மின் நூல்

Friday, December 29, 2017

இது ஒரு தொடர்கதை..

                                                        அத்தியாயம்--4


பாண்டியன் க்யூவின் பின் பக்கம் திரும்பிப் பார்த்தான்.   அது கோயிலுக்கு வெளியேயும் பாம்பு  படுதிருப்பதைப்  போல நீண்டிருந்தது.  வரிசையை விட்டு விட்டு அர்ச்சனை சீட்டு வாங்கப்  போய் வரிசையைத்  தொலைத்து விட்டால் என்ன செய்வது என்ற குழப்பத்தில்  துவண்டு போனான்.

அவன் ஏதோ தர்மசங்கடத்துடன் வரிசையில் நிற்பதைப் பார்த்து அவனுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த பெண், "என்னன்ணே.. சீட்டைத் தொலைச்சிட்டீங்களா?" என்று பாண்டியனிடம் கேட்டாள்.

"இல்லீங்க.. சீட்டே வாங்கலே.." என்றான் பாண்டியன்.

"அர்ச்சனை சீட்டு தானே?.. அதோ-- அந்த தடுப்புக்கு பின்னாடி டிக்கட் கவுண்ட்டர்..  போய் வாங்கிட்டு வந்திடுங்க.."

"வந்திடலாம்.. ஆனா, அதுக்குள்ளாற வரிசை தப்பிப்  போயிடுமோன்னு பாக்கறேன்.."

"எப்படித்  தப்பிப் போகும்?.. அதான் வரிசைலே தானே நீங்களும் வந்திருக்கீங்க.."                                                                   

"நான் திரும்பி வர்றதுக்குள்ளே நீங்க கோயிலுக்குள்ளேயே போயிடுவீங்க போலிருக்கு..  வரிசை நடுவிலே நொழைஞ்சா யாராச்சும் ஏத்துப்பாங்களா?..
நாலு பேரு  சண்டைக்கு வந்தா அவமானமால்லே போயிடும்?" என்றான்.

"அட சரித்தான், தம்பி.." என்றார் நாலு பேர் தள்ளி பின் வரிசையில்  நின்றிருந்த பெரியவர் ஒருவர்.. "அதெல்லாம் ஒண்ணும் ஆகாது.. நீ  போய்         தெகிரியமாய்  சீட்டு வாங்கிட்டு வா..  எவனாவது கேட்டா, சொல்றத்துக்கு  நா இருக்கேன்.. நீ போயிட்டு வா.." என்றார்.

அவர் கொடுத்த தைரியத்தில் பாண்டியன் டிக்கெட் கவுண்டர் பக்கம் போனான்.  அவன் அதிர்ஷ்டம் கவுண்டர் காலியாக இருந்தது.

அர்ச்சனை சீட்டு வாங்கிக் கொண்டு வேகவேகமாக வரிசைக்குத்  திரும்பிய அவனைப் பார்த்து அந்தப் பெரியவர், "நான் சொன்னேன்லே.. ஒரு இன்ச் கூட நகரலே.  அப்படியே நிக்கறோம்.." என்றார்.

"யாரோ வி.ஐ.பி. இன்னொரு கேட் வழியா வர்றாராம்.  அவர் சாமி கும்பிட்டுப் போன பின்னாடி தான் நமக்கெல்லாம் தரிசனமாம்.  அப்படியே க்யூவை நிறுதிட்டாங்க.." என்றாள் வரிசையில் அவனுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த பெண்.

"எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.." என்றார் பெரியவர்.

"நீங்கள் சொல்வது ஏதோ பொன்மொழி மாதிரி இருக்கிறதே?.. எந்த மகான் சொன்னது இது?"  என்றான் பாண்டியன்.

"பகவான் கிருஷ்ணர் சொன்னது இது.." என்று பெரியவரிடமிருந்து பதில் வந்த பொழுது அந்தப் பெண்ணும் ஆச்சரியப்பட்டாள்.   "கிருஷ்ண பகவான் சாமி இல்லையோ?.. அவர் கூட மனுஷங்க மாதிரி இப்படியெல்லாம் பேசி பொன்மொழிகள்லாம் சொல்லியிருக்காரா?"

"மஹாபாரத போர்க்களத்தில் பகவான்  கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு உபதேசம் செய்கிறார் இல்லையா?..  அந்த கீதா உபதேசத்தில் இந்த உபதேசத்தைச் சொல்கிறார்.  அர்ஜூனனுக்குச் சொல்ற மாதிரி நமக்கெல்லாம் பகவான் சொன்னது இது..  இப்போ நிதர்சனமா க்யூ நகராமப் போனது இவருக்கு சாதகமா போயிருக்கு, இல்லையா?"

"அவருக்கு சாதகமா போயிருக்கலாம்.. நமக்கு பாதகம் தானே?" என்று சட்டென்று கேட்டு விட்ட அந்தப்  பெண் அடுத்த வினாடியே, "சாரி.." என்று பாண்டியனைப் பார்த்துச் சொன்னாள்.

"இவருக்கு மட்டுமில்லை.. இப்படி க்யூ நகராமப் போனதிலே நமக்கும் கூட ஏதாச்சும் நன்மை இருக்கலாம்.  நடக்கறதெல்லாம் எதுக்காக நடக்கறதுன்னு தெரியாத போது எதைப்பற்றியும் எதுவும் சொல்வதற்கில்லை.." என்றார் பெரியவர்.

"அதுவும் சரித்தான்.." என்றாள் அந்தப் பெண்.

பாண்டியனுக்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்துப் போனது.  படித்தவள் போலும்..  தான் நினைப்பதை மற்றவர்களுடன் எவ்வளவு அழகாகப் பகிர்ந்து கொள்கிறாள் என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது   ஏன் இந்த பெண் போல நம்மால் சரளமாகப் பேச முடியவில்லை என்று ஆதங்கமாக இருந்தது.

அவர்கள் கிட்டத்தட்ட சன்னதி பார்வைக்குத் தெரிகிற தூரத்தில் வந்து விட்டார்கள்.   அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்குக் கொஞ்சம் முன்னால்  வரிசையை இரண்டாகப் பிளவுபடுத்தி  உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.   அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த ஒரு
மீசைக்காரன் "இப்படி வாப்பா.." என்று க்யூவில் வந்த ஒருவரின் புஜத்தைப் பற்றி இழுத்தான்.  "நீ அர்ச்சனை ஆள், தானே?  இந்தப்  பக்கம் போ.." என்று கிட்டத்தட்ட அந்த ஆளின் கழுத்தைப்  பிடித்து நெட்டித் தள்ளுகிற மாதிரி வலது பக்க வரிசைக்கு அனுப்பி வைத்தான்.

அர்ச்சனைத்  தட்டு  வைத்திருப்பவரெல்லாம் வலது பக்கம்,  மற்றவர்கள் இடது பக்கம் என்று வரிசைப்படுத்துகிறார்கள் என்று  பாண்டியன் தெரிந்து கொண்டான்.

"அல்லாரும் அர்ச்ச்சனை சீட்டை எடுத்து தெரியற மாதிரி தட்லே வைச்சிக்க.." என்று அடுத்த உத்தரவு மீசைக்காரனிடமிருந்து வந்தது.

பாண்டியன் சீட்டை எடுத்து தட்டில் வைத்து அது ஃபேன் காற்றில்  பறந்து போய் விடாமல் இருக்க வாழைப்பழத்தை எடுத்து வெயிட்  போல வைத்தான்.  க்யூ மெதுவாக நகர்ந்தது.  இரண்டு பக்கமும் வரிசையில் வருவோரைப்  பிரித்து அனுப்புவதால்  நெரிசல் இல்லாமல் இருந்தது.

அந்த மீசைக்காரனுக்கு வெகு அருகில் பாண்டியன் வந்து விட்டான். அவன் கையில் இருக்கும் அர்ச்சனைத் தட்டை மீசைக்காரனும் பார்த்து விட்டான்.

"இப்படி வாப்பா.." என்று பாண்டியனின் தோளில் கை வைக்கிற மாதிரி பின்னுக்கு இழுத்தான்.   அப்படி இழுபட்டதும் பாண்டியனுக்கு 'ஜிவ்' என்று கோபம் தலைக்கேறியது.  இருந்தாலும் கோயிலில் ரசாபாசம் வேண்டாம் என்று சிரமப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டான்.

"அர்ச்சனையெல்லாம் இந்தப்  பக்கம் நிற்கணும்;   தெரிஞ்சதா?" என்று  பாண்டியன்  ஏதோ செய்யாத தவறைச் செய்து விட்டது போல உறுமினான்.  அவன் உறுமல்  இறை சன்னிதானத்து அந்த சூழலுக்கு சம்பந்தபடாதவாறு  இருந்தது.  அவன் அனுமதிக்குப் பிறகு தான் சந்நதிக்கு உள்பக்கமே செல்லலாம் போலிருந்தது.

ஆனால் அதைப்  பற்றி யாரும் அசூயை  கொண்டதாகத் தெரியவில்லை.
கோயில் குருக்கள் பாட்டுக்க ஒரு பக்கம் மந்திர உச்சாடனம் பண்ணிக் கொண்டிருக்க  இன்னொரு பக்கம்  ஜனக்கூட்டம் பக்திப் பரவசத்துடன் இறைவனைத் தொழுது  கொண்டிருக்க பாண்டியன் அந்த மீசைக்காரனைப் பொருட்படுத்தாமல் விலகி  இறைவன் பார்வையில் படும்படி நின்று கொண்டான்.

ஆடலரசனின் ஆனந்த தாண்டவ கோலம் மனசுக்கு ரம்யமாக இருந்தது.   பாண்டியன் கைதொழுது இறைவனை இறைஞ்சித் தொழுதான்.

"அர்ச்சனை தானே?  சங்கல்பம் பண்ணிக்கிறீங்களா?" என்று தனக்கு மிக அருகில் கேட்ட குரலால்  பாண்டியன் சட்டென்று  சிந்தனை கலைந்து திரும்பினான். சட்டென்று தன் கையிலிருந்த அர்ச்சனைத் தட்டை குருக்கள் பக்கம் நீட்டினான்.  குருக்கள் கேட்டு, கோத்திரம், நட்சத்திரம், பெயர் என்று சொல்லி,  மங்கைக்கும் அவற்றைச் சொன்னான்.   அவனிடமிருந்து தட்டை வாங்கிக் கொண்டு அர்ச்சகர் அடுத்த அர்ச்சனைக்காரர் பக்கம் நகர்ந்தார்.

அன்றைக்கு இறைவனுக்குப் பிரமாதமான  அலங்காரம் செய்திருந்தார்கள்.    அர்ச்சகர் தீபாரதனை காட்டும் பொழுது  மனமுருக பிரார்த்தித்துக் கொண்டான்.   அர்ச்சனைத் தட்டு  கைக்கு வந்ததும் ரொம்ப நேரம் சந்நதியில் நிற்க முடியவில்லை.   மீசைக்காரன் வெளிக் கூட்டத்தை உள்ளே பத்து பத்து பேராக அனுப்பிக் கொண்டேயிருந்தான்.

எப்பொழுதுமே நெரிசல் பிடிக்காது பாண்டியனுக்கு.   கூட்டம் நெருக்கஆரம்பிக்கவே நிமிர்ந்து இறைவனின் முக விலாசத்தை நெஞ்சுக்குள் நிரப்பிக் கொள்கிற மாதிரி உள்வாங்கிக் கொண்டு  இரு கரம் கூப்பித் தொழுது  சந்நதியின் பக்க வாசல் வழியாக வெளியே வந்தான் பாண்டியன்.

சந்நதியைச் சுற்றிக் கொண்டு வர எத்தனிக்கையில்,  இந்தக் கோடிக்கு  அந்தக் கோடி நீண்டிருந்த பிராகாரத்தில் வரிசையாக  அறுபத்து மூவர் சிலைகளை பிரதிஷ்டை பண்ணியிருந்தார்கள்.   அறுபத்து மூவர் ஒவ்வொருவருக்கும்  எண்ணை முழுக்காட்டி,  வஸ்திரம் சுற்றி, பூ சாத்தியிருந்தார்கள்.

சற்று தூரத்திலிருந்து வரிசைக் கட்டி நின்றிருந்த சிலைகளைப் பார்க்கும் பொழுது அவனறியாமலேயே  திடுதிப்பென்று ஒரு எண்ணம் மனசில் தோன்றி 'இப்படிச் செய்கிறாயா?' என்று உள்மனம் அவனிடம் கேட்கிற உணர்வில் திகைத்தான் பாண்டியன்.

'நீ என்ன செய்கிறாய் என்றால்,  கண்ணை மூடிக்கொண்டு நேராக அறுபத்து மூவர் சிலைகள் இருக்கும் இடத்திற்குப்  போய்  அந்த சிலைகளில் யார் சிலை முன்னாவது நில்.  யார் சிலை முன் நீ நின்றிருக்கிறாயோ அவராகத் தான் சென்ற பிறப்பில் நீ இருந்தாய்.  சோதித்துப் பார்த்துக் கொள்' என்று உள்மனம் அவனிடம் கிசுகிசுத்தது.  அதைத் தொடர்ந்து பாண்டியனின் தேகம் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு முறை  சிலிர்த்து அடங்கியது.

அடுத்த வினாடியே பாண்டியன்  தீர்மானித்து விட்டான்.

