மின் நூல்

Monday, December 24, 2018

பாரதியார் கதை --22

             
                                        அத்தியாயம்—22

து  1920-ம்  ஆண்டு நவம்பர் மாதம்.

சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்காரிடமிருந்து அழைப்பு வந்ததும் பாரதியார் கடையத்திலிருந்து சென்னை புறப்பட்டார்.  சுதேசமித்திரனில்  உதவி ஆசிரியராக பணியாற்ற  வேண்டும் என்று அய்யங்கார் கேட்டுக் கொள்ள பாரதி சம்மதித்தார்.

பாரதியின் தம்பி விஸ்வநாதன் சைதாப்பேட்டையில் ஆசிரியர்  பயிற்சிக் கல்லூரியில் கல்வி பயின்று கொண்டிருந்தார்.  விஸ்வநாதனின் தாய் மாமனும் தாயார் வள்ளியம்மாளும் விஸ்வநாதனுடன் சைதாப்பேட்டையில் வசித்து வந்தனர்.  பாரதியின் குடும்பம் சென்னை வந்ததும் விஸ்வநாதனின் வேண்டுகோளின்படி அவன் வீட்டில் தங்கினர்.  பாரதியின் தந்தை சின்னசாமி அய்யருக்கு வள்ளியம்மாள் இளைய தாரம்.  செல்லம்மாளிடமும் சகுந்தலாவிடமும் வள்ளியம்மாள் மிகவும் பிரியமாகப்  பழகுவார்.   ஒரு நாள் "பாரதி!  நீ பாடிக் கேட்க
வேண்டுமென்று எனக்கு ரொம்ப நாள் ஆசை....  ஒரு சமஸ்கிருதப் பாடல் பாடேன்.." என்று வள்ளியம்மாள் ஆசையாய் கேட்க, பாரதி "தேஹி முதம் தேஹி..  ஸ்ரீ ராதே.. ஸ்ரீராதே.." என்ற பாடலைப் பாட வள்ளியம்மாள் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தாராம்.

 சொந்த மனிதர்களுடன் தங்கியிருக்கும் சுகம் இருந்தாலும் சைதாப்பேட்டை வீட்டில் வாசம் செய்வதில் பாரதிக்கு ஒரு அசெளகரியம் இருந்தது.  அப்பொழுது ஜார்ஜ் டவுன் எர்ர பாலு செட்டித் தெருவில் சுதேசமித்திரன் காரியாலயம் இருந்தது. சைதையிலிருந்து ஜார்ஜ் டவுனுக்கு ரயில் பயணம்.  அங்கே இரூந்து சுதேசமித்திரன் காரியாலயத்திற்கு நடை என்பது பாரதிக்கு சிரமமாக இருந்தது.  காலை சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வருவதில் தாமதம் ஏற்படுவதை பாரதியால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

பாரதியின் சிரமத்தைப் பார்த்து மித்திரன் ஆசிரியர் சி.ஆர். சீனிவாசன் தம்புச்செட்டித் தெருவில் 209-ம் எண்ணுள்ள வீட்டில் ஒரு போர்ஷனை பாரதியார் குடித்தனம் இருக்க ஏற்பாடு செய்துதந்தார்..    மேட்டுத்தெரு வழியா வந்தா பின்பக்கம் தான் பாரதியிருந்த வீடு.  காலைலே ஒன்பது மணி சுமாருக்கு சுதேசமித்திரன் அலுவலகத்திற்கு கிளம்பினார்ன்னா, பொழுது சாய்ந்ததும் பெரும்பாலும் வீட்டுக்குத்  திரும்பி விடுவார்.   வாரத்திலே சில நாள் வீட்டு முகப்பு திண்ணைலே ஷேட் விளக்கு வைச்சு பக்தி, பஜனை விளக்கம்ன்னு  பாரதி பேச ரோடு டிராப்பிக் பாதிக்கற அளவுக்கு ஜனக்கூட்டம் சேர்ந்திடுமாம்.  பாட்டு, பாடலுக்கு விளக்கம்ன்னு இரண்டு மணி நேரத்திற்குக் குறையாம பாரதி சொல்விருந்து படைப்பாராம்.

தம்புச் செட்டித் தெரு காளிகாம்பாள்  கோயிலுக்கு அடிக்கடி செல்லும் வழக்கம் கொண்டவராய் பாரதி இருந்தார். அம்பாளும் இஷ்ட தெய்வமாய் பாரதியின் மனசில் குடிகொண்டிருந்தாள்.

'யாதுமாகி நின்றாய் -- காளி
எங்கும் நீ நிறைந்தாய்                                                   
தீது நன்மையெல்லாம் - காளி
தெய்வ லீலையன்றோ?..

ஒரு நாள் காளிகாம்பாள் சந்நிதியில் வரகவியாய் பாரதி இந்தப் பாடலைப் பாடும் பொழுது தேவியின் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் மெய்மறந்து கரங்கூப்பி நின்றனராம்.

தெய்வ லீலையாகத் தான் அது நடந்தது போலும்.  தம்புச் செட்டித் தெருவில் இருந்தது போதும் என்று  பாரதி தன் ஜாகையை மாற்ற வேண்டி நேரிடுகிறது.

பாரதி புதுவையில் வசித்த பொழுது ஹரிஹர சர்மா என்றொரு நண்பர் அவருக்கிருந்தார்.  இவர் கடையம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர்.  பாரதியின் துணைவியார் செல்லமாவிற்கு உறவினரான சங்கரகிருஷ்ணனுக்கு தூரத்து சொந்தம் இவர்.  இந்த சங்கர கிருஷ்ணன் தான் ஆஷ்
கொலை வழக்கின் குற்றவாளியான வாஞ்சிநாதரின் மனைவியின் சகோதரர். வாஞ்சியின் மைத்துனர்.

பாரதி சென்னைக்கு வந்த பொழுது இந்த ஹரிஹர சர்மா பாரதிக்கு மிக நெருக்கமானதே தெய்வ சங்கல்பம் தான். பிற்காலத்தில் பாரதிக்கு இந்த ஹரிஹர சர்மா செய்ய வேண்டிய பணி ஒன்று இருந்தது அந்த தெய்வமே அறியும் போலும்.  மைலாப்பூரில் ஹரிஹர சர்மாவிற்கு சொந்தமாக ஒரு வீடு இருந்தது.   அந்த வீட்டில் பாரதி தன்னுடன் தங்கியிருப்பதை பெரிதும் விரும்பினார் ஹாரிஹர சர்மா.  அவரது விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காகவே பாரதி மைலாப்பூரில் குடியேறினார்.  அதுவும் மிகச் சிறிய வீடு  என்பதாலும் சர்மாவிற்கு விருந்தாளிகளின்  வருகை மிகவும் அதிகம் என்பதினாலும் பாரதியின் தனிமைக்கு ஏங்கும் கவி உள்ளத்திற்கு அந்த வீடு சரிப்பட்டு வரவில்லை.   இந்த நேரத்தில் தான் சுரேந்திர நாத் ஆர்யா பாரதியாரைச் சந்திக்கிறார்.  ஆர்யாவின் வீடு வேப்பேரியில் இருந்தது.  அந்த வீடு பாரதியின் மன நிலைக்கு ஏற்றதாக இருக்கும் என்று  தீர்மானித்து ஆர்யா பாரதியை தன் வீட்டில் தங்கியிருக்க ஆசைப்பட்டு பாரதியாரிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்.

சுரேந்திர நாத் ஆர்யா உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் இருந்த பொழுது ஒரு டேனிஷ் கிருஸ்தவ பாதிரியார் அவருக்கு மத மாற்றம் அளித்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்.  அமெரிக்காவில் ஆர்யா ஒரு சுவிஸ் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.   வேப்பேரி ரண்டால்ஸ் சாலையில்   ஆர்யாவின் பெரிய வீடு இருந்தது.  தன் சுவிஸ் மனைவி மார்த்தாவுடன் அந்த வீட்டில் வசித்து வந்தார்.

பாரதி ஆர்யாவின் வீட்டிற்கு ஜாகை மாற்றி வந்ததும் மார்த்தா பாரதி குடும்பத்துடன் இரண்டு மூன்று நாட்கள் பழக்கத்திலேயே மிகவும் நெருக்கமாகி விட்டார்.  இவ்வளவுக்கும் அந்த சுவிஸ் பெண்ணுக்கு தமிழ் தெரியாதென்றால் செல்லமாவுக்கும், சகுந்தலாவுக்கும் சுவிஸ் பாஷை தெரியாது.   ஜாடையிலேயே விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள்.  தான் சொல்ல வருவது சகுந்தலாவுக்குப் புரிந்துவிட்டதென்றால்  கொள்ளை சந்தோஷம் மார்த்தாவுக்கு.   ஆர்யாவோ பாரதியிடம் வாடகை என்று எதுவும் வாங்க  ஆரம்பத்திலேயே  கறாராக மறுத்து விட்டார்.

வீடு பெரிய வீடு.  பெரிய பெரிய ஜன்னல்கள்.   ஜன்னலுக்கு வெளியே தோப்பு போல மரங்கள் வரிசை.  குருவி, குயில் என்று பாரதியார் மனசுக்குக் கொண்டாட்டம் தான்.  இருந்தாலும் ஆர்யாவின் அன்புக்குக் கட்டுப்பட்டு வந்த இடத்தில் எவ்வளவு நாட்கள் குடும்பத்துடன் தங்குவது என்ற கூச்சத்தில் பாரதி வேறே வீடு தேட ஆரம்பித்தார்.

புதுவையில் பாரதியின் அத்தியந்த நண்பராய்  இருந்த குவளைக் கண்ணன் ஞாபகம் இருக்கா?.. பாரதியின் 
தோழராய், பாதுகாவலராய், பாரதிக்கு எல்லாமுமாய் இருந்த குவளைக்கண்ணன் பாரதி இல்லாத புதுவையில் வாழப்  பிடிக்காமல் பாரதி சென்னைக்கு வந்த சில நாட்களிலேயே தானும் வந்து விட்டார்.  குவளைக்கு சொந்தக்காரர்கள் திருவல்லிக்கேணியில் இருந்தார்கள்.  அவர்கள் பரிந்துரையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மடப்பள்ளி சார்ந்த பணியில் குவளை இருந்தார்.  பாரதி வேப்பேரியில் இருக்கிறார் என்று  தெரிந்து ஒரு நாள் ஆர்யா வீட்டிற்கு வந்து பார்த்தார்.  சில நாட்களில் பாரதியின் சங்கடம் புரிந்து  பாரதிக்காக  குவளை  திருவல்லிக்கேணி யில்  ஒரு வீடு பார்த்துக் கொடுத்தார்.

