மின் நூல்

Thursday, March 26, 2009

ஆத்மாவைத் தேடி....38

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....


38. தேடி வந்த செல்வம்

ந்த அலுமினியப் பறவையின் வயிற்றுப் பாகத்தின் இடது கோடியில் சிவராமனுக்கும், மாலுவுக்கும் ஸீட் குறிக்கப்பட்டிருந்தது.

பெங்களூர் டு டெல்லி. உத்தியோகத்தில் இருந்த பொழுது வேலை நிமித்தமாக அவர் பல தடவை பறந்த ரூட்! அப்பொழுதெல்லாம் இருந்த பரபரப்பு இப்போது இல்லை. சப்தப்படாமல் பொங்கிய பால் பாத்திரத்தின் விளிம்புக்கு வந்ததும், பட்டென்று தீ அணைந்த சடுதியில் பொங்கலை நிறுத்திக் கொண்டு பரந்து அடங்கிய அமைதி.

அந்த வயசில், அந்த பரபரப்பில் ஒரு இன்பம் இருந்தது. சாதிக்க வேண்டு மென்கிற வெறி இருந்தது. சின்ன வயசில் வீடு வீடாக பேப்பர் போடும் பொழுதும் வெளிக்கு தெரியாமல் இந்த வெறி உள்ளுக்குள் கனிந்து கொண்டிருந்தது. உள்ளுக்குள் இருந்ததை ஊதி ஊதிப் பெரிதாக்கியது அவரது சலியாத உழைப்பே. ஒரு பொறியாளர் ஆக வேண்டுமென்கிற இளம் வயது ஆசையை அந்த உழைப்பு தான் சாதித்துக் காட்டியது.

பி.எஸ்ஸிக்குப் பிறகு மேற்படிப்பு போகாமல், கடலலை போல் ஓடி வந்து காலைச் சுற்றிக்கொண்ட வேலையில் சிவராமன் அமர்ந்தான். சேலம் நகரத்து சந்தடிகளிலிருந்து விலகி டவுனிலிருந்து சூரமங்கலம் போகும் வழியில் பிர்மண்டமாக எழும்பியிருந்த ஒரு நட்சத்திர ஓட்டலில் வரவேற்பாளர் வேலை. வெறும் படிப்பு என்றில்லாமல் வேலை+படிப்பு என்று மாறிப் போன காலம் அது.

ராமசுப்பு சாஸ்திரிகளுக்கும் முந்தி மாதிரி இப்பொழுது அலைய முடிய வில்லை. கண்பார்வை வேறு சற்று குறைபட்டு குறுக்கே நின்றது. இன்னொரு மாடாய் குடும்பப் பாரத்தை இழுக்க சிவராமனின் சம்பாத்தியமும் தேவையாயிருந்த நேரம் அது.


அந்த நட்சத்திர ஓட்டலில் அடிக்கடி சினிமா சம்பந்தப்பட்டவர்கள் வந்து தங்குவார்கள். மார்டன் தியேட்டர்ஸும், ஏற்காடு மலையின் ஷூட்டிங் ஸ்பாட்டுகளும் தாம் காரணம். அவன் வேலையில் வேண்டிய மட்டும் பொழுது போக்கிற்கும் கனவுத் தொழிற்சாலையின் திடீர் ஆசைகளுக்கும் நிறையவே இடமிருந்தது.

ஆனால் எந்த வலையிலும் சிக்கிக் கொள்ளாமல் சாமர்த்தியமாக சிவராமன் மீண்டு வந்தது தான் பெரிய கதை. பொறியாளர் ஆக வேண்டுமென்ற சிந்தனையே மூளையின் மொத்த செல்களிலும் வியாபித்திருந்ததால், மற்ற இடிபாடுகளில் சிக்கிக் கொள்ளாமல், குதிரைக்கு பட்டை போட்ட மாதிரி ஓட்டல் வேலை, மற்ற நேரங்களில் படிப்பு என்பதே சிவராமனின்
வேலையாயிற்று.

