மின் நூல்

Tuesday, April 20, 2021

மொழி

                                                                    11

ன்றைக்குமே உலகம், உலக மக்களின் பண்பாடு, அவர்களின்செயல்பாடுகள் என்பவை தனித்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கருதலாம்.    எக்காலத்தும் மனிதன் தனித் தீவல்ல.  அந்தத் தொன்மை  காலத்தும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்பதே நியதி.  உலகின் மற்ற நிலப்பகுதி வாழ் மக்களிடமிருந்து  தமிழன் மட்டும் வேறுபட்டுத் தனித்திருந்தான் என்று கொள்வது  வரலாற்று ரீதியான பிழை என்று கொண்டால் கி.மு. எட்டாம்  நூற்றாண்டிற்கான உலக அளவிலான தொன்மை நாகரிகச் சிறப்புகளை அலச வேண்டியது கட்டாயமாகிறது.


இப்போதைக்கு நாம் ஆய்வில் எடுத்துக் கொள்ள வேண்டிய கால கட்டம்  தலைச்சங்க, இடைச்சங்க காலம்  மட்டுமே.  தொன்மையான இந்த காலத்துக்கான வரலாற்று சான்றுகளில் தான் பல்வேறுவிதமான மாறுபட்ட கருத்துக்களை வரலாற்று ஆய்வாளர்கள் கொண்டுள்ளார்கள்.

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு அளவில் பார்த்தாலே ஹரியங்கா வம்சத்தைச் சேர்ந்த அஜாதசத்ரு கங்கைக் கரையில் பாடலிபுத்திரம் என்ற பெருநகரை நிர்மாணிக்கிறான். நந்த வம்சத்தின் கடைசி மன்னனான தன நந்தனுக்கும் அர்த்த சாஸ்திர புகழ் கெளடில்யர் என்னும் அந்தணருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவாக கெளடில்யர் சந்திரகுப்தன் துணையுடன் நடத்திய புரட்சியின் விளைவு மெளரிய பேரரசுக்கு வித்திடுகிறது.  பாடலிபுத்திரம் மெளரிய ஆட்சியின் தலைநகராகிறது.  இது நடந்தது கி.மு. 322 ஆண்டில்.

கிரேக்க மாமன்னன் அலெக்ஸாந்தரின் படைத்தளபதி செலுக்கஸ் நிகோடர் சிந்து ஆற்று சமவெளி வரை படையெடுத்து வந்த பொழுது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள்  சந்திரகுப்தனுடன் நடந்த போரின் விளைவாக இரு பகுதியினருக்கும் ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது.  இந்த உடன்படிக்கையின்படி ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான், பஞ்சாபின் சில பகுதிகள் மெளரிய பேரரசுடன் இணைக்கப்பட்டன.  ஒரு நல்லிணக்க நட்பின் அடையாளமாக செ.நிகோடரின் மகள் ஹெலனாவை சந்திர குப்தர் மணம் முடித்தார்.  செலுக்கஸ் நிகோடரின் தூதுவராக மெகஸ்தனிஸ் மெளரிய பேரரசின் அரசவையை அலங்கரித்தார்.  மெகஸ்தனிஸின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நூலான  இண்டிகாவும்,  கெளடில்யரின் அர்த்தசாத்திரமும் சந்திரகுப்தரின் ஆட்சி சிறப்பை நமக்கு தெரியப்படுத்தும் வரலாற்று ஆவணங்களாயின.  அலெக்ஸாந்தரின் படையெடுப்பின்  மிகச் சிறந்த விளவுகளில் ஒன்று கிரேக்க செலுக்கசிய மரபினர் வழிவந்த கலப்புத் திருமணங்களாகும்.

சந்திரகுப்த மெளரியரின் திருமகனார் பிந்துசாரர் சந்திர குப்தருக்கும், ஹெலனாவிற்கும் பிறந்தவராவார்.  சந்திர குப்தனின் பேரன் அசோகன் கி.மு. 273-ல் ஆட்சிக்கு வந்திருக்கிறார்.  இவர் பிந்துசாரருக்கும் அவர் மனைவி சுமத்திராங்கிக்கும் பிறந்தவர்.  இந்திய துணைக்கண்டத்தின் தமிழக, கேரளப் பகுதியைத் தவிர்த்து கிட்டதட்ட மொத்த இந்திய நிலப்பரப்பும் மெளரிய பேரரசின் ஆட்சிக் குடைக்கீழ் வந்த காலம் இது.

பேரரசர் அசோகர் எதிர்கொண்ட முதல் போரும் முடிவுப் போரும் கலிங்கப் போரே.  கங்கை ஆற்றிலிருந்து கோதாவரி ஆறு வரை விரிந்து கிடந்த பரந்த  பூமி கலிங்கம்.  இந்தப் பகுதியின் வித்தியாசமான சிறப்பு சுதந்திர வேட்கை  கொண்ட பழங்குடிகளின் வாழும் பூமியாக இருந்தது.  இன்றைய  ஒரிஸாவின் தயா ஆற்றங்கரையில் ஒன்றுபட்ட பழங்குடியினர் மிகத் துணிசலுடன் ஒரு பேரரசின் பிர்மாண்ட படையை எதிர் கொண்டனர். பல்லாயிரக் கணக்கான எளிய மக்களை காவு வாங்கிய ரத்த ஆறு ஓடிய வன்மப் போர் இது.  கி.மு. 261 காலகட்டத்தில் நிகழ்ந்த கலிங்கப் போரின் துயரம் அசோகரின் மனமாற்றத்திற்குக் காரணமாக இருந்து  எல்லா உயிர்களின் மேலுமான அன்பே மனிதகுலத்தின் ஆன்ம ஞானத்திற்கு வழிகாட்டல் என்ற கோட்பாட்டை சொந்த அனுபவத்தில் ஏற்றுஅசோகர் புத்தமதத்தைத் தழுவுகிறார்.  தன் மகன் மகேந்திரனையும்,  மகள் சங்கமித்திரையையும் புத்த மதம் பரப்பும் ஞானத் தூதுவர்களாக  இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார்.

தென் இலங்கையில் ஜம்புகோளப்பட்டினம் என்ற கடல் சார்ந்த இடம்.  இன்றைய சம்புத்துறை இதுவே.  இங்கே தான் சங்கமித்திரை தன் சகோதரன் மகேந்திரனுடன் ஒரு வெள்ளரசு மரக்கிளையுடன் வந்து சேர்கிறார்கள்.  அசோகனே இந்தக் மரக்கிளையுடன் தன் மக்களை இலங்கைக்கு அனுப்பி  வைத்ததாக  பெளத்த வரலாற்று நூலான மகாவம்சத்தில் குறிப்புகள் காணக்  கிடைக்கின்றன.

கர்னாடகம் வரை அசோகரின் சாம்ராஜ்யம் விரிந்து பரந்து கிடந்தது.  இலங்கைக்கு தன் மக்களை புத்த மதத்தைப் பரப்பும் நோக்கோடு  அனுப்பும் அளவுக்கு இலங்கையின் அக்கால சூழல்களோடு அசோகருக்குத் தொடர்பு இருந்திருக்கிறது.  இடையில் இருந்த அந்நாளைய தென் தமிழக நிலப்பரப்பில் அசோகரின் செல்வாக்கின் நிலை என்ன என்பது தான் வரலாற்றின் பக்கங்களில் நாம் தேட வேண்டிய சேதி.

கிட்டத்தட்ட இந்தக் காலம் தான் தமிழ் கூறு நல்லுலகில் தலை, இடை சங்கங்கள் இருந்த காலம்.

அசோகரைப் பற்றி ஏகப்பட்ட குறிப்புகள் சரித்திர பாடங்களில் நான் வாசித்த 1950 பள்ளிப்பருவ காலகட்டங்களிலேயே உண்டு.  அந்த அளவுக்கு சங்க காலங்களைப் பற்றிய தகவல்கள் இருந்ததா என்றால் வருத்தத்துடன் இல்லை என்றே சொல்ல வேண்டும்.  அன்றில்லை, இன்றாவது இருக்கிறதா என்றால் தெரியவில்லை.  அது போகட்டும். அதை விட மெத்தனப்போக்கு என்னவென்றால் மெத்தப் படித்த தமிழ் அறிஞர்களே  முதல், இடை சங்கங்கள்  இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே  கூறுகின்றனர்.  அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் வேடிக்கையானவை. அல்லது மேலோட்டமானவை.   

அவர்களை போல அல்லாமல்,  தமிழின் முதல், இடைச் சங்க காலத்தைப் பற்றி தீர்க்கமாகவே நாம் பார்ப்போம்.

================================================

"அரசனின் மகிழ்ச்சி அவனது குடிமக்களின் மகிழ்ச்சியில் உள்ளடக்கியுள்ளது..  அவனது நலம் அவர்களின் நலத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. அவன் தனக்குத் திருப்தியளிக்கக் கூடிய ஒன்றை மட்டும் நல்லதென்று கருதக் கூடாது.  குடிமக்களுக்கு எது நலனாகவும் அவர்களின் 
திருப்தியாகவும் இருக்கக்கூடுமோ அதுவே தனக்கான திருப்தியாகவும் நலனாகவும் அவன் கொள்ள வேண்டும்.

---  கெளடில்யர்.
================================================

(வளரும்)
 

Saturday, March 27, 2021

மொழி

                                                        10


மஸ்கிருதம் தேவ மொழியென்றால்  அமிழ்தத் தமிழ் தெய்வ மொழி என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

பண்டைய தமிழன் தெய்வத்தைத் துதித்துப் பாடாதிருந்ததில்லை.  சங்க காலத்தில் தெய்வத்தின் வழிபாடாகவே வண்ண வண்ண மலர்களாய் அர்ச்சிக்கப்பட்ட பாடல்கள்..  'சங்க காலத்தோடு  மட்டும் சொந்தம் கொண்டாடுவோம், சங்க காலத்து தமிழரின் தெய்வ வழிபாட்டை கண்டுக்க மாட்டோம்' என்பது காலத்தின் நிர்பந்தம் போலாயிற்று.  

'மாயோன் மேய  காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும் 
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே'  --  என்றும்


பாலை நில கொற்றவை வழிபாடு குறித்து---

'மறம் கடை கூட்டிய துடி நிலை. சிறந்த
கொற்றவை நிலையும் அகத்திணை புறனே'  

              (--  தொல். பொருளதிகார புறத்திணையியல்)

என்றும்,  வாழ்ந்த ஐவகை நில அமைப்புகளுக்கு ஏற்ப மாயோன், சேயோன், இந்திரன், வருணன், துர்க்கை  என்று திணைநிலைத் தெய்வங்களை வழிபடும் வழக்கமிருந்திருக்கிறது என்பதற்கு ஆதார பூர்வமான எடுத்துக் காட்டுகள் இருக்கின்றன.

கொடி நிலைக் கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன  மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே

                (தொல். புறத்திணைவியல்: 85)

கடந்து நிற்பவர் என்ற பொருளில் கடவுள் என்ற சொல் தொல்காப்பியத்திலேயே எடுத்தாளப்படுகிறது.  'தெய்வம் தான் தமிழரின் வழிபாடே தவிர கடவுள் இல்லை' என்று  கடவுள் - தெய்வம் வார்த்தைகளையே வித்தியாசப்படுத்திய பெருங்கவிஞர் ஒருவரின் உரையைக்  கேட்ட நேரத்து திகைப்பாய் இருந்தது,   'எம்மிடம் தயிர் தான் இருக்கிறது;  மோர் இல்லை'  என்கிற மாதிரியாக இது எனக்குத் தோன்றியது. ஏதோ தயிருக்கும் மோருக்கும் அவரளவில் வித்தியாசம் காணுகிறார் என்று நினைத்துக் கொண்டேன்.  மேற்கண்ட  தொல்காப்பிய நூற்பா இப்பொழுது தெரிய வந்து, இதோ கடவுளும் தொல்காப்பிய காலத்தில் இருக்கிறரே என்று குஷியாயிற்று.   

கடவுள், தெய்வம் எல்லாம் ஒன்று என்று தானே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்?..  இல்லை என்பது சில தமிழ்ப் பேரறிவாளர்களின் கருத்து.  எல்லாம் வார்த்தைகளுக்குக் கொள்ளும் பொருள் சம்பந்தப்பட்ட  விளையாட்டுகள் தான்.   

