மின் நூல்

Friday, February 19, 2010

ஆத்மாவைத் தேடி…. 38 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


38. தூய மனம் என்னும் தீபம்


"சொல்கிறேன்---" என்று மீண்டும் ஒருமுறை கூறிவிட்டுத் தொடர்ந்தார் தேவதேவன்.

"தைத்திரீய உபநிஷதம் சொல்லும், ஆன்மாவைப் போர்த்தியிருக்கும் ஐந்து உடம்புகளான உடல், பிராணன், மனம், புத்தி, ஆனந்தம் என்றிவற்றை மேலிருந்து உள்ளுக்கு உள்ளாகப் பார்க்குமிடத்து அவை ஆன்மாவை நெருங்க நெருங்க ஒன்றை விட ஒன்று நுண்ணியதாகத் தெரிகிறது.


"உடல், பிராணன் தாண்டி இப்பொழுது மனப்பகுதிக்கு வந்திருக்கிறோம். புறப் பார்வைக்குத் தெரிகிற புறவுலகக் காட்சிகளைத் தாராளமாக புலனுருப்புகளால் காணலாம். அதற்கு மாறான அகவுலக தரிசனம் பெற அற்புதமான ஆடியாகச் செயல்படுகிறது மனம். இதை விட்டால் வேறு வழியில்லை.


"ந சக்ஷூஷா க்ருஹ்யதே நாபி வாசா
நான்யைர்தேவைஸ் தபஸா கர்மணா வா
ஜ்ஞானப்ரஸாதேன விசுத்தஸத்வஸ்-
ததஸ்து தம் பச்யதே நிஷ்கலம் த்யாயமான: "

"-- என்பது முண்டக உபநிஷத்து மந்திரம்.


"ஆத்ம தரிசனம் என்பது கண்களால் கிரகிக்கப்படுவதில்லை; வாக்கினாலும் மற்ற புலன்களாலும் தெரியப்படுத்தப்படுவதில்லை; தவத்தாலும், மற்ற கர்மங்களாலும் அறியப்படுவதில்லை. புத்தியின் தெளிவால், தூய்மையும் நுண்மையும் பெற்ற மனத்தால் தியானித்து முழுமையாக அதைக் காணலாம்.


"என்ன இவ்வளவு சுலபமாகச் சொல்லிவிட்டார், முனிவர் என்று
தோன்றும். 'புத்தியின் தெளிவால், தூய்மையும் நுண்மையும் பெற்ற மனத்தால்' என்கிற சொற்றொடரில் நிறைய அர்த்தம் பொதிந்துள்ளது. இப்போதைக்குப் படித்தும், சொல்லியும், பிறர் சொல்லிக் கேட்டும் சாத்தியப்படாத காரியம் இது என்று மட்டும் தெரிந்து கொள்வோம். குறைந்தபட்சம் எப்படி சாத்தியப்படுத்துவது அதற்கான முயற்சிகள் என்னன்ன என்றாவது தெரிந்து கொள்ளலாம் இல்லையா? அப்படி தெரிந்து கொள்ளுதலுக்கான ஒரு வழிகாட்டல் தான் நடக்கப்போகும் இந்த சதஸ். மற்றபடி அவரவர்களின் சுய ஈடுபாட்டின் அடிப்படையில் அமையக் கூடியதே மற்றதெல்லாம்...


"இன்றைய அனுதின அனுபவங்களினால் உருவாக்கப்பட்டிருக்கும் சாதாரண மனம் என்பது இந்த காலகட்ட வளர்ச்சியாகக் கொள்ளப்படுபவனவற்றையே தன் வளர்ச்சியாகக் கொண்டது. 'உனக்குப் பிழைக்கத் தெரியலையே' என்கிற ஒரு சாதாரண வார்த்தையையே எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாதாரண வார்த்தை, இன்றைய வாழ்க்கை அமைப்பில், பல அசாதரண அர்த்தங்களைக் கொண்டது. பிழைப்பதற்கு அது பிரதிநிதித்துவப் படுத்தும் காரியங்கள், எதெல்லாம் தர்மங்கள் அல்ல என்று ஒரு காலத்தில் கருதப்பட்டனவோ, அதெல்லாம். வெளிப்புலன் களால், அன்றாடம் வாழ்க்கையை நடத்த நியாயங்களாகிப் போன நமது செய்கைகளினால் பாதிக்கப்பட்ட அறிவின் ஆளுகையில் உள்ளது இந்த மனம். இப்படிப்பட்ட சாதாரண கவைக்குதவாத மனதைப் பற்றி இங்குக் குறிப்பிடப்பட வில்லை.


