‘காவல்கோட்டம்’ நாவலுக்காக சாகித்ய அகாதமி பரிசு பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசனின் புதிய வரலாற்றுத் தொடர்கதை சமீபத்தில் ஆனந்த விகடன் இதழில் துவங்கியுள்ளது.
‘வீரயுக நாயகன் வேள் பாரி’ என்றுத் தலைப்பிட்டிருப்பதால் பரம்பு மலையை ஆண்ட கடையெழு வள்ளல்களில் புகழ்பெற்றவரான பாரி வள்ளலை நாயகனாகக் கொண்ட நாவல் என்று தெரிகிறது.
‘பாணர்களின் நாயகன்’ என்றுத் தலைப்பிட்ட அத்தியாயத்தின் தொடக்க வரியே இப்படி ஆரம்பிக்கிறது
இது சுமார் முன்னூறு ஆண்டுக்காலக் கதை.
அப்போது வடவேங்கடம், தென் குமரி என்று தமிழ் நிலத்திற்கு எல்லையோ, பெயரோ கூட உருவாகிவிடவில்லை.
அடர்ந்த வனத்தில், ஆற்றுப்படுகையில், வண்டல் பூமியில், வற்றிய பாலையில், கடலோரத்தில், மலைமுகட்டில் என வெவ்வேறு வகையான நிலங்கள் தோறும் இனக்குழுக்காளாக சேர்ந்து வாழ்ந்த மக்கள் தங்கள் குல முறைப்படியான வாழ்வை நடத்திக் கொண்டிருந்தனர். அரசோ, அரசனோ உருவாகிவிடவில்லை. குலத்தலைவன் மட்டுமே இருந்தான். அவனே குலங்களை வழி நடத்திக் கொண்டிருந்தான்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களிலும் நூற்றுக்கு மேற்பட்ட மனிதக் கூட்டங்கள் தங்களின் தனித்த அடையாளங்களோடு செழித்திருந்தன. இயற்கையோடு இயந்த வாழ்வு. தேவை மட்டுமே ஆசையாகவும் கனவாகவும் இருந்தது... வேட்டையாடிய உணவை நெருப்பில் சுட்டு தின்று கொண்டிருந்த போது, குகையில் இருந்த பெண்கள் ஓய்வு நேரத்தில் நீரைக் கொதிக்க வைத்து இறைச்சியை அதில் வேக வைத்தனர்...
----என்று ஆதிமனித குகை வாழ்க்கை பழைய கற்காலத்திலிருந்து ஆரம்பித்து,
குலத்தலைவர்களும் சிற்றரசர்களும் பாணர் சமூகத்தை அரவணைத்து அள்ளித் தந்தனர். அவர்களின் ஆற்றலையும் வள்ளல் தன்மையையும் பாணர்கள் விடாமல் பாடினர்.
இப்போது வள்ளல்களில் தலைநாயகனாக பறம்பு நாட்டை ஆளும் வேள்பாரி இருந்தான்.
---- என்று பாரிவள்ளல் காலத்திற்கு ஆசிரியர் வருகிறார்.
பல தடவைகள் திருப்பித் திருப்பி வாசித்தும் ஆசிரியர் குறிப்பிடும் அந்த முன்னூறு ஆண்டுக் கதைக் காலம் எதுவென்று புரிந்து கொள்ள முடியவில்லை.
நம் பதிவர் குடும்பத்தில் வரலாற்று நூல்களை வாசிப்போர் எக்கச்சக்கம்.
தெரிந்தவர்கள், புரிந்தவர்கள் பின்னூட்டமிட்டு என் வாசிப்பு ரசனைக்கு உதவலாம்.
இது லா.ச.ராவின் நூற்றாண்டு.
லா.ச.ரா. அம்பாள் உபாசகர். அம்பாளில் தாயார் தரிசனம். அவரைப் பொறுத்தமட்டில் அத்தனையுமே சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள். சகுந்தலை, அபிதா, தரிசினி, ஜனனி, தயா, அஞ்சலி, கங்கா என்று வித்விதமான நாமங்களில் வர்ணக் கோலங்கள்.