'இயற்கையை தெய்வமாக வணங்கியவன் தமிழன்;  தீயைத் தெய்வமாகப் போற்றியது ஆரியம்' என்று ஆறு வித்தியாசம்  காணுகிற மாதிரி என்னன்னவோ மயக்கங்கள்.  தீ,  இயற்கையின் வெளிப்பாடு இல்லையா, என்றால் அதெப்படி என்று ஆயிரத்தெட்டு வக்கணைகள்.

'கொடி நிலைக் கந்தழி வள்ளி என்ற'

கொடிநிலை என்றால் கதிரவன்  (சூரியக் கடவுள்).   'ஆதித்யானாம் அஹம்  விஷ்ணு' என்பது பகவத்கீதையில் கண்ணபிரான் வாக்கு. 'நானே சூரியனாய்த் திகழ்கிறேன்' என்று இதற்குப் பொருள்.   தமிழகத்தில் சூரியக் கடவுள் கோயில் கொண்டுள்ள குடந்தைக்கு அருகிலுள்ள  தலம் சூரியனார் கோயில் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது.  சிலப்பதிகாரத்திலோ  உச்சிக் கிழான்  கோட்டம் என்ற பெயர் சூரியனுக்கான கோயிலைச் சுட்டுகிறது.   இன்றைய  ஒடிசா மாநிலத்தில் கொனார்க்கில் அமைந்துள்ள சூரியனார் கோயில் பற்றி நாம் அறிவோம்.

தன் ஈர்ப்பு சக்தியால் அத்தனைக் கோள்களையும் ஆகர்ஷித்துப் பின்னிப் பிணைந்திருக்கும் நிலை 'கொடிநிலை'யாகி அதுவே காரணப் பெயராயிற்று.

தண்கதிரை வாரிவழங்கி இராக்காலங்களில் பயிரைக் காத்து அருளுவதால் திங்கள் (சந்திரன்) வள்ளியாயிற்று.

கந்தழி என்றால்  நெருப்பு  (அக்னி).  நெருப்பு, தீ என்றால் உடன்பாடாகத் தெரிவது அக்னி என்றவுடனேயே முகச்சுளிப்பாகி விடுவதற்கு காரணம் இருக்கிறது.  உண்மை  என்பது உணர்வாக இருப்பினும்  சமஸ்கிருதம் என்றால் ஒரு தயக்கத்துக்கு பிறகே ஏற்றுக்கொள்ள மனதில் சம்மதம் கிடைக்கிறது.  இந்த சம்மதம் கிடைக்காததாலேயே  கடலில் மூழ்கிய கடைச்சங்க காலத்திற்கு முந்தைய காலத்தை அப்படியான ஒரு பொற்காலம் இருந்ததே இல்லை என்று மறுக்க மனசைத் தயார்படுத்தியது.

ஞாயிறு,  தீ, திங்கள் ஆகிய மூன்றும் வடுநீங்கு  சிறப்பு கொண்ட தெய்வங்கள் என்பது தொல்காப்பியனார் வாக்கு.

பிற்காலத்தில் இதே நிலையை ஒட்டித் தான் 'வான் இனிமையுடைத்து,  தீ இனிது,  நீர் இனிது, நிலம் இனிது, என்ற  பாரதியாருக்கு தீக்குள் விரலை வைத்த  பொழுதும் நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் உணர்ந்து இறைவனுடனான
நெருக்கத்தின் சுகம் பெறும் பேறு பெற்றார்.

தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியோடு தொகைஇ
அவ்வகைப்  பிறவும் கருவென மொழிப

 (தொல்காப்பியம். பொருள். அகத்திணையியல். 18)


இந்நூற்பாவிலிருந்து  தொல்காப்பியர் காலத்து தெய்வம் என்பது வாழ்வின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது என்பதனை உணரலாம்.   மக்கள் வாழ்ந்த நிலம், அவரவர் தேவைகள் என்பவையின் அடிப்படையில் அவர்கள் தெய்வ வழிபாடு அமைந்திருக்கிறது.

(தொடரும்)
 

Monday, March 15, 2021

மொழி

                                                           9

ங்க இலக்கிய காலம் என்பது கி.மு. 500-லிருந்து கி.பி.200 வரை உள்ள காலப்பகுதியில் உருவான செவ்வியல் தமிழ் இலக்கிய படைப்புகளைக் குறிப்பிடும் கால கட்டமாகும்.  தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்  என்ற நம் வசதிக்காக மூன்றாகப் பிரித்த மன்றங்கள் வளர்த்த தமிழின் மேன்மையான காலம் இது.  

தலைச்சங்க காலத்தில்  சகோதரிகள் போல சமஸ்கிருதமும் தமிழும் ஒன்றாய் உறவாடிய மொழிகள் என்றும் அதற்கு ஆதாரங்களாய் தொல்காப்பிய அரங்கேற்றத்தில் அதங்கோட்டு ஆசானின் பங்கு, தொல்காப்பிய பாயிரம் சொல்லும் தகவல்கள் என்றெல்லாம்  பார்த்தோமில்லையா?

சமஸ்கிருத -- தமிழ் உறவுகளை சகிக்காத சிலர்  இந்த சரித்திர உண்மைகளை புறந்தள்ளும் முனைப்பில் தலையாவது, இடையாவது,   தமிழ்ச் சங்கம் என்று எதுவுமே இல்லை. எல்லாமே ஆதாரமற்ற கட்டுக்கதைகள் என்று தீர்மானமாக மறுத்தனர்.  அதற்கு அவர்கள் சொன்ன காரணம் வேடிக்கையானது.

சங்கம் என்ற வார்த்தை தமிழிலேயே இல்லையாம்.  சங்கம் என்ற வார்த்தையே தமிழில் இல்லாத பொழுது தமிழ்ச் சங்கம் என்ற பெயரில் எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று ஆகப்பெரிய கண்டுபிடிப்பாய் மனமறிந்த பொய்யை உண்மை போலச் சொல்லத் துணிந்தனர்.

அதற்கு ஆதாரமாய் தொல்காப்பியத்தையே துணைக்குக் கொண்டது தான் வேடிக்கை.   சங்கம் என்ற வார்த்தையின் முதல் எழுத்து,  'ச' என்ற எழுத்து இல்லையா?..  இந்த 'ச' முதல் எழுத்தாய் இருந்து தொடங்கும் சொற்களுக்கு சில வரையறைகள் உண்டு என்பதற்கு தொல்காப்பிய எடுத்துக்காட்டு ஒன்றையே ஆதாரமாகக் கொண்டனர்.

சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே
அ ஐ ஒள எனும்  மூன்றலங் கடையே
        
                                           (தொல்காப்பியம்  62)

அ ஐ ஒள என்னும் மூன்று எழுத்துகளோடு சேர்ந்து சகரம் முதலெழுத்தாக வராது.  (உதாரணம்: ச, சை, செள) இந்த மூன்றைத் தவிர்த்தப்  பிற ஒன்பது  உயிர்களுடன் சேர்ந்து முதலெழுத்தாய் வரும் என்பது கருத்து.

சகரக் கிளவி பற்றிய  தொல்காப்பியரின் இந்த நூற்பாவிற்கு 
உரையாக இளம்பூரணர் இரண்டு காரணங்களைச் சொல்வார்:

அ ஐ ஒள -- என்னும் மூன்று எழுத்துக்களோடு சேர்ந்து 'ச' என்ற எழுத்து முதலெழுத்தாக வருகின்ற சூழல்களில் அது சமஸ்கிருத எழுத்தின் பாதிப்பில் இருக்கும் என்பது இளம்பூரணர் கருத்து.  இரண்டாவதாக இன்னொன்றையும் சொல்கிறார் அவர்.  'கடி சொல் இல்லை, காலத்து படினே'  (சொல்லதிகாரம் - 56) என்ற வரியை எடுத்துக் காட்டாகச் சொல்லி அவ்விதிப்படி அவை அமையும்' என்கிறார்.  

நச்சினார்கினியர் கருத்தும் இதுவே.  சட்டி, சகடம் -- ஆகிய சொற்கள்  தமிழ்ச் சொற்களே என்று தன் காலத்து வழக்கில் இருக்கும் சொற்களையும் இவர் எடுத்துக் காட்டுகிறார்.

வட சொல் கிளவி வட எழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகுமே

                                              (தொல். சொல்லதிகாரம். 5)

என்பதும் தொல்காப்பியர் காட்டிய வழிதான்.

சமஸ்கிருத மொழியிலிருந்து வந்து தமிழில் வழங்கும் சொற்கள் வடசொல் என்று தொல்காப்பியரே இலக்கணம் வகுத்து,  சங்கம் என்ற சொல்லின் இருப்பிற்கு நியாயம் வழங்கியிருக்கையில்  முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல  தலைச்சங்கம், இடைச்சங்கம் இவையெல்லாம் இருந்ததே இல்லை, எல்லாம் நம் கற்பனை என்றால் எப்படி?..  அந்த இரண்டு சங்கமும்  கடற்கோளில் மூழ்கிப் போயிருக்கலாம்.  ஆனால் அந்த இரண்டு சங்கங்களிலும் படைக்கப்பட்ட இலக்கியங்கள், ஆகச்சிறந்த தொல்காப்பியம் இருக்கிறதே என்றால்...  இருக்கும் அந்த இலக்கியங்களின் தொன்மை குறித்து  கேள்வி எழுப்புவதில் கொண்டு போய் முடிக்கிறார்கள்.

ஆயிரம் இருந்தும் என்ன,  சங்கம் என்ற ஒன்று இருந்ததே இல்லை, அது முழுக் கற்பனை என்ற வாதததை முன் வைத்கும் அளவுக்கு சமஸ்கிருத ஒவ்வாமை கொண்டிருந்தது உறுத்தலாகத் தான் இருக்கிறது.

புறப்பொருள் வெண்பா மாலை என்றொரு நூல் உண்டு.  அந்த நூலில் தமிழ்க்குடியின் மூத்த வரலாற்றைக் கொஞ்சமே உயர்வு நவிற்சியுடன் குறிப்பிடும் பாடல் ஒன்றுண்டு.

பொய் அகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த வயங்கு ஒலி நீர்  --  கையகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே,  வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!

                  (பு.வெ. மாலை -- கரந்தைப் படலம்)

'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே,  வாளொடு முன் தோன்றிய மூத்த குடி இது'  என்ற குரல் ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்து அரசியல் மேடைகளில் ஒங்கி ஒலித்த குரல்...  

அந்தக் காலம் வேறே!  இந்தக் காலம் வேறே!  இந்தக் கால மாற்றத் கோளாறுகளையும் இந்தப் பாடலின் முதல் வரி படம் பிடித்துக் காட்டுவது இன்னும் அதிசயம்! ஆதித்தமிழ் மொழிக்கு புகழ்மிகு புலவர்கள் சூட்டிய கிரீடங்களான  சங்க இலக்கியக்களை பயிலாமலும்,  பயின்ற சிலரும் மறந்தே போவோம் என்று சூளுரைத்த மாதிரி மெளனம் பயில்வதும்  மனம் போன போக்கில் மாற்றி வரலாற்றை திசைதிருப்ப முயல்வதுமான காலம் இது!  

சங்க இலக்கியங்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு எழும்பிய தமிழ் மொழியின் இயல்பான வளர்ச்சி பிற்காலத்தில் எப்படியெல்லாம் மழுங்கடிக்கப் பட்டிருக்கிறது என்பதைத் துல்லியமாகப் பார்க்கலாம்.  

அகப்பொருளையும் இலக்கண வரையறைகளுக்கு உள்ளடக்கிய கி.பி. காலத்து நூலான இறையனார் அகப்பொருள் என்ற நூலுக்கு அக்காலத்துப் புலவரான நக்கீரர் என்பவர் எழுதிய உரையில் மூன்று சங்கங்கள் பற்றியும் குறிப்பிடப்படுகிறது.   

ஒரு பருந்துப் பார்வையில் சங்க காலம் பற்றிய அடிப்படை குறிப்புகளை நம் நினைவில் கொள்வோம்:

தலைச்சங்கம் கடல் கொண்ட தென்மதுரையில்செயல்பட்டது.  தலைச் சங்கத்தைத் தோற்றுவித்து பெருமை கொண்டவன்  காய்சின வழுதி என்ற பாண்டிய மன்னன்.   தலைச்சங்க கால கட்டத்தின் இறுதியில் ஆட்சி புரிந்தவன்  கடுங்கோன் என்ற பெயரிய பாண்டியன்.  இந்த நீண்ட காலத்தில் ஏறத்தாழ 449 புலவப் பெருந்தகைகள் மன்றத்தை அலங்கரித்ததாகத் தெரிகிறது.