உத்தேசமாக அந்த பிராகார எதிர் சுவர் நீள பிரதிஷ்டை பண்ணியிருக்கும் சிலைகளைப் பார்த்துக் கொண்டான்.  குத்து மதிப்பாக அவன் நின்றிருக்கும் இடத்திலிருந்து எத்தனை தப்படி வைத்தால்  சிலைகள் இருக்குமிடத்தில் சரியாகப் போய் நிற்கலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டான்.

பிராகார வெளியில் யாருமில்லை.  அந்த வெறிச்சோடல் அவனுக்கு செளகரியமாக இருந்தது   விழி இமைகளை இறுக மூடிக் கொண்டான்.

மனசுக்குள் சிலைகள் இருக்குமிடத்தை உத்தேசமாகக் கணக்குப் போட்டு ஒவ்வொரு தப்படியாக எடுத்து வைத்தான்.

பாண்டியன்  அறுபத்து மூவர் சிலைகள் இருக்குமிடத்தை நோக்கி கண்களை மூடிக் கொண்டே முன்னேறி,  காலடி கணக்கு முடிந்ததும் சட்டென்று நின்றான்.

போன ஜென்மத்தில்,   யார் சிலை முன் இப்பொழுது நிற்கிறமோ அவராகத் தான் தான் இருந்திருப்போம் என்ற எண்ணம் அவன் மனசு பூராவும் வியாபித்தது.

அது யார் சிலை என்று அறிந்து கொள்ளும் பதட்டம் இன்றியே பாண்டியன் நிதானமாகக் கண்களைத் திறந்தான்.

Tuesday, December 19, 2017

இது ஒரு தொடர்கதை

                                                அத்தியாயம்--3

"காளியண்ணன் இல்லியா?" என்று கடைக்காரரைப்  பார்த்துக் கேட்டான் பாண்டியன்.

அவர் பதிலே பேசவில்லை.. வியாபாரத்தில் மும்முரமாக இருந்தார்.  கடைக்கு முன் நிற்பவர் கேட்டதை எடுத்துக் கொடுத்து விலை சொல்ல,  அவர் கொடுக்கும் காசை வாங்கிக் கல்லாப் பெட்டியில் போடுவதற்கே அவருக்கு நேரம் சரியாக இருந்தது.

இவனைப் போல நின்றிருந்த நாலைந்து பேர் இரண்டாகக் குறைய, "காளியண்ணன்,  இல்லியா?" என்று அவரை மீண்டும் கேட்டான் பாண்டியன்.

இப்பொழுதும் அவர் எதுவும் சொல்லவில்லை.  அந்த இரண்டு பேர் கேட்டதையும் எடுத்துக் கொடுத்து காசு வாங்கிப் போட்டுக் கொண்டு  இவன் பக்கம் திரும்பினார்.  "உனக்கென்னப்பா, வேணும்?"

"காளியண்ணன் இல்லியா?" என்றான்.                       

"அதான் இல்லேன்னு தெரியுதில்லே.. அதையே ஏன் கேட்டுத் தொணப்பிகிட்டு  இருக்கே..  என்ன வேணும், சொல்லு.." என்று அவசரப்படுத்தினார் அவர்.

"அர்ச்சனைத் தட்டு வேணும்.."

"அதுக்குத்தான் இம்புட்டு நேரம் நின்னியா?.. அப்பவே கேட்டிருந்தா எடுத்துக் கொடுத்திருப்பேன், இல்லியா?" என்று அவர் தன் பின்பக்கம் திரும்பி தேங்காய் ஒன்றை எடுத்து சோதித்துப் பார்த்து முன்னால் இருந்த தட்டில் வைத்தார்.  வெற்றிலை, பாக்கு, பழம், பூ, ஊதுபத்தி, கற்பூர வில்லை பாக்கெட் எல்லாம் ஏற்கனவே அதில் வைக்கப்  பட்டிருந்தது.

"எவ்வளவு தரணும்?.."

"எழுபது ரூபா.."

வில்வ இலை வாங்கிக்கச் சொல்லி மங்கை சொன்னது திடுக்கென்று ஞாபகத்திற்கு வந்தது.  "கொஞ்சம் வில்வமும் வைச்சிடுங்கங்க.."

"வில்வம் பத்து ரூபா.." என்று கொஞ்சம் வில்வ இலைகளை சின்ன பிளாஸ்டிக் பையில் இட்டு அர்ச்சனைத் தட்டில் வைத்தார் கடைக்காரர்.  பிறகு பிரம்புத்  தட்டில் இருந்தவற்றை எடுத்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு நீட்டினார்.

"அர்ச்சனைத் தட்டிலேயே கொடுங்களேன்.  பழம் நசுங்காமல் செளகரியமாக இருக்கும். தரிசனம் முடிந்து திரும்பும் பொழுது தட்டைத் திருப்பித் தந்து விடுகிறேன்.." என்றான்  பாண்டியன்.

"அப்படித்தான் அல்லாரும் சொல்றாங்க.. ஆனா தட்டைத் திருப்பித் தராம எடுத்திட்டுப் போயிடாறாங்க..  அதனாலே தான் இப்படி.." என்றவர்,  "எண்பது ரூபா ஆச்சு.. ஜல்தியா கொடுப்பா.. கூட்டம் வருகிற நேரம்.." என்று கடைக்காரர் அவசரப்படுத்தினார்.

கடைக்காரரின் காரியார்த்தமான நடவடிக்கைகள் பாண்டியனுக்கு எரிச்சலை ஊட்டியது.  காளியண்ணன் இருந்திருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கும்.  பையை வாங்கிக் கொண்டான்.

ஒரு நூறு ரூபா நோட்டை எடுத்துக் கொடுத்தபடியே, "காளியண்ணன் இல்லியா?" என்று கேட்டான் பாண்டியன்.

அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல், "எண்பது  ரூபா. சில்லரையா இல்லியா?" என்றார் கடைக்காரர்.

"இல்லை.."

"எல்லாரும்  இப்படி நூறு, ஐநூறுன்னு கொடுத்தா நா சில்லரைக்கு எங்கணே போவது?.." என்று சலித்தபடி கல்லாபெட்டியிலிருந்து  இருபது ரூபா எடுத்துக் கொடுத்தார்.

"காளியண்ணன் இல்லியா?"

"தம்பி சாமான் வாங்கப் போயிருக்கான்.. இன்னும் திரும்பலே.."

"ஓ.. அப்படியா?" என்றான்பாண்டியன்.

'நீங்க யாரு?'ன்னு கடைக்காரர் கேட்டிருந்தால் சொல்லியிருப்பான். அவர் கேட்காத பட்சத்தில் தான் யார் என்று சொல்வது அனாவசியம் என்று அர்ச்சனைத் தட்டை எடுத்துக் கொண்டு  கிளம்பினான்.

இரண்டு தப்படி நடந்தவுடன் தான் மங்கை ' ஜோட்டை அண்ணன் கடையிலேயே விட்டுடங்க' என்று சொன்னது நினைப்புக்கு வந்தது.  சட்டென்று திரும்பி கடைக்கு பக்கத்து சார்பில் ஓரடி அளவுக்கு இடம் ஒதுக்கி தட்டி வைத்துத் தடுத்திருந்த பகுதியில் செருப்புகளை விட்டான்.

கடைக்காரர் பக்கம் திரும்பி, "அண்ணே.. கால் ஜோடுகளை இங்கணே விட்டிருக்கேன்.." என்று  அறிவிப்பும் கொடுத்து வைத்தான்.

"விடுங்க.. விடுங்க..  அல்லாரும் அங்கணே தான் விடுறாங்க.. நான் இருக்கற பிஸிலே அந்தப் பக்கமே என் கண் போகாது..  திரும்பி வரும் போது ஜோடுகள் இருந்தா இறைவனுக்கு நன்றி சொல்லிட்டுப் போட்டுட்டுப்  போங்க.." என்றார் கடைக்காரர்.

இவ்வளவு விட்டேற்றியாக அவன்  பேசுவது கண்டு பாண்டியனுக்கு எரிச்சல் தான் வந்தது.  இருந்தாலும் வேறே வழியின்றி அடக்கிக் கொண்டு தன் செருப்புகளை தட்டி இடுக்கில் கொஞ்சம் உள்பக்கமாகத் தள்ளி விட்டு விட்டு ரோடுப் பக்கம் வந்தான்.

கோயிலுக்கு வரும் கூட்டம் என்றாலும்  இளசு பெரிசு என்றும் எல்லாம் கலந்து ஜிகுஜிகுவென்று இருந்தது.   இளம் நங்கைகள் சிரித்துக்  குலுங்கி அரட்டை அடித்துக் கொண்டு வந்தார்கள்.  அவர்களைத் தொடர்ந்து பின்னால் கண்காணிப்புடன் வருவது போலப் பெரியவர்கள்.  அந்தக் கூட்டத்தில் பாண்டியனும் சேர்ந்து கொண்டான்.

உள்ளுக்குப் போனதும் துவஜ ஸ்தம்பத்தைத் தாண்டி நீண்ட க்யூ.  அந்த நீண்ட வரிசையில் தன்னையும்  இணைத்துக் கொண்டான் பாண்டியன்.  அவனுக்கு முன்னால் ஒரு பெரியவர்.  அவனுக்குப் பின்னால் ஒரு இளம் பெண் வரிசையில் சேர்ந்து கொண்டாள்.

வரிசை நீண்டிருந்தாலும் வேகமாக நகர்வது போலிருந்தது.   துவஜ ஸ்தம்பத்திற்கு பக்கத்தில் போனதும் முன்னால் நடப்பதை நன்கு பார்க்க முடிந்தது.  கோயில் காவலாளி போன்ற டவாலி அணிந்த ஒரு சேவகன் பத்து பத்து பேராக உள்ளே விடுவது தெரிந்தது.

பாண்டியனுக்கு முன்னால் நின்றிருந்த பெரியவர் "சீட்டை எங்கானும் விட்டுடாதே.  பழத்தின்  கீழே வைச்சுக்க..." என்று தன் முன்னால் நின்றிருந்த ஆளிடம் சொன்ன பொழுது தான் 'உள்ளே போனதும் சீட்டை வாங்கிக்கங்க. சீட்டில்லாம அர்ச்சனை கிடையாது..' என்று மங்கை சொன்னது நினைவுக்கு வந்தது.


(வளரும்)


Friday, December 15, 2017

இது ஒரு தொடர்கதை...

 அத்தியாயம்-- இரண்டு


சிரியர் அறையிலிருந்து புன்முறுவலுடன் வந்த ஜீ அன்போடு மோகனின் தோளைத் தொட்டார்.  "கதையின் ஆரம்பம் ஆசிரியருக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது.  தொடரச் சொன்னார்.  சில குறிப்புகளும் கொடுத்திருக்கிறார்" என்று  ஜீ   அலுவலக குறிப்பு  நோட்டுப் புத்தகத்தைப்  பிரித்து வைத்துக் கொண்டார்.


 "நீங்க மொதமொதலா எழுதற தொடர்.. அதனாலே ஒரு நாலு இல்லேனா ஆறு வாரத்துக்கு வர்றதா எழுதிடுங்க.  அடுத்த அத்தியாயமும் பிரசுரத்திற்கு முன்னாலேயே ஆசிரியர் பாக்கணும்ன்னார்.  பாத்திட்டு டிஸ்கஸ் பண்ணனும்னார்.  உங்களுக்கு ஒரு புனைப்பெயர் தேவைப்படுமோன்னு நான் தான் அபிப்ராயப்பட்டேன்.  ஆசிரியர் அதெல்லாம் வேணான்னார்.. மோகன்ங்கற பேர்லேயே பிரசுரிப்போம்ன்னுட்டார்" என்று ஜீ சொன்னார்.         

\அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் மோகனுக்குத் தித்திதது.  "ரொம்ப நன்றி, சார்.." என்று தழுதழுத்தான்.       

ஆறரை லட்சம் விற்கும் அந்தப் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் ஜீயை நிமிர்ந்து பார்த்தான் மோகன்.  அவரின் பெயர் என்ன என்று கூட அவனுக்குத் தெரியாது.  இவர் தான் இவன்  வீட்டிற்கு வந்து ஆசிரியர் உங்களைப் பார்க்கணும்ன்னார் என்று  அழைத்து வந்தார்.  இங்கு வந்து வேலையில்  சேர்ந்த ஒரு வார அனுபவத்தில் எல்லோருமே மரியாதைக்காகவோ என்னவோ பொறுப்பாசிரியரை ஜீ என்று கூப்பிடுவதால், மோகனுக்கும் அவர் ஜீ ஆனார்.

"புனைப்பெயர் வைச்சிக்கறது ஒரு காலத்லே மவுஸா இருந்தது.  அதனாலே வைச்சிண்டாங்க.  பெண்டாட்டி பேரைப் போட்டு இன்னாரோட மணாளன்னு தன்னை அடையாளப்படுத்திண்டாங்க.  அப்புறம் மனைவி பேர்லே ஒளிஞ்சிண்டு எழுதினாங்க.  பெண் எழுதற மாதிரி இருந்தா சில செளகரியங்கள் இருந்தது...  அதுக்காக அது.  ஆனா, உங்களுக்குப் புனைப்பெயர் வேண்டாம்ன்னு ஆசிரியர் சொன்னதற்கு காரணமே வேறே.." என்ற ஜீ பொடி டப்பாவை எடுத்துத்தட்டி சிமிட்டா எடுத்து உபயோகித்து நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தார். கர்சீப் எடுத்து கண்களையும் சேர்த்துத் துடைத்துக்  கொண்டார்.