ஒருவினாடி பேசுவதை நிறுத்தித் தொடர்ந்தார் தேவதேவன். "'அதெற்கென்ன செய்வது?.. நான் பெற்றிருப்பது இந்த மனம் தானே?.. சரி. அந்த விசேஷ மனம் எங்கு கிடைக்கும்?' என்பதே நம் கேள்வியாக இருக்குமானால், அதற்கும் பதில் கிடைக்கிறது. கிடைத்த மனதை எப்படிப் பக்குவப்படுத்த வேண்டும் என்பதற்கு வழி தெரிகிறது. இந்த மனமும் இறைவன் கொடுத்த சரக்கு. அதனால் தான், இதுவும் அவனின் கூறு--அவன் சம்பந்தப்பட்டது என்பதினால் தான், அவனை அறியும் முயற்சிக்கு இதுவும் சாதனமாகப் பயன்படுகிறது என்கிற பணிவு வேண்டும். இந்தப் பணிவு தான் அவன் அருளால் அவன் தாள் வணங்கி என்பது.


"அவன் நமக்கு இதை அளித்தபொழுது மாசுமருவற்றிருந்ததை அசிங்கப்படுத்தியது நாம் தான் என்கிற உணர்வு வந்தால், அதை சுத்தம் செய்கிற பொறுப்பும் தன்னால் வரும். அந்த சுத்தமும் நம் நன்மைக்காகத்தானே தவிர இன்னொருவருக்காக அல்ல. உலகுக்கே சொந்தமான தெய்வப்புலவர் திருவள்ளுவப் பெருமான், 'மனத்துக்கண் மாசிலன் ஆதல், அனைத்து அறன், ஆகுல நீர பிற' என்று சொன்னது இதைத்தான். 'மனம் வெளுக்க மார்க்கம் காணீர்' என்றான் எங்கள் ஊர் பாட்டுக்கொரு புலவன். 'காதறுந்த ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே' என்றிருக்க, போகும் ஊருக்குக் கொண்டு போக பெரிய பொக்கிஷமே கூட வருகிறது என்னும் பொழுது யாருக்குத் தான் இதன் மேல் ஆசை வராது?.. இந்த பொக்கிஷத்தில் ஒரு விசேஷமும் உண்டு. இப்பூவுலகில் சேர்த்து வைத்திருக்கும் வீடு,நகை,காசு இன்னபிற ஆஸ்திகளெல்லாம் கூடவராத செல்லாக் காசாகிப்போகும் போது, போகும் ஊரில் செல்லும் காசு இது மட்டுமே. அங்கு நல்ல மரியாதையை அளிக்ககூடிய நல்லாத்மா என்கிற சுமக்கக் சுமக்க சுகமளிக்கிற பொக்கிஷ மூட்டை இது" தொடர்ந்து உரையாற்றிக் கொண்டிருந்த தேவதேவன் லேசாக உணர்ச்சி வயப்பட்டாரோ என்று கூடத் தோன்றியது. அந்த அளவுக்கு தான் உரையாற்றும் செய்தியில் ஒன்றிப் போயிருந்தார் அவர்.


"நான் தென்னகத்து கோயில் நகரத்தில் பிறந்து வளர்ந்தவன். 'நகரேஷூ காஞ்சி' என்று பெருமைக்குரிய காஞ்சிபுரத்தில் சின்ன வயது பூராவும் சுற்றித்தெரிந்தவன். பெரிய காஞ்சிபுரத்தில் உலகளந்த பெருமாளுக்கு ஒப்பற்ற கோயில் ஒன்று உண்டு. கோயில் சந்நிதியில் திருவிக்ரம அவதாரக் காட்சியாய், வலது கால் ஊன்றி, இடது கால் தூக்கிய நிலையில் பிர்மாண்டமாய் பெருமாள் எழுந்தருளியிருப்பார்.. திருவடியைக் காண்பவர், அண்ணாந்து நம் பார்வை எட்டும் தூரம் தாண்டி தலைநிமிர்த்தி 'யாம் பெற்ற பேறு என்னவோ, பெருமானே' என்று அன்று உலகை ஓரடியாய் அளந்தவனின் திருமுடியைத் தரிசித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அதுவும் எப்படி?.. மூலசந்நிதியில் கும்மிருட்டாய் இருக்கும். பட்டாச்சாரியார் பெருமாளுக்குத் தீபாராதனைக் காட்டிய பின், அப்படியே அந்த குடவிளக்கைத் தூக்கி பெருமாளை கீழிருந்து மேலாகக் காட்டி, 'உலகளந்த பெருமாளைச் சேவிச்சுக்கோங்கோ.." என்று காட்டுவார். அவர் கையுயர்ந்து தீபவிளக்குச் சுடர் மேலே போகையில், பெருமாளின் முகதரிசனம் கிடைத்து அவன் அழகு நம்மை ஆட்கொண்டு 'அம்மாடி' என்றிருக்கும்...


"அப்பொழுது தரிசித்த அந்த தரிசனம் தான் இப்பொழுது இந்த வார்த்தைகளைச் சொல்கையில் என் நினைவில் நிழலாடுகிறது. 'தூய்மையான புத்தியால் துலக்கப்பட்ட மனம் பளிச்சென்று தீபமாய்த் திகழும்; இந்த தீபம் ஆன்மாவின் மூலை முடுக்கெல்லாம் தெற்றெனக் காட்டக்கூடிய வல்லமை மிக்கது' என்பார் பாரதத்தின் தவச்செல்வர் சுவாமி விவேகானந்தர்.


