இப்பொழுதும் திருநெல்வேலி பக்கம் போனாலோ, அல்லது அந்த ஊரை நினைத்தாலே எனக்கு ராமசாமி நினைவு வந்து விடும்.
அடுத்த வாரம் தென்காசிக்கு ஒருவேலையாகப் போகவேண்டியிருக்கிறது. அப்படியே குற்றாலத்தில் ஒருநாள் தங்கல். ரயில்வே கால அட்டவணைப் புத்தகத்தை முன்பதிவுக்காகப் புரட்டும் பொழுது, ராமசாமி ஞாபகத்திற்கு வந்து விட்டான்.
அவன் தந்தையை நினைக்கையிலேயே எவ்வளவு அற்புதமான மனிதர் என்று மனசு நெகிழ்கிறது. ஆண்டவன் படைப்பில் மானுடராய் இப்படிப்பட்ட ஒரு வாழ்வு வாழ்ந்த நல்ல மனிதர்களை நினைக்கும் பொழுது நாமும் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்று நெஞ்சில் சூளுரைத்துக் கொள்வதும் இயல்பான ஒரு செய்கையாகப் போய்விட்டது. ரொம்பவும் மோசமாகப் போய்விடாமல், இப்படிப்பட்ட நல்லவர்களின் வாழ்வுதான் நம்மை வழிநடத்தி காப்பாற்றுவதாகவும் நான் நம்புகிறேன்.
ராமசாமி கொழுத்த செல்வந்தவர்களின் குடும்பத்தில் பிறந்தவன். பரம்பரையே மிட்டா மிராசுதாரர்கள். செலவம் ஓரளவுக்கு மேல் சேர்ந்துவிட்டால், அதுவே மேலும் மேலும் தன் வளர்ச்சியைத் தானே பார்த்துக் கொள்ளும் இயல்புடையது போலும்.
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் மா,பலா,தென்னை மரங்கள் சூழ்ந்த மிகப்பெரிய பங்களா அவர்களது. அவர்களின் வீடு என்று சொல்லப்படும் மாளிகையின் வேலியை ஒட்டிய நீண்ட தெருவில் ஒரு வீட்டில் நாங்கள் குடியிருந்தோம். வரிசையாக பதினைந்துக்கு மேற்பட்ட பக்கத்துப் பக்கமாக ஒட்டிக்கட்டப்பட்ட வீடுகள்..அத்தனையும் ராமசாமி குடும்பத்துக்குச் சொந்தமானது.
ராமசாமி என் பள்ளித்தோழன் கூட. எங்களது பெரிய ஜமா. மழைக் காலங்களில் பத்து பதினைந்து பேர்கள் கொண்ட எங்கள் குழு, தினமும் நெல்லை ஜங்ஷன் பகுதியில் இருக்கும் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி பள்ளிக்கு போவதும், மாலையில் வீட்டுக்குத் திரும்புவதும் ராமசாமி வீட்டு வேனில் தான். அந்தப் பக்க சிறுகுழந்தைகள் ஆரம்ப பள்ளிக்குப் போவதற்காக இரண்டு வேன்களைத் தனியாக ஏற்பாடு செய்திருந்தனர்.
பங்களாவை ஒட்டியவாறே சத்திரம் போல மிகப்பெரிய ஹாலுடன் ஒரு கட்டிடம் இருக்கும். காலையில் கூட்டமாக துண்டும் சோப்புப்பெட்டியுமாக அரட்டை அடித்தபடி தாமிரபரணியில் குளித்துவிட்டு வந்தோமானால், அவரவர் வீட்டிற்குச் சென்று உடைமாற்றிக் கொண்டு இந்த சத்திரம் போன்ற இடத்தில் குழுமிவிடுவோம்.
