மின் நூல்

Monday, September 30, 2019

மனம் உயிர் உடல்

10.  தியானம் வேண்டுவோருக்கு


காதலர்களுக்கு மட்டுமல்ல கவிஞர்களுக்கும் இதயம்  தான் மனதைக் குறிப்பிட்டுச் சொல்லும் சொல்லாகப் போயிற்று.  இதயம் என்பது இரத்த சுத்திகரிப்பு நிலையம்.  அவ்வளவு தான் அதன் வேலையே.  இருந்தும் என்ன காரணத்தினாலோ  அல்லது  காரணம் ஏதுமில்லையாயினும்  எப்படியோ இதயம் மனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சொல்லாயிற்று. 

மனத்திற்கும் இதயத்திற்கும் எந்தச் சம்பந்தமில்லை என்பதினால் அறிவியலின் வழிகாட்டலில் மனம் என்பதின் இருப்பிடம் இதயம் அல்ல என்ற துணிபிற்கு வருவோம்.

சென்ற பதிவுக்கான பின்னூட்டத்தில்  'தியானம் சொல்லித் தரவங்க  மனசு புத்தி இரண்டும் வெவ்வேறுன்னு சொல்றாங்க' என்று  மனம்--புத்தி பற்றி நெல்லைத் தமிழன் பிரஸ்தாபித்திருக்கிறார்.  மனம், புத்தி இரண்டையும் ஒரே புள்ளியில் நிறுத்த முடிந்தால் தியானத்தில் நாம் முழுமையாகி விட்டோம் என்று அர்த்தம் என்றும் சொல்லியிருக்கிறார்.

மனம் என்பது  தான்  என்ன?..  மனம் என்பது மூளைப் பகுதிக்குச் சொந்தமான  சதைக் கோளம்.  மடிப்பு மடிப்பாக இருக்கும் சதைப்  பிரதேசம்.  மனம் என்பதனை  MIND  என்ற ஒரே சொல்லில்   அடைத்து விட்டனர்    மேல் நாட்டினர்.     ஆனால் நாமோ   மனம் செயல்படும்   செயல்பாடுளை விரிவாக்கி   மனம், புத்தி, சித்தம் என்றெல்லாம் வேறு படுத்திச் சொல்கிறோம்.  அதனால் மனம், புத்தி என்பதெல்லாம் வெவ்வேறல்ல என்று தெளிவோம்.  விரல்கள் என்பவை கை  என்ற  ஒற்றைச் சொல்லில் அடக்கம் மாதிரி.

சரி,  தியானம் என்றால்  தான் என்ன?..                           

சதா எதையாவது நினைத்துக் கொண்டு அல்லாடிக் கொண்டிருப்பது மனத்தின்  இயல்பு.  போஷாக்கான மனதிற்கு அறிகுறியும் அது தான்.   யானை நின்று கொண்டிருக்கும் பொழுது லேசா அசைந்து கொண்டே இருக்குமே அதைப் போல.   யானை அப்படி அசையவில்லை என்றால் தான் கோளாறு என்பது போல.

அந்த அல்லாட்டலை ஒருமுகப்படுத்தும் முயற்சியைத் தியானம் என்று சொல்கிறார்கள்.  ஒருமுகப்படுத்துதல் என்ற பெயரில் மனத்தின் அந்த அசைவோட்டத்தை நிறுத்துவதல்ல.  இங்கு ஒருமுகப்படுத்துதல் என்பது எண்ணத்தை.  பல்வேறு விஷயங்களில் அலைபாயும் எண்ணத்தை சீர்படுத்திக் கூர்மையாக்குவது.    பஞ்சை தரையில் வைத்து விட்டு  அதற்கு சற்று மேலாக ஒரு குவிலென்ஸை அதன்  மேல் சூரிய ஒளி படும்படி பிடித்தால் என்னவாகும்?..   சூரிய ஒளியின் வெப்பம் லென்ஸால் ஒருமுகப்படுத்தி குவிக்கப்பட்டு அந்த வெப்பம் பஞ்சைத் தாக்கி பஞ்சு பற்றி எரியும்.  தியானத்தில் நடப்பதும் இது தான்.

உள்ளிழுக்கும், வெளிவிடும் சுவாசத்திற்கும் மன அமைதிக்கும் சம்பந்தம் இருப்பதாக தியானத்தைப் பரிந்துரைப்போரின் கருத்து.   அந்த மூச்சுக் காற்றை உள்ளிழுக்கும் பொழுதும் வெளிவிடும் பொழுதும்  வேகமாக அல்லது மெதுவாக என்று இல்லாமல் ஒரே சீராக ஆக்கிக் கொள்வது தான் தியானத்தின் முதல் படி.

 எதாவது ஒன்றின் மீது மனதை நிலைப்படுத்தும் பொழுது மனம் ஒருமுகப் படுகிறது.   அப்படி நிலைப்படுத்துவதற்கு பலருக்கு  கடவுள் கிடைத்திருக்கிறார்.

தியானம் என்பது ஏதோ கடவுள் சம்பந்தப்பட்ட விஷயம் மாதிரி ஒரு தவறான புரிதல் பலரிடம் உண்டு.  கடவுள் தயவு வேண்டாதவர்கள்  தங்களுக்கு மிகவும் பிரியமான அல்லது மரியாதை கொள்கிற எதை வேண்டுமானலும் தீட்சண்யமாக மனத்தால் ஓர்ந்து மனதை ஒருமுகப்படுத்தலாம்.  தியானிக்க ஒரு புள்ளியில் ஆழ்ந்து கவனம்  கொள்ள வேண்டும்.  அவ்வளவு தான்.    தியானத்தின்  மீதான அதீத ஈடுபாட்டில் நாளாவட்டத்தில் நம்மை மீறிய ஒரு சக்தியின் மீது ப்ரேமை ஏற்பட்டால் நான் ஜவாப்தாரியல்ல.   :))

எதை வேண்டுமானாலும் கடவுளுடன் பிணைத்து அறிவு பூர்வமான விஷயங்களை ஒதுக்குவது  தமிழக இன்றையச் சூழலில் வெகு சுலபமாக இருப்பதால் ஒதுக்குபவர்களிடமிருந்து எப்படி ஒதுங்க வேண்டும் என்பதற்காக இதைக் குறிப்பிட வேண்டியிருந்தது.  அடுத்த வெறுப்பு சமஸ்கிருத வார்த்தைகள் மீது.   தியானம் என்ற சமஸ்கிருத  வார்த்தை பிடிக்கவில்லை அல்லது உச்சரிக்க அசெளகரியமாக இருக்கிறது என்றால் 'சும்மா இருத்தல்'  என்று கொள்ளுங்கள்.

'சும்மா இரு' என்பது முருக பெருமான் குருவாக அருணகிரியாருக்கு வாய்த்து உபதேசித்த தெய்வ வாக்கு என்பார்கள்.

'சும்மா இருக்கும் திறம் அரிது' என்று தாயுமானவரே சொல்வார்.

'சும்மா இருக்க வைத்தான் சூத்திரத்தை நான் அறியேன்' என்பது பட்டினத்தார் சொன்னது.

'சும்மா இருக்கும் சுகம்' என்று அனுபவித்துச் சொல்வார் வள்ளலார்.