ஓட்டலில் தங்கியிருந்த ஒரு இன்ஜினியர் சொல்லித்தான் அவனுக்கு ஏ.எம்.ஐ.இ. படிப்பு பற்றித் தெரியவந்தது. 'நான் இந்த படிப்பு படித்து விட்டு தான் இப்பொழுது டிராம்வேயில் பொறியாளராக இருக்கிறேன்' என்றார் அவர்.
சிவராமன் மனசிலும் தானும் ஏ.எம்.ஐ.இ. படிக்க வேண்டுமென்கிற ஆசை துளிர்விட்டது. வேலைக்கும் சென்று வரலாம்--படிப்பும் படித்துக் கொள்ளலாம் என்கிற வசதி அவனுக்குப் பிடித்திருந்தது. சாட்டர்டு இன்ஜினியர் என்று பட்டம் தருவார்களாம். பி.ஈ.க்கு சமமானதாம்.

அடுத்த வாரமே சென்னை சென்று AMIE படிப்புக்காக விண்ணப்பம் வாங்கி பதிவு செய்து கொண்டான். சென்னை சென்றதில் நிறைய மேலதிக தகவல்கள் கிடைத்தன. நாலு வருட இந்த படிப்புக்கு அரியர்ஸ் வைத்து விட்டால் ஆபத்து; அப்புறம் ஆயுசு பூராவும் படித்துக் கொண்டிருக்க வேண்டியது தான். தனிப்பட்ட விரிவுரையாளர்களிடம் 'கோச்சிங்' கிளாஸ் சென்றால் தட்டுத்
தடுமாறி தேறி விடலாம். கடுமையான பாடதிட்ட சுழலில் மாட்டிக் கொண்டால் கடுமையான உழைப்பு தேவை என்று ஆளாளுக்கு நிறைய
ஆலோசனைகள் சொன்னார்கள்.

சவால்களை புன்முறுவலுடன் ஏற்றுக் கொளவது என்கிற முடிவுக்கு சிவராமன் வந்த பொழுது IETE என்று இதேமாதிரி இன்னொரு
படிப்பும் இருப்பது தெரிய வந்தது. நெருக்கமான இன்னொரு நண்பனுடன் அந்த சென்டருக்கும் சென்று விசாரித்தான். ஏ.எம்.ஐ.இ--க்கு கொல்கத்தா என்றால், இதற்கு தில்லி தலைமையகம். தொலைத்தொடர்பு தொடர்பான பொறியாளர் படிப்பு என்று தெரிந்தது. நண்பனும் இவனும் இந்த படிப்பிற்கும்
பணம் கட்டி பதிவு செய்து கொண்டு விட்டனர்.

அடுத்தது சேலத்தில் இருந்தால் வேலைக்கு ஆகாது, சென்னையில் வேலை தேட வேண்டும் என்கிற நிலை. பெற்றோர் செய்த புண்ணியம் அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பும் வீட்டு வாசல் கதவைத் தட்டியது. அதே வேலை; ஆனால் அதிக சம்பளம். சம்பளத்திற்கு ஏற்ற மாதிரி இந்த ஐந்து நட்சத்திர ஓட்டலும் சென்னையின் மத்திய பகுதியில் பிர்மாண்டமாக நிமிர்ந்து நின்றது. நடக்கிற காரியங்களின் வேகத்தைப் பார்த்து அவனுக்கே பிரமிப்பாக இருந்தது. கடைசியில் கால நேரம் வந்தால் தரதரவென்று கையைப் பிடித்து இழுத்துச் செல்லும் என்கிற முடிவுக்குத்தான் சிவராமனால் வர முடிந்தது.

மாம்பலத்தில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு பக்கத்தில் ஒரு ஒண்டு குடித்தனம். சேலத்தை விட்டு வருவது சங்கடமாக இருந்தாலும், பையனின் எதிர்காலம் தான் முக்கியம் என்று பெற்றோர் மனமுவந்து வந்தனர். வந்த ஓரிரு வாரங்களிலேயே சாஸ்திரிகளுக்கும் மாம்பல சூழ்நிலை மனசுக்கு மிகவும் பிடித்துப் போய் நல்லதொரு இடத்திற்கு கொண்டு வந்து விட்ட
இறைவனுக்கு நன்றி சொன்னார்.

