மின் நூல்

Wednesday, December 31, 2008

ஆத்மாவை தேடி....29

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

29. புது விஷயம்; புது உலகம்

நீண்ட நேரம் டெலிபோன் ரிஸீவரைப் பிடித்திருந்ததினால் கை லேசாக வலிக்க, ரிஸீவரை இன்னொரு கைக்கு மாற்றிக் கொண்டார், கிருஷ்ணமூர்த்தி.

"மாலு! நான் சொல்ல வர்றதைப் புரிஞ்சிக்கோ.. யாரைப் பாக்கலாம்னு அன்னிக்கு அப்படிக் கிளம்பினேனோ, அவரே, அந்த நீலகண்டனே, 'பைத்தியக்காரா! இங்கே எங்கே வர்றே'ன்னு என்னைத் திசைதிருப்பி விட்டான். மனோகர்ஜின்னு ஒரு பெரியவரைப் பாக்க வ்ச்சான். ஞான விஷயமா இன்னும் நெறைய நான் தெரிஞ்சிண்டு வரணும்னு நெனைச்சானோ என்னவோ, பெரிய பெரிய படிப்பு படிச்ச பண்டிதர்கள் பேசி விவாதிக்கற சபைலே என்னை மேடை ஏத்தி என்னோட மழலையை ரசிச்சான். 'ஆத்மா'ன்னு ஒரு சதஸ் வேறே இங்கே நடக்கப் போறது"

"என்னன்னவோ சொல்றையே?"

"ஆமாம். இங்கே டெல்லிலே ஒரு பெரிய சதஸ் நடக்கப் போறது. மனோகர்ஜிதான் ஏற்பாடு பண்ணியிருக்கார். 'ஆத்மா'ங்கற சப்ஜெக்டை எடுத்திண்டு பல கோணங்கள்லே பண்டிதர்கள்லாம் அலசப்போறா."

"ஹஹ்ஹ்ஹா.." என்று பெரிதாக சிரித்தாள் மாலு. "ஏண்டா, கிருஷ்ணா! கேட்டாலே சிரிப்பு வரலை? பேசறதாவது.. விவாதிக்கறதாவது.. பேசித் தெரிஞ்சிக்கறதாவது.. எனக்குப் புரிபடலை.. ஏண்டா, கிருஷ்ணா, சொல்லு. பேசி, விவாதித்து, புரிஞ்சிக்கற விஷயமாடா, அது? சொல்லு."

"மாலு----"

"கிருஷ்ணா! நீ ஒண்ணை மொதல்லே புரிஞ்சிக்கோ.. அது ஆம்பளையோ, பொம்பளையோ என்னைக்கு அவாளுக்குக் கல்யாணம்னு ஒண்ணு ஆயிடுச்சோ, அன்னிக்கே அவா கூண்டுக்கிளியாயிடறா.. கிரகஸ்தாளாயிடறா.. நாற்பது சமஸ்காரங்களும் தெரிஞ்ச ஒனக்கு நா சொல்ல வேண்டியதில்லே; இல்லறத்தாளோட கடமைகள் நீ அறியாததும் இல்லே.. 'செல் விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்; நல் விருந்து வானத்தவர்க்கு'ன்னு வள்ளுவர் சொல்லலிய்யா?.. வேதசாஸ்திர மந்திரங்கள் எனக்கும் தெரியும்.. சொல்றதுன்னா சொல்லுவேன்.. கல்யாணம் ஆயிடுச்சின்னா, கிரகஸ்தாளாயிருந்திண்டு கடவுளைத் தேடறது தான் அவாளுக்கு இட்ட வழி... இப்படி பொண்டாட்டியை தனியா விட்டுட்டு, தான் மட்டும் துண்டை உதறிப் போட்டுட்டு கிளம்பறதில்லே. தெரிஞ்சிக்கோ."

"நீ என்ன நான் சந்நியாசமே வங்கிண்டு வந்துட்ட மாதிரி பேசறே?.. என்னிக்கு 'ஸப்தபதி' ஜபித்து ராதையோட கையைப் பிடிச்சிண்டு அக்னி வலம் வந்தேனோ, அன்னிக்கேத் தீர்மானமானது அது."

"என்னது?"

"இறப்பு ஒண்ணு தான் எங்க ரெண்டு பேரையும் பிரிக்கக் கூடிய ஒண்ணுன்னு. அது அவளுக்கும் தெரியும். நானும் அடிக்கடி பத்து நாள், பதினெஞ்சு நாள்னு புராணக்கதை சொல்றேன்னு வெளிலே போயிண்டு வந்திண்டிருக்கறது வழக்கமான ஒண்ணுங்கறதாலே, என்னோட இருப்பு அங்கே இல்லாதது அவளுக்கு பெரிசாத் தெரியலே.. எனக்கும் குடும்பத்தை விட்டான இந்த தற்காலிக பிரிவெல்லாம் பழக்கப்பட்டுப் போயிடுத்து.. மத்தபடி மானசீகமா எப்போதும் எந்நேரமும் அவளோடையே தான் இருக்கேன். இன்னிக்கு ஒங்கிட்டே சொல்றேன். தெரிஞ்சிக்கோ."

"---------------"

"அவளோட மட்டுமில்லே.. உங்க எல்லாரோடையும் கூடத்தான். இன்னிக்கு அதிகாலைலே என்னோட கனவுலே நீ வந்தே.. தெரியுமா, சேதி?"

"என்ன சொல்றே, கிருஷ்ணா?"

"ஆமாம்... கனவுலே நீ மட்டுமில்லே... அண்ணா, மன்னி கூடத்தான். அந்த தஞ்சாவூர் ராணி வாய்க்கால் தெரு வீடு.. பெரிசு பெரிசா அந்த ஜன்னல்கள்.. அதெல்லாம் ஒனக்கு நினைவிருக்கா, மாலு?.. ஜன்னல் பக்கத்லே பாய் விரிச்சு நீ, நான், மன்னி-- எல்லாரும் படுத்திருக்கோம்.. சிபிச் சக்கரவர்த்தி கதை சொல்லட்டுமான்னு நீ கேக்கறே--"

"கிருஷ்ணா!---"

"இன்னிக்கு காலம்பற பொழுது விடியறத்துக்கு முன்னாடி வந்த கனவு இது.
பச்சுன்னு இப்பவும் ஞாபகத்லே இருந்து ஒடம்பு சிலிர்க்கறது."

"ஆச்சரியமா இருக்கு, கிருஷ்ணா!"

"எனக்கும் தான்."

"என்னோட ஆச்சரியம் வேறே... சித்தே முன்னாடிதான் அந்த ராணி வாய்க்கால் தெரு மகாத்மியம் பத்தி ராதைகிட்டே சொல்லிண்டு இருந்தேன்.. அப்படியெல்லாம் கதை கேட்டவன், இன்னிக்கு ஊருக்கெல்லாம் கதை சொல்லிண்டு இருக்கான்னு சொல்லிண்டு இருந்தேன்..... ச்சூ... ச்சூ... அந்தக் கழியை எடுத்து அங்கே வை ராதை.."

"என்ன மாலு?.."

"ஒண்ணுமில்லே.. இங்கே பக்கத்லே புறா வளக்கறாப் போல இருக்கு. அதிலே ரெண்டு நம்பாத்து முத்தமே கதின்னு கெடக்கு. 'படபட'ன்னு இங்கேயும் அங்கேயும்ஓடிப்பறந்து, ஹாலுக்கு வந்திடுத்து.. அதான் விரட்னேன்."

இன்னொரு பக்கம் ஃபோனைப் பற்றியபடி கிருஷ்ணமூர்த்தி பிரமை பிடித்து நின்றார்.

"ச்சூ.. ச்சூ.." என்று மாலு புறாவை விரட்டுவது இங்கு கேட்டது. அவள் புறாவை விரட்டுவது கிருஷ்ணமூர்த்திக்கு தன்னையே விரட்டுவது போலிருந்தது.

"மாலு.. வேண்டாம்.. புறாவை விரட்டாதே.. பக்ஷிகள் நெருங்குவது பாக்கியம். விரட்டாதே."

"விரட்டாம என்ன செய்யறதாம்?... 'பிலுபிலு'ன்னு முத்தம் பூரா அதுகளோட எறகுத்துண்டுங்க தான். பெருக்கிப் போட்டு மாளலே."

"பக்ஷிகள்லாம் 'த்விஜ' பிறவிகளல்லவோ?.. விரட்டாதே.. சொல்றதைக் கேளு."

கிருஷ்ணமூர்த்தி புறாக்களுக்குப் பரிந்து பேசுவது மாலுவுக்கு ஆச்சரியமாயிருந்தது.. டெல்லி போய் புதுசு புதுசா நிறையத் தெரிஞ்சிண்டு பேசறது போலவும் இருந்தது. வீடு பூராவும் துளியூண்டு துளியூண்டாய் இறகுத் துண்டுகளும், ஒருமாதிரி மூக்கைச் சுளிக்கிற நாற்றமும் அவளுக்கு வயிற்றைக் குமட்டியது. 'அங்கிருந்து பேசலாம்; இங்கிருந்தால் தெரியும்' என்கிற எரிச்சலில், "என்ன சொல்றே?" என்றாள்.

"இங்கே காணுமேன்னு பாத்தேன்... அங்கே வந்திடுத்தா அதுக்குள்ளாறே?" என்று கிருஷ்ணமூர்த்தி ஆச்சரியப்பட்டார்.

"உளறாதே."

"உளறலே. உண்மையைத் தான் சொன்னேன்."

"என்ன உண்மை?"

"விளக்கமா எதுவும் எனக்குச் சொல்லத் தெரியலே.. இதெல்லாம் எப்படிச் சாத்தியம்னும் தெரியலே. ஆனா, நடக்கறத்துக்கெல்லாம் ஒண்ணுக்கொண்ணு ஏதோ கண்ணுக்குத்தெரியாத இழைலே கட்டி வைச்சத் தொடர்பு இருக்கற மாதிரித் தெரியறது."

"புதிர் போடாதே. தெளிவாச் சொல்லு."

"ஃபோன்லே என்ன சொல்றது?.. அதுவும் உணர்றதைச் சொல்றதும் ஓரளவுக்குத் தான் முடியும், மாலு."

"இது சொன்னையே, கரெக்ட்.. உணர்றதைச் சொல்றதும் ஓரளவுக்குத் தான் முடியும்.. சத்தியமான வார்த்தை. இப்போதான் நீ பழைய கிருஷ்ணமூர்த்தி மாதிரி இருக்கே."

கிருஷ்ணமூர்த்தி சிரித்தார். " நா எப்பவும் ஒரே மாதிரியாத்தான் இருக்கேன்."

"அப்படியா?.. வந்து பாத்தா தெரியறது. இன்னொரு விஷயமும் உண்டு, கிருஷ்ணா! வரும் வாரம் நானும் அவரும் அங்கே வர்றோம். திடீர்னு முடிவான ப்ரோக்ராம்... அங்கே வரச்சே, உன்னைப் பாக்கறேன். சரியா?"

"வெல்கம் மாலு.. நானே கூப்பிடணும்னு இருந்தேன். நீயே சொல்லிட்டே. ஒரு வாரம் இருக்கற மாதிரி வா.. புது விஷயம். புது உலகம்."

"அட்ரஸ் சொல்லு. குறிச்சிக்கறேன்."

"ஒரு நிமிஷம்---" கிருஷ்ணமூர்த்தி தூரத்தில் அமர்ந்திருந்த ராம்பிரபுவைக் கூப்பிட்டு விஸிட்டிங் கார்டு வாங்கி, மஹாதேவ் நிவாஸ் அட்ரஸ் சொன்னார்.

"பாக்கலாம், கிருஷ்ணா! நாங்க ரெண்டு பேரும் வர்றோம். சரியா?"

"ரொம்ப சந்தோஷம். ராதை கிட்டே போன் கொடு."

"ராதை--"

"சொல்லுங்கன்னா."

"அடுத்த வாரம் மாலுவும் அவள் அகத்துக்காரரும் இங்கே வர்றாளாம்."

"கேட்டுண்டிருந்தேன்."

"நீ சுபாவைப் பாத்துக்கோ. அர்ஜூன் கிட்டேயும் சொல்லு. வேற விஷயம் ஏதாவது இருந்தா, போன்லே பேசு. சரியா?"

"சரின்னா."

"ஃபோனை வச்சுடட்டுமா?"

"சரின்னா."

(தேடல் தொடரும்)

Monday, December 22, 2008

ஆத்மாவைத் தேடி....28

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


28. காதலியை கானகத்தே கைவிட்டு...


கிருஷ்ணமூர்த்தி, நிமிர்த்தி மல்லாக்க வைத்திருந்த தொலைபேசி ரிஸீவரைத் தொட்டுத் தூக்கும் பொழுது லேசாக வழுக்கியது. நழுவி கீழே விழுந்து விடாமல் அதை இறுகப் பற்றி, "ஹலோ--" என்றார்.


மறுபக்கம், "ஏன்னா! நான் தான்!" என்றாள், ராதை.

"அப்படியா?.. எல்லாரும் அங்கே செளக்கியம் தானே?" என்று படபடத்தார் கிருஷ்ணமூர்த்தி.

"எல்லாரும் செளக்கியம் தான். நீங்க நன்னா இருக்கேளா? அந்தப் பக்கமெல்லாம் ரொம்ப குளிர்னு டி.வி.லே சொன்னாளே?.. உடம்பைப் பாத்துக்கோங்கோ."

"பேஷா. எனக்கொண்ணும் குறைச்சல் இல்லை. இங்கே கிடைச்சிருக்கற மனுஷாள்லாம் ரொம்பத் தங்கமானவா. எல்லாரும் வித்வான்கள். நெறைய படிச்சவா. பெரிய பெரிய விஷயமெலாம், எனக்கு இத்தனை நாளும் தெரியாததெல்லாம் அலசறா. கேட்கக் கேட்க ரொம்பவும் பிரமிப்பா இருக்கு."


"அப்படியான்னா?.. நீங்க கொடுத்து வைச்சவா. சத்விஷயம் பேசறவாளோட சிநேகம் கிடைச்சிருக்கு. உடம்பைப் பார்த்துங்கோங்கோ. எல்லாத்தையும் பாத்து,கேட்டு, ரசிச்சிட்டு வாங்கோ.."

இப்பொழுது தான் கிருஷ்ணமூர்த்திக்கு நிதானம் திரும்பித்து.."ஆமாம், எதுக்குக் கூப்பிட்டே?"

"பாத்தேளா?.. மெனக்கெட்டு போன் பண்ணிட்டு எதுக்குன்னு சொல்ல மறந்திட்டேன், பாருங்கோ!.. உங்க குரல் கேட்டதும் மனசு தொஞ்சு போயிடுத்து.. எப்படியிருக்கேளோ, என்னவோ ஏதோன்னு படபடப்பிலே எல்லாத்தையும் மறந்திட்டேன்."

"எதுக்குக் கூப்பிட்டேனு ஞாபகம் வந்திடுத்தில்லையோ?.. சொல்லு, ராதை!" என்று பரிவுடன் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி.

"எனக்கு இப்போ இருக்கற சந்தோஷத்லே கையும் ஓடலே; காலும் ஓடலேன்னா. நீங்க ரெண்டாந்தடவை தாத்தாவாகப் போறேள்.. சுபா உண்டாயிருக்கான்னா."

"ஓ..தேங்க் காட். ரொம்ப ரொம்ப சந்தோஷம், ராதை!"

"நேத்திக்கு வயத்தைப் புறட்டறதுன்னு கொல்லைக்கும், ரேழிக்கும் அலைஞ்சிண்டிருந்தாளா, என்னவோ ஏதோன்னு டாக்டர்கிட்டே கூட்டிண்டு போனோம். லேடிடாக்டர் 'கன்பர்ம்' பண்ணிட்டா.. ரெண்டு மாசமும் ரெண்டு வாரமும் ஆறதாம்."

"சுபாவை ஜாக்கிரதையாப் பாத்துக்கோ, ராதை! பாவம், அவ குழந்தை. இது வேணும், அது வேணும்னு அவளுக்குக் கேக்கத் தெரியாது. நீதான் வாய்க்கு ருசியா பண்ணிக் கொடுக்கணும். அர்ஜூன் என்ன, ஆபீஸ் போயிருக்கானா?.. அவன் கிட்டே நான் சொன்னேன்னு சொல்லு. ' அனிமிக்' ஆயிடாமே, அவளுக்கு வேணுங்கற டானிக்கெல்லாம் வாங்கிக் கொடுக்கச் சொல்லு. அரை லிட்டர் பால் அதிகம் வாங்கிக்கோ.. குங்குமப்பூ போட்டு தினம் காய்ச்சிக்கொடு. படுக்கப் போகறச்சே சாப்பிடட்டும். என்ன, கேக்கறதா?"

"செய்யறேன்னா.. அர்ஜூன் அப்பறமா உங்ககிட்டே பேசுவான்.. நேத்திக்கு ராத்திரி யு.எஸ்.லேந்து கிரிஜா பேசினா. அவளுக்கும் சந்தோஷ சமாச்சாரம் சொல்லிட்டேன்.. அவாளுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம். குழந்தை ரிஷி அங்கே நன்னா விளையாடிண்டு இருக்கானாம். நாளைக்கு பக்கத்தாத்து கம்ப்யூட்டர்லே வரேன்னு சொல்லியிருக்கா.. நாளைக்கு பேசிட்டு, குழந்தையை காமராலே பாத்துட்டு வர்ரேன். நீங்க எந்தக் கவலையையும் மனசிலே வச்சிக்க வேணாம். எல்லாம் நான் பாத்துக்கறேன்... அப்புறம், உங்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ்..."

"அப்படியா.. நீ கூட சஸ்பென்ஸெல்லாம் போட்டுப் பேச ஆரம்பிச்சிட்டேயே.. என்ன சொல்லு.." என்று சிரித்தார் கிருஷ்ணமூர்த்தி.

"நம்ம மாலு அக்கா பெங்களூர்லேந்து வந்திருக்கான்னா.."

"அடேடே.. மாலுவா.. வெரிகுட்! ரொம்ப ரொம்ப சந்தோஷம்.. ராதை.. போனை அவகிட்டே குடு."

".............................."

"ஹலோ, மாலுவா?.. மாலுவா பேசறது?"

"கிருஷ்ணா.. நாந்தாண்டா.." என்று குரலில் உரிமை குழைந்தது.

பெரியவர் கிருஷ்ணமூர்த்திக்கு கண் கலங்கி விட்டது. "மாலு.. நன்னா இருக்கையா?.. மாப்பிள்ளை, குழந்தைங்க எல்லாம் நன்னா இருக்காளா?"

"எல்லாம் பேஷா இருக்கா.. நீ என்ன சொல்லிக்காம, கொள்ளாம இப்படி செஞ்சிட்டே?.. தேசாந்திரமா கிளம்பிட்டே?.. நாங்கள்லாம் குத்துக்கல்லாட்டமா இருக்கறச்சே,கட்டின வேஷ்டியோட கிளம்பறத்துக்கு உனக்கு மனசு எப்படிடா வந்தது?"

"இல்லை, மாலு! இதோ பார்.. நானும் ஒவ்வொரு கடமையா முடிச்சிட்டேன்.. அன்பைப் பரிமாறிக்கறத்துக்கு அவாவாளுக்கு ஒரு குடும்பம் அமைஞ்சாச்சு.. சுபாக்கும்இப்போ கடவுள் அருள்பாலிச்சிட்டார். மெதுமெதுவா ஒரு வட்டம் பூர்த்தியாறப் போறது.. அதையும் கண்ணாலே பார்த்துட்டேனா.."


"எப்படிடா உனக்கு இப்படி விட்டேத்தியா பேச மனசு வந்தது?.. நீ அப்படிப் பேசறவன் கூட இல்லையேடா.. அதானே எனக்கு அதிசயமா இருக்கு.. உனக்கு என்னகுறை வைச்சோம், சொல்லு. ராதை நம்பாத்து குழந்தைடா. அந்தக் குழந்தை கழுத்திலே குடும்ப பாரத்தைக் கட்டிட்டு, நீ பாட்டுக்க கிளம்புவேனா.... 'காதலியைக் கானகத்தே கைவிட்டு'... நீ என்ன நள மகராஜாவா?.. ஆயிரம் புராணக்கதை சொல்றேன்னு பெருமைப்பட்டேனே?.. அத்தனையும் வீணா?..." என்று ஆற்றாமையில் அழுது தீர்த்தாள் மாலு.


"மாலு.. அழாதே.. கண்ணைத் தொடைச்சுக்கோ.. பாசம் உன் கண்ணைக் கட்டறது.. நான் சொல்றதைப் புரிஞ்சிக்கோ."


"சொல்லு.. புரிஞ்சிக்கறேன்.. நான் பொண்ணாப் பொறந்த பாவத்தைப் புரிஞ்சிக்கறேன். சொல்லு."


"இதோ பார்--- நான் எங்கேயும் கண்காணாத எடத்துக்குப் போயிடலே. பரமேஸ்வரர்--பார்வதியைப் பார்கலாம்னு இமயமலைக்குக் கிளம்பினேன்."

"சிரிக்கத்தான் வேணும். பரமேஸ்வரரைப் பாக்கறது அவ்வளவு ஈஸியா?.. நானும் இமயமலைக்குக் கிளம்பினேனா, அவரைப் பாத்துடலாமா?"

"நல்ல ஞானமான கேள்வி, மாலு, நீ கேட்டது.. யூ ஆர் கரெக்ட்!.. சரியாச் சொன்னே.."

பின்னே, திரும்பிட வேண்டியது தானே?.. அங்கே எங்கே உக்காந்திருக்கே?.." மாலுவின் குரலில் சீற்றம் இருந்தது.

(தேடல் தொடரும்)Saturday, December 20, 2008

ஆத்மாவைத் தேடி....27

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


27. புறாக்களின் நினைவு.

தான் தான் கீழ்க்கிளைப் பறவையோ என்று கிருஷ்ணமூர்த்திக்கு பொறி தட்டிய மாதிரி ஒரு நினைப்பு வந்து விட்டுப் போனதும், அந்த மசமசத்த இருட்டில் இன்னும் தீட்சண்யமாக மரக்கிளை பக்கம் தன் பார்வையைச் செலுத்திப் பார்த்தார்.