சுயமாகவே  மனிதனின் இயல்பு  சாந்தியும் சந்தோஷமும் ஆகும்.  இந்த தனித் தன்மையான அந்த இயல்பு தான்  அதன் சொரூபமும் கூட.  இயல்பாக இருக்க வேண்டிய அவனது சாந்தியையும், சந்தோஷத்தையும் அனாவசியமான சிந்தனைகள் கலைக்கின்றன.  அல்லது ஒரு  மூடு திரை போட்டு மறைத்து அவ்வப்போது  சிந்தையில் உருவாகும் எண்ணங்களுக்கு ஏற்ப  இயல்பான இயல்பை  மாற்றி  கூத்தாட வைக்கின்றன.   அந்தக் கூத்தாடல்களுக்கு ஏற்ப உள்ளிழுக்கும் வெளிவிடும் மூச்சுக் காற்றில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.  அந்த மாற்றம்  தலையிலிருந்து கால் வரை பரவி விரவிக் கொண்டிருக்கும் இரத்த ஓட்ட சீர்மையில் பாதிப்பு உண்டாக்குகிறது.   இரத்த ஓட்டத்தில் ஏற்படும்  மாற்றப் போக்கு இதயத்தின் லப்டப்பிலும் பிரதிபலிக்கிறது.

சும்மா இருத்தலான   தியானம் என்பது  இன்றைக்குப் பிரபலமாக இருக்கும்  வார்த்தைப் பிரயோகமான யோகா அல்ல.    ஆசனங்களும்,  உடற்பயிற்சி சார்ந்த கைகால் அசைப்புகள் இவையெல்லாம் தியானம் அல்ல.  தியானம் என்பது  இவற்றையெல்லாம் விட தீவீரம் கொண்டது.    தொடர்ந்து பார்ப்போம்.


(வளரும்)

Saturday, September 21, 2019

மனம் உயிர் உடல்

9.   அறிவின்  சவாரி


னம் விருப்பப்பட்டவைகளையெல்லாம் நிறைவேற்ற முடிவதில்லை; அதனால் நிறைவேற்ற முடிந்தவற்றை   மட்டும் மனம் விருப்பப்படுகிற மாதிரி  வைத்துக் கொள்ளலாமா  என்று வல்லிம்மாவின்  யோசனை போகிறது. 

இந்த யோசனை என்பது தான் அறிவின் அறிவுறுத்தல்.   'ரெண்டு பேரும்  எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணிப் போங்கப்பா;  அப்பத் தான் முரண்டலில்லாமல் காரியங்கள் நடக்கும்' என்று மனத்திற்கும்  நமக்கும் சமாதானம் பண்ணி வைக்க முயற்சிக்கிறது அறிவு.

மனம், அறிவு, நாம் எல்லாம் வெவ்வேறா என்றால் உடற்கூறின் ஒவ்வொரு அம்சத்தையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதற்கான வசதியான  ஏற்பாடு இது என்று சொல்லலாம்.

என்னதான் அறிவு மனத்தின்  புரிதலுக்காக முயற்சித்தாலும்  பல நேரங்களில் இந்த மனத்தின் வீம்பு மட்டும்  குறைந்த பாடில்லை.   'உன்னால் முடியும், தம்பி' என்று அது நம்மை ஊக்குவிக்க தன்னால் ஆனதைச் செய்து,  தான்  நினைப்பதை சாதித்துக் கொள்ள விரும்புகிறது.

அதாவது மனிதனின் மொத்த நிலையை பிரதிநிதித்துவப்  படுத்த மனம் முயல்கிறது.   நானே எல்லாம்.. எல்லாவற்றையும் தீர்மானிப்பது நானே என்ற நிலை இது.

சில நேரங்களில்  மனதின்  இந்த ஊக்குவிப்பு உந்தப்படும் நம் செயல்பாட்டிற்கு உதவி வெற்றிக்கனி பறித்தால் நம்மை ஊக்குவித்த நம் மனத்திற்கு மனத்திற்குள்ளேயே பாராட்டு, நன்றி..  எல்லாம் சொல்லிக் கொள்வோம்.   அடுத்த இன்னொரு சமயம் இதே மாதிரி மனசின் இன்னொரு ஊக்குவிப்பு  தோல்வி அடைந்தால் 'சே!' என்று சலித்துக் கொள்வோம்.

எல்லா நேரங்களிலும் மனசில் ஆலோசனை நமக்கு சாதகமாகவே நடந்து விடுவதில்லை.  இதற்கு என்ன செய்வது?

மலைப்பாதையில்  நடுவில்  ஆடு தாண்டுகிற மாதிரி ஒரு சின்ன இடைவெளி இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.   வேகமாக நடந்து வரும் பொழுது அந்த இடைவெளி பள்ளத்தைப்  பார்த்து பயந்து  போகிறோம்.  தாண்டிப் போகலாமா, வேண்டாமா என்று ஒரு 'திடுக்'.   பள்ளம் கீழே அதல பாதாளமாக இருக்கிறது.  கரணம் தப்பினால் மரணம் தான்.                     

'இதுக்குப் போய் பயப்படலாமா?' என்கிறது மனம்.  'துணிந்து தாண்டு;  ஆறிலும் சாவு; நூறிலும் சாவு'  என்று  எப்பவோ படித்த ஒரு சினிமாக்  கவிதையை சட்டென்று உதவிக்கு எடுத்துக் கொடுக்கிறது மனம். 

அதல பாதாள பள்ளத்தைப் பார்த்து திடுக்கிட்டதும் மனம் தான்;  துணிந்து தாண்டு என்று உற்சாகப்படுத்தியதும் மனம் தான்.   பல நேரங்களில் இப்படி  எதிரும் புதிருமாக வாதாடுகிற பழக்கம் இந்த மனதோடையே கூடப் பிறந்த ஒன்று!..

'தாண்டலாமா, வேண்டாமா' என்ற குழப்பத்தின் நடுவில்,  'வேண்டாம்' என்று தீர்க்கமாக, தீர்மானமாக ஒரு குரல் நம்மில் எழுகிறது.  'பக்கத்தில் சிவப்புக் கலர் பெயிண்ட் அடித்து ஒரு போர்டு இருப்பதைப் பார்த்தாயா?.. அதில் என்ன எழுதியிருக்கிறது, படித்தாயா?.. தாண்டி கால் பதிக்கும் எதிர்ப்புறம் புதைகிற மாதிரி சேறாக இருக்கிறதாம்..  அதனால் எதிர்ப்பக்கம் யாரும் போவதைத் தவிர்க்கவும்'  என்று அந்த போர்டு சேதி சொல்கிறது..

'நல்லவேளை..  இப்போது தான் போர்டு  கண்ணில்  பட்டது.  தாண்டாமல் தப்பித்தோம்' என்று தாண்டச் சொன்ன மனசை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறோம்.

'இப்படியா, அப்படியா' என்று எதைச் செய்வது என்று அல்லாடும் சமயங்களில்   சாதக பாதகங்களை சீர்தூக்கிப் பார்த்து அலசி நம்மில் ஒரு முடிவை தீர்க்கமாக பதிக்கும்  வேலையைச் செய்வது தான் நம் அறிவு.   அந்த அறிவு எங்கோ எதையோ வாசித்த அல்லது தெரிய  வந்த அறிவாக இல்லாமல் நாமே அனுபவப்பட்ட ஒரு நிகழ்ச்சியின் அறிவாக இருந்தால் வாசித்து, தெரியவந்த-- அறிவை விட உறுதியாக இருக்கும்.    'ஞாபகமிருக்கா?..   நாலு வருஷத்துக்கு முந்தி இதே மாதிரி  நீயே ஒன்றைச் செய்து மாட்டிக் கொண்ட நினைவு இருக்கா?..  அதையே இப்பவும் திருப்பிச் செய்து திரும்பவும் மாட்டிக் கொள்ளப் போகிறாயா?'  என்று பழசைப் புரட்டிப் பார்த்து காரண காரியத்தோடு தீர்க்கமாக உபதேசம் பண்ணும் ஆற்றல் பெற்றது  அனுபவப்பட்ட தெளிந்த அறிவு.

