மின் நூல்

Tuesday, April 24, 2018

வாசிப்புக்கு வந்திருக்கும் எனது நூல்கள்

து  இ-புத்தகக் காலம்.

புத்தகங்கள் மட்டுமல்ல, பத்திரிகைகளே இ--மேகஸின்களாக வெளிவரும் காலம் இது.  அச்சடித்த புத்தகங்களின் காலத்திற்கு அடுத்த வளர்ச்சியாக இந்த இ-யுகத்தில்  புத்தகங்களுக்கான வளர்ச்சியின் இன்றைய கால கட்ட மேம்பாடு இது. 

இ-புத்தகங்களாக வெளிவந்திருக்கும் எனது நூல்கள் சிலவற்றை வாசகர்களின் வாசிப்புக்காக இங்கு அறிமுகப்படுத்துவதில் பெரும் மகிழ்வு கொள்கிறேன்.

'unlimited' என்ற சொல் வெகு கவர்ச்சியாக  உலா வரும் காலமும் இது தான்.  புத்தக  உலகிலும் நிறைய 'unlimited' கள்  காணக் கிடைக்கின்றன.

புஸ்தகா டிஜிட்டல் மீடியா  (  www.pustaka.co.in  )   புத்தக வாசிப்புக்கான உருவெடுத்திடுத்திருக்கும் பிரத்தேயக புத்தகப் பிரபஞ்சம்.  பல்வேறு மொழிகளில் புத்தகங்களை வாசிக்கும் பெரும் பேறும் இந்தப்   புஸ்தகா பிரபஞ்சத்தில் சாத்தியமாகியிருக்கின்றன.

ரு.99/- செலுத்தினால் ஒரு மாத காலத்திற்கு unlimited- ஆக எத்தனை புத்தகங்களை வேண்டுமானாலும் நம் வசதிக்கேற்ப வாசித்துக் கொள்ளலாம் என்பது புத்தகப்  பிரியர்களுக்காகவே ஜனித்த ஏற்பாடாகத் தெரிகிறது.  இந்த எளிய ஏற்பாட்டில் எனது நூல்களையும் உள்ளடக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆவலிலேயே எனது  படைப்புகள் சிலவற்றை இந்த இ-நூலகத்திற்கு வழங்கியிருக்கிறேன்.

சமீபத்தில் இவர்கள் வெளியிட்டிருந்த எனது நூல்களுக்கான அறிமுக முன்னுரை கேட்டிருந்தார்கள்.  நான் அவர்களுக்கு அனுப்பி வைத்திருந்த அந்த அறிமுக முன்னுரைகளையும்
புத்தகங்களைப் பற்றிய விவரங்களையும் நமது பதிவுலகின் பார்வைக்கும் நண்பர்களின் உபயோகத்திற்காகவும் இங்கு பிரசுரிப்பதில் மகிழ்வு கொள்கிறேன்.

இனி, புத்தகங்களின் தலைப்புகளும் அவற்றிற்கான அறிமுக முன்னுரைகளும்:


1)
                                                                                                                                       ஜீவியின்  கவிதைகள்    

  நூல் வகை:
விதைகள்


நாடாண்ட மன்னர்களையும் அவர்களது வீர பராக்கிரம செயல்களையும் மிகைப்பட புனைந்து கவிதைகள் இயற்றி புலவர்கள்
பரிசில்கள் பெற்ற காலம் ஒன்றிருந்தது.  சுதந்திரப் போராட்ட காலத்து பாரதியார் தமது கவிதைத் திறனை அடிமைத்தளை அறுக்க ஆயுதமாகக் கொண்டார்.  பிரபஞ்சத்தின் விடை தெரியாக் கேள்விகளுக்கு பதில் காணும் வேள்வியாகக் கவிதைகள் தம்மைப் புதுப்பித்துக் கொண்ட காலமும் உண்டு.  இப்படி ஒவ்வொரு காலத்தும் அந்தந்த காலத்து தேவைக்கேற்ப கவிதைகள் உள்ளடக்கம் கொண்டிருந்திருக்கின்றன.   மக்களின் ஜனநாயக யுகம் பூத்துப் பூச்செரிந்த பொழுது மக்களின் பிரச் னைகளும், அதற்கான தீர்வுகளும் புதுயுகக் கவிஞர்களால் கவிதைகளின் உட்பொருளாயிற்று.   ஆனால் எல்லாக் காலத்தும் இயற்கை அழகும்,  காதலும் தான் கவிஞர்களின் பாடு பொருளாக இருந்து பெருமை பெற்றன.

