மின் நூல்

Showing posts with label நினைவலைகள். Show all posts
Showing posts with label நினைவலைகள். Show all posts

Monday, March 16, 2020

வசந்த கால நினைவலைகள்...

                                                          49

ரம்பத்திலிருந்தே தன்  எழுத்து  நடையில் வித்தியாசம் காட்டியதால்  சுஜாதா கதைகள் என்றாலே வார்த்தைகளை அவர் எப்படி பின்னியிருக்கிறார் என்பதே முக்கியமாகிப் போய்விட்டது.   அதனால் அவரது காமா சோமா கதைகள் எப்பொழுதும் மனசில் முக்கிய இடம் பிடித்ததில்லை.   இதனால் தானோ என்னவோ  மற்றவர்கள் பெரும்பாலும் வாசித்து அறியாத அல்லது நினைவில் வைத்திருக்காத வித்தியாசமான கதைகளே என் நினைவில் இருப்பதாக ஆயிற்று. 

'மத்யமர்'  பன்னிரண்டு கதைகளில் முதல் கதையான 'ஒரு கல்யாண ஏற்பாடு' கதையில் ஒரு வரி வரும்.  'நரசிம்மன் கூடத்து அலமாரியில் இருந்த  ஹெரால்ட் ராபின்ஸ்  புத்தகங்களை நீக்கி  ஜே.கிருஷ்ணமூர்த்திகளை அடுக்கினார்' என்று வெகு சாதாரணமாக போகிற போக்கில் எழுதுகிற மாதிரி எழுதி விட்டுப் போய் விடுவார்.  நமக்கோ அதுவே அசாத்திய வேலப்பாடுகள் நிறைந்த வார்த்தை கோர்வைகளாகத் தெரியும்.    இந்த  ஒற்றை வரியை ரசிப்பதற்கு  ஹெரால்ட் ராபின்ஸ்  எழுத்து பற்றியும், ஜே. கிருஷ்ணமூர்த்தி பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.   ஒருவரின் குணாம்சத்தை  எதையோ சொல்லி எப்படி வெளிப்படுத்தி விட்டார்  என்று நமக்கு திகைப்பாக இருக்கும்.  அந்நாட்களில்  மனம் தோய்ந்து  சுஜாதாவை படித்த நினைவுகள் இவை. 

'தேடாதே'ன்னு  இன்னொரு குறுநாவல்.  கணபதி சுப்ரமணியம்  என்கிற ஜி.எஸ்.,   எம்.ஏ.  லிட்.,  சமூக அலைக்கழிப்பில்  தமிழ் பத்திரிகைகளுக்கு கவர்ச்சிப் படங்கள் சப்ளை செய்யும் போட்டோகிராபர்.  தொழில் முறையில் நிறைய பெண்களோடு பரிச்சயம் என்றாலும்  எல்லாரும்  அவன் நிக்கானின்  வ்யூ  ஃபைண்டரில் தெரியும்  எஸ்.எல்.ஆர். பிம்பங்கள் தாம்.   அன்றைக்கு தியாகராஜன் என்பவர் சொல்லி ஒரு குட்டி நடிகையை  ஒரு சில போட்டோக்களில் சிறைப்படுத்த  அவள் வீட்டிற்கு வந்திருக்கிறான்.

"கொஞ்சம் அப்படியே சாஞ்சுக்குங்க!.."
"இப்படியா ஸார்?"
"இல்லை..  கொஞ்சம் இடது பக்கமா..  தட்ஸ் இட்.  அப்புறம் மார்லே அந்த ஸாரியை லேசா..  ஓ.எஸ்.  போதும்!  ப்யூட்டிஃபுல்.  கொஞ்சம் சிரிங்க!  என் இடது கையைப் பாருங்க..  ரிலாக்ஸ்!  தட்ஸ் இட்!"

அப்பெர்ச்சர்  எஃப் 8.
ஸ்பீட்  125

காமிராவின் கழுத்தைத் திருக அந்தப் பெண் வ்யூஃபைண்டரில் தீட்டப்பட்டாள்.  அவளை நிறையவே பார்க்க முடிந்தது.

கிளிக்!

"தாங்க்ஸ்.  நீங்க டிரஸ் சேன்ஞ் பண்ணிகிட்டு வாங்க.."

"நீச்சல் உடை இருக்குதுங்க.... நல்லா இருக்கும்னு பேபி சொல்லிச்சு.."

"போட்டுக்கிட்டு வாங்களேன்.."

உள்ளே சென்றாள்.

வாசிக்கிறவரின் விழியோரங்கள் நீச்சல் உடையில் அந்த குட்டி நடிகையின் படத்தை ஜெயராஜ் போட்டிருக்கிறரா என்று சுவாரஸ்யமாக பக்கத்தைத் திருப்புகையில்...

நாம் வெளியே வந்து சுஜாதாவை   தீவிரமாக ஆராய்வோம்.      எழுத்து அதல பாதாள அளவுக்கு  இறங்காமல் அதே நேரத்தில்  லேசான கிறக்க  ஊஞ்சல் ஆட்டலில் வாரப் பத்திரிகை எழுத்துக்களில்  மனம் பேதலிப்பவர்களுக்காக..

--  இது தான் சுஜாதாவா?..  இல்லை; இல்லை!  இதெல்லாம் வாரப்பத்திரிகை  விற்பனைக்காக! (நம்புங்க..)     சினிமாக்கள்லேலாம் அந்தந்த  ரசிகர்களுக்குத் தக்க மாதிரி  சில பல ஐட்டங்கள் வைப்பார்கள் இல்லையா?...  அந்த மாதிரி...    வெள்ளை பேப்பர்களை கருப்பு மசியிட்டு போணியாக்குகிற  வாராந்தரி இண்டஸ்ட்ரி என்ற பகாசுர யக்ஞனத்தில் தானும் ஒருவனாய் தலை கொடுத்த எழுத்தாளனுக்கு எத்தனையோ நிர்பந்தங்கள்..

அப்போ நிஜ சுஜாதா?..     கொஞ்சம் இருங்கள்.  அந்தப் பெண் டிரஸ் மாற்றி வந்து விட்டாள்.

"ரெடி ஸார்!"

திரும்பினேன்.  நீச்சல் உடை பொருந்தியே இருந்தது.  கால்கள் நீளமாகவும்,  தொடை அரை படாமலும்,  சற்று வித்தியாசமானவள்.

"இது யார் ரூம்?" என்றேன்.

"என் ரூம் தான்!.."

"அப்ப இந்த புஸ்தகமெல்லாம் யார் படிக்கறாங்க?"

"நான் தான்.  ஏன்?"

ஏன் எப்படிச் சொல்வேன்?..  பெண்களில் உன் போன்றவர்கள் எல்லாம் 'ராணி'யில் படக்கதைக்கு மேல் படிக்க மாட்டார்கள். நீ எப்படி Zen  படிக்கிறாய் என்று கேட்பது அநாகரீகம்.  பேச்சைத் தவிர்.  காமிரா மூலம் பேசு.

"உக்காருங்க.."

உட்கார்ந்தாள்.  சின்ன மார்பும்,  இலை போன்ற வயிறும், நீண்ட கால்களும்..  நிதானமாக ஃபோகஸ் செய்தேன்.

"முழங்காலை முதல்லே கட்டிக்கங்க."

ஃபிளாஷ் கைடு நம்பர்  80 : 100  ஏ.எஸ்.ஏ.  பத்தடி தூரத்தில் எடுக்கிறோம் என்றால்  அபெர்ச்சர் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று மனக்கணக்குகளில் எண்ணங்களைக் கட்டாயப் படுத்தினேன்.  அவள் கலைத்தாள்.

"சிரிக்க வேண்டாம்."

"ஏன் நல்லா இல்லையா?"

"இந்த போஸூக்கு சிரிச்சா நல்லால்லே.."

"சிரிக்க வேண்டாம்னு சொன்னா சிரிப்பு வருது" என்றாள்.

"சிரியுங்க.. சிரிச்சு முடிச்சுட்டு வாங்க.  அப்புறம் எடுக்கலாம்."

"கோவிச்சுக்கறீங்களா?"

"என் தொழிலே கோபமே கூடாதுங்க!"

"என் தொழில்லயும்!"

"சிரிச்சாச்சா?"

"ஆச்சு.."

அவளோ  பி.ஏ.  லிட்.,  அவள் வீட்டு புத்தக அலமாரியில்  Zen and  the art of  Motor cycle maintenance   என்னும் புத்தகம் பார்த்த திடுக்கிடுதலில் அவளின் மீதான மதிப்பு அவனுக்குக் கூடி, அறிவுலக பிரஜைகளாய் இருவரும் பிணைக்கப்பட்ட சடுதியில்  அவர்களுக்கிடையே  காதல் மலர்ந்து  நிறைய மல்லாந்து... என்று கதை போகும்.   'கரையெல்லாம் செண்பகப் பூவி'ன் விட்ட குறை தொட்ட குறையாக  இந்தக் கதையில் ஆரம்பத்தில்  புவியரசுவின் கவிதையில் ஆரம்பித்து,  மு. மேத்தாவையும் தொட்டு,  'சேரும் முகவரி சரியில்லை;  அனுப்பிய முகவரியும் அதில் இல்லை;  ஒரு கடிதம் அனாதையாகி விட்டது'  என்ற புதுக்கவிதையைச் சொல்லி அதை யார் எழுதியது என்று யோசிக்க வைத்து,  ராபர்ட்  ஃப்ராஸ்ட்,  எரிக்கா யாங்,  ஈஸாப் கதைகள்,  ஜென் கதைகள்,  அலைஸ், எலிஸபெதன்  டிராமா,  Image  Processing,  கம்ப்யூட்டர்  டிஜிட்டைஸர்  என்று  நிறைய   அறிமுகங்கள் சிடைக்கும் என்று சொல்லி  விடுவது சுலபம்.   கதைப் போக்குக்கு   உறுத்தாமல்  இத்தனை சமாச்சாரங்களை தான் சொல்லுகிற விஷயத்தில் எப்படி உட்படுத்துகிறார் என்பது தான் சுஜாதாவின்  சாமர்த்தியம்.  ஒரு இடத்தில், "எனக்கு பேசற விஷயம் பெரிசல்ல,  ஜி.யெஸ்!.. பேசற முகம், அதனுடைய சலனங்கள்,  கண்கள்,  கைவிரல்கள்..  பேசுங்க.." என்று சொல்லி அயர வைப்பார்.

அதே மாதிரி தான் 'வண்ணத்துப் பூச்சி வேட்டை'யிலும்.  என்னவோ ஜிலுஜிலுன்னு ராஜபாட்டையில் போகிற சப்ஜெக்ட் தான்.  வேறு யார்  எழுதினும்  (அ)  வழக்கமான மாவரைப்பாக இருந்திருக்கும்;  (ஆ) சவசவக்க வைத்து சொதப்பி
இருப்பார்கள்;   (இ)  அத்தியாயம் அத்தியாயமாக கட்டுரை எழுதி கதை என்று பெயரிட்டு கொட்டாவி விட வைத்திருப்பார்கள்.  இந்த வண்ணத்துப் பூச்சியோ  சுஜாதாவின்  கைபட்டு சும்மா  சிட்டு போல சிறகடிக்கிறது.

இதிலும்,  எலிசா பிஷப்,   வாலஸ் ஸ்டீவன்ஸ்,  எமிலி   டிக்கின்ஸன், தாவ் தே சிங், டெரக் வால்காட் போன்றவர்கள் சொன்னதைச் சொல்லி  அதற்கிடையில்  ஆத்மா நாமையும்,   இளம்பிறையையும் நினைவு கொண்டு அவர்களின் துணுக்குக் கவிதைகளைத் தூக்கிப் பிடித்திருப்பார்.  இந்தப் புதினத்தில் தான்  சுகுமாரனின் 'அள்ளி கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்,  நதிக்கு அந்நியமாச்சு;  இது நிச்சலனம்.
ஆகாயம் அலைபுரளும் அதில்.  கை நீரைக் கவிழ்த்தேன், போகும் நதியில் எது என் நீர்?'  என்னும் கவிதை வரிகளை அங்கலாய்ப்புடன்  சொல்லியிருப்பார்.   அதுமட்டுமில்லை,   Bend  and you will be whole -   Cut and you will be straight  -  Keep empty and you will be filled - Grow old and you will be renewed..'  என்னும் லாவ்ட்ஸுவின் வரிகளை  அழகாக,  அதற்கான இடத்தில், அற்புதமாக, அர்த்தபூர்வமாக  எடுத்தாண்டிருப்பார்.

இதெல்லாம் தமிழுக்கு புதுசு.  இதையெல்லாம்  சொல்லாமல் அவரால் கதையை வெறும் கதையாக எழுத முடியாது.  தான் படித்து பரவசப்பட்டதையெல்லாம் சொல்வதற்காகத் தான் கதை -- கட்டுரை என்று அது  அதற்கேற்ற எழுத்து ரூபத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

'காகித சங்கிலிகள்',  'குருபிரசாத்தின் கடைசி தினம்'  மனதை உருக்கும் குறுநாவல்கள் பலருக்கு அறிமுகம் ஆகியிருக்கும் என்பதினால்  அவை பற்றிச் சொல்வதைத் தவிர்க்கிறேன்.

(வளரும்)

Thursday, March 12, 2020

வசந்த கால நினைவலைகள்..

                                                           48

சுஜாதா யார் என்று தெரியாமலேயே சுஜாதாவின் எழுத்து  நடையை மோஹித்தது தான் ஆரம்பத்தில்   நடந்தது.  இவர் தான் சுஜாதா என்று குமுத போட்டோ பார்த்து  மனசில் குறித்துக் கொண்டது எல்லாம் பின்னால் தான்.  நா.பா. கூட என்னிடம் சொல்லியிருக்கிறார்.. 'எழுத்தாளனுக்கு போட்டோ எல்லாம் எதுக்கு?.. எழுதுகிறவன்  மனத்தைப் புரிந்து கொண்டு அன்பு செலுத்தினால் சரிதான்'  என்று.  சொல்லப் போனால் அவர் சொல்வது தான் சரி.  சினிமா நடிகரைத் தவிர அத்தனை பேருக்கும் இது பொருந்தும்.  சினிமா நடிகரிடம் நெருக்கம் கொள்கிற  'அந்தஸ்த்தும்' அவ்வளவு இலகுவாக யாருக்கும் கிடைத்து விடாததும் ஒரு வகையில் நல்லதுக்குத் தான்.   அநாவசிய நேர விரயம் இல்லை.

அன்றைய வட ஆற்காடு மாவட்டத் திருப்பத்தூரில் நான் தொலைபேசி இலாகா பணியில் இருந்த காலத்தில் உள்ளூர் இலக்கிய  அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் எழுத்தாளர் சுஜாதா பேசுவதாக  இருந்தது.  மதியம் 3 மணி அளவில் கூட்டம்.   அன்று காலைப் பணி பார்த்தது செளகரியமாக இருந்தது.                         

மழ மழ பேண்ட்டில் தொள தொள சட்டை நுழைத்து ஒடிசலாக உயரமாக சுஜாதா..   கார்ப்பொரேட் அதிகாரி தோற்றத்தில் ஒரு தமிழ் எழுத்தாளரைப் பார்த்தது அந்தக் காலத்து அதிசயமாக இருந்தது.  உஷா சுப்பரமணியனும் கூட வந்திருந்தார்.  உ.சு.வின் 'மனிதன் தீவல்ல'  இப்போ கூட நினைவில் நிற்கிறது.  நா.பா. சொன்னது மாதிரி எழுத்தாளனின் இருப்பைத் தாண்டி அவர் எழுத்து முந்திக் கொள்ளும் ரகசியம் இது தான்.

அன்றைக்கு மெயின் பேச்சாளர் சுஜாதா தான்.  ஆரம்ப உரைகளுக்குப் பின் சுஜாதா பேச அழைக்கப்பட்ட போது கூச்சமுடன்  கூடிய உதடு  விரியும் புன்னகையில்  மைக் பற்றி "எனக்கு அவ்வளவாக பேச வராது..  கேள்வி--பதில்  மாதிரி வைத்துக் கொள்ளலாமா?" என்று சுஜாதா நெளிந்த பொழுதே 'நம்மில் ஒருவர்' தோரணையில் கூட்டத்தினருக்கு அவர் ரொம்பவும் நெருக்கமாகி விட்டார்.   வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று ஆரம்பித்து,  கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போனதே தெரியாமல் சுஜாதா கூட்டத்தினரைக் கட்டிப் போட்டு விட்டார். .  மைக் முன் நின்று கொண்டு இந்த மாதிரி இவ்வளவு நேரம் இதுவரை பேசிய அனுபவமே எனக்கில்லை என்று அவரே திகைக்கும் அளவுக்கு அந்த இலக்கிய கூட்டம் அமைந்து விட்டது.   அவர் பேசி முடித்து தன் இடத்தில் வந்து அமர்ந்ததும் அவரைச் சந்தித்துக் கைகுலுக்கி 'விண்வெளிப் பயணம்' சம்பந்தப்பட்ட சோவியத் யூனியன் வெளியீடான ஒரு என்.சி.பி.எச்.  புத்தகத்தை அவருக்கு பரிசளித்தது இன்னும் நினைவில் இருக்கிறது.  முதல் பக்கத்திலேயே 'அன்புடன் ஜீவி' என்று எழுதித்தான் கொடுத்திருந்தேன். பிற்காலத்தில் எனக்கு யாரும் புத்தகம் அனுப்ப வேண்டாம் என்று வேண்டிக் கொண்ட அவர் அன்று ஆர்வத்துடன் அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொண்டு சிறு குழந்தை மாதிரி திருப்பித் திருப்பி அதைப் பார்த்துக் கொண்டிருந்த காட்சியை மறப்பதற்கில்லை.  இதெல்லாம் நடந்து இன்றைக்கு ஏறத்தாழ 45 வருடங்களுக்கு மேலிருக்கும்.

