மின் நூல்

Wednesday, March 30, 2016

அழகிய தமிழ் மொழி இது!

பகுதி--5

சைக்கு எப்படி சுப்புடு சாரோ,  அந்த மாதிரி இலக்கியத்திற்கு க.நா.சு. அவர்கள்.  இரண்டு பேருமே தில்லியில் நெடுங்காலம் வாழ்ந்தவர்கள் என்பதும் இவர்களுக்கிடையான இன்னொரு ஒற்றுமை.

கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம் இலக்கிய வட்டத்திற்கு க.நா.சு. ஆனார். நாடகங்கள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று தமிழின் எல்லா வகைகளிலும் இவர் எழுதிப்பார்த்தவர்.  ஆனால் க,நா.சு. என்றதுமே பலருக்கு அவரது சமரசமேயில்லாத விமர்சனக் கட்டுரைகள் தாம் நினைவுக்கு வரும். மனிதர் விமரிசன சமாசாரத்தில்  மன்னர் என்றாலும் இந்தத் தொடரைப் பொறுத்த மட்டில் அவர் நாவல் உலகைப் பார்ப்போம்.

'சர்மாவின் உயில்' என்பது க.நா.சு--வின் முதல் நாவல்;  கடைசி நாவல்: பித்தப் பூ'.  இந்த இரண்டுக்கும் நடுவே 1946 வாக்கில் எழுதிய 'பொய்த்தேவு' அவரின் சிறந்த படைப்பாக பெயரைத்  தட்டிக்  கொண்டு போயிருக்கிறது.

'நாவல் என்பது வரலாற்றையும் தத்துவத்தையும் உள்ளடக்கி வாழ்வு குறித்த முழுமையான தேடலை நிகழ்த்தும் ஒரு இலக்கிய வடிவம்'  என்பார் ஜெயமோகன்.

"நாவல் என்ற விசேஷ வடிவத்தைப் பற்றி சுயநினைவோடு எழுதப்பட்ட தமிழின் முதல் நாவல் இது" என்பது 'பொய்த்தேவு' நாவலுக்கான ஜெயமோகனின் கூற்று.  நாவல் என்பதற்கு என்ன இலக்கணம் என்று ஜெயமோகன்  கொண்டிருக்கிறாரோ அந்த  இலக்கணத்திற்கு உருவம் கொடுத்த மாதிரி இந்த நாவல் அமைந்திருப்பதாக அவருக்குத் தோன்றுகிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.  

தொடர்கதைகள் வேறு நாவல் என்பது  வேறு என்பது  இலக்கிய விமரிசனங்களில் ஆழ்ந்து தோய்ந்த நம் காலத்து தலைசிறந்த  படைப்பாளி ஜெயமோகனின் கருத்து.. அதாவது தொடர்கதைகள் நாவாலாகாது  என்று அடிக்கோடிட்டுச் சொல்கிறார்.
அப்போ தொடர்கதைகளாய் பத்திரிகைகளில் வெளிவந்து வாராவாரம் படித்தவர் மனசை ஈர்த்த, என்றோ எழுதியது என்றாலும் இன்றும் வாசித்தவரின் மனசில் நீக்கற நிறைந்திருக்கும் பேற்றைப் பெற்றிருக்கும் அந்த தொடர்கதைகளெல்லாம் நாவல் இல்லையா என்றால் இல்லை என்று நிர்தாட்சண்யமாய் மறுக்கிறார் ஜெயமோகன்.

ஏனாம்?..

வாசகரின் ரசனைக்காகவும்  அவர்களின் ஆவலைத் தூண்டும் விதமாகவும் அடுத்த வாரப் பகுதியை எதிர்பார்க்கிற தூண்டுதலுக்காக சுவாரஸ்யமான இடத்தில் தொடரும் போட்டுத் தொடர்வது நாவலில்லை என்பது அவரது கட்சி.;   இலக்கியம் என்பது ரசனை  அடிப்படையில் அமைய வேண்டுமா அன்றி கோட்பாடு அடிப்படையிலா என்பதும் விவாதத்திற்குரிய பொருள் தான். கோட்பாடு அடிப்படையில் என்பதில் அவற்றை எவ்வளவு தான் நியாயப்படுத்தினாலும் கலாபூர்வ அழகுகள் கோட்பாடுகளின் கறாரான விதிகளின் நெரிசலில் சிக்கிப் பலியாவதும் தவிர்க்க முடியாத இழப்பாகவும் தெரிகிறது.

நாவல் என்பது துண்டு துண்டாக அத்தியாயம் அத்தியாயமாக ஒட்டுப் போடும் சமாசாரமில்லை.  வாசகரின் வாசக ரசனைக்காக அவர்களின் ரசனை அம்சங்களைத் தேடித் தேடிக் கோர்த்துக் கதை பண்ணும் வேலையும் அல்ல. மாறாக  நாவல் என்பது அதன் கருவைச் சார்ந்த அனைத்தையும் வாசகன் முன் தொகுத்து முன்வைக்க முயல்கிறது.  இதனால்  அனைத்தையும் ஆராய்ந்து வாசகன்  தன் நோக்கை உருவாக்கிக் கொள்ள வழிவகை செய்கிறது என்கிறார்.

இந்த மாதிரி வரையறைகளுக்கு உட்பட்ட சட்டம் போட்ட இலக்கியம் என்பதில் எழுதுபவனின் கற்பனைச் சிறக்கடிப்பை ஒரு வரையறைக்கு உட்படுத்தி மழுங்கடிக்கும் ஆபத்தும் பதுங்கி இருப்பது  தெரிகிறது.  என்ன எழுதினாலும் அதை எழுதும் போதே கோட்பாடுகளை நினைவில் கொண்டே எழுத வேண்டும் என்பதும் எழுதுபவனுக்கு அவனது  கற்பனைச் சுதந்திரத்தைக் காவு கொடுக்கிற அயர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

எழுதுகிறவன் தான் எடுத்துக் கொண்ட நாவல் கருவை  நியாயப்படுத்துகிற பல விஷயங்களின் தொகுப்பில் அதன் வாசிப்பின் பயனாக வாசகனுக்கு ஒரு ஒட்டுமொத்த பார்வையை அளிப்பது நாவல் என்கிறார்கள்.  அப்போ கட்டுரை என்பதும் இது தானே என்று தோன்றுகிறது. அதனால் தான் இப்படியான போக்குள்ள நாவல்கள் கட்டுரைத்தன்மையைத் தவர்க்க முடியாமல் கொண்டிருக்கின்றன போலும்.

நாவலின் உள்ளடக்கமும் வடிவமும் மாறிக்கொண்டே இருப்பதினால் நாவல் என்பது  வடிவம் சார்ந்ததும் இல்லை, உள்ளடக்கம் சார்ந்ததும் இல்லை என்று நாவல் கோட்பாடுகளை வரையறுக்கும் ஜெமோ வாசகரின் எதிர்பார்ப்பையே நாவலின் வடிவமாக முன் வைக்கலாம் என்கிறார்.  வாசகர் எதிர்ப்பார்ப்பு மட்டும் என்றென்றும்  சாசுவதமா, மாறிக்கொண்டே இருக்காதா என்று கேட்கத் தோன்றுகிறது.