இப்படியான  கோட்பாடுகளின் அடிப்படையில் இக்காலத்தின் தேவைகளைக்களுக்கேற்ப  பல்வேறு சிந்தனைகளைப் பூக்களைக் கோர்த்து தொடுக்கப்பட்ட ஜரிகை மாலை தான் இந்தக் கவிதைத் தொகுப்பு.  மொத்தம் 34 கவிதைப் பூக்கள்.   ரசித்து அனுபவிக்க வேண்டி கவிதைப் பிரியர்களின் பார்வைக்குப் படைக்கப்பட்டிருக்கிறது.   வாசித்துப் பாருங்கள், தோழர்களே!

2)                            
                                   இலக்கிய  இன்பம்


புத்தக வகை:  இலக்கியம்
                                                            
ங்க காலம் தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகள் ஒன்று கூடி சங்கமித்த காலம்.  அந்த ஒப்பற்ற காலத்தின் விழுமிய சிறப்புகளை இன்றைக்கு நமக்கு எடுத்தோதுவதே சங்க கால இலக்கியங்கள். 

ஒருகாலத்துப்  பெருமைகளும், பண்பாட்டுச்  செயல்பாடுகளும் தொன்று தொட்டுத் தொடரும் செல்வங்களாய் பிற்காலத்திலும் நம் செயல்பாடுகளில் அழியாமல் பிரதிபலிக்குமா என்பது மிலியன் டாலர் கேள்வி. இந்தத் தொகுப்பு அந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்வது.

சங்ககால நிகழ்வுகளை,  இக்காலத்து நிகழ்ச்சிகளோடு ஒரு கதை போலவான வடிவத்தில் ஒன்றிப் பார்ப்பதற்கான அரிய முயற்சி நூல் வடிவாகியிருக்கிறது.   அந்தந்த இடங்களில் சங்க காலப் பாடல்களையும்  கொண்டிருப்பது தனிச் சிறப்பு.

வாசித்துத் தான் பாருங்களேன்.    உங்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பது உறுதி.

3)                                                       
                         பார்த்தவை படித்தவை


புத்தக வகை:   பகிர்தல்
                                                                  
ச்சிட்ட எல்லாவற்றையும்  படித்துப் பார்க்க நாம் தவறுவதில்லை.  ‘அப்படிப் படிப்பதினால் ஆய பயன் என்ன?’ என்பது கூட அறிவார்ந்த கேள்வி தான்.

இந்தக் கேள்விக்கான பதில் நம்மிடையே விளைவிக்கும் சிந்தனைகள் எக்கச்சக்கம்.  ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா!’ என்ற பிரமிப்பே கேள்வியாகிப் போய் சிலிர்க்கிறார் பாரதியார்.  அந்த அத்தனை கோடி இன்பங்களில் வாசிப்பு இன்பமும் தன்னிகரில்லாதது.
வாசித்தவற்றை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்வதே வாசிப்பிலான பயனாகத் தோன்றுகிறது.

நான் வாசித்து நேசித்தவைகளை உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  நீங்களும் அவற்றை உங்கள் நேசத்திற்க்குரியவரிடம் பகிர்ந்து கொண்டால் அதுவே இந்த நூலாக்கத்தின் பெரும் பயன்.

இதையும் பகிர்ந்து கொள்வதில் கிடைக்கும் இன்பம் வேறு எதில் இருக்கிறது?..  நீங்களே சொல்லுங்கள்.