லேசாகக் காற்று வீசி தடவி விட்டுப்போன சுகத்தில் இலைகள் ஒயிலாக சிலிர்த்து நிமிர்ந்து மீண்டும் ஒரு தடவலுக்குக் காத்துப் படுத்தன. எந்தப் பறவையையும் இப்போது காணோம்! மரமே வெறிச்சோடிக் கிடந்தது.

'கொஞ்ச நேரதிற்கு முன்னாடி தானே பார்த்தோம்? அதற்குள் எங்கே போய்விட்டன?.. ம்... ஒருகால், பிரமையோ?.. கனவில் கண்டதை நினைவில் பொருத்திப் பார்க்க மனம் ஆசைப்பட்டதில் நேர்ந்த சலனமோ?..
'இல்லை, கீழ்க்கிளை பறவை மாதிரி தன்னைப் பாவித்துக் கொண்டு, மேல்கிளைப் பறவையை நான் பார்க்க நினைத்தது தவறோ?.. அதனால் தான் தரிசனம் கொடுக்காமல் மாயமாய் மறைந்து போயிற்றோ?.. 'தவறாய் இருந்தால், மன்னிக்க வேண்டும், இறைவா' என்று கிருஷ்ணமூர்த்தி மானசீகமாய் மனத்தில் துதித்துக் கொண்டார். அப்படியே யோசனையில் எவ்வளவு நேரம் நின்றார் என்று அவருக்கேத் தெரியாது..


'பொலபொல'வென்று விடியத் தொடங்கி விட்டது. ' இப்பொழுது ஆரம்பித்தால் தான் செளகரியமாக இருக்கும். சூரியநமஸ்காரத்திற்கு தயார் ஆவதற்கு சரியாய இருக்கும். இங்கு வந்ததிலிருந்து மூச்சுப் பயிற்சி வேறு காலை லிஸ்டில் சேர்ந்திருக்கிறது' என்று நினைத்துக் கொண்டே கொடியில் தொங்கிய டவலை எடுத்துக் கொண்டார் கிருஷ்ணமூர்த்தி.

அன்றைக்கு ஐந்தே முக்காலுக்கு சூரிய உதயம். ஐந்தரைக்கே எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு தயாராகி விட்டார் கிருஷ்ணமூர்த்தி.

சூரிய நமஸ்காரமும், அதைத் தொடர்ந்து மூச்சுப் பயிற்சியும் முடித்து எழுந்த பொழுது ஒருவித திருப்தி மனசில் வந்து குவிந்தது அவருக்கு நன்றாகவேத் தெரிந்தது. ஆனால், வழக்கம் போல இல்லாமல் ஏதோ ஒன்றைச் சுற்றிச் சுற்றியே நினைவு சுழல்வதாக ஒரு பிரமை இருந்ததைத் தவிர்க்க முடிய வில்லை அவரால்.


'காரணம் கனவா?.. அது கனவுதான்னு அடிச்சுச் சொல்லக்கூட முடியலயே.. அண்ணா-மன்னி நினைவில் வந்தது, இராணி வாய்க்கால் தெரு, மாலுவுடன் பேசினது இதெல்லாம் வேணா கனவா இருக்கலாம்.. ஆனா, கண்ணுக்குத் தெரிய அந்த ரெண்டு புறாக்களைப் பார்த்தது?.. 'படபட'வென்று சிறகடித்து கீழ்க்கிளை புறா கண்ணுக்கு முன்னாடி மேல்கிளை தாண்டியதே.. அதுகூடக் கனவா?.. இல்லை. நிச்சயம் இல்லை. புறாக்கள் கனவில் வந்தது போலவே, நினைவிலும் காட்சியாய் வந்ததும் உண்மைதான்'


'இந்தப் புறாக்கள் வந்தது ஏதாவது சகுனக்குறியாக இருக்குமோ' என்ற யோசனை அவருக்கு திடீரென்று வந்தது. ஒவ்வொருவரும் அவரவருக்கு தெரிந்த வழியிலேயே யோசிப்பார்கள். கிருஷ்ணமூர்த்திக்கென்றால், 'புராணக்கதைகளில் புறா வந்த நிகழ்ச்சிகளையெல்லாம் யோசித்துப் பார்க்கலாமா?' என்று தோன்றியது. அப்படிப்பட்ட நினைப்பு வந்தவுடனேயே, சடாரென்று சிபி சக்கரவர்த்தி கதை அவர் நினைவுக்கு வந்தது. 'கனவில் மாலு கேட்டாளே, "கிருஷ்ணா, சிபி சக்கரவர்த்தி கதை சொல்லட்டுமா"ன்னு. கழுகிடமிருந்து புறாவை மீட்க, அந்த புறாவின் எடைக்கு எடை தன் தொடைச்சதையையே அரிந்து தரத் தயாராகியும், புறாவின் எடை கூட இருக்கக் கண்டு தானே தராசுத் தட்டில் ஏறி நின்ற தியாகியின் கதையல்லவோ, அது?.. அந்தக் கதையிலும் புறா வருகிறதே?.. அந்த நினைவுதான் பூங்குழலி சொன்ன மரக்கிளை புறாவுக்கு மாறிப்போனதோ?.... ஓஹ்! நிஜத்திலும், கனவிலும் எத்தனைப் புறாக்கள்?.. ' புறாக்களுக்கும் தனக்கும் ஏதோ ஒரு தொடர்பிருப்பதாகவே அவருக்குப் பட்டது.

கிரெளஞ்சப் பட்சிகளைப் பார்த்த பொழுது நேற்று கூட மனோகர்ஜி கைகொட்டி எவ்வளவு சந்தோஷப்பட்டார்?... "கிருஷ்ணாஜி! இதுக்கு முன்னடி கூட ரெண்டு மூணு தடவை இந்த பக்ஷிகளோட தரிசனம் கிடைச்சிருக்கு.. ஏதாவது நல்லபடியா, நல்ல காரியமா நான் செஞ்சு முடிச்சாத்தான் அவங்க தரிசனம் கிடைக்கும்.. உண்மைலே என்னோட பாட்டனார் மனோகர்ஜி தான் கடவுள் தூதரா பாட்டியாரோட பட்சிகள் உருவிலே வந்து என்னை இன்னும் நிறைய நல்லது செய்ய ஆசிர்வதிப்பதாகவே நான் நினைக்கிறேன்.. நீங்க என்ன நினைக்கிறீங்க,ஜீ!" என்று ஒருதடவை அவரிடம் கேட்டது, இப்பொழுது கிருஷ்ணமூர்த்தியின் நினைவுக்கு வந்தது.


"அந்த மாதிரி இந்தப் புறாக்கள் கனவிலும் நனவிலும் வந்து-- ஓ, புறாக்களின் கால்களில் சீட்டு கட்டி சேதி அனுப்புவாங்களாமே, அந்தக்காலத்தில்?.. இவங்க, இந்தப் புறாக்கள் எனக்குச் சொல்லும் சேதி என்ன கடவுளே!" என்று சுவரில் மாட்டியிருந்த பெரிய மஹாதேவரின் படம் நெருங்கி உணர்ச்சி வசப்பட்டார் கிருஷ்ணமூர்த்தி. கணகள் மூடி தியானித்தார்.

"கிருஷ்ணமூர்த்தி!--தனியாச் சொல்வானேன்?.. அதான் ஒவ்வொண்ணா நடக்க நடக்கத் தெரிஞ்சிண்டு வர்றேயே?" என்று நினைப்பிலேயே குரல் கிடைத்த மாதிரி இருந்தது அவருக்கு.

'அதுவும் சரி. உயிர் கொடுத்து, அது தங்க உடலும் கொடுத்து, நல்லது செய்ய சந்தர்ப்பங்களும் கொடுத்து, புண்ணியம் சேர்த்திண்டு எங்கிட்டே வா!' என்கிறானே, அதுபோதாதா?' என்று அவர் நியாயமாக நினைத்துக் கொண்டிருக்கையில், "சார்! வரலாமா?" என்று வெளியே குரல் கேட்டது.

திரும்பிப் பார்த்த கிருஷ்ணமூர்த்தியின் முகம் மலர்ந்தது.

"ஓ.. வாப்பா ராம்பிரபு!"

"மார்னிங்..சார்.. உங்களுக்கு போன் கால் வந்திருக்கு.. அதைத்தான் சொல்ல வந்தேன்" என்றான் ராம்பிரபு.

"போனா?.. எனக்கா?.. யாருப்பா?"

"அரியலூர்லேந்து கால் சார். லைன்லே உங்க வீட்டு அம்மா இருக்காங்க.. ' அழைத்து வரேன்'ன்னு சொல்லிட்டு, ரிஸிவரை எடுத்து வைச்சிருக்கேன்.. பதட்டப்படாம வாங்க, சார்!" என்றான் அவன்.


என்னவோ ஏதொவென்று தொலைபேசி இருந்த ஹால் பக்கம் ராம்பிரபுவுடன் விரைந்தார் அவர்.

(தேடல் தொடரும்)

Tuesday, December 16, 2008

ஆத்மாவைத் தேடி....26

ஆன்மீகத்தின் அடுத்த கட்டம் நோக்கி....

26. மரக்கிளைப் புறாக்கள்

கிருஷ்ணமூர்த்தி புரண்டு படுத்தார்.

ஒரே பக்கத்தில் படுத்திருந்ததினால் சீரான சுவாசம் தடுமாறியதோ என்னவோ தெரியவில்லை, இடது பக்கம் திரும்பி இடது பக்க புஜத்தை தலைக்கு அண்டை கொடுத்தமாதிரி படுத்தது செளகரியமாக இருந்தது.
இடையில் எழுந்து உட்கார்ந்து கொண்டு வெற்றிலை போட்டுக் கொள்ளலாமா என்று லேசாக மனசில் அரும்பிய நினைப்பு, அயர்ந்த தூக்க சுவாரஸ்யத்தில் அடிபட்டுப் போயிற்று. வலது கை, தலையணைக்கு பக்கத்தில் ஞாபகமாக படுக்கும் பொழுதே வைத்து விட்டுப் படுத்த வெற்றிலைப் பெட்டியைத் தொடமட்டும் செய்து விலகிக் கொண்டது. ஆழ்ந்ததூக்கம் அதல பாதாளத்திற்கு இழுத்துக் கொண்டு போகிற மாதிரியான உணர்வில் உடல் தளர்ந்து போயிற்று.


தஞ்சாவூர் ராணி வாய்க்கால் தெரு. மகாராஜாக்கள் காலத்தில் ராஜாங்க உபயோகத்தில் இந்தப் பகுதியே இருந்தன என்று சொல்லிக் கொண்டார்கள். அந்த தெருவையே அடைத்துக் கொண்டிருந்த அரண்மனை மாதிரியான வீட்டை தனித் தனியாக நான்கு போர்ஷன்களாகப் பிரித்துத் தடுத்திருந்திருந்தார்கள். வீட்டிற்குள் நுழையவே தூக்கிக் கட்டியிருந்த பத்து, பன்னிரண்டு படிக்கட்டுகளில் ஏறித்தான் வாசல் பக்கக் கதவை அடையவேண்டும்.


எப்பொழுது வந்தோம் என்று தெரியவில்லை; ஏன் இங்கு வந்தோம் என்றும் நினைவில்லை. ஆனால் ரயிலில் வந்தது, புகைக்கக்கிய ரயில் வண்டியின் இன்ஜின் தோற்றம், வெள்ளை உடுப்பு நபர் பச்சைக் கொடியை சுருட்டி கக்கத்தில் இடுக்கிக் கொண்டு, சிவப்புக் கொடியை பிளாட்பாரத்தில் நின்று கொண்டு வீசிவீசி ஆட்டியதும் ரயில் நின்றது, மூட்டை முடிச்சுகளை போர்ட்டர் தூக்கிக் கொண்டு அண்ணாவோடு ஸ்டேஷன் வாசலுக்கு வந்து மாட்டு வண்டியில் ஏறிக்கொண்டது நினைவில் ஓடுகிறது. மன்னி பக்கத்தில் ஒண்டி உட்கார்ந்த பொழுது, வண்டிக்காரன் உட்காரும் இடத்திற்கு மேலேயும், வண்டி பின்பக்கமும் வண்டிக்கூடு வளைஞ்சு இருந்தது கூட தீர்க்கமா நினைவுலே தட்டுப்படறது.


பெரிய மாக்கல்சட்டி. கழுத்து வரைக்கும் வெள்ளைவெளேரென்று தயிர் சாதம். குவிச்சு வைச்சிண்டிருக்கற கையிலே மன்னிதான் சாதத்தை உருட்டிப் போடறா. இடைஇடையே வறுத்த மோர்மிளகாயை வேறு நசுக்கி நசுக்கி வைக்கறா.

"மாலு! வத்தக் குழம்பு கூட இருக்கு. போடட்டுமா?"

மாமா பெண் மாலினி "போடுக்கா.." என்கிறாள்.

கரண்டி எடுத்து குழம்பை அவளுக்கு ஊத்திட்டு, "கிருஷ்ணா! உனக்குடா?"

"சரி. மன்னி"ன்னு கையிலே போட்ட சாதத்தைக் குவிச்சிக்கிறேன். கல்சட்டி தயிர்சாதம் தேவாமிர்தமா இருக்கு. வத்தக் குழம்பு புளிப்பு சேர்ந்த தித்திக்கற காம்பினேஷன்.

"இன்னிக்கு வாழைப்பூ கறி இல்லையா?.. அதான் வாழைப்பூ மடல் கூட இருக்கு. அதிலே போட்டு சாப்பிடறேளா?"

சாதம் வாயில். பதில் சொல்ல முடியாமல் ரெண்டு பேரும் தலையை ஆட்றோம். இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்னு மன்னி சட்டி சாதத்தையும் எங்களுக்குப்போட்டு காலிபண்டிட்டா.

சாப்பாட்டுக் கடை முடிந்ததும், ரேழி பெருக்கி பெரிய பெரிய பாய் விரிக்கிறாள் மாலினி. தட்டி தலையணை கூட போட்டாச்சு.

"கிருஷ்ணா.. உனக்கு என்ன கதை வேணும்?.. ஈசாப்பா.. தெனாலிராமனா?"

"தெனாலிராமன் தான் நேத்திக்கு பாதிலேயே நிறுத்திட்டியே.. பாக்கி சொல்லலையே, மாலு?"- என்று நினைவு படுத்திக் கொண்டு தலைசாய்த்துத் திரும்பறேன்.

அடுக்களை வேலையெல்லாம் முடிச்சிண்டு மன்னியும் வந்திட்டா. "ஏண்டா..கிருஷ்ணா! மாலு விட்டதிலேந்து, நா முடிக்கலையா?.. மறந்திட்டையா?"

"இன்னிக்கு நீதான் எங்களுக்குக் கதை சொல்லப் போறியாம்.. என்ன, சரியா?"

"வந்து...வந்து.."ன்னு இழுத்து "எனக்குச் சொல்லத் தெரியாதே" ங்கறேன்.

"சரிடா.. நான் சொல்றேன்" என்று மாலு பெரிய மனுஷி மாதிரி சொல்றா. "சிபி சக்கரவர்த்தி கதை சொல்லட்டுமா?"

"ஊம்.."

பாய் விரிச்ச இடத்துக்கு நேராவே, முறுக்குக்கம்பி போட்ட பெரிய பெரிய ஜன்னல்... ஜன்னல் வழியா நிலா தெரியறது. முழுசா பெரிசா பளிச்சின்னு தெரிஞ்சிட்டு பக்கத்து சந்து மரத்துக்குப் பின்னாடி மறைஞ்சிடுத்து.
மரத்திலே புறா மாதிரி ஒரு பறவை உட்கார்ந்திருக்கு. ஒண்ணு இல்லே, ரெண்டு. கீழே ஒண்ணு; மேலே ஒண்ணு.

திடீர்னு பேராசிரியர் பூங்குழலி குரல் கணீர்னு கேக்கறது. "மேலே இருக்கற பறவை தான் ஆத்மா.. கீழே இருக்கறது..."

"ஜீவன்.."ன்னு சொல்லப் போறத்தே சட்டுனு விழிப்பு வந்திடுத்து.

கிருஷ்ணமூர்த்தி இப்பொழுது நன்கு விழித்துக் கொண்டு விட்டார்... திறந்து வைச்சிருந்த ஜன்னல் வழியா படுத்துக்கொண்டே பார்த்தார். நிலா தெரியலே. கண்டது, கனவா?..

'அப்பாடி..ராணி வாய்க்கால் தெருன்னா, அப்போ ஆறு-ஏழு வயசு இருக்குமா?....யோசிச்சார். அப்போ நடந்தது, படம் பிடிச்ச மாதிரி இப்போ நினைவுத் திரைலே ஓடறது.

அண்ணாவும் இல்லே, மன்னியும் இல்லே, இப்போ.. மாலு பெங்களூர்லே இருக்கா, பேரன் பேத்தியோட. புருஷன் எச்.ஏ.எல்.லேந்து ரிடையர்டு.

எப்பவோ பெங்களூர் போயிருக்கறச்சே, "மாலு..எவ்வளவு வருஷமாச்சு.. எனக்கு ஈசாப் கதை சொல்றையா?"ன்னு கிருஷ்ணமூர்த்தி கேட்டார்.


"ஊருக்கெல்லாம் கதை சொல்றேயேடா.. அற்புதமா சொல்றேன்னு மத்தவா சொல்லி அதைக் கேக்கறச்சே எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு, தெரியுமா?" அதை பிரமிப்போடச் சொல்றத்தே அவள் முகம் பூரா பூரிப்பு.

"என்ன இருந்தாலும் ஒன்னை மாதிரி சொல்ல முடியுமா?.. 'அப்புறம் என்ன நடந்தது தெரியுமா'__ன்னு அடிக்கடி நீட்டி முழக்கி, எவ்வளவு சுவாரஸ்யமா சொல்லுவே?"


"இன்னுமாடா அதெல்லாம் ஞாபகம் வைச்சிண்டிருக்கே?.."


"அதெல்லாம் மறக்கமுடியுமா, மாலு?.. அப்படியே காட்சி காட்சியா நெஞ்சிலே கல்வெட்டா பதிஞ்சு போயிடுத்து.... அந்த வீடு, அந்த பெரீய்ய ஜன்னல்.. ஜன்னலுக்குவெளியே பெரிய மரம்.. மரத்லே.."

சட்டென்று கிருஷ்ணமூர்த்திக்கு கனவுலே மரத்லே பார்த்த பறவைகள் ஞாபகம் வந்தது. இங்கேயும், மஹாதேவ் நிவாஸ்லே ஜன்னலுக்கு வெளிலே கிளை பரப்பிக்கொண்டு ஒரு பெரிய மரம்.

கனவுலே பார்த்த மாதிரியே நெஜத்திலேயும்---

விடிவிளக்கோட குறைஞ்ச வெளிச்சம் மசமசவென்றிருந்தது.

மெத்தை படுக்கையிலிருந்து கீழிறங்கிய கிருஷ்ணமூர்த்தி மெதுவாக நடந்து ஜன்னலுக்கு வெளியே பார்த்தார்.


என்ன ஆச்சரியம், அவர் கனவில் பார்த்த மாதிரியே இரண்டு புறாக்கள்.. ஒன்று மேல் கிளையில், மற்றொன்று கீழ்க் கிளையில்.
உடம்பு சிலிர்த்தது கிருஷ்ணமூர்த்திக்கு.

இவர் பார்த்துக் கொண்டே இருக்கையில், கீழ்க்கிளை பறவை, சட்டுன்னு பறந்து ரெண்டு கிளை மேலே தாண்டி கொஞ்சம் மேலே போய் அமர்ந்தது.
ஓ!.. பேராசிரியர் பூங்குழலி சொன்ன மாதிரி மேல் கிளை பறவையை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குகிறதோ?..


'தான் தான் கீழ்க்கிளைப் பறவையோ'ன்னு கிருஷ்ணமூர்த்திக்கு ஒரு நிமிஷம் நெஞ்சில் நினைவொன்று வெட்டி விட்டுப் போயிற்று.


(தேடல் தொடரும்)

Monday, December 15, 2008

ஆத்மாவைத் தேடி....25

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


25. மீண்டும் கிரெளஞ்ச பட்சிகள்

கோதரி பூங்குழலி தொடர்ந்து பேசலுற்றார்:

"இவ்வளவும் சரி. அடிப்படையான கேள்வி ஒன்று இருக்கிறது. உடம்பு, மனம், புத்தி, புலன்கள் என்று வரிசைகட்டி நிற்கும் இவற்றைச் செயல்படுத்துவது பிராணன் என்றால், அந்தப் பிராணனைச் செயல்படுத்துவது யார்?.. யாரால் இவையெல்லாம் இயங்குகின்றன?..


"'கேனோபநிஷ'த்தில் இந்த கேள்வி எழுப்பப்பட்டு, பதிலையும் புரிய வைக்கிறது.


"'கேன' என்றால், 'எதனால்' என்று அர்த்தம். இந்த உபநிஷதம் சாமவேதத்தின் ஒன்பதாவது பகுதியைச் சேர்ந்தது."ச்ரோத்ரஸ்ய ச்ரோத்ரம் மனஸோ மனோ யத்
வாசோ ஹ வாசம் ஸ் உப்ராணஸ்ய ப்ராண:
சக்ஷூஷச்சக்ஷூரதிமுச்ய தீரா:
ப்ரேத்யாஸ்மால்லோகாதம்ருதா பவந்தி"


"பிராணனைச் செயல்படுத்துவது முதற்கொண்டு எல்லாவற்றிற்கும் காரணமாக இருப்பது ஆத்மா'-- என்று இந்த மந்திரத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.


"அம்மாடி!.. ஒரு வழியாக நேரடியான பதில் இப்பொழுது கிடைத்து விட்டது. அதற்குப் பிறகு என்னவென்று பார்ப்போம்.


"வெளிப்படத் தெரியும் புற உலகில் காண்பனவற்றை அறிவதற்காக அமைந்தவை புற உறுப்புகள். அதனால் புற உறுப்புகளால் அகத்திலுள்ளதை அறிய முடியாதாம்... ரொம்ப சரி.. வேறு எப்படித்தான் பார்ப்பதாம்?.. அல்லது உணர்வதாம்?.


