மின் நூல்

Friday, August 30, 2019

மனம் உயிர் உடல்

5.  இரண்டு மனம் வேண்டும்

‘கல்ப  கோடி ஆண்டு’ என்றாலே புராணச் சரடு என்று ஒதுக்கிவிடாமல் இருக்க அந்த வார்த்தையைத் தவிர்க்கிறேன்.
  
நாம் வாழும் இந்த பூவுலகம் பல கோடிக்கணக்கான ஆண்டுகள் வயதுடையது.  உலகின் தோற்ற காலமே உயிரின் தோற்றகாலமில்லை.  உயிரின் தோற்றம் உலகின் தோற்றத்திற்கு சில கோடி ஆண்டுகள் கழித்து நிகழ்ந்திருக்கிறது.  

இயற்கையின்  செல்வமான இன்றைய தாவர வகையின் ஆதித்தோற்றம் எல்லா உயிரினத் தோற்றங்களுக்கும் முன்னால் நிகழ்ந்திருக்கிறது.  அதற்கடுத்த தோற்றம் பிராணி இனத்திற்கானது. நுண்ணிய ஒரே ஒரு செல்  கொண்ட அமீபாவுக்குக்  கிடைத்த பேறு அது.

உயிரற்ற பொருட்களுக்கு அணு போல, உயிருள்ளவைகளுக்கு செல்.  செல்லின் உட்கரு நூக்லியஸ்.  அதைச் சுற்றி புரோட்டோபிளாசக் கூழ். அமீபாவுக்கு அதனது பின்னப்பட்ட ஓரப்பகுதிதான்  கைகள். அமீபா காலத்திலேயே உணர்தல் அமுலுக்கு வந்து விட்டது.  உணவைக் கண்டுபிடிக்க அமீபாவிற்கு இந்த உணர்தல் தான் உதவியிருக்கிறது.  உணர்வால் உணவைக் கண்டு கொண்டதும் அமீபாவின் ஓரப்பகுதியின் இரு துண்டுகள் இணைந்து அதற்கான உணவில் படியும்; அல்லது பற்றிக்  கொள்ளும்.  கொஞ்சம் கொஞ்சமாக பற்றிக் கொண்டதை அமீபா கபளீகரம் செய்து விடும்.

இந்த ஒரு ஸெல் அமீபா தான் வெகு மூத்த குடிமகன்.  ஒரு  ஸெல் அமீபா பல ஸெல் உயிரின தோற்றங்களுக்கு வழிவகுத்து அவை  பல்கிப் பெருகி பிராணிகள் இனத்திற்கு அடிகோலி அவை உண்டு களித்து கழித்து உறங்க தேவைகளுக்கேற்பவான உறுப்புகளும் அமையப் பெற்று மனித குலத்தின் தோற்றத்திற்கு அச்சாரமிடப்பட்டது.

எல்லா பிராணிகளின் கூட்டத்தைப் போலவே மனிதனும் ஸெல்களின்  கூட்டம் தான்.    பல அடுக்குத் தோல்ப் போர்வை, அதற்கடியிலான  கொழுப்பு ஸெல்கள் என்று தோல், உள்ளடங்கிய சமாசாரங்களை மூடுவதற்கும் தேகத்தின் உஷ்ணநிலையைக் காப்பதற்குமான அருமையான ஏற்பாடாகவும் அமைந்திருக்கிறது.   ஸெல்களைச் சுற்றி திசு போன்ற உறுதியான தசைநார் ஸெல்களும்  உண்டு.  தசைகளோடு பிணைந்தவையாய் வெண்மை நிறத்தில் நரம்புகள்.  நரம்புகளும் ஸெல் அமைப்பு   கொண்டவை தான்.  தசைகளுக்கு உள்ளுக்கு உள்ளாய் உடலின் உள் உறுப்புகள்.

மனதைப் பற்றித் தெரிந்து கொள்ள மனதிற்கு சம்பந்தப்பட்ட உறுப்புகளின் செயல்படும் தன்மை பற்றியும்  தெரிந்து  கொள்ள வேண்டும்.   அப்புறம் அப்படிச் செயல்படுவதற்காகக் கிடைக்கும் சக்தி பற்றி.

உணர்வுகளை அழகாக வித்தியாசமாகச் சொல்லிவிடுவது தான் கவிஞர்களின்  மொழி.

இரண்டு மனம் வேண்டும் என்று இறைவனிடன் கேட்கிறார் கண்ணதாசன்.  ‘நினைத்து வாட ஒன்றாம்;  மற்றொன்று மறந்து வாழ்வதற்காம்.
    
இரண்டு மனம் என்பது இல்லையாயினும்   மனித மூளை இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருப்பது போலத் தோற்றம் கொடுக்கும்.  நமது வசதிக்காக வலப்புறம் இருக்கும் பகுதியை வலப்புற மூளை என்றும் இடப்புறம் இருக்கும் பகுதியை இடப்புற மூளை என்றும் கொள்வோம்.  இந்த இரண்டு பகுதிகளையும் இணைக்க  corpus callosum  என்னும் இணைப்புப் பாலம் உண்டு. 

பேச்சு, பேசும் மொழி, வார்த்தைகள் இவற்றை கட்டியாள்வது இடப்புறப் பகுதி.  அதற்காக ல-ள, ழ-ல வித்தியாச உச்சரிப்பிற்கெல்லாம் இதைப் பொறுப்பாக்க  முடியாது.  உச்சரிப்பு என்பது பழக்கத்தில் அமைவது.  அதே மாதிரி நிறைய மொழிகள் அறிந்தவருக்கு மூளையின் இடப்புற பகுதியில் அறிந்த மொழிகளுக்காக நிறைய இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் என்றும் கிடையாது.  லாஜிக்கலான, படிப்படியான ஆழ்ந்த சிந்தனைகளுக்கு கருவூலம் இந்த இடப்பகுதி என்பது இந்தப் பகுதியின் விசேஷம்.  வலப்புறமோ உருவங்கள், நிறங்கள்,  ஓவியங்கள், பாடல்கள் என்று இதன் உலகமே தனி.  கற்பனைகள் பூப்பதற்கு இந்தப்  பகுதி  தான் காரணம்.  

மூளையின் தோற்றம்  இரண்டு பகுதிகளாக இருப்பது போலத் தோற்றம் கொண்டிருப்பினும் இவை தனித்தனியே வேலை செய்வதில்லை.  அதாவது லாஜிக் பகுதியும் கிரியேட்டிவ் பகுதியும் தங்களுக்குள் முரண்டிக் கொள்வதில்லை.  சொல்லப் போனால் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு செயல்படுகின்றன.  இரண்டு  பகுதிகளையும் ஒன்று சேர்க்கும் பாலமான corpus callosum  மூலம் இவை செய்திகளைப் பரிமாறிக் கொள்கின்றன. இன்னொரு முக்கியமான விஷயம்.   வலது பகுதி மூளை உடலின் இட்து பகுதியையும், இடது பகுதி மூளை உடலின் வலது பாகத்தையும் ஆள்கின்றன.