அடிப்படையில் நான் செளந்தரிய உபாசகன் என்று லா.ச.ரா.வே சொல்லியிருக்கிறார். அவர் எழுத்தின் ஆழ்ந்த வாசிப்பும் ஏதோ சக்தி பூஜையை ஆரம்பித்து முடித்தது போல இருக்கும். அவர் கதைகளின் வாசிப்பின் ஊடே உள்முக தரிசனமாய் மீண்டும் மீண்டும் ஒருவித லய சுத்தத்துடன் புரண்டு வரும் வார்த்தைகளுக்கும் மந்திர உச்சாடங்களுக்கும் வேறுபாடு காண முடியாத நெருக்கத்தில் இருக்கும்.
ல.ச.ரா.விற்கு சடங்களிலோ, சம்பிரதாயங்களிலோ துளியும் நம்பிக்கை இருந்ததில்லை என்று அவர் துணைவியாரே சொன்னதாக சமீபத்தில் ஒரு பத்திரிகைப் பேட்டியில் படித்தது ரொம்ப நாட்களாக உறுத்தலாக இருந்தது. ஏனென்றால் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் சுற்றிச் சுற்றி நெய்யப்பட்டதாகவே லா.ச.ரா.வின் எழுத்து இருந்தது.. குடும்ப வட்டத்தை விட்டு வெளிவராத எழுத்தில் பூஜைகள், குத்து விளக்கு, தீபச்சுடர், அதன் குதியாட்டம், மந்திர உச்சாடனங்கள் போன்ற வார்த்தைத் தெரிப்புகள் என்று பக்கத்திற்குப் பக்கம் பின்னலிடப்பட்டிருந்தன. சடங்குகளில் அவருக்குத் துளியும் நம்பிக்கை இல்லை என்பது நினைத்தே பார்க்க முடியாத ஒன்று. அப்படி இருக்குமேயானால் தனக்கு கொஞ்சமும் நம்பிக்கையில்லாத ஒன்றை வாழ்நாள் முழுதும் கதைக்காக கதை பண்ணினவராய் ஆகிப்போவார். . லா.ச.ராவின் எழுத்துக்கள் அவாது உணர்வில் புடம்போடப்பட்டு விதிர்விதிர்த்து வார்த்தைகளானவை. அதனால் அப்படி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.
ஒரு பேட்டி என்பதினால் பேட்டி எடுத்தவரின் புரிதலுக்கேற்ப வார்த்தைகள் மாறுபடுவதற்கு
வழியிருக்கிறது. நான் அப்படிச் சொல்லவே இல்லை என்று பேட்டி வெளிவந்த பிறகு பேட்டி கொடுத்தவர் சொன்ன உதாரணங்களையும் நாம் நிரம்பவே பார்த்து விட்டோம்.
'கல்கி' நவம்பர் 6 இதழில் லா.ச.ரா.வின் புதல்வர் சப்தரிஷி தன் தந்தையைப் பற்றி எழுதியிருக்கிறார்.
வாலி தலைமையில் ல.ச.ரா.வுக்கு ஒரு பாராட்டுக்கூட்டம் நடந்ததாம். அப்போ ஒருத்தர் லா.ச.ரா.வைப் பார்த்து கேட்டாராம்.
"நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்?'
"என்னால் எழுதாம இருக்க முடியலே. அதனாலே எழுதறேன். நான் மெதுவாக எழுதுபவன் தான். ஆனால் எழுதிக் கொண்டேயிருப்பவன். தெனம் சாதகம் பண்ணிண்டே இருக்கணும்.."
ஆமாம். லா.ச.ரா. மிகவும் மென்மையானவர் தான். இப்படியெல்லாம் அச்சுப்பிச்சென்று கேள்வி கேட்பவர்கள் நாணும்படி பதில் சொல்ல லாயக்கானவர் ஜெயகாந்தன் தான்.
'நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்?' என்று ஜெயகாந்தனிடம் யாராவது கேட்டிருந்தால் சுரீரென்று பதில் வந்திருக்கும் என்று அந்த சந்தர்ப்பத்திற்கேற்ப நினைத்துக் கொண்டே மேலே படித்தபோது எழுதுவது பற்றி லா.ச.ராவே ஜேகேயிடம் கேட்ட ஒரு சம்பவம் பற்றி சப்தரிஷி சொல்கிறார்.
கலைஞன் பதிப்பகம் லா.ச.ரா., ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, கி.ரா.வுக்கு ரீடர் வெளியிட்ட விழாவில் ஜெயகாந்தனிடம் ல..ச.ரா. கேட்டாராம். "என்னப்பா, இப்பல்லாம் உன் எழுத்தைக் காண முடியறதில்லே?"
"எல்லாம் எழுதி முடிச்சாச்சு லா.ச.ரா." என்றாராம் ஜே.கே.