அக்காலத்து முக நாரை,  முதுகுருகு, கனரியாவிரை, பரிபாடல் போன்ற நூல்களை  பற்றி பிற்காலத்து இறையனார் களவியல் தெரியப்படுத்துகிறது. தலைச்சங்க காலத்து முக நாரை என்ற இசைப் பற்றிய நூல் தான் தமிழின் முதல் படைப்பாக்கம். 

 அகத்தியரின்  அகத்தியம் தலைச்சங்க காலத்து குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இலக்கண நூல் .  இடைச்சங்க காலத்தில் அகத்தியத்தோடு தொல்காப்பியமும் சேர்ந்து கொள்கிறது.   

காற்று வந்ததும் கொடி அசைந்ததா, இல்லை,  கொடி அசந்ததும் காற்று வந்ததா போன்ற சிக்கலான கேள்வி,  இலக்கியம் தோன்றியதும் தோன்றிய நூலுக்கு இலக்கணம் வகுக்கப் பட்டதா,  இல்லை  இலக்கண வழி காட்டல்களின்  அடிப்படையில் இலக்கியம் உயிர்ப்பு கொண்டதா என்பது.
இலக்கண அடிப்படையில் இலக்கியம் உருவானதாகக் கொள்வோம்.

ட்டுத் தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல் தான் சங்க நூல்களில் காலத்தால் முற்பட்டது.  தலைச்சங்க காலத்து பழம்பெரும் சொத்து இது.  

'முதலூழி யிருதிக்கண் தென் மதுரையகத்து  தலைச்சங்கத்து அகத்தியனாரும்,  இறையனாரும்,  குமர வேளும், முரஞ்சியூர் முடி நாகராயனாரும், நிதியின் கிழவனும்  என்றிவருள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்பர்  எண்ணிறந்த பரிபாடலும், முதுநாரையும்,  முதுகுருகும், களறியாவிரையும் உள்ளிட்டவற்றைப் புனைந்து..' என்ற அடியார்க்கு நல்லாரின் உரை பரிபாடலின் தலைச்சங்க காலத்துத் தொன்மையை உரைக்கும். 

ஆயிரம் விரித்த அணங்குடை  அருந்தலை
தீயுமிழ் திறனொடு முடிமிசை அணவர
மாயுடை மலர் மார்பின் மையில்வால் வளைமேனிச்
சேயுயிற் பணைமிசை எழிற்வேழம் ஏந்திய
வாய் விளங்கும் வளை நாஞ்சில் ஒருகுழை ஒருவனை...

-- என்று தொடங்கும் 70 பாடல்களைக் கொண்ட பண்ணிசை இலக்கியம் பரிபாடல்.    பரிகள் கால்களைப் பரிந்து விரைவது போல பண்ணிசை வரிகளால் பாக்கள் ஆனதால் பரிபாடல் என்று காரணப் பெயர் பெற்றது.  'பாய் பரிப் புரவி'  என்று மதுரைக் காஞ்சி  பரிபாடலின் புகழ் பாடும்.

பரிபாடல் அமைந்த அழகைப் பார்ப்போம்:

திருமாலுக்கு எட்டு பாடல்கள்,  மால் மருகனுக்கு 31 பாடல்கள், கொற்றவை காளி தேவிக்கு பாடல் ஒன்று, வையை நதிக்கு 26 பாடல்கள், பழம் பெருமை கொண்ட மதுரைக்கு நான்கு பாடல்கள் மொத்தம் எழுபது பாடல்கள் கொண்ட பழம்பெரும் நூலென்று இளையனார் களவியல்  எடுத்தோதும்.

அழிந்து படும் நிலையிலிருந்த ஓலைச்சுவடி பரிபாடல் பாடல்களை ஐயந்திரிபற சோதித்து 1889-வாக்கில் அச்சு வடிவம் ஏற்றியவர் தன்னேரில்லா தமிழர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள்.


(தொடரும்)

Tuesday, March 9, 2021

மொழி

                                                            8

ண்டைய தமிழோடு ஒன்றிக் கலந்த சமஸ்கிருதமும் தமிழைப்  போலவே இலக்கண வளப்பம் நிறைந்த மொழி.  

அஷ்டாத்யாயிக்கு முன்பே சமஸ்க்ருதம் வேறு சில இலக்கண நூல்களைப் பெற்றிருந்தது என்பதற்கான குறிப்புகளை அஷ்டாத்யாயிலேயே காணலாம்.   இது எட்டு அத்தியாயங்களை உள்ளடக்கிய ஆக்கம் ஆதலினால்  அஷ்டாத்யாயி என்று அழைக்கப்படல் ஆயிற்று. தில்லை நடராஜ பெருமான் நடனமாடிய பொழுது அவரது உடுக்கையிலிருந்து புறப்பட்ட பதினாங்கு ஒலி வடிவுகள் எட்டு அத்தியாயங்களாயின என்று புராணக் கதை வழி சொல்லப்படுகிறது.

ஐந்த்³ரம்ʼ சாந்த்³ரம்ʼ காஸா²க்ருʼத்ஸ்னம் கௌமாரம்ʼ ஸா²கடாயனம்ʼ |
ஸாரஸ்வதம் சாபிஸ²லம்ʼ ஸா²கலம்ʼ பாணினீயகம்ʼ ||

-- என்று சமஸ்கிருத இலக்கண படைப்புகளுக்கு வழிகாட்டும் ஸ்லோகம் ஒன்று உண்டு.

வியாகரணம் என்றால் இலக்கணம்.  இந்திர வியாகரணம், சந்திர வியாகரணம், காஸாக்ருத்ஸ்னம், கெளமாரம்,  ஸாகடாயனம்,  ஸாரஸ்வதம், ஆபிஸலம், ஸாகலம், பாணினீயம் --  என்பன சமஸ்கிருத இலக்கண நூல்களாக அறியப்பட்டவை.    இவற்றில் கெளமாரம் திருமுருக பெருமானானின் அருளால் படைப்பாக்கம் கொண்டது என்று அறியப்படுகிறது.  கெளமாரம்,  கலாபம் என்றும் அழைக்கப் படுகிறது.  கலாபம் என்றால் சமஸ்கிருதத்தில் மயில்.

ஐந்திரம் தான் இந்திர வியாகரணம்.  இந்த ஐந்திர வியாகரணத்தை ஒட்டித் தான் தொல்காப்பியம் ஆக்கமுற்றதாக தொல்காப்பியப் பாயிரம் பகின்றதை ஏற்கனவே பார்த்தோம்.

மேற்சொன்ன சமஸ்கிருத இலக்கண நூல்களில் பாணினியின் படைப்பாக்கமான அஷ்டாத்யாயி  தான் இன்றும் காணக் கிடைக்கிறது.   இந்த அரிய நூலை முனைவர் கு. மீனாட்சி அவர்கள் தமிழில் மொழியாக்கம் செய்து தமிழகத்து உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அதை நூலாகவும் வெளியிட்டிருக்கிறது.   பாணினியின் அஷ்டாத்யாயி நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பார்த்திருக்கிறேன்.  சென்னை தரமணியில் இருக்கும் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில்  முனைவர் கு. மீனாட்சி அவர்களின் தமிழாக்கத்தில் மூன்று பாகங்களாய் அஷ்டாத்யாயி மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது.  

மஸ்கிருதம் தேவ மொழி  என்றால்  நம் அருமைத் தமிழோ  தெய்வ மொழி.  இறையனாரும்,  முருக பெருமானும் தலைச்சங்கத்தைக் காத்து நின்ற கடவுளர்கள்.  தமிழனுக்கு இலக்கணமே தெய்வத்தின் புகழ் பாடுவது தான் என்று சொல்லும் அளவுக்கு இறை வழிபாட்டை உயிர் மூச்சாகக் கொண்டிருந்த இனம் இது. 

பழந்தமிழரின் தெய்வ வழிபாடுகளைப் பற்றிப் பேச விருப்பமில்லாது  போயின்,  சங்க இலக்கியங்களைப்  பற்றிப் பேச முடியாமலேயே போகும்.   

வாழ்வுக்கு அடிப்படை நிலம் தான்.  அந்த நிலப்பாகுபாடுகளை முன் நிறுத்தி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நிலப் பாங்குகளை அந்தந்த பகுதி மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட வகுத்த பழந்தமிழ் பண்பாட்டு அழகு வியக்கத் தக்கதாகும்.   தமிழர் வாழ்வு காத்த தெய்வங்களைப் பற்றிப் பார்ப்போம்:

மாயோன் மேயக் காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லைக் குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே..

-- என்பது தொல்காப்பிய பொருளதிகாரச் செய்யுள்.

நில அமைப்புகளையே திணைகளாகக் கொண்டு அந்தந்த நிலப் பகுதிகளுக்கான வழிபடும் தெய்வங்களையும் வகுத்து வணங்கிய தமிழரின் மாட்சியை துல்லியமாகப் படம் பிடித்துச் சொல்லும் அழகு நினைத்து நினைத்து இன்புறத் தக்கது.

காடும் காடு சார்ந்த நிலமும் முல்லை நிலம்
மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சி
வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம்
கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல்

முல்லை நிலத்திற்கு திருமாலை தெய்வமாக வரித்தும், குறிஞ்சிக்கு மால் மருகனை கடவுளாகக் கொண்டும்,  மருதத்திற்கு இந்திரனை தலைவனாகக் கொண்டும், 
நெய்தலுக்கு வருணனைத் தெய்வமாக வகுத்தும்  பழந்தமிழரின் இயற்கையோடு இயந்த வழிப்பாட்டு முறை தொல்காப்பியரால் தெளிவு படுத்தப் படுகிறது.

பைந்தமிழில் 'முருகு' என்றால் அழகு என்று பொருள்.  இயற்கையின் அழகுச் செடி கொடிகளாய் பூத்துச் செறியும் மலையும் மலைச்சாரலும் நிறைந்த குறிஞ்சி நிலத்திற்கு அந்த இயற்கை அழகையே வழிபடும் நிலையில் முருகன் தெய்வமானார்.

கோடை வெப்பத்தால் மாற்றுத் தோற்றம் கொள்ளும் இடம் பாலையாயிற்று.  பாலை நிலத்திற்கான தெய்வத் தலைமை தொல்காப்பியத்தில் குறிப்பிடாவிட்டாலும் தொல்காப்பியம் பொருளதிகாரத் துணைத் திணையியலில்,

மறம்கடை கூட்டிய துடிநிலை,  சிறந்த
கொற்றவை நிலையும் அகத்திணை புறனே 

                                   (தொல், புறத்திணை: 62) 

-- என்ற வரிகள் காணக் கிடைக்கின்றன.

குறிஞ்சியும் முல்லையும் என்னதான் வளப்பச் செல்வம் பொருந்தியிருப்பின் நெடுநாள் மழையில்லாது தவிக்கும் நிலை ஏற்பட்டால் பாலையாகும் என்ற உண்மையை ஓர்ந்து அதுபற்றிய குறிப்பொன்றை சிலப்பதிகாரத்தில் பார்க்கலாம்.

சிலம்பின் மதுரை காண்டத்தின் ஆரம்பப் பகுதி தான் காடு காண் காதை.   கவுந்தி அடிகளின் வழிகாட்டலுடன் கோவலனும் கண்ணகியும் உறையூரை விட்டு  நீங்கி மதுரை மாநகர் நோக்கி வழிப்பயணம் மேற்கொண்ட பொழுது வழியில் குறுக்கிட்ட ஒரு சோலையினுள் நுழைகின்றனர்.  அங்கிருந்த மண்டபம் ஒன்றில் பாண்டியன் புகழ் பாடிக் கொண்டிருந்த முதியவர் ஒருவரைச் சந்திக்கின்றனர்.  அவரிடம் "மாமறை முதல்வ!   மதுரைச் செந்நெறி கூறுவீர்' எனக் கோவலன் கேட்க, 

".. முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து  
நல்லியல் பிழந்து நடுங்குதுயர்  உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்..."

".. இத்தகைய வேனில் காலத்தே காரிகையுடன் கடும் பயணம் மேற்கொண்டீரே!" என்பார்.   முல்லையும் குறிஞ்சியும் நீண்ட காலம் மழை பொய்யாது காய்ந்து போயிருப்பின் அது பாலை நிலமாக மாறும் என்பதனை மாமறை முதல்வன் மூலமாக இளங்கோ  அடிகளார் சுட்டிக் காட்டுகிறார்.