"அந்த ஞானச்சுடரை, தவயோகியை நெஞ்சில் நிறுத்தி மேலும் தொடருவோம்" என்றார் தேவதேவன்.


(தேடல் தொடரும்)
Thursday, February 18, 2010

ஆத்மாவைத் தேடி….37 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


37. தன்னை அறிதல்

"மனதைப் பற்றி மேலும் தகவல்கள் அளிக்க இருக்கின்ற இந்த உரையை ஒரு புதுக்கோணத்தில் அமைத்திருக்கிறோம்" என்று தொடர்ந்து உரையைத் தொடர்ந்தார் தேவதேவன். "இதுவரை இந்த அவையில் உரையாற்றியவர்கள் மனம் பற்றிக் குறிப்பிட நேரிட்ட பொழுதெல்லாம் மனம் பற்றியதான பல தகவல்களை அந்தந்த சமயத்தில் உரையாற்றுவதற்கு எடுத்துக்கொண்ட பொருள் சார்ந்ததாக நிறையச் சொல்லி இருக்கிறார்கள். பூங்குழலி அவர்கள் உரையாற்றும் பொழுது கூட தைத்திரீய உபநிஷத்து சொல்லும் உடம்புகளைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இது வரை இந்த அவையில் சொல்லியவற்றைத் தவிர்த்து, மற்றைய தகவல்களை ஒன்று திரட்டி 'ஆத்மாவைத் தேடுத'லில் மனம், புத்தியின் பங்களிப்பைப் பார்க்கிற மாதிரி உரையை அமைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். இந்த விதத்தில், மனம்,புத்தி பற்றி இதுவரை குறிப் பிடாதவற்றை தொகுத்துச் சொல்லி விடலாமென்றும் தீர்மானித்தோம்.

"ஆக, ஏற்கனவே குறிப்பிட்டு விட்ட மனம் என்றால் என்ன என்பன போன்ற ஆரம்பக்கல்வியை விடுத்து, மனதைப் பற்றிய வேறுபட்ட தகவல்களைப் பார்க்கலாம்" என்று கூறி விட்டு அவையினரின் எதிர்ப்பார்ப்பை புரிந்து கொள்ள விரும்புகிறவர் போல் ஒருமுறை அவையைச் சுற்றிக் கூர்ந்து பார்த்தார். "இந்த உரையாற்றலுக்கு இடையே அவ்வப்போது உங்களுக்கு ஏதாவது ஐயம் ஏற்படுமாயின் அவற்றையும் அவ்வப்போது விவாதித்து நாம் தெளிவடையலாம் என்று நினைக்கிறேன்" என்று தேவதேவன் சொன்ன பொழுது, அவர் சொன்னதை தங்கள் கரவொலி மூலம் அவையினர் ஆமோதிக்க, மலர்ந்த முகத்துடன் உரையாடலைத் தொடர்ந்தார் தேவதேவன்.

"வரலாறு மிகவும் முக்கியமானது. நீண்ட நெடிய மனித வரலாற்றை தேசங்களின் வரலாற்றினூடே உற்று நோக்கினால், பாரத தேசத்தின் வரலாற்றில் ஒரு தனித்தன்மை பொதிந்திருப்பதைக் காணலாம். பண்டைய இந்திய மனத்தின் அத்தனை தேடல்களும் அகத்தைச் சார்ந்திருப்பதைப் பார்க்கலாம். தன்னில் தன்னை, அந்தத் தன்னில் உயர்ந்த அறிவை, உயர்ந்த அறிவின் உச்சவெளியாக இறைவனை என்று எல்லாத் தேடல்களிலும் தன்னையே நிலைக்களனாக்கிக் கொண்டது பண்டைய இந்திய மனம் என்பது புரியும்.

"சரி. இது என்ன அகத்தைச் சார்ந்திருத்தல்?.. அப்படிச் சார்வதால் என்ன பெற்றோம்? -- என்பவை போன்ற முக்கியமான கேள்விகள் இந்த நேரத்தில் நம்முள் எழலாம். இப்படியாக இந்தக் கேள்வி கேட்பதை நானே ஆரம்பித்து வைக்கிறேன்" என்று சொல்லி இயல்பாக லேசாகச் சிரித்தார் தேவதேவன்.

அவை அவர் மேலும் கூறப்போவதின் எதிர்பார்ப்பில் ஆர்வம் கூடி உன்னிப்பாய் கவனிக்கலாயிற்று.

"வெளியுலகில் புறப்பார்வைக்குத் தெரியும் செயல்களை, நடப்புகளைப் பார்த்து கண்டதே காட்சியாய் ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ளல் புறவயப் பார்வை. தன்னையே ஆஹூதி ஆக்கிக்கொண்டு தன்னுள் தீவிரமாய் சாதனைகள் செய்து அதை அனுபூதியாய் புலங்களின் உணர்வுகளைக் கடந்த உண்மை நிலையில் உணருதல் அகப்பார்வை. தன்னை அறியப்படுத்தும் தன்னை அறிதல் என்பதும் அகப்பார்வை ஒன்றினாலேயே சாத்தியப்படும் இல்லையா?.."என்று கேட்டு விட்டு ஒரு நிமிடம் நிறுத்தித் தொடர்ந்தார் தேவதேவன்.