4)
                            
                     காதலினால் கதையுண்டாம்


புத்தக வகை:  சிறுகதைகள்

                                                                           
‘சின்னச் சின்ன ஆசை; சிறகடிக்க ஆசை’  என்பது திரைப்படக் கவிதையாக நம்மைக் கிரங்கடிக்கிற வரிகள்.  இந்தத் தொகுப்பில் இருப்பதும் சின்னச் சின்ன ஆசைகள் போல் சின்னச் சின்ன கதைகள் தாம்.  ‘காதலினால் கவிதையுண்டாம்’ என்பது யுகக்கவிஞனின் வாக்கு;  கவிதை மட்டுமல்ல, காதலினால் கதையுமுண்டாம் என்று இத்தொகுப்பில் உள்ள ஒரு  கதை நம் காதுகளில் கிசுசிசுக்கிறது.

மொத்தம் 10 சிறுகதைகள்.  இந்தப் பத்தையும் வாசித்த உணர்வும் உங்களைக் கிரங்கடிக்கும் தான்.  வாசித்துவிட்டுத் தான்  சொல்லுங்களேன்!


5)
                                குமுதமும் விகடனும்


புத்தக வகை:  சிறுகதைகள்                                                

குமுதமும் விகடனும் தமிழ் நாட்டின்  பிரபல் பத்திரிகைகளின் பெயர்கள்.  அதுவே இந்தத் தொகுப்பிலுள்ள ஒரு கதைக்குத் தலைப்புமாகிற அதிசயம் நடந்திருக்கிறது.   தொகுப்பிலுள்ள பதினோறு சிறுகதைகளும் விதவிதமானவை.  வெவ்வேறு உணர்வுகளில் நம்மை ஆட்படுத்துகிற சக்தி படைத்தவை.  எழுது முறையில் முத்திரை படைத்தவை.  வாசிப்பவரின் உள்ளத்தில் சத்தப்படாமல் இடம் பிடிப்பவை.  நீங்களும் வாசித்துத் தான் பாருங்களேன்!..




6)                                         
                                         
                            இருட்டுக்கு   இடமில்லை


புத்தக வகை:  புதினம்

மூகத்தில்   பெண்களின் இருப்பை, அவர்கள் இயல்பை, வாழ்வில் அவர்களின் பங்களிப்பை அடிக்கோடிட்டுச் சொல்லும் நாவல் இது.  சொல்லப் போனால், இரு குறுநாவல்களை ஒன்றாக்கிப் படைக்கப்பட்ட பின்னல் இது.
                                                                                       
இந்தப் புதினத்தில் கதை மாந்தர்கள் எல்லோரும் நல்லவரே.  தமது செயல்களால் எல்லாவற்றையும் நல்ல விளைவுகளுக்கான அனுபவங்களாக்கிக் கொள்கிறார்கள்.  நல்ல சிந்தனை விளக்கேற்றி இருட்டுக் கவியாமல் பார்த்துக்  கொள்கிறார்கள்.
பத்திரிகை, பதிப்பகம், எழுத்து, ஷேர் மார்க்கெட் என்று பொருளாதார சுதந்திரத்தினூடான பெண்கள் சுதந்திரத்தை நிச்சயப்படுத்த நிறைய வாய்ப்புகளினூடே கதை பயணிக்கிறது.
தீவினை செயல்களோ, தீவினை கதாபாத்திரங்களோ இல்லாமல் தமிழில் முதன் முதலாக உருவான நாவல் இது.

பெண் வாசகர்களுக்கான புத்தம் புது பரிசு இது!
வாசித்துத் தான் பாருங்களேன்!



7)
                      கனவில் நனைந்த நினைவுகள்


புத்தக வகை:  குறு நாவல்    

யாருக்கும் தூக்கத்தில் கனவுகள் வருவது சகஜம் தான்.   ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்பவான கலர்க் கலர் கனவுகள்.

கனவுகள் தற்செயலானவை அல்ல.  கனவுகள் வருவதற்கும் காரணங்கள் உண்டு.  அத்துடன் அவற்றிற்கான குறிக்கோளும் பயன்பாடும், ஏன் தீர்வுகளும் கூட உண்டு.

