திட
தவித்திடும் என் தாகம் தீர்க்க...கண்ணா...
(அழைப்பாயோ..)

Related Posts with Thumbnails