நாவலில் கதையோட்டம் தேவையில்லை; கதைப் பின்னல் தான் தேவை என்பது ஜெமோ சொல்லும் இன்னொரு கருத்து.  இதை தி.ஜானகிராமனின் மோகமுள்  கதை மூலமாக விளக்குகிறார்.  யமுனா--பாபு உறவையே பக்கம் பக்கமாக நீட்டிச் செல்கிறார் ஆசிரியர்.  வலுவான வேறு கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் மையக் கதையோட்டத்துடன்  கலந்து ஊடறுக்கவில்லை. என்கிறார்.  பாபுவின் தந்தையோ அல்லது ரங்கண்ணாவோ பாபு--யமுனா உறவுக்கிடையே நுழைந்து ஊடறுத்திருந்தால் மோகமுள் ஒரு நாவல் உருக்கொண்டிருக்கும் என்பது அவரது பார்வை.

இன்னொன்று.   'வடிவமற்ற வடிவத்தையே தன் வடிவமாகக் கொண்டிருக்கும் நாவலின் பின்னல், கயிறு முறுக்குவது  போல இருக்கக் கூடாது. கூடை முடைவது போல இருக்க வேண்டும் என்கிறார்.   ஒரே கதையைப் பின்னிப்பின்னி சொல்லும் பொழுது நாவல் பலவீனமாகிறது..  கதைகளும் கதைமாந்தர்களும் பெருகிப்  பெருகிச் செல்லும் பிரவாகமாக நாவலில் இருக்க வேண்டும்'.என்பது ஜெமோவின் கருத்து.  நாவலின் வடிவத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் அதன் உள்ளடகத்தை விடப் பிரதானமாகிப் போயிருப்பதும் தெரிகிறது.

தன் கால சமுகத்தின்  மதிப்பீடுகளையும் மறுபரிசீலனைக்கு  உட்படுத்தி இத்தனை காலம் காவியங்கள் நிறுவி விட்டுப் போன மதிப்பீடுகளை அதே வீரியத்துடன் எதிர் கொள்ளும் தன்மை கொண்டது நாவல், சொல்லப் போனால் காவியத்தை முழுமையாகக் கழித்து விடும் எதிர் காவிய வடிவமே நாவல் என்று அவர் குண்டைத் தூக்கிப் போடும் பொழுது  நமக்கோ பகீர் என்றிருக்கிறது. சென்ற கால காவியங்கள் எல்லாம் கழிந்து போனவை போலத் தோற்றம் கொள்வது இதனால் தானோ என்கிற சம்சயம் வேறே.


(தொடரும்)


படங்கள் உதவியோருக்கு நன்றி.

Thursday, March 24, 2016

சும்மா சுவாரஸ்யத்திற்காக

பெரும்பான்மையான கேள்விகள் இலக்கியமும் இலக்கியம் சார்ந்ததுமானது.   .
வேண்டுமென்றே சுலபமாகக் கேள்விகள் தயாரிக்கப் பட்டிருக்கின்றன.

பதில்களுக்கு சிரமப்பட வேண்டும் என்றில்லை.  கடைசியில் காணபடும் க்ளூக்கள் பதிலை சுலபமாகக் கண்டுபிடிப்பதற்காகவே கொடுக்கப் பட்டிருக்கின்றன.  முயற்சித்துத் தான் பாருங்களேன்..

=====================================================================

1) கேள்வி:   பிப்ரவரி 28  கல்கி இதழில்  பிப்ரவரி 29  என்ற சிறுகதை எழுதியவர் யார் தெரியுமா?

2) கேள்வி:  பாம்பு ஏணி படமெல்லாம் இருக்கும் இந்த விளையாட்டில்;  என்ன விளையாட்டு?

3) கேள்வி:  குருபிரசாத்தின் கடைசி தினம்  கதை படித்திருக்கிறீர்களா?  யார் எழுதிய கதை அது?

4) கேள்வி: திருக்குறளின் முதல் குரள் நமக்கெல்லாம் மனப்பாடம்.  குறளின் கடைசிக் குறள் என்ன?

5) கேள்வி:  தந்தையைக் குளிர்க் கண்ணாடி (Cooling glass) இல்லாமல் பார்த்தவர்கள் அரிதினும் அரிது.   அவரின் திருமகனாரும் குளிர்க் கண்ணாடி.  இரண்டு பேருமே எழுத்தாளர்கள்.  தந்தையாரின் பெயர் என்ன?

6 கேள்வி:  முரசொலிக்கட்டும்; நம் நாடு தழைக்கட்டும்; மன்றத்திலே எங்கள் மக்கள் கூட்டம் திரளட்டும்,... என்று தொடர்ந்து பத்திரிகைகள் பெயர்களை எடுத்தாண்ட வசனம் தூக்குமேடை காட்சியில் வரும் திரைப்படம்.   இந்த படத்திற்கு வசனம் எழுதியது யார்?..

7) கேள்வி: சாணக்கியராக  தம் நாடகத்தில் வாழ்ந்து காட்டியவர். .


8) கேள்வி:  தமிழின் முதல் சிறுகதையின்  பெயர் என்ன தெரியுமா?

9) கேள்வி:  இராம காதையில் அனுமனின் சாகசங்களுக்காகவே ஒதுக்கப் பட்ட காண்டம் எது?

10) கேள்வி: இந்த நாவல் முழுதாக கல்கி அவர்களால் எழுதப்படவில்லை. தந்தையின் இறப்பிற்குப் பிறகு அவரின் நாவல் குறிப்புகளை வைத்துக் கொண்டு அவர் மகள் நாவலை முழுதாக எழுதி முடித்தார்.  அந்த நாவலின் பெயர் என்ன?

11) கேள்வி: பாக்கியம் ராமசாமி என்பது புனைப்பெயர் என்று தெரியும். அவரது இயற் பெயரின் 'ஜ' எந்த ஊரைக் குறிக்கிறது?..

12) கேள்வி: மறக்க முடியாத இந்த மராத்தி எழுதாளரின் நிறைய கதைகள் தமிழில்  வெளியாகி பின்  மராத்தியில் மொழிபெயர்க்கப் பட்ட அதிசயம் நடந்திருக்கிறது.  இவரது பிரபல நாவலகளில்  ஒன்று யயாதி.  யார் அவர்?

13) கேள்வி: இவருக்கு 2015 ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது அளிக்கப்படடது.  திருவனந்தபுரத்தில் இருக்கும் ஒரு முக்கிய தெருவை நிலைக்களனாகக் கொண்டு இவர் நிறைய எழுதியிருக்கிறார்.  அந்தத் தெருவின் பெயர் என்ன?

14) கேள்வி: போர்க்களத்தில் 'இன்று போய் நாளை வா'  என்று தன்னைக் குறித்துச் சொன்னதை நினைத்து நினைத்துத் துடித்தவன்.

15) கேள்வி:  அந்தக் காலத்திலேயே வானவூர்தி இருந்தது என்பதற்கு அடையாளமாகத் திகழ்வது இந்த ஐம்பெருங்காப்பிய படைப்பு.


க்ளூக்கள்:

1)  காளை ராசி   2) வீடு பேறு  3) கதை சொன்ன வாத்தியார்  4) ஊடுதலும் கூடுதலும்

5)  சங்கர்லால்  6) தென்றல்  7) ஒரு திரைப்படத்தின்  பெயரில் ஓரளவு ஒளிந்துள்ளவர்  8) மரங்களுக்கு அரசன்  9) அழகு  10) விண்மீன்  11) நீர்

12)  கா.ஸ்ரீ.ஸ்ரீ.   13)ரோடு   14)  தசமுகன்  15)   பணம்-- ஆங்கிலத்தில்.