"என்னன்னா.. அப்படி என்ன யோசனை... சீட் பெல்ட் கட்டிக்கச் சொல்லி காஷன் வந்தாச்சு பாருங்கள்.."

"ஓ.. " என்று மாலுவைப் பார்த்து லேசாகச் சிரித்தார் சிவராமன்.

(தேடல் தொடரும்)

Monday, March 23, 2009

ஆத்மாவைத் தேடி....37

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....


37. அதிசய புகைப்படம்

னிம பொருட்கள் ஆராய்ச்சியாளர் சுந்திரமூர்த்தியின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் விதமாகத் தொடர்ந்து பேசலானார் உலகநாதன். "நல்ல கேள்விகள். படைப்பின் அதிசய ஆற்றலைச் சொல்லும் அழகான கேள்விகள்" என்று மீண்டும் சொன்னார் உயிரியல் அறிஞர் உலகநாதன். "இந்த மூச்சுவிடல் என்கிற காரியம் உயிரினங்கள் ஜனித்ததிலிருந்து மரிக்கும் வரை இடைவிடாது நடைபெற்றுக் கொண்டிருக்கிற காரியம். ஆகையால் மூச்சுவிடலான இந்த செய்கைக்கு எந்தவிதத்திலும் எந்தவிதமான குந்தகமும் நேரிட்டுவிடாதபடி இயற்கையின் அமைப்பு நேர்த்தியான ஏற்பாடுகளைக் கொண்டிருக்கிறது.

"வெகுசகஜமான மொழியில் சொல்வதானால், வெளிக்காற்றுப் பகுதியிலிருந்து நுரையீரலுக்குச் செல்லும் காற்றை உள்மூச்சு என்றும், நுரையீரலிருந்து காற்றுப்பாதைகளில் பயணித்து வெளிப்படும் காற்றை வெளிமூச்சு எனவும் சொல்லலாம். இயல்பாக ஒருவரின் நாசிவழியே உட்சென்று நுரையீரலை நிரப்பும் காற்றை டைடல் காற்று என்பர். வெளிக்காற்று எப்படி
உட்செல்கிறது என்பதைப் பார்ப்போம்.

"உதரவிதானம் நரம்பு உந்துததால் சுருங்கும் பொழுது அது கீழிறங்கி மார்புக்கூட்டின் செங்குத்து அளவு அதிகரிக்கும். இதே நேரத்தில் வெளிப்புற விலா எலும்பு தசை சுருங்குவதால், அவை சார்ந்த விலா எலும்புகள் உயரும். இதனால் மார்புக்கூட்டின் எல்லா பக்க அளவுகளும் அதிகரிக்கும். இதனால் நுரையீரல் விரிவடையும். புளூரா குழிக்குள் இந்த நேரத்தில் காற்றில்லாத ஒரு நிலை, நுரையீரலின் விரிவடைதலைக் கூட்டும்.

"நுரையீரலின் விரிவு, வெளியுலக காற்றின் அழுத்தத்திற்கு கீழாகக் குறைகிறது. அழுத்தம் குறைந்த இடத்தைக் குறிவைத்து நாசி வழி வெளிக்காற்று இயல்பாக உட்புகுகிறது. இதுவே உள்மூச்சு. உள்மூச்சு உள்ளே சென்றதும், நுரையீரல் அதனால் நிரப்பப் படுகிறது. இப்பொழுது விலா எலும்புகளுக்கு இடையே இருக்கும் தசைகள் சுருங்கும். அதனால் விலா எலும்புகள் தாழும். உதரவிதானம் உயரும். மார்புக்கூட்டின் அளவு குறையும். இந்த நேரத்தில் நுரையீரல் சுருங்குவதால், வெளிக்காற்றின் அழுத்தத்தை விட அதிக அழுத்தம் ஏற்பட்டு, நுரையீரலிலிருந்து வெளிப்படும் காற்று வெளிமூச்சாக வெளியேறுகிறது.

