மின் நூல்

Thursday, June 25, 2020

இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும்....

றக்கமுடியாtத   திருநெல்வேலி நினைவுககள் இந்த வயதிலும் இ்ப்பொழுதெல்லாம் அடிக்கடி  நினைவுக்கு  வந்து  சந்தோஷ அலைகளை என்னுள் புரளச் செய்கின்றன.

திண்டுக்கல் செயிண்ட்  மேரீஸ் பள்ளியில்  ஆறாவது ஏழாவது  வகுப்புகளை முடித்துக்  கொண்டு எட்டாவதுக்கு    திருநெல்வேலிக்கு  வந்து விட்டேன்.   திருநெல்வேலியில் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரிப் பள்ளியில் படிப்பு.   மஹாகவியும்  புதுமைப்பித்தனும் பயின்ற பெருமை வாய்ந்த பள்ளி இது.

அது 1957-ம் ஆண்டு.  திருநெல்வேலி வண்ணாரப் பேட்டையில் வாடகை வீடு.   வண்ணாரப்பேட்டை   தாமிரபரணி படித்துறையில்  இறங்கி ஆற்றைக் கடந்து  அக்கறையிலிருந்த மாந்தோப்பில் நுழைந்து ஏறி இறங்கி ரோடுக்கு வந்தால் ஜங்ஷன் அந்த வயது குஷியில் கொஞ்ச தூரம் தான்.    திருநெல்வேலி    ஜங்ஷன் பகுதியில் தான் ம.தி.தா. இந்துக் கல்லூரி சார்ந்த ஹைஸ்கூல் இருந்தது.   உயர்நிலைப் பள்ளிப் படிப்பு என்பது அப்பொழுதெல்லாம் பதினோரு வகுப்பு வரை.  ஆறாவது வகுப்பிலிருந்து பாரம் (FORM)  என்று சொல்வார்கள்.    ஆறாவது பாரம் தான் எஸ்.எஸ்.எல்.ஸி.



ஆற்றைக் கடக்கும் பொழுதே சுலோச்சனா முதலியார் பாலம் கண்ணுக்குத் தட்டுப்படும்.  பாலத்தில் நடப்பது சுற்றுவழி என்று ஆற்றைக் கடந்தே தினம் பள்ளி செல்வோம்.  அந்த வயதில் நண்பர்களுடன் முட்டி அளவு நீரில் ஆற்றை அளைந்து கொண்டு செல்வது அற்புதமாக இருக்கும்.   தினந்தோறும் காலைக் குளியல் தாமிரபரணி ஆற்றில் தான். எங்களது நண்பர்களின் கூட்டம் பெரிய ஜமா. சுமார் 15 பேர்கள் தேறும்.

தாமிரபரணி ஆற்றை நினைவில் நினைத்து நினைத்து எழுத எழுத இனிக்கிறது.   புதுமைப் பித்தன் வாழ்ந்த வண்ணாரப் பேட்டை சாலைத்தெரு,  இன்று புதுமைப்பித்தன் வீதியாகியிருக்கிறது.  வண்ணாரப்பேட்டை எங்கள்
பகுதியிலிருந்து கிளையாகப் பிரிந்து செல்லும் நீண்ட தெரு வழியே நடந்தால், ஐந்து நிமிட நடை தூரத்தில் படித்துறை வந்து விடும். படித்துறையில் பிள்ளையார்.    காலையில் ஆற்றுக்கு வந்துக் குளித்துவிட்டுச் சென்றிருக்கும் பெண்கள் கூட்டம் வழிபட்டிருக்கும் சங்குப்பூக்கள் திருமேனியில் செருகப்பட்டிருக்கும் பிள்ளையாரை உற்றுப் பார்த்தால் சிரித்துக் கொண்டிருப்பது போலத் தோற்றமளிப்பார். நாங்களும் பிள்ளையாரை ஒரு சுற்று சுற்றித் தோப்புக்கரணம்   போட்டுவிட்டு படித்துறைப் படிகளில் இறங்கி தாயின் மடி நோக்கி ஓடும் குழந்தைகள் போல, மணல்வெளி தாண்டி ஆறு நோக்கி ஓடுவோம்.

அந்த ஏழுமணிக்கெல்லாம் காலைக் குளியலுக்காக நண்பர்கள் படித்துறையில் கூடி விடுவோம்.  அந்தக் காலைப் பொழுதில்  கணுக்கால் நீரில் படும் பொழுதே உற்சாகம் உள்ளத்தில் கொப்பளிக்கும்.   இடுப்பும், மார்புப்பகுதியும் நீரில் அழுந்தி, இருகைகளையும் நீட்டி நீரைத் துளாவுகையில் பரம சுகமாக இருக்கும். ஜிலுஜிலுப்பு என்பது அறவே இல்லாத அந்த வெதுவெதுப்பு எப்படித்தான் தாமிரபரணிக்கு வாய்த்தது என்பது அந்த வயதில் எங்களுக்குப் புரியாத அதிசயம்.

ஆற்றின் வடகிழக்குப் பக்கம் இக்கரையிலிருந்து முக்கால்வாசி தூரத்தில் ஒரு பெரிய யானையே நீரில் நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிற மாதிரி, யானைப்பாறை என்று அழைக்கப் படும் மிகப்பெரிய பாறை ஒன்று உண்டு. யானையின் முதுகு மட்டுமே வெளித் தெரிகிற மாதிரி முண்டும் முடிச்சுமாக நீரில் அமிழ்ந்திருக்கும் அந்த பெரிய பாறையின் மேல் பகுதி மட்டும் கண்ணுக்குத் தெரியும்.

