2. மனத்திற்குக் கிடைத்திட்ட பேறு
மனவியல் பேராசிரியர் மேகநாதனின் இன்றைய சொற்பொழிவுத் தொடர்ச்சியை எதிர்பார்த்து வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் சீக்கிரமாகவே அவை நிறைந்து விட்டது. மேகநாதனும் நிறைய குறிப்புகளோடு வந்திருந்தார். மனோகர்ஜியுடன் தொடர் சொற்பொழிவுகளின் தொடர்ச்சியைப் பற்றி விளக்கிச் சொல்லிவிட்டு, கிருஷ்ணமூர்த்தி மேடையேறி மேகநாதனை முதல் நாள் சொற்பொழிவின் தொடர்ச்சியாய் பேச அழைத்தார். மேல்துண்டை சரிசெய்து கொண்டு மிகுந்த உற்சாகத்துடன் மேடையேறிய மேகநாதன்
அமர்ந்திருந்த அவையோருக்கு வணக்கத்தைத் தெரிவித்து விட்டு தன் பேச்சை முதல் நாள் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.
"மனம் என்பது பற்றி இன்றைய உரையில் ஓரளவு குறிப்புகளைக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்...
"'மனம்' என்ற ஒற்றைச் சொல்லால் மனத்தைப் பொதுவாக நாம் குறிப்பிட்டாலும் மூன்று நிலைகளில் அவற்றின் செயல்பாடு இருப்பது யோசித்துப் பார்த்தால் புலப்படும்.
அவற்றை வசதிக்காக----
புறமனம்--- Conscious Mind
உள்மனம்--- Sub Conscious Mind
ஆழ்மனம்--- Super Conscious Mind
----என்கிற மூன்று நிலைகளில் அவற்றின் செயல்பாட்டை அடக்கலாம்.
"உருவமில்லாத ஒரு மனத்தையே விஞ்ஞானத்தால் நிரூப்பிக்க முடியாத போது அதற்கு மூன்று நிலைகளா என்று ஆச்சரியப்படாதீர்கள்.
"ஒன்றை நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும். மனம் என்பது விஞ்ஞானக் கண்டுபிடிப்பு அல்ல --- உறுப்பு கொண்டு அதன் இருப்பை நிரூபிக்க முடியாததால். இதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை.
"மனம் என்பது மெய்ஞானம் சார்ந்த உண்மை ---- உணர்வு கொண்டு அதன் இருப்பை உணர்வதால். 'மனம்' இல்லையெனில், வாழ்க்கை ஸ்தம்பித்து விடும் என்பதும் உண்மை. மனிதனின் ஒவ்வொரு நிமிட வாழ்க்கைச்சாரமும் அவனது மனத்தைச் சார்ந்திருப்பதை வெகு சாதாரணமாக நாம் அறியலாம். வாழ்க்கை வெறும் வரட்சியாகப் போய்விடாமல், அதற்கு பசுமை ஏற்படுத்த வேண்டி இறைவன் கொடுத்த வரம் மனம். இறைவன் பார்த்துப் பார்த்து படைத்த படைப்பின் உச்சபட்ச உன்னதம் இந்த 'மனம்'.
"அதனால் தான் இறைவனிலிருந்து அவனை உணர்ந்து அவன் மேல் செலுத்தும் பிரேமையாகிய பக்தி வரை எல்லாமே உணரப்படுகிற உணர்வு சம்பந்தபட்டவைகளாய் இருக்கின்றன. இந்த உணர்வு இல்லையெனில், பக்தி இயக்கமோ, இலக்கியமோ இல்லை. திருப்பாவையும், திருவெம்பாவையும் ஜீவனற்று வெற்று எழுத்துச் சொற்றொடர்களாய் இருந்திருக்கும்; சூடிக்கொடுத்த சுடர்க்கொடியையோ மாணிக்கவாசக சுவாமிகளையோ, அவர்தம் நெஞ்சத்து உணர்வுகளையோ நாம் அறிய முடியாது போயிருக்கக் கூடும்.
"நீ நாளும் நன்நெஞ்சே நினை கண்டாய் யார் அறிவார்
சா நாளும் வாழ்நாளும் சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூ நாளும் தலைசுமப்பப் புகழ்நாமம் செவி கேட்ப
நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே"
---என்பார் ஞானசம்பந்தப் பெருமான்.
