நுழைவாயில்
உலகம் பூராவும்
உள்ள மக்கள் திரள் அதிகம் உபயோகப்படுத்தும் வார்த்தை எது என்று ஒரு கணக்கெடுபப்பு
எடுத்தார்கள். ‘நான்’ என்கிற வார்த்தை
தான் எல்லா நாடுகளுக்குமான எல்லா மொழிகளிலும் அதிகம் பயன்படுத்துகிற
வார்த்தையென்று பெருத்த ஆய்வுக்குப் பின் தெரிய வந்தது.
அவ்வளவு மவுசு
வாய்ந்த இந்த ‘நானை’ அவரவர் மனம் தான் பிரநிதித்துவப்படுத்துகிறது என்கிற உண்மை
அதன் தொடர்பாக பிறகு நடந்த பல ஆராய்ச்சிகளின் மூலம் தெரியவந்தது. மனம் என்பது உடல்
சம்பந்தப்பட்ட ஒன்று என்று மேலோட்டமாக வெகுவாக எண்ணப்படுகிறதே தவிர இது இன்னது
தான் என்று இதுவரை துல்லியமாக எவராலும் வரையறுத்துச் சொல்ல முடியாத விசித்திரமாக
இருப்பது தான் இந்த மனத்திற்கான தன்னைத்
தானே காட்டிக் கொள்ளாத பெருமையாக இருக்கிறது.
உடல்
சம்பந்தப்பட்ட ஒன்று தான் இந்த மனம் என்று கொள்வது பொதுவான கருத்தாயிருப்பினும் உடல்
உறுப்புகளில் ஒன்று தான் இந்த மனம் என்பதை நிருவ முடியாமல் இருப்பது தான் மனம் பற்றிய ஆராய்ச்சிகளில்
மிகவும் பின்னடைவு கொடுக்கக்கூடிய சமாசாரமாக இருக்கிறது. இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல் போல ஒரு
உறுப்பாக இது நாள் வரை இந்த மனம் எந்த ஆய்விலும் அடையாளம் காணப்படவில்லை. அதனால் மனம்
என்பது மூளையின் செயல்பாடுகளில் ஒரு அம்சமாக உத்தேசமாக இப்போதைக்குக்
கொண்டிருக்கிறோம். எப்படி காதல் என்கிற உணர்விற்கு இதயத்தை அடையாளமாக்குகிறோமோ
அப்படியான ஒரு அடையாளப்படுத்துதலே இது என்று கொள்ளலாம். அதனால் தான் மேனாட்டு மருத்துவ இயலில் மைண்ட் (MIND) என்கிற சொல்லே
மனம் என்பதைக் குறிப்பதாக இருக்கிறது.
மனமாவது
பரவாயில்லை; இவ்வளவு கால ஆராய்ச்சிக்குப் பிறகு சிக்மண்ட் பிராய்ட் போன்ற ஒப்பற்ற
ஆராய்ச்சியாளர்களின் பங்களிப்பிற்குப் பிறகு ‘மன இயல்’ என்கிற துறையில்
வகைப்படுத்தவாவது முடிந்த அளவுக்கு விவரங்கள் செறிந்ததாகக் கொள்ள முடிகிறது. ஆனால் இந்த உயிர்?....
.
உயிர் என்பது
மனத்தை விட சூட்சுமான ஒன்றாக போக்குக் காட்டுகிறது. உடலில் அசைவோட்டமே அற்றுப் போய்விட்டதென்றால்
இத்தனை நாள் இந்த இயக்கத்திற்குக் காரணமாக இருந்த உயிர் என்ற அந்த ஒன்று உடலை
விட்டு நீங்கி விட்டதாகக் கொள்கிறோம். ஆக உடலின் உயிர்ப்புக்குக் காரணமான சூட்சுமான
ஒன்றை உயிர் என்று காரணப்பெயர் கொண்டு அழைக்கிறோமே தவிர இன்னது தான் இந்த உயிர்
என்று இதுநாள் வரை அறிவுலகம் விவரமாக அறுதியிட்டு அறியாத ஒரு சூட்சுமாகவே உயிர் என்று
நம்மால் பெயரிடப்பெற்ற ஒன்று இருக்கிறது.