பாறையைச் சுற்றி சுழல் போல் ஆற்றுநீர் சுழித்துக் கொண்டோடும். . அந்தச் சுழலின் போக்குக்கு எதிராக நீந்தி யார் முதலில் யானைப் பாறையின் முகட்டுக்கு ஏறுகிறார்கள் என்பது தினம் தினம் எங்களுக்குள் போட்டி.


எந்த முயற்சியும் வேண்டாம். அந்தச்சுழல் பக்கம் லேசாக உடலைக் கொடுத்தால் போதும். பாறையைச் சுற்றி அது இழுத்துக் கொண்டு போகும் வேகத்தில், நீரில் அழுந்திய பாறையின் துருத்திக் கொண்டிருக்கும் ஏதாவது முனை பற்றி, பாறையின் பக்கவாட்டு பள்ளத்தில் கால் புதைத்து எழும்பி பாறை பற்றி ஏறி விடலாம். சில நேரங்களில் பாறையின் முதுகு கையில் படாமல் வழுக்குவதும் உண்டு. அந்த நேரங்களிலெல்லாம், ஆற்றின் சுழலின் போக்குக்குப் போய், இன்னொரு சுற்று சுற்றி வேறு பகுதியில் ஏற வேண்டும். சில நேரங்களில் பச்சை நிறம் படிந்த நீரின் அடி ஆழத்திற்குப் போய் விடுவதுண்டு.   ஆழத்திற்குப் போனால் மறக்காமல் ஆற்றின் அடி ஆழ மணலை உள்ளங்கையில் வாரி எடுத்து வெளியே வருவோம். நீரின் மேற்பரப்புக்கு வந்து மணலை வீசி வெற்றி வீரரகள் போல விளையாடுவதுண்டு.  இளம் வயதின் திகட்டாத கொண்டாட்டங்கள்.

ஒருதடவை இப்படித்தான் யானைப் பாறையின் பிடி கைக்கு சிக்காமல் வழுக்கி ஆற்றின் அடி ஆழத்திற்குப் போனவன், சுழலின் போக்குக்கே இழுத்துக்கொண்டு போய், தட்டுத்தடுமாறி எப்படியோ இன்னொரு பக்கம் பாறை பிடித்து மேலேறி விட்டேன். கால் வெடவெடவென்று நடுங்குகிறது. இப்படிப்பட்ட அனுபவம், இதற்கு முன் எப்போதும் ஏற்பட்டதில்லை. மறுபடியும் நீரில் குதித்துத்தான் கரைக்கு மீளவேண்டும். என்னைத் திடப்படுத்திக்கொண்டு தைரியத்துடன் நீரில் குதித்து சுழல் தாண்டி மீண்டேன்.

எனது வலது கை ஆயுள் ரேகையில் வெட்டிச்செல்லும் தீவுக்குறி ஒன்றுண்டு. பின்னாளில் என் கைபார்த்த ரேகை ஜோதிடர் ஒருவர், 'உங்களுக்கு பதிமூன்று-பதினாங்கு வயதில் கண்டம் ஒன்று வந்திருக்குமே' என்றார். நானும் இதுதான் அந்த கண்டம் போலும் என்று நினைத்துக் கொள்வதுண்டு.

இப்படிப்பட்ட இளமை நினைவுகளையொத்த இன்னொன்றைப் படிக்கும் பொழுதோ, கேட்கும் பொழுதோ, அந்த செய்தி தரும் இன்ப அனுபவத்தில் நமது முழு மனசும் ஒன்றித்திளைத்து வார்த்தைகளில் வடிக்க இயலா மகிழ்ச்சியளிக்கிறது.

மாறிச் செல்லும் கால வேகத்தில் கூட இளமைக்கால சில விளையாட்டுகள் எக்காலத்தும் மாறுதலற்ற நிலையானவை போலும்! இளையோர் ஆற்றில் குளிக்கையில், ஆற்றின் அடிச்சென்று கைநிறைய மணல் அள்ளி, தான் ஆற்றின் அடிஆழம் வரைச் சென்றதற்கு சான்று போல அந்த மணலை மற்றையோருக்குக் காட்டி மகிழ்வது சங்ககாலத்தில் கூட இருந்த ஒரு விளையாட்டு தான் என்று 'தொடித்தலை
விழுத்தண்டினாரி'ன் புறப்பாடலின் மூலம் நமக்குத் தெரிய வந்து வியப்பு மேலிடுகிறது...

தொடரும் இருமலுக்கிடையே, தமது இளமை நினைவுகளை எவ்வளவு அழகாக அந்த புலவர் பெருந்தகை நினைவு கூர்ந்திருக்கிறார் பாருங்கள்:


இனி நினைந்து இரக்கம் ஆகின்று; திணி மணல்
செய்வுறு பாவைக்குக் கொய் பூத் தைஇ,
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து,
தழுவுவழித் தழீஇ, தூங்குவழித் தூங்கி,
மறை எனல் அறியா மாயம் இல் ஆய்மொடு
உயர் சினை மருதத் துறை உறத் தாழ்ந்து,
நீர் நணிப் படி கோடு ஏறி, சீர்மிக,
கரையவர் மருள, திரையகம் பிதிர,
நெடு நீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
குளித்து மணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே! யாண்டு உண்டு கொல்லோ--
தொடித் தலை விழுத் தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இரும் இடை மிடைந்த சில் சொற்
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே?