வாழ்க்கையில் நமக்கு ஆசைகளும், அபிலாஷைகளும் அதிகம்.  சொல்லப் போனால், சில இலட்சியங்கள் நிறைவேற அது பற்றி ஆசை ஆசையாகக் கனவு காணச் சொல்லியிருக்கிறார்கள்.

கனவுகளே இந்தக் கதையல்ல.   ஆனால் கனவுகள் இந்தக்  கதையை நடத்திச் செல்ல பின்புலத்து ஆதர்ச சக்தியாய் செயல்படுகிறது.

இத்தனைக்கும் நடுவே கும்பகோண எழுத்தாளர் அமரர் எம்.வி. வெங்கட்ராமும்  நடுநடுவே நினைவு  கொள்ளப்படுகிறார்.  வாசித்துத் தான் பாருங்களேன்!
          
                                                 
                                                   
மேற்கண்ட புத்தகங்கள்  AMAZON  KINDLE  பதிப்புலகிலும் வாசிக்கவும்  வாங்கவும் கிடைக்கின்றன.   KINDLE  தளத்திற்குப் போய்  KINDLE  உலகில்  jeevee  என்று குறிப்பிட்டுத் தேடினால் கிடைத்து விடும்.

நன்றி சொல்ல வேண்டும்  இ-புத்தக  ஆக்கங்களை சாத்தியப் படுத்திய அன்பர்களுக்கு.  வாசித்து மகிழப் போகிற நண்பர்களுக்கும்.

Thursday, April 19, 2018

பாரதியார் கதை --17

                                      அத்தியாயம்-- 17

பி.ஐ.எஸ்.என் என்பது ஆங்கிலேயர் நடத்தி வந்த ஒரு கப்பல் கம்பெனிக்குப் பெயர்.  பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் என்பது பி.ஐ.எஸ்.என். என்பதின் விரிவாக்கம்.

நாடெங்கும் சுதேசிய உணர்வு கொப்பளித்தக் காலம் அது.     நெல்லை மாவட்ட ஒட்டப்பிடாரம் ஊரில் பிறந்து புகழ்பெற்ற நேர்மையான வழக்கறிஞராகத்   திகழந்த தமிழர் ஒருவருக்கு  சுதேசி இயக்கத்தின் தியாகங்கள்   மனதில் நெகிழ்வேற்படுத்தியது.    செல்வ வளமிக்கக் குடும்பத்தில் பிறந்தவர் அவர்.  அவர் தாத்தா, அப்பா என்று எல்லோருமே வக்கீல் தொழில் புரிந்த வழக்கறிஞர் குடும்பம் அது. அப்படிப் பட்ட குடும்பத்தில் வந்த அந்த இளைஞர் தன்னையும் அந்த சுதேச இயக்கத்திற்காக அர்ப்பணிக்கும்   உத்வேகத்தில்  தான் பார்த்து வந்த   வழக்கறிஞர் தொழிலை உதறித் தள்ளினார்.   சுதேசியப் போராட்டக் களத்தில் குதித்தார்.

கப்பலோட்டியத் தமிழன் என்று எதிர்காலத்தில் புகழ்பெற்ற வ.உ. சிதம்பரம் பிள்ளை  அவர்கள் நீண்ட இந்தியக் கடற்பரப்பில் ஆங்கிலேய ஆதிபத்தியத்தை ஒடுக்கும் விதமாக  சுதேசிக் கப்பல்களை இயக்கிய  உண்மைக்  கதையின் ஆரம்பப் பகுதி இது தான்.

