மின் நூல்

Wednesday, April 27, 2016

அழகிய தமிழ் மொழி இது!...பகுதி-- 8

ரு நாவலுக்கான அத்தனை சிறப்புகளையும் கொண்டது சிலப்பதிகாரம்.  அது மட்டுமில்லை, அந்தக் காப்பியத்தைப் படைப்பதில் புதுமையான பல படைப்பிலக்கிய திறமைகளை அடிகளார் வெளிப்படுத்தியிருப்பது அவரது ஆக்கத்திற்கு முன்னால் எல்லாம் இல்லாத புதுமாதிரியாய் அமைந்திருப்பது வியப்பாக இருக்கின்றது. .

அது வரை தன்னுணர்ச்சி பாடல்களாய் இருந்த இலக்கிய மரபை மடை மாற்றி ஒரு முழுமையான காப்பியப் போக்குச் சோதனைக்கு உட்படுத்தி அதில் வெற்றி கண்ட முதல் தமிழ் மகன் இளங்கோ ஆவார். அதே மாதிரி தமிழ் இலக்கிய உலகு வேறொரு புதுமையான மாறுதலுக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டதும் அடிகளாரின் இந்த வெற்றிக் காப்பியத்திற்கு பின்னால் தான்.  அதுவரை அரசு மரபினரையேப் போற்றிப் பாடிய வழக்கத்தை மாற்றி முதன் முதலாக ஒரு சாதாரணக் குடிமகனை பாட்டுடைத் தலைவனாக வரித்து பாடிய முதல் பெரும் காப்பியம் அடிகளாரின் சிலம்புக் காவியமே..

மங்கலமான மணநாள் விழாவில் ஆரம்ப்பிக்கிறது இந்தக் காப்பியம். கோவலன்—கண்ணகி மணநாள் விழாவை படம் பிடித்தாற் போல காட்சிப்படுத்தும் ஆரம்ப அத்தியாயமான மங்கல வாழ்த்துப் பாடலின் திருமணக் காட்சியின் வர்ணனைகள் நம்மை மயக்குகின்றன.  மாலைகள் பொருத்திய மண்டபம், நீலப்பட்டிலான விதானத்தின் கீழே அழகிய முத்துப் பந்தல்., வானில் நீந்தும் சந்திரன் ரோகிணியைச் சாரும் நல்லதோர் ஓரையில் அருந்ததி அன்ன கற்புடை நங்கை கண்ணகியின் வலது கரம் பற்றி  மாமுது பார்ப்பான் மறை வழிகாட்டிட கோவலன் மங்கலத் தீ வலம் வருகிறான்.

நறுமணப் பொருட்களை ஏந்திய அழகிய மகளிர், மாலைகளை தாங்கிப் பிடித்தபடி வாழ்த்துப்பா பாடிய நங்கையர், சுண்ணப்பொடி ஏந்திய மங்கையர், அகிற்புகை சூழ்ந்த சூழலில் விளக்குகளை ஏந்திய மகளிர் புன்னகைச் சுடருடன் சூழ்ந்து வர நடுவில் முளைப் பாலிகை தாங்கியும், பூரண கும்பம் ஏந்தியும் மங்கையர் வலம் வந்தனர் காட்சிப்படுத்தல்கள் நீளும் பொழுது அந்தக்கால திருமணவிழாக்கள் எப்படியிருந்திருக்கும் என்று நமக்கு ஒரு அறிமுகம் கிடைக்கிறது.  பாரம்பரிய பழக்க வழக்கங்களில் எந்த பெரிய மாற்றமும் இல்லாமல் இன்றைய நம் இல்லத் திருமண விழாக்களும் கிட்ட்த்தட்ட அதே மாதிரியாக் இன்றும் இருப்பதில் உள்ளூர ஒரு மகிழ்ச்சி வேறே.

பூரண கும்பம் ஏந்திய மகளிர் வலம் வரும் அந்த சமயத்தில் கவிஞன் வாக்காக அந்த வரிகள் அவன் அறியாதது போலவே வருகின்றன: பொற்கொடி போன்ற நீண்ட கூந்தல் கொண்ட மகளிர் “இந்த மங்கை நல்லாள் தன் காதலனை கண்ணிலும் மண்ணிலும் பிரியாது என்றும் வாழ்வாளாக!  அவனும் இவளின் பிணைந்த கை நெகிழாமல் இருப்பானாக: பதுமணம் காணும் இந்த தம்பதிகள் தீதின்றி நீடுழி வாழ்க!” என்று மலர் தூவி வாழ்த்துகின்றனர். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது தெரியும். இருந்தும் பின்னால் நேரவிருக்கிற பயங்கரத்தை இந்த வாழ்த்து மழை ஒருகால் புரட்டிப் போடுமோ என்கிற லவலேச ஆசையாலோ என்னவோ அடிகளார் வார்த்தைப் பின்னல்களை வாழ்த்தின் இடையே செருகியிருக்கிறார்.

காதலின் நேர்த்தியை செயலில் வடித்துக் காட்டும் இன்னொரு இடம். முதலிரவில் கண்ணகியில் தோளில் சாய்ந்து, கோவலன் ஐந்தாம் வேதம் ஓதுகிறான்: “பெண்ணே! உன்னை மலையிடைப் பிறவாத மணி என்பேனா? கடலிடைப் பிறவாத அமிழ்து என்பேனா? யாழிடைப் பிறவாத இசை என்பேனா? நீண்ட கருங்கூந்தலை உடைய உன்னை---“ என்று அந்த 'நின்னை’யில் காதல் நாயகனின் பாதி வர்ணிப்பிலேயே காதல் வசனத்தை வெட்டி இளங்கோ புதுமை செய்கிறார். நின்னை?.. காதலியின் கடைக்கண் பார்வையில் அந்தப் பேரழகின் முன்னே தடுமாறிய பேச்சு, செயலாய் நீளப் போகிறது என்று நமக்குத் தெரிகிறது.  ..  

சிலப்பதிகாரத்தை நயம்  பாராட்டுதல் என்று ஆரம்பித்தால் அதற்கு எல்லையே இல்லாமல் போகும். அந்தக் காப்பியத்தின் திருப்பிய பக்கமெல்லாம் தமிழ் கொஞ்சுகிறது.  அந்நாளைய தமிழர் பண்பாட்டின் விழுமியங்களை ஒவ்வொன்றாக எடுத்து கடைப்பரப்பிய அழ்கு காணக்கிடைக்கிறது. .

