மின் நூல்

Saturday, October 26, 2019

மனம் உயிர் உடல்


16.   நினைவாற்றல் என்னும் வரம்

ரு ஊசியை எடுத்து நிரண்டினால் கூட கொஞ்சம் கூட வலிக்காத பிரதேசம் நம்  உடம்பிலேயே மூளைப் பகுதி  ஒன்று தான்.  குறைந்த பட்சம் தொடு உணர்ச்சி கூட மூளைக்குக் கிடையாதாம். அதனால்  மூளையில் ஊசி குத்த வேண்டுமானால் கூட  சம்பந்தப்பட்டவர்களை மயக்கத்தில் ஆழ்த்துவதில்லை.  நேரடியா 'சுருக்' தான்.

1400 கிராமிலிருந்து 1500 கிராம் வரை எடை கொண்டது மூளை.  மூளை தான் உயிர் என்று சொல்கிற அளவுக்கு உடல் உறுப்புகள் அத்தனையையும்  இதயம் தவிர  இதன் கட்டுப்பாட்டிலேயே.  ஆக்ஸிஜனும், பிற ஊட்டச்சத்துக்களும் தேவைப்படும்  பிரதேசம்.  நரம்பு செல்கள் கோடிக்கணக்கில் உள்ளே பதுங்கி இருக்கின்றன.  உடம்பில் உள்ள செல்களுக்கும் மூளை செல்களுக்கும் உள்ள பெருத்த வித்தியாசம் என்னவென்றால்,  மூளை செல்கள் சேதம் அடைந்தால் அம்போ தான். மற்றவிடங்களில் உள்ள செல்களுக்கு சேதம் அடைந்தாலும் வளர்ச்சி உண்டு.

நம் தியானம் மனம் சம்பந்தப்பட்டது.. மனமோ மூளை சம்பந்தப்பட்டது.  அதனால் தியானத்திற்கு முன்னான அமர்வில்  நம் மூளை சம்பந்தப்பட்ட சில சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொண்டோமானால், அது  மனத் தொடர்பான இந்த தியானத்தை அனுஷ்டிக்கும் பொழுது ஒரு ஒத்துழைப்பு மனோபாவத்துடன் உபயோகமாக இருக்கும். அதற்காகவே தான் இந்த மூளைக்கல்வி.

எங்கையோ  படித்தது.  நலைஞ்சு வருஷமானாலும் பிரமிப்புடன்  மனசில் தேங்கியிருக்கிறது.  சொல்லப்போனால் இதைப் படித்தவுடன் தான்  மூளையைப் பற்றி  நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.  அந்த ஆவலை ஏற்படுத்தியதும்  மூளைத் தான் என்று பின்னால் தெரிந்ததை இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் சிரிப்புத் தான் வருகிறது. 
மூளையில் இருக்கும் நரம்பு நார்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வைத்தால் அந்த நீளத்திற்கு பூமியிலிருந்து சந்திர மண்டலத்திற்கு போய் விட்டுத் திரும்பலாமாம். எண்ணிக்கை, பருமன், நீளம் இதெல்லாம் முக்கியமில்லை;  உள்ளே இருக்கும் சர்க்யூட் தான் முக்கியம் என்று அவர் அந்த பேட்டியில் சொன்னது தான் முக்கியமாகப் போயிற்று.  சொன்னவர்  இவரோ அவரோ இல்லை;  பிரபல நரம்பியல் மருத்துவர்.  பல விருதுகள் வாங்கியவர். நம்ம சென்னை ஸ்டான்லி மருத்துவமனை நரம்பியல் பிரிவில் முக்கியமானவராக திகழ்ந்தவர்.  இதை வாசித்த நாளிலிருந்து மூளை என்றாலே என் மனசில் (!) ஒரு பிரமிப்பு.   மூளை பற்றின எந்த விஷயம் தெரிய வந்தாலும் அதற்கென்றே ஒரு தனி டயரி போட்டு குறித்துக் கொள்ள ஆரம்பித்தேன்.

மூளை விஷயத்தில்  பெண்களுக்கு  ஆண்களை விட  கொஞ்சம் சின்ன சைஸாம்.    ஆண்கள் மூளையில் சுமார்  4000 உயிரணுக்கள்  அதிகம்  இருக்கிறதாம்.  இருந்தும்  படிப்பு சம்பந்தப்பட்ட தேர்வுகளில் பெண்கள் தான்  அதிக அளவு தேர்ச்சி பெறுகிறார்கள், என்கிறீர்களா?   நியாயமான கேள்வி தான்.   இயல்பாக வே அவர்களுக்கு  ஞாபகசக்தி அதிகம் போலிருக்கு.  ஞாபக சக்தி என்றாலே ஹிப்போகேம்பஸ்  ஞாபகம் வந்து விடும்.  ஹி.கேம்பஸ் பற்றி பின்னால் பார்க்கலாம்.

இந்த அதிசயத்தைக் கேளுங்கள்.  குழந்தை பிறந்து நாலே வயதுக்குள் அதன் மூளைக்குள் 100 கோடி நியூரான்கள் ஆக்கிரமித்துக் கொண்டு விடுகிறதாம்.  வளர்ந்த ஒரு மனிதனின் மூளையில் இருக்கும்   செல்களின் எண்ணிக்கை  ஏறத்தாழ இரண்டு கோடியே கோடியாம்.  ஒத்துக் கொள்ளத் தான்  வேண்டும். கணக்கிலே நான் கொஞ்சம் என்ன நிறையவே வீக்.  நூறு ரூபா நோட்டுகளாக பத்தாயிரத்திற்கு கொடுத்து எண்ணிப் பார்த்துச் சொல்லுன்னா,  பத்து தடவை எண்ற வழக்கம்.

அதனால் பணம்-காசு   என்றால் ஜோரா ஒரு  தடவை கைதட்டி விட்டு  இந்த ஆட்டத்திற்கு நான் வர்லே சாமின்னு ஒதுங்கிக்கற வர்ணம்.  ஊழல்களின் ராஜாவான 2G ஊழலின் அந்த 1.76 லட்சம் கோடி ரூபாயை எண்ணாய் எழுதும் பொழுது எத்தனை பூஜ்யம் போடுவது என்பதே முழி பிதுங்குகிற விழிப்பாய் இருந்த லட்சணத்தில்  இந்த இரண்டு கோடியே கோடிக்கு எத்தனை சைபர்கள்?.. தெரிந்தவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம்..

உடலில் சகல பகுதிகளையும் இயக்கத்தில்  வைத்திருப்பது மூளையே.   மூளைப் பகுதிலே லேசான மின்சார தூண்டுதல் கொடுத்த  பொழுது தான் உடல்  உறுப்புகளுக்கும் மூளைக்கும் இருந்த சம்பந்தமே தெரிய வந்ததாம்.  மூளைலே எலெக்ட்ரிக் ஸ்டிமுலேஷன் கொடுத்த பொழுது உடம்புப் பகுதிலே ஓரிடத்திலே துடிப்பு ஏற்படுவதைப் பார்த்தார்களாம்.  மூளைலே வேறொரு இடத்திலே அதே மாதிரி  மின்சார தூண்டுதல் கொடுத்த பொழுது வேறொரு உறுப்பு லேசா விதிர்விதிர்த்ததாம்.  இதிலேந்து தான் நம் உடம்பு உறுப்புகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மூளைன்னும் மூளையோட எந்தப்  பகுதி எந்த உறுப்பைக் கட்டுப்படுத்தறதுன்னும் தெரிஞ்சிண்டாங்களாம்.