உற்சாகமாய் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மோகன் பவ்யமாக ஜீயைப் பார்த்தான்.

"ஆசிரியர் என்னவோ இந்தப் பெயர் சமாச்சாரமெல்லாம் விஷயமே இல்லேங்கறார்.   மோகனுக்கு ஒரு புனைப்பெயர் முக்கியம்ங்கறதை விட அவர் எழுதறது எந்தவிதத்திலேயாவது வாசகர்கள் மனசிலே படியற மாதிரி இருக்கறது அதைவிட முக்கியம்ன்னார்.  கதையோ கட்டுரையோ தலைப்பைப் பாத்து மேட்டரை படிக்கறவங்களை, படிச்சு முடிச்சதும் யார் எழுதியிருக்காங்கன்னு எழுதினவங்க பேரைப் பாக்க வைக்கணும்.  அதான் முக்கியம்ங்கறார். ஏன் மோகன்ங்கறதே புனைப்பெயரா இருக்கக் கூடாதான்னு அவர் கேட்டப்போ எனக்கு எங்கே மூஞ்சியை வைச்சிக்கறது ன்னு தெரிலே." என்று ஜீ நாணமுற்றார்.  சிவந்த முகத்தில் பெண்பிள்ளை ஒருத்தி நிழலாக மோகனுக்குத் தெரிந்தாள்..

"நம்ம ஆசிரியர் இந்தத் துறைலே ரொம்பவும் அனுபவஸ்தர் மோகன்.. ஒண்ணு செஞ்சு முடிக்கணும்ன்னு நெனைச்சிட்டார்னா, பின்வாங்கவே மாட்டார். இப்ப அவர் செஞ்சு முடிக்கணும்ன்னு நெனைச்சிருக்கறது என்ன தெரியுமா?"

"சொல்லுங்க, சார்.."  என்றான் மோகன்.                                                                                   

"எழுத்துன்னா உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கணுங்கறது அவரோட கட்சி.  எதையும் செயல்படுத்தறதுக்கு அப்படி செயல்படுத்தறத்துக்கான உணர்வு வேணும்ன்னு அடிக்கடி சொல்வார்.  எழுதணும்ன்னு உணர்வு வந்தாத்தான்-- அதை தினவெடுத்தாத்தான்ம்பார் அவர்--  எழுதவே வரும்பார்.  படிக்கறவனையும் எழுதறவனையும் ஆட்டிப்படைச்ச அந்த  எழுத்தை இப்போ பாக்கவே முடியலேங்கறது அவரோட வருத்தம்.  எல்லாத்திலேயும்  ஒரு  செயற்கைதன்மை வந்திடுச்சுன்னு நினைக்கிறார்.  அதை நம்ம 'மனவாசம்' பத்திரிகையிலாவது மாத்திக் காட்டணும்ன்னு வீம்பா இருக்கார்...   திடீரென்று நினைத்துக் கொண்டவர் போல, ' அது என்ன பத்திரிகை?.. 'அஆஉஊஎஏ' தானே?..'ன்னு
ஆசிரியர் ஒரு நாள் என்னைக் கேட்டார்.  எந்த
ஒரு சிறுபத்திரிகையையும் ஆசிரியர் படிக்காம விடறதில்லே.  அந்த பத்திரிகைலே உன் கதை ஒண்ணைப் படிச்சிட்டு, 'அருமைப்பா'ன்னு நாள் பூரா சொல்லிண்டு இருந்தார்.  'கதைன்னா இது கதை!படிச்சுப்பாருங்க'ன்னு ஒரு சர்க்குலர் இணைச்சு இந்த பத்திரிகை ஆபீஸ் சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் படிச்சுப்பாக்க உன் கதையை ஒரு அஸ்வமேதக் குதிரை மாதிரி இந்த ஆபீஸ் பூரா அனுப்பிச்சு வைச்சார். என்ன நெனைச்சிண்டிருந்தாரோ, சாயந்தரம்,
என்னைக்கூப்பிட்டார்.  'அந்த மோகன் அட்ரஸ் தெரிஞ்சி வைச்சிங்கங்க.. நம்ம பத்திரிகைலே அவர் எழுதினா தேவலை'ன்னார்.  அதுக்கப்புறம் தான் நா உங்க வீட்டுக்கு வந்தது, நீங்க இங்க உதவி ஆசிரியராய் இருக்க ஒப்புத்துண்டது, எல்லாம்" என்று ஜீ விவரித்தை மந்தஹாச உணர்வுடன் மோகன்  கவனித்துக் கொண்டான். அந்த ஷணமே, எழுதக்கூடிய எதுவும் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும் என்கிற எழுத்துக்கலையின் பாலபாடத்தை மனசில் குறித்துக் கொண்டான்.

இரண்டு ரூம்களை இணைத்த மாதிரி இருபதுக்கு இருபது தேறுகிறமாதிரி அந்த அறை விசாலமாக இருந்தது.  நடுமத்தியில் பொறுப்பாசிரியர் ஜீயின் டேபிள். இந்த பக்கம் மூன்று பேர், அந்தப் பக்கம் மூன்று பேர் என்று துணை ஆசிரியர் உதவி ஆசிரியர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.  வலப்பக்க மூலையில் சின்ன டேபிளும் அமர்ந்து பேசுவதற்கு செளகரியமாக் நாற்காலியும்  போடப்பட்டு தொலைபேசி இணைப்பு.   அதைத் தவிர பொறுப்பாசிரியர் டேபிள் மீது  செக்க செவேலென்று ஒரு தொலைபேசி. நிருபர்களுக்கும் ஆர்ட்டிஸ்டுகளுக்கும் அறைகள் தனித்தனியாக இன்னொரு பக்கம் தடுப்புச்சுவர் தாண்டி இருந்தது.

இந்த அறைக்கு எதிர் அறை ஆசிரியரின் அறை.  கதவுக்கு  சல்லாத்துணி போடப்பட்டிருந்தாலும் ஆசிரியர் உள்ளே இருந்தாலும் சரி, இல்லேனாலும் சரி அவர் அறைக்கதவுகள் அலுவலக நேரத்தில் எந்நேரமும் திறந்தே இருக்கும். அறை மேல் ஜன்னல் வழியாக ஸீலிங் ஃபேன் சுற்றிக்கொண்டிருப்பது தெரிந்தால் ஆசிரியர் உள்ளே தான் இருக்கிறார் என்று அர்த்தம் என்று தெரிந்து கொண்டிருந்தான் மோகன்.  பொறுப்பாசிரியர் ஜீ  மட்டும் அழைப்பு வந்தால் ஆசிரியர் அறையின் உள்ளே சென்று வருவதைப் பார்த்தான்.  மற்றபடி அவரவர் வேலைகளை பொறுப்பு கலந்த அமைதியுடன் அவரவர் பார்த்து வருவது தெரிந்தது.

இந்த பத்திரிகை ஆபீஸில் வேலைக்குச் சேர்ந்த இரண்டே நாட்களில் மோகன் எல்லா பகுதிகளுக்கும் சென்று எல்லோரிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.  இதுவே அந்த பத்திரிகை அலுவலகத்தை பொறுத்த மட்டில்  புதுமையாக இருந்தது.  புதுசாக பத்திரிகையில்  சேர்ந்திருக்கிற உதவி ஆசிரியர் என்கிற அளவில் எல்லோருக்கும் அவனை தெரிந்திருந்தது.

எதையோ சரி பார்த்துக் கொண்டிருந்த ஜீ சடக்கென்று அவன் பக்கம் திரும்பி, "அது சரி, மோகன்.. ஏன் அந்த பாண்டியனை கோயிலுக்கு அனுப்பிச்சே?  பீச்சு, மால்ன்னு எத்தனை இல்லை?.. அதுக்காகக் கேட்டேன்.." என்று கேட்ட பொழுது தன் புதுத்தொடரின் முதல் அத்தியாயத்தைப் பற்றியே அவர் நினைத்துக் கொண்டிருப்பது தெரிந்து பெருமையாக இருந்தது.

"கதையோட அடுத்த மூவ் கோயில் தானே சார்?.. அங்கே நடக்கறது தானே அடுத்தாப்லே சொல்ல  வேண்டிய விஷயம்?   அதுக்காக அவன் அங்கே போயாகணுமில்லியா? அதுக்காகத் தான் கோயில்" என்றான்.

"என்னவோப்பா.  இந்தக் காலத்லே இளவயசு அதுவும் கல்யாணமான ஆம்பளைகள்லாம் சாமிக்கு அர்ச்சனை செய்யணும்ன்னு மனைவியை விட்டுட்டு தனியா கோயிலுக்குப் போய் பாத்ததில்லைப்பா. அதான்..."

"ஏன் பாண்டியன் தனியாப் போனான்ங்கறதுக்குக்  காரணம் சொல்லியிருக்கேனே,  சார்."

"யாரு இல்லேனா?.. சொல்லியிருக்கே, சரி.  என்னவோ எனக்கு சமாதானம் ஆகலே.  என்னையே எடுத்துக்கோ.. என் வீட்லேலாம் இந்த பூஜை, புனஸ்காரம் எல்லாம் அவ தான்.  பூஜை அறைலேந்து மணி சப்தம் கேக்கறச்சேயே முடிஞ்சிருச்சுன்னு சிக்னல் கிடைச்சு வேகமாப் போய் ஒரு கும்பிடு போட்டுட்டு தீபாராதனை அணையறத்துக்குள்ளே கண்லே ஒத்திக்கறதோட சரி.  அப்புறம் எப்போடா தட்டை அலம்பிப் போடப்போறான்னு இருக்கும்.   அதான் எனக்குப் புதுசா இருக்கு போல இருக்கு.."

அவர் சொன்னதைக் கேட்டு சிரித்தே விட்டான் மோகன். "சார் ஒண்ணு தெரியுமா?  பாண்டியன் அதிர்ஷ்டக்கட்டை சார்.  மங்கை தான், பாண்டியன். பாண்டியன்  தான்  மங்கைன்ன்னு அம்சமா அமைஞ்ச ஜோடி சார்..  வெளிக்குத் தான் மங்கை பாண்டியனைக்  கோயிலுக்குத் தனியா அனுப்பிச்சாளே தவிர அவ மனசும் அவனோடு நிச்சயமா கைகோர்த்துப் போயிருக்கும். இவனுக்கும் மங்கை இல்லேனா அத்தனையும் அப்படியே ஸ்டாண்ட் ஸ்டிலாயிடும்.  தெரிஞ்சிக்கங்க.. வர்ற அத்தியாயங்கள்லே ரெண்டு பேரையும் படிக்கறவங்க மனசிலே படிய மாதிரி படம் பிடிச்சுக் காட்டிடலாம், சார்.." என்று சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.


"குட்.  அதான் வேணும்.  நீ சொல்றத்தையே செஞ்சிட்ட மாதிரி இருக்கு.  அப்புறம் இன்னொண்ணு.  சொந்த அனுபத்தையெல்லாம் தூர எடுத்து  ஒதுக்கி வைச்சிடாதே.  அதெல்லாத்தையும் தூசி தட்டி எடுத்து உன் கதைங்கள்லே கரைச்சிடு.  எதுக்குச் சொல்ல வர்றேன்னா, இந்த எழுதற பொழைப்பு தான் நமக்கு எல்லாத்துக்கும்  கிடைச்ச வடிகால்.  மனசிலே தேக்கி வைச்சிண்டேயிருக்கிற அணை ஒடைஞ்சா  ஆபத்தாயிடும். தெரிஞ்சிக்கோ.." என்றார் ஜீ. அவர் சொன்ன தோரணையும் வார்த்தைகளில் கொடுத்த அழுத்தமும் உணர்ந்து  சொல்கிற மாதிரி இருந்தது.

'கோயிலுக்கு போற வழிலே கிளி ஜோசியனைப் பார்த்தது,  கூண்டுக்கிளியைப் பாத்து பரிதவித்தது, கதையில் நிகழ்ச்சியாக்குவதற்காகவே அவ்வளவு நேரம் உட்கார்ந்து உள் வாங்கிண்டது.. எல்லாம் நான் தான் சார்!' என்கிற நினைப்பு மோகன் மனசுக்குள்ளேயே புதைந்தது.

திடீரென்று ஒரு  உந்துதல்.   இந்த வேகத்திலேயே அடுத்த அத்தியாயம் எழுத வேண்டுமென்ற---- ஆசிரியர் சொல்வாராமே, அந்த தினவு----  மனசைப் பற்றியதும்,  மோகன் ரைட்டிங் பேடை எடுத்தான். அதில் பேப்பரைக் கோர்த்து,  'காளியண்ணன் கடையில் இல்லை..'  என்று அடுத்த அத்தியாயத்தின் முதல் வரியை எழுதும் போது,  "சாரி டு டிஸ்டர்ப் சார்.." என்ற குரல் அருகில் கேட்டது..

"காலம்பறயே ஜீ சொல்லிட்டார்... மத்த வேலையெல்லாம் முடிச்சிட்டு வர நாழி ஆயிடுத்து..." என்றவாறே அந்த பத்திரிகையின் ஆஸ்தான சித்திரக்காரர் ஹரி,   மோகனின் எதிரில் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார்.

"அடடா!.. சொல்லி அனுப்பியிருந்தா நானே வந்திருப்பேனே.." என்ற மோகன் அத்தனை புகழ்பெற்ற ஓவியர் தன் இருக்கை தேடி வந்திருக்காரே என்று துணுக்குற்று சொன்னான்.