(புறநானூறு--243)

இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் வருத்தம் மேலிடுகிறது
மணல் பிடித்துச் செய்த உருவிற்கு
கொய்த பூவைச் சூட்டியும்
பொய்கையில் இளம் பெண்களின் கைகோர்த்துக் களித்ததுவும்
அவர் தழுவும் பொழுது தழுவியும்
அசைந்தாடுகையில் அசைந்தாடியும்
ஒளிவு மறைவற்ற வஞ்சனையறியா
நண்பர் குழாமொடு விளையாடி மகிழ்ந்ததுவும்
மருத மரத்தின் உயர்ந்த கிளைகள் உயரம் தாழ்ந்து
நீரோடு படிந்தவிடத்து அக்கிளை பற்றி ஏறி
உச்சிக் கிளை அடைந்து
கீழே நிற்போர் வியக்க, அவர் மீது நீர் திவலை விழ
'தொடும்..' என நீரில் குதித்து, மூழ்கி
ஆழ் அடிச் சென்று அடிமணல் அள்ளிக் காட்டியும்
--- இப்படியான கள்ளமிலா
இளமைக்காலம் கழிந்து சென்றதுவே!
ஊன்று கோலை ஊன்றி, நடுக்கத்துடன்
இருமலுக்கிடையே சில சொற்கள் மொழியும்
முதியவனான எமக்கே
இனி எப்போது கழிந்த அக்காலம் வாய்க்கும்?...



இப்பாடலை இயற்றியவரின் பெயர் தெரியவில்லை.. ஆனால் அவர் தன்னைத் தானே வர்ணித்த கோலேந்திய அவரின் தோற்றம்,    இலக்கிய ஏடுகளில் அழியாது அவரை நினைவு படுத்தும் சொல்லாக---  'தொடித்தலை விழுத்தண்டினார்' என்று---அவரின் பெயராகவே ஆகிவிட்டது!

'சென்ற காலம் மீளாது இனி' என்பது சித்தர்களின் வாக்கு.  ஆனால் சென்ற காலம் நெஞ்சில் பதித்த தடங்களின் வடுக்கள் நிலையாக நினைவில் பதிந்தவை; குறைந்த பட்சம் எப்பொழுதாவது அமைதி வேண்டிடும் போதோ, அல்லது அமைதியாக இருக்கும் பொழுதோ அவற்றை நினைவுச் சுருள்களில் ஓட்டிப் பார்த்து மகிழும் பொழுது அடையும் இன்பமே அலாதி தான்!

அப்படி அடிக்கடி மகிழ்ச்சியில் ஆழ்வது இந்தக்காலத்துக்கே வாய்த்த 'டென்ஷனை'க் குறைக்கும் அருமருந்து என்பது மட்டும்  உறுதி.

Friday, June 12, 2020

யாயும் ஞாயும் யாராகியரோ?

ரு நெருங்கிய நண்பரின் மகளின் திருமணத்திற்குப் போயிருந்தேன். நான் அவர்கள் வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் நண்பரின் மகள் மிகப்பாசமாக என்னுடன் பழகுவாள். என் மகளின் வயதுதான் அவளுக்கும் இருக்கும்.

கல்யாண நிகழ்ச்சிகளெல்லாம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தன. திருமணத்திற்கு வந்திருந்த பெரும்பாலான நண்பர்களும், உறவினர்களும் சாப்பிட்டு விட்டுக் கலைந்து விட்டனர். இன்னும் சிறிது நேரத்தில் கல்யாணச் சத்திரத்தைக் காலி பண்ண வேண்டும்.

பெண் வீட்டார் தங்கியிருந்த அறையில், கல்யாணப்பெண் தன் பெற்றோரின் கைபிடித்துக் கண்கலங்குகிறாள். அவளுக்கு ஒரே ஒரு தங்கை. அவளின் இன்னொரு கை தன் தங்கையின் தலைவருடித் தடுமாறுகிறது. இத்தனை வருடங்கள் சீராட்டி, கொஞ்சிக் குலவி, தனக்குக் கல்யாணப் பேற்றை அளித்த பெற்றோரைப் பிரிந்து, வேறொரு வீட்டுக்குச் சென்று வாழ வேண்டுமே என்கிற தடுமாற்றம்..  பாசம் என்பது இறுக்கிக் கட்டிய கயிறு போன்றது. அதை லேசில் படாரென்று அறுத்துக் கொண்டு செல்ல இயலாது.. கட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தித்தான் விடுபட வேண்டும்.

பெண்களாய்ப் பிறந்தவர் சுமக்க வேண்டிய பாரத்தை நினைத்தால் கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது. பாட்டியாய்,தாயாய், தமக்கையாய், தங்கையாய், தாரமாய், மருமகளாய், மாமியாராய் பெண்களைத் தொட்டு, ஓ... எத்தனை உறவின் மேன்மைகள்....ஒளி பட்ட இடத்திலிருந்து பிரகாசிக்கும் வைரப் பளீரிடலகள்!...

பெண்களும் மிக லேசாய், இலகுவாய் இந்த பெரும் பாரத்தைப் புரட்டிப்போடும் லாகவம், ..   அந்த மிருதுவான கைகளுக்கும்,தோள்களுக்கும் இந்தப் பாரம் பஞ்சாக மாறிப்போகும் விநோதம் தான் படைப்பின் ரகசியம்!