நமது  கட்டை விரல்களுக்கும் மூளைக்கும் ஒரு அந்தியந்த தொடர்பு உண்டு.  மனுஷனோட கட்டை விரல்கள் தாம் மூளையோட அடிபணிந்த  ஆர்டர்லியாம்  மூளை அதிகமா வேலை வாங்கறது கட்டை விரலைத் தானாம்.  கட்டை விரலை வருடிக் கொடுத்தா மூளையை வருடிக் கொடுத்த மாதிரியா?..  தெரிலே!

முக்காலே மூணு வீசம் மூளைப் பிரதேசமே கொழுப்பின் ஆக்கிரமிப்பில் தான்.   தலைத் தோலின் கீழே சதை கிடையாது.  மனிதனின் மண்டையோட்டிற்கு அவனது எண்பது வயது வரை  வளர்ச்சி உண்டாம்.    அதனால் மண்டை சிறிசா இருக்கேங்கற கவலையெல்லாம்  அநாவசியம்.

நம்ம ஞாபகசக்தி இராஜ்யம் சர்வ வல்லமை படைத்த ஹிப்போகேம்பஸ்
(Hippocampus) வசம்.   எனது ஆறு வயதில் மதுரை டவுன் ஹால்  ரோடு இருந்த தோற்றத்தையும்  இப்பொழுதிய  நிலையையும்  இந்த ஹிப்போகேம்பஸ் உதவியால் பொருத்திப்  பார்த்துக் கொள்ளலாம்.   இது எப்படி சாத்தியமாகிறது என்கி்ற விஷய ஞானம் நம் தியானத்திற்கு பெரிதும்  உதவியாக இருக்கும். அப்படியே ஹிப்போகேம்பஸின் அருமையையும் தெரிந்து  கொள்ளலாம்.

"வழிலே சுந்தரேசனைப் பார்த்தேண்டி.."

"எந்த சுந்தரேசன்?"

"இது என்ன கேள்வி?.. நமக்குத் தெரிஞ்சது  ஒரு சுந்தரேசன் தானேடி?.. நம்ப ரகுவோட வாத்தியார் சுந்தரேசன் தானே?"

"அப்புசாமி சீதாபாட்டியை விழுந்து விழுந்து குமுதத்லே படிப்பீங்களே! அந்த  ஜீ.ஆர். சுந்தரேசனை மறந்திட்டீங்களா?"

"ஜீ.ஆர்.  இல்லேடி அவர்.  ஜே.ஆர்.--- ஜ.ரா. சுந்தரேசன்.  ஒத்துக்கறேன். அந்த சுந்தரேசன் சட்டுனு ஞாபகத்துக்கு வரலே..."

"அதை விடுங்கோ.. வாத்தியார்  என்ன சொன்னார்?.. நம்ம ரகுவைப் பத்தி என்ன சொன்னார்?"

"அவன் பெருமை தான் பேசினார்.    நன்னா புரிஞ்சிக்கறான்.  கிராஸ்பிங்க்  பவர் நன்னா இருக்கு..  படிச்சது எல்லாம்  நன்னா நினைவிலே வைச்சிக்கறான்.   நீங்க குடுத்து வைச்சவா.  நான் இன்னிக்குச் சொல்றேன்  உங்க பிள்ளை நன்னா முன்னுக்கு வருவான், பாருங்கோ.."ன்னார்.  அதைக் கேட்டு எனக்கும் சந்தோஷம்..  உனக்கும் சந்தோஷமா இருக்குமேன்னு சொன்னேன்.

'இப்படி பக்கத்து அறைலே அப்பாவும்  அம்மாவும் பேசிண்டது நன்னா கேட்டது. அவங்க பட்ட பெருமை தான் என்னை வாசிக்க வைச்சதுன்னு தாராளமா சொல்லலாம்..' என்று போன வாரம் யு.எஸ்.லேந்து  வந்திருந்த ரகு எங்கிட்டே சொல்லிக் கொண்டிருந்தான்.

ரகு  யார்ன்னா என்  எதிர் வீட்டு நண்பர் பையன்.  அவன் சொல்லிக் கொண்டிருக்கையில் என் ஞாபகம் என்னவோ நம் மூளையில் பொதிந்திருக்கிற ஹிப்போகேம்பஸ் மேல் தான் படிந்திருந்தது.

(வளரும்)

தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்...

பர்கள்                     

Sunday, October 20, 2019

மனம் உயிர் உடல்

15.   தியானத்தின் ஆரம்ப நிலை

டலின் புறத்தூய்மை நீரால் அமைவது போல மனிதனின் அகத்தூய்மை வாய்மையால் காணப்படும் என்பது வள்ளுவனாரின் வாய்மொழி.   அவர் இங்கே அகம் என்று குறிப்பிடுவது நமது மனத்தைத் தான்.  வாய்மை தெய்வத்தின் பண்புக் குறியீடு  ஆதலால் அகத்தூய்மைக்கான அவசியத்தை வாய்மையில் பொதித்துத் தந்திருக்கிறார்.

மனம் இறைவன் கோயில் கொள்ளும் இடம் என்று மனசார  நாம் நினைக்கும்   தகுதியை நமக்காக்கிக் கொண்டதும்   கோயிலை அசுத்தமாக குப்பை கூளமாக வைத்துக் கொள்ளலாமா?..  கூடாதாகையில் கூளங்களை நீக்கி சுத்தம் செய்வோம்.

என்னன்ன  குப்பைகள் இருக்கிறதோ அவற்றை ஒரு பட்டியலாய் போட்டுக் கொள்ளுங்கள்.  உங்கள் உள்ளத்தை மாசு படுத்திக் கொண்டிருக்கும் எதையெல்லாம் குப்பைகள் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ  அவை தான் அந்தப் பட்டியலில் இருக்க வேண்டும்.  எல்லாவற்றிலும் உங்கள் சாய்ஸ் தான் பிரதானம்.   இன்னொருத்தருக்காக இல்லை,  உங்கள் நலனுக்காகத் தான்  இத்தனையும் என்பதினால்  எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் உங்கள் மனக் குப்பைகளை ஸின்ஸியராக பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.

அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் என்று பேராசான் வள்ளுவப் பெருந்தகை சில வேண்டாமைகளைப் பரிந்துரைக்கிறார். அவற்றையும் நல்ல ஆலோசனைகளாக எடுத்துக்  கொள்ளுங்கள்.    வெகுளின்னா கோபம்.   ஒன்றுக்கும் உதவாதற்கெல்லாம்   கோபம்  சிலருக்கு வரும்.  அவர்கள் தங்கள் பட்டியலில் கோபம் என்பதனைக் குறித்துக் கொள்ளலாம்.  இந்தக் கோபம் வேறு அறச்சீற்றம் வேறு.  இரண்டுக்கும் வித்தியாசம்  தெரிந்திருக்க வேண்டும்.  பாரதியாரின் 'தனி ஒரு மனிதனுக்கு  உணவில்லை எனில்' -- அறச்சீற்ற ரகம்.  அறச்சீற்றம் நம்மில் அழிந்து விடக்கூடாது.  அறச்சீற்றம் இருந்தால் தான் சமூகம் ஆரோக்கியமாக இருக்கும்.  சமூகம் ஆரோக்கியமாக இருப்பது நம் மன ஆரோக்கியத்தை நிச்சயப்படுத்தும். ஒன்றைத் தொட்டு   ஒன்றான சங்கிலிப் பிணைப்பு இது.  அதனால்  வெகுளி என்பதனை இனம் பிரிப்பதில் கவனமாய் இருங்கள்.   அதே மாதிரி அளவான காமம் உடலுக்கு ஆரோக்கியமானது.  குடும்ப மகிழ்ச்சிக்கு குத்து விளக்கு அது.   குறை வைக்க வேண்டாத ஒன்று.   அதனால் அதிலும் கவனம் கொள்ளுங்கள். 

ஆக ஒரு வழியாக நம்மிடம் அழுக்காய் படிந்திருக்கும் பல  தீய குணங்களை பட்டியலிட்டுக் கொண்டாலும் ஒன்றில் மட்டுமே தீவிர கவனம் செலுத்த வேண்டும்.  ஒன்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம் என்ற நிம்மதியான உணர்வு நமக்குள் நிச்சயமானதும் அடுத்ததைக் கையில் எடுத்துக் கொண்டால் போதும்.  தொடர்ந்து இந்த மனப்பயிற்சியில் ஈடுபடும் பொழுது நாளாவட்டத்தில்  கொஞ்சம்  கொஞ்சமாக விலகல் தொடர்ந்து முழு மன  சம்மதத்தோடு நாம் விலக்க நினைத்த  அந்த வேண்டாத குணங்கள்  நம்மிடமிருந்து   விடைபெறுவதை அனுபவ ரீதியாக உணரலாம்.

பார்க்கப் போனால் எல்லாமே நமக்காகத் தான்.  நம் ஆரோக்கியத்திற்காகத் தான்.  நம் வளர்ச்சிக்காகத் தான்.  நம் சந்தோஷத்தை நிச்சயப்படுத்துவதற்காகத் தான்.  சொல்லப் போனால் கடவுள் வழிபாடு கூட அதற்காகத் தான்.  எதற்காக அப்படிச் சொல்கிறேன் என்பதை பின்னால் சொல்கிறேன்.

அடுத்த  வேலை தியானத்திற்கான ஆயத்தங்கள்.  என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் .

முதலில் முதுகு  வளையாமல் நேராக  ஒரு  தடுக்கில் உட்கார்ந்து  கொள்ளுங்கள்.

நாலு நாளைக்கு முன்னாடி அல்லது சமீபத்தில் நடந்த உங்களைப் பாதித்து மன உளைச்சலைக் கொடுத்த எதையாவது   நினைத்துக் கொள்ளுங்கள்..  நினைத்துக் கொள்வது எதுவாக இருந்தாலும் அது ஆழ்ந்து உங்கள் மனசில் தொடர்ச்சியாக நடந்த நினைவுகளை மீட்டுவதாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.  கற்பனையில் வலை பின்னுகிற மாதிரி நடந்தவைகளை மனசில் ஓட்டிப் பார்க்கத் தெரியாதவர்கள் இந்த வழி தியானங்களை புறக்கணித்து விடலாம் என்பது ஆரம்ப யோசனை.

மூச்சு சம்பந்தப்பட்ட எந்த சேஷ்டைகளும் வேண்டவே வேண்டாம். சொல்லப் போனால் சுவாசத்தையே நாம் கவனத்தில்  கொள்ளாதவாறு வழக்கமாக அது எப்படி இயல்பாக இருக்குமோ அப்படியே இருப்பது ரொம்பவும் நல்லது.  வெளி சக்தி அதன் இயல்புப்படி உள்ளே--வெளியே போய் வருவது ஆரோக்கிய  வாழ்வுக்கு இறை சக்தி அளித்த கொடை. அதற்கு  ஒரு லயம்  உண்டு. அந்த  லயத்தை அதுவே பார்த்துக் கொள்ளும்.  அதை நம் இஷ்டப்படி அடக்குவது-- வெளிவிடுவது  என்று குறுக்கே குறுக்கே போய் குறுக்கிட வேண்டாம்.   அப்படிச் செய்வது  நாம் எதை நினைத்து வலை பின்னுகிறோமோ அந்த முயற்சியைக் குலைக்கும்.  அதனால் மூச்சு விஷயத்தில் நம் தலையீடே வேண்டாம்.   அது இயல்பாக எப்படி இருக்கிறதோ அப்படியே இருக்கட்டும்.  நாம் செய்யப்  போவது நம்மை பாதித்த ஏதாவது ஒரு பழைய நினைவை நினைத்துக் கொள்கிற ரொம்பவும் சுலபமான காரியம் மட்டுமே.

பலருக்கு தன்  நினைவுகளைக் கோர்வையாகத்   திரட்டுவது இயலாத காரியம்.   அப்படியானவர்களுக்கு இந்த பயிற்சி சோகையான பலனைத் தான் தரும்.   தந்த வரைக்கும் சரி என்று மேலும் மேலும் நினைவுகளைக் கோர்வையாகத்  திரட்டும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

வெளியுலகில் நடப்பதை மறந்து அதாவது வெளியுலகத் தொடர்பை முற்றாகத்  துண்டித்துக் கொண்டு  வீட்டுக்குள் என்றால் ஜன்னல் கதவுகளை விரியத் திறந்து மின் விசிறியை   இயக்க வைத்து காற்றோட்டமாக உட்கார்ந்து  முதலில் தந்தையின் முகம், பின் தாயின்  முகம் என்று ஆழ்ந்து அவர்களை நினைத்துக் கொண்டு நீங்கள்-- அவர்கள் சம்பந்தப்பட்ட கடந்த  கால நினைவுச் சுழலில் ஆழ்ந்து போங்கள்..

கற்பனைக்கென்ன,  கடற்கரையில் உட்கார்ந்திருக்கிற மாதிரி கூட கற்பித்துக் கொள்ளலாம்.  இந்த திறமையெல்லாம் கைக்கொள்ள திறம் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.

உடலையும் மனசையும் தளர்த்திக் கொள்ளுங்கள்.   மூச்சின் லயம் அதுபாட்டுக்க இருக்கிறபடி  இருக்கட்டும்.