"தன்னை அறிதலும், ஆத்மாவை அறிதலும் ஒன்றுதான். தன்னை அறிதல் என்பது தன்னில் இருக்கும் அழியாத ஒன்றை அறிவது. அந்த அழியாத அது, அழியக் கூடிய உடல் மற்றும் மாற்றங்களுக்கு உட்பட்ட மனம்,பிராணன் இவற்றின் ஊடே, இவற்றிற் கெல்லாம் சம்பந்தப்படாது இருப்பது தான் இதன் சிறப்பு. இப்பிரபஞ்ச இயக்க சக்திகளிடையே அழியாத ஒன்று, அழியக்கூடியவற்றுடன் புலப்பார்வை க்குத் தட்டுப்படாமல் புதைந்திருப்பது தான் விந்தை. எல்லாம் அழிந்தும் மாற்றமும் கொண்ட பின் நடந்தவைகளுக்குச் சாட்சியாய் ஒன்று வேண்டுமல்லவா? அந்த சாட்சியே ஆத்மா என்றும் கொள்ளலாம்" என்று தேவதேவன் சொன்ன போது, கேட்டுக் கொண்டிருந்த அவையினர் தங்களை மறந்து தேவதேவனின் உரையில் தோய்ந்தனர்.

இந்த சமயத்தில் சித்ரசேனன் எழுந்திருந்தார். "மாற்றம் அடையக்கூடிய மனதைக் கொண்டு அழிதலற்ற ஆத்மாவை அறிவதா?..இதை விளக்கிச் சொல்லவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

"சொல்கிறேன்.." என்று தொடர்ந்தார், தேவதேவன்.


(தேடல் தொடரும்)

Friday, February 12, 2010

ஆத்மாவைத் தேடி....36 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


36. பிரபஞ்சக் கூறுகள்


"மனிதப் படைப்பில் அவன் வாழ்க்கை நெடுகப் பார்ப்போமானால், ஒரு விஷயம் தெளிவாகத் தெரியும்" என்று தொடர்ந்தார் தேவதேவன். "மனிதன் தன் மனத்தின் குரலுக்கு செவிசாய்க்காமல் அதை ஓரங்கட்டிவிட்டு,உடலால் மட்டும் வாழ்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனது அப்படிப்பட்ட வாழ்க்கை என்பது மனிதப் படைப்பிற்கே அர்த்தமில்லாத அன்னியமான ஒன்றாய்ப் போய் முடியும். உடலால் வாழ்வது என்பது உடலின் தேவைகளை மட்டுமே கவனித்துக் கொண்டு வாழ்வது. உடலின் தேவை என்பது முற்றிலும் உயிர் வாழ்வதற்கான தேவை தான். வெறும் உயிர் வாழ்வதற்கான வாழ்க்கை மட்டுமே வாழ்வது என்பது மிகவும் வரட்டுத் தனமானது; மிருகத்தனமானது. அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையைத் தவிர்த்து ஆறறிவு படைத்த மனித வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பது, உடலோடு மனம் ஒன்றிய ஒரு வாழ்க்கைமுறைதான்.


" மனத்தின் குறுக்கீடு இல்லாத உடலின் தேவை என்பதைக் கறாராகக் கணிப்பது ரொம்பவும் கடினமான வேலை. அந்த அளவுக்கு உடலும் மனமும்ஒன்றிய ஒன்று. இன்னும் சொல்லப் போனால், உடல் இயங்குவதே மனத்தின் தேவைகளை, அதன் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்காகத்தான். மனத்தின் நியாயமான குரலைப் புறக்கணித்த உடல் என்பது வாசமில்லாத காகிதப் பூவைப் போல. சரியா?.." என்று தான் சொல்வது கேட்போருக்கு சரியான புரிதலை ஏற்படுத்துகிறதா என்பதைப் புரிந்து கொள்ளும் விதத்தில், அவையை ஒரு சுற்று பார்த்து நிச்சயப்படுத்திக் கொண்டு மேலும் தொடர்ந்தார் தேவதேவன்.


