மின் நூல்

Monday, September 19, 2011

இதோ நிஜ சுஜாதா


எழுத்தாளர் சுஜாதாவை முதன் முதல் நேரில் பார்த்தது அன்றைய வடஆற்காடு மாவட்ட திருப்பத்தூரில். அப்பவும் எப்பவும் மாதிரி தான். அதே மழமழ முகம். வழவழ பேண்ட்டில் தொளதொள சட்டை நுழைத்து, கூச்சமுடன் கூடிய லேசான உதடு விரியும் புன்னகையில்... அந்த உயரமும், கார்ப்பொரேட் அதிகாரி களைப் போன்ற சாயலில் தமிழ் எழுத்தாளர் களை இதுமாதிரி இதுவரைப் பார்த்திருந்திராத வாசகர்களுக்கு அதுவும் ஒரு ஆச்சரியமாகவே இருந்தது.. அது ஒரு இலக்கிய சம்பந்தமான கூட்டம். உள்ளூர் இலக்கிய மன்றம் அழைத்திருந்தது. எழுத்தாளர் உஷா சுப்ரமணியமும் கூட வந்திருந்தார்.

"எனக்கு அவ்வளவாக கோர்வையாக பேச வராது; கேள்வி-பதில் மாதிரி வைத்துக் கொள்ளலாமா?" என்று நெளிந்தவர், வாசகக் கூட்டத்தினர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று ஆரம்பித்து, பதிலாக கிட்டத்தட்ட ஒருமணி நேரம் அருமையான விளக்கச் சொற்பொழிவு ஆற்றிவிட்டார். மைக் முன் நின்று கொண்டு இந்த மாதிரி இவ்வளவு நேரம் இதுவரை பேசிய அனுபவமே எனக்கில்லை என்று அவரே திகைக்கும் அளவுக்கு அந்தக் கூட்டம் அமைந்து விட்டது. கூட்ட முடிவில் சுஜாதாவைச் சந்தித்து கைகுலுக்கி, 'விண்வெளிப் பயணம்' சம்பந்தப்பட்ட சோவியத் யூனியன் வெளியீடான ஒரு என்.சி.பி.எச். புத்தகத்தை அவருக்கு பரிசளித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. பிற்காலத்தில் 'எனக்கு யாரும் புத்தகம் அனுப்ப வேண்டாம்' என்று வேண்டிக் கொண்ட அவர் அன்று ஆர்வத்துடன் அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொண்டு சிறுகுழந்தை மாதிரி திருப்பித் திருப்பி அதைப் பார்த்துக் கொண்டிருந்த காட்சியை மறப்பதிற்கில்லை.. இதெல்லாம் நடந்து 42 வருடங்களுக்கு மேலிருக்கும்.

உண்மையில் 'நைலான் கயிறு'தான் அவரது ஓபனிங் என்று சொல்ல வேண்டும். குமுதத்தில் அது தொடராக வந்த பொழுது, யார் இந்த சுஜாதா என்கிற நினைப்பு க்குப் பதில், குமுதத்தின் துணையாசிரியர்களில் ஒருவர் எடுத்த அவதாரமாக இருக்குமென்கிற நினைப்பே மேலோங்கியது. போதாக்குறைக்கு எனக்கு அவர்களில் ஒருவரின் மேல் 'அவர் தான் இவர்' என்று பலமான சந்தேகம். யூகத்தைத் தெரியப்படுத்திக் குமுதத்திற்கே எழுதிக் கேட்டதில், 'தங்கள் ஆர்வத்திற்கும், கடிதமெழுதி அதை வெளிப்படுத்தியத்திற்கும் நன்றி' என்று ஆசிரியருக்காக கையெழுத்திட்டு, ரா.கி. ரங்கராஜனிடமிருந்து கடிதம் வந்தது. அப்படியும் அவர் யார் என்று சொல்லாத சாமர்த்திய பதிலாக அது இருந்தது. 'கணையாழி'யில் கடைசிப் பக்கம் எழுதிய ஸ்ரீரங்கம் ரங்கராஜன் குமுதத்திற்கும் ஒரு கதை அனுப்பி வைக்க, 'நிறைய எழுதுங்கள்' என்று அவருக்கு அனுப்பி வைத்திருந்த செக்கின் இணைப்புக் கடிதத்தின் மூலையில் ஆசிரியர் எஸ்.ஏ.பி. நுணுக்கி எழுதிய எழுத்துக்கள் ஆக்ஸிஜனாக செயல்பட சுஜாதாவின் பிர்மாண்டத்திற்கு அன்றைக்கே கால்கோள் விழா நடந்து விட்டது!

