மின் நூல்

Tuesday, July 23, 2019

வசந்த கால நினைவலைகள்..

                                                                       41



னந்த விகடனில் ஜெயகாந்தனின் உன்னைப்  போல  ஒருவன் குறுநாவல்  பிரசுரம் கண்டு வாசகர் மத்தியில்  மிகுந்த வரவேற்பைப் பெற்றது.   ஆனந்த விகடனில் அவரது முதல் குறுநாவலும் அதுவே.  பின்னால் இதே கதையை குறைந்த செலவில் திரைப்படம் ஆக்கினார் அவர்.  வழக்கமாக அந்தப்
படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யாமல்  ப்லீம் ப்ரிண்ட் போட்டு  ஊர் ஊராக சென்று அங்கு வாடகைக்குக் கிடைக்கும் தியேட்டரில் காலைக் காட்சி போல  திரையிட ஏற்பாடுகள் செய்தார்.  இதற்கு பல்வேறு இடங்களிடம் விரவிக் கிடந்த அவரது வாசக அன்பர்கள், பொதுவுடமைக் கட்சித் தோழர்கள் பெரிதும் உதவியாக இருந்தனர். 
அந்த மாதிரி புதுவையில்  உன்னைப் போல் ஒருவன் படப்பெட்டியோடு அவர் வந்திருந்த பொழுது அவருடனான அடுத்த சந்திப்பு   நிகழ்ந்தது.  இந்தத் தடவை   அவரைச் சுற்றியிருந்த கூட்டந்தில் என்னை அடையாளம் கண்டு கொண்டு  "எப்படியிருக்கீங்க, ஜீவி?" என்றார்.  நான் பதில் சொல்வதற்குள் அடுத்த கேள்வியாக  "சிரில் வரலையா?" என்றார்.  "வர்றதா சொல்லியிருக்கிறார்.." என்று நான் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே,  இன்னொருவர் குறுக்கிட்டு ஏதோ  கேட்டார்.  அதற்குள் என் வழக்கப்படி 'ஆட்டோகிராப்' நீட்டி கையெழுத்து வாங்கிக் கொண்ட பொழுது, 'அவசியம் வீட்டுக்கு வாருங்கள்.." என்று தன் சென்னை எழும்பூர் வீட்டு முகவரியையும் குறித்துக் கொடுத்தார்.   அதற்குள் சிரிலும் வந்து விடவே பேச்சு  திரைப்படம் குறித்து அலைபாய்ந்தது. 
                                                                 
படத்தில் இடைவேளையில் ஜெயகாந்தன் பேசினார்.   'இன்றைய  தமிழ் சினிமா ரசனையையும் அதன் சிருஷ்டி   முறைகளையும் இந்தப் படம் பூரணமாக மறுத்து ஒதுக்கியிருக்கிறது.  இது பற்றி ஓரளவு அறிந்திருந்தும் என்னைப் புரிந்து கொண்டமையால் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க வந்திருக்கும்  நண்பர்களே!  உங்களை நான் வணங்குகிறேன். பாராட்டுகிறேன்.  காலத்தின் தேவையை உணர்ந்து அதற்கான கடமையை ஆற்ற வந்தவர்களின் படைப்பு என்ற அளவில் இந்தப் படமும் அதற்கான ஓர் ஆரம்பமே..' என்ற கருத்தில்  தொடங்கியதாக நினைவு.

ஜெயகாந்தனே இயக்கிய படம் இது.  ஆறு தயாரிப்பாளர்களில் ஒருவராக 'ஆசிய ஜோதி பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிருவனத்தின் தயாரிப்பாக இந்த படம் வெளிவந்தது.   பின்னால் இந்த 'உன்னைப் போல் ஒருவன்' தேசிய விருதையும் பெற்றது.  இந்தப் படத்தின் முக்கிய பாத்திரத்தில் காந்திமதி நடித்திருந்தார்.

புதுவையில்  நான் இருந்த வரை  காங்கிரஸ்,  கம்யூனிஸ்ட் என்று இரண்டே இரண்டு கட்சிகள் தான் இருந்தன.  கம்யூனிஸ்ட் இயக்கமும் தோழர் வ. சுப்பையாவின் தலைமையில் பஞ்சாலைத் தொழிற்சங்கங்களின் வலுவோடு தொழிலாளர்  நலன் சார்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தது.  குபேர் ஆட்சி போய் வெங்கட சுப்பையாயின் காங்கிரஸ் ஆட்சி வந்த பொழுது புதுவையில் காலூன்ற கழகங்களின் முயற்சிகள் லேசாக வேர் கொள்ள ஆரம்பித்தது.

சென்னையிலிருந்து காங்கிரஸ் பேச்சாளர்கள்  சிலர் வந்து  ஒதியஞ்சாலை மைதானத்தில் கூட்டம் போட்டதெல்லாம் நினைவிலிருக்கிறது.  நாத்திகம் ராமசாமி  சென்னையிலிருந்து வெளிவந்த நாத்திகம் என்ற பத்திரிகையின் ஆசிரியர்.  அந்நாட்களில் அவர் காங்கிரஸ்  மேடைகளில் பேசுவது  வழக்கம்.   எது எப்படியிருந்தாலும் புதுவை மக்களின் ஆசை, அபிலாஷையெல்லாம் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தது.   'புதுவை சென்னை மாகாணத்தோடு சேர்ந்து விடலாகாது;  புதுவையின் தனித்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்' என்பதே அது.  அதனால் அந்நாட்களில்  மேடைகளில் புதுவை மக்களின் ஒன்றுபட்ட இந்தக் கோரிக்கைக்கு எதிராக யாரும் பேச மாட்டார்கள்.  சொல்லப் போனால் புதுவையின் தனித் தன்மையை பாதுக்காப்போம் என்று உறுதி மொழி வேறு கொடுப்பார்கள்.

இந்த சமயத்தில் தான் எங்கள் தொலைத் தொடர்புத் துறையின் தமிழக வட்டத்தில்  சில மாறுதல்கள் ஏற்பட்டன.   இதுகாறும்  சேலம் தொலைதொடர்பு  வட்டத்தில் இருந்த பவானி  என்ற ஊர்  கோவை வட்டத்தோடு சேர்ந்தது.   இந்த மாற்றத்தை உபயோகப்படுத்திக் கொண்டு பவானிக்கு விருப்ப மாற்றலுக்காக நான் விண்ணப்பித்திருந்தது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பவானி அழகான ஊர்..   நான் தபால் அலுவலகத்தில் பணியாற்றிய குமார பாளையம்  பவானிக்கு பக்கத்து ஊர் தான்.  இரண்டு ஊர்களையும் இணைப்பது காவிரிப் பாலம் தான். 

பவானியில் பணியாற்றும் காலத்தில் இந்தி எதிர்ப்பின் தீவிரம் மேலோங்கிய காலம்.   அந்நாட்களில் ஜெயகாந்தன் பவானிக்கு வந்திருந்தார்.  காங்கிரஸ் மேடையில் கர்ஜித்தார்.  அவர் பேச்சு முழுக்க முழுக்க தனி மனித உரிமையில் தடையிடல் சம்பந்தப்பட்டு அமைந்திருந்தது.    கூட்டம் முடிந்ததும் அவர் தங்கியிருந்த  ஓட்டலில் அவரது வாசகர்கள் கூட்டத்தோடு கூட்டமாக சந்தித்தேன்.

இதெல்லாம் நடந்து முடிந்து கிட்டத்தட்ட 54 ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழகத்தில்  இந்தி மொழி  எதிர்ப்புக்கான காரணங்கள் உயிர்ப்புடன் இருப்பது தான் இன்னொரு ஆச்சரியம்.

வட இந்திய மக்களின் சில ஆங்கில உச்சரிப்புகள் அபத்தமானவை.  -- sion  -- tion  என்று முடியும் வார்த்தைகளை விநோதமாக உச்சரிப்பார்கள்.

தெற்கில் ஆங்கிலம் வளர்ந்த அளவுக்கு வடக்கே இல்லை.  அதனால் தான் இந்திக்கு அபரிதமான வளர்ச்சி அங்கே.  இங்கே தமிழின் வளர்ச்சியை ஆங்கிலம் சாப்பிட்டு விட்டது.   தமிழை ஓரங்கட்டி விட்டு ஆங்கிலத்தால் வாழ்க்கையை வளப்பமாக்கிக் கொண்டோம்.  ஆங்கில மொழித் தேர்ச்சியில் தனிமனிதனுக்கு  லாபங்கள் எக்கச் சக்கம் தான்.  ஆனால் அந்த லாபங்கள் தாய் மொழி வளர்ச்சிக்கு அன்னியப்பட்ட லாபங்கள் என்ற உணர்வு மட்டும் நமக்கு இல்லாது போயிற்று.

