மின் நூல்

Friday, October 31, 2008

ஆத்மாவைத் தேடி....13

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

13. சீவனாரும் சிவனாரும்

'உப' என்றால் அருகே என்று பொருள். குருகுலவாசத்தில், குரு தனது சீடர்களை அருகே அமர்த்தி உபதேசிப்பதே வழக்கம். குரு வாய்மொழியாகச் சொல்பனவற்றைக் கேட்டுப் புரிந்து கொள்வதான பயிற்சிக்களம் அது. சீடர்களும் குருவின் ஆசார அனுஷ்டான நியமங்களுக்கான பணிவிடைகளைச் செய்து, ஒழிந்த நேரத்தில் இந்தக்கல்வி கேட்டனர். அருகே அமர்த்திச் உபதேசித்ததினால், 'உபநிஷத்துக்கள்' என்று வழங்கப்பட்டன.


முதலில் மூலாதாரமான படைத்தவன், அடுத்து படைத்தவனிலிருந்து வெளிப்பட்ட இந்தப் பிரபஞ்சம், அதற்கடுத்து உயிர் சுமந்து உலவும் அறிவுலக பிரஜைகளான மனிதர்--இந்த மூன்றையும், இந்த மூன்றிற்கானத் தொடர்புகளையும் உபநிஷத்துக்கள் அலசுகின்றன. ஒன்றை அடிக்கோடிட்டுச் சொல்ல வேண்டும். அதை எந்நேரத்தும் மறந்துவிடலாகாது. பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னால் சொல்லப்பட்ட இவை, அந்தப் பழைமையான காலத்து வளர்ச்சிக்கேற்பனவான உண்மைகளைச்சுமந்து கொண்டிருக்கின்றன என்பதை மறந்துவிடலாகாது.


வெளிச்சம் கிஞ்சித்தும் இல்லாத கும்மிருட்டில் நின்று கொண்டு, கைக்கு தட்டுப்பட்டதைத் தொட்டுத் தடவி, இது-இன்னது-என்று முயற்சித்து சொன்னது, பல்லாயிரம்ஆண்டுகளுக்குப் பின்னால்,-- இந்தப் பல்லாயிரம் ஆண்டுகால வளர்ச்சிக்குப் பின்னால்--அப்பொழுது சொன்னது சரி என்று நிரூபிக்கப்படுகிறதென்றால், இன்றைய இத்தனை நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னான இந்த வளர்ச்சியை, அன்றே அந்தத் தவச் செல்வர்கள் தமது ஞானதிருஷ்டியில் கண்டுவிட்டார்கள் என்பதே நம்மை பேராச்சரியத்தில் மூழ்க வைக்கும் உண்மை. இது அவர்களின் தவத்தினால், மனத்தை ஒருமுகப்படுத்தி அயராது சிந்தனை வயப்பட்டதினால், கிடைத்த செல்வம் என்பதை மறக்கலாகாது.


அத: ஸமுத்ரா கிரயச்ச ஸர்வே: ஸ்மாத்
ஸ்யந்தந்தே ஸிந்தவ: ஸர்வரூபா
அதச்ச ஸ்ர்வா ஓஷதயோ ரஸச்ச
யேனைஷ பூதைஸ்திஷ்ட்டதே ஹயந்தராத்மா


-- இது முண்டக உபநிஷத்தில் வரும் ஒரு ஸ்லோகம்.


சமுத்ரம், மலைகள் ஆகிய எல்லாவற்றின் தோற்றம் அவரிடமிருந்தே; பல்வேறு நதிகள், செடிகொடிகள் அனைத்தும் அவரிடமிருந்தே வெளிப்பட்டன. மொத்தத்தில்அனைத்து இயற்கை சக்திகளாலும் சூழப்பட்டதே அந்தராத்மா. இதற்கு அர்த்தம், இறைவனிடமிருந்து வெளிப்பட்ட பஞ்சபூதங்களின் வெவ்வேறு தோற்றங்களே,இந்த இயற்கை தந்திடும் வளம்; மனிதனின் உடம்பும் பஞ்சபூதங்களின் தொகுதியே. இறைவன் இந்த உடனினுள் ஆத்மாவாக இருந்து கொண்டு அருள் பாலிக்கிறான்.


இன்னொரு ஸ்லோகம், இறைவன் தான் அனைத்திற்கும் மூலமாக இருக்கிறார் என்கிறது. என்றென்றும் அழிவில்லாத பிரம்மமாய் இருப்பவரும் அவரே. இதயத்தில் வாசம் செய்யும் அவரை அறிந்து கொள்பவன் அனைத்து அறியாமைகளிலிருந்தும் விடுபடுகிறான் என்கிறது.


புருஷ ஏவேதம் விச்வம் கர்ம தபோ ப்ரஹ்ம பராம்ருதம்
ஏதத்யோ வேத நிஹிதம் குஹாயாம்
ஸோ வித்யா க்ரந்திம் விகிரதீஹ ஸோம்ய

--இதுவும் முண்டக உபநிஷத்து ஸ்லோகம் தான்.

'முண்ட' என்றால் களைதல், நீக்குதல் என்று பொருள். அறியாமை இருளை நீக்கி, உண்மைக்கான வெளிச்சத்தை வாரி இறைக்கிறது இந்த உபநிஷதம்.

ஆக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் இறைவனிடமிருந்தே வெளிப் போந்தவை; இறுதியில் அவை அனைத்தும், கடலைச் சேரும் நதிபோல இறைவனையேச் சேர்ந்து, மீண்டும் வெளிப்படும் என்பது தான் தத்துவ நெறி.

ஒடுக்கத்திலிருந்து விடுபட்ட படைப்பு, படைப்பு நிலையை பூர்த்தி செய்தபின்,
மீண்டும் ஒடுக்கத்தினிடையே ஒடுங்கும். இது ஒரு பிரதட்சண நிலை.

"சீவன் என்ன சிவனார் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்த பின்
சீவனார் சிவனா யிட்டிருப்பரே"
---திருமூலர்

யோகி குமாரஸ்வாமி சுவாரஸ்யத்துடன் மேலும் தொடர கையில் வைத்திருந்த கத்தை காகிதத் தாள்களின் அடுத்த பக்கத்தைத் திருப்பினார்.