"அதனால் தான் சொல்கிறேன். மனம் என்பது பற்றி அறிதல் இல்லாத ஒற்றையாக நிற்கும் உடல் உறுப்புகள் சம்பந்தப்பட்ட இன்றைய உடற்கூறு விஞ்ஞானம் என்பது முழுமையான ஒன்றல்ல. முழுமையான ஒன்றல்ல என்பது தானே தவிர இதுவரை அறியப்பட்ட அளவில் ஒப்பற்ற ஒன்று என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், உடல் என்பதுதான் அத்தனைக்கும் ஆடுகளம். அப்படி ஒரு நிலைக்களன் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை; மனம், புத்தி என்று எல்லாமே தாங்கள் இயங்குவதற்கு உபயோகப்படுத்திக் கொள்வது இந்த உடலைத்தான். அப்படிப்பட்ட கியாதி பெற்ற உடலைப் பற்றி, அதன் நலனைக் காப்பது பற்றி, செப்பனிடுவது பற்றி சிந்திக்கிற உடற்கூறு விஞ்ஞானத்தின் பெருமை பெருமைபடத்தக்கது. இன்றைய அதன் வளர்ச்சிக்கு அயராத தமது உழைப்பை காணிக்கையாக்கிய அத்தனை விஞ்ஞானிகளுக்கும் என்றென்றும் நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். உடற்கூறு சாத்திரத்தின் முழுமைக்கு இன்னொரு பகுதியான மனவியல் பற்றிய விவர சேகரிப்புகள் தேவையென்கிற எண்ணம் இப்பொழுது வலுப்பெற்றிருக்கிறது. அப்படிப்பட்ட தேவை வெறும் விவர சேகரிப்புகளோடு நின்றுவிடாமல், தற்காலத்திய உடற்கூறு விஞ்ஞானம் மனம் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு உடற்கூறு சாத்திரத்தை செழுமைபடுத்தி முழுமையாக்க வேண்டுமென்கிற ஆவல் நமக்கிருக்கிறது. உடற்கூறு சாத்திரத்தில் துறைபோகிய ஞானம் கொண்டோர் இது விஷயத்தில் கவனம் செலுத்த இப்பொழுது தலைப்பட்டுள்ளனர்.

"இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உடலின் செயல்பாடு என்பது மனம், புத்தி இவற்றைப் பிரநிதித்துவப் படுத்துகிற வேலை தான். உடம்பை வளர்த்து உயிர் வளர்ப்பதும் இதற்காகத்தான். மனத்தை நிறைக்கிற எண்ணங்களும், புத்தி விளைவிக்கின்ற விஷய ஞானமும் பிரபஞ்ச மன, புத்தி வளர்ச்சிகளோடு சம்பந்தப்பட்டவை. மனிதனும் பிரபஞ்சத்தின் ஒரு துணுக்கு ஆதலால்,எல்லாவற்றிலும் பிரபஞ்சவளர்ச்சியையே அவனும் பிரதிபலிக்கிறான். அதனால் பிரபஞ்ச வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதும், சூட்சுமங்களைப் புரிந்து கொள்கின்ற ஞானத்தை வளர்ப்பதும் அவனது எதிர்கால வளர்ச்சிக்கும், புதிய தலைமுறைக்கு சேர்த்துக் கொடுக்கும் செல்வங்களாவும் ஆகிறது.

"இந்த அடிப்படையில், மேற்கொண்டு பார்ப்போம். தைத்திரீய உபநிஷதம் சொல்லும் மனிதனின் ஐந்து உடம்புகளில், புற உடம்பைப் பற்றியும், பிராண உடம்பைப் பற்றியும் பார்த்தோம். அடுத்தது மனமாகிய உடம்பு. இந்த மனம் புற உடம்புக்கு உள்ளேயே உள்ளது. அதே நேரத்தில், பிராண உடம்புக்கு ஆதாரமாக இருப்பதும் இந்த மன உடம்பு தான் என்று தைத்திரீய உபநிஷதத்தில் குறிப்பு கொடுக்கப் படுகிறது" என்று முன்னோட்டமாகச் சொல்லி விட்டு கொஞ்சம் நிறுத்தி மேலும் தொடர்ந்து உரையாற்றத் தொடங்கினார் தேவதேவன்.


(தேடல் தொடரும்)

Saturday, February 6, 2010

ஆத்மாவைத் தேடி …. 35 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


35. ஆன்மிகத்தின் அடித்தளம்


டுத்த கேள்வியாக யார் எதைக் கேட்கப் போகிறார்கள் என்று தேவதேவன் எதிர்ப்பார்திருந்த பொழுது, அசோகன் எழுந்திருந்தார். இவர் தொல்லியல் மேம்பாடுகள் குறித்து நிறைய ஆராய்ச்சிகள் செய்தவர். ஆந்திரத்தில் இதற்காக இப்பொழுது ஒரு அறக் கட்டளையை சொந்த முயற்சியில் நிறுவி ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருப்பவர். அவர் எழுந்திருந்ததும் எல்லோருடைய கவனமும் அவர் பக்கம் திரும்பியது.