அடிக்கடி தில்லி போக வேண்டியிருக்கிறதே என்று அரசியல்வாதிகளும் இந்தியைக் கற்றுத் தேர்ந்தார்கள்.  ஒரே கட்சியில் கூட  இந்தி கற்றவருக்கும் கற்காதவருக்கும் இடையே பாலமாக துபாஷி வேலை பார்க்க இந்தி உதவிற்று.  தில்லி வாழ் மாற்றுக் கட்சிகாரர்களுடனான சொந்த லாபத்திற்கான நட்பு இறுக இந்தி கற்றது துணையாக இருந்தது.

அதனால் ஒன்று தெரிந்தது.   அவசியம் உள்ளோருக்கு தெரியாத எந்த  மொழியையும் கற்பதில் எந்தவிதத்தில் பார்த்தாலும் ஏதாவது ஒரு லாபமே  தவிர  இழப்பு ஏதுமில்லை என்று தெரிகிறது..    அதுமட்டுமில்லை..  இன்னொரு மொழியைக் கற்பதால்   தாய்மொழித் தமிழுக்கு எந்த ஏற்றமோ அன்றி  ஏற்றமின்மையோ ஏற்பட்டு விடவில்லை என்பது தெரிகிறது.. அது பாட்டுக்க அது,  இது பாட்டுக்க இது   என்று ஒன்றுக்கொன்று இணைப்பில்லாத இரு கோடுகள் தத்துவம் இதுவாயிற்று.

கன்னடம், தெலுங்கு, மலையாளம்  போன்ற மொழிவழிப் பிரிந்த மாநிலங்களுக்கும் நம்மைப் போலவான  தாய் மொழிப் பற்று இல்லை என்று சொல்லி விட முடியாது..     மலையாளத்தில் இலக்கியம்  அந்த மக்களின் இலக்கியம்.   எளிய  மக்களின் வாழ்க்கை முறை தான்   அங்கே  இலக்கியம் என்ற பெயரைச் சூட்டிக் கொண்டிருக்கிறது..   இங்கே  எப்படி என்று உங்களுக்கே தெரியும்.

எல்லா பிராந்திய மொழிகளும்  வளரும் வரை  இந்த அகண்ட பாரதத்தின் தொடர்பு மொழி ஆங்கிலமாகவே இருக்க வேண்டும் என்று  அந்நாளைய பிரதமர் நேருவிடம் உறுதி மொழி வாங்கி   நெஞ்சை  நிமிர்த்தியது நாம் தான்.  பண்டித நேருவையே பணிய வைத்தோம் என்று எக்காளமிட்டோம்.

இந்தியை எதிர்க்க வில்லை,  இந்தித் திணிப்பைத் தான் எதிர்த்தோம் என்று பூசி மெழுகினதால் விளைந்தது ஏதுமில்லை.   அன்று  இந்தி இன்று சமஸ்கிருதம் என்று வேறொன்றுக்குத் தாவி இருக்கிறோம்.  அவ்வளவு தான்.  எதையாவது எதிர்க்கொண்டிருக்க வேண்டியது நமது தேவையாகி விட்டது.  பக்கத்து மாநிலக் காரர்களோ நோகாமல்  ஏற்றமிகு  வாழ்க்கைக்கு தங்களின் ஆற்றலையே ஏணிப்படிகள் ஆக்கியிருக்கிறார்கள்.

பெற்ற அந்த உறுதிமொழியால் விளைந்த பலன் என்னவென்று கணக்குப் பார்க்க மட்டும் நாம் தயங்குவோம்.  ஏனென்றால் ஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலத்திலேயே ஆங்கிலத்தை   அவனை விட அழகாகப் பேசியது நாம் தான்.  ஆதியிலிருந்து ஆங்கிலேயரின் நடை, உடை,  பாவனை, நாகரிகம் என்று மோகித்து  ஆங்கிலம் அறியாத பாமர மக்களை சுரண்டிக் கொழுத்தது  நாம் தான்.  ஆங்கிலத்திலேயே யோசித்தால் தான் நம் யோசனைகளே செயல்படும் என்ற அளவுக்கு மழுங்கிப் போனவர்கள் நாம்.

இத்தனை காலம் இந்தி தெரியாமலேயே  வாழ்ந்தாயிற்று..  பாக்கி காலமும் அப்படியே தெரியாமல் வாழ்ந்தால்  போச்சு.


(வளரும்)

Thursday, July 18, 2019

அழகிய தமிழ் மொழி இது!...


                                                      பகுதி:  27

நெல்லைத்தமிழன்  கேட்டுக் கொள்ள தொடர் தொடர்கிறது....

இதற்கு முன் பகுதி:   https://jeeveesblog.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D..


னகனும், விஜயனும் இமயச் சாரலில் கோலோச்சிய மன்னர்கள்.  சேரன் செங்குட்டுவனின் தந்தையார் *இமயவரம்பன்  நெடுஞ்சேரலாதன்.  கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதிப் பகுதி.  இமயம் வரை படையெடுத்துச்  சென்று  வெற்றி வாகை சூடியதால் இவன் இமயவரம்பன் என்று வரலாற்றில் அழைக்கப்படுகிறான்.   இவன் தம்பி @பல்யானை செல்கெழு குட்டுவன் என்று அழைக்கப்பட்டவன்.  தன் தமையனார் நெடுஞ்சேரலாதனுக்குப் பின் ப.செ.குட்டுவன்  பட்டம் சூட்டிக் கொண்டவன்.   தன் சிறிய தமையனாருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவன் சேரன் செங்குட்டுவனின் தமையன் #களக்காய்
கண்ணி நார்முடிச் சேரன்..   சித்தப்பாவும் தமையனும் ஏறத் தாழ ஐம்பது ஆண்டுகள் ஆண்ட பின்பு சிலப்பதிகாரச் செங்குட்டுவன் ஆட்சிக்கு வருகிறான்.  & இவன் ஆட்சிகாலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்ப காலமாகக் கொள்ளலாம்.

இமயவரம்பன்  நெடுஞ்சேரலாதன் வடபுலத்திற்குப் படையெடுத்து வந்த பொழுது எம்மைப் போன்ற அரசர் இங்கு இல்லையாதலால் அவன் இப்பகுதியை வெற்றி கொள்ள நேர்ந்தது என்ற இறுமாப்புடன் வடபுலத்துக்
குறுநில மன்னர்  கனக விசயர் சொன்ன வார்த்தைகள்  செங்குட்டுவனுக்கு ஆத்தரமூட்டி,  கனக விஜயரை வெற்றி  கொள்ளவும்  கண்ணகிக்கு சிலை எடுக்க கல் கொண்டு வரவும் செங்குட்டுவன் இமயமலை நோக்கி படையெடுத்துச் செல்கிறான்.

உத்தரன், விசித்திரன்,  உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்திரன், சிவேதன் என்ற மன்னர்களும் கனக விஜயர் பக்கம் சேர்ந்து கொண்டு பெரும் படையைக் களத்தில் இறக்கினர்.  யானைக் கூட்டத்தைக் கண்டு உவகை அடைந்த சிங்கம் போல் செங்குட்டுவன் எதிர்த்து வரும் படைப்பலத்தின்  மீது மேவினான்.

தேர்ப்படை வடவர்களின் ஆற்றல்   மிகுந்த சொத்து.  செங்குட்டுவன் அதைச்  சின்னாப்  பின்னமாக்கினான்.    வாய் கிழிய பேசிய   கனக--விஜயரோடு சேர்ந்து போரிட்ட ஐம்பத்திருவரும் ஒட்டு மொத்தமாக சிறைப்பிடிக்கப்பட்டனர்.  சாம்பல் பூசிய சைவத் துறவியர் போலவும்,  மயில் பீலி கையில் கொண்ட சமணத் துறவியர் போலவும், பண்ணிசைக்கும் பாணர் கூட்டம் போலவும் இசைக் கருவிகளை  தோளில் சுமந்த கூத்தர் போலவும் பகைவர்கள் பல்வேறு வேடம் பூண்டவராய் தப்பி ஓடினர்.