"'நாம் அறிந்தவைகளுக்கெல்லாம் மேலானது அது; அறியாதவைகளுக்கும் உயர்வானது; ஆதலால் அதுபற்றி அறியோம். எங்களுக்கு இதுபற்றிச் சொன்னவர்கள், இப்படித்தான் சொன்னார்கள்' என்கிறது அடுத்த மந்திரம்..ஆஹா, ஞானம் சித்தி பெற்ற தவ சிரேஷ்டரான முனிவர், தனக்கு ஞானம் சித்தி பெற்றிருந்தாலும் எவ்வளவு அடக்கமாகக் கூறுகிறார் என்று ஆச்சரியப்படுகிற நேரத்தில், ' இது-அது' என்று ஒவ்வொன்றையும் சுட்டி, 'ஓகோ, அதுதான் இதுவாக்கும்' என்று அறிந்து கொள்கிற மாதிரி, ஆத்மாவை அறிய முடியாது' என்று நமது ஜாக்கிரதை உணர்வைக் கூட்டுகிறார்.


"அடுத்தடுத்த மந்திரங்களைப் பார்த்தால், புரிபடுகிறது மட்டுமல்ல, எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார்கள் என்று வியந்தும் போகிறோம்.

"எதைச் சொல்லால் சொல்லித் தெரிய வைக்க முடியாதோ, எதனால் சொல்ல முடிகிறதோ, அதுவே ஆத்மா!


"எதை மனசால் அறிந்து கொள்ள முடியாதோ, எதனால் மனம் அறிந்து கொள்ள முடிகிறதோ, அதுவே ஆத்மா!


"எதை விழிகளால் தரிசிக்க முடியாதோ, எதனால் விழிகளால் பார்க்க முடிகிறதோ, அதுவே ஆத்மா!


"எதை காதுகளால் கேட்க முடியாதோ, எதனால் காதுகள் கேட்கும் சக்தியை பெற்றிருக்கிறதோ, அதுவே ஆத்மா!

"எதை மூச்சினால் சுவாசிக்க முடியாதோ, எதனால் மூச்சு சுவாசம் பெற்றிருக்கிறதோ, அதுவே ஆத்மா!


"ஆக, எதனால் சொல்லித் தெரியவைக்க முடிகிறதோ, எதனால் மனதுக்கு அறியும் சக்தி கிடைத்திருக்கிறதோ, எதனால் பார்க்க, கேட்க, சுவாசிக்க முடிகிறதோ அதுவே தான் ஆத்மா என்றால்---ஓ, ப்ரம்ம சொரூபமே ஆத்மாவா?


"நாதன் உள்ளிருக்கையில், தேடித் தேடித் தினம் தினம் எங்கெல்லாம் திரிந்து அலைகின்றோம்?..

"ஓம்..நமசிவாய--- போற்றி, போற்றி!
நின் மலர்த்தாள் போற்றி, போற்றி!"

விழிகளை மூடித் திறக்கையில் 'குபுக்'கென்று வெளிப்பட்டு, லேசாய், கோடாய்
கன்னங்களில் வழிந்த நீரைச் சடாரென்று துடைத்துக் கொண்டு, மேலும் பேச முடியாது, தழுதழுத்தக் குரலில் தலை தாழ்த்தி, "நன்றி..நமஸ்காரம்.." என்று இரண்டே வார்த்தைகளைச் சொல்லிவிட்டு மேடை விட்டு இறங்கினார் சகோதரி பூங்குழலி.


சபையே நிசப்தத்தில் உணர்ச்சி மிகுந்து ஆழ்ந்த மோனத் தவத்தில் இருந்தது. அந்த அமைதியை கலைத்தது போல கணகணவென்று மணி சப்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து, "டணார், டணார்' என்று ஆலயமணி ஓசை பூங்குழலியின் பேச்சை ஆமோதித்தது.


மகாதேவ் நிவாஸின் சிவன் கோயிலின் சாயரட்சை பூஜையின் தொடக்க அறிகுறியான அந்த மணியோசையைக் கேட்டதும் எல்லோர் முகமும் அர்த்தபுஷ்டியுடன் மலர்ந்தன.


கிருஷ்ணமூர்த்தி வேகமாக மேடையேறி, உணர்வு கொப்பளிக்கும் வார்த்தைகளால் பேராசிரியை பூங்குழலிக்கு நன்றி சொன்னார்.


அதைத் தொடர்ந்து மனோகர்ஜியும், கிருஷ்ணமூர்த்தியும் கோயிலை நோக்கி முன்செல்ல அனைவரும் அவர்களைத் தொடர்ந்தனர். அவர்களை சந்தோஷத்துடன் வரவேற்பதே போன்று மண்டபத்தின் நடு ஸ்தூபி அருகே அந்த இரண்டு கிரெளஞ்ச பட்சிகளும் சிறகடித்து அமர்ந்திருந்தன.
அவற்றைப் பார்த்ததும் மனோகர்ஜி எல்லை மீறிய சந்தோஷத்தில் கைதட்டி மகிழ்ந்தார்.


(தேடல் தொடரும்)

Friday, December 12, 2008

ஆத்மாவைத் தேடி...24

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


24. நானும் நானும்


கோதரி பூங்குழலி நளினமான தனது குரலில் தொடர்ந்து பேசலானார்.

"அனைத்து உயிர்களின் உள்ளேயும் இறைவன் இருக்கின்றான் என்கிற எண்ணமே மேலான செய்கைகளுக்கு நம்மை வழிநடத்திச் செல்லும்.
நம்மிடம் இருப்பது போலவே, அடுத்தவர் உள்ளத்திலேயும் அதே இறைவன் உறைந்திருக்கிறான் என்கிற நினைப்பு, 'தான்', 'தனது மேதமை' என்கிற மமதையை மண் போட்டு மூடச்செய்யும்.

"அவ்வளவு தூரம் போவானேன்?.. பரிசோதனையாக, தனது சின்னஞ்சிறிய குடும்பத்திற்குள்ளேயே, குடும்ப உறுப்பினர்களே ஒருவொருக்கொருவர் மதித்தல், விட்டுக் கொடுத்தல், உதவியாய் இருத்தல் போன்ற நாளும் விதவிதமான நல்ல செயல்களை புழக்கத்துக் கொண்டு வரத் தொடங்கினால், அந்த உயர்ந்த எண்ணங்கள் ஏற்படுத்தும் மாறுதலை நிதர்சனமாக உணரலாம். ஒவ்வொருவருக்கும் தொற்றிக்கொள்ளும் நல்ல சிந்தனை, அதன் நடைமுறைப்படுத்தல் ஏற்படுத்தும் மாற்றம் ஆச்சரியப்படத் தக்கது. அதை உண்ர்ந்தவரே அறிவர். சின்னஞ்சிறிய நமது குடும்பத்தில், அதை அனுபவப்படுத்தும் பொழுது, சின்னஞ்சிறிய நமது சொந்த 'லாப்'பில் பரிசோதனை செய்து பார்த்தத் திருப்தியும் நமக்கு ஏற்படும்.

"அடுத்த கேள்வி. நம் எல்லோரின் உள்ளத்திலும் இறைவன் இருக்கையில், ஏன் சில நேரங்களில் நமது குறைந்தபட்சக் கோரிக்கைகள் கூட நிறைவேறாமல் போவதன் காரணமென்ன?..

"முண்டக உபநிஷதத்தில் அழகான காட்சி ஒன்று வருகிறது. சுவாமி விவேகானந்தர் சொல்லிச் சொல்லிப் பரவசப்பட்ட காட்சி அது.

"பெரிய மரம் ஒன்று. அதில் இரண்டு பறவைகள் உட்கார்ந்திருக்கின்றன.
அச்சு அசலாக இரண்டு பறவைகளும் ஒரே மாதிரி இருக்கின்றன. ஒன்று கீழ்க்கிளையில் என்றால், மற்றொன்று சற்று மேலே இருக்கும் மரக்கிளையில் அமர்ந்திருக்கிறது.

"இந்த நேரத்தில், கீழ்க்கிளையில் அமர்ந்திருக்கும் அந்த அழகுப்பறவை தன் அலகில் பழம் ஒன்றைக் கொத்திக்கொண்டு சுவைக்க முற்படுகிறது. இதோ, அதைக்கொத்திசுவைக்கவும் தொடங்கி விட்டது.

"மேல் கிளையில் வீற்றிருக்கும் பறவை கண்கொட்டாமல் பழத்தைத் தின்று சுவைக்கும் கீழ்க்கிளைப் பறவையை தேமேனென்று பார்த்துக் கொண்டிருக்கிறது.

"--கண்ணுக்குத் தெரிவது இந்தக் காட்சி. இந்தக் காட்சியின் விளக்கமாய் சொல்லப்படும் தத்துவ வெளிப்பாடு அழகு மிக்கது.

"மரம் மனித சரீரத்திற்கு உவமை. கீழ்க்கிளையில் பழத்தை ருசிக்கும் பறவை ஜீவன். பழம் தின்னும் பறவையைப் பார்த்துக் கொண்டிருக்கும் மேல்கிளைப் பறவை ஆத்மா. அனுபவிக்கும் இன்ப-துன்பங்களே பழம்.

"இப்பொழுது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இன்ப துன்பத்தை அனுபவிப்பது ஜீவனே தவிர, ஆத்மா இல்லை. இதனால் தான் ஒரு இன்பம் என்றால் பாதாதிகேசம் மகிழ்ச்சி அலை பரவுகிறது. ஒரு துன்பம் எனில், உள்ளத்திலிருந்து ஆரம்பித்து உடல் வரை சோர்ந்து போகிறது.

"இன்பமோ துன்பமோ எதுவரினும் அதற்கேற்ப ஒரு அனுபவம் உண்டு. அந்த அனுபவத்தின் அனுபவத்திற்கேற்ப மனமும் புத்தியும் அவ்வவ்போது மாறுதல்களுக்கு உள்ளாகின்றன. புத்தியின் வழிகாட்டுதலாகவோ, அல்லாது மனத்தின் வழிகாட்டலாகவோ அன்றி இரண்டும் சேர்ந்து முடிவெடுக்கும் வழிகாட்டுதலாகவோ, செயல்பாடுகள் தீர்மானிக்கப்படுகின்றன. இந்தச் செயல்பாடுகளின் திரட்சி தான் கனிந்து ஒரு முழுமைபெற்ற சிந்தனையாக உருவாகிறது.

"இந்த முழுமைதான் ஒரு மனிதனை இறைவனிடம் நெருங்கச் செய்கிறது. இதற்கு ஒரு வழிகாட்டு என்று இறைஞ்சுகிறது.

"நெருங்கினால், மேல் கிளையில் இருக்கும் பறவையும் தானும் வேறல்ல, அதன் பிரதிபிம்பமே தானென்று கீழ்க்கிளைப் பறவை உணரும்; உணர்ந்து ஒளிமயமான மேற்பறவையுடன் கலந்து விடும். கலப்பது என்பது ஒன்றில் ஒன்று மேவி ஒன்றாவது. நிழல் நிஜத்தில் ஐக்கியமாவது; ஒரே ஜோதியாவது.

"ஆரோக்கியமான இந்தச் சிந்தனையிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். இன்பமோ, துன்பமோ இது சாஸ்வதமானதல்ல என்று தெரிகிறது. அதாவது நீடித்த துன்பமுமில்லை; நீடித்த இன்பமுமில்லை. கண்கட்டு வித்தையான இந்த உலக இன்பத்தை அனுபவிக்கும் அந்த நீட்சியின் கடைக்கோடியிலேயே துன்பம் காத்திருப்பது போலவே, துன்பத்திற்கு அடுத்து இன்பமும்.

"அதனால் ஒன்று செய்யலாம். இன்பமோ, துன்பமோ எதுவரினும் அதை அனுபவிக்கும் நம் மனதை ஒரு தயார்நிலையில் வைத்துக் கொள்ளலாம். தேனை மாந்துகிறேன் பேர்வழி என்று தேனீ, தேனில் மூழ்கி இறக்கைகள் நனைந்து பறக்கத் தத்தளிக்கும் அந்த அவலநிலை மாதிரி இல்லாமல், இன்பமோ, இல்லை துன்பமோ அதை எதிர்கொள்ளும் பொழுது அதில் மூழ்கிவிடாமல் தடுத்தாற்கொண்டால் போதும். இப்படிச் செய்வது மனவளமைக்கு ஆரோக்கியமளித்து, உடல் வலிமையை பாதுகாத்துப் பேணும்; இன்ப-துன்ப நிலையாமையைப் புரிந்து கொண்டு அதைச் சட்டைசெய்யாமல் சமமாகப் பாவிக்கும் மனப்பான்மையை உருவாக்கும். அடுத்துச் செய்ய வேண்டியதை ஆலோசிக்கும் திண்மையை மனசுக்குக் கொடுக்கும்.


"இதைத்தான் ஆன்மீகத்தில், இன்பமோ-துன்பமோ எதுவரினும் அதை இறைவனின் பிரசாதமாக ஏற்றுக்கொள்ளுதல் என்கிறார்கள். தாமரை இலைத் தண்ணீர் மாதிரிவரும் வாழ்க்கையை எதிர்கொள்ளுதல் என்கிறார்கள். கொண்டாடிக் கூத்தாடுதலும் இல்லை; கூனிக் குறுகி நைந்து போதலும் இல்லை என்கிற நிலை. எதற்கேற்பவும் ஆன மனவலிமையைக் கொடுப்பவனும் அவனே.


"ஒன்று நிச்சயம். நம்மில் இருக்கும் இறைவனின் கட்டுப்பாட்டிலேயே அனைத்தும் நடக்கின்றன. அவனில் அடக்கம் பெற்ற சிந்தனை, வாழ்க்கையை வாழ்வதற்கு மட்டுமல்ல, ஏனோதானோ என்றில்லாமல் வாழ்வாங்கு வாழவும் வழிவகுக்கிறது.


"ஓம் ஆப்யாயந்து மமாங்கானி வாக்ப்ராணச் சக்ஷூ: ச்ரோத்ரம் அதோ பலமிந்த்ரியாணி ச ஸர்வாணி: ஸர்வம் ப்ரஹ்மெளபநிஷதம் மாஹம் பிரஹ்ம் நிராகுயாம் மா மா ப்ரஹ்ம நிராகரோத் அனிராகரணமஸ்து அனிராகரணம் கேsஸ்து: ததாத்மனி நிரதே ய உபநிஷத்ஸூ தர்மாஸ்தே மயி ஸந்து தே மயி ஸந்து. ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி !!

-- என்பது கேன உபநிஷதத்தின் சாந்தி மந்திரங்களில் ஒன்று.

"என்னுடைய் அங்கங்களும், வாக்கும், பிராணனும் பலம்பெற்றுத் திகழட்டும்!கண், காது மற்றும் எல்லா இந்திரியங்களும் நன்கு இயங்கும்படி ஆற்றல் பெற்றிருக்கட்டும்!அனைத்தும் உபநிஷதங்கள் கூறுகின்ற பிரம்மமே!பிரம்மம் என்னை விட்டு விலகலாகாது!நானும் பிரம்மத்தை விட்டு விலகலாகாது!இந்த விடாத உறவுநிலை என்றும் நிலைபெறட்டும்!--என்று மேன்மேலும் பிரார்த்திக்கிறேன்!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி !!"

பேராசிரியர் சகோதரி பூங்குழலி காகிதக் கத்தையின் அடுத்த பக்கத்தைப் புரட்டும் பொழுது சபையே இறைவனின் அருகாமையை உணர்ந்த உணர்வில் கட்டுண்டு கிடந்தது.


(தேடல் தொடரும்)
Monday, December 8, 2008

ஆத்மாவைத் தேடி....23

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

23. ஆனந்த உடம்பு

கோதரி பூங்குழலி உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். அவரது உற்சாகம் அனைவருக்கும் தொற்றிக் கொண்டது, எல்லோரும் மிகுந்த ஆர்வத்துடன் அவர் பேச்சை செவிமடுத்து அவ்வப்போது குறிப்புகள் எடுத்துக் கொண்டதிலிருந்து தெரிந்தது."புற உலகில் பார்க்கும், படிக்கும், புதிதாகத் தெரிந்து கொள்ளும் விஷயங்களுக்கேற்ப புத்தி தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளும். முதலில் எதுபற்றியாவது கொண்ட எண்ணம் தவறாகத் தெரிந்தாலும், பாம்பு சட்டையைக் களைகிற மாதிரி களைந்து புதுசாக உணர்ந்த கருத்துக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். இப்படிச் செய்வதுஆரோக்கியமான ஒன்று. இது புதுப்புது சிந்தனைகளுக்கேற்ப தன்னை புதுவார்ப்புகளாய் செழுமைபடுத்திக் கொள்ளும் புத்திக்கு அழகு. மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று வீம்புத்தனமாய் அடம் பிடிக்கும் புத்தி நாளாவட்டத்தில் நடைமுறை உலக மாற்றங்களுக்குத் தாக்குப் பிடிக்காமல் முடங்கிப் போகும். செய்யும் செயல்களில் தோல்விகள் மிகுந்து தொய்ந்து போக நேரிடும்.


"மனதுக்கு என்றால், புத்தி செயல்படுத்தத் துடிக்கும் எதையும் உணர்வுகள் அடிப்படையில் உரசிப்பார்க்க முனையும். கற்பனை வலை பின்னும். சரிப்பட்டு வரவில்லை என்றால் , புத்தியை சந்தேகப்படுத்தத் தயங்காது. இந்த தயக்கம், புத்தியின் செயல்படுத்தும் வேகத்தைக் குறைக்கும். சந்தேகம் பொய்ந்துப் போகின், புத்தியால் தாங்கிக்கொள்ள முடியாது. மனத்தை மட்டந்தட்ட முயலும். இரண்டும் இரண்டு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். ஆரோக்கியமான வளர்ச்சிகள் தடைப்பட்டுப் போகும்."ஆனால், இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், புத்தியோ மனமோ இரண்டுமே தாம் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் தாம் செயல்படும் என்பது ஓர் அடிப்படைஉண்மை. மேலோட்டமாகப் பார்க்கையில் இரண்டுக்கும் அனுபவம் என்பது ஒன்றாகத் தானே இருக்கும் என்று தோன்றும். ஒரு விஷயத்தில் மனதில் அலசி, அந்தக்காரியம் வெற்றி பெற்றதென்றால், அது மனசுக்குக் கிடைத்த வெற்றியாக மனிதன் எண்ணத் தலைப்படுவான். அதைத் தொடர்ந்து, சடாரென்று உடனே எந்தக் காரியத்திலும் ஈடுபடாமல், யோசித்து, யோசித்து தாமதித்து நடவடிக்கைகள் எடுப்பான். யாராவது சொல்லி, எதையாவது படித்து, யதார்த்த உண்மைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு கணக்குப் போட்டு சட்டுபுட்டென்று காரியம் வெற்றியடைந்தால், அதை புத்தி கொடுத்த வெற்றியாக மனிதன் எடுத்துக் கொள்வான். அந்த முறை தோல்வியடையும் வரை, அந்த முறையையே தொடர்வான். இது அமாவாசை, பெளர்ணமி மாதிரி மாறி மாறி நடவடிக்கை."இப்படி மாறி மாறி இல்லாமல் தொடர்ந்த வெற்றிக்கு, புத்தியும் மனதும் ஒன்றிற்கொன்று முரண்டு பிடிக்காமல், இரண்டு மாடுகளையும் ஒருசேர வண்டியில் பூட்டி சவாரி செய்வதை சாத்தியப்படுத்த வேண்டும். புத்தியையும், மனதையும் ஒருசேர ஒரே சிந்தனையில் மையப்படுத்துவது தான் அது.


"இதையே இன்னொரு பாஷையில் சொல்வதென்றால், புத்தியையும் மனசையும் ஒன்றிற்கொன்று விஞ்சாமல் பார்த்துக் கொள்வது தான்.
"புத்தியையும் மனதையும் கணவன் -மனைவி என்று கொண்டால், ஒன்றிற்கொன்று காதல் வயப்பட வேண்டும்; பிற்பாடு, இரண்டும் ஒன்றிற்கொன்று வசப்பட்டுப் போகும்."இதை செயல்படுத்த ஒரு சுலபமான வழி இருக்கிறது."நமது அனுபவங்களை நல்லனவையாக அமைத்துக் கொண்டால் போதும்; இந்த இரட்டை மாட்டு வண்டி சவாரி சாத்தியப்பட்டுப் போகும்.


"செயல்களே அனுபவத்தை ஏற்படுத்துமாகையால், நல்ல எண்ணங்கள், நல்ல நண்பர்கள், நல்ல பழக்க வழக்கங்கள், மமதை கொள்ளாமமை, பிறர் சொல்லும் நல்லனவற்றைக் காதுகொடுத்துக் கேட்டல், பிறரை வெறுத்தல் இன்மை, சுறுசுறுப்பு, பயன் கருதாத செயலூக்கம், வறுமையிலும் செம்மை என்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் போதும். ரொம்ப சுலபத்தில், ஒரு பெரும் கூட்டத்தின் மத்தியில் நாம் அடையாளம் காணப்பெற்று, நல்லனவை நடக்கத் துவங்கும். கவனத்தில் கொள்ளவும்: நமது காத்திருப்பு, நல்லதொரு தொடக்கத்தின் துவக்கத்திற்குத் தான். அது துவங்க வேண்டியதற்கு தான்; பிறகு நல்லவை நடப்பது தொடருவதை தக்க வைத்துக் கொள்வது தான், நாளுக்கு நாள் நமது வேலையாகிப் போகும். எது எப்படி இப்படி நம்மைக் குன்றின்மீது ஏற்றி கொண்டாடச் செய்தது என்பது நமக்கே வியப்பாகிப் போகும்.


"புத்தியும் மனமும் கூடிக் குலாவும் மகிழ்ச்சியில், நல்லனவற்றைத் தேடிப்போக வேண்டாம்; நல்லனவையே நம்மைத் தேடி வரும்; அப்புறம் வாழ்க்கை பூராவும் வசந்தம் தான். 'வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும்; அதை வாங்கிக் கொடுத்தப் பெருமை எல்லாம் எம்மைச் சேரும்' என்று புத்தியும் மனசும் ஒருசேரக் களிக்கும். அவை களித்தால் நமக்குக் கொண்டாட்டம்; இரண்டும் முரண்டு பட்டால் தான் நமக்குத் திண்டாட்டம்.

"ஆனால், புத்தியையும், மனதையும் ஒன்றிற்கொன்று வசப்படுத்துவது லேசுப்பட்ட காரியம் இல்லை.