அது  என்ன தெளிந்த அறிவு?..  அறிவார்ந்த செயல்களை மரியாதையுடன் உள்ளார்ந்து மதிக்கத் தெரிந்தால்,  அதையே பாடமாகக் கொள்ளும் தெளிவு நம்மிடம் பிறக்கும் பொழுது  அதுவே தெளிந்த அறிவாக நம்மில் தீர்க்கமாகப் பதிகிறது.   ஏனோ தானோவென்று எல்லாவற்றையும் மேலோட்டமாக
பார்க்கும் பழக்கமுள்ளவர்களின் அறிவு இப்படியான தெளிவு பெறாமல் ஊசலாட்டமாகவே இருக்கும்.  இதில் அனுபவப்படும் அறிவுக்கு  மட்டும் தீர்மானமாக தீர்க்கமாக எல்லோர் மனசிலும் பதியும் ஆற்றல் உண்டு.

இப்பொழுது ஆரம்ப கேள்விக்கு  வருவோம்:

அறிவு மனத்தை கன்வின்ஸ் பண்ணுகிற  சக்தி கிடைக்கும் பொழுது   மனம்  தன்னால் நினைப்பதையெல்லாம் நிறைவேற்ற முடியவில்லை என்ற ஆதங்கம்   எழுவதற்கே வாய்ப்பில்லாமல் போகும்.  அப்படி கன்வின்ஸ் பண்ணுகிற அளவுக்கு  அறிவு செறிவு பெற்றிருக்க வேண்டும் என்பதே தேவையாகிப் போகிறது.

மனம்:  டூ வீலர் காலமெல்லாம் மலையேறிப் போயாச்சு.  கார் ஒண்ணு வாங்கிட்டோம்ன்னா நிம்மதியா இருக்கும்.


அறிவு: மாதம் முபபதாயிரம் சம்பாத்தியத்தில்  கார் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாயே,  இது சாத்தியப்படுமா?

மனம்:  ஏன் சாத்தியப்படாது?..  அத்தனை  வங்கிகளும் 'இந்தா லோன்; இந்தா லோன்'னு எவனாவது மாட்டமாட்டானான்னு அலையறாங்களே!  நாலு  சக்கர வாகனம் வாங்க லோன் வாங்கவா முடியாது?..

அறிவு:  முடியும்.  லோன் வாங்கறதா பெரிசு?..  மாசாமாசம் தவணை கட்ட முடியுமா?..   பேர் தான் முப்பதாயிரம் சம்பளம்.  பிடித்தமெல்லாம் போக வீட்டுக்கு  எடுத்துப் போவது  இருபதாயிரம் தானே?..  எத்தனை  செலவு இருக்கு?..  இப்பவே இருபது தேதியாச்சுனா,  சம்பளம் வாங்க இன்னும் பத்து நாள் இருக்கேன்னு பிரமிப்பா இருக்கு..  கார் வாங்கிட்டேனா, பாங்குக்கு தவணைப் பணம் கட்ட வேண்டாமா?..

மனம்:  இப்படியெல்லாம் நூத்து நூத்து யோசிச்சா, எந்தக் காரியமும் நடக்காது.. முதல்லே துணியணும்.  துணிஞ்சிட்டா நடக்கறதெல்லாம் பழக்கமாகிடும்.   அப்படித் துணியறவன்  தான்  வாழ்க்கைலே ஜெயிக்கறான்.

அறிவு:  நினைக்கிற காரியத்தை நடத்திக் காட்டுவதே அதாவது,    கார்  வாங்கறதே ஜெயிக்கறது  ஆகாது.  ஒழுங்கா தவணைப் பணத்தைக் கட்டிக் கடன்லேந்து மீளணும்..  அதான் உண்மையான  ஜெயிப்பு.  தெரிஞ்சிக்கோ.

மனம்:  அதெல்லாம் சராசரி ஆட்கள் நினைப்பு.   பெரிய மனுஷங்கள்லாம்  எதைப் பத்தியும் யோசிக்காம லோன் வாங்கித்தான் இவ்வளவு தூரம் வாழ்க்கைலே உசந்திருக்காங்க..  அவங்க கோடிலே வாங்கினா, நாம லட்சத்திலே வாங்கக் கூடாதா, என்ன?

அறிவு:  சரி. நீ லோன் வாங்கிக் கார் வாங்கறதுன்னு தீர்மானிச்சிட்டே. உன் வழிக்கே இப்ப வர்றேன்..  ஏன் கார் வாங்கணும்ன்னு இப்படி ஒரு அவசர முடிவு?

மனம்:  அவரசம்லாம் இல்லே.  ரொம்ப நாளா ஊறப்போட்டிருந்த ஆசை இப்போ வெளிப்பட்டிருக்கு.  அவ்வளவு  தான்.  அதுக்கும் காரணம் உண்டு.

அறிவு:  அப்படி என்ன பெரிய காரணம்?

மனம்:  கார் விலையெல்லாம் இப்போ சல்லிசா ஆயிடுத்து.  த்ரோ எவே ப்ரைஸ்ன்னு சொல்லுவாங்களே,  அந்த  நிலமை.

அறிவு:  ஏன் அந்த நிலமை?..

மனம்:  அதுக்கு பல காரணங்கள்.  உற்பத்தி பின் வாங்கியிருக்கு.  எலெக்ட்ரிக்  கார் தான்  இனிமேன்னு சொல்றாங்க.. அதனால, டீசல்-- பெட்ரோல் கார்லாம் வித்து காசாக்கி எலெக்ட்ரிக் காருக்குப் போகலாமேன்னு  பல பேர் நினைக்கிறாங்க   என்கிறது ஒரு காரணம்.

அறிவு:  அப்போ நீயும் எலெக்ட்ரிக்கு போகலாமில்லையா?..  சீப்பாவும் சமாளிக்கற மாதிரியும் இருக்கும்.

மனம்:  அப்படியா சொல்றே?                                                       

அறிவு:  அப்படியே தான்.  இப்போத்தான்  எலெக்ட்ரிக் காரை சார்ஜ் பண்ணறதுக்கே மெட்ராஸ்லே ஏழோ எட்டோ எடத்திலே  தான் வசதி இருக்காம்.   அந்த  அரைகுறை வளர்ச்சிலாம் மாறட்டும்.  கொஞ்ச நாள் கழிச்சு வாங்கலாம்.

மனம்: நீ  சொல்றதும் சரி தான்.

அறிவு:  சரி.  கார் வாங்கறது இருக்கட்டும்.   காரை நிறுத்தறத்துக்கு உன்னோட அப்பார்ட்மெண்ட்லே இருக்கற இடம் போதுமா?...

மனம்: அதுவும் கொஞ்சம் சங்கடம் தான்..  பொதுவான  கார் பார்க்கிங்..  நாலு பேர் நிறுத்தலாம்.  அஞ்சு பேர் இப்பவே கார் வைச்சிருக்காங்க.. தினமும் பொழுது விடிஞ்சா அவங்களுக்குள்ளே இதுவும் ஒரு அக்கப்போர் தான்.

அறிவு:  பாத்தியா?.. இதெல்லாம் யோசிச்சையா?..    கொஞ்ச நாள் போகட்டும்.   பாட்டரி காரே வாங்கிக்கோ..  அப்படி வாங்கறச்சே,  கவர்டு கார் பார்க்கிங் இருக்கற அப்பார்ட்மெண்டுக்கு மாறிக்கலாம்.  சரியா?..

மனம்:  சரி.. அப்படியே செஞ்சுடலாம்.

ஆக கார் வாங்கங்கற துடிப்பு   இப்போதைக்கு மனசிலேந்து  கழண்டாச்சு.

இதான் அறிவு மனசை அப்பப்போ கன்வின்ஸ் பண்ற திறமை பெற்றிருக்கறதுக்கு  உதாரணம்.

அதாவது நம்மால் முடிந்தவைக்கு மட்டும் மனசை ஈடுபடுத்தற ஆற்றலை அறிவு பெற்றிருப்பது..  சொல்லறபடிச் சொன்னா மனசும் ஏத்துக்கும்.  அப்படி சொல்றதுக்கு  அறிவை பல விஷயங்களைத் தெரிந்து  வைத்திருக்கிற ஆற்றலுக்கு மேம்படுத்துவதும் முக்கியமாகிப் போகிறது.