"கனிமப் பொருள் அறிஞர் சுந்திரமூர்த்தி அவர்கள் கேட்ட வினாவிற்கு விடை அளித்தாயிற்று. அவர் கேட்காத ஒன்றும் இருக்கிறது. மூச்சு விடலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் உண்டு என்பது இன்னொரு தகவல். ஆண்களுக்கு உதரவிதான சுருக்கத்தால் மார்புக்கூட்டின் அளவு பெரிதாகிறது. பெண்களுக்கு விலா எலும்பு தசைகளின் சுருக்கத்தால் மார்புக்
கூட்டின் எல்லா பக்க அளவும் அதிகரிக்கிறது.

"நான் தமிழகத்தைச் சேர்ந்தவன். இந்த ஆய்வரங்கில் கலந்து கொள்வதற்காக அங்கிருந்து ரயிலில் வரும்பொழுது என்னுடன் பயணித்த திலகர் என்றொரு அறிஞர் எனக்கு சிநேகமானார். வெறும் ரயில் சிநேகத்தைத் தாண்டிய ஒன்றாய் பலதுறைபட்ட எண்ணப் பரிமாற்றல்களை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். எங்கள் உரையாடலில் குறுக்கிட்ட அவர் சொன்ன செய்தி ஒன்றையும் இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்தச் செய்தி தொடர்ச்சியான இந்த அமர்வில் சொல்வது பின்னால் வரும் உரைகளுக்கு தொடர்புடையதாகவும் உபயோகமாகவும் இருக்கலாம். அந்த அடிப்படையில் இந்தத் தகவலையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலில் சொல்கிறேன்.

"டாக்டர் ஜேக்கப் க்ரெளன் என்று பெயர் கொண்ட அமெரிக்க ரேடியாலாஜிஸ்டை பலருக்குத் தெரிந்திருக்கலாம். இவர் எடுத்த
ஒரு புகைப்படம் உலகப் பிரசித்திப்பெற்றது. நண்பர் திலகர் அதுபற்றிச் சொன்ன தகவலையும், டாக்டர் ஜேக்கப் கிரெளன் தமது ஆராய்ச்சி ஒன்றிற்காக எடுத்த அந்தப் புகைப்படத்தைப் பற்றியும் சொல்கிறேன்.

"தன்னைத் தேடிவந்த நண்பர் ஒருவரை தமது லாப்பில் இருந்த ஒரு நாற்காலியில் அமர வைத்தார் டாக்டர் ஜேக்கப். கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கு மேலாக அவருடன் உரையாடிவிட்டு அவர் சென்ற பிறகு, நண்பர் இத்தனை நேரம் உட்கார்ந்திருந்த காலி நாற்காலியை இன்ஃப்ரா ரெட் போட்டோ கிராஃபி மூலம் படம் பிடித்தார்.

"என்ன ஆச்சரியம்! எடுத்த படத்தில் ஒருவர் அமர்ந்திருக்கும் வாகில் நாற்காலியை அடைத்துக் கொண்டு அடர்த்தியாக புகைபோல் வெண்மையாய் விழுந்திருக்கிறது. விஷயம் என்னவென்றால், அவர் நண்பர் நாற்காலியில்
உட்கார்ந்திருந்த நேரத்தில் அவர் உடலிலிருந்து வெளிப்பட்ட மின்கதிர் அலைகள் நாற்காலியில் படர்ந்து தேங்கிவிட்டது.

"இந்த இன்ஃப்ரா ரெட் போட்டோ, பிலடெல்பியா டாக்டர் ஜேக்கப் கிரெளனின் தொடர்ந்த ஆராய்ச்சியில் பிற்காலத்தில் பெரும் பங்கு கொண்டது. இறுதியில் இறந்துபட்ட பிறகும் ஒரு மனிதனின் மின்கதிர் அலைகள், அவன் உண்டு உறங்கி உயிர்சுமந்து உலவி வாழ்ந்த வீட்டில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அழியாமல் இருக்கும் என்கிற முடிவுக்கு வருகிறார் டாக்டர்
ஜேக்கப்."