"அப்படி வசப்படுத்தி மட்டும் விட்டால், இன்பத்தைத் தலையாகவும், மகிழ்ச்சியை வலது பக்கமாகவும்,. சந்தோஷத்தை இடது பக்கமாகவும் கொண்ட ஆனந்த உடம்பு பெறலாம்.


"உள்ளத்தில் குடிகொண்ட இறைவனுக்கு மனசாலும், புத்தியாலும் புஷ்பாஞ்சலி செலுத்தலாம்.


"எப்படி?

"த்வமேவ மாதா ச்சபிதா த்வமேவ
த்வமேவ பந்து ச்சஸகா த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவினம் த்வமேவ
த்வமேவ சர்வம் மமதேவ தேவ!"


-- நீங்கள் தான் அன்னையாகவும், தந்தையாகவும்,
சொந்தமாகவும், நண்பனாகவும்,
கல்வியாகவும், செல்வமாகவும்
எங்களுக்கு இருக்கிறீர்கள்!
ஹே! தேவனுக்கெல்லாம் தேவனே!
நீதான் எனக்கு எல்லாமுமாகி இருக்கிறாய்!


(தேடல் தொடரும்)

Friday, December 5, 2008

ஆத்மாவைத் தேடி....22

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


22. மனமும் புத்தியும்

பிரதிநிதிகள் அறுபத்து நான்கு பேரையும், எட்டுபேர் கொண்ட குழுவாக, எட்டுக் குழுக்களாகப் பிரித்திருந்தது. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைப்பு. அந்தந்த தலைப்பிலான பேச்சுக்களை அந்த தலைப்பு சார்ந்த குழு தங்களுக்குள் அலசி ஆராய்ந்து 'பேப்பர்'களை சமர்ப்பித்திருந்தார்கள். அந்தத் தலைப்புகளில் தான், பேசிக்கொண்டிருந்தார்கள்.

உணவு இடைவேளைக்குப் பிறகு, சகோதரி நிவேதிதாவின் குழு சார்ந்த சகோதரி பூங்குழலி பேசத்தொடங்கினார்.

அவர் குரல் தீர்க்கமாக, வார்த்தைக்கு வார்த்தை ஸ்பஷ்டமாக வெளிப்பட்டது. இதற்கு மேல் என்ன என்று உன்னிப்பாக அவையோர் கேட்கத் தயாராயினர்.


"அகவயப் பார்வையின் அவசியம் தெரியாத நேரத்து, சகஜமான வெளிப் புலனுணர்வுகளும் அவை அளிக்கும் இன்பமே முக்கியமானதாகத் தெரியும். அதுவே இறுதி எல்லையாக உணர்வதால், அதற்குத் தாண்டி எதுவும் இருக்க முடியாதென்று கூடத் தோன்றும்.


"செயல்படுதலால், அனுபவமும், அந்த அனுபவத்தின் பலனைத் துய்ப்பதால் அதுபற்றிய அறிவாகிய புத்தியும் ஏற்படலாம். அனுபவங்களும், அவற்றைத் துய்ப்பதற்கான திறமைகளும் அல்லாது வாய்ப்புகளும் எல்லோருக்கும் வாய்த்து விடப்போவதில்லை. காக்பிட்டில் உட்கார்ந்து விமானத்தைச் செலுத்தும் விமான ஓட்டியின் சாகச அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியது தான். நாம் வியப்புடன் அவர் சொல்வதைக் கேட்பது அவருக்கு சாதாரணமாக ஆன அனுபவமாய் இருக்கலாம். இப்படியான ஒரு அனுபவம், ஒரே காரியத்தைத் தொடர்ந்து செய்வதான பழக்கத்தின் அடிப்படையில் ஏற்பட்டது. எழுபதாயிரம் அடி உயரத்தில் விமானம் ஓட்டிய விமானி, வீட்டுக்கு வந்ததும் மனைவி சமையலை ரசித்து, "எப்படி இவ்வளவு சுவையாக இந்த கருணைக்கிழங்கு மசியலைப் பண்ணினே?" என்று வியக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று அற்புதம். எல்லாவற்றையும் ரசிக்கும் மனோபாவமும் எல்லோருக்கும் இருந்து விடப்போவதில்லை.


"கொடைக்கானலில் குறிஞ்சிப்பூ பூக்கையில், எங்கிருந்தோவெல்லாம் வந்து அதைப்பார்த்து மகிழ்வோர் உண்டு. வெளியூர் வாசிகளைப் பார்த்து, "எதற்குக் கூட்டங்கூட்டமாக இங்கு இப்படி வருகிறார்கள்?" என்று உள்ளூர்வாசி மலைக்கலாம். வள்ளல் பாரியின் பரம்பு மலை வளப்பம், அந்த பரம்புமலையில் வாழ்வோருக்குத் தெரியாது என்று ஒரு வாசகம் உண்டு.


"பொதுவாக மனத்தின் இயல்பு 'சட்'டென்று ஒரு விஷயம் பிடித்துப் போதல்; பிடித்துப் போவதை பரவசப்பட்டு ரசித்தல். வண்ண வண்ண பொம்மைகளைப் பார்த்து குழந்தை கைகொட்டிச் சிரிக்குமே, அதுபோல! கல்மிஷமில்லாத இந்த குணத்திற்கு ஈரேழு உலகங்களும் சமனாகாது.


"ஆனால், புத்தி என்பது வேறு! அது பெற்ற அறிவுக்கு அடிமையான ஒன்று. தீக்குள் விரலை வைத்தால், சுடுமே தவிர, 'நந்தலாலா, உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதய்யா' என்னும் பாரதியைப் பார்த்து பிதற்றுவதாகப் பரிகசிக்கும்!


"புத்தி எச்சரிக்கை உணர்வு கொண்டது. "ஏய்! குதிச்சிண்டு ரொம்ப தூரம் போகாதே! திரும்பற அலை இழுத்திண்டு போயிடும்"ன்னு எச்சரிக்கும் குணம் கொண்டது. எச்சரிக்கைகள் எப்பொழுதும் 'எக்டஸி' நிலை அடையாமல் தடுக்கும். அறிவைத் தாண்டி எதையும் செய்யத் துணியாது; துணியும் நேரத்தும், யோசிப்பு வேலிபோட்டுத் தடுக்கும். பல எதிர்கால சாதனைகளை மொட்டாய் இருக்கும் பொழுதே பொசுக்கி விடும். அதற்காக யோசிப்பு கூடாதென்றும் இல்லை; எடுத்தெற்கெல்லாம் யோசிப்பு, எதிர்மறைச் சிந்தனைகளைக் கூட்டும். அதுவும் யோசிப்பு என்பது பெற்ற அறிவிற்கேற்பத்தான் இருக்கும் என்பதால், எத்தனையோ தேவையான விஷயங்கள், கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நழுவவும் வாய்ப்பிருக்கிறது.


இந்த இடங்களில் எல்லாம் புத்தி என்பதை பிறரால் தெரியப்படுத்தப் பட்ட, அல்லது படித்துத் தெரிந்து கொண்ட அறிவு என்கிற அர்த்தத்திலேயே உபயோகப்படுத்தி இருக்கிறோம். ஆனால் அறிவு வேறு ஞானம் என்பது வேறு. புத்தகங்களிலும், கல்விச் சாலைகளிலும் படித்தவை அறிவு என்று கொள்ளலாமா என்றால் கொள்ளலாம்; ஆனால், அதுவே முழுமை பெற்ற அறிவாகாது. அது இன்னொருவரால் தெரிவிக்கப்பட்ட, புகட்டப்பட்ட, நாம் புரிந்து கொண்டதற்கேற்பதான அறிவு. பெற்ற அறிவைக் கொண்டு வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி புதிதாக கண்ட அனுபவத்தின் பேரில் ஏதாவது புதுசாகத் தெரிந்தால், அதை ஞானம் எனலாம். புற்றுநோய்க்கு தான் பெற்ற அறிவால் க்யூரி அம்மையார் ரேடியம் சிகித்சை கண்டறிந்து உலகுக்கு அளித்த கொடை, ஞானம்; அந்தக் கண்டுபிடிப்பு சமுதாயத்திற்கு பயன்படுவது இன்னும் விசேஷம். இது பற்றி நாம் படித்துத் தெரிந்து கொண்டது அறிவு. அறிவு என்பது கற்பிக்கப் பட்ட ஒன்று; பெற்ற அந்த அறிவை மூலதனமாக வைத்து முயற்சி செய்த சுய வெளிப்பாடு இல்லை; பலருக்கும் தெரிந்த ஒன்று. அதனால் தான், இந்த மாதிரி படித்துப் பெற்ற அறிவிற்கெல்லாம் நிறைய பேர் அலட்டிக் கொள்வதில்லை.


"இது இன்னதென்று கண்டு கொள்ளல், தெரிந்து கொள்ளல், போன்ற 'பார்க்கின்ற' சமாச்சாரங்களே புறக்கண்களால் ஆகக்கூடிய காரியங்கள். ரசித்தல், அனுபவித்தல்,மகிழ்தல் போன்றவை மனம் சம்பந்தப்பட்டவை.
"'பார்த்து ரசித்தான்'... என்கிற சொல்லில், 'பார்த்தல்' கண்களுக்குச் சொந்தமாயும், 'ரசித்தல்' மனதுக்குச் சொந்தமாயும் இருக்கிறது.


"புற உலகில் கண்ணால் பார்க்கும், காதால் கேட்கும், புலன்களால் தொட்டு உணரும் எல்லாவற்றிற்கும் தான் புத்தி சம்பந்தப்பட்டிருக்கிறது. அதாவது புத்தியின் ஆளுகைக்கு உட்படுத்தி அவற்றை அலசலாம். மனம் சம்பந்தப்பட்டிருக்கும் உணர்வுகள் புத்தியின் ஆளுகைக்கு அப்பாற்பட்டவை. புத்தி குறுக்கே புகுந்து தடுத்தாலும் அதை அப்பால் தள்ளி அன்பு பாராட்டும் உணர்வுகள் அவை. 'ஆமாம், அவன் அப்படித்தான் ---அதுக்காக விட்டுக் கொடுத்திட முடியுமா?' என்கிற பரிவே மனசில்கொப்பளித்து ஆதரவு தந்து அணைத்துக் கொள்ளும்.


"அறிவாகிய புத்தி காரியவாதி; செஸ் விளையாட்டு போல கணக்குப் போட்டு, காய் நகர்த்தி காரியம் சாதித்துக் கொள்வது; கணக்குப் போட்டு எதிரியை வீழ்த்தும், வாழ்த்தும் சாணக்கியத்தனம் கொண்டது.

"மனத்திற்கு என்று சில கல்யாணகுணங்கள் உண்டு. தனக்குப் பிடித்து விட்டதென்றால், தனக்குப் பிடித்தவர் என்றால், லாப-நஷ்ட கணக்குப் பார்க்காது. தன்னிடம் இல்லை யென்றாலும், கடன் வாங்கியாவது இன்னொருவருக்குச் செய்து களிப்படையும். எத்தனைபட்டும் 'புத்தி' வராது, மீண்டும் மீண்டும் தன்னை இழத்தலில் சந்தோஷப்படும். பிறர் துன்பத்தைத் தன்மேல் இழுத்துப் போட்டுக் கொண்டு மருகும்.--இது பற்றி இன்னும் நிறையச் சொல்ல வேண்டுமென்கிற ஆர்வத்துடன் காகிதங்களைப் புரட்டினார், பூங்குழலி.

(தேடல் தொடரும்)


Monday, December 1, 2008

ஆத்மாவைத் தேடி....21

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


21. நிழல் காட்டிய ஒளி


சகோதரி நிவேதிதா தொடர்ந்து பேசலானார்:

"இந்த பிராணன், உயிர்க்காற்று தான் பிரதானமாக இருந்து கொண்டு தானே அபானன், சமானன், வியானன், உதானன் என்று வேறு வேறு பெயர்களில் வேறு வேறு செயல்களில் ஈடுபடுகிறதாம். பார்ப்பதும், கேட்பதும், பேசுவதும் பிராணன் கொடுக்கும் சக்தியாலே தான்.

"'சித்த வைத்தியம்' தலைப்பில் பேசவிருக்கும் வைத்தியநாதன் அவர்கள் இந்த பிராணனைப் பற்றி விவரமாகப் பேசுவதாகச் சொல்லியிருக்கிறார். ஆகவே இது பற்றிமேலோட்டமாக நான் சொல்ல நினைக்கிறேன்.

இறைவன் பிரபஞ்சத்தைத் தோற்றுவித்த பொழுதே, பிராணசக்தியும், அந்த பிரபஞ்சத் தோற்றத்துடனேயே ஓர் அம்சமாகத் தோன்றிவிட்டது. ஆக, வெளியெங்கணும் இந்தப் பிராணன் வியாபித்திருக்கிறது.

"பூரிதி வை ப்ராண: புவ இத்யபான: ஸூவரிதி வ்யான: மஹ இத்யன்னம் அன்னேன வாவ ஸர்வே ப்ராணா மஹீயந்தே"
--என்று யஜூர்வேதம் சார்ந்த தைத்திரீய உபநிஷதில் சொல்லப் பட்டிருக்கிறது.

.இயக்க சக்திக்கு காரணமான பிராணன் உட்கொள்ளும் உணவினால் தான் இயங்குகிறது என்று சொல்கிறது. அதாவது உட்கொள்ளும் உணவே, உடல்இயக்கத்திற்கு சக்தியளித்து பிராணனை நிலைபெறச் செய்கிறது என்று அர்த்தம். ஆதலால் உண்ணும் உணவு தெய்வீகமானது. பிறருக்கு உபசரித்து உணவிடுதலும் தெய்வீகமான செயல். உடல் உழைப்புக்கேற்பவும், ஏற்கும் அளவும் அளவோடு சாப்பிட்டு அதையே அமுதமாக பாவிக்கவும் வேண்டியிருப்பதால், அது மருந்து போன்றதும் கூட.

"ஊர்த்வம் ப்ராணமுன்னயதி அபானம் ப்ரத்யகஸ்யதி மத்யே வாமனமாஸீனம் விச்வே தேவா உபாஸதே"
--என்று கட உபநிஷதம் சொல்கிறது. கடர் என்னும் முனிவர் இதை அருளியதால், அவர் பெயர் கொண்டு அழைக்கப்படும் இதுவும் யஜூர்வேதம் சார்ந்த உபநிஷதம் தான்.

"உடம்பின் நடுவில் ஜீவன் உள்ளது. இந்த ஜீவன் தான் பிராணனை மேலேயும், அபானனை கீழேயும் செலுத்துகின்றது. அவயவங்கள் அத்தனையும் ஜீவனையே சார்ந்து இருக்கின்றன".

பிராணனுக்கு அடுத்து ஜீவன்.

"ஓ! இந்த ஜீவன் தான் உயிர் போலிருக்கிறது!

"புரிவது போலிருக்கிறது; ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.


"நமது செயல்பாடுகளை இரண்டாகப் பிரிக்கலாம்; உடல், மனம் என்று.
இந்த இரண்டு செயல்பாட்டிற்கும், இரண்டும் சேர்ந்த செயல்பாட்டிற்கும் சக்தி அளிப்பது பிராணனே. இதையே இன்னொரு விதத்திலும் சொல்லலாம். பிராண சக்தியை உடலும், மனமும் தமது தனித்தனி செயல்பாட்டுக்கும், சேர்ந்த செயல்பாட்டிற்கும் உபயோகப்படுத்திக் கொள்கின்றன என்று. அந்தப் பிராணன் இல்லையென்றால் எதுவும் லபிக்காதென்று, உடலும், மனமும் தங்கள் செயல்பாட்டிற்கு பிராணசக்தியையே சார்ந்து இருக்கின்றன.


"மனம் ஓர் அரூப 'வஸ்து'. சரியாகச் சொல்ல வேண்டுமானால், ஓர் அபூர்வ 'வஸ்து'. ஒரு நொடியில் ஓராயிரம் எண்ணங்களை எழுதியும் அழித்தும் அலைமோதவிடும் அபூர்வ படைப்பு. அனுபவங்கள், அபிலாஷைகள், பரிவு, பாசம் என்று ஏகப்பட்ட வலைகளை தனக்குத்தானே சுற்றிக்கொண்டாலும் துடிதுடிப்பான ஒன்று அது.. நினைத்ததை நிறைவேற்றத் துடிக்கும் இதற்குக் கிடைத்த இயங்கு பொருளே உடல்..... மனம், உடல் இந்த இரண்டையும் உருவாக்கியதும் பிராணன் தான்; அவற்றை இயக்குவதும் அதுவே.

.
"ஆத்மன ஏஷ ப்ராணோ ஜாயதே; யதைஷா புருஷே சாயா ஏதஸ்மின் ஏததாததம் மனோக்ருதேனாயாதி அஸ்மின் சரீரே"
--என்று அதர்வண வேதத்து பிரச்ன உபநிஷதம் கூறுகிறது.


"இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும்.


"ஆதமாவும், பிராணனும் மனிதனும் அவனது நிழலும் போல என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆத்மாவின் நிழலே பிராணன் என்றால், ஆத்மா?.. கிட்டதட்ட நெருங்கி வந்து விட்டது போல் தோன்றுகிறது; ஆனால் தட்டுப்படவில்லை. தொடர்ந்து தேடுவோம்.


"பிராணசக்தி இருப்பதால் உடலுக்கும் மனத்திற்கும் இயக்கம் இருக்கிறது. அது இல்லையேல் எதுவும் இல்லை. ரொம்ப சரி.


"ஒரு பொருளின் மீது வெளிச்சம் பட்டால், ஒரு நாணயத்தின் இன்னொரு பக்கமாக, வெளிச்சம் படாத பகுதிதான் நிழலாக நீள்கிறது; நிழல் இருப்பின் வெளிச்சம் இன்னொரு பக்கம் என்பது நிச்சயம். அப்படிப்பட்ட நிச்சயமான ஒன்றாய்த்தான்--- பிராணனும், அதன் இயக்கமான பிராணசக்தியும் இருக்கையில், ஆத்மாவும் இருக்கிறது என்பதை அனுமானித்துக் கொள்ளலாம். ஒளியான ஆத்மா இருப்பதை, பிராணனான நிழல் இருப்பதின் மூலமாகவும், பிராணன் இருப்பதை அதன் சக்தி இயக்கமான உடலியக்கம் இருப்பதின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். உடல், மனம் இயக்கம் இல்லையா, பிராணன் இல்லை; பிராணன் இல்லையெனில், ஆத்மாவும் இல்லை என்பதே மறுதலைப் பாடம்.


"உடல், மன இயக்கம் இருக்கையில் இந்த சகலமும் இருக்கின்றன என்பது புறப்புலன்களுக்கு தட்டுப்படாத பார்வை. வெளிப்புலன்களுக்குத் தட்டுப் படாததாலேயே, அவை இல்லை என்றும் அர்த்தம் இல்லை. உள்நோக்கி செலுத்திய தீட்சண்ய உணர்வின் மூலம் அவை தட்டுப்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஆக, அவை தட்டுப்படாததற்குக்காரணம், அகவயப்பார்வை இன்மையே".

அந்த அவையே ஒட்டு மொத்த ஈடுபாட்டுடன், சங்கீத அலைபோல் அந்த ஹால் முழுக்க நிறைந்திருந்த நிவேதாவின் பேச்சொலியில் கட்டுண்டு கிடந்தது.
(தேடல் தொடரும்)

Monday, November 24, 2008

ஆத்மாவைத் தேடி....20

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


20. காற்றின் தந்தை நீ!


பை அமைதியில் ஆழ்ந்திருந்தது. அந்த அமைதியில் இலயம் மாறா சுருதி போல நிவேதிதாவின் பேச்சு, அந்த ஹால் பூராவும், ஹாலைத் தாண்டியும் ஒலித்துக்கொண்டிருந்தது.

"உயிர்ப் படைப்புகளில், மனிதராய்ப் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும். இது பூர்வஜன்ம பலனல்லாது வேறில்லை.

'ந ஹி மனுஷ்யாத் ஸ்ரேஷ்ட தரம் ஹீ கிஞ்சித்"

--என்று மகாபாரத்தில் வரும். இறைவனிடமிருந்து கிடைத்ததை பாதுகாப்புடன் பேணி வைத்திருந்து இறைவனுக்கு அர்ப்பணிப்பது தான் மனிதனின் தலையாய கடமையாகும். மனிதன் இறைவனில் ஐக்கியமாவதற்கு இப்பிறவி கிடைதற்கரிய பேறு.

"சிந்தனை செய்யும் சக்தி, நல்லது-கெட்டதை பகுத்துணரும் அறிவு மனிதனுக்கு மட்டுமே அளிக்கப்பட்ட வரம். இதுவே இறைவனின் இறுதிப் படைப்பு. அடுத்து, அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு இறைவனிடம் கலப்பதுதான்.

"மனிதனை அவன் கொள்ளும் எண்ணங்களே சிற்பி கை உளியாய் செதுக்கிச் செதுக்கி வடிவமைக்கின்றன. எண்ணம் சும்மா இல்லாது செயல்படத் தூண்டுகிறது. எண்ணத்தின் தன்மைக்கேற்ப செயல் வடிவு பெற்று, அது நன்மையோ, தீமையோ செய்தவனை அதன் விளைவைத் துய்க்கச் செய்கிறது. நல்ல எண்ணங்கள் அனுபவப்படும் பொழுது நல்ல பயன்களைத் தந்து நேர்மறைச் சிந்தனைகளை சிந்தையில் கிளர்த்தும். அது உடலின் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும். எதிர்மறைச்சிந்தனைகள், இதற்கு எதிர்மறை.


"நேற்று உளவியல் பேராசிரியர் தேவதேவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். எண்ணத்தின் ஆளுகை பற்றியும், அதன் விளைவுகளைப் பற்றியும் நிறையச் சொன்னார். கேட்கக் கேட்க அதிசயமாய் இருந்தது. அவர் இந்த அவையில் உரையாற்றுகையில் அதையெல்லாம் பற்றி நிறைய சொல்லவிருப்பதாகச் சொன்னார். கிருஷ்ணமூர்த்தி சார் சொன்னபடி நாம் பாக்கியம் செய்தவர்கள். இங்கு வந்து நிறைய நிறைய புதிய விஷயங்களை நாம் தெரிந்து கொண்டோம்.

