மின் நூல்

Tuesday, March 31, 2020

மனக்கோலங்கள் கொண்ட மெளனி

மிழ்  எழுத்துலகிற்கு  தற்செயலாக  வந்தவர் தான் மெளனி.  மெளனியைப் பொறுத்த மட்டில் எல்லாமே தற்செயல் தாம்.

இவர் எழுத வருவதற்கு தூண்டுகோலாகவும் முழுமுதற் காரணமாகவும் இருந்தவர் 'மணிக்கொடி'  பி.எஸ்.ராமையா அவர்கள்.  தமிழில் எழுதுவது பற்றி எந்த நோக்கமும் இல்லாது இருந்த சுப்ரமணியனை ஊக்குவித்து அவரை எழுதச் சொல்லிக் கதையைப் பெற்றவர்,  'மெளனி'  என்கிற புனைப் பெயரையும் அவருக்குச் சூட்டி பெற்ற கதையை மணிக்கொடியில் பிரசுரித்தார்.  அப்படி அவர் பிரசுரித்த கதைக்குப் பெயர்  'ஏன்?'.  இதுவே தமிழில் மெளனியின் முதல் கதை ஆயிற்று.

மெளனியின் 'ஏன்?'  எழுப்பக் கூடிய கேள்வியே மிகப் பெரிதாய் நீண்டு விடை காண முடியாது நிலைகுலைந்தது. பதினாலு வயதுச் சிறுவன் மாதவன் பள்ளி முடிந்து வீட்டுக்குப் போகையிலே  தனது வகுப்புத் தோழி சுசீலாவிடம் தன் மனக்கட்டுப்பாட்டை இழந்து விட்டவன் போன்று, "சுசீ! நானும் வீட்டுக்குத் தான்.  சேர்ந்து போகலாமே?"  என்று பொருத்தமில்லாமல் கேட்கிறான்.

இதைக் கேட்டதும் சுசீலா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்து புருவங்களை உயர்த்தி  வியப்புடன்  கண்கள் விரியப் பார்த்தது,  'ஏன்?'  என்று  அவனைக்  கேட்பது போலிருந்தது.  இந்த 'ஏன்?'  அந்தப் பையனை பிசாசு போலப் பற்றிக் கொள்கிறது.   அதன் பின் இருவர் மனத்தையும் ஆட்டிப் படைக்கிறது.   அதோடு விட்டதா?..  இந்த  'ஏன்?' அவர்கள் சம்பந்தப்பட்டது  என்பதைத்  தாண்டி  வெளியுலகிலிருந்தும்  அவர்கள் எதிர்கொள்ளும் ஒன்றாக  வியாபிக்கிறது.  ஏன், எப்படி,  எதற்காக  என்று விடைப்புடன் நிமிர்ந்து நிற்கும் கேள்விகளுக்கு விடையில்லை.   அதற்கு மேலான கதையை நடத்திச் சென்று,   இதற்கு மேலான  யோசிப்பை  வாசிப்பவரிடம் விட்டு விடுகிறார்  மெளனி.

மெளனியின் கதையுலகம்  தனித்தன்மையானது. சிலந்தியென தன்னைச் சுற்றி  தானே பின்னிக் கொண்ட வலையிழைகள்  தாம் இவரது அத்தனை கதைகளும்.  மெளனிக்கு வார்த்தைகள் மிக மிக முக்கியம்.  ஒவ்வொரு வார்த்தையிலும் அவர் விரும்புகிற அர்த்தத்தைப் புதைத்து வைத்திருப்பார்.  புதைத்திருப்பது எது என்று கிளறிப் பார்ப்பவர்களுக்கு  புரிதலும் பல சமயங்களில்  அசாத்தியமான காரியமாக அமைந்து விடுவதும் உண்டு.,

இதெற்கெல்லாம் மெளனியையும் குறை சொல்லி விட முடியாது.   அத்தனை கதைகளையும்  தனக்காகத் தான்  எழுதிக் கொண்டாரோ  என்று கூடத் தோன்றும்.  அவரிடமிருஜ்து யாரோ  வலுக்கட்டாயமாகப் பிடுங்கி பிரசிரித்து விட்ட மாதிரி   அப்படியொரு தோற்றம். 

அவரது பெரும்பாலான கதைகளும்  'அவன்'  அல்லது 'அவள்' தான் கதைகளின்  நாயக,  நாயகிகள்.  தனக்குள் தோய்ந்து தான் சுமந்த நினைவுகளை  தான் விரும்புகிற போக்கில் சாவதானமாக  தனக்குள்ளாகவே மீட்டிப் பார்க்கிற மாதிரியான  'அவன்';  அதாவது   அவனாகிய    அவர்,    அவர் , அவனாகி  தன் அக உணர்வு  நிலைகளை  அவன் தோள் மாற்றி  சுமக்கச் செய்து  தன் மனச்சுமைகளைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்.

அவரது 'அழியாச்சுடர்'  லேசில் மறக்க முடியாத கதை.

தன்னையும் அறியாத ஒரு உத்வேகத்தில் ஒருவன் பெண்ணொருத்தியிடம்  உறுதிமொழி மாதிரி வெளிப்படுத்திய  வார்த்தைகளை பல  ஆண்டுகளுக்குப் பின்னும் நினைவில் நிறுத்திக் கொண்டு  புழுங்கும் கதை அது.   இத்தனைக்கும் அவள் மிக நெருக்கத்தில் அவனருகில் இருக்கும் பொழுது தான் அவன் அதை அவளிடம் சொன்னான்.

கோயில் சந்நிதி என்பதால்  சுற்றி பலர் இருந்தனர்.என்பது வாஸ்தவம் தான்.  இருந்தும் அந்த சூழ்நிலையில்  யாரும் இதைக் கேட்டிருக்க முடியாது.   இருந்தும் கோயிலில் ஈஸ்வரன்  சந்நிதிக்கு  முன் இதை அவன் அவளிடம் சொன்னதால்  உள்ளிருந்த விக்கிரகம்,  எதிர் தூணில் ஒன்றி நின்ற யாளி,  இதெல்லாம் அவன் சொன்னதைக்
கேட்டிருக்கும் என்று எண்ணுகிறான்.   கேட்டதை ஊர்ஜிதப் படுத்துவது போல  கீற்றுக்கு மேலே  சந்தனப் பொட்டுடன் வீபூதி அணிந்த அந்த விக்கிரகம்  உருக்கொண்டு புருவஞ்சுழித்து  சினம்  கொண்டது போலவும்,   தூணில் ஒன்றியிருந்த  யாளியும் மிக  மருண்டு பயந்து முகம் சுழித்து பின் கால்களில் எழுந்து நின்ரு பயமூட்டியதாகவும்  உணர்கிறான்.

மிஞ்சி மிஞ்சிப் போனால் அவளுக்கு   பதிமூன்று வயது இருக்கும்.     பின்னிய ஜடை பின் தொங்க,  மெதுவாகத் தன்னோடு  வந்தவர்களுடன் சதங்கைகள் ஒலிக்க அவள் போய்விடுகிறாள்.  பிராகாரத்தை அவன்  சுற்றி வருகையில் மீண்டும்  அவனைத் தனியே  பார்க்கிறான்.  அவளும் அவனைப் பார்க்கிறாள்.  'உனக்காக நான் எதுவும் செய்யக் காத்திருக்கிறேன். எதையும் செய்ய முடியும் என்று  அவளிடம் சந்நிதியில்  அவன்  சொன்ன வார்த்தைகளைத் திருப்பிக் கொள்ளும்படிக் கேட்டு அவள் அவனிடம்  கெஞ்சுவது போல அவள் பார்வை இருந்ததாக அவனுக்குத் தோன்றுகிறது.  அவளை நெருங்கும்  அவன் மறுபடியும்   ஒருதரம் 'என்ன வேண்டுமானாலும் உனக்காக..' என்று ஆரம்பித்து  முழுதும் சொல்லி முடிக்காமல் வேகமாகத் திரும்புகிறான்.

கிட்டத்தட்ட  ஒன்பது வருடங்கள் கழித்து  அவன்  கோயிலுக்குப் போகும் பொழுது  மறுபடியும் அவளைப் பார்க்க நேரிடுகிறது.    முன்பு அவளை அவன் பார்த்த மாதிரி இப்பொழுது அவள்   இல்லை.   ஒரு நவநாகரிகத் தோற்றம்.   'இதுவும் நல்லதுக்குத் தான்;    அப்பொழுது வேகத்தில் ஏதோ சொன்னதை  இப்பொழுது ஒரு பொருட்டாக அவள் எண்ண மாட்டாள் என்று அவன் நினைத்துக் கொள்கிறான்.

அதே சமயம் ஒருவித தியான நிலையில்  கடவுள் முன்  கைகூப்பி நிற்பவள் சடாரென்று திரும்பி அவனைப் பார்க்கிறாள்.    அந்தப் பார்வை அவள்,  அவனைக் கண்டு கொண்டு விட்டாள் என்று புலப்படுத்துகிறது.   அவள் பார்வை எதிரிலிருக்கும்  தூணில் படுகையில்  அவன் முன்பு அவளிடம் சொன்ன வாக்கின் அழியாத சாட்சியாக இருந்த அந்த
யாளியும்   எழுந்து நின்று  கூத்தாடுவது போல அவனுக்குத் தோன்றுகிறது.   ஆணை இடுவது போல அவள் பார்வை அவனை  ஊடுருவுகிறது.  என்ன நடந்தது என்று அவன் சுதாரிப்பதற்குள்   அவள்  போய் விட்டாள்.

இந்தக் கதையில் மெளனியின் பிரசித்தி பெற்ற் வாக்கியமான  'நாம்  சாயைகள்  தாமா?..  எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?'  என்ற வாக்கியம் வருகிறது.   அந்த வாக்கியத்தின் அடிப்படையில்  அவரவர் அவரவருக்குத் தோன்றிய  வழியில் இந்தக் கதையை  அவதானித்துக் கொள்ளலாம்.  ஏனெனில்  ஒன்றை ஒருவர் சொல்லும் வகை, இன்னொருவர் அவர் சொல்லும் வகையில் அர்த்தப்படுத்திக் கொள்ள வழி கோலலாம்.

