மின் நூல்

Friday, August 26, 2016

அழகிய தமிழ் மொழி இது!...

பகுதி--21


முதல் நாள் இரவு பாண்டிய அரசி கோப்பெருந்தேவி நடுக்கும் கனவு ஒன்றைக் கண்டாள்.

அவள் கண்ட கனவில் பாண்டிய வேந்தனின் வெண்கொற்றககுடையும், செங்கோலும் சரிந்து கீழே விழுந்தன. அரண்மனை வாயிலில் கண்டாமணி தன் நடுநா நடுங்க இடைவிடாது அசைந்து அசைந்து ஒலி எழுப்பியது.   கருந்திட்டென எழுந்த இருள் பட்டப்பகலில் பகலவனை விழுங்கியது.  வான்வில் இரவில் தன் ஏழு வண்ணங்களுடன் ஜொலித்தது.  நண்பகலில் எரிகொள்ளிகளாக விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்தன.  ஒரேகனவில் பகல் இரவு  என்று அடுதடுத்த காட்சிகளைக் கண்டாள் கோப்பெருந்தேவி.

கண்ட கனவை காலையிலும் மறக்க முடியவில்லை.  முதலில் தன் நெருங்கிய தோழியிடத்தும் பின் அரசனிடத்தும் இந்த எதிர்மறை நிகழ்வுகள் கனவைச் சொன்னாள்.  அரிமா ஏந்திய அமளியில் அமர்ந்திருந்த அரசன் அவள் சொல்வதைக் கேட்டு திகைத்தான்.  ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டது போல அவன் உணர்வு அவனை உந்தித் தள்ளியது.

அந்த சமயத்தில் தான் கண்ணகி அரண்மனை வாயிற் புறத்தில் புயலெனச் சீறி நின்றாள்.  “வாயில் காப்போனே! வாயில் காப்போனே!  அறிவு அற்றுப்போகிய அறநினைவு அழிந்து அரச நீதியிலிருந்தும் நழுவியவனின் வாயில் காப்போனே!  ஒற்றைச் சிலம்பை ஏந்திய கையினளாய் கணவனை இழந்த ஒருத்தி அரண்மனை வாசலில் நிற்கிறாள் என்று உன் அரசனிடம் அறிவிப்பாயாக,  அறிவிப்பாயாக..” என்று ஓங்கி ஒலித்த உரத்த குரலில் சீறினாள்.

ஒன்றைச் சிலம்பேந்திய ஆவேச கண்ணகியைப் பார்த்த மாத்திரத்தில் நடுங்கிப் போனான் வாயில் காப்போன். அவள் சொன்ன விஷயத்தை அரசனிடம் சொல்ல அரண்மனை உள்ளே வேகமாக ஏகினான்.  அந்த நேரத்தில் தான் அரசனிடத்து அரசி தான் கண்ட தீக்கனவைப் பற்றிச் சொல்லி முடித்திருந்தாள்.

“கொற்கை வேந்தன் வாழி!  தென்னம் பொருப்பின் தலைவ வாழி! செழியனே வாழி!  பாண்டிய அரசே வாழி!  இது வரை பழிஎதுவும் படராத பஞ்சவ வாழி!  வெட்டு வாயிலிருந்து பீறிட்டெழும் குருதி நீங்காத பிடர்த் தலைப் பீடம் ஏறி வெற்றிவேல் ஏந்தியிருக்கும் கொற்றவையும் அல்லள்!  கன்னியர் எழுவருள் பிடாரியும் அல்லள்! இறைவன் ஆடல் கண்டு அருளிய பத்திர காளியும் அல்லள்!  செறிந்த காட்டுப் பிரதேசத்தை நேசிக்கும் காளியும் அல்லள்! தாருகனின் விரிந்த மார்பைப் பிளந்த துர்க்கையும் அல்லள்!  கருவு கொண்டவள் போலவும் கோபம் கொண்டவள் போலவும் தோற்றம் தருகிறாள்.  ஒற்றைச் சிலம்பொன்றை தன் கையில் தூக்கிப் பிடித்தவளாய் நிற்கிறாள்.. கணவனை இழந்த கைம்பெண்ணாய் அரண்மனை வாசலில் நிற்கிறாள், அரசே!”  என்று நடுக்கத்துடன் அறிவித்தான்.

“அப்படியா?..  அப்பெண்ணை  ‘வருக’ என்று கூறி இங்கு அழைத்து வருக!”  என்று  ஆணையிட்டான் மன்னவன்.

வீசியடிக்கும் காற்றென உள்ளே புகுந்த கண்ணகியை, “நீர் தளும்பும் கண்களுடன் எம்முன் வந்தோய்! நீ யாரோ?” என்று மன்னன் கேட்டான்.