அசோகன் சொன்னார். "தேவதேவன், ஐயா! உடல் பற்றி உபநிஷத்துக்களின் பார்வையாக முழுமையாக எல்லாவற்றையும் பார்த்து விட்டு அடுத்து மனம் பற்றி இதே மாதிரியான ஒரு பார்வையை வைத்துக் கொள்ளலாம் என்று தாங்கள் நினைப்பது புரிகிறது. இன்றைய உடற்கூறு சாத்திரத்தில் இதுவரை நாம் கண்டறிந்துள்ள உண்மைகளை ஒருபக்கம் வைத்துக்கொண்டு உபநிஷத்துக்கால கருத்துக்களை இன்னொருபக்கம் வைத்துக் கொண்டு இரண்டையும் ஒப்புமை படுத்திப் பார்க்க வேண்டும் என்கிற அவா சதஸ் நடந்து முடிந்த பின்னால் பலருக்கு ஏற்படுவது சகஜமே" என்று அவர் சொல்லிக் கொண்டு வரும் பொழுது
மேலும் தொடர்வதற்கு அவர் தயக்கப்படுவது மாதிரி உணர்ந்ததினால் தேவதேவன், "சொல்லுங்கள், அசோகன்! எந்த தயக்கமும் வேண்டாம். நீங்கள் நினைப்பது எதுவும் சொல்லலாம்" என்று அவரை ஊக்கினார்.

அசோகன் தொடர்ந்தார்:"பொதுவாக உபநிஷத்துக்கள் சொல்லுபவை கற்கால அறிவுபூர்வமற்ற செய்திகள் மாதிரி இன்றைய காலகட்டத்தில் ஒரு பிரமை ஏற்பட்டிருப்பது தெரிகிறது. அதனால் அன்றே உபநிஷத்துக்கள் சொன்ன உண்மைகளை இன்றைய புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புளோடு ஒப்புமை படுத்துகிற மாதிரி சதஸ்ஸில் சமர்ப்பிக்கப்படும் கருத்துக்களுக்கான வரைவுகளை வைத்துக் கொண்டால் அது எடுப்பாகத் தெரியும் இல்லையா?உபநிஷத்துக்களின் பெருமையை சாதாரணமாக எல்லோரும் அறிந்து கொள்வதற்கும் அது வழிவகுக்கும் இல்லையா?" என்று கேட்டார்.

"ரொம்ப சரி. உங்கள் ஆதங்கம் புரிகிறது." என்று புன்முறுவலுடன் ஆரம்பித்தார் தேவதேவன். "ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்.." என்று அவர் மேலும் தொடர்ந்த பொழுது அவை உறுப்பினர் அவர் சொல்வதை வெகு உன்னிப்பாகக் கவனித்தனர். "சாதாரணமாக நோக்கும் பொழுதே விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் என்றால் அது உண்மையான உண்மை என்று கேள்வி கேட்காத ஒரு உணர்வு நம்மிடம் படிந்திருப்பது தெரியும். இந்த உணர்வு பிரமையல்ல; பிரதட்சய உண்மை. ஏனென்றால் விஞ்ஞான சோதனைகளின் வெளிப்பாடாய் வரும் முழுமையான தெளிவு அது. இதில் இருக்கிற இன்னொரு உண்மை என்ன வென்றால், எந்த கண்டுபிடிப்பின் இறுதி வெற்றியும் தடாலென்று வானிலிருந்து குதித்ததில்லை. முன்னால் பெற்ற ஒரு வெற்றியின் தொடர்ச்சிதான் இது என்று ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பின் வெற்றியும் அதற்கு முன்னாலான ஒரு வெளிப்பாட்டைச் சார்ந்து இருக்கும். உதாரணமாக ஸ்டீவன்ஸன் தொடர் புகைவண்டி இயக்கத்திற்கு காரணமாக இருந்தார் என்றால், அதற்கு முன்னால் நீராவி இஞ்சினைக் கண்டறிந்து தொழிற் புரட்சியைத் தொடங்கி வைத்த ஜேம்ஸ்வாட்டின் கண்டுபிடிப்பின் தொடர்ச்சி இது, இல்லையா?.. இந்த மாதிரி ஒவ்வொன்றைப் பற்றியும் நாம் அறியும் எந்த புது அறிவும், முன்னால் நமக்குத் தெரிந்த ஒன்றின் தொடர்ச்சியாக, அதை செழுமைப்படுத்திய ஒன்றாக இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று.