மனம், உயிர்
போலல்லாமல் இந்த இரண்டையும் உள்ளடக்கியதாக நாம் நினைத்துக் கொண்டுள்ள உடல் பற்றி
அக்கு வேறு ஆணி வேறாக விவரமாகத் தெரிந்துள்ளோம்.
ஏனெனில் மற்ற இரண்டும் மாதிரி அல்லாது உடல் அதன் உள் பொதிந்த உறுப்புகள்
எல்லாம் நம் மருத்துவ சாத்திர அறிவிற்கு உட்பட்ட நிலையில் கைவசமாகி விட்டது. கண், மூக்கு, காது, கை, கால் என்று வெளிக்குத்
தெரிகிற உடல் அமைப்புகள், நுண்ணிய கருவிகள் மூலம் காணக்கிடைக்கிற உடலின் உள்
உறுப்புகள் என்று உடலும் உடல் சார்ந்த உறுப்புகளும் இன்றைய தேதியில் திறந்த
புத்தகமாகியிருக்கிறது. உடல் சார்ந்த மருத்துவ சாத்திரம் நாள் தோறும் வெவ்வேறான
ஆராய்ச்சிகளின் விழுமிய கண்டுபிடிப்புகளால் வளர்ந்து கொண்டிருக்கிறது.
சூட்சுமங்களைத்
தம்முள் பொதித்துக் கொண்டுள்ள மனம், உயிர் என்பதெல்லாம் என்னவென்று ஆராய முற்பட்டதும்,
நமக்கு நன்கு தெரிந்திட்ட உடல் சாத்திரத்துடன் இந்த இரண்டுக்கும் ஆன உறவு பற்றித்
தெரிந்து கொள்வதற்குமான ஒரு முயற்சியே இந்தத் தொடராக வடிவம் கொண்டுள்ளது.
மனம், உயிர்
பற்றிய தெளிந்த கண்ணோட்டத்திற்காக வழி நடத்திச் செல்லும் ஒரு சிறுமுயற்சியாக தன்
பங்களிப்பைச் செலுத்தினால் அதுவே இந்த தொடருக்கான பெருமையும் ஆகும்.
அன்புடன்,
ஜீவி
அத்தியாயம்:
ஒன்று. என் மனம் நீ அறிவாய்! உந்தன்...
‘மனம்’ என்பது
எல்லோருக்கும் தெரிந்த சொல் தான். தெரிந்த
என்பதைத் தாண்டி எல்லோராலும் உணர்ந்த சொல் அது.
அவரவர் மனம் என்னவென்பது அவரவர் ;உணர்ந்த ஒன்று தான். ஒவ்வொருவருக்கும் அவ்வளவு நெருக்கம் கொண்டது
அவரவர் மனம்.
சொல்லப் போனால் நாம்
எல்லோரும் நமக்காக வாழ்வதில்லை. நம் மனசுக்காக அதன் திருப்திக்காகத் தான்
வாழ்கிறோம். அல்லது ஒவ்வொரு விஷயத்திலும் தனது விருப்பம் என்னவோ அதை நிறைவேற்றிக்
கொள்வதற்காக மனம் நம்மை வழிநடத்திச் சென்று அதன் திருப்தியைத் தீர்த்துக் கொள்கிறது.
இப்படியாக மனசின் திருப்தியை நம் திருப்தியாக நினைக்கிறோம். ஆக, நம் மனசின்
திருப்தியை நம் திருப்தியாகக் கொண்டு நாம் செயல்படுவதைத் தான் வாழ்க்கை என்று
சொல்கிறோம் என்று தெரிகிறது.
உண்பது,
உடுப்பது, மகிழ்வது, மலர்வது, முயங்குவது எல்லாமே மனசுக்காகத் தான் என்று ஆகிறது. மனம்
திருப்தி கொண்டால் நமக்கும் திருப்தி.