‘நீ யாரோ?’  என்று மன்னன் கேட்ட்து உசுப்பி விட்டது போலும் அவளை. படபடவென்று பொறிகிறாள்:  “தேரா மன்னா!  சொல்கிறேன், கேள்!   தேவர்களும் வியக்க தன் தொடைச்சதை அறுத்து தராசுத் தட்டிலிட்டு புறா ஒன்றின் துயரத்தைத் தீர்த்த மாமன்னன் சிபியின் நாட்டினள் நான்.    அரண்மனை வாசலில் கட்டிய மணியின் நடு நா நடுங்க, அந்த மணிக்கயிற்றை அசக்கிய பசுவின் கடைக்கண் வழி ஒழுகிய நீர் தன் நெஞ்சைச் சுட,  தவறு செய்த தன் அருமைப் புதல்வனைத் தேர்க்காலில் இட்டு நீதியை நிலை நாட்டிய மனுநீதிச் சோழனின் புகார் என் ஊர்.  அவ்வூரில் சிறப்பு மிக்க இசை விளங்கு பெருங்குடி வணிகன் மாசாத்துவானின் மகள் நான்.  வாழ்தல் வேண்டி  ஊழ்வினை துரத்த உன் மாமதுரை நகருக்கு  என் கணவனுடன்   வந்தேன்.  என் கால் சிலம்பை விற்க வேண்டி  உன்னிடத்துக் கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி நான்.  கண்ணகி என்பது என் பெயர்!”  என்றாள்.

“பெண்ணணங்கே!  கள்வனைக் கொல்லல் கொடுங்கோல் இல்லை.  அதுவே அரச நீதி” என்றான் பாண்டியன்.

“நல்லறம் கொள்ளாத  கொற்கை வேந்தே!  என் கால் பொற்சிலம்பு மாணிக்கங்களைப் பரல்களாகக் கொண்டது, தெரியுமா?”  என்றாள் கோவலனின் மனைவி.

“தேன்மொழி சொன்னது நன்மொழி.. களவு போன எம் சிலம்போ  முத்துக்களைப் பரல்களாகக் கொண்டது” என்று சொன்ன மன்னவன், ஏவலரை அழைத்து “கோவலன் கவர்ந்த எம் சிலம்பைக் கொணர்க!” என்று பணித்தான்.

மன்னனிடத்திலிருந்த அந்த  ஒற்றைச் சிலம்பு வந்தது.  வந்த சிலம்பை கண்ணகி முன் வைத்தான்.

கண்ணகியின் ஜோடிச் சிலம்பில் ஒன்று  மன்னனால் கண்ணகியின் முன் வைக்கப்பட்டிருந்தது.  மற்றது கண்ணகியின் கையில்.

தன்னது மாணிக்கப் பரல்கள் கொண்டது என்பதை நிலை நாட்ட வேண்டுமென்ற ஆவேசம் கண்ணகிக்கு.  அதனால் சற்றும் தாமதிக்காது தன் சிலம்பை பிளக்க வேண்டி வீசி எறிந்தாள்.  தரையில் மோதிச் சிதறிய அதனிடமிருந்து தெறித்த
மாணிக்கப் பரல் ஒன்று மாமன்னனின் வாயருகே தெறித்து கீழே விழுந்தது.

பாண்டியன் நெடுஞ்செழியன் திடுக்கிட்டுத் தடுமாறிப் போனான்.  தாழ்ந்த குடையனனாய், தளர்ந்த செங்கோலனாய், “பொன்செய் கொல்லன் சொல் கேட்ட நானா அரசன்?..  நானே கள்வன்..” என்று துடித்துப் போனான்.  “மக்களை காக்கும் பாண்டிய குல அரசுக்கு என்னால் தவறு நேர்ந்து விட்டதே!  இனியும் நான் பிழைத்திருக்கலாமா?.. இக்கணமே கெடுக என் ஆயுள்..”  என்று மயங்கி விழுந்தான்.  தவறு செய்தோமே என்ற பிழை பொறுக்காக நெஞ்சு விழுந்த கணமே தன்  துடிப்பை நிறுத்திக் கொண்டது.

மன்னன் விழுந்ததும்  அதிர்ச்சியில்  உறைந்து போனாள் பாண்டிய அரசி.  முதல் நாள் இரவு கண்ட கனவு அதற்குள் பலித்துப் போன ஊழ்வினைத் தாக்குதலில் அலமந்து போய் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து நழுவினாள்.  நழுவியவள் மாமன்னனின் காலடி பற்றித் தொழுதாள்.  கணவன் ஆவி துறந்தான் என்று உணர்ந்த அக்கணமே அவள் உயிர் உடல் விட்டு நீங்கியது.