அந்தக் கல்யாண தினத்தன்று என் நண்பர் தன் மகளை, மாப்பிள்ளை வீட்டார் தங்கியிருந்த அறைக்கு, மனைவி-மாமன் மக்களோடு அழைத்துச் சென்று அவர்களிடம் விட்டுவிட்டுப் போகும் பொழுது, கண்கலங்கித் தன் சம்பந்தியிடம், "ஸார்...அவளுக்கு ஒன்றும் தெரியாது...குழந்தை மனசு. அப்படியே வளர்ந்து விட்டாள்..நீங்கள் தான் தந்தையாய்..தாயாய்.." என்று தழுதழுத்த பொழுது, அருகிலிருந்த எனக்கு நெஞ்சம் கனத்து என்னவோ போலாகிவிட்டது.

அவரது சம்பந்தி,"அதெல்லாம் ஒன்றும் கவலைப்படாதீர்கள்..   என்றைக்கு எங்கள் வீட்டிற்கு வந்து விட்டாளோ, இனி அவள் எங்கள் மகள்..."என்று சொன்னதும், வழிவழியாய் வழக்கமாய்---

--- பெண்ணைப் பெற்றவர்களாலும், இன்னொரு வீட்டு மருமகளாய் பெண்ணை அனுப்பியவர்களாலும் தான் இவற்றையெல்லாம் உணர்வு பூர்வமாக உணரமுடியும் என்று தோன்றுகிறது...

போனவாரம் நண்பர் போன் போட்டு எனக்குச் சொன்னார்: "பிரமிளா வந்திருக்காடா...  உங்களையெல்லாம் பார்க்கணும்ங்கறா...நீயும், தங்கையும் (என் மனைவியும்) வந்திடுங்க..சாப்பாடு இங்கே தான்..என்ன, தெரிஞ்சதா?" என்று உத்திரவு போடுகிற மாதிரிச் சொன்னார்.

நானும் மனைவியைக் கூட்டிக்கொண்டு நண்பர் வீட்டிற்குச் சென்றேன். ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டபடியால், பிரமிளாவைப் பார்க்க வேண்டும், நல்ல சேதி சுமந்து வந்திருக்கும் அவளுடன் பேசவேண்டுமென்று எங்களுக்கும் மிகுந்த ஆசை.

வாசலில் நாங்கள் செருப்பைக் கழட்டிப் போடும் போதே ஓடி வந்து எங்களை அன்புடன் உள்ளே அழைத்துச் சென்றாள் பிரமிளா...கொஞ்சம் சதை போட்டிருந்தாள்; முகத்தில் களையும், கலகலப்பேச்சும்----

சாப்பிடும் போது, தன் அம்மாவிடம் அவள் சொன்னதை அப்படியே இங்கு எழுதியிருக்கிறேன்.. "அம்மா!...எங்க வீட்லே வழக்கமா இட்லிதான் காலை டிபனுக்கு.. தொட்டுக்க சட்னியும், ஏதாவது பொடியும் செஞ்சிடுவேன்.. இவருக்கு தோசைன்னா, அப்பா--அம்மாக்கு இட்லினா, இஷ்டம்! அதனால், முதல் நாள் மாவை----"

-- இங்குதான் பெண் என்பவள் ஜொலிப்பதாக எனக்குப் பட்டது. 'இதுதான் வாழ்க்கை நியதி..இதுதான் சாஸ்வதம்' என்று தன் கணவனின் தாய் தந்தையரை,'அப்பா--அம்மா' என்று அழைக்கிற மாதிரி, எவ்வளவு இயல்பாக உறவுகள் மாறிவிட்டன, பார்த்தீர்களா?..


வியப்புடன், புருவமுயர்த்தி தொடுக்கும் இந்தப் பெண்ணின் அழகு வரிகளைப் பாருங்கள்!

"யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப்பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே."

(குறுந்தொகை:40)

யாய்  என்றால்  என் தாய் என்று அர்த்தம்.   ஞாய் என்றால் உன் தாய்.   எந்தை என்றால்  என் தந்தை,  நுந்தை என்றால் உன் தந்தை என்பதைப் புரிந்து கொள்வதில் சிரமமில்லை.

எவ்வளவு  எளிய வார்த்தைகளில்   கணவன் - மனைவி உறவின் தாத்பரியத்தின் சரித்திரமே சொல்லப்படுகிறது பாருங்கள்:


என் தாயும்  உன்  தாயும்  ஒருவருக்கொருவர் யாரென முன்பே தெரியாதவர்கள்.   அதே மாதிரி தான் என் தந்தையும் உன் தந்தையும்  தங்களுக்குள் இந்த உறவுக்கு முன் அறிமுகமற்றவர்கள்.  அவ்வளவு  தூரம் போவானேன்?.   நாம் இருவருமே  ஒருவருக்கொருவர் முன்னமேயே அறியாதவர்கள்.   ஆனால்  நம் இருவர் நெஞ்சங்கள்?..   ஒன்றை ஒன்று அறிந்து கொண்ட வாக்கில்  பின்னிப் பிணைந்து போனதுவே   என்று  பெண் மருகுகிறாள்.  அந்தப் பின்னிப் பிணைதலுக்கு   செம்புலப்பெயல் நீர் போல  என்று ஒரு உதாரணத்தை புலவர்  கையாண்ட  நேர்த்தி  தமிழ் இலக்கியத்தில்  மறக்கவொண்ணா உதாரணமாய் பதிந்து போயிற்று.

