பகுதி—16
வைகறைப் பொழுது.
சிவன் கோயில் முரசின் அதிர்வொலி
தேசலாகக் கேட்டது. அதைத் தொடர்ந்து
பாண்டியனின் கோட்டை முரசு. இன்னும் நெருங்க நெருங்க வேதியர் முழக்கும் வேத கோஷங்கள்..
தொடர்ந்து வாள் வீரர் எழுப்பிய முரசமும், யானைகளின் பிளிறலும், குதிரைக் கூட்டங்களின் கனைத்தல் இரைச்சலும்
அந்தப் பிரதேசத்தையே கலவையான ஒலி அலைகளில் மூழ்கச் செய்தன.
மாமதுரையை நெருங்கி விட்டோம் என்ற
உணர்வு அந்த மூவரிலும் உற்சாகமாகக் கொப்பளித்தது.
நடையாய் நடந்து வந்த கால்கள் கெஞ்சின. ‘இன்னும் கொஞ்ச தூரம் தான்; வந்து
சேர்ந்து விட்டோம்’ என்று அறிவு கால்களுக்கு ஆதுரம் அளித்து ஆயாசத்தைப் போக்கி
உற்சாகமூட்டியது.
வைகை ஆற்றின் வடகரையை நெருங்கிய பொழுது
மதுரைத் தென்றல் மனசுக்கு கிளுகிளுப்பூட்டியது. மகிழம், சுரபுன்னை, மருதம்,
செரித்தி ஆகிய மரங்கள் பாதிரி மரத்தோடு சேர்ந்து குலுங்கி வையை நங்கைக்கு பூவாடை
போர்த்தியிருந்தன. அதைப் பார்த்து, “புனல்
ஆறு அல்ல இது பூவாறு!” என்றான் கோவலன். அது கேட்டு கண்ணகி பூவாறு நங்கைக்கு தன்
புன்னகையால் பதில் சொன்னாள். நேரப்போகும் துன்பம் வைகை நங்கைக்குத் தெரிந்திருந்தது
போலும். தன் கண்களைத் துடைத்தாற் போல
தன்னிடம் நிறைந்திருந்த நீரை சட்டென்று உள்ளடக்கி நெளிந்தாள்.
குதிரை, சிங்க, வேழ முகங்கள் கொண்ட
படகுகளில் பலரும் பயணித்து பெரிய துறை பக்கம் செல்வது தெரிந்தது. அந்தப் பக்கம் செல்லாது தென்கரைப் பக்கம்
தெரிந்த ஒரு மலர்ச் சோலையை மூவரும் அடைந்தனர்.

பறவைகள் துயிலெழுப்பி புலர்ந்த காலைப்
பொழுது ரம்யமாக இருந்தது. நெற்றிக்கண் சிவபெருமான், கருடக்கொடி திருமால், கலப்பை
ஏந்திய பலராமன், சேவற்கொடியோன் ஆகியோருக்கான சுற்றியிருந்த கோயில்களிலிருந்து
புறப்பட்ட தூய வெண்சங்கு ஒலி,. கூடச் சேர்ந்த காலை முரசின் அதிரலோடு ஒன்றரக்
கலந்தது.
அந்த நேரத்து கோவலன் கவுந்தி அடிகள்
இருக்குமிடம் சென்று அவரைத் தொழுதான்.
“செய்தவத்தீர்!..” என்று அடிகளாரை விளித்தவன் மேற்கொண்டு வார்த்தை வராமல்
நெகிழ்ந்தான். “நல்லொழுக்க நெறியிலிருந்து நீங்கியவன் சிறுமையுற்றேன். முன்பின் அறிந்திராத இடத்திற்கு துன்பம் தரும்
வழியிலே கண்ணகியை வழிநடத்தி அழைத்து வந்து
துன்புறச் செய்து இன்னும் இழிவடைந்தேன். அந்தப்
பழியெல்லாம் துடைத்து இழந்த வாழ்க்கையைத் திரும்பப் பெற வேண்டும். அடிகளாரே! இம்மதுரை மாநகரத்து பெருவணிகரை நான் சந்தித்து வரும் வரை இப்பைங்கொடியை
தங்கள் பாதுகாப்பில் விட்டுச் செல்கிறேன்” என்று பெரிதும் வருந்திச் சொன்னான்..
“முற்பிறவியில் செய்யத் தவறிய நல்வினைக்
குறைவால் இப்பிறவியில் இத்துன்பம் என்று தான் கொள்ள வேண்டியதிருக்கிறது..” என்ற
கவுந்தி அடிகளார் அயோத்தி ராமன் கதையையும், நளன் கதையையும் நினைவு கொண்டார். சீதாராமனோ, சீதை விளையாட விரும்பிக்
கேட்ட மாயமானைத் தொடர்து சென்று சீதையைப் பிரிகிறான். நளனோ விதி விரட்டக் கானகத்தே காரிருளில் காதலியைக் கைவிட்டு கட்டிய துண்டோடு தனி ஆளாகிறான்.
‘தங்கள் பாதுகாப்பில் விட்டுச் செல்கிறேன்’ என்று கோவலனும் இதோ கண்ணகியைப்
பிரிகிறானே! ராமன்—நளன் போலக்
கோவலனுக்கும் நேரப் போகிறதோ என்று நம் பதைபதைப்புக் கூடி, இந்தக் கவுந்தி
அடிகளாரும் நேரம் காலம் தெரியாமல் ‘அந்த
இரு’ கதைகளை நினைவு கொள்கிறாரே என்று வாசிக்கும் பொழுதே நமக்கும் எரிச்சலாக
வருகிறது.
