மின் நூல்

Friday, February 27, 2009

ஆத்மாவைத் தேடி....35

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....

35. காற்றுக்கென்ன வேலி?

அந்தக் காலை அமர்வின் போது உடற்கூறு இயல் அறிஞர் உலகநாதன் வெகு உற்சாகமாக இருந்தார். 'பளிச்'சென்றிருந்த கதர் உடைகள் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தன. அரங்கில் அமர்ந்திருந்தவர்களை தீர்க்கமாக ஒரு சுற்று பார்த்து விட்டு தனது உரையைத் தொடர்ந்தார் அவர்.

"இரண்டு கண்களைப் போலவே இரண்டு நுரையீரல்கள் நமக்கு. மார்புக் கூட்டுக்குள் பக்கத்திற்கு ஒன்றாக இடது பக்கமும், வலது பக்கமும் தேன்கூடு தோற்றத்தில் அமைந்திருக்கின்றன. இவற்றிற்கு நடுவே கிளைத்தண்டு மாதிரி மூச்சுக்குழல். நாலாவது மார்பு முள்ளெலும்பு பகுதியில் இந்த மூச்சுக்குழலும் இரு கிளைகளாகப்பிரிகிறது. இடதை விட வலது பக்க கிளைக்குழல் சற்று குட்டையாகவும் அகலமாகவும் இருக்கும்.

"ஒவ்வொரு நுரையீரலிலும் கோடிக்கணக்கான குட்டி குட்டி பலூன் போன்ற காற்று நுண்ணறைகள் உண்டு. இவை எந்நேரமும் சுருங்கி விரிந்து கொண்டிருக்கும். இவற்றை இரத்த தந்துகிகள் சூழ்ந்துள்ளன; இதய தமனிகளோடும், சிரைகளோடும் இவற்றிற்கு இணைப்பு உண்டு. நுரையீரல்களைச் சுற்றி டிரேசிங் பேப்பர் மாதிரி புளூரா என்னும் உரை உண்டு. இந்த புளூராவின் உட்பக்கம் நுரையீரல்களை ஒட்டியும், வெளிப்புறம் மார்பின் உட்பக்கமும், உதரவிதானத்தோடும் பொருந்தி உள்ளது.

"ஓக்கே. இப்பொழுது வெளிக்காற்று உள்ளே போய் ஏகப்பட்ட மாற்றங்கள் அடைந்து வெளிவரும் அதிசயத்தைப் பார்க்கலாம்.

"மூக்கின் வழியாக உள்ளே செல்லும் வெளிக்காற்று, நுரையீரலில் காற்று நுண்ணறைகளை நிரப்புகிறது. கரியமிலவாயு நிறைந்த அசுத்த இரத்தம் நுரையீரல்களை சூழ்ந்துள்ள இரத்த தந்துகிகளில் ஓடிக்கொண்டிருக்கும். அதனால் கார்பன்-டை-ஆக்ஸைடும், நீராவியும் காற்று நுண்ணறைச் சுவரை ஊடுருவி அவற்றுள் நுழையும். நுழையும் அசுத்தக்காற்று அந்த இடத்தை ஆக்கிரமிக்க, ஏற்கனவே நுரையீரல் நுண்ணறைகளில் சிறைப்படுத்தப் பட்ட வெளிக்காற்றிலுள்ள ஆக்ஸிஜன் அங்கிருந்து தப்பி தந்துகிகளை அடைகிறது. இரத்தத்தில் தங்கியிருக்கும் ஹிமோகுளோபின், ஆக்ஸிஜனை இழுத்து இரத்தத்தில் சேர்த்துக்கொள்ளும். இப்பொழுது வெளிசுவாசம் ஏற்பட, காற்று நுண்ணறையில் சிறைப்பட்டிருக்கும் கார்பன்-டை-ஆக்ஸைடு கலந்த காற்று மூக்குப்பகுதிக்கு வந்து வெளியேறிவிடும். மாற்றி மாற்றி உட்சுவாசமும் வெளிசுவாசமும் நடைபெறுவதால், இரத்தத்தில் ஒருபக்கம் ஆக்ஸிஜன் சேர, மறுபக்கம் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றப்படுகிறது.

"மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது இந்த சுவாச சமாச்சாரம் சாதாரணமான ஒரு நிகழ்ச்சியாகத் தான் தெரியும். பல விஷயங்கள் வெகு சாதாரணமாகத் தோற்றமளிப்பதாலேயே அவற்றின் அசாதாரணத் தன்மையை அறிய முடியாத மயக்கம் ஏற்படுகிறது. நம்மைக் கேட்டுக் கொள்ளாமல் தூங்குகிறோமோ, விழித்துக் கொண்டிருக்கிறோமோ, ஏதாவதொரு வேலையில் முழுக்கவனத்தையும் செலுத்தி முனைப்பாக புற உலகை மறந்து ஈடுபட்டிருக்கிறோமோ எதைப்பற்றியும் சட்டைசெய்யாமல் தொடர்ந்து சுவாசம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

"சுவாசம் என்பது மெயின் சுவிட்ச் மாதிரி. இது ஆஃப் ஆனால், ஆட்டம் குளோஸ். சட்சட்டென்று கதவு மூடுகிற மாதிரி, மூளையில் ஆரம்பித்து கணுக்கால் வரை ஒவ்வொரு உறுப்பும் தன் வேலையை நிறுத்திக் கொண்டு விடும். ஆக எல்லா உணர்வுகளின் உயிர் நிலையும் இந்த சுவாசம் தான்; சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், இரத்தத்துடன் கலக்கும் இந்த ஆக்ஸிஜன் தான். அதனால் தான், வெளி பூராவும் வியாபித்திருக்கும் பரம்பொருளின் அம்சமாக உள்ளுக்குள் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த ஆக்ஸிஜன் தான், நாம் தேடும் ஆத்மாவோ என்று கூட எனக்குத் தோன்றுகிறது" என்று சொல்லி லேசாகச் சிரித்தார் உலகநாதன்.

அவர் சொல்வதின் தாத்பரியத்தைப் புரிந்து கொண்டு சபையே அமைதியில் அவரை உன்னிப்பாகப் பார்த்தது.

இந்த நேர்த்தில் தான் கணிமப்பொருள் ஆராய்ச்சியாளர் சுந்திரமூர்த்தி எழுந்திருந்தார். எழுந்திருந்தவர் மிக பவ்யமாக, "குறுக்கிடலுக்கு மன்னிக்கவும். எனக்கு ஒருசந்தேகம்--" என்றார்.

"தாராளமாகச் சொல்லுங்கள்" என்று இரு கைகளையும் பரக்க விரித்தார் உலகநாதன்.

"நம்மைச் சுற்றிலும் காற்று, காற்று, காற்றுதான்! எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பொருள் காற்று தான். நம்மைத் திக்குமுக்காட வைக்கும் அளவுக்கு காற்றுதான். வெளிக்காற்று வேகத்துடன் உள் நுழைந்தால் அத்தனை உயிர்களின் நுரையீரல்களுமே வெடித்து விடும் அளவுக்கு காற்று தான். இதில் தேவையான கொஞ்சூண்டுஅளவான காற்று-- இந்த அளவு கூட ஆளுக்கு ஆள் மாறுபடும் இல்லையா-- எப்படி நம்மை சிரமப்படுத்தாமல், நிலைகுலைய வைக்காமல் சுவாசமாக உள்நுழைகிறது என்பதை அறிந்து கொள்ள ஆசை. இன்னொன்று.. நம்பர் டூ. வெற்றுவெளியில், காற்று அடைக்கப்படாத ஒரு பலூனை நீட்டிப்பிடித்தால் கூட அதன் உள்ளே தானே காற்று நிரம்பாது இல்லையா?.. அது எப்படி எந்த பிரயாசையோ, பிரயத்தனமோ இல்லாமல் சுவாசம் மட்டும் நிகழ்ந்து, காற்று உட்சென்று, நுரையீரல் காற்று நுண்ணறைகளை நிரப்புகிறது என்று தெரிந்து கொள்ள ஆசை" என்றார் சுந்திரமூர்த்தி.

"நல்ல கேள்விகள். ஒரு தேர்ந்த நுணுக்கமான் படைப்பின், படைப்பாளியின் பெருமையைச் சொல்லும் சாகசங்கள் இவை" என்று தொடர்ந்து பேச தொண்டையைக்கனைத்துக் கொண்டார் உலகநாதன்.