இந்த அளவுக்கு  ஆரம்ப தயாரிப்பு நிலை  இருந்தால் போதும்.  அதற்குப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

இப்பொழுது தான் 'உங்கள் சாய்ஸ்'க்கான நேரம்.  நம்மிடமிருந்து கழட்டி விட வேண்டிய எந்த தீய குணத்திற்கு பட்டியலில் முன்னுரிமை கொடுத்திருக்கிறீர்களோ  அது  நடந்து நம்மை பாதித்த சமீபத்திய நிகழ்வு ஒன்றை மனசில் நினைத்துக் கொள்ளுங்கள். 

(வளரும்)

Friday, October 18, 2019

மனம் உயிர் உடல்..

14.   மனக்கோயில்

க்தி என்பதற்கு அருளாளர்கள்  எத்தனையோ விளக்கங்கள் கொடுத்துள்ளார்கள்.   அதிலெல்லாம் உள் நுழைந்து கிளர வேண்டாம்.

மனதிற்கும் இறைவனுக்குமான சொந்தம் அற்புதமானது.  பூசலார்  மனக்கோயிலில் சிவபெருமான்  குடிகொண்ட கதை  நமக்குத் தெரியும்.   'யான்  உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்து அருள்வது இனி நீயே' என்று மாணிக்கவாசகர்  சிவபெருமானைப் பற்றிய மன சந்தோஷத்தில் பெருமிதம் கொண்டு  பூரித்ததும் அறிவோம்.

எல்லாமே மனத்திற்கும் இறைவனுக்குமான   தொடர்பை மாய்ந்து மாய்ந்து  நமக்குத் தெரிவிக்கின்றன.   பக்தி யோகத்தின் அடிப்படை மனமும் இறைவனும் கலப்பது தான்.

மனக்கோயிலில் இறைவன் வீற்றிருக்கிறான் என்ற உணர்வில் பூரணமாக திளைத்து அவனை ஆராதிப்பது என்பது ரொம்ப விசேஷமானது.  தன் மனது, தன் இறைவன் என்ற தனக்கேயான சொந்தம் அது.

எந்த அயலார் தலையீடும் இன்றி   இறைவனோடு கலந்து உரையாடுவது இன்னும் சிறப்பு.   புழக்கத்தில் இருக்கும் இறைத் துதிப்பாடல்களைக் கூடத் தவிர்த்து  விடலாம்.  தனக்குத் தெரிந்த மொழி முக்கியம்.  தானே தன் மொழியில் தன் இறைவனுடன் பேசிக் களிப்பது தான் தனித்த  சந்தோஷத்தை மனதில் பெருக்கெடுக்க வைக்கும்.

கிருஷ்ண காந்த் என்றொரு நண்பர் எனக்கு.   இறை  உணர்வு மிக்கவர்.   அவரோடு பேசிக் கொண்டிருக்கையில் எனக்கு பக்த ராமதாஸ் தான் நினைவுக்கு வருவார்.  இறைவன் மேல்   அப்படி   ஒரு அபிமானம் அவருக்கு.

அர்த்தமே தெரியாத ஸ்லோகங்களைச் சொல்லி  இறைவனை கைகூப்பித் தொழுவோரைப் பார்த்திருக்கிறேன்.  ஸ்லோகங்களுக்கு அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை;  இதில் அவர்கள் கொண்டுள்ள இறை  நம்பிக்கை தான் முக்கியமாகிப் போகிறது என்ற
சால்ஜாப்புகளையும்  கேட்டிருக்கிறேன்.  பாரதி இதைப் பற்றி கடுமையாகச் சாடிய வரியும் நினைவுக்கு வருகிறது.

நம்ம கிருஷ்ண காந்த் எப்படி என்றால்  தனக்குள் தோன்றும் தன் வார்த்தைகளிலேயே மனம் உருகி  தனக்கு அந்தந்த நேரத்தில் மனசில் பதியும் வார்த்தைகளை வைத்து இறைவழிபாடு செய்யும்  பழக்கம் கொண்டவர்.

முருகா போற்றி
ஷண்முகா போற்றி
அழகா போற்றி
ஆறுமுகா போற்றி
திருத்தணி வாழ்   தெய்வமே போற்றி
திருப்பரங்குன்றம் தெய்வமே போற்றி                                       
திருச்செந்தூர் வாழ் தெய்வமே போற்றி
வடபழனி ஆண்டவரே போற்றி
பழனி ஆண்டவரே போற்றி
சிவபெருமான் பார்வதித் தாயாரின் இளைய  மகனே போற்றி
கணபதியின் தம்பியே போற்றி

--- இந்த மாதிரி..  அவர் வார்த்தைகளில் அவருக்கு பழக்கப்பட்ட நெக்குருகலோடு  குழைந்து போய் மனசை இறைவனின் மேல் படிய வைத்த லயத்தில்  ஒவ்வொரு கடவுளுக்கும் அவரே மனசில் கோர்த்து வடிவாய் அமைத்த சொற்களோடு வழிபாடு செய்து கொண்டிருப்பார்.  அவர் கற்பனை புதுசு புதுசாய் வழிபாட்டிற்கான வார்த்தைகளை அவருக்கு  வடித்துக் கொடுக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்.

ஒரு நாள் அவரைப் பார்க்கப் போயிருந்தேன்.  வாசல் கதவு திறந்திருந்தது.

உள்ளே ஹாலில் அவர் குரல் கேட்டதால் உள் பக்கம் நுழைந்தேன்.  ஹாலில் பெரிய  பூஜை அலமாரிக்கு எதிரே  இடுப்பில் கட்டிய  துண்டுடன் பக்திப் பரவசமாய் இறை வழிபாடு நடந்து கொண்டிருந்தது.  அவர் கவனம் சிதறி விடக் கூடாது என்று கொஞ்சம் தள்ளி பின் பக்கம் நானும் கைகூப்பி  நின்று கொண்டேன்.

                                                                                               
ஆஞ்சநேயா போற்றி
அனுமாரே போற்றி
வாயு புத்ரா போற்றி
இராம தூதா போற்றி
கொழிஞ்சிவாடி ஆஞ்சநேயரே போற்றி
மண்ணச்ச நல்லூர் ஆஞ்சநேயரே போற்றி
நங்கநல்லூர் ஆஞ்சநேயரே போற்றி                           
நாமக்கல் ஆஞ்சநேயரே போற்றி                                               
சுசீந்தரம் ஆஞ்சநேயரே  போற்றி!.....  என்றவர்

இராமா போற்றி
சீதா பிராட்டியே போற்றி
இலட்சுமணா போற்றி
பரதா போற்றி
சத்ருகனனா போற்றி    ....  என்றவர்  மறுபடியும்

ஆஞ்சநேயா போற்றி
அனுமாரே போற்றி
வாயுபுத்திரா போற்றி
--- என்று ஆஞ்சநேயர் வழிபாடு முழுவதையும் சொல்லி முடித்தார்.

அவர் வழிப்பாட்டு  முறை  என்னைக் கவர்ந்தது..   முதலில் அனுமாரைத் துதித்து அடுத்து ஸ்ரீராமரைத் துதித்து  அதற்கடுத்து முன்பு சொல்லிய அதே அனுமார் துதியைச் சொல்லி...