குமுதத்தில் வெளிவந்த 'நைலான் கயிறு' தான் நான் படித்த சுஜாதாவின் முதல் தொடர்.  அதைப் படித்த காலத்து, குமுதத்தின் துணையாசிரியர்களில் ஒருவர் எடுத்த அவதாரம் தான் இந்த சுஜாதா என்ற நினைப்பே மேலோங்கியது.  எனக்கு அவர்களில் ஒருவரின் மேல் 'அவர் தான் இவர்' என்று பலத்த சந்தேகம்.   'இதை குமுதத்திற்கே எழுதிக் கேட்டால் என்ன' என்ற ஆர்வத்தில் கேட்க, 'தங்கள் ஆர்வத்திற்கும் கடிதமெழுதி அதை வெளிப்படுத்தியதற்கும் நன்றி'  என்று ஆசிரியருக்காக கையெழுத்திட்டு ரா.கி. ரங்கராஜனிடமிருந்து கடிதம் வந்தது.   அப்படியும் சுஜாதா யார் என்று சொல்லாத சாமர்த்திய பதிலாக அது இருந்தது.

'கணையாழி'யில் கடைசிப் பக்கம் எழுதிய ஸ்ரீரங்கம் ரங்கராஜன்,  குமுதத்திற்கும் ஒரு  கதை எழுதி அனுப்பி வைக்க 'நிறைய எழுதுங்கள்'  என்று அவருக்கு அனுப்பி வைத்திருந்த செக்கின் இணைப்புக் கடிதத்தின் மூலையில் ஆசிரியர் எஸ்.ஏ.பி.  நுணுக்கி எழுதிய எழுத்துக்கள் ஆக்ஸிஜனாக செயல்பட சுஜாதாவின் பிர்மாண்டத்திற்கு அன்றே கால்கோள் விழா நடந்து விட்டது என்று அறிந்தேன்.

இவர் விகடனில் எழுதிய  'ஜன்னல் மலர்',  பின்னால் அதே விகடனில் 'கரையெல்லாம் செண்பகப்பூ' வருவதற்குள்  நன்றாகவே தமிழ் எழுத்துலகில் சுஜாதா தன் ஸ்தானத்தை நிலை நிறுத்திக் கொண்டு விட்டார்.   பூப்போன்ற அந்தக் கவிதைத் தலைப்பு,  கதையின் இடையிட்ட நாடோடிப் பாடல்கள்,  கிராமம் - கிராமம் சார்ந்த மக்கள்,  நாடோடிப் பாடல்கள் பற்றி ஆராயும் நோக்குடன் வந்திருக்கும் கல்யாண ராமன்,  சென்னை வாலிபி சிநேகலதா,  ஜமீன்,  அமானுஷ்யம், மர்மம் என்று கலந்து கட்டி சுஜாதா விளையாடியிருந்ததை  விஷயம் தெரிந்த வாசகன் லெவலில்  அந்நாட்களில் படித்து  நண்பர்களிடம் டிபேட் பண்ணுவதில் அலாதி சுகம் கிடைத்தது.   ஜெயராஜ் ஓவியம்,   ஆனந்த விகடன் பிரசுரம் என்று வெகுஜன வாசகர்கள் கவனிக்கப்படும் எழுத்தாளராக சுஜாதா தலையெடுத்ததும் அப்போது தான்..

சுஜாதாவை நினைத்தாலே '88 வாக்கில் அவர் கல்கி பத்திரிகையில் எழுதிய 'இருள் வரும் நேரம்'ங்கற தொடர் என் நினைவுக்கு வந்து விடும்.  பலருக்கு இந்தத் தொடர் அறிமுகம் ஆகியிருக்காது என்பதினால் லேசாகக் கோடி காட்டுகிறேன்.

பல்கலைக் கழக சைக்காலஜி புரொபசரின் அழகான மனைவி அம்ருதா.  ஒரு கல்யாண ரிஷப்ஷனுக்காக காரில் கிளம்பியவர்கள்,  கார் நடுவழியில் ரிப்பேராகி  நின்று விட வேறு வழியின்றி பஸ் பிடித்து வீடு செல்ல பக்கத்து ரோடோர பஸ் ஸ்டாப்பை நாடுகிறார்கள்.   திமுதிமு கூட்டத்துடன் வந்த பஸ்ஸில் ராம்பிரகாஷ் மட்டுமே திணிக்கப்பட்டு  பின்னால் நின்றிருந்த அவர் மனைவி பஸ் ஸ்டாப்பிலேயே தேங்கி விடுகிறாள்.  ஆட்டோ ஒன்றை செலுத்திக் கொண்டு அந்த வழியே வந்த பாபுவும் அவன் நண்பன் பால்குண்டுவும் இதைப் பார்த்து அடுத்த ஸ்டாப்பில் பஸ்ஸைப் பிடித்து விடலாம் என்று அம்ருதாவை  நம்ப வைத்து ஆட்டோவில் ஏற்றிக் கொள்கின்றனர்.  கபன் பார்க் இருட்டு அவர்களுக்கு வசதியாக அம்ருதா அபலையாய் அவர்கள் பசிக்கு இலக்காகிறாள்.

இப்படிக் கதையை ஆரம்பித்து புரொபசர்--  அந்த விபத்திற்குப் பிறகு மன நலம் பாதித்து போன அவர் மனைவி அம்ருதா,  புரொபசர்-- அவர் மாணவி வர்ஷா,  வர்ஷா-- வர்ஷாவின் புரொபசர் மீதான் கிரேஸ். வர்ஷா - புரொபசர் பழக்கத்தை தீவிரமாகக் கண்காணித்து மனம் பேதலிக்கும்  அம்ருதா,  ஆட்டோ பாபு - அவன் அம்மா லஷ்மி, சிக் பேட்டை விவகாரங்கள் என்று தொட்டுக் கொள்ள நிறைய ஐட்டங்களுடன் பரிமாறுகிறார் சுஜாதா.   இப்படியோ, அப்படியோ என்று எல்லா சாத்திய கூறுகளையும் அலசும் வேகத்தில் மனித மனத்தின் அத்தனை அடிமன ஆழ விகற்பங்களும் வெளிச்சம் போடப்பட்டு வெட்கங்கெட்டுத் திரிகின்றன.    சைக்யாரிஸ்டுகள் புழங்கும்  வார்த்தைகள் புதினத்திற்கு தனி யதார்த்தத்தைக் கொடுக்க தமிழுக்குப் புதுசான சூழ்நிலை விவரிப்புகள் என்று எடுத்துக் கொண்ட விஷயத்தில் படிப்பவரின் ஈடுபாடு கூட அதை அர்ப்பணிப்பு உணர்வுடன் சொல்லும் சுஜாதாவின் அதீத திறமை வெளிப்படும் நாவல் இது.

(வளரும்)




Friday, March 6, 2020

வசந்த கால நினைவலைகள்

                                                              47

வ்வொரு  தொலைபேசி இயக்குனருக்கும் அலுவலகத்தில் டிரங்க் போர்ட் இருக்கும் இடத்தில் பேங்க் லாக்கரை விட கொஞ்சம் பெரிதாக லாக்கர் வசதி உண்டு.  அந்த லாக்கரில் அவர் சொந்த சமாச்சாரங்களோடு தங்களுக்கு வழங்கப்படும்  ஹெட்செட்டையும் வைத்திருப்பார்கள்.  தினமும் பணிக்கால ஆரம்பத்தில்  லாக்கரிலிருந்து  ஹெட்செட்டை எடுத்து வந்து டெட்டால் கரைசலில்  பஞ்சு நனைத்து ஹெட்செட்டில் தடவி  அணிவதற்கு தயாராவார்கள்.

சூபர்வைசர் டேபிளில் இருக்கும் பேரேடு போன்ற பொஷிசன் நோட்டில் தான் பணிக்கு வந்த நேரத்தைக் குறித்துக் கையெழுத்திடுவர்.   எந்தப் பொஷிஷனில் அமர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று சூபர்வைசர் குறித்திருப்பார்.
அந்த இணைப்பகத்தில் இருக்கிற  டிரங்க் சர்க்யூட்டுகளை ஆறு டிரங்க் போர்டுகளில் பிரித்திருகிறார்கள் என்றால் ஆறு பொசிஷன்கள் இருக்கும்.   உதாரணத்திற்கு  காஞ்சீபுரம் எக்ஸ்சேஞ்சில்  அரக்கோணம்,  திருவள்ளூர்,  திருத்தணி,  ஸ்ரீபெரும்புதூர், சென்னை போன்ற தனித் தொலைபேசி இணைப்பகங்களுக்குத்  தனி நேரடி லைன் இருக்கும்.  அவை தவிர டயலிங் சர்க்யூட்டுகள்,  SLOD,  MLOD  சர்க்யூட்டுகள்,  பக்கத்து சின்ன கிராமம் போன்ற இடங்களுக்கான  SAX-க்கள்  என்று  ஜாக் ஜாக்காக  பச்சை நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும்.   அந்த லைன் எங்கேஜ்டாக இருக்கிறது என்பதை பச்சை நிறம் தெரிவிக்கும்.  இப்படியான லைன்கள்  ஒரே  கிட்டத்தட்ட எல்லா டிரங்க் போர்டுகளிலும்  கனெக்ட் செய்யப் பட்டிருக்கும்.    அதனால்  பிஸி இல்லாத  நேரங்களில் இரண்டு அல்லது மூன்று போர்டுகளில் உட்கார்ந்து கொண்டே அத்தனை சர்க்யூட்டுகளையும் மேனேஜ் பண்ணலாம். 

காலையில் டியூட்டிக்கு வரும் ஒரு இயக்குனர் மதியம் அவர் ட்யூட்டி முடிகிற நேரத்தில்  மதிய ட்யூட்டிக்கு வரும்  இயக்குனர்  அவரை ரிலீவ் பண்ண  தயாராக அருகில் நிற்கிற அளவுக்கு எல்லாம் கனக் கச்சிதமாக முன் ஏற்பாடுடன் இருக்கும்.   அதைத் தவிர முழுப்பணி நேரமும் ஒரே  போர்டில் உட்கார்ந்து போரடிக்காமல்  மாற்றி மாற்றி  உட்காருகிற மாதிரி  இரண்டு மணி நேரத்திற்கு ஒரு மாற்றம் இருக்கும்.

புக் ஆகிற அத்தனை டிரங்க் கால்களும்  அப்பப்பவே பேசி முடித்து விடுகிற மாதிரி இருக்காது.  சில கால்கள் பேசப்படாமல் பெண்டிங் வைக்க வேண்டிய அவசியம் இருக்கும்.   உதாரணமாக  PP கால்கள்  குறிப்பிட்ட அந்த நபர் முதல் முறை முயற்சிக்கும் பொழுது  இல்லை என்றால்  ஒரு மணி நேரம் பெண்டிங் வைத்து இன்னொரு முறை முயற்சிக்க  அனுமதி உண்டு.   ஒரு டிரங்க் கால் முயற்சிக்கும் பொழுது அந்த மறுமுனை போனில்  பதில் இல்லை என்றால்  அரை மணி நேரம் பெண்டிங் வைத்து மறு முயற்சி செய்ய  அனுமதி உண்டு.  மாற்றி மாற்றி பணியாளர்கள்  கால்களை (Trunk calls)  கையாளுவதால்  டிஸ்போஸ் ஆகாத ஒவ்வொரு காலும் எந்த காரணத்திற்காக பெண்டிங் வைக்கப்பட்டிருக்கிறது என்று அடுத்து வருபவருக்குத் தெரிய வேண்டும் இல்லையா?..  அதற்காகவே  பெண்டிங் வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு டிக்கெட்டிலும் அதற்கான காரணக் குறிப்பை எழுதியே வைப்பார்கள்.  உதாரணத்திற்கு சில குறிப்புகள்:

குறிப்பிட்ட  நபருடன் தான் பேச வேண்டும் என்று கால் புக் செய்பவர் விரும்பும்  கால்கள்  PP call  என்று  பார்த்திருக்கிறோம்.   டிரங்க் காலை முயற்சிக்கும் பொழுது அந்தக் குறிப்பிட்ட நபர் இல்லாத பட்சத்தில்  1030  PPNA   SI   P -  324  என்று குறிப்பை டிக்கெட்டில் எழுதி டிரங்க் போர்டிலேயே ஒரு பக்கம் இருக்கும்  பீஜன் ஹோலில் வைத்து விட்டு அடுத்த காலை முயற்சிப்பார்கள்.   இந்தக் குறிப்புக்கு  1030 மணிக்கு  Particular Person not available  -- subscriber informed  -  Pending  என்று அர்த்தம்.  குறிப்புக்கு பக்கத்தில் இருக்கும்  324  என்பது அந்த காலை முயற்சித்த  இயக்குனரின்  ஸ்டாப்  நம்பர்.   டிரங்க் கால் சம்பந்தப்பட்ட எந்த காரியத்தை யார் எந்த நேரத்திற்குச் செய்தார்கள் என்பதற்கு துல்லியமான குறிப்புகள் உண்டு. 

இதே போலவான சில குறிப்புகள்: 

1.   NR  SI  P --  No Reply  Sub informed  Pending.  (மறுமுனையில் பதில் இல்லை)  இந்த மாதிரி கால்கள் அரைமணி கழித்து மறுபடியும் முயற்சிப்பார்கள்.  அப்பொழுதும் பதில் இல்லை என்றால்  வாடிக்கையாளர் காலை கேன்சல் செய்ய வேண்டும்.  இதற்கு கட்டணம் ஏதுமில்லை.

2.  R  SI  P  -  Called party  refused to speak  Pending -  Sub informed - Pending.  (மறுமுனையில் தொலைபேசியை  எடுத்தவர் பேச விரும்பவில்லை.   அதனால்  பெண்டிங் வைக்கப்பட்டிருக்கிறது.)  பெண்டிங் வைப்பது  PP கால்களில் மட்டுமே சாத்தியம்.  நம்பர் கால்களில் மறுமுனையில் பேசவில்லை என்றால் உடனே கேன்சல் செய்ய வேண்டும்.  25% கட்டணம் உண்டு.

3.  PPSF  SI  P  --  Particular person sent for - sub informed -  Pending.  (இந்த ரிப்போர்ட்  PCO  கால்களில் மட்டுமே இருக்கும்.   மறுமுனை தந்தி அலுவலகத்தில்  கூட்டிவர ஆள் அனுப்பியிருக்கிறார்கள்)

4.    PPA  P  ( PP Available  call to be connected)  மறுமுனை தந்தி அலுவலகத்தில் பேச வேண்டியவர் வந்து விட்டார் என்று தெரிவிக்கும் குறிப்பு.

5.   No,  ugt -  Number unget

6.  No.  o/o/o  -  Number out  of order.  (5 & 6  இரண்டு குறிப்புகளிலும்   ஃபோனை  டெஸ்ட் பண்ணி  பழுது எண்ணைக் குறித்திருப்பார்கள்.  இந்த மாதிரி கால்களை வாடிக்கையாளர் விரும்பினால் பெண்டிங் வைக்கலாம். இல்லையென்றால் கேன்சல் செய்து விடலாம்.   கேன்சல் செய்து விட்டால்  கட்டணம் கிடையாது.

Docket- க்களைப் பற்றி சொல்ல வேண்டும்.    இந்த டாக்டெட் என்பது  வெளிரிய சிவப்பு நிறத்தில் இருக்கும் வரிசை எண் இடப்பட்ட டிக்கெட்.  இதில் குறுக்கு எழுத்தில் பலவித குறிப்புகள் அச்சிடப்பட்டிருக்கும்.   From  -  To  உண்டு.

டிரங்க் கால்களை புக் செய்யும் இடத்திலே இதற்கான தேவை  இருக்கும்.   24652  எண்ணிலிருந்து  MS  224652 க்கு ஒருவர் கால் புக் செய்திருக்கிறார்.  கொஞ்ச நேரம்  காத்திருக்கிறார்.  கால் வரவில்லை.   உடனே டிரங்க் புக்கிங்கைக்  கூப்பிட்டு காலை கேன்சல் செய்து விடுகிறார்   என்று வைத்துக் கொள்ளுங்கள்.  இந்தச் செய்தியை  அந்த குறிப்பிட்ட  காலைக் கையாளும் போர்டு   இயக்குனருக்குத்  தெரியப்படுத்துவது எப்படி?..  அப்படித் தெரியப் படுத்துவதற்கு உதவுவது தான் இந்த டாக்கெட்.