இறைவன் இருக்கின்றார்

நீரில் வாழும் மீன்கள் நிலத்திற்கு வந்தால் சுவாசிக்கத் திணறி இறந்து விடுகின்றன. நீரில் இருக்கையில் நீரில் கரைந்திருக்கும் ஆக்ஸிஜனை செவுள்கள் மூலம் சுவாசித்து இரத்தக்குழாய்களில் தேக்கி, பிரித்து, சேகரித்து உயிர் வாழ்கின்றன. நீரில் கரைந்திருப்பதை விட தரைக்காற்றில் ஐந்து மடங்கு ஆக்ஸிஜன் அதிகம் இருந்தும்அவற்றால் சுவாசிக்க முடியாது.
ஆனால் தரையில் யானையும் மனிதனும் ஒரே அளவு கனபரிமாணமுள்ள காற்றை சுவாசிக்க முடிகிறது. ஒட்டுமொத்தக் காற்றை உள்ளிழுக்கும், வெளிவிடும் திறன் வேண்டுமானால் வேறுபடலாம்.

இன்னொரு விஷயம். பலத்த வெளிமூச்சுக்குப் பின் கூட நுரையீரல்களில் சிறிதளவு காற்று தேங்கியிருக்கும்.

கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு நுரையீரல் மூலம் சுவாசித்தல் இல்லையாதலால், அதன் நுரையீரலில் காற்று இருக்காது. சிசுவைத் தாயிடமிருந்து பிரித்தவுடனே, வெளியுலகுக்கு வந்த அந்த நொடியே அது சுவாசிக்கத் தொடங்குகிறது. வெளிக்காற்றும், அந்த சீதோஷ்ண நிலையும், காற்றின் உட்புகலையும் அனுபவித்துத் தான், அந்தத் தாக்கத்தினால் பிறந்த குழந்தை வீல்வீலென்று கத்தி அழுகிறது. குழந்தையின் கத்தல் கேட்டு சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் சந்தோஷம். பிறந்த குழந்தை அழவில்லை என்றால் தான் ஏதாவது கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.

(தேடல் தொடரும்)

Saturday, February 7, 2009

ஆத்மாவைத் தேடி...34

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி---


34. நான் அம்மாவாகப் போறேன், அம்மா!


சிவராமன் குளித்து விட்டு வருவதற்கும் தொலைபேசி மணி கிணுகிணுக்கவும் சரியாக இருந்தது.

மாலினி சமையலுக்கு முருங்கைக்கீரை ஆய்ந்து கொண்டிருந்தாள். சமையலறையிலிருந்து வேகமாக ஹாலுக்கு வந்து ராதைதான் தொலைபேசியை எடுத்தாள்.

"ஹலோ--"

"சம்பந்தி மாமியா?.. நமஸ்காரம் மாமி. லால்குடியிலேந்து சுலோச்சனா பேசறேன். ரொம்ப ரொம்ப சந்தோஷம் மாமி--"

ராதை ஒரு நிமிடம் திகைத்து மீள்வதற்குள் சுலோச்சனாவே தொடர்ந்தாள்.

"டெல்லிலேந்து இப்போத்தான் மாமா போன் பண்ணிச் சொன்னார். சந்தோஷ சமாச்சாரம் கேள்விப்பட்டு எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம், மாமி."

"ரொம்ப சந்தோஷம், சுலோச்சனா! இங்கே மாலு அக்கா--அத்திம்பேர் எல்லாரும் வந்திருக்கா! இப்பத்தான் அத்திம்பேரை விட்டுச் சொல்லச் சொல்லணுன்னு நெனைச்சிண்டே இருந்தேன். நீயே பேசிட்டே." புருஷன் எங்கே போனாலும் வீட்டு நினைவை மறக்காமல் தெரியப்படுத்த வேண்டியவர்களுக்கு செய்தியை தெரியப்படுத்திய பெருமையில்
இருந்தாள் ராதை.

"அப்படியா?.. மாலு அக்கா வந்திருக்காங்களா?"

"ஆமாம்.. அக்காவும் நானும் தான் சுபாவை அழைச்சிண்டு ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தோம். லேடி டாக்டர் சக்கரை கொடுத்து நல்ல சேதி சொன்னா. ரெண்டு மாசம் ரெண்டு வாரமாம்."