மூளையின்  வெளிப்புறம் நிமிர்த்தி வைத்த காலிப்ளவர் மாதிரியான தோற்றம் கொடுக்கும்  மூளையின் வெளிப்பரப்பு சாம்பல் நிறமாயும், உள்பகுதி வெண்மை நிறமாகவும் இருக்கும். மூளையின்  வெளிப்புறம் cerebral cortex என்று அழைக்கப்படுகிறது.  மனித மூளைகளுக்கே வாய்த்த தனிச்சிறப்பு வாய்ந்தது இந்த பகுதி.  மனிதனின் அறிவுக்கூர்மைக்கு பொறுப்பேற்கும் பகுதியாகக் கருதப்படுகிறது..   அறிவு என்பது என்ன என்று பார்க்கும் பொழுது இதைப் பற்றி விவரமாக விவரிக்கலாம்.

நியூரான்கள் என்பவை நரம்பு செல்கள்.   ஒவ்வொரு நியூரானுக்கும் ஒரு முனையில் டெண்டிரைட்டு என்னும் சிறிய கிளையும் மற்றொரு முனையில்  அக்ஸன் என்ற சற்று நீண்ட கிளையும் உண்டு.  நரம்பு ஸெல்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து காணப்படுவதில்லை.  ஒரு நியூரானின் அக்ஸன் பகுதி அடுத்த நியூரானின் டெண்டிரைட்டுக்கு அருகில் இருக்கிற மாதிரி தோற்றம் கொண்டிருந்தாலும்  ஒன்றிற்கு ஒன்று தொட்டு விடாமல் இருக்கும்.  இரண்டும் இணையாத இடைவெளி கொண்ட குறுகிய இடத்திற்கு ஸைநாப்ஸ் என்று பெயர்.  உணர்வு பூர்வமான சமயங்களில் அல்லது உத்திரவுகளைப் பிறப்பிக்கின்ற அதிகார தோரணை நேரங்களில் இந்தப் பகுதியில் ஏற்படும் ஒரு ரசாயன நிகழ்வு விசேஷ என்ஸைம்களால் ஊக்குவிக்கப்படுவதாக ஆராய்ச்சிகளின்  மூலம் கண்டறிந்திருக்கிறார்கள்.   மிகுந்த சூட்சுமத்துடன் லாகவத்துடன் இந்த ஊக்குவிப்பு நிகழ்கிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கண்டுப்பிடிப்பு.

இப்போதைக்கு இது போதும்.

மூளையே தான் மனமோ என்று மயக்கம் கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. இரண்டும் ஒன்றல்ல என்று முடிவுக்கு வருவதற்கும் அழுத்தமான காரணங்கள் உண்டு.
மூளையின் செயல்பாட்டிற்கும் மனத்தின் செயல்பாட்டிற்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு.

மூளை கண்ணுக்குத் தட்டுப்படுகிற உடலின் ஒரு உள்ளுருப்பு.  கிட்டதட்ட 1.5 கிலோ கிராம் எடையுள்ள ஒரு பொருள்.

மனம் என்று நாம் குறிப்பிடுகிற எதுவும் மனித உடலின் எந்த உறுப்பாகவும் அதாவது பொருளாக இல்லை.  இருந்திருந்தால் சி.டி. ஸ்கேன்களில் சிக்கியிருக்கும்.

இருந்தாலும் மூளையின் செயல்பாடு தான் மனமா என்கிற பதில் வேண்டுகிற கேள்வியும் உண்டு.

மூளை, மனம் இந்த இரண்டுக்குமான ஒரு பொதுவான புரிதலில் மூளை என்பது நம் உடலின் வெளிச்செயல்பாடுகளை  நிகழ்த்துவதாகவும்,  மனம் என்பது உள்செயல்பாடுகளை உணர்த்துகிற ஒன்றாகவும் கொள்ளலாம்.      

(வளரும்)                                                            

Wednesday, August 28, 2019

மனம் உயிர் உடல்

அத்தியாயம்—4     தத்தரிகிட  தத்தரிகிட  தித்தோம்!


யற்கை ரொம்பவும் ரகசியம் பொதிந்தது. மனிதன் உயிர்ப்பெடுத்த ஆரம்ப  காலத்திலிருந்து ஒவ்வொன்றையும் தனது தேவைகளுக்காக தேடித்தேடி தான் அறிந்து கொண்டிந்திருக்கிறான்.  பிரபஞ்சம் எங்கணும் கடை விரித்திருப்பதை தவிர இன்னும் இன்னும் தேடித் தெரிந்து கொண்டால் எனக்கொன்றும் ஆட்சேபஷை இல்லை என்கிற ஹோதாவில் தான் இயற்கையும் தன் அரிய செல்வங்களை  பொத்தி வைத்திருப்பதாகத் தெரிகிறது!  

'சும்மா கிடைக்க சுதந்திரம் என்ன சுக்கா, மிளகா, கிளியே' என்ற சுக்கு சும்மா கிடைத்த காலத்தில் வாழ்ந்த பாரதிதாசனார் கேள்வி நினைவுக்கு வருகிறது.  தேடித் தெரிந்து கொண்டால் தான் அதன் அருமை மனசில் படியும் என்கிற எண்ணத்திலோ என்னவோ இந்த ரகசிய பொதித்தல் போலிருக்கிறது. நெருப்பைப் பற்றித் தெரிந்து கொண்ட ஆரம்ப காலத்திலிருந்தே தெரிந்து கொண்டதெல்லாம் வாழ்வதற்கான போராட்டமாக மனிதனுக்கு அமைந்து போயிற்று. பொழுது போக்கிற்காக என்று இல்லாமல் அவன் உயிர் வாழ்வதற்கான தேவைகளின் அடிப்படையில் தான் ஒவ்வொரு அறிதலும் இருந்திருக்கிறது..  

தேவைகளின் அடிப்படையில் அறிந்து கொள்ளல்,  அறிந்து கொள்வதின் அடிப்படையில் தேவைகளின் தொடர் நீட்சி, அதற்கான தொடர் தேடல்கள் என்று இயற்கையின்  ரகசியம் அறிதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  இந்த பிரபஞ்சம் உள்ளவரை இந்தத் தொடரல் இருந்து கொண்டே தானிருக்கும் என்கிற அளவில் இயற்கையில் பொதிந்துள்ள சக்தியும் அதன் பொத்தி வைப்பு ரகசியமும் மனித யத்தனத்தை மீறியதாக இருக்கிறது.. இயற்கைக்கும் மனிதனுக்குமான இந்த கண்ணாமூச்சி விளையாட்டும் மனித குலத்தின் மீதான இயற்கையின் ரட்சிப்புமே மனிதனுக்கும் இயற்கைக்குமான என்றும் நிலைபெற்றிருக்கும் பந்தமாகத் தெரிகிறது.