From  24652  To  MS  224652  என்று டாக்கெட் வெற்றிடத்தில் எண்களை நிரப்பி  CCL  என்ற குறிப்பை டிக் செய்து   பக்கத்து போர்டில் அமர்ந்திருக்கும் இயக்குனர் அருகில் வைத்து விடுவார்.  இந்த டாக்கெட்  பாஸ் ஆகிக் கொண்டே இருக்கும்.  யாருக்கு சம்பந்தப் பட்டதோ அவர்  அந்த   டாக்கெட்டை எடுத்து  குறிப்பை செயல்படுத்துவார்.  எப்படி?..  அந்த குறிப்பிட்ட டிரங்க் கால் டிக்கெட்டை எடுத்து காலை சேன்சல் செய்வது மட்டும் அல்லாமல்  vide Dkt. No.  என்று அந்த டாக்கெட் எண்ணையும்  கேன்ஸல் செய்ததற்கு அத்தாட்சியாக டிக்கெட்டில்  குறித்து வைப்பார்.  அடிக்கோடிட்டு சொல்ல வேண்டியது என்னவென்றால் இங்கு ஒரு வேலை கூட ஏனோ தானோவென்று இருக்காது.. எல்லா செயல்களுக்கும் பின்னால் எடுத்து நிரூபிக்கக் கூடிய ஆதாரம் ஒன்று துணையாக இருக்கும்.

ஃப்க்ஸட் கால் என்பது  குறிப்பிட்ட நேரத்தில்  தவறாது இரு பகுதி நபர்களையும் தொடர்பு படுத்தும்  கால்கள்.  சப்க்ரிப்ஷன் ஃப்க்ஸ்ட் கால் என்பது பெரும்பாலும்  நியூஸ் பேப்பர்கள்,  அதன் ரிப்போர்ட்டர்கள்  உபயோகிக்கும் கால்கள்.   சொல்லப் போனால் அந்நாட்களில்  எல்லா பகுதிகளிலும்  தொலைபேசித் துறை கோலோச்சி வந்த பொற்காலம் அது.

அயல்நாட்டிற்கான டிரங்க் கால்களை அந்நாட்களில்  ஓவர்சீஸ் கால் என்று அழைப்போம்.   அப்படியான வெளிநாட்டிற்கான கால்களை புக் பண்ணும் பொழுது சில தெளிவான விவரங்கள் கொடுக்க வேண்டும்.   புக்  பண்ணும் தொலைபேசி எண்,   வெளிநாட்டு தொலைபேசி எண்,  யார் யாருடன் பேசப் போகிறார்கள்,  எந்த மொழியில் பேசப் போகிறார்கள்,  எந்த நேரத்திற்கு  தொடர்பு படுத்தப்பட வேண்டும்  -  போன்ற குறிப்புகள் கொடுக்க வேண்டும்.  ஓவர்சீஸ் கால்களை  மூன்று,  நான்கு நாட்கள் கூட பெண்டிங் வைத்து முயற்சிக்கலாம்.   வெளி நாட்டு கால்கள் பற்றிய விவரங்கள்  வெள்ளை டிக்கெட்டில் மட்டுமில்லாமல்,  Log Book-கிலும் பதியப்படும்.   அந்த கால் பேசும் போது  எந்த மொழியில் பேசப்போகிறார்களோ,  தேவை ஏற்படின் அந்த மொழி அறிந்த Observation Supervisor-களைக் கொண்டு  யாரும் அறியாது கண்காணிக்கவும் செய்வார்கள்.   நாட்டின் பாதுகாப்பு போன்ற விஷயங்களில் அந்த அளவுக்கு மிகவும்  கண்டிப்பான நடைமுறைகள் அமுலிலிருந்த காலம் அது.

ஒரு  டிரங்க் கால் பதிவாகி அது  பேசி முடிப்பதில் இத்தனை விஷயங்கள் அடங்கியிருக்கின்றன.  அதனால் ஒரு டிரங்க்  காலுக்காக  'தேவுடு காத்தேன்' என்று  பா.வெ. சொன்னதும்,  ஜிஎம்பி அவர்கள் 'பழியாக் கிடந்தேன்' என்றதிலும் அவர்களுக்கே புரிபடாத பல காரணங்கள் பதுங்கியிருந்தன என்று தான் கொள்ள வேண்டும்.

புக் செய்த  டிரங்க் கால்களுக்குத்  தான் இணைப்பு கொடுக்கப்படுகிறதா என்பதனைக் கண்காணிக்க  Observation Supervisor  என்பவர்கள்  உண்டு.   இவர்கள்  ஏகதேசமாக  கனெக்ஷன் கொடுக்கும் ஆப்ரேட்டர்களுக்கு  தெரியாமலேயே  இந்த கால் இந்த  நேரத்திற்கு இந்த இடத்திற்கு தொடர்பு கொடுக்கப்பட்டது என்ற குறிப்புகளை எடுத்து அனுப்புவார்கள்.  அடுத்த நாள் டிக்கெட் ஒர்க் பார்க்கும் சீனியர் ஆப்ரேட்டர்  கனெக்ஷன் கொடுக்கப்பட்ட அந்த கால்களுக்கான டிக்கெட் எண்ணைக் குறித்து  Observation Supervisor-க்கு அனுப்புவார்.   டிக்கெட் எண் இல்லை என்றால்  மேல் நடவடிக்கைகள்  தொடரும்,

(வளரும்)

Sunday, March 1, 2020

வசந்த கால நினைவலைகள்

                                                                46

ரயில் நிலையம் மாதிரி ஒரு நாளின் இருபத்து நாங்கு மணி நேரமும் இயங்கும்  அலுவலகம் தொலைபேசி இணைப்பகம்.   இரயில் நிலையம் போலவே பகல் பன்னிரண்டு மணிக்கு மேலான ஒரு மணியை பதிமூன்று மணி  (1300 Hrs.) என்றே தொலைபேசி இணைப்பகத்திலும் குறிப்பார்கள்.  இரவு பதினோரு மணி  2300 Hrs.  இரவு  12 மணி  0000 Hrs.  தொலைபேசி இணைப்பகத்தைப் பொறுத்த மட்டில் ஒரு நாள் துவங்குவது அந்த 0000 Hrs.-ல் தான்.   இரவு பணிக்கு வருவோருக்கு அப்பொழுது தான் பணி நேரம் ஆரம்பிக்கும்.

 இரவு பணிக்கு வந்ததும்,  Log Book  பேரேட்டில்  அன்றைய தேதியைக் குறிப்பிட்டு அடிக்கோடிட்டு,  கீழே ---

Outward Ticket No.
Inward Ticket No.
Transit Ticket No.          --  என்று அன்றைய நாளுக்கு துவக்க டிக்கெட் எண்களைக் குறிப்பார்கள்.   அதற்குக் கீழே  நேரடியாக தொடர்பு இருக்கும் ஊர்களின் லைன்களை  (direct lines) மறுபகுதியில் பணியில் இருப்போரைக் கூப்பிட்டு டெஸ்ட் செய்து அது பற்றிய ரிப்போர்ட்டைக் குறிப்பார்கள்.

இது எப்படி என்று  சொல்கிறேன்.   காஞ்சீபுரம் -- அரக்கோணம்  நேரடியாக தொடர்பு இருக்கும்  ஊர் என்று  வைத்துக் கொள்ளுங்கள்.  காஞ்சீபுரத்தில் இரவுப் பணி இயக்குனர்  அரக்கோணம்  சர்க்யூட்டில் (அரக்கோணம் என்று  குறிப்பிட்டிருக்கும்  துளையில் -- அதை  ஜாக் என்று சொல்வார்கள்) -- டிரங்க் போர்டில் இருக்கும் காலிங் கார்டை எடுத்து நுழைத்து  ரிங்  கொடுப்பார்.
ரிங் கொடுப்பது  என்றால் தகடு போல இருக்கும் கீயை  முன்னுக்குத் தள்ளுவார்.   உடனே அரக்கோணம் தொலைபேசி நிலையத்தில் காஞ்சீபுரம் என்று  குறித்திருக்கும் ஜாக்கில் பல்ப் எரியும்.   அரக்கோணம் ஆப்ரேட்டர் அந்தத்  துளையில்  ஆன்சரிங் கார்டை நுழைத்து கீயை முன்னுக்குத் தள்ளி  "எஸ்.. அரக்கோணம்.." என்பார்.

"என்ன, சண்முகம்?..  நீதான் இந்த வாரம் நைட்  டூயூட்டியா?"

"இல்லே.. காலைலே ஒரு  வேலை இருக்கு..  அதுக்காக  எக்ஸ்சேஞ்ச் ஆஃப் டுயூட்டி பண்ணிகிட்டேன்"

"அப்படியா?.. ஓக்கே.. ஓக்கே.."

முகத்தைப்  பார்க்க வேண்டும் என்று இல்லை.   எல்லாம் குரலை பழக்கத்தில் கொண்டு எட்டூருக்கு உறவு  கொள்ளலாம்.  ப்ளாக்கர் உலகத்தில் எழுத்து என்றால் தொலைபேசி நிலையங்களில்   குரல்..

குரல்.. குரல்...  அது தான் தொலைபேசி நிலையத்தில் மறுபக்கம் பேசுவோரைத் தெரிந்து கொள்ள கண்ணாடி.  இந்த குரல் பழக்கத்தில் ஏகப்பட்ட காதல்கள் பூத்து, மலர்ந்து திருமணத்தில் முடிந்திருக்கின்றன.   குரல் அறிமுகத்தில் முகிழ்த்து நேரில் சந்திக்கையில்  வாடி வதங்கிப் போன காதல் கதைகளும் நிறைய உண்டு.

கிடைத்த கேப்பில் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் டியூட்டி பற்றிச் சொல்லி விடுகிறேன்.

குறிப்பாக எட்டு விதமான  பணிக்காலங்கள் உண்டு.   இரவு  0000-0720,  0630--1350,  0800-1530,  0900-1630,  1000-1730,  1330-2050,  1520- 2300,  1640-0000 என்றவாறு.  மகளிர்க்கு மட்டும் பணிக்காலம் இரவு 2030 வரை தான் என்று வரையறுக்கப் பட்டிருந்தது.

இந்தப் பணிக்காலங்களை ஒரு இணைப்பகத்தில்  40 தொலைபேசி இயக்குனர்கள் இருந்தால் ரொட்டேஷனாகப்  பகுத்துப் போடுவார்கள்.  பகலில் 1000  மணிக்கு ஆரம்பிக்கும் டியூட்டி மட்டும்  சீனியர்களுக்கானது.   அதில் ஒருவர் டிக்கெட் ஒர்க் என்று அதற்கு முதல் நாள் பதிவான வெள்ளை டிக்கெட்டுகளைக் கணக்கெடுத்து  TRAO-க்கு அனுப்பும் வேலையில் இருப்பார். மொத்த பதிவான டிக்கெட்டுகளின் கணக்கும் டேலி ஆகி,  டிஸ்ப்ளே போர்டில் நேற்றைய கணக்கில்  எஃபக்ட்டிவ் கால்களின்  %-யைப் போடுவதற்குள் பெண்டு நிமிர்ந்து விடும்.

இருவர் அன்றைய தின டிரங்கால்கள் டிஸ்போஸல் ஆவதைக் கண்காணிப்பார்கள்.  தாமதத்திற்கு ஏதாவது காரணம் என்றால் மறுபகுதி சூபர்வைசருடன்  (அந்தக் காலத்தில் இந்தப் பதவிக்கு மானிட்டர் என்று பெயர்.  பள்ளிப்பருவ நினைவைக் கிளறுவதால் மானிட்டர் பிற்காலத்தில் சூபர்வைசர் ஆனார்!)  பேசி தீர்வு  காண்பார்கள்.

போர்டில் வேலைசெய்யும் இயக்குனர்கள்  டீ, காப்பிக்கு போக வேண்டும் என்றால் அவர்கள் செய்து கொண்டிருக்கும் பணியைத் தொடர்பவராக இன்னொருத்தர் இருப்பார்.  எல்லாருக்கும்  தலைமை வகிக்கும் சூபர்வைசர் இருவர்  காலை 0630 மணியிலிருந்து இரவு 2030 மணி வரையான பணிக்காலத்தை பகிர்ந்து கொள்வார்கள்.  இரவு 2030-க்கு  மேலே  இயக்குனர்களின் ராஜ்யம் தான். இந்த நேரத்தில் பணியில் இருப்பவர்களில் யார் சீனியரோ அவர் பொறுப்புகளை ஏற்பவராக இருப்பார்.   வித்தியாசமான எந்த நிகழ்வு நடந்தாலும் அது பற்றி நேரம் குறித்து  Log Book-க்கில் பதிய வேண்டும்.

இயக்குனர்களில் யாருக்காவது அவருக்கு குறிப்பிட்டிருந்த  பணிக்காலத்தில்  வேறு சொந்த வேலை இருந்தால்   வேறு ஒருவருடன் தன் பணிக்காலத்தை மாற்றிக் கொண்டு அவர் வேலை செய்கிற நேரத்தில் இவர் வேலை செய்யலாம்.  இவர் வேலை செய்ய வேண்டிய நேரத்திற்கு அவர் வந்து விடுவார்.  பணி நேரங்களை இப்படி ஒருவொருக்கொருவர் மாற்றிக் கொள்வதற்கு தான் Exchange of Duty என்று பெயர்.  அதற்காக ஒரு ரிஜிஸ்டர் இருக்கும்.  அதில்  இருவரும் மாற்றுப் பணி நேரங்களுக்கு வருவதற்கு சம்மதமாக கையெழுத்திட்டு சூபர்வைசரிடம் அனுமதி கையெழுத்து வாங்கிக் கொண்டால் இந்த சடங்கு முடிந்து விட்டது என்று அர்த்தம்.

வெள்ளிக்கிழமை மாலையே அடுத்து வரும் வாரத்தில் யார் யாருக்கு எந்தந்த நேரத்தில் பணிக்காலம் என்பதைக் குறிக்கும் டியூட்டி சார்ட் ரிலீசாகி விடும்.  அது ரிலீசாவதே கோலாகலக் கொண்டாட்டமாக இருக்கும்.

மகளிர்கள்  ட்யூட்டி சார்ட் தொங்கும் இடத்தில் கூட்டமாக சேர்ந்து கொண்டு  மெல்லிய  குரலில் ஏகப்பட்ட கணக்குகளைப் போடுவார்கள்.   நோன்பு,  விசேஷங்கள், விருந்தினர் வருகை,  பண்டிகை என்று அவர்களுக்குத் தான் எவ்வளவு   சுமைகள் என்று பரிதாபமாகத் தான் இருக்கும்.  அடுத்த வார தங்கள் வேலைகளுக்கு ஏற்ப யாருடன்  தங்கள் பணி நேரத்தை மாற்றிக் கொண்டால் செளகரியமாக இருக்கும் என்பதில் குறியாக இருப்பார்கள்.

 "கனகராஜ் ஸார்!  நாளைக்கு எனக்கு  0610 ட்யூட்டி.  உங்க  1330-யை எனக்குத் தர முடியுமா?..  காலம்பற என் மாமியாரை கண் ஆசுபத்திரிக்கு கூட்டிகிட்டுப் போகணும்.."

"0610--ஆ!.."-- ஒரு வினாடி யோசித்து, கனகராஜ்,  "சரி, எழுதிக்கோங்க.." என்கிறார்.  அடுத்த நிமிஷத்தில் எக்ஸ்சேஞ்ச் ஆப் ட்யூட்டி ரிஜிஸ்தரில் எழுதப்பட்டு,  இருவரும் கையொப்பம் இட்டு, சூபர்வைசர்   அனுமதி கையெழுத்திட  ட்யூட்டி மாற்றல் முடிந்தாயிற்று..   அடுத்த நாள் கனகராஜ் காலை 0610-1330  பணிக்கு வந்து விடுவார்.

ஆண்களைப் பொருத்த மட்டில்  மாலை 1640 ட்யூட்டி, இரவுப் பணி இதெற்கெல்லாம் மவுசு ஜாஸ்தி.  தமிழ் நாட்டில்  திருச்சி, கோவை, சென்னை ஆகிய ஊர்களின் டிரங்க் எக்ஸ்சேஞ்சுகள்  முழுமையாக மகளிர் பணியாற்றும் இடங்களாக இருந்தன.   இரவு பணி அகால நேரத்தில் முடிந்து  பெரும்பாலும் காலையில் தான் வீட்டுக்குப் போவார்கள் என்பதினால்  இரவு  தங்கலுக்காக  கொசுவலையுடன் படுக்கை வசதி,  டைனிங் கால், ஏ.ஸி.-- என்று செளகரியங்கள்
எதிலும்  குறைவில்லாது  இருக்கும்.

இரவுப் பணி பார்த்தால் பகல் பூராவும் விடுமுறை மாதிரி தான்..  இந்த மாதிரியான செளகரியங்கள், தற்காலிக  விடுப்பு (casual leave) எடுக்க வேண்டிய அவசியத்தை கூடிய மட்டும் குறைத்து விடும்.  பத்திரிகைத்  துறையில் கால் பதிக்க எனக்கு இந்த மாதிரியான அனுகூலங்கள்  தாம் வரப்பிரசாதமாக இருந்தன என்பதை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்காமல் இருந்தால் அது பாவம்.

டிரங்க் போர்டில் பணியாற்றுவதும்  இறுக்கமில்லாமல்  ஏதோ பொழுது போக்கு போல இருக்கும்.  யார் அதிக டிரங்க் கால்களை டிஸ்போஸ் செய்கிறார்கள் என்று ஒருவருக்கொருவர் (குறிப்பாக மகளிருடன்) போட்டா போட்டி வேறே.  இந்த சந்தோஷத்தில் மாற்றி மாற்றி வெவ்வேறு ஊர்களுக்கான அழைப்புகளுக்கு இணைப்பு கொடுப்பது சிரமமில்லாமல் ஏதோ விளையாட்டு போல  ஒருபக்கம் நடந்து கொண்டே இருக்கும்.  'என்ன தவம் செய்தோம்,  இந்தப் பணி செய்ய!' என்ற நினைப்பு தான் மேலோங்கியிருக்கும்.  பணி நேரம் முடிந்தாலும், விடுமுறை நாள் என்றாலும் ஆண்கள் ரிக்ரேஷன் க்ளப்பில் தான் பழியாகக் கிடப்பார்கள்.  கேரம்,  செஸ்,  வார, மாத பத்திரிகைகள் என்று மனமகிழ் மன்றத்தில்   எந்நேரமும்  ஏக கொண்டாட்டமாக இருக்கும்.