மிகுந்த யோசனையுடன் வணிக கப்பல்களை பி.ஐ.எஸ்.என்னுக்குப் போட்டியாக கடலில் விட திட்டம் உருவாகிவிட்டது...  உருவாகிய   திட்டத்தை செயல்படுத்த பங்குதாரர்களைச் சேர்த்து 1906 அக்டோபர் 16-ல் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி என்ற பெயரில் கப்பல் கம்பெனியை அரும்பாடுபட்டுத் துவங்கினார் வ.உ.சி.   தூத்துக்குடி பீச் ரோடில் கம்பெனிக்கான அலுவலகமும் ஏற்பட்டது.  மதுரை தமிழ்ச் சங்க வள்ளல் பாண்டித்துரை தேவர் கம்பெனிக்கு தலைவராகவும் சேலம் விஜயராகவாச்சாரியார் சட்ட ஆலோகராவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அந்நாளைய  பம்பாயில் இருந்த ஷாலேன் என்ற நிறுவனம் குத்தகை அடிப்படையில் வ.உ.சி.யின் நிறுவனத்திற்கு  கப்பல் வழங்கத் தயாராக  இருந்தது.  ஆனால் இதை  ஆரம்பத்திலேயே மோப்பம் பிடித்த அந்த வெள்ளைக்கார கம்பெனி,  சுதேசி நிறுவனத்துடனான தன் கடல் போட்டியை முளையிலேயே கிள்ளி விட வேண்டுமெனத்  துடித்தது. அந்த துடிப்பின் வெளிப்பாடாய் ஷாலேன் கம்பெனி அச்சுறுத்தப் பட்டது. அதை அடுத்து ஷாலேனும்  வ.உசியின் சுதேசி கப்பல் நிறுவனத்திற்கு குத்தகைக் கப்பல் தரத் தயங்கினார். 
இருந்தாலும் அசரவில்லை வ.உ.சி.  சொந்தத்திலேயே கப்பல் வாங்கி விடுவது என்ற உறுதியுடம் பம்பாய் பயணம் மேற்கொண்டார்.  'கப்பலுடன் வந்தால் மட்டுமே தமிழகம் வருவேன்;  இல்லையெனில் கடலில் வீழ்ந்து மாய்வேன்' என்று பம்பாய் புறப்படுகிற நேரத்தில் பிள்ளையவர்கள் ஏற்றிட்ட சபதம் சரித்திரப் பிரச்சித்தி பெற்றது.

முதலில் எஸ்.எஸ். காலியோ என்ற கப்பல் கம்பெனிக்குச் சொந்தமாகியது.  பின் பிரான்ஸிலிருந்து எஸ்.எஸ். லாவோ என்ற கப்பல் வந்தது.  காலியோவும் சரி, லாவோவும் சரி இரண்டுமே அந்தாளைய நவீன கப்பல்கள்.  சுதேசிய   கப்பல்களுக்கு கிடைத்த ஆதரவு  வெள்ளையரின் கப்பல்களுக்கு  பெருத்த பொருளாதார இழப்பை ஏற்படுத்தியதை வெள்ளையரால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை.    மக்களுக்கோ சுதேசிய கப்பல்களின் வெற்றி-- நம் கப்பல், நம் வெற்றி என்பதான உணர்வு கிளர்ந்தெழுந்து. இதுவே வெள்ளையரின் கப்பல்களை பகிஷ்கரிக்கிற அளவுக்கு சுதேசிய களிப்பு ஒருபக்கம்; இன்னொரு  பக்கமோ இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத பிரிட்டிஷ் அரசின் சதித் திட்டங்களின் விதவிதமான வடிவங்களை எதிர் கொள்ள நேரிட்டது.  சுதேசிய கப்பல் நிறுவனத்தின் மக்கள் ஆதரவை முடக்க பி.ஐ.எஸ்.என்னிலோ  கட்டணமில்லாத பயணம்,  பயணிகளுக்குக் குடை வழங்குதல் போன்ற இலவச யுக்திகளுக்கு  அன்றே கால்கோள் விழா நடத்தப்பட்டது.