இன்றைய நாவலான அன்றைய அந்தக் காப்பியத்தின் கட்டுக்கோப்பான அமைப்புகள் நம்மைக் கவருகின்றன. மூன்று காண்டங்களில் முப்பது காதைகளை நகரும் கதைப்போக்கிற்கு வெகுப்பொருத்தமாக அமைக்கிறார். மூன்று காண்டங்களுக்கும் அவர் பெயர் கொடுத்த பெருமையே அந்நாளைய தமிழகத்தின் மூவேந்தர்களின் தலைநகரங்களுக்கான பெருமையாகி எந்த வேற்றுமையும் இன்றி மூவேந்தர்களுக்கிடையேயான ஒன்றுமைப் பதாகையை  உயரத் தூக்கிப் பிடிக்கிறது.


புகார் காண்டத்தில் காப்பியத் தலைவன்-- தலைவியின் கல்யாணக் கோலம், அவர்களின் குடும்ப வாழ்க்கையின் துவக்கம் என்றாகி, வணிக குலத்தின் வாழ்க்கைப்பாட்டிற்கு ஏற்ப கோவலன் மதுரை ஏகி அநியாயமாய் கொலைக்களப்பட்டு ஒன்றைச் சிலம்பை கையிலேந்தி நீதி கேட்ட கண்ணகி மதுரையை எரித்து வஞ்சிக்காண்டதில் கற்பின் தெய்வமாய் காட்சி தருகிறாள். 

புகார் காண்டத்தின் மூன்றாவது காதையான அரங்கேற்றுக் காதையிலேயே தேவமகளிருக்கு எந்தவிதத்திலும் குறைவு படாத மாதவியின் அறிமுகம் கிடைக்கிறதுஅவள் நாட்டிய அரங்கேற்றத்தை அரங்கேற்றும் சாக்கில் ஆடல், பாடல் இலக்கணங்களின் அத்தனை அம்சங்களையும் அலசுகிறார் அடிகளார்.  கூத்தாசிரியனின் சிறப்பு, நாட்டிய மேடையின் அமைப்பு, நாடக அரங்கில் வைக்கப்படும் தலைக்கோல், அதனை வழிபடும் மரபு என்று நிறைய விவரங்களை அறிகிறோம்.  குழலோசை, யாழிசை, மத்தள முழவு,  ஆமந்திரிகை, குயிலுவம் என்று இசையில், இசைக்கருவிகளீன் வரிசை, வரிசை கட்டப்படுகிறது. 

அந்தி மாலை சிறப்புச் செய் காதையில் மாதவியின் தாய் சித்திராபதி பரிசிலாக விலை பேசிய ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் மாலையை வாங்கி மாதவையை உரிமை கொள்கிறான் கோவலன்.  மாதவியுடன் சுகித்திருக்கிறான்.

இந்திர விழவு எடுத்த காதையில் புகார் நகரின் மருவூர் பாக்கத்தின் காட்சிகள், பட்டினப்பாக்கத்தின் நகர்ச் சிறப்புகள் எல்லாம் பண்டைய  தமிழகத்தின் பிரமிக்க வைக்கும் வாணிபச் சிறப்பைச் சொல்கின்றன.
இப்படி ஒவ்வொரு காதையிலும் சிலப்பதிகார காப்பியத்தின்  பக்கங்கள் புரட்ட புரட்ட எத்தனை செய்திகள்! வரிசை கட்டி நிற்கும் வகைவகையான எவ்வளவு விவரக் குறிப்புகள் என்று வாசிக்கையிலேயே மலைக்கிறோம்.


இத்தனைக்கும் இடையே நமக்கு தெரிய வருவது என்னவென்றால் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னால் தான் நாவல் இலக்கியம் பற்றி நாம் தெரிந்து கொண்டோம் என்று சொலவது எவ்வளவு வரலாற்றுப் பிழை என்று தெரிகிறது. செய்யுளும் உரைந்டையும் விரவிக் கலந்தவாறு உரைந்டை இடையிட்ட செய்யுளாய் இருந்த காப்பிய வடிவு, செய்யுள் நீங்கிய உரைநடையாய் நாவல் என்று வடிவு கொண்டிருக்கிறது.  அவ்வளவு தான். காப்பியம் என்று அழைக்கப்பட்ட பண்டைய இலக்கிய் வடிவின் அடுத்த மாற்றத்திற்குள்ளான வடிவு தான் இன்றைய நாவல். அவ்வளவு தான்.  இப்படியாக இன்றைய நாவல் இலக்கியத்திற்கு அன்றே காப்பியம் என்ற வடிவில் கால்கோள் விழா நடந்திருக்கிறது.  வடிவம் மட்டுமல்ல,அன்றைய காப்பியங்களில் ஒரு நாவலுக்கான உள்ளடக்கமும் எவ்வாறு பொருந்தியிருநதன என்பதனை அடுத்துப்  பார்ப்போம்.

(தொடரும்)


படங்கள் உதவியோருக்கு நன்றி


Wednesday, April 13, 2016

அழகிய தமிழ் மொழி இது!...

பகுதி--7

சிறுகதை, நாவல், கட்டுரை கவிதை என்று எந்த படைப்பாக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.  அதன் ஆரம்பம் முக்கியம்.

சிலப்பதிகாரத்தின் ஆரம்பம் அதி உன்னதமானது.  கோவலனுக்கும் கண்ணகிக்குமான திருமணவிழாவின் கோலாகலத்துடன் அந்த உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளின் தொடக்கம் நிகழ்கிறது.

காதலுக்கு நாயகன் சந்திரன்.  அவனைப் போற்றுவதாக 'திங்களைப் போற்றுதும், திங்களைப் போற்றுதும்' என்று சிலப்பதிகார காப்பியத்தின் முதல் வரி அட்டகாசமாக ஆரம்பிக்கிறது.  அடுத்த வரி திங்களைப் போற்றுவதற்கான காரணத்தைச் சொல்கிறது.

எந்த நூலுக்கும் பாயிரம் (முன்னுரை) அவசியம் என்று தொல்காப்பியர் சொல்லியிருப்பதாகப் படித்தோம் அல்லவா?.. சிலப்பதிகாரத்தின் பதிகமோ அருமையிலும் அருமை.