-------------------------------------------------------------------------------


1) நீங்களே சுதந்திரமாக மதிப்பெண்கள் போட்டுக் கொள்ளலாம்.

2) எல்லா விடைகளும் சரியென்றால் ஆஹா..

3) பத்து விடைகள் சரியென்றால்  பிரமாதம்

4) எட்டு விடைகள் சரியென்றால்  பரவாயில்லையே..

5) அதற்குக் கீழே இந்த மாதிரி இன்னும் நாலு  வினாத்தாட்கள் முயற்சி செய்தால் பிரமாதத்திற்கு வந்து அதற்குப் பின் ஆஹா-வை அடையலாம்.  சலிக்காது முயற்சி செய்யுங்கள்.


 படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.



Saturday, March 19, 2016

அழகிய தமிழ் மொழி இது!...

பகுதி--4

ரணி குப்புசாமி முதலியார்,  வடுவூர் துரைசாமி ஐயங்கார், கே.ஆர்.ரங்கராஜூ  பொன்றவர்கள் ஆங்கில மர்ம நாவலக்ள் கதை மாந்தர்களுக்கு தமிழ் உடை உடுத்தி  அழகு பார்த்தவர்கள் என்றால் இவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவராய்த் திகழ்ந்தார் வை.மு. கோதைநாயகி அம்மாள்.    வை.மு.கோ. என்று வாசிப்பு  உலகத்தினரால் செல்லமாக அழைக்கப்பட்டவர்.

அந்தக்கால வழக்கப்படி பெண்ணாய்ப் பிறந்ததினால் கல்விச்சாலையை நெருங்க முடியாமல் ஆரம்பக்கல்வியே மறுக்கப்பட்ட நிலைக்கு உள்ளானார். குழந்தைப் பருவத்திலேயே தாயை  இழந்த இவரை வளர்த்த சித்தப்பா இவருக்கு ஞான ஆசிரியராய் ஆனார்.  அவரிடம் தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி என்று கற்றார்.  ஐந்து வயதில் பால்ய விவாகம். கணவர் பார்த்தசாரதிக்கு ஒன்பதே வயது.

சிறுவயதிலேயே தன்னையொத்த சிறு குழந்தைகளுக்கு கோதை கதை சொல்லும் திறமை பெற்றிருந்தார். கணவரின், மாமியாரின் அன்பும் ஆதரவும் பெண்ணுக்கான சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்தது.  பிற்காலத்தில் தமிழை வாசிக்கவும் எழுதவும் தெரியாத நிலையிலேயே இவ்ர் சொல்லவும் இவர் சொல்வதை எழுதவும் பட்டமாள் என்ற தோழி கிடைத்தார். அப்படி வை.மு.கோ. சொல்லி எழுதியது தான் இவரின் முதல் நாவலான 'இந்திர மோகனா'!. நாளாவட்டத்தில் பட்டமாளே இவருக்கு கல்வி போதித்த ஆசிரியையும் ஆனார்.

அன்னி பெசண்ட் அம்மையாரின் அறிமுகம், சமூக சேவகி அம்புஜம் அம்மாளீன் தோழமை, தீரர் சத்யமூர்த்தியின் தீவிர மேடைப்பேச்சு , மஹாத்மாவின் தமிழக விஜயம் எல்லாம சேர்ந்து இவரை சுதந்திரப் போராட்ட வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள இழுத்துச் சென்றது.

இந்த காலகட்டத்தில் தான் 'ஜகன்மோகினி' என்ற பத்திரிகையை தம் சொந்தப் பொறுப்பில் நடத்தவும் அதற்கு ஆசிரியையாகவும் ஆகிறார் வை.மு.கோ. . ஜெகன்மோகினியில் தன் இரண்டாவது நாவலான 'வைதேகி'யை எழுதினார்., பின் 'சண்பகவிஜயம்', ''ராதாமணி,' பத்ம சுந்தரன்', 'கெளரி முகுந்தன்'' என்கிற நாவல்களை 1926-27 காலகட்டத்தில் எழுதினார்.   'நாவல் அரசி' என்ற பட்டம் வை.மு.கோ.விற்கு தன்னாலே தேடிவந்தது.  பிரமிக்காதீர்கள், இவர் எழுதிய மொத்த நாவல்களின் எண்ணிக்கை 115 என்று இலக்கிய ஆய்வாளர்கள் கணக்கு சொல்கின்றனர்.  இன்றைக்கும் இந்த எண்ணிக்கையை யாரும் எட்டவில்லை என்று நினைக்கிறேன்.

வை.மு.கோ. தன் நாவல்களுக்கு எடுத்துக் கொண்ட எழுது பொருள் பெண் விடுதலை, மதுவிலக்கு, விதவைத் திருமணம், மத நல்லிணக்கம் என்று--- அத்தனை நாள் ஆங்கில நாவல்களை அடியொற்றி எழுதிய எழுத்துப் பாங்கு தமிழில் இவரால் மாறுபடுகிறது.  இவ்வாறாக தமிழ் நாவல்களில், நாவலுக்காக எழுதும் கருப் பொருளில் முதல் முதலாக மாற்றம் கண்ட பெண்மணி வை.மு.கோ. தான்.  இது தமிழ் நாவல் எழுத்துலகம் கண்ட மிகப் பெரும் வரலாற்று மாற்றம்.

வை.மு.கோ.வின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் தீர்ம் மிக்கது.  காந்திஜியின் அறைகூவலை ஏற்று சென்னை திருவல்லிக்கேணியில் கள்ளுக்கடை மறியல், மற்றும் அன்றைய சைனா பஜாரில் தடையை மீறி ஊர்வலம் சென்றார் என்று ஆறு மாதம் சிறைதண்டனை+ அபராதம் என்று தண்டனை வழங்கப்பட்டு,  அபராதம் செலுத்த மறுத்ததால் இன்னும் 4 மாதங்கள் சேர்த்துக் கிடைத்த தண்டனையையும் புன்முறுவலுடன் ஏற்று சிறை சென்றார்   அன்னிய துணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் தண்டனை பெற்று வேலூர் சிறைவாசம்.  சிறை வாழ்க்கையையும் எழுதுவதற்குக்  கிடைத்த வாய்பாகக்  கொண்டு 'உத்தம சீலன்', 'சோதனையின் கொடுமை' என்று இரு நாவல்களைப் படைத்தார்.

வை.மு.கோ,  தேச நலனுக்காகப் பயன்பட்ட நல்ல மேடைப் பேச்சாளர், கர்நாடக சங்கீதத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர் என்று ஏகப்பட்ட பெருமைகளுக்குச் சொந்தக் காரர். பெண் எழுத்தாளர்களில் சாதனைகள் படைத்த முதல் பெண்மணி.  பாரத தேசத்தின் நலன்கள் சார்ந்த கொள்கைகளை தம் எழுத்துக்கு கருப்பொருளாக அவர் எடுத்துக் கொண்டது என்றென்றும் நினைவு கொள்ள வேண்டிய சாதனை.