சோவென்று மழை  தாரை தாரையாய் பெய்து  செம்மண் நிலம் பூராவும் விரவிப்  பெருகுகிறது.   நிறம் இல்லா நீர் செம்மண்ணில் ஒன்றரக் கலந்ததும்  மண்ணின் செம்மை நிறத்தை தான் உள்வாங்கி பூசிக் கொள்கிறது.  நீரின் நெகிழ்வுத் தன்மை நிலத்தில்  ஊடுறுவி  நிலமே  நெகிழ்ந்து போகிறது.   இதில் எது நீர், எது  நிலம் என்று பிரித்துப்  பார்க்கவியலாத பிணைப்பு இது.   இந்தப் பிணைப்பை தலைவன்--தலைவி  நெஞ்சப் பிணைப்புக்கு  உதாரணமாக்குகிறார்  புலவர்.

'இந்தச் செம்புலப்பெயல் நீர் போல' உவமையை சிலாகித்து, அதற்கு வெவ்வேறான விளக்கங்கள் கூறி எத்தனையோ பேர் எழுதிவிட்டார்கள்! அதனால், மற்ற வரிகள் கிளர்த்தும் தொடர்பான சிந்தனைகளில் மனம் போய்விட்டது..

இந்த அற்புதமான பாடலை எழுதிய புலவரின் பெயர் கூட அறிய முடியாமல் போய்விட்டபடியால், அவர் பெயரையே "செம்புலப்பெயனீரார்" என்று வழங்கும் படி ஆயிற்று!

எட்டுத்தொகை நூல்களில்  அடங்கிய ஒரு தொகை நூல் குறுந்தொகை.    எட்டு வரிகளுக்குள் அடங்கிய  391 பாடல்கள் குறுந்தொகையில் நமக்குக் கிடைத்திருக்கின்றன.  205 புலவர்களின்  பாடல் தொகுப்பு இது.  காதல் வாழ்வின் அகப்பொருள் இன்பத்தை  அள்ளித் தெளிக்கும் பாடல்கள் அத்தனையும்.   தமிழர் தம்   பண்டைய பெருமிதங்களில்  ஒன்றாய்  இன்றும் நம்மைக்  கிளர்ச்சியடையச் செய்யும்  மயக்க வரிகளை உள்ளடக்கிய அற்புதம்  குறுந்தொகையில்  நிகழ்ந்திருப்பதை அனுபவபூர்வமாக உணரலாம்.

Wednesday, June 3, 2020

உயிரில் கலந்து உணர்வில் ஒன்றி....

மேட்டுப்பாளையத்திலேயே லேசான சிலுசிலுப்பு ஆரம்பித்து விட்டது, மனசுக்குள் உற்சாகத்தை உலுப்பி விட்ட மாதிரி இருந்தது.

"உமா.. இரண்டு எலுமிச்சம்பழம் வாங்கிக்கட்டுமா?" என்றான் உமாபதி. பஸ் நிலையத்தின் வெளிப்பக்க மூலையில் ஒரு கிராமத்து பாட்டி கோணியில் குவித்து வைத்திருந்த மஞ்சமஞ்சேரென்ற பழங்களைப் பார்த்த்தும் தான் அவனுக்கு இந்த நினைப்பு வந்தது.

"எதுக்கு?" என்று கேட்கிறமாதிரி உமா வில்லாக புருவங்களை வளைத்தாள்.

"மேட்டுப்பாளையம் தாண்டியவுடனேயே ஆரம்பித்து விடும். வழிபூரா வளைந்து வளைந்து ஹேர்-பின் பெண்ட்ஸ்" என்றவன், அவளுக்கு மிக நெருக்கத்தில் வந்து "அதுக்கும் எலுமிச்சைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறாயா?" என்றான்.

"உவ்வே தானே?" என்று அவள் முகத்தை இயல்பாக சுளித்துக் காட்டிய பொழுது, அவளை அப்படியே அள்ளி எடுத்து பஸ் நிலையம் என்றும் பாராமல் ஒரு சுற்று சுற்றலாம் போலிருந்த்து உமாபதிக்கு. அறிவுக் கொழுந்து தான். ஒரு விஷயத்தை சுட்டி பேசினதுமே, எப்படிப் பாயிண்ட்டைப் பிடிக்கிறாள் என்று அவனுக்கு ஆச்சரியம். இப்படிப்பட்ட ஒரு மனைவி கிடைத்ததில் பெருமை.

"அதெல்லாம் எனக்கு வராது.. கொடைக்கானலில் இருந்திருக்கேன் இல்லையா, இந்த சுத்தல் எல்லாம் எனக்குப் பழக்கப்பட்டது தான்" என்றாள்.

"எதுக்கும் வாங்கிக்கறேன். எனக்கு சும்மாக்காச்சும் கையிலேயாவது வச்சுக்கணும்" என்ற உமாபதி பாட்டி கேட்ட காசைக் கொடுத்து இரண்டுக்கு நாலாகவே வாங்கிக் கொண்டான்.

"உமா.. வாங்க.. பஸ்ஸை எடுக்கப் போறான் போலிருக்கு.." என்று ஒரு சினிமா போஸ்டரைப் பார்த்து தயங்கி நின்றவனை அவசரப்படுத்தினான் அவள்.

"அதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் எடுத்திடமாட்டான். இன்னும் டிக்கெட்டே சேரலே.. எடுக்கற மாதிரி, ஒரு 'பாவ்லா'; அவ்வளவு தான். உமா, நீ என்ன செய்றே?.." என்று ஏதோ சொல்ல வாயெடுத்தவன், அவளைப் பார்த்து சிரித்தான்.