கிருஷ்ணகாந்த் தன் பூஜையை முடித்து வரட்டும் என்று வாசல் பக்கம்  போய் சோபாவில் உட்கார்ந்து கொண்டேன்.    செய்தித்தாட்களைப் புரட்டும் பாவனையில் கிருஷ்ணகாந்த் வரட்டும் என்று காத்திருந்தேன்.

கொஞ்ச நேரத்தில் பூஜையை முடித்து விட்டு கிருஷ்ணகாந்த் வாசல் பக்கம் வந்தவர், என்னைப் பார்த்து விட்டு, "அடேடே!  எப்படா வந்தே?.." என்று  ஆச்சரியம் காட்டினார்.

"நீ பூஜையில்  தீவிரமாக ஆழ்ந்திருந்த பொழுதே  வந்து விட்டேன்" என்றவன்    சட்டென்று, "ஆஞ்சநேயர், ராமர், மீண்டும் ஆஞ்சநேயர் என்று முக்கோண வடிவில் நீ பூஜித்ததில்  ஏதாவது விசேஷ காரணம்  உண்டா?" என்று மனத்தில் பட்ட கேள்வியைக் கேட்டே விட்டேன்.

"அதெல்லாம் ஒரு காரணமும் இல்லேப்பா.. அந்த  வரிசையில் பூஜை செய்வதை மனசு விரும்பியது. அவ்வளவு தான்.." என்று சுருக்கமாகச் சொன்னார்.

எனக்குத் திருப்தியாகவில்லை.   "ஏன் அப்படி உன்   மனசு விரும்பினது?  சொல்லேன்.." என்று முடுக்கினேன்.

"ஓண்ணுமில்லே.   ஆஞ்சநேயரை ஸ்ரீராமனிடமிருந்து  பிரித்து வழிப்பட்ட மாதிரி  மனசுக்குத் தோணித்து.   ஸ்ரீராமனை பூஜித்து பின்னாடி மறுபடியும்  ஆஞ்சநேயரை வழிப்பட்டு ராமனிடமே அனுமாரைக் கொண்டு போய்ச் சேர்த்ததில்  மனசுக்கு நிம்மதியாய் இருக்கு.  அதனால் தான்.." என்று அவர் சொன்ன பொழுது  அசந்து  போனேன். தீவிர  பக்தர்கள் தாங்கள் பூஜிக்கும் கடவுளோடு எந்தளவுக்கு நெருக்கமாக தங்களை உணர்கிறார்கள் என்று வியப்பாக இருந்தது.

கிருஷ்ணகாந்தே சொன்னார்: "அதே மாதிரி தான்.  ஸ்ரீராமரை மட்டும் பூஜிக்கத்  தோன்றுவதில்லை.  சீதா பிராட்டியாரையும் சேர்த்துச் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது..  ஸ்ரீராமருக்கு சகோதரர்களாக இருக்க இலஷ்மணன்,  பரதன், சத்ருகனன் எல்லாருக்கும் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்?.. அதனால் தான் யாரையும் பிரிச்சுப் பார்க்க முடியவில்லை..  " என்று அவர் சொன்ன பொழுது ஸ்ரீராம பட்டாபிஷேகப் படம் என் நினைவில் பளிச்சிட்டது.

"உண்மை தான் கிருஷ்ணகாந்த்!.." என்று என்  மனமும் நெகிழ்ந்தது.

இது தான்  மனம் விளைவிக்கும்  அற்புதம்.  மனதை விட்டு இறைவனைப் பிரித்துப்  பார்க்க முடியாது.  அப்படிப் பார்த்தால் எல்லாம் செயற்கையாய் போய்  முடியும்.  இறைவனுக்கும் மனத்திற்கும் அவ்வளவு நெருக்கம்.

(வளரும்)

Tuesday, October 15, 2019

மனம் உயிர் உடல்

13. வெட்ட   வெளி  என்னும்  தெய்வம்!


சிவவாக்கியரைப் பற்றித் தெரியாதோருக்குச் சொல்ல வேண்டும். இவர் பதினெண் சித்தர்களில் ஒருவர். கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று அனுமானிக்கிறார்கள்.  இவரது பாடல்கள் பல சிந்தனையைத்  தூண்டுவன.  சாம்பிளுக்கு ஒன்று:

"கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா             
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே                 
கோயிலும் மனத்துளே  குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை  இல்லையே.."

பலருக்கு  நன்றாகத்  தெரிந்த  'நட்டக் கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம்  சாத்தியே'  கவிதையும் சிவ வாக்கியரது தான்.

சென்ற காலத்தில் தங்களைத் தாங்களே பகுத்தறிவுவாதிகள் என்று அழைத்துக் கொண்டு மேலோட்டமான இறைமறுப்பு பேசியவர்களும் 'தங்கள்  ஆள்' என்ற நினைப்புக்கு இடம் கொடுக்கும்  கவிதைகள்.   சிவவாக்கியர் என்ற அவர் பெயர் தான் அவர்களுக்கு இடைஞ்சலாக இருந்து,  விட்டு விட்டார்கள் போலிருக்கு..

சிவ வாக்கியர் பரம இறை பக்தர்.  கண்ணதாசன் சொன்ன மாதிரி 'மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடுவது போல தன்னைத் தோண்டி ஞானம் கண்டவர்' அவர்.

'வெட்ட வெளியதன்றி மற்று வேறு தெய்வம் இல்லையே!' என்று  வெகு
சாதாரண வார்த்தைகளில் அசாதரண விஷயத்தைக் கோடி காட்டியவர் சிவவாக்கியர்.

வானவெளியைத் தான் வெட்ட வெளி என்கிறார் சிவவாக்கியர்.  பிரபஞ்சம் பூராவும் நீக்கமற நிறைந்திருக்கும் காந்த  சக்தி  தெய்வத்திற்கு நிகர் என்று பிற்காலத்தில் தான்  தெரியவந்தது.  வான் காந்த  சக்தி தெய்வமாவது  எப்படி என்பது ஒரு அறிவார்ந்த கேள்வி.

இயற்கை சக்தியை நம் உடலுக்கு வெளியே, உடலுக்குள்ளே என்று இரண்டு கூறுகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.  நம் வசதிக்காகத் தான் இந்தப் பிரித்தலே தவிர வெளியே--உள்ளே இருப்பன  இரண்டும் வெவ்வேறானவை அல்ல.
இரண்டும் ஒன்றே.  வெளியே பேரண்டமாக இருக்கும் சக்திப் பிரவாகம் உடலுக்குள்ளே நம் குட்டியூண்டு உடல் தாங்கும் அளவுக்கு அணு போலவாய் புதைந்து கிடக்கிறது.

நம்முள் உறைந்திருக்கும் சக்தியும் வெளி வெளியில் பரந்து கிடக்கும் விண் சக்தியும் நம்மால் அறிய முடியாத அளவில் ஒன்றிற்கொன்று தொடர்பு (connectivity) கொண்டிருக்கின்றன.  சொல்லப்போனால் வெளி பேரண்ட சக்தியை துளித் துளியாய் எடுத்துக்  கொண்டு உள்சக்தி சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கிறது.