மெளனியின் கதைகள் அந்தக் கதைகளுடான நேரிடையான பரிச்சயத்துடன் அர்த்தப்படுத்திக்  கொள்ள  வேண்டியவை.  அர்த்தச் செழுமையுடன் அவர்  பிரயோகிக்கும்  வார்த்தைகள் கொடுக்கும் அர்த்தங்கள்,  அவரவர் புரிதல்களுக்கு ஏற்ப எங்கெங்கோ  அழைத்துச்  செல்கின்றன.  ஒரு படிமத்தை  தீற்றலாகத் தீட்டிக் காட்டி விட்டு   'இனிமேல் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று  நம் பொறுப்பில் விட்டு விடுகிற மாதிரி படிப்பவர்களுக்கு  கட்டற்ற சுதந்திரத்தை  அளித்து அவர் ஒதுங்கிக் கொண்டு விடுகிறார்.   இந்த ஒதுங்கல் மெளனியின் கதைகளீல் விசேஷமாகத் தெரிகிறது..  இதுவே யாரிடமும் இல்லாத மெளனியின்  தனிச் சிறப்பாகவும் தெரிகிறது.

மெளனி பிறந்தது  தஞ்சை மாவட்ட செம்மங்குடியில்.    மெளனி கல்லூரியில் படித்தது  உயர் கணிதமும் தத்துவமுமே.  சாஸ்திரிய சங்கீதத்தில் வெகுவாக ஈடுபாடு  கொண்டவர்.  கும்பகோணத்திலும்  திருச்சியிலும் படித்தவர், சிதம்பரத்தில் வாழத் தலைப்பட்டார்.    அது என்னவோ தெரியவில்லை,  ஒருமாதிரியான வெறுமை சூழ்நிலை மெளனியின் ஆழ்மனத்தில் பதிந்து போய் விட்ட  உணர்வுகள் போலும்.    அத்தனை கதைகளிலும் தவறாது இந்த உணர்வுகளைப் பதிந்திருக்கிறார்.    வாழ்க்கை பூராவும் அதை வெல்வதற்கான உபாயங்களாகிப் போனவை அவரது கதைகள்.  பல கதைகளுக்கு  அவர் கொடுத்த தலைப்புகளும்  இந்த நிலையாமை உணர்வை பறைசாற்றத் தவறவில்லை.  மனதில் அடிக்கடி கவியும் இந்த உணர்வுகளுக்கு மாற்றாக  முகிழ்க்கத் துடிக்கும் காதலும் கைகூடாமல் போவதைக் கதைகளில் கூட தவிர்க்க முடிந்ததில்லை.


Saturday, March 28, 2020

அசோக மித்திரன் என்னும் எழுத்துக் கலைஞர்

ல்லோருக்கும் வாசிக்க நேரம் கிடைத்திருக்கிறது.    தொலைக்காட்சி பார்க்க நேரம் கிடைத்திருக்கிறது.  வீட்டில் அடைந்து கிடைக்கும் நேரத்தை உபயோகமாக எப்படி செலவிடலாம் என்ற யோசனையின் வெளிப்பாடு இந்தப் புதுப் பகுதி.     சென்ற தலைமுறை சார்ந்த நம் தமிழ் எழுத்தாளர்களின் என்னைக் கவர்ந்த சில கதைகளை இந்தப் பகுதியில் சொல்லலாம் என்று எண்ணம்.  கதை, கட்டுரை  எழுத ஆசைப்படுபவர்களுக்கு பயிற்சிக் களமாகவும் இருக்கும்.    வாருங்கள், நண்பர்களே!...

முதலில் ஒரு எலிக் கதை.   இந்தக் கதையை எழுதியவர் தமிழில் தன் முத்திரையைப் பதித்த எழுத்தாளர் அசோக
மித்திரன். 

லியொன்று ரொம்பவும் தொந்தரவு பண்ணிக் கொண்டிருக்கிறது.  ராத்திரி ஆச்சுன்னா சமையலறையில் ஒரே துவம்சம். 

அந்த வீட்டில் இரவு பலகாரம் என்றால் பெரும்பாலும் தோசையும்  உப்புமாவும் தான்.   எலிப்பொறி உள் கம்பியில் எப்படி உப்புமாவை மாட்டுவது?..  தோசையை வேண்டுமானால் பொத்தல் போட்டு மாட்டலாமா என்று அசோக மித்திரன் ரொம்பவே தமாஷ் பண்ணுகிறார்.

'எப்படியாவது அந்த எலியை இன்றைக்குப் பிடித்து விட வேண்டும் என்று சூளுரைக்கிற மாதிரி மனைவி போட்ட உத்தரவில் உடனே கணேசன் அந்த இரவில் பொறியில் வைக்க வடை எங்கே கிடைக்கும் என்று தேடித் திரிகிறான்.


பொதுக்கூட்டம் நடக்கும் ஒரு மைதானத்தை அவன் அடைந்த பொழுது எண்ணைய் சட்டியில் வடை போட்டுக் கொண்டிருக்கும்  ஒரு தள்ளு வண்டிக்காரனைப் பார்க்கிறான்.  அவனைச் சுற்றி நிற்கும் கும்பலில்  தானும் ஒருவனாக கணேசன் வடைக்காக வேண்டி நிற்கிறான்.  அவனானால்  நீர்மூழ்கிக் கப்பல் மாதிரி எண்ணையில் மிதக்கும் மிளகாய் பஜ்ஜியேப் போட்டுக்  கொண்டிருக்கிறான்.   அது முடிந்ததும் தான் வடை வேலை ஆரம்பிக்கும் போலிருக்கு.   வடைக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கும் கூட்டமும்  இடையில் கிடைத்த ஒரு தீனி சபலத்தில் பஜ்ஜியையும் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது.  ஒரு வழியாக பஜ்ஜி போடும் வேலையை முடித்தோ அல்லது நடுவில் நிறுத்தியோ  இதோ வடை போடுவதற்கான ஆயத்தங்களில் இறங்குகிறான்.

கணேசனுக்குத் தேவை இரண்டு வடைகள் தாம்.  அதுவும் அவனுக்காக அல்ல;  அந்த எலிக்காக.   எண்ணெயில் புரளும் வடையை ஜல்லிக் கரண்டியில் லாவகமாக நிமிர்த்தியும் அழுத்தியும்  தேர்ந்த கலைஞனைப் போல அவன் கையாளலைப் பார்த்துக் கொண்டு நிற்கிறான்.   தட்டில் எடுத்துப் போடுகையில் எனக்கு எனக்கு என்று கூட்டமே ஆலாய் பறக்கிறது.   கணேசனுக்கு அவர்களோடு நெருக்கியடித்து தானும் கைநீட்ட லஜ்ஜையாக இருக்கிறது.

அடுத்த ஈடு வடை எடுத்துப் போடும் போது எப்படியோ அந்த வண்டிக்காரனின் கவனத்தைக் கவர்ந்து அத்தனை நேரம் நின்றதற்கு ஒன்று கேட்டால் அவமானமாக இருக்கும் என்று சுடச்சுட பேப்பரில் பொத்தி இரண்டு வடைகளை வாங்கிக் கொண்டு  கணேசன் வீடு திரும்புகிறான்.

யார் முகத்தில் விழித்ததோ  தெரியவில்லை,  அன்று இரவு  அந்த எலி பொறியில் வசமாக மாட்டிக் கொண்டு விடுகிறது.

கொஞ்ச தூரத்தில் இருக்கும் மைதானத்தில் கொண்டு போய் விட்டால் அது வழி தெரிந்து திரும்ப கொஞ்ச நாளாவது ஆகும் என்ற தீர்மானத்தில்  கணேசன் மைதானத்திற்கு எலிப் பொறியைத் தூக்கிக் கொண்டு நடக்கிறான்.

இதோ, மைதானம் வந்து விட்டது.  பொறியை மைதானத்து மண் தரையில் வைத்து மெதுவாக  மூடிக்காம்பை  கணேசன் அழுத்தினான்.

எலி வெளியே வந்தது.

அது பெரிய எலியும் இல்லை மிகச் சிறியதும் இல்லை.   பரந்த வெளி பழக்கமில்லாமல் எலி தாறுமாறாக ஓடியது.   அப்போது எங்கிருந்தோ  காக்கை ஒன்று எலியை ஒரு முறை கொத்தி விட்டுப் போயிற்று.  எலி மல்லாந்து படுத்து துள்ளிற்று,  பிறகு  இன்னும் வேகமாக  தத்தி  தத்தி  ஓடிற்று.   காக்கை ஒரு சுற்று சுற்றி விட்டு  வேகமாக கீழிறங்கியது.   எலிக்கு பதுங்க இடம் தெரியவில்லை.  காக்கை எலியை அப்படியே கொத்திக் கொண்டு  தூக்கிச் சென்று விட்டது.  கணேசனுக்கு துக்கமாக இருந்தது. 

இன்னொன்றும் அவன் துக்கத்தை  அதிகரிக்கச் செய்தது.  பொறியைத்  தூக்கிக் கொண்டு வீடு திரும்ப ஆரம்பித்தான்.  பொறிக்குள் பார்த்தான்.   அவன் முந்தின இரவு கொக்கியில் மாட்டிய  வடை அப்படியே தின்னப்படாமல் இருந்தது.

--  என்று கதை முடிகிறது.

அந்தக் காலத்தில்  தமிழ் வகுப்புகளில்  'நயம் பாராட்டுதல்' என்று  ஒரு பகுதி உண்டு.  பெரும்பாலும் கவிதைகளைக் கொடுத்து  அதன் சிறப்புகளைச் சொல்கிற மாதிரி இது.

வாசிப்பின் நேர்த்தி எதையும் படித்ததோடு நின்று விடுவதில்லை.   படித்ததை மனசில் அசை போட்டு அனுபவிக்க வேண்டும்.  நாம் வாசிக்கற சமாச்சாரங்களும் அசை போடுகிற மாதிரி இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

இந்த எலிக் கதை என்னைப் பொருத்த மட்டில் அசோக மித்திரனின் பாணி கொடி கட்டிப் பறக்கிற அற்புதமான கதை.  சின்னச் சின்ன வரிகளில்  பெரிய எழுத்து வித்தையை நடத்துவார் அவர்.   'தேமே'னென்று  ஒன்றும் தெரியாத மாதிரி தான் சொல்றதை அலட்டிக்காமல் மனுஷர் சொல்லி விட்டுப் போய் விடுவார்.  அதைப் படித்து விட்டு நாம் படுகிற அவஸ்தை இருக்கிறதே... 