எல்லா ஊர்களின் பெயர்களையும்  இரயில்வே துறை போலவே  ஆங்கில எழுத்துக்களில் சுருக்கமாக குறிப்பது  தான் தொலைபேசித் துறையில் வழக்கம்.   சென்னை என்றால் MS, கோயம்புத்தூர்  CBT,  திருச்சி TR,  சேலம்  SLM,  கல்கத்தா  CA,  புதுடெல்லி  ND, அந்நாளைய பம்பாய்  BY, வத்தலகுண்டு என்றால்  BTL,  மதுரை என்றால்  MA  ராமேஸ்வரம் என்றால்  RMS  --  என்பதாய்  சுருக்கமாக இருக்கும்.

சேலத்திலிருந்து கல்கத்தாவிற்கு  டிரங்க் கால் என்றால் சேலம் ஆபரேட்டர்  சென்னை பூக்கடை எக்ஸ்சேஞ்சில் பணியிலிருக்கும் ஆபரேட்டருக்கு அழைப்பை பதிவு செய்தவுடன் அவர் கல்கத்தா   தொலைபேசி எண்ணை சென்னையிலிருந்தே டிரங்க் போர்டில் டயல் செய்தவுடன் கல்கத்தா வீட்டில் தொலைபேசி ரீங்கரிக்கும்.   உங்களுக்கு சேலத்திலிருந்து  டிரங்க் கால் என்று தெரிவித்து சேலம் ஆபரேட்டருடன்  நேரடியாகத் தொடர்பு கொடுத்து விடுவார்.    சேலத்தில் கால் புக் பண்ணியவருடன்  கல்கத்தா நபரை இணைப்பில் இருத்தி  எவ்வளவு நேரம் பேசினார்கள்  என்று தன் வெள்ளை டிக்கெட்டில் குறிப்பதெல்லாம் சேலம் ஆபரேட்டரின் வேலை.  இந்த மாதிரி கல்கத்தா எண்ணை சென்னையிலிருந்தே டிரங்க் போர்டில் டயல் செய்வதற்கு  SLOD  (Single link Operator dialing)  என்று பெயர்.    SLOD-க்கு பிறகு MLOD  (Multi Link Opeator  dialing) அடுத்த கட்ட வளர்ச்சியாய் வந்தது.  சேலம் ஆப்ரேட்டர்  கோவை ஆப்ரேட்டர் துணையில்லாமலேயே  திருப்பூர் தொலைபேசி எண்ணை டயல் செய்வது இதற்கு உதாரணம்.

சென்ற பகுதியில் குறிப்பிட்டிருந்த  புதுவை கடைத்தெரு  PCO-விலிருந்து எம்ஜிஆர் அவர்களுடன் பேச வேண்டி பதிவு செய்திருந்த டிரங்க் கால் SLOD circuit-ல்  டயல் செய்தது தான்.  அதாவது சென்னை தொலைபேசி நிலைய ஆப்ரேட்டர் துணையில்லாமல் நேரடியாக புதுவை டிரங்க் போர்டிலிருந்து    எம்.ஜி.ஆரின் தொலைபேசி எண்ணை டயல் செய்தது.

புதுவை கடைத்தெரு தந்தி ஆபிஸில்  ஆனந்தன் என்ற அற்புதமான டெலகிராப்பிஸ்ட்  இருந்தார்.  56 வருடங்களுக்குப்  பின்னும்  இன்றும் அந்த அன்பரின் பெயர் நினைவுக்கு வருகிற அளவிற்கு நட்புக்கும் சுறுசுறுப்புக்கும் இலக்கணமாகத் திகழ்ந்தவர்.    எம்ஜிஆரின் தொலைபேசி எண்ணை டயல் செய்வதற்கு முன் கடைத்தெரு 110 PCO-வை ரிங் செய்து எம்ஜிஆருக்கு கால் புக் பண்ணின நபர் இருக்கிறாரா என்று கேட்டேன்.  "ஜீவி ஸார்.. இதோ அவரை பூத்துக்கு  ரெடியா அனுப்பிச்சிட்டேன்...  நீங்க கனெக்ஷன் கொடுக்கலாம்.." என்று  கிரீன் சிக்னல் கொடுத்தார் ஆனந்தன்.   அதன்படியே  அவர்  110 PCO  ஃபோனை எடுத்ததும்  நிச்சயம் பண்ணிக் கொண்டு, எம்ஜிஆரின்  தொலைபேசி எண்ணை டயல் செய்தேன்..  மறுமுனையில் "வணக்கம்.. தோட்டம்.." என்று மென்மையான குரலில் எம்ஜிஆர்..   "வணக்கங்க.. உங்களுக்கு  புதுச்சேரியிலிருந்து ஒரு PCO கால். கொடுக்கலாமா?.." என்று கேட்டேன்.

"கொடுங்களேன்.." என்று அவர் சொன்னதும் "எம்ஜிஆர் லயனில்  இருக்கிறார். பேசுங்கள்.." என்று  சொல்லி விட்டு  கீயை க்ளோஸ் பண்ணி விட்டு ஸ்டாப்  வாட்சை
ஓடவிட்டேன்...  என்ன பேசினார்களோ, தெரியவில்லை..  பேச்சு  மூன்று நிமிடங்களை நெருங்கும் பொழுது,  மூடிய கீயைத் திறந்து,  "த்ரீ மினிட்ஸ் நியர்லி ஓவர்.." என்று நான் சொல்கையில் எம்ஜிஆரின் குரல் கேட்டது..  "ஐயா.. நீங்க காசு செலவு பண்ணிக் கொண்டு இங்கு வந்து என்னைப்  பார்ப்பது முக்கியமில்லை..  அதற்குப் பதில்
உங்கள் தாயாருக்கு  வேண்டியதை வாங்கிக் கொடுத்து  அவரை  பத்திரமாகக் கவனித்துக் கொண்டால் அதுவே எனக்கு மகிழ்ச்சி.. ஃபோனை வைச்சிடறேன், சரியா?.." என்று எம்ஜிஆர் சொல்லிக் கொண்டிருந்தது  எனக்குக் கேட்டது.

-- எம்ஜிஆரின் தாய்ப்பாசம்  இது தான்.  எல்லாத் தாய்மார்களிடமும் அவருக்கு ஆரம்ப காலங்களிலேயே நிறைய பரிவு இருந்தது என்பதற்காக இந்த நிகழ்வை இங்கு எழுத நேரிட்டது.

(வளரும்)


Saturday, February 22, 2020

வசந்த கால நினைவலைகள்

                                                             45

டிரங்க் கால் டிக்கெட்டுகளைப் பற்றி கொஞ்சம் விவரமாகச் சொல்ல வேண்டும்.

வெள்ளை, சிவப்பு, பச்சை என்ற நிறங்களில் இருக்கும் இவைகள்  ஒரு A4 அளவு காகிதத்தை நான்காக மடித்தால் அதன் ஒரு பகுதி எந்த அளவுக்கு இருக்குமோ அந்த  அளவிற்கு இருக்கும்.     மூன்று வித கலர்  டிக்கெட்டுகளுக்கும்  வரிசை எண் உண்டு.   வெள்ளை நிற  outward ticket-ல் நாள் (Date)  எந்த  தொலைபேசி எண்ணிலிருந்து எந்த ஊர் தொலைபேசி எண்ணுக்குப் பேச வேண்டும்,  கால் புக்கிங் நேரம்,  ஆர்டனரி - அர்ஜண்ட் போன்ற டிரங்க் காலின்  முன்னுரிமை (Priority) தகுதிகள்,  பிபி காலா நம்பர் காலா,  பிபி கால் என்றால் பிபியின் பெயர்  போன்ற விவரங்கள் குறிக்கப் பட்டிருக்கும்,

ஒரு டிரங்க் கால் அந்த நாட்களில் எப்படி பதிவு
செய்யப்பட்டது  என்பதைப் பார்க்கலாம்.   தொலைபேசி வைத்திருப்போர்  டிரங்க் கால் பேச அதற்கான எண்ணை தன் தொலைபேசி டயலில் சுழற்றியதும்,  தொலைபேசி இணைப்பகத்தில் டிரங்க் போர்டில்  ஒரு சிறிய பல்ப் எரியும்.  உடனே தொலைபேசி இயக்குனர் அந்த பல்ப் சார்ந்த கீயை  கீழ்ப்பகுதி நோக்கி அழுத்தியதும் டயல் செய்தவருடன்  தொடர்பு ஏற்பட்டு,  "டிரங்க் புக்கிங்"  என்று சொல்வார்.  டயல் செய்தவர் தன் தொலைபேசி எண், பேச வேண்டிய  ஊர் - பேச வேண்டியவரின் தொலைபேசி எண், குறிப்பிட்ட நபருடன் பேச வேண்டும் என்றால் அவர் பெயர்,  என்ன வித முன்னுரிமை கொண்ட கால் என்று விவரங்களைச் சொன்னால் ஆப்ரேட்டர் அவற்றைக் குறித்துக் கொண்டு,  Thank you, Sir.  I will call back  என்று சொல்லி கீயை மேல் நோக்கி தூக்கிய பிறகு அடுத்து  லயினில் வந்திருப்பவருக்கான கீயை கீழ்ப் பக்கம் அழுத்தி, "குட் மார்னிங்.. டிரங்க் புக்கிங்.." என்று அடுத்த பதிவை குறிக்க ஆரம்பிப்பார்.

 டிரங்க் காலை புக் செய்யும் போதே வெள்ளை டிக்கெட்டில் தொலைபேசி இயக்குனர் இந்த விவரங்களைக் கேட்டு அதிக பட்சம் ஒரு நிமிட நேரத்தில் குறித்துக் கொள்வார்.  அடுத்து அடுத்து என்று டிரங்க் கால் பதிவுகளை பதிவது நீண்ட வரிசையாக நடந்து கொண்டே இருக்கும். 

தொலைபேசியில் பேசுவதற்கென்றே   தனிப்பட்ட சில உச்சரிப்புகள் உண்டு.    சொல்லப்போனால்  எண்களும்   ஆங்கில Alphabet எழுத்துக்களின் உச்சரிப்பும்   அன்றாட தொலைபேசியகப் பணி நேரத்தில் மிக முக்கியமான  பங்கு வகிக்கும்.   எண்களை இரண்டு இரண்டு எண்களாக பிரித்து உச்சரிப்பது செளகரியமாக இருக்கும்.   2469852   என்ற தொலைபேசி  எண்ணை  --   டூ ஃபோர் - சிக்ஸ் நைன் - எயிட் ஃபை - டூ --  என்றே உச்சரிக்க வேண்டும்.  2466455  என்ற எண்ணை  -- டூ ஃபோர்  டபுள் சிக்ஸ்  ஃபோர் ஃபைவ்  வைவ்  என்று உச்சரிக்க வேண்டும்.  (டபுள் சிக்ஸ் என்பதை டூ சிக்ஸ் -- இரண்டு ஆறுகள்-  என்ற அர்த்தத்தில் சொன்னால் அது 26 என்று புரிந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதினால் இந்த ஏற்பாடு)

அதே மாதிரி தொலைபேசி இலாகாவில் பொனடிக் கோட் அடிப்படையில் எழுத்துக்களை உச்சரிப்பார்கள்.   பெயர்களை சரியாகப் புரிந்து  கொள்ள  இந்த  முறை  உபயோகமாக இருக்கும்.   RAJINI   என்ற பெயரை   R for Raja, A for Army, J for Japan, I for India, N for Navy,  I for India  என்று உச்சரித்தால் எதிர் தரப்பில் அந்த பெயரை எழுதிக்கொள்ளும் பொழுது தவறிலில்லாமல் இருக்கும்.   PP பெயரை எதிர்முனை  ஆப்ரேட்டருக்குத் தெரியப்படுத்தும் பொழுது இந்த உச்சரிப்பு வெகுவாக உதவும்.                                                                                           
                                                                                       
மூன்று கலர் டிக்கெட்டுகளில்  வெள்ளை தான் கரன்ஸியைப் போல மதிப்பு வாய்ந்தது. ஸ்ரீராம்  சென்ற பதிவு பின்னூட்டத்தில் கேட்டிருந்த 'இந்த டிக்கெட்டுகளுக்குக்கெல்லாம் தணிக்கை உண்டா?' என்ற கேள்வி முக்கியமானது.    டெலிபோன் ரெவின்யூ அக்கவுண்ட்ஸ்  (TRA) தொலைபேசி இலாகாவுக்கான  வருமான - செலவு கணக்குகளை கண்காணிக்கிற பிரிவு.

அச்சடிக்கப்பட்ட எல்லா நிற டிக்கெட்டுகளும்  அந்தந்த எக்ஸ்சேஞ்சுக்களான இண்டெண்ட் படி  தபால் இலாகா வழியாக கோணிப்பைகளில் வந்து சேரும். கோணிகள் பிரிக்கப்பட்டு கட்டு கட்டாக டிக்கெட்டுகள் மர பீரோக்களில் அடுக்கப்படும்.  வெள்ளை நிற டிக்கெட்டுகளுக்கு மட்டும் குறிப்பிட்ட அந்த ஊரில் பதிவாகும் டிரங்க் கால்களுக்கான பண வசூல் சம்பந்தப்பட்டது ஆகையால் அதற்குரிய முக்கியத்துவம் உண்டு.

A to Z  வரிசையில் ஆயிரம் எண்ணிக்கைக்குள்  ஒவ்வொரு டிக்கெட்டிலும்  எண் இடப்பட்டிருக்கும்.  (A001, A010, A100, A999 என்கிற மாதிரி)  வெள்ளை டிக்கெட்டில் இந்த எண்களின் அச்சுப்பதிவு சரியாக இருக்கிறதா,  இல்லை இடையில் ஏதாவது எண் அச்சடிக்கப்படாமல் விடுபட்டிருக்கிறதா என்பதை சரி பார்க்க  அவ்வப்போது  சீனியர் ஆப்பரேட்டர்கள் அந்தப் பணியில் இருப்பார்கள்.   நூறு டிக்கெட்டுகள்  கொண்ட ஒரு புக்கில்  ஏதாவது  எண்ணுள்ள டிக்கெட் இல்லாமல் இருந்தால்  அந்த எண்ணை அந்த டிக்கெட் புக்கின் பின் புறம் குறித்து கையெழுத்திட்டு வைப்பார்கள்.  (Ticket No. A001 to A 100 checked o.k. and found A079 missing)  இந்த மாதிரி அந்த குறிப்பு இருக்கும்.

இப்படி வரிசை எண்கள் சரிபார்க்கப்பட்ட வெள்ளை டிக்கெட்டுகளின் புக் தான் டிரங்க் கால் பதிவுக்குப் போகும் என்பது அடிப்படை விஷயம்.  ஒரு நாளில் மொத்த வெள்ளை டிக்கெட்டுகளில்  பதிவான கால்களின் (Booked Trunk callas) எண்ணிக்கை, பேசப்பட்ட கால்கள், பேசப்பட்ட நேர அளவீடுகள் (Duration), PP  இல்லாமல் கேன்சல் ஆனவை, வேறு  ஏதாவது காரணங்களால் கேன்சலானவை, வெளிநாடு டிரங்க கால் என்று வகைப்படி தனித்தனியாகப் பிரித்து அதற்கேற்பவான  பட்டியல் இட்டு  பண்டில் கட்டி ஒவ்வொரு நாளும் தலைமையக TRA Unit-க்கு அனுப்பப்படும்.  ஒவ்வொரு தொலைபேசி சந்தாதாரருக்கும்  மாத டெலிபோன்  கட்டண பில் அனுப்பும் பொழுது அவர்கள் டிரங்க் கால்கள் பேசியதற்கான கட்டணமும் அந்த பில்லில் ஒரு  இனமாகச் சேர்க்கப்படும். 

சென்ற காலத்தில் வசதி படைத்தவர்கள் தான் வீட்டில் தொலைபேசியை வைத்திருந்து அனுபவித்தார்கள்.   இந்த மாதிரி தொலைபேசியை சொந்தமாகக் கொண்டவர்கள் தான்  டிரங்க் கால்களை உபயோகத்தில் கொள்ள முடியும் என்ற ஒரு நிலை  இருக்கக் கூடாது அல்லவா?  தொலைபேசி வசதி இல்லாத ஏழைகளுக்கும் அவசர ஆபத்திற்கு  உபயோகப்பட வேண்டும் என்ற எண்ணத்தில்  தபால் அலுவலங்களில்  தந்தி கொடுக்கிற மாதிரி  டிரங்க் காலும் பேச முடியும் என்ற  வசதி இருந்தது.  இந்த தபால் ஆபிஸ் தொலைபேசி அமைப்பிற்கு  PCO  (Public call Office)  என்று இருந்தது.    P & T Department  என்ற பெயரில் இந்த தேசத்தில் மிகுந்த செல்வாக்குடன்  தபால், தந்தி, தொலைபேசி என்று எல்லா வசதிகளும் ஒரு  சேர  மத்திய அரசின் ஒரே இலாகாவாக இருந்து தேசத்தின் சகல பகுதி மக்களுக்கும் பணியாற்றி  வந்த பிர்மாண்டமான தேச சொந்து இந்த  இலாகா.