இத்தகைய இயற்கை மாறுபாடு காரணமாகவே  முல்லைக்கும் குறிஞ்சிக்கும் கொற்றவை பொது தெய்வமாகிப் போனாள். தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணனரும் பாலை நிலத்தின் தெய்வம் கொற்றவையே என்று உறுதி செய்கிறார்.


(தொடரும்)

Tuesday, March 2, 2021

மொழி

                                                                   7

தொல்காப்பியத்திற்குப் பாயிரம் பாடிய பனம்பாரனார் பற்றிய குறிப்புகளைக் கேட்டிருந்தார் ஸ்ரீராம்.  

அதற்கு முன் தொல்காப்பியம் நிலந்தரு திருவிற் பாண்டியன் அரசவையில் அரங்கேறிய பொழுது அந்த சிறப்பான நிகழ்விற்கு தலைமை தாங்கிய அதங்கோட்டு ஆசானைப் பற்றி தெளிவு கண்டு விட்டு பனம்பாரனாருக்கு வருவோம்.

அதங்கோட்டு ஆசானுக்கு அறிமுகமாய் 'நான்மறை முற்றிய' அதங்கோட்டு ஆசான் என்ற பரம்பாரனாரின் குறிப்பு வருகிறது.  ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் தாம் நான்கு மறைகள் என்பது நமக்குத் தெரியும்.  சமஸ்கிருத மொழியில் அமைந்த  இந்த நான்கு வேதங்களையும்  முற்றும் கற்ற அதங்கோட்டு ஆசான் என்று பரம்பாரனார் அவரை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.    தொல்காப்பிய


எழுத்ததிகாரத்திற்கு உரைப் பாயிரம் எழுதிய இளம் பூரணரும் இதே கருத்தைத் தான் கொண்டிருக்கிறார். அன்றைய தமிழறிஞர்கள்,  தமிழையும் சமஸ்கிருதத்தையும் ஒன்றரக் கலந்தக் கல்வியாய் கற்றுப்  புலமை பெற்றிருந்தார்கள் என்பதற்கு அதங்கோட்டு ஆசான் எடுத்துக் காட்டுமாகும்.

இத்தகு மொழிப்புலமை பெற்ற அதங்கோட்டு  ஆசான் தான்  அந்த நிகழ்விற்கு தலைமையேற்று நடத்திச் செல்கிறார்.  தகுந்த சான்றோர்களின் மேற்பார்வையில் அவர்களின் ஒப்புதலுடன் தான் அரசவையில் அரிய நூல்கள் அரங்கேறின என்பதற்கு சான்றுகள் இவை.

தொல்காப்பியம் அரங்கேறும் பொழுது எழுத்து, எழுத்து முறை இவற்றில் தமக்கேற்பட்ட சில ஐயங்களை தொல்காப்பியரிடம் கேட்டு தெளிவு கொள்கிறார் அதங்கோட்டு ஆசான்.  இவையெல்லாமே பனம்பாரனார் தம் பாயிரத்தில் சொல்லி நமக்குத் தெரிபவை.

கன்னியாகுமரி மாவட்டத்தில்   வள்ளுவன் கோடு (!) என்றொரு ஊர் உண்டு.  இதுவே இன்று விளவன்கோடு என்று அழைக்கப் படுகிறது.  இதன் அருகில் அமைந்த  சிற்றூர் தான் அதங்கோடு. இந்த அதங்கோட்டில் இருக்கும் சூரிய முக்கு என்ற பகுதியில்  தாமிரபரணி ஆறு ஓடுகிறது.  குழித்துறை தாமிரபரணி என்று அழைக்கிறார்கள்..  (இந்த இடம் பற்றிய மேலதிகத் தகவல்கள் நமது நெல்லைக்குத் தெரிந்திருக்கலாம்.)  இந்தக் குழித்துறை தாமிரபரணி தான் பண்டைய சங்ககால பஃறுளி ஆற்றின் விட்ட குறை  தொட்ட குறையாய் இன்றிருப்பது என்றும் சொல்வார்கள்.

அடுத்து பாயிரம் பாடிய பனம்பாரனார் பற்றி.

தொல்காப்பியரும் பனம்பாரனாரும் அகத்தியரிடம் பயின்ற ஒருசாலை மாணாக்கர்கள் என்று ஏற்கனவே தெரிந்திருந்தோம்.   இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும்  சாத்தான் குளம்  அருகில் பன்னம்பாறை என்றொரு சிற்றூர் உள்ளது.  இந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற கருத்தில் பனம்பாரனார் என்ற அழைக்கப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

இந்தி மொழி வேறு;  சமஸ்கிருதம் வேறு.  வடமொழி என்ற பொதுச் சுட்டலில் இரண்டையும் ஒன்றாகக் கருதி நாம் மயக்கம் கொள்கிறோம்.  சமஸ்கிருதம் தமிழைப் போலவே இலக்கணச் சிறப்பில் வளப்பம் நிறந்த மொழி.  தமிழும் சமஸ்கிருதமும் ஒன்றாகப் பின்னிப் பிணைந்து கி.மு. காலங்களிலேயே  செம்மொழிச் சிறப்புடன் தனித்தியங்கும் ஆற்றலுடன் இலக்கிய, இலக்கண வளம் நிறைந்து இயங்கின. இன்னொரு ஒப்புமை இவ்விரண்டு மொழிக்கும் என்னவென்றால் இரண்டுக்குமே மூல இலக்கணம் ஒன்றே தான்.

ஐந்திரம் என்பது  காலத்தால் முற்பட்ட சமஸ்கிருத இலக்கண நூலென்றும் இது இந்திரனால் ஆக்கப்பட்டது என்றும் குறிப்புகள் காணப்படுகின்றன.  ஐந்திரம் பற்றிய முதல் தகவல் குறிப்பைத் தந்தவர்  ஆர்ய பட்டர் என்று சொல்லப்படுகிறது.

சொல்லக் கேட்டது தானே தவிர, ஆர்ய பட்டர் என்ன குறிப்பு கொடுத்திருக்கிறார் என்று தெரியவில்லை.   ஆனால் தமிழ் மொழியின் ஆகச் சிறந்த இலக்கிய மேதைகள் ஐந்திரம் பற்றி அறிந்திருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.

சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்ட முதல் பகுதி '.காடு காண் காதை'.  கோவலன் கண்ணகியுடன் மதுரை புகுங்கால்  வழித்துணையாகக் கிடைத்த கவுந்தி அடிகள், அவர்களுக்கு வழிகாட்டிச் செல்கிறார்:

"...... அவ்வழி செல்லாது இடப்பக்க வழியாகச் செல்வீராயின் திருமாலிருஞ்சோலை மலையை அடைவீர்கள்.  அங்கே பிலத்துவ வழியொன்று உண்டு.  அப்பிலத்தினுள்ளே புண்ணிய சரவணம், பலகாரணி, இட்ட சித்தி எனப் பெயர் கொண்ட மூன்று பொய்கைகள் உள்ளன.  அதில் புண்ணிய சரவணம் என்கிற பொய்கையில் மூழ்கி நீராடுவீராயின்,  விண்ணவர் கோமானால் இயற்றப்பட்ட  ஐந்திரம் என்னும் இலக்கண நூலைக் கற்றுத் தேர்ந்தவராவீர்..'  என்று ஐந்திரத்தின் பெருமை பற்றிச் சொல்கிறார். 

கம்பனோ, அனுமன் ஐந்திரம் பற்றி அறிவான் என்று சொல்லி நம்மை வியக்க வைக்கிறார்.

யுத்த காண்டத்தில் விபீஷணன் அடைக்கல படலம்:

'இயைந்தன இயைந்தன இனையக் கூறலும்

மயிந்தம் துயிந்தனும் என்னும்  மாண்பினார்

அயிந்திரம் நிறைந்தவ நானை ஏவலால்

நயம் தெரி காவலர் இருவர் நண்ணினார்..'  

-- என்பது கம்பன்  வாக்கு.  

மயிந்தன், துயிந்தன் என்ற இரு வானரர்கள்,  ஐயிந்திர இலக்கண வழிகாட்டுதல்களை அறிந்த அனுமன் கட்டளையால் அங்கு வந்தனர் என்கிறார்.   இது படித்து யுத்த சாத்திர நுணுக்கங்களின் பாங்குகள் ஐந்திரத்தில் காணக் கிடைக்குமோ என்ற ஆவலும் நம்முள் தலையெடுக்கிறது.

தொல்காப்பியப் பெருமான்  அகத்தியத்தில் ஆழ்ந்த அறிவு பெற்றவர்.  அதே காலத்து சமஸ்கிருத இலக்கண நூலான ஐந்திரத்தின் சிறப்பையும் அறிந்தவர்.  இந்தச் சிறப்புகளையே அடித்தளமாகக் கொண்டு தன் மொழி ஆற்றலையும் ஆழப்பதிந்து தொல்காப்பியத்தை ஒரு முந்து நூலாகப் படைத்தருளியிருக்கிறார்.  சொல் அதிகாரம்,  எழுத்து அதிகாரம், பொருள் அதிகாரம் என்ற முப்பெரும் பிரிவுகளில் காப்பிய அழகோடு, தமிழ்த் தாய்க்கு அணிகலனாய் விளங்கும் ஒப்பற்ற நூல் தொல்காப்பியம்.

சமஸ்கிருதத்தில் இந்திரனின் ஞானத்தில் விளைந்த ஐந்திரம் என்னும் இலக்கண முறையும், பாணினியின் உருவாக்கத்தில் விளைந்த பாணினீயம் என்ற வகையும் இருந்ததாகத் தெரிகிறது.

இவ்வளவு சொல்லி விட்டு சமஸ்கிருத இலக்கண நூலான பாணினியின் அஷ்டாத்யாயி பற்றியும் சொல்லவில்லை என்றால் இந்தப் பகுதி  நிறைவு கொள்ளாது.  

அதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(தொடரும்)


Friday, February 26, 2021

மொழி

                                                                  6   

வட வேங்கடம்  தென் குமரி
ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து 
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத்தோனே போக்கு ஆறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கறை நாவின் நான் மறை  முற்றிய 
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே..

----  என்பது தொல்காப்பியத்திற்கு பாயிரம் எழுதிய பனம்பாரனார் வரிகள்.  பனம்பாரனார் பற்றிய மேலதிக விவரங்களைச் சொல்லுங்களேன் என்று சென்ற பகுதியில் ஸ்ரீராம்  கேட்டிருந்தார்.

பனம்பாரனார் பற்றி மட்டுமல்ல.  தொல்காப்பியம் அரங்கேறிய அந்தச் சூழலையும் அதற்கு சம்பந்தப்பட்டவர்களையும் பற்றி விவரித்து விட்டு அடுத்த பகுதிக்குச் செல்வதே முறை என்று ஸ்ரீராம் சொன்ன பிறகு தான் உணர்ந்தேன். 

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையில் தொல்காப்பியம் அரங்கேறியதாக பாயிரக் குறிப்பு கூறுகிறது.

யார் இந்த நிலந்தரு திருவிற் பாண்டியன் என்பதிலிருந்து தொடங்கலாம்.

பண்டைய தமிழ் இலக்கியங்களில் இன்றைய வாசிப்புக்கு வழி காட்டலாய் நல்லதொரு அம்சம் உண்டு.   பெரும்பாலும் பெயர்கள் என்பது சம்பந்தப் பட்டவர்களைப் பற்றிய ஒரு குறிப்புடனேயே இருக்கும்.   

தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் அதியஞ்சேரல், காய்தின வழுதி வடிவம் பல நின்ற நெடியோன், இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன்,  வெண் தேர் செழியன்,  சோழன் வளி தொழிலாண்ட உரவோன்,  சேரன் பல் யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும் பூண் சென்னி, ஒல்லையூர் பூதப்  பாண்டியன்    என்பது போல.

-- மேற்குறித்த அத்தனை மன்னர்களும்,   கி.மு. காலத்தவர்கள் என்பது இன்னொரு வியப்பு.   

நிலந்தரு திருவிற் பாண்டியனும் அப்படித் தான்.  நிலம் தந்த பாண்டியன் என்று இந்தக் குறிப்பிலிருந்து தெரிகிறது..  கி.மு. 7-ம் நூற்றாண்டு இவன் காலம் என்று  வரலாற்றியல் அறிஞர்கள் யூகிக்கிறார்கள்.  அப்படியானால் கி.மு. 7-ம் நூற்றாண்டில் தான் தொல்காப்பியம் அறங்கேறியதா?..

கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலான காலம்   தலை, இடை, கடை என்ற மூன்று சங்கங்களும் இருந்த காலம்.  தலைச்சங்கம், தென் மதுரையிலும், இடைச்சங்கம்  கபாட புரத்திலும்,  கடைச் சங்கம் இன்றைய மதுரையிலும்  இருந்ததாகக் கொள்ளலாம். தென்மதுரையும்,  கபாடபுரமும்  கடற்கோளால் கடலில் மூழ்கின என்பது  கால மாற்றங்களிலும் நினைவில் கொள்ள வேண்டிய அம்சம்.  'பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள' என்பது சிலப்பதிகார வரிகள்.  கடல் கொண்ட குமரிக்கண்டத்தில் குமரி மலை என்றே அழைக்கப்பட்ட மலையும் இருந்ததாகத் தெரிகிறது.

சங்ககாலம் பற்றிய பல்வேறு குழப்பச் சர்ச்சைகளுக்கிடையே  தொல்காப்பியம் பற்றி முதல் முதலாய் பிரஸ்தாபிக்கும் இடைச் சங்ககால நூல் ஒன்றைப் பார்ப்போம்.

இந்த  நூலின் பெயர் இறையனார் களவியல்.  காதலுக்கும் இலக்கணம் வகுத்த தமிழனின் அகப்பொருள் சார்ந்த நூல். இறையனார் என்ற புலவரின் படைப்பாகையால் இறையனார் களவியல் என்றே குறிப்பிடுவது வழக்கமாயிற்று..  நக்கீரர் என்று பெயர் தரித்த புலவர் இந்நூலுக்கான உரையில் மூன்று சங்கங்களையும் பற்றிச் சொல்லும் செய்தி தான் முச்சங்கங்கள் பற்றி  நமக்குக் கிடைக்கும் முதல் தகவல் அறிக்கையாகும்.

தலைச் சங்கத்தில் கடவுளரும் முனிவர்களும் பெரும் பங்கு வகித்ததாக சொல்லப்படுகிறது.  திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் (சிவபெருமான்)  தலைமையில் முருகவேள்,  அகத்தியர் , முரிஞ்சியூர் முடிநாகராயர்,  நிதியின் கிழவன் போன்றோர் பங்கு கொண்ட மன்றம் இது.    

கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளுக்கு மேலாக தலைச் சங்கம் செயலாற்றி வந்திருக்கிறது.  தலைச் சங்க காலத்திலேயே அகத்தியரின் அகத்தியம்  தமிழ் மொழிக்கு இலக்கண நூலாக இருந்து  பெருமை பெற்றது.  வேதங்களில் மிகப் பழைமையானது ரிக் வேதம். சமஸ்கிருத செய்யுள்களின் தொகுப்பு நூல் இது. ருக்கு என்றால் மந்திரம்.  அகத்தியரால் இயற்றப்பட்ட செய்யுள் வடிவ மந்திரங்கள் ரிக் வேதத்தில் காணக் கிடைக்கின்றன..  

தமிழுக்கு ஆதி இலக்கணம் படைத்தருளிய அகத்தியரின் பங்களிப்புகள் ரிக் வேதத்திலும் இருக்கிறது என்றால் சமஸ்கிருதமும் தமிழும் கைகோர்த்து உலாவிய  இரட்டைச் சகோதரிகள் என்று தெரிகிறது.

அதங்கோட்டு ஆசானும், தொல்காப்பியனாரும் அகத்தியரிடம் கல்வி பயின்றவர்கள். மொத்தம் 12 சீடர்கள் அகத்தியருக்கு.  இந்தப் பன்னிரண்டு பேரும் சேர்ந்து பன்னிரு படலம் என்ற நூலை இயற்றியதாக புறப்பொருள் வெண்பா மாலை என்ற பழந்தமிழ் நூல் சொல்கிறது.  

பத்து தமிழ்  எழுத்தாளர்கள் சேர்ந்து ஒரு நாவலை குமுதம் காலத்தில் படைத்தது இருபதாம் நூற்றாண்டிற்கு என்றால் அந்த நூற்றாண்டிற்கு அது.

(தொடரும்)


Sunday, February 14, 2021

மொழி

 

                                                     5

தொல்காப்பியர் இதைச் சொல்லியிருக்கிறார் என்றால்  அதற்கு  அப்பீலே கிடையாது.  அந்த அளவுக்கு பழந்தமிழர் வாழ்க்கை நிலையை படம் பிடித்துக் காட்டியிருக்கும் நூல் தொல்காப்பியம்.  அதுமட்டுமல்ல, தமிழுக்கென தனித்தன்மையாய் இலக்கிய வடிவில் அமைந்த  ஓர் இலக்கண நூலாய்த் தொல்காப்பியம்  திகழ்வது தான் தமிழ் மொழிக்கான வித்தியாசப்பட்ட சிறப்பாகிப் போகிறது.


பொதுவாக இலக்கணம் என்றால் ஒரு மொழியை தவறில்லாமல் எழுதுவதற்கும் பேசுவதற்கும் நெறிப்படுத்தும் விதி முறைகளே இலக்கணம் என்று பரவலாகக் கருதப்படுகிறது.  இப்படியான இலட்சணம் கொண்ட இலக்கண வரைமுறைகளில் இலக்கியம் சமைப்பது எப்படி  என்பது ஒரு அடிப்படை வினா.

இந்த  அடிப்படை வினாவிற்கு விடையளித்திருப்பது தான் தொல்காப்பியம்.

தொல்காப்பியர் இயற்றியதால் அது தொல்காப்பியம் என்று பெயர் பெற்றதா இல்லை தொல்காப்பியத்தை இயற்றியமையால் அவர் தொல்காப்பியர் என்று அழைக்கப்பட்டரா என்பது ஒன்றில்  ஒன்று புதைந்த ஒரு கேள்வி.

எது  எப்படியாயினும் தொல்காப்பியம் என்பது தொன்மையான  நூல் என்று அதன்  பெயரிலிருந்தே பெறப்படுகிறது.

தொல்காப்பியத்தின்  தோற்றத்திற்கு  முன்பே அதன் பழமைக்கு முன்பேயே  இலக்கிய, இலக்கண நூல்கள் இருந்தன என்பது தெரிகிறது. அவர் காலத்தில் ஐந்திரம் என்னும் வடமொழி இலக்கண நூல் இருந்திருக்கிறது. அகத்தியரால் இயற்றப்பட்ட அகத்தியம் இருந்திருக்கிறது.  அவற்றையெல்லாம் ஆராய்ந்ததின் அடிப்படையில் அவற்றைப் பற்றியதான ஓர் ஆராய்ச்சி நூல் போன்றே இயற்றப்பட்டது தொல்காப்பியம்.  இந்த ஆராய்ச்சியில் இதெல்லாம் இப்படி இருந்தால் தான் இது;  இல்லையென்றால் இது இல்லை என்று சொல்வது போல இருந்தவற்றை ஆராய்ந்து அவற்றிலிருந்து பெறப்பட்டதை அவற்றிற்கான இலக்கணமாகக் கொண்ட அரிய படைப்பு  தொல்காப்பியம்.

ஒன்றைப் பற்றிச் சொல்வதற்கு அது இருந்தாக வேண்டும் என்ற இருத்தலியக் கொள்கைக்கு சரியான சான்று தொல்காப்பியம்.

பனம்பாரனார் தொல்காப்பியருடன் பயின்றவர்.  இவர் தான் தொல்காப்பியத்திற்கு பாயிரம் எழுதியிருக்கிறார்.  பாயிரம் என்றால் தற்காலத்தில் நூல்களுக்கு முகவுரை என்று எழுதுகிறோமே அது தான். பாயிரம்  இல்லாமல் நூலில்லை என்பது அக்கால வழக்கமாகவே இருந்தது.

வடவேங்கடம்  தென்குமரி
ஆயிடை
தமிழ்கூறு நல்லுலகத்து


----என்று ஆரம்பமாகும் பனம்பாரனார் எழுதிய அந்தப் பாயிரத்தில்,

அதன் கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்
றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே

--என்ற வரிகள் காணக்கிடக்கின்றன.
 
முதல் தழிழ்ச் சங்கம் தென்மதுரையிலும், இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்திலும், மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையிலும் அமைந்திருந்ததாக அறியப் படுகிறது.  முதல் தமிழ் சங்கம் அமைந்திருந்த தென்மதுரையும், இரண்டாம் தமிழ் சங்கம் அமைந்திருந்த கபாடபுரமும் கடல்கோளில் மூழ்கடிக்கப்பட்டன. . வால்மீகி இராமாயணத்தில் கபாடபுரம் பற்றிய குறிப்பு உண்டு.

இரண்டாம் தமிழ்ச் சங்க காலம்  கி.மு. 3600 முதல் 1500 வரை தொல்காப்பியரின் காலம் இரண்டாவது தமிழ்ச்சங்கம் இருந்த  காலம்.

நிலந்தரு திருவிற் பாண்டிய அரசன் முன்னிலையில் தமிழ்ச்சங்க அவைக்கு அதங்கோட்டாசான் தலைமை தாங்கிட இரண்டாவது  தமிழ்ச்சங்கத்தில் தொல்காப்பியம் அரங்கேறுகிறது.  தலைமை தாங்கிய அதங்கோட்டாசான் இடையிடையே எழுத்து பற்றிய சில சந்தேகங்களை எழுப்புகிறார்.  அதற்கு தொல்காப்பியர் தமிழுக்கான எழுதிலக்கணம் பற்றி விளக்கிச் சொல்ல தொல்காப்பியம் அரங்கேறுகிறது.

எழுத்து, சொல், பொருள் என்று மூன்று பிரிவுகளாக தொல்காப்பியம்  பகுக்கப் பட்டுள்ளது.  எழுத்தும் சொல்லும் தமிழ் மொழியின் இயல்பழகைக்  கூறுகின்றன.   பொருளதிகாரமோ  பழந்தமிழரின் வாழ்வியலை படம் பிடித்துக் காட்டுகின்றன. பொருளதிகாரத்தில் ஒன்பது அதிகாரங்கள் உள்ளன.

அகத்திணையியல்,புறத்திணையியல்,  களவியல்,கற்பியல்,பொருளியல்,  மெய்ப்பாட்டியல், உவமயியல், செய்யுளியல்,  மரபியல்  என்கிற ஒன்பது இயலியலும்  படைப்பாக்கங்களுக்கு  இட்டுச் செல்கிற கூறுகள் நிரம்பியிருப்பது தான் ஆச்சரியம்.

இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் நுண்மாண் நுழைபுலம் கொண்ட பேராசான்  தொல்காப்பியர் செய்யுளில் கருத்துச் சொல்லும் வழக்கம் இருந்த காலத்திலேயே செய்யுளின் இயல்பையும் அதன் இயல்பின்மையும்  ஒருசேர கற்பிதம் கொள்ளும் அளவுக்கு  உரைவகை நடை ஒன்றை சொன்னதோடு எவ்வகைத்தானது அது என்று விளக்கமும் கொடுக்கிறார்.

பாட்டிடை வைத்த  குறிப்பினாலும்
பாவின்றி எழுந்த கிளவியானும்
பொருளோடு புணர்ந்த நகைமொழியானும்
பொருளோடு புணர்ந்த பொய்ம்மொழியானும்
உரைவகை நடை மொழியே நான்கென மொழிய

                      (தொல்காப்பியம்  செய்யுளியல்-- 173)

செய்யுள்களுக்கு உரை எழுதுவதையும், செய்யுளின்  கருத்தை மட்டும் எழுதும் உரை வகையையும், கற்பனையாய் புனையும் கதைகளையும், உணமையான செய்திகளில் நகைச்சுவை கலந்து எழுதுவதையும் குறிப்பிடும் பொழுது நம் வியப்பு  எல்லை மீறி திகைக்கிறது.

இன்றைய உரைநடைக்கு முந்தியது  உரையிடையிட்ட  பாட்டுடைச் செய்யுள். செய்யுளுக்கு இடையிட்டு  உரைநடை போலவான வரிகளும் வருவது அது.   உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளுக்கான  தமிழின் முதல் படைப்பு ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம்.

அதே மாதிரி இன்றைய நாவல்களுக்கு முந்தியது அன்றைய காப்பியங்கள்..சொல்லப் போனால் அன்றைய  காப்பியங்களே காலத்தில் மாற்றங்களில் மாற்றம்  கொண்டு இன்றைய நாவல்களாகியிருக்கின்றன.