"பிரபஞ்சத்தைப் படைத்து இறைவன், உயிரினத்தின் உறைவிடப் பிரச்னையைத் தீர்த்தார். இயற்கை இருக்க, உணவு பிரச்னையும் தீர்ந்தது. உண்ணும் உணவே ஊட்டமாகிறது. ரொம்ப சரி.

"அடுத்து உடல் இயக்கத்திற்கு சக்தியாக இருக்கும் பிராணன். ஒவ்வொரு அவயவத்தையும் இயக்கும், நமது செயல்களுக்கு உந்து சக்தியாக இருக்கும் பிராணன். இது எது?.. இந்த பிராணனைப் பற்றி விளக்கச் சொல்லும் பிரச்ன உபநிஷத்தில், பிராணனைப் பற்றிச் சொல்லும் ஒரு வார்த்தை வருகிறது. அதுதான் பிடித்து இழுக்க கிடைத்த நூலிழை.

'பிதா த்வம் மாதரிச்வன'
--இந்த சொற்றொடருக்கு அர்த்தம்: 'காற்றின் தந்தை நீ!'

"பிராணனை வாயு ரூபத்தில் கொள்ளும் பொழுது, பிராணவாயு என்று தமிழில் நிறைய அர்த்தத்துடன் தான் சொல்லியிருக்கிறார்கள்!.

யா தே தனூர்வாசி ப்ரதிஷ்ட்டிதா யா ச்ரோத்ரே யா ச சக்ஷக்ஷி யா ச மனஸி ஸந்ததா சிவாம் தாம் குரு மோத்க்ரமீ:

"இந்த பிரச்ன உபநிஷத ஸ்லோகம் சொல்கிறது: "ஓ, பிராணனே! ஒரு பொருளைப் பார்க்கின்ற பொழுதும், ஒன்றைக் கேட்கின்ற பொழுதிலும், ஒன்றைப் பேசுகின்றபொழுதும், உனது சக்தியின் அளவு செயல்படுவதற்கு ஏதுவாக எந்த அளவு இருந்து செயல்படுகிறதோ, மனத்திலும் எந்த அளவு நீக்கமற நிறைந்திருக்கிறதோ, அதே மாதிரி இருக்கச் செய்! போய்விடாதே!"

"'ஒவ்வொரு அவயவமும் இயங்குவதற்குத் தேவையான சக்தியைக் கொடு. இதில் மாற்றத்தை ஏற்படுத்திவிடாதே!' என்று இறைஞ்சலாக வந்திருக்கிறது. பிராண சக்தியின், அதன் வீச்சின் அளவுநிலை வேறுபட்டால், உடல் நிலை பாதிக்கபடும் என்பது அறிந்து இந்த வேண்டுகோள்.

"இந்தப் பிராணன், உயிர்க்காற்று தான் பிரதானமாக இருந்து கொண்டு தானே-- அபானன், சமானன், வியானன், உதானன் என்று வேறு வேறு கலவைகளில் வேறு வேறு செயல்களில் ஈடுபடுகிறதாம். "

சகோதரி நிவேதிதா மேலும் தொடர, அவையினர் உன்னிப்பாகக் கேட்கத் தலைப்பட்டனர்.


(தேடல் தொடரும்)

Thursday, November 20, 2008

ஆத்மாவைத் தேடி....19

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

19. உத்தமன் கோயில் கொண்டான்

காலை உணவை முடித்துக் கொண்டு அத்தனை பிரதிநிதிகளும் அவைக்கு வரத்தொடங்கி விட்டனர்.

அந்த நீண்ட ஹாலின் வெளியே மனோகர்ஜியும், பெரியவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்களும் நின்று கொண்டு அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தனர். ஆற்றும் உரைகளின் குறிப்பெடுப்பவர்கள், ஒலி-ஒளிப்பதிவாளர்களென்று எல்லோரும் உற்சாகத்தோடு தம் பணியைத் தொடங்கக் காத்திருந்தனர்.

சரியாக பத்து மணிக்கு சகோதரி நிவேதிதா மேடையேறி விட்டார். மைக்கைப் பேசுவதற்கு வாகாக சரிப்படுத்திக்கொண்டு அவர் துவங்குகையில் அரங்கே நிறைந்திருந்தது.

"சகோதர, சகோதரிகளே!" என்று அவர் தொடங்கும் பொழுது, அந்த அழைப்பு அர்த்தமுள்ள உச்சாடனமாக அந்த ஹால் முழுதும் பரவி அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி காணப்பட்டது. அருட்பிரகாசர் விவேகானந்தர், சிகாகோ மாநாட்டில் ஆற்றிய உரையில் ஆரம்ப வரியல்லவா இது என்கிற புளகாங்கிதம் அனைவரிடத்தும் ஏற்பட்டது. அதுவும் பேசத்துவங்குபவர் பெயர் நிவேதிதா என்றிருந்ததும் அவர் அழைத்த அந்த அழைப்பு, பொருள் பொதிந்ததாக இருந்தது.

"'உயிர்களின் ஜனனத்திலிருந்து'.. என்கிற தலைப்பில், இந்திய தத்துவ இயலின் மணிமகுடமாம் உபநிஷத்துகளிலிருந்து கருத்துக்களைத் தொகுத்துச் சொல்லும்படி ஒருங்கிணைப்பாளர் பெரியவர் கிருஷ்ணமூர்த்தி என்னைக் கேட்டுக் கொண்டபொழுது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. உயிரியலைப் பாடமாக எடுத்து கல்லூரியில் படிக்கும் நேரத்தே எனக்கு உபநிஷத்துக்களின் மேல் ஒரு தனிப்பட்ட பிரேமை உண்டு.." நிவேதிதாவின் பேச்சு, பெண்மைக்கே உரிய குழைவுடன்ஆற்றோட்டமாக இருந்தது.

ஒரு நிமிஷம் நிறுத்தித் தொடர்ந்தார் அவர்: "இறைவன், தவத்தின் மேன்மையை அனைவருக்கும் உணர்த்த நினைத்துத் தானே தவமிருந்து இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தான் என்று நேற்று கூறினார்கள். இந்தப் படைப்புக்கு, பஞ்சபூதங்கள் என்று நாம் அழைக்கின்ற வெளி, காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகிய இந்த ஐந்து சக்திகளும் அடிப்படையாக அமைந்தன என்பதையும் தெரிந்து கொண்டோம். உயிர்களைப் படைத்து அவற்றிற்கு
இந்த ஆரம்பப் படைப்புச் செல்வங்களை வாரி வழங்கிடச் செய்ய வேண்டுமென்பதே இறைவனின் ஆசை... மனிதர்கள் தமது குடும்ப வாழ்க்கையை நடத்த முதலில் குடியிருக்க ஒரு வீட்டைத் தயார் நிலையில் வைத்துக்கொண்டு அப்புறம் சொந்த பந்தத்தோடு குடிபுகுகிறோம், இல்லையா? அதே மாதிரி, தான் பிற்பாடு படைக்கப்போகும் உயிரினங்களின் நலன் கருதி, அவற்றின் மகிழ்ச்சி கருதி, முன்னாலேயே பிரபஞ்சத்தைப் படைத்து விடுகிறான், இறைவன். உயிரினங்களையும் படைத்து, முன்னால் ஆக்கப்பட்ட பிரபஞ்சப் பொருட்கள் அனைத்தும் இவருக்கே--இவருக்கே--என்று பட்டயம் எழுதிக் கொடுத்து விட்டான்! ஆகவே படைத்தவனின் அல்டிமேட் எய்ம், உயிரினங்களின் படைப்பே! இவற்றிக்காகத் தான்-- உயிர் சுமந்து உலவும் அத்தனையின் தேவைக்கும், சந்தோஷத்திற்காகவும் தான்-- முன்னால் படைத்த அத்தனையும்.. எவ்வளவு முன்னேற்பாடு பாருங்கள்! இந்தப் பேரருளை கருணை என்றல்லாமல் வேறு என்ன பெயரிட்டு அழைப்பது நீங்களே கூறுங்கள்!..


இத்தனையும் அல்லாமல், ஜடப்பொருளாக படைக்கப்பட்ட உடம்பை இயக்க உயிராகவும் இறைவனே உள்ளே புகுந்தான்.. இறைவனே நமது இயக்கமாக இருக்க வேறென்ன வேண்டும், சொல்மனமே' என்றுதான் மகிழ்ச்சி பொங்கக் கூவத் தோன்றுகிறது..


"ஸ ஏதமேவ ஸீமானம் விதார்யைதயா த்வாரா ப்ராபத்யத
ஸைஷா வித்ருதிர்நாம த்வாஸ்ததேதன்னாந்தனம்
தஸ்ய த்ரய ஆவஸ்தா: த்ரய: ஸ்வப்னா:
அயமாவஸதோ sயமாவஸதோ sயமாவஸத இதி"

--என்று ஐதரேய உபநிஷதத்தில் ஒரு ஸ்லோகம்.. ரிக் வேதத்தைச் சேர்ந்த ஆரண்யகம் இது. இதை அருளியவர் மஹீதாச ஐதரேயர் என்கிற முனிவராகையால், அவர் பெயரிலேயே இந்த உபநிஷதும் அழைக்கப்படுகிறது..
'பிரம்ம ரந்திரம்' என்பது தலையின் உச்சிப்பிரதேசத்திலுள்ள ஒரு சிறு துவாரம். இந்த இடத்தைப் பிளந்து கொண்டு இறைவன் உடலினுள் நுழைகிறான்.. ஜடமாகிய உடலில், உணர்வலைகள் ஸ்தாபிதமாகித் தூண்டலுருவதை, இறைவன் நுழைவதாகக் கொள்ள வேண்டும்.

பதினோரு வாசல் கொண்ட உடலின் ஒரு வாசல் பிரம்ம ரந்திரம். உடலினில் அமைந்திருக்கும் நூற்றியொரு நாடிகளில் ஒன்று இந்த வழியாகச் செல்கிறது. இந்த வாசல் வழியே உயிர் பிரிந்தால், மீண்டும் பிறப்பில்லை என்கிறது கட உபநிஷதம். சிறந்த யோகியருக்கு இந்த வாசல் வழிதான் உயிர் பிரியும் என்பர். வந்த வழியே போகும் வழியாக இருந்தால், பிறப்பிலா நிலை. இதையெல்லாம் பற்றி 'மரணத்திற்குப் பின்' பகுதியில் உரையாற்ற இருப்பவர்கள் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.


ஆக, இறைவன் குடிகொண்டிருக்கும் கோயிலே, இந்த உடல் என்கிற உணர்வு பெற்றால், இந்த உடலின் மேல் அளபரிய அன்பு பிறக்கும். நற்குணமென்னும் குன்றின் மீதேறி இதைப் பேணிக்காக்க ஆசை பிறக்கும்.


அவன் அருளினால் தீமை ஒழித்து, நல்ல செயல்களைச் செய்து பிறவிப் பெருங்கடலை நீந்த, உய்யக் கிடைத்த ஒப்பற்ற ஓடம் இந்த உடல்.
வெறும் சட்டையல்ல; விலைமதிப்பற்ற செல்வம்.

"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்

உடம்பினுக்குள்ளே கோயில் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று

உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே."

-- என்று திருமூலர், தனது திருமந்திரத்தில் அற்புதமாக தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

யாக்கை நிலையானது இல்லை தான்; ஒப்புக்கொள்கிறேன். ஆனால், வாராது வந்த மாமணி போல, இந்த உடல் கிடைத்தது, 'இனி பிறவா நிலை வேண்டும்' என்கிற வேண்டலுக்குக் கிடைத்த ஓர் அரிய சாதனம் இல்லையா?..

வெறும் வேண்டல், வேஸ்ட்.. மனிதப்பிறவி கிடைத்தற்கரிய பேறு. ஏதாவது நல்லதைச் செய்து புண்ணியம் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், இப்பிறவியில் தானே அது முடியும்?.. கிடைத்திருக்கிற வாழ்க்கை, புண்ணியம் சேர்த்துக் கொள்ள ஒரு சான்ஸ். கிடைத்த வாய்ப்பை நழுவ விடுவாரும் உண்டோ?.. நழுவ விடின், என்னாகும் என்று தெரிந்த பின்னும்?..

பேலன்ஸ் ஷீட் போட்டுப் பார்த்தால், பளிச்சென்று தெரியும். வாழ்க்கைப் பேரேட்டில், கிரெடிட் எவ்வளவு, அதில் டெபிட் எவ்வளவு, இன்னும் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பது புரியும்.

பரோபகாரம், உதவி, ஒத்தாசை, வறியோர்க்கு ஈதல், முதியோர்க்கு ஆதரவு என்று கிரெடிட் பண்ண எத்தனையோ காரியம் இருக்கு... வாழ்க்கை என்னும் இந்த பரமபத விளையாட்டில் அவைகளே நாம் போடும் தாயங்கள்.

ஆமாம், நன்றாகத் தெரிகிறது.. பொன்னுலகு போக வேறு எந்த குறுக்கு வழியும் கிடையாது."

உணர்வு கொப்பளிக்க உரையாற்றிய சகோதரி நிவேதிதா, கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேலும் பேசத் தயாரானார்.


(தேடல் தொடரும்)
Monday, November 17, 2008

ஆத்மாவைத் தேடி....18

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


18. மனசில் எழுந்தக் குரல்

தாழ்ந்திருந்த, சிவப்புக் கம்பளம் விரித்திருந்த படிகளேறி மேடையேறினார் கிருஷ்ணமூர்த்தி.

ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியைக் கண்டதும் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். இந்த சில நாட்களில் தன் பண்பாலும், நெருங்கி பழகும் சுபாவத்தாலும், எல்லோருடைய தேவைகளையும் உடனுக்குடன் கவனித்து அவரவர்களுக்குத் தேவையானதை செய்த நேசத்தாலும் அனைவரின அன்புக்கும், பிரியத்திற்கும் உரியவராகியிருந்தார் அந்தப் பெரியவர்.

மைக் பிடித்து, "சகோதர, சகோதரிகளே!" என்று கணீரென்று ஆரம்பித்தார் கிருஷ்ணமூர்த்தி. இத்தனை வயதில் கொஞ்சம் கூட அலுப்புக் காட்டாமல் உற்சாகமாக இருந்தார் அவர். "உங்கள் எல்லோருக்கும் என் அன்பான வணக்கம். நாமெல்லோரும் பாக்கியம் செய்தவர்கள்.. பேராசிரியர் சாம்பசிவம் சொன்னாரே, 'மெஞ்ஞானமும் விஞ்ஞானமும்கலக்கும் இடம் இதுதான்' என்று... அவர் அதைச் சொல்லும் போது, நான் பரவசப்பட்டுப் போனேன். கோயில் கோயிலாகவும், கிராமம் கிராமமாகவும் சென்று புராணசொற்பொழிவுகள் ஆற்றிக் கொண்டிருந்தேன். தீர்க்கமாகச் சொல்லப் போனால், அதுதான் என் தொழில் என்றாலும், அப்படிப் புராணச் சொற்பொழிவு ஆற்றுவது எனது மனதுக்கு மிகவும் பிடித்துப் போனதால், எனது செயலில் நேர்த்தி கூடி, போகப்போக 'இறைவனின் புகழ்பாடும் இப்படிப்பட்ட பணியைச் செய்யத்தான் ஜென்மம் எடுத்தோம்' என்று நினைக்கத் தலைப்பட்டேன். அந்த நினைப்பு மேலோங்க மேலோங்க, என்னுள் ஒரு தீனக்குரல் எழுந்து சதாசர்வ காலமும் என்னை உருக்கத்தொடங்கியது. 'அந்தப் பிறைசூடிய பெம்மான் உறையும் அந்த வெண்பனிமலைக்குப் போவோம், வா!' என்பதே பல்வேறு விதங்களில் எனக்கு நானே உணர்ந்த அந்தக் குரலின் சராம்ச செய்தி.

"ஆரம்பத்தில் ஒரு நினைப்பாக இருந்த இந்த எண்ணம், நாளாக நாளாக வலுப்பெற்று ஒருநாள், "வடக்கே போகிறேன்.." என்று வீட்டில் சொல்லி விட்டு ரயிலேறி விட்டேன். இந்த தில்லி பட்டணம் வரை தான் என் பிரயாணம் சித்தித்தது. இந்த மாநகரின் மண்ணில் என் காலடி பட்டதும், அவன் சித்தம் வேறாகிப் போனது போலும்! பெரியவர், புரவலர், மனோகர்ஜியை நான் சந்தித்தது, அவர் என்னைத் தேடிக் காத்திருந்தது, இந்த சதஸ்.. அதற்கான பணிகள்---எல்லாமே தெய்வ சங்கல்பங்கள்!


"எதற்கு சொல்ல வந்தேனென்றால், ஆன்மீகம் என்பது பரந்து விரிந்து விழுது பரப்பிச் செழித்த ஆலமரம் என்று இங்கு வந்து இந்த சபையில் உட்கார்ந்ததும் தான் எனக்குப்புரிந்தது. பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி யோகி குமாரஸ்வாமி அவர்களும், பேராசிரியர் சாம்பசிவம் அவர்களும் அழகழகாகச் சொன்னார்கள். அவர்களுக்கு இந்த அவையினர் சார்பாக மிக்க நன்றி.


"வெறும் புராணக்கதைகளை அறிந்ததோடு நின்றுவிடாமல், யதார்த உலகில் கால் பதிக்கிற உண்மைகளாய், நான் இதுவரை அறிந்திராத பல செய்திகளை அறிந்துகொண்ட்டேன். இனி நான் 'புராண கதா காலேட் சேபங்களை'ச் சொல்லும் பொழுது, நான் அறிந்த இந்தப் புதிய தகவல்களையும் சேர்த்து என் கதை சொல்லும் பணி அமையும் என்று இந்த அவையில் தெரிவித்துக் கொள்கிறேன். இது இறைவன் இட்ட கட்டளை.


"பயத்தின் அடிப்படையில் எதுவுமே இருக்கக்கூடாது; கடவுள் பக்தி கூட.
பயம் விட்டதென்றால், பக்தி போய்விடும். பிரமிப்பு கூடத்தான்; அது குழந்தைத்தனம். அதை விடக் கூட ஆன இன்னொரு பிரமிப்பில் இது போய்விடும்... எதையும் மனசாரப் புரிந்து கொண்டோமென்றால், 'இது அவசியம் இந்த வாழ்க்கைக்கு'ன்னு தோன்றினதென்றால், அது நிலையா இருக்கும். சுகமா அழுந்தப் படுத்திண்டு தூங்கறதை விட்டுட்டு, இது என்ன விடிஞ்சாப் போதும், மூக்கைப் பிடிச்சிண்டு உட்கார்ற வேலைன்னு, பிராணாயாமத்தைப் பழகிக்கறச்சே ஆரம்பத்லே எரிச்சலா வரும்.. 'இது ஒரு மூச்சுப்பயிற்சி; உயிருக்கு கொடுக்கற டானிக்; உடல் ஆரோக்யமா அங்கேயும் இங்கேயும் அலையறத்துக்குத் தேவை; செஞ்சா மூஞ்சிலே தேஜஸ் பொங்கும்'ன்னு புரிஞ்சிண்டா அலுப்புத் தட்டாது. ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு ரெண்டு தடவையாச் செய்யச் சொல்லும்.

"கடவுளுடோட அன்பும் அருளும் நம்ம நெஞ்சிலே பதியறது தான் முக்கியம்.
அவனிடமிருந்து பெற்ற அந்த அன்பை எல்லாரிடமும் திருப்பிச் செலுத்தறது தான் முக்கியம். கொடுக்கறது எதுவும் ரெண்டு மடங்கா திருப்பி நமக்கே வருங்கறதுங்கறதும் இன்னொரு உண்மை. இப்படி கொடுத்தும் வாங்கியும் அடையற இன்பத்தை அனுபவிச்சவங்களுக்கு நன்னா தெரியும். நாளா வட்டத்தில் அதுதான் வாழ்க்கைங்கறதும் புரியும்.

"எங்கோ ஆரம்பிச்சு எங்கேயோ போயிடுத்து. 'உயிர்களின் ஜனனத்திலிருந்து' என்கிற இரண்டாவது தொடரில், உபநிஷதுகள் சொல்லும் செய்திகளை சொல்லி சகோதரி நிவேதிதா அவர்கள் நாளை உரை ஆற்ற இருக்கிறார்கள்.
உங்களைப் போல நானும் அவர் சொல்லவிருக்கும் செய்திகளைக் கேட்க மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன். எல்லோருக்கும் மிக்க நன்றி.."என்று தனது உரையை பெரியவர் கிருஷ்ணமூர்த்தி முடித்துக் கொண்டார்.

மனோகர்ஜி எல்லோருக்கும் நன்றி கூற அனைவரின் முகத்திலும்
அசாத்திய மகிழ்ச்சி தெரிந்தது.

(தேடல் தொடரும்)

Friday, November 14, 2008

ஆத்மாவைத் தேடி....17

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


17. சிருஷ்டியின் ரகசியம்


பேராசிரியர் சாம்பசிவம் தொடர்ந்து பேச அவையோர் உன்னிப்பாகக் கேட்டனர்.

"அணுக்களின் கூட்டமைப்பு தான் அத்தனை பொருள்களும். கலந்து கட்டி பல அணுக்கள் சேருகையில் அப்படிச் சேரும் தன்மைக்கேற்ப அந்தப் பொருளுக்கு வடிவமைப்பு கிடைக்கிறது. ஒவ்வொரு அணுவும் இன்னொரு அணுவுடன் சேர்ந்து கூட்ட அடுக்குகளாகும் அணு சேர்க்கை அற்புதமாக நிகழ்கிறது.

துக்குணூண்டுக்கும் துக்குணூண்டான, நம் கற்பனைக்கும் குறைவாகக் குறுகித்தரித்த ஓர் அணுவின் உட்கரு போன்ற சமாச்சாரம் அணுவின் மையப்பகுதி. எலெக்ட்ரான்,புரோட்டான், நியூட்ரான் என்னும் மூன்று பகுதிகளைக் கொண்டது அணு. புரோட்டான்களும், நியூட்ரான்களும் கலந்தது, அணு மையப்பகுதி. இந்த மையப்பகுதியை எலக்ட்ரான்கள், அதிவேகமாக வட்டமடிக்கின்றன. இப்படி புரோட்டான், நியூட்ரான் சேர்ந்த மையப்பகுதியை எலக்ட்ரான் சுற்றுவதுதான் அந்த அணுவின் இயக்கம்.