(தேடல் தொடரும்)

Tuesday, October 28, 2008

ஆன்மாவைத் தேடி....12

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


12. குருகுல உபதேசம்

புலர்ந்தும் புலராத அதிகாலைப் பொழுதின் நிர்மலமான நிசப்தத்தில் 'டணார், டணார்' என்று கோயில் மணி ஒலிப்பதைப் போல, அரங்கம் நிறைந்த அந்த அமைதியில் யோகி குமாரஸ்வாமியின் குரல் ஏற்ற இறக்க தாள கதியுடன் ஸ்பஷ்டமாக ஒலித்தது.



"உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே"

"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர்ச் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்"

பிரபஞ்சம் குறித்த பேச்சு ஆதலால், ' உலகு' எனத்தொடங்கும் இந்த இரண்டு செய்யுள்களும், அவற்றின் ஒப்பற்றக் கருத்தும் ஒப்புமை நோக்கி மகிழத்தக்கது. முதலில் பாடிய பாடல், கம்பனின் இராமாயண, கடவுள் வாழ்த்துப் பாடல். அடுத்தது தெய்வப்புலவர் சேக்கிழாரின் பெரிய புராண இறை வாழ்த்துப் பாடல். இந்த இரண்டும் இந்த இரண்டு காவியத்தின் முதல் பாடலாக அமைந்து 'உலகு' என்றேத் தொடங்குகிறது.

எந்தச் செயலையும் செய்யத் தொடங்கும் பொழுது இறைவனை வணங்கி, தொடங்கும் செயலை நல்லபடி முடித்துத் தர அவனை வேண்டி, செயலைத் தொடருவது இந்த தேசத்தின் வழக்கம். செயலும் அவனே, செயலூக்கியும் அவனே, செய்பவனும் அவனே.


பிரபஞ்சத்தின் தோற்றுவாய் குறித்து எக்காலத்தும் பல்வேறு பட்ட சிந்தனைகள் கிளர்ந்திருக்கின்றன எல்லாம் அவன் திருவிளையாடல்களே.
படைப்பையும் படைத்து விட்டு, அந்தப் படைப்புகளின் மூலாதாரமாக அவனே இருந்து கொண்டு, படைக்கப்பட்டவை என்னன்ன. எப்படி என்று அந்த படைப்பையே சிந்திக்கத் தூண்டும் அவன் செயல், திருவிளையாடல் அல்லாமல் வேறு என்ன?..

அவனே இந்த பிரபஞ்சத்தைப் படைத்தான். ஆகவே இந்த பிரபஞ்சம் பூராவிலும் அவனே நிறைந்து இருக்கிறான்.

நிலம், நீர், வாயு, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களும் அவனிலிருந்துத் தோன்றியவை. அவனின்று தோன்றியதால், இவற்றின் மூலம் அவன் என்பதால், பஞ்சபூத மூலக்கூறுகளிலும் அவனே உள்ளான். அவனே அவை;
அவையே அவன்.

ஒன்றை இரண்டாக்கினாலும் சரி, ஐந்தாக்கினாலும் சரி, அதையே ஐய்யாயிரம் ஐம்பதாயிரம் ஆக்கினாலும் சரி, ஆக்கிய அந்த அனைத்தும் ஒன்றின் கூறுகளே என்கிற தத்துவப்படி, அத்தனை அணுக்கூறுகளும் அவனின் கூறுகளே. அணுவின் துகளுக்கு துகள் அவனே. ஒவ்வொரு துகளுள்ளும் எதிர் எதிர் சக்திகளாக உருவாகி, அவற்றை அசையவைத்து ஆட்டுவிக்கும் அலகிலா விளையாடுடைய தலைவன் அவனே.

மானிடத்தின் அக அனுபவ மேன்மைக்கான தேடலின் வெளிபாடு தான் யோகம். சிந்தையில் ஆழ்ந்த வித்தென ஒன்றை ஊன்றி உள்நோக்கிப் பார்த்தல்; உள்ளார்ந்த அக மற்றும் வெளியார்ந்த பிரபஞ்ச இரகசியங்களை, இது ஏன், எதனால், எப்படி என்று கிளர்த்தும் சிந்தனைகளைக் கிளறி விட்டு தன்னை மறந்து தியானித்தல்; தியானித்தல் என்றால் சாதாரண தியானித்தல் இல்லை.. யோகநிஷ்டையில் அமர்ந்து, அகழ்வாராய்ச்சியாய் தன்னையே குடைந்துப் பார்க்கையில், தன்னைச் சுற்றியும், தன்னையே மறைத்தும் மாய்த்தும் கரையான் புற்று எழும்பி நிற்பினும் நிலைகுலையாது தன்னைத் தோண்டி ஞானம் காணல்.

இந்திய தேசத்து ரிஷிகளும், யோகிகளும் இப்படித் தங்களையே தோண்டித் துருவி தியானித்து வெளிச்சம் கிடைக்கப் பெற்றிருக்கின்றனர்; தாங்களே வெளிச்சமாகவும் ஆகிப் போயினர்.

வேதகாலத்தின் மறுமலர்ச்சி தான் உபநிடதங்கள் என்று தாராளமாகச் சொல்லலாம். பிரபஞ்சமே இருட்டில் உறக்கிக் கொண்டிருக்கையில், பாரதத்திலிருந்து வெளிச்சம்புறப்பட்டது நாம் பெருமைப்படத்தக்க ஒன்று. கி.மு. 1000க்கும் கி.மு. 300க்கும் இடைப்பட்ட காலத்தில் இப்படிப்பட்ட ஒரு சிந்தனையை நினைத்துப் பார்க்க முடியுமா?..

பிரபஞ்சம், இறைவன், மனிதன் - இவற்றிக்கிடையான உறவை ஆராய்வதே உபநிடதங்கள். எல்லாமே ஆழ்ந்த தவச்சிந்தனையின் வெளிப்பாடுகள்..
குருகுல வாசத்தில் கேட்டல், கற்றல் என்கிற முறையே; குருவிடமிருந்து
அவர் பெற்ற அனுபவங்களை உபதேசங்களாக சீடன் கேட்டு என்கிற முறையில் இந்த கிடைத்தற்கரிய செல்வம் அனைத்தும் ஆதி காலத்தில் வாய்மொழியாகவே பரவியிருக்கிறது.

உபநிடதங்களைப் பற்றி நிறையச் சொல்ல வேண்டும்.." என்று கொஞ்சம்
நிறுத்தித் தொடர்ந்தார் யோகி குமாரஸ்வாமி.

(தேடல் தொடரும்)

Sunday, October 19, 2008

ஆத்மாவைத் தேடி....11

ஆன்மீகத்தின் அடுத்த கட்டம் நோக்கி....