பக்கத்தில் குவளையில் வைத்திருந்த நீரை ஒரு மிடறு விழுங்கி விட்டுத் தொடர்ந்தார் தேவதேவன். "பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த பாரத தேசத்தில் உணவைப் பற்றி, உடலைப்பற்றி, அந்த உடல் செயல்படும் செயலாற்றல் பற்றி, இயற்கையோடு இயைந்த வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்திருக்கிறார் கள், கருத்து சொல்லியிருக்கிறார்கள் என்பதே ஒரு தொடக்கமாகத் தெரிகிறது. தைத்திரீய உபநிஷத்தில், 'சீஷா வல்லி' என்று வாழ்க்கைக் கல்வியே போதிக்கப் படுகிறது. சீரிய ஒழுக்கத்தின் அடிப்படையிலான ஒரு வாழ்க்கை முறை என்பது இறைத்தன்மையை அளிக்கும். உயிர் என்னும் ஒப்பற்ற சக்தி கிடைக்கப்பெற்ற சிந்திக்கும் வரம் கிடைத்த உயிர்களுக்கு அப்படித்தான ஒரு இறைத்தன்மை கைவரப்பெறுவதற்குக் கைப்பிடித்து அழைத்துச் செல்வதே ஆன்மிகம். இயற்கையில் பொதிந்திருக்கும் புதிர்களுக்கு யோகத்தால் விடை கண்டவர்களே யோகிகள். யோகமே ஒரு விஞ்ஞானமுறை தான். தன்னையே பரிசோதனைக் களமாக்கிக் கொண்டு செய்யும் தவம். அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு இயற்கையை தரிசிக்க முயல்வதும், அதில் தங்களைப் பறிகொடுப்பதுமாக இந்த தவச்சீலர்களின் செயல்பாடு இருந்திருக்கிறது. அன்றைய வராகமிகிரர், ஆரியபட்டரிலிருந்து பல்வேறு துறைகளில் அத்தனைபேருடைய பங்களிப்பும் மறக்கக் கூடியதல்ல; மறைக்கக் கூடியதுமல்ல. ஆக, இன்றைய விஞ்ஞான வளர்ச்சியை பண்டைய ஆன்மிக எண்ணங்களுக்கு எதிராக வைக்காமல், அவற்றின் தொடர்ச்சியாகக் கொள்வதே சரியென்று நினைக்கிறேன். அந்த அடிப்படையில் நாள்தோறும் சிறக்கும் எந்த மேம்பட்ட சிந்தனையையும் வளர்ச்சியையும் நாம் உள்வாங்கிக் கொண்டு அவற்றை மென்மேலும் செழுமைபடுத்துவதே மனிதகுலத்தின் கடனாகிப் போகிறது" என்று சொல்லிவிட்டு "இது தொடர்பாக மேலும் சில தகவல்களைச் சொல்லவேண்டும்" என்று தொடர்ந்தார் தேவதேவன்.


"ஸ்தூலமாக கண்ணுக்குத் தெரிகிற மாதிரி மனம் என்கிற ஒரு உறுப்பு உடற்கூறு சாத்திரத்தில் இல்லையென்றாலும், உலக அரங்கில் மனம் பற்றியதான உண்மைகள் அறியப்பட வேண்டும் என்கிற தேவை ஏற்பட்டிருக்கிறது. மேல்நாட்டு ஜர்னல்களில் மனம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பெரிய அளவில் தற்காலத்திய அறிதலாக வெளியிடப்படுகின்றன. 'மனவளக்கலை'யும் 'யோகக்கலை'யும் இன்று உலக அரங்கில் பாடத்திட்டங்களாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கின்றன. அவை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. மனிதகுல மேன்மைக்கும், ஓருலகச் சிந்தனைக்கும் பாரதம் பெற்ற கல்வியை கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டுமென்பதே நம் பணியாகிப் போகையில், வேறுபட்ட சிந்தனைகளுக்கு வழியில்லாமல் போகும் என்பது என் எண்ணம்" என்று தேவதேவன் சொன்ன போது, அவர் சொன்னவற்றின் குறிப்புகளை உற்சாகத்தோடு குறித்துக் கொண்டனர்.

"நீங்கள் சொல்வது சரிதான்.."என்று உணர்வுபூர்வமாக உணர்ந்த உணர்வில் சொன்னார் அசோகன். "

"வேறு கேள்விகள் இல்லையென்றால், இந்த அளவில் உடல் பற்றி இப்போதைக்கு முடித்துக் கொண்டு மனம் பற்றி தொடர்ந்து பார்க்கலாம்" என்று சொன்னார் தேவதேவன்.

அவையின் ஒட்டுமொத்த ஒப்புதலுக்குப் பிறகு அடுத்து மனம் பற்றி தொடர்ந்து உரையாற்ற யத்தனித்தார் தேவதேவன்.
(தேடல் தொடரும்)Wednesday, February 3, 2010

ஆத்மாவைத் தேடி....34 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


34. மேலும் ஐந்து வாயுக்கள்


ன்றைய அவைகூட்டத்திற்கும் கூட்டம் கூடுவதற்கான குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னாலேயே வழக்கம்போல் அவையில் அத்தனைபேரும் கூடிவிட்டனர். தேவதேவனும் சரியான நேரத்திற்கு மெல்லிய புன்முறுவலுடன் மைக் பிடித்தார்.

"இன்றைக்கு காலை அமர்வை கலந்துரையாடலாக வைத்துக் கொள்ளலாம் என்று ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நேரம் ஒதுக்கி இருக்கிறார்கள். அவரே இன்னொன்றையும் சொல்லியிருக்கிறார். ஒருகால், நமது இந்தக் கலந்துரையாடலைக் காலை அமர்வுக்குள் முடித்துக் கொள்ள முடியவில்லை என்றால், உணவுக்குப் பின் நாம் கூடும் மாலை அமர்விலும் அதை நீட்டித்துக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியிருக்கிறார்கள். அதனால், நமக்கு நிறைய நேரம் கிடைத்திருக்கிறது. விவரமாக எல்லாவற்றை யும் அலசலாம். பிராணன் பற்றிய இந்த அடிப்படை நன்கு புரிந்த பின், அடுத்த பகுதியாக மனத்திற்குப் போகலாம்" என்று தேவதேவன் சொல்லிய பொழுது, எழுந்திருந்த தொல்பொருள் துறையைச் சார்ந்த சுகவனேசன்,"ரொம்ப நன்றி.." என்று சொல்லி விட்டுத் தொடர்ந்தார்.