திருவல்லிக்கேணி துளசிங்கப்  பெருமாள் கோயில் தெருவில் அந்த வீடு இருந்தது.  முன்புறம் விசாலமான கூடம், பின்புறம்  நடு  முற்றம் என்று பெரிய வீடு அது.  குவளை பாரதியாரை விட்டுப் பிரிந்திராமல் தமக்கு அருகாமையில் வைத்துக் கொண்டது கூட ஒரு விதத்தில் பார்க்கப் போனால் தெய்வ சங்கல்பம் தான்.   பாரதியாருக்கு குவளை செய்ய வேண்டிய ஒரு காரியம் பாக்கியிருந்ததை அந்த தெய்வமே அறியும் போலும்.

பின்னால் நடந்தவையெல்லாம் நினைத்துப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.  பாரதியார் திருவல்லிக்கேணியில் வாழ்ந்த பொழுது பழகிய பல நண்பர்கள் ஒன்று கூடி செயலாற்றவும் பேசிக் களிக்கவுமான காலம் கைகூடி வந்தது.  வ.வே.சு. அய்யரும், துரைசாமி அய்யரும் இதில் முக்கியமானவர்கள்.    சுதேச மித்திரன் தொடர்பில் வாசிக்கக் கிடைத்த வெளிநாட்டுப் பத்திரிகைகளை ஆழ்ந்து படிக்கவும் குறிப்புகள் எடுக்கவும் சில கட்டுரைகளை மித்திரனுக்கேற்ப மொழி பெயர்க்கவும் முன்னிரவு நேரத்தை ஒதுக்கி வைத்திருந்தார் பாரதி.  வெளியூர்  கூட்டங்களில் கலந்து கொள்ளவும் அவரால் முடிந்தது.

பின்னால் நடந்தவையெல்லாம் நினைத்துப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.  எல்லாமே தெய்வ சங்கல்பம் தான்.   யாரெல்லாம் நெருக்கம் கொள்ள வேண்டுமோ அவர்கள் எல்லாம் பாரதியின் திருவல்லிக்கேணி வாசத்தில் நெருக்கம் கொள்கிறார்கள்.   'தீது நன்மையெல்லாம் காளி தெய்வலீலை அல்லவோ?'  என்று சொன்ன பாரதியின் தீர்க்க தரிசனத்தை நினைத்து வியக்கத் தான் வேண்டியிருக்கிறது.


(வளரும்)



Monday, August 6, 2018

பாரதியார் கதை --21

                                                             அத்தியாயம்--   21


டையத்தில் இருக்கும் பொழுது  பாரதியாருக்கு  சுதேசமித்திரனுடனான  தொடர்பு மீண்டும் துளிர்த்தது.   இங்கிருந்தே மித்திரனுக்கு கட்டுரைகள் அனுப்பி வந்தார்.  கடையத்தில் 'கலா நிலையம்'  என்றோரு அமைப்பை நிறுவி தமிழ்ப்பணி புரிய விழைந்தார்.   நெல்லைக்குச் செல்லும் பொழுதெல்லாம் நெல்லையின் பிரபல வழக்குரைஞரும் தேசியவாதியுமான சாது கணபதி பந்துலுவின் வீட்டில்   பாரதியார் தங்குவதுண்டு.  பாரதி நெல்லை வரும் பொழுதெல்லாம் தவறாமல்  சோமசுந்தர பாரதியும் பாரதியைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.  தாமிரபரணி ஆற்றங்கரையில் பாரதி புனைந்த பாடல்கள் பிரசித்தம்.  சில நாட்கள் மாலை வேளைகளில் தன் கடையம்   வீட்டின் வாசல் வெளிப்புறம் நின்று  கொண்டு சொற்பொழிவுகள் செய்வதுண்டு.   அதற்கு
நிறைய கூட்டம் கூடுமாம்.  ஊர் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பாரதியாரின் உரைகளைக் கேட்பார்களாம்.  கவிஞர்,  எழுத்தாளர், பத்திரிகையாளர், அரசியலாளர், சொற்பொழிவாளர் என்று பன்முகம் கொண்டவராய் பாரதி திகழ்ந்திருக்கிறார்.   சென்னைக்  கடற்கரையில்   அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் பிரிட்டிஷாரைக் கலக்கியிருக்கின்றன.   ஒரு பழைய இதிகாச காலத்து புராணத்தின் பின்னணியில் பிரிட்டிஷார் ஆட்சி காலத்து அதிகாரச் சிக்கல்களை ஆழமாக அலசி ஆராயவே பாரதியார் மகாபாரதக் கதையின் சில பகுதிகளை நீள் காவியமாக்கி 'பாஞ்சாலி சபதம்' என்ற பெயரில்  படைத்திட்டார்.

கடலூர் சிறை விடுதலைக்குப் பின் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் குறிப்பிடத்தக்கன.  அந்நாட்களில்  ஒரு ரூபாய் நுழைவுக் கட்டணம் வைத்து மேடைச் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு பண்ணும் ஒரு வழக்கமிருந்தது.  இப்படியான பல சொற்பொழிவுகளில்   ஆங்கிலத்திலும், தமிழிலும் சரளமாகப் பேசி  பாரதியார் மக்களை மிகவும் கவர்ந்திருக்கிறார்.  சொற்பொழிவுகளுக்கு நடுவிலேயோ, ஆரம்பத்திலோ தனது பாடல்கள் சிலவற்றைப் பாடி மக்களை மகிழ்ச்சியில் அவர் ஆழ்த்துவதுண்டு.   இந்திய வரலாறு,  இந்தியாவின் பழம்பெரும் பெருமை,    இந்து மதத்தின் சிறப்பு, இந்திய விடுதலை--   இதெல்லாம் அவரது பேசு பொருளாக அமைந்திருக்கிறது.  விடுதலைக்குப் பிறகான கடையம்  வாழ்க்கையின் போது பாரதியார் சென்னை சென்றிருக்கிறார்.  சரியாகச் சொல்ல வேண்டுமானால் 1919 ஆண்டு  பிப்ரவரி மாதம்  அது.  ரெளலட் சட்ட வரைவை
எதிர்த்து கிளர்ச்சிகள் நடந்த நேரம் அது.  சென்னையில் நடந்த கிளர்ச்சிக் கூட்டத்திற்கு தலைமை தாங்க மஹாத்மா காந்தி அழைக்கப்பட்டு அவரும் ராஜாஜி வாழ்ந்த இல்லத்தில் தங்கியிருந்த நேரம்.  காந்தியாரின் வருகை அறிந்து பாரதிக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.  அவரைச் சந்திக்கச் செல்கிறார்.

பாரதியாரின் வாழ்க்கை பற்றி எழுதியிருக்கும் வ.ரா. நூலில் காணப்படும் தகவலை அப்படியே இங்கு தருவது சுவையாக இருக்கும்.

"அப்பொழுது ராஜாஜி, கதீட்ரல் ரோடு, இரண்டாம் நம்பர்  பங்களாவில் குடியிருந்தார்.  அந்தப் பங்களாவில் தான் காந்தி வந்து தங்கினது. நாலைந்து நாட்கள் தங்கியிருந்தார்.  ஒரு நாள் மத்தியானம்.  சுமார் இரண்டு மணி இருக்கும்.  காந்தி வழக்கம் போலத் திண்டு மெத்தையில் சாய்ந்து கொண்டு வீற்றிருந்தார். அவர் சொல்லிக் கொண்டிருந்ததை பக்கத்தில் உட்கார்ந்திருந்த  மஹாதேவ தேசாய் எழுதிக் கொண்டிருந்தார்.   காலம் சென்ற சேலம் பாரிஸ்டர் ஆதி நாராயண செட்டியார் குடகுக் கிச்சிலிப்  பழங்களை  உரித்துப் பிழிந்து மகாத்மாவுக்காக  ரசம் தயார் பண்ணிக் கொண்டிருந்தார்.  ஒரு பக்கத்துச் சுவரில்  ஏ. ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி முதலியவர்கள் சாய்ந்து நின்று  கொண்டிருந்தார்கள். எதிர்ச் சுவரில் ராஜாஜியும் மற்றும் சிலரும் சாய்ந்து கொண்டு நின்றிருந்தார்கள்.  நான் வாயில் காப்போன்.  யாரையும் உள்ளே  விடக்கூடாது என்று எனக்குக் கண்டிப்பான உத்தரவு.  நான் காவல் புரிந்த லட்சணத்தைப் பார்த்துச் சிரிக்காதீர்கள்.  அறைக்குள்ளே பேச்சு   நடந்து கொண்டிருந்த சமயத்தில் பாரதியார் மடமடவென்று வந்தார்.  "என்ன ஓய்!" என்று சொல்லிக் கொண்டே  அறைக்குள்ளே நுழைந்து விட்டார்.  என் காவல் கட்டுக் குலைந்தே போய்விட்டது.

உள்ளே சென்ற பாரதியாரோடு நானும் போனேன்.  பாரதியார் காந்தியை வணங்கி விட்டு, அவர் பக்கத்தில் மெத்தையில் உட்கார்ந்து கொண்டார். அப்புறம் பேச்சு வார்த்தை ஆரம்பித்தது.

பாரதியார்:  மிஸ்டர் காந்தி!  இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு நான் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப் போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?

காந்தி:  மகாதேவபாய்!  இன்றைக்கு மாலையில் நமது அலுவல்கள் என்ன?

மகாதேவ்:  இன்றைக்கு மாலை ஐந்தரை மணிக்கு நாம் வேறோர் இடத்தில் இருக்க வேண்டும்.

காந்தி:  அப்படியானால், இன்றைக்குத் தோதுப்படாது.  தங்களுடைய  கூட்டத்தை நாளைக்கு ஒத்திப்போட முடியுமா?

பாரதி: முடியாது.  நான் போய் வருகிறேன்.  மிஸ்டர் காந்தி!  தாங்கள் ஆரம்பிக்கப் போகும்  இயக்கத்தை நான் ஆசிர்வதிக்கிறேன்.

பாரதியார் போய்விட்டார்.    நானும்  வாயில்படிக்குப் போய் விட்டேன்.  பாரதியார் வெளியே போனதும், "இவர் யார்?" என்று காந்தி கேட்டார்.  தாம்  அறிந்த  பாரதியாரைப்   புகழ்ந்து சொல்வது நாகரிகம் அல்ல என்று நினைத்தோ என்னவோ ரங்கசாமி அய்யங்கார் பதில் சொல்லவில்லை.  காந்தியின் மெத்தையில் மரியாதை தெரியாமல் பாரதியார் உட்கார்ந்து கொண்டார் என்று கோபங்கொண்டோ என்னவோ சத்தியமூர்த்தி வாய் திறக்கவில்லை.  ராஜாஜி தான், "அவர் எங்கள் தமிழ்நாட்டுக்  கவி" என்று சொன்னார்.