இயற்கையின் மாளாத புதிர் அவனை மிரட்டியிருக்கிறது;  வற்றாத தன் செல்வங்களை வாரி வழங்கி சந்தோஷப்படுத்தியிருக்கிறது. இரகசியங்களின் புதையலாய் பிரமிப்பேற்படுத்தி அவனைத் திகைக்க வைத்திருக்கிறது. ஆதரவாய் இருந்து ஆசிர்வதித்திருக்கிறது. தான் உயிர் வாழ்தலே, இயற்கையின் உயிர்ப்பின்  ஒடுங்கலில் தான் என்று மனிதனுக்குப் புரிந்ததும் கைதூக்கி வணஙகித் தொழும் மரியாதைக்குரியதாக அந்த இயற்கை அவன் மனசில் சிம்மாசனமிட்டது.

காற்று தெய்வம்; கடல் தெய்வம், ஞாயிறு தெய்வம்;  நட்சத்திரங்களும் தெய்வம்; நீக்கமற நிறைந்துள்ள நீள் விசும்பும் தெய்வம் என்னும் ஞானம் கிட்டியது.  மருண்டதுவும், மலைக்க வைத்ததுவும், மனதிற்கிசைந்ததுவும் பிர்மாண்ட சக்தியை உள்ளடக்கிக் கொண்டவை என்பதும் அறியலாயிற்று. .  அந்த சக்தியின் இயக்கம் இல்லையெனில் தான் இல்லை என்பது தெளிவான  பொழுது மருண்டதற்கும், மலைக்க வைத்ததற்கும், மனதிற்கிசைந்ததற்கும் மனதில் படிந்த உருவம் கொடுத்து மனிதன் தன் நலனுக்காக,, தன் சந்தோஷத்திற்காக, நீண்ட வாழ்விற்காக  நன்றி செலுத்தலுக்காக அந்த பிர்மாண்ட சக்தியை வணங்கத் தலைப்பட்டான்.  . 

ஞாயிறு, காற்று, கடல், ஆகாயம் எல்லாம் பாரதியின் உணர்வில் தைத்து தெய்வத் தோற்றம் கொண்டதெல்லாம் நமக்குத் தெரியும்.  காக்கைச் சிறகினிலே நந்தலாலாவைக் கண்டு களிதவரில்லையா, அவர்?..

காற்றென்று சக்தியைக் கூறுகின்றோம்
ஏற்றுகிற சக்தி; புடைக்கின்ற சக்தி; மோதுகின்ற சக்தி, சுழற்றுவது, ஊதுவது
சக்தியின் பல வடிவங்களிலே காற்றும் ஒன்று.
எல்லா தெய்வங்களும் சக்தியின் கலைகளேயாம்
சக்தியின் கலைகளையே தெய்வங்க ளென்கிறோம்
காற்று சக்தி குமாரன்
அவனை வழிபடுகின்றோம்.

--- மஹாகவி

மனிதனிலிருந்து ஆழ்கடலின் பாசிப் பாக்டீரியா வரை அத்தனையும் இயற்கையின் கூறுகள் தாம். மலைகள் எப்படி ஆற்றுமணலாய் ஆனது என்பதற்கான நிகழ்ச்சிப் போக்கு நமக்குத் தெரியும். ஆதிகால உயிரணு தோற்றதிலிருந்து மனிதனின் வளர்ச்சிப்போக்கு கொண்ட வரலாறும் அது போலவே தான். மணல் தேய்வுக்கதை என்றால் மனிதனது வளர்ச்சிக்  கதை.  மனித குலத்தின் இதற்கு மேலான வளர்ச்சியும் இன்றைய வளர்ச்சிப் போக்கிலேயே புதைந்திருந்து இதற்கு மேம்பட்டதாய் அல்லது இன்னொன்றாய் வடிவு கொள்ளும் என்பதும் வளர்ச்சிப்போக்கின் விஞ்ஞானமாகும்.

இயற்கையின் இன்னொரு நீட்சியே மனிதனா, அல்லது இயற்கையின் வளர்ச்சிக் கூறுகளின் படிமானம் கொண்ட வடிவமே மனிதனா என்பது சுவாரஸ்யமான ஒரு கேள்வி.  இந்தக் கேள்விக்கான பதிலை சுலபப்படுத்த  மனிதனில் இயற்கையின் ஆளுகையை ஆராய வேண்டும்.

வெளிக்காற்றே மூச்சாய் செயல்படுகிறது, மூச்சுக்காற்று மனிதனின் உயிர்ப்புக்கு ஆதாரமானது என்பது ஏழாம் வகுப்பு சிறுவனுக்கும் அத்துப்படியான விஷயம்.  ஆகையால் வெளிப்படையான மேலோட்டமாக அல்லாது கொஞ்சம் உள்நோக்கி மனிதனைப் பார்ப்போம். மனித உடற்கூறு அமைப்புகளில் ஒவ்வொன்றின் செயல்பாட்டுக்கும் இணை இன்னொன்றில்லை என்பது அடிப்படை அம்சம்... இருந்தும் மேலிருந்து கீழாகவோ அன்றி கீழிருந்து மேலாகவோ எங்கேயிருந்தாவது ஆரம்பிக்க வேண்டுமல்லவா?  தலையிலிருந்து பாதம் வரை என்பது மரபாகையால் நாம் சிரசிலிருந்தே ஆரம்பிப்போம்.

அதற்கு முன் உங்கள் யோசனைகளைக் கிளர்த்த ஒரு கவிதை:

ஒரு துளி தான்.
அதன் பரிணாமம்?
கபாலம், கைகள்
பார்க்கக் கண்கள்
நடக்கக் கால்கள்
சுலபமாக நீட்டி மடக்க
பசை சுரக்கும் மூட்டுகள்
உள்ளே சிறகடிக்கும்
உயிர்ப்புறா!
மூக்கு, காதுகள்
நாக்கு நரம்புகள்
இதயம், தண்டுவடம்
இரைப்பை, நுரையீரல்
கல்லீரல், மண்ணீரல்
சிறுகுடல், பெருங்குடல்
உள்ளே போக வாய்; போனது
வெளியே வரவும் வழி
இரத்த சுத்திகரிப்பு
எட்டு எலும்பு மணிக்கட்டிற்கு
ஏழு குதிகாலுக்கு
உள்ளங்கைக்கு ஐந்து
உள்ளங்காலுக்கும் அதுவே!
பங்கீட்டில் யாருக்கும்
பேதமில்லை
கணக்கில் பிசகில்லை
ம்?..
எப்படி இந்த  சித்து வேலை
சாத்தியமாயிற்று?..

                   --யாரோ

கவிதையை யாத்தது யார் என்பது முக்கியமல்ல; கவிதையின் அடிநாதமான 'எப்படி சாத்தியமாயிற்று' என்பது  பற்றி உங்கள் சிந்தனை வலை பின்னட்டும்.

மனதைப் பற்றிய தெளிவிற்காக மனிதப் பிறப்பின் தலையிலிருந்து அடுத்த பகுதியில் தொடர்வோம்.