"அதான் வந்திட்டேனே.." என்றார் ஹரி. "ஐ நோ.. எழுத்துங்கறது தவம்.  நிஷ்டைலே இருந்து கற்பனையை கொழுந்து விட்டு எரியச் செய்யற யாகம்ன்னு நம்ம ஆசிரியர் சொல்வார்.." என்று அவர் சொல்கையிலேயே 'என்ன, இது? சொல்லிக் கொடுத்தாற் போல அத்தனை பேரும் ஆசிரியர் புகழ் பாடுறாங்களே, இனிமே நாமும் இப்படித் தான் இங்கே பேசக் கற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கு.." என்று நினைத்துக் கொண்டான் மோகன்.

"நான் வந்த வேலை என்னன்னா, சார்.." என்று ஆரம்பித்தார் ஹரி.  அவ்வளவு பெயரும் புகழும் பெற்ற அந்தப் பெரியவர் தன்னை சார் போட்டு அழைப்பது அநியாயமாக இருந்தது மோகனுக்கு.  "சார், நான் ரொம்ப சின்னவன். என்னை என்  பெயர் சொல்லிக் கூப்பிட்டால் தான் எனக்கு சங்கடமில்லாமல் இருக்கும்" என்றான்.

"அதெல்லாம் போகப்போக வந்திடும், மோகன்.  இப்போ எதுக்கு வந்தேன்னா.. உங்க 'இது ஒரு தொடர்கதை..' தொடரின் முதல் அத்தியாயம் ஃபுரூப் படிச்சிட்டேன்.  நன்னா வந்திருக்கு.  இந்த அத்தியாயத்திற்கு எந்தக் காட்சியை ஓவியமா வரைஞ்சா சிறப்பா இருக்கும்ங்கறதை  உங்க கிட்டே கேட்டுட்டுப் போகலாம்ங்கறத்து க்காக வந்தேன்.." என்று அவர் சொன்னதும் திகைப்பாய் இருந்தது மோகனுக்கு.

அவன் முக ஆச்சரியத்தைப் பார்த்து விட்டு ஹரி சொன்னார். "மோகன்! ஆசிரியர் இந்த விஷயத்திலே கண்டிப்பா சொல்லியிருக்கார்.  எழுதறவங்களு க்குத் தான் அவங்களோட கேரக்டர் அருமை தெரியும்.  அதனாலே அவங்க சாய்ஸ் என்னவோ அதை அவங்க விரும்பற மாதிரி போட்டுக் குடுங்கோ'ன்னு.  ரொம்ப காலமா இந்த பத்திரிகைலே அதான் வழக்கமா நடந்திண்டு வந்திருக்கு.  சில பிரபல எழுத்தாளர்கள் அவங்க அனுப்பற மேட்டரோடையே சித்திரத்திற்கான காட்சியையும் சொல்லிடுவாங்க.  சில பேர்கிட்டே கேட்டுப் போடறதும் உண்டு. இதான் விஷயம்.  நீங்க நம்ம பத்திரிகையோட உதவி ஆசிரியர்.  உங்ககிட்டே கேக்காம நானே என் இஷ்டத்துக்கு ஒரு படத்தைப் போடக் கூடாது. கேட்டுத்தான் செய்யணும்.  அப்படி செய்யலேன்னு தெரிஞ்சா ஆசிரியர் வருத்தப்படுவார்.  அதுக்காகத் தான் வந்தேன்.." என்றார்.

இந்த பத்திரிகை ஆசிரியர் எப்படியெல்லாம் யோசித்து செயல்படுகிறார் என்பதை நினைத்துப் பார்க்க மோகனுக்கு ஆச்சரியமாக இருந்தது.  இங்கு வேலை செய்வோர் அத்தனை பேரும் அவர் புகழ்பாடுவதின் அர்த்தமும் விளங்கியது.  இந்தப் பத்திரிகையின் ஆறரை இலட்ச விற்பனைக்கான மூலதனமும் இதன் ஆசிரியரின் அனுபவத் திறமை தான்னு தெரிந்தது.

"நீங்க பத்திரிகை அனுபவம் வாய்ந்தவங்க.. இந்தப் பத்திரிகையோட வாசகர்கள் எதை விரும்புவாங்கங்கறது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.  அதனாலே இந்த 'இது ஒரு தொடர்கதை' தொடரோட முதல் அத்தியாய எந்த காட்சிக்கு ஓவியம் வரைந்தால் நன்றாகவும் இருக்கும், வாசகர்களுக்கும் பிடிக்கும்ன்னு நீங்க நினைக்கிறீங்க?" என்று அவரிடமே புன்முறுவலுடன் கேட்டான் மோகன்.
                                                                                                               
"அப்படி நான் நினைக்கிற காட்சி எது தெரியுமா, மோகன்?" என்று லேசாக சிரித்தபடி அவனைப் பார்த்தார் ஹரி.  "அந்தப் பாண்டியன் குனிஞ்சு
கூண்டுக் கிளிக்கு 'பை..' சொல்றானே, அந்தக் காட்சி தான்.. அந்தக் காட்சியை குளோசப்பில் காட்டி பின்புலமாய் கோயில் கோபுரத்தையும் அந்த இடத்து ஜனநெரிசலையும் வரைஞ்சா அற்புதமாக இருக்கும்.." என்றார்.

"ஓ.." என்று குஷியில் திளைத்தான் மோகன்."நான் என்ன நெனைச்சேனோ அதை அப்படியே நீங்க சொல்லியிருக்கீங்க, ஹரி சார்... நம்ம ரசனை எவ்வளவு ஒற்றுமையாக இருக்கு!"

"இதான் பத்திரிகை வாசக ரசனை..  பத்திரிகைள்லே வேலை செய்யறவங்களுக்கு தனிப்பட்ட ரசனைன்னு நிறைய இருக்கலாம்.  ஆனா பிரசுர சம்பந்தமான எதுக்கும் தனிப்பட்ட ரசனைகளை கொஞ்சம் ஒதுக்கி வைச்சிட்டு வாசக  ரசனையைத் தான் சுவீகாரம் எடுத்துக்கணும்ன்னு ஆசிரியர் சொல்வார்.  அந்த வாசக ரசனை தான் நம்ம ரெண்டு பேர் ரசனையும் ஒத்துப்போறதுக்குக் காரணமா அமைஞ்சிருக்கு.." என்றார் ஓவியர் ஹரி.

மோகனுக்கு  இயல்பாகவே புன்னகை உதட்டில் படிந்தது.  'சொந்த ரசனையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு வாசக ரசனைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கணும்ன்னு 'பத்திரிகை சம்பந்தப்பட்ட இரண்டாவது தாரக மந்திரத்தையும் மனசில் அடிக்கோடிட்டு எழுதிக் கொண்டான்.

" ஓ.கே. அந்தக் காட்சியையே ஃபைனலைஸ் பண்ணிடலாம். நான் வரைஞ்ச பிறகு உங்களுக்குக் காட்டறேன்.." என்றார் ஹரி.

"உங்களுக்கு இல்லை.. உனக்கு.." என்று திருத்தினான் மோகன்.

"ஓ.. சட்டுனு வரலே.. இன்னும் ரெண்டு மூணு நாள் ஆனா பழகத்துக்கு
வந்திடும்.." என்று புன்முறுவலுடன்  எழுந்தார் ஹரி.

மோகன்  மனசிற்கு நடப்பவை எல்லாம் இதமாக இருந்தது. பொதுவாக மனிதர்கள் எல்லோரும் எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான்.  திறமையான பத்திரிகை ஆசிரியர்,  தமிழக பத்திரிகை வாசகர்களின் ஏகோபித்த  கவனத்தைக் கவர்ந்திருக்கும் பத்திரிகை--  இந்த பத்திரிகை சூழ்நிலை அவனது தனிப்பட்ட வாழ்க்கை இடர்பாடுகளை  நிச்சயம் மறக்கச் செய்யும் என்று மனசில் தோன்றியது.

இந்த மனநிலையிலேயே அடுத்த அத்தியாயத்தை எழுதி விடலாமே என்கிற உத்வேகத்தில் ரைட்டிங் பேடை எடுத்தான் மோகன்.

எழுதி வைத்திருந்த முதல் வரிக்கு அடுத்து "காளியண்ணன், இல்லியா?" என்று எழுத ஆரம்பித்து நிஷ்டையில் ஆழ்ந்தான்.(தொடரும்)


Monday, December 11, 2017

இது ஒரு தொடர்கதை...

புதிய தொடர் ஆரம்பம்

அத்தியாயம் -- 1

ழமழவென்று மரத்தினால் இழைத்து சின்ன பெட்டி ஸைஸில் இருந்தது கூடு.  எல்லாப் பக்கமும் சுற்றி வெள்ளை வெளேர் தகடு அடிக்கப்பட்டு தூக்கிக் கொண்டு  செல்வதற்கு வாகாக மேல்பக்கம் வளையம் மாட்டி சின்ன சங்கிலி  கோக்கப்பட்டிருந்தது.  சிறைக் கம்பிகள் மாதிரி தகடில் சின்ன தடுப்புக் கம்பிகள்.  கம்பிக் கதவு திறக்க அது வழியாகத்  தான் அந்த பச்சைக் கிளி வெளிவந்து ஜோசியக்காரனிடம் சீட்டு எடுத்துக் கொடுத்து அந்த காரியத்திற்குக் கூலியாக அவன் தந்த நெல்மணியை சீட்டு கொடுத்த மூக்காலேயே வாங்கிச் சென்றது.

அது சீட்டு எடுத்துக் கொடுக்க வேண்டும், இவன் அந்த நொடியே நெல்மணி கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத ஒப்பந்தம்  போல நடந்து கொண்டிருந்தது.  வாலாயமாய்  நடைமுறையில் இருக்கும் இந்த ஒப்பந்தத்தை இருபக்கமும் இது வரை மீறினதாகத் தெரியவில்லை.  அதனால் வெளிக்குத் தெரியாத ஒரு அன்யோன்யம் இரு பகுதியிலும் இருப்பது தெரிந்தது.  உன்னை நம்பி நானும், என்னை நம்பி நீயும் என்பது மாதிரியான  ஒரு யதார்த்த பிடிப்பு.

ஈஸ்வரன் கோயில் தெருவில் கீழிறங்கி மேலேறிய மேம்பாலம் தாண்டித் திரும்பிய திருப்பத்தில் அந்த ஜோசியக்காரன் ஒரு ஒதுக்குப் புறமாக உட்கார்ந்திருந்தான். செம பிஸியான  ரோடு.  இருந்தும் இவனையும் இவன் கிளிக்கூண்டையும்  பார்த்த சிலர் இவனைத் தாண்டிப் போக மனமில்லாமல் விரித்திருந்த கோணியின் உட்கார்ந்து ஜோசிய தாகம் தீர்த்துக் கொண்டவர்களாகவே இருந்தனர்.

சற்றுத் தள்ளி சாத்தியிருந்த ஒரு கடையின் படிக்கட்டுகளில் உட்கார்ந்தபடி மூன்றாம் மனிதனாக இங்கு நடப்பனவற்றை நோட்டமிடுவது பாண்டியனுக்கு சுவாரஸ்யமாக இருந்தது..  அந்தக் கிளியும் இவன்  பார்வையிலிருந்து தப்பவில்லை.  எவ்வளவு கார்யார்த்தமாக அது செயல்படுகிறது என்பதைப்  பார்க்க பாண்டியனுக்கு வியப்பாக இருந்தது.  ஜோசியம் பார்க்க ஆள் வந்து இவன் கூண்டுக் கதவு திறந்ததும் ஒயிலாக அந்தக் கிளி நடந்து  வந்து அடுக்கியிருக்கும் சீட்டுக்கற்றையிலிருந்து  ஒரு கவரை மட்டும் பாங்காக இவனிடம் எடுத்துத் தந்து விட்டு மெஜஸ்டிக்காக நெல்மணி வாங்கி என் அடுத்த வேலை கூண்டுக்குள் நுழைந்து சிறைபடுத்திக் கொள்வது தான்  என்கிற மாதிரி இந்தப் பக்கம்  அந்தப் பக்கம் பார்க்காமல் தன் வேலை முடிந்த ஜோரில் கூடு நோக்கி விரைவதும், இனி மேல் என் வேலை ஆரம்பிச்சாச்சு என்கிற மாதிரி கிளி எடுத்துக் கொடுத்த சீட்டு உறையை உதடால் ஊதிப் பிரித்து உள்ளிருக்கும் ஜோசியப்பலன் கவிதையை பாட்டாக ராகம் போட்டுப் படித்து இவன் நடக்கப் போவதை விவரிப்பதும்...

பாண்டியன் சுற்றுப்புற சூழ்நிலையே மறந்து  போனவனாய் கிளி ஜோசியக் காரனைச் சுற்றி நடப்பதில் மனம் மயங்கிப் பார்த்துக் கொண்டிருந்தான்.  ஒரு ஆள் வந்து பலன் பார்த்துப் போனதும், அடுத்தாற் போல் வரப்போகிற ஆளை எதிர்பார்த்து சுற்றி நடந்து போகும் ஜனங்களை ஜோசியக்காரன் ஏக்கத்துடன் பார்க்கும் பொழுது பாண்டியன் கிளியைப்  பார்த்தான்.  அதுவும் வெளியே வந்து அடுத்த சீட்டை எடுத்துக் கொடுக்க படபடப்புடன் காத்துக் கிடக்கிற மாதிரியான பாவனையில் அடுத்த ஆளுக்காக எதிர்பார்த்திருப்பது போல...