அப்படி இருந்த காலத்தில் தபால் அலுவலகங்களில்  இருந்த  PCO தொலைபேசியை  அங்குள்ள அலுவலர் உதவியுடன் உபயோகித்து டிரங்க் கால்களை பேசும் வசதி இருந்தது.  டிரங்க் கால் பேச வருவோரிடம் டிரங்க் புக்கிங் தகவல்களைக் குறித்துக் கொண்டு, தொலைபேசி இணைப்பகத்தோடு தொடர்பு கொண்டு அந்த விவரங்களை அளித்து  டிரங்க் இணைப்பு கொடுக்கும் நேரத்தில் கால் புக் செய்தவரைக் கூப்பிட்டு  அருகாமையில் இருக்கும் ஒரு மரக்கூண்டிற்குள் போகச் சொல்லி பேச வைப்பார்.  இந்த வகையில் பேசியவர்களிடமிருந்து  பெற்ற தொகை தபால் இலாகா மூலமாக தொலைபேசி இலாகாவிற்கு வந்து சேரும்.

தொலைபேசி வசதி இல்லாத எளிய மக்களுக்கும் PCO மூலமாக தங்களுக்கு டிரங்க் கால் வந்திருக்கிறது என்று  தகவல் கிடைத்து அவர்கள் தபால் நிலையம் சென்று போன் பேசும் வசதியும் இருந்தது.   வெளியூர், உள்ளூர் என்று இரண்டு பக்கமும் PCO-க்களாகவே கூட இருக்கும்.  ஒரு  உதாரணம் பார்ப்போம். 

கடலூரில் இருக்கும் ஒருவர்  விழுப்புரத்திலிருக்கும் ஒருவருடன் தொலைபேசியில் அவசரமாகப் பேச வேண்டும்.  இரண்டு பக்கமும் வீட்டில் தொலைபேசி வசதி கிடையாது.  என்ன செய்வார்?...  கடலூரில்  தபால் அலுவலகம் சென்று  அங்கு தந்திப் பிரிவில் இருக்கும் PCO கவுண்ட்டரில் விழுப்புரத்தில் இந்த முகவரியில் இருக்கும் இன்னாருடன் பேச வேண்டும் என்று குறிப்பாக எழுதிக் கொடுப்பார்.   பேசுவதற்கு முன் அட்வான்ஸாக PCO ஊழியர் குறிப்பிடும் தொகையையும் கொடுத்துக் காத்திருப்பார்.

அந்த ஊழியர் கடலூர் தொலைபேசி நிலைய டிரங்க் புக்கிங்கில்  விழுப்புரத்திற்கான PCO காலாக  முகவரியுடன் பதிவு செய்வார்.  இந்தத் தகவல் விழுப்புரம் தொலைபேசி   நிலையத்துடன் தொடர்பு கொண்டு   பகிர்ந்து கொள்ளப்படும்.  விழுப்புரம்   தபால் நிலையத்தின் PCO பிரிவுக்கு தொலைபேசியில்  இந்தத்  தகவல் பதியப்பட அங்கிருந்து தந்திப்  பிரிவு   ஊழியரை முகவரிக்கு அனுப்பி பேச வேண்டியவர் வந்து சேர்ந்ததும் அவர் வந்து சேர்ந்த தகவல் விழுப்புரம்   எக்ஸ்சேஞ்சுக்கு தெரிவிக்கப்பட்டு, கடலூர் எக்ஸ்சேஞ்சுக்கும் அந்த தகவல் போய்ச் சேர்ந்து, கடலூர் PCO விலிருக்கும் நபருக்கும் விழுப்புரம் PCO-வில் காத்திருப்போருக்கும்  தொலபேசித்  தொடர்பு ஏற்படுத்தப்படும்.   இரண்டு பகுதியிலும் பேசி முடித்ததும்,  கடலூர் ஆப்ரேட்டர்  PCO அலுவலரிடம்  பேசிய   நேரத்தைச் சொல்லி, அதற்காக வசூலித்த  கட்டண ரசீது எண் பெற்று தன் வெள்ளை நிற டிக்கெட்டில் அந்த விவரங்களைக் குறித்துக் கொள்வார். 

அருமை நண்பர் வெங்கட் அவர்கள் சென்ற பதிவு பின்னூட்டத்தில் ஒரு அவசர நேரத்தில் தான் நெய்வேலி தபால் ஆபிஸூக்கு சென்று டிரங்க் கால் பேசியது பற்றி பகிர்ந்து கொண்டதும், தொலைபேசியில் பேசுவதற்காக நீண்ட பெஞ்சில் உட்கார்ந்து காத்திருந்தவர்களின் நினைவு வருகிறது  என்று வல்லிம்மா தன் சென்ற காலத்து  நினைவுகளை நினைவு கொண்டதும்  தபால் அலுவலகம் சார்ந்த இந்த  PCO-க்களைத் தான்.

நான் புதுவை தொலைபேசி இணைப்பகத்தில் பணியாற்றிய  பொழுது  புதுவை பஜார் PCO -விலிருந்து  எம்ஜிஆருடன்  பேச வேண்டி யாரோ  டிரங்க் கால் பதிவு செய்திருந்தது இப்பொழுது நினைவுக்கு  வருகிறது.  அது பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

(வளரும்)


Friday, February 14, 2020

வசந்த கால நினைவலைகள்

                                                                           44

சென்ற பகுதிகளுக்கு:

https://jeeveesblog.blogspot.com/search/label/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D


சென்ற பகுதி பின்னூட்டத்தில் அந்நாளைய டிரங்க் எக்ஸ்சேஞ்சுகளின் பணிகள் பற்றிச் சொல்வதாகச் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது.

இன்றைய காலத்தில் ஆதிச்ச நல்லூர், கீழடி போன்ற அகழ்வாராய்ச்சிகளைப் பற்றி பெருமையுடன் பேசுகிறோம்.  பழம் பெருமை என்பது இன்றைய கால கட்டத்தின் நவீன வளர்ச்சிப் போக்கின்  முன்னான கால கட்டத்து வேர்களை   நினைவு கூர்ந்து பெருமைப்படுவது.     'அப்படியாக இருந்தவை எல்லாம் இப்படியாக வளர்ச்சி கொண்டிருக்கிறது' என்ற வளர்ச்சிப் போக்கின் தொடர்புச் சங்கிலியை நினைவில் கொண்டு  பெருமை கொள்வது மனிதகுலத்தின் இயல்பு தான்.

இன்றைய  மொபைல் உலகில் கைக்குள் அடங்கும் ஒரு சாதனத்தை உள்ளங்கையில் அடக்கி ஊர் உலகெல்லாம் தொடர்பு கொண்டு விடுகிறோம்.  ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் வெளியூரில் இருக்கும் நண்பர்கள் உறவினர்களுடன் தொலைபேசியில் பேசுவது என்றால் இவ்வளவு சுலபமாக இருந்திருக்கவில்லை.   நம் வீட்டிலிருந்த தொலைபேசியை நிலைத்தளமாகக் கொண்டு தொலைபேசி நிலையத்தில் டிரங்க் கால் என்று சொல்லப்பட்ட வெளியூர் அழைப்பை பதிவு செய்தே பேச முடிந்திருக்கிறது.

வெளியூரில் இருக்கும் நபர்களோடு தொலைபேசியில் பேச வேண்டுமானால் தொலைபேசி இணைப்பகத்தோடு நமது தொலைபேசியில் தொடர்பு  கொண்டு டிரங்க் கால்  பதிய வேண்டும்.   டிரங்க் கால் பதிவிற்கு என்று  தனி எண் உண்டு.   தொலைபேசி இணைப்பகத்தில் பணியில் இருக்கும் இயக்குனர்  (Operator)  ஒரு வெள்ளை நிற சீட்டில்  எந்த தொலைபேசி எண்ணிலிருந்து எந்த ஊரில் இருக்கும் எந்த  தொலைபேசி எண்ணுக்கு  அந்த எண் தொடர்புடைய யாருடன் பேச வேண்டும் என்பதனைக் குறித்துக் கொள்வார்.  அப்படிக் குறித்துக் கொள்ளும் இந்த வெள்ளை நிற குறிப்புச் சீட்டுக்கு  அவுட்வேர்ட் டிக்கெட்  (Outward Ticket)  என்று பெயர்.  இதே மாதிரி வெளியூர் தொலைபேசி இணைப்பகங்களிலிருந்து  இந்த ஊரில் இந்த தொலைபேசி எண்ணுடன் என்று குறிப்புகளோடு வரும்  டிரங்க் கால்களை குறித்துக் கொள்ளும் சீட்டிற்கு (Inward Ticket)  என்று பெயர்.   ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு டிரங்க் கால் இணைப்பு கொடுக்கும் பொழுது இடையில் இருக்கும் ஊரின் எக்ஸ்சேஞ்சின் வழியாக  இணைப்புக் கொடுக்க வேண்டி நேரிடும்.  அப்படியான இடையிலுள்ள ஊரில்  இந்த ஊரிலிருந்து இந்த ஊருக்கு என்று டிரங்க அழைப்பின் விவரங்களைக் குறித்துக் கொண்டு அந்த ஊருக்கு இணைப்பு கொடுப்பார்கள்.  அப்படி இடையில் இருக்கும்  ஊரில் பச்சைக் கலர்  சீட்டில் குறித்துக் கொள்வார்கள்.  அந்த பச்சை கலர் சீட்டிற்கு  (Transit Ticket)  என்று பெயர்.  இப்படி குறித்துக் கொண்டு அதற்கேற்பவான இணைப்புகளை (connections) கொடுப்பவர்களுக்கு 
தொலைபேசி இயக்குனர் (Telephone Operator)  என்று  பெயர்.  கோவையில் இரு   மாதங்கள் பயிற்சி வகுப்புகளுக்குப் பிறகு  நான்  தொலைபேசி இயக்குனராகத்தான் புதுவையில் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தேன்.

இந்த வெள்ளை, சிவப்பு, பச்சை நிற சீட்டுகளுக்கு (Tickets)  உதாரணம் பார்க்கலாம்.  இதற்கு  சேலத்தை ஆரம்ப இடமாக (Originating Place) கொண்டால்--

சேலத்திலிருந்து எந்த வெளியூருக்கும் கொடுக்கப்படும் அழைப்புக்கு (Trunk call)  வெள்ளை நிற டிக்கெட்டில்  பதிவு செய்ய வேண்டும். 

எந்த வெளியூரிலிருந்தும் சேலத்தில் இருக்கும் தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ள வரும் அழைப்புகளை  சிவப்பு நிற டிக்கெட்டில் பதிவு செய்ய வேண்டும்.

திருப்பூரிலிருந்து  சேலத்திற்கு பக்கத்திலிருக்கும்  திருச்செங்கோடு என்ற ஊருக்கு டிரங்க் கால் வரும் பொழுது திருப்பூரிலிருந்து நேரடியாக திருச்செங்கோடு தொலைபேசி இணைப்பகத்திற்கு  தொடர்ப்பு  கொள்ள முடியாதாகையால்  சேலம் எக்ஸ்சேஞ்சிலிருந்து திருச்செங்கோடு இணைப்பகத்திற்கு தொடர்பு கொடுப்பார்கள்.   அதனால் சேலத்தில் பச்சை டிக்கெட்டில்  விவரங்கள் குறித்துக் கொண்டு திருச்செங்கோடு எக்ஸ்சேஞ்சுக்கு  தொடர்பு கொடுப்பார்கள்.    திருப்பூரில் வெள்ளை நிற டிக்கெட்டிலும்,  திருச்செங்கோடில் சிவப்பு நிற டிக்கெட்டிலும் இந்த அழைப்பு  பதிவு செய்யப்பட்டிருக்கும்.   சேலம் தொலைபேசி இயக்குனருக்கு  பச்சை நிற டிக்கெட்டில் குறிப்புகளை பதிந்து கொண்டு திருச்செங்கோடு இணைப்பகத்திற்கு தொடர்பு கொடுப்பது தான் வேலை.  இணைக்கப்பட்டதும் திருப்பூர்  தொலைபேசி இயக்குனரும்,  திருச்செங்கோடு தொ. இயக்குனரும்
தொடர்பிலிருந்து  அழைக்கும்  தொலைபேசி எண்ணையும்,  அழைக்கப்படும் தொலைபேசி எண்ணையும் தொடர்பு படுத்துவார்கள்.

ஒரு ஊரின் தொலைபேசி எண்ணையும்  இன்னொரு ஊரின் தொலைபேசி எண்ணையும் மட்டுமே   தொடர்பு  ஏற்படுத்துவதற்கு  நம்பர் கால் என்று பெயர்.  இரு பகுதி எண்களுடன் தொடர்பு  ஏற்பட்டதுமே  இருவரும் பேச வேண்டும்.  பேசத் தொடங்கியதிலிருந்து  மூன்று மூன்று நிமிடங்களாக பேசும் நேரம் கணக்கிடப்படும்.  ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு  ஆப்ரேட்டர் லயனில் வந்து  3 minutes over, 6 minutes over  என்று அறிவிப்பு கொடுப்பார்கள்.  ரொம்பவும் அவசியம் என்றால் தான் 6 நிமிடங்களுக்கு மேல் நீட்டிப்பு கொடுப்பார்கள்.   லயன் பிஸியாக இருந்தால் 6 நிமிடங்களுடன் அழைப்பு துண்டிக்கப்பட்டு 6 நிமிடங்கள் பேசியதாக அழைப்பு பூர்த்தி செய்யப்படும்.

ஒரு ஊரின் தொலைபேசி எண்ணில் இன்னொரு ஊரின் தொலைபேசி எண்ணிலுள்ள குறிப்பிட்ட நபருடன் பேச   வேண்டுமானால் அதற்கு  பி.பி. கால்  (Particular Person Trunk call)  என்று பெயர்.  எதிர் தொலைபேசியில் அந்த குறிப்பிட்ட நபர் இல்லையென்றால்  PP not available  என்று டிக்கெட்டில் குறித்துக் கொண்டு அரை மணி நேரம் தாமதித்து மறுபடியும் இணைப்பை ஏற்படுத்தி  தொடர்பு கொடுப்பார்கள்.   அந்த இடைவெளியில் அழைக்கப்பட்டவர்  அந்த எதிர் தொலைபேசி எண்ணில் காத்திருக்கும் பட்சத்தில்  குறிப்பிட்ட நபருடன் பேசுவதற்காக இந்த ஏற்பாடு.  அந்த இடைவெளி அரை மணி நேரத்தில் குறிப்பிட்ட நபர் அந்த தொலைபேசிக்கு வரவில்லை என்றால் அழைத்தவருக்கு தெரியப்படுத்தப்படும்.  அந்த நேரத்தில் அழைத்தவர்  விரும்பினால்  தொடர்பு ஏற்படுத்தப்படும்.  விரும்பவில்லை என்றால்  அழைப்பை  கேன்சல் செய்து  விடலாம்.  PP கால்களுக்கு  PP இருக்கும் பட்சத்திலும்,   இல்லாத  பட்சத்திலும்    பேசினால்   PP கட்டணம்  உண்டு.   பேசாமல்   அழைப்பை கேன்சல் செய்து விட்டால் PP கட்டணம் மட்டுமே.  இந்த PP கட்டணம் மூன்று நிமிடங்கள் பேசக்கூடிய ஒரு டிரங்காலின் கட்டணத்தில்  25%  இருக்கும்.

டிரங்கால்கள்  இருந்த  நாட்களில்   கீழ்கண்ட வகையில் அவரவர்   தேவைகளுக்கு  ஏற்ப வசதிகள் இருந்தன.

1.  Ordinary Trunk calls

2.  Urgent  Trunk calls

3.  Lightening Trunk calla

3.  Fixed Time calls

4.  Subscription Fixed Time calls

5.  International Calls

--  இவையெல்லாம் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(வளரும்)

Friday, August 16, 2019

வசந்த கால நினைவலைகள்..

                                                                        43


1967-ம்  வருடம்  ஜனவரி  12-ம் தேதி.

அன்று  இரவுப்  பணி  எனக்கு.   பவானி தொலைபேசி  நிலையம் மிகப்  பெரிதும் இல்லாத,  மிகச் சிறிதும்  இல்லாத நடுவாந்திர இணைப்புகள் கொண்ட தொலைபேசி நிலையம் என்பதினால்  இரவுப்  பணிக்கு ஒருவர் தான் இருப்பார்.  அந்த ஒருவனாக நான் மட்டும்.   டிரங்க் கால் மற்றும் உள்ளூர் அழைப்புகளை  கையாளும் பணியில் இருந்தேன்.  தொலைபேசி நிலையமும் வீடு  போலவான அமைப்பில் தெருவை ஒட்டியே இருக்கும்.

இரவு சுமார் பத்தரை மணி இருக்கும்.  தொலைபேசி நிலையத்தின் முன்னால் பெரும் இரைச்சலாக இருந்ததினால்,  அணிந்திருந்த  ஹெட் செட்டை கழற்றி மேஜை மீது வைத்து  விட்டு என்னவென்று ஜன்னல் வழியாகப் பார்த்தால் தொலைபேசி நிலையத்தின் முன்னால் தான்  பெரும் கூட்டம் கூடியிருந்தது.   தாமதிக்காமல் கதவைத்  திறந்து   என்னவென்று கேட்டேன்.