"அப்படியா, மாமி.."

"டாக்டர் யாருங்கறே?.. நம்ப கோடியாத்து சுப்புடு பொண்தான். இங்கே கொடிகட்டிப் பறக்கறா.. நல்ல கூட்டம்.. எங்களைப் பாத்ததும் உடனே வரச்சொல்லி டெஸ்ட் பண்ணி சொல்லிட்டா.. என்ன பதவிசு, பெரியவா கிட்டே என்ன மரியாதைங்கறே?.. நவராத்ரி கொலுன்னா, நம்மாத்துக்கு வந்து நின்னு நிதானிச்சு ரெண்டு கீர்த்தனை பாடி வெத்தலை பாக்கு வாங்கிண்டு போவாளே?.. பழசை எதையும் அவ மறக்கலே, சுலோ!.. இப்போ கூட அதைச் சொல்லிச் சிரிச்சா."

"ஓ, சுப்புடு பொண்ணா?.. அவ பேர்கூட.. ரேணுகா இல்லே?"

"கரெக்ட்.. அந்தப் பொண்ணு தான்.. எதுக்காக இவ்வளவும் சொல்றேன்னா.. என் மனசுலே ஒண்ணு இருக்கு.. நேர்லே சொல்றேன். நம்ம கிட்டே என்ன இருக்கு? எல்லாம் பகவான் செயல்."

"சரி, மாமி.."

"இதோ மாலு அக்கா பேசணுங்கறா."

"அப்படியா.. குடுங்கோ."

"சுலோச்சனா! நான் மாலு பேசறேன்"

"அக்கா.. நமஸ்காரம்.. அக்கா, எல்லாரும் செளக்கியம் தானே?.. டெல்லிலேந்து சம்பந்தி மாமா கூப்பிட்டு சந்தோஷ சமாச்சாரத்தைச் சொன்னார்."

"அப்படியா?.. நேத்திக்கு டாக்டர்கிட்டே போறச்சே, சுபா நாடி பிடிச்சுப் பாத்தேன்.. எனக்கே லேசாத் தெரிஞ்சிடுத்து.. இருந்தாலும் டாக்டர் சொல்றது தானே நல்லது? என்ன சொல்றே.. அவளும் நாள் கணக்கு போட்டு கரெக்டா சொல்லிட்டா.. டாக்டரும் நமக்கு வேண்டியவாளா இருந்தது, ரொம்ப ஆறுதலா இருந்தது."

""சந்தோஷம் அக்கா.. அத்திம்பேர் இருக்காறா?.. இதோ, இவர் பேசணுங்கறார்."

"சரி.. குடுக்கறேன்.. எல்லாரையும் நான் விசாரிச்சதா சொல்லுடிம்மா.. இதோ, பாருங்கோ.. உங்களைத்தானே?.. சுபா அப்பா போன்லே இருக்கார். உங்ககிட்டே பேசணுமாம்."

"இதோ வரேன்" என்று சிவராமன் போனுக்கு வந்தார்.

"நமஸ்காரம், ஸார்.. ரமணி பேசறேன்."

"ஹலோ.. ரமணி! எப்படியிருக்கே?"

"எல்லாரும் பைன் ஸார்.. சித்தமின்னாடி மாமா டெல்லிலேந்து போன் பண்ணி நல்ல சேதியைச் சொன்னார். வி ஆர் ஆல் வெரி ஹேப்பி... அடுத்த வாரம் அங்கே வர்றதா இருக்கோம்."

"வாங்கோ.. வாங்கோ.. நாங்க இன்னிக்கு ஈவினிங் பெங்களூர் கிளம்பறதா பிளான்."

"ஓ, அப்படியா?"

"பெங்களூருக்குப் போயிட்டு, அடுத்த நாளே மாலுவும், நானும் டெல்லி, காசி போறதா ஏற்பாடு."

"ஓ.. பைன்.. டெல்லி போனா மாமாவைப் பாப்பேளா?"