உயிரியல் அறிஞர் உலகநாதன் பேசி முடித்ததும், நெடுநேரம் அவை மொத்தமும் உரைந்து போனாற்போல் அமைதி காத்தது. அந்த நீண்ட அமைதியைக் கலைப்பது போல், கிருஷ்ணமூர்த்தி மேடையேறி, மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு இன்னும் ஆச்சரியமான பல தகவல்களைக் கொண்டு இந்த உரையின் தொடர்ச்சி தொடரும் என்று அறிவுறுத்தியதும், லேசான சலசலப்புடன் அவை கலையத் தொடங்கியது.

(தேடல் தொடரும்)

Friday, March 6, 2009

ஆத்மாவைத் தேடி....36

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....


36. டெல்லிப் புறாக்கள்


ண்ணு, ரெண்டு, மூணு என்று மனசுக்குள் விசில் ஒலியை எண்ணிக் கொண்டே வந்து ஐந்து ஆனதும் சமையலறை நுழைந்து குக்கரை நிறுத்திவிட்டு வந்தாள் ராதை.

அவள் முகத்தில் புன்முறுவல் தவழ்ந்து கொண்டிருந்தது. மாலு அதைப் பார்த்துவிட்டு,"என்ன, ராதை! உனக்குள்ளேயே சிரிச்சிக்கற மாதிரி இருக்கு?" என்றாள்.

"ஆமாக்கா.. நானே அதைப்பத்தி நெனைச்சிண்டே இருந்தேன். அது எப்படித்தான் தெரிஞ்சதோ, டெல்லிலேந்து லால்குடிக்குப் போன் பண்ணி அவர் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்! அரியலூர், டெல்லி, லால்குடி... ஒருத்தர் நினைப்பு கூட ஊர் ஊரா சுத்துமா, அக்கா?"

ஆய்ந்த கீரையை முறத்தில் ஒதுக்கி வைத்து விட்டு நிமிர்ந்தாள் மாலு.
"நீ நெனச்சு தான் கிருஷ்ணா சொல்லணுமா? ஏன் அவனே நெனைச்சுச் சொல்லியிருக்கக்கூடாதா?"

"அப்படி கூட இருக்கலாம். அதே நேரத்திலே அதையே நானும் நெனைசிண்டிருந்தேனே, அதைச் சொல்றேன்க்கா..அத்திம்பேர் குளிச்சிட்டு ஜபம் பண்ணிட்டு வரட்டும்; அவரை விட்டுச் சொல்லச் சொல்லலாம்னு நெனைச்சிண்டிருந்தேன். அதுக்குள்ளே டெல்லிலேந்து லால்குடிக்குப் பேசி, சுலோ நம்மகிட்டே பேசியும் ஆச்சு."

"அம்மா... கத்திரிக்காய் குழம்புக்குத்தானே அலம்பி வைச்சிருக்கேள்?.. நான் நறுக்கட்டுமா?" என்றபடியே அரிவாள்மணையோடு சுபா ஹாலுக்கு வந்தாள்.

"நல்லவேலை செஞ்சே, சுபா! மொதல்லே அந்த அரிவாள்மணையை இங்கே கொண்டு வந்து வை" என்று கண்டிப்புடன் சொன்னாள் மாலு. "இந்த நறுக்கறது, வெட்டறதுங்கற சமாச்சாரமெல்லாம் கொஞ்ச காலத்துக்கு வைச்சிக்காதே.. ஆகாது. அதுனாலே தான் சொல்றேன். வெண்ணைப் பானையை உருட்ட ஒரு கிருஷ்ணனைப்பெத்துக் கொடு. அது போதும்."
சுபா வெட்கத்துடன் தலைகுனிய, "ராதை! சட்டுனு குழந்தையோட தாத்தா பேரே வாய்லே வந்திடுத்து, பாத்தையா?.. நிச்சயம் ஆம்பளைப் பயல் தான்" என்றாள் மாலு.

"உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும், அக்கா! அதுசரி, இந்தக் காலத்லே ஏது வெண்ணைப்பானை?.. ஆவின் வெண்ணை பாக்கெட் தான் திருச்சிலேந்து வாங்கிண்டு வந்தது பிரிட்ஜ்லே இருக்கு" என்று சிரித்தாள் ராதை.

"வெண்ணைன்னதும் ஞாபகம் வந்தது. வெண்ணை காய்ச்சணும்."


"நான் போய் அதைச் செய்யறேம்மா.. நீங்க பேசிண்டிருங்கோ.." என்று திரும்பினாள் சுபா. "இந்தா, சுபா! ரெண்டு கொத்து முருங்கை இலையும் எடுத்து வைச்சுக்கோ..மறந்திடப் போறது" என்று மாலு முருங்கை இலையை எடுத்துக் கொடுத்தாள்.


சிவராமன் ஜபம் முடித்து பூஜை அறையிலிருந்து ஹாலுக்கு வந்தார்.

"அத்திம்பேர்! நான் கிளம்பட்டுமா?" என்றபடி காலை டிபன் முடித்து ஆபிஸிற்க்கு கிளம்ப தயாராக அர்ஜூன் ஹாலுக்கு வந்தான்.

"சரி, அர்ஜூன். என்னன்னவோ கதையெல்லாம் பேசிண்டு ராத்திரி தூங்கறத்துக்கு ரொம்ப நேரம் ஆயிடுத்து, இல்லையா?.. லால்குடியிலேந்து சுபாவோட அப்பா-அம்மாபேசினா. நீ அசந்து தூங்கிண்டு இருந்தே.. அதான் டிஸ்டர்ப் பண்ணலே.."

"அம்மா சொன்னா அத்திம்பேர். அப்பாவும் அவா கிட்டே பேசிட்டாராம். நான் ஆபிஸூக்குப் போய் சந்தோஷ சமாச்சாரத்தை அவா கிட்டே பகிர்ந்திக்கறேன்."

"கரெக்ட், அர்ஜூன். சுபாவைப் பாத்துக்கோ.. நாங்களும் டெல்லிலே அப்பாவைப் பாக்கறோம். அங்கேயிருந்து பேசறோம்."

"சரி, அத்திம்பேர்!.. நானும் ஸ்டேஷனுக்கு வந்திடுவேன். உங்களைப் பாக்கறேன்."

"சரி. உனக்கு நேரமாச்சு. கிளம்பு"ஹால் பென்ஞ்சில் இருந்த சின்னத் தோல்ப்பையை எடுத்துக்கொண்டு அர்ஜுன் கிளம்பினான். அர்ஜூன் நல்ல உயரம். வாட்டசாட்டமாக நெடுநெடுவென வளர்ந்திருந்தான். வெளி நடைபாதையைத் தாண்டும் பொழுது தலைகுனிந்து தான் போக வேண்டியிருந்தது. பக்கத்திலேயே ஸ்டேஷன். பொடிநடையில் போய்விடலாம்.

"சாயந்திரம் கிளம்பிடுவோம், இல்லையா? ஒருவாரப் பழக்கம் தான். ஆனா எங்கே போச்சுங்களோ, காணோமே பாக்கணுன்னு இருக்கு" என்று சொல்லிக்கொண்டே கீரை ஆய்ந்த இடத்தையும் முற்றத்தையும் சுத்தம் பண்ணிவிட்டு கைலம்பித் துடைத்துக்கொண்டு மாலு ஹாலுக்கு வந்தாள்.

"யாரைச் சொல்றே?"