அந்தக் கடைசி வரி,  'அவன் முந்தின இரவு கொக்கியில் மாட்டிய வடை  அப்படியே தின்னப்படாமல் இருந்தது என்பது  தான் மொத்த கதையையுமே தாங்கி நிற்கிற தாங்குமிடம்.  அல்லது இந்த பரிதாபத்தை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்வதற்காகவே மொத்த கதையும்.

எலி அந்த வடையை யாவது  தின்று விட்டு செத்துப் போயிருந்தால்   இவன் மனசு கொஞ்சம் சாந்தப்பட்டிருக்கும்.  செத்தே போய் விட்ட எலி,  சாவதற்கு முன் வடையைத் தின்றிருந்தால் என்ன தின்னாவிட்டால் என்ன என்பது விவாதத்திற்கு  சரியாக இருக்கும்.  'அட செத்தது தான் செத்தது,  சனியன் வடையைத் தின்று விட்டு  செத்திருக்கலாமிலே'  என்பது பரிதாபம்.  அதுவும் நேற்றிரவு
மைதானத்தில் கால் கடுக்க நின்று  அவ்வளவு பாடுபட்டு அது தின்பதற்காகவே வாங்கி வந்த   வடை!

இந்தக் கதையில் இன்னும் நிறைய சிறப்புகள் இருக்கின்றன.  பின்னூட்டத்தில் தான் அவற்றைச் சொல்லுங்களேன்..

(அசோகமித்திரன்  பிறந்தது  ஆந்திரத்து  செகந்தராபாத்தில்.  இயற்பெயர்  தியாகராஜன்.   நமது பதிவுலக நண்பர்  கீதா சாம்பசிவம் அவர்களுக்கு சொந்த சித்தப்பா உறவு முறை.

கல்லூரி வாழ்க்கைக்கு பிறகான அசோக மித்திரனின் பிற்காலத்து  வாழ்க்கை  பூராவும் தமிழகத்திலேயே.  ஆரம்பத்தில்  அன்றைய 'ஆனந்த விகடன்' ஆசிரியரின் ஜெமினி ஸ்டூடியோவில்  மக்கள் தொடர்புத் துறையில் கொஞ்ச காலம் பணியாற்றினார்.  வெள்ளித்திரைக்கு  பின்னாலான  திரையுலகத்தினரின் வாழ்வின் சகல உணர்வுகளையும் சித்தரிக்கும்  இவரது  'கரைந்த நிழல்கள்'
புதினம் அந்த ஆரம்பகால ஸ்டூடியோ அனுபவங்களின் சாயலில் எழுதியது  தான்.  சினிமா வாய்ப்பு தேடி வந்த ஒரு நிஜப் புலிவேடக்காரரை நினைத்து எழுதிய கதை தான் இவரது  'புலிக்கலைஞன்'  சிறுகதையும்.)

Monday, March 16, 2020

வசந்த கால நினைவலைகள்...

                                                          49

ரம்பத்திலிருந்தே தன்  எழுத்து  நடையில் வித்தியாசம் காட்டியதால்  சுஜாதா கதைகள் என்றாலே வார்த்தைகளை அவர் எப்படி பின்னியிருக்கிறார் என்பதே முக்கியமாகிப் போய்விட்டது.   அதனால் அவரது காமா சோமா கதைகள் எப்பொழுதும் மனசில் முக்கிய இடம் பிடித்ததில்லை.   இதனால் தானோ என்னவோ  மற்றவர்கள் பெரும்பாலும் வாசித்து அறியாத அல்லது நினைவில் வைத்திருக்காத வித்தியாசமான கதைகளே என் நினைவில் இருப்பதாக ஆயிற்று. 

'மத்யமர்'  பன்னிரண்டு கதைகளில் முதல் கதையான 'ஒரு கல்யாண ஏற்பாடு' கதையில் ஒரு வரி வரும்.  'நரசிம்மன் கூடத்து அலமாரியில் இருந்த  ஹெரால்ட் ராபின்ஸ்  புத்தகங்களை நீக்கி  ஜே.கிருஷ்ணமூர்த்திகளை அடுக்கினார்' என்று வெகு சாதாரணமாக போகிற போக்கில் எழுதுகிற மாதிரி எழுதி விட்டுப் போய் விடுவார்.  நமக்கோ அதுவே அசாத்திய வேலப்பாடுகள் நிறைந்த வார்த்தை கோர்வைகளாகத் தெரியும்.    இந்த  ஒற்றை வரியை ரசிப்பதற்கு  ஹெரால்ட் ராபின்ஸ்  எழுத்து பற்றியும், ஜே. கிருஷ்ணமூர்த்தி பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.   ஒருவரின் குணாம்சத்தை  எதையோ சொல்லி எப்படி வெளிப்படுத்தி விட்டார்  என்று நமக்கு திகைப்பாக இருக்கும்.  அந்நாட்களில்  மனம் தோய்ந்து  சுஜாதாவை படித்த நினைவுகள் இவை. 

'தேடாதே'ன்னு  இன்னொரு குறுநாவல்.  கணபதி சுப்ரமணியம்  என்கிற ஜி.எஸ்.,   எம்.ஏ.  லிட்.,  சமூக அலைக்கழிப்பில்  தமிழ் பத்திரிகைகளுக்கு கவர்ச்சிப் படங்கள் சப்ளை செய்யும் போட்டோகிராபர்.  தொழில் முறையில் நிறைய பெண்களோடு பரிச்சயம் என்றாலும்  எல்லாரும்  அவன் நிக்கானின்  வ்யூ  ஃபைண்டரில் தெரியும்  எஸ்.எல்.ஆர். பிம்பங்கள் தாம்.   அன்றைக்கு தியாகராஜன் என்பவர் சொல்லி ஒரு குட்டி நடிகையை  ஒரு சில போட்டோக்களில் சிறைப்படுத்த  அவள் வீட்டிற்கு வந்திருக்கிறான்.

"கொஞ்சம் அப்படியே சாஞ்சுக்குங்க!.."
"இப்படியா ஸார்?"
"இல்லை..  கொஞ்சம் இடது பக்கமா..  தட்ஸ் இட்.  அப்புறம் மார்லே அந்த ஸாரியை லேசா..  ஓ.எஸ்.  போதும்!  ப்யூட்டிஃபுல்.  கொஞ்சம் சிரிங்க!  என் இடது கையைப் பாருங்க..  ரிலாக்ஸ்!  தட்ஸ் இட்!"

அப்பெர்ச்சர்  எஃப் 8.
ஸ்பீட்  125

காமிராவின் கழுத்தைத் திருக அந்தப் பெண் வ்யூஃபைண்டரில் தீட்டப்பட்டாள்.  அவளை நிறையவே பார்க்க முடிந்தது.

கிளிக்!

"தாங்க்ஸ்.  நீங்க டிரஸ் சேன்ஞ் பண்ணிகிட்டு வாங்க.."

"நீச்சல் உடை இருக்குதுங்க.... நல்லா இருக்கும்னு பேபி சொல்லிச்சு.."

"போட்டுக்கிட்டு வாங்களேன்.."

உள்ளே சென்றாள்.

வாசிக்கிறவரின் விழியோரங்கள் நீச்சல் உடையில் அந்த குட்டி நடிகையின் படத்தை ஜெயராஜ் போட்டிருக்கிறரா என்று சுவாரஸ்யமாக பக்கத்தைத் திருப்புகையில்...

நாம் வெளியே வந்து சுஜாதாவை   தீவிரமாக ஆராய்வோம்.      எழுத்து அதல பாதாள அளவுக்கு  இறங்காமல் அதே நேரத்தில்  லேசான கிறக்க  ஊஞ்சல் ஆட்டலில் வாரப் பத்திரிகை எழுத்துக்களில்  மனம் பேதலிப்பவர்களுக்காக..

--  இது தான் சுஜாதாவா?..  இல்லை; இல்லை!  இதெல்லாம் வாரப்பத்திரிகை  விற்பனைக்காக! (நம்புங்க..)     சினிமாக்கள்லேலாம் அந்தந்த  ரசிகர்களுக்குத் தக்க மாதிரி  சில பல ஐட்டங்கள் வைப்பார்கள் இல்லையா?...  அந்த மாதிரி...    வெள்ளை பேப்பர்களை கருப்பு மசியிட்டு போணியாக்குகிற  வாராந்தரி இண்டஸ்ட்ரி என்ற பகாசுர யக்ஞனத்தில் தானும் ஒருவனாய் தலை கொடுத்த எழுத்தாளனுக்கு எத்தனையோ நிர்பந்தங்கள்..

அப்போ நிஜ சுஜாதா?..     கொஞ்சம் இருங்கள்.  அந்தப் பெண் டிரஸ் மாற்றி வந்து விட்டாள்.

"ரெடி ஸார்!"

திரும்பினேன்.  நீச்சல் உடை பொருந்தியே இருந்தது.  கால்கள் நீளமாகவும்,  தொடை அரை படாமலும்,  சற்று வித்தியாசமானவள்.

"இது யார் ரூம்?" என்றேன்.

"என் ரூம் தான்!.."

"அப்ப இந்த புஸ்தகமெல்லாம் யார் படிக்கறாங்க?"

"நான் தான்.  ஏன்?"

ஏன் எப்படிச் சொல்வேன்?..  பெண்களில் உன் போன்றவர்கள் எல்லாம் 'ராணி'யில் படக்கதைக்கு மேல் படிக்க மாட்டார்கள். நீ எப்படி Zen  படிக்கிறாய் என்று கேட்பது அநாகரீகம்.  பேச்சைத் தவிர்.  காமிரா மூலம் பேசு.

"உக்காருங்க.."

உட்கார்ந்தாள்.  சின்ன மார்பும்,  இலை போன்ற வயிறும், நீண்ட கால்களும்..  நிதானமாக ஃபோகஸ் செய்தேன்.

"முழங்காலை முதல்லே கட்டிக்கங்க."

ஃபிளாஷ் கைடு நம்பர்  80 : 100  ஏ.எஸ்.ஏ.  பத்தடி தூரத்தில் எடுக்கிறோம் என்றால்  அபெர்ச்சர் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று மனக்கணக்குகளில் எண்ணங்களைக் கட்டாயப் படுத்தினேன்.  அவள் கலைத்தாள்.

"சிரிக்க வேண்டாம்."

"ஏன் நல்லா இல்லையா?"

"இந்த போஸூக்கு சிரிச்சா நல்லால்லே.."