அதைக் கேட்டதும், "இவரை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்.  இதற்கு தமிழ் நாட்டில் ஒருவரும் இல்லையா?" என்றார்  காந்தி.  எல்லோரும் மெளனமாக இருந்து  விட்டார்கள்'......  என்று வ.ரா. குறிப்பிடுகிறார்.

மனங்கள் இரண்டும்   கலந்து உறவாடியது  போலும்.  ஒரே சந்திப்பு தான்.  பாரதியாரும் காந்திஜியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டார்கள்.

அன்றைக்கு மாலையில் நடந்த திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தில் தான்  பாரதியார்  "வாழ்க, நீ  எம்மான்.." என்று காந்தி அடிகளைப் போற்றிப் பாடுகிறார்.

சென்னை விக்டோரியா  பப்ளிக் ஹாலில் 'நித்யத்தின் வழிபாடு' {Cult of the Eternal}  என்ற தலைப்பில் 1919 மார்ச் 2-ம் நாள் பாரதி உரையாற்றியதாக ஏற்கனவே இத்தொடரில்  குறிப்பிட்டிருக்கிறேன்.    அவர் ஆற்றிய இந்த உரை மகாத்மாவைச் சந்தித்த பிறகு நிகழ்ந்திருக்க வேண்டும்.  அடுத்து சென்னை வன்னிய தேனாம்பேடை கூட்டம் ஒன்றில் பாரதி அற்புதமான சொற்பொழிவை நிகழ்துகிறார்.

சென்னையில் இரண்டு மாதங்கள் இருந்திருந்திருப்பார் போலத் தெரிகிறது. பின்பு கடையம் செல்கிறார்.  பின்பு கானாடுகாத்தான், பொட்டல்புதூர், காரைக்குடி, பின்பு திருவனந்தபுரம் என்று வாழ்க்கை இருகரம் நீட்டி பாரதியாரை அழைத்திருக்கிறது.   அன்பர்கள் அழைப்பை ஏற்று சில ஊர்களில் சில நாட்கள் தங்கல்,  சில ஊர்களில்  சொற்பொழிவு என்று.....

திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள மணலி  என்ற ஊரில் பாரதியார்  நிகழ்த்திய சொற்பொழிவு ஒன்றை உதாரணத்திற்குச் சொல்லலாம்.  குலோத்துங்கன் வாசகசாலை என்ற நூல் நிலைய முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் பாரதி பேச அழைக்கப்பட்டிருந்தார்.  சத்தியமூர்த்தியும் பேச்சாளர்களில் ஒருவர்.  சத்தியமூர்த்தி  பேசிய பிறகே பாரதி பேசியிருக்கிறார்.

'இந்தியாவின் முற்காலப் பெருமையும் தற்கால நிலையும்' என்பது தான் பாரதிக்குப் பேசக்கொடுக்கப்பட்டிருந்த தலைப்பாம்.  சொற்பொழிவின் தொடக்கத்தில் 'இந்தப் பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு', 'ஜெயமுண்டு பயமில்லை மனமே' -- பாடல்களை  பாரதி பாடினாராம்.   அன்றைய அரசியல் குறித்துப் பேச  அவரது  விடுதலையின் போதே பிரிட்டிஷ் அரசு சில கட்டுப்பாடுகள் விதித்திருந்தாலும்,  பாரதி மிகச் சிறப்பாக தனக்குக் கிடைத்த வாய்ப்பை உபயோகப்படுத்திக் கொள்கிறார். இந்தியாவின் வரலாறு,  அதன் பழம்பெருமை, இந்து மதத்தின் சிறப்பு, அதன் பழம்பெருமைகளை மீட்டெடுப்பதற்கான விடுதலைத் தேவைகள், அதற்கான முயற்சிகள் என்று அன்றைய பாரதி ஆற்றிய உரை விரிவாக அமைந்து சபையினரைக் கட்டிப்போட்டு விட்டதாம்.    'இந்தியாவில்   நியாயம் ஏற்பட்டால் தான் உலகத்தில் நியயம் ஏற்படும்.  ராஜரீக வேற்றுமைகள், ஜாதி வேற்றுமைகள், வர்ண வேற்றுமைகள் பால் வேற்றுமை முதலிய எல்லாவிதமான பாரபட்சங்களிலும் முடிவான நியாயம் இந்தியாவில் தீர்மானிக்கப்பட்டாலன்றி  உலகத்தில்  நியாயம்  ஏற்படாது.  இந்தியா பூமிக்கு முத்திரை நாடு;  இது கரு நாடு; இது மனுஷ்ய நாகரிகத்திற்கு தாய் நாடு.." என்று பாரதியின் அன்றைய உரை உலகளாவிய நோக்கில் அமைந்திருந்தது.   1920 டிசம்பர் 15-தேதியிட்ட சுதேசமித்திரனில் பாரதியின் மணலி கூட்ட பேச்சு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

அந்நாளைய சென்னை மாகாணத்தில் பாரதியார் சென்று வந்த ஊர்களைப் பற்றிய குறிப்பு ஒன்று 'பாரதி கண்ட தென்நாடு'  என்ற தலைப்பில்  ரா.அ. பத்மநாபனின் நூலில் காணக்கிடைக்கிறது.  எட்டையபுரம், கடையம், திரு நெல்வேலி, தூத்துக்குடி, மணியாச்சி, கோவில்பட்டி, சென்னை, மதுரை,  நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம்,  திருவண்ணாமலை, காரைக்குடி, மணலி, கானாடுகாத்தான், ரவணசமுத்திரம், பொட்டல்புதூர், திருவனந்தபுரம், ஈரோடு ஆகிய ஊர்களுக்குப் பயணபட்டு இருக்கிறார்.  எட்டையபுரம், கடையம், மதுரை, சென்னை, புதுவை ஆகிய ஊர்கள் அவர் வாழ்ந்த ஊர்கள்.   1906-ல் கல்கத்தாவிலும், 1907-ல் சூரத்திலும் நடந்த காங்கிரஸ் மாநாடுகளில்  கலந்து கொண்டிருந்திருக்கிறார்.

எல்லாக் காலங்களிலும்  சுதேசமித்திரன் பத்திரிகை பாரதியாருக்கு தாய்வீடாகவே இருந்திருக்கிறது என்பது  மீண்டும்   நிரூபணமாயிற்று.

சுதேசமித்திரனிலிருந்து  அழைப்பு.     பாரதியார் சென்னை புறப்பட்டார்.


{வளரும்}


படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.


Monday, July 30, 2018

பாரதியார் கதை --20

                                                      அத்தியாயம்--20



திருநெல்வேலி   மாவட்டத்தில்  அம்பாசமுத்திரத்திற்கும் தென்காசிக்கும் இடையே இருக்கும் ஊர் கடையம்.  நெல்லையிலிருந்து 50  கி.மீ.

கடையம் செல்லம்மா பிறந்து வளர்ந்த ஊர்.   ஊரில் வீட்டுக்குப் பக்கத்தில் இராமர் கோயில்.  இராமர் கோயிலுக்குப்  பக்கத்தில்  போஸ்ட் ஆபிஸ்.  கடையத்தில் இருந்த   முந்தைய காலகட்டத்தில்  பத்திரிகை பிரசுரத்திற்கான விஷயஙகளைை இந்த தபால் நிலையத்தின் மூலமாக செல்ல மகள் தங்கம்மாளிடம் கொடுத்து பாரதி அனுப்புவது வழக்கம்.   தன் தந்தை பற்றி தங்கம்மாள் எழுதிய புத்தகம் ஒன்றில் இதைப் பற்றி பிரஸ்தாபித்திருக்கிறார்.

'காக்கைச் சிறகினிலே, நந்தலாலா'.  'காயிலே புளிப்பதென்ன, கண்ணபெருமானே' 'மங்கியதோர் நிலவினிலே'-- முதலிய பாடல்கள் அவரது கடைய வாழ்க்கையில்  புனையப்பட்டதாக  முனைவர்  ச..கணபதி ராமன் அவர்கள் அவரது 'கடையத்தில் உதிர்ந்த பாரதியின் படையல்கள்' என்ற நூலில் கூறுகிறார்.....   முனைவர் அவர்கள்  'உதிர்ந்த படையல்களை' 'உதித்த படைப்புகளாக'வானும் புத்தகத் தலைப்பில் மாற்றம் கொண்டிருக்கலாம்  என்பதைத் தவிர இந்த நூல் பற்றிச் சொல்ல எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.                                                         

'மங்கியதோர் நிலவினிலே' பாடலைப் புனையும் மனநிலையில் பாரதியின் பிற்காலத்திய கடையம் வாழ்க்கை இல்லாது போனது பெரும் சோகம். கடலூர் சிறை  விடுதலைக்குப் பின் கடையம் வந்திருக்கும் பாரதி இப்பொழுது நினைத்தாலும் தன் பத்திரிகைகான தனது படைப்புகளை சுதந்திரமாக அனுப்ப முடியாது.  காவல்துறை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல்  பார்வைக்கு அனுப்பி அவரின் அனுமதிக்குப் பிறகே அவை பத்திரிகைகளுக்குப் போய்ச் சேர வேண்டும்.   அந்தத்  தபால் நிலையத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் பாரதி இந்தக் கட்டுப்பாடு குறித்து குமைந்து போயிருப்பார் என்றாலும்  அவரது விடுதலைக்கு ஏற்பாடு செய்தவரும் அவரின் மேல் மிகுந்த நம்பிக்கைக்கு கொண்டவருமான  காவல்துறை அதிகாரிக்கு தான் கொடுத்த உறுதிமொழிக்கு மிகுந்த மரியாதை  கொடுத்தவராய் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பார்.

இன்று கூட ஊர் மாப்பிள்ளைக்கு கடையத்தில் ஏகப்பட்ட மரியாதை.  அந்த ஊரின் ஆரம்ப, நடுத்தர, மேல்நிலைப் பள்ளிகளுக்கெல்லாம் பாரதியாரின் பெயர் தான். கடையத்தில் ஒருகாலத்தில் வெள்ளமாக ஓடிய ஜம்பு நதி இப்பொழுது ஓடையாகியிருக்கிறது.   இந்த ஊர் நித்ய கல்யாணி அம்மன் கோயில்,  கோயிலைச் சுற்றியுள்ள மேற்கு மலைத்  தொடர்ச்சி எல்லாம் பாரதி கவிதை பாடித் திரிந்த  இடங்கள்.  இந்த நித்ய கல்யாணி அம்மன்  கோயிலுக்கு அருகிலிருக்கும் தட்டப்பாறையில்   அமர்ந்து தான்  'காணி நிலம் வேண்டும், பராசக்தி காணி நிலம் வேண்டும்'  என்று பாரதி  பாடினார் என்பார்கள்.  பாரதியின் நவராத்திரி பாடல்களில் வரும் 'உஜ்ஜெயினீ  நித்யகல்யாணீ  ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி' வரிகளையும் இஙுகு நினைவு கொள்ளலாம்.  கடையத்திற்கு அருகிலிருக்கும் தோரணமலை ஸ்ரீீீீ முருகபெருமானை 'குகையில் வளரும் கனலே' என்று பாரதியார் மனமுருகப் பாடியுள்ளார்.