(வளரும்)

Wednesday, September 18, 2019

மனம் உயிர் உடல்

8. எண்ணத்தின்  பின்னல்


ரு சின்னக் கணக்கு.

100+25-20x 5/5  =  ?

நூறுடன் இருபத்தைந்தைக் கூட்டி வரும் தொகையிலிருந்து இருபதைக்  கழித்து வரும் தொகையை ஐந்தால் பெருக்கி அதை ஐந்தால் வகுத்தால் என்ன  வரும் எனபது தான் கணக்கு

ஒரு கூட்டல், ஒரு கழித்தல், ஒரு பெருக்கல், ஒரு வகுத்தல்--- இந்த கணக்கின் கணக்கிடும் செயல்பாட்டில் ஏதேனும் ஒரு இடத்தில் தவறு செய்து விட்டோமென்றால் விடை சரியாக வராது.  இது நம் எல்லோருக்குமே தெரிந்த ஒன்று.

வாழ்க்கையில் நாம் செயல்படும் ஒவ்வொரு செயல்பாடுமே இப்படியான கணக்குப் பயிற்சி போலத்தான்.

எண்கள் செயல்கள்.  கணக்கிடும் முறை  செயல்படும் வழிமுறைகள். கணக்கிற்கான் விடைதான் நாம் செயல்பட்டதற்கான பலன்.

விடை (பலன்) சரியாக இருந்தால் நமக்கு சந்தோஷம்.  விடை சரியில்லை என்றால் நமக்கு சந்தோஷம் இல்லை.

கணக்குகள் எப்போதுமே விடை காண்பதற்காகத்தான்.  அதே போல நமது செயல்கள் அதற்கான நல்ல பலன்களை அடைவதற்காகத்தான்.

கணக்கின் செயல்முறையில் தவறு ஏற்படுவது போல, நமது செயல்பாடுகளில் தவறு ஏற்படும் பொழுது அதற்கான பலகளும் நமக்கு வேண்டிய பலனை அளிக்காது போய்விடுகின்றன.

கணக்கின் செய்முறைகளில்  வேறுபாடுகள் இருந்தாலும் சரியான விடைகள் கிடைக்கலாம்.  அதே மாதிரி நமது செயல்படும் முறைகளில் வெவ்வேறான வழிமுறைகளைக் கைக்கொண்டு சரியான  விடையான நமக்குத் தேவையான நல்ல பலனை அடையலாம்.

கணக்கு தான் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகள்.  கணக்கின் விடைக்கான நம் செய்முறை தான்  அந்தப் பிரச்னைகளின் தீர்வுக்காக நாம் கையாளும் முறைகள்.  கையாளும் முறைகளான  நம் செயல்முறைகளில் கிடைக்கும் வெற்றி  தான் விடையான நமது  செயல்பாடுகளுக்கான பலன்.

பிரச்னைகளின் விடிவில் பலன் இருப்பதால் அவற்றின் தீர்வுக்காக நாம் செயல்பட  வேண்டியிருக்கிறது.  செயல்பட யோசிக்க   வேண்டியிருக்கிறது.  யோசிப்பு என்பது பிரச்னையை பல கோணங்களில் அலசுவதாகிறது.  செஸ் விளையாட்டு மாதிரி.  ராஜா, ராணி, மந்திரி, குதிரை,  படைவீரர் என்று---எதை அல்லது யாரை வீழ்த்தி எப்படி பலனை நோக்கி முன்னேறுவது எனபதற்கான யோசனை.

யோசிக்கும் பொழுது இது தான் வாழ்க்கையின் கோணல் என்று புரிகிறது.   நான், நீங்கள் நமக்கான பிரச்னைகள் என்று.  பூகோள ரீதியில், பொருளாதார ரீதியில் ஒருவொருக்கொருவர்  நெருங்கியிருந்தாலும் அனுபவ ரீதியாக அவரவருக்கான தொலைவு கூடி விட்டது. 

அனுபவம் தான் யோசனைகளை நீளச் செய்கிற ராஜபாட்டை. யோசனைகள் எப்பொழுதுமே பெற்ற அனுபவங்களின் மேல் ஊர்ந்து ஊர்ந்து தான் பயணிக்கும்.   அனுபவங்களின் நீளம் ரொம்ப குறைச்சல் என்றால் யோசனைகளும் நீண்ட பயணிப்பு இல்லாமல்  திகைக்கும்.  அனுபவங்களின் திரட்சி அதிகம் என்றால் யோசிப்பும் கிளை பிரிந்து கிளை பிரிந்து தனக்குள் ஆழ்ந்து அமுங்கி முத்தெடுக்கும் வரை ஓயாது.                      

யோசனைகளின் வலை பின்னலைத் தான் எண்ணம் என்கிறோம்.  எண்ணம் இல்லாமல் எதுவுமில்லை.  உணவுக்கான நேரம் அல்லது பசி வந்தும்  கூட ‘சாப்பிடலாமா?’ என்று எண்ணம் வந்ததும் தான் சாப்பிடுவதற்கான ஆயத்தங்களில் இறங்குகிறோம்.  ‘இப்போ வேண்டாம்.  இன்னும் அரைமணி நேரம் கழித்து’ என்று ஏதோ காரணத்தினால் எண்ணம் முடிவெடுத்தால் செயலும் ஒத்திப்போடப் படுகிறது.   அப்படி நம்மை எந்த செயல்பாட்டுக்கும்  உந்தித் தள்ள எண்ணம் என்கிற தூண்டுதலுக்கு அப்புறம் தான் எதுவும்.

இந்த எண்ணம் என்பது என்னவென்று யோசித்துப்  பார்த்தீர்கள் என்றால் அது  ஒருவிதத்தில் சஜஷன் என்று தெரியும்.. 

எந்த சூழ்நிலையிலும் எந்த இக்கட்டிலும் நம்மில் உறையும் இன்னொருத்தரிடம் கலந்து கொண்டு முடிவெடுக்கிற மாதிரியான ஏற்பாடு  அது.  

எண்ணத்தின் நிலைக்களம் மனம்.

இரண்டு மனம் இருக்கோ இல்லையோ நம்மில் மனமாக இன்னொருவர் நம்முள் வாழ்ந்து வருகிறார் என்பது தெரியும்.   அல்லது நம்மில் வாழும் அவர் தான் நாமா என்பதும் தெரியவில்லை.  அவருக்கு நாமா, நமக்கு அவரா யாருக்கு யார் பிரதிநிதி என்பது இதுவரை கண்டுபிடிக்காத வருஙகாலத்தில் நோபல் பரிசைப் பெற்றுத்தரப்போகிற  உண்மை.

நம்மைப் பற்றி நம் மனதுக்குத் தெரியும்.  மனம் ஆசைப்பட்டதற்காகத் தான் அத்தனையும் என்று நமக்கும் தெரியும்.

மனதை விரோதித்துக் கொண்டால் நிம்மதி தொலைந்து போகும்.  அப்படியல்லாது மனதோடு இசைந்து வாழ்ந்தால் உற்சாகம் கொப்பளிக்கும். அப்படியான வாழ்வில் நம் உற்சாகம் நம் மனசிலும், நம் மனசின் உற்சாகம் நம்மிலும் பரவிப் படியும்.   நமக்கும் நம் மனசுக்கும் வித்தியாசம் இல்லாத அபேத நிலை இது.  நான்--எனது என்ற உணர்வுகள் தலை தூக்காத நிலை இது. பிறவி பெற்ற பெரும் பேறு  இது.

இந்தப் பேற்றை  எப்படிப் பெறலாம் என்று  பார்ப்போம்..