"சிரிக்க வேண்டாம்னு சொன்னா சிரிப்பு வருது" என்றாள்.

"சிரியுங்க.. சிரிச்சு முடிச்சுட்டு வாங்க.  அப்புறம் எடுக்கலாம்."

"கோவிச்சுக்கறீங்களா?"

"என் தொழிலே கோபமே கூடாதுங்க!"

"என் தொழில்லயும்!"

"சிரிச்சாச்சா?"

"ஆச்சு.."

அவளோ  பி.ஏ.  லிட்.,  அவள் வீட்டு புத்தக அலமாரியில்  Zen and  the art of  Motor cycle maintenance   என்னும் புத்தகம் பார்த்த திடுக்கிடுதலில் அவளின் மீதான மதிப்பு அவனுக்குக் கூடி, அறிவுலக பிரஜைகளாய் இருவரும் பிணைக்கப்பட்ட சடுதியில்  அவர்களுக்கிடையே  காதல் மலர்ந்து  நிறைய மல்லாந்து... என்று கதை போகும்.   'கரையெல்லாம் செண்பகப் பூவி'ன் விட்ட குறை தொட்ட குறையாக  இந்தக் கதையில் ஆரம்பத்தில்  புவியரசுவின் கவிதையில் ஆரம்பித்து,  மு. மேத்தாவையும் தொட்டு,  'சேரும் முகவரி சரியில்லை;  அனுப்பிய முகவரியும் அதில் இல்லை;  ஒரு கடிதம் அனாதையாகி விட்டது'  என்ற புதுக்கவிதையைச் சொல்லி அதை யார் எழுதியது என்று யோசிக்க வைத்து,  ராபர்ட்  ஃப்ராஸ்ட்,  எரிக்கா யாங்,  ஈஸாப் கதைகள்,  ஜென் கதைகள்,  அலைஸ், எலிஸபெதன்  டிராமா,  Image  Processing,  கம்ப்யூட்டர்  டிஜிட்டைஸர்  என்று  நிறைய   அறிமுகங்கள் சிடைக்கும் என்று சொல்லி  விடுவது சுலபம்.   கதைப் போக்குக்கு   உறுத்தாமல்  இத்தனை சமாச்சாரங்களை தான் சொல்லுகிற விஷயத்தில் எப்படி உட்படுத்துகிறார் என்பது தான் சுஜாதாவின்  சாமர்த்தியம்.  ஒரு இடத்தில், "எனக்கு பேசற விஷயம் பெரிசல்ல,  ஜி.யெஸ்!.. பேசற முகம், அதனுடைய சலனங்கள்,  கண்கள்,  கைவிரல்கள்..  பேசுங்க.." என்று சொல்லி அயர வைப்பார்.

அதே மாதிரி தான் 'வண்ணத்துப் பூச்சி வேட்டை'யிலும்.  என்னவோ ஜிலுஜிலுன்னு ராஜபாட்டையில் போகிற சப்ஜெக்ட் தான்.  வேறு யார்  எழுதினும்  (அ)  வழக்கமான மாவரைப்பாக இருந்திருக்கும்;  (ஆ) சவசவக்க வைத்து சொதப்பி
இருப்பார்கள்;   (இ)  அத்தியாயம் அத்தியாயமாக கட்டுரை எழுதி கதை என்று பெயரிட்டு கொட்டாவி விட வைத்திருப்பார்கள்.  இந்த வண்ணத்துப் பூச்சியோ  சுஜாதாவின்  கைபட்டு சும்மா  சிட்டு போல சிறகடிக்கிறது.

இதிலும்,  எலிசா பிஷப்,   வாலஸ் ஸ்டீவன்ஸ்,  எமிலி   டிக்கின்ஸன், தாவ் தே சிங், டெரக் வால்காட் போன்றவர்கள் சொன்னதைச் சொல்லி  அதற்கிடையில்  ஆத்மா நாமையும்,   இளம்பிறையையும் நினைவு கொண்டு அவர்களின் துணுக்குக் கவிதைகளைத் தூக்கிப் பிடித்திருப்பார்.  இந்தப் புதினத்தில் தான்  சுகுமாரனின் 'அள்ளி கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்,  நதிக்கு அந்நியமாச்சு;  இது நிச்சலனம்.
ஆகாயம் அலைபுரளும் அதில்.  கை நீரைக் கவிழ்த்தேன், போகும் நதியில் எது என் நீர்?'  என்னும் கவிதை வரிகளை அங்கலாய்ப்புடன்  சொல்லியிருப்பார்.   அதுமட்டுமில்லை,   Bend  and you will be whole -   Cut and you will be straight  -  Keep empty and you will be filled - Grow old and you will be renewed..'  என்னும் லாவ்ட்ஸுவின் வரிகளை  அழகாக,  அதற்கான இடத்தில், அற்புதமாக, அர்த்தபூர்வமாக  எடுத்தாண்டிருப்பார்.

இதெல்லாம் தமிழுக்கு புதுசு.  இதையெல்லாம்  சொல்லாமல் அவரால் கதையை வெறும் கதையாக எழுத முடியாது.  தான் படித்து பரவசப்பட்டதையெல்லாம் சொல்வதற்காகத் தான் கதை -- கட்டுரை என்று அது  அதற்கேற்ற எழுத்து ரூபத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

'காகித சங்கிலிகள்',  'குருபிரசாத்தின் கடைசி தினம்'  மனதை உருக்கும் குறுநாவல்கள் பலருக்கு அறிமுகம் ஆகியிருக்கும் என்பதினால்  அவை பற்றிச் சொல்வதைத் தவிர்க்கிறேன்.

(வளரும்)

Thursday, March 12, 2020

வசந்த கால நினைவலைகள்..

                                                           48

சுஜாதா யார் என்று தெரியாமலேயே சுஜாதாவின் எழுத்து  நடையை மோஹித்தது தான் ஆரம்பத்தில்   நடந்தது.  இவர் தான் சுஜாதா என்று குமுத போட்டோ பார்த்து  மனசில் குறித்துக் கொண்டது எல்லாம் பின்னால் தான்.  நா.பா. கூட என்னிடம் சொல்லியிருக்கிறார்.. 'எழுத்தாளனுக்கு போட்டோ எல்லாம் எதுக்கு?.. எழுதுகிறவன்  மனத்தைப் புரிந்து கொண்டு அன்பு செலுத்தினால் சரிதான்'  என்று.  சொல்லப் போனால் அவர் சொல்வது தான் சரி.  சினிமா நடிகரைத் தவிர அத்தனை பேருக்கும் இது பொருந்தும்.  சினிமா நடிகரிடம் நெருக்கம் கொள்கிற  'அந்தஸ்த்தும்' அவ்வளவு இலகுவாக யாருக்கும் கிடைத்து விடாததும் ஒரு வகையில் நல்லதுக்குத் தான்.   அநாவசிய நேர விரயம் இல்லை.

அன்றைய வட ஆற்காடு மாவட்டத் திருப்பத்தூரில் நான் தொலைபேசி இலாகா பணியில் இருந்த காலத்தில் உள்ளூர் இலக்கிய  அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் எழுத்தாளர் சுஜாதா பேசுவதாக  இருந்தது.  மதியம் 3 மணி அளவில் கூட்டம்.   அன்று காலைப் பணி பார்த்தது செளகரியமாக இருந்தது.                         

மழ மழ பேண்ட்டில் தொள தொள சட்டை நுழைத்து ஒடிசலாக உயரமாக சுஜாதா..   கார்ப்பொரேட் அதிகாரி தோற்றத்தில் ஒரு தமிழ் எழுத்தாளரைப் பார்த்தது அந்தக் காலத்து அதிசயமாக இருந்தது.  உஷா சுப்பரமணியனும் கூட வந்திருந்தார்.  உ.சு.வின் 'மனிதன் தீவல்ல'  இப்போ கூட நினைவில் நிற்கிறது.  நா.பா. சொன்னது மாதிரி எழுத்தாளனின் இருப்பைத் தாண்டி அவர் எழுத்து முந்திக் கொள்ளும் ரகசியம் இது தான்.

அன்றைக்கு மெயின் பேச்சாளர் சுஜாதா தான்.  ஆரம்ப உரைகளுக்குப் பின் சுஜாதா பேச அழைக்கப்பட்ட போது கூச்சமுடன்  கூடிய உதடு  விரியும் புன்னகையில்  மைக் பற்றி "எனக்கு அவ்வளவாக பேச வராது..  கேள்வி--பதில்  மாதிரி வைத்துக் கொள்ளலாமா?" என்று சுஜாதா நெளிந்த பொழுதே 'நம்மில் ஒருவர்' தோரணையில் கூட்டத்தினருக்கு அவர் ரொம்பவும் நெருக்கமாகி விட்டார்.   வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று ஆரம்பித்து,  கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போனதே தெரியாமல் சுஜாதா கூட்டத்தினரைக் கட்டிப் போட்டு விட்டார். .  மைக் முன் நின்று கொண்டு இந்த மாதிரி இவ்வளவு நேரம் இதுவரை பேசிய அனுபவமே எனக்கில்லை என்று அவரே திகைக்கும் அளவுக்கு அந்த இலக்கிய கூட்டம் அமைந்து விட்டது.   அவர் பேசி முடித்து தன் இடத்தில் வந்து அமர்ந்ததும் அவரைச் சந்தித்துக் கைகுலுக்கி 'விண்வெளிப் பயணம்' சம்பந்தப்பட்ட சோவியத் யூனியன் வெளியீடான ஒரு என்.சி.பி.எச்.  புத்தகத்தை அவருக்கு பரிசளித்தது இன்னும் நினைவில் இருக்கிறது.  முதல் பக்கத்திலேயே 'அன்புடன் ஜீவி' என்று எழுதித்தான் கொடுத்திருந்தேன். பிற்காலத்தில் எனக்கு யாரும் புத்தகம் அனுப்ப வேண்டாம் என்று வேண்டிக் கொண்ட அவர் அன்று ஆர்வத்துடன் அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொண்டு சிறு குழந்தை மாதிரி திருப்பித் திருப்பி அதைப் பார்த்துக் கொண்டிருந்த காட்சியை மறப்பதற்கில்லை.  இதெல்லாம் நடந்து இன்றைக்கு ஏறத்தாழ 45 வருடங்களுக்கு மேலிருக்கும்.

