மின் நூல்

Sunday, November 18, 2012

கனவும் காட்சியும்

தாசிரியர் புனைவரசு டைரக்டர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.  ஒன்றும் அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.  வேறென்ன வேண்டும் என்று தெரிந்தாலும் வேண்டிய மாறுதலை கதையில் செய்ய அவர் தயாராய் இருந்தார்.  தினம் நடக்கிற கதை தான் இது.  இருந்தாலும் இன்னிக்கு ஏனோ டைரக்டர் கலகலப்பில்லாமல் ஆழ்ந்த யோசனைக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டது புனைவரசுக்கு ஆச்சரியமாக இருந்தது.

இன்னிக்கு காலைலேந்தே அந்த யூனிட் ஏக குஷியில் இருந்தது.  வெளிப்புறப் படப்பிடிப்பில், அதுவும் தரைமட்டத்திலிருந்து 7500 அடி ஹில் பரப்பில் செம வெயில் என்பது கொண்டாடப்பட வேண்டிய விஷயம்.  போட்ட அப்பளம் பொறிகிற மாதிரி வெயில். நேற்றைக்கு மாதிரி இன்னிக்கு இல்லை; நேற்றைக்குத் தான் தவமாய் காத்திருக்க வேண்டியதாகப் போய்விட்டது.  இன்றைக்கு காலை ஏழு மணியிலிருந்தே  பகலவனின் கடாட்சம் பளீரென்று கிடைத்தது எல்லோர் முகத்திலும் சந்தோஷ ரேகைகளை வரைந்திருந்தது.  எட்டுக்கே எல்லோரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆஜர்.  நான்கு கார்களைத் தவிர்த்து மொத்தம் மூன்று வேன்கள். வேன்களில் திமிரத் திமிர ஆட்கள்,  தனி வண்டியில் ஷூட்டிங் தளவாடங்கள் என்று அரைமணி நேரத்திற்கு முன்னாலேயே சப்ஜாடா படப்பிடிப்பு இடத்தில் ரெடி.

எட்டரைக்கே மொத்த யூனிட்டும் எறும்புக் கூட்டம் மாதிரி இயங்க ஆரம்பித்து விட்டது.  மாலை ஆறு மணி வரை வஞ்சனை இல்லாத வெயில்.  இந்த ஷெட்யூல்டுக்கான ஹீரோ, ஹீரோயின் கால்ஷீட் இன்னையோட முடியற அவசரம் வேறே.  நாளன்னிக்கு இரண்டு பேரும் அயல் தேசத்தில்.  ஒருத்தர் லண்டன் என்றால் இன்னொருத்தர் ஸ்பெயினில்.   இண்டு பேரிடமிருந்தும் முழு ஒத்துழைப்பு கிடைத்த உற்சாகத்தில் ஒண்ணு பாக்கியில்லாமல் அன்னிக்கு எடுக்க வேண்டிய காட்சிகளை பிலிம் சுருளில் சுருட்டிக் கொண்டதும் தான் டைரக்டரின் முகம் முகமாய் தெரிந்தது.  அதுவரை பாவம் மனுஷன், தவித்துத் தான் போய்விட்டார்.

இந்த இடத்திற்கு வந்து இன்னியோட பதிமூன்று நாட்கள் ஆகிறது.  அவுட் டோர் என்றாலே இப்படித் தான் என்று அனுபவம் வாய்ந்த டைரக்டருக்கும் தெரியும்.  இருந்தாலும் இருக்கற பரபரப்பில் ஒவ்வொன்றும் பிரச்னையாகும் பொழுது அவரால் டென்ஷனைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடிவதில்லை.  திருப்தியாக எல்லாம் முடியற வரைக்கும் தினம் தினம் இந்தக் கதை தான்.  முடிந்த பிறகு அந்த செளஜன்யத்தைப் பார்க்க வேண்டுமே?.. யார் என்ன கேட்டாலும் கிடைக்கும்.  வேறென்ன வேண்டும் என்கிற பாவனையில் யாரும் எதையும் மனசில் வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு சின்ன சின்ன தேவைகள் கூட பார்த்துப் பார்த்து கவனிக்கப்படும்..