சொல்லி வைத்தாற் போல அடிகளாரும் அதே விஷயத்தைத் தான் தொட்டுப் பேசுகிறார். “எல்லாமே வல்வினையின்
துன்பம் தான் எனினும், நீ நளன் போல் அல்லாமல்
நல்ல வேளை, இத்தனை அவஸ்தைகளுக்கு இடையேயும் உன் மனைவி உன்னுடன் இருக்கும் பேறு பெற்றிருக்கிறாய்!.. அதனால் வருந்தாது மதுரை
மாநகர் சென்று தங்குவதற்கு நல்ல இடம் பார்த்து வருவாய்!” என்று ஆசிகூறி கோவலனை
வழியனுப்பி வைத்தார். இருந்தாலும் ‘உன்
மனைவி உன்னுடன் இருக்கும் பேறு' என்று அவர் அழுத்திச் சொன்னது, அந்தப் பேற்றிற்கும் ஆபத்து வரப்போகிறதோ என்று உறுத்தலாகத் தான் இருக்கிறது.

பாண்டியனின் கோட்டை காவல் கோட்டையாக இருந்தது. கோட்டையைச் சுற்றி நீர்பரப்பு கொண்ட அகழி. கொலை வாளுடன் கோட்டையைக் காத்து நின்றனர் யவனர். யானைக் கூட்டம் கோட்டைக்குள் சென்று வர அமைந்திருந்த சுருக்கை வழியாக யாருக்கும் ஐயம் ஏற்படாதவாறு உள் நுழைந்து அகநகரை அடைந்தான் கோவலன்.[.
மேல் காற்று உடலை வருடிச்
சென்றது. கொடிகள் அசைகின்ற தெருவில்
கடைகழி மகளிர் கூந்தலில் பூச்சூடி தம் அந்நேரக் காதற் செல்வரோடு கலகலத்துக்
கொண்டிருந்தனர்.
அரசுக் கூத்தியர் வாழும் வீதி எடுப்பாக
இருந்தது. அந்தப் பகுதி வீடுகள் சுட்ட ஓடுகளால் வேயப்படாது பொன் தகடுகளால் வேயப்பட்டிருந்தது.
வேத்தியல், பொதுவியல் ஆகிய இருவகைக் கூத்துகளின் இயல்புகளையும் அறிந்தவர்கள் அவர்கள்.
தாளங்கள், தாளங்கள் சார்ந்த ஏழுவகை தூக்குகள், அவற்றோடு இயந்து இசைக்கும்
தோற்கருவிகள், அவற்றின் கூறுபாடுகள் அனைத்தையும் தெரிந்தவர்களாய் அப்பெண்கள்
இருந்தார்கள். தலைக்கோல் அரிவையும், பின்பாட்டுப் பாடும் தோரிய மடந்தையும்,
தலைப்பாட்டுக் கூத்தியும், இடைப்பாட்டுக் கூத்தியும் ஆகிய நால்வகை மரபினரோடு கலந்து
நாள்தோறும் ஆயிரத்தெட்டு பொற்கழஞ்சுக்கு குறையாமல் ஈட்டும் பேரழகு கணிகையர் வாழும்
இரு பெரும் வீதிகளைக் கோவலன் கண்டான்.
இரு சக்கரங்களால் உருட்டப்படும்
மூடுவண்டிகள் நிறைந்த, செல்வர்கள் விரும்பும் அங்காடி வீதிகள், நவரத்தின, பொன்
கடைவீதிகள், துணிக்கடை வீதி, மிளகு மூட்டைகளும், கூலங்களும் குவிந்து கிடக்க
துலாக்கோல், மரக்கால் சகிதமாக வணிகர் நிறைந்திருந்த கூல வீதிகளையும் கோவலன்
கண்டான்.
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும்,
நாற்சந்திகளும், சதுக்கமும், முடுக்கு வீதிகளும், குறுக்குத் தெருக்களும், செடி கொடிகள்
நெடுக்கமாக மண்டியிருந்தமையால் பந்தல் இட்டது போன்ற நிழலோடு நீண்டிருந்த
தெருக்களில் அலைந்து திரிந்த கோவலன் பாண்டியனின் கொடிகள் நிறைந்த மதில் புறத்தே வந்தான்.
கோவலன் அறத்தினைப் பிறருக்கு அருளும் அருளாளர்கள் நிறைந்திருந்த
புறஞ்சேரிக்குத் திரும்பி வந்து சேர்ந்த பொழுது, கவுந்தி அடிகளாரும் அவன் வருகைக்காகக் காத்திருந்த மாதிரித் தெரிந்தது. தான் பார்த்த மதுரை மாநகரின் அழகை ஒவ்வொன்றாக கோவலன் அடிகளாருக்குச் சொல்லிக் கொண்டிருக்கையில் மாடலன் அந்தக் குடிலின் உள்ளே நுழைந்தார்.
கோவலன் அறத்தினைப் பிறருக்கு அருளும் அருளாளர்கள் நிறைந்திருந்த
புறஞ்சேரிக்குத் திரும்பி வந்து சேர்ந்த பொழுது, கவுந்தி அடிகளாரும் அவன் வருகைக்காகக் காத்திருந்த மாதிரித் தெரிந்தது. தான் பார்த்த மதுரை மாநகரின் அழகை ஒவ்வொன்றாக கோவலன் அடிகளாருக்குச் சொல்லிக் கொண்டிருக்கையில் மாடலன் அந்தக் குடிலின் உள்ளே நுழைந்தார்.
யார் இந்த மாடலன்?...
(தொடரும்)
படங்களை உதவிய நண்பர்களுக்கு நன்றி.