இவர் விகடனில் எழுதிய முதல் கதை 'ஜன்னல் மலர்'. பின்னால் அதே விகடனில் 'கரையெல்லாம் செண்பகப்பூ' வருவதற்குள் நன்றாகவே தமிழ் எழுத்துலகில் சுஜாதா தன் ஸ்தானத்தை நிலைநிறுத்திக் கொண்டு விட்டார். பூப்போன்ற அந்தக் கவிதைத் தலைப்பு, கதையின் இடையிட்ட நாடோடிப் பாடல்கள், கிராமம் கிராமம் சார்ந்த மக்கள், நாடோடிப் பாடல்கள்பற்றி ஆராயும் நோக்குடன் வந்திருக்கும் வாலிபன் கல்யாணராமன், சென்னை வாலிபி சிநேகலதா, ஜமீன், அமானுஷ்யம், மர்மம் என்று கலந்து கட்டி சுஜாதா விளையாடியிருந்தார். அந்த நாடோடிப் பாடல்கள் மிக்ஸிங் அவருக்கு ஒரு இலக்கிய மேதைமையை அளிக்க, ஜெயராஜ் ஓவியம், ஆனந்த விகடன் பிரசுரம் என்று சுஜாதா வெகுஜன வாசகர்கள் கவனிக்கப்படும் எழுத்தாளரானார்...

கணேஷ், முதல் நாவல் நைலான் கயிறு என்னும் சீட்டு மாளிகையிலேயே வந்து விட்டாலும், வசந்த்தின் என்டிரி பின்னால் தான். சுஜாதாவின் எழுத்துலக அனுபவத்தில் வெகுஜன பத்திரிகை வாசகரின் ரசனைக்குத் தீனி போட என்று ஆரம்பித்தது சுஜாதாவின் எழுத்துத் திறமையைத் தின்று தீர்த்தது தான் என்று ஆயிற்று. யார் வேண்டுமானாலும் சுஜாதா மாதிரி நகல் எழுத்தாளர் ஆகலாம் என்று சுஜாதா இறங்கிப் போனதும் இந்த கணேஷ்-வசந்த் ஆக்கிரமிப்புக்குப் பின் தான்.

சிறுபத்திரிகையிலிருந்து ஆரம்பித்த சுஜாதா அங்கேயே தேங்கிவிடாது தமிழ்கூறு நல்லுலகத்து பகாசுரப் பத்திரிகையில் எழுத ஆரம்பித்தது அவர் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை. நாளாவட்டத்தில் அந்த பெரும் பேனர் பத்திரிகைகளின் பசிக்கு பரிமாறுவதே அவர் வேலையாயிற்று. மனுஷன் மிஷின் அல்ல. எழுதிக்குவிக்க வேண்டியிருந்தது. அந்தக் குவித்தலே அவருக்காக எழுத முடியாமல் போய், பத்திரிகையின் விருப்பதிற்கேற்ப அவர் எழுத வேண்டியதாயிற்று. அப்போது அவர் கற்பனையில் ஆபத்பாந்தவர்களாக வந்தவர்கள் தாம் கணேஷும், வசந்த்தும். தன் முன்னோர்களான எர்ள் ஸ்டான்லி கார்டனரின் பெரிமேசன்--டெல்லா ஸ்ட்ரீட், தமிழ்வாணனின் சங்கர்லால்-இந்திரா மாதிரி-- அவர்கள் ஆணும், பெண்ணும் என்றால் இவர் ஆணும், ஆணுமாக அவர்களை உலவ விட்டார். அந்தக் கால இளசுகளைப் பிரதிநிதித்துவப் படுத்துகிற மாதிரியானாலும், கணேஷை கொஞ்சம் மன முதிர்ச்சியுடைய லாயராகவும், அவனுக்குக் கிடைத்த விடலைத்தன உதவியாளனாக வசந்தையும் உருவாக்கியதில் சுஜாதாவின் பாதிப்பங்கு வேலை கச்சிதமாக முடிந்தது. மீதிப் பாதியைக் கவர்ச்சி வரிகளும், அவர் எழுத்து ஸ்டைலும் பங்குப் போட்டுக் கொண்டன. அப்போ கதை?.. அதைப் பண்ணுவதற்குத் தான் நேரமில்லாமல் மட்டுமில்லை, மனமுமில்லாமல் போயிற்று. இப்படியாகப் பெரும் பத்திரிகையில் எழுதிப் பிரபலமாகும் எல்லா எழுத்தாளர்களுக்கும் நேர்வது அவருக்கும் நேர்ந்தது. அத்தனை அழுத்தங்களையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு சுஜாதா எழுந்து வந்தது தான் ஆச்சரியமான கதை. சொல்லப்போனால், அதுவே அவரின் கதையும் கூட.