கடையம் வந்து சேர்ந்த பாரதி அவரது மைத்துனர் அப்பாதுரை வீட்டில் தங்கியிருந்தவர்,  சில நாட்களில் ராமர் கோயிலுக்கு வடக்கே பட்டர் வீடு என்ற ஒட்டு கட்டிடத்தில் குடியேறுகிறார்.    இந்த வீட்டில் குடியேறுவதற்கு முன்னால் இந்த வீடு பற்றி அவர் குறிப்பிட்டிருக்கும் தமது நெருங்கிய நண்பர் வெங்கடேச ரெட்டுத் தேவருக்கு எழுதிய கடிதம் ஒன்று காணக்கிடைக்கிறது.  பாரதியாரின் அன்றைய வறுமை நிலை பற்றியும் குறிப்பிடும் கடிதம் அது:

                                                                                                                          கடையம்
                                                                                                                         30  ஜனவரி 1919

ஸ்ரீமான் வெங்கடேச ரெட்டுவுக்கு நமஸ்காரம்.

இந்த ஊரில் ஒரு வீடு மூன்று வருஷத்துக்கு வாடகைக்கு  வாங்கியிருக்கிறேன்.  அதை செப்பனிடுவதற்கு   அவசியமான தொகை  நாம்  கையிலிருந்து செலவிட்டு  மேற்படி தொகைக்கு  வீட்டுக்காரரிடமிருந்து கடன் சீட்டெழுதி வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் செய்யப் பட்டிருக்கிறது.   இந்த ஊரில் வேறு வீடு கிடைக்காதபடியால் இவ்வித ஒப்பந்தத்தின் மீது  செப்பனிட வேண்டிய வீட்டை வாங்கிக் கொள்ளுதல் இன்றியமையாததாக இருக்கிறது.

இந்த விஷயத்தைக் குறித்து மஹாராஜாவிடம் தனிமையாகத் தெரியப்படுத்தி அவர்கள் கொடுக்கும் தொகையுடன்  நீயும் உன்னால் இயன்றது சேர்த்துக் கூடிய தொகையை  ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதி  பழைய கிராமம்  கடையம் என்ற விலாசத்திற்கு ஸ்ரீமதி சின்னமா சித்தி  மூலமாக வேனும்  நேரிலேனும் விரைவில் அனுப்பும்படி வேண்டுகிறேன்.

உனக்கு மஹாசக்தி அமரத்தன்மை தருக.

                                                                                           உனதன்புள்ள

                                                                                   சி. சுப்பிரமணிய பாரதி

கடிதத்தை வாசிக்கையிலேயே மனம் நொந்து போகிறது. 


'ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்' என்று பாடிய பாரதி  கடையம் வீதியில் செல்லம்மாவின் கைகோர்த்துப் போவாராம்.  'என்ன இது,  அநியாயம்' என்று பதைபதைக்கும்அக்கிரஹாரத்து மக்கள் தெருக்கதவு அடைத்து வீட்டினுள் புதைவாராம்.  பாரதியின் புதுமைக் கருத்துக்கள்  பழைய பழக்க வழங்களில் தோய்ந்திருந்த ஜனசமூகத்திற்கு வேம்பாய் கசந்தன.   இது ஒரு பக்கம் என்றால்  பாரதியின் வாழ்க்கை நெறியின் நேர்மையை உபயோகப்படுத்திக் கொண்டு அவரது சொந்த வாழ்க்கையை சீண்டிப் பார்க்கவும் சிலர் முயன்றனர்.

முக்கியமாக தனது படைப்புகளை அச்சில் கொண்டு வரும் முயற்சிகளுக்கு கடையம் வாழ்க்கை பாரதிக்கு சிரமங்களைக் கொடுத்தன.   புத்தக பிரசுரத் தொடர்பாக பரலி சு. நெல்லையப்பருக்குக் கடிதம் எழுதுகிறார்.    நெல்லையப்பரும் பாரதியை  நேரில் சந்திக்க கடையம் வருகிறார்.  பாரதியார் எட்டையபுரம் சென்றிருப்பதைக் கேள்விப்பட்டு எட்டையபுரம் விரைந்து அங்கே பாரதியை சந்தித்தும் விடுகிறார்.  பாரதியாரால் 'தம்பி' என்றழைக்கும் பேறு பெற்ற நெல்லையப்பர்,  பாரதியின் சில பாடல்களை 'கண்ணன் பாட்டு'  என்கிற தலைப்பில்   1917-லேயே 2000 பிரதிகள் பதிப்பித்தவர்.  முதன் முதல் நூல் வடிவில் வெளிவந்த பாரதியின் படைப்பு இது தான்.   பின்னால் பாப்பா பாட்டு, முரசுப் பாட்டு,  நாட்டுப்பாட்டு என்ற தலைப்பில் நெல்லையப்பர் பாரதியின் நூல்களைக் கொண்டு வந்தார்.   எட்டையபுரத்தில் பாரதியை சந்தித்த பிறகு இதே நூல்களை மீள் பிரசுரம் செய்தார் என்று தெரிகிறது.

தனது படைப்புகள் அனைத்தையும் நாற்பது நூல்களாக வெளியிட ஆர்வம் கொண்டு அதற்காக பொருளுதவி கேட்டு பலருக்கும் கடிதங்கள் எழுதி தோல்வி கண்ட மனம் பாரதியாரது.  கடிதங்கள் என்றால் தபால் கார்டில் தான். அதற்காக போஸ்ட் ஆபிஸ் சென்று நிறைய தபால் கார்டுகளை வாங்கி கைவசம் வைத்திருப்பாராம்.

செட்டி நாட்டு கானாடுகாத்தானில்  வயி.சு. சண்முகம் செட்டியார் என்று ஒரு பாரதி அன்பர் இருந்தார்.   பாரதியின் பாடல்களில் மிகுந்த பிரேமை கொண்டவர் அவர்.   செல்வந்தர்.  பாரதி கடையத்திற்கு வந்த சேதி கேள்வி பட்டு பிப்ரவரி 1919-ல் செட்டியார் பாரதியை தன் ஊருக்கு கையோடு அழைத்துப் போக கடையத்திற்கே வந்து விட்டார்.  பாரதியாரோடு கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் தங்கி பரவசப்பட்டார்.   உடனே அவரோடு கானாடுகாத்தான் செல்ல பாரதியார் அப்பொழுது தயார் நிலையில் இல்லை.  இருந்தும்  எட்டு மாதங்கள் கழித்து அக்டோபர் 1919 வாக்கில் கானாடு காத்தான் சென்று செட்டியார் மாளிகையில் 9 நாட்கள் தங்கியிருந்தார்.     கடையம் திரும்பிய பிறகு நவம்பரில் செட்டியாருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.

ஸ்ரீமான் வயி.சு.   சண்முகம்    செட்டியாருக்கு ஆசிர்வாதம்.  பகவத் கீதையை அச்சுக்கு விரைவில் கொடுங்கள்.  தஙகளுக்கு இஷ்டமானால் அதற்கு  நீண்ட விளக்கம்  எழுதி அனுப்புகிறேன்.   நீண்ட முகவுரையும் எழுதுகிறேன்.  ஆங்கில கவிகள்,  நூலாசிரியர்களின் காவியங்களும்,  கதைகளும்  இங்கிலாந்தில்   எப்படி  அச்சிடப்படுகின்றனவோ அப்படியே நூல்கள் நாம் இங்கு அச்சிட முயல வேண்டும்'  -- என்று பாரதியின் அளப்பரிய ஆசைகளை அக்கடிதம் வெளிப்படுத்துகிறது.

மறுபடியும் 1920 ஜனவரியில்  செட்டியாரின் அன்பு அழைப்பில் பேரில் கானாடுகாத்தான் வந்து தங்கினார்.  சண்முகம் செட்டியார் தன் மாளிகையில் பாரதியாரை தன்னோடையே வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.  ஆனாலும் பாரதியின் புத்தக வெளியீடு ஆர்வங்கள் கனிந்து வரவில்லை என்பது ஒருபுறமிருக்க,  கானாடுகாத்தானில் தங்கியிருக்க செல்லம்மாளுக்கு விருப்பமில்லை என்று தெரிந்து பாரதி கடையத்திற்கே திரும்புகிறார்.

இருந்தும் பாரதியின் புத்தக வெளியீடு ஆசைகள்  கருகிப் போய்விடவில்லை.  நண்பர் மதுரை ஸ்ரீனிவாசனுக்கு ஆங்கிலத்தில்  ஒரு நீண்ட கடிதம் எழுதுகிறார்.

அன்பு நண்பரே,

எனது எழுத்துப்பிரதிகள் யாவும் --என்னுடைய பன்னிரண்டு வருஷ அஞ்ஞான வாசத்தின் பலன்கள்-- புதுவையிலிருந்து இங்கு வந்து சேர்ந்து விட்டன.  அவற்றை 40 தனிப்புத்தகங்களாகப் பிரிக்க வேண்டும்.  முதல் பதிப்பாக ஒவ்வொரு புத்தகத்திலும்  10000 பிரதிகள் நான் அச்சிடப் போகிறேன்.   இந்த வேலைக்கு ஆரம்பத்தில் ரூ. 20000/-  மூலதனம்    தேவைப்படும்.  புத்தகங்கள் வெளிவந்த ஒரு வருஷத்தில்  அதிகமானால் இரண்டு வருஷங்களுக்குள்  செலவெல்லாம் போக நிகர லாபமாக ஒன்றரை  இலட்சம் ரூபாய் அடைவது நிச்சயம்.." என்று  வறுமை படுத்திய பாடு, புதிய பாரதியாய் எழுதுகிறான்.


அதே நேரத்தில் தனது புத்தக வெளியீட்டிற்காக தமிழ்ச்சாதியினரிடம் ஒரு கடன் திட்டத்தைப் பற்றியும் பிரஸ்தாபிக்கிறான்.  'புத்தகங்களை அச்சடிப்பதற்கான செலவிற்காக உங்களால் முடிந்த அளவு தொகையை தயவுசெய்து கடனாக அனுப்பி வையுங்கள்.  உங்களிடமிருந்து குறைந்தபட்சம் 100 ரூபாயவது எதிர்பார்க்கிறேன்.  அருள் கூர்ந்து தங்கள் நண்பர்கள் இருபது பேரையாவது  இதே மாதிரியோ அல்லது அதிகமான தொகையோ கடன் தந்து உதவும்படி வேண்டுகிறேன்.  உங்களிடமிருந்தும் உங்கள் நண்பர்களிடமிருந்தும் கிடைக்கும் தொகைகளுக்களுக்கு ஸ்டாம்பு
ஓட்டி புரோ நோட்டு எழுதிக் கொடுக்கிறேன்.  எனக்குக் கிடைக்கக் கூடிய அபரிதமான லாபத்தை முன்னிட்டு மாதம் 2 சதவீதம் தாராளமாகவே வட்டி தருகிறேன்.  உஙள் அன்பான பதிலையும்  உங்கள் தரப்பிலிருந்து ஏராளமான மணியாடர்களையும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டும், தஙளுக்கு நீடித்த ஆயுளும் இன்பகரமான வாழ்க்கையும் அளிக்குமாறு கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்,
தங்களன்புள்ள சி. சுப்பிரமணிய பாரதி  என்று கையெழுத்திட்டு முடிக்கிறான்.