இதுவரை ஆறு பேர் வந்து  பலன் பார்த்துக் கொண்டு போய்விட்டனர். கிட்டத் தட்ட எல்லாருக்கும் நல்ல பலன்களாகவே அமைந்திருந்தலில் வந்தவர் களின் சந்தோஷம் அவர்கள் முகச்சிரிப்பில் தெரிந்தது. விநாயகர், சுப்ரமணியர், திருப்பதி பெருமாள், அம்மையப்பனின்  கைலாச காட்சி, கஜலஷ்மி, ஐயப்பன் என்று ஜோசிய சீட்டில் இது வரை வந்த தெய்வ வரிசையை வரிசை தப்பாமல் பாண்டியன் நினைவு கூர்ந்தான்.  ஒருதடவை எடுத்த சீட்டை மறுமுறை எடுக்காத கிளியின் கவனத்தையும் நினைத்துக் கொண்டான்.

படத்துக்குக் கீழே அந்தந்த தெய்வங்களை போற்றி பாடுகிற வாழ்த்துப்பா மாதிரி இருக்கும் போலிருக்கு.  அதை ராகம் போட்டு வாசித்து வணங்கிய பின்னே கி.ஜோ. லேசாக மாற்றிய வேறுபட்ட குரலில் வந்தவர்களுக்கு குறிபலன் சொல்வது போல அச்சடித்திருந்த விவரங்களை அனுபவித்துச் சொன்னான்.  சொன்னது அத்தனையுமே அந்தந்த தெய்வங்களின் குணாம்சங்களைக் குறிக்கிற மாதிரியும் ஜோசிய பலன் போலவும் இருந்தது தான் விசேஷம்.

லேசாக வெளிச்சம் கவிந்ததும் இது போதும்ங்கற மாதிரி கிளிஜோசியன் எழுந்திருந்தான். எழுந்திருந்த வாகிலேயே அப்பொழுது தான்  பாண்டியனைப் பார்த்தது போல முகம் மலர்ந்து, சிகரெட்டை வாயில் நுழைத்தபடி, தீப்பெட்டி இருக்கிறதா என்று கேட்கிற பாவனையில் கைமுட்டி மேல் விரல் உரசிக் காண்பித்தான்.

பாண்டியனும் எழுந்திருந்து அவன் அருகாமையில் நகர்ந்து "வத்திப் பெட்டி வைச்சிக்கற பழக்கம் இல்லீங்க.." என்று சொன்னதைக் கேட்டு ஜோசியக் காரன் அவனை விநோதமாகப் பார்த்தான்.  'இல்லேனா, இல்லைன்னு சொல்லிட்டுப் போறது தானே, தான் கேட்டதுக்கு பதில் சொல்ற மாதிரி அவனைப் பத்தியும் சொல்வானேன்' என்று ஜோசியக் காரனுக்கு தோன்றியிருக்க வேண்டும். ஏதோ காட்டமாகச் சொல்ல வந்தவன் சமாளித்த தோரணையில், "கோயிலுக்கு வந்தீகளாக்கும்?" என்று பக்க வாட்டில் சற்றுத் தள்ளி பிர்மாண்டமாக நிமிர்ந்திருந்த கோயில் கோபுத்தை காட்டிக் கேட்டான்.

"ஆமா.  கோயிலுக்குத் தான்.   கொஞ்சம் பொழுது சாயட்டுமேன்னு பாத்திருந்தேன்.  இன்னிக்கு தீப  அலங்காரமில்லியா?.. இருட்டினாத்தானே அழகாயிருக்கும்..?"

"ம்..ம்.." என்று அவனுக்குப் பதில் சொல்லாமல் நகர்ந்தான் கிளி ஜோசியன்.
சொல்லப்போனால் பாண்டியனுக்கு ஜோசியனை விட அந்தக் கிளியை ரொம்பப் பிடித்திருந்தது.  அதைப் பார்த்தபடி, அதற்கு ஒரு 'பை..' சொல்கிற தோரணையில் குனிந்து கையசைத்தான்.

அந்த பொல்லாத கிளியும் அந்த நேரத்தில் "கீக்கீ.." என்று ஓசை கிளப்ப, அதுவும்  அதன் பாஷையில் தனக்கு 'பை' சொல்கிறதாக்கும் என்று நினைத்துக் கொண்டான் பாண்டியன்.  அந்த மகிழ்வில் லேசாக நடையை எட்டிப் போட்டான்.

மங்கை சொல்லியிருப்பது நினைவில் நின்றது.  கோவில் வாசல் பக்கம் காளியண்ணன் கடை இருக்குலே?  அங்கணே அர்ச்சனை தட்டு வாங்கிக் கங்க.. சிவன் கோவில் இல்லியா?.. அப்படியே வில்வ இலை கொஞ்சம் கேட்டு வாங்கி தட்டோட வைச்சிக்கங்க.. ஜோட்டை அண்ணன் கடைலேயே சொல்லிட்டு ஒதுக்குப்புறமா விட்டிடுங்க.  உள்ளாற போனதும் அர்ச்சனைக்கு சீட்டு வாங்கிக்கங்க.. மறந்திடாதீங்க.. சீட்டு இல்லாம அர்ச்சனை கிடையாது.  தெரியுமிலே?"

அவனுக்கு அது தெரியும் என்று மங்கைக்கும் தெரியும்.  இருந்தாலும் அப்படி கேள்வி கேட்டு உரையாடுவது அவள் பாணி..

அவனுக்கும் அது தெரியும்.  இருந்தாலும்  முறைப்பான்.  "இது என்ன ஒவ்வொண்ணும் குழந்தைக்குச் சொல்ற மாதிரி?.. இப்பத்தான் புதுசா முதல் தடவையா நான் கோவிலுக்குப் போற மாதிரி.."

"எப்பவும் நாம ரெண்டு பேரும் சேந்து தானே போற பழக்கம்?.. இன்னிக்குத் தான் குளிச்சேங்கறதாலே நீங்க மட்டும் போறதா ஆயிடுச்சி.. சிவராத்ரி அர்ச்சனை புண்ணியமுங்க.. கிளம்புங்க.."

"அதில்லே.  இவ்வளவு டீடெயில்டா.. குழந்தைக்குச் சொல்ற மாதிரி.."

"யார் கேட்டா?.. குழந்தை தான்.. குழந்தை இல்லாம பெறவு என்ன?.. எப்பவும் எதுனாச்சும் நெனைப்பு.. சொல்றதை காதுலேயே ஏத்திக்காத போக்கு.. நமக்கு சம்பந்தம்  இருக்கோ, இல்லியோ எதையும் பராக்கு  பாக்கற புத்தி.. குழந்தைன்னா குழந்தையாய்த் தான் இருக்கணும்ன்னு இல்லே.  குழந்தைத் தனம் இருந்தாலே போதும். தெரியுமிலே?"

"தெரியும்.. தெரியும்.." என்று சிரித்து வெளிக்கதவு தாண்டி படியிறங்கிய அந்தக் குழந்தை, மங்கை சொன்ன காளியண்ணன் கடையைக் கடந்த நொடியில் அர்ச்சனைத் தட்டு  நினைப்பு வந்து திரும்பியது.


(தொடரும்)
Sunday, December 10, 2017

பாரதியாரின் கதை                                                                                                        தென் பாண்டித் தமிழகத்தில் தேரோடும் வீதிகள் கொண்ட ஊர் திருநெல்வேலி.

திருநெல்வேலி என்று அந்த ஊர் பெயர் பெறுவதற்கு காரணங்கள் பலவாக இருக்கலாம்.  இருப்பினும் அந்த ஊரின் பெயரிலிருந்து பெறப்படுகிற காரணம் எளிமையானது.  நெல்வயல்களே அந்த ஊரை வேலியாகச் சூழ்ந்திருந்ததினால், அவ்வூர் திருநெல்வேலி என்று  பெயர் கொண்டது எனலாம்.

இப்பொழுது மாவட்டம் என்று அழைக்கப்படும் பெரிய நகரங்கள் எல்லாம் இதற்கு முன்னால்  ஜில்லா என்று அழைக்கப்பட்டது.  திருநெல்வேலியும் ஒரு ஜில்லா தான்.
                                                         விரைவில்  ஆரம்பம்


                                 இதுவரை பரவலாகத் தெரியாத பல  தகவல்களுடன்                                              பாரதியாரின்  கதை

                                                                                   
                           
                                                             (நெடுந்தொடர்)         


Monday, August 28, 2017

வாழ்க்கை அழைக்கிறது

                                           ஒரு  வாழ்வியல்  தொடர்


முந்தைய பகுதி:    http://jeeveesblog.blogspot.in/2017/08/blog-post_7.html


3.   தன்னம்பிக்கை என்னும் யானை பலம்.


ம்பிக்கை கொள்ளுதல் என்பது வாழ்க்கையின் ஆதாரசுருதி. தன்மீது, தன் செயல்களின் மீது தனக்குத் தானே நம்பிக்கைக்கொள்ளுதல் தன்னம்பிக்கை எனலாம்.       இந்த நம்பிக்கை வாழ்வின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படைத்தேவை.

தன்னம்பிக்கையில்லாதவன் எதையும் சுயமாகச் செய்ய துணிவில்லாது போவான். எதற்கும் இன்னொருவரை எதிர்பார்க்கக்கூடிய நிலைக்குத் தள்ளபடுவான். தன்னால் இதைச் செய்யமுடியும் என்று நம்பிக்கை கொள்ளமுடியாமல், அதைச் செய்து முடிக்கவே இன்னொருவர் தயவை நாடுவது நாளாவட்டத்தில் எதுவென்றாலும் பிறரை எதிர்பார்க்கிற நிலைக்குக் கொண்டு போய்விடும்.

தனக்கு நெருங்கியவர்களிடம் ஏற்படும் பிரமிப்பும் சில நேரக்களில் ஒருவனின் தன்னம்பிக்கையை இழக்கச் செய்யும்.  பிரபல எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் படிக்கும் பொழுது,  எவ்வளவு அருமையாக அவர்கள் நினைத்ததை எழுத்தில் வடித்து அதை வாசிக்கும் நமக்கும் ஒரு அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் என்று வியப்பு ஏற்படும்.

பொதுவாக பத்திரிகைகளில் கதை கட்டுரை என்று வாசிப்போரில் ஒரு 10% பேர்களிடமாவது அவர்கள் அறியாமலேயே ஒரு பழக்கம் படிந்து விடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.   வாசிப்பில் ஏற்பட்ட மன ஈடுபாடு தாமும் அது போல் எழுதினால் என்ன என்கிற ஆர்வமாய் ஆரம்பத்தில் துளிர்க்கும்.   பொதுவாக ஆரம்ப முயற்சிகள் அவ்வளவு சிறப்பாக அமையாது.   இருப்பினும் தன்னம்பிக்கை இழக்காமல் திருப்பித் திருப்பி முயற்சிக்கும் பொழுது  நாளாவட்டத்தில்  தானே மகிழும் அளவுக்கு எடுத்த முயற்சி அமையும் பொழுது அதுவே அலாதியான சந்தோஷத்தை இயல்பாகவே கொடுக்கிறது.

எனக்கு சாரங்கன் என்றொரு நண்பர் இருந்தார். இராணுவத்தில் 'ஹவில்தாராக' இருந்தவர். ஓய்வு பெற்று வந்துவிட்டார். வாழ்க்கைப் பாட்டிற்கு ராணுவ பென்ஷன் தான். எங்கள் நண்பர்
குழாமில் அவரை 'சவடால் சாரங்கன்' என்றே அழைப்போம். அப்பா....மனுஷன் என்ன பேச்சு பேசுவார், தெரியுமா?..அவர் செய்த ஒவ்வொரு காரியமும், ஷூக்கு பாலீஷ் போட்டார் என்றால் கூட, ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தோடு, யாருமே எதிர்கொள்ளாத பிரச்னைகளைத் தான் எதிர்கொண்டமாதிரி, அப்படி ஒரு ஆர்ப்பாட்டம் பேச்சில் பண்ணுவார்.

கொஞ்சம் கொஞ்சமாக நாளாவட்டத்தில் எங்கள் நண்பர்கள் வட்டத்தில் அவர் ஒரு ஹீரோ ஆகிவிட்டார். வீட்டு விசேஷத்திற்கு வாழைமரம் வாங்கிக் கட்டவேண்டுமா, கல்யாணச் சாப்பாட்டிற்கு அருமையான கேட்டரிங் ஏற்பாடு பண்ண வேண்டுமா, தாசில்தார் ஆபிஸில் மனுகொடுக்க வேண்டுமா, அடுத்த நாள் ரயிலுக்கு அவசர ரிசர்வேஷனா, பஸ் பாஸூக்கு ஏற்பாடா, பாஸ்போர்ட்டுக்கு அப்ளிகேஷனா---சாரங்கனிடம் ஒருவார்த்தை சொல்லிவிட்டால் 'ஆச்சு காரியம்' என்பதில் ஆரம்பித்து,கிணற்றில் தோண்டி விழுந்துவிட்டால் எடுக்க சாரங்கன், வீட்டில் கரண்ட் சப்ளை போய்விட்டால் ப்யூஸ் ஒயர் போடக் கூட சாரங்கன் என்பது வரை தெருவே சாரங்கனைத் தேட ஆரம்பித்து விட்டது.