(தொடரும்)


Sunday, September 15, 2019

மனம் உயிர் உடல்


7.  மனம் விரும்புதே.....
                                                     
னுபவம் தான் ஆசான் என்பார்கள்.   ‘அனுபவமே  நான் தான் என்றான்’  என்று இறைவனே ஒப்புதல்  வாக்குமூலம் கொடுத்தது போல கண்ணதாசன் ஒரு பாடல் கூடப் புனைந்திருக்கிறார்.  அந்த அளவுக்கு நாம் வாழ்க்கையில் பெறும் அனுபவங்களுக்கு இறைவன் அந்தஸ்தையே கொடுத்திருக்கிறார் அவர். அதற்கும் அவர் பெற்ற அனுபவங்களும் அந்த அனுபவங்கள் அவரை
வார்த்தெடுத்ததும் தாம் காரணம்.

நாம் பெறும் அனுபவங்களைப் பற்றியும்  அந்த அனுபவங்களின் அடிப்படையில் நமது யோசிப்பு அமைவது பற்றியும் மேலோட்டமாக சென்ற பகுதியில் பார்த்தோம்.

சகுனியை மாதிரியான சூதாட்டக்காரருக்கு பகடையை உருட்டினால் தனக்குத் தான் வெற்றி என்பது அவரது அனுபவமாக இருக்கும்.  எதிராளியை ஜெயிப்பது எப்படி என்றால் அந்த எதிராளியை சூதாட்டத்திற்கு அழைப்பது தான் ஒரே வழி என்று அவரது யோசனை போகும். 

பேச்சுத் திறமை பெற்ற ஒருவருக்கு தனது வாக்குத் திறமையை பிரயோகித்து   எதிராளியை வெல்வதே  வழி என்பதாக அவர் யோசனை இருக்கும்..  தனது வாழ்க்கை உயர்வுக்கு தனது பேச்சுத் திறமையையே பெரும் சொத்தாக அவர் எண்ணியிருப்பார்.  எதுவும் சோம்பி இருந்தால் கிடைத்து விடுவதில்லை;  தனது பேச்சுத் திறமையை வளர்த்துக் கொள்ள அது பற்றிய எல்லா முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டிருப்பார் என்பது திண்ணம்.

இந்த மாதிரி ஒவ்வொருவருக்கும் ஒன்று.  இந்த ஒன்றில் இருக்கும் ஆபத்து என்ன என்றால் அந்த ஒன்றிலேயே குறுகிப்  போவது.  அந்த ஒன்றைத் தாண்டி வர முடியாமையும்  அந்த ஒன்றைத் தீவிரமாக நேசிப்போருக்குள்ளேயே ஏற்படும் உறவாக குறுகி  விடுவதும் தான்.  

உலகின் பரந்துபட்ட இந்த வளர்ச்சி சூழலில் அவரவருக்கு கைவசப்பட்ட ‘கலை’களைத் தாண்டி எத்தனையோ இருக்கின்றன.  அதனால் நமது அனுபவங்கள் வளப்பட இந்தக் காலகட்ட்த்தில் பரந்துபட்ட ஞானம் வேண்டியிருக்கிறது.

வெற்றிக் கதைகள் இப்படி என்றால் தோல்விக் கதைகள் இதை விட சோகமானது.   

பங்குச் சந்தையில் பெருமளவில் இழந்த ஒருவருக்கு பங்கு சந்தை என்றாலே ‘அலர்ஜி’யாக இருக்கும்.   விட்ட இடத்தில் தான் எடுக்க வேண்டும் என்று யாராவது சொன்னால் சீறி விழுவார்.  ‘பெறுவது இழப்பதற்காகவே; இழப்பதும் மீண்டும் பெறுவதற்காகவே’ என்னும் பாலபாடம் போதிக்கும் கல்விச்சாலை பங்குச்சந்தை என்று சொன்னால் ஏற்றுகொள்வது அவருக்கு வெகு சிரமமாக இருக்கும்.   

தோல்வியில் துவளாமல் மன ஈடுபாடு கொண்ட  விஷயங்களில் இறுதி வரை அறிவு  பெறுவது  குறிப்பிட்ட அந்தந்தத் துறைகளில் ஜெயக்கொடி நாட்ட பெரிதும் துணையாக இருக்கும்.   ஈடுபாடு கொண்ட  துறைகளில் வாகை சூடியவர்கள் அத்தனை பேரின் வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தீர்கள் என்றால் தொடர்ந்த அவர்களது அயராத முயற்சிகளே அவர்களது வெற்றிகளுக்கு  பெரும் துணையாக இருந்திருப்பதைத் தெரிந்து  கொள்ளலாம்.

மன ஈடுபாடு என்பதும் திடீரென்று அந்தரத்தில் இருந்து  குதித்து விடுவதில்லை. வாழ்க்கைப் போக்கில் குறுக்கிடும் ஏதாவது ஒரு விஷயத்தில் நமக்கேற்படும்  கவர்ச்சி தான் திரும்பத் திரும்ப அவற்றை நாடத் துவங்கி நாளாவட்டத்தில் மன ஈடுபாடாக மலர்கிறது.  இந்த இடத்தில் ‘நாம்’ என்பது சும்மாவேனும்;  கவர்ச்சிக்கு ஆட்பட்டதும் மனம் தான்;  தான் சிக்குண்ட அந்த கவர்ச்சியை தனது ஈடுபாடாக ஆக்கிக் கொண்டதும் அதே மனம் தான்.

‘தேமே’னென்று கிராமத்தில் தனது வயலும் வரப்பும் உண்டு என்றிருந்தவர்,  அந்த கிராமத்தில் நடந்த வெளிப்புற படப்பிடிப்பை ஆச்சரியத்தோடு பார்த்த அனுபவம் பற்றிக்கொண்ட ஜோரில் சினிமாத் துறையில் ஜெயக்கொடி நாட்டிய  கதைகள் நம் நாட்டில் நிறைய உண்டு.   அப்பா டாக்டர் அதனால் மகனும் டாக்டர், அப்பா திரைப்பட நடிகர் ஆதலால் மகனும் தேர்ந்தது திரைப்படத் துறை என்று  குடும்பத் தொடர்பாய் நீண்ட வரலாறுகளும் நிறைய  உண்டு.

பெறும் அனுபவங்கள் தாம் மனிதர்களை உருவாக்குகின்றன என்பது மேலோட்டமான பார்வை.  பெறும் பல அனுபவங்களில்  மனசு தனக்குப்  பிடித்ததைத் தேர்ந்து அதில் தனது ஈடுபாட்டைப்  பதிக்கிறது என்பது ஆழ்ந்த பார்வை.

நம்மைக் கவர்ந்த அனுபவங்கள் நம்மையே விலைக்கு வாங்கி விட்டதைப் போல ஆட்டமும் போடும்.  பெற்ற அனுபவங்களின் அடிப்படையிலேயே யோசனை போகும்.    இது அனுபவங்களில் காணப்படும் ஒரு  பெரும் குறை. பல நேரங்களில் பெற்ற அனுபவங்களிலேயே முடங்கிப் போன மனம்,  புது அனுபவங்களைப் புறக்கணிக்கும்.  அல்லது புது அனுபவங்களை துய்த்து விடமால் விலக்கும்.

கிராமத்து வண்டிப்பாதை மாதிரி போய்ப் போய் அனுபவப்பட்ட பாதை அதற்கான வடு கொண்டு அதற்கேற்பவான தடத்தேய்வைக் கொண்டிருக்கும்.  இந்தத் தடத்தேய்வு தான் ஒரு விஷயத்தில் ஒரே விதமான பழக்கத்தை ஏற்படுத்துகிறது.  நம் முன்னோர்கள் பழக்க தோஷம் என்று சொன்னது இதை தான்.