கண்ணகியோ தன்நிலை மறந்த ஆவேச நிலையில் நிற்கிறாள்.  பாண்டிமா தேவி உயிர் துறந்த நிலையைக் கூட அறியாதவளாய் சூளுரைக்கிறாள்:  “கோவேந்தன் தேவியே!  அநியாயமாய் கணவனைப் பறி கொடுத்த நான் எதையும் உணர முடியாத நிலையில் உங்கள் முன் நிற்கிறேன்!  இருப்பினும் ஒன்று தெளிவாக எனக்குத் தெரிகிறது.  முற்பகலில் ஒருவருக்கு கேடு செய்தவன்  தன் கேட்டினை அன்றைப் பிற்பகலிலேயே  காணுவான். வினையின் விளையாட்டு அந்தளவு தீவிரமானது என்பதனை நீயும் உணர்வாயாக!...

“வன்னி மரமும், மடப்பள்ளியும் சான்று கூற இயலாத அஃறிணைப் பொருட்கள்! சான்றோர் அறிவர் இதனை; இருப்பினும் அந்த வன்னி மரத்தையும், மடப்பள்ளியையும் தனக்குச் சான்று பகர சான்றோர் முன் கொண்டு வந்து நிறுத்தினாள் அடர்ந்த  கூந்தலை உடைய பத்தினிப்பெண்  ஒருத்தி!

“பொன்னி நதிக்கரையில் மணல்பாவை செய்து விளையாடினர் இரு மங்கையர்.  ‘இப்பாவை உனக்கு கணவனாம்’ என்று ஒருத்தி இன்னொருத்திக்குச் சொல்லி விட, வீடு திரும்பாது இரவு முச்சூடும்  சீறியெழுந்த கடலலையால் அந்த மணல்பாவைக்கு அழிதல் ஏதும் நேரிட்டு விடாதவாறு சுற்றிலும் ஆற்று மணல் கொணர்ந்துக் கொட்டி  அங்கேயே அம்மணல்பாவையை  தன் கணவணாக கருதிக் காத்து நின்றாள், வரி பொருந்திய அகன்ற அல்குலைக் கொண்டிருந்த ஒரு பத்தினைப் பெண்! 

“பெரும் புகழ் கொண்ட மன்னன் கரிகால் வளவனின் மகள் ஆதிமந்தி.  வஞ்சி நகரத்துத் தலைவனான ஆட்டனத்தியைக் கணவனாகக் கொண்டவள்.  இருவரும் புனலாடச் சென்ற பொழுது காவிரிப் பெருவெள்ளத்தில் ஆட்டனத்தி அடித்துச் செல்லப்பட்டான்.  ஆதிமந்தியோ பொன்னி நதிக் கரையோரம் எங்கும்  அலைந்துத் தேடி கணவனைக் காணாது கதற்னாள்.  ‘மலையொத்த தோளைக் கொண்ட எம் பெருமானே, எங்கே சென்றீர்?’  என்று   கூவிக் கூவி சோர்ந்து போனாள். அவள் கற்பின் மாண்பை அறிந்த கடல் அன்னை தன் அலைக்கரங்களால் ஆட்டனத்தியை ஏந்தி வந்து ஆதிமந்தி முன் நிறுத்தினாள்.  தொலைந்த  கணவனைக் கண்ட மகிழ்ச்சியில் அவனைத் தழுவிக்கொண்டு  பொன்னாலான பூங்கொடி போலத் திரும்பி வந்தாள், பத்தினிப்பெண் ஆதிமந்தி.

“மணல் மிகுந்த கடற்கரைச் சோலையிலே கல்லுருவாய் நின்று, வரும் மரங்கலங்கள் எல்லாம் நோக்கியிருந்து,   பொருளீட்டச் சென்ற கணவனின் திரும்பும் வருகையை எதிர்பார்த்து எதிர்பார்த்துக் காலமெல்லாம் காத்திருந்தாள் பத்தினிப் பெண் ஒருத்தி!  ஒருநாள்  கணவன் வர, தன்  கல்லுருவம் நீங்கி நல்லுருவம் பெற்று அவனுடன் கூடிக் களித்தாள் அந்த கள்ளி அழகி!

“கணவன் வேற்று நாட்டிற்கு சென்றிருக்குங்கால்,  மாற்றான் ஒருவன் தன்னைத் தொடர்ந்து காமுற்று நோக்குவதை உணர்ந்து நிறைமதியை ஒத்த தன் அழகிய முகத்தை தன் கற்புத் திறத்தால் குரங்கு முகம் ஆக்கிக் கொண்டாள் ஒருத்தி.  வேற்று நாட்டுக்குச் சென்ற கணவன் திரும்பி வரவும்,  தன் குரங்கு முகத்தைப் போக்கிக் கொண்டு இயல்பு  முகம் கொண்டாள்,   அந்த பூம்பாவை..
                                                                                                                                  
---  “இத்தகைய நுண்மனம் படைத்த கற்புடை மகளிர் பிறப்பெடுத்த பூம்புகார் நகரில் பிறந்தவள் நான்.  அந்த நகரில் பிறந்த யானும் ஒரு பத்தினியே யாமாகில், ஒருக்காலும் விட மாட்டேன்!  அரசனோடு சேர்த்து இம்மாமதுரை நகரையும் அழிப்பேன்!  என் சினம் தணியாச் செயல்களை நீ இப்போதே பார்பாயாக!”  என்று சூளுரைத்த கண்ணகி  பொங்கிப் புதுப்புனல் போலவான வேக சீற்றத்துடன் பாண்டியனின் அரண்மனை விட்டு வெளியேறினாள்.