'வடதிசை இமயமலைச் சாரலில் வேதங்களை உயிர்மூச்சென ஓதும் அந்தணரின் ஓம குண்டத்து முத்தீ அணையாது பேணும் அருள் செயலை புரிவீர்களாக!' என்று செங்குட்டுவன் தன் படை வீரர்களுக்கு  அறிவுறுத்தினான்.  பொன் நிறமாக மின்னும் உச்சியுடைய இமயமலைச் சாரலில் ஒப்பற்ற பத்தினித் தெய்வம் கண்ணகியின் சிலை உரு அமைக்க  தகுந்த பெரும் பாறை தேடி படை வீரகள் புடை சூழ அமைச்சன் வில்லவன் கோதையுடன் புறப்பட்டான்.

தேடிப் போன மூலிகை கைவசமான  மாதிரி  குறைபாடுகள் இல்லாத ஒப்பற்ற சிறப்புகள் பொருந்திய பெருங்கல்லொன்று குட்டுவனின் நினைப்பிற்கு ஏற்றவாறு கிடைத்தது.   செங்குட்டுவனும் சிறைப்பட்ட கனக-விஜயர் முடித்தலையில் அக்கல்லை சுமக்கச் செய்தான்.  பெரும் படையுடன் கங்கைப்  பேராற்றின் நெடிய கரையடைந்து  பத்தினிக் கடவுளின் சிலை வடிப்பதற்காக  தெரிவு செய்த கல்லை நீர்ப்படை வல்லுனர்களின் அறிவுரைப்படி  கங்கையின் புனித நீரில் நீராட்டினான்.  நூற்றுவர் கன்னர் கங்கைப் பேராற்றின் தென் கரையிலே  மன்னன் தங்குவதற்காக மிக அழகான பாடி வீடு அமைத்திருந்தனர்.   அந்தப் பாடிவீட்டில்  தங்கி  பதினெட்டே நாழிகையில்  பகைவரைத் துறத்தியடித்து வெற்றிக்கனி பறிக்க விழுப்புண் ஏந்திய வீரப் பெருந்தகைகளுக்கு பரிசில்கள் வழங்கினான்.

அந்த சமயத்தில் $ மாடலன் அங்கு வந்தான்.  "மன்னர் பெருமானே, வாழ்க, வாழ்க!  மாதவி மடந்தை பாடிய   கானல்வரி பாடல், கனக விஜயர் தம் முடித்தலை நெரித்தது!   கடல் சூழ் உலகை ஆட்சி புரியும் பேறு பெற்றவனே, நீ  வாழ்க!" என்று வாழ்த்துகிறான்.

"நான்மறையாள!  நீ சொன்னதற்கு யாது பொருள்?" என்று கேட்கிறான்.  செங்குட்டுவனுக்கு  கோவலன் அநியாயமாகக் கொலையுண்டதும், தெய்வமாய் கண்ணகி மதுரை மாநகரைத் தீக்கிரையாக்கியதும் தான் தெரிந்த செய்திகள்.   அவர்களின் முன் கதையை அறியான். அதனால் புகார் நகரச் செய்திகளில் தொடங்கி  மாதவி பாடிய கானல்வரி பாட்டின் தொடர்நிகழ்வாய் கோவலன் தன் காதல் மனையாள் கண்ணகியின் அருகாமை பெற்றது, இருவரும் கவுந்தி அடிகள் துணையுடன் மதுரை வந்தது,  பின் கோவலன் கொலைப்பட்டது வரையான நிகழ்வுகளைச் சொல்கிறான். 

"மாமுனி    அகத்தியன் வதியூம் பொதிகை மலை வலம் வந்து  தெங்குமரித் துறையில் நீராடி என் ஊழ்வினையின் பயன் போலும், மதுரை மாநகர் அடைந்தேன்.   'கோவலன் தீதிலன்;  பாதுகாப்புக்காக என்னை அண்டி வந்த
கோவலன் இப்படி கொலைக்களப் பட்டானே!  அவனை நான் பாதுக்காக்கத் தவறினேனே' என்று கதறி அழுத மாதரி  இருள் மண்டிய நள்ளிரவில் எரிமூட்டி அதில் மாண்டு போனதாகக் கேள்விப்பட்ட செய்தியைச் சொன்னான்.   'இவர்கள் தீவினை என்னுடன் இவர்களைப் பிணைத்ததோ என்று மருகி கவுந்தி அடிகள் உண்ணா நோன்பு  மேற்கொண்டு அவர் உயிர் பிரிந்த சேதியையும் மாடலன் செங்குட்டுவனுக்கு செப்பினான்.   வழியில் தான் புகார் நகரத்திற்குச் சென்றதையும் அங்கு கோவலன் தந்தை மாசாத்துவானைச் சந்தித்தித்தையும்   மதுரைச் செய்திகள் கேள்விப்பட்டு அவர் பெருந்துயர் அடைந்து துடித்ததையும் சொன்னான்.

'தனது மகனுக்கு ஏற்பட்ட தீங்கு அவரை மிகவும் வாட்டியது.   தன் செல்வம் அனைத்தையும் வாரி வாரி தானமாக வழங்கினார்.   இந்திரனால் உருவாக்கப்பட்ட ஏழு அரங்குகள் கொண்ட இந்திர விகாரம் என்னும் தவப்பள்ளி சென்றார்.   இந்தப் பிறப்பே இறுதிப் பிறப்பாக இருக்க வேண்டி துறவு பூண ஆயத்தமானார்.   அந்தர சாரிகள் ஆறைம் பதின்மர்  (6 x 50)  முந்நூற்றுவர் முன்னிலையில் மாசாத்துவான் தீட்சை ஏற்று துறவு பூண்டார்.  இது செய்தி கேள்விப்பட்டு கோவலனின் தாயாரும் பெரும் துயர் வாட்டியெடுத்து இறப்பை எய்தினார்' என்று மாடலன்  செங்குட்டுவனுக்குச் சொல்லி மேலும் தொடர்ந்தான்.

"கண்ணகியின் தந்தைக்கும் இதே நிலை தான்.   ஆசிவகர் முன் புண்ணியத்திற்குரிய  தானங்கள் செய்து துறவறம் பூண்டார் அவர்.  கண்ணகியின் தாயோ துயரச் செய்திகள் கேள்வியுற்று அப்போதே தன்  உயிர் பிரிந்தாள்.    கோவலன்--கண்ணகி நிலை கேட்டு மாதவி மடந்தை  மனம்
மருகிப் போயிற்று.   'நான் இனி நன்னெறியான துறவறம் செல்லத் துணிந்தேன்.  மணிமேகலையை வான்  துயர் உறுக்கும் கணிகையர் கோலம் பூணாது செய்க' என்று தன் தாய்  சித்ராபதியிடம் உறுதிபடச் சொல்லி தான் அணிந்திருந்த தலைமாலையை கூந்தலுடன் ஒருசேரக் களைந்து துறவறம் பூண்டாள்.   நான் சொன்ன செய்தி கேட்டோரில் தங்களை மாய்த்துக் கொண்டவர்களும் உண்டென்பதினால்,    புனித கங்கையில் நீராட வந்தேன்.    மன்னர் கோவே!  நின் கொற்றம் சிறக்க!    வாழிய  நீவிர்!" என்று செங்குட்டுவனை  மாடலன் வாழ்த்தினான்.

"வளம் பொருந்திய தென்னவன் நாடு,   பாண்டிய மன்னவன் இறந்து  பட்டதும்   யாது ஆயிற்று?  அதைச் சொல்வாயாக!" என்று செங்குட்டுவன் மாடலனிடம்  கேட்டான்.

(வளரும்)


======================================================================

 * சங்க இலக்கியம் பதிற்றுப் பத்தில்   இமயவரம்பன் குறித்து புலவர் குமட்டூர் கண்ணனார் பாடிய பாடல்கள் இரண்டாம் பத்தில் காணக்கிடைக்கின்றன.

@  பதிற்றுப் பத்தில் மூன்றாம் பத்தாக இவன் பெருமை  சொல்லும் பாடல்கள் காணப்படுகின்றன.

#  பதிற்றுப் பத்தின் நான்காம் பத்தாக இவன் சிறப்பு குறித்து காப்பியாற்று காப்பியனார் என்ற புலவர் பாடியுள்ளார்.  அகநானூற்றிலும் புலவர் கல்லாடனார் பதிந்துள்ள இவன் பற்றிய குறிப்பு ஒன்று காணப்படுகிறது.

$  சிலப்பதிகாரத்தில் பல இடங்களில்   உலா வரும் அந்தணன் மாடலன்.   ஒரு வகையில் மாடலனை வைத்தே   காப்பியத்தை இளங்கோ அடிகளார்  நகர்த்திக் காட்டியிருக்கிறார் என்று சொல்லலாம்.

&  செங்குட்டுவன் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்று வரலாற்று
அறிஞர்  மு. இராகவையங்கார்  கூறுவார்..