"அதான்னா.. அந்த ஜோடிப்புறாகளைத் தான். கழுத்திலே வளையத்தோடு சாம்பல் நிறத்லே என்ன அழகாக இருந்ததுகள். ரெண்டு நாளா அதுகளை இந்தப் பக்கமே காணோமேன்னு இருக்கு. எங்கே போச்சோன்னு பாவமா இருக்கு.. சலிச்சிண்டு நா திட்டினதுதான் புரிஞ்சிண்டு இங்கே வருவானேன்னு போயிடுத்தோன்னு குத்த உணர்வாவும் இருக்கு."

கலகலவென்று சிரித்தார் சிவராமன். "சொன்னா ஆச்சரியப்படுவே நீ!
நீ டெல்லி போகப்போறேன்னு தெரிஞ்சிண்டு, உன்னை அங்கே ரிஸீவ் பண்ண உனக்கு முன்னாடியே அதுகள் டெல்லி போயாச்சு!"

மாலு கண்களை அகல விரித்தாள். "என்னன்னா சொல்றேள்?"

"ஆமாம், மாலு! அந்த ரெண்டு புறாவும் டெல்லிலேந்து தான் இங்கே வந்ததாம். வருஷாவருஷம் இந்த ஸீஸன்லே வந்து ரெண்டு வாரத்லே திரும்பிடுமாம். இப்படி ரெண்டு மூணு வருஷமா நடக்கறதாம்."

"ஹிண்டுலே படிச்சேளா?"

"இல்லே. சம்பந்தப்பட்டவா சொல்லித் தெரிஞ்சது."

"ஆச்சரியமான்னா இருக்கு.. பறவைகள்லாம் வேடந்தாங்கலுக்கு வரும்னு கேள்விப்பட்டிருக்கேன். இப்போ அரியலூருக்கும் அப்படி ஒரு மவுசு வந்திடுச்சா?"

"வேடந்தாங்கல் விஷயம் வேறே மாலு! அது உலகம் சுற்றும் திருவிழா! ஆனா இந்த புறாக்கள் ரெண்டும் டெல்லிலேந்து வர்றதாம். காலம்பற வாக்கிங் போறச்சே தெரிஞ்சது"

"ராதை! சுபா! அத்திம்பேர் ஒரு நியூஸோட வந்திருக்கார், பாரு. வாங்கோ இங்கே." என்று உள்பக்கம் பார்த்துக் குரல் கொடுத்தாள்.

"அப்படியா?.." என்று ஹாலுக்கு ராதை வர, தொடர்ந்து சுபா.

"இப்போ சொல்லுங்கன்னா.. சுவாரஸ்யம்மான ஒண்ணுன்னா, அதை ரெண்டு மூணு பேர் சேர்ந்து ஒரே சமயத்லே கேட்டா அது இன்னும் சந்தோஷம். நீங்க கேட்ட நியூஸை நீங்களே சொன்னாத்தான் அது சரியா இருக்கும். இப்போ சொல்லுங்கோ."

"என்ன மாலு.. கேட்ட செய்திக்கு நீயே சுவாரஸ்யத்தைச் சேர்த்திடுவே, போலேயிருக்கு."

"நீங்க ஆரம்பிக்கறச்சேயே தெரிஞ்சிடுத்து. உங்க கதைங்க மாதிரி நிச்சயம் இதுவும் சுவாரஸ்யமாத்தான் இருக்கும்னு."

"ஓ.. கண்ணு மூக்கு வைக்காம கேட்டதை அப்படியே சொல்லிடறேன்..."

"கண்ணு மூக்கு வைச்சாலும் சரியே.. எனக்கு சுவாரஸ்யமா இருக்கணும். அவ்வளவுதான்."

ராதை சிரித்து விட்டாள். 'நல்ல தம்பதிகள்.. வாழ்க்கையை எத்தனை வருடங்கள் ஆனாலும் சரி, அணுஅணுவா ரசிக்கற தம்பதிகள்' என்று நினைத்துக் கொண்டாள்.

"சொல்லட்டுமா.." என்று ஆரம்பித்தார் சிவராமன்.

(தேடல் தொடரும்)
Related Posts with Thumbnails