"சார்!  எம்ஜிஆரை  எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டுட்டாராம்.  ஊர் பூராவும் தகவல் பற்றி எரிகிறது.  உங்களுக்கு அது பற்றி  தகவல் ஏதாவது தெரியுமா, சார்?  எம்ஜிஆர் இப்போ எப்படி இருக்கார்?  சொல்ல முடியுமா?" என்று படபடவென்று கூட்டத்தின் முன்னால் இருந்த இளைஞன் என்னைக் கேட்டான்.

எம்ஜிஆர் சுடப்பட்டிருக்கிறார் என்ற அந்த செய்தியே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  "நீங்கள் சொல்லித் தான் இதுவே எனக்குத் தெரியும்.." என்று நானும் கவலையுடன் சொன்னேன்.
                                                                                                                   
"நீங்கள் மெட்ராஸுக்கு போன் பண்ணி தகவல் கேட்டுச் சொல்லுங்க, சார்.." என்றார் கூட்டத்தில் ஒருவர்.

'அப்படியெல்லாம் சுலபமாகப்  பேசி விட முடியாது..' என்று சொன்னால் யாரும் நம்பப் போவதில்லை என்று எனக்குப் புரிந்தது.  முதலில் அவர்கள்  பதட்டத்தைத் தணித்து அமைதிபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் "என்னால் முடிந்தவரை அதற்கு  முயற்சிக்கிறேன்.." என்று சொல்லி விட்டு  "நீங்கள் எல்லாரும் வெளியேயே இருங்கள்.. இவர் மட்டும் உள்ளே வரட்டும். நான் சென்னையில் பத்திரிகை ஆபிஸில் கேட்டுச் சொல்கிறேன்.." என்று அந்த இளைஞரை மட்டும் உள்பக்கம் அழைத்து  அங்கிருந்த நாற்காலியில் அமரச் சொன்னேன்.

அதற்குள் இதே செய்தி உள்ளூரில் பரபரப்பாகி ஒருவருக்கொருவர் செய்தியை பரிமாறிக் கொள்ளும் அவசரத்தில் லோக்கல் அழைப்புகள் பிஸியாகி விட்டது.   ஏறத்தாழ 52 ஆண்டுகளுக்கு முன்னால் அந்தக் காலத்தில் 'நம்பர் ப்ளீஸ்' சிஸ்டம்.  வீட்டில் தொலைபேசி மேல் குழலை ஒருவர்   எடுத்த அடுத்த வினாடி தொ.நிலைய இணைப்புப்  போர்டில்  அந்த  தொலைபேசி   எண்ணுக்கான சிறிய பல்பு ஒன்று எரியும்.  செங்குத்தான    இணைப்பு போர்டுக்கு  கீழ்ப்பகுதியில் படுக்கை வசத்தில்
மேஜைப் பலகை போன்ற    இடத்தில் எதிரும் புதிருமாக    இரண்டிரண்டாக இருபது துளைகள்   இருக்கும்.  இரண்டு  துளைக்கு இரண்டு கார்டுகள் (செப்பு முகப்பு பொருத்தப்பட்ட wire இணைப்புகள்)  நுழைக்கப்பட்டு கீழ்ப்பகுதியில் இருக்கும் Pully-யில் கோர்க்கப்பட்டிருக்கும். கார்டின் மேல் பகுதியில் பிடித்து மேலே தூக்கினால் மேலே வரும்;  விட்டால் கீழே வந்து விடும். ஒரு கார்டு  ஆன்ஸரிங் கார்டு  எனவும் மற்றது காலிங் கார்டு என்றும் அழைக்கப்படும்.  அந்த ஆன்ஸரின் கார்டை எடுத்து பல்ப் எரியும் இடத்தின் கீழே இருக்கும் துளையில் செருகி,  அதற்கு எதிரே மேஜை பலகையில் இருக்கும் சின்ன தகடை (அதை key என்று சொல்வோம்) முன் பக்கம்  நகர்த்தினால் தொலைபேசியை எடுத்தவருடன் நாம் பேசலாம். அவர் கேட்கும்
எண்ணுடன் தொடர்பு ஏற்படுத்த காலிங் கார்டை எடுத்து மேல் பகுதியில் நூறு நூறாகப்  பிரித்திருக்கும் எண்ணிட்ட  துளைகளில் அவர் விரும்பும் எண்ணிற்கான துளையில் செருகி,  key-யை  பழைய   நிலைக்குக் கொண்டு  வந்து பின் பக்கமாக சாய்த்தால் கூப்பிடப்படுகிறவர் போனில் மணி அடித்து அவர் தொலைபேசியை எடுத்தவுடன் key பகுதியில் இருக்கும் பல்ப் அணைந்து விடும்.  அணையவில்லை என்றால் அவர் லயனில் வரவில்லை என்று அர்த்தம்ம்.   பல்ப் அணைந்து விட்டால் இருவருக்கும் இணைப்பு கிடைத்து பேசிக் கொள்வார்கள் என்று அர்த்தம்..  அவர்கள் பேசி முடித்ததும் key பகுதியில் இருக்கும்  இரண்டு பல்புகள் ஒளிர  பேச்சை முடித்து விட்டார்கள் என்று தெரிந்து  காலிங், ஆன்ஸரிங் இரண்டு கார்டு இணைப்புகளையும் துளையிலிருந்து எடுத்து விட்டால் அவர்கள் இருவருக்குமான தொடர்பு துண்டிக்கப் படும்.   ஒரு நாளில் எத்தனை பேருடன் எத்தனை தடவை வேண்டுமானால் பேசலாம்.  கணக்கே கிடையாது.

எம்.ஜி.ஆர் சுடப்பட்டு விட்டார் என்று தெரிந்து  அந்த நேரத்தில் பிஸியான அத்தனை அழைப்புகளுக்கும்  இணைப்பு கொடுத்து விட்டு,  என் அதிகாரியுடன் பேசினேன்.  விஷயத்தை விளக்கினேன்.  அன்-அபிஷியலாக  சென்னை தினத்தந்தி பத்திரிகை அலுவலகத்துடன் பேச அனுமதி வாங்கினேன்.  அவரும் நிலைமையைப்  புரிந்து  கொண்டு யாரோட வேண்டுமானாலும் பேசி பொது மக்களுக்குத் தெரிவியுங்கள்.  பின்னால் ஆப்ஸர்வேஷனில் குறிப்பு வந்தால் பார்த்துக் கொள்ளலாம்.  நானும்  கொஞ்ச நேரத்தில் அலுவலகத்திற்கு வருகிறேன்..' என்று  சொன்னார்.

அந்நாட்களில் தினத்தந்தி பத்திரிகை தான் மிகவும் பிரபலமான மக்கள் பத்திரிகையாகத் திகழ்ந்தது.  தொலைபேசி  டைரக்டரி உதவியுடன்  தினத்தந்தி அலுவலக எண்ணை குறித்துக் கொண்டு  டிரங்க்  சர்க்யூட்டில் தொடர்பு கொண்டேன்.  எம்ஜிஆர் சுடப்பட்டது  உண்மை என்றும்  அவர்  உடனடி சிகித்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப் பட்டிருக்கிறார் என்றும் எம்.ஆர்.ராதாவும் அதே மருத்துவமனையில் சிகித்சைக்காக அட்மிட் செய்யப்பட்டிருப்பதாகவும்  தகவல் கிடைத்தது.  விஷயத்தைத் தெரிந்து கொண்டு அந்த இளைஞரிடம் சொல்லி வெளியே திரண்டிருக்கும் கூட்டத்திற்குச் சொல்லச் சொன்னேன்.

இளைஞர் அப்படியே கூட்டத்தினருக்குச்  சொன்னார்.  அவர்கள் நம்பவில்லை.  முரசொலி அலுவலகத்தில் கேட்டுச்  சொல்லுங்கள் என்று அப்பொழுது தான் உண்மையான தகவல் கிடைக்கும் என்று  சொன்னார்கள்.   தொலைபேசி டைரக்டரியில் முரசொலி அலுவலகத்தின் எண்ணைக் கண்டு பிடித்து தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.   கொஞ்ச நேரத்திற்கு தொலைபேசியை யாருமே எடுக்க வில்லை.   இடைவெளி விட்டு இரண்டு  மூன்று தடவைகள்  முயற்சித்து  ஒருவழியாக அங்கு தொலைபேசியை எடுத்தவரிடம் இதே தகவலைப் பெற்று வெளியே திரண்டிருப்போருக்கு அந்த இளைஞர் மூலமாகவே தெரிவிக்கப் பட்டது. 

அதற்குள் அதிகாரியும் வந்து விட்டார்.  அந்த அதிகாரியும் நானும் தொலைபேசி நிலையத்திற்கு அருகேயே ஒரு வீட்டின் கீழ்ப்பகுதியில் இருந்த நீண்ட அறையை வாடகைக்கு எடுத்து சேர்ந்தே தங்கியிருந்தோம்.  சேவியர் என்று அவர் பெயர்;  போன் இன்ஸ்பெக்டர்.  அறை நண்பரே அதிகாரியாகவும் இருந்த சூழ்நிலை.   அவர் வந்ததும் எனக்கும் ஒரு தெம்பு கிடைத்த மாதிரி இருந்தது.  தனி ஒருவனான  மாட்டிக் கொள்ளாமல் இன்னொருவரும்  கூடக் கிடைத்த தெம்பு.

அந்நாட்களில் அரசு சார்ந்த பணியிடங்கள்,  வியாபார கடைகள், வியாபாரிகள்,  செல்வந்தர்கள் -- இவர்கள் வீட்டில் தான் தொலைபேசி என்பதே இருக்கும்.  கார் வைத்திருக்கிற மாதிரி தொலைபேசியும் ஒருவரின் அந்தஸ்த்தை வெளிப்படுத்தும் விஷயம்.  இதற்குள் ஊரில் இருந்த பெருந்தனக்காரர்கள் தொலைபேசி நிலையம் மூலமாகவே டிரங்க் கால் போட்டு தகவல் தெரிந்து கொள்ள ஆரம்பித்து மற்றவர்களுக்கும்  செய்தி பரவ கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஊரில் பதட்டம் தணிந்தது. 

காலையில்  கடைகளுக்கு வந்த செய்தித்தாட்கள்  பரபரப்பாக விற்றுத் தீர்ந்தன.

(வளரும்)


படங்கள் உதவியோருக்கு நன்றி.



Friday, August 9, 2019

வசந்த கால நினைவுகள்...

                                      42

வானியில் இருக்கும் அற்புதமான பழைமையான கோயில்  சங்கமேஸ்வரர் ஆலயம்.  இந்தக் கோயில் நான் அங்கிருந்த காலத்தில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகமும் நடந்தது.   கிட்டத்தட்ட ஒரு வார காலம் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளோடு விழா பிரமாதமாக நடந்தது.   ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. 

அன்றைக்கு மாலை பொழுது சாய்ந்ததும் ஒரு இசைக் கச்சேரி இருந்தது.  கோயில் பிரகார மதில் சுவர் தாண்டி முன்பக்கம் பெரிய பந்தல் போட்டு கச்சேரிக்கு மேடை அமைத்திருந்தார்கள்.  பாடப் போவது பிரபல சங்கீத வித்வான்.  சினிமாவிலும் நாலைந்து பாடல்கள் இவர் பாடியிருந்ததால் கர்நாடக சங்கீதப் பிரியர்கள் மட்டும் என்றில்லாது சகலரும் திரண்டிருந்தனர்.
ஜரிகை வேஷ்டியும், புரளும் அங்கவஸ்திரமுமாயு பாடகர் பந்தலுக்குள் பிரவேசித்ததுமே மக்களிடம் உற்சாகம் பீறிட்டது.  ஒரு கூட்டமே பிரதம பாடகரோடு கூட வந்தது.  முன் வரிசை நாற்காலிகள் முழுவதுமே அவருடன் வருபவர்களுக்காக முன் கூட்டியே ஒழித்து விடப்பட்டிருந்ததால் வந்தவர்களுக்கு செளகரியமாகப் போய் விட்டது.           
                                                                                                                           
சங்கீத வித்வான் மைக்குக்கு பின்னால் அமர்ந்திருந்த காட்சியே அமர்த்தலாக இருந்தது.  நிச்சயம் 40-க்கு மேலே வயசு இருக்கும்.  சதுர முகமும் நரை தலையும் இள நகை முகமுமாய் எனக்கு அவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.

அவருக்கு பக்கத்தில் ஒரு இளைஞன்.   தன்னம்பிக்கை நிறைந்த களையான முகம்.  குருவோடு சேர்ந்தே அவனும் பாடப் போகிறான் என்று அவனுக்கு முன்னாலும் ஒரு மைக் வைக்கப்பட்டதிலிருந்து தெரிந்தது.  விநாயகர் துதியுடன் ஆரம்பித்த கச்சேரி இரண்டே கீர்த்தனைகளில் களை கட்டி விட்டது.

அடுத்துப் பாடிய ஒவ்வொரு பாட்டுக்கும் கைத்தட்டல்  பந்தலைப் பிளந்தது.   எனக்கோ அந்த வயசில் சங்கீத விஷயத்தில் 'அ', 'ஆ' ன்னா கூடத் தெரியாத ஞான சூன்யமாக இருந்தாலும் அந்த வித்துவான் பாடுவதில் ஏதோ குறையிருப்பதாக ஒரு நெருடல்.  கொஞ்சம் கொஞ்சமாக அந்த நெருடல் என்ன என்று தெரிந்து கொள்ள மனம் தவியாய்த் தவித்தது.    அந்த சங்கீத வித்வான் அப்பொழுது பாடியது எனக்கு மனப்பாடமாகத் தெரிந்த  கோபால கிருஷ்ண  பாரதியின் கீர்த்தனை.  'தில்லையம்பலத்தானை கோவிந்த ராஜனை தரிசித்துக் கொண்டேனே' ... என்று அவர் பாட ஆரம்பிக்கும் பொழுது  இந்தத் தடவை அந்த வித்துவானின் முகத்தை வாயசைப்பை உற்றுக் கவனிக்க ஆரம்பித்தேன்.   'தில்லையம்பலத்தானை' என்று அவர்

ஆரம்பித்த பொழுது குரல் வளம்    கிரக்கமாக இருந்தது.    போகப் போக வேகம் கூடியது.  'தொல்லுலகமும்   படியளந்து' வரியிலும்,  'அம்பல ரகசியம் அறிந்து கொள்வதிங்கே' வரி வந்த போதும் சரி,   அவர் தன் குரலை உச்ச ஸ்தாயியில் ஏற்றி நிறுத்த முடியாமல் தவித்தது தெரிந்தது.                 

அவருடன் சேர்ந்து மெல்லப் பாடிக் கொண்டு வந்த இளைஞன் உச்சத்தில் அழகாக நீட்டி பரவிப் படிந்து ஒரு விமானம் ரொம்ப மெஜஸ்டிக்காக கீழே இறங்கித் தவழ்வது போல குரலை இறக்கி நிரவிய  தருணத்தில் அவன் குரலுடன் வித்வானின் குரலும் சேர்ந்து கோண்ட பொழுது உச்சத்தில் குரலை ஏற்ற முடியாத வித்வானின் சிரமம் தெரிந்தது.   சரணத்தில் 'அருமறை பொருளுக்கெட்டா' வரியில் 'எட்டா'வை எட்டி நீட்டுவதில் சிரமப்பட்டு 'அறிதுயில் அணையானை'யில் மறுபடியும் உச்சம் அவஸ்தைப்படுத்தி உதவியாளர் உதவியில் அந்த நீட்டலை சமாளித்து 'ஆதரிப்பதங்கே' என்று இறக்கி முடித்த பொழுது கைத்தட்டல் வானைப் பிளந்தது.

உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அப்பொழுது அங்கே எழுந்த கைத்தட்டல் பாடகரின் அந்த உதவியாளருக்கு இல்லையென்றாலும், அந்த உதவியாளர் இல்லையென்றால் இந்த கரகோஷம் ஏது இங்கே என்ற கேள்வி மனசின் அடி ஆழத்தில் எழுந்து பொறுத்துக் கொள்ள முடியாமல் அவஸ்தையாக இருந்தது.

ஏதோ ஒரு சக்தி உந்தித் தள்ளியது போல எழுந்தேன்.  கூட்டத்தை விட்டு வெளியே வந்தேன்.  விறுவிறுவென்று  கோயில் வெளித்திடலில் இருந்த பூக்கடைக்குப் போய்  ஒரு ரோஜாப்பூ மாலை வாங்கிக் கொண்டு கச்சேரி நடந்த இடத்திற்குத்  திரும்பினேன்.  வித்துவான் அடுத்த பாடலைப் பாடுவதற்கான முஸ்தீபுகளில் இறங்கிக் கொண்டிருந்த பொழுது,  நின்று கொண்டிருந்த கூட்டத்தினரை விலக்கித் தள்ளிக் கொண்டு மேடைக்கு வெகு அருகில் போய் ஏந்திக் வந்திருந்த மாலையை அந்த உதவிப் பாடகர் இளைஞன் கழுத்தில் போட்டேன்.

அந்த ஷண வினாடி அந்தப் பந்தலே விக்கித்து நின்றது மாதிரி எனக்குத் தோன்றியது. 