"என்னம்மோ ஒரு குறை.. என்னன்னு தான் புரிபடலே.. அதான்.." என்று மோவாயைத் தடவிக் கொண்டு மேல் சிலீங்கை டைரக்டர் பார்த்த பொழுது புனைவரசு எதுவும் சொல்லாமல் அவரே சொல்லட்டும் என்று காத்திருந்தான்.

ஸ்டோரி டிஸ்கஷன் போது மொத்த சினிமாவையும் ஒன் லைன் கதையாகத் தீர்மானித்திருந்ததால், அந்த ஒன் லைனிலிருந்து விலகிப் போய் விடாதவாறு அப்பப்போ ஒண்ணை விஞ்சி இன்னொண்ணுன்னு காட்சி காட்சியாக அன்னன்னைக்கு மெருகேற்ற ரொம்ப செளகரியமாக இருந்தது. அதனால் தான் கதாசிரியர் புனைவரசும் அப்பப்போ செய்யப் போகிற மாறுதல்களுக்கு ஈடு கொடுக்கிற மாதிரி அவுட்டோர் ஷூட்டிங்கில் கூடவே இருக்க வேண்டும் என்பதில் ஆரம்பத்திலிருந்தே குறியாக இருந்தார் டைரக்டர்.

அடுத்த நாளைக்கு என்ன எடுப்பது என்பதற்கான டிஸ்கஷன் முதல் நாள் ஷூட்டிங்கின் பேக்கப்பின் போதே ஆரம்பித்து விடும்.  புனைவரசே திரைக்கதைக்கும், திரைக்கதை வசனத்திற்கும் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தான்.  அதனால் தங்கியிருந்த ஹோட்டல் என்னும் வாசஸ்தலத்திற்கு வந்து சேருமுன்னே டைரக்டரும் புனைவரசும் ஒரே காரில் ஏறிக்கொண்டு அடுத்த நாளுக்கான கதை நகர்த்தலுக்காக "அப்புறம்.." என்று விவாதிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

இன்றைக்கு ஏனோ ஹோட்டலுக்கு வரும் வழியில் தினம் தினம் இருக்கும் அப்படியான விவாதம் இல்லை.  வழி பூரா எதையோ யோசித்துக் கொண்டு டைரக்டர் வந்தது புனைவரசுவுக்கும் வழக்கத்துக்கு மாறான ஆச்சரியமாக இருந்தது.  ஹோட்டலுக்கு வந்ததும், "குளிச்சிட்டு வந்திடுங்க.. என் ரூமில் டிஸ்கஷனை வைத்துக் கொள்ளலாம்.." என்று சொல்லி விட்டார் டைரக்டர்.

அவர் சொன்னபடிக்கு புனைவரசு வந்திருக்கிறான்.  வந்து கால்மணி ஆயிற்று. டைரக்டர் தான் என்ன யோசித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. இயக்குனர் இண்டஸ்ட்ரியில் ரொம்பவும் அனுபவம் வாய்ந்தவர்.  அதனால் அடுத்த நாள் காட்சிகள் எப்படி வர வேண்டுமென்று அவர் விரும்புகிறாரோ அதற்கேற்றவாறு கதையில்- வசனத்தில் மெருகு படுத்திக் கொடுக்கலாம் என்று புனைவரசு காத்திருந்தான்.

"மேலே மேலே அந்த ஒருத்தன் முதுகிலேயே அத்தனை துன்பத்தையும் ஏத்தறதாங்கறது தான் யோசனையாப் போயிடுச்சு.  ஆனா, அதைத் தவிர வேறே வழியில்லே.. அதான் படத்தைப் பாக்கற ஜனங்க மத்திலே ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்தும்.  படமும் ஃபேமலி சப்ஜெக்ட்டா இருக்கறதினாலே
லேடீஸ் கூட்டமும் அம்மும்..  என்ன சொல்றீங்க?.." டைரக்டர் புனைவரசனை ஆழப் பார்த்தார்.