தமிழ் நாவலுலகில் 1879-ல் பிரசுரமான மயூரம் வேதநாயகம் பிள்ளையின் 'பிரதாப முதலியார் சரித்திரம்',  1896-ல் வெளிவந்த ராஜம் அய்யரின் 'கமலாம்பாள் சரித்திரம்' போன்ற நாவல்கள், வை.மு.கோ.வின் நாவலகளுக்கு முற்பட்ட காலத்தினது ஆயினும்  அவை தனி மனித கோணல்மாணல்களை அச்சுப்பிச்சுத் தனமாக வர்ணித்தவை.  இந்த நிலைகளிலிருந்து மாறுப்பட்டுப் போனதும் வை.மு.கோ.வுக்கு வாய்த்த  தனிச் சிறப்புகளாகின்றன.

1898-ல் பிரசுரமான மாதவய்யாவின் 'பத்மாவதியின் சரித்திரம்'  இதற்கு முந்தைய காலகட்டதின் நாவல் தலைப்புகளைப் பிரதி எடுத்திருப்பது மேலோட்டமான பார்வைக்கே புலப்படுவது..  ஒரு நாவல் என்றால் குறிப்பிட்ட ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்வது தான் என்று முடிவு எடுக்கிற மாதிரியும் உள்ளடக்கத்தின் தேர்வு நிகழ்ந்திருக்கிறது.  அதே நேரத்தில் பத்மாவதி என்னும் தனிப்பட்ட ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் நேர்ந்துவிட்ட சோக வரலாற்றின் விவரிப்பாக குறுக்கம் கொண்டதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து நெடுங்காலம் கழித்து 1946-ல் பிரசுரமான க.நா.சுப்பிரமணியம் அவர்களின்  'பொய்த்தேவு' தான் தேறுகிறது. தமிழ் நாவலுலகின் இலக்கிய ஆய்வாள்ர்களால் விசேஷப்படுத்தும் நாவல் இது.  அதைப்  பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

இலக்கியம் என்பது  காலத்தின்  கண்ணாடியாக திகழும் பொழுது அதன் பெருமை வருங்காலத்திற்கு வழிகாட்டியாகிறது.   இலக்கியம் வாழ்வின் மதிப்பிடல்களைத் தீர்மானிக்கும் சக்தி பெறும் பொழுது அதற்கான உண்மையான உயிர்ப்பினைக் கொண்ட சாதனையாகிறது.  அந்த சாதனைகளும் சமூக அவலங்களைக் களைந்த நேர்த்திகளுக்குச் சொந்த மாகும் பொழுது இயல்பாகவே அவை நம் நேசிப்பை விட்டுத் தப்ப முடிவதில்லை.  இதுவே இலக்கியங்களுக்கான அடிக்கோடிட்டு அழுத்தம் திருத்தமாகச்  சொல்ல வேண்டிய அளவுகோல்களுமாகும்.


(தொடரும்)


படம் உதவிய நண்பருக்கு நன்றி.

Saturday, March 12, 2016

இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?...

பகுதி--4

ல்வழி நடப்பது என்பது கூட சுயநலனுக்காகத்தான். மனசின்  சுய ஆரோக்கியத்திற்காகத் தான்.  இந்த பரம இரகசியம் பற்றிய சரியான  புரிதல் இன்மையே இது பற்றிய அலட்சியத்திற்கு அடிகோலுகிறது.

ஆளுமை(Personality)  என்பது  புஜபலப் பராக்கிரமங்களுடன் வாட்ட சாட்டமாக இருப்பதோ அழகான புறத் தோற்றம் கொண்டிருப்பதோ அல்ல. வெளி அழகான புறத்தோற்ற அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் சிலர் தான். அந்த சிலர் தன் வெளி அழகைப் பேணிப் பராமரிப்பதில் மிகுந்த கவனத்துடன் இருப்பவர்களாய் இருப்பார்கள்.  தன்னையே போலவான இன்னொருவரின் தோற்றத்தை ரசிக்கிற மனோபாவம் இது.      

வெளி அழகு என்பது புற உடல் சம்பந்தபட்டது.  தன் தோற்றம் பிறருக்கு அழகாகத் தெரியவேண்டும் என்பதில் மட்டும் முக்கியத்துவம் கொண்டு தானே அதுவாகிப் போவது அல்லது அதுவே தான் எல்லாம் என்று நினைப்பது.  தோற்றம் சம்பந்தப்பட்ட புற உடல் அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்துப்  பேணுவதும், உடல் நலம் பேணுவதும் வேறுபட்ட இரு சமாசாரங்கள் என்கிற புரிதல் நமக்கு வேண்டும்.

உடல் நலம் பேணுதல் என்பது  உடலின்  உறுப்புகள் சீர்கெட்டுப் போய் விடாமல் எல்லா உறுப்புகளுக்கும்  முக்கியத்துவம் கொடுத்து அதன் ஆரோக்கியத்தைக் கட்டிக் காப்பாற்றுவது.  கண், காது, மூக்கு, பல் என்று புறத்தே தெரியும் உறுப்புகளின் சீரான பராமரிப்பும் இதில் அடக்கம்.  புற உடல் அழகு பேணுவது என்பது நமது தோற்றம் பிறருக்கு அழகாகத் தோன்ற வேண்டும் என்பதற்கு அளவுக்கு மீறிய அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிலே மட்டுமே கவனம் கொள்வது.

வெளி அழகுக்கும் வாழ்க்கையின்  தொடர்ந்த வெற்றிக்கும் நேரடியான சம்பந்தம் இல்லை என்பதை அனுபவ ரீதியாகப் புரிந்து கொண்டவர்கள்  உண்மையான அழகாம் நம் உள் அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதைப் பேணிப் பராமரிப்பதில் தனிக் கவனம் கொள்வர்.

அது என்ன உள் அழகு?...

உள் அழகு என்பது மனம் சம்பந்தப்பட்டது.    தினம் தினம் நாம் எதிர் கொள்ளும் வாழ்க்கை முறைக்கும் அது சம்பந்தமாக எழும் பிரச்னைனைகளுக்கும் தீர்வாகி  வாழும் வாழ்க்கையை சுலபமாக்கி அதுபற்றியதான  திருப்தியைக் கொடுப்பது.

சொல்லப்போனால் வாழ்க்கையின் திருப்திக்காகத் தான் நாம் வாழவே செய்கிறோம்.  இந்தத் திருப்திக்காக நாம் என்ன வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கிறோம்.  என்ன செய்வது என்று தெரியாததால் தான்  அதைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.

திருப்தி என்பது காசு பணத்தினால் வந்து விடுவது அல்ல.  பல நேரங்களில் காசு பணமே திருப்தியின் எல்லைக் கோட்டை நீடித்து அதற்காக அலைந்து திரியக் காரணமாகி விடுகிறது.

சரியாகச் சொல்ல வேண்டுமானால் திருப்தி என்பது அவ்வப்போது நிறைவடைகிற சமாசாரமாய் இருக்கிறது.   இந்த நேரத்தில் இதில் திருப்தி என்றால் அடுத்த நேரத் திருப்திக்காக இன்னொன்று  காத்திருக்கிறது. இந்த நேரமோ அடுத்த நேரமோ எந்த நேரத்திலும் முழுத் திருப்தி என்பது கானல்நீராகவே இருக்கிறது.   திருப்தியை சுகிப்பதன்  அளவுகோலும் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது.