11. கிரெளஞ்சப் பட்சி

அப்பொழுது தான் அந்த அதிசயம் நடந்தது.

'படபட'வென்ற சப்தத்துடன் அவர்கள் விவாதித்துக் கொண்டிருந்த அந்த மண்டபத்தினுள் இணையாக நுழைந்த இரு கிரெளஞ்சப் பறவைகள், நீண்டு விரிந்த தங்கள் சிறகுகளை மடக்கி மண்டபத்தின் நடுமத்தியில் அமர்ந்தன. அமர்ந்ததும் அந்த இரண்டு பறவைகளும் தங்கள் அலகை நீட்டி, கருமணிகளென டாலடித்த தங்கள் கருவிழிகளை இப்படியும் அப்படியும் அலையவிட்டு அங்கு அமர்ந்திருந்த அத்தனை பேரையும் அளவெடுப்பது போல் பார்த்தன.

கிருஷ்ணமூர்த்திக்கு இருப்பு கொள்ளவில்லை. இராமயண காவியத்தை ஆரம்பித்து வைத்தது கிரெளஞ்ச பட்சியன்றோ என்று அவர் நினைவுகள் தாம் படித்துக் களித்த இதிகாச நினைவுகளில் அழுந்தின. 'ஆத்மாவின் தேடல் நோக்கி அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில், இந்த ஜோடிப்பறவைகள் ஆசி கூறி ஆரம்பித்து வைக்கின்றனவோ? என்னே இறைவனின் கருணை!' என்று அவருக்கு நெற்றி வியர்த்தது.

அவருக்கு என்ன தோன்றியதோ என்னவோ, அந்த பட்சிகளைப் பார்த்து மனோகர்ஜி நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து நமஸ்கரித்தார்.

அந்த இணையில் ஆண் கிரெளஞ்சம் தனது நீண்ட அலகில் எதையோ கொத்திக்கொண்டிருந்ததை முதலில் பார்த்துச் சொன்னவர், தனஞ்செயன் தான். விஞ்ஞானி தனஞ்செயன் அணுக்களின் ஆற்றல் பற்றியும், அவற்றின் சேர்க்கை--செயல்பாடுகள் பற்றியும் தனது ஆய்வு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வந்திருந்தவர்.

"ஆமாம்..ஆமாம்" என்று கிட்டத்தட்ட எல்லோரும் ஏகோபித்து, அந்த ஆண் கிரெளஞ்சப் பறவை எதையோ தன் அலகில் அடக்கி வைத்திருப்பதைப் பார்த்து முணுமுணுத்தனர். சடாரென்று மண்டப முகப்பு நோக்கிப் பறந்து, உடனே அங்கு அமர்ந்திருந்த அத்தனை பேரையும் ஒரு சுற்று சுற்றி வந்து, தன் இணை தொடர அந்த அரங்கை விட்டுவெளியே வந்த அந்த கிரெளஞ்சங்கள், எல்லோரும் அவற்றை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, அந்த இடம் விட்டு வெளிப்போந்து, புல் தரையில் இதுவரை பத்திரமாய் அலகில் கொத்தி வைத்திருந்ததை நழுவ விட்டுப் போயிற்று.

அது துப்பியது என்னவாயிருக்கும் என்று பார்க்கின்ற ஆவலில் எல்லோரும் எழுந்து புல்வெளி நோக்கிப் பாய்ந்தனர். போய்ப்பார்த்தால், இரண்டு ஆலம் விதைகள். நல்ல கொழுகொழுப்புத் திண்மையுடன் விதைகள் புல்தரையில் கிடந்தன.

அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, அந்தப் பறவைகள் தியான மண்டபம் தாண்டி, சிவசக்தி கோயில் மண்டப ஸ்தூபியில் வினாடி நேரம் அமர்ந்து, பறக்கத்துவங்கும் விமானம் மாதிரி நேர்கோட்டில் சென்று, 'ஜிவ்'வென்று பிரபஞ்ச வெட்டவெளி நோக்கிப் பாய்ந்தது.

ஒருவனுக்கு ஒருத்தியென வாழும் கிரெளஞ்சப் பறவையின் அந்த இணை சென்ற திசைநோக்கி மனோகர்ஜி கைகூப்பி, 'சிவ..சிவா'என்று உதடுகள் ஜபிக்கக் கும்பிட்டார். பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிச் சொல்லாமல் சொல்லிச் சென்ற கிரெளஞ்சச்செய்தி அவருக்குப் புரிந்து போயிற்று . அதை மற்றவர்களுடன் அவர் பரிமாறிக் கொள்கையில் மிகவும் நெக்குருகித் தளர்ந்தார்.

'எதுவும்-- எதற்காகவோ தான் நடக்கிறது. சில வெளிப்படையாக; சில சூட்சுமமாக. அப்படி சூட்சுமமாக நடக்கும் சிலவற்றைப் புரிந்து கொள்ளும் சக்தியும் சிலருக்குத்தான் வரப்பிரசாதமாகக் கிடைத்திருக்கிறது' என்று நினைத்துக் கொண்டார், ஆந்திராவிலிருந்து வந்திருந்த தத்துவப் பேராசிரியர் சிவசைலம்.

அந்த பிர்மாண்ட 'மகாதேவ நிவாஸை'ப் பராமரிக்கும் பணியாளர்களை கூப்பிட்டனுப்பினார் மனோகர்ஜி. அவர்கள் வந்து பள்ளம் தோண்டி, அந்த இரு ஆலவிதைகளையும் நிலத்தில் போதிய இடைவெளி விட்டு அருகருகே விதைத்தனர். பயபக்தியுடன் நீர் பாய்ச்சினர்.

என்றோ, எப்பொழுதோ, கல்ப கோடி ஆண்டுகள் முன்பு பிரபஞ்சம் உருப்பெற்றதின் நினைவாக, கிரெளஞ்சப்பட்சிகள் அன்புடன் அளித்த அந்த ஆலவிதைகள் விதைக்கப்பட்டதாக எல்லோரும் நினைத்துக்கொண்டனர். நேராக மண்டபம் சென்று இறைவன் அருளுக்கு நன்றி சொல்லி அவன் ஆசி பெற்ற மகிழ்ச்சியில், அரங்கு திரும்பினர்.

அந்த மகிழ்ச்சி இத்தனை ஏற்பாடுகளையும் செய்திருக்கும் மனோகர்ஜியின் முகத்தில் பரவசமாகப் பளீரிட்டது.