எல்லோருக்கும் காலை டிபன் அங்கே தான். எப்படியும் தினம் இருபது பேருக்கு மேல் தேறிவிடும். ராமசாமி, ராமசாமியின் தம்பி, அவன் அப்பா, அம்மா சூழ உட்கார்ந்து சாப்பிடுவோம். சமையல்கார சாம்பு மாமா, பளீரென்று வெள்ளை வெளேர் வேஷ்டியும் மேல்துண்டுமாய் நெற்றி நிறைய வீபூதி-சந்தனப் பொட்டுமாய் ஆரோக்கியமாய் இருப்பார். ராஜ உபசாரம் தான். அவர் அவரவரைப் பேர் சொல்லி விளித்து, "தேங்காய்ச் சட்னி போடட்டுமா?.. கொத்ஸூ கொஞ்சம் போட்டுக்கோயேன்"..என்று கேட்டுக் கேட்டு விசாரித்து அன்புடன் பரிமாறுவார். குண்டு கத்திரிக்காயைச் சுட்டு, கட்டித் தயிரில் மூழ்க வைத்துத் தாளித்துக் கொட்டி சட்னிமாதிரி பண்ணியிருப்பார் சாம்புமாமா. அந்த வயசில் எனக்கு ரொம்பவும் அது பிடிக்கும். கேட்டுக்கேட்டு வாங்கிப் போட்டுக்கொண்டு சாப்பிடுவேன்.
அந்த சத்திரம் போன்ற ஹாலைச் சுற்றி வந்தால், இடதுப்பக்கக் கோடியில் ஒரு பிள்ளையார் கோயிலை பங்களாக்குள்ளேயே கட்டியிருப்பார்கள்...அந்தப் பிள்ளையாருக்கு தினமும் உச்சிகால பூஜை முடிந்ததும், ஏழை எளியோருக்கு இலை போட்டு எளிமையான சாப்பாடு தினமும் உண்டு.. கிட்டத்தட்ட மத்தியானம் இரண்டு மணி வரை நாலைந்து பந்திகள் நடக்கும். சாப்பிட்டு வயிறு நிறைந்தவர்கள் வாயார வாழ்த்தியது தான், அந்த குடும்பத்தையே எந்தக் குறையுமில்லாமல் வாழ வைத்தது போலும்!.. ராமசாமியின் அப்பாவுக்கு அப்பா, மற்ற சொந்தக்கார உறவுகள் என்று எண்பதைத் தாண்டியவர்களே ஏகப்பட்ட பேர் அந்த குடும்ப்த்தில் வளைய வந்து கொண்டிருப்பர்... எல்லோரும் ஏதோ வேலையில் ஈடுபட்டு எங்கங்கோ போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருப்பார்கள்... பங்களா பூராவும் எந்நேரமும் கலகலப்புடன் 'ஜேஜே' என்ற கூட்டம் தான்! எல்லோரும் உரக்கப் பேசி உரக்க சிரித்துக் கொண்டிருப்பார்கள்.. ஏழைக் குழந்தைகளுக்கு இரவுப் பள்ளி உண்டு.. அவர்களுக்கு பாடம் படிக்க வகுப்பு போன்ற தோற்றத்துடன் கரும்பலகையும் மேஜை நாற்கலிகளுமாய் ஒரு பெரிய ஹால் உண்டு.. இரவு பள்ளி நடத்தவென்றே, டவுனிலிருந்து நாலைந்து ஆசிரியர்கள் வந்து போவார்கள்... அவர்கள் வருவது போவது எல்லாம் பங்களா காரில் தான்!..
ஒருநாள், "என்ன இப்படி எல்லோருக்கும் வாரி வழங்குகிறீர்கள்?" என்று யாரோ 'ஒருமாதிரி' கேட்டதற்கு, ராமசாமியின் அப்பா, பரமார்திகமாக மேலே ஆகாயம் நோக்கி கையுயர்த்தி, "எல்லாம் அவன் கொடுத்தது; தீரத்தீர இன்னும் கொடுத்திண்டே இருக்கான்.. அவன் என்னிடம் கொடுப்பதைத்தான் நான் நாலு பேருக்குக் கொடுக்கிறேன்" என்று ரொம்ப சுருக்கமாகச் சொன்னார். இன்னொரு நாள் சாயந்திரம் இதே மாதிரி கேட்ட இன்னொருவரிடம், "என்ன புதுசா கேட்கறே?..என் தாத்தா..என் தாத்தாக்கு தாத்தா.. அவர்கள் செஞ்சதைத் தானே நானும் செய்யறேன்.. இந்தக் குடும்பமே, ஜஸ்ட் மிடில் மென்! எல்லாம் அவனுக்குச் சொந்தம்.. எந்தக் காலத்திலே யார் செஞ்ச பூர்வபுண்ணியமோ, இந்த மேனேஜ்மெண்ட் பாக்கியம் எங்களுக்குக் கிடைச்சிருக்கு.." என்று 'பகபக'வென்று சிரித்துச் சொன்னது இன்னும் என் நினைவில் நிழலாடி சிலிர்ப்பேற்படுத்துகிறது..