(வளரும்)Tuesday, August 27, 2019

மனம் உயிர் உடல்

3.   மனம் என்னும் மேடை மேலே....

‘மனம் என்றால் என்ன?’  என்கிற அடிப்படை கேள்வியை இப்போதைக்கு செளகரியமாக மறந்து விடுவோம்.  அல்லது தற்காலிகமாக புறக்கணித்து விடுவோம்.  நேரடியாக இல்லாமல் வேறு சில வழிகளில் மனம் என்பதின் குணாம்சத்தினை அறிய  முற்படுவோம்.  கேள்வி---பதில் போன்றதான ஒரு உரையாடல் அதற்குத் துணை செய்யும்.

கேள்வி—-1:  மனம் என்பது ஒரு பொருளா?  இல்லை, உடலின் உள்ளுருப்பா?

பதில்:  இரண்டும் இல்லை.  இந்த இரண்டிலும் எது ஒன்று என்றாலும் நுண்ணிய கருவிகளின் உதவியோடு உடல் பரிசோதனைகளில் கண்டுபிடித்து விடலாம்.  அது முடியாததினால் தான் இந்த அல்லாட்டம்.

கேள்வி—2;  இரண்டும் இல்லாமல் ‘மனம்’ என்ற ஒன்று இருப்பது எப்படித் தெரிந்தது?

பதில்:  வழிவழியாக பலர் சொல்லி, படித்து, அனுபவப்பட்டுத் தெரிந்தது இது.  மனம் என்ற அதன்  பெயர் மொழிக்கு மொழிக்கு மாறுபடலாம்.  பெயர் மாறுபடுகிறதே தவிர, அதன் இருப்பை உணர்த்துவதான செயல்பாடுகளில் மாற்றம் இல்லை.  ஆக செயல்பாடுகளை வைத்து அப்படியான செயல்பாடுகளை நிர்வகிக்கிற ஏதோ ஒன்று இருப்பதாக முடிவுக்கு வந்து அதற்கு மனம் என்று பெயரும்  கொடுத்திருக்கிறோமே தவிர ஸ்தூலமான அதன்  இருப்பைப்(Physical presence) பற்றி  அறிந்தோர்  இல்லை. 

கேள்வி—3 :  அதன் இருப்பு (fact of existing)  எப்படித் தெரிய வந்தது?

பதில்:  உணர்வுகளின் மூலம்.  உடலின் செயல்பாடுகள் அதன் இயக்கமாய் இருப்பது போல மனதின் செயல்பாடுகளும் இருப்பதை உணர்கிறோம். உண்மையில் சொல்லப்போனால் என்னைப் பற்றி எழுது என்கிற ஆக்ஞையை, ஆலோசனையை அளித்ததே என் மனம் தான்.  அந்த ஆலோசனை கிடைத்த நாளிலிருந்து அதைப் பற்றிப் பலர் சொன்ன  கருத்துக்களை அறிய ஆரம்பித்தேன்.  பலர் எழுதிய நூல்களை வாசித்து மனம் பற்றியதான தெரிதலை வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தேன். வாசித்துத் தெரிந்து கொண்டதை என்  மனச் செயல்பாட்டு உணர்வுகளை உரைகல்லாகக் கொண்டு சரிபார்த்துக் கொள்ளத் தலைப்பட்டேன்.  அதன் செயல்பாடுகளில் சில விசேஷ செயல்பாடுகளும் உண்டு.

கேள்வி—4 : இன்ட்ரஸ்ட்டிங். அப்படிச் சிலதைச் சொல்ல முடியுமா?..

பதில்: ஓ! தாராளமாக.  மனக்குறளி என்று ஒன்று; அசரீரி மாதிரி.  மனசின் செயல்பாடுகளில் இதான் ராஜா.  ஏதாவது வழிகாட்டலா கிடைச்சா அப்படியே  நடக்கும்.  மனக்கிலேசம் என்று இன்னொன்று.  ஒரே உழப்பலா மனுஷனை வாட்டி எடுத்து ஒரு வழி பண்ணிவிடும். ‘மனசார’ என்று மற்றொன்று. சர்வாங்கமும் திருப்தியில் நிறைவடைஞ்ச மாதிரி இருக்கும். ‘மனத்திருப்தி’ன்னு ஒண்ணு.  உடல், உணவு, வாழ்க்கைன்னு எல்லாத்துக்குமான எல்லா திருப்திகளையும் தாண்டினது இது. இந்த திருப்தி  இல்லேனா, எதுவொண்ணும் நிறைவடைஞ்ச மாதிரியே இருக்காது. . ‘மன விரோதம்’ன்னு ஒண்ணு. மனசை விரோதிசிகிட்டு எதையாவது செய்து விட்டால் சர்வ காலமும் உறுத்திகிட்டே இருக்கும். உறுத்தலை சரி பண்ணற  வரைக்கும் ஓயாது. சுருக்கமா சொல்லணும்னா, நமது எல்லா நடவடிக்கைகளும் மனசு சம்பந்தப்பட்டது தான்.. மனசு சம்பந்தப்படாத எந்த நடவடிக்கையும் இல்லேன்னு தான் சொல்லணும்.  இதில் இன்னொரு வேடிக்கை.  மனசோட சம்மதம் இல்லேனா, எது ஒண்ணும் சோபிக்காது.  மனசின் உள் நடவைக்கைகள் நமது வெளி நடவடிக்கைகளுக்கு ஆதாரமா இருக்கறதை எல்லா நேரத்திலேயும் உணரலாம்.  இந்த விதத்தில் நமது வாழ்க்கையின் அனுதின நடவடிக்கைகள் அத்தனைக்கும் உந்து சக்தியாய் மனசின் உள் நடவடிக்கைகள் இருப்பதை கவனித்துப் பார்த்தால் தெரியும். சில அனிச்சை செயல்களைத் தவிர மனதில் உலா வராமல் எந்தச் செயலும் செயலாவதில்லை.  ரகசிய ரகசியமாய் மனம் கிசுகிசுப்பதை நாம் எல்லோரும் கேட்டிருப்போம். சில நேரங்களில் உன்னிப்பாய் நாம் சொல்வதை மனசும் காது கொடுத்துக் கேட்பது போலக் கேட்கும்  அதற்கு பதிலும் தரும்.. சஜஷன்னு சொல்றாங்க.. நம்மை ஊடகமா வைச்சிண்டு இன்னொருத்தர் கூட நம் மனசோட பேசலாமாம்.

கேள்வி—5:  அப்போ நீங்க சொல்றதைப் பார்த்தா நீங்க தனி, உங்க மனம் தனின்னு நீங்க நினைக்கிற மாதிரின்னா இருக்கு?..

பதில்: ஹ..ஹ.. அப்படியில்லீங்க.. நானும் என் மனசும் ஒன்றுக்குள் ஒன்று  புதைஞ்ச மாதிரி சில நேரங்களில் இருக்கு.  பல நேரங்களில் என் மனசுக்குத் தான் கை கால் முளைச்சு நானாக நடமாடுவதாகத் தோன்றுகிறது.  மொத்தத்தில் நான்  என்று நான் நினைப்பது என்  மனசு தாங்க.. நான் வேறு என் மனசு வேறு இல்லீங்க..