Thursday, July 11, 2019

வசந்த கால நினைவலைகள்

                                    40

புதுவையில் வசித்த காலத்தில் மறக்க முடியாமல் மனதில் தடம் பதித்த நினைவுகள் பல.  அவற்றில் இது தலையாயது.

புதுவை பெருமாள் கோயில் தெருவில் நுழைந்தாலே புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் நினைவு வரும்.  அந்தத்  தெருவில் 95 இலக்கமுள்ள வீடு அவரது.

தன் சுயத்தை  மதிப்பவர் பிறரது சுயத்தையும் தவறாது மதிப்பர் என்பது ஜெயகாந்தன் அவர்களின் வாக்கு.  பிறர் சுயத்தை மதிக்காதவர்கள் சுயமரியாதைக்காரர்களாய் இருப்பதற்கு  அருகதை அற்றவர்கள் என்று இதற்கு அர்த்தம்.

பிறரை மதிக்கும் அந்த சிறந்த குணத்திற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தவர் புரட்சிக் கவிஞர்.  தன் மனத்திற்கு ஏற்புடையதை  ஏற்றுக் கொண்டாரேயானால் அந்தக் கொள்கையில் பிறழாது ஒழுகுபவர்.  அவர் பூண்டிருந்த புனைப்பெயர் கூட  பலரின் கண்களை உறுத்தியது. பாரதி எவ்வளவு தான் சமநீதி சமுதாயத்திற்காக கனவு கண்டாலும் அவரைப் பிறப்பின் அடிப்படையில் பிரித்துப்  பார்த்தது  நீதிக்கட்சி வழிவந்த திராவிட இயக்கம்.   'பார்ப்பான் ஒருவனுக்கு தாசனாக பெயரைக் கொண்டிருக்கிறீர்களே! நியாயமா?' என்று முகம் சுளித்தவர்கள், ஏகடி பேசியவர்கள் நாணுகிற அளவிற்கு அவர்களைச் சாடியிருக்கிறார் பாரதிதாசன்.  "யாரைச் சொல்கிறீர்கள் என்று தெரிந்து  பேசுங்கள்..    நீடு துயில்    நீக்க பாடி வந்த நிலா!   காடு கமழும் கற்பூரச் சொற்கோ!    கற்பனை ஊற்றாம் கதையின்  புதையல்!   திறம் பாட வந்த மறவன்!  அறம் பாட வந்த   அறிஞன்! நாட்டில் படறும் சாதிப்
படைக்கு மருந்து!  மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்! அயலார் நெருப்பிற்கணையா விளக்கவன்!  என்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன்!  தமிழால்,  பாரதி தகுதி பெற்றதும்,  தமிழ் பாரதியால் தகுதி  பெற்றதும் எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்.." என்று அறியா மனிதருக்குப் பாடம் படிப்பது போல தன் பாவால் படம் பிடித்துக் காட்டுகிறார்.  'ஒரு சாராரின் எதிர்ப்பு  இன்று வரை நீங்கியதில்லை;  இதற்காக நான் அஞ்சியதும் இல்லை.   அஞ்சப்போவதும் இல்லை;  பாரதி  பற்றிப் பேச எனக்குத் தான் தெரியும்..  அவரைப் பற்றிப்  பேச என்னை விட தகுதி இந்த நாட்டில் எவனுக்கும் இல்லை.. "  என்று   அடித்துப் பேசுகிறார்..    நெருங்கிய வட்டாரத்தின் முகச்சுளிப்பிற்காக அனுபவ பூர்வமாக தான் ஏற்றுக்கொண்ட நியாயங்களை அவர் மாற்றிக்  கொண்டதில்லை.  அதில் அவருக்கு எஃகு போன்ற உறுதி  இருந்தது.

திருச்சியிலிருந்து வெளிவந்த  சிவாஜி பத்திரிகையின் ஆசிரியர்  திருலோக சீதாராம் பாரதியாரின் இறப்பிற்குப்  பிறகு பாரதியாரின் குடும்பத்திற்கு பெரும் ஆறுதலாக இருந்து  பல உதவிகள் செய்தவர்.  பாரதி, பாரதிதாசன் இந்த இரண்டு பெயர்களுக்கும் பாலமாக தன்னை அமைத்துக் கொண்டு இவர்கள் இருவரின் கவிதாலோகத்தில் சஞ்சரிப்பதில் தன் மனத்தைப் பறிகொடுத்தவர்  இந்த பிராமணர்.  சிவாஜி பத்திரிகைக்காக பாரதிதாசனின் கவிதைகளை வேண்டிப் பெற்று பிரசுரித்திருக்கிறார்.   புத்தக வெளியீட்டாராய்  இருந்திருக்கிறார்.  தனது பிசிறில்லாத  மெல்லிய குரலில் இவர்களின் கவிதைகளைப் பொது மேடையில் பாடிக் களித்திருக்கிறார்.  இத்தனை
நிலைகளிலும் தானும் ஒரு வரகவியாய்  பாடலியற்றும் பாங்கு பெற்றவன் என்பதையும் மறந்திருக்கிறார்..  தன்னைப் பின்னுக்குத் தள்ளி பிறரை முன்னிலைப் படுத்தும் அரிதான பெருமைக்குரிய பொற்குணத்திற்கு சொந்தக்காரர் திருலோக சீதாராம். 

பாரதியாரின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த  பாரதிதாசனுக்காகவே தனது சிவாஜி பத்திரிகை  மூலமாக நிதி திரட்டினார்.  இந்த மாதிரியான பாரதிதாசனின்  பாட்டுத் திறத்தில் பிரேமை  கொண்டவர்கள் திரட்டிய நிதியை பொற்கிழியாய் பாரதிதாசனுக்கு வழங்க ஒரு பொதுகூட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது..  அந்த நிதியைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் பாரதிதாசனாரின் குயில் பத்திரிகை.

நடிகர் திலகத்தை நாயகனாகக் கொண்டு தனது 'பாண்டியன்  பரிசை' திரைப்படமாக்க வேண்டும் என்கிற கனவு பாரதிதாசனுக்கு இருந்தது.  அதன் தொடர்பான நடவடிக்கைகளுக்காக என்றே புதுவை நீங்கி சென்னைக்கு குடிபெயர்ந்தார்.  இது 1961 ஆண்டு வாக்கில் என்று நினைவு.  நான் புதுவைக்குச் சென்றதே 1963-ம் ஆண்டு பிற்பகுதியில்..   புதுவை கடற்கரைச் சாலையில் அவரை ஒரே ஒரு முறை நேரில் பார்த்திருக்கிறேன்.


அவர் சென்னை சென்றதைத் தொடர்ந்து புதுவையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த அவரது 'குயில்' கவிதை ஏடும் சென்னையிலிருந்து வெளிவரத் துவங்கியது.  ஒரு பக்கம்
பாண்டியன் பரிசுக்கான  வேலைகள் நடந்து  கொண்டிருக்கையிலேயே தனது குருவின்  மீதான அன்பில்  பாரதியாரின் வாழ்க்கையையும் திரைப்படமாக்க வேண்டும் என்கிற முயற்சிகளிலும்  பாரதிதாசன்   ஈடுபாடு கொண்டிருந்தார்.

1964-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி.   அன்று    தொலைபேசி  நிலையத்தில்  மதியம் 1330-யிலிருந்து இரவு 2100 மணி வரை எனக்குப் பணிக்காலம்.  அந்த   நேரத்தில் தான் பாரதிதாசன் அவர்கள் சென்னை  பொது மருத்துவ மனையில் காலமாகிவிட்டார் என்று கலங்க வைக்கும் அந்தச் செய்தி தெரியவந்தது. அவர் புகழுடல் புதுவைக்கு கண்ணதாசனின் காரில் வருவதாகத் தகவல். இரவு ஒன்பது மணிக்கு அலுவலகப் பணி முடிந்ததும் நேரே பெருமாள் கோயில் தெருவிற்கு நானும் என் அருமை நண்பர் அ.க.பெருமாள் அவர்களும் மிகுந்த சோகத்துடன்  விரைந்தோம்.