வாழும் காலம் பூராவும் இந்த தொடர்பு அறுந்து  போய் விடாமல் இருப்பதால் தான் நம்மால் சுவாசிக்க முடிகிறது;  சுவாசமே பிராண சக்தியாய் உள்ளில் உயிர்  வேதியல் மாற்றங்கள் கொள்கிறது.

உண்ட உணவை ஜீரணிக்க முடிகிறது; முயங்கவும் இயங்கவும் முடிகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இந்த தொடர்பு இருப்பதால் தான் உயிர் வாழ முடிகிறது.  உடலின்  உயிர்ப்பு இந்தத் தொடர்பில் தான் உயிர் கொண்டிருக்கிறது.

பிரபஞ்சத்தில் வாழும் அத்தனை உயிரினங்களும் தன்னுள் கொண்டிருக்கும் காந்தசக்தியும் வெட்டவெளி விண் காந்தசக்தியும் இயக்க ரீதியாகக்  கொள்ளும் தொடர்பில்  தான்  உயிர் இனங்களின் இயக்க ஆற்றலே பதுங்கிக் கிடக்கிறது என்பது இன்றைய விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிற உண்மை.

அது எப்படி என்றால் இப்படி:

நமது உடல் அமைப்பில் தேங்கியிருக்கும் காந்த சக்தியும் பிரபஞ்ச வெட்ட வெளியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் காந்த சக்தியும் ஒன்றுக்கொன்று பின்னிய தொடர்பு  கொண்டவை.  பிரபஞ்சக் காந்தப்  பேராற்றலோடு நமது மூளை வழி  நரம்பு மண்டலமே இணைக்கப்பட்டிருக்கிறது.  உயிரியக்கமே இந்த காந்த சக்தியின் பேராற்றலால்  தான் என்று வரும் பொழுது வெளி காந்தசக்தியின் தொடர்பு  நம்மில் துண்டிக்கப்படும் பொழுது என்ன நிகழும் என்று சொல்லாமலே விளங்கும்.

நம் உடலுக்கு அதுவே குலுங்குவது போல ஒரு உணர்வை ஏற்படுத்தினால் இந்த மின் காந்த சக்தியின் ஆற்றலை மிக மிக லேசாகப் புரிந்து கொள்ளலாம்.
நன்றாக சளி பிடித்திருக்கும் பொழுது சின்னதாக ஒரு நூல் திரியை மூக்கின் அடி ஆழம் வரை செலுத்தி பலமாகத் தும்மும் பொழுது ஏற்படும்  உடல் அதிர்வில்  உடல் காந்த மின்சக்தியில் ஏற்படும் லேசான  அதிரலையை உணரலாம்.

உள்ளில் உறைந்திருக்கும் சக்திக்கும், வெளியே வியாபித்திருக்கும் பிரமாண்ட சக்திக்கும் உள்ள தொடர்பு அறுந்து போய் விட்டால் அடுத்த நொடியே உடல் இயக்கம் ஸ்தம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக அடங்கத் துவங்கும்.  வாழ்நாள் காலம் முழுதும் அந்தத் தொடர்பு அறுந்து  போய் விடாமல் சுவாசமாய் நம்முள் உயிர்ப்புடன் செயல்படுவதைப் புரிந்து  கொள்வது தான் இறை ஞானம்.

'எங்கே தெய்வம்?' என்ற கேள்வி,  கேள்வி கேட்க மட்டுமே தெரிந்து அதற்கான பதிலை தன் முயற்சியில் பெறத் தெரியாதவர்களுக்கு சுலபமானது.  தெய்வம் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம்  பூஜைகளில், கோயில்களில் காணப்படும் உருவாக்கப்பட்ட தெய்வ உருக்கள் தாம்.  'முருகனுக்கு சளி பிடித்தால் எந்த மூக்கை எந்தக் கையால் சிந்துவான்?' என்று கேட்ட அன்றைய பகுத்தறிவாளர்களுக்கு தெய்வம் என்பது மனிதக்    கற்பனையில் உருவான அதன் தோற்றம், உருவோடு குறுகிப் போன ஒன்று.  இன்றும் பகுத்தறிவாளர்களாகத் தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்திக் கொள்ளும் இவர்கள் முருகனை மட்டும் தமிழ்க் கடவுளாக அங்கீகரித்துள்ளது தான் காலத்தின் தேவையாக இவர்களுக்குப் போயிற்று.

மனித மனம்  என்பது சுத்தப் பெருவெளியின் ஒரு நுண்ணிய கூறே ஆகும்.
பரிணாம வளர்ச்சியின் பெருமை மிகு செயல்பாடு இது.  இந்த  நுண்ணிய கூறை ஆதாரமாய்க்  கொண்டு அந்த அண்டப் பெருவெளியின் தோற்றத்தையும் அதன் இயக்க ஆற்றலையும்,  விரித்துப் பார்க்கும்  ஞானம் நம்முள் சித்திக்க வேண்டும்.   எதன் பின்னம் எதுவோ அதனைத்  துணையாகக் கொண்டே அதனுடைய மூலச்சக்தியை ஆராயும் பேறு இது.

சுருக்கமாகச் சொல்லப் போனால் மனம் என்பது குரங்கல்ல, சாமி!  சாட்சாத்  சுத்தப் பெருவெளித் தெய்வம் குடி கொண்டிருக்கும் கோயில் அது!


(வளரும்)

Thursday, October 10, 2019

மனம் உயிர் உடல்

12.   தெரிந்த  தெய்வங்கள்

போன ஜென்மம், அடுத்த ஜென்மம் என்கிற கருதுகோள்களையெல்லாம் தற்காலிகமாக மறப்போம்..  உபநிஷத்துக்களில் சொல்லப்படுகிற ஜென்ம தொடர்ச்சிகள் வேறே.

பழைய பொக்கிஷங்கள் பலவற்றில் அவர்கள் அறிவுபூர்வமாகச் சொல்லியிருப்பதையெல்லாம் நம் வசதிக்கேற்ப அல்லது  காலப்போக்கின் புரிதல்களுக்கு ஏற்ப மாற்றி மாற்றி அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். அவ்வளவு தான்.

போன ஜென்மத்திற்கெல்லாம் போவானேன்?.. நிகழ் ஜென்மத்து உறவுகளை மனதில் கொள்வோம்.  தாத்தா, அப்பா, நான் -- என்கிறது நிறையவே ஏற்றுக் கொள்கிற மாதிரியான பிறவித் தொடர்ச்சி..  கொஞ்சம் கொஞ்சம் பாட்டி, அம்மா என்றும் சேர்ந்து வருவது உண்டு.  வம்சாவளித் தொடர்ச்சி தொடர்வதற்கு உடற்கூறு சாத்திரத்திலும் ஆதாரங்கள் உண்டு.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வங்கள்.  இந்த  வரி உளி  கொண்டு  செதுக்கியது மாதிரி உங்கள்  மனசில் மிக மரியாதையுடன் படிய வேண்டும்.  நிதர்சனமாக நம்முள் உறையும்  தாயையும், தந்தையையும் இறைவனாகக் கொள்ள வேண்டும்.  இதில் யாருக்காவது சங்கடம் இருந்தால் அது பற்றி தனக்குள்ளேயே தர்க்கித்து ஒரு முடிவுக்கு வருவதில் ஆட்சேபணை இல்லை..