வ.உ.சி. அவர்கள் பன்முக ஆற்றல்கள்  கொண்ட வித்தகர்.  தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களின் அவல நிலைகள் போக்க வ.உ.சி.யும்  சுப்பிரமணிய சிவாவும் கைகோர்த்துப் போராடினர்.   இந்திய தொழிலாளர் வர்கப் போராட்டத்தில் தொழிற்சங்கம் அமைந்திராத காலகட்டத்தில் நூற்பாலைத் தொழிலாளர்களை ஒன்று திரட்டிய போராட்டம் ஒன்று உலகிலேயே முதன் முதலாக தூத்துக்குடியில் தான் அரங்கேறியது.  வ.உ.சி.யின் படை திரட்டும் ஆற்றல், பேச்சு வன்மை, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் இதெல்லாம் ஒன்றாய்த் திரண்டு இறுதி வெற்றி நூற்பாலைத் தொழிலாளர்களுக்கே என்று ஆனது.  சுதேசி பிரச்சார சபை என்ற பெயரில் வ.உ.சி.யின் முயற்சியால் வெள்ளையர்களின் அநீதிகளை எதிர்த்து அறிவார்ந்த பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.   தர்ம சங்க நெசவு சாலை, தூத்துக்குடி கைத்தொழில் சங்கம், சுதேசிய பண்டக சாலை, வேளாண் சங்கம் என்று வெள்ளையர்களின் சூழ்ச்சிகளை எதிர்கொள்வதற்கான பல்வேறு   பாடி வீடுகளை வ.உ.சி.  அமைத்தார்.

இதற்கிடையில் வங்கத்து சுதந்திரப் புறா,   விபின் சந்திர பாலர்  சிறைக்கூண்டிலிருந்து விடுதலையாகும் செய்தி நாடெங்கும் பரவியது.  சந்திர பாலரின் விடுதலையை  விழா எடுத்துக் கொண்டாட வ.உ.சி. பெரிதும்  விரும்பினார்.  தூத்துக்குடியிலும் நெல்லையிலும் விழாவுக்கான ஏற்பாடுகள் களைகட்டின.   அவசர அவசர்மாக விடுதலை விழாவிற்கு ஆங்கில அரசு தடை விதித்தது.  தடையை மீறி தாமிரவருணி  ஆற்றின் தைப்பூச மண்டபத்தின் உச்சியிலேறி சிதம்பரனார் திரண்டிருந்த மாபெரும்  கூட்டத்தின் நடுவில் கர்ஜித்தார்.  அந்தக் கூட்டத்தில் சுப்பிரமணிய சிவாவின் எழுச்சியுரை சிதம்பரம் பிள்ளையின் துடிக்கும் பேச்சாற்றலுக்கு ஜரிகைப் பட்டை போல அழகு சேர்த்தது.

தடையை மீறி நடந்த மாபெரும் கூட்டத்தின்  வெற்றிக் களிப்பை ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களால்  சகித்துக் கொள்ளவே முடியவில்லை.     சிதம்பரநாதரை கைது செய்ய அதிகார வர்க்கம் துடித்தது.  அவரைத் தூத்துக்குடியில் கைது செய்தால் அதன் விளைவு பெரும் கலகமாக இருக்கும் என்று எதிர்பார்த்து மாற்று ஏற்பாடுகள் செய்தனர்.  திருநெல்வேலி கலெக்டர் தன்னை வந்து நெல்லையில்  வந்து சந்திக்குமாறு சிதம்பரனாருக்கு தாக்கீது அனுப்பினார்.   மக்கள் தடுத்தும்  தாம் கைது செய்யப்படலாம் என்பது தெரிந்தே வ.உ.சி.  கலெக்டரை சந்திக்க நெல்லை கிளம்பினார்.

இதற்குமேலும் இந்திய பிரிட்டிஷ் அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  முதலில் வ.உ.சி.யின் சுதேசி கப்பல் கம்பெனியை பல்வேறு சூழ்ச்சிகளால் நிலைகுலையச் செய்து   நிறுவனம் திவாலாகும்   நிலைமைக்குத் தள்ளினர்.  அடுத்து அரசுக்கு எதிராக பல்வேறு  சந்தர்ப்பங்களில் செயல்பட்டார் என்று குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டு வ.உ.சி.யைக் கைது செய்தனர்.    வ.உ.சி.யின் கைதைக் கண்டித்து  மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.  அதைத் தொடர்ந்து சிதம்பரனார் கோவை சிறைக்கோட்டத்திற்கு அனுப்பப்பட்டார்.