(தேடல் தொடரும்)

Wednesday, October 15, 2008

ஆத்மாவைத் தேடி....10

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

10. ரிஷி கொடுத்த வரம்


மொத்தம் அறுபத்து நான்கு பேர். பலதுறை சார்ந்த பண்டிதர்; பல்வேறு மாநிலத்தவர். எல்லோரும் இப்படிப்பட்ட சதஸ்ஸில் தாங்கள் கலந்து கொளவது ஒரு பாக்கியமே எனக் கருதி வந்திருந்தனர்.

காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு அத்தனை பேரும் அந்த மஹாதேவ் நிவாஸின் வடகிழக்குப் பக்கம் இருந்த ஒரு பெரிய மண்டபத்தின் முன்னால் கூடிவிட்டனர். பூத்துக் குலுங்கும் நந்தவனத்தின் மத்தியில் இருந்தது, அந்த மண்டபம். அறுகோணத்தில் கட்டப்பட்ட மண்டபத்தின் நட்ட நடுவில் கோயில் போன்ற அமைப்பு நோக்கி பாதை தனியே பிரிந்து சென்றது. அந்த வழி சென்றால்.. நீறூற்றின் நடுவே மிகப்பெரிய பாறையில் அமர்ந்த நிலையில் தத்ரூபமாக பார்வதி- பரமேஸ்வரர் சிலைகள் செதுக்கப்பட்டிருந்தன. அன்னையின் மடியில் முருகனும், அப்பனின் மடியில் விநாயகரும்! கைலாயமே வந்து விட்டோமோ என்கிற உணர்வு அத்தனை பேருக்கும். மண்டபம், கோயில் எல்லாம் மஹாதேவ்ஜியின் அர்ப்பணிப்பு... ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் மிகுந்த அக்கரையும், பிரயாசையும் எடுத்துக் கொண்டு கட்டப்பட்டிருந்தது மேலோட்டமாகப் பார்க்கையிலேயே தெரிந்தது.

மண்டபத்தின் மேலே நடுமத்தியில் சின்ன ஸ்தூபி ஒன்று வான்நோக்கி நீண்டிருந்தது.. மண்டபத்தைச் சுற்றி வட்ட வடிவில் மிகப்பெரிய தியான மண்டபம். 'உழ்ழ்..' என்ற லேசான காற்றின் ஓசையைக்கூடக் கேட்கிற மாதிரி தியான மண்டபத்தில் அமைதி தவழ்ந்தது. தளமும், படிகளும் சலவைக்கல் பதிப்பிக்கப்பட்டு வழுவழுவென்றிருந்தன. தரிசனத்திற்குப் பிறகு தியானம் என்று வந்திருந்த அத்தனை பேரும் கிடைத்தற்கரிய பேறு பெற்ற திருப்தியில் வெளிவந்தனர்.

மனோகர்ஜியின் குருநாதர் கிருஷ்ணமகராஜ்ஜியும், மனோகர்ஜியின் தந்தை குருதேவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒன்றாக காசி சர்வ கலாசாலையில் படித்தவர்கள். பின்பு குருதேவ்ஜி வியாபாரத்திற்கு வர, கிருஷ்ணமகராஜ்ஜி யோகம் பயில இமயமலை நாடினார். கொஞ்ச காலம் தான்; வியாபாரம் பிடிக்காமல் மகாதேவ்ஜியும் பிள்ளைகளிடம் பொறுப்புகளைக் கொடுத்து விட்டு கிருஷ்ணமகராஜ்ஜியைத் தேடி இமயமலை சென்றார்.

அது அந்த குடும்பத்து ராசி; யாரோ ரிஷி கொடுத்த வரம். ஒரு தலைமுறை தாண்டி அடுத்து வரும் சந்ததியில் ஒருவர் யோகத்தில் நாட்டம் கொண்டு அதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பர். இந்த சந்ததிக்கு ராம்மனோகர்ஜி. மனோகர்ஜிக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு பேருக்கு இரண்டு ஆண் வாரிசுகள் உண்டு. மனோகர்ஜியின் இந்தப் பேரன்களில் யாராவது ஒருவர் நிச்சயம் பிற்காலத்தில் யோக மார்க்கத்தில் தன்னைச் செலுத்துவான் என்பது சர்வ நிச்சயம்; அது பரம்பரையாக அந்த குடும்பத்திற்குக் கிடைத்த வரம். எல்லாம் மனோகர்ஜி சொல்லி கிருஷ்ணமூர்த்திக்குத் தெரிந்தது.


திட்டமிட்டபடி முதல் கூட்ட நிகழ்ச்சி தொடங்கியது. முதல் நிகழ்ச்சி வந்திருந்த பண்டிதர்கள் தங்களைத் தாங்களே அறிமுகப்படுத்திக் கொள்வதாக இருந்தது. வந்திருந்தவர்களின் பெயரும், எந்த மாநிலத்தைச் சார்ந்தவர் என்பதும், அவர் விவரிக்கப்போகும் தலைப்பும், அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையின் எண் போன்ற குறிப்புகள் கொண்ட பட்டியல் எல்லா கோ-ஆர்டினேட்டர்கள் வசமும் இருந்தது. கிருஷ்ணமூர்த்தியையும் சேர்த்து மொத்தம் நான்கு ஒருங்கிணைப்பாளர்கள். நான்குபேரும் கிட்டத்தட்ட பெரும்பாலான் பிரதிநிதிகள் பேசும் மொழி தெரிந்திருப்பவர்களாக இருந்தார்கள்.


எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதில் வெவ்வேறான கருத்துக்கள் பரிசீலிக்கப் பட்டன. உயிர்களின் ஜனனத்திலிருந்து, உலகம் உருவானதிலிருந்து, மரணத்தை அடுத்து, பிரபஞ்சத்தின் தொடக்கத்திலிருந்து என்று பல அம்சங்களில் கருத்துக்களைத் திரட்டலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கும், இதுவரை அறிந்துள்ள விஞ்ஞான வெளிப்பாடுகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதைக் கிட்டத்தட்ட எல்லாப் பிரதிநிதிகளுமே வலியுறுத்தினார்கள். உடற்கூறு இயல், மனிதஅனாடமி, உடல் உறுப்புகளின் இயக்கம் இவற்றைப் பற்றி சொல்வதற்கென்றே மருத்துவத்துறை சார்ந்த வல்லுனர்கள் நான்கு பேர் வந்திருந்தனர். அலோபதி, ஆயுர்வேதம்,சித்த வைத்தியம், மனோவசியம், அக்குபஞ்சர், காந்த சிகித்சை போன்றவற்றின் ஆளுகை பற்றி விரிவாகச் சொல்ல ஆறு பேர் கொண்ட ஒரு குழு தயாராக இருந்தது. சித்தர்களின் சிந்தனைகளை சுவைபடச் சொல்ல ஆறுபேர். இசை இன்பத்தில் இறைவன் அன்பில் தோயத் தனியே ஒரு குழுவிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. மெஞ்ஞானத்தில் வேதங்களிலிருந்து ஆரம்பித்து உபநிஷத்துக்களின் ஒளிச்சுடர் ஏந்தி யோகிகளின் சிந்தனை செல்வத்தைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.