"சார்! இந்த வார தொடர்கதைப் பகுதி கிடைச்சது.. எட்டுப் பக்கத்திற்கு ஒரு 'மார்' கூட இல்லையே.. "

"இல்லாட்டி என்னா?"

"இல்லாம இருக்கும், இல்லையா?"

"அப்படீன்னு நெனைக்கிறீங்க?.. இல்லாம இருந்தாத்தான் என்ன?.. வேணுன்னா, நீங்களே எங்கங்கே உங்களுக்குத் தோண்றதோ அங்கங்கே ஒண்ணு ரெண்டு போட்டுக்கங்க.."

"அது கூட நீங்க செஞ்சாத்தாங்க நல்லா இருக்கும்.. அனுப்ச்சி வைக்கிறோம்.. நீங்களே போட்டு திருப்பி அனுப்பிச்சுடுங்க.. தேங்க்ஸ்.."

இதுக்குத் தான் பேனாவைப் பிடிச்சோமான்னு நொந்து போய் அவரையே யோசிக்க வைத்திருக்கும். அந்த வேகத்தில் பிறந்தது தான் அவரது பெயர் சொல்லும் நிறைய கதைகள். ஒவ்வொன்றாய் இல்லாவிட்டாலும் சிலதைப் பார்ப்போம்.

'இருள் வரும் நேரம்'ன்னு ஒரு நாவல்.. '88 வாக்கில் 'கல்கி'யில் தொடராக வந்தது. பல்கலைக் கழக சைக்காலஜி புரொபசர் ராம்பிரகாஷின் அழகான மனைவி அம்ருதா. ஒரு கல்யாண ரிசப்ஷனுக்காக காரில் கிளம்பியவர்கள், கார் நடுவழியில் ரிப்பேராகி நின்றுவிட வேறு வழியின்றி பஸ் பிடித்து வீடு செல்ல பக்கத்து பஸ் ஸ்டாப்பை நாடுகிறார்கள். திமுதிமு கூட்டத்துடன் வந்த பஸ்ஸில் ராம்பிரகாஷ் மட்டுமே திணிக்கப் பட்டு பின்னால் நின்றிருந்த அவர் மனைவி பஸ் ஸ்டாப்பிலேயே தேங்கி விடுகிறாள். ஆட்டோ ஒன்றை செலுத்திக் கொண்டு அந்த வழியே வந்த பாபுவும் அவன் நண்பன் பால்குண்டுவும் இதைப் பார்த்து அடுத்த ஸ்டாப்பில் பஸ்ஸைப் பிடித்து விடலாம் என்று அம்ருதாவை நம்ப வைத்து ஆட்டோவில் ஏற்றிக் கொள்கின்றனர். கபன் பார்க் பக்க இருட்டு அவர்களுக்கு வசதியாக அம்ருதா அபலையாய் அவர்கள் பசிக்கு இலக்காகிறாள்.

இப்படிக் கதையை ஆரம்பித்து, புரொபசர்- அந்த 'விபத்தி'ற்குப் பிறகு மனம் நலம் பாதித்துப் போன அவர் மனைவி அம்ருதா, புரொபசர்-அவர் மாணவி வர்ஷா, வர்ஷா- வர்ஷாவின் புரொபசர் மீதான கிரேஸ்-- வர்ஷா-- புரொபசர் பழக்கத்தை தீவிரமாகக் கண்காணித்து மனம் பேதலிக்கும் அம்ருதா-- ஆட்டோ பாபு-அவன் அம்மா லஷ்மி, சிக்பேட்டை விவகாரங்கள் என்று தொட்டுக் கொள்ள நிறைய ஐட்டங்களுடன் பரிமாறுகிறார் சுஜாதா. இப்படியோ அப்படியோ என்று எல்லா சாத்திய கூறுகளையும் அலசும் வேகத்தில் மனித மனத்தின் அத்தனை அடிமன ஆழ விகற்பங்களும் வெளிச்சம் போடப்பட்டு வெக்கங்கெட்டுத் திரிகின்றன. சைக்யாரிஸ்ட்டுகள் புழங்கும் வார்த்தைகள் புதினத்திற்கு தனி யதார்த்தைத்தைக் கொடுக்க தமிழுக்குப் புதுசான சூழ்நிலை விவரிப்புகள் என்று எடுத்துக் கொண்ட விஷயத்தில் படிப்பவரின் ஈடுபாடு கூட அதை அர்ப்ணிப்பு உணர்வுடன் சொல்லும் சுஜாதாவின் அதீத திறமை வெளிப்படும் நாவல் இது.