பாயிரம்-- பதிகம் இரண்டும் ஒன்றே தான்.  நூலில் பாயும் பொருளைக் கூறுவது பாயிரம்.  நூலில் பதிந்துள்ள கருத்துக்களைத் திரட்டிக் கூறுவது பதிகம்.

சிலப்பதிகாரத்தின் பதிகம் ஏகப்பட்ட சிறப்புகளைத் தன்னுள் உள்ளடக்கியது.

'குணவாயில் கோட்டத்து அரசு துறந்திருந்த.....' என்று ஆரம்பிக்கும் பதிகம், 'இது, பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபு என்' என்று முடியும்.  பதிகத்தில் மொத்தம் 90 வரிகள்.  இந்தத் தொண்ணூறு வரிகளின் இடையில் எங்கேயும் முற்றுப்புள்ளியே கிடையாது.  தொண்ணூறு  மொத்த  வரிகளும் ஒரே வரியில் அடங்கிய மாதிரி --ஆரம்பம் கொண்ட பதிகம் அதன் கடைசி வரியில் தான் முற்றுப்புள்ளி கொண்டு முற்றுப் பெறுகிறது.  இந்த மாதிரியான புதுமையான ஒரு முயற்சியை உலகத்தில் எந்த இலக்கியமும் கொண்டிருக்கவில்லை.

சிலப்பதிகாரத்தில் மொத்தம் 30 காதைகள்.  இந்த முப்பது காதைகளின் பெயர்களும் வெகு அழகாக பதிகத்தில் அடக்கப்பட்டு மொத்தக் கதையின் சுருக்கமுமே  உரைநடை கலந்த செய்யுளாய் பதிகத்தில்  காணக் கிடைக்கிறது. முப்பது காதைகளும் மூன்று  காண்டங்களில் அடக்கப்பட்டிருக்கின்றன. அந்தந்த காதைகள் நிகழ்விடங்களைச் சார்ந்த நிலங்களின் அன்றைய வழக்கத்திலிருந்த பெயர்களை புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று வகைப்படுத்தி அப்படி வகைப்படுத்தியதை அந்தந்த காண்டங்களுக்கு பகுதித் தலைப்புகளாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

சிலப்பதிகாரம் என்று இந்தக் காப்பியத்திற்கு பெயர் வைத்ததே புதுமையானது.  உலகத்தின் சிறந்த காவியங்கள் எல்லாம் பொதுவாக காவிய நாயகன் அல்லது நாயகியின் பெயரையோ அல்லது அந்தக் காவியம் உணர்த்தும் நீதியையோ அன்றி அந்தக் காவியத்தின் மையப்புள்ளியைச் சுட்டிக் காட்டுவதாகவோ அமைந்திருத்தல் காணலாம்.

பெரும் புலவன் காளிதாசனின் சாகுந்தலம் பெருங்கதையை நிகழ்த்துவதற்கு ஒரு கணையாழியே காரணமாகிப் போகிறது.  ஆனால் காளிதாசனோ தனக்கு நன்கு தெரிந்தே கணையாழி என்று அந்தக் காவியத்திற்கு பெயர் வைக்கவில்லை.. அவன் தன் காவியத்தை நாயகியின்  காவியமாகவேக்  கொண்டு  சாகுந்தலம் என்று பெயர் வைத்தான்.  உலக நாடகத் தந்தை ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ நாடகக் கதைக்கு ஒரு கைக்குட்டையே காரணமாகிப் போகிறது.   ஆனால் ஷேக்ஸ்பியரோ கைக்குட்டையை  அந்தக் கதையோட்டத்திற்குக் கருவியாக்கிக் கொண்டு அந்த நாடகத்திற்குப்  பெயராக நாயகனின் பெயரையே கொண்டார்.

ஆனால்  தமிழின் முதல் காப்பியத்தை யாத்த இளங்கோ அடிகளார் , காப்பியத்தின் தலைவன் பெயரையோ தலைவி பெயரையோ தன் காவியத்தின்  தலைப்புப்  பெயருக்கு  நாடாமல்,  இந்தக் காப்பியத்தின் சுழற்சிக்கு  அச்சாணியாகிப்  போன சிலம்பின் கதையே இதுவெனத் துணிந்து சிலப்பதிகாரம் என்று பெயரைச் சூட்டியிருக்கிறார்  காலாதிகாலமாக வழிவழி வந்த வகைக்கு மாற்றாக இளங்கோ செய்த புரட்சி இது.

சொல்லப்போனால் கண்ணகியின் அந்த காற்சிலம்பு கிட்டத்தட்ட காப்பியத்தின் மையப்  பகுதியான 16-வது காதையான  'கொலைக்களக் காதையில் தான் மையப்படுத்தப் படுகிறது.  கண்ணகியிடம் கால்சிலம்பைத் தருக என்று கேட்கும் பொழுது கூட, ''கற்பின் கொழுந்தே!  பொற்பின்  செல்வி! சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு  யான் போய் மாறி வருவன்' என்று வெகு
சாதாரணமாக வியாபார குலத்தில் வந்த ஒரு வியாபாரி தன்  மனைவியிடம் பொன்னால் செய்த ஒரு பொருளை வியாபார முதலீடாகக் கொள்ளக் கேட்பது போல்  கேட்கிறான். .பின்னால் அந்தச் சிலம்பினால் விளையப் போகும் பூகம்பம் தெரிந்திருந்தும் வெகு சாதாரணமாக போகிற போக்கில் சொல்லிப் போவது போல் இளங்கோவும் அதைக் குறிப்பிடுகிறார்.

இப்படியாக காப்பியத்தின் போக்கில் ஆசிரியன் பின்னால்  நடக்கப்போவதின் சிறு சலனத்தைக்  கூட வெளிக்காட்டாமல் ஆற்றின் அமைதி போல அடக்கி வாசிப்பது  கதாசிரியரின் திறமை.  பிற்கால நாவல் இலக்கியத்தில் கூட இந்த மாதிரியான எழுதுபவனின் திறமைகள் வாசிப்போராலும், விமரிசகர்களாலும் பலபடப்  பாராட்டப் படுவதற்கு நிறைய எடுத்துக்  காட்டுகளையும் சொல்லலாம்.  இப்படியான  திற்மைகள் வெகு நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ் இலக்கியங்களில்  காணக்கிடைப்பது படைப்புலக அரங்கில் அந்த மொழிக்கான பெருமை.