பாரதிக்குத் தான் தமிழ்ச் சமுதாயத்தின் மேல் எவ்வளவு நம்பிக்கை..

நல்லவேளை,  பாரதியின் அந்த நம்பிக்கைப் பொய்த்துப் போகிறது.

{வளரும்}

படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.




Wednesday, July 25, 2018

பாரதியார் கதை --19

                                              அத்தியாயம்--19


பாரதியாரின் பத்தாண்டு காலப் புதுவை வாசம் தமிழ் கவிதை உலகிற்கு பெரும் பங்களிப்பைச் செய்த காலமாகும்.    பெண்களின் விடுதலைக்கான பாடல்கள், சக்தி பாடல்கள், ஒப்பற்ற சித்தக்கடல், வேதாந்தப்பாடல்கள், அவரின் சுயசரிதைப் பாடல்கள் மட்டுமல்ல, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு என்று படைப்புலகின் பேரழகுகள் அத்தனையும் அவரிடமிருந்து வெளிப்பட்டது அவரது புதுவை வாச காலத்தில் தான்.  அவரது தத்துவ, ஞானத் தேடல்களுக்கு களமாக அமைந்தது புதுவை மண் தான்.  இந்தியா, சூர்யோதயம், விஜயா, கர்மயோகி ஆகிய பத்திரிகைகளோடு  அவர் ஆத்மார்த்த தொடர்பு கொண்டிருந்த காலமும் அது தான்.  ரிக் வேதப்
பாடல்களை  முறையாக   அரவிந்தரிடம் அவர் பாடம் கேட்க வாய்த்த காலமும் அது தான்.  அரவிந்தரும் பாரதியிடம் தமிழ் பயின்றார்.  பிற்காலத்தில் திருக்குறள், ஆழ்வார் பாசுரஙகள் போன்றவற்றை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம் செய்யும் அளவுக்கு பாரதி கற்றுக் கொடுத்த தமிழ் ஞானம் அரவிந்தரிடம் செயல்பட்டிருக்கிறது.

பாரதியின் அருமை மகள் சகுந்தலா தம் தந்தையாரிடமிருந்து தமிழ்ப்பாடல் பிறக்கும் நேர்த்தியைப் பற்றிச் சொல்கிறார், கேட்போம்:

"என் தந்தை பாட்டு இயற்றுகையில் அதற்கு ராகம், மெட்டு அமைக்க ஒரு உதவியையும் நாடுவதில்லை. ஏதேனும் ஒரு மெட்டில் தாமே பாடிப்பார்ப்பார். அந்த மெட்டு அவருக்குப் பிடித்திருந்தால் அந்த இசை எந்த ராக ஸ்வரஙளுக்குப் பொருத்தமாக இருக்கின்றதோ அந்த ராகத்தின் பெயரை மட்டும் எழுதி வைத்திருப்பார்.  தாள கதி தானே வந்து அமைந்து கொள்ளும். தாம் எழுதிய பாடல்களை என் தந்தை தம் ஆப்த நண்பர்கள் சிலரிடம் பாடிக் காண்பிப்பார்.  ஸ்ரீ வ.வே.சு. அய்யர்,  கண்ணன் பாட்டுக்கு எழுதித் தந்துள்ள முகவுரையில்  கற்பனா பாவத்தோடும் சிருஷ்டி உற்சாகத்தோடும் ஆசிரியர் தம் பாடல்களைப் பாடுவதைக் கேட்டிருப்பவர்கள் அவற்றை அட்சர லட்சம் பெறுமானமுள்ளதாக மதிப்பர் என்றார்.  என் தந்தை தம் குயில் பாட்டில் "காதல், காதல், காதல்.." என்று குயில் பாடியதாகக் கூறும் போது 'அந்தப் பொருளை அவனிக்கு உரைத்திடுவேன்;  விந்தைக் குரலுக்கு மேதினியீர் என் செய்வேன்' என்றார்.  ஆனால் அந்த அவரது கற்பனைக் குயில்க் காதலிக்குள்ள குரலினிமை ஒரு வேளை அவருக்கு இல்லாமல் போயிருக்கலாம்.  அவரது கம்பீரமான குரலினிமையை-- அந்த அற்புதமான உச்சரிப்பை-- ஒரு கிராம்போன் இசைத்தட்டு மூலமாகப் பல நாள்  கேட்டு அனுபவிக்கும் பாக்கியம் நானும் எங்கள் குடும்பத்தாரும்-- ஏன் தமிழ் நாட்டாரும் பெறவில்லையே!" என்று ஏக்கத்துடன் சொல்கிறார்.

'செந்தமிழ் தென்புதுவை என்னும்  திருநகரின்  மேற்கே
 சில தொலைவில் மேவுமொரு மாஞ்சோலை'  என்று குயில் பாட்டில் புதுவை நகரின் செளந்தரியத்தைத் தந்தையார் வர்ணித்திருக்கிறார்.  ஆனாலும் அத்தகைய புதுவை நகரை விட்டு வெளி வரக்கூடாதென்று அரசாங்க ஆக்ஞையினால் கூண்டில் அடைபட்ட சிங்கம் போல என் தந்தை தவித்து மறுகினார். 'இன்று கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும். தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்; தனுவுண்டு; காண்டீபம் அதன் பேர் என்றான்' -- இவ்வாறு பாஞ்சாலி சபதத்தில் அர்சுனன் கூறியதாக என் தந்தையார் எழுதியுள்ள பாடலைப் பற்றி ஸ்ரீ வ.வே.சு. அய்யர் பாஞ்சாலி சபத்திற்கான தம் முகவுரையில் பரவசத்துடன் எழுதியிருப்பதைக் காணலாம்.  அந்த வரிகளுக்கு அவர் அத்தனை பெரிய மதிப்பு அளித்ததன் காரணம், என் தந்தையின் பாவன்மைக்காக மட்டுமல்ல;  புதுவையில் அவர்கள் அடைபட்டுக் கிடந்தபோது அந்தப் பாட்டு அவர்களுக்கு எவ்வளவு பொருத்தமாயிருந்து  என்பது தான் அந்தப் பாடலை ஸ்ரீஅய்யர் தனிமையில் தமக்குள் பாடிப்பாடி மகிழ்வதை நான்  கேட்டிருக்கிறேன்...." என்று சகு ந்தலா  பாரதி சொல்லும் பொழுது புதுவையில்  பாரதியார் கட்டுண்டு கிடந்த அவலமும்   சுதந்திரத்திற்கான அவரது தாபமும் புரிகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார் சகுந்தலா.

பாரதியாரின் முதல் புத்தகத் தொகுதி 'சுதேச கீதங்கள்' என்ற பெயரில் வெளி வந்தது புதுவையில் தான்.  இது நடந்தது 1908-ம் ஆண்டில்.   'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்று சர்வ உயிர்களையும் நேசிப்பவனாய் பாரதி பாடிக் களித்தது புதுவை குயில் தோப்பில் தான்;   பள்ளி ஆசிரியர் கனக சுப்புரத்தினம் பாரதியை சந்திக்கும் வாய்ப்பு பெற்று பிற்காலத்தில் பாரதிதாசன் ஆனதும் புதுவையில் தான். 

பாரதிக்குக் கிடைத்த பிரெஞ்சு மொழிப் புலமை புதுச்சேரியில் தான். அவரது பிரஞ்சு மொழி ஞானம் பிரஞ்சு மொழியில் இயற்றப்பட்ட  நூல்களை வாசித்தறியவும், அவற்றை தமிழில் மொழி மாற்றம் செய்யவும், பிரஞ்சு அதிகாரிகளுடன் சரளமாகப் பேசவும் உதவியது.   ஏற்கனவே அவர் ஆழ்ந்து அறிந்திருந்த  சமஸ்கிருதம், இந்தி, வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளோடு இப்பொழுது பிரன்சும் சேர்ந்து கொண்டது.

என்ன இருந்தும் பாரதியின் அருமைத் திருமகள் சகுந்தலா குறிப்பிட்டபடியே புதுவை வாழ்க்கை கூண்டில் அடைப்பட்ட சிங்கம் போலவே பாரதிக்கு இருந்திருக்கிறது.  பக்கத்து தழிழகத்தில் வீர சுதந்திரம் வேண்டி செயல்பட்டோர் பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமைகளை அனுபவிக்க தான் அவர்களிடமிருந்து விடுபட்டதே போல அன்னிய மண்ணில் வாசம் செய்வது அவருக்கு உறுத்தலாக இருந்தது.   தமிழகம் சென்று அவர்களோடு தோளோடு தோள் சேர்ந்தாற் போல போராட உள்ளம் தவித்தது.

எப்படியாவது பிரிட்டிஷ் எல்லைக்குள் சென்று விடத் தவித்த பாரதியார் அதற்கான உபாயம் ஒன்றை மேற்கொண்டார்.   சென்னை கவர்னருக்கும், பிரிட்டிஷ்  நாடாளுமன்ற  உறுபிப்பினரும்,   பிரபல தொழிற்கட்சித் தலைவருமான ராம்ஸே  மக்டானல்டுக்கும்  {Ramsay Macdonald}  புதுவையில் வேவு பார்க்கும் பிரிட்டிஷ் காவல்துறையினரின் அத்துமீறல்கள் பற்றி கடிதம் எழுதுகிறார்.    இந்தக் கடிதம் பிறகு இந்து பத்திரிகையிலும் வெளிவந்தது.   அரசிடமிருந்து எந்தச் சலனமு;ம் இல்லை என்பதினால்  பாரதியார் தாமே இந்திய எல்லைக்குள் நுழைந்து விடுவது என்று துணிவாக முடிவெடுக்கிறார்.

1918 நவம்பர்  20-ம் நாள்.

ஒரு ஜட்கா வண்டியை அமர்த்திக் கொண்டு கடலூர்  வந்து விடலாம் என்பது  பாரதியின் திட்டம்.  திட்டமும் எந்தத் தடையும்  இல்லாமல் அமுலாகிறது.