'கம்ப்யூட்டர் கிராமம்' என்று.. 'பிரிவோம் சந்திப்போம்' ன்னு.. அதெல்லாம் இருக்கட்டும்.. அதுக்கு முன்னாடி, அந்த 'குருபிரசாத்தின் கடைசி தினம்' குறுநாவலைப் பற்றிச் சொல்லாமல் விட்டால் பாவம். சுஜாதாவின் பலமான பலம் என்னவெனில், அவரது புத்தகம் எடுத்துப் படிப்பவர்களை அவர்கள் ஒரு புத்தகத்தைப் படிக்கிறோம் என்று உணர்வதற்கு லவலேசமும் இடம் கொடுக்காமல் கதை நடக்கும் நட்ட நடு ஸ்பாட்டில் அவர்களையும் கொண்டு போய் இறக்கிவிடுவது. கண்ணுக்கு முன்னாடி நடக்கும் அத்தனையிலும் நாமும் பங்கு கொள்கிறமாதிரி, அல்லது நேரடியாக பார்க்கிற மாதிரி எத்தனை விதம் உண்டோ அத்தனை வித சொக்குப்பொடியையும் தூவி விட்டு விட்டு, தான் தேமேன்னென்று இருப்பது தெரியாது அப்ஸ்காண்ட் ஆகிவிடுவார். நடக்கும் நிகழ்ச்சிகள், நாம் என்று எல்லாமே நேரடிப் பரிச்சயத்தில் அவரவர் கொள்ளும் உணர்விற்கேற்ப அவரவர் அனுபவம் கொள்ள வேண்டியது தான். குருபிரசாத்தின் கடைசி தினத்திலும் இந்தக் காரியம் தான் சப்தப்படாமல் நடக்கிறது.

குருபிரசாத்தின் ஸ்டாப் நம்பர் 17163. அசெம்ளி செக்ஷன் சீனியர் மெக்கானிக். ரத்த அழுத்த உச்சத்தில் மயங்கி விழுந்தவனை சக தொழிலாளிகள் பார்த்து தொழிற்சாலை ஆசுபத்திரிக்கு தூக்கி வர, அங்கிருந்து இ.எஸ்.ஐ. அட்மிஷனுக்கு அவன் பரிந்துரைக்கப்பட, சட்டதிட்டங்களினால் சட்டமிடப்பட்ட சில சம்பிராதாய நடவடிக்கைகளும், தனிமனித அலட்சிய காலதாமதங்களும் எப்படி ஒரு சாதாரண மனிதனின் காப்பாற்றப்பட வேண்டிய உயிரை கைகழுவுகின்றன என்பது தான் கதை. சுஜாதாவின் அசாத்திய சாமர்த்தியத்தில் படிப்பவரைக் குமைய வைக்கும் அற்புத படைப்பு இது. 'எந்தக் கதையும் முடிவதில்லை; ஏதோ ஒரு காலகட்டத்தில் தொடங்கி, ஏதோ ஒரு காலகட்டத்தில் நிறுத்தி விடுகிறோம். அவ்வளவே" என்று 'ஏறக்குறைய சொர்க்கம்' நாவலின் முன்னுரையில் சொல்லியிருப்பார். எவ்வளவு உண்மை!

'சாவி'யில் ஐந்து வாரங்கள் தொடராக வந்து குறுநாவல் என்கிற பெயரில் படிப்பவரைக் குலுக்கி எடுத்த கதை,'காகிதச் சங்கிலி'கள். சிறுநீரகம் பாதிப்படை ந்து படுத்த படுக்கையாகிப் போன ஒருவனின் அவஸ்த்தைகளுக்கிடையே மாற்று சிறுநீரகத்திற்கான ஏற்பாடு என்று வருகையில் அவனது நெருங்கிய உறவுகளிடையே ஏற்படும் மனகிலேசங்களைப் படம் பிடித்துக் காட்டி பாடமாகிப் போகும் கதை. இந்தக் கதையை சினிமாவாக எடுக்க முனைகையில் ஏற்பட்ட அனுபவங்களை பின்னொரு காலத்தில் சிரிக்கச் சிரிக்க சுஜாதா எழுதியவற்றைப் படித்த ஞாபகம். அந்த சிரிப்பு, பிற்காலத்தும் நினைவிருந்த அந்த கதையின் சோகத்திற்கு ஒரு மாற்றாக இருந்தது வாஸ்தவம் தான்.