இத்தாலி நாட்டினர் நூவெல் (Novella)  என்று பெயர் கொண்டு அழைத்த கற்பனை கலந்த கதைகள் தாம் நாவல்கள் என்று காலப்போக்கில் அழைக்கப்பட்டன என்று சொல்வார்கள்.  நாவல் என்பதற்கு புதுமை என்றும் அர்த்தம் கொள்ளலாம்.  இதன் அடிப்படையில் வந்த  சொல், நவீனம்.

இதெல்லாம் பிற்காலத்துச் செய்திகள்.  இதெற்கெல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு  முன்பே உரைநடையும் செய்யுளும் கலந்த உருவில் உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுளாய் காப்பியங்கள் என்ற  உருவில் நாவல்கள் தமிழில் முகிழ்த்திருக்கின்றன என்பதே இங்கு எடுத்தாளக் கூடிய கருத்தாகும்.


(தொடரும்)


படங்களை உதவியோருக்கு நன்றி.


Thursday, February 11, 2021

மொழி

                                                              4


 ரணி குப்புசாமி முதலியார்,  வடுவூர் துரைசாமி ஐயங்கார், கே.ஆர்.ரங்கராஜூ  பொன்றவர்கள் ஆங்கில மர்ம நாவலக்ள் கதை மாந்தர்களுக்கு தமிழ் உடை உடுத்தி  அழகு பார்த்தவர்கள் என்றால் இவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவராய்த் திகழ்ந்தார் வை.மு. கோதைநாயகி அம்மாள்.    வை.மு.கோ. என்று வாசிப்பு  உலகத்தினரால் செல்லமாக அழைக்கப்பட்டவர்.


அந்தக்கால வழக்கப்படி பெண்ணாய்ப் பிறந்ததினால் கல்விச்சாலையை நெருங்க முடியாமல் ஆரம்பக்கல்வியே மறுக்கப்பட்ட நிலைக்கு உள்ளானார். குழந்தைப் பருவத்திலேயே தாயை  இழந்த இவரை வளர்த்த சித்தப்பா இவருக்கு ஞான ஆசிரியராய் ஆனார்.  அவரிடம் தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி என்று கற்றார்.  ஐந்து வயதில் பால்ய விவாகம். கணவர் பார்த்தசாரதிக்கு ஒன்பதே வயது.

சிறுவயதிலேயே தன்னையொத்த சிறு குழந்தைகளுக்கு கோதை கதை சொல்லும் திறமை பெற்றிருந்தார். கணவரின், மாமியாரின் அன்பும் ஆதரவும் பெண்ணுக்கான சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்தது.  பிற்காலத்தில் தமிழை வாசிக்கவும் எழுதவும் தெரியாத நிலையிலேயே இவ்ர் சொல்லவும் இவர் சொல்வதை எழுதவும் பட்டமாள் என்ற தோழி கிடைத்தார். அப்படி வை.மு.கோ. சொல்லி எழுதியது தான் இவரின் முதல் நாவலான 'இந்திர மோகனா'!. நாளாவட்டத்தில் பட்டமாளே இவருக்கு கல்வி போதித்த ஆசிரியையும் ஆனார்.

அன்னி பெசண்ட் அம்மையாரின் அறிமுகம், சமூக சேவகி அம்புஜம் அம்மாளின் தோழமை, தீரர் சத்யமூர்த்தியின் தீவிர மேடைப்பேச்சு , மஹாத்மாவின் தமிழக விஜயம் எல்லாம் சேர்ந்து இவரை சுதந்திரப் போராட்ட வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள இழுத்துச் சென்றது.

இந்த காலகட்டத்தில் தான் 'ஜகன்மோகினி' என்ற பத்திரிகையை தம் சொந்தப் பொறுப்பில் நடத்தவும் அதற்கு ஆசிரியையாகவும் ஆகிறார் வை.மு.கோ. . ஜெகன்மோகினியில் தன் இரண்டாவது நாவலான 'வைதேகி'யை எழுதினார்., பின் 'சண்பகவிஜயம்', ''ராதாமணி,' பத்ம சுந்தரன்', 'கெளரி முகுந்தன்'' என்கிற நாவல்களை 1926-27 காலகட்டத்தில் எழுதினார்.   'நாவல் அரசி' என்ற பட்டம் வை.மு.கோ.விற்கு தன்னாலே தேடிவந்தது.  பிரமிக்காதீர்கள், இவர் எழுதிய மொத்த நாவல்களின் எண்ணிக்கை 115 என்று இலக்கிய ஆய்வாளர்கள் கணக்கு சொல்கின்றனர்.  இன்றைக்கும் இந்த எண்ணிக்கையை யாரும் எட்டவில்லை என்று நினைக்கிறேன்.

வை.மு.கோ. தன் நாவல்களுக்கு எடுத்துக் கொண்ட எழுது பொருள் பெண் விடுதலை, மதுவிலக்கு, விதவைத் திருமணம், மத நல்லிணக்கம் என்று--- அத்தனை நாள் ஆங்கில நாவல்களை அடியொற்றி எழுதிய எழுத்துப் பாங்கு தமிழில் இவரால் மாறுபடுகிறது.  இவ்வாறாக தமிழ் நாவல்களில், நாவலுக்காக எழுதும் கருப் பொருளில் முதல் முதலாக மாற்றம் கண்ட பெண்மணி வை.மு.கோ. தான்.  இது தமிழ் நாவல் எழுத்துலகம் கண்ட மிகப் பெரும் வரலாற்று மாற்றம்.

வை.மு.கோ.வின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் தீரம் மிக்கது.  காந்திஜியின் அறைகூவலை ஏற்று சென்னை திருவல்லிக்கேணியில் கள்ளுக்கடை மறியல், மற்றும் அன்றைய சைனா பஜாரில் தடையை மீறி ஊர்வலம் சென்றார் என்று ஆறு மாதம் சிறைதண்டனை+ அபராதம் என்று தண்டனை வழங்கப்பட்டு,  அபராதம் செலுத்த மறுத்ததால் இன்னும் 4 மாதங்கள் சேர்த்துக் கிடைத்த தண்டனையையும் புன்முறுவலுடன் ஏற்று சிறை சென்றார்   அன்னிய துணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் தண்டனை பெற்று வேலூர் சிறைவாசம்.  சிறை வாழ்க்கையையும் எழுதுவதற்குக்  கிடைத்த வாய்பாகக்  கொண்டு 'உத்தம சீலன்', 'சோதனையின் கொடுமை' என்று இரு நாவல்களைப் படைத்தார்.

வை.மு.கோ,  தேச நலனுக்காகப் பயன்பட்ட நல்ல மேடைப் பேச்சாளர், கர்நாடக சங்கீதத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர் என்று ஏகப்பட்ட பெருமைகளுக்குச் சொந்தக் காரர். பெண் எழுத்தாளர்களில் சாதனைகள் படைத்த முதல் பெண்மணி.  பாரத தேசத்தின் நலன்கள் சார்ந்த கொள்கைகளை தம் எழுத்துக்கு கருப்பொருளாக அவர் எடுத்துக் கொண்டது என்றென்றும் நினைவு கொள்ள வேண்டிய சாதனை.

தமிழ் நாவலுலகில் 1879-ல் பிரசுரமான மயூரம் வேதநாயகம் பிள்ளையின் 'பிரதாப முதலியார் சரித்திரம்',  1896-ல் வெளிவந்த ராஜம் அய்யரின் 'கமலாம்பாள் சரித்திரம்' போன்ற நாவல்கள், வை.மு.கோ.வின் நாவல்களுக்கு முற்பட்ட காலத்தினது ஆயினும்  அவை தனி மனித கோணல்மாணல்களை அச்சுப்பிச்சுத் தனமாக வர்ணித்தவை.  இந்த நிலைகளிலிருந்து மாறுப்பட்டுப் போனதும் வை.மு.கோ.வுக்கு வாய்த்த  தனிச் சிறப்புகளாகின்றன.

1898-ல் பிரசுரமான மாதவய்யாவின் 'பத்மாவதியின் சரித்திரம்'  இதற்கு முந்தைய காலகட்டதின் நாவல் தலைப்புகளைப் பிரதி எடுத்திருப்பது மேலோட்டமான பார்வைக்கே புலப்படுவது..  ஒரு நாவல் என்றால் குறிப்பிட்ட ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்வது தான் என்று முடிவு எடுக்கிற மாதிரியும் உள்ளடக்கத்தின் தேர்வு நிகழ்ந்திருக்கிறது.  அதே நேரத்தில் பத்மாவதி என்னும் தனிப்பட்ட ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் நேர்ந்துவிட்ட சோக வரலாற்றின் விவரிப்பாக குறுக்கம் கொண்டதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து நெடுங்காலம் கழித்து 1946-ல் பிரசுரமான க.நா.சுப்பிரமணியம் அவர்களின்  'பொய்த்தேவு' தான் தேறுகிறது. தமிழ் நாவலுலகின் இலக்கிய ஆய்வாளர்களால் விசேஷப்படுத்தும் நாவல் இது.  

இலக்கியம் என்பது  காலத்தின்  கண்ணாடியாக திகழும் பொழுது அதன் பெருமை வருங்காலத்திற்கு வழிகாட்டியாகிறது.   இலக்கியம் வாழ்வின் மதிப்பிடல்களைத் தீர்மானிக்கும் சக்தி பெறும் பொழுது அதற்கான உண்மையான உயிர்ப்பினைக் கொண்ட சாதனையாகிறது.  அந்த சாதனைகளும் சமூக அவலங்களைக் களைந்த நேர்த்திகளுக்குச் சொந்த மாகும் பொழுது இயல்பாகவே அவை நம் நேசிப்பை விட்டுத் தப்ப முடிவதில்லை.  இதுவே இலக்கியங்களுக்கான அடிக்கோடிட்டு அழுத்தம் திருத்தமாகச்  சொல்ல வேண்டிய அளவுகோல்களுமாகும்.


(தொடரும்)


படம்

Wednesday, February 10, 2021

மொழி

                                                             

"மொழிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?   ஒருவொருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான ஒரு சாதனம் அது.  அவ்வளவு தானே?" என்று கேட்டார் என் நண்பர்  ஒருவர்.


என்னால் அவ்வளவு எளிதாக அதை ஒத்துக் கொள்ள முடியவில்லை. கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான ஒரு சாதனம் (tool) மட்டும் தானா மொழி என்பது?..

நிச்சயமாக இல்லை.    

மொழி பற்றி,  ஒருவனில் அந்த மொழியின்  ஆளுகை பற்றி எத்தனையோ அறிஞர்கள் எவ்வளவோ சொல்லியிருக்கிறார்கள்.    கருத்துப் பரிமாற்றம் கொள்வதற்கு மொழியை விட்டால் வேறு வழி இல்லை.  உண்மை தான். ஆனால் அதையும் தாண்டி ஒரு மொழியில் புலமை பெறும் பொழுது அது நம்மை ஆட்கொள்ளும் நேர்த்தியில் எத்தனையோ விஷயங்கள் இருப்பதாக புரிதல் ஏற்படுகிறது.

முக்கியமாக அந்த மொழியின் இலக்கிய செல்வங்கள்.

எந்த மொழியும் தன்னில் ஞானம் கொண்டவனுக்கு இதில் வஞ்சனை செய்ததில்லை.  உலக மொழிகளில் எல்லா மொழிகளும் இந்த செல்வத்தை தன்னை அறிந்தோனுக்கு வாரி வழங்குவதில்  பாகுபாடு கொண்டதில்லை.

 ஒரு  மொழியில் புலமை பெற்றவன்   அந்த மொழியின் கருவூலமான இலக்கிய இன்பங்களை உள்வாங்கிக் கொண்டு அதில் ஆழ அமிழும் பொழுது இகவுலக சுகங்களை தாண்டியதான விவரிக்க இயலாத இன்பத்தை ஓர்ந்து உண்ர்ந்து கொள்பவனாகிறான்.

 திவ்ய பிரபந்த நாலாயிரத்தில் ஒரு பாடல் அது.

அச்சுதனின் அரங்கனின் பெருமைகளை  நா புரட்டி உச்சரிக்கும் புல்லரிக்கும் உணர்வை விட்டு விட்டு இந்திரலோகம் ஆளும் பெருமையையும் வேண்டேன் என்று இச்சுவை-- அச்சுவை  வேறுபாடு காட்டி நெகிழ்ந்திருப்பார் தொண்டரடிப்பொடி ஆழ்வார்.

மொழி என்பது ஒரு லாகிரி வஸ்து போல போதை தருவது.