“ஓ!  நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும், வானக் கடவுளரும், மாதவம் செய்தோரும்  கேட்டுக் கொள்ளுங்கள்!  நான் நேசித்த என் கணவனைக் கொலை செய்த  மன்னன் பாலும்,  அவன் ஆட்சி செய்த இந்த மண்ணின் பாலும் சீற்றம் கொண்டேனே தவிர வேறேதும் குற்றம் செய்திலேன்..” என்று மக்களுக்குத் தெளிவித்து,  தானும் தெளிந்து மாமதுரை நகரை மூன்று முறை வலம் வந்தாள்.  தேன் நிறைந்த மணமுடைய தெருவில் நின்று,  தன் இடப்பாகக் கொங்கையைத் திருகி எடுத்துச் சுழற்றி விட்டெறிந்தாள்!

அப்படி அவள் எறிந்த பொழுது நீல நிறமும், முறுக்கு கொண்ட நீள்சடையும், வெண் பற்களையும் கொண்டவனாய்  தான் பற்றியதை எரிக்கும் அக்னி தேவன் அவள் முன் தோன்றினான்.  தோன்றி, “போற்றுதலுக்குரிய பத்தினி தெய்வமே!  உனக்கு மிகவும் கொடுமை இழைத்த அந்தாளிலே இந்நகரைச் சூழ்ந்து எரியூட்டவதான ஏவலை ஏற்கனவே பெற்றுள்ளேன்.  ஆதலால் இந்நகரை எரியூட்டுவது என் வேலையாயிற்று.    அந்த எரியூட்டலில் ஈங்கு   யார் யார் பிழைப்பார்?”  என்று கேட்ப, “அறவோர்,  பசுக்கள்,, பத்தினிப் பெண்டிர், முதியோர்,  குழந்தைகள் இவர்களை கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்க!” என்று சினம் கொண்ட கண்ணகி ஏவ, நல்ல தேரையுடைய  பாண்டிய வேந்தனின் கூடல் நகரை புகையுடன் கூடிய தீப்பிழம்பு பற்றியது. 


 (தொடரும்)

படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.

Saturday, August 20, 2016

அழகிய தமிழ் மொழி இது!...

பகுதி--20


திருமணத்திற்கு முன்னர் ‘இதனை அடக்கியவரையே மாலையிட்டு மணப்போம்’  என்று கன்னியர் காளைகளை வளர்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

மொத்தம் ஏழு காளைகள்.  அதற்கேற்ப ஏழு கன்னியர்.  அவர்களுக்கான இயற்பெயர் இருப்பினும் இந்த குரவைக் கூத்திற்காக மாதுரி  அவர்களுக்கு வேறு பெயர்கள் இட்டாள்.  குரல்,  துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற பெயர்களை அவர்களுக்கு  சூட்டினாள்.  பின் ‘குரல்’ என்று  பெயர் கொண்டவளை மாயவன் என்றும் ‘இனி’ என்று பெயர் கொண்டவள் பலராமன் என்றும் ‘துத்த’ என்றவள் நப்பின்னையாகவும் கொண்டனர்.  மாயவன் என்று பெயரிட்டவளை அடுத்து  நப்பின்னையும் தாரமும் நின்றனர்.  கைக்கிளையை நப்பின்னைக்கு இடப்பக்கத்தே நிறுதினாள்.  தாரத்திற்கு  வலப்புறத்தே விளரியை நிறுத்தினாள்.   விளரிக்கும், உழைக்கும் அடுத்து பலராமன்.

அழகிய துளசி மாலையை எடுத்து நப்பின்னை மாயவனின் கழுத்தில் சூட்டினாள்.   உடனே கூத்து நூலில் சொல்லியிருக்கிறபடி  குரவைக் கூத்து  ஆரம்ப அசைவுகளுடன்  தொடங்கியது.