பாரதியின் செயல்பாடுகளை உன்னிப்பாகக்  கவனித்து வந்த பிரிட்டிஷ் போலிசார்  புதுவை-- கடலூர் எல்லையில் அவரைக் கைது செய்கின்றனர்.   அந்நாளைய  கடலூர் சப்-மாஜிஸ்ட்ரேட் சக்ரவர்த்தி என்பார் முன்  நிறுத்துகின்றனர்.    பாரதி கைது பற்றிய விவரம் அறிந்த கடலூர் வழக்குரைஞர்கள்  சடகோபாச்சாரியாரும்,  நடராஜ அய்யரும் பாரதியை ஜாமீனில் எடுக்க முயன்றனர்.  ஆனால் சப்-மாஜிஸ்ட் பாரதியை வெளியில் விட்டால் தன் பதவி சுகத்திற்கு ஏதேனும் பஙகம் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து பாரதியை இரண்டு நாட்கள் ரிமாண்டில் வைக்க உத்தரவிட்டு சிதம்பரத்தில் முகாமிட்டிருந்த தென்னாற்காடு ஜில்லா  நீதிபதி ஸ்டோடார்டின் முன் ஆஜராக வேண்டும் என்று தீர்ப்பளித்ததின் மூலம் ஒரு ஆங்கில நீதிபதியே பாரதியாரின் விடுதலை பற்றித் தீர்மானிக்கட்டும் என்று சாமர்த்தியமாக நழுவிக் கொள்கிறார்.

சென்னை துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலாய் இருந்த ஹானிங்டன் என்பவர் பாரதியாரின் மேல் கருணை கொண்டு டிசம்பர் 14-ம் தேதி நேரில் பாரதியைச் சந்திக்கிறார்.  பாரதி பத்திரிகை பிரசுரத்திற்கென்று எது எழுதினாலும் தன்னிடம் காட்டி அனுமதி பெற்ற பிறகு அவை பிரசுரமாக வேண்டும் என்ற  நிபந்தனையை முக்கியப்படுத்தி பாரதியின் விடுதலைக்கு வழிகோலுகிறார்.  ஏறத்தாழ 25  நாட்கள்  சிறைவாசத்திற்கு பிறகு சில நிபந்தனைகளை எதிர்கொண்டு பாரதி  !4-12-1918 அன்று விடுதலையாகிறான்.

இந்த 25 நாட்களிலும் பாரதியின் சிறைவாசத்தை  அந்நாளைய சென்னை மாகாண தமிழறிஞர்களும்,  அரசியல்வாதிகளும் வாய்மூடி மெளனிகளாய் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள்.    பாரதி விடுதலையாவதற்கு இரண்டு நாட்கள் முன்பு திருச்சியிலே தமிழ்ப் பண்டிதர்களில் மாநாடு ஒன்று நடந்திருக்கிறது.   அதில் ஒரு தமிழ்க் கவிஞன் என்ற அளவில் கூட பாரதியின்  விடுதலை பற்றி பிரஸ்தாபிக்கவே இல்லை.   டிசம்பர் எட்டாம் தேதி தஞ்சை மணிக்கூண்டிற்கு அருகே  தஞ்சை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியும், இந்திய ஹோம் ரூல் இயக்கத்தினரும் இணைந்து நடத்திய கூட்டத்தில் பாரதியின் கைதைக் கண்டித்தும்,  அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்   என்றும் ஒரு தீர்மானம்   நிறைவேற்றப்பட்டிருக்கிறது.  பாரதியின் விடுதலைக்குப் பின் 17-12-1918-ல்    தஞ்சையில் கூடிய தஞ்சை நகரவாசிகள்--ஜில்லா காங்கிரஸ் கமிட்டியினரின் கூட்டத்தில் பாரதியின் விடுதலையை வரவேற்று மகிழ்ச்சி பொங்க தீர்மானம் நிறைவேறியிருக்கிறது.  இது  ஒன்றே  அன்றைய தமிழகம் பாரதி பற்றிக் கொண்டிருந்த அக்கறையாகத் தெரிகிறது.

'நாம் அச்சுக்குப் போகும் சமயத்தில் சென்னை கவர்ன்மெண்டார் ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதியாரை விடுதலை செய்யும் படி  உத்தரவு செய்து விட்டதாகத் தெரிகிறது'  என்று பாரதியின் விடுதலை குறித்த முதல் அச்சுச் செய்தியாக சுதேசமித்திரன் நாளேட்டின்  தகவல் சொல்கிறது.

விடுதலையான பாரதி  அடுத்த நாளே 15-12-1918  ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கடையம் வந்து சேர்ந்தார்.

{வளரும்}

படம் அளித்தவர்களுக்கு நன்றி.

Tuesday, May 15, 2018

நெஞ்சில் நிறைந்த பாலா

(எழுத்தாளர்  பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது.   தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியாத எழுத்துக்குச் சொந்தமானவர் பாலா.   சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் எனது  'ந. பிச்சமூர்த்தியிலிருந்து  எஸ்.ரா. வரை'  என்ற நுலில் பாலகுமாரனை வாசித்ததில் மனதில் படிந்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தேன்.    மனக்குளத்தில் கல் எறிந்த மாதிரி அந்த நினைவின் அதிர்வுகள் ...)


 நெஞ்சில் நிறைந்த பாலகுமாரன்



பாலகுமாரனின் எழுத்துக்களை வாசிப்பதே ஓர் அனுபவம். மிகவும் சுகமான ஒன்று அது. பளிச்சென்று அங்கங்கே வாழ்ந்து பார்த்த வாழ்வின் வெளிச்சம் பளிச்சிட்டுப் போகும். அது அவரது அனுபவமாய் மட்டுமல்ல, நமக்கும் அனுபவமாக ஆகிப்போன ஒன்றாய் அது இருப்பின் கேட்கவே வேண்டாம். அவரது எழுத்துக்கள் நமக்கு வெகு அந்நியோன்யமாய் ஆகிப்போய், பார்த்ததை அல்லது பட்டு அனுபவித்ததை படம் பிடித்தாற் போல் எவ்வளவு ரசனையுடன் எழுதியிருக்கிறார் என்று ரசித்து வியக்கத் தோன்றும்.
                                                                                       
சொல்லப்போனால் இப்படி எழுதுவதே கிடைத்தற்கரிய ஒரு வரம். தனக்குள் வேள்வியாய் கேள்விகள் கேட்டுக் கொண்டதன் தேடலின் விளைவாய் விடைகண்ட விநோதங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்கையில் படைத்தவருக்கும் படிப்போருக்கும் விளையும் ஒன்றிய மனஉணர்வு ஒருவரை ஒருவர் உணர்ந்து புரிந்து கொண்ட நிலையில் விகசிக்கும்.

மனம் விளைவிக்கும் குறளி வித்தைகள் தாம் எத்தனை எத்தனை?.. புரிதலின் அடைப்படையில் ஒருவருக்கொருவர் மனநெருக்கம் கொள்ளும் தருணங்கள் உன்னதமானவை. பலதரத்து உணர்வுகள் மோதும் உள்ளத்து அடிமன படிமானத்தில் வேற்றுமைகளில் ஒற்றுமை காண்பது விவேகமானவை. ஆனால் மன உணர்வுகள் முரண்பட்டு தலைவிரித்தாடுகையில் அந்தத் தத்தளிப்புகளிலிருந்து மீண்டு வர பிரயத்தனப்படுவதே விதவிதமான கதைகளுக்குக் கருவாகிப் போகிறது. மனிதப் பிறப்பின் ஆனந்தத்தை அள்ளிப்பருகிட, இத்தகைய சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கு வழிசொல்லும எழுத்துக்கள் ஆரோக்கியமானவை. ‘எங்கேயிருந்தாலும், சந்தோஷமாக இருக்கப் பழகிக்கணும்; விடாப்பிடியாக சந்தோஷமாக இருக்க வேண்டும்என்று பிரகடனப்படுத்திய எழுத்துக்கள் பாலகுமாரனது.

கிருஷ்ண மந்திரம்ஆஸ்ரமம் அல்ல; ஆஸ்ரமம் போன்ற செயல்பாடுகள் கொண்டதாயினும், அதை ஒரு ஹோம் என்றே சொல்ல வேண்டும். மகன், மருமகள், சொந்த வீடு என்று எல்லாம் இருந்தும், வரலஷ்மிக்கு வயதான காலத்தில் இந்த ஹோமில் வாழ நேரிடுகிறது. மனைவிக்கும் பெற்ற தாய்க்கும் ஒத்து வராத பொழுது இந்த இருவரின் நிம்மதிஅதை ஒட்டிய தன் நிம்மதிக்காகவும் மகனே தாயைக் கொண்டு வந்து பணம் கட்டி இந்த ஹோமில் சேர்க்கிறான்.

நாற்பத்தாறு ஆண்கள் மத்தியில் இவனின் தாயும், அந்த ஹோமில் பொது வேலைகளைக் கவனித்துக் கொள்ளும் சுசீலாவையும் சேர்த்து இரண்டே பெண்கள். ஆரம்பத்தில் அந்த ஹோமில் தனித்து எப்படி காலம்  தள்ளப்போகிறோம் என்று மிரளும் அந்தத்தாய், எல்லோருக்குமான தாயாய் மிளிர்ந்து அந்த மொத்த ஹோமின் நிர்வாகப் பொறுப்பேற்றுக் கொள்ளும் அளவுக்கு பரிமளிப்பது தான் கதை.


நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் குட்டியூண்டு குடும்பம் ஒன்றைக் கட்டி அழுது கொண்டு மகன், மகள், மனைவி, மருமகள், மருமகன் என்று மயங்கி சொந்த பந்தங்களுக்கிடையே வாழ்க்கையை முடக்கிப் போட்டிருக்கையில், அந்த வாழ்க்கையின் பிணக்குகளையும், சுணக்கங்களையுமே பெரிதாய் நினைத்து அலமந்து அல்லாடுகையில், அப்படிப்பட்ட ஒரு அல்லாட்டச் சுழலில் சிக்கியும் விதிவசத்தால் அதனின்று விடுபட்ட வரலஷ்மி, சொந்த பந்தக் குடும்ப உறவுகளைத் தாண்டி வெளியே தன் அன்பையும் ஆதுரத்தையும் எதிர்பார்த்து இருக்கும் விதவிதமான மனிதர்களைப் புரிந்து கொண்ட ஒரு தரிசனத்தை எவ்வளவு நேர்த்தியாக பாலகுமாரன் சொல்லிவிட்டார் என்று இந்த புதினத்தைப் படிக்கையில் மிக ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

இந்தகிருஷ்ணமந்திரம்இதற்கு முன்னால் இவரே எழுதிய இன்னொரு நாவலின் வேறுபட்ட  வளர்ச்சியடைந்த பார்வை. பெற்ற தாய் ஒரு புறம், மணந்த மனைவி மறுபுறம் என்று மகன் மாட்டிக்கொண்ட இவரது இன்னொரு நாவல்நிழல் யுத்தம்’.