பல வருடங்களுக்கு முன் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுடனான என் முதல் சந்திப்பில் அவரை சந்தித்துப் பேசிய மகிழ்ச்சியில் எனது அந்தக்கால வழக்கமான ஆட்டோகிராப் புத்தகத்தை அவரிடம் நீட்டினேன்.

அதை வாங்கிக் கொண்டவர், கூர்ந்து என்னைப்  பார்த்து விட்டு, ஒருவித பரவசத்துடன்   "திருப்தி அடைந்து விட்டவனுக்கும் செத்துப் போனவனுக்கும் வித்தியாசம் இல்லை" என்று எழுதி த. ஜெயகாந்தன் எனக் கையெழுத்திட்டு என்னிடம் நீட்டினார்.

அவரது 'உன்னைப் போல் ஒருவன்' குறுநாவல் ஆனந்தவிகடனில் பிரசுரமாகியிருந்த காலம் அது.   அந்த நாள் அவரைச் சந்தித்துப் பேசினதும் 'உன்னைப் போல ஒருவன்'  கதையின் முடிவு பற்றி திருப்தியடையாத கேள்விகள் அவரிடம் கேட்டும் அவர் எனக்கு இணக்கமாகப்  பதில் அளித்ததுமே எனக்குத் திருப்தியாய் இருந்தது.  ஆனால் அவரோ, திருப்தி என்பது செத்துப் போகும் வரை அடைய முடியாத ஒன்று என்கிற அர்த்தத்தில் அல்லவா எழுதித் தந்திருக்கிறார் என்றிருந்தது.  அந்த அளவுக்கு திருப்தி என்பது தீராத தாகமாய் அவருக்கு இருந்திருக்கிறது. இலட்சிய புருஷர்களுக்கு அதுவே கூட  இலட்சணமாய் இருக்கலாம்.


யோசித்துப் பார்த்தால் எது செத்துப் போகும் வரை அடைய முடியாத ஒன்று என்று தீர்மானிக்கிறோமோ அதுவே செத்துப் போன பின்பும் அடைவதற்கு வழியில்லை என்று தெரிகிறது. ஏனெனில் அடைவது, அடையாதது என்று நாம் போடுகிற பட்டியல் எல்லாம் இந்த பூவுலகில் நாம் வாழும் காலத்தில் தான்.  மரித்த பிறகு அடைவது அடையாதது என்பன எல்லாமே அதற்கான அர்த்தத்தை இழந்து போகிறது.

அதனால் ஆழ்ந்து யோசிக்கும் பொழுது செத்துப்  போகும் முன் வாழ்க்கையில் திருப்தி அடைவது தான் நம் இலட்சியமாய் இருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது.  அதை அடைந்தால் வாழும் காலத்தில் தான் அடைய வேண்டும் என்பதினால் நம் வாழ்க்கை காலத்தில் அதை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் யோசனை நீள்கிறது...

திருப்தி என்பது நம் அனுபவிப்பில் பெறுகிற ஒன்று.  அனுபவிப்புகளின் ரசனைகள் அனைத்தும் நம் குணநலன்களை ஒட்டியவை. சரியாகச் சொல்ல வேண்டுமானால் திருப்தியை அடைவதும் அடையாததும்  நம் குணநலன்களைச் சார்ந்து  இருக்கிறது.  குணநலன்களை நேர் படுத்தினால் அல்லது அதை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தால்  திருப்தி அடைவதையும் அடையாததையும் தீர்மானித்து விடலாம்.

இந்த குணநலன்கள் தாம் உள்அழகைத் தீர்மானிக்கின்றன. நம் உடலின் உள் அச் ழகுகள் சீராக இருப்பதற்கு நம் குணநலன்கள் சீராக இருக்க வேண்டும் என்று தெரிகிறது.  உடலின் உள் ஆரோக்கியத்தை நம்  குணநலன்கள் தாம் தீர்மானிக்கின்றன என்றும்  புரிகிறது.

ஆக நம் குணநலன்களே நம் ஆளுமயைத் தீர்மானித்து நிர்ணயம் செய்கிறது என்றும் சொல்லலாம்.


(இந்தப் பகுதியின் தொடர்ச்சியை  எனது  'மனம் உயிர் உடல்' தொடர் பதிவில் தொடரலாம்.  கேள்வியை ஆரம்பித்து வைத்த மாலிஜி அவர்களுக்கும் வாசித்துப் பின்னூட்டமிட்ட அன்பர்களுக்கும் நன்றி.  'மனம் உயிர் உடல்' தொடரில் உயிர் பற்றிச் சொல்லும் பொழுது இதே மாதிரியான செய்திகள் அங்கு திரும்பச்  சொல்ல வேண்டாம் என்பதற்காக இந்த ஏற்பாடு.)



படங்கள் உதவியோருக்கு நன்றி.

   

Tuesday, March 8, 2016

சர்வதேச மகளிர் தினம்



சர்வதேச மகளிர் தினம்!!





                                                     வாழ்த்துக்கள்




தொழிற் புரட்சி காலத்தில் ஒரு தேசத்தின் எழுச்சி மின் மயமாதலை ஆதாரமாகக் கொண்டிருந்தது.  பெண்களுக்கான  இன்றைய விடுதலை, குறிப்பாக ஏழ்மையில் உழலும் ஆகப்பெரிய பெண் வர்க்கத்தின் விடுதலை அவர்களின் பொருளாதார சுதந்திரத்தை நிச்சயப்படுத்துதலில் நிலை கொண்டிருக்கிறது.  பொருளாதார சுதந்திரம் கைப்படுகையில் அவர்களுக்கான சமூக சுதந்திரங்களும் நிச்சயப்படுத்தப்படும்..  இது தான் இன்றைய காலகட்டத்தின் கட்டாயமாகும்.

ஆக,  அதற்கேற்ப பெண்ணியத்தைத் தூக்கிப்பிடிப்போரின் எழுத்தும் பேச்சும் இந்த நிச்சயப்படுத்தலை சாத்தியப்படுத்துவதை நோக்கிய எழுச்சியாக இருக்க வேண்டுமென்பது அதனை வாழ்த்துவோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
                                                       
                                                          ---  ஜீவி

                                                       

                                    















---  ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை
            மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்                               
            நூலில் எழுத்தாளர் அம்பை பற்றிய                                       
            கட்டுரையில் ஜீவி


சந்தியா பதிப்பகம்:   sandhjyapublications.com

தொலைபேசி:    044-  24896979

Friday, March 4, 2016

இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?...

பகுதி--3


போக வேண்டிய இடத்திற்கும் இறை நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம் என்பது அடுத்த கேள்வி.

ரொம்பவும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால்  இறை நம்பிக்கை மனிதர்களை நல்வழிப்படுத்த உதவுகிறது.  

நீங்கள் சிரிப்பது எனக்குக் கேட்கிறது.  காலத்தின் கோலத்தில் இதெற்கெல்லாம் சிரிக்கத் தான் வேண்டும்.  இறைநம்பிக்கை கொண்டோரெல்லாம் நல்வழி நடப்பவர்களா என்ற அடிப்படை கேள்வி மிகவும் யோசனைக்குரியது தான்.
இறை நம்பிக்கை கொண்டோரெல்லாம் நல்வழி நடப்பவர்களோ இல்லையோ நல்வழி நடக்காதவர்க்ள் இறைவனைத் துணை கொள்வதில் அர்த்தமில்லை என்று தெரிகிறது.  அது வியர்த்தம்.