கேள்வி—6   ஒரு வேளை மூளைதான் மனமோ?

பதில்: நானும் அப்படித்தாங்க நினைச்சிக்கிட்டு இருந்தேன். ஒரு நாள் இந்த மனசு தான் எங்கிட்டே கேட்ட மாதிரி இருந்தது. ‘ஐம்புலங்களும் மூளையின் ஆணைக்குக் கட்டுப்பட்டவங்க.. சரி, இந்த மூளை யார் ஆணைக்குக் கட்டுப்பட்டது தெரியுமா?’ன்னு கேட்ட மாதிரி இருந்தது. எனக்கு பதில்  சொல்லத் தெரியலே. இவ்வளவு தெளிவா கேக்கறதே. சரி, இதன் ஆணைக்குத் தான் அந்த மூளையும் கட்டுப்பட்டதோன்னு நெனைச்சிகிட்டேன். ஒரு கேள்வியைக் கேட்டு அதுக்கேத்த பதிலையும் நெனைக்க வைச்சதே இந்த மனசோட ஏற்பாடோன்னு கூட ஒரு சம்சயம்.

கேள்வி—7:  நான் வேறு மனசு வேறு இல்லீங்கன்னு இப்பத்தான் சொன்னீங்க.. இப்போ நீங்க சொல்றதிலே, நீங்க வேறு உங்க மனசு வேறுங்கற தொனி ஒலிக்கிற மாதிரி இருக்கே?..

பதில்: மனம், உயிர், உடல் எல்லாம் ஒரே கலவை தாங்க.. ஒண்ணு  இல்லேனா, இன்னொண்ணும் இல்லேன்னு ஒவ்வொண்ணும் பிட்டுக்கும். இப்போ நுரையீரல்ன்னா சுவாசிக்க என்று  தெரியறது. இதயம்ன்னா இரத்தத்தை பம்ப் பண்ண, சுத்திகரிக்கன்னு தெரியறது. இப்படி அது அதோட வேலை என்னன்னு டிஃபைன் பண்ணணும் இல்லியா, அதுக்காகத் தாங்க இந்தப் பிரிச்சுப்  பாக்கற வேலையும்.

கேள்வி—8:  அப்போ ஏன் இந்த அநாவசிய ஆராய்ச்சி வேலை?

பதில்: எதுவும் அநாவசியம்  இல்லீங்க.. அவசியமாத் தான்.  வாழணும்ன்னு வந்துட்டோம். இப்படி வாழ நேர்ந்த வாழ்க்கைலே மனம் ஆரோக்கியமா இருந்தா வெற்றிகரமா சந்தோஷமா வாழ்ந்திட்டுப் போகலாமேங்கறதுக்காகத் தான்.

கேள்வி—9:  மன ஆரோக்கியமா?.. உடல் ஆரோக்கியம் தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.  இது என்ன மன ஆரோக்கியம்ன்னு புதுசா?..

பதில்மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம்ன்னு  சொல்றாங்க.. மருந்தில்லாத மருந்தாம் அது.  காசு பணம் செலவில்லே. அதான் என்னன்னு பாத்திடலாமேனுட்டு.

கேள்வி--10:  மன ஆரோக்கியம் இல்லேனா, என்னவாகுமாம்?..

பதில்: வாழ்க்கையே வெறுத்துப் போகுமாம். சமூக பழக்க வழக்கங்கள் சரியா அமையாது. தொட்டதற்கெல்லாம் சலிப்பும், கோபமும் சூழ்ந்து சோர்வடையச் செய்யும். மற்றவர்கள் பார்வைக்கு அவங்கள்லேந்து விலகின வேறு விதமா நாம தெரிவோம். அப்படித் தெரியற அளவுக்கு நம்ம நடவடிக்கைகள் அமைந்து போகும். மொத்தத்தில் மன ஆரோக்கியம் இல்லேனா, சமூகம் மறந்து போய் தானே பிரதானமாய் ஆகிப்போகும். சமூகத்தோடு கலந்த ஒரு கூட்டு வாழ்க்கைக்கு தயாரில்லாத தனிமைப் பிரியர்களாய் மாறிப் போவோம். ஆரம்பத்திலே நம்மை நாமே நேசிப்பது தான்  பிரதானமாய்ப் போய், கடைசிலே நம்மை நாமே வெறுக்கற அளவுக்குக் கொண்டு போய் விடும். 

அதுமட்டுமில்லே. நமது இன்றைய வாழ்வின் நெருக்கடிகளை சமாளிக்க திறன் நிறைய வேண்டியிருக்கு. அந்த நெருக்கடிகளுக்கு ஏற்ப நம்மைத் தயார் நிலைலே வைத்துக் கொள்வதற்கும், எதிர்பார்த்தேயிராத குறுக்கீடுகளை சமாளிக்கவும் மன ஆரோக்கியம் அவசியமாகிறது. சுருக்கமா மன ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான அல்லது பெறுவதற்கான பயிற்சிகளை வாழ்க்கைக் கல்வினே சொல்லலாம்.

கேள்வி—11: மனம்ன்னு ஒரு உறுப்பே உடம்புக்குள்ளாற இல்லேனு சொல்றீங்க.. ஆனா அதோட ஆரோக்கியத்தைப் பத்தி அக்கறை பட்டு இவ்வளவு சொல்றீங்க.

பதில்: மனம்ன்னு நம்ம உடம்புக்குள்ளாற ஒரு உறுப்பு இல்லாம இருக்கலாம். அல்லது உறுப்பாய் இருக்கணும்ங்கற அவசியமே அதுக்கு இல்லாம இருக்கலாம். உறுப்பு இல்லேங்கறத்துக்காக அதோட ஆரோக்கியத்திலே அக்கறை கொள்ளாம இருக்க முடியாது. அதன் நலன்லே கவனம் கொள்ளாம இருக்க முடியாது.  ஏன்னா, இன்றைய சிக்கலான வாழ்க்கைப் போக்குலே ரொம்பவே சிரமத்திற்குள்ளாறதும் இந்த மனம் தான்; நம்ம சகல பெருமைகளுக்கும் சந்தோஷத்திற்கும் காரணமாய் இருப்பதும் இந்த மனம் தான். ஒவ்வொரு விஷயத்திலேயும் நம்ம நடவடிக்கையைத் தீர்மானிக்கறது இது தான் என்கிற பொழுது எப்படி இதன் நலனில் அக்கறை கொள்ளாமல் இருக்க முடியும், சொல்லுங்கள்.

