20. காற்றின் தந்தை நீ!
சபை அமைதியில் ஆழ்ந்திருந்தது. அந்த அமைதியில் இலயம் மாறா சுருதி போல நிவேதிதாவின் பேச்சு, அந்த ஹால் பூராவும், ஹாலைத் தாண்டியும் ஒலித்துக்கொண்டிருந்தது.
"உயிர்ப் படைப்புகளில், மனிதராய்ப் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும். இது பூர்வஜன்ம பலனல்லாது வேறில்லை.
'ந ஹி மனுஷ்யாத் ஸ்ரேஷ்ட தரம் ஹீ கிஞ்சித்"
--என்று மகாபாரத்தில் வரும். இறைவனிடமிருந்து கிடைத்ததை பாதுகாப்புடன் பேணி வைத்திருந்து இறைவனுக்கு அர்ப்பணிப்பது தான் மனிதனின் தலையாய கடமையாகும். மனிதன் இறைவனில் ஐக்கியமாவதற்கு இப்பிறவி கிடைதற்கரிய பேறு.
"சிந்தனை செய்யும் சக்தி, நல்லது-கெட்டதை பகுத்துணரும் அறிவு மனிதனுக்கு மட்டுமே அளிக்கப்பட்ட வரம். இதுவே இறைவனின் இறுதிப் படைப்பு. அடுத்து, அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு இறைவனிடம் கலப்பதுதான்.
"மனிதனை அவன் கொள்ளும் எண்ணங்களே சிற்பி கை உளியாய் செதுக்கிச் செதுக்கி வடிவமைக்கின்றன. எண்ணம் சும்மா இல்லாது செயல்படத் தூண்டுகிறது. எண்ணத்தின் தன்மைக்கேற்ப செயல் வடிவு பெற்று, அது நன்மையோ, தீமையோ செய்தவனை அதன் விளைவைத் துய்க்கச் செய்கிறது. நல்ல எண்ணங்கள் அனுபவப்படும் பொழுது நல்ல பயன்களைத் தந்து நேர்மறைச் சிந்தனைகளை சிந்தையில் கிளர்த்தும். அது உடலின் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும். எதிர்மறைச்சிந்தனைகள், இதற்கு எதிர்மறை.
"நேற்று உளவியல் பேராசிரியர் தேவதேவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். எண்ணத்தின் ஆளுகை பற்றியும், அதன் விளைவுகளைப் பற்றியும் நிறையச் சொன்னார். கேட்கக் கேட்க அதிசயமாய் இருந்தது. அவர் இந்த அவையில் உரையாற்றுகையில் அதையெல்லாம் பற்றி நிறைய சொல்லவிருப்பதாகச் சொன்னார். கிருஷ்ணமூர்த்தி சார் சொன்னபடி நாம் பாக்கியம் செய்தவர்கள். இங்கு வந்து நிறைய நிறைய புதிய விஷயங்களை நாம் தெரிந்து கொண்டோம்.
"பிரபஞ்சத்தைப் படைத்து இறைவன், உயிரினத்தின் உறைவிடப் பிரச்னையைத் தீர்த்தார். இயற்கை இருக்க, உணவு பிரச்னையும் தீர்ந்தது. உண்ணும் உணவே ஊட்டமாகிறது. ரொம்ப சரி.
"அடுத்து உடல் இயக்கத்திற்கு சக்தியாக இருக்கும் பிராணன். ஒவ்வொரு அவயவத்தையும் இயக்கும், நமது செயல்களுக்கு உந்து சக்தியாக இருக்கும் பிராணன். இது எது?.. இந்த பிராணனைப் பற்றி விளக்கச் சொல்லும் பிரச்ன உபநிஷத்தில், பிராணனைப் பற்றிச் சொல்லும் ஒரு வார்த்தை வருகிறது. அதுதான் பிடித்து இழுக்க கிடைத்த நூலிழை.
'பிதா த்வம் மாதரிச்வன'
--இந்த சொற்றொடருக்கு அர்த்தம்: 'காற்றின் தந்தை நீ!'
"பிராணனை வாயு ரூபத்தில் கொள்ளும் பொழுது, பிராணவாயு என்று தமிழில் நிறைய அர்த்தத்துடன் தான் சொல்லியிருக்கிறார்கள்!.
யா தே தனூர்வாசி ப்ரதிஷ்ட்டிதா யா ச்ரோத்ரே யா ச சக்ஷக்ஷி யா ச மனஸி ஸந்ததா சிவாம் தாம் குரு மோத்க்ரமீ:
"இந்த பிரச்ன உபநிஷத ஸ்லோகம் சொல்கிறது: "ஓ, பிராணனே! ஒரு பொருளைப் பார்க்கின்ற பொழுதும், ஒன்றைக் கேட்கின்ற பொழுதிலும், ஒன்றைப் பேசுகின்றபொழுதும், உனது சக்தியின் அளவு செயல்படுவதற்கு ஏதுவாக எந்த அளவு இருந்து செயல்படுகிறதோ, மனத்திலும் எந்த அளவு நீக்கமற நிறைந்திருக்கிறதோ, அதே மாதிரி இருக்கச் செய்! போய்விடாதே!"
"'ஒவ்வொரு அவயவமும் இயங்குவதற்குத் தேவையான சக்தியைக் கொடு. இதில் மாற்றத்தை ஏற்படுத்திவிடாதே!' என்று இறைஞ்சலாக வந்திருக்கிறது. பிராண சக்தியின், அதன் வீச்சின் அளவுநிலை வேறுபட்டால், உடல் நிலை பாதிக்கபடும் என்பது அறிந்து இந்த வேண்டுகோள்.
"இந்தப் பிராணன், உயிர்க்காற்று தான் பிரதானமாக இருந்து கொண்டு தானே-- அபானன், சமானன், வியானன், உதானன் என்று வேறு வேறு கலவைகளில் வேறு வேறு செயல்களில் ஈடுபடுகிறதாம். "
சகோதரி நிவேதிதா மேலும் தொடர, அவையினர் உன்னிப்பாகக் கேட்கத் தலைப்பட்டனர்.
(தேடல் தொடரும்)