எந்த மொழியாக இருக்கட்டுமே, அந்த மொழியின் படைப்புகளில் ஆழ்ந்த தோய்தல் ஏற்படும் பொழுது அந்த ரசனை ஒருவித கிறக்க உணர்வை ஏற்படுத்தாமல் விடாது.

தாய் மொழி-- பிற மொழி என்றெல்லாம் இதில் பாகுபாடு ஏதுமில்லை. தாய்மொழி என்றால் இரட்டை மடங்கு கிறக்கம்.  அவ்வளவு  தான்.

அது ஆங்கிலேயர் நம் நாட்டை ஆண்ட காலம்.   பல நல்லது -- கெட்டதுகள் நமக்கு அறிமுகமான காலம்.

ஆங்கில மொழியறிவுக் கள்ளைப் பருகியதின் பாதிப்பில் அது போலவே தமிழில் எழுத வேண்டுமென்ற அளப்பரிய ஆசையின் போதை வயப்பட்டவர் பல பேர்.

'அது  போலவே'என்ற வார்த்தையை அட்சரம் பிசகாமல் தமிழ் படைப்பிலக்கியத்தில் கொண்டு வந்த சிலரை மறக்கவே முடியாது.  இவர்கள் துணிந்து,பேண்ட், சட்டை, டை கட்டிய கதா பாத்திரங்களுக்கு வேஷ்டி, சட்டை தங்க பித்தான் கோர்த்த கோட், அங்கவஸ்திரம் உடுத்தி அழகு பார்த்தனர்.   சட்டை என்றால் அந்தக் காலத்தில் பெரும்பாலும் முழுக்கை சட்டை தான். முழுக்கை சட்டையில் மணிக்கட்டு இடத்தில் கஃப் பட்டன் போட்டு, புஜப்பிரதேத்தில் கால் செ.மீ. அளவுக்கு வட்டமாய் துணியை மடித்துத் தைத்த கோலத்தில் அட்டகாசமாய் இருக்கும்.

ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், ரங்கராஜூ (நம்ம ரா.கி.ரங்கராஜன் இல்லை; இன்னொரு ஸ்ரீரங்கம் ரங்கராஜனும் அறவே இல்லை!)  போன்றவர்களை மறக்கவே முடியாது.  ஆங்கில நாவல்களை தமிழ் படுத்தியதில் பயங்கர இலக்கிய மாற்று பங்களித்தவர்கள் இவர்கள்!   கதைகள் வாசிக்கம்  பழக்கம் இவர்களால் தான் அக்காலத்தில் படித்த வர்க்கத்தினரிடையே வழக்கமாகவும் மாறியது

இரத்தினபுரி இரகசியம்,  சொர்ணாம்பாள் அல்லது பெருவிரல் மர்மம், அபூர்வ சிந்தாமணி, மதன பூஷணம் அல்லது இறந்தவன்  பிழைத்தது போன்ற ஆரணி குப்புசாமி முதலியார் அவர்களின் மனதைக் கொள்ளை கொண்ட நாவல்களை மறக்கவே முடியாது.

ஆரணியாரின் நாவல்களில் ஆங்கில கதாபாத்திரங்களும்  இங்கிலாந்து இடங்களும் தமிழ்ப் பெயர் பூணுவதை ரசித்து படிப்பதே ஒரு  தனி இன்பம் பயக்கும்.   எழுதிய மாத்திரத்தில் இவர் எழுத்தில் லண்டன்  இரத்தின புரியாகும்; வாட்ஸன் விஸ்வநாதன்  ஆவார்; ஆர்ஸின் லூயின் அரசூர் லஷ்மணனாவார்.


ஆரணி குப்புசாமி முதலியார் சிலகாலம் 'ஆனந்த போதினி' என்னும் பத்திரிகைக்கு ஆசிரியாராக வேறு இருந்தார்.  ஆ.கு.மு. காலத்திற்கு பிறகு நாரண துரைக்கண்ணன் (இவர் ஜீவா என்று புனைப்பெயர் கொண்டிருந்தார். பொதுவுடமைக் கட்சி ஜீவா இல்லை)  'ஆனந்த போதினி'யின் ஆசிரியராக சில காலம் இருந்தார்.  இந்த நாரண  துரைக்கண்ணன் அவர்கள் 'கலைமகள்'
பத்திரிகையில் தனக்கு முன்னோடியான  ஆரணி குப்புசாமி முதலியாரின் எழுத்தின் ரக்சியம் பற்றி  ரசித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது.  அந்தக் கட்டுரையின்  சில வரிகளை என் குறிப்புப் புத்தகத்திலிருந்து  எடுத்து இங்கு எழுதுகிறேன்:

"ரெயினால்ஸ், வால்டர் ஸ்காட்,  அலெக்ஸாண்டர் டூமாஸ், எட்கார் வாலஸ், கானன் டாயில் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களின்  நாவல்களை மொழிபெயர்த்து தமிழர்களுக்குத் தர விரும்பிய குப்புசாமி முதலியார் தமிழ்நாட்டுப் பண்பாடுக்கு ஏற்றவாறு கதை நிகழும் இடங்களையும்  கதை மாந்தர்களின் பெயர்களையும்  நடை உடை பழக்க வழக்கங்களையும் மாற்றியிருக்கிறார்.   அத்துடன் கதைகளுக்கு இடையிடையே நீதி போதனைகளையும் வேதாந்த தத்துவங்களையும் கூறியிருக்கிறார். இதை இவர் கதைச் சுவை சிறிதும் குன்றாதவாறு திறமையாகச் சொல்லியிருக்கிறார்.

-- என்று நாரண துரைக்கண்ணன் ஆரணியாரைப்  பற்றி ரசனையுடன் எழுதியிருக்கிறார்.

ஆரணியார் இப்படி  என்றால் வடுவூரார் கதையே தனி.  துப்பறியும்  பாணி கதைகளை தனிக்குத்தகைக்கே எடுத்தவர் இவர்.   தமிழ்வாணனில் ஆரம்பித்து பட்டுக்கோட்டை பிரபாகர் வரை அத்தனை மர்மக்கதை மன்னர்களுக்கும் இவர் தான் முன்னோடி!  இவர் எழுதுவதற்காகவே தான் பணியாற்றிய  தாசில்தார் வேலையைத் துறந்தார்.  அந்தக்காலத்தில் 'அல்லது'  இடையிட்டு நாவல் தலைப்பை எழுதுவது பிராபல்யம் அடைந்தவர்களின் ஒரு பழக்கமாகவும் இருந்தது!

கல்யாணசுந்தரம் அல்லது வேலியே பயிரை மேய்ந்த  விந்தை

மரண புரத்தின்  மர்மம் அல்லது லீலாவதியின் மூடு மந்திரம்

இரு மன  மோகினிகள் அல்லது ஏமாளியை ஏமாற்றிய கோமாளி!

--என்று வடுவூராரின் 'அல்லது' போட்ட சில நாவல் தலைப்புகள் இன்னும் நினைவுகளில் நிழலாடுகிறது!

இவரது ''கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார்' பயங்கர பிரபல நாவல்!  திகம்பரம்  (ஐயே!)  என்றால் அர்த்தம் தெரியும் தானே!  'திகம்பர சாமியார்' திரைப்படமாகவும் வந்திருக்கிறது.  எம்.என்.நம்பியார் தி.சாமியாராய் நடித்து அசத்தியிருப்பார்!  மயிலாப்பூர்  அல்லையன்ஸ் பதிப்பகத்தார்  இவரது நாவல்களின் வரிசை ஒன்றை சில ஆண்டுகள் முன்பு பதிப்பித்திருக்கிறார்கள்!  வேண்டுகிறவர்கள் வாங்கிப் படித்து மகிழலாம்!

(தொடரும்)

                                               
                

Tuesday, February 9, 2021

மொழி

                                                                2

லகில் மொத்தம்  2796 மொழிகள் உள்ளனவாம்   இதில் பல மொழிகள் பேச்சு மொழிகளாகவே உள்ளன.  அதாவது அவற்றிற்கு எழுத்து வடிவம் இல்லை.


பாரதத்திலோ,  499-க்கும் மேற்பட்ட மொழிகள் புழக்கத்தில் உள்ளன.

இந்த நானூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் ஆறு மொழிகள் செம்மொழி தகுதி பெற்றிருக்கின்றன.  அவை:  தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் ஒடியா மொழி.  பொதுவாக தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை தமிழிலிருந்து  கிளைத்த தமிழ்க் குடும்ப மொழிகளாதலால் மனத்தளவில் அவற்றைத் தனியாகப் பிரித்தும் பார்க்க முடியவில்லை.   இருப்பினும் கணக்குக்காக  ஆறில் நான்கு திராவிட மொழிகள் செம்மொழி தகுதி பெற்றிருக்கின்றன என்பது நமக்குப்  பெருமை.

உலக அளவில்  கிரேக்க மொழி, இலத்தீன், பாரசீக மொழி, அரபு மொழி, எபிரேயம் மற்றும் சீன மொழி ஆகியவை செம்மொழிகள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

எதையும் ஆங்கிலத்தில் சொன்னால் இளைஞர்களுக்கு சுலபமாகப் புரியும் காலம் இது.

செம்மொழி என்றால் classical language. என்று ஓரளவு பொருந்தக் கூடிய அர்த்தத்தில் சொல்லலாம்.

அது சரி,  classical language  என்றால்---

"To qualify as a classical tradition, a language must fit several criteria:  it should be ancient, it should be an independent tradition that arose mostly on its own not as an offshoot of another tradition, and it must have a large and extremely rich body of ancient literature "

---  என்று மொழியியல் அறிஞர் ஜார்ஜ் எல் ஹார்ட் கூறுகிறார்.

செம்மொழி என்பது ஒரு மொழியில் அமைந்திருக்கும் இலக்கிய மற்றும் கலைப்படைப்புகளைக் கொண்டே தீர்மானிக்கப் படுகிறது.  என்றோ இருந்த பழங்கதையாக இல்லாமல் அப்படியான இலக்கிய கலைப்படைப்புகள், வருங்காலத்திலும் மென்மேலும் உருவானால் தான் இந்த மொழி செம்மொழி என்பதற்கான வரலாற்று பெருமைகளையும் தக்க வைத்துக் கொண்டவர்களாவோம்.

தற்கால தமிழின் கலை இலக்கிய  கலைப்படைப்புகள்  பற்றிய பார்வை நமக்கு அவசியம்.  பண்டைய தமிழ்ப் புலவர்களின் தொடர்ச்சியாய் தொடர்ந்து வரும் இன்றைய இலக்கிய சாம்ராட்களின்  படைப்புகளைப் பற்றிய பார்வையும் நமக்கு அவசியம்.

மன்னர்களின் ஆட்சி காலங்களின் பொழுது இயல்பாகவே  கலை இலக்கியங்கள் ஆட்சி அதிகாரத்தில் வலிமை பெற்றிருந்த மன்னர்களைச் சார்ந்திருந்தன.   தமிழில் கூட மன்னரைத் தவிர்த்து  ஒரு வணிகனை பாட்டுடைத் தளைவனாக வரித்துப் பாடப்பாட்ட முதல் காப்பியம் சிலப்பதிக்காரமே. அந்த வகையில் அதுவே தமிழில் முதன் முதல் தோன்றிய குடிமக்கள் காப்பியமாகும்.

சங்க காலத்தில் தமிழின் தமிழகத்தின் தமிழ்ப்புலவர்களின் நிலையை இன்றைக்கும் தாம் தெரிந்து கொள்வதற்கு தோன்றாத் துணையாய் இருப்பது சங்க இலக்கியங்களே. அந்த வகையில் இலக்கியங்கள் காலத்தின்  கண்ணாடி என்பது எல்லா நாட்டு அறிஞ்ர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.

அதே போல தற்காலத்தைப் பற்றி எதிர்காலத்துக்கு எடுத்துச் சொல்லப் போவது இன்றைய இலக்கியங்களே.  அதனால் தமிழின் இன்றைய இலக்கியங்களை இன்றைய காலகட்டத்தை பிரதிபலிக்கக் கூடியதாய் படைக்க வேண்டியது அவசியமாகிறது.  அதே நேரத்தில் செம்மொழித் தமிழின் நீட்சியாய் இன்றைய தமிழ் இலக்கியங்களும் தமிழ் மொழியின் பெருமைகளை இழக்காமல் அதே நேரத்தில் காலத்தின் அலையோட்டத்தில் அமிழ்ந்து போய் விடாமல் காலத்தைத் தாண்டி வாழும் படைப்புகளாய் ஜீவிதம் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் ஆகிறது...