இன்னும் சதஸுக்கு ஒருமாத கால அவகாசம் இருப்பதால் இந்த இடைப்பட்ட காலத்தில் அந்தந்தத் துறை சம்பந்தப்பட்ட அனைத்து அறிஞர்களும் விவாதித்து உருவாகும் கருத்துக்களை 'தீஸிஸ்'களாக சதஸ்ஸில் சமர்ப்பிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. .


தினம் தினம் அன்றைய மாலை நிகழ்ச்சியாய் புராணக்கதை சொல்ல மனோகர்ஜி, கிருஷ்ணமூர்த்தியைக் கேட்டுக்கொள்ள பலத்த கரவொலிக்கிடையே கிருஷ்ணமூர்த்தி தனது சம்மதத்தைத் தெரிவித்தார்.

இறுதியில் பிரபஞ்சத்திலிருந்து ஆரம்பிக்கலாம் என்று ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.


அப்பொழுது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

(தேடல் தொடரும்)










Sunday, October 5, 2008

ஆத்மாவைத் தேடி....9

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


9. அம்மையப்பா.. உந்தன் அன்பை நினைந்தே..

தவைத் திறந்தால் ராம்பிரபு நின்றிருந்தான்.
"ஜி! காலை வணக்கம்!" என்று ஆங்கிலத்தில் சொன்னான். பொடிக்கலர் பேண்ட்டும், அதற்கேற்ற மாதிரியான டிஷர்ட்டும் அணிந்திருந்தான்.
"மார்னிங்--வாப்பா, ராம்பிரபு!" என்று அழைத்து அவன் உள்ளே நுழைய வசதியாக வாசற்கதவை விரியத் திறந்தார் கிருஷ்ணமூர்த்தி..

"சார்! இன்னும் 'போர்டிங்' பக்கம் போகலை?" என்றான்.

"இல்லே.. இப்போத்தான் காலைப் பணியெல்லாம் முடிஞ்சது.. இனித்தான் கிளம்பணும்" என்றார் கிருஷ்ணமூர்த்தி.


ஒருநாள் பூராவும் சுற்றினாலும், பங்களா முழுசும் பார்த்து முடிக்க முடியாதது மாதிரி பெரிசாக இருந்தது. முதல்நாள் ராம்பிரபு வழிகாட்ட குத்து மதிப்பாக சில இடங்களைமட்டும் பார்த்து வைத்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணமூர்த்தி. அவற்றில் ஒன்று போர்டிங் ஹால். வலதுபக்கம் போகும் நீண்ட வராந்தாவின் கோடியில் திரும்பினால் எதிர்த்தாற்பல இருந்தது. விஸ்தாரமான இடம். எதிரும் புதிருமாக ஒரே நேரத்தில் நூறு பேருக்கு மேல் அமர்ந்து சாப்பிடுகிற மாதிரியான இடம். சமையல் செய்வது, பரிமாறுவது என்று ஏழெட்டுபேர் தேறும் போலிருந்தது.. அந்தப்பக்கம் போனாலே, "என்ன சாப்பிடுகிறீர்கள்" என்று விசாரிக்கிற பரிவு.

"என்ன, சார்?.. என்ன யோசிக்கிறீங்க?" என்றான் ராம்பிரபு. இந்த இரண்டுநாள் பழக்கத்தில் கிருஷ்ணமூர்த்தியுடன் மிகவும் அந்நியோன்யமாகியிருந்தான் அவன்.

"ஒன்றுமில்லை, பிரபு! எங்கேயோ பிறந்து, எங்கெங்கேயோ வளர்ந்து, ஊர் ஊராத் திரிந்து, அவன் பெருமையைக் கதை கதையா சொல்லிண்டு வந்தேன்... எத்தனை நாள்தான் அப்படிப்போகும்?.. கதையின் நாயகனைப் பாக்கணும்னு ஆசை தோணாதா, என்ன?.. ஒருநாள் திடீர்னு அந்த ஆசையும் தோணித்து; தோணின உடனே செயல்படுத்தமுடியலே.. சாதாரணக்கயிறா?.. சரியான தாம்புக்கயிரான்னா போட்டு கட்டியிருக்கு.. உறவுகளோட கட்டை அவ்வளவு சுலபமா பிரிச்சிண்டு வர முடியலே.. இப்பவும் ஏதோ சுற்றுப்பயணம் வந்த மாதிரிதான் இருக்கே தவிர, உறவுங்களை முழுசாக் கத்திரிச்சிண்டு வந்திட்டேன்னு தோணலே.. கொஞ்சமே மனக்கதவைத் திறந்தா, போதும்! அத்தனைபேரும் அங்கங்கே உட்கார்ந்திருக்கா.. 'எப்படி டூர்?.. நன்னா அனுபவிக்கறேளா?'ன்னு கையாட்டி விசாரிக்கறா.. எல்லாரும் சந்தோஷமா இருக்கா.. நான் தான் பித்துப் பிடிச்சவன்மாதிரி... எல்லாரையும் பிரிஞ்சு வந்து..." வார்த்தைகளை முடிக்க முடியாமல், கடைசி வார்த்தையை உச்சரிக்கையில் கிருஷ்ணமூர்த்தி குரல் சன்னமாகி, தழுதழுத்து... கன்னக் கதுப்பில் வழியத் தயாராய் இரண்டு நீர்த்துளிகள்..


"என்ன, சார்? என்ன?" என்று நாற்காலியிலிருந்து நழுவ இருந்தவரைத் தாங்கிப் பிடித்தான் பிரபு. " என்ன சார்.. என்ன ஆச்சு?" என்று பதறியவனை ஆசுவாசப் படுத்தினார்,கிருஷ்ணமூர்த்தி.