"எஸ். ஸார்.  நீங்க எதை மீன் பண்றீங்கன்னு..."

"சொல்லிடறனே?" என்று சொல்லி விட்டு டைரக்டர் மீண்டும் யோசனைக்குள் புதைந்தார்.  புதைந்த சுவாரஸ்யத்தில் ஆஷ் ட்ரேயில் கனன்று முடிந்ததை அனிச்சையாகப் புதைத்தார்.

"பாரு, புனைவு.. நான் சொல்ல வர்றது சரிப்படுமா பாரு..  ஆக்சுவலி அந்தக் குற்றத்தைச் செஞ்சது என்னவோ ஹீரோவின் தகப்பன் சுந்தரேசன் தான். பழி ஓரிடம் பாவம் ஓரிடம்ன்னு ஆச்சு. அவன் செஞ்ச குத்தத்தை ஹீரோயின் தகப்பன் தாமோதரன் சந்தர்ப வசத்தால் ஏத்துக்கும் படி ஆச்சு.  என்ன, சரியா?"

"கரெக்ட் சார்.  முன்னாடியே இதெல்லாம் ஷூட் பண்ணியாச்சு.  நேத்து அவ்வளவு வெயில் இல்லாததினாலே இவங்க ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட ஸைடு காட்சிகளை இண்டோர்லேயே எடுத்திட்டம்.   சுந்தரேசன் மாடிப்படிகளில் தடுமாறி விழுந்து காலை உடைச்சிண்டு படுக்கையில் விழுந்த காட்சி, சுந்தரேசனுக்கு கால் உடைஞ்ச சேதி கேட்டு தாமோதரன் அவரைப் பாக்க வர்ற காட்சி இந்த ரெண்டையும் ஷூட் பண்ணியாச்சு. அதுக்கு கன்ட்டின்யூவா வர்ற காட்சிகளைத் தான் தீர்மானிக்கணும்."

"எஸ்.. இந்த இடத்தில் தான் ஒரு சேஞ்ச் இருக்கணும்ன்னு நெனைக்கறேன்.  சுந்தரேசனுக்குப் பதில் தாமோதரன் காலை உடைச்சா என்ன, புனைவு?"

"அதுக்கென்ன உடைச்சிட்டாப் போச்சு.." என்று ஒத்தூதினார் புனைவரசு.  அடுத்த வினாடியே, "எதுக்காக இந்த மாறுதல்?" என்று விஸ்வரூபமாக எழுந்த குழப்பத்தில் "எதுக்கு ஸார் இந்த மாறுதல்?" என்று பம்மினார்..

"எதுக்கு இந்த மாறுதல்?" என்று அதே கேள்வியை தங்கிட்டேயே கேட்டுக் கொண்ட டைரக்டர், "எதுக்குன்னா.." என்று விஸ்தாரமாக எதையோ சொல்ல ஆரம்பித்தவர் போல ஆரம்பித்தார். "அதான், புனைவரசு! அதான் என்னையே நானும் கேட்டுக்கற கேள்வி.  சடார்ன்னு வந்த யோசனை. பூப்போல மனசிலே பூத்த யோசனை.. இதைச் செய்ன்னு ஆணையிடற மாதிரி உள்ளேருந்து கிடைச்ச குரல்.. ஏன், என்னன்னு கேட்டுகிட்டு இருக்காம, அந்தக் குரல் சொன்னதை அடிபணிஞ்சு கேக்கணும் போல இருக்கு, புனைவு..." என்று அரைக்கண்களை மூடிய போஸில் சோபாவில் லேசாக முதுகை அழுத்திச் சாய்ந்தார். ".. இதான்ன்னு குறிப்பா சொல்ல முடியலே. ஜனங்களோட சென்டிமெண்ட் நெகிழ்வை காயின் பண்றோம்ங்கறதைத் தாண்டி ஏதோ ஒரு காரணத்திற்காக மனசு அப்படி யோசிக்கறது.  அந்த ஏதோ தான் என்னன்னு யோசிச்சிண்டிருக்கேன்."