சின்ன மரத்தூண்கள் பொருத்திய அகல வாசல் கொண்டு உள்ளடங்கிய வீடு. உள்பக்க பெரிய ஹாலில் வீறுகொண்ட கவிஞரின் பூத உடல்  கிடத்தப் பட்டிருந்தது.   கருப்பு-சிவப்பு சின்னகட்டங்கள் போட்ட பட்டுப் போர்வை போர்த்தியிருந்தார்கள். புரட்சிக் கவிஞருக்கே தனித்த ஒரு அடையாளமாக அமைந்திருந்த சின்ன அடர்த்தியான மீசைக்கிடையே புன்முறுவலுடனான
அவர் முகம் மனசைப் பிசைந்தது.   சிம்ஹம் போன்ற துடிப்பு கொண்ட அடலேறு ரோஜாப்பூ மாலைகள் சூட்டப்பெற்று அமைதியாக அப்படி இருந்தது அவரது இயல்புக்கு மாறான ஒரு செயலாய் மனசைக் குடைந்தது.  ஏற்றி வைக்கப்பட்டிருந்த ஓரிரு குத்து விளக்குகள். தலைமாட்டிற்கு பின்புறச் சுவரின் உயரத்தில் புரட்சிக் கவிஞர் ஏட்டில் பேனா பிடித்து எழுதுகிற தோற்றத்தில் ஓரளவு பெரிய  புகைப்படம்.

அந்த இரவு நேரத்தில் நீண்ட அந்த ஹாலில் எங்களைச் சேர்த்து எட்டு அல்லது ஒன்பது பேர் இருந்திருப்போம்.   இருவர் கைத்தாங்கலாக அழைத்து வர தடியூன்றிய  ஒரு பெரியவர் உள்பக்கம் வந்ததும்  "வாங்கய்யா, வாங்க...  வாத்தியார் ஐயா வந்திட்டாரான்னு கேப்பீங்களே!  இதோ இருக்காரய்யா.." என்று பெருங்குரல்அழுகை கொண்டு பெண்கள் பக்கமிருந்து துக்கம் பொங்கியது.

மனம்  கனத்துப் போனது.  நானும் நண்பர் பெருமாளும் புரட்சிக் கவிஞரின் காலடிப் பக்கம் அமர்ந்து கொண்டோம்.  'துன்பம்  நேர்கையில் யாழெடுத்து நீ...' என்கிற கவிஞரின் பாடல் எனக்கு மட்டும் கேட்கிற மாதிரி நெஞ்சுக்கூட்டை நிரப்புகிற வரிகளாய் எனக்குள் பீறிட்டது.   ஏதேதோ நினைவுகளில் மனம் துவண்டு தத்தளித்தது.  கண் நீரை கட்டுப்படுத்த முடியாமல் கவிஞருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு மெதுவாக எழுந்திருந்து வெளி வந்தோம்.

காலணிகளை மாட்டிக் கொண்டு கிளம்புகையில் வெளிச்சுவர் பக்கம் நிமிர்ந்து பார்த்தேன்.   பித்தளைத் தகட்டினால் வேய்ந்த பெயர்ப் பலகை கண்ணில் பட்டது.  அந்தப் பெயர்ப் பலகையில்  பாரதிதாசன்  என்று ஆங்கிலத்தில் எழுதப் பெற்று  IN  -- OUT   குமிழ்கள் தென்பட்டன.   புரட்சிக்கவிஞர் அவர்கள் சென்னையில் இருந்ததினால் போலும்,  பித்தளைக் குமிழின் 'IN' மறைக்கப்பட்டு  OUT- தெரிவதாய் இருந்தது. அதைப் பார்த்ததும் மனம் வேதனையில் துவண்டு, சடாரென்று  மனசில் முகிழ்த்த எண்ணமாய், பெயர்ப்பலகையின் குமிழை நகர்த்தி 'OUT'-ஐ  மறைத்து ' IN'  தெரிகிற மாதிரி மாற்றி வைத்தேன்.    ஆம்!  சாகா வரம் பெற்ற கவிஞர் அவர்களின்  'அழகின் சிரிப்பு'ம், 'குடும்ப விளக்கு'ம், 'குறிஞ்சித் திட்டு'ம், 'பாண்டியன் பரிசு'ம்  இன்ன பிற படைப்புகளும் நம்மிடையே இருக்கையில் என்றென்றும் அவர் நம்மிடையே இருந்து கொண்டு தான் இருக்கிறார்'  என்று நினைப்பு நெஞ்சில் அலையாய் புரண்டது.

அந்த வார குமுதம் இதழில் இந்த என் நினைவுகளை  பதிவும் செய்திருந்தேன்.

அடுத்த நாள் புரட்சிக் கவிஞருக்கு அஞ்சலி செலுத்த பெருங்கடல் பொங்கி வந்தால் போல் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் புதுவை  திணறியது. திரைப்படத் துறை சார்ந்தவர்கள் நிறைய வந்திருந்தார்கள்.

பிற்காலத்தில் 'கடைசி வரை யாரோ?' என்று பாடல் எழுதிய கவியரசர் கடைசி வரை நடந்தே வந்தார்.    ஹவாய் செப்பல் என்று  சொல்வார்களே, அந்த மாதிரி யான அவர் அணிந்திருந்த காலணியின் வார் வழியில் அறுந்து விட்டது.  உடனே கவியரசர்  ஓரமாய் போய் தனது இரண்டு  காலணிகளையும் கழற்றிப் போட்டு விட்டு வெறுங்காலுடன் நடக்க ஆரம்பித்தார்.   யாரோ சற்று தூரத்தில் முன்னால் சென்று   கொண்டிருந்த காரில் ஏறிக் கொள்ள   வற்புறுத்தியும் கேட்காமல் நடந்தே வந்தார்.   இவ்வளவுக்கும் பாரதிதாசனின் புகழ் உடலைச் சுமந்து கொண்டு புதுவைக்கு  வந்தது கண்ணதாசன் ஏற்பாடு  செய்திருந்த வேன்  தான்!

நமது தமிழ் பத்திரிகைகளுக்கு என்று சில கொனஷ்டையான குணங்கள் உண்டு.   அந்த நேரத்தில் கண்ணதாசன் திராவிட கட்சிகளோடு மாறுபட்ட கருத்துக்கள் கொண்டு தமிழ் தேசிய கட்சியோடு  இணைந்திருந்தார்.  அதனால்  அடுத்த நாள் செய்திதாட்களில்  பாரதிதாசன்  காலமான செய்தித் தொகுப்பில்  பாரதிதாசன் காலமானதால் கண்ணதாசனுக்கு இரு செருப்புகள் இழப்பு' என்ற தலைப்பிட்டு  ஒரு துண்டுச் செய்தி வெளிவந்தது.

சென்னை தலைமை அரசு மருத்துவமனையில் தான் பாரதிதாசன் காலமானார்.  அவர் உடலை புதுவைக்கு எடுத்துச் செல்ல  வாகனம் தேவைப் பட்ட பொழுது  சிலர் தயங்கினர்.  இந்தச்  செய்தி கண்ணதாசனுக்குத் தெரிந்து   உடனே அதற்கான ஏற்பாடுகள் செய்த அவரின் அருங்குணம் தெரியாது தன்  சொந்த  காழ்ப்புணர்வை   கேலியாய் கிண்டலாய்  செய்தியாக  அந்தப் பத்திரிகை வெளியிட்டுத் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டது.


(வளரும்)

Tuesday, July 9, 2019

வசந்த கால நினைவலைகள்....

                                                        பகுதி--39  


'கல்கி' பத்திரிகையில்  குறிஞ்சி மலர் என்ற சமூக  நாவல்  வெளிவந்து  கொண்டிருந்த காலம் அது.   வித்தியாசமான எழுத்து  நடையில் இருந்த அந்த புதினத்தை மணிவண்ணன் என்பவர் எழுதி வருவதாகத் தெரிந்தது.  அந்த எழுத்தாளரைப் பாராட்டியும்,  சில குறைகளைச் சுட்டிக் காட்டியும்  அந்தப் புதினத்தை  விமரிசிக்கிற ரீதியில் மணிவண்ணன் என்ற பெயருக்கு கல்கி பத்திரிகை முகவரியிட்டு  அவ்வப்போது கடிதங்கள் எழுதி வந்தேன்.  தமிழ் பத்திரிகை உலகிலும் யார் இந்த மணிவண்ணன் என்ற கேள்வி  வாசகர் மனதில் எழுந்த நேரமும் அது தான்.  அந்த புதினம் அந்த பத்திரிகையில் நிறைவுறும் வரை மணிவண்ணன் யார் என்பதனை வெளிக்காட்டாமலேயே கல்கி பத்திரிகையும் அதன் விற்பனை யுக்தியாய் சமாளித்து வந்தது.

மணிவண்ணனின் அடுத்தத் தொடர்  வெளிவருகின்ற நேரத்தில் தான் மணிவண்ணன் என்கிற நா. பார்த்தசாரதி என்று பார்த்தசாரதி என்ற பெயர் கொண்ட எழுத்தாளரை அவர் புகைப்படம்  வெளியிட்டு தன் பத்திரிகையில் விளம்பரப்படுத்தியது 'கல்கி'.    நா. பார்த்தசாரதி தமிழ் எழுத்துலகிற்கு அறிமுகமான கதை இது தான்.