மனம் சந்தோஷம் கொண்டால் நமக்கும் சந்தோஷம். மனசுக்கு ஒன்று வருத்தம்
என்றால் நமக்கும் அது வருத்தம். எதிலும் மனசுக்கு ஆர்வமில்லை என்றால் நமக்கும் அதில்
ஆர்வமில்லை. மனசுக்கு ஒன்று பிடிக்கவில்லை என்றால் நமக்கும் பிடிக்கவில்லை. எதிலாவது
மனசுக்குக் கொண்டாட்டம் என்றால் நமக்கும் அதுவே கொண்டாட்டமாகி விடுகிறது. இப்படியாக அவரவர் மனசின் அந்தரங்க துய்ப்புகளுக்கான
ஆர்வமே அவரவர் செயல்பாடுகளாகி அவரவர் வாழ்க்கையும் அதுவே தான் என்றாகிவிடுகிறது..
இப்படி நம்
செயல்பாடுகள் எல்லாமுமே மனசுக்காக என்று அமைந்து விடுகிற பொழுது தனக்காக என்று
எதுவுமில்லை என்று தெரிகிறது. இல்லை, ‘தான்’
என்பதே பொய்யோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
அல்லது ‘மனம்’ -- ‘’தான்’ என்று தனித்தனியாக இரண்டில்லை, ஒன்றைத் தான் நம்
அறியாமையால் இரண்டாகக் கொண்டிருக்கிறோமோ என்கிற எண்ணம் மேலிடுகிறது.
“நீ யார்?” என்று
எவராவது கேட்டால் அதற்கு நம்மிடம் பதிலுண்டு..“நான் யார்?”
என்று நமக்கு நாமே கேட்டுக் கொண்டால் அதற்கு தெளிவான ;பதிலில்லை. வெகுவான யோசனைக்குப் பிறகு ‘என் மனசு தான் நான்’
என்று நாமே உணருகிற மாதிரி நமக்கு நாமே கேட்டுக் கொண்ட கேள்விக்கு நல்ல ஒரு பதில்
கிடைத்து விட்ட மாதிரித் தோன்றுகிறது..
தெரிவதற்காகக் கேள்வி கேட்டதும், தெளிவதற்காக விடை கொடுத்ததும் மனசு தானோ
என்று நினைக்கையில் அந்த அமானுஷ்யம் பிர்மாண்டதாகவும் அதே நேரத்தில் கைக்கடக்கமான
குழந்தையாகவும் குழைகிறது.
‘எனக்கென்று
எதுமில்லை; எல்லாம் என் மனசின்
கூத்தாட்டம் தான்’ என்று தெரிந்து விட்ட பிறகு ‘நான்’ என்று இன்னொன்று மனதைத்
தவிர்த்துத் தனியாக இருப்பதற்கு சாத்தியமில்லை என்று தெரிகிறது. அல்லது மனசைத் தான் நான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ
என்று ஐயம் திகைக்கிறது.
நான் என்று
சொல்வதற்காவது உடல் என்கிற நடமாடுகிற கண்ணுக்கு யதார்த்தமாய் புலப்படுகிற ஒன்று
இருக்கிறது. ஆனால் எல்லாம் தானே ஆகிய மனம்
என்பதின் இருப்பை நிரூபணமாய் நிரூபித்துக் காட்டுவதற்கு எதுவுமில்லையே என்கிற
உண்மையும் சுடுகிறது. ஆக மனம் என்று ஒன்று
இருப்பதாக நினைப்பதே கற்பிதமோ என்று சுடுதலில் கிளர்ந்த ஞானோதயம் கேள்வியாய்
எழுகிறது.
கண்ணுக்குத் தெரிகிற
உடலாகிய ‘நானை’ப் புறக்கணித்து விட்டு இது இன்னது என்று நிரூப்பிதற்கு இயலாத கற்பிதமான
மனம் என்ற ஒன்றுக்கு இருப்பு கொடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று உள்ளொளி
மினுக்குகிறது.
‘கற்பிதமான மனம்’
என்று நினைக்கையிலேயே அஸ்திவாரமே ஆட்டம் கண்டது போலிருக்கிறது. இல்லாத ஒன்றை அடித்தளமாகக் கொண்ட ஆட்டபாட்டங்கள்
தான் பொல்லாத இந்த வாழ்க்கையின் ஆயாசமா? இல்லை, புலனுக்குப் புலப்படாத எதுவும்
இருப்பு கொண்டிருப்பதில்லை என்று தீர்மானமாகப் புறக்கணித்து விடுவது தான் விஞ்ஞான
உண்மையா?..
யோசிப்போம்....
(தொடரும்..)