பிற்காலத்தில் நான் படித்த இந்தப் புறப்பாடலும் நினைவிற்கு வருகிறது:
"நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்,
பல் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும்,
கடும்பின் கடும் பசி தீர யாழ நின்
நெடுங் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்,
இனோர்க்கு என்னாது, என்னோடும் சூழாது,
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி--மனை கிழவோயே!--
பழம் தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்து வேல் குமணன் நல்கிய வளனே."
(புறநானூறு--163)
வள்ளல் குமணனைப் பாடி பரிசில் கொணர்ந்த பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் பெருந்தகை, தன் மனையாளுக்குச் சொன்னது, இப்பாடல்.
கொடுத்தவன், வள்ளல்; பரிசில் பெற்ற புலவனும் அவனை விஞ்சிய வள்ளலாய் இருப்பான் போலிருக்கு என்று மனசு களியாட்டம் போடுகிறது..எப்படிப் பட்ட இனம், இந்த தமிழினம் என்று நெஞ்சு பூரிப்பால் விம்மித் தணிகிறது.. அடடா! அடடாவோ!.. என்ன அருமையான, வரிக்கு வரி பெருமிதத்தைப் பூசிக்கொண்ட வார்த்தைகளால், வார்த்தெடுக்கப்பட்ட கவிதை!...
"உன்னை விரும்பி வந்தோருக்கும்,
நீ விரும்பியோருக்கும், உத்தம குணம் கொண்ட
வழிவழிவந்த உற்றோருக்கும்,
பிறர்பசி காணப் பொறாது
குறிப்பாலாயே உணர்ந்து அவர்தம் பசி
போக்கியோர்க்கும்---
இவருக்குத் தான் என்று எண்ணாது
என்னையும் இது குறித்துக் கலக்காது
நீண்ட நாள் கவலையின்றி வாழ இது
நமக்காயிற்று என்றும் எண்ணாது
எல்லோருக்கும் அள்ளி அள்ளிக் கொடு--
என் மனைக்கிழத்தியே--- இந்த
செல்வம்?...இது முதிரத்துச் சொந்தக்காரனான
நம் குமணன் நல்கியது, அல்லவா?..
கரன்ஸி நோட்டுகளை அடுப்புப்பற்ற வைத்தாலும் பத்து தலைமுறைக்குக் காணும் சொத்து என்று செட்டிநாட்டுப் பக்கம் பேச்சுக்குச் சொல்வார்கள். அப்படிப்பட்ட செல்வத்தைப் பெற்ற செல்வந்தர்கள் இரக்கத்தின் அடிப்படையிலும், தர்மம் செய்ய வேண்டுமென்கிற இயல்பாக வழிவழிவந்த குடும்ப குணநலனாகவும், வசதிகுறைந்த வறியோருக்குக் கொடுப்பதை தானம் என்பார்கள். வரும் வருமானத்தில் ஒரு சதம் தானத்திற்கு ஒதுக்கி வைப்பதை சில குடும்பங்களில் ஒரு பழக்கமாகவும் கொண்டுள்ளார்கள்.
ஆனால், தானே வறிய நிலையில் இருக்கையில், இன்னொருவரிடம் தன் சொந்த திறமை காட்டிப்பெற்ற பரிசிலை, எல்லோருக்கும் வாரி வழங்குவது என்பது நினைத்துப் பார்க்கவே பெரிய விஷயமாகப் படுகிறது. அதுவும், "வல்லாங்கு வாழ்வோம் என்று எண்ணாது எல்லோருக்கும் கொடுத்துவிடு" என்று சொன்ன பெருஞ்சித்திரனாரின் குணமேன்மை நினைத்து நினைத்து மகிழத்தக்கது. 'இருப்பது தீர்ந்துவிட்டால், இருக்கவே இருக்கிறான், புலவர்களைக் காக்கும் புரவலன் குமணன்! பாடிப் பரிசில் பெறலாம்; பெறுவது என்பது பலருக்குக் கொடுத்து மகிழவே' என்கிற புலவர் பெருமானின் செம்மாந்த பண்புநலனும் ஊடும் பாவுமாய் பாட்டில் பரவியிருப்பதும் உன்னிப்பாய் கவனித்தால் புலப்படும்.