லலிதாவை முரளி முதன் முதல் சந்தித்தது ஒரு விபத்து. பின்னால் வரப்போவது எதுவும் முன்னால் தெரிவதில்லை. இப்படித் தெரியாமல் இருப்பது தான் வாழ்க்கையாகத் தெரிகிறது. முரளி மட்டும் விதிவிலக்கல்லவே; அவன் வாழ்க்கையிலும் அப்படித்தான் அமைந்தது.

முரளி அம்மா வளர்த்த பிள்ளை. விதவை வளர்த்த குழந்தை அவன். வளர்த்தது கூடப் பெரிசில்லை. வளர்த்த குழந்தையை வகை தெரியாமல் திருமணம் செய்து கொடுத்தது தான் பெரிசாகப் போய்விட்டது. மிலிட்ரியில் மேஜராக இருந்த சங்கரன் முதலில் அந்தக் குடும்பத்திற்குப் பழக்கமாக, அவர் தன் பெண் லலிதாவின் ஜாதகம் கொண்டு வந்து கொடுத்து லலிதாவுடனான முரளியின் திருமணம் முடிந்தது. மாமனார் சங்கரன் தனக்குத் தெரிந்த இடத்தில் சொல்லி வைத்து முரளிக்கு வேலையும் கிடைக்கிறது. அதாவது மாமனார் தயவில் கிடைத்த நல்ல வேலை.

பின்னால்த் தான் தெரிகிறது. ‘பெண்ணாட்டி உலகம் தான் புருஷன் உலகம்; புருஷன் உலகத்தில் பெண்ணாட்டி இருக்கணுங்கறது வேதனை தருகிற விஷயம்என்று நினைப்பவள் லலிதா என்று. எல்லா உறவுகளையும், உணர்வுகளையும் சிக்கலாக நினைப்பவள் அவள். ஒரு நாள், ‘நான் ஆம்பிளை வளர்த்த பெண் குழந்தை; அதனால் தான் எதிர் எதிர் துருவமாக இருக்கிறோம்என்கிறாள்.

இன்னொரு நாள் சொல்கிறாள். ”மனுஷா செல்ஃபிஷா இருக்கணும். சுயநலம் தான் ஆரோக்கியம். நான் முக்கியம். நான் முதல். நானே இந்த உலகத்தின் மையம். நான் இல்லாவிடில் இந்த உலகம் இல்லை. நான் இல்லாத போது இருக்கும் உலகம் பற்றி எனக்குத் தெரியப்போவதில்லை. நான் நன்றாக இருந்தால் தான் இந்த உலகம் எனக்கு நன்றாக இருக்கும். எனக்குத் தலைவலிச்சா உலகத்தில் எப்பேர்ப்பட்ட விஷயம் இருந்தாலும் எனக்குத் தேவை இல்லை. எனக்குத் தலைவலி முக்கியம். அதை யார்கிட்டேயும் கொடுக்க முடியாதுஎன்கிறாள்.

கிருஷ்ண மந்திரத்தில் மருமகள் ஆடிய ஆட்டத்தில் மாமியார் 'ஹோமி'ற்கு போக வேண்டியதாயிற்று. ‘நிழல் யுத்தத்து மருமகள் மாமியாரை மனம் வெதும்பி நோகச் செய்து உயிருக்கே உலை வைக்கிறாள்.
படித்தவர்களுக்குத் தெரியும். பெண்ணின் இருப்பை அவளின் ஆளுமையை நுணுகி நுணுக்கமாகச் சொன்னவர் பாலகுமாரன். பெண்களின் இயல்பான நேர்த்திகள் நேர்பட இருக்கும் பொழுது அவளைச் சுற்றி இருப்போர் அடையும் சந்தோஷத்தையும், அதுவே கோணலாகிப் போகையில் நேருகின்ற வேதனைகளையும் படம் பிடித்துக் காட்டியவர் அவர். ஆணின் அமைதிக்கோ, பரிவிற்கோ, பரிதவிப்பிற்கோ, பாசத்திற்கோ, மேன்மைக்கோ அவர்களே காரணமாகிப் போகிறார்கள். இயக்குபவள் அவள்; இயங்குபவன் அவன். பெண்டாட்டிக்கேற்ற புருஷனாய், அம்மாவிற்கேற்ற மகனாய், அக்கா-தங்கைக்கேற்பவனான சகோதரனாய் பெண்களின் கைகளில் அவர்கள் இஷ்டம் போல் விளையாடக் கிடைத்த பொம்மையாகிப் போகிறான் அவனும். ஆட்டத்தில் ஈடுபடுவோர் அவனும் அவளுமாய் இருப்பினும் ஆட்டத்தின் போக்கை நிர்ணயிப்பவள் அவளே. தன் இஷ்டத்திற்கேற்ப எப்படி வேண்டுமானாலும் ஆட்டத்தை திசைதிருப்பவும், தீட்சண்யப்படுத்தவும் அவளால் முடியும் என்பதினால், உறவுகளின் ஒட்டலுக்கும் விரிசலுக்கும் இதுவே விளைவாகிப் போவதினால் அவள் ஆடும் முறையில் நேர்மையும், நியாயமுடனான பொறுப்பும் முக்கியமாகிறது.

நிழல் யுத்தம்’ 27 அத்தியாயங்களாய் வாராவாரம்கல்கியில் வெளிவந்தது. இருப்பத்தேழு அத்தியாயங்களும் காவியம். ‘பெண்ணைப் பொருள் போகம் என்று நினைத்தவனுக்கு சிரமமுமில்லை; சந்தோஷமும் இல்லை. செம்புலப்பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்று உருகுகிறவனுக்குத் தான் சந்தோஷம், சிரமம் எல்லாம்என்று சொல்ல வந்த கதை. துன்பம் நேர்கையில் பாரதிதாசனுக்குக் கூட யாழெடுத்து இசைத்து இன்பம் சேர்க்க வேண்டியிருக்கிறது. வாழ நேர்ந்த வாழ்க்கையில் துன்பமெனும் நிழல் படியும் போது இப்படிப்பட்ட எழுத்துக்கள் வெளிச்சம் காட்டி நிழலைத் துறத்தவும் செய்கிறது.

ஊருக்குத் தெரிந்து கணவன்-மனைவி பிரிந்து வாழ்வது டைவோர்ஸ் என்று அழைக்கப்பட்டால், எல்லா திசைகளிலும் வந்து நெருக்கும் அழுத்தங்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் அவர்களுக்குள்ளேயே ஏற்படுத்திக்கொண்ட சைலண்ட் டைவோர்ஸோ ஊருக்குத் தெரியாமல் போனதில் ஆச்சரியமில்லை. சொல்லப் போனால் அதுவும் ஒரு நிழல் யுத்தம் தான். உயிரின் விளைவை, உறவின் மதிப்பைக் கற்றுக் கொள்ளாமல் போனால் யுத்தங்களைத் தவிர்ப்பதும் சாத்தியமில்லாது போகின்றது.

ஊருக்குத் தெரிந்த டைவோர்ஸுடுடன் ஆரம்பமாகிறது பாலகுமாரனின்இரண்டாவது சூரியன்’. ஆணவம், அகம்பாவம், தன்தானைத் தானே தூக்கிச் சுமந்து எல்லா நேரங்களிலும் தன்னையே முன்னிலைப் படுத்தத் துடிக்கும் தன்னகங்காரம் என்று எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துக் குழைத்ததின் வடிவம் கவிஞன் கதிரேசன். கதிரேசன் பட்டிமன்ற கவிஞன், தமிழ் இலக்கியத்தில் முதுகலை படித்த பேராசிரியன், சமூகத்தில் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதற்காக சகல உபாயங்களையும் கற்றுத் தேர்ந்த வித்தகன். ரசாயனத்தில் எம்.எஸ்ஸி., படித்த பள்ளி ஆசிரியை பானுமதி அவனுக்கு வாழ்க்கைப்படுகிறாள். ஆரம்பத்தில் கதிரேசனின் சாதுரியங்கள் அவளைக் கவர்ந்தாலும், சுயநலமும் சுயபுராணமும் தன்னைச் சுற்றியே பின்னிப் பின்னி சகலத்தையும் அவன் சமைத்துக் கொள்வது அவளுக்கு சலிப்பேற்படுத்துகிறது. அவனது மமதையும் மனைவி உட்பட சகல உறவுகளையும் கிள்ளுக் கீரையாக நினைக்கும் அவனது உதாசீனமும் அவளுக்கு வெறுப்பேற்படுத்துகிறது. தினமும் சண்டை, அடிதடி என்று தொடர்கதையாகிப் போகும் அத்தனை அவமானங்களும் கடைசியில் விவாகரத்தில் முடிகிறது. பெற்றோர்களுடனும் இருக்க முடியாமல் போய் இரண்டு குழந்தைகளுடன் தனிக்குடித்தனம் துவங்குகிறாள் பானுமதி. துணையாய் இவளைப் போலவேயான வாழ்க்கை அமைந்து போன, குடும்ப நீதிமன்றத்தில் இவளதும் அவளுதுமான வழக்குகள் நடக்கையில் மனதுக்குப் பிடித்துப் போன பூக்காரி நாகம்மா துணையாகி வீட்டு வேலைகளையும், இவளது குழந்தைகளையும் கவனித்து பராமரிக்கும் தோழியாகிறாள். வாழ்க்கையின் போக்கில் நிகழும் அறிமுகங்கள், பிறர் நலனுக்காக தான் அல்லாடுகையில் கிடைக்கும் மகிழ்ச்சி, அதில் தனக்குத் தானே பிர்மாண்டமாய் உணரும் மனிதாபிமானம் எல்லாமே உலகையும், மானுட உறவுகளின் உன்னதத்தையும் பானுமதிக்கு பாடமாக எடுத்தோதுகின்றன. ‘கிருஷ்ண மந்திரத்து வரலஷ்மிக்கு கிடைத்த மாதிரிஇரண்டாவது சூரியன்பானுமதிக்கும் கிடைத்த வேறுபட்ட வேறோரு ஞானோதயம். பெண் தண்ணென்று குளிர் பொழியும் நிலவல்ல; கனவுகளோ கற்பனை ஊற்றுகளோ அல்ல; சுட்டெரிக்கும் இரண்டாவது சூரியன் என்று சொல்ல வந்த கதை இது.