ஒவ்வொரு அணுத்துகளுக்குள்ளும் இந்த 'சுற்றல்' இயக்கம் சர்வசதாகாலமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உயிருள்ளவைகளில் மட்டுமல்ல, உயிரற்ற ஜடப்பொருள்கள் என்று நாம் கருதும் மரபீரோ, நாற்காலி, இரும்புத்துண்டு என்று அத்தனை பொருள்களிலும் இப்படிப்பட்ட இயக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. எல்லாவற்றிலும் இந்த எலக்ட்ரான் சுற்று அதிவேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.


உயிர் என்பதே ஒரு கூட்டணுதான். தன்னை இரட்டிப்பாக்கிக் கொள்ளும் (Replication) தன்மை படைத்த கூட்டணு. இந்த அடிப்படையிலான உயிரை 'செல்' என்கிறார்கள். கல்லுக்குள் இருக்கும் தேரையும் வளர்வதை விட்டு விடுங்கள்.. ஜடப்பொருள்களில் இந்த தன்னை இரட்டிப்பாக்கிக் கொள்ளும் தன்மை இல்லாவிடினும், நாளாக நாளாக மூப்பு எய்திய மாதிரி சிதைந்து போகின்றதைப் பார்க்கிறோம்.


எந்த ஆற்றலும் எப்பொழுதுமே அழிக்க முடியாத ஒன்று. ஆற்றலின் ஒரே மாற்றம், ஒரு நிலையிலிருந்து இன்னொறு நிலைக்கு மாறுவதே. மாற்றம் ஏற்படுவதே உயிர்ப்புக்கு அடையாளம். தன்னுள் தன்னையே அடக்கிக் கொண்டதான இந்த இயக்க வடிவமே பிரபஞ்சமாகத் திகழ்கிறது. நிலையான நிலையிலிருந்து, இயக்க ஆற்றலாக (Kinetic Energy) மாறி சகலத்தையும் இயக்கிக் கொண்டிருப்பது இந்தப் பேராற்றலே.

யோகி குமாரஸ்வாமி அவர்கள் இறைவன் பிரபஞ்சமாகத் தன்னையே சிருஷ்டித்துக் கொண்டான் என்றாரே, இதுதான் அந்த சிருஷ்டியோ என்று நான் வியக்கிறேன்.


இரும்பு போன்ற திடப்பொருளுக்கு வெப்பமேற்றி பழுக்கக் காய்ச்சினால், திடநிலையில் இரும்பு என்று பெயர் கொண்டிருந்த அது, திரவநிலைக்கு மாறும். மேலும் மேலும் சூடேற்றினால், காற்றாகி காற்றில் கலந்து விடும். நாம் என்ன செய்கிறோம்?.. பழுக்கக் காய்ச்சுவதின் மூலம், இரும்புத் துண்டாகக் காட்சியளிக்கும் அந்த அணுக்கூட்டின் உட்சுழற்சி வேலையான எலக்ட்ரான் சுழற்சியை விரைவாக்குகிறோம். சுழற்சி வேகம் மிகும்போது அதன் ஆற்றலால், அணுக்கூட்டம் சிதைவுற்று ஆவியாகிக் காற்றில் கரைந்து விடுகிறது.

இதே வேலைதான் அண்டப்பெருவெளியிலும் நடக்கிறது. ஆனால் மறுதலையாக; உல்ட்டாவாக.

சுத்தப்பெருவெளியில் உள்ள ஆற்றல், முதலில் அணுக்களாக, அடுத்து அணுத்தொகுதிகளாக என்னும் மூலமாக உருவாகி, அவற்றின் கூட்டுச் சேர்க்கைதான் காற்று, நெருப்பு, திரவம், திடப்பொருள் என மாறுபாடு அடைகின்றன.

இத்தனைக்கும் காரணமான இந்தப் பேராற்றலுக்கு அவரவர் விருப்பத்திற் கேற்ப பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். மெஞ்ஞானமும், விஞ்ஞானமும் சொல்லும் உண்மை இதுவே. அதுமட்டுமல்ல,மெஞ்ஞானமும், விஞ்ஞானமும் கலந்து கைகோர்க்கும் இடமும் இதுதான்.

"எல்லாவற்றிலும் என்னையே காண்கிறேன்" என்று கிருஷ்ண பரமாத்மா சொன்னதாகக் கீதை சொல்கிறது.

'தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்" என்று இரண்யகசிபுவிடம் பிரகலாதன் சொன்னதும் இதுவே. "


--- தனது உரை முடிந்து விட்டதற்கு அடையாளமாக காகிதக் கற்றைகளை
மடித்து, அவையினரை நோக்கிக் கைகூப்பி வணங்கினார் பேராசிரியர் சாம்பசிவம்.


எல்லோருடைய மனத்திலும் சந்தோஷம் கலந்த திருப்தி நிலவியது. அவையிலிருந்த அத்தனை பிரதிநிதிகளும் எழுந்து நின்று அவருக்குத் தங்கள்
நன்றியையும் மரியாதையையும் தெரிவித்தனர்.


ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வேகமாக மேடையை நோக்கி விரைந்தார்.


(தேடல் தொடரும்)

Tuesday, November 11, 2008

ஆத்மாவைத் தேடி....16

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


16. சூரியன் வருவது யாராலே?..


சிறிதளவு நீரை அருந்திவிட்டுப் பேராசிரியர் சாம்பசிவம், தனது உரையைத் தொடர்ந்தார்:

"இறைவனே பிரபஞ்சமாகத் தன்னை சிருஷ்டித்துக் கொண்டார் என்று உபநிஷதங்களிலிருந்து மேற்கோள் காட்டி யோகி குமாரஸ்வாமி சொன்னார்.


"இதுலே ஓர் உண்மைபார்த்தீங்களா?.. படைக்கப்பட்ட எந்தப் பொருளும் இயங்காமல் இல்லை. அதுபோலத்தான் இந்த அகண்டப்பெருவெளியில் இருக்கும் அத்தனையும் இயங்கிக் கொண்டேஇருக்கின்றன. வெறுமனே 'இயங்குகின்றன' என்று சொன்னால் மட்டும் போதாது. எப்படி இயங்குகின்றன, எதனால் இயங்குகின்றன என்பதும் அடிப்படை கேள்விகள்.


"இதைச் சொல்லும்பொழுது எங்கத் தமிழ்நாட்டு கவிஞர் ஒருவரோட பாட்டு என் நினைவுக்கு வர்றது. அந்தக் கவிஞர் பிறந்த ஊர்ப்பெயரை முன்னால் போட்டு, நாமக்கல் ராமலிங்கம்பிள்ளைன்னு நாங்க சொல்வோம். சின்னஞ்சிறு குழந்தைகளுக்காக நிறைய பாட்டுகள் எழுதியிருக்கார். அவர் எழுதின பாட்டு ஒண்ணுலே, இந்தக் கேள்வியைக் கேட்டு, சூரியனும், சந்திரனும் வானில் இப்படிச் சுற்றித் திரிகின்றனவே, ஒருநாள் தவறாம எப்படி இது நடக்கறது.. இதெல்லாம் யாராலே நடக்கறது, இந்த வேலைக்கெல்லாம் அதிகாரியா இருந்து செயல்பட வைக்கறது யாருன்னு ஆச்சரியப்பட்டிருக்கார். இதையெல்லாம் தெரிஞ்சிக்கணும்னு குழந்தைகள் மனசிலே ஆர்வத்தை விதைச்சிருக்கார், அந்த அற்புதமான கவிஞர். இது தான் அவரோட அந்தப் பாடல்:


"சூரியன் வருவது யாராலே?.. சந்திரன் திரிவதும் எவராலே?
காரிருள் வானில் மின்மினி போல் கண்ணில் தெரிவன அவையாவை
பேரிடி மின்னல் எதனாலே, பெருமழை பெய்வதும் எவராலே
யாரிதற்கெல்லாம் அதிகாரி அதை நாம் எண்ணிட வேண்டாமோ?"


--இந்தக் கேள்விகளுகெல்லாம் பதில் தெரிந்தால், அண்டசராசரத்தில் இவையெல்லாம் இயங்குவதின் அருமை புரியும். அது புரிந்தால், அடுத்தபடி இந்த இயக்க ஆற்றலின் மேன்மையும் புரியும். ரொட்டீனா நடக்கற இந்த வேலையெல்லாம் நடக்கவில்லை என்றால், தான் என்ன ஆவோம் என்பதும் தெரியும். தெரிந்தால், கையெடுத்துக் கும்பிடத்தோன்றும்.

சூரியனின் வயதை-- ஏறத்தாழ ஐந்தாயிரம் மில்லியன் வருடங்களுக்கு முன்னதானது அது என்று கணித்திருக்கிறார்கள். பத்தாயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே முகிழ்த்த பழைமையான விண்மீன்கள் கூட இந்த அகண்டவெளியில் இப்போ இருக்கறதா கணக்குப்போட்டு சொல்கிறார்கள்.
நதிமூலம், ரிஷிமூலம் என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்த விண்மீன் களுக்கும், கோள்களுக்கும் மூலம் தான் என்ன?.. இவையெல்லாம் எப்படி ஜனித்தன, இப்படிப்பட்ட நிலையை எப்படி எய்தின என்பதெல்லாம் விண்வெளி பேரதிசயங்களின் அடிப்படையான உண்மைகள்.

அண்டவெளியில் பரவியிருக்கும் துகள்கள் (cosmic dust) பல்வேறு திசைகளில் அலைக்கழிக்கப்படுகின்றன என்றும் அந்த அலைக்கழிப்பில் ஏற்படும் உராய்வில் பரந்த வெளியில் பரவிக்கிடக்கும் மின்காந்த சக்தியால் மூலக்கூறுகளில் அணுக்கள் சேகரமாகின்றன என்றும் சிறிய, பெரிய துகள்கள் ஒன்று சேர்ந்து ஒன்றில் ஒன்று கலந்து கட்டிக் கலக்கின்றன என்றும் சொல்கிறார்கள்.

பெளதீக மொழியில் அணுக்கூட்டுக்கு மாலிக்யூல்ஸ் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். மின்காந்த சக்தியுடன் மாலிக்யூல்ஸ்க்கு இணைப்பு ஏற்பட்டால் அடர்த்தியாகி அதற்கு உருவம் கிடைக்கிறது. இந்த அற்புத செயலுக்கு தனது சார்பு நிலைத் தத்துவத்தில் அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் கண்டுபிடித்த சமன்பாட்டைப் பொருத்திப் பார்த்தால் பளிச்சென்று விடை கிடைக்கும். ஆக, பெளதீக விதிப்படி அருவத்திற்கு உருவம் கொடுக்கலாம்.

அணுக்களின் கூட்டமைப்பு தான் அத்தனை பொருட்களும். கலந்து கட்டி பல அணுக்கள் சேருகையில் அப்படிச் சேரும் தன்மைக்கேற்ப அந்தப் பொருளுக்கு வடிவமைப்பு கிடைக்கிறது. அவற்றின் உயிர்ப்புடனான இயக்கத்தால், இயல்பாக அந்தந்த பொருள்களில் அழுத்தம் ஏற்படுகிறது. அழுத்தத்தினால், வெப்பம் உண்டாகி, வெப்பம் மின்காந்த சக்தியாக உருவெடுக்கிறது.

அறிஞர்கள் கூடியிருக்கும் இந்த அவையில், உங்களுக்கெல்லாம் மிகவும் பரிச்சியமான விஞ்ஞான உலகின் பாலபாடங்களை நான் சொல்லிக் கொண்டிருப்பது எனக்குப் புரிகிறது. இதற்குப் பிறகு நான் சொல்லவிருக்கும் சில தகவல்களுக்கான ஆரம்பமாக இவை இருப்பதினால், ஒரு தொடர்ச்சி கருதி இவற்றைச் சொல்ல வேண்டி நேரிட்டிருக்கிறது என்பதை சொல்ல விரும்புகிறேன்.

மேலும் தொடருவதற்கு முன் நிமிர்ந்து அந்த சபைச் சுற்றி ஒரு முறை நோட்டமிட்டு விட்டு, மைக்கை சரிசெய்து கொண்டார் பேராசிரியர் சாம்பசிவம்.

(தேடல் தொடரும்)Thursday, November 6, 2008

ஆத்மாவைத் தேடி....15

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

15. அண்டவெளியில் அதிசயம்

புவியியல் பேராசிரியர் சாம்பசிவம் தனது உரையை ஆரம்பிக்கும் பொழுது மதியம் மணி இரண்டுக்கு மேலாகிவிட்டது. நிறுத்தி நிதானித்துப் பேசும் அவர் பேச்சை மிக உன்னிப்பாக எல்லோரும் செவிமடுத்தனர்.

காலை யோகி குமாரஸ்வாமியின் உரை பிரபஞ்சத் தோற்றம் குறித்து உபநிஷத்துக்கள் என்ன சொல்கின்றன என்பதாய் இருந்ததினால், இப்பொழுது அந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி புவியியல் விஞ்ஞான உண்மைகளாய் இவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்கும் ஆவல் எல்லோருக்கும் இருந்தது.

பேராசிரியர் சாம்பசிவம் நிதானமாகத் தன் உரையை ஆரம்பித்தார்.
"நமக்குத் தெரிந்த சூரியனின் குடும்பத்தில் பூமியைச் சேர்த்து ஒன்பது கோள்கள். பல கோள்களுக்குத் துணைக்கோள்கள் உண்டு. கவிஞர் பாடிய வெள்ளை நிலாதான் பூமிக்குத் துணைக்கோள்; இயற்கையான துணைக்கோள். செவ்வாய்க்கு இரண்டு என்றால், வியாழனுக்குப் பதினாறு துணைக்கோள்கள்! இதுவரை கண்டுபிடிக்காத எத்தனையோ துணைக்கோள்கள் சூரிய மண்டலத்தில் சூரியனைச் சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் அபிப்ராயப்படுகிறார்கள்.

"சூரியன், சந்திரன், மற்றும் வானவெளியிலும் மினுக்கிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள்-- நமது புலனுக்குத் தெரியும் இவை சுற்றிக் கொண்டிருக்கும் விண்வெளி மட்டுமே அண்டவெளியல்ல. மிகவும் சகிதிவாய்ந்த தொலை நோக்கியால் விண்வெளியைப் பார்த்தால், ஆச்சரியப்பட்டுப் போவோம். பிரகாசமிக்க ஒளிவெள்ள கோலாகலம் தான்! அந்த பால்வெளி வீதியில் ஒளிவெள்ளத்தைப் பீச்சியடிக்கும் பல கோடி விண்மீன்களின் சாகசம் தான் அந்த வெளிச்சத் திருவிழா!

"பால்வெளியைப் பற்றி இதுவரை நமக்குத் தெரிந்தவைகளை விட, தெரியாதவை அதிகம். பன்மடங்கு பெருக்கம் கொண்ட கோடிக்கணக்கான பால்வெளிகளின்தொகுப்பே அகண்டவெளி. கோடிக்கணக்கான பால்வெளி மண்டலங்கள்; கோடிக்கணக்கான விண்மீன்கள்! அந்தக் கோடியில் நமக்குத் தெரிந்த ஒரு விண்மீன்,சூரியன்! அவ்வளவுதான்!

"கற்பனைக்கும் விஞ்சிய அகண்டப் பெருவெளி இந்த அண்டவெளி. இன்னும் அறிய வேண்டிய இயற்கையின் சூட்சுமங்கள், அனந்த கோடி! ஒன்றுக்கு ஒன்றான ஈர்ப்பு விசையால் தான் அண்டத்திலுள்ள அனைத்தும் வலம் வந்து கொண்டிருக்கின்றன என்பதை அறிவோம். இந்த ஈர்ப்பு விசை இற்றுப் போனதால், அண்டவெளியிலிருந்து காணாமல் போன அல்லது வெவ்வேறான திசைகளில் இடம் மாறிப்போனவை எத்தனையோ!

"ஆக ஒன்றுடன் ஒன்றான இந்த ஈர்ப்பு விசைதான் கோள்கள், விண்மீன்கள்
என்ற அத்தனையின் ஆக்கத்தையும், அழிவையும் தீர்மானிக்கின்றன். இதைத்
தவிர அண்டவெளியைப் பற்றிய ஒரு முக்கியமான சமாச்சாரம் சொல்ல
வேண்டும்" என்ற பேராசிரியர் சாம்பசிவம் தொண்டையைச் செருமிக் கொண்டார்.

(தேடல் தொடரும்)

Monday, November 3, 2008

ஆத்மாவைத் தேடி....14

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


14. இயற்கையாய் பரிணமித்த இறைவன்

ரிஷிகள் தாங்களே அனுபவபூர்வமாக உணர்ந்த உண்மைகளாக இந்த உபநிஷத்துக்கள் இருந்தாலும், எந்த ரிஷிபெருமானும், எந்த இடத்தும், எனது கருத்து இது என்று சொல்லவில்லை. "எங்களுக்கு இது பற்றி சொல்லியவர்கள், இப்படிச் சொன்னார்கள்" என்று மிகுந்த அடக்கத்துடன் சொல்கிறார்கள்.

வேதங்கள் கூட ரிக்,யஜூர்,சாம, அதர்வண என்று நான்காக வியாச பெருமானால் தொகுக்கப்பட்டு, மூன்றாகப் பிரிக்கப்பட்டவைதாம். தேவர்களிடம் பிரார்த்திக்கும் 'சம்ஹிதை', யாக விவரங்களை விவரிக்கும் 'பிராம்மணம்', உபநிஷதங்களாம் உண்மையான உண்மைகளை உள்ளடக்கியிருக்கும் 'ஆரண்யகம்' என்று மூன்று பிரிவுகள். உப நிஷத்துக்களில், பதினாங்கை முக்கியமாகக் குறிப்பிடுகிறார்கள். அவற்றில், ஐதரேய, கெளசீதகி இரண்டும் ரிக் வேதத்திலும், ஈச,கட, தைத்திரீய, பிருஹதாரண்யக, சுவேதஸ்வதர, மைத்ராயணீ, மஹாநாராயண-இவை ஏழும் யஜூர் வேதத்திலும், கேன, சாந்தோக்கிய ஆகிய இரண்டும் சாம வேதத்திலும், ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய ஆகிய மூன்றும் அதர்வண வேதத்திலும் அமைந்துள்ளன.

பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து அதர்வண வேதத்து முண்டக உபநிஷத்தில் நிறைய சொல்லபட்டிருக்கிறது.

இறைவன் பிரபஞ்சத்தைப் படைத்தான். சரி. எப்படிப் படைத்தான் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? அவன் பிரபஞ்சத்தைப் படைப்பதற்கு முந்தைய நிலை எப்படிஇருந்தது? பிரபஞ்சத்தைப் படைக்கையில் பரம்பொருளின் மனநிலை எவ்வாறு இருந்தது?-- நமது எல்லா சந்தேகங்களுக்கான விளக்கங்களைக் கோர்வையாகச்சொல்லி, அறியாமை இருளை அகற்றுகிறது, முண்டக உபநிஷதம்.

ஓர் ஆச்சரியம் என்னவென்றால், இறைவன் கூட தவம் செய்து தான் இந்த பிரபஞ்சத்தைப் படைத்தாராம்! அது ஞானமயமான தவம். எந்த நோக்கமும் அற்ற, இயல்பானதவம். தவத்தின் மேன்மையையும், பெரும் பெருமைகளையும் சொல்ல, அந்தப் பெருமானே தவம் மேற்கொண்டான் போலும்!

தானே தவமியற்றி, அந்த தவத்தின் பயனாகத் தானே வேறொன்றாக வெளிப்பட்டது தான் இந்த தவத்தின் விசேஷம். எந்த பற்றுமின்றி ஞானமயமாக மேற்கொண்ட தவத்தின் பயனாய் விளைந்தது இந்த பிரபஞ்சம்.

சூன்யத்திலிருந்து எதுவும் தோன்றாதாகையால், தோற்றுவிக்க ஒரு சக்தி செயல்பட்டிருக்க வேண்டும். செயல்பட்ட அந்த சக்தியே எல்லாவற்றிலும் நிறைந்திருக்க வேண்டும். தோன்றாநிலையிலிருந்து இறைவன் இயற்கையாய் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட கோலம் இது! வெளிப்பட்டாலும் ஒவ்வொரு துகளிலும், ஒவ்வொருதொடர்ச்சியான பரிணாம வளர்சியிலும் அந்த சக்தியின் கூறு உள்ளீடாக நிரவி, நீக்கமற நிறைந்திருக்கும் விஞ்ஞான பேருண்மை இது.


லம்--ப்ருதிவ்யாத்மனே கந்தம் ஸமர்ப்பயாமி!
ஹம்- ஆகாசாத்மனே புஷ்பை பூஜயாமி!
யம்- வாய்வாத்மனே தூபமாக்ராபயாமி!
ரம்- அக்ன்யாத்மனே தீபம் தர்சயாமி!
வம்- அம்ருதாத்மனே அம்ருதம் மஹா-நைவேத்யம் நிவேதயாமி!
ஸம்-ஸ்ர்வாத்மனே ஸர்வோபசார-பூஜாம் ஸமர்ப்ப்யாமி
--ஸ்ரீ ருத்ரம்

'லம்' என்ற பிருதிவி பீஜத்தால், பிருதிவி வடிவான உமக்கு சந்தனம் சமர்ப்பிக்கிறேன்.
'ஹம்' என்ற ஆகாச பீஜத்தால், ஆகாய வடிவான உம்மை மலர்களால் பூஜிக்கிறேன்.
'யம்' என்ற வாயு பீஜத்தால், வாயுவடிவான உமக்கு தூபம் காட்டுகிறேன்.
'ரம்' என்ற அக்னி பீஜத்தால், அக்னிவடிவமான உமக்கு தீபம் காட்டுகிறேன்.
'வம்' என்ற அம்ருத பீஜத்தால், அம்ருதவடிவான உமக்கு அம்ருத மாஹா நைவேத்தியத்தை தெரிவிக்கிறேன்.
'ஸம்' என்ற ஸர்வாதம் பீஜத்தால், ஸர்வாத்மகரான உம்மை எல்லா உபசாரங்களாலும் பூஜிக்கிறேன்.