சிந்தியல் வெண்பாவில் ஆரம்பிக்கும் சிலப்பதிகாரக் காப்பியத்தின் ஆரம்பத்தை,, கல்யாணக் காட்சியை விவரிப்பதற்கு வாகாக கொச்சகக் கலிப்பாவிற்கு மாற்றுகிறார் புலவர் பெருமான்.  அந்தத் திருமணக்  காட்சியின் தொடக்க விவரிப்பாக இன்னார் இன்னார் என்று மணமகளையும், மணமகனையும் வெகு அழகாக அறிமுகப்படுத்துகிறார்.  கவனத்தில்  கொள்ளுங்கள்:  மணமகள் அறிமுகத்தை அடுத்துத் தான் மணமகன் அறிமுகம்.

யார் இந்த மணமகள்?..

நாகநீள் நகரொடு நாக்நாடு அதனொடு
போகநீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில்
மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
ஈகைவான் கொடியன்னான் ஈரா றாண்டகவையாள்;
அவளுந்தான்,

போதிலார் திருவினாள் புகழுடை வடிவு என்றும்
தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்
மாதரார் தொழுதுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள் பெயர்மன்னும் கண்ணகியென் பாள் ம்ன்னோ.

வயது, திறமை, யார் மகள் என்று எல்லாம் சொல்லி காதலாள் பெயர் கண்ணகி என்று வகையாக அறிமுகம் செய்கிறார்.

அடுத்து, யார் அந்த மணமகன்?..

பெருநில முழுதாளும் பெருமகன் தலைவைத்த
ஒருதனிக் குடிகளோ டுயர்ந்தோங்கு செல்வத்தான்
வருநிதிப்பிறர்க் கார்த்து மாசாத்து வானென்பான்
இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டாண்ட கவையான்
அவனுந்தான்

மண்தேய்ந்த புகழினான் மதிமுக மடவார்தம்
பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்
கண்டேத்துஞ் செவ்வேளென்று  இசைபோக்கிக் காதலாற்
கொண்டேத்தும் கிழமையான்  கோவலனென்பான் மன்னோ 

மணமகனுக்கும் வயது, புகழ், அழகு,யார் மகன் என்றெல்லாம் சொல்லி இவன் பெயர் இது என்று பெயரையும் சொல்லி அறிமுகம் செய்கிறார்.

சிலப்பதிகாரம் பற்றி முழுத்தகவலும் இங்கு சொல்லப்போவதில்லை. சிலப்பதிகாரத்தை மேலோட்டமாகப் புரட்டிப் பார்க்கும் பொழுதே ஒரு நாவலைப் படிக்கும் சுவாரஸ்யம் நம்மிடம் தொற்றிக்கொள்கிறது. கச்சிதமான வடிவம் கண்ணில் நிறைகிறது.  அடுத்து என்ன நிகழப்போகிறதோ என்கிற எதிர்பார்ப்பு, ஏமாற்றம், திகைப்பு, வீரம், தியாகம், கற்பின் பெருமை, களிப்பு, நெஞ்சத் துடிப்பு என்று பார்த்துப் பார்த்து வடிவமைத்த காவியம் இது.,

தமிழில் படிப்படியாக நிகழ்ந்திருக்கும் சரித்திர வளர்ச்சி இது.  ஆரம்பகால செய்யுள், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் காப்பியங்களாக மாற்றம் கொண்டு உரைநடை நிலையை எய்தி இன்றைய சிறுகதை, கட்டுரை, கவிதை, நாடகங்கள், நாவல்கள் என்றாகியிருக்கின்றன.

பிரிட்ஷார் வருகைக்குப் பின்னர் அவர்கள் வருகையினால் ஏற்பட்ட அன்னிய மொழியை கற்ற பாதிப்பில் நம் எழுது தமிழில்,, இலக்கியங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.  ஆனால் மாற்றங்கள் நம் மொழிக்கான ஆதிச் சிறப்புகளை விழுங்கி விடக்கூடாது.  நம் மொழிக்கென நீண்ட நெடிய வரலாறு உண்டு.  எந்திலையிலும் அந்தப் பாட்டையிலேயே, மாறித் தடம் பதிக்காது நாம் பயணிப்பது நமக்கான ,மொழியின் சிறப்பை இன்னும் இன்னும் மேலான தளங்களுக்கு  இட்டுச் செல்லும். அதை வலியுறுத்தவே இந்தத்  தொடர் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது

இன்றைய நாவலுக்கான படிமங்கள் சிலப்பதிகாரத்தில் அன்றே எப்படி வடிவமைக்கப் பெற்றிருக்கின்ற என்கிற நம் ஆவலைக் கிளறுகிற பகுதிகளை மேற்கொண்டு பர்ர்ககலாம்.

'சிலப்பதிகாரம்' என்பது தமிழுக்குக் கிடைத்த அற்புத காவியம்.  சிலம்பை  நினைக்கும் பொழுதெல்லாம் தமிழ்த் தாத்தா உ.வே,சாமிநாத ஐயர்
நினைவும் கூடவே வருகிறது.   பண்டையத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றின் ஓலைச்சுவடிகளைத் தேடித்  தேடிச் சேகரித்தது மட்டுமின்றி பெரும் ஆராய்ச்சி செயலாய் அவற்றைப் பகுத்து, பாட பேதம் கண்டு, தொகுத்து, பதிப்பித்து... இன்று கையடக்கப் புத்தகங்களாய் தமிழ் இலக்கியங்கள் நம் கையில் தவழ்வதற்கு ஆரம்ப முயற்சிகளை எடுத்துக் கொண்ட அந்தப் பெரியவரை மறக்கவே முடியாது.  தமிழோடு  கூடவே வாழும் பெருந்தகை அவர்

நாளைய தமிழ்ப்புத்தாண்டு தின மகிழ்ச்சியில் தமிழ்த்தாத்தாவுக்கு நம் சிரம் தாழ்ந்த வணக்கங்களையும், நம் சகோதர பதிவர்களுக்கு  வாழ்த்துக்களையும் தெரிவிப்போம்.

அன்பான தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள், அன்பர்களே!


(தொடரும்)

படங்கள் உதவியோருக்கு நன்றி.
  