வட்டமாகக் கைகோர்த்து ஆடுவதற்கு ஏற்ப அவர்கள் நின்றதும், மாயவனாக குறிக்கப்பட்டவள், 'இனி' இடத்து நின்றவளைப் பார்த்து, “கொல்லைப்புனத்தில் குருத்து ஒசித்த மாயவனை முல்லையாகிய இனிய பண்ணில் பாடுவோம், வாருங்கள்!’ என்று மற்றவர்களையும் அழைத்தாள்.  ‘குரல்’ தானத்தில் இருந்தவள் மந்த சுரத்திலும், ‘இனி’ தானத்திலிருந்தவள் சம சுரத்திலும், ‘துத்த’ தானத்திலிருந்தவள் சம சுரத்திலும் பாட, பின்னையைக் குறித்து நின்றவள் தொடர்ந்து பாடினாள்: 

“கன்றையே குருந்தடியாகக்  கொண்டு  மரக்கனியை  உதிர்த்தவன்  கண்ணன்.  நமது கூத்து வழிப்பாட்டல் கவரப்பெற்று நமது பசுக்கூட்டத்திற்குள் அவன் வருவானாயின் அவன் ஊதும் கொன்றைக் குழலின் குழலோசைக் கேட்போம், தோழி!

“மேரு மலையை  மத்தாக  வாசுகிப்பாம்பைக் கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்த கண்ணனை வழிபடும் நம் மனம் குளிர நம் பசுக்கூட்டத்திர்குள் வருவானாயின் அவன் ஊதும் ஆம்பல் குழலின் இன்னிசையைக் கேட்போம் தோழி!

“குறுத்த மரத்தை ஒடித்த கண்ணன், நம் வழிபாட்டால் இங்கே பசுக்கூட்டத்தினுள் வருவானாயின் அவன் வாயினால் ஊதும் முல்லைக் குழலின்
இன்னிசையைக் கேட்போம்.  யமுனைத் துறைவன் கண்ணனின் அழகையும் அவனோடு கொண்டாட்டமாய் ஆடிய நப்பின்னையின் மேனி அழகையும் போற்றிப் பாடுவோம் யாம்!” என்றெல்லாம் ஆயர்குலத் தெய்வம் மாயக் கண்ணனை விதவிதமாகப் போற்றிப் பாடி  தீய நிமித்தங்களின் தீவினைகள் களைய அவர்கள் குரவைக் கூத்திட்டது வெகு நேரம் நீடித்தது.

கூத்து முடிந்ததும்  ஆயர்பாடி முதுமகள் மாதுரி மாலையும் சந்தனமும் ஏந்தி  வையைக் கரையில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் திருமால் அடியினைப் போற்றித் துதித்து வழிப்பட்டு வர ஆற்றங்கரை சென்றாள்.

ழியில் எதிர்ப்பட்ட ஒருத்தி ஊரினுள் தான் கேள்விப்பட்ட ஒன்றைச் சொல்ல, ஐயையோ பதட்டத்துடன் ஆயர்பாடி திரும்பி விரைந்தாள்.

ஆயர்பாடிக்குத் திரும்பியவளுக்கும் நிம்மதி இல்லை. அங்கே கண்ணகியைப்  பார்த்தவள் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றாள்.  பக்கத்தில் நின்ற ஐயையை நோக்கி கண்ணகி சொல்லிக் கொண்டிருந்தாள்: “மதுரைக்குச் சென்ற என்னவர் இன்னும் வரக்காணோமே!  உலைகளத்து  ஊதுலை என மூச்சு தகிக்கிறது. என்ன வென்று தெரியவில்லையே!  ஏதோ வஞ்சகம் நடந்து விட்டதென்று மனம் மயங்குகிறது..” 

அதற்கு  மேலும் ஐயையால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. “கண்ணகி! மனதைத் தேற்றிக் கொள். நான் வெளியே சென்ற பொழுது  வழியிலே எதிர்ப்பட்ட ஒருவள் சொல்லித் தெரிந்தது. மன்னவன் தேவியின் சிலம்பைக் கவர்ந்த கள்வன் எனத் தீர்மானித்து கோவலனை அரசக் காவலர்கள் கொன்று விட்டனர்..” என்று தயங்கித் தயங்கி அவள்  சொன்னதைக் கேட்டு கண்ணகி வெகுண்டு எழுந்தாள்    கரிய முகிலோடு சேர்ந்து நிலா நிலத்தினிலெ வீழ்ந்தாற் போல அலமந்து  நிற்க சக்தியற்று கால் தள்ளாடி தரையில் வீழ்ந்தாள்.   செக்கச்செவேலென்று கண்கள் சிவக்க அழுதாள்.  ‘எங்கிருக்கின்றீர்? .. எங்கிருக்கின்றீர்’ என்ற அவளது அவலக் கதறலுக்குப் பதில் கிடைக்காமல் சோர்ந்து மயங்கினாள்.