"இந்த அவையில் இதற்கு முன் நிகழ்த்திய உரைகளிலும் உள்ளில் பிராணனாக செயல்படுவது இது தானோ என்று இந்த காற்று பற்றி நிறையச் சொன்ன நிவேதிதா அவர்கள்,இதற்கு பிராணவாயு என்று பெயர் வைத்ததே மிகவும் பொருள் பொதிந்த ஒன்றே என்றும் சொன்னார்கள். வெளியில் இருக்கும் காற்றைத் தானே இழுத்து சுவாசிக்கிறோம்? உள்ளே செல்வது வெளிக் காற்று என்றாலும் அவை செயல்படுவதற்கேற்ப தனித்தனிப் பெயர்களைப் பெறுவதாகச் சொன்னீர்கள்.. இது தவிர இந்த வாயுக்களின் பிரிவுகள் பற்றி வேறு தகவல்கள் இருந்தால் அவற்றைத் தெரியப்படுத்துமாறு வேண்டுகிறேன்" என்று கேட்டுக்கொண்டு அமர்ந்தார்.

தேவதேவன் தோளில் தொங்கிய துண்டைச் சரிபடுத்திக் கொண்டு, சொல்ல ஆரம்பித்தார்."நல்லது நண்பரே!" என்று முகம் மலர்ந்து தொடர்ந்தார். "முதலில் வெளிக்காற்றைப் பற்றிப் பார்ப்போம். வெளிக்காற்றில் பெரும்பகுதி நைட்ரஜன் தான். அது 78% அளவில் என்றால், ஆக்ஸிஜன் 21%, மற்றும் மிகக் குறைந்த அளவில் ஆர்கன், கார்பன்-டை-ஆக்ஸடு, நியான், ஹைட்ரஜன் போன்றவை பாக்கியுள்ள 1%. இதெல்லாம் பிற்காலத்திய வேதியியல் பகுப்புகளும், அவற்றிற்கான பெயர்களும். ரொம்ப சரி. வெளிக்காற்று காற்றாக உள்ளே நுழைந்தாலும் அது உள்ளே பிராணனாக செயல்படுகையில் அங்கங்கே செயல்படும் விதங்களுக்கு ஏற்றவாறு பிராணன், அபானன், வியானன், சமானன், உதானன் என்று பெயர் கொள்கின்றன என்று பார்த்தோம். இது உபநிஷத்துக்களில் நாம் கண்ட உண்மை" என்று சொல்லிவிட்டு கொஞ்சம் நிறுத்தினார்.

பின் தொடர்ந்தார். "அதைத்தவிர, பிராணன் தொடர்ச்சியான மற்ற நான்கு வாயுக்களும் எங்கெங்கு நிலைபெறுகின்றன அவற்றின் செயல்பாடுகள் என்ன என்றும் பார்த்தோம். நமது பாரத பண்டைய வைத்திய முறையான ஆயுர்வேத வைத்தியம் மேலும் ஐந்து வாயுக்களைப் பற்றி கூறுகிறது. பிராண வாயு, அபான வாயு, வியான வாயு, உதான வாயு, சமான வாயு இவற்றைத் தவிர நாக, கூர்ம, துரகர, தேவதத்த, தனஞ்செய என்று இன்னும் ஐந்து வாயுக்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் சொல்கிறது. புதுசாகச் சொன்ன ஐந்து வாயுக்களில், நாக வாயு நாம் உண்ணும் உணவு எதிரெடுக்கையிலும், கண்களை இமைக்கையில் கூர்ம வாயுவும், தும்மல் ஏற்படுகையில் துரகர வாயுவும், கொட்டாவி விடுகையில் தேவதத்த வாயுவும் செயலாற்றுவதாகச் சொல்கிறார்கள்.

"கடைசியில் சொன்ன தனஞ்செய வாயு மட்டும் ஒரு தனிப்பட்டப் பணிக்காகக் காத்திருக்கிறது. மரணம் சம்பவித்ததும் இறந்துபட்ட உடலிலிருந்து எல்லா வாயுக்களும் வெளியேறிக் காணாமல் போக, தனஞ்செய வாயு மட்டும் உடலில் தங்கி தனது பணிக்காகக் காத்திருக்கும். இறந்த உடலை வீங்கச் செய்வதே அதன் வேலை. அந்தப்பணி முடிந்ததும், அதுவும் வெளியேறி விடும்"என்று தேவதேவன் சொல்லி அடுத்த கேள்வியை எதிர்பார்த்து நின்றார்.


(தேடல் தொடரும்)

Related Posts with Thumbnails