Saturday, April 9, 2016

அழகிய தமிழ் மொழி இது.!,,,

பகுதி--6

தொல்காப்பியர் இதைச் சொல்லியிருக்கிறார் என்றால்  அதற்கு  அப்பீலே கிடையாது.  அந்த அளவுக்கு பழந்தமிழர் வாழ்க்கை நிலையை படம் பிடித்துக் காட்டியிருக்கும் நூல் தொல்காப்பியம்.  அதுமட்டுமல்ல, தமிழுக்கென தனித்தன்மையாய் இலக்கிய வடிவில் அமைந்த  ஓர் இலக்கண நூலாய்த் தொல்காப்பியம்  திகழ்வது தான் தமிழ் மொழிக்கான வித்தியாசப்பட்ட சிறப்பாகிப் போகிறது.

பொதுவாக இலக்கணம் என்றால் ஒரு மொழியை தவறில்லாமல் எழுதுவதற்கும் பேசுவதற்கும் நெறிப்படுத்தும் விதி முறைகளே இலக்கணம் என்று பரவலாகக் கருதப்படுகிறது.  இப்படியான இலட்சணம் கொண்ட இலக்கண வரைமுறைகளில் இலக்கியம் சமைப்பது எப்படி  என்பது ஒரு அடிப்படை வினா.

இந்த  அடிப்படை வினாவிற்கு விடையளித்திருப்பது தான் தொல்காப்பியம்.

தொல்காப்பியர் இயற்றியதால் அது தொல்காப்பியம் என்று பெயர் பெற்றதா இல்லை தொல்காப்பியத்தை இயற்றியமையால் அவர் தொல்காப்பியர் என்று அழைக்கப்பட்டரா என்பது ஒன்றில்  ஒன்று புதைந்த ஒரு கேள்வி.

எது  எப்படியாயினும் தொல்காப்பியம் என்பது தொன்மையான  நூல் என்று அதன்  பெயரிலிருந்தே பெறப்படுகிறது.

தொல்காப்பியத்தின்  தோற்றத்திற்கு  முன்பே அதன் பழமைக்கு முன்பேயே  இலக்கிய, இலக்கண நூல்கள் இருந்தன என்பது தெரிகிறது. அவர் காலத்தில் ஐந்திரம் என்னும் வடமொழி இலக்கண நூல் இருந்திருக்கிறது. அகத்தியரால் இயற்றப்பட்ட அகத்தியம் இருந்திருக்கிறது.  அவற்றையெல்லாம் ஆராய்ந்ததின் அடிப்படையில் அவற்றைப் பற்றியதான ஓர் ஆராய்ச்சி நூல் போன்றே இயற்றப்பட்டது தொல்காப்பியம்.  இந்த ஆராய்ச்சியில் இதெல்லாம் இப்படி இருந்தால் தான் இது;  இல்லையென்றால் இது இல்லை என்று சொல்வது போல இருந்தவற்றை ஆராய்ந்து அவற்றிலிருந்து பெறப்பட்டதை அவற்றிற்கான இலக்கணமாகக் கொண்ட அரிய படைப்பு  தொல்காப்பியம்.

ஒன்றைப் பற்றிச் சொல்வதற்கு அது இருந்தாக வேண்டும் என்ற இருத்தலியக் கொள்கைக்கு சரியான சான்று தொல்காப்பியம்.

பனம்பாரனார் தொல்காப்பியருடன் பயின்றவர்.  இவர் தான் தொல்காப்பியத்திற்கு பாயிரம் எழுதியிருக்கிறார்.  பாயிரம் என்றால் தற்காலத்தில் நூல்களுக்கு முகவுரை என்று எழுதுகிறோமே அது தான். பாயிரம்  இல்லாமல் நூலில்லை என்பது அக்கால வழக்கமாகவே இருந்தது.

வடவேங்கடம்  தென்குமரி
ஆயிடை
தமிழ்கூறு நல்லுலகத்து

----என்று ஆரம்பமாகும் பனம்பாரன் எழுதிய அந்தப் பாயிரத்தில்,

அதன் கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோன்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே

--என்ற வரிகள் காணக்கிடக்கின்றன.
 
முதல் தழிழ்ச் சங்கம் தென்மதுரையிலும், இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்திலும், மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையிலும் அமைந்திருந்ததாக அறியப் படுகிறது.  முதல் தமிழ் சங்கம் அமைந்திருந்த தென்மதுரையும், இரண்டாம் தமிழ் சங்கம் அமைந்திருந்த கபாடபுரமும் கடல்கோளில் மூழ்கடிக்கப்பட்டன. . வால்மீகி இராமாயணத்தில் கபாடபுரம் பற்றிய குறிப்பு உண்டு.

இரண்டாம் தமிழ்ச் சங்க காலம்  கி.மு. 3600 முதல் 1500 வரை
தொல்காப்பியரின் காலம் இரண்டாவது தமிழ்ச்சங்கம் இருந்த  காலம்.
நிலந்தரு திருவிற் பாண்டிய அரசன் முன்னிலையில் தமிழ்ச்சங்க அவைக்கு அதங்கோட்டாசான் தலைமை தாங்கிட இரண்டாவது  தமிழ்ச்சங்கத்தில் தொல்காப்பியம் அரங்கேறுகிறது.  தலைமை தாங்கிய அதங்கோட்டாசான் இடையிடையே எழுத்து பற்றிய சில சந்தேகங்களை எழுப்புகிறார்.  அதற்கு தொல்காப்பியர் தமிழுக்கான எழுதிலக்கணம் பற்றி விளக்கிச் சொல்ல தொல்காப்பியம் அரங்கேறுகிறது.

எழுத்து, சொல், பொருள் என்று மூன்று பிரிவுகளாக தொல்காப்பியம்  பகுக்கப் பட்டுள்ளது.  எழுத்தும் சொல்லும் தமிழ் மொழியின் இயல்பழகைக்  கூறுகின்றன.   பொருளதிகாரமோ  பழந்தமிழரின் வாழ்வியலை படம் பிடித்துக் காட்டுகின்றன. பொருளதிகாரத்தில் ஒன்பது அதிகாரங்கள் உள்ளன.

அகத்திணையியல்,புறத்திணையியல்,  களவியல்,கற்பியல்,பொருளியல்,  மெய்ப்பாட்டியல், உவமயியல், செய்யுளியல்,  மரபியல்  என்கிற ஒன்பது இயலியலும்  படைப்பாக்கங்களுக்கு  இட்டுச் செல்கிற கூறுகள் நிரம்பியிருப்பது தான் ஆச்சரியம்.

இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் நுண்மாண் நுழைபுலம் கொண்ட பேராசான்  தொல்காப்பியர் செய்யுளில் கருத்துச் சொல்லும் வழக்கம் இருந்த காலத்திலேயே செய்யுளின் இயல்பையும் அதன் இயல்பின்மையும்  ஒருசேர கற்பிதம் கொள்ளும் அளவுக்கு  உரைவகை நடை ஒன்றை சொன்னதோடு எவ்வகைத்தானது அது என்று விளக்கமும் கொடுக்கிறார்.

பாட்டிடை வைத்த  குறிப்பினாலும்
பாவின்றி எழுந்த கிளவியானும்
பொருளோடு புணர்ந்த நகைமொழியானும்
பொருளோடு புணர்ந்த பொய்ம்மொழியானும்
உரைவகை நடை மொழியே நான்கென மொழிய

                      (தொல்காப்பியம்  செய்யுளியல்-- 173)

செய்யுள்களுக்கு உரை எழுதுவதையும், செய்யுளின்  கருத்தை மட்டும் எழுதும் உரை வகையையும், கற்பனையாய் புனையும் கதைகளையும், உணமையான செய்திகளில் நகைச்சுவை கலந்து எழுதுவதையும் குறிப்பிடும் பொழுது நம் வியப்பு  எல்லை மீறி திகைக்கிறது.

இன்றைய உரைநடைக்கு முந்தியது  உரையிடையிட்ட  பாட்டுடைச் செய்யுள். செய்யுளுக்கு இடையிட்டு  உரைநடை போலவான வரிகளும் வருவது அது.   உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளுக்கான  தமிழின் முதல் படைப்பு ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம்.

அதே மாதிரி இன்றைய நாவல்களுக்கு முந்தியது அன்றைய காப்பியங்கள்..சொல்லப் போனால் அன்றைய  காப்பியங்களே காலத்தில் மாற்றங்களில் மாற்றம்  கொண்டு இன்றைய நாவல்களாகியிருக்கின்றன.

இத்தாலி நாட்டினர் நூவெல் (Novella)  என்று பெயர் கொண்டு அழைத்த கற்பனை கலந்த கதைகள் தாம் நாவல்கள் என்று காலப்போக்கில் அழைக்கப்பட்டன என்று சொல்வார்கள்.  நாவல் என்பதற்கு புதுமை என்றும் அர்த்தம் கொள்ளலாம்.  இதன் அடிப்படையில் வந்த  சொல், நவீனம்.

இதெல்லாம் பிற்காலத்துச் செய்திகள்.  இதெற்கெல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு  முன்பே உரைநடையும் செய்யுளும் கலந்த உருவில் உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுளாய் காப்பியங்கள் என்ற  உருவில் நாவல்கள் தமிழில் முகிழ்த்திருக்கின்றன என்பதே இங்கு எடுத்தாளக் கூடிய கருத்தாகும்.


(தொடரும்)


படங்களை உதவியோருக்கு நன்றி.Tuesday, April 5, 2016

சும்மா சுவாரஸ்யத்திற்காக...1)  உங்கள் பதிவுகளை எதற்காக எழுதுகிறீர்கள்?

1. சும்மா வெட்டி அரட்டைக்கு

2. பொழுது போக்குக்காக

3. எதற்காக என்று  இதுவரை யோசித்ததில்லை

4. தெரிந்ததைப்  பகிர்ந்து கொள்வதற்காக


2)  வழக்கமாக நீங்கள் பதிவுகளை வாசிக்கும் முறை

1.  ஆழ்ந்து படிப்பதுண்டு.

2.  மேலோட்டமாக

3.  முதலும் கடைசியும் பார்ப்பேன்

4.  படங்கள் இருந்தால் தான் படிப்பேன்.


3)  ஒரு பக்க நீண்ட பதிவை படிக்க எடுத்துக்  கொள்ளும் நேரம்

1.   அதிகபட்சமாக இரண்டு நிமிடங்கள்.

2.   10-லிருந்து  15  நிமிடங்கள் வரை

3.   ஐந்து நிமிடங்களே அதிகம்

4..  மேலோட்டமாகப் பார்வை.  பிடித்தால் சில நிமிடங்கள். அதற்கு மேல் இல்லை.


4)  எப்படிப்பட்ட பதிவுகள் படிக்கப் பிடிக்கும்?

1.  சினிமா சம்பந்தப்பட்டவை.  அல்லது அரசியல்.

2.  கனமாக விஷயங்கள்

4.  பொழுது போக்கு பதிவுகள்.

5.  வளவள் இல்லாத எல்லா பதிவுகளும்


5)  பின்னூட்டம் போடுவீர்களா?

1.  பெரும்பாலும் இல்லை

2.  படித்தால் அவசியம் போடுவேன்

3.  என் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடுபவர்களுக்கு  மட்டும்

4.  வருகையைத் தெரியப்படுத்த 'அருமை' மாதிரி ஒரு வார்த்தை போதும்


6)  பின்னூட்டம் போடுமுன்

1.  நிறைய  யோசிப்பேன்

2.  எதிர் கருத்தை தேடுவேன்

3.  வாசித்ததை பாராட்டுவேன்

4.  மனசுக்குத் தோன்றியதைப் பதிவேன்


7)  இணையப் பதிவுகளைப் பற்றி

1.   உருப்படியாக எதுவும்  இல்லை

2.  தேடிப்  படித்தால் நிறைய உண்டு

3.  பெரும்பாலும் மேலோட்டமானவை

4.  எதிர்காலத்தில் பத்திரிகைகளுக்கு மாற்று இது தான்.


8)  பதிவுகளில் நகைச்சுவை அவசியமா?

1. நகைச்சுவை இருந்தால் வாசகர்களை சுலபமாக வாசிக்க வைக்கலாம்.

2. அவசியம்  இல்லை.

3. பல நேரங்களில் தப்பாகப் புரிந்து கொள்ளப் படுவதால் தவிர்க்கிறேன்

4. சாப்பாட்டிற்கு உப்பு வேண்டுமா என்று கேட்கிறீர்களே?


9)  எய்படிப்பட்ட பதிவுகள் எழுதப் பிடிக்கும்?