குமுதத்தில் வெளிவந்த 'நைலான் கயிறு' தான் நான் படித்த சுஜாதாவின் முதல் தொடர்.  அதைப் படித்த காலத்து, குமுதத்தின் துணையாசிரியர்களில் ஒருவர் எடுத்த அவதாரம் தான் இந்த சுஜாதா என்ற நினைப்பே மேலோங்கியது.  எனக்கு அவர்களில் ஒருவரின் மேல் 'அவர் தான் இவர்' என்று பலத்த சந்தேகம்.   'இதை குமுதத்திற்கே எழுதிக் கேட்டால் என்ன' என்ற ஆர்வத்தில் கேட்க, 'தங்கள் ஆர்வத்திற்கும் கடிதமெழுதி அதை வெளிப்படுத்தியதற்கும் நன்றி'  என்று ஆசிரியருக்காக கையெழுத்திட்டு ரா.கி. ரங்கராஜனிடமிருந்து கடிதம் வந்தது.   அப்படியும் சுஜாதா யார் என்று சொல்லாத சாமர்த்திய பதிலாக அது இருந்தது.

'கணையாழி'யில் கடைசிப் பக்கம் எழுதிய ஸ்ரீரங்கம் ரங்கராஜன்,  குமுதத்திற்கும் ஒரு  கதை எழுதி அனுப்பி வைக்க 'நிறைய எழுதுங்கள்'  என்று அவருக்கு அனுப்பி வைத்திருந்த செக்கின் இணைப்புக் கடிதத்தின் மூலையில் ஆசிரியர் எஸ்.ஏ.பி.  நுணுக்கி எழுதிய எழுத்துக்கள் ஆக்ஸிஜனாக செயல்பட சுஜாதாவின் பிர்மாண்டத்திற்கு அன்றே கால்கோள் விழா நடந்து விட்டது என்று அறிந்தேன்.

இவர் விகடனில் எழுதிய  'ஜன்னல் மலர்',  பின்னால் அதே விகடனில் 'கரையெல்லாம் செண்பகப்பூ' வருவதற்குள்  நன்றாகவே தமிழ் எழுத்துலகில் சுஜாதா தன் ஸ்தானத்தை நிலை நிறுத்திக் கொண்டு விட்டார்.   பூப்போன்ற அந்தக் கவிதைத் தலைப்பு,  கதையின் இடையிட்ட நாடோடிப் பாடல்கள்,  கிராமம் - கிராமம் சார்ந்த மக்கள்,  நாடோடிப் பாடல்கள் பற்றி ஆராயும் நோக்குடன் வந்திருக்கும் கல்யாண ராமன்,  சென்னை வாலிபி சிநேகலதா,  ஜமீன்,  அமானுஷ்யம், மர்மம் என்று கலந்து கட்டி சுஜாதா விளையாடியிருந்ததை  விஷயம் தெரிந்த வாசகன் லெவலில்  அந்நாட்களில் படித்து  நண்பர்களிடம் டிபேட் பண்ணுவதில் அலாதி சுகம் கிடைத்தது.   ஜெயராஜ் ஓவியம்,   ஆனந்த விகடன் பிரசுரம் என்று வெகுஜன வாசகர்கள் கவனிக்கப்படும் எழுத்தாளராக சுஜாதா தலையெடுத்ததும் அப்போது தான்..

சுஜாதாவை நினைத்தாலே '88 வாக்கில் அவர் கல்கி பத்திரிகையில் எழுதிய 'இருள் வரும் நேரம்'ங்கற தொடர் என் நினைவுக்கு வந்து விடும்.  பலருக்கு இந்தத் தொடர் அறிமுகம் ஆகியிருக்காது என்பதினால் லேசாகக் கோடி காட்டுகிறேன்.

பல்கலைக் கழக சைக்காலஜி புரொபசரின் அழகான மனைவி அம்ருதா.  ஒரு கல்யாண ரிஷப்ஷனுக்காக காரில் கிளம்பியவர்கள்,  கார் நடுவழியில் ரிப்பேராகி  நின்று விட வேறு வழியின்றி பஸ் பிடித்து வீடு செல்ல பக்கத்து ரோடோர பஸ் ஸ்டாப்பை நாடுகிறார்கள்.   திமுதிமு கூட்டத்துடன் வந்த பஸ்ஸில் ராம்பிரகாஷ் மட்டுமே திணிக்கப்பட்டு  பின்னால் நின்றிருந்த அவர் மனைவி பஸ் ஸ்டாப்பிலேயே தேங்கி விடுகிறாள்.  ஆட்டோ ஒன்றை செலுத்திக் கொண்டு அந்த வழியே வந்த பாபுவும் அவன் நண்பன் பால்குண்டுவும் இதைப் பார்த்து அடுத்த ஸ்டாப்பில் பஸ்ஸைப் பிடித்து விடலாம் என்று அம்ருதாவை  நம்ப வைத்து ஆட்டோவில் ஏற்றிக் கொள்கின்றனர்.  கபன் பார்க் இருட்டு அவர்களுக்கு வசதியாக அம்ருதா அபலையாய் அவர்கள் பசிக்கு இலக்காகிறாள்.

இப்படிக் கதையை ஆரம்பித்து புரொபசர்--  அந்த விபத்திற்குப் பிறகு மன நலம் பாதித்து போன அவர் மனைவி அம்ருதா,  புரொபசர்-- அவர் மாணவி வர்ஷா,  வர்ஷா-- வர்ஷாவின் புரொபசர் மீதான் கிரேஸ். வர்ஷா - புரொபசர் பழக்கத்தை தீவிரமாகக் கண்காணித்து மனம் பேதலிக்கும்  அம்ருதா,  ஆட்டோ பாபு - அவன் அம்மா லஷ்மி, சிக் பேட்டை விவகாரங்கள் என்று தொட்டுக் கொள்ள நிறைய ஐட்டங்களுடன் பரிமாறுகிறார் சுஜாதா.   இப்படியோ, அப்படியோ என்று எல்லா சாத்திய கூறுகளையும் அலசும் வேகத்தில் மனித மனத்தின் அத்தனை அடிமன ஆழ விகற்பங்களும் வெளிச்சம் போடப்பட்டு வெட்கங்கெட்டுத் திரிகின்றன.    சைக்யாரிஸ்டுகள் புழங்கும்  வார்த்தைகள் புதினத்திற்கு தனி யதார்த்தத்தைக் கொடுக்க தமிழுக்குப் புதுசான சூழ்நிலை விவரிப்புகள் என்று எடுத்துக் கொண்ட விஷயத்தில் படிப்பவரின் ஈடுபாடு கூட அதை அர்ப்பணிப்பு உணர்வுடன் சொல்லும் சுஜாதாவின் அதீத திறமை வெளிப்படும் நாவல் இது.

(வளரும்)




Friday, March 6, 2020

வசந்த கால நினைவலைகள்

                                                              47

வ்வொரு  தொலைபேசி இயக்குனருக்கும் அலுவலகத்தில் டிரங்க் போர்ட் இருக்கும் இடத்தில் பேங்க் லாக்கரை விட கொஞ்சம் பெரிதாக லாக்கர் வசதி உண்டு.  அந்த லாக்கரில் அவர் சொந்த சமாச்சாரங்களோடு தங்களுக்கு வழங்கப்படும்  ஹெட்செட்டையும் வைத்திருப்பார்கள்.  தினமும் பணிக்கால ஆரம்பத்தில்  லாக்கரிலிருந்து  ஹெட்செட்டை எடுத்து வந்து டெட்டால் கரைசலில்  பஞ்சு நனைத்து ஹெட்செட்டில் தடவி  அணிவதற்கு தயாராவார்கள்.

சூபர்வைசர் டேபிளில் இருக்கும் பேரேடு போன்ற பொஷிசன் நோட்டில் தான் பணிக்கு வந்த நேரத்தைக் குறித்துக் கையெழுத்திடுவர்.   எந்தப் பொஷிஷனில் அமர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று சூபர்வைசர் குறித்திருப்பார்.
அந்த இணைப்பகத்தில் இருக்கிற  டிரங்க் சர்க்யூட்டுகளை ஆறு டிரங்க் போர்டுகளில் பிரித்திருகிறார்கள் என்றால் ஆறு பொசிஷன்கள் இருக்கும்.   உதாரணத்திற்கு  காஞ்சீபுரம் எக்ஸ்சேஞ்சில்  அரக்கோணம்,  திருவள்ளூர்,  திருத்தணி,  ஸ்ரீபெரும்புதூர், சென்னை போன்ற தனித் தொலைபேசி இணைப்பகங்களுக்குத்  தனி நேரடி லைன் இருக்கும்.  அவை தவிர டயலிங் சர்க்யூட்டுகள்,  SLOD,  MLOD  சர்க்யூட்டுகள்,  பக்கத்து சின்ன கிராமம் போன்ற இடங்களுக்கான  SAX-க்கள்  என்று  ஜாக் ஜாக்காக  பச்சை நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும்.   அந்த லைன் எங்கேஜ்டாக இருக்கிறது என்பதை பச்சை நிறம் தெரிவிக்கும்.  இப்படியான லைன்கள்  ஒரே  கிட்டத்தட்ட எல்லா டிரங்க் போர்டுகளிலும்  கனெக்ட் செய்யப் பட்டிருக்கும்.    அதனால்  பிஸி இல்லாத  நேரங்களில் இரண்டு அல்லது மூன்று போர்டுகளில் உட்கார்ந்து கொண்டே அத்தனை சர்க்யூட்டுகளையும் மேனேஜ் பண்ணலாம். 

காலையில் டியூட்டிக்கு வரும் ஒரு இயக்குனர் மதியம் அவர் ட்யூட்டி முடிகிற நேரத்தில்  மதிய ட்யூட்டிக்கு வரும்  இயக்குனர்  அவரை ரிலீவ் பண்ண  தயாராக அருகில் நிற்கிற அளவுக்கு எல்லாம் கனக் கச்சிதமாக முன் ஏற்பாடுடன் இருக்கும்.   அதைத் தவிர முழுப்பணி நேரமும் ஒரே  போர்டில் உட்கார்ந்து போரடிக்காமல்  மாற்றி மாற்றி  உட்காருகிற மாதிரி  இரண்டு மணி நேரத்திற்கு ஒரு மாற்றம் இருக்கும்.