“தங்களோடு சேர்ந்து இன்புற்ற தம் கணவர் தீயினிலே மூழ்கவும் அவரோடு தாமும் சேர்ந்து தீயிலே மூழ்காது கைம்மை நோன்பினை மேற்கொண்டு துன்புறும் பெண்கள் போல பார்ப்போரெல்லாம் பழி தூற்றுமாறு பாண்டியன் செய்த மாபெறும் தவறுக்கு  நான் அவலம் கொண்டு அழுது அழிவேனோ?..  தம் கணவனைப் பறிகொடுத்ததால் ஏக்கமுற்று நீர்நிலைகள் பலவற்றில் நீராடி துயருறும் மகளிர் போல மாபாதகம் செய்த கொடுங்கோலன் பாண்டியன் என் கணவனுக்குத் தவறிழைக்க  அறக்கடவுள் என்னும் மடவோய் யான் அவலம் கொண்டு அழிந்து படவோ?..  நீதி தவறி செங்கோல் தாழ்ந்து பழியேற்ற பாண்டியன் தவறு செய்ய, இம்மையிலும் பழியேற்று மனம் நொந்து நான் அழுது அழிவேனோ?”  என்று பலவாறு அரற்றி அழுது தாங்கொண்ணா துயரத்தை தன் மென்தோளில் சுமந்து நிலைகலங்கிப் போன கண்ணகி, திடீரென்று வெகுண்டு எழுந்து திசைதோறும்  தன் தீட்சண்ய பார்வையில் சுடரேற்றி சூளுரைத்தாள்:  “காணுங்கள்.. எல்லோரும் காணுங்கள்..  தீமை நீங்கப் பரவிப் பாடி ஆட குரவைக்கூத்திற்கு வந்து குவிந்த ஆயர் மகளீரே,  அத்தனை பேரும் கேளுங்கள்..  காய்கதிர்ச் செல்வனே!..  கடல் சூழ் இவ்வுலகில் கணந்தோறும் நடப்பனவற்றை நீ அறிவாய்! ஆதலால், நீயே சொல்!  என் கணவன் கள்வனா?”  என்று உரத்த குரலில் நெஞ்சத்து ஓலத்தைக்    கேள்வியாக்கினாள் கண்ணகி.

“கருங்கயல்க் கண் மாதரசி!  நின் கணவன் கள்வன் அல்லன்;  அவனைக் கள்வன் என்று கூறிய இவ்வூரைத்  தீப்பற்றி உண்ணும்!”  என்று விண்ணிலிருந்து புறப்பட்ட ஒரு குரல் ஒலியைத் தெளிவாகக் கேட்ட அத்தனை பேரும் திகைத்தனர்.

‘நின் கணவன் கள்வன் அல்லன்!’  என்று விண்ணிலிருந்து வெளிப்பட்ட குரல் கேட்ட சடுதியில் அந்தக் குரலையே சத்தியத்திற்குக் கிடைத்த சக்தியாகக் கொண்டு ஆயர்பாடி நீங்கிய கண்ணகி தன்னிடமிருந்த ஒற்றைச் சிலம்பை கையிலேந்தி ஊருக்குள் புயல் புறப்பட்டதே போல நுழைந்தாள்.

“முறையற்ற அரசன் வாழும் ஊரில் வாழும் நிறையுடைப் பத்தினிப் பெண்டீர்காள்,  ஒன்று கேளுங்கள்!..  படாத துன்பம் பட்டேன். யாரும் உறாத துயரம் உற்றேன்!  வினையால் வநதுற்ற இத் துன்பம் கேளுங்கள்..” என்று மக்களிடம் முறையிடும் தோரணையில் கண்ணகி தீம்பிழம்பாய் ஒளிர்ந்தாள்.

“கள்வன் அல்லன் என் கணவன்!   என் காற்சிலம்புக்கு விலை கொடுக்காது அதைக் கைக்கொள்ளும் பொருட்டு கள்வன் என்று பாவிகள் பழி சுமத்திக் கொன்றாரே!  தம் கணவரால் நேசிக்கப்படும் மாதர் கண் முன்னே என் நெஞ்சு பூராவும் நீக்கமற நிறைந்துள்ள என் கணவனைக் காண்பேன்!..  ஈதொரு புதுமை!  என் காதல் கணவனை எய்போதும் போல் இப்போதும் கண்டு அவர் சொல்லும் தீதற்ற நல்லுரை கேட்பேன்!.. ஈதொரு சூளுரை! அவ்வறு அவர் கூறும் நல்லுரை கேளேன் எனில் இவள் பிறர் வருந்தும் செயலைச் செய்தவள் என்றும்  இவள் ஒரு கள்வனின் மனைவி என்றும் என்னை இகழுங்கள்!” என்று சூளுரைத்துக் கதறும் கண்ணகியைக் கண்டு பரிதாபித்து மதுரை மக்கள் நெகிழ்ந்தனர். 