கேள்விகளுக்கான பதில்கள் பளிச்சிட்ட பொழுது பதில்களில் இருக்கும் நியாயம் புரிந்தது. அந்தப் புரிதலே மனச்சுரங்கத்திற்குள் ஆழ இறங்கி தேடிப்பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

(வளரும்)                                              


                                       

Monday, August 26, 2019

மனம் உயிர் உடல்

                                                                             2ம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்வது போலவான தொடர் என்று இந்தத் தொடரின் ஆரம்பம் குறித்துச் சொல்லி மேலும்  தொடர்வதற்கு விருப்பம் தெரிவிக்கிறார் வெங்கட் நாகராஜ்.

வல்லி சிம்ஹனோ இந்தத் தொடர் தீவிரத்தை நன்கு புரிந்தவராய் இருக்கிறார்.
எல்லாவற்றிற்கும் ஆதார சுருதி மனம் தான் என்று அடிக்கோடிட்டுச் சொல்கிறார்.  மனம் ஆசைப்படுகிறது;  வாய்  பேசுகிறது;  உடல் அதை  நிறைவேற்றுகிறது.  ஆசைப்பட்ட பொருள் அழிந்தோலோ மனதிற்குத் தான் மிகுந்த கலக்கமாகிப் போய் கண்களில் கண்ணீர் ததும்புகிறது.  மனத்திற்கு ஓய்வே கிடையாது போலிருக்கிறது;  உயிர் அடங்கினால் தான் மனமும் அடங்குமோ, வேறு  ஒரு உயிரில் ஒடுங்குமோ என்று  கவித்துவமாய்  வியந்து மனம் மிகப் பெரிய சமுத்திரம் என்று அதன் எல்லையற்ற பரப்பையும் ஆழத்தையும் கண்டு பிரமிக்கிறார்.

மனம், உயிர் என்பதெல்லாம் தெளிவில்லாத விஷயங்கள்.  அதனால் தான் அதைப் பற்றியெல்லாம் நம் இஷ்டப்படி வளைத்து எதுவும் சொல்ல முடிகிறது என்பது ஜிஎம்பீ சாரின் தீர்மானமான முடிவு.    ஜிஎம்பீ சாருக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட் இது என்று எனக்குத் தெரியும்.  அதனால் அந்த தெளிவில்லாத விஷயங்களில் ஒரு தெளிவேற்பட இந்தத் தொடரில் முயற்சிப்போம் என்று தோன்றுகிறது. 

மனம் நம் நண்பன்;  அதே நேரத்தில் அதுவே நம் எதிரியும் கூட  என்று இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் பாலம் போடுகிறார் ஸ்ரீராம்.  மனம் என்பது தான் உயிரா, ஆத்மாவா என்று ஏகப்பட்ட சந்தேகங்கள் அவருக்கு.  சென்ற பிறவி நினைவுகளையும் இந்தப் பிறவிக்கு சுமந்து கொண்டு வந்து சேர்ப்பது  மனம் தானோ என்று கொக்கியும் போடுகிறார்.    'சென்ற பிறவிகள் நினைவு என்றெல்லாம் படிக்கிறோம் என்றால்'...  என்று மிக ஜாக்கிரதையாக வார்த்தைகளைப்  போடுகிறார்.  ஆக 'போன பிறவி என்பது' படிக்கிற அளவில் தான் இருக்கிறது என்பது ஒரு முக்கியமான விஷயம்.   வாசிக்கிற எதுவும் விஞ்ஞான பூர்வமாக  தெளிவாக இருக்கிறது  என்கிற அடிப்படையில் இந்தத் தொடரை அமைக்க நான் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதால் இப்போதைக்கு சென்ற பிறவி, அடுத்த பிறவி என்ற விஷயங்களை வாசித்துத் தெரிந்து கொண்ட அளவில் கடந்து விடலாம்.  சென்ற பிறவி பற்றி தெரிந்து கொண்ட அளவில் எனக்கு அனுபவமுண்டு என்று யாராவது சொன்னால் அது பற்றி பார்த்துக் கொள்ளலாம்.  அது வரைக்கும் அதை டச் பண்ண வேண்டாம். சரியா?

புதிதாக இந்தத் தளத்திற்கு வந்து ஆர்வத்துடன் பின்னூட்டமும் போட்டிருக்கிற அன்பர் ராமனை வரவேற்கிறேன்.  தொடர்ந்து அவர் இந்தத் தொடரை வாசித்து தன் எண்ணங்களைச் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.     மனமும் இதயமும் ஒன்று என்பது  திரு. ராமன் அவர்களின் கருத்து.   இதய பூர்வமாக, மனப்பூர்வமாக என்று நாம் சொல்வதெல்லாம் ஒரே அர்த்தம் கொடுக்கும் வார்த்தைகளே என்கிறார்.   நினைவுகளின் அடிப்படையில் எண்ணம் என்பது ஏற்பட்டு அதுவே மனதின் இயக்கமாக இருக்கிறது என்று சொல்கிறார்.  மூளை தான் நினைவுகளின் இருப்பிடமாக இருக்கிறது என்கிறார்.  விருப்பு, வெறுப்பு போன்றவை நினைவுகளாகப் படிந்து அவையே எண்ணத்தின்  ஆக்கமாக இருக்கிறது என்பது அவரது கருத்து.

'வாழ்க, வளமுடன்'  என்று அனைவரையும் வாழ்த்துவதை வழக்கமாகக் கொண்ட கோமதி  அரசு,  வேதாத்திரி  மகரிஷி அவர்களின் பாடல் ஒன்றை  எடுத்தாளுகிறார்.   இந்தப் பாடலில்  மனம்,  அறிவு என்று நமக்குத் தெரிந்த இந்த இரண்டோடு  ஆதியென்று மூன்றாவதாக ஒன்றைக் குறிப்பிடுகிறார் மகரிஷி.   இந்த மூன்றும் ஒன்றே என்பது   மகரிஷி  அவர்களின்  கண்டுபிடிப்பு.   பிறவியின் நோக்கமே மனத்தின்  இந்த   ஆதிநிலையைக் கண்டறிந்து அதனைத் தனக்காக்கிக் கொள்வது தான் என்கிறார்.   அது என்ன ஆதி நிலை? அதை எப்படி நமத்தாக்கிக் கொள்வது எனபதனை இந்தப்  பதிவுக்கான பின்னூட்டத்தில்  கோமதி அரசு  அவர்களை விளக்கிச் சொல்ல கேட்டுக் கொள்கிறேன்.

அன்பர் நடன சபாபதி அவர்களோ  மனம் என்பதற்கு  ஒரு பொருள் விளக்கமே கொடுக்கிறார்.   எண்ணங்களின் வடிவமே மனம் என்பது நமது சபாபதி அவர்களின் கருத்து.  ராமன் அவர்கள் எண்ணங்களின் இயக்கம் தான் மனம் என்று  சொல்வதற்கும் சபாபதி அவர்களின் எண்ணங்களின் வடிவமே மனம் என்பதும்  ஒன்றே தானா இல்லை வேறுபாடு கொண்டவையா என்பதை அந்த அன்பர்கள் தெளிவு படுத்திச் சொல்ல வேண்டுகிறேன்.