சில குறுநாவல்கள்,  சிறுகதைகள்  நா. பார்த்தசாரதியின் பெயரில் வெளிவந்த பொழுதும்  அவை பற்றிய எனது கருத்துக்களை நா.பா.விற்கு நான் கடிதம் மூலம் தவறாது தெரிவித்து வந்தேன்.   நா. பா. அவர்களுக்கு ஒரு நல்ல பழக்கம் இருந்தது.   தன்னிடம் தொடர்பு கொள்ளும் தன் வாசகர்களுக்கு உடனடியாக தன் கைப்பட கடிதம் எழுதும் பழக்கம்.   நா.பா.வின் கையெழுத்து முத்து முத்தாக கண்ணில் ஒற்றிக் கொள்கிற மாதிரி இருக்கும்.  வழவழப்பான வெள்ளை அட்டையில்,  பின் பக்கம் அவர் பொன்விலங்கு நாவலில் வரும் வாசகங்களான 'தூக்கமும் ஒரு  தற்காலிகமான சாவு தான்;  அதிலிருந்து  மறுபடி விழித்துக் கொள்ள முடிகிறது.  அதே போல சாவும்  ஒரு நிரந்தரமான தூக்கம் தான்.  ஆனால், அதிலிருந்து மறுபடியும் விழித்துக் கொள்ள முடிவதில்லை'  என்கிற வரிகள் கட்டம்  கட்டி அச்சிடப் பட்டிருக்கும்.   தன் அபிமான வாசகர்களின் பெயர் போட்டு அவர்கள் தனக்கு எழுதும் கடிதங்களும் அவற்றிற்கு தான் எழுதும் பதிலையும் சேர்த்து வைத்து தனி கோப்புகளாக  பராமரித்து வந்தார் அவர்.  இந்த அவரது வாசகர்களுடனான தொடர்பு பிற்காலத்தில் அவருக்கு மிகவும் பயன்பட்டது.

பாரதியார் ஆசிரியராக இருந்த மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தான் பார்த்தசாரதியும் ஆசிரியராக இருந்தார்.   பொன்விலங்கு கல்கியில் பிரசுரமான காலத்தில் கல்கி பத்திரிகைக்கு துணை ஆசிரியர் பொறுப்பில் இருந்தார்.  அந்த நேரத்தில் கல்கி பத்திரிகைக்கும் தனக்குமான சில உணர்வு பூர்வமான பாதிப்புகளை குறிப்பிட்டு எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்.  'என் மேஜை மேலிருந்த தொலைபேசித் தொடர்பைத் துண்டித்து விட்டார்கள், ஜீவி' என்று ஆற்றாமையுடன் அவர்   எனக்கெழுதிய கடிதத்திலிருந்த   வார்த்தைகள் இன்னும் நினைவில் நா.பா.வின் அழகான எழுத்து வடிவில் பதிந்திருக்கின்றன.    தனது ப்ரிய வாசகர்களுக்கும் தனக்கும் தனிப்பட்ட தான் சம்பந்தமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு அவர் மன விசாலமும் நெருக்கமும் இருந்தன என்பதற்காக இதைக் குறிப்பிட நேர்ந்தது.

அந்த நேரத்தில் எனக்கு வந்திருந்த அந்தக் கடிதமும் அப்படியான  ஒன்று தான்.  கல்கி பத்திரிகையிலிருந்து தான் விலகி வெளிவரப் போவதாகவும் ஒரு எழுத்தாளன் தன் கீர்த்தி பலத்தைச் சோதித்துக் கொள்ள வேண்டிய நிலையில் தான் இருப்பதாகவும் அதற்காகவே புதுப் பத்திரிகை ஒன்றைத் தொடங்கவிருப்பதாகவும் அது சம்பந்தமான மேற்கொண்டான செய்திகளை விரைவில் தங்களுக்குத் தெரிவிக்கிறேன்' என்று அந்தக் கடிதம் எனக்குச் சேதி சொன்னது.  தங்களைப் போல நண்பர்களின் அன்பு தான் தனக்கான பலத்தைக் கொடுக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அந்தக் கடித்ததின் அடுத்த முன்னேற்றமாக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை தான் 'தீபம்'.   புதுவையில் பிரபலமன மருந்துக் கடை ஒன்றின் உரிமையாளரின் புதல்வர் எங்கள் இலக்கிய அமைப்பின் தொடர்பிலிருந்தார்..  நா.பா.வின் மேல் தனிப்பட்ட பற்றும் அவருக்கு உண்டு.  அவரிடம் விஷயத்தைச் சொன்னேன்.   புதிதாக வெளிவரவிருக்கும் பத்திரிகைகக்கு  சில விளம்பரங்களை திரட்டிக் கொடுப்பதற்கான  ஆலோசனைகளை அவர் எனக்குச் சொல்லவும் செய்தார். செயல்படுத்தியும் காட்டினார்.  புதுவையில் கிட்டத்தட்ட 25-க்கு மேற்பட்ட சந்தாதாரர்களை நா.பா.வின் 'தீபம்' பத்திரிகைக்காகச் சேர்த்தோம்.  நா.பா.விற்கு மிகவும் மகிழ்ச்சி.   அவரின் நட்பு மேலும் இறுகிய  காலம் அது.  நா.பா.விடம் இவ்வளவு நெருக்கம்  எனக்கிருந்தும் 'தீபம்' பத்திரிகை பிரசுரத்திற்காக எனது கதைகளில் ஒன்றைக் கூட அவருக்கு நான் அனுப்பி வைத்ததில்லை.  இதற்காகத் தான் அது என்கிற மாதிரியான  மலினப்படுத்தலாகி விடும் என்று ஒரு தயக்கம் அந்நாட்களில் என்னை ஆட்கொண்டிருந்தது.  ஆனால், பிற்காலத்தில் குமுதம் பத்திரிகையின் போக்குகளை விமர்சிக்கிற செயலாய் ஒரு கட்டுரை தீபம் பத்திரிகையில் வந்திருந்த பொழுது  அந்த  கட்டுரையின் வார்த்தைகளுக்கு எனது ஆழ்ந்த கண்டனங்களைத் தெரிவித்து நீண்ட கடிதம் ஒன்றை  நா.பா.க்கு தனிப்பட்ட முறையில் என்று அல்லாது  'ஆசிரியர், தீபம்'  என்று முகவரியிட்டு எழுதியிருந்தேன்.   என் கடிதம் கண்ட உடனே அதற்கான மறுமொழியையும்
நா.பா. கடிதமெழுதித்  தெரிவித்திருந்தார்.  அதைப் பற்றி பிறகு சொல்கிறேன்.


புதுவையிலிருந்த காலத்தில்  நான் அனுப்பும்  சிறுகதைகளை உடனுக்குடன் பிரசுரித்து  என் எழுத்துக்கு   மிகவும் ஆதரவளித்த பத்திரிகை  'காதல்'.  அதன் ஆசிரியர் அரு. இராமநாதன் அவர்களை நான் நேரில் சந்தித்ததிலை.  தொடர்ந்து  அந்தப் பத்திரிகையின் ஆஸ்தான எழுத்தாளராய் என்னை  நேசித்தார் அவர்..  காதல் பத்திரிகைக்கு  மாத முதல் வாரத்தில் நான் அனுப்பும் சிறுகதை அடுத்த மாத இதழிலேயே பிரசுரமாகிவிடும். ஒவ்வொரு தீபாவளித் திருநாளன்றும் 'வசந்த மலர்' என்ற பெயரில் காதல் பத்திரிகையின் தீபாவளி மலர் மலரும்  வழக்கமிருந்தது.   அந்த தீபாவளி அன்று 'பார்வதி அம்மாள் என் அம்மா'  என்ற எனது முதல்  குறுநாவல்  'காதல்' பத்திரிகையில் பிரசுரமாயிற்று.  இரண்டே குறுநாவல்கள்.   இன்னொன்றை  அமரர் ஜெகசிற்பியன் எழுதியிருந்தார்.