அவருக்கென்று அமைந்து போன எத்தனையோ கதைகள் உண்டு. 'ஜெனோ, மீண்டும் ஜெனோ, என் இனிய இயந்திரா என்று நிறைய உண்டு. நிறையப் பேர் அவை எல்லாவற்றையும் படித்து மகிழ்ந்திருப்பதால் அவை பற்றி எழுதுவது அநாவசியம். ஆனால் தான் எழுதிய சைன்ஸ் ஃபிக்ஷன்ஸ் பற்றி அவர் என்ன எண்ணம் கொண்டிருந்தார் என்பதைச் சொல்ல வேண்டும். 'பெல்'லிருந்து பணி ஓய்வு பெற்று பெங்களூரு நீங்கி சென்னையில் செட்டில் ஆகவிருந்த தருணத்தில் ஒரு பேட்டியில் அதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். 'எலக்ரானிக்ஸ்-கம்ப்யூட்டர் ஃபீல்டுலே என் அலுவலகப் பணி அமைந்தது போன விதம் தான் இந்த மாதிரியான என் கதைகளின் வெற்றிக்குக் காரணம். இந்த துறையிலேயே பணியாற்றுகிறதனாலே எனக்குக் கிடைக்கிற தொடர்புகள், அதன் மூலமா தெரிய வர்ற செய்திகள், நாளைய டெக்னாலஜி பற்றின முன் கூட்டிய தகவல்கள் இதெல்லாம் தான் என் எழுத்து சுவாரஸ்யத்திற்குக் காரணம்னு நெனைக்கிறேன்" என்று சொல்லியிருக்கிறார். வாழ்க்கையின் பலவிஷயங்களை பிரித்து வைத்து பாத்தி போடாமல், எல்லாவற்றையும் ஒருசேர பார்க்கும் பார்வை பெற்றிருந்தார். எல்லாவற்றிலும் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், அவற்றை நேசிக்க அவர் கற்றுக் கொண்டது மட்டுமில்லாமல் அவற்றை பலரிடம் பகிர்ந்து கொள்ள அவர் கொண்டிருந்த துடிப்புமே அவரிடமிருந்து பெற வேண்டிய செய்தியாக நமக்குத் தெரிகிறது.

'கல்கி'யில் '90 வாக்கில், 'மத்தியமர்' என்று தலைப்பிட்டு எழுதினார். அது என்ன 'மத்தியமர்'?.. சுஜாதா வார்த்தைகளிலே சொல்ல வேண்டுமானால் அவர்கள் இவர்கள் தாம்: "இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது. இவர்கள் ஏறக்குறைய நல்லவர்கள். பெரும்பாலும் கோழைகள். பணக்கார செளகரியங்களுக்குத் தொட்டும் தொடாத அருகாமையில் இருப்பவர்கள். பக்தி, காதல், பரிவு, பாசம், தியாகம், நேர்மை போன்ற குணங்களை தேவைக்கும் அவசரத்திற்கும் ஏற்பச் சற்று மாற்றிக் கொள்கிறவர்கள்.. சமூகம் வாசல் கதவைத் தட்டுவதைக் கேட்காதவர்கள். இந்த மெளனப் பெரும்பான்மை யினருக்கு ஒரு பெயர் உண்டென்றால், அந்தப் பெயரே மத்யமர்"-- என்ற அவரது அறிமுகமே போதும். அந்த 'மத்யமர்' வரிசையில் மொத்தம் பன்னிரண்டு கதைகள். முதல் கதையான 'ஒரு கல்யாண ஏற்பாடு' கதையில் ஒரு வரி வரும். 'நரசிம்மன் கூடத்து அலமாரியில் இருந்த ஹெரால்டு ராபின்ஸ் புத்தகங்களை நீக்கி ஜே. கிருஷ்ண முர்த்திகளை அடுக்கினார்' என்று நேற்று மறுவாசிப்பில் இந்த வரியைப் படித்து 'குபுக்'கென்று சிரித்து விட்டேன். பதினைந்து வரிகள் எழுதி ஒரு ஆளை இப்படி என்று சொல்வதற்கு அவஸ்தைபடுவோரிடையே ஒரே வரியில் 'இந்த நேரத்து நரசிம்மன் இவர் தான்' என்று அவரை அச்சாக வார்த்தெடுத்துத் தந்துவிட்டார்! இந்த வித்தைக்குப் பெயர் தான் சுஜாதா என்று சொல்லத் தோன்றுகிறது!