"மொத்தக் கதையோட ஒன் லைன்னும் மாறாம வேறே யோசிக்கணும், சார்.."

"அது என்னய்யா, லஷ்மண் ரேகாவா?.. ஒன் லைன், ஒன் லைன்னுகிட்டு! ஒன் லைன்னை புறக்கணிச்சுத் தாண்டனும்னா தாண்டித் தான் பாப்பமே? அப்படித் தாண்டினதை உள்ளடக்கி இன்னொரு ஒன் லைன் புதுசாப் போட்டுகிட்டாப் போச்சு.."

புனைவரசு நெளிந்தார்."சார்! தாமோதரனை படுக்கைலே வீழ்த்தணும்ன்னா இன்னொரு சங்கடமும் இருக்குங்கறதை மறந்திடாதீங்க."

"என்னயா, பெரிய சங்கடம்?..  சொல்லு.."

"சுந்தரேசனை படுக்கைலே தள்ளி எடுத்த ஷாட்லாம் அழிக்கணும். சுந்தரேசனுக்குப் பதில் இப்போ தாமோதரனைப் படுக்க வைச்சு புதுசா எடுக்கணும்.."

"அழிக்கத் தேவையில்லே.. அதுக்கு கூட ஒரு ஐடியா இருக்குய்யா.."

"என்னாது?.."

"சுந்தரேசனின் படுக்கைக் காட்சிகளை அவர் கண்ட கனவா மாத்திடலாம்.  கால் உடைஞ்சி படுத்த படுக்கையா தான் கிடக்கிற மாதிரி கனவு காண்றார் சுந்தரேசன்.  அந்தக் கனவுல தான் தாமோதரன் தன்னைப் பாக்க வர்றதாவும் பக்கத்தில அமர்ந்து ஆறுதல் வார்த்தைகள் சொல்றதாவும் கனவு நீள்றது.   கனவு கலைஞ்சதும், காலைத் தூக்கிப் பார்க்கிறார், சுந்தரேசன்.  அவர் கால் எந்த சேதாரமும் இல்லாம கல் தூண் கணக்கா இருக்கு.  துர் கனவு கண்டு முழிக்கறச்சே, அத்தனையும் கனவுன்னு தெரிஞ்சா எத்தனை சந்தோஷமா இருக்கும்?.. சுந்தரேசனுக்கும் அந்த சந்தோஷம் தான்.. துள்ளிக் குதிக்கிறார்."

"உம்.."

"இருந்தாலும் அந்தத் துள்ளலை மனசார அவராலே அனுபவிக்க முடிலே.."

"சார்! சும்மாச் சொல்லப்படாது.  சுவாரஸ்யமா 'நீட்'டா நீட்றீங்க, சார்... கதையும் சும்மா ரப்பர் பாண்ட் கணக்கா விரியுது.. பாத்து சார்.  மெயின் கதையைச் சாப்பிட்டுட்டு இந்த சைட் டிராக் துண்டா நீண்டுடப் போறது.."

"மிச்சத்தையும் கேளு, புனைவு!.  இப்போப் பார்.  சைட் டிராக் தன்னாலே முன்வந்து சப்போர்ட்டா மெயின் கதைக்கு பலம் கொடுக்கப்போறது, பாரு.."

"அப்படியா?.. மேக்கொண்டு சொல்லுங்க, சார்.."

"துண்டை உதர்ற மாதிரி சுந்தரேசனாலே கண்டோமா, போனோமான்னு தான் கண்ட மொத்த கனவையும் மனசிலேந்து துடைச்சு எறிஞ்சிட முடியலே."