--என்று ஸ்ரீருத்ரத்தில் பூஜாமந்திரங்கள் ந்யாஸம் பகுதியில் வருகின்றன.

நீர், நிலம், ஆகாயம், தீ, காற்று-- என்ற ஐந்து பெரும் சக்திகளிலும் இறைசக்தி உறைந்திருப்பதை உணரத்தலைப்பட்ட பின், இயற்கை வழிபாடு துவங்கியது.

இறைவன் இயற்கையாய் இருந்து காப்பது புத்திக்குப் புரிந்ததும், இயற்கையோடு இயைந்த வாழ்வு கொள்வதை பாக்கியமாக எண்ணி மனம்பரவசப்பட்டது. இயற்கையே இறைவன், இறைவனே இயற்கை என்னும் ஞானம் பிறந்தது.

இயற்கையின் அற்புத அழகில் மயங்கி மனத்தைப் பறிகொடுத்த கவிஞர்கள் ஏராளம். வேர்ஸ்ட்வொர்த்திலிருந்து பாரதி வரை, அவருக்குப் பின் வந்தோரும் இயற்கையில் இறைவனை உள்ளார்ந்து உணர்ந்து பரவசப் பட்டிருக்கிறார்கள். 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா!" என்று மகிழ்ந்து கூத்தாடியிருக்கிறார்கள்.

பிரபஞ்சத் தோற்றத்திலிருந்து--இறைவனும் சிருஷ்டியைத் தோற்றுவிப்பதாகத் தன்னையே பிரபஞ்ச இயற்கையாய் சிருஷ்டித்துக் கொண்டதிலிருந்து, மனிதம் வரை- அந்த சிருஷ்டியின் நீட்சியை 'மனிதனின் ஜனனத்திலிருந்து' பகுதியைப் பற்றி சொல்ல இருப்பவர்கள் கூறக் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு விஷயத்தை மிகுந்த தாழ்மையுடன் இந்த சபையில் விண்ணப்பிக்கக் கடமைப்பட்டுள்ளேன். மனிதகுலத்திற்குக் கிடைத்த மகத்தான அளப்பரிய செல்வமான உபநிஷத்துக்களின் வீரியத்தை இங்கொன்றும் அங்கொன்றுமாய் எடுத்துச் சொல்லிய குறிப்புகளாலும், காகிதத்தில் அச்சடித்த வெற்று உரைகளாலும் உணர்ந்து விட முடியாது. அவற்றின் சாரம், தவமிருந்து பெற்ற செல்வம். முனிவர்கள் மட்டும் அல்லர்; ஜனகர், அஜாதசத்ரு போன்ற மாமன்னர்களும் தவவலிமை கொண்டு ஞானத்தைத் தேடிப்பெற்ற செல்வம்.

வேத, உபநிஷத மந்திரங்களின் உண்மையான பொருள் என்பது மிகவும் அர்த்தம் நிரம்பியது. திரும்பத் திரும்ப அவற்றைப் படிப்பதின் மூலமும், அவற்றை அனுதின நடைமுறை வாழ்க்கை நடவடிக்கைகளில் கடைபிடிப்பதின் மூலமும், அவற்றில் தோய்ந்தும், திளைத்தும், ஆனந்தித்தும் அடையும்படியான அனுபவம் இது. அவரவர் சுய அனுபவத்தின் மூலமே இது சாத்தியமாகும். உடல் ஆரோக்கியமும், மனநிம்மதியும், வாழ்க்கையில் சந்துஷ்டியும் இதனால் சித்தியாகும். தூய வெள்ளை மனத்துடன்,தினம் தினம் நம்மை வழிநடத்திச் செல்லும் பரம்பொருளின் மாறாத அன்பில் மனம் செலுத்தி அடையக்கூடிய ஞானச்செல்வம் இது.

ஒன்று மட்டும் நிச்சயம். கிடைத்தற்கரிய பேறு மனிதம். அந்த மனித வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ, அன்பை ஒருவொருக்கொருவர் பகிர்ந்து கொள்ள, நம் முன்னோர்கள் நமக்களித்த இந்த பழம்பெரு செல்வங்கள், கைவிளக்காக இருந்து ஒளிகாட்டி வழிநடத்திச் செல்லும் என்பது மட்டும் உண்மை.

இத்துடன் எனது குறிப்புகளுக்கான உரையை முடித்துக் கொண்டு, அடுத்த அமர்வில் உங்களைச் சந்திக்கக் காத்திருக்கிறேன்.

சகோதர, சகோதரிகளே! உங்களுக்கு மிக்க நன்றி. நமஸ்காரம்" என்று யோகி குமாரஸ்வாமி பேசிமுடித்ததும், அத்தனை பிரதிநிதிகளும் எழுந்து நின்று அவருக்குத் தங்கள் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.


மதிய உணவிற்குப் பின், பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றிய தனது உரையைப் படிக்க பூவியல் பேராசிரியர் சாம்பசிவம் தயாராக இருந்தார்.

(தேடல் தொடரும்)

Friday, October 31, 2008

ஆத்மாவைத் தேடி....13

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

13. சீவனாரும் சிவனாரும்

'உப' என்றால் அருகே என்று பொருள். குருகுலவாசத்தில், குரு தனது சீடர்களை அருகே அமர்த்தி உபதேசிப்பதே வழக்கம். குரு வாய்மொழியாகச் சொல்பனவற்றைக் கேட்டுப் புரிந்து கொள்வதான பயிற்சிக்களம் அது. சீடர்களும் குருவின் ஆசார அனுஷ்டான நியமங்களுக்கான பணிவிடைகளைச் செய்து, ஒழிந்த நேரத்தில் இந்தக்கல்வி கேட்டனர். அருகே அமர்த்திச் உபதேசித்ததினால், 'உபநிஷத்துக்கள்' என்று வழங்கப்பட்டன.


முதலில் மூலாதாரமான படைத்தவன், அடுத்து படைத்தவனிலிருந்து வெளிப்பட்ட இந்தப் பிரபஞ்சம், அதற்கடுத்து உயிர் சுமந்து உலவும் அறிவுலக பிரஜைகளான மனிதர்--இந்த மூன்றையும், இந்த மூன்றிற்கானத் தொடர்புகளையும் உபநிஷத்துக்கள் அலசுகின்றன. ஒன்றை அடிக்கோடிட்டுச் சொல்ல வேண்டும். அதை எந்நேரத்தும் மறந்துவிடலாகாது. பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னால் சொல்லப்பட்ட இவை, அந்தப் பழைமையான காலத்து வளர்ச்சிக்கேற்பனவான உண்மைகளைச்சுமந்து கொண்டிருக்கின்றன என்பதை மறந்துவிடலாகாது.


வெளிச்சம் கிஞ்சித்தும் இல்லாத கும்மிருட்டில் நின்று கொண்டு, கைக்கு தட்டுப்பட்டதைத் தொட்டுத் தடவி, இது-இன்னது-என்று முயற்சித்து சொன்னது, பல்லாயிரம்ஆண்டுகளுக்குப் பின்னால்,-- இந்தப் பல்லாயிரம் ஆண்டுகால வளர்ச்சிக்குப் பின்னால்--அப்பொழுது சொன்னது சரி என்று நிரூபிக்கப்படுகிறதென்றால், இன்றைய இத்தனை நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னான இந்த வளர்ச்சியை, அன்றே அந்தத் தவச் செல்வர்கள் தமது ஞானதிருஷ்டியில் கண்டுவிட்டார்கள் என்பதே நம்மை பேராச்சரியத்தில் மூழ்க வைக்கும் உண்மை. இது அவர்களின் தவத்தினால், மனத்தை ஒருமுகப்படுத்தி அயராது சிந்தனை வயப்பட்டதினால், கிடைத்த செல்வம் என்பதை மறக்கலாகாது.


அத: ஸமுத்ரா கிரயச்ச ஸர்வே: ஸ்மாத்
ஸ்யந்தந்தே ஸிந்தவ: ஸர்வரூபா
அதச்ச ஸ்ர்வா ஓஷதயோ ரஸச்ச
யேனைஷ பூதைஸ்திஷ்ட்டதே ஹயந்தராத்மா


-- இது முண்டக உபநிஷத்தில் வரும் ஒரு ஸ்லோகம்.


சமுத்ரம், மலைகள் ஆகிய எல்லாவற்றின் தோற்றம் அவரிடமிருந்தே; பல்வேறு நதிகள், செடிகொடிகள் அனைத்தும் அவரிடமிருந்தே வெளிப்பட்டன. மொத்தத்தில்அனைத்து இயற்கை சக்திகளாலும் சூழப்பட்டதே அந்தராத்மா. இதற்கு அர்த்தம், இறைவனிடமிருந்து வெளிப்பட்ட பஞ்சபூதங்களின் வெவ்வேறு தோற்றங்களே,இந்த இயற்கை தந்திடும் வளம்; மனிதனின் உடம்பும் பஞ்சபூதங்களின் தொகுதியே. இறைவன் இந்த உடனினுள் ஆத்மாவாக இருந்து கொண்டு அருள் பாலிக்கிறான்.


இன்னொரு ஸ்லோகம், இறைவன் தான் அனைத்திற்கும் மூலமாக இருக்கிறார் என்கிறது. என்றென்றும் அழிவில்லாத பிரம்மமாய் இருப்பவரும் அவரே. இதயத்தில் வாசம் செய்யும் அவரை அறிந்து கொள்பவன் அனைத்து அறியாமைகளிலிருந்தும் விடுபடுகிறான் என்கிறது.


புருஷ ஏவேதம் விச்வம் கர்ம தபோ ப்ரஹ்ம பராம்ருதம்
ஏதத்யோ வேத நிஹிதம் குஹாயாம்
ஸோ வித்யா க்ரந்திம் விகிரதீஹ ஸோம்ய

--இதுவும் முண்டக உபநிஷத்து ஸ்லோகம் தான்.

'முண்ட' என்றால் களைதல், நீக்குதல் என்று பொருள். அறியாமை இருளை நீக்கி, உண்மைக்கான வெளிச்சத்தை வாரி இறைக்கிறது இந்த உபநிஷதம்.

ஆக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் இறைவனிடமிருந்தே வெளிப் போந்தவை; இறுதியில் அவை அனைத்தும், கடலைச் சேரும் நதிபோல இறைவனையேச் சேர்ந்து, மீண்டும் வெளிப்படும் என்பது தான் தத்துவ நெறி.

ஒடுக்கத்திலிருந்து விடுபட்ட படைப்பு, படைப்பு நிலையை பூர்த்தி செய்தபின்,
மீண்டும் ஒடுக்கத்தினிடையே ஒடுங்கும். இது ஒரு பிரதட்சண நிலை.

"சீவன் என்ன சிவனார் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்த பின்
சீவனார் சிவனா யிட்டிருப்பரே"
---திருமூலர்

யோகி குமாரஸ்வாமி சுவாரஸ்யத்துடன் மேலும் தொடர கையில் வைத்திருந்த கத்தை காகிதத் தாள்களின் அடுத்த பக்கத்தைத் திருப்பினார்.

(தேடல் தொடரும்)

Tuesday, October 28, 2008

ஆன்மாவைத் தேடி....12

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


12. குருகுல உபதேசம்

புலர்ந்தும் புலராத அதிகாலைப் பொழுதின் நிர்மலமான நிசப்தத்தில் 'டணார், டணார்' என்று கோயில் மணி ஒலிப்பதைப் போல, அரங்கம் நிறைந்த அந்த அமைதியில் யோகி குமாரஸ்வாமியின் குரல் ஏற்ற இறக்க தாள கதியுடன் ஸ்பஷ்டமாக ஒலித்தது."உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே"

"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர்ச் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்"

பிரபஞ்சம் குறித்த பேச்சு ஆதலால், ' உலகு' எனத்தொடங்கும் இந்த இரண்டு செய்யுள்களும், அவற்றின் ஒப்பற்றக் கருத்தும் ஒப்புமை நோக்கி மகிழத்தக்கது. முதலில் பாடிய பாடல், கம்பனின் இராமாயண, கடவுள் வாழ்த்துப் பாடல். அடுத்தது தெய்வப்புலவர் சேக்கிழாரின் பெரிய புராண இறை வாழ்த்துப் பாடல். இந்த இரண்டும் இந்த இரண்டு காவியத்தின் முதல் பாடலாக அமைந்து 'உலகு' என்றேத் தொடங்குகிறது.

எந்தச் செயலையும் செய்யத் தொடங்கும் பொழுது இறைவனை வணங்கி, தொடங்கும் செயலை நல்லபடி முடித்துத் தர அவனை வேண்டி, செயலைத் தொடருவது இந்த தேசத்தின் வழக்கம். செயலும் அவனே, செயலூக்கியும் அவனே, செய்பவனும் அவனே.


பிரபஞ்சத்தின் தோற்றுவாய் குறித்து எக்காலத்தும் பல்வேறு பட்ட சிந்தனைகள் கிளர்ந்திருக்கின்றன எல்லாம் அவன் திருவிளையாடல்களே.
படைப்பையும் படைத்து விட்டு, அந்தப் படைப்புகளின் மூலாதாரமாக அவனே இருந்து கொண்டு, படைக்கப்பட்டவை என்னன்ன. எப்படி என்று அந்த படைப்பையே சிந்திக்கத் தூண்டும் அவன் செயல், திருவிளையாடல் அல்லாமல் வேறு என்ன?..

அவனே இந்த பிரபஞ்சத்தைப் படைத்தான். ஆகவே இந்த பிரபஞ்சம் பூராவிலும் அவனே நிறைந்து இருக்கிறான்.

நிலம், நீர், வாயு, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களும் அவனிலிருந்துத் தோன்றியவை. அவனின்று தோன்றியதால், இவற்றின் மூலம் அவன் என்பதால், பஞ்சபூத மூலக்கூறுகளிலும் அவனே உள்ளான். அவனே அவை;
அவையே அவன்.

ஒன்றை இரண்டாக்கினாலும் சரி, ஐந்தாக்கினாலும் சரி, அதையே ஐய்யாயிரம் ஐம்பதாயிரம் ஆக்கினாலும் சரி, ஆக்கிய அந்த அனைத்தும் ஒன்றின் கூறுகளே என்கிற தத்துவப்படி, அத்தனை அணுக்கூறுகளும் அவனின் கூறுகளே. அணுவின் துகளுக்கு துகள் அவனே. ஒவ்வொரு துகளுள்ளும் எதிர் எதிர் சக்திகளாக உருவாகி, அவற்றை அசையவைத்து ஆட்டுவிக்கும் அலகிலா விளையாடுடைய தலைவன் அவனே.

மானிடத்தின் அக அனுபவ மேன்மைக்கான தேடலின் வெளிபாடு தான் யோகம். சிந்தையில் ஆழ்ந்த வித்தென ஒன்றை ஊன்றி உள்நோக்கிப் பார்த்தல்; உள்ளார்ந்த அக மற்றும் வெளியார்ந்த பிரபஞ்ச இரகசியங்களை, இது ஏன், எதனால், எப்படி என்று கிளர்த்தும் சிந்தனைகளைக் கிளறி விட்டு தன்னை மறந்து தியானித்தல்; தியானித்தல் என்றால் சாதாரண தியானித்தல் இல்லை.. யோகநிஷ்டையில் அமர்ந்து, அகழ்வாராய்ச்சியாய் தன்னையே குடைந்துப் பார்க்கையில், தன்னைச் சுற்றியும், தன்னையே மறைத்தும் மாய்த்தும் கரையான் புற்று எழும்பி நிற்பினும் நிலைகுலையாது தன்னைத் தோண்டி ஞானம் காணல்.

இந்திய தேசத்து ரிஷிகளும், யோகிகளும் இப்படித் தங்களையே தோண்டித் துருவி தியானித்து வெளிச்சம் கிடைக்கப் பெற்றிருக்கின்றனர்; தாங்களே வெளிச்சமாகவும் ஆகிப் போயினர்.

வேதகாலத்தின் மறுமலர்ச்சி தான் உபநிடதங்கள் என்று தாராளமாகச் சொல்லலாம். பிரபஞ்சமே இருட்டில் உறக்கிக் கொண்டிருக்கையில், பாரதத்திலிருந்து வெளிச்சம்புறப்பட்டது நாம் பெருமைப்படத்தக்க ஒன்று. கி.மு. 1000க்கும் கி.மு. 300க்கும் இடைப்பட்ட காலத்தில் இப்படிப்பட்ட ஒரு சிந்தனையை நினைத்துப் பார்க்க முடியுமா?..

பிரபஞ்சம், இறைவன், மனிதன் - இவற்றிக்கிடையான உறவை ஆராய்வதே உபநிடதங்கள். எல்லாமே ஆழ்ந்த தவச்சிந்தனையின் வெளிப்பாடுகள்..
குருகுல வாசத்தில் கேட்டல், கற்றல் என்கிற முறையே; குருவிடமிருந்து
அவர் பெற்ற அனுபவங்களை உபதேசங்களாக சீடன் கேட்டு என்கிற முறையில் இந்த கிடைத்தற்கரிய செல்வம் அனைத்தும் ஆதி காலத்தில் வாய்மொழியாகவே பரவியிருக்கிறது.

உபநிடதங்களைப் பற்றி நிறையச் சொல்ல வேண்டும்.." என்று கொஞ்சம்
நிறுத்தித் தொடர்ந்தார் யோகி குமாரஸ்வாமி.

(தேடல் தொடரும்)

Sunday, October 19, 2008

ஆத்மாவைத் தேடி....11

ஆன்மீகத்தின் அடுத்த கட்டம் நோக்கி....

11. கிரெளஞ்சப் பட்சி

அப்பொழுது தான் அந்த அதிசயம் நடந்தது.

'படபட'வென்ற சப்தத்துடன் அவர்கள் விவாதித்துக் கொண்டிருந்த அந்த மண்டபத்தினுள் இணையாக நுழைந்த இரு கிரெளஞ்சப் பறவைகள், நீண்டு விரிந்த தங்கள் சிறகுகளை மடக்கி மண்டபத்தின் நடுமத்தியில் அமர்ந்தன. அமர்ந்ததும் அந்த இரண்டு பறவைகளும் தங்கள் அலகை நீட்டி, கருமணிகளென டாலடித்த தங்கள் கருவிழிகளை இப்படியும் அப்படியும் அலையவிட்டு அங்கு அமர்ந்திருந்த அத்தனை பேரையும் அளவெடுப்பது போல் பார்த்தன.

கிருஷ்ணமூர்த்திக்கு இருப்பு கொள்ளவில்லை. இராமயண காவியத்தை ஆரம்பித்து வைத்தது கிரெளஞ்ச பட்சியன்றோ என்று அவர் நினைவுகள் தாம் படித்துக் களித்த இதிகாச நினைவுகளில் அழுந்தின. 'ஆத்மாவின் தேடல் நோக்கி அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில், இந்த ஜோடிப்பறவைகள் ஆசி கூறி ஆரம்பித்து வைக்கின்றனவோ? என்னே இறைவனின் கருணை!' என்று அவருக்கு நெற்றி வியர்த்தது.

அவருக்கு என்ன தோன்றியதோ என்னவோ, அந்த பட்சிகளைப் பார்த்து மனோகர்ஜி நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து நமஸ்கரித்தார்.

அந்த இணையில் ஆண் கிரெளஞ்சம் தனது நீண்ட அலகில் எதையோ கொத்திக்கொண்டிருந்ததை முதலில் பார்த்துச் சொன்னவர், தனஞ்செயன் தான். விஞ்ஞானி தனஞ்செயன் அணுக்களின் ஆற்றல் பற்றியும், அவற்றின் சேர்க்கை--செயல்பாடுகள் பற்றியும் தனது ஆய்வு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வந்திருந்தவர்.

"ஆமாம்..ஆமாம்" என்று கிட்டத்தட்ட எல்லோரும் ஏகோபித்து, அந்த ஆண் கிரெளஞ்சப் பறவை எதையோ தன் அலகில் அடக்கி வைத்திருப்பதைப் பார்த்து முணுமுணுத்தனர். சடாரென்று மண்டப முகப்பு நோக்கிப் பறந்து, உடனே அங்கு அமர்ந்திருந்த அத்தனை பேரையும் ஒரு சுற்று சுற்றி வந்து, தன் இணை தொடர அந்த அரங்கை விட்டுவெளியே வந்த அந்த கிரெளஞ்சங்கள், எல்லோரும் அவற்றை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, அந்த இடம் விட்டு வெளிப்போந்து, புல் தரையில் இதுவரை பத்திரமாய் அலகில் கொத்தி வைத்திருந்ததை நழுவ விட்டுப் போயிற்று.

அது துப்பியது என்னவாயிருக்கும் என்று பார்க்கின்ற ஆவலில் எல்லோரும் எழுந்து புல்வெளி நோக்கிப் பாய்ந்தனர். போய்ப்பார்த்தால், இரண்டு ஆலம் விதைகள். நல்ல கொழுகொழுப்புத் திண்மையுடன் விதைகள் புல்தரையில் கிடந்தன.

அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, அந்தப் பறவைகள் தியான மண்டபம் தாண்டி, சிவசக்தி கோயில் மண்டப ஸ்தூபியில் வினாடி நேரம் அமர்ந்து, பறக்கத்துவங்கும் விமானம் மாதிரி நேர்கோட்டில் சென்று, 'ஜிவ்'வென்று பிரபஞ்ச வெட்டவெளி நோக்கிப் பாய்ந்தது.

ஒருவனுக்கு ஒருத்தியென வாழும் கிரெளஞ்சப் பறவையின் அந்த இணை சென்ற திசைநோக்கி மனோகர்ஜி கைகூப்பி, 'சிவ..சிவா'என்று உதடுகள் ஜபிக்கக் கும்பிட்டார். பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிச் சொல்லாமல் சொல்லிச் சென்ற கிரெளஞ்சச்செய்தி அவருக்குப் புரிந்து போயிற்று . அதை மற்றவர்களுடன் அவர் பரிமாறிக் கொள்கையில் மிகவும் நெக்குருகித் தளர்ந்தார்.