இதில் கோடிவீட்டு கோதண்டம் ரொம்ப மோசம்; பிளாஸ்டிக் மூடிதிறக்க அடம்பிடிக்கும் காஸ் சிலிண்டரை ரெகுலேட்டரில் பொருத்தக்கூட சாரங்கனைத் தேடுவான். சாரங்கனும்,  'நான் ஆஜர்' என்று சொல்கிறமாதிரி காலையில் 'காப்பி' குடித்துவிட்டு வீட்டுத்திண்ணையில் 'ஹாயாக' உட்கார்ந்திருப்பான்.    யார் வீட்டில் எப்பொழுது கூப்பிடுவார்கள் என்று தெரியாது.


சின்னச் சின்ன வேலைகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்த சாரங்கன் இப்பொழுது அயனாவரத்தில், 'A--Z' என்று 'அ'விலிருந்து 'ஒள'வரை எல்லா வேலைகளையும் முடித்துக் கொடுக்கும்  சேவைநிலையம் ஒன்றை ஆரம்பித்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறான். நகரத்தில் உள்ள அத்தனை பேரும் அவனுக்குப் பழக்கம். அவனால், ஆகமுடியாத வேலை இல்லை. மீச்சுவல் பண்டிலிருந்து மைலாப்பூர் மியூசிக்கல் ஸ்டோர்களில் வயலின் வாங்குவது வரை பிட்டு பிட்டு வைத்து இலவச ஆலோசனை சொல்வான். அவன் சொன்னது எதுவும் சோடை போனதில்லை. எல்லாம் தன்னம்பிக்கை அவனுக்குக் கொடுத்த தைரியம்!

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்கு அவன் செய்த  உதவிகளின் அனுபவங்களை அஸ்திவாரமாகக் கொண்டது அவனது இன்றைய வளர்ச்சி என்பது அவனை நெருங்கிப் பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

எந்த வேலையிலும் சுயமாகத் தான் ஈடுபடுவதே தன்னம்பிக்கைக்கு அஸ்திவாரம். எந்தப் புதுவேலையும், செயலும் தொடங்குகையில பிரமிப்பாகத்தான் இருக்கும். சிக்கு விழுந்த நூல்கண்டு மாதிரி. நுனி கண்டுபிடித்து பொறுமையாக முயற்சித்தால், எல்லாம் வெற்றியோ வெற்றிதான்! ஆரம்பத்தில் உடனடியான வெற்றி இல்லையென்றாலும், இதற்கு இப்படி என்று ஒரு வழியாவது தெரியுமல்லவா?..

ஏதாவது ஒரு வேலையை முடிக்க வேண்டுமானால், 'இதுக்கெல்லாம் அவன் தான் லாயக்கு' என்று 'ரெடிமேடாக'   ஒரு  சிலர் பதில் வைத்திருப்பார்கள். இவர்கள் எதற்கும் லாயக்கில்லை என்றுதான் அதற்கு அர்த்தம்.

எல்லா விஷயங்களையும் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு காலகட்டத்தில் வாழ்கிறோம்.  ஆன்லைனில் பண பரிவர்த்தனை,    ஆதார் அட்டை எண்--  பான் அட்டை எண் இணைப்பு,  இவை இரண்டையும் வருமான வரிக் கணக்கோடு இணைப்பது என்று  தொடங்கி எந்த விஷயமும் நம்மிடமிருந்து அந்நியமாகிப் போய் விடாமல் வெகுதிரள் மக்களின் அன்றாட நடவடிக்கையாகிப் போயிருக்கிறது.

வங்கிகளில் பணம் எடுக்க செலுத்த வங்கி ஊழியர்கள் இருந்த காலம் மங்கி வருகிறது.   மனிதர்கள் போய் மிஷின்களோடு  உறவுப் பிணைப்பு ஏற்பட்டிருக்கும் காலம்  இது.   நிறைவேறாத எரிச்சல், கோபம் எல்லாவற்றையும் மிஷினிடம் காட்ட முடியாத யதார்த்த வாழ்க்கைக் கல்வி முந்தைய வாழ்க்கை போல அல்லாமல் ஆத்திரமின்மையையும் அமைதியையும் நமக்கு  பாடமாகப் போதித்திருக்கிறது.

வாழ்க்கையின் இன்றைய அமைப்பும் வாழும் முறையும் விதவிதமான மாற்றங்களைக் கொண்டு நாள்தோறும் வெவ்வேறான பயிற்சிகளைப் பெறுவதற்கு நம்மை உந்தித் தள்ளிக் கொண்டேயிருக்கிறது.   இது தகவல் தொழில் நுட்ப உலகம்.   எந்த விஷயத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளாத தகவல் குறைச்சலும் நம்மைப் பாதிக்கிறது. ஏதாவது ஒரு இழப்பை ஏற்படுத்துகிறது.

எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது என்பது வாழ்க்கையின் வளர்ச்சிக்கான வேத மந்திரம்.   தன்னம்பிக்கை இழப்பு என்பது  ஒரு மனநோயாக உருவாகக் கூடிய சாத்திய கூறுகள் நிறைய உண்டு.  தன்னம்பிக்கை இழப்பு தாழ்வு மனப்பான்மையை நாளாவட்டத்தில் உள்ளத்தில் விதைத்துவிடும்.

எந்த உடல் உபாதையையும் விடக்கொடியது, இந்த உள்ள உபாதை. உடல் உபாதைகளுக்கும், நோய்களுக்கும் மருந்து என்றால், இந்த உள்ள உபாதை ஒழிய மனப்பயிற்சி அவசியம்.  

நீந்த வேண்டுமானால், தண்ணீரில் இறங்குவதுதான் வழி.

வாழ்க்கையில் பெரிய பெரிய வெற்றிகளைக் குவித்தவர்களெல்லாம், வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. சாதாரண ஏழை, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான்   பெரும்பாலும்.   வாழ நேரிட்ட வாழ்க்கையே அவர்களின்  வாழ்க்கை வெற்றிக்கான பாடத்தை சொல்லிக் கொடுத்து வளர்த்து  வெற்றி வாகை சூட வைத்திருக்கிறது..

தளராத உழைப்பும், தடுமாறாத செயல்களுமே  வெற்றிக்கனி பறிக்க அவர்களை வல்லவர்களாக்கியது என்பதை மறந்து விடக்கூடாது.


(வளரும்)


தன்னம்பிக்கை ஊட்டும் படங்களை அளித்த நண்பர்களுக்கு நன்றி.

Saturday, August 12, 2017

அழகிய தமிழ் மொழி இது!..

சென்ற பகுதி:

http://jeeveesblog.blogspot.in/2017/02/blog-post_63.html

பகுதி--26
ன்னன் செங்குட்டுவனின் கவனம் வாயிற்காவலர் மேல் படிந்தது.  'ஏது சேதி?'  என்று பார்வையிலேயே கேட்ட  மன்னனிடம் காவலன் ஒருவன் பணிந்து சொல்லத் தொடங்கினான்:

"மன்னர்கோவே!  பல்வேறு வகைப்பட்ட திறமையுடைய நாடக மகளிர் நூற்று இருவர்;  குயிலுவக் கருவியை கையாள்வோர் இருநூற்று எண்மர்;  தொண்ணூற்றாறு வகைப்பட்ட சமய சாத்திரங்களைக் கற்றுத் தேர்ந்தோர்;  நகை வேழம்பர்  நூற்றுவர்;    தேர்கள் நூறும்,  ஐந்நூறு யானைகளும், பிடரி மயிர் அலைபாயும் பதினாயிரம் புரவிகளும்,  வடபுலத்து விளையும் பொருள்கள் ஏற்றி வந்த இருபதினாயிரம் வண்டிகளும், தலைப்பாகையும் சட்டையும் இட்ட தங்கள் தலைவன்  தூதுவன் சஞ்சயனுடன் வந்திருக்கும் ஆயிரவரும் தலைவாயிலில் திரண்டிருக்கின்றனர்,  வில் கொடி செங்கோல் வேந்தே!" என்றான்.

"ஓ! நல்லது.  நாடக மகளிரும் குயலுவக் கருவியாளரும் சஞ்சயன் தன்னொடு  இங்கு வர வழி காட்டுங்கள்.." என்று ஆணையிட்டான்  மன்னன்.

செங்கோல் வேந்தனின் திருவிளக்கு அவையத்து சஞ்சயன் வந்து தாழ்ந்து வணங்கி மன்னவனைப் போற்றித்  துதித்தான்.  தன்  கூட வந்திருந்த கலைஞர் பெருமக்களை மன்னவனுக்கு சஞ்சயன் இன்னார் இவர் என்று தெரிவித்து வணங்கினான்.  "தங்களுக்கு ஒரு சேதி சொல்ல வந்துள்ளேன் மன்னவா.." என்ற சஞ்சயன் அந்தச் சேதியை என்னவென்று கூறலானான்.

"மன்னாதி  மன்னா!  கடவுள் சிலை அமைக்க  கல் வேண்டி வடபுலம் நோக்கி செல்வது  தான் சேர மன்னனின் நோக்கம் எனில் ஓங்கிய இமயத்திலிருந்து  கல் எடுத்து அதனை கங்கை பேராற்றில் நீராட்டி, நின் நாட்டிற்கே கொண்டு வந்து தர சித்தமாக இருக்கிறோம் என்று நட்புச் சேதியை   நூற்றுவர் கன்னர் தகவலாக என் மூலம் அனுப்பியுள்ளனர், மன்னா!"  என்று சஞ்சயன் தான் தூதுவனாக வந்த காரணத்தைச் சொன்னான்.

"அப்படியா, சேதி!  **** நூற்றுவர் கன்னரின் நட்பு வாழ்க!" என்று வாழ்த்தித் தொடர்ந்தான் சேர மாமன்னன்.  "சஞ்சயரே!  கேட்டுக் கொள்ளவும்.. இப்பெரும் படை எழுச்சி  பெருந்தெய்வ உரு பொறிக்க இமயத்திலிருந்து கல்லைக் கொண்டு வருவது மட்டுமல்ல!" என்று அவை அதிரச் சொன்னான். "காவா நா கொண்ட கனக, விஜயர் என்னும் இரு குறுநில மன்னர் தாம் கூட்டிய விருந்தொன்றில்  பிற மன்னருடன் கூடிக் குலவி அருதமிழாற்றல் அறியாது உளறியிருக்கின்றனர். அவர்கள் அறியாத தமிழர் தம் வீரத்தையும் பெருமையையும் அவருக்கு  நேரில் அறிவுறுத்தும் பொருட்டும் எம் வடபுலப் பயணம் ஏற்பாடு ஆகியிருக்கிறது, சஞ்சய!"  என்றான்.  "சஞ்சய!  நம் நட்பு பேணும் நூற்றுவர் கன்னருக்கும் என் சேதியாக ஒன்றைச் சொல்வாயாக!    கங்கை பேராற்றை யாமும் என் கூற்றுவப் படையினரும் கடந்து  செல்வதற்குத்  தேவையான பரிசில்களுக்கு தகுந்த ஏற்பாடுகளைச் செய்யுமாறு சொல்வாயாக!" என்றான்.

"மன்னர்க்கு மன்னவா!  தங்கள் ஆணை எங்களின் பெருமிதம்!  அப்படியேச் சொல்கிறேன்.."என்று வணங்கி அவை நீங்கிச் சென்றான் சஞ்சயன்.

சஞ்சயன் சென்ற பின்,  ஆயிரம் கஞ்சுகர் சந்தன, முத்துக் குவியலையும் தென்னவர் இட திறைப் பொருட்களோடு கொண்டு வந்து சேர்த்தனர்.   சேர்த்த பொருட்களுக்கு   அவை சேர்ந்தமைக்கு அடையாளமாக         இலட்சினை இட்ட திருவோலைகளை திருமுகம் எழுதுவோர் திறைப் பொருள் தந்த மன்னர்களிடம் சேர்ப்பித்து விடுமாறு வழங்கினர்.  அப்படியான திருமுகங்களைப் பெற்றுக் கொண்டு கஞ்சுகர் அவை நீங்கினர்.

திரை கடல் தான் திரண்டதோ என்று வியக்கும் வண்ணம் பெரும் படையை வடபுலம் நோக்கி நடத்திச் சென்ற செங்குட்டுவன் நூற்றுவர்  கன்னர் ஏற்கனவே ஏற்பாடு  செய்திருந்த ஓடங்களை உபயோகித்து கங்கை பேராற்று வங்கப் பரப்பின்  வடகரையை அடைந்தனர்.  பின் பகைவரை எதிர் கொள்ள பாடி வீடு அமைத்துத்  தங்கினர்.

கனக விஜயருக்கும் சேதி போனது.   உத்தரன், விசித்திரன்,  உருத்திரன், பைரவன்,  சித்திரன், சிங்கன்,  தனுத்திரன், சிவேதன் என்ற எட்டு வட நாட்டு அரசர்களுடன் கூட்டு கொண்டு "தென் தமிழ் ஆற்றலைக் காண்போம், நாம்"    என்ற இறுமாப்புடன்   சேரமாமன்னனுடன் மோதினர்.