நாம் இப்பூவுலகில் உயிர்  சுமந்து  உலவுவதற்குக்  காரணமான அப்பா--அம்மாவை நினைவில் கொள்வோம். தந்தை-- தாய் என்று சொல்வதை விட   -  அப்பா - அம்மா நெருக்கமான  வார்த்தை.  அதனால் அப்பா-- அம்மா என்றே   எப்பொழுதெல்லாம் தியானத்தைத்  தொடங்குகிறோமோ அப்பொழுதெல்லாம்   அவர்களின் ஆசியே நம் தியானத்தைத்ய் தொடங்கி வைக்கட்டும். 

கூட இருக்கும் பொழுது சகஜமாக இருக்கும் நெருக்கம் அவர்கள் இல்லாத பொழுது தான் உணர்வின் தகிப்பில்  இன்னும் கூடுகிறது..   அப்பா - அம்மா  இரண்டு பேருமே  இப்போ இல்லை என்றால்  தியானத்திற்கு ரொம்பவும் செளகரியம்.  தத்ரூபமாக அவர்கள் உருவத்தை, முகத்தை உள்ளார்ந்து ஓர்ந்து நினைவில் நிலை நிறுத்துங்கள்.  நிலையாக ஒரு மெழுகுவர்த்தி உங்கள் முன் ஒளியை உதிர்ப்பதை போல அப்பா - அம்மா  தனித்தனியே  உங்கள் எண்ணத்தில் ஒளி ஊட்டட்டும்.

தெரியாத தெய்வங்களை விட தெரிந்த தெய்வங்கள் அவர்கள்.  அதனால்  தியானத்தைத் தொடங்குவதற்கு முன்  ஒரு தெய்வத்தை வேண்டிக் கொள்கிற  நிலையில்  அம்மா - அப்பா அருள் வேண்டி தெய்வத்தின் நிலையில் அவர்களை நினைவில் ஆழந்து வரவழைத்துக் கொள்ளுங்கள்.  அவர்கள் உங்களுடன் உரையாடுகிற பாவனையில் நினைவுகள் இருந்தால் இன்னும் செளகரியம்.

நம்மிடையே  தாய் - தந்தையரை விரோதித்துக் கொண்டவர்களும் இருப்பார்கள்.   ஏதாவது காரணங்களினால் அவர்களை வெறுத்துப் பிரிந்து வந்தவர்களும் இருப்பார்கள்.  அவர்களால் எடுத்தவுடன் பரிவான உணர்வுடன் நினைவில் கூட தாய்- தந்தையருடன் நெருங்கமுடியாத உணர்வு மிகுந்திருக்கும்.  அப்படிப் பட்டவர்கள்  மனசார தங்கள் செயல்களுக்கு வருந்தி பெற்றோர்களிடம் ஆத்ம சமர்ப்பணமாக மன்னிப்பை உருக்கமாகக் கோரி அவர்கள் தம்மை மன்னித்து விட்டார்கள் என்ற திருப்தியுடன்  தாய்-தந்தையரை நினைவில் நிறுத்தி வேண்டினால்  அற்புதம் நிகழும்.  இத்தனை நாள் பெற்றோரிடம் விடுப்பட்டுப் போயிருந்த அந்த நெருக்கம்  அவர்கள் அருட் பார்வையோடு கைகூடி வருவதை நிதர்சனமாகவே உணர்வார்கள்.

வேறென்னன்ன என்பதனைத் தொடர்ந்து  பார்ப்போம்.

தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?..

அமெரிக்காவில் பிலடெல்பியா நகரில் ஜேக்கப் க்ரெளன் என்னும் ரேடியாலாஜிஸ்ட் நமது உடம்பில் உள்ள மின்னியல் கதிர் அலைகள் தாம் இந்த ஆவி சமாச்சாரத்திற்கு அடிப்படையோ என்றும் ஆராய்ந்திருக்கிறார். 

ஒரு மனிதனை நாற்காலி ஒன்றில் கொஞ்ச நேரத்திற்கு உட்கார வைத்தார்கள்.  பிறகு அவனை அனுப்பி விட்டு 'இன்ஃப்ரா ரெட்' போட்டோ கிராஃபியில் அவன் உட்கார்ந்திருந்த இடத்தைப் படம் பிடித்துப் பார்த்த பொழுது  அவர்களுக்கு அந்த ஆச்சரியம் காத்திருந்தது!..

படத்தில் அந்த மனிதனின் முழு உருவமும்  புகை மூட்டம் போல வெள்ளையாய் விழுந்திருந்தது..  அந்த மனிதன் நாற்காலியில் உட்கார்ந்திருந்த  தருணத்தில் அவன் உடம்பிலிருந்து வெளியேறிய  மின் கதிர் அலைகள் நாற்காலியில் படிந்து தேங்கி விட்டது  தெரிந்தது.

கொஞ்ச நேர உட்காருதலுக்கே இப்படி என்றால் வாழ்க்கையின் பெரும் பகுதி  நாம் வசித்து உண்டு  உறங்கி உலாவும்  நமது வீட்டில்?..  

மனிதர்கள் மரித்த பின்பும் அவர்கள் வாழ்ந்த பொழுது அவர்கள் உடலிலிருந்து வெளிப்பட்ட மின் கதிர் அலைகள் தம் வீச்சின் வீரியம் குறையாமல் அவர்கள் வாழ்ந்த இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அழியாமல் இருக்கும் என்று சொல்கிறார்கள். 

திடகாத்திரமாக உடல் நலத்தோடு  உலவியவர்களின் மின் கதிர் அலைகள்  பல ஆண்டுகள் ஆகியும் அழிவதில்லை  என்றும்  விஷயம் தெரிந்த ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்தும் காட்டியிருக்கிறார்கள்.

இந்தக் கருத்துரு தான் பேய் உலாவல்களுக்கு அடிப்படை என்று வாதிடுபவர்கள், அதனால் தான் தங்களை அணைத்துக் கொள்ளும்  இருட்டின் மேல் பேய்களுக்கு தனிப்பட்ட  மோகம் என்று அடித்துச் சொல்கிறார்கள்..


(வளரும்)

Friday, October 4, 2019

மனம் உயிர் உடல்

11.     நான்  யார்?

பூவுலகில்  வெளிப்பார்வைக்குத் தெரியும்  அத்தனையையும் கண்களால் காணுகிறோம்.  புறவுலகில் தென்படுபவனவற்றை இன்னது தான் என்று அறிவு  பெறுவது புறப்பார்வையால் சாத்தியப்படுகிறது.     அதற்கு நம் கண்கள் உதவுகின்றன.