முடிவெட்டிக் கொண்டால் பத்து வருஷமாக ஒரே ஸலூனில்.   எப்பவாவது போன போது அந்த ஸலூன் மூடியிருந்தால், முடிவெட்டிக் கொள்வதையே அடுத்த நாளுக்கு ஒத்திப் போடுவது.  இன்னொரு ஸலூனுக்குப் போய் அங்கு எப்படி என்று புது அனுபவம் பெற பழக்கப்பட்ட மனம் அனுமதிக்காது.  மன அனுமதி கிடைக்கவில்லை என்பது மிகப்பெரிய தடா.   அந்த அனுமதி  கிடைக்காத போது உங்களிலும் ஒரு புது அனுபவத்திற்காக வாய்ப்பு மொட்டிலேயே கருகிப் போகும்.  

ஏதாவது நியூஸ் பேப்பர் வாங்கிப் படித்து பழக்கப்பட்டிருந்தால்  பல வருஷங்களாக அதே நியூஸ் பேப்பர்.  ஒரே செய்தியை தங்கள் நோக்கத்திற்கேற்ப விதவிதமாகத் தலைப்பிட்டுப் பிரசுரிப்பது ஒவ்வொரு செய்தித்தாளுக்கும் வழக்கம்.  அதுவே அந்தச் செய்தித்தாளின் உயிர்ப்பின் ரகசியம்.  ஆண்டுக்கணக்காக  ஒரே செய்தித்தாளைப் படிக்கும் பழக்கம், அந்த செய்தித்தாளின் எக்ஸ்டென்ஷனாக, உங்களையும் அதன் இன்னொரு பதிப்பாக மாற்றியிருக்கும்.   அந்த பத்திரிகையிடமிருந்து பெற்றது தான் உங்கள் கருத்து;   அந்தப் பத்திரிகையின் அரசியல் தான் உங்கள் அரசியல் என்கிற அவலம் உங்களில் விதைக்கப்பட்டு செடியாய் மரமாய் நாட்பட வளர்ந்திருக்கும்.

மளிகை சாமான் வாங்குவது கூட ஒரே கடையில் தான்;    அலுவலகத்திற்குப் போனால் ஆண்டுக்கணக்காக அதே நாலு நண்பர்கள் தாம்.  இந்த நாலு பேருக்குள் பேசிக் களிப்பது தான் ஒரு நாளின் மூன்றில் ஒரு பகுதியை விழுங்கி இந்த நண்பர்களின் பொழுது போக்கு, விஷய  ஞானம் தாண்டி எதுவுமில்லை என்பதாக நான்கு பேரும்  உருமாறி இருப்பார்கள்.   இணையப் பதிவுகள், அதற்கான வாசகர்கள் என்ற உலகையும் இந்தப் பார்வையில் பதித்துப் பாருங்கள்.

மேல் நாடுகளில் வீக் எண்ட் என்பதை மனசின் மலர்ச்சிக்காகவே ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.   ஒவ்வொரு வார கடைசி நாட்களில் சுற்றுலா மாதிரி வெளிக்கிளம்பும் வழக்கத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அமெரிக்காவில்  இரவு தங்கலுக்காகத் தான் விடுதிகள்.  பின் மாலைப்  பொழுதில் விடுதிகளின் கார் பார்க்கிங் இடத்தில் ஒவ்வொரு காராக வந்து சேரும்.  பாதி  இரவு வரை இப்படி சேர்ந்து  கொண்டே இருக்கும்.  காலை ஏழு மணி அளவில் கார் பார்க்கிங் இடமே வெறிச்சோவென்று காலியாக இருக்கும். இரவு உறக்கம், காலை சின்னச் சிற்றுண்டி என்று முடித்துக் கொண்டு அத்தனை பேரும் விட்ட சுற்றுலாவைத் தொடர்ந்திருப்பார்கள்.

புதுப் புது அனுபவங்கள் வாழ்க்கையை உற்சாகமாக்கும்.  ஆண்டுக்கணக்காக தெரிந்த செய்திகளிலேயே மனசை ஊறப்போட்டு ஒரு செக்கு மாட்டு வாழ்க்கையில் வாழக்கையைப் பறி கொடுக்காமல் அன்றன்று ‘இன்று புதிதாய்ப் பிறக்கும்’ அனுபவங்களின் சரணாலயமாய் மனசை மாற்றும்.

பழக்கத்திற்கு மனிதனை அடிமை படுத்துவது என்பது இந்த நூற்றாண்டு வாழ்வரசியலின் வியாபாரத் தந்திரம்.   அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதை விட அனாவசியங்களுக்கு அதிகம் செலவு செய்ய பழக்கப்பட்டிருக்கிறோம்  நாம்.   எந்த பழக்கமும் நம்மை அடிமையாக்காமல் அவற்றிலிருந்து மீளத் தெரிந்திருப்பது புத்திசாலித்தனம்.  இதில் மனதின் மாய்மாலத்தைப் பாருங்கள்.  எது அவசியம் எது அனாவசியம் என்று தீர்மானித்து முடிவெடுப்பது மனம்.  முடிவெடுத்த எந்த பழக்கத்திற்கும் நம்மை வழக்கப்படுத்துவதும் அதே மனம் தான். 

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த புத்திசாலித்தனம் அறிவெனப்படுவதில்லை என்கிறார்கள் அறிஞர்கள்.

அறிவு என்பது தான் என்ன?..

‘அறிவு என்பது முந்தைய அனுபவத்தையும், அதனால் நமக்கு ஏற்பட்ட பாதிப்பையும் நினைவில் வைத்துக் கொண்டு அதன்படி நடந்து கொள்வது’ என்பதாகக் கருதப்படுகிறது.

பாதித்தவைகளைக் கைகழுவி,  பாதிக்காதவைகளிலேயே உழன்று கிடப்பது.

அறிவு என்பது இது தானா?..   

அல்லது அறிவு என்பது இவ்வளவு தானா?  உங்கள் யோசனைக்கு.


(வளரும்)



Thursday, September 5, 2019

மனம் உயிர் உடல்

6. சிந்தனை செய் மனமே....


குழந்தை மனது என்கிற சொல்லை அவ்வவ்போது நாம் கேட்டிருக்கலாம். குழந்தை மனம் என்றால் கள்ளம் கபடற்ற, சூது வாது அற்ற என்று நிறைய அற்ற சமாசாரங்கள் கூடவே வரும்.  ‘அற்ற’ என்றால் அற்றுப்போன, இல்லாத என்று அர்த்தம். கள்ளம், கபடு போன்ற விஷத்தன்மைகள் இல்லாத மனம் குழந்தை மனம். குழந்தைகளுக்கு பால் போன்ற வெள்ளை மனமாம். வெள்ளை என்பது அதன்  கபடமற்றத்  தன்மையைக் குறிக்க வந்தது. வெள்ளையின் கலர் மாறுவது  வளர்ச்சியின் ஊடாக என்று ஆரம்பித்து ஒருவகையில் அதுவே தான் வளர்ச்சி என்றாகிறது. . வாழுதல் என்கிற சுழலில் சமாளித்துக் கொண்டு நீந்துவது தான் வளர்ச்சி என்று அனுபவப்பட்டவர்கள் சொல்கிறார்கள்..

ஏற்படுவது எல்லாமே தேவையின் அடிப்படையில் தான். குழந்தையாய் இருக்கும் போது தேவைப்படாததெல்லாம் வளர்ச்சிப் போக்கில் தேவையாகி விடுகின்றன.  வெள்ளை காலத்திற்கேற்ப கோலம் பூண்டு நிறம் மாறுவதும் தேவைகளின் அடிப்படையில் தான்.  படிப்பு, வேலை, கல்யாணம், குடும்பம், குவாகுவா என்று வரிசை கட்ட  தேவைகளின் நீளம் மலைப்பாதையாய் நீண்டு நீள, அகல, உயர வாக்கில் என்று சகல பரிமாணமும் கொள்கிறது. குழந்தைப் பருவத்தில்  கைகால் அசைக்கவும், குரல் கொடுக்கவும் மட்டுமே முடிந்ததினால், அந்தப் பருவத்தில் தேவைப்படும் ஒரே தேவையான பாலுக்கும் குழந்தை குரல் கொடுக்கிறது. குரல் கொடுத்தால் தீர்வு கிடைக்கிறது   என்று அந்த பிஞ்சு மனசில் பதிந்து போவது தான் பிறந்த குழந்தையின் ஆரம்ப மனப்பதிவுகளில் ஒன்று போலும். 