எங்கள் இலக்கிய அமைப்பின் சார்பாக  சிறுகதைத் தொகுப்பு ஒன்றை  வெளியிட்டோம்.  அந்நாட்களில் புதுவையின்  ஆளுனராக இருந்த        லெப்டினட் கவர்னர் சீலம் அவர்கள் அந்த சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார்.   ஆளுனர் அவர்களிடமிருந்து  சிறுகதைத் தொகுப்பை நான்  பெறுகிற மாதிரி அந்நிகழ்வு  சம்பந்தப்பட்ட புகைப்படம் ஒன்று நெடுநாள் என்னிடம் இருந்தது.  இப்பொழுது தேடிப் பார்த்ததில் கிடைக்கவில்லை.  கிடைப்பின் வெளியிடுகிறேன்.

கண்ணதாசன் அவர்களை நான் நேரில் சந்தித்த முதல் நிகழ்வும் புதுவையில் தான்.  புதுவை கடற்கரை சாலையில். கவியரசர் கண்ணதாசன் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது.  கவியரசரின் உரையைக் கேட்கச் சென்றிருந்தேன்.  அவருடன் எப்படியும் பேசிவிட வேண்டும் என்ற முடிவிலிருந்தேன்.    பொதுக்கூட்டங்கள் என்றால் அந்த நாட்களில் வழக்கமாக நான் எடுத்துச் செல்லும் ஆட்டோகிராப் குட்டிப் புத்தகமும்  கைவசமிருந்தது.


கண்ணதாசன் அவர் கார் கதவு திறந்து வெளிவந்த பொழுதே ஆட்டோகிராப் புத்தகத்துடன் நெருங்கிய என்னை பார்த்து விட்டார்..  அந்தக் காலத்தில் மனசுக்குப்  பிடித்தமான பிரபலமானவர்களிடம் ஆட்டோகிராப் புத்தகத்தில் கையெழுத்து வாங்குவது ஒரு பழக்கமாகவே இருந்தது.  தனக்கு பிடித்த பொன்மொழி மாதிரி ஏதாவது வரி எழுதிக் கையெழுத்திட்டுத் தருவார்கள்.

சட்டென்று கவிஞருக்கு மிகவும் அருகில் சென்றவுடன் அவரே என் கையிலிருந்த ஆட்டோகிராப்  புத்தகத்தை வாங்கிக் கொண்டார்., முதல் தடவையாக அவ்வளவு நெருக்கத்தில் கவியரசரைப் பார்க்கிறேன். என் சட்டைப் பையிலிருந்த பேனாவை எடுத்து அவரிடம் தந்தபடியே சொன்னேன்: "எல்லோருக்கும் தெரிந்த கண்ணதாசன்கள் இருவர்.  ஒருவர் அரசியல் கண்ணதாசன்; மற்றொருவர் இலக்கிய கண்ணதாசன்.  ஏனோ அரசியல் கண்ணதாசனை விட இலக்கிய கண்ணதாசனைத் தான் எனக்கு மிகவும்  பிடிக்கும்.  அதனால் இலக்கிய கண்ணதாசன் என்று கையெழுத்திட்டுத் தர வேண்டுகிறேன்.." மடமடவென்று மனசில் மனனம் செய்து வைத்திருந்ததை கொஞ்சம் கூடத் தயங்காமல் சொல்லி விட்டேன்.  என்ன சொல்லி விடுவாரோ என்று லேசான உதறலும் இருந்தது.

"அப்படியா?" என்று கண்ணதாசன்  புன்முறுவல் பூத்ததே அழகாக இருந்தது.  காரின் முன்பக்கம் நகர்ந்து கார் பானெட்டின் மீது ஆட்டோகிராப் புத்தகத்தை வைத்து  'இலக்கிய கண்ணதாசன்' என்று தெளிவாக எழுதி அதற்கு கீழே  கையெழுத்திட்டார்.     'இப்பொழுது திருப்தியா?'   என்கிற மாதிரி என்னைப் பார்த்தார்.    முகம் சுளிக்காமல் நான் விரும்பியதை அவர் நிறைவேற்றிக்  கொடுத்தது மனசுக்கு  சந்தோஷமாக இருந்தது.  என் தோளில்  லேசாகக் கைவைத்தபடி ஆட்டோகிராப் புத்தகத்தையும் பேனாவையும் என்னிடம் தந்தபடியே, "ஒண்ணு தெரியுமா? ரெண்டு கண்ணதாசன்களுமே பொய்" என்று அவர் புன்முறுவலுடன்  சொன்ன பொழுது திகைப்பாக  இருந்தது.

எனது அந்த 22 வயசில் தத்துவார்த்தமாக அவர் சொன்னது புரியாது பின் புரிபட்ட பொழுது இந்த நிகழ்வை நினைக்கும் பொழுதெல்லாம் அவரது வசீகரமான புன்முறுவல் தான்  நினைவுக்கு வரும்.

இந்த என் அனுபவத்தை குமுதம் பத்திரிகைக்கு குட்டி கட்டுரையாக்கி அவரது ஆட்டோகிராப் கையெழுத்து காகிதத்தை இணைத்து அனுப்பி வைத்திருந்தேன்.   அந்த வார குமுதம் இதழிலேயே அது பிரசுரமாகி விட்டது.

இந்த மாதிரி குமுதப் பிரசுரமான  ஆட்டோகிராப் நினைவுகள் நிறைய. இருந்தாலும் அதையெல்லாம் இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் இந்த மாதிரியான பிரசுரங்களில் ஒரு வருத்தமும் இப்பொழுது மேலோங்குகிறது.

ஜெராக்ஸ் மிஷின்கள் இல்லாத காலம் அது.  அதனால் பத்திரிகை காரியாலயங்களுக்கு ஒரிஜனல் தான் அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள் அதற்கு அச்சு வடிவம் கொடுத்தாலும் ஒரிஜனல் இல்லாதது இப்பொழுது நினைத்துப்  பார்க்கையில் ஒருவிதத்தில் இழப்பாகத் தான் தெரிகிறது.

(வளரும்)

Wednesday, July 3, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                      38


டுத்த நாள்  மாலை எங்கள்  தொழிற்சங்க கிளைக்கூட்டம் இருப்பதாகவும்  மாநிலச் செயலர்  அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றப் போவதாகவும் தோழர் சிரில் என்னிடம் சொல்லியிருந்ததால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வாகாக எனது அலுவலகப் பணி நேரத்தை காலை 0610-1330 என்று மாற்றிக் கொண்டிருந்தேன்.

மதியம் பணி  நேரம் முடிந்ததும் நேரே  ஆர்யபவன்  ஓட்டலுக்குப் போய் மதிய சாப்பாடு ஆயிற்று.  அப்படியே நேரே பாரதி தெரு வீட்டிற்குச் சென்றேன்.  கை கால் கழுவிக் கொண்டு ஃபேனை சுழல விட்டு படுத்தது தான் தெரியும். நல்ல தூக்கம்.   மாலை 4 மணி சுமாருக்கு ஏதோ சப்தம் கேட்டு விழித்துக் கொண்டு விட்டேன்.  பாலகிருஷ்ணன் என்ற அறைத் தோழர் அவரது 0800-1530 பணி முடிந்து வீட்டிற்கு வந்திருக்கிறார்.   (இடமிருந்து:  முதலாவது பாலகிருஷ்ணன், நாலாவது நான்)

நான் தூக்கம் கலைந்து விழித்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், "மணி நாலாச்சு, ஜீவி..  ஆறு மணிக்கெல்லாம் கூட்டம் ஆரம்பமாயிடும்..  கடலூர் கூட்டத்தை முடிச்சிண்டு ஜெகன்  ஐந்தரைக்கெல்லாம் வந்துடுவார்ன்னு சொன்னாங்க.. கிளம்பு.. கிளம்பு.." என்று என்னிடம் சொல்லிக் கொண்டே பாத் ரூம் பக்கம் போனார்.

தோழர் ஜெகன்  எங்கள் அகில இந்திய தொழிற்சங்கத்தின்  தமிழ் மாநிலச் செயலர்.  இதுவரை அவரை நேரில் பார்த்ததில்லை.   எங்கள் தொழிற்சங்க  பத்திரிகை ஒலிக்கதிரில் அவர் கட்டுரைகளை வாசித்ததோடு  சரி.   ஒரு உத்வேகத்தோடு  எழுந்திருந்தேன்.                 