புறப்பார்வை போலவே அகப்பார்வை என்ற ஒன்றும் இருக்கிறது.  புறப்  பார்வை வெளிநோக்கி என்றால் இது உள் நோக்கி.  நமக்கு நாமே உள்நோக்கிப் பார்ப்பது.  புறப்பார்வையைச் சாத்தியப்படுத்துவதற்கு  கண்கள் இருக்கின்றன என்றால்,  அகப்பார்வைக்கு?..  மனக்கண் என்று பேச்சு வழக்கில் சொல்கிறோம்.  ஓ! மனமே கண் போலச் செயல்படுகிறதா என்று ஆச்சரியம் கொண்டால், ஓரளவுக்கு  இது சரியே.

நம்மை நாமே ஆராயும் பார்வை தான் அகப்பார்வை.

இப்படி நம்மை நாமே ஆராய்வதற்கு நம்மை விடத் தகுதி வாய்ந்தார்கள் வேறு யார் இருப்பார்கள்?..  சொல்லுங்கள்..  இது சத்யமான உண்மை எனினும் தன்னைத் தானே ஆராயத் தெரியாதவர்கள் தான் அதிகம்.  இது ஓர் ஆச்சரியமான உண்மை.

இந்தியத் தத்துவ ஞானத்தில் 'நான் யார்?' என்பது மிகவும் சிக்கலான  கேள்வி.

'நான் யார்?' என்று உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டுக் கொண்டுப் பாருங்கள்.  விடைகாணுவதில்  சிரமம் தாண்டி,  கிடைக்கும் எந்த விடையும் சரியாக இல்லை என்பது மாதிரி உங்களுக்கேத்  தோன்றும்.  ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் நடந்து கொள்ளும் முறையெல்லாம் நீங்களல்ல.
நீங்கள் யார் தீர்மானமாக வரையறுத்து    நெஞ்சுக்கு நீதி வழங்குவது உங்களாலேயே   முடியாத காரியம் என்பது அதற்காக முயற்சித்துப் பார்த்தால்  தெரியும்.

ஆக, நாம் யார் என்பது நமக்கிட்டப் பெயரைத்  தாண்டி மிகச் சரியாக நம்மை நாமே யார் என்று கணிக்க முடியாமை தான் விசித்திரம்.

நம்மை நாமே கணிப்பது என்றால் என்ன?..  நாம் எப்படிப்பட்டவர் என்று நம்மைத் தெரிந்தவர்கள் நம்மைப் பற்றிக் கணித்து வைத்திருப்பது அல்ல.

அகவயப்பார்வையை நம் உள்ளே செலுத்தி  நமக்கு நாமே நம்மைப் பற்றி அறிய முற்படுவது.  இந்தச் சோதனையில்  ஈடுபடும் பொழுது நம்மைப் பற்றி நமக்கே இதுவரைத் தெரிந்திராத பல உண்மைகளைத் தெரிந்து கொள்ள தலைப்படுவோம்.   போலியாக இல்லாமல் ஒரு சத்ய உணர்வோடு உண்மையான அறிதல்  நோக்கோடு இந்த அகவயப் பயணத்தை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும்.  அப்பொழுது நாம் எந்த முயற்சியை  மேற்கொள்கிறோமோ அதற்கேற்பவான பலன் சித்திக்கும்.

மனிதன் ஆகச்சிறந்த படைப்பாக்கம்.  வாழ்நாள் பூராவும் பிரச்னைகளைத் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டு அவற்றைக் களைவதற்கு தன்னாலான முயற்சிகளை மேற்கொள்ளும் பாவப்பட்ட  ஜென்மம்.   அதற்கான உழல்தல் தான்  அவனது வாழ்க்கையாகியிருக்கிறது.

பிரச்னைகள் இல்லையெனில் வாழ்க்கை இல்லை  என்பது வாழ்க்கைக் கல்வியின் பால பாடம்.   வாழ்க்கையில்  பிரச்னைகள் தாம் ஒருவரின் முன்னேற்றத்திற்கான   தூண்டுக்கோலாக இருக்கின்றன என்பது   அப்பட்டமான உண்மை.

ஆக பிரச்னைகளும் இருக்க வேண்டும்.  அதிலிருந்து மீண்டு வருகிற பயிற்சிகளையும் இந்த வாழ்க்கையினூடேயே பெற வேண்டும் என்பது தான் மனிதப் படைப்பு புடம் போட்டத் தங்கமாக மிளிர்வதற்கு இயற்கை விதித்திருக்கும் விதி.

நாம் யார் என்று தெரிந்து கொள்வதற்கு  நமக்கேற்பட்ட பிரச்னைகளும் அவற்றிலிருந்து நாம் மீண்டு வந்த அல்லது இன்னும் மீளாமல் உழன்று கொண்டிருக்கிற உண்மைகள் உதவலாம்.

தினம்  செளகரியப்பட்ட நேரத்தில் தனிமையில் ஒரு மணி நேரம் உட்கார்ந்து  கடந்து வந்த வாழ்க்கைப் பாதையில் மீண்டும் நினைவில் நடை பயின்று பாருங்கள்.

சில விஷயங்களில் நாம் நடந்து கொண்டவை   நியாயமாகப் படலாம்.  சில  விஷயங்களில் அப்படி நடந்து கொண்டிருந்திருக்கக் கூடாது என்று தோன்றலாம்.  ஏன் அப்படி நடந்து கொள்ளாமல் போனோம் என்று சில விஷயங்களில் நொந்து கொள்ளலாம்.  இன்னொரு தடவை அதே மாதிரி ஒரு நிகழ்வில் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று  புத்திமதி கிடைக்கலாம். 

பல நேரங்களில் சூழ்நிலைகளுக்கேற்ப செயல்பட்டிருக்கலாம்.  சொல்லப் போனால் மனிதனே சூழ்நிலைக் கைதி தான்.  இப்படித் தான் செயல்பட வேண்டும் என்று பல சந்தர்ப்பங்களில் சூழ்நிலை தான் அவனை வழிநடத்திச் செல்வதும் உண்மை  தான்.  ஆனால் இந்த உண்மைகளையெல்லாம் வாழ்க்கைக் கல்விக்கான நிரந்தர உண்மைகள் அல்ல.    ஒரு நேரத்தில் ஒரு மாதிரியும் இன்னொரு நேரத்தில் இன்னொரு மாதிரியும் நடந்து கொள்ள நம்மை நிர்பந்தப்  படுத்துபவை.

இதையெல்லாம் தெளிவாக அலசி ஆராய்ந்து நாம் இப்படித் தான் இருக்க வேண்டும்;  அல்லது நாம் இப்படித் தான் உருவாக வேண்டும் என்று தீர்மானம் கொள்வதற்கான  ஆரம்பப் பாடம் தான்  'நான் யார்?' என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளும் கேள்வியில் ஆரம்பிக்கிறது.

அதைப் பற்றித் தொடர்ந்து பார்ப்போம்.


(வளரும்)

Related Posts with Thumbnails