குழந்தையின்  மனப்பதிவினை வரிசைபடுத்தினால்,  முதல் பதிவு கருப்பை வாசம் வெளியுலக வரவானதும்   அறையின் சீதோஷ்ண நிலையின் தாக்கம். அடுத்து பாலுக்கான ‘வீல், வீல்’, அடுத்து தாயின் தேசலான முகம் என்று இருக்கலாம்.  மழலையாய் மிழற்றுவது வரை பிறர் கவனத்தை ஈர்ப்பதற்கு இந்த 'குரல் கொடுப்பது' தான் குழந்தைக்குப் பழக்கப்பட்ட ஒன்றாய் இருக்கிறது. பால் என்றில்லை, கைக்கு எட்டாத பொம்மையைத் தொட்டுப் பார்க்க முடியாத ஆத்திரம் அல்லது ஆவல், தாயின் அருகாமை என்று தனக்குத் தேவையானதைத் தெரியப்படுத்த குரல் கொடுப்பது ( நம் பேச்சு வழக்கில் அலறல் அல்லது அழுவது) என்பது ஒன்றே குழந்தை அறிந்த ஒன்றாய் இருக்கிறது. ‘நை நைன்னு எப்பப் பாத்தாலும் அழுகை; எதுக்கு அழறான் என்றே தெரியலே’ என்றால் அந்தக் குழந்தையின்  உடனடித் தேவை என்னவென்று நமக்குத் தெரியவில்லை என்று அர்த்தம்..  வயிற்று நமநம, ஜட்டி நனைந்திருப்பதின் ஜில்லிப்பு, அறையின் சீதோஷ்ண நிலை என்று குழந்தை சுட்டிக் காட்டுவதற்கான காரணம் எதுவானும் இருக்கலாம். குழந்தைக்குத் தெரிந்த ஒரே அஸ்திரமான அந்த வீரிடும் குரல், பையப்பைய மொழியாய் மாற்றம் கொள்வது பிறப்பின் அதிசயம்.  என்ன மொழியில் குழந்தையிடம் பேசும் வழக்கத்தை வைத்துக் கொள்கிறோமோ அந்த  மொழி குழந்தைக்கு அறியும் மொழியாகிறது. ஒவ்வொன்றும் பழக்கத்தின் அடிப்படையிலேயே குழந்தைக்கு வழக்கமாவது தான் உயிர்ப்பின் விசித்திரம். ஏக சக்ராதிபதியான மனசை வென்று அடிமைபடுத்த திறம் பெற்ற  ஒரே வல்லுனர் இந்த பழக்கம் தான்.

பழக்கம் ஏன் தோஷம் என்று அழைக்கப்படுகிறது என்பது  உங்கள் யூகத்திற்கு..

இளமை பழக்கம் இறுதி வரை நிழலாய்த் தொடரும் சாகசம் பெற்றது. . எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் பொடி போடுவார்.  அவர் அப்பாவும் பொடி போடுவார்.  அவரின் அப்பாவுக்கும் பொடிப்பழக்கம். தாத்தா மட்டும் மட்டையில் பொடியை இடுப்பு வேஷ்டி மடிப்பில் பதுக்கியிருப்பார். . அப்பாவுக்கும் மகனுக்கும் மட்டும் தனித்தனியே குட்டியூண்டு வெள்ளி பொடி டப்பா.  "நீங்க மட்டும் ஏன் தாத்தா மட்டையிலே?" என்று ஒரு நாள் கேட்டேன். "இதில் இருக்கும் காட்டம் டப்பாவில் கிடைக்காதுடா... சவசவத்து இருக்கும்" என்றார் தாத்தா, ஒரு இழுப்பு இழுத்ததினால் ஜிவுஜிவுத்த விழிகளுடன்.  தாத்தா--அப்பா--மகன் என்று இந்த பொடி சங்கிலி என்னுள் என்னன்னவோ யோசனைகளைக் கிளர்த்தியிருக்கிறது.  நிச்சயம் இது  ஜீன் சமாசாரம் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.  'பின்னே?' என்று நமக்குள்  ஒரு கேள்வி கேட்டுக் கொண்டால், அது உளவியலின்  பெரியதோர் விவாத களத்திற்கு இட்டுச் செல்லும்.

ஜீன் சமாச்சாரத்திற்கு பட்டும் படாமலும்  ஒரு உதாரணத்தைப் பார்ப்பதற்கு இதுவே சரியான தருணம் என்று  தோன்றுகிறது.  எனக்கு மிகவும் பழக்கமான ஒரு சித்த வைத்தியருக்கு  இரண்டு காது மடல்களிலும் கற்றையாக உரோமம் மண்டிக் கிடக்கும்.  அவரது மூன்று மகன்களுக்கும் இதே கதை  தான்.  இது தான் ஜீன் வழி வரும் வழி வழி உறவு ஒற்றுமை. 

பிறவிக்குப் பிறவி மீண்டும் மீண்டும் பிறந்தவுடனான வீரிட்ட அழுகையிலிருந்து வாழ்க்கை ஆரம்பிக்கிறது என்பது தான் வழக்கமாகத் தெரிகிறது.  அந்த வீரிடல் இல்லை என்றால் தான் மருத்துவரின் புருவம் உயரும்.    ஆரம்பப் பிறப்பிலிருந்து  (ஆரம்பம் இது தான் என்று யாருக்குத் தெரியும்) ஒரு எல்லை வரை, அடுத்த பிறவியில் முற்பிறவியிலான அந்த எல்லையிலிருந்து அடுத்த எல்லை வரை அதற்கடுத்த பிறவியில் தொடர்ந்த அந்த  எல்லையிலிருந்து அடுத்த எல்லை வரை என்று இறுதி எல்லையை அடையும் வரை என்றில்லை.  ஒவ்வொரு பிறவிக்கும் ஆரம்ப அழுகையிலிருந்து தான் ஆரம்பம் என்றிருப்பது தான் முந்தைய பிறவிகள் என்றிருந்தால் அவற்றின் பழக்க வழக்கங்கள், மனப்பதிவின் பாதிப்புகள் அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்வதில்லை என்பதற்கு சான்று.   ஒவ்வொரு பிறவிக்கும் பாவ புண்ணியங்கள் புதுசு புதுசாய் கணக்கில் சேரும் போலிருக்கு.  பிறவியிலா இறைநிலை அடைய செய்த பாவங்கள், புண்ணியங்கள் இரண்டையும் அந்தந்த  பிறவியிலே இழக்க வேண்டுமாம்.  இரண்டுமே கணக்கில் பைசல் ஆகவேண்டுமாம்.  ' 'ஏனாம், எதற்காகவாம்' என்று யாருக்காவது தோன்றினால் சொல்லலாம். தொடர் பிறவிகளில் நம்பிக்கை இல்லை என்பாரும் முயற்சிக்கலாம்.
  
வாழ்க்கையின் சுக செளகரியங்களுக்காக  தேவைப்படுவனவற்றை ஏற்றுக் கொள்ளவும் நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். .  நாம் ஏற்றுக்கொள்ளும் எதற்கும் அதற்கான தேவை நம்மில் இருக்கும். இந்த ‘நம்மில்’, நம் மனம் என்று கொண்டாலும் சரியே. தேவையின் அடிப்படையில் தான் எல்லாமே. என்று ஆகிப்போனபின் நம் தேவை அல்லது  தேவையின்மை தான் எதையும் ஏற்றுக்கொள்வதையும் ஏற்றுக் கொள்ளாமையையும் தீர்மானிக்கிறது.  சிலருக்கு தேவை  இருக்கோ, இல்லையோ வாங்கி வைத்துக்  கொள்ள வேண்டும்.  சிலர் எதிர்கால உபயோகத்திற்கு என்று கண்டதையும் வாங்கிப் போடுவார்கள்.