'எதுவும்-- எதற்காகவோ தான் நடக்கிறது. சில வெளிப்படையாக; சில சூட்சுமமாக. அப்படி சூட்சுமமாக நடக்கும் சிலவற்றைப் புரிந்து கொள்ளும் சக்தியும் சிலருக்குத்தான் வரப்பிரசாதமாகக் கிடைத்திருக்கிறது' என்று நினைத்துக் கொண்டார், ஆந்திராவிலிருந்து வந்திருந்த தத்துவப் பேராசிரியர் சிவசைலம்.

அந்த பிர்மாண்ட 'மகாதேவ நிவாஸை'ப் பராமரிக்கும் பணியாளர்களை கூப்பிட்டனுப்பினார் மனோகர்ஜி. அவர்கள் வந்து பள்ளம் தோண்டி, அந்த இரு ஆலவிதைகளையும் நிலத்தில் போதிய இடைவெளி விட்டு அருகருகே விதைத்தனர். பயபக்தியுடன் நீர் பாய்ச்சினர்.

என்றோ, எப்பொழுதோ, கல்ப கோடி ஆண்டுகள் முன்பு பிரபஞ்சம் உருப்பெற்றதின் நினைவாக, கிரெளஞ்சப்பட்சிகள் அன்புடன் அளித்த அந்த ஆலவிதைகள் விதைக்கப்பட்டதாக எல்லோரும் நினைத்துக்கொண்டனர். நேராக மண்டபம் சென்று இறைவன் அருளுக்கு நன்றி சொல்லி அவன் ஆசி பெற்ற மகிழ்ச்சியில், அரங்கு திரும்பினர்.

அந்த மகிழ்ச்சி இத்தனை ஏற்பாடுகளையும் செய்திருக்கும் மனோகர்ஜியின் முகத்தில் பரவசமாகப் பளீரிட்டது.

(தேடல் தொடரும்)

Wednesday, October 15, 2008

ஆத்மாவைத் தேடி....10

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

10. ரிஷி கொடுத்த வரம்


மொத்தம் அறுபத்து நான்கு பேர். பலதுறை சார்ந்த பண்டிதர்; பல்வேறு மாநிலத்தவர். எல்லோரும் இப்படிப்பட்ட சதஸ்ஸில் தாங்கள் கலந்து கொளவது ஒரு பாக்கியமே எனக் கருதி வந்திருந்தனர்.

காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு அத்தனை பேரும் அந்த மஹாதேவ் நிவாஸின் வடகிழக்குப் பக்கம் இருந்த ஒரு பெரிய மண்டபத்தின் முன்னால் கூடிவிட்டனர். பூத்துக் குலுங்கும் நந்தவனத்தின் மத்தியில் இருந்தது, அந்த மண்டபம். அறுகோணத்தில் கட்டப்பட்ட மண்டபத்தின் நட்ட நடுவில் கோயில் போன்ற அமைப்பு நோக்கி பாதை தனியே பிரிந்து சென்றது. அந்த வழி சென்றால்.. நீறூற்றின் நடுவே மிகப்பெரிய பாறையில் அமர்ந்த நிலையில் தத்ரூபமாக பார்வதி- பரமேஸ்வரர் சிலைகள் செதுக்கப்பட்டிருந்தன. அன்னையின் மடியில் முருகனும், அப்பனின் மடியில் விநாயகரும்! கைலாயமே வந்து விட்டோமோ என்கிற உணர்வு அத்தனை பேருக்கும். மண்டபம், கோயில் எல்லாம் மஹாதேவ்ஜியின் அர்ப்பணிப்பு... ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் மிகுந்த அக்கரையும், பிரயாசையும் எடுத்துக் கொண்டு கட்டப்பட்டிருந்தது மேலோட்டமாகப் பார்க்கையிலேயே தெரிந்தது.

மண்டபத்தின் மேலே நடுமத்தியில் சின்ன ஸ்தூபி ஒன்று வான்நோக்கி நீண்டிருந்தது.. மண்டபத்தைச் சுற்றி வட்ட வடிவில் மிகப்பெரிய தியான மண்டபம். 'உழ்ழ்..' என்ற லேசான காற்றின் ஓசையைக்கூடக் கேட்கிற மாதிரி தியான மண்டபத்தில் அமைதி தவழ்ந்தது. தளமும், படிகளும் சலவைக்கல் பதிப்பிக்கப்பட்டு வழுவழுவென்றிருந்தன. தரிசனத்திற்குப் பிறகு தியானம் என்று வந்திருந்த அத்தனை பேரும் கிடைத்தற்கரிய பேறு பெற்ற திருப்தியில் வெளிவந்தனர்.

மனோகர்ஜியின் குருநாதர் கிருஷ்ணமகராஜ்ஜியும், மனோகர்ஜியின் தந்தை குருதேவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒன்றாக காசி சர்வ கலாசாலையில் படித்தவர்கள். பின்பு குருதேவ்ஜி வியாபாரத்திற்கு வர, கிருஷ்ணமகராஜ்ஜி யோகம் பயில இமயமலை நாடினார். கொஞ்ச காலம் தான்; வியாபாரம் பிடிக்காமல் மகாதேவ்ஜியும் பிள்ளைகளிடம் பொறுப்புகளைக் கொடுத்து விட்டு கிருஷ்ணமகராஜ்ஜியைத் தேடி இமயமலை சென்றார்.

அது அந்த குடும்பத்து ராசி; யாரோ ரிஷி கொடுத்த வரம். ஒரு தலைமுறை தாண்டி அடுத்து வரும் சந்ததியில் ஒருவர் யோகத்தில் நாட்டம் கொண்டு அதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பர். இந்த சந்ததிக்கு ராம்மனோகர்ஜி. மனோகர்ஜிக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு பேருக்கு இரண்டு ஆண் வாரிசுகள் உண்டு. மனோகர்ஜியின் இந்தப் பேரன்களில் யாராவது ஒருவர் நிச்சயம் பிற்காலத்தில் யோக மார்க்கத்தில் தன்னைச் செலுத்துவான் என்பது சர்வ நிச்சயம்; அது பரம்பரையாக அந்த குடும்பத்திற்குக் கிடைத்த வரம். எல்லாம் மனோகர்ஜி சொல்லி கிருஷ்ணமூர்த்திக்குத் தெரிந்தது.


திட்டமிட்டபடி முதல் கூட்ட நிகழ்ச்சி தொடங்கியது. முதல் நிகழ்ச்சி வந்திருந்த பண்டிதர்கள் தங்களைத் தாங்களே அறிமுகப்படுத்திக் கொள்வதாக இருந்தது. வந்திருந்தவர்களின் பெயரும், எந்த மாநிலத்தைச் சார்ந்தவர் என்பதும், அவர் விவரிக்கப்போகும் தலைப்பும், அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையின் எண் போன்ற குறிப்புகள் கொண்ட பட்டியல் எல்லா கோ-ஆர்டினேட்டர்கள் வசமும் இருந்தது. கிருஷ்ணமூர்த்தியையும் சேர்த்து மொத்தம் நான்கு ஒருங்கிணைப்பாளர்கள். நான்குபேரும் கிட்டத்தட்ட பெரும்பாலான் பிரதிநிதிகள் பேசும் மொழி தெரிந்திருப்பவர்களாக இருந்தார்கள்.


எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதில் வெவ்வேறான கருத்துக்கள் பரிசீலிக்கப் பட்டன. உயிர்களின் ஜனனத்திலிருந்து, உலகம் உருவானதிலிருந்து, மரணத்தை அடுத்து, பிரபஞ்சத்தின் தொடக்கத்திலிருந்து என்று பல அம்சங்களில் கருத்துக்களைத் திரட்டலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கும், இதுவரை அறிந்துள்ள விஞ்ஞான வெளிப்பாடுகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதைக் கிட்டத்தட்ட எல்லாப் பிரதிநிதிகளுமே வலியுறுத்தினார்கள். உடற்கூறு இயல், மனிதஅனாடமி, உடல் உறுப்புகளின் இயக்கம் இவற்றைப் பற்றி சொல்வதற்கென்றே மருத்துவத்துறை சார்ந்த வல்லுனர்கள் நான்கு பேர் வந்திருந்தனர். அலோபதி, ஆயுர்வேதம்,சித்த வைத்தியம், மனோவசியம், அக்குபஞ்சர், காந்த சிகித்சை போன்றவற்றின் ஆளுகை பற்றி விரிவாகச் சொல்ல ஆறு பேர் கொண்ட ஒரு குழு தயாராக இருந்தது. சித்தர்களின் சிந்தனைகளை சுவைபடச் சொல்ல ஆறுபேர். இசை இன்பத்தில் இறைவன் அன்பில் தோயத் தனியே ஒரு குழுவிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. மெஞ்ஞானத்தில் வேதங்களிலிருந்து ஆரம்பித்து உபநிஷத்துக்களின் ஒளிச்சுடர் ஏந்தி யோகிகளின் சிந்தனை செல்வத்தைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.


இன்னும் சதஸுக்கு ஒருமாத கால அவகாசம் இருப்பதால் இந்த இடைப்பட்ட காலத்தில் அந்தந்தத் துறை சம்பந்தப்பட்ட அனைத்து அறிஞர்களும் விவாதித்து உருவாகும் கருத்துக்களை 'தீஸிஸ்'களாக சதஸ்ஸில் சமர்ப்பிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. .


தினம் தினம் அன்றைய மாலை நிகழ்ச்சியாய் புராணக்கதை சொல்ல மனோகர்ஜி, கிருஷ்ணமூர்த்தியைக் கேட்டுக்கொள்ள பலத்த கரவொலிக்கிடையே கிருஷ்ணமூர்த்தி தனது சம்மதத்தைத் தெரிவித்தார்.

இறுதியில் பிரபஞ்சத்திலிருந்து ஆரம்பிக்கலாம் என்று ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.


அப்பொழுது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

(தேடல் தொடரும்)


Sunday, October 5, 2008

ஆத்மாவைத் தேடி....9

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


9. அம்மையப்பா.. உந்தன் அன்பை நினைந்தே..

தவைத் திறந்தால் ராம்பிரபு நின்றிருந்தான்.
"ஜி! காலை வணக்கம்!" என்று ஆங்கிலத்தில் சொன்னான். பொடிக்கலர் பேண்ட்டும், அதற்கேற்ற மாதிரியான டிஷர்ட்டும் அணிந்திருந்தான்.
"மார்னிங்--வாப்பா, ராம்பிரபு!" என்று அழைத்து அவன் உள்ளே நுழைய வசதியாக வாசற்கதவை விரியத் திறந்தார் கிருஷ்ணமூர்த்தி..

"சார்! இன்னும் 'போர்டிங்' பக்கம் போகலை?" என்றான்.

"இல்லே.. இப்போத்தான் காலைப் பணியெல்லாம் முடிஞ்சது.. இனித்தான் கிளம்பணும்" என்றார் கிருஷ்ணமூர்த்தி.


ஒருநாள் பூராவும் சுற்றினாலும், பங்களா முழுசும் பார்த்து முடிக்க முடியாதது மாதிரி பெரிசாக இருந்தது. முதல்நாள் ராம்பிரபு வழிகாட்ட குத்து மதிப்பாக சில இடங்களைமட்டும் பார்த்து வைத்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணமூர்த்தி. அவற்றில் ஒன்று போர்டிங் ஹால். வலதுபக்கம் போகும் நீண்ட வராந்தாவின் கோடியில் திரும்பினால் எதிர்த்தாற்பல இருந்தது. விஸ்தாரமான இடம். எதிரும் புதிருமாக ஒரே நேரத்தில் நூறு பேருக்கு மேல் அமர்ந்து சாப்பிடுகிற மாதிரியான இடம். சமையல் செய்வது, பரிமாறுவது என்று ஏழெட்டுபேர் தேறும் போலிருந்தது.. அந்தப்பக்கம் போனாலே, "என்ன சாப்பிடுகிறீர்கள்" என்று விசாரிக்கிற பரிவு.

"என்ன, சார்?.. என்ன யோசிக்கிறீங்க?" என்றான் ராம்பிரபு. இந்த இரண்டுநாள் பழக்கத்தில் கிருஷ்ணமூர்த்தியுடன் மிகவும் அந்நியோன்யமாகியிருந்தான் அவன்.

"ஒன்றுமில்லை, பிரபு! எங்கேயோ பிறந்து, எங்கெங்கேயோ வளர்ந்து, ஊர் ஊராத் திரிந்து, அவன் பெருமையைக் கதை கதையா சொல்லிண்டு வந்தேன்... எத்தனை நாள்தான் அப்படிப்போகும்?.. கதையின் நாயகனைப் பாக்கணும்னு ஆசை தோணாதா, என்ன?.. ஒருநாள் திடீர்னு அந்த ஆசையும் தோணித்து; தோணின உடனே செயல்படுத்தமுடியலே.. சாதாரணக்கயிறா?.. சரியான தாம்புக்கயிரான்னா போட்டு கட்டியிருக்கு.. உறவுகளோட கட்டை அவ்வளவு சுலபமா பிரிச்சிண்டு வர முடியலே.. இப்பவும் ஏதோ சுற்றுப்பயணம் வந்த மாதிரிதான் இருக்கே தவிர, உறவுங்களை முழுசாக் கத்திரிச்சிண்டு வந்திட்டேன்னு தோணலே.. கொஞ்சமே மனக்கதவைத் திறந்தா, போதும்! அத்தனைபேரும் அங்கங்கே உட்கார்ந்திருக்கா.. 'எப்படி டூர்?.. நன்னா அனுபவிக்கறேளா?'ன்னு கையாட்டி விசாரிக்கறா.. எல்லாரும் சந்தோஷமா இருக்கா.. நான் தான் பித்துப் பிடிச்சவன்மாதிரி... எல்லாரையும் பிரிஞ்சு வந்து..." வார்த்தைகளை முடிக்க முடியாமல், கடைசி வார்த்தையை உச்சரிக்கையில் கிருஷ்ணமூர்த்தி குரல் சன்னமாகி, தழுதழுத்து... கன்னக் கதுப்பில் வழியத் தயாராய் இரண்டு நீர்த்துளிகள்..


"என்ன, சார்? என்ன?" என்று நாற்காலியிலிருந்து நழுவ இருந்தவரைத் தாங்கிப் பிடித்தான் பிரபு. " என்ன சார்.. என்ன ஆச்சு?" என்று பதறியவனை ஆசுவாசப் படுத்தினார்,கிருஷ்ணமூர்த்தி.

"ஒண்ணுமில்லை, பிரபு.. ஒண்ணுமில்லே--ஒண்ணுமேயில்லை.." என்று தலையைக் குலுக்கியவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது, பிரபுவுக்கு.
"ஒண்ணுமில்லே, பிரபு! கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன். இருபத்தஞ்சு வயசிலே எனக்குக் கல்யாணம்.. இப்போ அறுபத்தஞ்சு.. நாற்பது வருஷ பந்தம்.. நானூறுகோடி வருஷப் பிணைப்பாத் தெரியறது.. எங்கே போறேள்?'ன்னு கனவுலே கூட கையைப் பிடிச்சு இழுக்கறது.. இந்த அர்ஜூனுக்கு குழந்தைலே பாய்லே படுத்தே பழக்கம்இல்லே; என் மார்தான் அவனுக்குப் பாய், படுக்கை எல்லாம்... மல்லாக்க படுத்திண்டு மார்லே போட்டு தட்டினாத்தான் அவனுக்குத் தூக்கம் வரும்! குழந்தை முழிச்சிண்டுவானோன்னு அசங்காம படுத்திருப்பேன்.. குழந்தை தூங்கினது புரிஞ்சதும், அசங்காம அவன் முழிச்சிக்காம ஜாக்கிரதையா எடுத்து, பக்கத்லே படுக்க வைச்சுப்பேன்; தூங்கறத்தேயும் என்னோட அங்கவஸ்திரப் பிடியை விடாம, குழந்தை கைலேயே பிடிச்சிண்டிருக்கும்.. சின்ன கைக்குழந்தைக்குத் தெரியறது, எனக்குத் தெரியலையே?.. அத்தனை பிடியையும் அறுத்திண்டு தானே வந்திருக்கேன்?" என்று மலங்க மலங்க விழித்துக் கலங்கினார் கிருஷ்ணமூர்த்தி.


"எல்லா அப்பாங்களும் இப்படித்தானா ஸார்.. ஆனா, என்னை மாதிரியான புள்ளைங்க தான்___" என்று அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு குலுங்கினான் பிரபு.

திடுக்கிட்டு விட்டார் கிருஷ்ணமூர்த்தி. "என்னப்பா, பிரபு?.. இதோ பார்.. ஏன் அழறே?.. இதோ பார்___"என்று அவனை அணைத்து முதுகு தடவினார். பிரபு இடத்தில் அர்ஜூன் அவர் மனத்தில் இருந்தான். "அர்ஜூன்! ஏன் அழறே?"என்று குனிந்திருந்த அவன் மோவாய் மலர்த்தி அவர் கேட்டபோழுது அவர் மனசு வெட்டவெளியாய் வெளிப்பட்டது.

"ஸார்.. என்ன சொன்னீங்க?" என்று நிமிர்ந்தான் பிரபு.

"வாஸ்தவம்பா.. அர்ஜூன்னு சொன்னேன்.. அனிச்சையாய் என் உள்ளிருந்து வந்த அழைப்பு அது... உன் வயசுதான் அவனுக்கும்... நீயும் அவனும் எனக்கு ஒன்றே" என்று பிரகடனம் பண்ணுகிற மாதிரி கிருஷ்ணமூர்த்தி வாயிலிருந்து ஸ்பஷ்டமாக சொற்கள் வெளிப்பட்டன.

அவர் சொன்னதைக் கேட்டு பிரவுவின் கண்கள் கலங்கின.

'என்ன வந்தது, இவனுக்கு?.. இந்த இருபத்திரண்டு வயசுக் குழந்தையின் மனசை முதலில் லேசாக்க வேண்டுமென்கிற நினைப்பு ஒரு தந்தையின் செயலாய் அவர் உள்ளத்தில் பீரிட்டது. பிரபுவின் கன்னம் வழிந்த நீரைத் துடைத்து விட்டார் அவர். "அழாதே... ஆம்பளைங்க அழக்கூடாது. சொல்லு.. எங்கிட்ட சொல்லு.. எதுனாலும் சொல்லு.." என்றுஅவன் தோள்பட்டைகளைப் பிடித்துத் தேற்றினார் கிருஷ்ணமூர்த்தி.

அம்பு எய்ய முனைந்த வேடனடியிலிருத்து தப்பி, சிபி சக்கரவர்த்தியிடம் அடைக்கலமானப் புறாவின் நிலையில் படபடப்புடன் இருந்தான் அவன்.

அவர் பிடியில் தளர்ந்து தன்னையே ஒப்படைத்து விட்ட விசுவாசம் அவனிடம் இருந்தது.

"சரி... பிரபு.. இப்போ நீ ஓ.கே.தானே?.. அது போதும்.. வேணும்னா அப்புறம் சொல்லு.." என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்தார்.

"பெத்த பிள்ளை மீது அப்பாக்கள்லாம் வைச்சிருக்கற பாசத்தை நீங்க சொன்னப்போ.. அதை நீங்க சொல்றச்சே.. எனக்கு மனசு தாங்கலே.. அந்த சுகம் எனக்குத் தெரியாததாலே துக்கமா வந்து நெஞ்சடைத்திடுத்து.. அதான்.. அதான்.." என்று திக்கினான் பிரபு.


"ஓ___" என்று அவன் தலை தடவி ஆசுவாசப்படுத்தினார் கிருஷ்ணமூர்த்தி.


ஒரு நிமிஷம் அவர் நெற்றி நிமிர்ந்து பார்த்து, சடாரென்று தலைகவிழ்த்து, "எனக்கு அப்பா இல்லே, சார்!" என்றான் பிரபு.. ஒரு வினாடி மெளனத்தைத் தாண்டி," அவர் செத்துப் போகறச்சே மூணு வயசாம் எனக்கு.. அம்மா சொல்லித்தான் தெரியும்" என்று விக்கலூடே தொடர்ந்தான் "ரோட்லே, பஸ்லே, கடைலே, ஸ்கூல்லேன்னு நா சின்னப் பையனா இருக்கறச்சே எந்த அப்பாவைப் பாத்தாலும், அப்பா பாசத்துக்கு ஏங்கி எனக்கு துக்கம்பொத்துண்டு வரும்.. கஷடப்பட்டு அடக்கிப்பேன். எங்கப்பாவை நான் பாத்த நினைவே இல்லே.." என்று கேவினான் பிரபு.


கிருஷ்ணமூர்த்தி அவன் கைபிடித்துத் தன் கைக்குள் வைத்துக் கொண்டார். "கவலைப்படாதே, பிரபு!.. எனக்குக்கூட எங்கப்பா என்னோட ஒரு வயசிலேயே காலமாயிட்டார். அந்தக் காலத்லே இப்போ மாதிரி போட்டோல்லாம் அதிகமா எடுக்க மாட்டா.. எங்கப்பா இப்படியிருப்பார்னு தெரிஞ்சிக்க வீட்லே ஒரு போட்டோ கூட இல்லே.. அதுனாலே என்னப்பா?.. வீட்லே எத்தனை சாமி படம் இருக்கு.. நம்மோடையே இருக்கற இறைவன் தான் நம்மோட அப்பா.. அம்மா எல்லாம். பனிபடர்ந்த இமயமலைலே அம்மையும், அப்பனும் எப்படி 'ஜம்'னு உட்கார்ந்திருக்காங்க.. அந்தப் படம் பாத்திருக்கையா நீ?.. எப்பவும் நம்ம அப்பாவும் அம்மாவும் நம்மையெல்லாம் கவனிச்சிண்டு.. காப்பாத்திண்டு இருக்கறச்சே,நமக்கென்ன கவலை?.. பீ சீர்! எங்கே, சிரி!.." என்று அவர் சொல்ல ஒரு குழந்தை போலச் சிரித்தான் பிரபு.

"குட்!" என்று அவனைத் தட்டிக் கொடுத்தார் கிருஷ்ணமூர்த்தி.

மூத்த வயதில் மகன் அருகில் இல்லாத தந்தையும், இளம் வயதில் தந்தை இல்லாத மகனுமாய் உணர்வுப் பிழம்பான அந்தச் சூழ்நிலையில்...

இன்னொரு ஆத்மாவை பாசத்துடன் தரிசித்த புல்லரிப்பு கிருஷ்ணமூர்த்திக்கு ஏற்பட்டது.

(தேடல் தொடரும்)
Related Posts with Thumbnails