"என்ன, உமா?.." என்று அவள் திகைக்க, "எஸ்.. இதான்.. இதான்.." என்று சொல்லி மீண்டும் சிரித்தான்.

எதற்குச் சிரிக்கிறான் என்று தெரியாமல் அவள் விழித்தாள். "எதற்கு உமா இந்த சிரிப்பு?" என்றவள் கைபிடித்து அழுத்தினான். "என்னப் பொருத்தம், இந்தப் பொருத்தம்'னு ஒரு சினிமா பாட்டு இருக்குலே, அது போல இருக்கு, நம்ம பொருத்தம்", என்று மீண்டும் சிரித்த பொழுது அவளுக்குப் புரிந்து விட்டது.

"நீயும் என்னை 'உமா'ன்னு கூப்பிட, நானும் உன்னை 'உமா'ன்னு கூப்பிட பாக்கறவங்க, என்னாடா இது சரியான பைத்தியங்களா இருக்குன்னு நெனைக்கப் போறாங்க.."

"அதுக்கு என்ன செய்யறது?.. அத்தனைப் பொருத்தங்களோட, இப்படிப் பெயர் பொருத்தமும் அமைஞ்சிடுச்சி... இவங்களுக்காக பெயரையா மாத்திக்க முடியும்?"

"ஒண்ணு செய்யலாம். உன் பேரை ஒண்ணும் செய்ய முடியாது .. என் பேரை.. ஆங்.. என்னை நீ இனிமே, 'பதி'ன்னு கூப்பிடேன்"

"குட்.. பதியே.. பிராணநாதா.." என்று அடக்கமுடியாமல் சிரிப்பை அடக்கிக் கொண்டு உமா கூப்பிடச் சிரித்தான் உமாபதி.

இந்தப் புதுமணத் தம்பதிகளே இப்படித்தான். பெரிசா விஷயம்னு எதுவும் வேண்டாம். எதை ஒட்டியும் சிரிப்புத்தான்.  எதைப் பார்த்தாலும் புதுசு தான்.

போனவாரம் கல்யாணம். இப்போ ஹனிமூனுக்கு ஊட்டி. நேரே குன்னூர் போய் சிம்ஸ் பார்க்கில் ஒரு சுற்று சுற்றி சாயந்திரம் ஊட்டியில் பிரபல ஹோட்டல் ஒன்றில் அடைக்கலம் ஆகி, அதைத் தொடர்ந்து நாலு நாளைக்கு ஊட்டியில் தான்; ஒத்தகமந்துவில் தான்; உதகையில் தான்.

நிஜமாகவே பஸ்ஸை எடுத்து விட்டான். ஓடிவந்து ஏறிக் கொண்டவர்கள் முதலிலேயே குறித்து வைத்திருந்த ஜன்னலோர சீட்டில் அமர்ந்து கொண்டார்கள்.

உமாபதி சொன்னது சரிதான். மேட்டுப்பாளைய மலை அடிவார எல்லை தாண்டியவுடனேயே, சுற்றிச் சுற்றி மேலேறும் மலை வளைவுச் சுற்றுகள் ஆரம்பித்து விட்டன. ஒவ்வொரு நீண்ட திருப்பத்துக்கும் சீட்டின் இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் பயணிகள் 'சாய்ந்தாடம்மா, சாய்ந்தாடு' என்று அலைக்கழிக்கப் பட்டார்கள்.  
                                             
உமாபதியும், உமாவும் அமர்ந்திருந்தது இருவர் அமரும் இருக்கை ஆதலால் இந்த சாய்தல் அவர்களிடையே உள்ளார்ந்த ஒரு சந்தோஷத்தைத் தான் கொடுத்தது. அதுவும் புதுமணத் தம்பதிகளாதலால், போகப்போக சந்தோஷம் கிளர்ச்சியாக உருமாறியது. பதியின் பரந்த தோளில் மெதுவாகச் சாய்ந்து கொண்ட உமா, பயணசுகத்தை மனசார அனுபவிக்கத் தொடங்கினாள்.


கல்லார் வந்ததும் பஸ்ஸைச் சுற்றி பழங்கள் விற்போரின் கூப்பாடு கேட்டது.

"பழம் வாங்கிக்கலாமா, உமா?"

"உம்.."

இப்பொழுதும் வயசான ஒரு பாட்டியிடம் தான் ஜன்னல் வழியாகவே கைநீட்டி, வால் பேரிக்காய்களும், குட்டி ஆப்பிள்களும் வாங்கிக் கொண்டான். பாட்டி அவற்றைத் தனித்தனியே காகிதப் பைகளில் இட்டுத் தந்தது உமாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. சுற்றுப்புறச் சூழலைக் காக்கும் உணர்வு இவ்வளவு தூரம் மலையேறி வந்ததில் மனசுக்குள்ளேயே சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.

வழிபூராவும் இயற்கை அன்னை மலர்ந்து சிரித்து தன் மடியை விரித்திருந்தாள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைப் பசேல். பலா மரங்கள் சுமக்க மாட்டாத சுமையுடன் பழங்களைச் சுமந்து கொண்டு நிமிர்ந்து நின்றிருந்தன. குட்டிகள் மாரில் கவ்வியிருக்க மரத்திற்கு மரம் தாவிக்கொண்டிருந்த குரங்குக் கூட்டங்களைப் பார்த்துக்
கொண்டாட்டமாக இருந்தது உமாவுக்கு. பாதை மலைச்சரிவுகளுக்கிடையே சலசலத்த சுனைகளின் தோற்றம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

லேசான முணுமுணுப்புக்கள் மாதிரி ஏதேதோ அவர்கள் பேசிக்கொண்டு வருகையிலேயே, குன்னூர் வந்துவிட்டது. 'மலைகளின் ராணி வரவேற்கிறாள்' என்று இங்கேயே ஆரம்பித்து விட்ட வரவேற்பை ஏற்றுக் கொண்டு, பஸ் குன்னூருக்குள் நுழைந்தது.