புக் ஆகிற அத்தனை டிரங்க் கால்களும்  அப்பப்பவே பேசி முடித்து விடுகிற மாதிரி இருக்காது.  சில கால்கள் பேசப்படாமல் பெண்டிங் வைக்க வேண்டிய அவசியம் இருக்கும்.   உதாரணமாக  PP கால்கள்  குறிப்பிட்ட அந்த நபர் முதல் முறை முயற்சிக்கும் பொழுது  இல்லை என்றால்  ஒரு மணி நேரம் பெண்டிங் வைத்து இன்னொரு முறை முயற்சிக்க  அனுமதி உண்டு.   ஒரு டிரங்க் கால் முயற்சிக்கும் பொழுது அந்த மறுமுனை போனில்  பதில் இல்லை என்றால்  அரை மணி நேரம் பெண்டிங் வைத்து மறு முயற்சி செய்ய  அனுமதி உண்டு.  மாற்றி மாற்றி பணியாளர்கள்  கால்களை (Trunk calls)  கையாளுவதால்  டிஸ்போஸ் ஆகாத ஒவ்வொரு காலும் எந்த காரணத்திற்காக பெண்டிங் வைக்கப்பட்டிருக்கிறது என்று அடுத்து வருபவருக்குத் தெரிய வேண்டும் இல்லையா?..  அதற்காகவே  பெண்டிங் வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு டிக்கெட்டிலும் அதற்கான காரணக் குறிப்பை எழுதியே வைப்பார்கள்.  உதாரணத்திற்கு சில குறிப்புகள்:

குறிப்பிட்ட  நபருடன் தான் பேச வேண்டும் என்று கால் புக் செய்பவர் விரும்பும்  கால்கள்  PP call  என்று  பார்த்திருக்கிறோம்.   டிரங்க் காலை முயற்சிக்கும் பொழுது அந்தக் குறிப்பிட்ட நபர் இல்லாத பட்சத்தில்  1030  PPNA   SI   P -  324  என்று குறிப்பை டிக்கெட்டில் எழுதி டிரங்க் போர்டிலேயே ஒரு பக்கம் இருக்கும்  பீஜன் ஹோலில் வைத்து விட்டு அடுத்த காலை முயற்சிப்பார்கள்.   இந்தக் குறிப்புக்கு  1030 மணிக்கு  Particular Person not available  -- subscriber informed  -  Pending  என்று அர்த்தம்.  குறிப்புக்கு பக்கத்தில் இருக்கும்  324  என்பது அந்த காலை முயற்சித்த  இயக்குனரின்  ஸ்டாப்  நம்பர்.   டிரங்க் கால் சம்பந்தப்பட்ட எந்த காரியத்தை யார் எந்த நேரத்திற்குச் செய்தார்கள் என்பதற்கு துல்லியமான குறிப்புகள் உண்டு. 

இதே போலவான சில குறிப்புகள்: 

1.   NR  SI  P --  No Reply  Sub informed  Pending.  (மறுமுனையில் பதில் இல்லை)  இந்த மாதிரி கால்கள் அரைமணி கழித்து மறுபடியும் முயற்சிப்பார்கள்.  அப்பொழுதும் பதில் இல்லை என்றால்  வாடிக்கையாளர் காலை கேன்சல் செய்ய வேண்டும்.  இதற்கு கட்டணம் ஏதுமில்லை.

2.  R  SI  P  -  Called party  refused to speak  Pending -  Sub informed - Pending.  (மறுமுனையில் தொலைபேசியை  எடுத்தவர் பேச விரும்பவில்லை.   அதனால்  பெண்டிங் வைக்கப்பட்டிருக்கிறது.)  பெண்டிங் வைப்பது  PP கால்களில் மட்டுமே சாத்தியம்.  நம்பர் கால்களில் மறுமுனையில் பேசவில்லை என்றால் உடனே கேன்சல் செய்ய வேண்டும்.  25% கட்டணம் உண்டு.

3.  PPSF  SI  P  --  Particular person sent for - sub informed -  Pending.  (இந்த ரிப்போர்ட்  PCO  கால்களில் மட்டுமே இருக்கும்.   மறுமுனை தந்தி அலுவலகத்தில்  கூட்டிவர ஆள் அனுப்பியிருக்கிறார்கள்)

4.    PPA  P  ( PP Available  call to be connected)  மறுமுனை தந்தி அலுவலகத்தில் பேச வேண்டியவர் வந்து விட்டார் என்று தெரிவிக்கும் குறிப்பு.

5.   No,  ugt -  Number unget

6.  No.  o/o/o  -  Number out  of order.  (5 & 6  இரண்டு குறிப்புகளிலும்   ஃபோனை  டெஸ்ட் பண்ணி  பழுது எண்ணைக் குறித்திருப்பார்கள்.  இந்த மாதிரி கால்களை வாடிக்கையாளர் விரும்பினால் பெண்டிங் வைக்கலாம். இல்லையென்றால் கேன்சல் செய்து விடலாம்.   கேன்சல் செய்து விட்டால்  கட்டணம் கிடையாது.

Docket- க்களைப் பற்றி சொல்ல வேண்டும்.    இந்த டாக்டெட் என்பது  வெளிரிய சிவப்பு நிறத்தில் இருக்கும் வரிசை எண் இடப்பட்ட டிக்கெட்.  இதில் குறுக்கு எழுத்தில் பலவித குறிப்புகள் அச்சிடப்பட்டிருக்கும்.   From  -  To  உண்டு.

டிரங்க் கால்களை புக் செய்யும் இடத்திலே இதற்கான தேவை  இருக்கும்.   24652  எண்ணிலிருந்து  MS  224652 க்கு ஒருவர் கால் புக் செய்திருக்கிறார்.  கொஞ்ச நேரம்  காத்திருக்கிறார்.  கால் வரவில்லை.   உடனே டிரங்க் புக்கிங்கைக்  கூப்பிட்டு காலை கேன்சல் செய்து விடுகிறார்   என்று வைத்துக் கொள்ளுங்கள்.  இந்தச் செய்தியை  அந்த குறிப்பிட்ட  காலைக் கையாளும் போர்டு   இயக்குனருக்குத்  தெரியப்படுத்துவது எப்படி?..  அப்படித் தெரியப் படுத்துவதற்கு உதவுவது தான் இந்த டாக்கெட்.

From  24652  To  MS  224652  என்று டாக்கெட் வெற்றிடத்தில் எண்களை நிரப்பி  CCL  என்ற குறிப்பை டிக் செய்து   பக்கத்து போர்டில் அமர்ந்திருக்கும் இயக்குனர் அருகில் வைத்து விடுவார்.  இந்த டாக்கெட்  பாஸ் ஆகிக் கொண்டே இருக்கும்.  யாருக்கு சம்பந்தப் பட்டதோ அவர்  அந்த   டாக்கெட்டை எடுத்து  குறிப்பை செயல்படுத்துவார்.  எப்படி?..  அந்த குறிப்பிட்ட டிரங்க் கால் டிக்கெட்டை எடுத்து காலை சேன்சல் செய்வது மட்டும் அல்லாமல்  vide Dkt. No.  என்று அந்த டாக்கெட் எண்ணையும்  கேன்ஸல் செய்ததற்கு அத்தாட்சியாக டிக்கெட்டில்  குறித்து வைப்பார்.  அடிக்கோடிட்டு சொல்ல வேண்டியது என்னவென்றால் இங்கு ஒரு வேலை கூட ஏனோ தானோவென்று இருக்காது.. எல்லா செயல்களுக்கும் பின்னால் எடுத்து நிரூபிக்கக் கூடிய ஆதாரம் ஒன்று துணையாக இருக்கும்.

ஃப்க்ஸட் கால் என்பது  குறிப்பிட்ட நேரத்தில்  தவறாது இரு பகுதி நபர்களையும் தொடர்பு படுத்தும்  கால்கள்.  சப்க்ரிப்ஷன் ஃப்க்ஸ்ட் கால் என்பது பெரும்பாலும்  நியூஸ் பேப்பர்கள்,  அதன் ரிப்போர்ட்டர்கள்  உபயோகிக்கும் கால்கள்.   சொல்லப் போனால் அந்நாட்களில்  எல்லா பகுதிகளிலும்  தொலைபேசித் துறை கோலோச்சி வந்த பொற்காலம் அது.

அயல்நாட்டிற்கான டிரங்க் கால்களை அந்நாட்களில்  ஓவர்சீஸ் கால் என்று அழைப்போம்.   அப்படியான வெளிநாட்டிற்கான கால்களை புக் பண்ணும் பொழுது சில தெளிவான விவரங்கள் கொடுக்க வேண்டும்.   புக்  பண்ணும் தொலைபேசி எண்,   வெளிநாட்டு தொலைபேசி எண்,  யார் யாருடன் பேசப் போகிறார்கள்,  எந்த மொழியில் பேசப் போகிறார்கள்,  எந்த நேரத்திற்கு  தொடர்பு படுத்தப்பட வேண்டும்  -  போன்ற குறிப்புகள் கொடுக்க வேண்டும்.  ஓவர்சீஸ் கால்களை  மூன்று,  நான்கு நாட்கள் கூட பெண்டிங் வைத்து முயற்சிக்கலாம்.   வெளி நாட்டு கால்கள் பற்றிய விவரங்கள்  வெள்ளை டிக்கெட்டில் மட்டுமில்லாமல்,  Log Book-கிலும் பதியப்படும்.   அந்த கால் பேசும் போது  எந்த மொழியில் பேசப்போகிறார்களோ,  தேவை ஏற்படின் அந்த மொழி அறிந்த Observation Supervisor-களைக் கொண்டு  யாரும் அறியாது கண்காணிக்கவும் செய்வார்கள்.   நாட்டின் பாதுகாப்பு போன்ற விஷயங்களில் அந்த அளவுக்கு மிகவும்  கண்டிப்பான நடைமுறைகள் அமுலிலிருந்த காலம் அது.

ஒரு  டிரங்க் கால் பதிவாகி அது  பேசி முடிப்பதில் இத்தனை விஷயங்கள் அடங்கியிருக்கின்றன.  அதனால் ஒரு டிரங்க்  காலுக்காக  'தேவுடு காத்தேன்' என்று  பா.வெ. சொன்னதும்,  ஜிஎம்பி அவர்கள் 'பழியாக் கிடந்தேன்' என்றதிலும் அவர்களுக்கே புரிபடாத பல காரணங்கள் பதுங்கியிருந்தன என்று தான் கொள்ள வேண்டும்.