களைய முடியாத துன்பத்தை இப்பெண்ணுக்கு அளித்ததினால், எக்காலத்தும் வளையாத மன்னனின் செங்கோல் வளைந்ததே,  இதற்கு யார் காரணம்?  மன்னர் மன்னன் மதிக்குடை வாள் வேந்தன் தென்னவன் கொற்றம் சிதைந்ததே இதற்கு யாது காரணம்?..   தென்னவனின் தண்குடை நிழலா வெம்மை விளைவித்தது?..  இதற்கு என்ன காரணம்?  செம்பொன்னாலான   ஒற்றைச் சிலம்பொன்றைக் கையில் ஏந்தி நம் பொருட்டால் வம்பப் பெருந்தெய்வம் ஒன்று  இங்கு வந்துள்ளதே!..   இது எதன் பொருட்டு?..  இனி இம்மாநகருக்கு என்ன நேருமோ?”  என்று மக்கள் தம் அரசனை பழிகூறும் நிலையாயிற்று..    

அந்த சமயத்தில் சிலர் கண்ணகியை அழைத்துச் சென்று கோவலனைக் காட்ட, விதிவசத்தால் தன்னைக் காண்பவளைத் தான் காண முடியாமல் போனது.  மங்கிய மாலை நேரம் அது.  கொஞ்சம் கொஞ்சமாக ஒளி குன்றிக் கொண்டு வரும் அந்த நேரத்தில் பூக்கள் உதிர்ந்த கொடி போல கணவன் மேல் விழுந்தாள் கண்ணகி. அழுது அரற்றினாள்.  “உம் பொன் போன்ற மேனி புழுதியில் கிடக்கிறதே!  இக்கொலைக்குக் காரணம் முற்பிறவியில் நீ செய்த தீவினை தான் என்று உரையீரோ?..  பார் தூற்ற பாண்டியன் பழியேற்க இது தீவினையின் செயல் தான் என்று உரைக்க மாட்டீர்களா?..

“மகளிரும் உள்ளாரோ?.. இம்மாநகரில் மகளிரும் உள்ளாரோ?..  தன் கணவனுக்கு நேரிட்டத் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் மகளிரும் இங்கு உள்ளாரோ?..  சான்றோரும் உள்ளனரோ?  சான்றோரும் உள்ளனரோ? மாற்றார் ஈன்ற குழந்தையை எடுத்துத் தான் வளர்க்கும் சான்றோரும் உள்ளனரோ?..  தெய்வமும் இங்கு இருக்கிறதா?.. தெய்வமும் இந்த நகரில் இருக்கிறதா?.. கைவாளால் என் கணவன் வெட்டுப்பட அறம் தவறிய பாண்டியனின் மதுரை மாநகரில் தெய்வமும் உள்ளதோ?  தெய்வமும் உள்ளதோ?”  என்று பலவாறாக துயரத்தில் தோய்ந்து மனம் வெதும்பி மருகினாள் கண்ணகி.

திடீரென்று ஏதோ சக்தியின் பிடியில் சிக்கிக் கொண்டதே போன்று தன் கணவனின் மார்போடு தன் மார்பு பொருந்த தழுவிக் கொண்டாள் கண்ணகி.  அவள் உடல் பட்ட  அந்த வினாடியில் உயிர் பெற்றெழுந்தான் கோவலன்.   ‘நின் நிறைமதி வான்முகம் கன்றிப் போய்விட்டதே..” என்று அவள் முகம் பக்கம் கை நீட்டி வழியும் கண்ணீரைத் துடைத்து விட்டான்.  கண்ணகியியோ  ஆவேசம் வந்தவள் போல நிலத்திலே விழுந்து தன் வளையல் பூண்ட கைகளால் அவன் திருவடிகளை உன்னைப் பிரியேன் என்பது போலப் பற்றிக் கொண்டாள். 

அந்த சமயத்தில் தான் அது நடந்தது.  பழுது ஒழிந்த உடலை விட்டு நீங்கி எழுந்தான் கோவலன்.   “எழில் பொங்கும் கண்களை உடையவளே!  நீ இங்கு இருப்பாயாக!” என்று கண்ணகியிடம் அன்பு பொங்கக்  கூறிவிட்டு தேவர் கூட்டத்தில் கலந்த அவனும் ஒரு தேவனாய் விண்ணுலகு ஏகி கண்ணகியைப் பிரிந்தான்.