இறங்கியதும், "ஏதாவது சாப்பிட்டு விட்டு, மேற்கொண்டு போகலாமா?" என்று உமாவிடம் கேட்டான் உமாபதி.

"சிம்ஸ் பார்க்குக்கு எப்படிப் போகணும்?"

"இந்த இடம் கீழ்க்குன்னூர். பார்க் மேல்குன்னூரில் இருக்கிறது. இதோ இந்த மலைப்பாதை வழியே மேலேறிப் போக வேண்டும். மேலே போனால், காடு மாதிரி பிர்மாண்டமான பூங்கா. நாம் தனிவண்டிலே போகலாம். அதுக்கு முன்னாடி ஏதாவது லைட்டா ஹோட்டலில் சாப்பிட்டுப் போகலாம்."

"சரி.." என்று தலையசைத்தாள் உமா. ஒரு சின்ன சூட் கேசும், பழங்கள் ஸ்நாக்ஸ் அடங்கிய ஜோல்னாப் பையும். ஜோல்னாப் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு சூட்கேஸைத் தூக்கிக் கொண்டான் உமாபதி.

"நீங்களே ஏன் இரண்டையும் சுமப்பானேன்?" என்று அவனிடமிருந்து ஜோல்னாப் பையை வாங்கிக் கொண்டு தன் தோளுக்கு மாற்றிக் கொண்டாள் உமா.

"கொஞ்ச தூரம் தான். அதோ இருக்கே, ரயில்வே ஸ்டேஷன்.. அதுக்கு முன்னாடியே ஒரு பெரிய ஹோட்டல் இருக்கு.." என்று நடந்தான் உமாபதி.

ஹோட்டல் அந்த மலைப்பகுதி சாயலில் கொஞ்சம் விஸ்தாரமாகவே இருந்தது. சிற்றுண்டி சாப்பிட்டார்கள். அதுவும் இரண்டு வகை வரவழைத்து, இதில் பாதி அதில் பாதி என்று இரண்டு வகைகளையும் இரண்டு பேரும் மாற்றிக் கொண்டு சுவைத்தார்கள். "கூல் டிரிங்க்ஸ் ஏதாவது சாப்பிடலாமா?" என்றாள் உமா.

"ஓ.." என்று அவள் சொன்னதிற்கு 'ஓ' போட்டுவிட்டு, வழங்குபவர் வந்ததும், ஒரே ஒரு கூல்டிரிங்கை வரவழைத்தான். வழங்குபவரும் புரிந்து கொண்டு பெரிய அளவு கண்ணாடிக் கோப்பையில் குளிர்பானத்தை நிரப்பி இரண்டு ஸ்ட்ரா போட்டு எடுத்து வந்தார்.

"என்னங்க, இது?.. யாராவது பார்த்தா என்னவாவது நெனைச்சுக்கப் போறாங்க.." என்று பதியிடம் கிசுகிசுத்தாள் உமா.

"கணவன்-மனைவி சேர்ந்து வந்தால், இங்கெல்லாம் இதான் வழக்கம். நான் என்ன இரண்டு ஸ்ட்ராவா கேட்டேன்?.. அந்த சிப்பந்தியே புரிந்துகொண்டு இரண்டு கொண்டுவரவில்லை?" என்று ஒரு ஸ்ட்ராவில் உதடைப் பொருத்தினான் உமாபதி. "இன்னொண்னு உனக்கு.." என்று இன்னொரு ஸ்ட்ராவை அவள் பக்கம் திருப்பி வைத்தான்.

இந்தப் பக்கம் அந்தப் பக்கம் பார்த்தபடியே லேசான நாணத்துடன் இன்னொரு ஸ்ட்ராவைக் கவ்வினாள் உமா. முகம் நெருங்கிய நெருக்கத்தில் அவளைப் பார்க்க இரக்கமாக இருந்தது உமாபதிக்கு. 'நல்ல புத்திசாலியான பெண்; வாழ்க்கை பூராவும் கூட வரப்போகிறவள். கொஞ்சம் பூஞ்சைதான்; நிறைய வாங்கிக் கொடுத்துத் தேற்ற வேண்டும்' என்று எண்ணிக் கொண்டான். 'பாவம், எவ்வளவு பரிவுடன் இருக்கிறார்.. என்மேல் தான் எவ்வளவு ஆசை. பார்த்துப் பார்த்து எல்லாம் பண்ணிப்போட்டு நிம்மதியாக வைத்துக் கொள்ள வேண்டும்' என்று நினைத்துக் கொண்டாள் உமா.

கொஞ்ச நேரம் கழித்து ஏதோ அவளிடம் சொல்ல உமாபதி தலைநிமிர்ந்த பொழுது, வைத்த குளிர்பானம் கொஞ்சம் கூடக் குறையாமல் அப்படியே இருந்தது. "என்ன நீ குடிக்கவில்லை?" என்று அவளைப் பார்த்துத் திகைத்தான் உமாபதி. "வெட்கமா இருந்தா தனியா இன்னொண்னு வரவழிச்சுடலாமா?"