'தேடாதே'ன்னு இன்னொரு குறுநாவல். கணபதி சுப்ரமணியம் என்கிற ஜி யெஸ். எம்.ஏ. லிட். சமூக அலைக்கழிப்பில் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு கவர்ச்சிப் படங்கள் சப்ளை செய்யும் போட்டோகிராபர்.. தொழில்முறையில் நிறைய பெண்களோடு பரிச்சயம் என்றாலும் எல்லாரும் அவன் நிக்கானின் வ்யூ ஃபைண்டரில் தெரியும் எஸ்.எல்.ஆர். பிம்பங்கள் தாம். அன்னிக்கு தியாகராஜன் என்பவர் சொல்லி ஒரு குட்டி நடிகையை ஒரு சில போட்டோக்களில் சிறைப்படுத்த அவள் வீட்டிற்கு வந்திருக்கிறான். அவளோ பி.ஏ. லிட். அவள் வீட்டு புத்தக அலமாரியில் Zen and the art of Motor cycle Maintenance என்னும் புத்தகம் பார்த்து திடுக்கிடுதலில் அவளின் மீதான மதிப்பு அவனுக்குக் கூடி, அறிவுலக பிரஜைகளாய் இருவரும் பிணைக்கப் பட்ட சடுதியில் அவர்களிக்கிடையே காதல் மலர்ந்து, நிறைய மல்லாந்து... என்று கதை போகும். 'கரையெல்லாம் செண்பகப்பூவி'ன் விட்ட குறை தொட்ட குறையாக இந்தக் கதையில் ஆரம்பத்தில் புவியரசுவின் கவிதையில் ஆரம்பித்து, மு. மேத்தாவையும் தொட்டு, சேரும் முகவரி சரியில்லை; அனுப்பிய முகவரியும் அதில் இல்லை; ஒரு கடிதம் அனாதையாகி விட்டது' என்கிற புதுக்கவிதையைச் சொல்லி அதை யார் எழுதியது என்று யோசிக்க வைத்து, ராபர்ட் ஃப்ராஸ்ட், எரிக்கா யாங், ஈஸாப் கதைகள், ஜென் கதைகள்,அலைஸ், எலிஸபெதன் டிராமா, Image Processing , கம்ப்யூட்டர் டிஜிட்டைஸர் என்று நிறைய அறிமுகங்கள் கிடைக்கும். ஒரு இடத்தில், "எனக்கு பேசற விஷம் பெரிசல்ல ஜி.யெஸ்! பேசற முகம், அதனுடைய சலனங்கள், கண்கள், கைவிரல்கள்.. பேசுங்க" என்று சொல்லி அயர வைப்பார்.

அதே மாதிரி தான் 'வண்ணத்துப் பூச்சி வேட்டை'யிலும். கதை என்னவோ ஜில்லுன்னு ராஜபாட்டையில் போகிற சப்ஜெக்ட்தான். வேறு யார் எழுதினும் (அ) வழக்கமான மாவரைப்பாக இருந்திருக்கும் (ஆ) சவசவக்க வைத்து சொதப்பி இருப்பார்கள் (இ) அத்தியாயம் அத்தியாயமாக கட்டுரை எழுதி கதை என்று பெயரிட்டு கொட்டாவி விட வைத்திருப்பார்கள்.. இதுவோ, சுஜாதாவின் கைபட்டு சும்மா சிட்டுப் போல சிறகடிக்கிறது. இதிலும், எலிசா பிஷப், வாலஸ் ஸ்டீவன்ஸ் எமிலி டிக்கின்ஸன், தாவ் தே சிங், டெரக் வால்காட் போன்றவர்கள் சொன்னதைச் சொல்லி அதற்கிடையில் ஆத்மாநாமையும், இளம்பிறையையும் நினைவு கொண்டு அவர்களின் துணுக்குக் கவிதைகளைத் தூக்கிப் பிடித்திருப்பார். இந்த புதினத்தில் தான் சுகுமாரனின் 'அள்ளி கைப்பள்ளத்தில் தேக்கிய நீர், நதிக்கு அந்நியமாச்சு. இது நிச்சலனம்- ஆகாயம் அலைபுரளும் அதில். கை நீரைக் கவிழ்த்தேன், போகும் நதியில் எது என் நீர்?' என்னும் கவிதை வரிகளை அங்கலாய்ப்புடன் சொல்லியிருப் பார். அதுமட்டுமில்லை, 'Bend and you will be whole- Curl and you will be straight- Keep empty and you will be filled- Grow old and you will be renewed..' என்னும் லாவ்ட்ஸூ வின் வரிகளை அழகாக அதற்கான இடத்தில் அற்புதமாக எடுத்தாண்டிருப்பார். இதெல்லாம் தமிழுக்குப் புதுசு. இதையெல்லாம் சொல்லாமல் அவரால் கதையை வெறும் கதையாக எழுத முடியாது; தான் படித்து பரவசப்பட்டதை யெல்லாம் சொல்வதற்காகத்தான் கதை-கட்டுரை என்று அந்தந்த நேரத்து மனசில் பட்ட வாகனத்து சவாரி ஏற்று பயணம் மேற்கொண்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது. அச்சு அசலான நிஜ சுஜாதா ஒளிந்து கொண்டிருப்பதும் இங்கே தான்! இங்கேயே தான்!..