நானும் பாலகிருஷ்ணனும் தொலைபேசி நிலையம்  போய்ச் சேர்ந்தோம்.   ஓய்வறையில் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.   நாங்கள் போய்ச் சேர்ந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஜெகன் வந்து சேர்ந்து  விட்டார்.    பைஜாமா, ஜிப்பா,  கேரள தடிமன் மீசை என்று உற்சாகமான இளைஞராக இருந்தார்.   லைன்மேன் தோழர்கள் அவரைச் சுற்றிக் கொண்டனர்,  பெரும்பாலாரோடு அவருக்கு நல்ல அறிமுகமும் தோழமையும் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.   தனிப்பட்ட அவர்களுக்கான இலாகா குறைகளைச் சொன்னார்கள்.  இந்த கூட்டத்தை முடித்ததும் அதற்காக அரைமணி நேரம் தனியாக ஒதுக்கிப் பேசலாம்  என்று அவர் சொல்ல   சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டனர்.     நான் உன்னிப்பாக ஒவ்வொரு விஷயத்தையும் அவர் டீல் பண்ணும் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரு வழியாக கூட்டம் ஆரம்பித்த ஐந்தே நிமிடங்களில்  ஜெகன்  மைக்கைப் பிடித்து விட்டார்.   ஒரு மணி நேரத்திற்கு சுற்றுச் சூழலை மறந்து மெஸ்மரிசத்திற்கு ஆட்பட்டதே போல மெய்மறந்து போனேன்.  என்ன பேச்சு!..  அவர் பேசுகையில்  விவேகானந்தர் வந்தார், ஐன்ஸ்டீன் வந்தார்,  ஜான் கீட்ஸ்,  மு.வ., பாரதி,  லிங்கன் என்று ஒரு தொழிற்சங்க கூட்டத்தில் இவர்களை எல்லாம் இணைத்து ஒருவரால் பேச முடியும் என்று நினைத்துக் கூட நான் பார்த்திராத அருமையான சொற்பொழிவாக  அது  இருந்தது.  கூட்டம் முடிந்ததும் கேள்வி--பதிலுக்காக கால் மணி நேரம்,  லைன்மேன்  தோழர்களோடு ஒப்புக்கொண்ட அரை மணி நேர தனிப்பட்ட உரையாடல் எல்லாம் முடிய 8.30 ஆகி விட்டது.  ஒன்பது மணிக்கு சென்னைக்கு கடைசி பஸ்.  தோழர் ஒருவர் தன் பைக்கை எடுத்து வர எங்களிடம் விடைபெற்று  பின் சீட்டில் உட்கார்ந்து எங்களைப் பார்த்து கை அசைத்து.... ஓ! என்ன மனிதர் இவர் என்று வியப்பில் திகைத்தேன்.   இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் வீடு போய்ச் சேர்ந்து.. குடும்பம், குழந்தை குட்டிகள் என்று எல்லாமும் இவருக்கும் உண்டு தானே என்று மனம் வலை பின்னியது.

தோழர் ஜெகன் என் மனசில் பதிந்தது இப்படித் தான்.  இந்த ஆரம்பம் நீண்ட ஒரு சரித்திரத்தை தன்னுள் கொண்டது.  எந்த நிலையிலும் நிலை பிறழாது எனக்கு வழிகாட்டிய ஆசான் அவர்.   எதைப் பேசினாலும்  தொழிற்சங்க ஊழியனாகவே தன்  குரலைப் பதிவு செய்வதில் இம்மியளவும் அவர் விலகிப் போனதில்லை.

கடலூர் முத்தையா தியேட்டர்.  சோஷலிஸ்ட் கட்சியின் தலைவர் டாக்டர்  ராம் மனோகர் லோகியா கூட்டம் உள்ளே நடக்கிறது. அது கடலூரில் ஜெகன்
தொலைபேசி இலாகாவில் தன் ஆரம்பப் பணியை ஏற்றுக் கொண்ட காலம்.  எதேச்சையாக அவர் லோகியா அவர்களின் பேச்சைக் கேட்க செல்கிறார்.  கூட்டத்தின் தலைவர் வழக்கறிஞர் மனோகரன்.  டாக்டர் லோகியாவின் ஆங்கிலப் பேச்சை தமிழாக்கம் செய்ய வருவதாக இருந்த திருக்கோயிலூர் சுந்தரம் வரவில்லை. எனவே கூட்டத் தலைவர் மனோகரனே  லோகியாவின் பேச்சை  மொழிபெயர்த்தார்.  அது  சரியாக அமையவில்லை.  கூட்டத்தின் முன் வரிசையில் அஞ்சல் தந்தி நிலையத்திற்கு அடிக்கடி வருகிற ஜெகனுக்குப் பழக்கமான நியூஸ் ரிப்போர்ட்டர்கள் மொழிபெயர்ப்புப் பணிக்கு அவரை அனுப்பி  விட்டனர்.

ஒரு அனைத்திந்திய தலைவரின் பேச்சை மொழிபெயர்க்கிறோம் என்ற உணர்வோடு தனக்கே உரிய பாணியில் ஜெகன் மொழிபெயர்ப்பு பணியை ஒரு அவசரத் தேவைக்காக செய்கிறார்.  கூட்டத்தில் கரவொலி.  அட்டகாசமான வரவேற்பு.   அகமகிழ்ந்த லோகியா தனது  நெல்லிக்குப்பம்,  சிதம்பரம் கூட்டங்களுக்கு மொழிபெயர்க்க ஜெகனை தன்னோடையே அழைத்துச் சென்று விடுகிறார்.   அரசியல் தலைவரின் பேச்சை மொழி பெயர்த்ததாலேயே  ஜெகன் அரசியல்  நடவடிக்கையில்  ஈடுபட்டார் என்று நிர்வாகம் குற்றம் சாட்டியது.   இனி அவரது பணியில் வரப்போகிற ஆண்டுகளுக்காக பெறவிருக்கும் ஆறு இன்கிரிமெண்ட்டை வெட்டி  தொடக்க கால சம்பளத்திற்கு குறைத்தது.   அரசியல் தலைவர் ஒருவரின் பேச்சை மொழிபெயர்த்தற்கு அந்நாட்களில் அகில இந்திய அளவில் கேள்விப்பட்டே இருக்காத ஆகப்பெரிய தண்டனை...  இது தான்  ஜெகன்  இலாகாவில் நுழைந்த தருணத்தில் பெற்ற   முதல்  விழுப்புண்!.. 

அன்றைய நாட்களில் வெளியூரிலிருந்து கடிதம் பெறுவது என்பதே தபால் அலுவலகத்தின் மூலம் தான் நடந்து எல்லோர் வாழ்விலும் தபாலாபீஸ் நிலையான இடத்தைப் பெற்றிருந்தது.  பலர் வீடுகளில்  காலை பதினோரு மணி ஆயிற்று என்றால் போதும், "என்ன தபால்காரன் இன்னும் வரலையா?" என்ற கேள்வி எழும்.  சொந்த பந்தங்களிலிருந்து,  வெளியிடங்களிலிருந்து கடிதங்களைப் பெறுவதில் அவ்வளவு எதிர்பார்ப்பு   அந்தக் காலத்தில் இருந்தது.    உறவுகள் பதினைந்து நாட்களுக்கு   ஒரு தடவையாவது தம் உறவினர்களுக்கு  ஒரு கார்டாவது போட்டு விடுவார்கள்.   அந்த தபால் அட்டை வழக்கமாக,  'இங்கு நாங்கள் நலம்;  அங்கு நீங்கள்   எல்லோரும் நலமா?'  என்றே   ஆரம்பிக்கும்.  காதல் கோட்டை,  'நலம்.  நலமறிய   ஆவல்' பாடலின் ஆதர்சம் அந்நாளைய தபால் கார்டு தான் என்று எனக்குத் தோன்றும்.

தபால் கடிதங்களைப் பொறுத்த மட்டில் என் அலுவலக முகவரி தான் என்  முகவரியாக அந்நாட்களில் இருந்தது.  அதனால் பணி நேரம் இருக்கிறதோ இல்லையோ தினமும்  காலை வேளையில்  பத்து மணியளவில் தொலைபேசி  நிலையம் சென்று விடுவது வழக்கம்.  அதற்குள் காலைத் தபால்கள் அலுவலக போஸ்ட் பாக்ஸில் காத்திருக்கும்.  தபாலை எதிர்பார்க்கும் ஆவலே கிளர்ச்சியூட்டக் கூடிய ஒரு அனுபவம்.  நாம்  செயலாற்றியதின் வினையாக பதில்  நிகழ்வை எதிர்பார்க்கும் ஆவல் அது.    பெரும்பாலும் பத்திரிகைகள்  அலுவலகங்களிலிருந்து வரும் தபால்கள் தான் எனக்கென்று இருக்கும்.

அன்றைய தபாலில்  'குறிஞ்சி மலர்'  நா. பார்த்தசாரதியிடமிருந்து வந்திருந்த கடிதம் முக்கியமான தகவல் கொண்டதாய் இருந்தது.

(வளரும்)


Related Posts with Thumbnails