இறைவனைத் துணையாகக் கொள்வது என்பது போக வேண்டிய இடத்திற்கு இறைவனைத் தனக்குத் தோன்றாத் துணையாய்க் கொள்வது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

அதே மாதிரி இறை நம்பிக்கை கொள்ளாதவர்களெல்லாம் நல்வழி நடக்கமாட்டார்கள் என்றும் அர்த்தமில்லை.   இறை நம்பிக்கைக் கொண்டவர்களை விட நல்வழி நடப்பதில் இறை நாட்டம் இல்லாதவர்கள் அதிக நாட்டம் கொண்டிருக்கலாம்.  ஏனெனில் இறை நாட்டம் கொண்டவர்களாவது இறைவன் துணை இருக்கிறதாக பொய்யாக நினைத்துக் கொண்டு நல்வழிகளிலிருந்து நழுவலாம்.  இறை நாட்டம் கொள்ளாதாருக்கு அதுவும் இல்லை;  இவர்கள் கொண்டிருக்கிற நல்வழி ஒன்றே இவர்களுக்கு பலம் பொருந்தியத் துணையாகப் போகிறது. . ஆகவே அது  வேறு விஷயம்.

இயல்பாகவே நல்வழி நடப்பவர்களுக்கு இறை  நாட்டம் என்ற தாங்குகோலுக்கான அவசியம் இல்லாது போகலாம்.  

ஆனால் இறை நாட்டம் கொண்டோருக்கு நல்வழி நடப்பது அவசியத் தேவையாகி அதுவே இறைவனின் துணையாகி அவர்களை வழி நடத்துகிறது என்பதே சொல்ல வருவது.

இதனால் பெறப்படுவது என்னவென்றால்  இறை நாட்டம் இருக்கோ இல்லையோ நல்வழி நடப்பது மனிதராய் பிறவி கொண்டோருக்கு அத்தியாவசிய தேவையாகப் போகிறது. நல்வழி நடப்போர் எந்த பேதமூம் இல்லாமல் அந்த ஒரே குடையின் கீழ் ஒன்று சேர்கின்றனர்.

மனிதக் கூட்டமே சமூகமாகிப்  போவதால் நல்வழி நடப்போர் கூடக் கூட ஒட்டு  மொத்த சமூகக் கூட்டங்களே நல்வழி தேர்ந்து பிரபஞ்சம் பூராவுக்குமே நல்வழி ராஜபாட்டையாகிறது.   'ஒரே உலகம்'  என்ற பரந்துபட்ட பார்வை கிடைக்கிறது.  

டுத்த கேள்வி ஏன் நல்வழி நடக்க வேண்டும்?..

கம்பர் சொல்வார்:  

"கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை;  யாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ:. 

அயோத்தியில் வாழ்கின்ற மாக்களிடையே கூட களவு  செய்பவர்
இல்லையாதலால் பொருட்களை காவல் காப்பவரும் இல்லை.  எதையும் யாசிப்பவர் இல்லையாதலால் அந்நகரில் கொடையாளிகளும் இல்லை

"எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே, 
இல்லார்களும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ".

அந்நகரில் வாழ்பவர்கள் எல்லோரும் கல்வி பொருள் ஆகிய எல்லாச் செல்வமும் அடைந்திருப்பதாலே அந்நகரத்திலே இல்லாதவரும் இல்லை
உடையவர்கள் என்பதற்கும் இடம் இல்லை ---  என்பார்.

இது இல்லை என்பதினால்  அதன் நேரடி  தொடர்பு கொண்ட இன்னொன்று இல்லை என்று இப்படி நிறைய...:

சுற்றுச்சூழல் மாசுபடும்  தொல்லை இல்லையாதலால் பெரும்பானமையாக நோயாளிகள் இல்லை.

நோயாளிகள் இல்லையாதலாம் அதிகபட்ச மருத்துவ மனைகளும் மருந்துக் கடைகளும்  இல்லை

மருத்துவ மனைகள் அதிகம் இல்லையாதலாம் மருத்துவர்களின் கூட்டமும் அதிகமில்லை.

ஒன்று இல்லையென்றால் அதன்  நேரடித் தொடர்பு கொண்ட இன்னொன்றும் இல்லாது போகும். இது தான் ஒரு பிரச்னையின் ஆணிவேரைக் கண்டுபிடித்து அந்தப் பிரச்னைக்கான தீர்வைக் காணும் வழி 

இதே மாதிரி ஒட்டு மொத்த சமூகக் கூட்டமே நல்வழி நடக்கையில் பிரபஞ்சமே  தீயன நெருங்காது அமைதிக்  காடாய் பூத்துக் குலுங்கும்.

இதுவே போக வேண்டிய இடத்திற்கு வழிச்செலவாய் உதவக் கூடிய துணையாகும்.

அதற்கு அடுத்த  கேள்வி:

போக வேண்டிய இடத்திற்கும் நல்வழி நடப்பதற்கும் என்ன சம்பந்தம்?

அதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.


(தொடரும்)

படங்கள் உதவியோருக்கு நன்றி.



  

Thursday, March 3, 2016

இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?..

பகுதி--2

சாதாரணமாக வயதானவர்கள் தான் போய்ச் சேரக் காத்திருக்கிறேன்' என்று
சொல்வார்கள்.  அதைப் பற்றி உங்கள் கருத்தென்ன என்று அந்தப் பெரியவர் கேட்டது யதார்த்ததிற்கு ஒத்துப்  போகிற ஒன்று தான்.

நானும் நினைத்துப் பார்க்கிறேன்.   இள வயசில் இப்படியெல்லாம் யோசித்ததே இல்லை.   ஒவ்வொரு வயசுக்கும் ஏற்பவான அனுபவிப்புகள் அந்தந்த வயதுகளில் நம்மை மூழ்கடித்து விடுகின்றன.

வந்ததிலிருந்து போவதற்கு இடையிலான இடமாக இங்கு தங்கியிருக்கும் காலத்தில்  ஏகப்பட்ட சமாசாரங்களின் சுழலில் சிக்கி மூச்சு முட்டத் தவிக்கிறோம்.

ஒரேயடியாக துன்பம், ஒரேயடியாக இன்பம் என்றில்லாமல்   இங்கு தங்கியிருக்கும் காலம் ரொம்பவும் சாகசமாகப் பின்னப்பட்டிருக்கிறது. அந்தப் பின்னல்களில் நாமே விரும்பி மாட்டிக் கொள்கிற மாதிரி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஈர்ப்பு  இருக்கிறது.

இந்த ஈர்ப்பு தான் இங்கைய தங்கலை சுவாரஸ்யமாக ஆக்குகிற விஷயம். இந்த சுவாரஸ்யங்களை தாமரை இலைத் தண்ணீர் மாதிரி பட்டும் படாமலும் அனுபவிப்பவர்கள் பாக்கியசாலிகள்.

இந்த ஈர்ப்பும் பெரிசாய்ப் போய் விட்டால் ஆபத்து.  ஒவ்வொரு ஈர்ப்பிலும் அதைத் தொடர்ந்து ஒரு துன்பம் ஒட்டிக் கொண்டிருக்கிறது.  அதனால் விஷம் கலந்த பால் போலான அந்தந்த ஈர்ப்பில் அதிகபட்ச ஈடுபாடு ஏற்பட்டு விடாமல் தடுத்துக் காப்பாற்ற அவற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதற்கான வழிவகைகள் செய்யப்பட்டிருக்கின்றன.  இதைச் சரியாகச் சொல்ல வேண்டுமானால் போய்ச் சேர்வதற்கான ஆயத்தங்களில் ஈடுபட நம்மைத் தயார்படுத்துவதற்காக இவை அமைகின்றன.