புக் செய்த  டிரங்க் கால்களுக்குத்  தான் இணைப்பு கொடுக்கப்படுகிறதா என்பதனைக் கண்காணிக்க  Observation Supervisor  என்பவர்கள்  உண்டு.   இவர்கள்  ஏகதேசமாக  கனெக்ஷன் கொடுக்கும் ஆப்ரேட்டர்களுக்கு  தெரியாமலேயே  இந்த கால் இந்த  நேரத்திற்கு இந்த இடத்திற்கு தொடர்பு கொடுக்கப்பட்டது என்ற குறிப்புகளை எடுத்து அனுப்புவார்கள்.  அடுத்த நாள் டிக்கெட் ஒர்க் பார்க்கும் சீனியர் ஆப்ரேட்டர்  கனெக்ஷன் கொடுக்கப்பட்ட அந்த கால்களுக்கான டிக்கெட் எண்ணைக் குறித்து  Observation Supervisor-க்கு அனுப்புவார்.   டிக்கெட் எண் இல்லை என்றால்  மேல் நடவடிக்கைகள்  தொடரும்,

(வளரும்)

Sunday, March 1, 2020

வசந்த கால நினைவலைகள்

                                                                46

ரயில் நிலையம் மாதிரி ஒரு நாளின் இருபத்து நாங்கு மணி நேரமும் இயங்கும்  அலுவலகம் தொலைபேசி இணைப்பகம்.   இரயில் நிலையம் போலவே பகல் பன்னிரண்டு மணிக்கு மேலான ஒரு மணியை பதிமூன்று மணி  (1300 Hrs.) என்றே தொலைபேசி இணைப்பகத்திலும் குறிப்பார்கள்.  இரவு பதினோரு மணி  2300 Hrs.  இரவு  12 மணி  0000 Hrs.  தொலைபேசி இணைப்பகத்தைப் பொறுத்த மட்டில் ஒரு நாள் துவங்குவது அந்த 0000 Hrs.-ல் தான்.   இரவு பணிக்கு வருவோருக்கு அப்பொழுது தான் பணி நேரம் ஆரம்பிக்கும்.

 இரவு பணிக்கு வந்ததும்,  Log Book  பேரேட்டில்  அன்றைய தேதியைக் குறிப்பிட்டு அடிக்கோடிட்டு,  கீழே ---

Outward Ticket No.
Inward Ticket No.
Transit Ticket No.          --  என்று அன்றைய நாளுக்கு துவக்க டிக்கெட் எண்களைக் குறிப்பார்கள்.   அதற்குக் கீழே  நேரடியாக தொடர்பு இருக்கும் ஊர்களின் லைன்களை  (direct lines) மறுபகுதியில் பணியில் இருப்போரைக் கூப்பிட்டு டெஸ்ட் செய்து அது பற்றிய ரிப்போர்ட்டைக் குறிப்பார்கள்.

இது எப்படி என்று  சொல்கிறேன்.   காஞ்சீபுரம் -- அரக்கோணம்  நேரடியாக தொடர்பு இருக்கும்  ஊர் என்று  வைத்துக் கொள்ளுங்கள்.  காஞ்சீபுரத்தில் இரவுப் பணி இயக்குனர்  அரக்கோணம்  சர்க்யூட்டில் (அரக்கோணம் என்று  குறிப்பிட்டிருக்கும்  துளையில் -- அதை  ஜாக் என்று சொல்வார்கள்) -- டிரங்க் போர்டில் இருக்கும் காலிங் கார்டை எடுத்து நுழைத்து  ரிங்  கொடுப்பார்.
ரிங் கொடுப்பது  என்றால் தகடு போல இருக்கும் கீயை  முன்னுக்குத் தள்ளுவார்.   உடனே அரக்கோணம் தொலைபேசி நிலையத்தில் காஞ்சீபுரம் என்று  குறித்திருக்கும் ஜாக்கில் பல்ப் எரியும்.   அரக்கோணம் ஆப்ரேட்டர் அந்தத்  துளையில்  ஆன்சரிங் கார்டை நுழைத்து கீயை முன்னுக்குத் தள்ளி  "எஸ்.. அரக்கோணம்.." என்பார்.

"என்ன, சண்முகம்?..  நீதான் இந்த வாரம் நைட்  டூயூட்டியா?"

"இல்லே.. காலைலே ஒரு  வேலை இருக்கு..  அதுக்காக  எக்ஸ்சேஞ்ச் ஆஃப் டுயூட்டி பண்ணிகிட்டேன்"

"அப்படியா?.. ஓக்கே.. ஓக்கே.."

முகத்தைப்  பார்க்க வேண்டும் என்று இல்லை.   எல்லாம் குரலை பழக்கத்தில் கொண்டு எட்டூருக்கு உறவு  கொள்ளலாம்.  ப்ளாக்கர் உலகத்தில் எழுத்து என்றால் தொலைபேசி நிலையங்களில்   குரல்..

குரல்.. குரல்...  அது தான் தொலைபேசி நிலையத்தில் மறுபக்கம் பேசுவோரைத் தெரிந்து கொள்ள கண்ணாடி.  இந்த குரல் பழக்கத்தில் ஏகப்பட்ட காதல்கள் பூத்து, மலர்ந்து திருமணத்தில் முடிந்திருக்கின்றன.   குரல் அறிமுகத்தில் முகிழ்த்து நேரில் சந்திக்கையில்  வாடி வதங்கிப் போன காதல் கதைகளும் நிறைய உண்டு.

கிடைத்த கேப்பில் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் டியூட்டி பற்றிச் சொல்லி விடுகிறேன்.

குறிப்பாக எட்டு விதமான  பணிக்காலங்கள் உண்டு.   இரவு  0000-0720,  0630--1350,  0800-1530,  0900-1630,  1000-1730,  1330-2050,  1520- 2300,  1640-0000 என்றவாறு.  மகளிர்க்கு மட்டும் பணிக்காலம் இரவு 2030 வரை தான் என்று வரையறுக்கப் பட்டிருந்தது.

இந்தப் பணிக்காலங்களை ஒரு இணைப்பகத்தில்  40 தொலைபேசி இயக்குனர்கள் இருந்தால் ரொட்டேஷனாகப்  பகுத்துப் போடுவார்கள்.  பகலில் 1000  மணிக்கு ஆரம்பிக்கும் டியூட்டி மட்டும்  சீனியர்களுக்கானது.   அதில் ஒருவர் டிக்கெட் ஒர்க் என்று அதற்கு முதல் நாள் பதிவான வெள்ளை டிக்கெட்டுகளைக் கணக்கெடுத்து  TRAO-க்கு அனுப்பும் வேலையில் இருப்பார். மொத்த பதிவான டிக்கெட்டுகளின் கணக்கும் டேலி ஆகி,  டிஸ்ப்ளே போர்டில் நேற்றைய கணக்கில்  எஃபக்ட்டிவ் கால்களின்  %-யைப் போடுவதற்குள் பெண்டு நிமிர்ந்து விடும்.

இருவர் அன்றைய தின டிரங்கால்கள் டிஸ்போஸல் ஆவதைக் கண்காணிப்பார்கள்.  தாமதத்திற்கு ஏதாவது காரணம் என்றால் மறுபகுதி சூபர்வைசருடன்  (அந்தக் காலத்தில் இந்தப் பதவிக்கு மானிட்டர் என்று பெயர்.  பள்ளிப்பருவ நினைவைக் கிளறுவதால் மானிட்டர் பிற்காலத்தில் சூபர்வைசர் ஆனார்!)  பேசி தீர்வு  காண்பார்கள்.

போர்டில் வேலைசெய்யும் இயக்குனர்கள்  டீ, காப்பிக்கு போக வேண்டும் என்றால் அவர்கள் செய்து கொண்டிருக்கும் பணியைத் தொடர்பவராக இன்னொருத்தர் இருப்பார்.  எல்லாருக்கும்  தலைமை வகிக்கும் சூபர்வைசர் இருவர்  காலை 0630 மணியிலிருந்து இரவு 2030 மணி வரையான பணிக்காலத்தை பகிர்ந்து கொள்வார்கள்.  இரவு 2030-க்கு  மேலே  இயக்குனர்களின் ராஜ்யம் தான். இந்த நேரத்தில் பணியில் இருப்பவர்களில் யார் சீனியரோ அவர் பொறுப்புகளை ஏற்பவராக இருப்பார்.   வித்தியாசமான எந்த நிகழ்வு நடந்தாலும் அது பற்றி நேரம் குறித்து  Log Book-க்கில் பதிய வேண்டும்.

இயக்குனர்களில் யாருக்காவது அவருக்கு குறிப்பிட்டிருந்த  பணிக்காலத்தில்  வேறு சொந்த வேலை இருந்தால்   வேறு ஒருவருடன் தன் பணிக்காலத்தை மாற்றிக் கொண்டு அவர் வேலை செய்கிற நேரத்தில் இவர் வேலை செய்யலாம்.  இவர் வேலை செய்ய வேண்டிய நேரத்திற்கு அவர் வந்து விடுவார்.  பணி நேரங்களை இப்படி ஒருவொருக்கொருவர் மாற்றிக் கொள்வதற்கு தான் Exchange of Duty என்று பெயர்.  அதற்காக ஒரு ரிஜிஸ்டர் இருக்கும்.  அதில்  இருவரும் மாற்றுப் பணி நேரங்களுக்கு வருவதற்கு சம்மதமாக கையெழுத்திட்டு சூபர்வைசரிடம் அனுமதி கையெழுத்து வாங்கிக் கொண்டால் இந்த சடங்கு முடிந்து விட்டது என்று அர்த்தம்.

வெள்ளிக்கிழமை மாலையே அடுத்து வரும் வாரத்தில் யார் யாருக்கு எந்தந்த நேரத்தில் பணிக்காலம் என்பதைக் குறிக்கும் டியூட்டி சார்ட் ரிலீசாகி விடும்.  அது ரிலீசாவதே கோலாகலக் கொண்டாட்டமாக இருக்கும்.

மகளிர்கள்  ட்யூட்டி சார்ட் தொங்கும் இடத்தில் கூட்டமாக சேர்ந்து கொண்டு  மெல்லிய  குரலில் ஏகப்பட்ட கணக்குகளைப் போடுவார்கள்.   நோன்பு,  விசேஷங்கள், விருந்தினர் வருகை,  பண்டிகை என்று அவர்களுக்குத் தான் எவ்வளவு   சுமைகள் என்று பரிதாபமாகத் தான் இருக்கும்.  அடுத்த வார தங்கள் வேலைகளுக்கு ஏற்ப யாருடன்  தங்கள் பணி நேரத்தை மாற்றிக் கொண்டால் செளகரியமாக இருக்கும் என்பதில் குறியாக இருப்பார்கள்.