ஞாயிறு தென்படவில்லை.  அதன் வெயில் கதிரை துகில்  கொடிப் பந்தல்கள் விழுங்கின.  பதப்படுத்தப் பட்ட தோலால் போர்த்திய வளைந்த போர்ப்பறை, வெண்மை உமிழும் சங்கு, நீண்ட கொம்பு,  இடி இடித்தாற் போல முழங்கும் போர்முரசு,  இழும் என்னும் ஒலி நாதம் கொண்ட கஞ்சதாளம் எல்லாம் ஒரு சேர முழங்கி உயிர்க் குலை நடுநடுங்க திசைகள் அதிர விநோதமான ஓசைகள் பிளந்தன.

தோளில் வில் தாங்கிய வீரர்,  அதிவேகமாக தேரைச் செலுத்தும்
திறமையாளர்,  யானை மத்தகத்தின் மேல் அமர்ந்து வரும் யானை மறவர், குதிரை வீரர் என்று வரிசை வரிசையாக வருவோரின் அதகள ஆர்ப்பாட்டத்தில் நிலம் அதிர்ந்து புழுதி கிளம்பி யானைகள் தம் முதுகில் சுமந்த மணி நாவிலும்,   சங்குகளின் நாவிலும் நிரம்பி அவை தம் செய்தொழில் மறந்து ஓசை எழுப்ப முடியாது தவித்தன.

இரு பக்கப் படைகளும் ஒன்றில் ஒன்று மோதி ஒன்றாகின.  தோள்களும், தலைகளும் தனித்தனையாக சிதறுண்டு கிடந்த பிணக்குன்றின் மீதேறி  பேய்கள் கூத்தாடிக் களித்தன.   நிணம் பொருந்திய குறுதி ஆற்றில் பெண் பேய்கள் தம் கூந்தலை தாழத் தழைய விட்டு இரத்த குளியல் நிகழ்த்தின.

வலிமை கொண்ட தேர்ப்படை வடவரசர்களின் சிறப்பு.  வாளேந்திய சேர வீரப்படையினரின் கூர்வாள் தேர் மொட்டுக்களைக் கொய்தன.   கடுங்களிர்களின் பிடரியும்,  புரவிகளின் முதுகுகளும் பாழ்பட  கூற்றுவன் அந்தப் பகல் நேரத்திலேயே பல உயிர்களை நாசம் கொள்வான்  என்பதனை வடவரசர்கள் கண்கள் பிதுங்கக் கண்டனர்.  இறுதியில் போர்  ஓய்ந்து  வெற்றி வாகை சூடிய  செங்குட்டுவன் பனம் பூ தொடுத்த தும்பை வெளிர் மாலையை சுற்றியிருந்த படைவீரர்  ஆரவாரத்திற்கிடையே  தன் சென்னியில் சூட்டிக் கொண்டான்.


(தொடரும்)

========================================================================

****  நூற்றுவர்  கன்னர் என்ற மன்னன்,  கங்கையாற்றைக் கடந்து செங்குட்டுவன்   படைகள் செல்ல உதவினான் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.  சாதகர்ணி என்ற வடமொழிப்  பெயரே   நூற்றுவர் கன்னர் என்றாயிற்று என்பர் வரலாற்று ஆய்வாளர்கள்.

========================================================================


படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.

Monday, August 7, 2017

வாழ்க்கை அழைக்கிறது

         ஒரு வாழ்வியல் தொடர்


முந்தைய  பகுதி:   http://jeeveesblog.blogspot.in/2017/07/blog-post_21.html

பகுதி--2

ந்தகோபாலுக்கு போன ஆண்டு தான் கல்யாணம் ஆயிற்று. முப்பது வயது வரைக் காத்திருந்து பிறகு செய்து கொண்டத் திருமணம். அதற்குள் குழந்தைக்கு அவர் அவசரப்படவில்லை போலிருக்கிறது. அவரே ஒரு குழந்தை என்பது வேறு விஷயம்.

சொந்தத்தில் ஒரு வீடு வாங்க வேண்டுமெனற ஆசை நந்தகோபாலுக்கு வந்திருக்கிறது. கையில் கொஞ்சம் சேமிப்பு இருப்பதாகச் சொன்னார். மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று என்னிடம் ஆலோசனை கேட்க வந்திருக்கிறார்.

நந்தகோபால் போன்றவர்களுக்கு ஒன்றைச் செய்ய வேண்டுமென்ற ஆசை வருவதற்கே அவருக்குள் ஆயிரம் யோசனைக்குப் பின்னால் தான் என்று எனக்குத் தெரியும். அதன் சாதக பாதகங்களை அவரும் அவர் மனைவியும் தங்களுக்குள் அலசிப் பார்த்து முடிவில், 'சரி, இதில் இறங்கலாம்' என்ற முடிவிற்கு வந்த பின்னரே, அடுத்தாற்போல் என்ன செயவது என்று என்னிடம் கேட்க வந்திருக்கிறார்.

சொந்தத்தில் வீடு வாங்க வேண்டுமென்ற ஆசை--மேலும் மேலும் அதுபற்றி யோசித்து 'நம்மால் முடியும்' என்று தீர்மானிக்கின்ற நம்பிக்கை--அந்த நம்பிக்கை ஏற்படுத்தும் செயல் வடிவத்திற்கான துடிப்பு= இதுதான் முதல்படி.

"வீடு வாங்க வேண்டுமென்று நீ தீர்மானித்தவுடனேயே 50% ஜாப் ஓவர்" என்று நான் சொன்னதைக் கேட்டு நந்தகோபால் சிரித்தார்.

"என்ன சார்! வீடு வாங்கி, கிரகப்பிரவேசமே பண்ணிவிட்ட மாதிரி முடித்து விட்டீர்கள்?..இப்போத்தானே அதுபற்றி முடிவு செய்து, அடுத்து என்ன செய்வது என்று கேட்க வந்திருக்கிறேன்..."

"அந்த எண்ணம் உங்கள் மனசில் வலுப்பெற்று தன்னம்பிக்கையும், இதுபற்றி மேலும் என்ன செய்யலாம் என்று இன்னொருவரிடம் ஆலோசனை கேட்க வந்த பொழுதே, பாதி வேலை முடிந்த மாதிரி தான்" என்று சொல்லி, "இனி என் வேலை சுலபம்" என்று நந்தகோபாலுக்கு விளக்கினேன். நகர்புறத்தில் வாங்கும் பிளாட், ஊருக்கு வெளியே வாங்கும் தனிவீடு அல்லது நிலம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் வீடு, பொருள்கள் வாங்கிக் கொடுத்து ஒப்பந்தமுறையில் கட்டிக்கொள்ளும் வீடு, பிளாட் என்றால் எத்தனையாவது மாடி, கிரவுண்டு ப்ளோர்-உச்சி-சாதகபாதகங்கள், லிப்ட் வசதி இதையெல்லாம் சொல்லி, வள்ளுவர் கோட்டத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு நடக்கவிருக்கும் 'சொந்தத்தில் வீடு' பற்றிய கண்காட்சியைப் போய்ப் பார்த்துவிட்டு விஷயங்களைச் சேகரம் பண்ணச் சொன்னதுமே நந்தகோபால் முகத்தில் உற்சாகம்.

நான் ஐந்து லட்ச ரூபாய்    அட்வான்ஸ்  பணம் கொடுத்து உதவிய மாதிரியான சந்தோஷத்தில், "தேங்க்யூ சார்!..உங்க ஆலோசனைகளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி, சார்!" என்று ஆயிரம் நன்றி சொல்லிப் புறப்பட்டார்.

ஒருத்தருக்கொருத்த்ர் பரிமாறிக் கொள்கின்ற சந்தோஷம் மிகமிக முக்கியமானது.

கருத்துக்களை ஒருவொருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் பொழுது,அல்லது புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் பொழுது புதுவிஷயங்களையும் அதே சமயத்தில் மாறுபட்ட கருத்துக்களையும் தெரிந்து கொள்கிறோம். ஒரு விஷயம் பற்றிய உண்மையான பிரச்னைகள், அவற்றை நாமே அணுகும் பொழுதுதான் புரிகிறது. சொந்த அவசியம் கருதி பிரச்னைகளைத்  தீர்க்கக்கூடிய சாத்தியகூறான வழிகளும் நமக்குப் புரிகின்றன.

நான் செய்தது, நந்தகோபால் குடும்பத்தில் ஊன்றிய விதைக்குத் தண்ணீர் ஊற்றி வெளிச்சம் கொடுத்தது தான்; இனி அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

"O.K...go ahead....good luck.." என்று பிறரை  ஆசிர்வதிப்பது எவ்வளவு பெரிய சந்துஷ்டியையும், மன உற்சாகத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்துகிறது  என்பது லேசில் வெளித்தெரியாத விஷயம்.

நிச்சயம் நந்தகோபால் சொந்த வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவார்.  இன்னும் ஒரு வ்ருடத்தில் வீடு கட்டி முடித்து கிரகப்பிரவேத்தில் கூட, "சார், எனக்குக் கொடுத்த நம்பிக்கை தான் நான் இந்த வீடு வாங்கக் காரணம்!" என்று முகம் பூரா சந்தோஷ்த்தோடு சொல்வார் என்பதும் எனக்குத் தெரியும்.

கடற்காற்று போல, இலவசமாகக் கிடைக்கின்ற இந்த சந்தோஷங்களை அனுபவிப்பதில் தயக்கமென்ன?..


(வளரும்)


வாழ்க்கையின் ஈடுபாட்டிற்காக அழழகனான பொன்மொழிகளைத் தந்த  நண்பர்களுக்கு நன்றி.

Monday, July 31, 2017

மீண்டும் சுஜாதா.... சுஜாதா...

'எப்படி எழுதக் கூடாது?'  என்ற சுஜாதாவின்  தொடரின் நான்காவது பகுதியை வாசிக்க நேர்ந்தது.

 பிற்காலத்து  சுஜாதா அல்லாத எழுத்தின் சாயல் வெளிப்படுவதைத் தவிர்க்க முடியவில்லை போலும்.   அதனால் தான் இந்தப் பகுதியின் முதல்  பகுதி போல் அல்லாமல் சுஜாதா எழுதி வைத்திருந்த குறிப்புகளிலிருந்து எடுத்து எழுதுவது போல ரொம்பவே  அந்தப் பகுதியைக் குறுக்கி விட்டார்கள்.

குறுக்கியது தெரியாமல் இருக்க,  சுஜாதா எழுதிய இரண்டாவது சிறுகதையான 'ஒரு    பெரிய மனிதரும், பிக்பாக்கெட்டும்'  கதையை அப்படியே பிரசுரித்திருக்கிறார்கள்.  1962-ஆம் வருடத்திய  டிசம்பர் 27
'குமுதம்' இதழில் பிரசுரமான கதை  இது.   'லதா'வின் அட்டைப்பட  குமுதம் இதழ் அது.                                                                                          

சுஜாதா தனது முதல் கதையான 'அதிர்ச்சி'யை  எஸ்.ஆர். ராஜன் என்ற பெயரில்  எழுதியிருந்தார் என்றால்,  இரண்டாவது கதையான ஒ.பெ.ம.பி. கதையை எஸ்.ரங்கராஜன் என்ற பெயரில் எழுதியிருப்பதாகத் தெரிகிறது.

ரொம்ப சாதாரணமான கதை.    ஆரம்ப கால ரங்கராஜன் எதிர்கால சுஜாதாவாக எப்படி வளர்ந்து உருவானவானார் என்று இந்தக் கதையைப் படித்து தாராளமாக வியக்கலாம்.    'எப்படி  எழுதக் கூடாது'   என்பதை விட 'எப்படியும் எழுதலாம்' என்பதைக் கற்றுக் கொடுப்பது தான் சுஜாதா விட்டுச் சென்ற எழுத்துப்  பாணி சாகசமாகத் தெரிகிறது.

முக்கியமாக  இந்தக் கதை சம்பந்தப்பட்ட விவரங்களிலிருந்து ஆச்சரியமான சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு நூறு ரூபாய் காசுக்காக ஹைதராபாத்திலிருந்து   கனமான  ஒரு பெட்டி  நிறைய விஸ்கி பாட்டில்களை  கடத்தி வர கதைநாயகன் ஒப்புக் கொள்கிறான்.

ஒரு சின்ன வெள்ளிக் கிண்ணியின்  விலை  வெறும் பத்து  ரூபாய்!

1962-ம் வருடத்திய குமுதம் இதழின் விலை  25  காசுகள்.  ஆக 40 குமுதம் இதழ்களின் விலை ஒரு வெள்ளிக் கிண்ணிக்கு சமம்.  அல்லது  40 குமுதம் இதழ்களை வாங்குவதைத் தவிர்த்து விட்டால் ஒரு வெள்ளிக் கிண்ணி வாங்கி விடலாம்!

கட்டக் கடைசியாக   வழக்கம்  போல  புதிர் இல்லாவிட்டால் எப்படி?..

இந்த வார 'எப்படி எழுதக் கூடாது?' தொடரை வைத்து ஒரு சின்ன புதிர்.


அன்றைக்கு ராத்திரியே அவசர அவசரமாய் 'ஒரு பெரிய மனிதரும் பிக்பாக்கெட்டும்' கதையை எழுதி காகிதம் உலர்வதற்குள் குமுதம் அலுவலகத்துக்கு  போஸ்ட் செய்தேன்.

'அ'வோ,   'ர'வோ,  'சு'வோ  அது கையில் கிடைத்தவுடனே,  கவரைக் கூடப் பிரிக்காமல்,  பரணில் தூக்கிக் கடாசி விட்டார்கள்.