வ.உ.சி. சிறையேகியதும் சுதேசி கப்பல் கம்பெனி ஆழ்கடலில் அமுங்கிப் போன நிலைக்குள்ளாயிற்று.   வணிக ரீதியில் சுதேசி கப்பல் கம்பெனியில் பங்கு முதலீடு செய்திருந்த பெருந்தனக்காரர்கள்,  வ.உ.சி.யின் சுதேசிய செயல்பாடுகளை   வேண்டாத வேலையாகவே எண்ணினர்.  இத்தனை இன்னல்களுக்கும் இடையே சுதேசிய  கப்பல் கம்பெனியிடம் எஞ்சியது எஸ்.எஸ். காலியோ கப்பல் ஒன்றே. இந்தக் கப்பலையையும் எவரிடமாவது விற்று காசாக்கிக் கொள்கிற நிலையில் சுதேசி  ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியின் சொத்துக்களை விலைபேசும் நிலை ஏற்பட்டது.  வங்காளத்து சந்திரநாகூர் பிரஞ்சிந்தியாவின் ஒரு பகுதி.  புதுவை சட்டசபை பிரதிநிதியாய் சந்திரநாகூரில்  இருந்த வங்காளி ஒருவர் இந்த 'காலியோ' கப்பலை விற்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.  திவாலான கம்பெனியின் எஞ்சிய சொத்துக்கள் விற்கப்பட்டு பங்குதாரர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும் என்ற நியாயங்கள் எல்லாம் சரி தான்.  ஆனால் அந்த காலியோ கப்பல் யாருக்கு விற்கப்பட்டது என்பது நெஞ்சு பொறுக்க முடியாத விஷயம் ஆயிற்று.  எந்த  பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி,  வ.உ.சி.யின்  சுதேசி கப்பெனியின் சீர்குலைவுகளுக்குக் காரணமானதோ, அதே  பி.ஐ.எஸ்.என். கம்பெனிக்கே  காலியோ விற்கப்பட்டது தான் கொடுமையிலும் கொடுமை!

இந்த செய்தி கேட்டு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல பாரதியார் துடித்துப் போனார்.  பிரிட்டிஷ் கம்பெனியின் அடாவடித்தனங்களைப் புறக்கணித்து சுதேசி கப்பலுக்கு மக்களின், வணிகர்களின் ஆதரவு பெருகிய பொழுது இந்த நாட்டு மக்களுக்கு நல்ல  காலம் வந்து விட்டதென்று புளகாங்கிதம் அடைந்த பாரதி,  வ.உ.சி.யும் சிறையில் அடைக்கப்பட்டு, கப்பலும் அநியாயத்திற்கு பி.ஐ.எஸ்.என். நிர்வாகத்தின் கைக்கே போய்ச் சேர்ந்ததில் மிகவும் சோர்ந்து போனார்.   கோவை சிறையில் சிதம்பரனார் அனுபவித்த துன்பங்களைக் கேள்விப்பட்டு துடிதுடித்துப் போனார்.  சிறைப்பறவை போல தானும் கையாலாகதவனாய்  புதுவையில் இருப்பது அவரை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது.   அக்கணமே பிரிட்டிஷ் இந்தியா பகுதிக்குப் போய் தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பு அவரின் இதய மூச்சாயிற்று.   அதுவும் பாரதியும் வ.உ.சி.யும் கொள்கையிலும் செயல்பாட்டிலும் ஒன்றிய நண்பர்கள்.  சுருங்கச் சொல்ல வேண்டுமானால் திலகர் படை வீரர்கள்.

சந்தோஷத்திலும் சரி, துக்கத்திலும் சரி கவிஞனுக்கு கவிதை தானே பிறக்கும்?..  வ.உ.சி.   கோவை சிறையில் பட்ட துன்பங்களைக் கேட்டுப்  பரிதவித்தவருக்கு கவிதை கண்ணீர் ஊற்றாய் பெருக்கெடுக்கிறது....  'மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்,   நூலோர்கள் செக்கடியில்   நோவதும் காண்கிலையோ?' என்ற இரத்தக் கண்ணீர் வரிகளை இன்று வாசிக்கும் பொழுதும் நம் நெஞ்சமெல்லாம் நெகிழ்கிறது.

(வளரும்)

படங்கள் அளித்து உதவியவர்களுக்கு நன்றி.





Related Posts with Thumbnails