"பின்னே.. ஆட்சுவலி அவர் தங்கியிருக்கற இடத்துக்குத் தான் போறோம்.. டெல்லிலே ஒரு பெரிய சதஸ் நடத்த ஏற்பாடு பண்ணியிருக்கா.. ஆன் ஆப்பர்சுனிட்டி ஒன் டைம் இன் லைப்பா இருக்குமாம். கிருஷ்ணா சொன்னான். அதையும் பாத்துட்டு வரலாம்னு ஒரு ஆசை."

"பேஷா செய்யுங்கோ.. எனக்குத் தான் ஒண்ணு மாத்தி ஒண்ணுன்னு ஏதேதோ வேலை.. காலைக் கட்டிப் போட்டிருக்கு.. எங்கேயும் சட்னு கிளம்ப முடியலே."

"அப்படித்தான் இருக்கும். என்ன செய்யறது?.. ஒவ்வொண்ணும் என்ன நம்மைக் கேட்டுண்டா நடக்கறது.. இதோ சுபா வந்திருக்கா.. பேசணும்ங்கறா.. இந்தா, குழந்தை.."

"அப்பா--" என்று பெற்றவரை அழைக்கும் பொழுது மகளின் குரல் தழுதழுத்தது. லேசாக விழிகளின் ஓரம் நீர் தேங்க ஆரம்பித்தது.

"சுபா... எப்படிம்மா இருக்கே? இதுக்கு தாம்மா காத்திருந்தோம்.. ஒடம்பைப் பாத்துக்கோ. அடுத்த வாரம் வரோம்."

"சரி அப்பா.. நீங்களும் ஒடம்பைப் பாத்துங்கோங்கோ.. அம்மா பக்கத்லே இருக்காளா?"

"ஆமா. இதோ குடுக்கறேன்."

"அம்மா---" சுபாவுக்கு குரல் தழுதழுத்துத் தொண்டைக் குழியில் ஏதோ அடைத்துக் கொண்ட மாதிரி இருந்தது.

"சுபா--"

"அம்மா! நான் அம்மாவாப் போறேன், அம்மா."

"அடிக்கண்ணு.. எவ்வளவு அழகாச் சொல்றே.. இதை நீ சொல்லிக் கேக்க எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு, தெரியுமா?.. சேதி தெரிஞ்சு இங்கே எங்களுக்கு தரைலே கால் பாவலே. என் குழந்தைக்கு ஒரு குழந்தை! நெனைச்சுப் பாக்கவே சந்தோஷமா இருக்கு, சுபா! மசக்கை ரொம்ப படுத்திடுத்தோ?"

"இல்லேம்மா.. அப்படி ஒண்ணும் அதிகமா தொந்தரவு பண்ணலே."

"ஒடம்பைப் பாத்துக்கோ.. ஜாம் ஜாம்னு மாமி தாங்குவா. எனக்குத் தெரியும். இருந்தாலும் பெத்தவளும் ஒண்ணு ரெண்டு சொல்லணும் இல்லையா? அதுக்காகச் சொல்றேன். இப்படி புக்காம் கிடைச்சதுக்கு உன்னோட தாத்தா பாட்டில்லாம் செஞ்ச புண்ணியம் தான் காரணம். தெய்வம் தான் மனுஷாள் ரூபத்லே வந்திருக்கு."

"கரெக்ட்மா."


"அம்மாங்கறது ஒரு குடும்பத்லே அற்புதமான ஸ்தானம். கடவுளே பாத்துக் கொடுக்கறது; கொடுத்த கொடைக்கு குந்தகம் விளைவிக்காம, பெற்ற ஸ்தானத்திற்கு பங்கம் ஏற்படாம, கட்டிக் காப்பாத்தி எடுத்துக்காட்டா வாழ்ந்து காட்டணும்மா. எல்லாம் நல்லபடி நடக்கும். நம்ம கையிலே ஒண்ணும் இல்லே. பகவான் இருக்கான். பாரத்தை அவங்கிட்டே சேத்துடு. அவன் காப்பாத்துவான்."

"சரி, அம்மா--"

"எதுக்கு இவ்வளவும் சொல்றேன்னா, ஒரு நல்ல அம்மாவாலே தான் இன்னொரு நல்ல அம்மாவை உருவாக்க முடியும். அதுக்குத்தான் இந்த ஜென்மம் கிடைச்சிருக்கங்கற நெனைப்பு எந்நேரமும் உன் மனசிலே இருக்கணும், தெரிஞ்சதா?"