மனம், உயிர், உடல்  இவை பற்றி  வாசக நண்பர்களோடு கலந்த ஒரு முயற்சியாய் இப்படி ஒரு தொடரை எழுத வேண்டிய அவசியம் ஏன் வந்தது?

சரி வர தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பொதுவாகவே எல்லோருக்கும் உண்டு.   இந்த மாதிரி  விஷயங்களில் பலருக்கு  வெவ்வேறான புரிதல்கள் இருப்பது இயல்பு.   அதான் இந்த மாதிரியான விஷயங்களை  எழுத எடுத்துக் கொள்வதற்கான காரணமும்.    இந்த  விஷயத்தை ஒவ்வொருவரும் எப்படி  deal  பண்ணுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள  விழைவதும் இன்னொரு பக்க ஆர்வம்.   அந்த ஆர்வத்தை வாசிப்பவர் ஏற்றுக் கொள்கிற மாதிரி பூர்த்தி  செய்தாலே  வெற்றியடைந்த மாதிரி  தான்.   ஆனால் தான்  சொல்ல வருவதை வாசிப்பவரும் ஆமோதிக்கிற மாதிரி  விளக்கிச் சொல்வதும் எழுதுவதும் தான்  அவரவர்களுக்கான வெற்றியும் சிறப்புமாக அமைகிறது.  அந்த  சிறப்புக்கான முயற்சியாக அடுத்து வரும் அத்தியாயங்களை தொகுத்து  நாம் விவாதிப்போம்.


(வளரும்)

Sunday, August 25, 2019

மனம் உயிர் உடல்

                                     புதிய   தொடர்  ஆரம்பம்


நுழைவாயில்

லகம் பூராவும் உள்ள மக்கள் திரள் அதிகம் உபயோகப்படுத்தும் வார்த்தை எது என்று ஒரு கணக்கெடுபப்பு எடுத்தார்கள்.  ‘நான்’ என்கிற வார்த்தை தான் எல்லா நாடுகளுக்குமான எல்லா மொழிகளிலும் அதிகம் பயன்படுத்துகிற வார்த்தையென்று பெருத்த ஆய்வுக்குப் பின் தெரிய வந்தது.

அவ்வளவு மவுசு வாய்ந்த இந்த ‘நானை’ அவரவர் மனம் தான் பிரநிதித்துவப்படுத்துகிறது என்கிற உண்மை அதன் தொடர்பாக பிறகு நடந்த பல ஆராய்ச்சிகளின் மூலம் தெரியவந்தது. மனம் என்பது உடல் சம்பந்தப்பட்ட ஒன்று என்று மேலோட்டமாக வெகுவாக எண்ணப்படுகிறதே தவிர இது இன்னது தான் என்று இதுவரை துல்லியமாக எவராலும் வரையறுத்துச் சொல்ல முடியாத விசித்திரமாக இருப்பது தான் இந்த மனத்திற்கான  தன்னைத் தானே காட்டிக் கொள்ளாத பெருமையாக இருக்கிறது.

உடல் சம்பந்தப்பட்ட ஒன்று தான் இந்த மனம் என்று கொள்வது பொதுவான கருத்தாயிருப்பினும் உடல் உறுப்புகளில் ஒன்று தான் இந்த மனம் என்பதை  நிருவ முடியாமல் இருப்பது தான் மனம் பற்றிய ஆராய்ச்சிகளில் மிகவும் பின்னடைவு கொடுக்கக்கூடிய சமாசாரமாக இருக்கிறது.  இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல் போல ஒரு உறுப்பாக இது நாள் வரை இந்த மனம் எந்த ஆய்விலும் அடையாளம் காணப்படவில்லை. அதனால் மனம் என்பது மூளையின் செயல்பாடுகளில் ஒரு அம்சமாக உத்தேசமாக இப்போதைக்குக் கொண்டிருக்கிறோம். எப்படி காதல் என்கிற உணர்விற்கு இதயத்தை அடையாளமாக்குகிறோமோ அப்படியான ஒரு அடையாளப்படுத்துதலே இது என்று கொள்ளலாம்.  அதனால் தான் மேனாட்டு மருத்துவ இயலில் மைண்ட் (MIND)  என்கிற சொல்லே மனம் என்பதைக் குறிப்பதாக இருக்கிறது.

மனமாவது பரவாயில்லை; இவ்வளவு கால ஆராய்ச்சிக்குப் பிறகு சிக்மண்ட் பிராய்ட் போன்ற ஒப்பற்ற ஆராய்ச்சியாளர்களின் பங்களிப்பிற்குப் பிறகு ‘மன இயல்’ என்கிற துறையில் வகைப்படுத்தவாவது முடிந்த அளவுக்கு விவரங்கள் செறிந்ததாகக் கொள்ள முடிகிறது.  ஆனால் இந்த உயிர்?....
.
உயிர் என்பது மனத்தை விட சூட்சுமான ஒன்றாக போக்குக் காட்டுகிறது.  உடலில் அசைவோட்டமே அற்றுப் போய்விட்டதென்றால் இத்தனை நாள் இந்த இயக்கத்திற்குக் காரணமாக இருந்த உயிர் என்ற அந்த ஒன்று உடலை விட்டு நீங்கி விட்டதாகக் கொள்கிறோம். ஆக உடலின் உயிர்ப்புக்குக் காரணமான சூட்சுமான ஒன்றை உயிர் என்று காரணப்பெயர் கொண்டு அழைக்கிறோமே தவிர இன்னது தான் இந்த உயிர் என்று இதுநாள் வரை அறிவுலகம் விவரமாக அறுதியிட்டு அறியாத ஒரு சூட்சுமாகவே உயிர் என்று நம்மால் பெயரிடப்பெற்ற ஒன்று இருக்கிறது.

மனம், உயிர் போலல்லாமல் இந்த இரண்டையும் உள்ளடக்கியதாக நாம் நினைத்துக் கொண்டுள்ள உடல் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக விவரமாகத் தெரிந்துள்ளோம்.  ஏனெனில் மற்ற இரண்டும் மாதிரி அல்லாது உடல் அதன் உள் பொதிந்த உறுப்புகள் எல்லாம் நம் மருத்துவ சாத்திர அறிவிற்கு உட்பட்ட நிலையில் கைவசமாகி விட்டது.  கண், மூக்கு, காது, கை, கால் என்று வெளிக்குத் தெரிகிற உடல் அமைப்புகள், நுண்ணிய கருவிகள் மூலம் காணக்கிடைக்கிற உடலின் உள் உறுப்புகள் என்று உடலும் உடல் சார்ந்த உறுப்புகளும் இன்றைய தேதியில் திறந்த புத்தகமாகியிருக்கிறது. உடல் சார்ந்த மருத்துவ சாத்திரம் நாள் தோறும் வெவ்வேறான ஆராய்ச்சிகளின் விழுமிய கண்டுபிடிப்புகளால் வளர்ந்து கொண்டிருக்கிறது.