"ஒண்ணுமில்லை, பிரபு.. ஒண்ணுமில்லே--ஒண்ணுமேயில்லை.." என்று தலையைக் குலுக்கியவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது, பிரபுவுக்கு.
"ஒண்ணுமில்லே, பிரபு! கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன். இருபத்தஞ்சு வயசிலே எனக்குக் கல்யாணம்.. இப்போ அறுபத்தஞ்சு.. நாற்பது வருஷ பந்தம்.. நானூறுகோடி வருஷப் பிணைப்பாத் தெரியறது.. எங்கே போறேள்?'ன்னு கனவுலே கூட கையைப் பிடிச்சு இழுக்கறது.. இந்த அர்ஜூனுக்கு குழந்தைலே பாய்லே படுத்தே பழக்கம்இல்லே; என் மார்தான் அவனுக்குப் பாய், படுக்கை எல்லாம்... மல்லாக்க படுத்திண்டு மார்லே போட்டு தட்டினாத்தான் அவனுக்குத் தூக்கம் வரும்! குழந்தை முழிச்சிண்டுவானோன்னு அசங்காம படுத்திருப்பேன்.. குழந்தை தூங்கினது புரிஞ்சதும், அசங்காம அவன் முழிச்சிக்காம ஜாக்கிரதையா எடுத்து, பக்கத்லே படுக்க வைச்சுப்பேன்; தூங்கறத்தேயும் என்னோட அங்கவஸ்திரப் பிடியை விடாம, குழந்தை கைலேயே பிடிச்சிண்டிருக்கும்.. சின்ன கைக்குழந்தைக்குத் தெரியறது, எனக்குத் தெரியலையே?.. அத்தனை பிடியையும் அறுத்திண்டு தானே வந்திருக்கேன்?" என்று மலங்க மலங்க விழித்துக் கலங்கினார் கிருஷ்ணமூர்த்தி.


"எல்லா அப்பாங்களும் இப்படித்தானா ஸார்.. ஆனா, என்னை மாதிரியான புள்ளைங்க தான்___" என்று அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு குலுங்கினான் பிரபு.

திடுக்கிட்டு விட்டார் கிருஷ்ணமூர்த்தி. "என்னப்பா, பிரபு?.. இதோ பார்.. ஏன் அழறே?.. இதோ பார்___"என்று அவனை அணைத்து முதுகு தடவினார். பிரபு இடத்தில் அர்ஜூன் அவர் மனத்தில் இருந்தான். "அர்ஜூன்! ஏன் அழறே?"என்று குனிந்திருந்த அவன் மோவாய் மலர்த்தி அவர் கேட்டபோழுது அவர் மனசு வெட்டவெளியாய் வெளிப்பட்டது.

"ஸார்.. என்ன சொன்னீங்க?" என்று நிமிர்ந்தான் பிரபு.

"வாஸ்தவம்பா.. அர்ஜூன்னு சொன்னேன்.. அனிச்சையாய் என் உள்ளிருந்து வந்த அழைப்பு அது... உன் வயசுதான் அவனுக்கும்... நீயும் அவனும் எனக்கு ஒன்றே" என்று பிரகடனம் பண்ணுகிற மாதிரி கிருஷ்ணமூர்த்தி வாயிலிருந்து ஸ்பஷ்டமாக சொற்கள் வெளிப்பட்டன.

அவர் சொன்னதைக் கேட்டு பிரவுவின் கண்கள் கலங்கின.

'என்ன வந்தது, இவனுக்கு?.. இந்த இருபத்திரண்டு வயசுக் குழந்தையின் மனசை முதலில் லேசாக்க வேண்டுமென்கிற நினைப்பு ஒரு தந்தையின் செயலாய் அவர் உள்ளத்தில் பீரிட்டது. பிரபுவின் கன்னம் வழிந்த நீரைத் துடைத்து விட்டார் அவர். "அழாதே... ஆம்பளைங்க அழக்கூடாது. சொல்லு.. எங்கிட்ட சொல்லு.. எதுனாலும் சொல்லு.." என்றுஅவன் தோள்பட்டைகளைப் பிடித்துத் தேற்றினார் கிருஷ்ணமூர்த்தி.

அம்பு எய்ய முனைந்த வேடனடியிலிருத்து தப்பி, சிபி சக்கரவர்த்தியிடம் அடைக்கலமானப் புறாவின் நிலையில் படபடப்புடன் இருந்தான் அவன்.

அவர் பிடியில் தளர்ந்து தன்னையே ஒப்படைத்து விட்ட விசுவாசம் அவனிடம் இருந்தது.

"சரி... பிரபு.. இப்போ நீ ஓ.கே.தானே?.. அது போதும்.. வேணும்னா அப்புறம் சொல்லு.." என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்தார்.

"பெத்த பிள்ளை மீது அப்பாக்கள்லாம் வைச்சிருக்கற பாசத்தை நீங்க சொன்னப்போ.. அதை நீங்க சொல்றச்சே.. எனக்கு மனசு தாங்கலே.. அந்த சுகம் எனக்குத் தெரியாததாலே துக்கமா வந்து நெஞ்சடைத்திடுத்து.. அதான்.. அதான்.." என்று திக்கினான் பிரபு.


"ஓ___" என்று அவன் தலை தடவி ஆசுவாசப்படுத்தினார் கிருஷ்ணமூர்த்தி.


ஒரு நிமிஷம் அவர் நெற்றி நிமிர்ந்து பார்த்து, சடாரென்று தலைகவிழ்த்து, "எனக்கு அப்பா இல்லே, சார்!" என்றான் பிரபு.. ஒரு வினாடி மெளனத்தைத் தாண்டி," அவர் செத்துப் போகறச்சே மூணு வயசாம் எனக்கு.. அம்மா சொல்லித்தான் தெரியும்" என்று விக்கலூடே தொடர்ந்தான் "ரோட்லே, பஸ்லே, கடைலே, ஸ்கூல்லேன்னு நா சின்னப் பையனா இருக்கறச்சே எந்த அப்பாவைப் பாத்தாலும், அப்பா பாசத்துக்கு ஏங்கி எனக்கு துக்கம்பொத்துண்டு வரும்.. கஷடப்பட்டு அடக்கிப்பேன். எங்கப்பாவை நான் பாத்த நினைவே இல்லே.." என்று கேவினான் பிரபு.