 "கனகராஜ் ஸார்!  நாளைக்கு எனக்கு  0610 ட்யூட்டி.  உங்க  1330-யை எனக்குத் தர முடியுமா?..  காலம்பற என் மாமியாரை கண் ஆசுபத்திரிக்கு கூட்டிகிட்டுப் போகணும்.."

"0610--ஆ!.."-- ஒரு வினாடி யோசித்து, கனகராஜ்,  "சரி, எழுதிக்கோங்க.." என்கிறார்.  அடுத்த நிமிஷத்தில் எக்ஸ்சேஞ்ச் ஆப் ட்யூட்டி ரிஜிஸ்தரில் எழுதப்பட்டு,  இருவரும் கையொப்பம் இட்டு, சூபர்வைசர்   அனுமதி கையெழுத்திட  ட்யூட்டி மாற்றல் முடிந்தாயிற்று..   அடுத்த நாள் கனகராஜ் காலை 0610-1330  பணிக்கு வந்து விடுவார்.

ஆண்களைப் பொருத்த மட்டில்  மாலை 1640 ட்யூட்டி, இரவுப் பணி இதெற்கெல்லாம் மவுசு ஜாஸ்தி.  தமிழ் நாட்டில்  திருச்சி, கோவை, சென்னை ஆகிய ஊர்களின் டிரங்க் எக்ஸ்சேஞ்சுகள்  முழுமையாக மகளிர் பணியாற்றும் இடங்களாக இருந்தன.   இரவு பணி அகால நேரத்தில் முடிந்து  பெரும்பாலும் காலையில் தான் வீட்டுக்குப் போவார்கள் என்பதினால்  இரவு  தங்கலுக்காக  கொசுவலையுடன் படுக்கை வசதி,  டைனிங் கால், ஏ.ஸி.-- என்று செளகரியங்கள்
எதிலும்  குறைவில்லாது  இருக்கும்.

இரவுப் பணி பார்த்தால் பகல் பூராவும் விடுமுறை மாதிரி தான்..  இந்த மாதிரியான செளகரியங்கள், தற்காலிக  விடுப்பு (casual leave) எடுக்க வேண்டிய அவசியத்தை கூடிய மட்டும் குறைத்து விடும்.  பத்திரிகைத்  துறையில் கால் பதிக்க எனக்கு இந்த மாதிரியான அனுகூலங்கள்  தாம் வரப்பிரசாதமாக இருந்தன என்பதை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்காமல் இருந்தால் அது பாவம்.

டிரங்க் போர்டில் பணியாற்றுவதும்  இறுக்கமில்லாமல்  ஏதோ பொழுது போக்கு போல இருக்கும்.  யார் அதிக டிரங்க் கால்களை டிஸ்போஸ் செய்கிறார்கள் என்று ஒருவருக்கொருவர் (குறிப்பாக மகளிருடன்) போட்டா போட்டி வேறே.  இந்த சந்தோஷத்தில் மாற்றி மாற்றி வெவ்வேறு ஊர்களுக்கான அழைப்புகளுக்கு இணைப்பு கொடுப்பது சிரமமில்லாமல் ஏதோ விளையாட்டு போல  ஒருபக்கம் நடந்து கொண்டே இருக்கும்.  'என்ன தவம் செய்தோம்,  இந்தப் பணி செய்ய!' என்ற நினைப்பு தான் மேலோங்கியிருக்கும்.  பணி நேரம் முடிந்தாலும், விடுமுறை நாள் என்றாலும் ஆண்கள் ரிக்ரேஷன் க்ளப்பில் தான் பழியாகக் கிடப்பார்கள்.  கேரம்,  செஸ்,  வார, மாத பத்திரிகைகள் என்று மனமகிழ் மன்றத்தில்   எந்நேரமும்  ஏக கொண்டாட்டமாக இருக்கும்.

எல்லா ஊர்களின் பெயர்களையும்  இரயில்வே துறை போலவே  ஆங்கில எழுத்துக்களில் சுருக்கமாக குறிப்பது  தான் தொலைபேசித் துறையில் வழக்கம்.   சென்னை என்றால் MS, கோயம்புத்தூர்  CBT,  திருச்சி TR,  சேலம்  SLM,  கல்கத்தா  CA,  புதுடெல்லி  ND, அந்நாளைய பம்பாய்  BY, வத்தலகுண்டு என்றால்  BTL,  மதுரை என்றால்  MA  ராமேஸ்வரம் என்றால்  RMS  --  என்பதாய்  சுருக்கமாக இருக்கும்.

சேலத்திலிருந்து கல்கத்தாவிற்கு  டிரங்க் கால் என்றால் சேலம் ஆபரேட்டர்  சென்னை பூக்கடை எக்ஸ்சேஞ்சில் பணியிலிருக்கும் ஆபரேட்டருக்கு அழைப்பை பதிவு செய்தவுடன் அவர் கல்கத்தா   தொலைபேசி எண்ணை சென்னையிலிருந்தே டிரங்க் போர்டில் டயல் செய்தவுடன் கல்கத்தா வீட்டில் தொலைபேசி ரீங்கரிக்கும்.   உங்களுக்கு சேலத்திலிருந்து  டிரங்க் கால் என்று தெரிவித்து சேலம் ஆபரேட்டருடன்  நேரடியாகத் தொடர்பு கொடுத்து விடுவார்.    சேலத்தில் கால் புக் பண்ணியவருடன்  கல்கத்தா நபரை இணைப்பில் இருத்தி  எவ்வளவு நேரம் பேசினார்கள்  என்று தன் வெள்ளை டிக்கெட்டில் குறிப்பதெல்லாம் சேலம் ஆபரேட்டரின் வேலை.  இந்த மாதிரி கல்கத்தா எண்ணை சென்னையிலிருந்தே டிரங்க் போர்டில் டயல் செய்வதற்கு  SLOD  (Single link Operator dialing)  என்று பெயர்.    SLOD-க்கு பிறகு MLOD  (Multi Link Opeator  dialing) அடுத்த கட்ட வளர்ச்சியாய் வந்தது.  சேலம் ஆப்ரேட்டர்  கோவை ஆப்ரேட்டர் துணையில்லாமலேயே  திருப்பூர் தொலைபேசி எண்ணை டயல் செய்வது இதற்கு உதாரணம்.

சென்ற பகுதியில் குறிப்பிட்டிருந்த  புதுவை கடைத்தெரு  PCO-விலிருந்து எம்ஜிஆர் அவர்களுடன் பேச வேண்டி பதிவு செய்திருந்த டிரங்க் கால் SLOD circuit-ல்  டயல் செய்தது தான்.  அதாவது சென்னை தொலைபேசி நிலைய ஆப்ரேட்டர் துணையில்லாமல் நேரடியாக புதுவை டிரங்க் போர்டிலிருந்து    எம்.ஜி.ஆரின் தொலைபேசி எண்ணை டயல் செய்தது.

புதுவை கடைத்தெரு தந்தி ஆபிஸில்  ஆனந்தன் என்ற அற்புதமான டெலகிராப்பிஸ்ட்  இருந்தார்.  56 வருடங்களுக்குப்  பின்னும்  இன்றும் அந்த அன்பரின் பெயர் நினைவுக்கு வருகிற அளவிற்கு நட்புக்கும் சுறுசுறுப்புக்கும் இலக்கணமாகத் திகழ்ந்தவர்.    எம்ஜிஆரின் தொலைபேசி எண்ணை டயல் செய்வதற்கு முன் கடைத்தெரு 110 PCO-வை ரிங் செய்து எம்ஜிஆருக்கு கால் புக் பண்ணின நபர் இருக்கிறாரா என்று கேட்டேன்.  "ஜீவி ஸார்.. இதோ அவரை பூத்துக்கு  ரெடியா அனுப்பிச்சிட்டேன்...  நீங்க கனெக்ஷன் கொடுக்கலாம்.." என்று  கிரீன் சிக்னல் கொடுத்தார் ஆனந்தன்.   அதன்படியே  அவர்  110 PCO  ஃபோனை எடுத்ததும்  நிச்சயம் பண்ணிக் கொண்டு, எம்ஜிஆரின்  தொலைபேசி எண்ணை டயல் செய்தேன்..  மறுமுனையில் "வணக்கம்.. தோட்டம்.." என்று மென்மையான குரலில் எம்ஜிஆர்..   "வணக்கங்க.. உங்களுக்கு  புதுச்சேரியிலிருந்து ஒரு PCO கால். கொடுக்கலாமா?.." என்று கேட்டேன்.

"கொடுங்களேன்.." என்று அவர் சொன்னதும் "எம்ஜிஆர் லயனில்  இருக்கிறார். பேசுங்கள்.." என்று  சொல்லி விட்டு  கீயை க்ளோஸ் பண்ணி விட்டு ஸ்டாப்  வாட்சை
ஓடவிட்டேன்...  என்ன பேசினார்களோ, தெரியவில்லை..  பேச்சு  மூன்று நிமிடங்களை நெருங்கும் பொழுது,  மூடிய கீயைத் திறந்து,  "த்ரீ மினிட்ஸ் நியர்லி ஓவர்.." என்று நான் சொல்கையில் எம்ஜிஆரின் குரல் கேட்டது..  "ஐயா.. நீங்க காசு செலவு பண்ணிக் கொண்டு இங்கு வந்து என்னைப்  பார்ப்பது முக்கியமில்லை..  அதற்குப் பதில்
உங்கள் தாயாருக்கு  வேண்டியதை வாங்கிக் கொடுத்து  அவரை  பத்திரமாகக் கவனித்துக் கொண்டால் அதுவே எனக்கு மகிழ்ச்சி.. ஃபோனை வைச்சிடறேன், சரியா?.." என்று எம்ஜிஆர் சொல்லிக் கொண்டிருந்தது  எனக்குக் கேட்டது.

-- எம்ஜிஆரின் தாய்ப்பாசம்  இது தான்.  எல்லாத் தாய்மார்களிடமும் அவருக்கு ஆரம்ப காலங்களிலேயே நிறைய பரிவு இருந்தது என்பதற்காக இந்த நிகழ்வை இங்கு எழுத நேரிட்டது.

(வளரும்)


Related Posts with Thumbnails