1. மற்றவர்கள் கையாளாத விஷயங்களை

2.  அந்த நேரத்தில் பரபரப்பான விஷயம்

3.  கதை, கட்டுரை, கவிதை இப்படி ஏதாவது ஒண்ணு.

4. ஜனரஞ்சகமான பொதுவான விஷயங்களை


10)  பின்னூட்டங்களை எதிர்பார்ப்பது உண்டா?

1.   நிச்சயம் உண்டு.

2.  இல்லை என்றால் தான் பதிவுக்கு மதிப்பு

3.  அதற்காகத்தானே எழுதுகிறோம்?

4. வாசிப்பவர் சைகாலஜி தெரியும்.  அதுவே பின்னூட்டங்களை அள்ளும்.


11)  பின்னூட்டங்களுக்கு எப்படி பதில் அளிப்பீர்கள்?

1.  விளக்கமாக

2. பின்னூட்டம் இட்டவர்கள் விரும்பும் விதத்தில்

3.  அவர்கள் அடுத்த தடவை பின்னூட்டம் இடுவதற்கு ஏற்றவாறு

4.  பின்னூட்டத்திற்கு மாற்று கருத்து இருந்தாலும் அதை மறைத்து அவர்களைப் புகழ்ந்து.


=========================================================================
(பதிவுகளை எழுதுவது,  வாசிப்பது,  பின்னூட்டங்கள் இடுவது எல்லாமே பதிவர்கள் தான்.   அதனாலேயே  இந்தக் கேள்விகள் பதிவர்களுக்கு மிகவும் நெருக்கமானவையாகத் தோன்றும்.  பலரால் பதிலளிப்பதைத் தவிர்க்கமுடியாது.   சிலரால் சில காரணங்களுக்காக தவிர்க்க முடியும்.  அதான் இந்தப் பதிவின்  விசேஷம். )

=========================================================================  

Friday, April 1, 2016

இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?...

ல்லாத சொர்க்கத்தில் இல்லாத நிச்சயங்கள் நிறைய. அதுக்கு நரகம் என்றாலும் மண்ணில் திருமணம் மேல்--

---  என்று சமீபத்தில் அப்பாதுரை அவர்களின் 'சொர்க்கத்தில் நிச்சயம்' கதைக்குப் பின்னூட்டம் போட்டிருந்தது நினைவுக்கு வந்து நினைவலைகளை மீட்டியது.  பல வருஷங்களுக்கு முன்னால் நடந்தது தான். இருந்தாலும் நடந்ததையெல்லாம் லேசில் மறக்க முடிகிறதா, என்ன?...

ராஜகோபால சர்மா எனக்கு நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.  அடுத்த தெருவில் தான் வசிக்கிறார்.  அவரைப் பார்க்கப் போயிருந்தேன்.  எங்கள் பேச்சின் ஊடே விதி வசத்தால் இந்த சொர்க்கம்-- நரகம் டாப்பிக் நுழைந்து விட்டது.    சொர்க்கத்தைப் பற்றி பிரஸ்தாபித்து மாட்டிக் கொண்டது நான் தான்.

சர்மா எப்போதும் பஞ்சக் கச்சம் தான் கட்டியிருப்பார்.  மேலுக்கு தோளைச் சுற்றிக் கொண்டு அங்கவஸ்திரம்.  நெற்றியில் எந்நேரத்தும் அழிந்தே நான் பார்த்திராத சந்தனக் கீற்று.  தூக்கத்தில்  கூட அழிந்திருக்காது போலிருக்கு.  மூன்று வேளை சந்தியாவந்தனத்தின் போதும்  புதுசாய்  தீற்றிக் கொள்வாரோ என்னவோ. இது பற்றி அவரிடம் கேட்டதில்லை. கேட்கக் கூடாது என்றில்லை,  இதெல்லாம் போய் கேட்பார்களா என்று ஒரு தயக்கம். அவ்வளவு தான்.  அதுக்காக கேட்க மாட்டேன் என்றில்லை. ஏதாவது சரியான சந்தர்ப்பம் வாய்த்ததென்றால் இது பற்றிக் கேட்காமலும் இருக்க மாட்டேன் என்பதற்காகச் சொன்னேன்

சரி, விஷயத்துக்கு வருவோம்.  நான் போன வேளைக்கு சர்மா அவர் வீட்டு நடுக்கூடத்தில் ஒரு கால் மடித்து  இன்னொரு காலைத் தொங்கப் போட்டபடி ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தார்.  கையில் கையடக்கமான ஏதோ புஸ்தகம்.
நான் நுழைந்ததும் தலை நிமிர்ந்தவர் "வாப்பா.. ரொம்ப நாளாச்சே, உன்னைப் பார்த்துன்னு நேத்து  கூட நெனைச்சிண்டேன்.. வா.." என்று ஊஞ்சலில் கொஞ்சம்  நகர்ந்து  எனக்கும் உட்கார இடம் ஒதுக்கினார்.

"வேண்டாம்.   நான் இப்படியே உக்காந்துக்கறேன். வெளிக்காத்து இங்கே ஜில்லுன்னு வர்றது.. சொர்க்கம் தான்.." என்று அந்த ஜன்னலண்டை மடக்கு நாற்காலியை இழுத்துப் போட்டபடி அமர்ந்தேன்.

"கரெக்ட்டா சொன்னேடா.. சொர்க்கம்ங்கறது எங்கையோ வேறே லோகத்லே இருக்கற மாதிரி எல்லாரும் சொல்றா.. நீ இங்கையே அது  இருக்குன்னு சொன்னே பாரு,  அதான் சரி" என்று என்னைப் பார்த்துச் சிரித்தார்.

"அப்போ சொர்க்கம்ங்கறது தேவலோகத்லே இல்லையா, ஸ்வாமி.." என்று என்னைக்  கிண்டல் செய்கிறாரோ என்ற சம்சயத்தில்  ஆழம் தெரிந்து காலை விட வேண்டும் என்கிற ஜாக்கிரதையில்  கேட்டேன்.


"வேறே லோகத்லே கூட இருக்கலாம்.  இருக்கறதா புராணங்கள்லாம் கூடச் சொல்றது.. ஆனா நாம அங்கே இப்போ இல்லை தானே?.. இருக்கற இடத்லே இருக்கற சொர்க்கத்தைத் தானே சொல்லணும்?" என்று சொல்லி விட்டு என்னைக் கூர்மையாகப்  பார்த்தார்.