'அடுத்த நூற்றாண்டு' என்று தலைப்பிட்டு அவர் 'கல்கி'யில் எழுதிய கட்டுரைகளைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சுஜாதா எதையும் மேம்போக்காகத்தான் மேய்வார் என்கிற வாதத்தைத் தவிடு பொடியாக்கக் கூடியவை அவை. டெலிபோன், கம்ப்யூட்டர், பிரபஞ்சம், விண்வெளி காலனி, மனித மனம் என்று ஒரு நீண்ட வட்டம் போட்டுக் கொண்டு அடுத்த நூற்றாண்டுக்குள் அவற்றின் வளர்ச்சிப் போக்கில் என்னன்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை அனுமானித்துச் சொல்கிறார். அவர் சொன்னதில் பாதியளவு இப்பொழுதே ஏற்பட்டு விட்டது. கிடைச்ச இடுக்கில் ஆல்வின் டாஃப்ளரின் 'ஃப்யூச்சர் ஷாக்' பற்றியும் 'தர்ட் வேவ்' பற்றியும் குறிப்பிட மறக்க மாட்டார். விவசாயப் புரட்சி, தொழிற்புரட்சி போலவே சிலிக்கான் புரட்சியை மூன்றாவது புரட்சியாகக் கொள்ள வேண்டும் என்பார். இன்றைய அத்தனை டெக்னாலஜி மாறுதல்களுக்கும் காரணமான வித்து, தனிமத்தில் செய்யப்பட்ட 'சிப்' என்னும் சில்லு தான் என்பார். இந்த 'சிப்'பைப் பற்றித் தமிழில் விவரமாக எழுதிய முதல் நபர் சுஜாதாவே. பின்னால், 'கற்றதும் பெற்றதும்' அத்தியாயத்திற்கு அத்தியாயம், தான் கற்றதினால் பெற்ற பயனை படிக்கத் தெரிந்த அத்தனை பேருக்கும் பந்தி போட்டுப் பறிமாறினதாகவே ஆயிற்று.

தமிழில் அவர் எழுத ஆரம்பித்த ஆரம்ப காலங்களிலேயே, 'தினமணி'யின் வெளியீடான 'சிலிக்கான் சில்லுப் புரட்சி' என்னும் நூல், அறிவு யுகத்தின் பல வாசல்களைத் திறந்து பரபரப்பை ஏற்படுத்திய ஒன்று. ஏ.என்.சிவராமனின் 'கணக்கன் கட்டுரை' மாதிரி இந்த சி.சி.புரட்சியையும் பின்னாடி தனிப்புத்தமாகப் போட்டார்கள். பெண்பிள்ளைகள் பாண்டி விளையாடுகையில் கட்டங்களில் எடுத்துப் போடும் தகடு மாதிரியான கல்லைச் சில்லு என்று சொல்வார்கள். அந்த சாதாரண சில்லை இந்த அசாதாரண 'சிப்'புக்கு உதாரணமாக்கி அற்புதமான விளக்கங்களுடன் எழுதியிருந்தார் சுஜாதா.