"மனத்தின் 'பிர்மாண்டம்' அளவிட முடியாத ஒன்று. இமயமலையின் உச்சிக்கும், ஆல்ப்ஸ் மலையின் அடிவாரத்திற்க்கும் ஒரு நொடியில் சென்று மீளலாம். அங்கெல்லாம் சென்று வந்த அனுபவம் இருப்பின் இன்னும் விசேஷம்; நம் உடலையே அங்கு கொண்டுபோய்க் கிடத்தலாம்.
"மனத்தின் இருப்பை நிரூபணம் செய்து அறிவிக்க முடியாத அவஸ்தையில் தான் மூளையில் உறைந்திருக்கும் நியூரோன்களின் செயல்பாடாக் 'மனம்' என்பது இருக்கலாம் என்கிற முடிவுக்கு வருகிறது விஞ்ஞானம். அதாவது மூளை சார்ந்த ஒரு சமாசாரமாக விஞ்ஞானம் 'மனத்தை' கொள்கிறது. ஆனால் 'மனம்' என்ற ஒன்றே இல்லை என்று கறாராக அதனால் கணிக்க முடியவில்லை என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
"இன்னொன்று. சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். ஆன்மீகத்தின் அடித்தளமே இந்த மனம் தான். 'மனம்' என்ற ஒன்று, இன்னது என்று மட்டும் விஞ்ஞானத்தின் வெளிப்பாடாய்க் கண்டுபிடித்து நிரூபித்து விட்டால், ஆன்மீகத்தின் அஸ்திவாரம் ஆட்டம் காணாது; இன்னும் பலப்படும் என்பது தான் நிதர்சன உண்மை.
"மனத்திற்கும் உடம்பிற்கும் நேரடித் தொடர்பு கிடையாது. தொடர்புக்கு வழி (via) மூளைதான். மனம் உடம்பைத் தன் ஆளுகைக்கு உட்படுத்துவதெல்லாம் மூளை வழி தான்.
அதனால் மூளை அழியின், மனத்தின் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. உடலுக்கும், உடலின் உள்ளுருப்பான மூளைக்கும் உண்டான அழிவு மனத்திற்கு இல்லை. மனம் அழிவற்ற சாஸ்வதமானது. மனத்திற்கு அழிவில்லை என்பதினால் மனதால் கொண்ட எண்ணங்களுக்கும் எஞ்ஞான்றும் அழிவில்லை. அதனால் தான் மனத்தை வசப்படுத்திய எண்ணங்கள் ஆயுட்பரியந்தமும் நினைவை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன. ஒருவரின் சுயஎண்ணங்கள் அவரைவிட்டு அழிவதில்லை என்பது மட்டுமல்ல, எழுத்தாக-- பேச்சாக வெளிப்பட்ட எத்தனையோ அறிஞர்களின் எண்ணங்கள் அவர்தம் வாழ்வுக்குப் பின்னரும் உயிரெழுச்சி கொண்டு இன்னொருவரின் மூலமாக செயல்படுவதைப் பார்க்கிறோம். அதாவது, எண்ணங்களால் கூடு விட்டு கூடு கூடப்பாய முடியும். சமூக வளர்ச்சி, அதன் நலன் சம்பந்தப்பட்ட உயர்வான சிந்தனைகளுக்கு அந்த சிந்தனைகளுக்கே உயிருள்ள மாதிரி தனிப்பட்ட வளர்ச்சியே உண்டு. அப்படிப்பட்ட சிந்தனைகள் பலரின் ஒட்டுமொத்த சிந்தனை ஆகி மேலும் மேலும் செழுமை படுத்தப்படும். அப்படிபட்ட சாகாவரம் பெற்ற பல சிந்தனைகளைத் தொடக்கி வைத்த பெருமை கொண்ட ஞானிகள் பலரை உங்களுக்கும் தெரியும்.