அப்படி அவர் பார்த்தால் எங்கிட்டேயிருந்து பதிலை எதிர்பார்க்கிறாரென்று அர்த்தம். அதைப்  புரிந்து  கொண்டு "நீங்க சொல்றது  சரி தான். ஆனா இது பூலோக சொர்க்கம் இல்லையா?.. அதனால் தான்.."

"அப்போ தேவலோக சொர்க்கங்கறது?..." என்று சர்மாவே மேலும் என்னிடம் வார்த்தையை வரவழைக்கவோ என்னவோ தூண்டில் போட்டார்.

"அங்கே இருக்கற சொர்க்கம் நித்யம்.. இங்கே இருக்கறது அநித்யம்.."

"எப்படிச் சொல்றே?"

"எல்லாம் படிச்சுத் தெரிஞ்சிக்கறது தான்.." என்று இழுத்தேன்.

"படிக்கறது  மட்டும் தான்.  படிக்கறதைத்  தெரிஞ்சிக்க வழி இல்லேங்கறதை  ஒத்துக்கோ.."

"நீங்க சொல்றதும்  சரிதான்.  படிக்கறதெல்லாம் இங்கே. அதாவது பூலோகத்திலே.  இங்கே படிக்கறதெல்லாம் சரியான்னு அங்கே போனாத் தானே தெரியும்?.." என்று லேசாக அவர் சொல்வதை ஏற்றுக்  கொள்கிற பாவனையில் தலையை அசைத்தேன்.

"அங்கே போனாலும் தெரியாது.." என்றார் சர்மா.  "அங்கே போனா அந்த  லோகத்துக்கு ஏத்த வாழ்க்கை.  இங்கே வந்தா இந்த  லோகத்துக்கு ஏத்த வாழ்க்கை..  எங்கே போனாத்தான் என்ன, எங்கே இருந்தாத் தான் என்ன, இருக்கற இடத்திலே சந்தோஷமா இருந்தா, சரி..  சோறு கண்ட இடம் சொர்க்கம், இல்லையா?" என்றார்.

சர்மா என்னவோ சர்வ சகஜமாய் பேசுவது போலத்தான் இருக்கும். உன்னிப்பாய் பார்த்தால் அவர் சாதாரணமாய்ப் பேசுவதில் நிறைய தத்துவங்கள் பொதிந்திருப்பது மாதிரித் தெரியும்.  மாதிரி தான்; அவர் அளவுக்கு எனக்கு ஞானம் இல்லை.  இருந்தால் இந்த மாதிரியையே நிச்சயப் படுத்தலாம்.

"ஹாஹ்ஹா" என்று உரக்கச் சிரித்தேன்.  "நீங்க கூடத்தான் இப்போ சொர்க்கம்ன்னு  சொன்னேள்.." என்றேன்.                      

"பின்னே இல்லையா?.. எல்லாத்துக்கும் தலையான சொர்க்கம் சோறு தானேப்பா.. அது  இல்லாம இந்த சரீரம் என்ன செய்யும்? சொல்லு.  பசித்த வாய்க்கு ஒரு பிடி மோர் சாதம் போதும்.  பசிங்கறது  அக்னி  உபாதைப்பா. அதுக்கு சாதம் போட்டு அதோட வெப்பத்தைத் தணிக்கறதே ஒரு  ஹோமம் மாதிரி எனக்குத்  தோண்றது.." என்று சொல்லி விட்டு ஏதோ பழைய நினைவுகளில் ஆழ்ந்து விட்ட மாதிரி மெளனமானார்.

பட்டினியின் சோர்வை அறியாதவர் யார் தான் இருப்பார், இந்த பூலோகத்திலே. காசிருந்தால் எல்லாம் கிடைக்கும் என்றில்லை.  காசிருந்தும் மருத்துவர் அறிவுரைப்படி பட்டினி கிடக்க வேண்டிய   கட்டாயம் எத்தனை பேருக்கு இருக்கு என்று என் நினைவு ஓடிற்று.

அன்னம் பற்றிய ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தைச் சொன்னார் சர்மா.
"அவ்வள்வு பெருமை பெற்றதுப்பா, இந்த சாப்பாடு என்பது.. கண் கண்ட தெய்வம் " என்று உணர்ந்து சொன்ன வார்த்தையில் அவர் முகம் அந்த மாலை நேரத்திலும் பளபளத்தது போல எனக்குத் தோன்றியது.

"முக்காலும் உண்மை.." என்று அவர் சொன்னதை ஆமோதித்தேன். "ஆனா அந்த லோகத்லே இந்த அன்னம் சாப்பட வேண்டிய வேலையே  இருக்காது, போலிருக்கு..." என்று  இழுத்தேன்.
"எவன் கண்டான்?" என்று வெகுண்டார் சர்மா.."இது இல்லேனா, இன்னொண்ணு..  "வயித்துக்கு போடறது மட்டும் ரொம்ப  விசேஷமானது. இங்கே அன்னம்ங்கறது எந்த லோகத்துக்குப் போனாலும் இன்னொண்ணா இருக்குமோ என்னவோ?.. பேர் தான் மாறுமே தவிர அதுக்கான வேலை அதே தான் இருக்கும்ங்கறது வேதாந்தம்.  எது எது எதுக்காக எந்த காரணத்துக்காக படைக்கப்பட்டிருக்குங்கறது நமக்குத் தெரியாது.  எல்லாமே யூகம் தான்." என்ற சர்மா மோட்டுவளையைப் பார்த்தார். 

"எனக்கு என்னவோ அவனவனுக்கு அந்த நேரத்தில்  தேவையானதை அனுபவிக்கும் பொழுது அந்த அனுபவிப்பின் உச்சத்தில் 'ஆஹா. சொர்க்கம்" என்கிறான்.  தொட்டதெல்லாம் இங்கே சொர்க்கம்.  அங்கேனா..."

"அங்கேனா?.." என்று சர்மா சடாரென்று கொக்கி போட்டார்.

"அங்கே இருப்பதே வேறேன்னு தோண்றது..." என்று சொன்னேனே தவிர அதுக்கு விளக்கமா சர்மாக்கு என்ன சொல்லணும்ன்னு பிடிபடலே.  (தொடரும்)  

  

Related Posts with Thumbnails