தான் தான் திரைகதை ஆசிரியர் என்கிற நினைவே இல்லாமல் சிலிர்த்தார் புனைவரசு.. "ஒண்டர்புல் சார்.. அம்சமான கனவு சார்.. அப்புறம்?.."

"'தனக்கு அப்படியான கனவு வந்ததுக்குக் காரணம்?'ன்னு யோசிச்ச சுந்தரேசன் சிந்தனைலே பளிச்ன்னு ஒரு பல்பு எரிது! ஆங்! அப்படியும் இருக்குமோ?.. அநியாயமா பழியை ஏத்திண்டவன், இப்போ படுக்கைலே கிடக்கறானோ? அடப்பாவமே! தனக்கு வந்ததை ஏத்திண்டவனுக்கு தான் ஏதாவது உதவி செய்ய வேண்டாமா?..'ங்கற ரீதிலே மனசு கோணிக் குத்தூசியா குத்துது.."

"சார்.. அப்புறம்?"

"புனைவு! நீ என்ன செய்யறேனா, உன் வேலைலே கோட்டை விட்டுடக் கூடாது! வசனம்-- அது மனசாட்சி பேசறா இருந்தாலும் சரி, வாயாலே பேசறா இருந்தாலும் சரி-- நான் சொல்லுறதையெல்லாம் வார்த்தையாக்கறது உன் கைலே தான் இருக்கு.. நான் முழுசும் சொன்னப்புறம், சட்டுபுட்டுனு இப்பவே சூட்டோடு சூடா உக்காத்து எழுதிப்பிடு.. ஏன்னா, இன்னொரு தபா நீயே கேட்டாலும் என்னாலே இப்படி கோர்வையா சொல்ல முடியாது.. ஆமா! நினைப்புலே காட்சி காட்சியா வர்றதையாக்கும் சொல்லிக்கிட்டிருக்கேன்.. தெரிஞ்சிக்கோ.."

"மாட்டேனே! வுட மாட்டேனே! நீங்க இப்போ என்ன சொல்றீங்களோ, அதெல்லாத்தையும் அப்படியே காதுலே ஏந்தி மனசிலே போட்டு கிட்டு இருக்கேனாக்கும்! அப்புறம் சொல்லுங்க.."

"ஆமா. வேணும்ன்னா உன் பேட் எடுத்து அல்லாத்தையும் ஒண்ணு விடாம குறிச்சிக்கோ.. உன்னோட வளவளன்னு பேசிக்கிட்டு இருந்தா, எனக்கு அந்த ஃப்ளோ மறந்து போய்டும்.. ஆங்! எங்கே விட்டேன்?.."

"தாமோதரனுக்கு ஏதாவது உதவணும்ன்னு சுந்தரேசன் அல்லாடறார்.."

"ஓக்கே! அந்த நெனைப்பு வந்ததும் அவருக்கு வீட்லே இருப்பு கொள்ளலே..  தாமோதரனை உடனே பாக்கணும்ன்னு மனசு துடிக்கறது.. அவுரு வீட்டுக்கு இவுறு ஓடறார்.. அங்கணே போய்ப்பார்த்தா.. அம்மாடி! சுந்தரேசனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கு, அங்கே பாத்தா .. முக்கலும், முனகலுமா தாமோதரன் பெட்லே படுத்துக் கிடக்கறதைப் பாத்திட்டு அவருக்கு ஒரே அதிர்ச்சியா இருக்கு! இவுரு இப்படிக் கெடக்கறது, தோசையைத் திருப்பிப் போட்டாப்பலே அப்படியே மாறி தான் படுக்கேலே கெடக்கற மாதிரி தன் கனவிலே எப்படி வந்ததுன்னு ஆச்சரியப்பட்டுப் போறார்..  ஏதோ சக்தி தான் அப்படித் தன் கனவிலே காட்சியா வந்து காட்டிக்கொடுத்து தன்னை இங்கணே கூட்டிகிட்டு வந்திருக்குன்னு சத்தியமா நம்பறார்.. தாமோதரன் மனைவி சொர்ணத்துகிட்டே எப்படி விழுந்தார், எப்படி கால் உடைஞ்சதுன்னு எல்லா விவரத்தையும் கேட்டு தெரிஞ்சிக்கிற தருணத்லே தான் தாமோதரனோட பொண் யமுனா அங்கணே வர்றா.. அந்தப் பொண்ணோட மூக்கு, முழி, சற்றே சரிந்த நெற்றி மேடு, கால் வரை நீண்ட கருங்கூந்தல்ன்னு அத்தனையும் பாத்து... மகன் பாபுவுக்கு சரியான பொருத்தமாக இவள் தெரிகிறாளேங்கற நெனைப்பு வந்ததும்,  தாமோதரனை ஆசுபத்திரியில் சேர்ப்பது முதற்கொண்டு அத்தனை உதவிகளையும் செய்தே தீர வேண்டும் என்று துடியாத் துடிக்கிறார் சுந்தரேசன்...