"உடல், அதன் உள்ளிருக்கும் உறுப்புகள் அதற்கான ரசாயன சேர்க்கைகள் என்று அத்தனையும் அழிந்து போகலாம். இறைவனுடனான எண்ண உறவாக, பக்தியாக பரிமளிக்கும் மனத்தின் மாசுமருவற்ற எண்ணங்கள் ஒரு 'கடக்கும் சாதனமாக' உருமாற்றம் கொண்டு அழியாது நிலைத்திருக்கும் பேறு பெற்றது,
"ஆதிசங்கரர் பெருமான் தாம் அருளிய 'சிவானந்த லஹரீ'யில் பக்தியின் இயல்பு பற்றிச் சொல்ல வந்தவர், மனத்திற்கு மட்டும் கிட்டும் பாக்கியம் பற்றிச் சொல்கிறார்:
"அங்கோலம் நிஜபீஜஸந்ததி--ரயஸ்காந்தோபலம் ஸூசிகா,
ஸாத்வீ நைஜவிபும் லதா க்ஷிதிருஹம் ஸ்ந்துஸ்ஸ்ரித்வல்லபம் !
ப்ராப்னோதீஹ யதா ததா பசுபதே: பாதாரவிந்த-த்வயம்,
சேதோவ்ருத்தி- ருபேத்ய திஷ்டதி ஸதா ஸா பக்திரித்-யுச்யதே
"அங்கோலம் என்பது ஒருவகை மரம். அந்த மரமும், அதன் விதை வர்கங்களும், காந்தத்தை ஊசியும், நாயகனை நாயகியும், மரத்தைக் கொடியும், கடலை நதியும்--என்று இவை ஒன்றுக்கொன்று ஈர்ப்புடன் இருப்பதைப் போல, மனத்தின் நாட்டம் எஞ்ஞான்றும் பெருமானுடைய தாமரைத் திருவடிகளைச்சேர நிலை பெற்றிருந்தால், அந்த பேற்றுக்குப் பெயர் தான் பக்தி என்கிறார்.
"மனம் அவ்வளவு பெருமை பெற்றது. மனமாகிய புஷ்பம் மலர்ந்திருக்க வேண்டும். வாட்டம் இயல்பாயினும், அதனை வாடி நைந்து போகாமல் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அன்றலர்ந்த மலராக யாரிடமிருந்து பெற்றோமோ அவரிடமே அதே நிலையில் அதைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய க்டமையாகிய இறுதிப் பேறும் பொறுப்பும் இருக்கிறது நமக்கு என்பதே தாத்பரியம்.
"இன்றைய காலை அமர்வை நிறைவு செய்வதற்கு முன், என்றென்றும் நம் நினைவில் இருக்குமாறு தாயுமானவர் சுவாமிகள் பாடல் ஒன்றை இசைத்து
முடிக்கின்றேன். இறைவனுடன் ஒன்றரக் கலக்க வேண்டுமென்ற தணியாத தாபத்தை இதைவிட அழகாக யாரால் வெளியிட முடியும், பாருங்கள்!
"வைத்திடுங் காலைப் பிடித்துக் கண்ணில் மார்பில்
வைத்தணைத்துக் கொண்டு கையால் வளைத்துக் கட்டிச்
சித்தமிசை இருத்திப் பிடித்துக் கொண்டு
தியக்கமற இன்பசுகஞ் சேர்வதென்றோ?"......
மனவியல் அறிஞர் மேகநாதன் மேடைவிட்டு இறங்கியதும் பிரதிநிதிகளின் பெருங்கூட்டம் ஒன்று ஆர்வத்துடன் அவரைச் சூழ்ந்து கொண்டது. 'மனம்' என்கிற சப்ஜெக்ட் அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. அவரவர்களுக்கு இந்த விஷயத்தில் ஏகப்பட்ட சந்தேகங்களும் இருந்தன. அவர்கள் கேட்கக் கேட்க ஒவ்வொன்றையும் புன்முறுவலுடன் கேட்டுக் கொண்டார் அவர்.
இறுதியில் "ஒன்று செய்யலாமே?" என்றவர் கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்தார். "இன்று மாலை அமர்வை மட்டும் கேள்வி-பதில் போக்கில் வைத்துக் கொண்டால் போயிற்று. எனக்குத் தெரிந்ததைச் சொல்ல முயற்சிக்கிறேன்" என்றார்.
எல்லோருக்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி; நீண்ட கைத்தட்டலுடன் அதை அவர்கள் வெளிப்படுத்தினர்.
பக்கத்தில் நின்றிருந்த மாலு ஒரு புதுவகை உரையை எதிர்கொண்ட உற்சாகத்தில் தோற்றமளித்தாள். அவளுக்கும் மேகநாதனிடம் கேட்க நிறைய கேள்விகள் இருந்தன.
தேடல் தொடரும்)