"வேண்டாம்.. வேண்டாம்" என்று அவசரமாக மறுத்தவள், "அட! நீங்களும் குடிக்கவில்லையா?" என்று அவனைப் பார்த்து நமுட்டுச்சிரிப்பு சிரித்தாள்.

இரண்டு பேருக்கும் இப்போது புரிந்தது. 'பாவம், இவன் குடிக்கட்டும்' என்று ஸ்ட்ராவில் அவள் உறிஞ்சாமல் இருக்க, அரும்பு கட்டியிருந்த அவள் நெற்றி வியர்வை பார்த்து 'பாவம், குளிரக் குளிர இவள் குடிக்கட்டும்' என்று அவன் ஸ்ட்ராவோடு உதடு மட்டும் உரச சும்மா இருக்க, கடைசியில் இரண்டு பேருமே உறிஞ்சாமல் கண்ணாடிக் கோப்பையில் குளிர்பானம் குறையாமல் வைத்தது வைத்தபடி இருக்க,... சிரிக்கத்தான் வேண்டும்!...

பார்த்துப் பார்த்து பரிதாபிக்கும் இந்த புருஷன் பெண்டாட்டி தம்பதிப் பிரியம், ஒருவரின் மேல் ஒருவர் வைத்திருக்கும் கரிசனை, அன்பு, ஆசை இன்னும் என்னன்னவோவெல்லாம், இன்று பார்ப்பது கூட காலங்காலமாய் தொடர்ந்துவரும் சங்கிலித் தொடரின் இன்றையக் கண்ணிதான்.

இதில் வேடிக்கை என்னவென்றால், மெத்த விஷயங்கள் தெரிந்தவர் என்று பீற்றிக்கொள்ளும் மனிதர்களை விட்டுத்தள்ளுங்கள்...

இந்தப் பரிவையும், பாசத்தையும் படம் பிடித்துக் காட்டும் சங்ககால இந்தக் காட்சிதான் நம்மை பரிதவிக்கச் செய்கிறது.

சின்ன குட்டைதான் அது. குட்டை என்று கூடச் சொல்ல முடியாது. ஏதோ கொஞ்சமே நனைந்த பிரதேசம். அந்தச் சின்னத் தேங்கலில் சிறிதளவே நிறைந்திருக்கும் நீர். அதுவும் லேசாகக் கலங்கியிருக்கிறது.

வெளிவெப்பத்தின் தாக்கம் நாவை வரளச் செய்கிறது. மருண்டு மருண்டு வந்த மான் ஜோடி ஒன்று, இந்தக் குட்டை நீரைப் பார்த்தும், இன்னும் நா வரள சேர்ந்து ஓடிவருகின்றன. வந்த இரண்டும் நீர் நனையும் இடத்தில் கால் பதித்துத் தலை குனிகின்றன.

"சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் -- கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.

--ஐந்திணை ஐம்பது (பாலைத்திணை)

அவை இரண்டும் ஆணும் பெண்ணுமான கலைமானும், பிணைமானும். நடந்தது இது தான். நா வறட்டும் தாகத்தில் தண்ணீர் கண்ட சடுதியில், ஓடிவந்து இரண்டும் தண்ணிரில் வாய் வைத்தன. வைத்ததும் தான், ஆண்மானுக்கு அந்த உணர்வு வந்தது. 'அடடா! இருக்கும் நீரே குறைச்சலாயிற்றே; இத்துனூண்டு இதை நான் அருந்தி விட்டால், தன் துணையான பிணைமானுக்கு நாவறட்சி தீர அருந்துவதற்கு போதிய அளவு நீர் கிடைக்காமல் போய்விடுமே என்று பதறி அருந்தாது நின்றதாம். அடுத்தாற்போல் அதற்கு வந்த நினைப்பு தான் அற்புதம்.
தான் அருந்தாமல் இருந்தால் தன் துணையும் அருந்தாமல் போய்விடும் என்று தண்ணீரில் வாய் மட்டும் வைத்துக் கொண்டு அருந்தாமல் அருந்துகிற மாதிரி பாவனை செய்ததாம். ஆண்-பெண் அன்பை இதைவிட மேலாகப் படம்பிடித்துச் சொல்லமுடியுமோ என்று வியக்கிறோம்.

அது என்ன ஐந்திணை? குறிஞ்சி, முல்லை,மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து வகைப்பட்ட நிலப்பரப்புகளுக்கு ஏற்பனவாக ஐந்து வகையான திணைகளாகப் பிரித்துச் சொல்வது தமிழர் மரபு. வெவ்வேறு நிலைகளில் வெளிப்படும் மனப்பாங்குகளை அததற்கான திணைகளில் ஏற்றிச் சொல்வது பழந்தமிழர் சிறப்பு.

அது என்ன ஐம்பது கணக்கு?.. ஒவ்வொரு திணைக்கும் பத்துப் பாடல்கள் என ஐந்து திணைக்கும் ஐம்பது பாடல்களைக் கொண்டதால், ஐந்திணை ஐம்பது.

இந்த ஐந்திணை ஐம்பது   பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள்  ஒன்று. சங்கம் மருவிய காலத்தது. காதலரின்   ஒழுக்கம் பற்றிக் கூறும் அகப் பொருள் கீழ்க்கணக்கு நூல்.    இதை இயற்றியவர் மாறன்  பொறையனார் என்னும் புலவர் பெருமகனார்.
Related Posts with Thumbnails