நான் மேடையை நெருங்கியதுமே  வித்துவான் தனக்குத்  தான் மாலை என்று தெரிந்து லேசாகத் தன் தலையைக் குனிந்தது எனக்குத் தெரியும்..  இருந்தாலும் நான் அவரது    உதவியாளருக்கு மாலையைப்   போட்டதும்     தனது ஏமாற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல்  சமாளித்துக் கொண்டு  அவர் தன் கையைத் தட்ட, மெக்கிலும் அந்த ஒலி வெளிப்பட்டு,  மொத்த கூட்டமுமே நான் போட்ட மாலைக்கு கை தட்டினதை அந்த இளைஞனுக்கு அந்த சமயத்தில் கிடைத்த அங்கீகாரமாகவே கருதினேன்.

இந்த ரசாபாசத்தை - வித்துவான் இருக்க அவர் சீடனுக்கு நான் போட்ட மாலை 'அபச்சாரத்தை'க் களைய --  யாரோ ஒருவர் ஓடிவந்து வித்துவானுக்கும் மாலையைப் போட்டார்.  அதற்கு மேடைக்கு அருகிலேயே நின்று கூட்டத்தோடு சேர்ந்து நானும் கைதட்டினேன். 

ரொம்ப நேரம் அங்கு இருக்க இருப்பு கொள்ளவில்லை எனக்கு.   கூட்டத்தை விலக்கிக் கொண்டு வெளியே வந்தேன்.   கோயில் கோபுரம் சர விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு ஜெகத்ஜோதியாக இருந்தது.  கூடு துறைப் பக்கம் போகலாமா என்று  யோசனை ஓடியது.   சுற்றிலும் நன்றாகவே இருட்டு கவிந்து விட்டது.   பாதை அவ்வளவு சரியில்லாததினால் கூடுதுறை பக்கம் போவது அவ்வளவு சிலாக்கியமில்லாதிருக்கும் என்ற நினைப்பு வந்து  போகையில் எனக்கு எதிர்ப்புறம் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு பெரியார் என்னைப் பார்த்ததும் ஒரு கணம் தயங்கி,  "ஏம்பா அப்படிச் செஞ்சே?" என்று குழைவாகக் கேட்டார்.

அவரை நிமிர்ந்து பார்த்த பொழுது  என் மனசு லேசாகிப் போனது.   யாராவது இப்படி நான் அந்த  இளைஞனுக்கு மாலை போட்டதைப் பற்றிக் கேட்க மாட்டாங்களான்னு  தான் ஏங்கியது  மாதிரி இருந்தது.  "ஐயா!  தப்பா நான் ஏதாவது  செஞ்சிருந்தா மன்னிச்சிடுங்க.  பாடின அந்தப் பையன் என் வயசு  இளைஞன் இல்லையா?..   அவ்வளவு அருமையா இந்த வயசிலே அவன் பாடினதைப் பாத்து பரம சந்தோஷமா போயிடுத்து.  அதான்..  மூணு ரூபா சொன்னான்.  பேரம் பேசாம காசு கொடுத்து   மாலையை வாங்கிண்டு வந்தேன்.    அத்தனையும் ரோஜா. .. அந்த பையனுக்காகவே அமைஞ்ச மாதிரி இருந்தது.." என்று தாழ்ந்த குரலில் தயங்கித் தயங்கிச் சொன்னேன்.

"நீ ஒண்ணும் தப்பா செஞ்சிடலே.." என்றார் பெரியவர்.   "நானும் கேட்டேன்.   அந்தப் பையன் இன்னிக்குப் பிரமாதமாப் பாடினான்.  இவ்வளவு  ஜோராப் பாடறான்னேன்னு நான் அவனை மனசிலே பாராட்டி நினைச்சிக்கிட்டிருக்கற நேரத்லே தான் நீ டக்ன்னு அவனுக்கு மாலையைப் போட்டுட்டே.. அவனும்  நாளைக்கு இந்த பெரிய வித்துவான்  மாதிரி வர வேண்டியவன் தான்.   நீ அவனுக்கு மாலை போட்டது சரி தான்.." என்று சொன்னார்.

நான் அப்போ செஞ்ச காரியத்தை  இன்னொருத்தர் சரின்னு சொன்னது மனசுக்கு ரொம்ப திருப்தியா இருந்தது..  இருந்தாலும் தயங்கியபடி, "தப்பா செஞ்சிட்டோமோன்னு எனக்கு உள்ளூர ஒரு பயம் இருக்கத்தான் செஞ்சது.." என்றேன்.

அந்தப்  பெரியவர் வாஞ்சையுடன் என் தோளில் லேசாகத் தட்டிக் கொடுத்தார்.  "தம்பீ!  எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம இந்த  மாதிரி உணர்வுபூர்வமா இன்னொருத்தரை மதிக்கறதெல்லாம்,  பாராட்டறதெல்லாம்  எல்லாராலேயும்  முடிஞ்சிடாது.  அதுக்குன்னு ஒரு நல்ல மனசு வேணும்.  அது உங்கிட்டே இருக்கு.  நிதானமா ஒரு காரியத்தை செய்யறச்சே தான் சாதக பாதகங்களையெல்லாம் யோசிச்சு நம்ம புத்தி அதிலே படியும்.   இந்த மாதிரி உணர்வின் எழுச்சிலே சடக்ன்னு செய்யறதெல்லாம் நாமாச் செய்யறதில்லே..  அதெல்லாம் நம்மளத் தாண்டி நடக்குது.  ஏதோ ஒரு சக்தி நமக்குள்ளே பூந்திண்டு செய்ய  வைச்சிடறது.  அப்படி  செஞ்சிட்டேன்னு எடுத்துக்க வேண்டியது தான்.." என்றார்.

"இருந்தாலும்..." என்று இழுத்தேன்.

"என்ன இருந்தாலும்?.. சும்மா போட்டுக் குழப்பிக்காதே.  நீ செஞ்ச காரியத்லே சத்தியம் இருக்கு.  அந்த பலம் ஒண்ணு  போதும்.." என்று என்னை தேற்றுகிற மாதிரி சொல்லி விட்டு என்னைத் தாண்டிப் போனார்.

நிமிர்ந்து பார்த்தேன்.  கோயில்  சுற்றிலும் தகதகத்த மின் ஒளியில் பளபளத்துக் கொண்டிருந்தது.  இறைவனே அந்தப் பெரியவர் ரூபத்தில் வந்து நான் செஞ்ச காரியத்தை அங்கீகரித்த மாதிரி அன்று உணர்ந்தேன்.

இரவு படுக்கையில் விழுந்த பொழுது மனம் பூராவும் இனம் புரியாத ஒரு நிம்மதி ஆக்கிரமிச்சிருக்கிற மாதிரி உணர்ந்தேன். 

சில விஷயங்கள் நடக்க டூலாக நாம் எப்படி உபயோகப்படுத்தப் படுகிறோம் என்று வாழ்க்கையில் முதல் முதலாக உணர்ந்த தருணம் அது தான்.


(வளரும்)

Tuesday, July 23, 2019

வசந்த கால நினைவலைகள்..

                                                                       41



னந்த விகடனில் ஜெயகாந்தனின் உன்னைப்  போல  ஒருவன் குறுநாவல்  பிரசுரம் கண்டு வாசகர் மத்தியில்  மிகுந்த வரவேற்பைப் பெற்றது.   ஆனந்த விகடனில் அவரது முதல் குறுநாவலும் அதுவே.  பின்னால் இதே கதையை குறைந்த செலவில் திரைப்படம் ஆக்கினார் அவர்.  வழக்கமாக அந்தப்
படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யாமல்  ப்லீம் ப்ரிண்ட் போட்டு  ஊர் ஊராக சென்று அங்கு வாடகைக்குக் கிடைக்கும் தியேட்டரில் காலைக் காட்சி போல  திரையிட ஏற்பாடுகள் செய்தார்.  இதற்கு பல்வேறு இடங்களிடம் விரவிக் கிடந்த அவரது வாசக அன்பர்கள், பொதுவுடமைக் கட்சித் தோழர்கள் பெரிதும் உதவியாக இருந்தனர். 
அந்த மாதிரி புதுவையில்  உன்னைப் போல் ஒருவன் படப்பெட்டியோடு அவர் வந்திருந்த பொழுது அவருடனான அடுத்த சந்திப்பு   நிகழ்ந்தது.  இந்தத் தடவை   அவரைச் சுற்றியிருந்த கூட்டந்தில் என்னை அடையாளம் கண்டு கொண்டு  "எப்படியிருக்கீங்க, ஜீவி?" என்றார்.  நான் பதில் சொல்வதற்குள் அடுத்த கேள்வியாக  "சிரில் வரலையா?" என்றார்.  "வர்றதா சொல்லியிருக்கிறார்.." என்று நான் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே,  இன்னொருவர் குறுக்கிட்டு ஏதோ  கேட்டார்.  அதற்குள் என் வழக்கப்படி 'ஆட்டோகிராப்' நீட்டி கையெழுத்து வாங்கிக் கொண்ட பொழுது, 'அவசியம் வீட்டுக்கு வாருங்கள்.." என்று தன் சென்னை எழும்பூர் வீட்டு முகவரியையும் குறித்துக் கொடுத்தார்.   அதற்குள் சிரிலும் வந்து விடவே பேச்சு  திரைப்படம் குறித்து அலைபாய்ந்தது. 
                                                                 
படத்தில் இடைவேளையில் ஜெயகாந்தன் பேசினார்.   'இன்றைய  தமிழ் சினிமா ரசனையையும் அதன் சிருஷ்டி   முறைகளையும் இந்தப் படம் பூரணமாக மறுத்து ஒதுக்கியிருக்கிறது.  இது பற்றி ஓரளவு அறிந்திருந்தும் என்னைப் புரிந்து கொண்டமையால் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க வந்திருக்கும்  நண்பர்களே!  உங்களை நான் வணங்குகிறேன். பாராட்டுகிறேன்.  காலத்தின் தேவையை உணர்ந்து அதற்கான கடமையை ஆற்ற வந்தவர்களின் படைப்பு என்ற அளவில் இந்தப் படமும் அதற்கான ஓர் ஆரம்பமே..' என்ற கருத்தில்  தொடங்கியதாக நினைவு.

ஜெயகாந்தனே இயக்கிய படம் இது.  ஆறு தயாரிப்பாளர்களில் ஒருவராக 'ஆசிய ஜோதி பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிருவனத்தின் தயாரிப்பாக இந்த படம் வெளிவந்தது.   பின்னால் இந்த 'உன்னைப் போல் ஒருவன்' தேசிய விருதையும் பெற்றது.  இந்தப் படத்தின் முக்கிய பாத்திரத்தில் காந்திமதி நடித்திருந்தார்.

புதுவையில்  நான் இருந்த வரை  காங்கிரஸ்,  கம்யூனிஸ்ட் என்று இரண்டே இரண்டு கட்சிகள் தான் இருந்தன.  கம்யூனிஸ்ட் இயக்கமும் தோழர் வ. சுப்பையாவின் தலைமையில் பஞ்சாலைத் தொழிற்சங்கங்களின் வலுவோடு தொழிலாளர்  நலன் சார்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தது.  குபேர் ஆட்சி போய் வெங்கட சுப்பையாயின் காங்கிரஸ் ஆட்சி வந்த பொழுது புதுவையில் காலூன்ற கழகங்களின் முயற்சிகள் லேசாக வேர் கொள்ள ஆரம்பித்தது.

சென்னையிலிருந்து காங்கிரஸ் பேச்சாளர்கள்  சிலர் வந்து  ஒதியஞ்சாலை மைதானத்தில் கூட்டம் போட்டதெல்லாம் நினைவிலிருக்கிறது.  நாத்திகம் ராமசாமி  சென்னையிலிருந்து வெளிவந்த நாத்திகம் என்ற பத்திரிகையின் ஆசிரியர்.  அந்நாட்களில் அவர் காங்கிரஸ்  மேடைகளில் பேசுவது  வழக்கம்.   எது எப்படியிருந்தாலும் புதுவை மக்களின் ஆசை, அபிலாஷையெல்லாம் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தது.   'புதுவை சென்னை மாகாணத்தோடு சேர்ந்து விடலாகாது;  புதுவையின் தனித்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்' என்பதே அது.  அதனால் அந்நாட்களில்  மேடைகளில் புதுவை மக்களின் ஒன்றுபட்ட இந்தக் கோரிக்கைக்கு எதிராக யாரும் பேச மாட்டார்கள்.  சொல்லப் போனால் புதுவையின் தனித் தன்மையை பாதுக்காப்போம் என்று உறுதி மொழி வேறு கொடுப்பார்கள்.

இந்த சமயத்தில் தான் எங்கள் தொலைத் தொடர்புத் துறையின் தமிழக வட்டத்தில்  சில மாறுதல்கள் ஏற்பட்டன.   இதுகாறும்  சேலம் தொலைதொடர்பு  வட்டத்தில் இருந்த பவானி  என்ற ஊர்  கோவை வட்டத்தோடு சேர்ந்தது.   இந்த மாற்றத்தை உபயோகப்படுத்திக் கொண்டு பவானிக்கு விருப்ப மாற்றலுக்காக நான் விண்ணப்பித்திருந்தது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பவானி அழகான ஊர்..   நான் தபால் அலுவலகத்தில் பணியாற்றிய குமார பாளையம்  பவானிக்கு பக்கத்து ஊர் தான்.  இரண்டு ஊர்களையும் இணைப்பது காவிரிப் பாலம் தான். 

பவானியில் பணியாற்றும் காலத்தில் இந்தி எதிர்ப்பின் தீவிரம் மேலோங்கிய காலம்.   அந்நாட்களில் ஜெயகாந்தன் பவானிக்கு வந்திருந்தார்.  காங்கிரஸ் மேடையில் கர்ஜித்தார்.  அவர் பேச்சு முழுக்க முழுக்க தனி மனித உரிமையில் தடையிடல் சம்பந்தப்பட்டு அமைந்திருந்தது.    கூட்டம் முடிந்ததும் அவர் தங்கியிருந்த  ஓட்டலில் அவரது வாசகர்கள் கூட்டத்தோடு கூட்டமாக சந்தித்தேன்.

இதெல்லாம் நடந்து முடிந்து கிட்டத்தட்ட 54 ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழகத்தில்  இந்தி மொழி  எதிர்ப்புக்கான காரணங்கள் உயிர்ப்புடன் இருப்பது தான் இன்னொரு ஆச்சரியம்.

வட இந்திய மக்களின் சில ஆங்கில உச்சரிப்புகள் அபத்தமானவை.  -- sion  -- tion  என்று முடியும் வார்த்தைகளை விநோதமாக உச்சரிப்பார்கள்.

தெற்கில் ஆங்கிலம் வளர்ந்த அளவுக்கு வடக்கே இல்லை.  அதனால் தான் இந்திக்கு அபரிதமான வளர்ச்சி அங்கே.  இங்கே தமிழின் வளர்ச்சியை ஆங்கிலம் சாப்பிட்டு விட்டது.   தமிழை ஓரங்கட்டி விட்டு ஆங்கிலத்தால் வாழ்க்கையை வளப்பமாக்கிக் கொண்டோம்.  ஆங்கில மொழித் தேர்ச்சியில் தனிமனிதனுக்கு  லாபங்கள் எக்கச் சக்கம் தான்.  ஆனால் அந்த லாபங்கள் தாய் மொழி வளர்ச்சிக்கு அன்னியப்பட்ட லாபங்கள் என்ற உணர்வு மட்டும் நமக்கு இல்லாது போயிற்று.

அடிக்கடி தில்லி போக வேண்டியிருக்கிறதே என்று அரசியல்வாதிகளும் இந்தியைக் கற்றுத் தேர்ந்தார்கள்.  ஒரே கட்சியில் கூட  இந்தி கற்றவருக்கும் கற்காதவருக்கும் இடையே பாலமாக துபாஷி வேலை பார்க்க இந்தி உதவிற்று.  தில்லி வாழ் மாற்றுக் கட்சிகாரர்களுடனான சொந்த லாபத்திற்கான நட்பு இறுக இந்தி கற்றது துணையாக இருந்தது.

அதனால் ஒன்று தெரிந்தது.   அவசியம் உள்ளோருக்கு தெரியாத எந்த  மொழியையும் கற்பதில் எந்தவிதத்தில் பார்த்தாலும் ஏதாவது ஒரு லாபமே  தவிர  இழப்பு ஏதுமில்லை என்று தெரிகிறது..    அதுமட்டுமில்லை..  இன்னொரு மொழியைக் கற்பதால்   தாய்மொழித் தமிழுக்கு எந்த ஏற்றமோ அன்றி  ஏற்றமின்மையோ ஏற்பட்டு விடவில்லை என்பது தெரிகிறது.. அது பாட்டுக்க அது,  இது பாட்டுக்க இது   என்று ஒன்றுக்கொன்று இணைப்பில்லாத இரு கோடுகள் தத்துவம் இதுவாயிற்று.

கன்னடம், தெலுங்கு, மலையாளம்  போன்ற மொழிவழிப் பிரிந்த மாநிலங்களுக்கும் நம்மைப் போலவான  தாய் மொழிப் பற்று இல்லை என்று சொல்லி விட முடியாது..     மலையாளத்தில் இலக்கியம்  அந்த மக்களின் இலக்கியம்.   எளிய  மக்களின் வாழ்க்கை முறை தான்   அங்கே  இலக்கியம் என்ற பெயரைச் சூட்டிக் கொண்டிருக்கிறது..   இங்கே  எப்படி என்று உங்களுக்கே தெரியும்.