படித்த அல்லது தனக்குப் பரிச்சயப்பட்ட எந்த விஷயத்தையும் தன் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் அவரால் இருக்க முடியாது என்பது அவர் எழுத்துக்களிலிருந்து நன்கு தெரியும். புதுமைப்பித்தனை மனசார ரசித்துக் களித்திருக்கிறார். தொல்காப்பியத்தை ஆழ்ந்து மனதிற்கு இசைந்தபடி படித்திருக்கிறார். புதுக்கவிதைகளா?.. கேட்கவே வேண்டாம். ஆத்மாநாமும், மனுஷ்யபுத்திரனும் அவர் அடிக்கடி எடுத்தாளக்கூடியவர்கள். உண்மையில் இவர் அவர்களைப் பற்றி எழுதியதும் தான், அவர்கள் யார் என்று அறிந்து கொள்ளும் ஆவல் தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்தது. பெரும் பத்திரிகைகளில் தனக்கு எழுதக் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக உபயோகித்து பரந்து பட்ட வாசகர்களுக்கு புதுப்பாதை காட்டி தன் கைப்பிடித்துக் கூட்டிப் போனவர் சுஜாதா என்பதை மறப்பதற்கில்லை.

ஆர்.கே. கரன்ஞ்சியாவின் 'பிளிட்ஸ்' ஏட்டில் அந்தக் காலத்தில் கே.ஏ.அப்பாஸ் அவர்கள் 'கடைசிப் பக்கத்தை' எழுதுவார்கள். 'கணையாழி'யில் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்கிற பெயரில் ஒளிந்து கொண்டு சுஜாதா எழுத முற்பட்டதும் கிட்டத்தட்ட அப்படியான ஒரு முயற்சியே. சிறுபத்திரிகையில் எழுதத் துவங்கியவருக்கு, பெரும் பத்திரிகைகளின் வாசல் கதவுகள் திறந்ததும், முதலில் தனக்குக் கிடைக்கப்போகும் பெரும் வாசகர் வட்டத்தை எப்படி வளைத்துப் போடலாம் என்கிற எண்ணமே முதலில் தோன்றும். அப்படி வளைத்துப் போட அவர் கையாண்ட வழிமுறைகளே அவர் அல்ல. அந்த வழிமுறைகள் 'ஒருமாதிரி' இருக்கலாம். எதுமாதிரி இருந்தாலும், அதிலேயே அமுங்கிப் போய்விடாமல் அவர் என்ன சாதித்தார் என்பது காலத்தின் கணக்கீடாகப் போய்விட்டது.

சென்னை எம்.ஐ.டி.யில் இஞ்ஜினீயரிங் படித்து பெங்களூரு 'பெல்'லில் வேலையில் சேருவதற்கு முன்னால் மத்திய அரசுப் பணியில் ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகள் கழித்தவர் என்கிற விஷயம் பலருக்குத் தெரியாது. 'பெல்'லுக்கு வருவதற்கு முன்னாலேயே எழுத ஆரம்பித்து விட்டார். தி.ஜானகிராமன் சொன்ன 'எழுதறவனுக்கு ஊற்று சுரந்துகிட்டே இருக்கணும்'ங்கற தைச் சொல்லி, 'எழுத்து தொழிலாப் போச்சுன்னா அந்த 'ஊற்று' இல்லாமப் போயிடும்'னு சொன்னவர் அவர்! அதனால் தான் எல்லாத்தையும் தொழில்னு நினைக்காம தான் படிச்சு ரசிச்சதையெல்லாம் பகிர்ந்துக்கற வடிகாலா எழுத கிடைச்ச வாய்ப்பை நினைச்சிருக்கார். அதனால் தான், கட்டுரையோ-கதையோ எதுவானாலும் அப்பப்போ படிச்சதில் தனக்குப் பிடிச்சதையெல்லாம் சாகசமாய் ஊடும் பாவுமாய் தான் எழுதியவற்றில் நுழைத்து படிக்கறவங்களையும் தான் அனுபவிச்ச உணர்வுகளைப் பகிர்ந்துக்க வைச்சிருக்கிறார். அப்படிப் படிச்சதிலும் கதைக்குன்னா எவ்வளவு டோஸ் கலக்க வேண்டும், கட்டுரைக்குன்னா எவ்வளவுன்னு அளவு தெரிஞ்ச கலைஞனாய் அவர் இருந்த அதிசயம் தான் அவரையும் அவர் எழுதினதையும் அவர் படிச்சதையும் தனிதனியாய் பிரிச்சுப் பார்க்க முடியாத ரசவாத வித்தையாய் அமைந்து போய் விட்டது.

எதைச் சொன்னாலும் அதை சுவாரஸ்யமாகச் சொல்ல வேண்டும் என்ற கலையைக் கற்றவர் அவர்; அதுவே அவர் அடைந்த வெற்றியின் சூட்சுமமாகத் தெரிகிறது.

Related Posts with Thumbnails