25 வயது வாலிபன் கைத்தடி ஒன்றை வாங்கினான்.

"என்ன உங்க தாத்தாவுக்கா?.. உயரம் என்ன இருப்பார்?" என்று கேட்டார்  கடைக்காரர், தாத்தாவின்  உயரத்திற்கேற்ப கோல் கொடுக்கலாமே என்று., .

"தாத்தாக்கு  இல்லை; எனக்குத் தான்.  எதுக்கும் இருக்கட்டுமேன்னு வாங்கறேன்!"என்ற  வாலிபனை வினோதமாகப் பார்த்தார் கடைக்காரர்.

அடுத்த இரண்டே வருடங்களில் அவனுக்குத் திருமணம் நிச்சயமாக, "காசி யாத்திரைக்கு கைத்தடி வாங்க வேண்டாம்; எப்போவோ வாங்கியாச்சுன்னு பெண் வீட்டாரிடம் சொல்லி விடுங்கள்" என்றானாம் பையன்.

துய்த்தலின் அடிப்படையிலான தேவைகளின் சரிதம் பிர்மாண்டமானது. தேவையை ஏற்படுத்துவதும் புறக்கணிப்பதும் அவரவர் மனமே. தேவையின் ஊற்றுக்கண் உள்ளம் தான்.  உள்ளத்தில் கிளர்ந்தெழும் ஆசையும் ஆர்வமும் தான் மாட்டிக்கொள்ளும் வலை. வெவ்வேறு தேவைகளாக தேவைகளும் கிளைபிரிந்து கிளைபிரிந்து மாயம் காட்டுகின்றன. தேவைகளில் சாஸ்வதமான, அல்லது அந்தந்த நேரத்து என்று வகைகள் உண்டாயினும் மனசின் உள்ளார்ந்த ஈடுபாடுகள் தாம் அத்தனையையும் தீர்மானிக்கின்றன.

ஈடுபாடுகள் உள்ளோர் ரசனையாளர்களாய் இருப்பார்கள்.  எதிலும் ஈடுபாடு இல்லாதோர் பெரும்பாலும் 'டைலமா' பேர்வழிகள்.  நண்பகலில் கூட ஹோட்டலுக்குப் போனால் 'சாப்பாடா, டிபனா?' என்று தீர்மானிப்பதற்குள் ஒருவழியாகி, சர்வர் வந்து கேட்கும் பொழுது தீர்மானித்தற்கு மாறாக ஆர்டர் கொடுப்பார்கள். 

நம் தேவைகளின் அடிப்படையில் நியாமில்லாத பல விஷயங்களுக்கும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.  இந்த நியாயம், நியாயமின்மையைத் தீர்மானிப்பதும் அவரவர் மனசின் நியாய சபை தான்.  இப்படியாக சர்வ சக்ராதிபதியாய் ஆளுகை நடத்திக்கொண்டு எல்லா விஷயங்களிலும்  மனமே மனிதனை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. தேவையைத் துறந்தாலே பல விஷயங்கள் செல்லாக் காசாகி விடும். மனசுக்கு இதை யார் எடுத்துச் சொல்வது என்பதிலேயே ஏகப்பட்ட விவாதங்களும், மாறுபட்ட கருத்துக்களும் மனவியலாரிடையே மண்டிக் கிடக்கின்றன. . இந்த நச்சு-பிச்சுகளுக்கு நொந்து தான் கண்ணதாசன் ‘பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு தொல்லையடா’ என்று திரைப்படக் கவிதை ஒன்றில் சொல்லி நம் மனசை அசக்கியிருப்பார்.

கபடமில்லாத குழந்தைப் பருவத்து மனம் வயது கூடக் கூட வளர்கிறது என்று தெரிகிறது.  வயதைப் பொறுத்து உடல் உறுப்புகளுக்குக் கூட  வளர்ச்சி உண்டு தான். அந்த மாதிரியான வளர்ச்சி அல்ல மனசின் வளர்ச்சி. இது மனசின் குணாம்ச வளர்ச்சி.. நல்லது கெட்டது அறியக்கூடிய வளர்ச்சி. வளர வளர எது நல்லது எது  கெட்டது என்பதை அறிய வேண்டும் என்கிற தேவையின் அடிப்படையிலான வளர்ச்சி இது.     குழந்தை பருவத்து ஒன்றுமறியா நிலையில் இருக்கக்கூடாதென்பதற்காக ஏற்படுகிற வளர்ச்சி. வாழ்க்கை அறிதலுக்காக ஏற்படுகிற வளர்ச்சி. இந்த இடத்தில் தான் அறிதல் என்பது மனதால் மட்டுமே முடியும் என்று தெரிகிறது. 

ஒன்று பற்றிய அறிவு பெறுவதை அறிதல் என்கிறோம். ஆக அறிவு பெறுவதற்கான சாத்தியம் கொண்டது மனம் என்று தெரிகிறது. மனத்திற்கான படைப்புத் தேவையும் இது தானென்று தெரிகிறது. தேவைகளின் தீராத தாகம் அப்படித் தேவைப்பட்டவற்றை அடைவதற்கான முயற்சியாக நம்மில் உசுப்பப்படுகிறது. முயற்சி செயல் வடிவம் கொள்கிறது. எல்லா செயல்களுக்கும் விளைவு உண்டு.  அந்த விளைவு தான் தேடித் திரிந்த தேவையின் பலன்.  பலனை நுகரும் பொழுது அனுபோகமாக அது நம்முள் மலரும்.  அனுபோகம் வேறு; அனுபவம் வேறு.  அனுபோகம் என்பது தேவையைத் துய்ப்பதான ரசனை.  அனுபவம் என்பது experience.

மனம் என்பது நாம் பெறும் அனுபவங்கள் அத்தனையும் நம் மூளையிலுள்ள ந்யுரான்களின் இணைப்பில் ஏற்படும் மாலிக்யுலர் மாறுதல் என்றார் ஃப்ரான்சிஸ் க்ரிக்.  ப்ரான்சிஸ் க்ரிக் யாரென்றால் டி.என்.ஏ. ரகசியத்தை கண்டுபிடித்த மேதை.  மூளையின் அடித்தளத்தில் சின்னச் சின்ன அணுக்கள் க்வாண்டம் இயற்பியல்படி இயங்குகின்றன;  வெளியுலக நிகழ்வொன்றிற்கும், இந்த இயக்கத்திற்கும் முடிச்சுப் போட்டு தீர ஆராய்ந்தால் மனம் பற்றிய வெளிச்சம் கிடைக்கும் என்பார் ராஜர் பென்ரோஸ். மனம் பற்றிய ஆராய்ச்சிகளின் தீவிரம் கூடிப்போன  நேரத்து மன ஆராய்ச்சிகள் கூட வேறு வழியில்லாமல் மனதால் தான் நடைபெறுகின்றன என்கிற உண்மை உறைத்தது. இன்னொரு பக்கத்தில் மனதை மனதால் அறியவே முடியாது;  அப்படி அறியவும் கூடாது என்கிற கொள்கைக்கான வலு கூடியது.  மனத்தைப் பற்றி அறிவு பெறுவதற்கான சோதனைகளும் அது பற்றிய தீராத விவாதங்களும் வெறும் நியுரான்களின் இயக்கத்தைத் தாண்டியதான அற்புத ஆற்றல் கொண்ட படைப்பு களம் இந்த மனம் என்று ஒரு பிரமிப்பான முடிவுக்கு இட்டுச் சென்றது.

(வளரும்,,)


Related Posts with Thumbnails