"சரி. அம்மா."

"நானும் அப்பாவும் அடுத்த வாரம் அங்கே வர்றோம்."

சந்தோஷத்துடன், "சரி, அம்மா" என்றாள் சுபா.

"மாமி பக்கத்லே இருக்காங்களா?.. போனைக்கொடு. சொல்லிக்கணும்" என்றாள் சுலோச்சனா.

"அம்மா--" என்று ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த மாமியாரை விளித்தாள் சுபா. "அம்மா உங்ககிட்டே பேசணுமாம்" என்று போனைக் கொடுத்தாள்.

இரண்டு அம்மா அழைப்புகளுக்கும் அவள் குரலில் கொஞ்சம் கூட வித்தியாசமில்லாமல் இயல்பாய் இருந்தது.

(தேடல் தொடரும்)

Sunday, February 1, 2009

ஆத்மாவைத் தேடி....33

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


33. ஐஸ்கிரீம் சாப்பிட ஆசை


டற்கூறு இயல் அறிஞர் உலகநாதனின் உரையில் இப்பொழுது வேகம் கூடியிருந்தது. அவையினரும் அவர் சொல்வதில் ஒன்றிப்போய் ஆர்வமுடன் கேட்டுக்கொண்டிருந்தனர்."உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு வேலை இருக்கிறது. தனக்கென்ற வேலை என்ற ஒன்று இல்லாமல் எந்த உறுப்பும் வேஸ்ட்டாக இல்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த அளவு விஞ்ஞான வளர்ச்சிக்குப் பிறகும், ஒவ்வொரு உறுப்பின் முழுப் பயன்பாட்டை நாம் உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை என்பது தான். இதற்குக் காரணம் என்னவாயிருக்கும் என்பதை உங்கள் யோசனைக்கே விட்டு விடுகிறேன். அங்கங்கே இப்படி உங்களை யோசிக்க வைப்பதற்கும் காரணம் இருக்கிறது."சரி. மூளைக்கு என்னதான் வேலை?.. உடல் உறுப்புகளால் உணரப்படும் ஒட்டுமொத்த உணர்வுகளும் வந்து சேரும் இடம் மூளை தான். உணர்ச்சி நரம்புகள் மூலமாகவோ அன்றி தண்டுவடத்தின் மூலமாகவோ உணர்வுகள் மூளைக்கு கடத்தபடுகின்றன. இதை உள்ளீடு என வசதிக்காக வைத்துக் கொள்ளலாம். எப்பொழுது 'உள்ளீடு' உண்டோ அப்போ 'வெளியீடு'ம் உண்டலல்லவா?.. பெறும் உணர்வுக்கேற்ப தேவையான உத்திரவுகளை நரம்புகள் மூலம் தசைகளுக்கு அனுப்புவது என்பதே மூளையின் 'வெளியீடு'. உணர்வுகள் பெருமூளை அடைந்து அடுத்து என்ன என்று தீர்மானித்து, உத்திரவுகள் வந்து சேர்ந்து, செயல்படும் நடவடிக்கைக்கான 'காலநேரத்'தை நாம் அறியும் கணிதவியலில் கண்டுபிடிக்கவேயில்லை. அவ்வளவு நுணுக்கமான ஃபிராக்க்ஷனுக்கும் ஃபிராக்க்ஷனான நொடி நேரம் அது!

உதாரணமாக இப்படி ஒரு நிகழ்வை மனத்தில் ஓட்டிப் பாருங்கள்:
"ஐஸ்கிரீம் சாப்பிட ஆசை"-- உணர்வு.

"ஜமாய்! வாங்கு. சாப்பிட்டு ஆசையைத் தீர்த்துக்கொள்" என்றோ--

"ஐஸ்கிரீமா?.. முதலிலேயே சளியில் மூக்கடைத்துக் கிடைக்கிறது. இதில் ஐஸ்கிரீம் ஒரு கேடா?" என்றோ--

"பெற்ற உணர்வுக்கும் கிடைத்த உத்திரவுக்கும் இடைப்பட்ட 'காலநேரத்'தை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

"இன்னொன்று."'ஐஸ்கிரீம் சாப்பிட ஆசை' என்கிற உணர்வு எப்படி ஏற்படுகிறது? ஐஸ்கிரீமை இதற்கு முன் சாப்பிட்டு அதன் சுவை மனசுக்குப் பிடித்த அனுபவமே காரணம்.