இந்தக் கோணத்தில் தற்கால தமிழ் இலக்கியம் பற்றிய  புரிதல் நமக்கு அவசியம்.

வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டுகிற சிறப்பில் தமிழின் சங்க இலக்கியத்திற்கு ஈடு இணை இல்லை.  இதே ஈடு இணை எதிர்காலத்திற்கான தற்கால படப்பிடிப்புக்கும் தேவை என்றே சங்க இலக்கியங்கள் நமக்கு பாடம் சொல்கின்றன.

இலக்கியத்தை பாட்டில் வடித்தது பண்டைய காலம்;  உரைநடையில் சொல்வது தற்காலம்.   இதை ஒழுங்கில் சொல்ல வேண்டுமானால், பண்டைய கால கதைப்பாடல்கள்,  காப்பியங்கள்  என்று நம்மால் அடையாளப் படுத்தப்பட்டன.  அன்றைய காப்பியங்கள் தாம் இன்று நாவல் என்று பெயர் கொண்டு வலம் வருகின்றன.

சிலப்பதிகாரமும், மணிமேகலையும் அன்றைய காப்பியங்கள் என்றால் கல்கியின் அலைஓசையும், ஜெயகாந்தனின்  'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகமும் .சமகால நாவல்கள்.

நம் தேசத்தில் நூற்றைம்பது  கால அன்னிய ஆங்கிலேயர் ஆட்சி எல்லாவற்றிலும் தன் தடத்தைப் பதித்திருப்பது போல இலக்கியங்களிலும் தன் தடத்தைப் பதித்திருக்கிறது.

நாம் காப்பியங்கள் என்று பெயர் சூட்டியவை போன்று அமைந்திருப்பதை அவர்கள் நாவல் என்று அழைப்பார்கள் என்று புரிந்து கொண்டோம். அவர்கள் நாவல் என்று அழைத்ததினால் அத்தகையவற்றை நாமும் நாவல் என்று அழைக்கத் தலைப்பட்டோம்.

நாவல் என்பதனை புதினம் என்று அழைப்பதினால் அது ஒன்றும் தமிழ் வடிவமாகி விடாது.    ஆங்கில நாவல்கள் போன்று உரைநடையில் நாமும் நாவல்கள் படைக்கத்  தொடங்கினோம் என்பதே உண்மை.


(தொடரும்)

Wednesday, January 27, 2021

மொழி

 'ஒரு மொழியின் வளர்ச்சிப் போக்கும் அதற்கான  உந்து சக்திகளும்'  என்று இந்தத் தொடருக்கு தலைப்பு வைக்கலாம் என்று தீர்மானம் செய்து தலைப்பாக தட்டச்சும் செய்து விட்டேன்.


ஒரு தலைப்பே அதன் உள்ளடக்கத்தைச் சொல்கிற மாதிரியான தலைப்பு அது. ஆனால் இன்றைய வாசக ஆர்வம் இதையெல்லாம் வாசிக்கக் கூடத் தயங்கும் கூட இல்லை, திரும்பியே பார்க்காது என்கிற அச்சத்தில் தலைப்பை மாற்றினேன்.   குறைந்தபட்சம் இந்த ஆள் என்ன எழுதியிருக்கிறான் என்று பதிவைத் திறந்தானும் பார்க்கலாம் என்கிற நம்பிக்கையை இந்த தலைப்பு ஏற்படுத்தும் என் கிற நினைப்பில் துணிந்தேன்!

--- ஜீவி  .


'ஷ'
=======================

இந்த வடமொழி எழுத்து 'ஷ'' என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை. அது நம் கையில் சிக்கி படாதபாடு படுகிறது.  வேண்டும் மாமியார், வேண்டாத மாமியார் போல சில நேரங்களில் நமக்கு இந்த 'ஷ' வேண்டும்.  சில நேரங்களில் வேண்டாம் என்கிற போக்கும் உண்டு. பலர் இந்த 'ஷ'வை தீர்மானமாக எழுத்தில் உபயோகப்படுத்துவதைத் தவிர்த்து விடுகின்றனர். நாளாவட்டத்தில் 'ஷ' எழுத்தே தமிழ் எழுத்து வடிவில் புழக்கத்தில் இராமல் போய்விடும் போலிருக்கிறது.

வடமொழி வெறுப்பா என்று நினைத்தால் அதுவும் இல்லை என்று தெரிகிறது. 'ஷ்'ஷைத் தவிர்ப்பவர்கள், 'ஷ்'க்கு பதில் 'ஸ்'ஸை உபயோகிப்பதால், 'ஸ்'ஸும் வடமொழி தானே என்று ஒரு பக்கம் நினைப்பு ஓடுகிறது.

(உதாரணம்:  நாகேஷ் -- நாகேஸ்,  ராஜேஷ் --ராஜேஸ்)  ,

இதில் இன்னொரு முரண்பாடான விநோதம் கூட.   பேச்சு வழக்கில் எங்கெல்லாம் 'ஸ', 'ச' வருகிறதோ அங்கெல்லாம் வெகு சரளமாக 'ஷ'வை நகர்ப்புறங்களில் பெரும்பாலோர் உபயோகப்படுத்துகின்றனர்.   ஷங்கவி, ஷங்கர், ஷக்தி, ஷம்யுக்தா  இப்ப்டி.

'ஷ'வைத் தவிரிக்கவே முடியாத சில சொற்கள் உண்டு.

உஷாபாஷை, கோஷ்டி

தமிழ் எழுத்து  'க்'கைக் கண்டால் ஏகக் காதல் இந்த 'ஷ'வுக்கு.  என்ன கெமிஸ்ட்ரியோ தெரியலே,, அந்த 'க்'கை நெருங்கினாலே அதனுடன் ஒன்றரக் கலந்து ஈருயிர் ஓருடலாய் ஒன்றி விடுகிறது..

ரிக் ஷா -- ரிக்ஷா

சில ஆங்கிலச் சொற்களைத் தமிழில் எழுதும் பொழுது 'ஷ'வை உபயோகப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லாது போகும்.

ஷூ,  பாலீஷ்.மஷ்ரூம்,

இன்னொரு பக்கம் வடமொழி எழுத்துக்களை தமிழ் படுத்துகிறேன் பேர்வழி என்று அதற்கான தமிழ்ச் சொற்களே மறந்து விடும் அளவுக்கு பரவலாகிப் போயிருக்கிறது.

சில உதாரணங்கள்:                          
                                                            
இஷ்டம்' என்பதை இட்டம் என்று வலிந்து தமிழ் படுத்துவதை விட்டு, விருப்பம்' என்று அழகு தமிழில் எழுதலாம்.

வருஷம், என்பதனை வருடம் என்று எழுதாமல் ஆண்டு எனலாம்.

கஷ்டம், 'கட்டம்' ஆவதைத் தவிர்த்து துன்பமாகலாம்.

நஷ்டம், நட்டம் ஆகாமல் இழப்பு ஆகலாம்.

விஷயம் விடயம் என்றோ விதயம் என்றோ ஆகாமல்  செய்தி ஆகலாம.

பாஷை  எந்த  சிதைவும் இல்லாமல்  மொழி  ஆகலாம்.


இப்படி நிறைய அழகழகான தமிழ் சொற்கள் புழக்கத்திற்கு வராமலேயே நாளாவட்டத்தில் மறக்கப்பட்டு விடுமோ என்று அயர்வாக இருக்கிறது.

தற்சமம், தற்பவம் என்கிற இலக்கண விதிகள் எல்லாம்  இருக்கட்டும். வடமொழி எழுத்தைத் தவிர்க்க முயற்சித்து அதற்கு தமிழ் மாற்று  எழுத்து எழுதுவது, பலநேரங்களில் நல்ல பல தமிழ்ச் சொற்களையே தவிர்த்ததாகி விடுகிறது.

அந்த வடமொழி சொல்லின் அர்த்தத்தைக் கொடுக்கக் கூடிய தமிழ் சொற்கள் உபயோகத்திற்கு வராமலேயே மறக்கப்படுகின்றனவே என்று ஆதங்கமாக இருக்கிறது.
                                               
தமிழின் தனிச் செல்வம்,  ழ
=======================                                              

வடமொழி 'ஷ'வைப் போலவேயான நிலை 'ழ'க்கு நேராமல் இருக்க வேண்டும்.  'ழ'வை உச்சரிப்பதே பலருக்கு சோதனையாக இருக்கிறது. தொலைக்காட்சி போன்ற மக்கள் நேசிக்கும் ஊடகங்களில் கூட 'ழ'வைச் சரியாக மொழிய வேண்டும் என்றோ அதற்கான பயிற்சியும் பழக்கமும் பெறவேண்டும் என்பதிலோ அக்கறையோ ஆர்வமோ கொள்ளாத நிலையில் இருக்கிறது.  'ழ'  தான் இப்படி என்றால் சமீப  காலங்களில் 'ள'வும் இந்த பட்டியலில் சேர்ந்திருக்கிறது.

தமிழுக்கு சிறப்பு சேர்ப்பது 'ழ' எழுத்து.  ஆங்கிலத்தில் ''வை எழுதும் பொழுது,  பெரும்பாலும் ஆங்கில 'L' எழுத்தையே உபயோகிக்கிறோம். பத்திரிகைகளில் கூட  Tamil Weekly, Tamil Daily தான்.   தமிழை TAMIZH என்று எழுதுவோர் இல்லை.புதுச்சொற்கள்
==============

காலத்தின் தேவைகளூக்கேற்ப எல்லா மொழிகளிலும் புதுச் சொற்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.  புதியன புழக்கத்திற்கு வருவதற்கு பழையன கழிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

அடுத்த நாளுக்கு இன்றைய நாள் பழசு;  இன்றைய நாளுக்கு நேற்றைய நாள் பழசு என்பார்கள்.  புதுச் சொற்கள் வருகையைத் தவிர்க்க முடியாது.  அது காலத்தின் கட்டாயம்.  தலைக்கவசம்-- தவிர்க்க முடியுமா, நம்மால்?..

இன்னொன்று.  எந்த மொழியின் வளர்ச்சியும் அது எந்த அளவு வெகுதிரள் மக்களின் நாவினில் எழுத்தில் புழக்கத்தில் இருக்கிறது என்கிற தகுதி கொண்டே அந்தந்த சொற்களின் ஆயுசு காலமும் தீர்மானிக்கப்படும்.

மொழி ஒன்றும் கண்ணாடி சட்டத்திற்குள் அடைத்து  பார்ப்பதல்ல. அழகு பார்ப்பதற்கும் அல்ல. அது அந்த மொழி பேசும் மக்களின் உபயோகத்தில் நீடித்து வாழ வேண்டும்.  எந்த மொழிக்கும் உயிர் கொடுத்து வாழையடி வாழையாக வளர்ப்பவர்கள் பண்டிதர்கள் அல்ல, அந்த மொழி பேசும் எளிய வெகுதிரள் மக்களே.

எழுத்தாளர் சுஜாதா சர்வசாதாரணமாக தன் எழுத்தில்  நிறைய புதுச் சொற்களை வெள்ளோட்டமிட்டுப் பார்த்திருக்கிறார்.  அவர் எழுதிய 'கிளிக்கினான்' என்கிற சொல் அவரை நினைத்தாலே என் நினைவுக்கு வரும். ஒரு வினையின் காரணமாக அந்த வினைக்கான சொல் உருவாகலாம். சுஜாதா ஒரு வினையின் ஒலியை வைத்தே சொல்லை உருவாக்கியிருக்கிறார்.

நேற்று தினமலரில் 'அலம்பல்' என்ற சொல்லை வாசித்து விட்டு இதற்கு வேர்ச்சொல் என்னவாக இருக்கும் என்கிற யோசனையில் ஆழ்ந்தேன்.

தெரிந்தவர்கள் சொல்லலாம்.

இன்று தொலைக்காட்சியில் 'கலாய்த்தான்' என்று கேட்ட சொல் எப்படி உருவாக்கம் பெற்றிருக்கும் என்று யோசனையாயிற்று.

இப்படி நிறைய சொற்கள்.  இதை வாசிக்கும் அன்பர்கள் தங்களுக்குத் தெரிந்த புழக்கத்திற்கு வந்திருக்கும் புதுச்சொற்களைச் சொல்லுங்கள்.  அந்த சொல் எப்படியாக உருப்பெற்றிருக்கும் என்கிற கண்டுபிடிப்பையும் சேர்த்துச் சொல்வீர்கள் என்றால் நம்மால் முடிந்தது,  பின்னூட்டங்களில் கைத்தட்டலாம்.


(தொடரும்)

Related Posts with Thumbnails