கிருஷ்ணமூர்த்தி அவன் கைபிடித்துத் தன் கைக்குள் வைத்துக் கொண்டார். "கவலைப்படாதே, பிரபு!.. எனக்குக்கூட எங்கப்பா என்னோட ஒரு வயசிலேயே காலமாயிட்டார். அந்தக் காலத்லே இப்போ மாதிரி போட்டோல்லாம் அதிகமா எடுக்க மாட்டா.. எங்கப்பா இப்படியிருப்பார்னு தெரிஞ்சிக்க வீட்லே ஒரு போட்டோ கூட இல்லே.. அதுனாலே என்னப்பா?.. வீட்லே எத்தனை சாமி படம் இருக்கு.. நம்மோடையே இருக்கற இறைவன் தான் நம்மோட அப்பா.. அம்மா எல்லாம். பனிபடர்ந்த இமயமலைலே அம்மையும், அப்பனும் எப்படி 'ஜம்'னு உட்கார்ந்திருக்காங்க.. அந்தப் படம் பாத்திருக்கையா நீ?.. எப்பவும் நம்ம அப்பாவும் அம்மாவும் நம்மையெல்லாம் கவனிச்சிண்டு.. காப்பாத்திண்டு இருக்கறச்சே,நமக்கென்ன கவலை?.. பீ சீர்! எங்கே, சிரி!.." என்று அவர் சொல்ல ஒரு குழந்தை போலச் சிரித்தான் பிரபு.

"குட்!" என்று அவனைத் தட்டிக் கொடுத்தார் கிருஷ்ணமூர்த்தி.

மூத்த வயதில் மகன் அருகில் இல்லாத தந்தையும், இளம் வயதில் தந்தை இல்லாத மகனுமாய் உணர்வுப் பிழம்பான அந்தச் சூழ்நிலையில்...

இன்னொரு ஆத்மாவை பாசத்துடன் தரிசித்த புல்லரிப்பு கிருஷ்ணமூர்த்திக்கு ஏற்பட்டது.

(தேடல் தொடரும்)

Wednesday, October 1, 2008

ஆத்மாவைத் தேடி....8

ஆன்மீகத்தின் அடுத்த கட்டம் நோக்கி....


8. நெஞ்சின் அலைகள்

ங்கிக்கொள்ள ஒதுக்கியிருந்த இடம் மிகவும் செளகரியமாக இருந்தது. தகத்தகாயமாய் மேலெழும்பத் தயாராகும் விடியல் சூரியனை கிழக்கு நோக்கிய பால்கனி பக்கமிருந்து வசதியாக தரிசிக்கலாம்; நமஸ்கரிக்கலாம். சீக்கிரமாகவே எழுந்திருந்து எல்லாக் கடன்களையும் முடித்து உதய நேரத்திற்கு பால்கனியில் கிருஷ்ணமூர்த்தி மிகச் சரியாக ஆஜராகிவிடுவார். திருப்தியாக மார்பு பூமிபட குனிந்து நிமிர்ந்து நமஸ்கரித்து எழுவது, அவருக்கு மிகவும் பிடிக்கும். இந்த வயதிலும் நினைத்த இடத்திற்கு கிளம்புவதற்கு வசதியாக தன்னைத் திடகாத்திரமாய் வைத்திருப்பது இந்த ஆதித்யன் நமஸ்காரமே என்பது அவரது அசைக்கமுடியாத நம்பிக்கை.

விட்டு விலகி வந்தாலும் வீடு சுற்றிய நினைவுகள் கிருஷ்ணமூர்த்தியைச் சுற்றி சுற்றி வருகிறது..
'ராதை கெட்டிக்காரி. மளிகைக்கடை, பால்னு எங்கேயும் கடன் கிடையாது. 'மாசம் பொறந்து ஒண்ணாம் தேதியாச்சுன்னா சம்பளம்'னு புருஷன் ஒரு கவர்ன்மெண்ட்,கம்பெனின்னு உத்யோகத்லே இல்லையேன்னு வருத்தம் கிடையாது. இன்னொருத்தர் கிட்டே குறையா ஒரு வார்த்தை பேசினது கிடையாது... எப்படித்தான் எல்லாம் கவனிச்சிண்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினாளோ, அவருக்கு ஒண்ணும் தெரியாது.. ஸ்கூல் ஃபீஸ் கட்டறலேந்து, ஸ்கூல் பிராக்கிரஸ் ரிப்போர்ட்லே கையெழுத்துபோடற வரைக்கும் எல்லாம் அவள் தான். பையனும், பெண்ணும் படு சூட்டிகை. ட்யூஷன்?.. மூச்! அதெல்லாம் பேசப்படாது. ஸ்கூல் விட்டு வந்ததும், ஆறு-ஆறரைக்கே ரெண்டு பேரையும் மடக்கி வைச்சிண்டு 'இன்னிக்கு என்ன பாடம் நடந்தது'ன்னு கேட்டு அவளே சொல்லித்தருவாள். பசங்களும் க்ளாஸ்லே ஒண்ணு., ரெண்டு ரேங்கைத்தாண்டினது கிடையாது. எப்போ படிக்கறா, எப்போ விளையாடறான்னு நாலு பேருக்குத் தெரியாது.

.அர்ஜூனன் ஸ்கூல் பைனல்லே டிஸ்ட்ரிக் ஃப்ஸ்ட் வந்து, ரிசல்ட் வந்தப்போ கிருஷ்ணமூர்த்தி ஊர்லே இல்லே.. மன்னார்குடி கோயில் விசேஷத்திற்கு கதை சொல்லப் போயிருந்தார்.. மாலை தினசரிலே செய்தி படித்து, போட்டோ பார்த்து யாரோ சொன்னபோதுதான் தெரியும். மனசார, "ரொம்ப நன்றிப்பா"--ன்னு ராஜமன்னாரை நமஸ்கரித்தார். அர்ஜூனனும் பி.காம். முடிச்சிட்டு, சி.ஏ., பண்ணனும்னு நெனைச்சதை முடிச்சிட்டான். திருச்சிலே ஒரு ஆடிட்டர் கிட்டே தொழிலைப் பழகிண்டே, எம்.பி.ஏ.வும் முடிச்சவுடன் போனவருஷம் கல்யாணம் குதிர்ந்து விட்டது; இப்போ திருச்சிலே மெயின்கார்ட் கேட் பக்கத்லேயே தனியா போர்ட் போட்டுண்டு பிராக்டிஸ் பண்றதுன்னு எல்லாமே ஏதோ விளையாட்டுபோல அடுத்தடுத்து நடந்தன.. அதிர்ந்து பேசத்தெரியாத, நன்கு சமைக்கத் தெரிந்த அடக்கமான மருமகள்; அரியலூர்லே கூட்டுக்குடித்தனம் தான். காலை டிரையினுக்குத் திருச்சி கிளம்பினான்னா, ராத்திரி ஒன்பதுக்குள்ளே அர்ஜூனன் திரும்பிடுவான்.