"இதற்கு முன் ஐஸ்கிரீமைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை, அப்படி ஒரு பொருளை சாப்பிட்டதே இல்லை என்றால் சாப்பிட ஆசையே ஏற்பட்டிருக்காது.

"ஐஸ்கிரீம் சாப்பிடுகிறாயா?'-- நண்பனோ, நண்பியோ கேட்டால்--

"ஐஸ்கிரீமா?.. என்ன அது?.. எப்படியிருக்கும்?"

"இந்தா.. சாப்பிட்டுப் பார்த்துச்சொல்."

"சாப்பிட்டு விட்டு, 'அடே! ஜில்லுன்னு ஜோரா இருக்கே?.. இதுக்குப் பேர் தான் ஐஸ்கிரீமா?'"

"கண் அந்தப் பொருளை நன்றாகப் பார்த்து, படமாக நினைவுத் திரையில் பதிகிறது. இன்னொரு தடவை அந்தப் பொருளைப் பார்த்தால், 'இதுதான்யா ஐஸ்கிரீம்' என்று புரிந்து கொள்வதற்கு வாகாக. சாப்பிட்டு அறிந்த சுவை நாவின் ருசி மொட்டுகளால் உணர்ந்து அந்தச் சுவையின் நேர்த்தியும் அனுபவக்குறிப்பும் கூட மூளையில் பதிகிறது-- அடுத்த தடவை ஐஸ்கிரீமைப் பார்க்கும் பொழுது ஆசைப்பட வைக்க.

"எல்லா உணர்வுகளும் மூளையின் எல்லா இடங்களிலும் வந்து சேர்ந்தால் 'டிராபிக் ஜாம்' ஆகிவிடும் இல்லையா?.. அதனால் இன்ன வேலைக்கு இன்ன பகுதி என்றுஇறைவன் அழகாக ஏற்பாடு செய்திருக்கிறான்.

"பார்வை உணர்வுக்கான இடம் பெருமூளையின் பின்புறப்பகுதியில்; விழித் திரையில் தலைகீழ் பிம்பமாக விழும் பார்வையில் படுபவனவற்றை அங்குள்ள் பார்வைநரம்புகள் ஒளிபிம்பத்தால் தூண்டப்பட்டு அதைப்பற்றிய உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. ஒலி, வாசனை, ருசி இவற்றை உணரும் பகுதி மூளையின் பக்கவாட்டில்உள்ளன. ஒவ்வொன்றுக்கும் உரிதான இலாகாக்கள் வெவ்வேறான இடங்களில் இருப்பதாகத் தோற்றமே தவிர, எல்லா இடங்களும் ஒன்றோடொன்று நரம்பு செல்களால் இணைக்கப்பட்டிருக்கின்றன.

"மொத்தம் 12 ஜதை நரம்புகள். எவ்வளவு திட்டமிட்ட ஏற்பாட்டுடன் மூளையின் அடிப்பகுதியில் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை நினைத்துப் பார்த்தால் வியப்பு மேலிடுகிறது.

முதல் இரண்டு-- வாசனையை அறிய உதவ.

இரண்டாம் இரண்டு-- பார்வை நரம்புகள்; ஒரு கண்ணுக்கு ஒன்று என்று.

மூன்று, நான்கு, ஆறு -- கண்விழி தசையுடன் இணைந்த்து. பார்க்க, பார்க்கும் பொருளின் அளவு, தூரம் இவற்றைத் துல்லியமாக தீர்மானிக்க.

ஐந்து -- வாயில் வந்தடையும் பொருளை அசைத்து தசைகளை இயக்க.

ஏழு -- முக நரம்புகள். அடிநாக்க்கில் படியும் ருசி, வாயைத் திறந்து மூட, சிரிக்க, நெற்றி மேட்டின் தசை மாறுதல்களுக்கு.

எட்டு -- ஒலித் தொடர்பானவை. காதுகளில் மோதும் ஒலி அலைகளை சமநிலைப்படுத்தும் சக்தி படைத்தவை.