"சார்! ஊட்டி அவுட்டோர் பதினைஞ்சு நாள் தான்.  ஏற்கனவே பதிமூணு ஆச்சு. இன்னும் ரெண்டு நாள் தான் பாக்கி இருக்கு.  நான் வசனம் எழுதி, காட்சிலாம் அரேஞ்ச் பண்ணி, ஒளிப்பதிவாளர் வேறே.. எப்படா ஊருக்குப் போவோம்ன்னு எல்லாரும் துடிச்சிகிட்டு இருக்காங்க.. படுக்கை காட்சி தானே?.. பேசாம சென்னை போய் எடுத்துக்கலாமா.. "

"யோவ், புனைவு! உனக்கு வூட்டு ஞாபகம் வந்திடிசின்னா, அத்தினி பேருக்கும் அப்படியாய்யா.. மணி ஏழு தான் ஆகுது.  ஒம்போதுக்கு சாப்பாடு.  வேணுன்னா ஒண்ணுக்கு ரெண்டு தபா ஸ்ட்ராங்கா கேட்டு காப்பி சாப்பிட்டுக்கோ.  நமக்கு இந்த வெண்சுருட்டு போதும்.  தெரிஞ்சிதா..  ஜல்தி.. போய் எழுதிட்டு வாய்யா.. இன்னிக்கு ராவு எத்தனை மணி ஆனாலும் சரி, இந்த வேலையை முடிச்சிட்டுத் தான்..."

"எதுக்கு இதுக்கு அவுட்டோர்ன்னு பாத்தேன்.."

"யோவ்! அந்த பங்களாய்யா..  விரிசல் விழுந்த சுவர்ய்யா.. தாமோதரன் வீடு அதுன்னு ஒரு காட்சி எடுத்திருக்கோமே?.. மறந்திட்டியா? கன்ட்டின்யூயிட்டி யைக் கீப் அப் பண்ணனும்யா.."

"அதுக்கென்ன, சார்!  சென்னைலே அந்த மாதிரி விரிசல் விழுந்த ஒரு சுவர் கிடைக்காமயா போய்டப் போறது.. பொல்லாத கன்ட்டின்யூட்டி."

"கன்ட்டின்யூட்டி இல்லேயா, கன்ட்டின்யூயிட்டி.. எங்கே, சொல்லு."
 
"கன்ட்டின்யூயிட்டி.. சரியா?.."

"குட்..  ஜல்தி.. ஜல்தி.. சொன்ன வேலையை செய், புனைவு! சமத்தில்லையோ.. போய் எழுதிட்டு வா.. ராத்திரிக்கு பாஸந்தி ரெடி பண்ணச் சொல்றேன்."

"ஓக்கே, பாஸ்! டன்!" என்று உற்சாகமாக எழுந்து போகும் புனைவரசனைப் புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார் டைரக்டர்.


Related Posts with Thumbnails