"என்ன நீ இப்படிச் சொல்றே? சரஸ்வதியே இன்னும் புஸ்தகத்தைக் கீழே போடாமே வெச்சிருக்காளேப்பா.."
ஜெயகாந்தன் வாஞ்சையுடன் லா.ச.ரா.வின் கைகள் மேல் கைவைத்து, "வாஸ்தவம் தான்" என்றாராம்.
எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்ற படைப்பிலக்கிய பிர்மாக்களிடம் ப்ரேமை கொண்டவர்கள் யார் என்று கேட்டால், சட்டென்று அவர்களுக்கென்று அமைந்து போகும் வாசகர்கள் தான் என்று பதில் சொல்லி விடலாம்.
பத்திரிகைகளுக்கு அந்தப் படைப்பிலக்கிய ஆளூமைகளுடன் அவர்கள் எழுத்து அந்தந்த பத்திரிகைகளில் வெளிவரும் காலத்தில் ஏற்படும் வியாபாரத் தொடர்பாக இருக்கலாம். அதைத் தாண்டி தம் எழுத்தால் பத்திரிகையின் சர்க்குலேஷனை உயர்த்திய, அந்தந்த பத்திரிகைகளுக்கென்று அமைந்து போன எழுத்தாளர்களை பத்திரிகைகளும் அவ்வளவாக நினைவில் வைத்துக் கொண்டிருப்பதில்லை. தம் பத்திரிகையோடு நெருக்கமாக சம்பந்தப்பட்ட அமரான எழுத்தாளர்களின் நினைவு தினங்களில் அவர் புகைப்படம் போட்டு அவர் எழுத்தாற்றல் பற்றிக் குறிப்பிட்டு நினைவு கொள்ளலாம். இப்படிச் செய்வது எழுத்துத் தொடர்புள்ள இந்தத் தலைமுறைக்கு அந்தத் தலைமுறையுடான ஒரு உறவுத் தொடர்பாகவும் அமையும். ஆனந்தவிகடன் என்றால் தேவனும், குமுதம் என்றால் ரா.கி.ரங்கராஜனும் நினைவுக்கு வருவது வாசகர்களுக்குத் தான் போலும்.
பெரும்பாலான படைப்பாளிகளின் குடும்பத்தினருக்கு அப்பா, தாத்தா, கணவன் என்று அந்தப் படைப்பாளியிடம் கொண்ட குடும்ப உறவைத் தான் முக்கியமாக உணர்கிறார்கள். சில எழுத்தாள குடும்பங்களில் அலுவலகத்திற்குப் போய் சம்பாதிப்பது போல எழுதுவதை ஒரு உத்தியோகமாக எண்ணுகிறார்கள். சம்பாதிப்பதற்கான ஒரு வழி இது என்று சில எழுத்தாளர்களே தங்கள் எழுத்தைப் பற்றி நினைக்கும் பொழுது இதைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. பிரபல சில எழுத்தாளர்களின் குடும்பத்தினர் அவர் எழுதிய எதையையும் படித்ததில்லை என்பது ஒன்றும் பிரம்ம ரகசியமில்லை. சிலர் இதை வெளிப்படையாகவே சொல்கிறார்கள்.
இதையெல்லாம் பார்க்கும் அவர்களின் அத்யந்த வாசகர்களுக்கு மனம் வெறுத்துப் போகலாம். புத்தகம், வாசிப்பு, அவை பற்றிய விமர்கசனங்கள், எண்ணங்கள் என்று தாம் தான் புத்தி பேதலித்துத் திரிகிறோமொ என்ற எண்ணம் கூட வரலாம்.
ஆனால் அவையெல்லாம் ஷணநேர மயக்கங்கள். வாசிப்பை நேசிக்கும் எவர்க்கும் அந்த வாசிப்புப் பழக்கத்திலிருந்து விலகுவது அவ்வலவு லேசான காரியமில்லை.
போதைப் பழக்கங்களிலிருந்து விடுபடுதல் அவ்வளவு சுலபமான காரியமில்லை என்று சொல்வார்கள். வாசிப்பை நேசிப்பதும் அது போல ஒன்று தான். வாசிப்பு ஆரோக்கியமான ஒரு போதைப் பழக்கம் என்று கூட செல்லமாக அதன் மேல் மேலான காதல் கொள்ளலாம்.
புகைப்படங்கள் நல்கிய நண்பர்களுக்கும் நன்றி.