ஒன்பது - நாக்கின் முன்பகுதியில் படும் பொருளின் ருசியை உணர, உணவை விழுங்க, உமிழ்நீரைச் சுரக்கச் செய்யவதற்கான தசைகளை இயக்க.

பத்தாவது ஜதைக்கு ஏகப்பட்ட முக்கிய வேலைகள். நெருக்கடியான நேரங்களில் இதயம், சுவசம், ஜீரண உறுப்புகள் ஆகியவை தாமே இயங்கிக் கொள்வதற்கான உத்திரவுகளை பிறப்பிக்க இந்த நரம்புகளே பொறுப்பேற்றுக் கொண்டு செயல்படுகின்றன.

பதினொன்றாவது - தலையைத் திருப்ப, தோளை வேகமாக அசைக்க

கடைசியான பன்னிரண்டாவது ஜதை -- நாக்கை அசைக்கும் தசைகளை இயக்க.

ஆக, பெருமூளை உணர்வுகளை உள்வாங்கவும், தேவையான் உத்திரவுகளைப் பிறப்பிக்கவும் ஏற்ற இடமாகிறது. நிதானித்துச் செய்யும் செயல்களின் உற்பத்திக்கேந்திரமும் இதுதான்.


இன்னும் தொடரும் விஷயங்களில் நிறைய அதிசயங்கள் இருக்கின்றன.

அவற்றைத் தொடர்ந்து பார்க்குமுன் --


இறைவன் இருக்கின்றார்

'ஆவ்' என்று நீண்ட கொட்டாவி. தூக்கம் கண்களைச் சுழற்றுகிறது. இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்று தூங்கப் போகிறோம்.

சரி. இந்தத் தூக்கம் என்பது தான் என்ன?.. அயர்ச்சி அடைந்த நரம்புகள் தளர்ச்சி அடையச் செய்து சுகிக்கபடும் ஓய்வா?.. நாம் அப்படி நினைத்துக் கொண்டாலும் உண்மையில் இல்லை. தூங்கும் பொழுது தான், மூளை அதிக ஆக்ஸிஜனை ஏற்றுக் கொள்கிறது. மூளையின் 'ஹிப்போகேம்பஸ்' பகுதி முழு வீச்சில் செயல்படும்நேரம் நாம் தூங்கும் பொழுதே. நினைவில் நின்ற நிகழ்ச்சிகள், எப்போதோ நடந்தது கூட ஏதேதோ சம்பந்த முடிச்சை தமக்குத் தாமே போட்டுக் கொண்டு கனவுப்படம் ஓடுகிறது. அன்று நடந்தவை களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 'இதை ஃபைல் படுத்திக் கொள்ளலாம்' என்று மூளை தீர்மானித்துத் தன் கோப்பில் கோர்த்துக் கொள்ளும்நேரமும், அசந்து மறந்து மனிதன் தூங்கும் நேரம் தான்.

இதயம் பாட்டுக்க 'சிவனே' என்று துடித்துக் கொண்டிருக்கிறது. இரத்த ஓட்டம் தன் ஓட்டத்தில் கவனமாக இருக்கிறது. சுவாசக்காற்று சீராக நுரையீரல்களுக்கு சப்ளை ஆகிக்கொண்டிருக்கிறது.

மூளை சர்க்யூட்டுகள் மட்டும் மிகுந்த பொறுப்புணர்வுடன் ஒன்றுக்கொன்று பேசி வைத்துக்கொண்ட ஒற்றுமையில் செயல்பட்டு கண்களைச் செருக வைத்து நம்மைக் கட்டிப் போட்ட தூக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

உடலின் உள் செயல்பாடுகள் உணர்விலிருக்க, உடல் மட்டும் தன்னை இழந்து, தன்னிலிருந்து நழுவி தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தூங்கும் நேரம், தூங்குபவன் ஆனந்த களிப்புடன் தெய்வ சம்பந்தத்துடன் பிணைக்கப்பட்ட நேரம்!

இருட்டுக்கும் தூக்கத்துக்கும் கூட சம்பந்தம் உண்டு. இரவானால், 'விளக்கை அணைத்துத் தூங்கு' என்பது தொடர்ந்த பழக்கத்தினால் வந்த செய்கை.

(தேடல் தொடரும்)
Related Posts with Thumbnails