சூட்சுமங்களைத் தம்முள் பொதித்துக் கொண்டுள்ள மனம், உயிர் என்பதெல்லாம் என்னவென்று ஆராய முற்பட்டதும், நமக்கு நன்கு தெரிந்திட்ட உடல் சாத்திரத்துடன் இந்த இரண்டுக்கும் ஆன உறவு பற்றித் தெரிந்து கொள்வதற்குமான ஒரு முயற்சியே இந்தத் தொடராக வடிவம் கொண்டுள்ளது.

மனம், உயிர் பற்றிய தெளிந்த கண்ணோட்டத்திற்காக வழி நடத்திச் செல்லும் ஒரு சிறுமுயற்சியாக தன் பங்களிப்பைச் செலுத்தினால் அதுவே இந்த தொடருக்கான பெருமையும் ஆகும்.
                                                                          
அன்புடன்,
ஜீவி                                                             
                                                        
                          
        அத்தியாயம்: ஒன்று. என் மனம் நீ அறிவாய்! உந்தன்...

‘மனம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்த சொல் தான்.  தெரிந்த என்பதைத் தாண்டி எல்லோராலும் உணர்ந்த சொல் அது.  அவரவர் மனம் என்னவென்பது அவரவர் ;உணர்ந்த ஒன்று தான்.  ஒவ்வொருவருக்கும் அவ்வளவு நெருக்கம் கொண்டது அவரவர் மனம்.  

சொல்லப் போனால் நாம் எல்லோரும் நமக்காக வாழ்வதில்லை. நம் மனசுக்காக அதன் திருப்திக்காகத் தான் வாழ்கிறோம். அல்லது ஒவ்வொரு விஷயத்திலும் தனது விருப்பம் என்னவோ அதை நிறைவேற்றிக் கொள்வதற்காக மனம் நம்மை வழிநடத்திச் சென்று அதன் திருப்தியைத் தீர்த்துக் கொள்கிறது. இப்படியாக மனசின் திருப்தியை நம் திருப்தியாக நினைக்கிறோம். ஆக, நம் மனசின் திருப்தியை நம் திருப்தியாகக் கொண்டு நாம் செயல்படுவதைத் தான் வாழ்க்கை என்று சொல்கிறோம் என்று தெரிகிறது.

உண்பது, உடுப்பது, மகிழ்வது, மலர்வது, முயங்குவது எல்லாமே மனசுக்காகத் தான் என்று ஆகிறது. மனம் திருப்தி கொண்டால் நமக்கும் திருப்தி.  மனம் சந்தோஷம் கொண்டால் நமக்கும் சந்தோஷம். மனசுக்கு ஒன்று வருத்தம் என்றால் நமக்கும் அது வருத்தம். எதிலும் மனசுக்கு ஆர்வமில்லை என்றால் நமக்கும் அதில் ஆர்வமில்லை. மனசுக்கு ஒன்று பிடிக்கவில்லை என்றால் நமக்கும் பிடிக்கவில்லை. எதிலாவது மனசுக்குக் கொண்டாட்டம் என்றால் நமக்கும் அதுவே கொண்டாட்டமாகி விடுகிறது.  இப்படியாக அவரவர் மனசின் அந்தரங்க துய்ப்புகளுக்கான ஆர்வமே அவரவர் செயல்பாடுகளாகி அவரவர் வாழ்க்கையும் அதுவே தான் என்றாகிவிடுகிறது.. 

இப்படி நம் செயல்பாடுகள் எல்லாமுமே மனசுக்காக என்று அமைந்து விடுகிற பொழுது தனக்காக என்று எதுவுமில்லை என்று தெரிகிறது.  இல்லை, ‘தான்’ என்பதே பொய்யோ என்று நினைக்கத் தோன்றுகிறது.  அல்லது ‘மனம்’ -- ‘’தான்’ என்று தனித்தனியாக இரண்டில்லை, ஒன்றைத் தான் நம் அறியாமையால் இரண்டாகக் கொண்டிருக்கிறோமோ என்கிற எண்ணம் மேலிடுகிறது.

“நீ யார்?” என்று எவராவது கேட்டால் அதற்கு நம்மிடம் பதிலுண்டு..“நான் யார்?” என்று நமக்கு நாமே கேட்டுக் கொண்டால் அதற்கு தெளிவான பதிலில்லை.  வெகுவான யோசனைக்குப் பிறகு ‘என் மனசு தான் நான்’ என்று நாமே உணருகிற மாதிரி நமக்கு நாமே கேட்டுக் கொண்ட கேள்விக்கு நல்ல ஒரு பதில் கிடைத்து விட்ட மாதிரித் தோன்றுகிறது..  தெரிவதற்காகக் கேள்வி கேட்டதும், தெளிவதற்காக விடை கொடுத்ததும் மனசு தானோ என்று நினைக்கையில் அந்த அமானுஷ்யம் பிர்மாண்டதாகவும் அதே நேரத்தில் கைக்கடக்கமான குழந்தையாகவும் குழைகிறது.

‘எனக்கென்று எதுமில்லை;  எல்லாம் என் மனசின் கூத்தாட்டம் தான்’ என்று தெரிந்து விட்ட பிறகு ‘நான்’ என்று இன்னொன்று மனதைத் தவிர்த்துத் தனியாக இருப்பதற்கு சாத்தியமில்லை என்று தெரிகிறது.  அல்லது  மனசைத் தான் நான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ என்று ஐயம் திகைக்கிறது.

நான் என்று சொல்வதற்காவது உடல் என்கிற நடமாடுகிற கண்ணுக்கு யதார்த்தமாய் புலப்படுகிற ஒன்று இருக்கிறது.  ஆனால் எல்லாம் தானே ஆகிய மனம் என்பதின் இருப்பை நிரூபணமாய் நிரூபித்துக் காட்டுவதற்கு எதுவுமில்லையே என்கிற உண்மையும் சுடுகிறது.  ஆக மனம் என்று ஒன்று இருப்பதாக நினைப்பதே கற்பிதமோ என்று சுடுதலில் கிளர்ந்த ஞானோதயம் கேள்வியாய் எழுகிறது.

கண்ணுக்குத் தெரிகிற உடலாகிய ‘நானை’ப் புறக்கணித்து விட்டு இது இன்னது என்று நிரூப்பிதற்கு இயலாத கற்பிதமான மனம் என்ற ஒன்றுக்கு இருப்பு கொடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று உள்ளொளி மினுக்குகிறது.

‘கற்பிதமான மனம்’ என்று நினைக்கையிலேயே அஸ்திவாரமே ஆட்டம் கண்டது போலிருக்கிறது.  இல்லாத ஒன்றை அடித்தளமாகக் கொண்ட ஆட்டபாட்டங்கள் தான் பொல்லாத இந்த வாழ்க்கையின் ஆயாசமா? இல்லை, புலனுக்குப் புலப்படாத எதுவும் இருப்பு கொண்டிருப்பதில்லை என்று தீர்மானமாகப் புறக்கணித்து விடுவது தான் விஞ்ஞான உண்மையா?..

யோசிப்போம்....


(தொடரும்..)
Related Posts with Thumbnails