அந்தத் தயார்படுத்துதல்களில் தலையான ஒன்று தான் இறை வழிபாடு.

மனித மனம் ஒன்றை விஞ்சி ஒன்று இருந்தால் அதை விரும்ப பழக்கப்படுத்தப்  பட்டுள்ளது.   இதுவும் சமத்காரமான ஒரு ஏற்பாடு தான். இந்த ஏற்பாடு இல்லையென்றால் ஒன்றை விட்டு இன்னொன்றுக்கு மனித மனம் நகராது.   அதனால் தான் எல்லையற்ற இன்பம் எதுவானாலும் அதைத் சுகிக்க மனிதன் அலைந்து  கொண்டிருக்கிறான்.

எல்லா சுகங்களையும் தாண்டிய எல்லையற்ற நித்ய சுகம் ஒன்றை மனிதனுக்கு அறிமுகப்படுத்தத் தான் இறை வழிபாடு வந்தது. நிலையான நித்யமான அமைதி  (eternal peace) கிடைக்க இறை வழிபாடு துணை செய்யும். இந்த நித்யமான அமைதியில் ஆழ்வது தான் இறைவழிப்பாட்டின் தலையாய அனுபவம். (ultimate goal)

நேரடியாக எல்லையற்றது இது என்று ஒன்றைச் சொன்னால் யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.  ஒவ்வொரு சுகத்திலும் அதன் அனுபவிப்பில் அது தான் பரமாந்தமானது என்கிற மாதிரியான மயக்கமும் கலந்திருக்கிறது.

எல்லா இன்பமும் இன்பமல்ல;  எந்த இன்பத்தின் முடிவிலும் ஒரு துன்பம் முடிச்சு போடப்பட்டு தான்  இருக்கிறது..  அதே மாதிரி எல்லாத் துன்பங்களின் முடிவிலும் இன்பத்திற்கான வாசல் திறக்கிறது. இரவு-- பகல் மாதிரி இன்ப துன்பங்கள் ஒன்றின் தொடர்ச்சியாய் இன்னொன்றும் நம் வாசல் கதவைத் தட்டிக் கொண்டு தான் இருக்கிறது. இக உலக இன்பங்கள் அத்தனையும் அதனைத் துய்க்கும் நம் உணர்வுக்கு சம்பந்தப்பட்டிருப்பதால் நம்மைச் சுற்றி நடப்பனவற்றை  இப்படியாக வகுத்துக் கொள்கிறோம்.

எல்லாவற்றையும் அனுபவித்துப்  பார்த்தவனுக்குத் தான்
எல்லையற்றதையும் தீர்மானிக்க முடியும்.  அதனால் தான் துன்பம் இணைந்த எல்லா இன்பங்களையும் அனுபவித்தவன் துன்பம் கலக்காத இறை இன்பத்தை உணரும் பொழுது அதைப் பற்றிக் கொள்கிறான்.

 'செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே, சிவபெருமானே, இம்மையே உன்னைச் சிக்'கெனப் பிடித்தேன், எங்கு  எழுந்தருளுவது இனியே' என்று மாணிக்க வாசகர் கண்களில் நீர் தளும்பி உருகிச் சொன்னது இதைத்தான்.

துன்பம் நெருங்காத இறை இன்பத்தையும் துன்பமாக்கிக் கொள்கிறவர்கள் உண்டு.  எல்லாவற்றையும் சிக்கலாக்கிக் கொள்கிறவர்கள் இவர்கள்.

இவ்வுலகில் எதை நுகர்வதற்கும் பயிற்சி  தேவை.  இறை இன்பத்தை சிந்தாமல் சிதறாமல் உணர்வதற்கும் பயிற்சி தேவை.  இன்னொருவர் அனுபவப்பட்டு நாம் பெறுவதல்ல இது.  சொந்த அனுபவத்தில் விளைவது.

அதனால் தான் போக வேண்டிய அந்த இடத்தை நித்ய அமைதிக்கான இடமாக்கி  இறைவனின் வாசஸ்தலமாக ஆக்கினார்கள்.

அந்த இடத்திற்கு சொர்க்கலோகம் என்று கற்பனையில் பெயர் சூட்டினார்கள்.போக வேண்டிய இடத்திற்குப் போனவரை இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறினார் என்றார்கள்.

சொல்கிறவர்களை வைத்து சில நேரங்கள் சொல்லப்படும்  விஷயமும் தீர்மானமாகும்.  ஒரு மாற்று  ரசனை குறைந்தவர்கள்  அவ்விடத்தில் எந்நேரமும் ஆட்டம் பாட்டம் கூத்து கும்மாளம் என்றும் இன்ப லாகிரியில் அமிழ்த்த தூண்டில் போட்டிருக்கிறார்கள்.  போதாக்குறைக்கு ரம்பை, ஊர்வசி, திலோத்தமை என்று அழகுப் பதுமைகளை நடமாட நடனமாட விட்டிருக்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் அதற்கான காரணங்கள் உண்டு.

ஒரு ஆழ்ந்த வெளிப்பாடு என்னவென்றால் எல்லாவற்றிற்கும் இது  இதனால் என்று எடுத்துக்காட்டுகிற மாதிரியான காரண காரியங்களை இறை வழிப்பாடு சார்ந்த புராணங்களில் இழைத்துக் கொடுத்திருக்கிறார்கள்..  சொல்லப் போனால் காரண காரியமில்லாமல் எந்த நிகழ்வும் நிகழ்வதில்லை என்கிற தெளிந்த உண்மையைச் சொல்ல வந்தது தான் புராணக் கதைகளே. 

களை களைந்து பயிரைக் காப்பாற்றுவது போல இறை இன்பத்தை நுகர விலக்குவனவற்றை விலக்கி மனசில் போற்றித் துதிக்க போக வேண்டிய இடத்திற்கான பாதை மனசிலேயே போடப்படும்.

பாதை என்றால் அதில் முள்ளும் கல்லும் கிடக்கும் தான்;  அதுவும் நம் நோக்கம் நித்ய அமைதி என்றால் கேட்கவே வேண்டாம்.  பாதையில் விரவிக் கிடக்கும் முள்ளையும் கல்லையும் விலக்கிச் சீர்செய்வதே  அந்த  நீண்ட பயணத்திற்கான பயிற்சியாகிப் போகும்.

இந்தப்  பயணம் சுலபமானதல்ல.  இன்னொன்று.    பயணத்திற்கான பயிற்சி, வந்ததிற்கும் போகப்போவதற்கும் இடைப்பட்ட தங்கல் இடத்தில் தான்.

பயிற்சிக்கான அட்டவணைகள் நிறைய.  பயிற்சியில் ஈடுபட்டவர்கள், . ஈடுபட்டவர்களைப் பார்த்தவர்கள்,  பார்த்தவர்கள் சொல்லக் கேட்டவர்கள் என்று  ஏகப்பட்ட அட்டவணைகள் இதற்காகத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. காலத்திற்கேற்ப அட்டவணையில் காணப்படும் பயிற்சி முறைகளும் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன.