எல்லா பிராந்திய மொழிகளும்  வளரும் வரை  இந்த அகண்ட பாரதத்தின் தொடர்பு மொழி ஆங்கிலமாகவே இருக்க வேண்டும் என்று  அந்நாளைய பிரதமர் நேருவிடம் உறுதி மொழி வாங்கி   நெஞ்சை  நிமிர்த்தியது நாம் தான்.  பண்டித நேருவையே பணிய வைத்தோம் என்று எக்காளமிட்டோம்.

இந்தியை எதிர்க்க வில்லை,  இந்தித் திணிப்பைத் தான் எதிர்த்தோம் என்று பூசி மெழுகினதால் விளைந்தது ஏதுமில்லை.   அன்று  இந்தி இன்று சமஸ்கிருதம் என்று வேறொன்றுக்குத் தாவி இருக்கிறோம்.  அவ்வளவு தான்.  எதையாவது எதிர்க்கொண்டிருக்க வேண்டியது நமது தேவையாகி விட்டது.  பக்கத்து மாநிலக் காரர்களோ நோகாமல்  ஏற்றமிகு  வாழ்க்கைக்கு தங்களின் ஆற்றலையே ஏணிப்படிகள் ஆக்கியிருக்கிறார்கள்.

பெற்ற அந்த உறுதிமொழியால் விளைந்த பலன் என்னவென்று கணக்குப் பார்க்க மட்டும் நாம் தயங்குவோம்.  ஏனென்றால் ஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலத்திலேயே ஆங்கிலத்தை   அவனை விட அழகாகப் பேசியது நாம் தான்.  ஆதியிலிருந்து ஆங்கிலேயரின் நடை, உடை,  பாவனை, நாகரிகம் என்று மோகித்து  ஆங்கிலம் அறியாத பாமர மக்களை சுரண்டிக் கொழுத்தது  நாம் தான்.  ஆங்கிலத்திலேயே யோசித்தால் தான் நம் யோசனைகளே செயல்படும் என்ற அளவுக்கு மழுங்கிப் போனவர்கள் நாம்.

இத்தனை காலம் இந்தி தெரியாமலேயே  வாழ்ந்தாயிற்று..  பாக்கி காலமும் அப்படியே தெரியாமல் வாழ்ந்தால்  போச்சு.


(வளரும்)

Thursday, July 11, 2019

வசந்த கால நினைவலைகள்

                                    40

புதுவையில் வசித்த காலத்தில் மறக்க முடியாமல் மனதில் தடம் பதித்த நினைவுகள் பல.  அவற்றில் இது தலையாயது.

புதுவை பெருமாள் கோயில் தெருவில் நுழைந்தாலே புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் நினைவு வரும்.  அந்தத்  தெருவில் 95 இலக்கமுள்ள வீடு அவரது.

தன் சுயத்தை  மதிப்பவர் பிறரது சுயத்தையும் தவறாது மதிப்பர் என்பது ஜெயகாந்தன் அவர்களின் வாக்கு.  பிறர் சுயத்தை மதிக்காதவர்கள் சுயமரியாதைக்காரர்களாய் இருப்பதற்கு  அருகதை அற்றவர்கள் என்று இதற்கு அர்த்தம்.

பிறரை மதிக்கும் அந்த சிறந்த குணத்திற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தவர் புரட்சிக் கவிஞர்.  தன் மனத்திற்கு ஏற்புடையதை  ஏற்றுக் கொண்டாரேயானால் அந்தக் கொள்கையில் பிறழாது ஒழுகுபவர்.  அவர் பூண்டிருந்த புனைப்பெயர் கூட  பலரின் கண்களை உறுத்தியது. பாரதி எவ்வளவு தான் சமநீதி சமுதாயத்திற்காக கனவு கண்டாலும் அவரைப் பிறப்பின் அடிப்படையில் பிரித்துப்  பார்த்தது  நீதிக்கட்சி வழிவந்த திராவிட இயக்கம்.   'பார்ப்பான் ஒருவனுக்கு தாசனாக பெயரைக் கொண்டிருக்கிறீர்களே! நியாயமா?' என்று முகம் சுளித்தவர்கள், ஏகடி பேசியவர்கள் நாணுகிற அளவிற்கு அவர்களைச் சாடியிருக்கிறார் பாரதிதாசன்.  "யாரைச் சொல்கிறீர்கள் என்று தெரிந்து  பேசுங்கள்..    நீடு துயில்    நீக்க பாடி வந்த நிலா!   காடு கமழும் கற்பூரச் சொற்கோ!    கற்பனை ஊற்றாம் கதையின்  புதையல்!   திறம் பாட வந்த மறவன்!  அறம் பாட வந்த   அறிஞன்! நாட்டில் படறும் சாதிப்
படைக்கு மருந்து!  மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்! அயலார் நெருப்பிற்கணையா விளக்கவன்!  என்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன்!  தமிழால்,  பாரதி தகுதி பெற்றதும்,  தமிழ் பாரதியால் தகுதி  பெற்றதும் எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்.." என்று அறியா மனிதருக்குப் பாடம் படிப்பது போல தன் பாவால் படம் பிடித்துக் காட்டுகிறார்.  'ஒரு சாராரின் எதிர்ப்பு  இன்று வரை நீங்கியதில்லை;  இதற்காக நான் அஞ்சியதும் இல்லை.   அஞ்சப்போவதும் இல்லை;  பாரதி  பற்றிப் பேச எனக்குத் தான் தெரியும்..  அவரைப் பற்றிப்  பேச என்னை விட தகுதி இந்த நாட்டில் எவனுக்கும் இல்லை.. "  என்று   அடித்துப் பேசுகிறார்..    நெருங்கிய வட்டாரத்தின் முகச்சுளிப்பிற்காக அனுபவ பூர்வமாக தான் ஏற்றுக்கொண்ட நியாயங்களை அவர் மாற்றிக்  கொண்டதில்லை.  அதில் அவருக்கு எஃகு போன்ற உறுதி  இருந்தது.

திருச்சியிலிருந்து வெளிவந்த  சிவாஜி பத்திரிகையின் ஆசிரியர்  திருலோக சீதாராம் பாரதியாரின் இறப்பிற்குப்  பிறகு பாரதியாரின் குடும்பத்திற்கு பெரும் ஆறுதலாக இருந்து  பல உதவிகள் செய்தவர்.  பாரதி, பாரதிதாசன் இந்த இரண்டு பெயர்களுக்கும் பாலமாக தன்னை அமைத்துக் கொண்டு இவர்கள் இருவரின் கவிதாலோகத்தில் சஞ்சரிப்பதில் தன் மனத்தைப் பறிகொடுத்தவர்  இந்த பிராமணர்.  சிவாஜி பத்திரிகைக்காக பாரதிதாசனின் கவிதைகளை வேண்டிப் பெற்று பிரசுரித்திருக்கிறார்.   புத்தக வெளியீட்டாராய்  இருந்திருக்கிறார்.  தனது பிசிறில்லாத  மெல்லிய குரலில் இவர்களின் கவிதைகளைப் பொது மேடையில் பாடிக் களித்திருக்கிறார்.  இத்தனை
நிலைகளிலும் தானும் ஒரு வரகவியாய்  பாடலியற்றும் பாங்கு பெற்றவன் என்பதையும் மறந்திருக்கிறார்..  தன்னைப் பின்னுக்குத் தள்ளி பிறரை முன்னிலைப் படுத்தும் அரிதான பெருமைக்குரிய பொற்குணத்திற்கு சொந்தக்காரர் திருலோக சீதாராம். 

பாரதியாரின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த  பாரதிதாசனுக்காகவே தனது சிவாஜி பத்திரிகை  மூலமாக நிதி திரட்டினார்.  இந்த மாதிரியான பாரதிதாசனின்  பாட்டுத் திறத்தில் பிரேமை  கொண்டவர்கள் திரட்டிய நிதியை பொற்கிழியாய் பாரதிதாசனுக்கு வழங்க ஒரு பொதுகூட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது..  அந்த நிதியைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் பாரதிதாசனாரின் குயில் பத்திரிகை.

நடிகர் திலகத்தை நாயகனாகக் கொண்டு தனது 'பாண்டியன்  பரிசை' திரைப்படமாக்க வேண்டும் என்கிற கனவு பாரதிதாசனுக்கு இருந்தது.  அதன் தொடர்பான நடவடிக்கைகளுக்காக என்றே புதுவை நீங்கி சென்னைக்கு குடிபெயர்ந்தார்.  இது 1961 ஆண்டு வாக்கில் என்று நினைவு.  நான் புதுவைக்குச் சென்றதே 1963-ம் ஆண்டு பிற்பகுதியில்..   புதுவை கடற்கரைச் சாலையில் அவரை ஒரே ஒரு முறை நேரில் பார்த்திருக்கிறேன்.


அவர் சென்னை சென்றதைத் தொடர்ந்து புதுவையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த அவரது 'குயில்' கவிதை ஏடும் சென்னையிலிருந்து வெளிவரத் துவங்கியது.  ஒரு பக்கம்
பாண்டியன் பரிசுக்கான  வேலைகள் நடந்து  கொண்டிருக்கையிலேயே தனது குருவின்  மீதான அன்பில்  பாரதியாரின் வாழ்க்கையையும் திரைப்படமாக்க வேண்டும் என்கிற முயற்சிகளிலும்  பாரதிதாசன்   ஈடுபாடு கொண்டிருந்தார்.

1964-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி.   அன்று    தொலைபேசி  நிலையத்தில்  மதியம் 1330-யிலிருந்து இரவு 2100 மணி வரை எனக்குப் பணிக்காலம்.  அந்த   நேரத்தில் தான் பாரதிதாசன் அவர்கள் சென்னை  பொது மருத்துவ மனையில் காலமாகிவிட்டார் என்று கலங்க வைக்கும் அந்தச் செய்தி தெரியவந்தது. அவர் புகழுடல் புதுவைக்கு கண்ணதாசனின் காரில் வருவதாகத் தகவல். இரவு ஒன்பது மணிக்கு அலுவலகப் பணி முடிந்ததும் நேரே பெருமாள் கோயில் தெருவிற்கு நானும் என் அருமை நண்பர் அ.க.பெருமாள் அவர்களும் மிகுந்த சோகத்துடன்  விரைந்தோம்.

சின்ன மரத்தூண்கள் பொருத்திய அகல வாசல் கொண்டு உள்ளடங்கிய வீடு. உள்பக்க பெரிய ஹாலில் வீறுகொண்ட கவிஞரின் பூத உடல்  கிடத்தப் பட்டிருந்தது.   கருப்பு-சிவப்பு சின்னகட்டங்கள் போட்ட பட்டுப் போர்வை போர்த்தியிருந்தார்கள். புரட்சிக் கவிஞருக்கே தனித்த ஒரு அடையாளமாக அமைந்திருந்த சின்ன அடர்த்தியான மீசைக்கிடையே புன்முறுவலுடனான
அவர் முகம் மனசைப் பிசைந்தது.   சிம்ஹம் போன்ற துடிப்பு கொண்ட அடலேறு ரோஜாப்பூ மாலைகள் சூட்டப்பெற்று அமைதியாக அப்படி இருந்தது அவரது இயல்புக்கு மாறான ஒரு செயலாய் மனசைக் குடைந்தது.  ஏற்றி வைக்கப்பட்டிருந்த ஓரிரு குத்து விளக்குகள். தலைமாட்டிற்கு பின்புறச் சுவரின் உயரத்தில் புரட்சிக் கவிஞர் ஏட்டில் பேனா பிடித்து எழுதுகிற தோற்றத்தில் ஓரளவு பெரிய  புகைப்படம்.

அந்த இரவு நேரத்தில் நீண்ட அந்த ஹாலில் எங்களைச் சேர்த்து எட்டு அல்லது ஒன்பது பேர் இருந்திருப்போம்.   இருவர் கைத்தாங்கலாக அழைத்து வர தடியூன்றிய  ஒரு பெரியவர் உள்பக்கம் வந்ததும்  "வாங்கய்யா, வாங்க...  வாத்தியார் ஐயா வந்திட்டாரான்னு கேப்பீங்களே!  இதோ இருக்காரய்யா.." என்று பெருங்குரல்அழுகை கொண்டு பெண்கள் பக்கமிருந்து துக்கம் பொங்கியது.

மனம்  கனத்துப் போனது.  நானும் நண்பர் பெருமாளும் புரட்சிக் கவிஞரின் காலடிப் பக்கம் அமர்ந்து கொண்டோம்.  'துன்பம்  நேர்கையில் யாழெடுத்து நீ...' என்கிற கவிஞரின் பாடல் எனக்கு மட்டும் கேட்கிற மாதிரி நெஞ்சுக்கூட்டை நிரப்புகிற வரிகளாய் எனக்குள் பீறிட்டது.   ஏதேதோ நினைவுகளில் மனம் துவண்டு தத்தளித்தது.  கண் நீரை கட்டுப்படுத்த முடியாமல் கவிஞருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு மெதுவாக எழுந்திருந்து வெளி வந்தோம்.

காலணிகளை மாட்டிக் கொண்டு கிளம்புகையில் வெளிச்சுவர் பக்கம் நிமிர்ந்து பார்த்தேன்.   பித்தளைத் தகட்டினால் வேய்ந்த பெயர்ப் பலகை கண்ணில் பட்டது.  அந்தப் பெயர்ப் பலகையில்  பாரதிதாசன்  என்று ஆங்கிலத்தில் எழுதப் பெற்று  IN  -- OUT   குமிழ்கள் தென்பட்டன.   புரட்சிக்கவிஞர் அவர்கள் சென்னையில் இருந்ததினால் போலும்,  பித்தளைக் குமிழின் 'IN' மறைக்கப்பட்டு  OUT- தெரிவதாய் இருந்தது. அதைப் பார்த்ததும் மனம் வேதனையில் துவண்டு, சடாரென்று  மனசில் முகிழ்த்த எண்ணமாய், பெயர்ப்பலகையின் குமிழை நகர்த்தி 'OUT'-ஐ  மறைத்து ' IN'  தெரிகிற மாதிரி மாற்றி வைத்தேன்.    ஆம்!  சாகா வரம் பெற்ற கவிஞர் அவர்களின்  'அழகின் சிரிப்பு'ம், 'குடும்ப விளக்கு'ம், 'குறிஞ்சித் திட்டு'ம், 'பாண்டியன் பரிசு'ம்  இன்ன பிற படைப்புகளும் நம்மிடையே இருக்கையில் என்றென்றும் அவர் நம்மிடையே இருந்து கொண்டு தான் இருக்கிறார்'  என்று நினைப்பு நெஞ்சில் அலையாய் புரண்டது.

அந்த வார குமுதம் இதழில் இந்த என் நினைவுகளை  பதிவும் செய்திருந்தேன்.

அடுத்த நாள் புரட்சிக் கவிஞருக்கு அஞ்சலி செலுத்த பெருங்கடல் பொங்கி வந்தால் போல் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் புதுவை  திணறியது. திரைப்படத் துறை சார்ந்தவர்கள் நிறைய வந்திருந்தார்கள்.

பிற்காலத்தில் 'கடைசி வரை யாரோ?' என்று பாடல் எழுதிய கவியரசர் கடைசி வரை நடந்தே வந்தார்.    ஹவாய் செப்பல் என்று  சொல்வார்களே, அந்த மாதிரி யான அவர் அணிந்திருந்த காலணியின் வார் வழியில் அறுந்து விட்டது.  உடனே கவியரசர்  ஓரமாய் போய் தனது இரண்டு  காலணிகளையும் கழற்றிப் போட்டு விட்டு வெறுங்காலுடன் நடக்க ஆரம்பித்தார்.   யாரோ சற்று தூரத்தில் முன்னால் சென்று   கொண்டிருந்த காரில் ஏறிக் கொள்ள   வற்புறுத்தியும் கேட்காமல் நடந்தே வந்தார்.   இவ்வளவுக்கும் பாரதிதாசனின் புகழ் உடலைச் சுமந்து கொண்டு புதுவைக்கு  வந்தது கண்ணதாசன் ஏற்பாடு  செய்திருந்த வேன்  தான்!

நமது தமிழ் பத்திரிகைகளுக்கு என்று சில கொனஷ்டையான குணங்கள் உண்டு.   அந்த நேரத்தில் கண்ணதாசன் திராவிட கட்சிகளோடு மாறுபட்ட கருத்துக்கள் கொண்டு தமிழ் தேசிய கட்சியோடு  இணைந்திருந்தார்.  அதனால்  அடுத்த நாள் செய்திதாட்களில்  பாரதிதாசன்  காலமான செய்தித் தொகுப்பில்  பாரதிதாசன் காலமானதால் கண்ணதாசனுக்கு இரு செருப்புகள் இழப்பு' என்ற தலைப்பிட்டு  ஒரு துண்டுச் செய்தி வெளிவந்தது.

சென்னை தலைமை அரசு மருத்துவமனையில் தான் பாரதிதாசன் காலமானார்.  அவர் உடலை புதுவைக்கு எடுத்துச் செல்ல  வாகனம் தேவைப் பட்ட பொழுது  சிலர் தயங்கினர்.  இந்தச்  செய்தி கண்ணதாசனுக்குத் தெரிந்து   உடனே அதற்கான ஏற்பாடுகள் செய்த அவரின் அருங்குணம் தெரியாது தன்  சொந்த  காழ்ப்புணர்வை   கேலியாய் கிண்டலாய்  செய்தியாக  அந்தப் பத்திரிகை வெளியிட்டுத் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டது.


(வளரும்)
Related Posts with Thumbnails