தஞ்சை மாவட்டத்து திருக்காட்டுப்பள்ளிக்கு அருகாமையில் உள்ள பழமார்நேரியில் பிறந்தவர் பாலகுமாரன். ஆசிரியையாய் இருந்த தாயார் சுலோச்சனா அம்மையார் சிறுவன் பாலகுமாரனின் பொது அறிவு வளர்ச்சியில் பெரும் கவனம் கொண்டார். எழுதுதலின் ஆரம்பத் தொடக்கம் கணையாழி, கசடதபற போன்ற சிற்றிதழ்களில் இவருக்கு ஆரம்பித்தது. 'குமுதம்' பத்திரிகை சார்ந்த பால்யூவின் அறிமுகம், வெகுஜன பத்திரிகைகளின் பக்கம் இழுத்தது. சாவி, கல்கி போன்ற இதழ்களில் மனதைக் கவர்ந்த கதைகளை எழுதியிருக்கிறார். இரும்பு குதிரைகள், மெர்க்குரி பூக்கள், கரையோர முதலைகள், பச்சை வயல் மனது, தாயுமானவன் போன்ற புதினங்கள் வாசகர்களின் மனதை மயக்கின. அவரின் எழுத்து நடையும், கட்டிப்போட்ட சொல்வளமும், பழைமையின் மெருகு கலையாத புதுமைக் கருத்துக்களும் இலட்சக் கணக்கான இளைஞர்களின் மனம் கவர்ந்தன. பிற்காலத்து திருவண்ணாமலை விசிறி சாமியார் யோகி ராம்சுரத் குமாரின் அருகாமை கிடைத்த யோகத்தில் ஆன்மிக சிந்தனைகளைக் கொஞ்சம் தூக்கலாக சொல்ல ஆரம்பித்தார்.

'என்னுயிரும் நீயல்லவோ' இன்னொரு மாஸ்டர் பீஸ். ஏலக்காய் எஸ்டேட் ஓனர் நாச்சியப்ப செட்டியார், தனது இரண்டாவது மனைவி பகவதியிடம் எஸ்டேட் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு கண் மூடுகிறார். செட்டியாருக்குப் பின் எஸ்டேட் உரிமை குறித்து பங்காளிகளிடையே கசமுச எழுந்த பொழுது அவர்களை அடக்கி எஸ்டேட்டைப் பார்த்துக் கொள்ளும் பகவதிக்கு பக்கபலமாக தன் மூத்த மகன் கதிரேசனை மலைக்கு அனுப்புகிறார் செட்டியாரின் முதல் மனைவி ஆச்சி. மலைக்கு வந்து ஏலப்பயிர் பற்றியும் அதற்கு உள்ள கிராக்கி பற்றியும் அறிந்து எஸ்டேட்டை விரிவுபடுத்த விரும்பி அதில் அவன் வெற்றியடைந்த  கதை, அவனது காதலுக்கு இடையே ல்லப்பட்டிருக்கிறது.   ஆச்சிக்கும் பகவதிக்கிடையான நேசத்தை, ஏலக்காய் பயிர் பற்றி ஞானம் கொண்டு ஒரு ஆணுக்கு நிகராய் எழுந்து நின்று கட்டிய கணவனின் சொத்தை, தன் மூத்தாளின் பிள்ளை கதிரேசனை காத்து நின்ற பகவதியின் கடமை உணர்வின் மாண்பை, சித்தியின் சொல் பேச்சுக்குப் பணிந்து பெற்ற அன்னையாய் அவளைப் பேணும் கதிரேசனின் குணநலனை என்று பாலகுமாரன் உணர்வுகளை கொட்டி வடிக்க நிறைய வாய்ப்புகள்.

இன்னொன்று. இந்த புதினத்தைப் படிக்கையில் பளிச்சென்று தெரியும் பாலகுமாரனின் வளர்ச்சி. ராஜம் கிருஷ்ணன் புதினங்களில் காணக்கிடைப்பது போலவான அந்த கள ஆராய்ச்சியைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். போடி நாயக்கனூர் பகுதி ஏலக்காய் தோட்டங்களை நிலைக்களனாகக் கொண்டு அந்த மலைப்பகுதி வாழ்க்கை, ஏலக்காய் பயிர், அதன் வளர்ச்சி, தண்ணீரை சாரலாகத் தூவும் ஸ்பிளிங்கர்கள் என்று தூள் கிளப்பியிருக்கிறார். பயிரோடு பயிராக நாமும் அந்த ஸ்பிளிங்கர்களில் நனையும் உணர்வு.

"...ஏலக்காய் ஆட்களை நம்பி செய்கிற பயிர். ஒற்றை ஆளாய் நிர்வகிக்க முடியாத தோட்டம். பயிர் செய்தோம், பறித்தோம், விற்றோம் என்று முடியாது. பறித்ததற்கு பிறகு தான் முக்கியமான வேலை துவங்குகிறது. பழுத்து ஈரமாய் இருக்கிற ஏலக்காயை உடனே உலரச் செய்யணும். உஷ்ணம் காட்டி இறுகச் செய்யணும். இல்லையெனில் பழுத்தது அழுகிவிடும். உஷ்ணமாக்கி உலர வைக்க தனியான அடுப்பும், தகரப்பாய்களும் வேண்டும். உஷ்ணம் அதிகமானால் ஏலக்காய் கருகி விடும். உஷ்ணம் குறைந்தால் ஏலக்காய் அழுகி விடும். மேல் தோலில் இருக்கிற பச்சை கெடாமல், உள்ளே இருக்கிற பயறு கெடாமல் காயை இறுக்கி, தரம் புரிந்து, தூசு தேய்த்து பளபளவென்று கொடுப்பதற்கு ஆட்கள் வேண்டும். இது தன் தோட்டம், தன் காய் என்பது போல உழைக்க வேண்டும்...."

பாலகுமாரனுடைய எழுத்து நடை, நம் பக்கத்தில் கூட உட்கார்ந்து முகத்தைப் பார்த்து கதை சொல்கிற நடை. அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் படிக்கிற நம் மனமும் தாவித்தாவி போகும். சிலம்பம் விளையாடறச்சே முன்னே, பின்னே, பக்கவாட்டில் என்று கால்களை நகர்த்தி பாவிப்பாவி விளையாடற மாதிரி எழுதற கருத்துக்களோடு அவரும் முட்டி, மோதி, வளைந்து, பின்வாங்கி, விழுந்து மீண்டும் எழுந்து எழுத்தின் உள் ஜீவனைக் கண்டு பிடித்து நமக்குச் சொல்கிற மாதிரி எழுதுவார்.

அது பிரிட்டிஷார் நாட்டை ஆண்ட காலம். கிட்டத்தட்ட எம்டன் குண்டு சென்னையில் வீழ்ந்த காலம். மாயவரத்து செம்பொனார் கோயில் சார்ந்த சாம்பசிவ சாஸ்திரிகள், அவர் மைத்துனன், பிள்ளை, பிள்ளையின் பிள்ளை என்று எல்லோரும் சப்ஜாடா தங்கள் குலத்தொழிலான வைதீகம் விடுத்து வாழ்க்கையின் அமுக்கி அடித்துப் போகும் சூழலின் சுழலில் துணிந்து மூழ்கி எதிர் நீச்சல் அடித்து நிமிர்ந்த கதை, 'அப்பம்,வடை,தயிர் சாதம்'. காலத்திற்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்வதில் எந்தவித கவலையும் படாமல் கம்பீரமாக நிமிர்ந்ததற்குப் பின்னாடி வழிவழி வரும் தலைமுறைக்கு காயத்ரி ஜபமும் சொல்லித் தரணும்,   'அப்பம்,  வடை,  தயிர்சாதம்'ன்னு தோள்லே கூடையைத் தூக்கிக்கொண்டு கூவிப்போகவும் சொல்லித் தரணும் என்று புரிந்து கொள்கிற முறையில் கதையை முடித்து வைக்கிறார்.

பாலகுமாரனின் எழுத்துக்களில் ஒன்றிப் படிக்கும் பொழுது ஒன்று தெரியும். தான் உணரும் பல விஷயங்களை சாவதானமாக அழகுபடுத்திச் சொல்வதற்குத் தான் இவர் கதை வடிவை எழுதத் தேர்ந்தெடுத்தாரோ என்று. கதை மாந்தர்களின் மூலமாக மற்றும் தானே தனியாகக் கொஞ்சம் என்று சொல்ல வாய்ப்பு இல்லாத நேரத்தும் அப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு பேசுவார். சில சமயங்களில் துண்டாகத் தனியே துருத்திக் கொண்டு தெரிகிற மாதிரி அவை தோற்றமளித்தாலும் அவரது உணர்வுகளைப் புரிந்து கொண்டு படிப்போருக்கு அதுவும் பிடித்துப் போகிற அளவில் அமைந்து விடும்.

இரும்பு குதிரைகள், மெர்க்குரிப் பூக்கள், கரையோர முதலைகள் போன்ற பாலகுமாரனின் புதினங்கள் அவருக்கு நிறைய வாசகர்களைத் தேடித் தந்தன என்பது உண்மை. திருப்பூந்துருத்தி, பலாமரம் போன்ற படைப்புகள் வேறொரு காலகட்டத்தில் வேறொரு விதமாய் அவரைப் பாதித்த எண்ண ஓட்டங்களைப் பிரதிபலித்தவை. எழுதுகின்ற எழுத்தாளனின் மன வளர்ச்சியோடு கூடச் சேர்ந்து அந்த எழுத்தாளனுக்கென்று அமைந்து போகிற வாசகர்களும் கூட வளரச் சொல்லிய கதைகள்.

பத்திரிகைகள் வேண்டுவனவற்றை எழுதிக் கொடுக்கிற எழுத்தாளர்கள் உண்டு. இவர்களால் ஒவ்வொரு பத்திரிகையின் போக்குக்கும் அதன் தேவைக்கும் ஏற்ப எழுத முடியும். 'தோசை வேண்டுமா இந்தா தோசை, இல்லை, இட்லியா, இந்தா இட்லி' என்கிற நிலை இது. சில எழுத்தாளர்கள் ஆரம்ப காலகட்டங்களில் வாசகர்களை அடைய பத்திரிகைகளை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டாலும், வாசகர்களின் அபிமானம் பெற்ற பிறகு நாளாவட்டத்தில் தனது வாசகர்களுக்குப் பிடித்தவற்றை எழுதத் தொடங்குகிறார்கள். இவ்வளவுக்கும் இணங்கிப் போகிற எழுத்தாளருக்கு அவருக்கென்று ஒரு வளர்ச்சி இருக்கிறதல்லவா?.. அந்த வளர்ச்சி அவரது மனதோடு தொடர்பு கொண்டது. மனம் கொள்ளும் எண்ணங்களே எது குறித்து எழுதினாலும் அதில் படியும். எழுத்தே அவர் மனத்தை வெளிப்படுத்தும் ஒன்றாகவும் அமையும் நிலை இது.   தன் மனம் சொல்வதை வாசகர்களிடம் மறைக்காமல் எழுதும் எல்லா எழுத்தாளர்களுமே இப்படித்தான்.
                 
                                                                                                                                 

Related Posts with Thumbnails