பயிற்சி முறைகள் கடுமையாக இருந்த  காலத்தில் வனங்களில் இக உலகு மறந்து இறை தியானத்தில் ஈடுபடுதல் போன்ற உடலை விரும்பி வருத்திக் கொள்ளும் பயிற்சிகள் இருந்தன.  ஜடாமுடி வளர்ந்து தொங்க, கரையான் புற்று சுறறி ஆளையே மறைத்தும் நோக்கத்தில் தீவிர ஈடுபாடு பற்றிக் கொண்டதினால் மெய்வருத்தம் பாராமல் கருமமே கண்ணாக இருந்த ரிஷிகள் வாழ்ந்த நாடு இது.  


(தொடரும்)


Tuesday, March 1, 2016

இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?...

சாதாரணமாக வயதானவர்கள் எல்லோரும் 'நான் போய்ச்சேரக் காத்திருக்கிறேன்' என்று கூறுகிறார்கள்.  'what do you know ahout that.. place/living.. Do you expect to meet/see those who predeceased you... what else do you know ahout post-mortam status.. As you  are a man of deep thoughts,  I am sure what you share on this subject will make for interesting read...


---- இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று வயதான என்னைக் கேட்டு வயதான ஒருவரிடமிருந்து ஒரு மெயில் வந்திருந்தது.

அவருக்கு என் நமஸ்காரங்கள்.    

இரண்டு பேருக்கும் வயதாகி  விட்டது என்பது தான் மேலோட்டமாகப் பார்க்க்கும் பொழுது இந்த கேள்வி-பதிலுக்கான  காரணமாக பலருக்குத் தெரியலாம்.


அவர் ஒரு பதிலை எதிர்பார்த்து இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டதற்கும் அவர் கேட்டதை உள்வாங்கிக் கொண்டு நான் அவருக்கு  பதில் சொல்வதற்கும் எங்களுக்கு ஆகியிருக்கும் வயது ஒன்றே காரணம் என்று சுலபமாகப் புரிந்து கொண்டேன்.

தங்கி இருக்கும் இடத்தில் நமது அனுபவத்தில் பலவகைகளில் 'ஞானம்' பெறுகிறோம் நாம்;  பல ஆண்டு காலம் தங்கியிருப்பவர் என்கிற சீனியாரிட்டி அடிப்படையில், அந்த  சீனியாரிட்டி தரும் பரிசான மூப்பின் அடிப்படையிலும் இந்த ஞானம் வரலாம். 

இதில் வேடிக்கை என்னவென்றால் போய்ச் சேர வேண்டிய  இடத்திற்கு  இங்கு தங்கியிருக்கும் எல்லோருமே காத்திருக்கும் பட்டியலில் இருப்பவர்கள் தாம்.  இங்கு வந்து ரொம்ப  நாளாச்சு என்பதால் முன் வரிசையோ அல்லது முன் வரிசைக்கு அடுத்த பின் வரிசையிலோ  இருக்கிறோம்.   அவ்வளவு தான்.

வரிசைகள் ஒன்றும் நிச்சியமானதும் அல்ல. அவை மீறப்படுவதும் உண்டு.  புதிரான விஷயங்களிலும் நம்மால் தீர்மானிக்க முடியாத விஷயங்களிலும் நாமாக எதையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாதல்லவா?.. அதற்காகச் சொன்னேன்.

இந்த மாதிரி அசாதரணமான கேள்விகளை ஆன்ம விசாரம்  என்று சொல்வார்கள்.   'ஆயிரம் கவலைகள்  நமக்கு இருக்க, பெரிசுகளுக்கு  வேறு வேலை இல்லை' என்று பல இளசுகளாலும் இளக்காரமாக நினைக்கக் கூடிய சமாச்சாரம் தான் இந்த ஆன்ம விசாரம் என்பதுவும்.

'போய்ச் சேரக் காத்திருக்கிறேன்'  என்ற வார்த்தையிலிருந்தே போய்த்தான் ஆக வேண்டும் என்றும், நாம் நினைத்த வாக்கில் அந்த இடத்திற்கு போய்ச் சேர முடியாதென்றும் அதற்காகக் காத்திருக்க வேண்டும் என்றும் தெரிகிறது.

போய்ச் சேர்வதற்கு  முன்னால் இத்தனை காலம் இங்கு தங்கியிருந்ததின் அனுபவமாய் பெற்ற அறிவில் சிலர் இன்ன இடத்திற்குத் தான் போய்ச் சேர வேண்டும் என்று அந்த இடத்தை ஒரு அனுமானம் கொண்டு   யூகித்திருப்பார்கள்  போலிருக்கு.   

எந்த இடத்திலிருந்து வந்தோமோ அந்த இடத்திற்கு வந்த வேலை முடிந்ததும் போய்ச் சேர வேண்டியது தானே என்று லாஜிக்காக யோசிக்கவும் செய்யலாம்.

ஆக தங்க வந்திருக்கும் இடம்   நிலையான இருப்பிடம் இல்லை, அதற்கான நேரம் வந்ததும் எங்கிருந்து வந்தோமோ அந்த  இடத்திற்குப்  போய்ச் சேர வேண்டியது  தான்  என்று எல்லோருக்குமே தீர்மானமாகத் தெரிந்திருக்கிறது.

அங்கிருந்து இங்கு வந்திருப்பதால் அந்த இடமும் சாசுவதமானதில்லை என்றும் தெரிந்திருக்கிறது; அங்கிருந்து இங்கு வர வேண்டும்;  வந்து தங்கி பிறகு அங்கு போக வேண்டும்; மீண்டும் இங்கு வர வேண்டும்;  வந்து போக வேண்டும் என்று  இரண்டு ஊர்களுக்கு இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் போய்க் கொண்டிருக்கிற பஸ் மாதிரி பொழைப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சொல்லியது யார் என்றால், யார் சொன்னது என்பது முக்கியமில்லை, வருவதும், போவதும் தெரிகிறதல்லவா,  அந்தத்  தெரிதலிருந்து பெறப்படுகிற  ஞானம் இது என்று முகத்திலறைந்த மாதிரி நமக்கே பதில்  கிடைக்கிறது. 

எப்போ போகணும்?  என்பது தான் நாம் தீர்மானிக்க முடியாத விஷயமாக (விடயம் இல்லை!) இருக்கிறது.

இங்கு சில காலம் தங்குவதற்காக எங்கிருந்து வந்தோமோ அந்த  இடமும் இங்கு வந்த நிலையில் மறந்து விடுகிறது.  போய்ச் சேரும் நிலையிலும் தெளிவாகத் தெரியாமல் இருக்கிறது.

ஏன் மறந்து விட்டது என்றால் நாமாக வரவில்லை; நாமாகப் போகவும் இல்லை..  அதனால் தான் 'ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ, கண்ணா!'  என்று நாம் நினைத்துச் செய்யாத காரியம் நம் நினைப்பில் இல்லாது போய்விடுகிறது.

இது தான் பிறப்பில் நேர்ந்திருக்கும் விநோத வியப்பு; வியப்புக்குக் காரணம், இதைத் தீர்மானிக்கிற சக்தி நம் கையில் இல்லாதது தான்.

--- இது தான்  do you know about that.... place/living  என்பதைத் தீர்மானமாகச் சொல்ல முடியாததற்கான காரணமாக இருக்க முடியும்.


(தொடரும்)




Related Posts with Thumbnails