அர்ஜூனனுக்கு அடுத்தவள் கிரிஜா. கல்யாணமான கையோட புருஷனோட அமெரிக்கா போயிட்டா. புருஷன், பெண்டாட்டி ரெண்டு பேருமே சாப்ட்வேர்; இவளே குழந்தையாய்இருக்கையில் இவளுக்கு ரெண்டு வயசிலே கைக்குழந்தை! காலம் தான் என்னமாய் வேகவேகமா ஓடறது?.. எல்லாம் பகவான் கிருபை என்று நினைத்துக் கொள்வார் கிருஷ்ணமூர்த்தி.

ஊரில் இருக்கும் காலங்களிலெல்லாம் பிள்ளையாருக்கு பால் அபிஷேகம் பண்ணுவது பல வருஷ காலப் பழக்கமாய் கிருஷ்ணமூர்த்தியின் மனசில் படிந்து போன ஒன்று. மாக்கல் பிள்ளையார் தான். திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கல்லூரியில்தான் கிரிஜா எம்.ஸி.ஏ. படித்தாள். அவளுடன் மலையேறி உச்சிப்பிள்ளையார் தரிசனம் முடித்து தாயுமானவரையும் வணங்கிக் கீழே வந்தபொழுது அங்கிருந்த கடையொன்றில் வாங்கியது.

தினமும் காப்பி கலக்கறதுக்கு முன்னாடி காய்ச்சாத பாலை ராதை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து விடுவாள். குளித்து முடித்ததும் நேரே பூஜை அறை தான். பிள்ளையாரை ஒரு செப்புப் பாத்திரத்தில் வைத்து, கிண்ணப் பால், அடுத்து நீரால், என்று அபிஷேகம் நடக்கும்; அப்படிச் செய்கையிலேயே, 'மூஷிக வாகன', 'வக்ரதுண்ட' எல்லாம் பாராயணமாய் வந்து போகும். 'மூஷிக வாகன' சொல்கையில், 'மகேஸ்வர புத்ர' என்கிற வார்த்தை வரும் பொழுது இனம்புரியாத இன்பம் நெஞ்சை நிறைந்து புல்லரிக்கச் செய்யும்.. அபிஷேகம் முடித்துப் பிள்ளையாரைத் துடைத்து அவருக்கு இடுப்பு வஸ்திரம் மாற்றி, வீபூதி தரித்து, அவரிடத்தில் அமர்த்தி...நமஸ்காரம் பண்ணி எழுவார்.

இப்படித்தான் ஒருநாள் கிண்ணம் எடுத்துப் பாலை அபிஷேகிக்கையில், கைதவறி பிள்ளையாரின் நெற்றியில் 'டக்'கென்று கிண்ணம் இடித்ததும், 'ஸாரி--' என்று அனிச்சையாய் சடாரென்று மன்னிப்புக் கேட்டது, இப்பொழுதும் கிருஷ்ணமூர்த்தியின் நினைவுக்கு வந்து லேசான புன்முறுவலாய் விகசித்தது. யாரிடம், யார் 'ஸாரி-'?.. பிரமத்திடம் அதன் மூலக்கூறு கேட்டதா?...

இவர் வீட்டுப்பிள்ளையார். இவருக்கே இவருக்கான செல்லப் பிள்ளையார். தெய்வம், அந்தியந்த நண்பர் எல்லாம் இவருக்கு அவர் தான். எல்லா முறையிடல்களும் அவரிடம் தான். இவர் வீட்டில் இருக்கையில் தான் அவருக்கு அபிஷேகம். வெளியூர்களுக்கு புராண பிரசங்கங்களுக்கு அடிக்கடி போகையில் எல்லாம், அபிஷேகம் தவறிப் போதல் பழக்கப்பட்டு விட்டது. இப்படி இமயமலைன்னு கிளம்பி வந்து விட்டது, எல்லோருடனும் சேர்ந்து பிள்ளையாரையும் விட்டு விட்டு வந்து விட்டது போல் தோன்றுகிறது.

அங்கெல்லாம் விக்னேஸ்வரர், விநாயகர், பிள்ளையார் என்றால், இங்கே 'கணேஷ்ஜி'. மரியாதை கொடுத்து மரியாதை பெற்றுக் கொள்வது மனசுக்கு சந்தோஷமாகத் தான் இருக்கிறது.. இது இனம் புரியாத அன்பையும் ஒரு ஒட்டுதலையும் சர்வசாதாரணமாக இன்னொருவரிடம் ஏற்படுத்துகிறது... வெகுசகஜமாக எல்லோருக்கும் ஒரு 'ஜி'.

பல மாநிலத்திலேந்து நிறைய பண்டிதர்கள் வந்திருக்கா. இன்னும் நிறையப் பேர் வரவேண்டியிருக்கு. நாளைக்குத் தான் எல்லாரும் ஒண்ணாச் சேர்ந்து அறிமுகமாகற ஆரம்பக் கூட்டம்... எல்லாரையும் 'கோ-ஆர்டினேட்' பண்ணறது கொஞ்சம் சிரமமாத்தான் இருக்கும் போல. ஆயிரம் இருக்கட்டுமே, நல்ல அனுபவம். எல்லாம் அவன் சித்தம். 'நிறைய வேலை இருக்கு உனக்கு'-- அந்த இருட்டிலே, ஸ்டேஷன் பிளாட்பாரத்லே கண்டிப்பா, ஸ்பஷ்டமா சொன்னது காதுலே ரீங்கரிக்கறது... .

நீ இருக்கறச்சே என்ன கவலை? நிறைய பொறுப்பு கொடு; என்னைச் செயலாற்ற வை; எல்லாம் உன் ஆசிர்வாதம்; 'என் செயல் பணி செய்து கிடப்பதே' கூட இல்லை,'உன் அருளால் உன் தாள் வணங்கி....' என்றெல்லாம் கிருஷ்ணமூர்த்தி மனசில் வார்த்தைகளாய், வடிவங்களாய் மாறி மாறி நினைத்துக் கொண்டிருக்கையில்----

வாசல் பக்கம் அழைப்பு மணி கிணுகிணுத்தது.

(தேடல் தொடரும்)
Related Posts with Thumbnails