                                                                                                   --  சுஜாதா

'அ'வோ,   'ர'வோ,  'சு'வோ  என்றால் என்ன?


இதான்,  புதிர்!   சொல்லுங்கள்,  பார்க்கலாம்.


இந்தப்  புதிரில் ஒரு மிஸ்ஸிங்கும்  உண்டு.   அதையும் சேர்த்துச் சொல்பவர்கள்  உண்மையில் தமிழ் பத்திரிகை வாசகர் உலகில் கில்லாடிகள் தாம்!...


Tuesday, July 18, 2017

வாழ்க்கை அழைக்கிறது !

         ஒரு வாழ்வியல் தொடர்


1.   இன்று புதிதாய்ப் பிறந்தோம்


"எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா!" என்று வியந்து போற்றிப் புகழ்வார், பாரதியார்.


இன்பம் எப்பொழுதுமே இனிப்பான விஷயம். அது துய்ப்பதின்பால் பட்டது. எதையும் அனுபவிப்பதற்கு ஒரு அவா வேண்டும். மனது தான் அவா என்கிற ஓர் அற்புதத்தை சிந்தையில் ஏற்படுத்தி, இது வேண்டும் என்கிற ஆசையைக் கிளறிவிட்டு, அந்த இன்பத்தை அனுபவிக்க தூண்டுகோலாக இருக்கிறது. அந்த ஆசை இல்லையென்றால், பாரதியாரின் கண்ணுக்குக் கோடிகோடியாகத் தெரிந்த அந்த இன்பம் ஒன்று கூட நமக்குப் புலப்படாது. மனம் ஒத்துழைப்பில்லாத எதுவும் இன்பத்தைக் கொடுக்காது.

ஆசைப்படுவதற்கும் ஓர் அர்த்தம் வேண்டும்; ஒரு நியாயம் வேண்டும். ஆசைப்படுவதை அடைய, ஆசையை முன்னிருத்தி அதைப் படிப்படியாக அடைய உழைப்பு தேவை. எந்த உழைப்பும் உற்சாகத்தோடு கலந்து வந்தால் பன்மடங்கு வேகம் கிடைக்கும். ஈடுபாடு இருந்தால், உற்சாகம் தானே கதவைத்தட்டிக்கொண்டு வரும். தானே தனியாகக்கூட வராது; தன்னம்பிக்கையையும் தன் கூடவே கூட்டிக்கொண்டு வரும்.

எல்லா ஆசையும் ஆசையாகி விடாது. நியாயமான ஆசைகளுக்கு எப்பொழுதுமே கண்ணுக்குத் தெரியாத ஒரு தார்மீக பலம் உண்டு.

நியாயமான ஆசையைத் தேர்ந்தெடுக்க நல்லறிவு வேண்டும்; குறைந்தபட்சம், நன்மை-தீமைகளை அலசுகின்ற மனசாவது வேண்டும்.

நந்தகோபால் என் நண்பர். போனவாரம் போன் பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்திருந்தார்.

அவரைப்பார்த்ததுமே  குழந்தைகளுக்கு ஏகப்பட்ட உற்சாகம். "அங்கிள்..அங்கிள்.." என்று சுற்றிக்கொண்டு விட்டன. ஆண்ட்டி அவர் கூட வரவில்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு இன்னும் நெருக்கம் காட்டினர்.

விஷயம் இதுதான். நந்தகோபால் மிமிக்ரி பண்ணுவதில் மன்னன். இன்னொரு பிரபலம் மாதிரி அவர் பேசுவது, நடிப்பது எல்லாம் அச்சு அசலாக இருக்கும். இதைத்தவிர, கைவிரல்களை, முட்டியை இப்படி அப்படி அசைத்து, கோணி, குவித்து, பிரித்து வெள்ளைச்சுவரில் மான், பாம்பு, குதிரை, முயல், யானை என்று ஏகப்பட்ட நிழலுருவங்களை அநாயசமாகப் போட்டுக் காண்பிப்பார்.

ஒருதடவை செய்தது இன்னொருதடவை இல்லை என்று அவர் வரும் பொழுதெல்லாம் விதம் விதமாக வெரைட்டியாக நந்தக்குமார் குழந்தைகளை  உற்சாகப்படுத்துவார். குழந்தைகள் சந்தோஷிப்பதில் அவரும் 'குஷி'யாகி, தானும் ஒரு குழந்தையாகி விடுவார். அது தான் விஷயம்.

இவர் செய்து காண்பிப்பதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு தங்கள் நண்பர்களுக்கு, "பார்த்தாயா, இதை?" என்று வேடிக்கைக் காட்டுவதில்  குழந்தைகளுக்கும் உற்சாகம்.

ஒருதடவை வீட்டுக்கு வந்தபொழுது, பேச்சோடு பேச்சாக தனனையறியாமல் நந்தகோபால் சொன்னார்: "நான் இப்படி குழந்தைகளோடு விளையாடுவது என் மனைவிக்குப் பிடிக்கவில்லை. 'என்னங்க, இது, குழந்தைகளோடு சரிக்குச் சமமாக?..உங்க வயசென்ன, அவங்க வயசென்ன? நாளைக்கு அதுகளுக்கு உங்க மேலே மரியாதை இல்லாமல் போய்விடும்!' என்று தன் மனைவி குறைப்பட்டுக் கொண்டதாகச் சொன்னார். அதிலிருந்து
'ஆண்ட்டி' அவர் கூட வரவில்லை என்றால், குழந்தைகளுக்கு நந்தகோபாலைப் பார்க்கையில் கூடுதல் சந்தோஷம்.

குழந்தைகள் இருக்கும் வீட்டிற்குப் போனால், சில அன்பர்கள் பழம், பிஸ்கட், சாக்லெட் என்று ஏதாவது வாங்கிக்கொண்டு போவார்கள். குழந்தைகள் அடையும் சந்தோஷத்தைப் பார்த்து, கள்ளம் கபடறியாத அந்த பிஞ்சுகளின் முகம் மலர்வது கண்டு இவர்கள் மனமும் மலரும்.

குழந்தைகளோ, பெரியவர்களோ---இதில் ஒன்றும் பெரிதாக வித்தியாசமில்லை. மனசு மகிழ்கிறதே, மனசு மலர்கிறதே, அதுதான் விசேஷம். அதுதான் முக்கியம்.

மனுஷப் பிறவிகளில் யாரும் 'வேஸ்ட்' இல்லை. 'எத்தனை மனிதர்கள், எததனை குணங்கள்' என்று வியக்கவைக்கின்ற தனித்தனி சுபாவங்கள், வெளிப்பாடுகள் ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் உண்டு. கவனித்துப் பார்த்தால், 'அடடா..' என்று ரசிக்கத் தோன்றும்; ரசிப்பதுதான் ஆரம்பப்படி அந்த ரசிப்பில் லயிப்பது அடுத்தபடி. அந்த லயிப்பு தீர்க்கமாகிக் கூடும் பொழுது, இன்னொரு மனுஷனின் ஆத்மாவின் அழகைத் தரிசிக்கும் பொழுது, மனித மேன்மை புரிகிறது.

அது போகட்டும். நந்தகோபால் எதற்கு வந்தார் என்பதைச் சொல்ல மறந்துவிட்டேனே?.


(வளரும்)


படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.

Wednesday, July 12, 2017

சுஜாதா.. சுஜாதா.. சுஜாதா

'குமுதம்'  பத்திரிகையில் 'இதுவரை எதிலும் வெளிவராத சுஜாதா எழுதிய அமர்க்களத் தொடர்' என்று ஆவலைத் தூண்டும் பில்டப் கொடுத்து இந்த வாரத்திலிருந்து   சுஜாதாவின்  தொடர் ஒன்று ஆரம்பித்திருக்கிறது.

தொடரை வாசித்ததில் அந்த சாவகாச எழுத்தைப் பார்த்து சுஜாதாவின் எழுத்துப் பாணியா இது என்று ஆச்சரியம் ஏற்பட்டது.   அவரின் எழுத்து மயக்கத்தில் திளைத்த வாசக உள்ளங்களுக்குத் தான் வெளிச்சம்!..

இந்த வார அந்தத் தொடரை வைத்து சில சின்னச் சின்ன புதிர்கள்.

புதிர்--1:  நான் எழுதிப் போட்ட மூன்று கதைகள் சு.அ.ப.  போல உடனே திரும்பி வந்தன.

கேள்வி:   அது என்ன  சு.அ.ப.?..    

சு.அ.ப. போல  இன்னொன்று:

கி.போ.க.

(இதுவும் பத்திரிகை அலுவலங்களுக்கு
அனுப்பபடும் கதைகள் குறித்துத் தான்! )                    


புதிர்--2:  எஸ். ரங்கராஜனாகிய  நான் ஒரு தற்செயலாய்த் தான் சுஜாதா ஆனது போலத் தோன்றுகிறது.

கேள்வி:  மேலே கண்ட வாக்கிய அமைப்பில் ஒரு பிழை உள்ளது.  என்ன அது?..

தொடரின் இடுக்கில்  சுஜாதாவின் வாக்குமூலம் போல அவரது  அட்வைஸ் ஒன்று என்னைக் கவர்ந்தது.

அது இது:

"நான் பார்த்த வரைக்கும் என் திறமையெல்லாம்  -- திறமை என்று ஏதாவது இருந்ததென்றால்-- அவாய்டிங்  பேட் ரைட்டிங்!..  (தண்டமாய் எழுதுவதைத் தவிர்த்தல்)  என்னுடையது நல்ல எழுத்து (குட் ரைட்டிங்) என்று நான் சொல்ல மாட்டேன்.  நல்ல எழுத்துக்கு முயற்சி செய்கிறேன்.  அவ்வளவு தான்.  ஆனால் மோசமான எழுத்தைத் தவிர்க்கிறேன்.

த்திரிகைகள் நினைத்தால் எதையும் கவிதை என்று லேபிள் குத்தி உலா விடலாம் என்பது தெரிந்த விஷயம் தான்.

எதுகை மோனை எல்லாம் கவிதையில் அநாவசியம் என்று சிலர் கருதுவது போலத் தெரிகிறது. ஆனால்  எனக்கென்னவோ -----

எதுகை மோனை 
இல்லையென்றால் 
ஏது கவிதை 
என்று தோன்றுகிறது.


இப்பொழுதெல்லாம் கவிதை
என்றால் இப்படித்தான் என்று
எழுதினாலும் என் பாணியில்
என் கவிதை ஒன்று:

ஒரு பார்வை:                                                                                        
                                                                                             
அய்யோடி!... இந்தக்  கிளிகளுக்குத் தான்
கொய்யா என்றால் எத்தனை ஆசை!
ஒரு கொத்து; ஒரு துளி கவ்வல்; நிமிர்ந்து
ஒரு பார்வை;  இப்படி அப்படி தலை திருப்பல்
அடுத்து அடுத்த கொத்தல்; கவ்வல்; தலை திருப்பல்
கெளசல்யாவுக்கு கொய்யான்னா பிடிக்காது அதனால்
கொய்யா சாப்பிடும் கிளிகளும் பிடிக்காது!
பாமினியே ஒரு சுதந்திரப் பறவை. அதனால்
பறக்கும் கிளி தான் அவளுக்குப் பிடிக்கும்;
கூண்டுக்கிளியைப்  பார்க்கவே சகிக்க மாட்டாள்.              
ரம்யாவிற்கோ கிளியைப் பிடிக்காவிடினும்  அதன்
கழுத்து வளையம் ரொம்பவும் பிடிக்கும்.
ஜெயத்திற்கோ ஓவியம் என்றால் உயிர்
கேட்டால் ஓவியக்கிளியின் ஒயில்
நிஜக்கிளிக்கு வருமா என்பாள்.
கிளியோ புலியோ எதுவோ ஒன்று;
அவரவர் ரசனையை வெளிப்படுத்த
ஏதோ ஒன்று கிடைத்து விடுகிறதே
அது தான் வேடிக்கை.


ழுத ஆரம்பித்து மூன்று தொடர்கள்  அப்படியே அரைகுறையாக நிற்பது வருத்தமாக இருக்கிறது.

1.  ஆத்மாவைத்  தேடி...

2.  இனி...

3.  அழகிய தமிழ் மொழி இது!


முதலில் சிலப்பதிகாரத்தை நாவல் வடிவில் எழுத முயன்ற 'அழகிய தமிழ் மொழி இது' தொடரை  விரைவில் தொடர்ந்து முடித்து விடுவதாக   இருக்கிறேன்.

அதற்கு அடுத்து  இனி..  தொடரை தொடர ஆரம்பிக்க வேண்டும்.

கடைசியாகத் தான் 'ஆத்மாவைத் தேடி..'   ஆனால் 'ஆத்மாவைத் தேடி..க்காகத் தான் தேடித் தேடி நூல்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.


இந்த முப்பெரும் ப்ரொஜெக்ட்டும் ஒரு பக்கம்  மனசில் அலை பாய்ந்து கொண்டிருக்க   இடையில் தான் இந்தப் பதிவு மாதிரி ஜல்லியடித்தல் எல்லாம்..

பூவனம்  தளப் பதிவுகளை சலிக்காமல் வாசித்து பின்னூட்டம் இடும் பதிவுலக நண்பர்களுக்கு என் நன்றி.படங்கள் உதவிய நண்பர்களுக்கும் நன்றி.Related Posts with Thumbnails