“இது என்ன மாயமோ?..  மற்று யாதோ?..  என் உள்ளத்தை மயக்கியது ஒரு தெய்வமோ? இனி எங்கு சென்று என் கணவனைத் தேடுவேன்?..  என் கணவனை யான் கூடுதல் எளிதாயினும்  பொங்கும் என் சினம் தணிந்தாலன்றி அவரைக் கூடேன்..  அந்த சினம் தணிதற்கே தீவேநதனைக் கண்டு ‘இக் கொலைக்குரிய காரணம் யாது என்று அவனை யானே கேட்பேன்!..”  என்று வெகுண்டெழுந்தாள்.  சற்று  நின்றாள்..  அன்றொரு நாள்     தன்னூரில் தான் கண்ட தீய கனவு பற்றி நினைத்தாள்.   அவள் கண்களிலிருந்து நீர்  உடைந்த அணை வெள்ளமாயிற்று..   ஒரு வினாடி வெறித்த பார்வையில் நின்றவள்,  விடுவிடுவென்று  பாண்டியனின் அரண்மனை நோக்கிச் சென்றாள்.  அரண்மனை வாயில் முன்  புயலே புறப்பட்டு வந்த்து போன்ற உருக்கொண்டு நின்றாள்.

(தொடரும்)

படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி. 
  

Saturday, August 13, 2016

அழகிய தமிழ் மொழி இது!...

  பகுதி—19

விதி கடைத்தெருவில் கோவலனை அதிக தூரம்  கூட நடக்க வைக்கவில்லை.

கடைத்தெருவை அடைத்துக் கொண்டு கூட்டமாக பலர் வருவதை கோவலன்  கண்டான்.  சுமார்  ஐம்பது  பேர்கள் இருக்கும்.  நெருங்கிப் பார்த்த பொழுது பொற்கொல்லர்கள் என்று தெரிந்தது.  உருக்குத் தட்டார்களும், நுண்வினைக் கொல்லர்களுமாய் வீதியை அடைத்துக் கொண்டு நெருக்கமாக தங்களுக்குள் சளசளத்தபடி அவர்கள் வர  முன் வரிசையில் ஒருவன்  வித்தியாசமான தோற்றத்தில் வந்தான்.


கையில் கொறடுடன் விலங்கு நடை கொண்டிருந்தான். அவன் அணிந்திருந்த மேலாடை வழக்கமாக மன்னர்கள் பரிசலாகப் பாராட்டி அளிப்பது  என்று வெளிப்படையாகத் தெரிந்தது.   அந்த அடையாளாம் ஒன்றே கோவலனுக்குப் போதுமானதாக இருந்தது.  இவன் பாண்டியனால் சிறப்புச் செய்யும் அளவுக்கு அரண்மனையில் செல்வாக்கு கொண்டவன் போலும் என்ற முடிவுக்கு வந்தான் கோவலன்.

உடனே கோவலன் விரைந்து அவனை நெருங்கி, “சிலம்பு ஒன்று என்னிடம் உள்ளது.  மன்னவன் தேவிக்கு பொருத்தமானது என்கிற அளவில் சிறப்பானது.  உன்னால் அதை விலை மதிப்பிடுவதற்கு முடியுமா?” என்று கேட்டான்.

“அடியேன்  அறிந்திலேன்.  இருப்பினும் வேந்தர்க்கு மணிமுடி போன்ற பொன் அணிகலன்களைச் செய்வதில் வல்லவனாவேன்” என்று அந்த கூற்றத் தூதன் கை தொழுது சொன்னான்.

கோவலன்  தன் மடிக்கட்டை அவிழ்த்து கண்ணகி தந்திருந்த காற்சிலம்பை வெளியே எடுத்து அவனிடம் கொடுத்தான்.  மாணிக்கமும் வைரமும் வரிசை கொண்டு இழைக்கப்பட மணிக்குழிழ்கள் கொண்டதாய் பசும்பொன்னில் அழகு கொண்டு மிளிர்ந்தது அந்த சித்திரச் சிலம்பு.  

லேசாக மேலோட்டமாகப் பார்க்கையிலேயே அந்தச் சிலம்பின் விலையில்லா மதிப்பு புரிந்து போயிற்று அந்தப் பாதகனுக்கு.  அதை விட சோகம்  என்னவென்றால் சமீபத்தில் இந்த கபட பொற்கொல்லன் அரண்மனையில் திருடி தனதாக்கிக் கொண்ட பாண்டிமா தேவியின் சிலம்புகளில் ஒன்றையே அச்சாக  இந்தச் சித்திர சிலம்பு ஒத்திருந்தது தான் இந்தச் சிலம்பின் மீதான அவனது ஈடுபாட்டை அதிகமாக்கியது.

“கோப்பெருந்தேவிக்கு அல்லாது வேறு எவரும் இந்தச் சிலம்பை விலை கொடுத்து வாங்கி உரிமையாக்கிக் கொள்ள தகுதி இல்லை..” என்றவன் “நான் இந்த சிலம்பின் சிறப்பை வேந்தருக்கு விளம்பி திரும்பி வரும் வரை பக்கத்தில் இருக்கும் என் சிறு குடிலில் தங்கி இருங்கள்..” என்றான். கோவலனும் அவன் காட்டிய குடிலுக்கு அருகிலிருந்த தேவகோட்டத்தின்  உள்மதில் பக்கம் சென்று காத்திருந்தான்.

அந்த சூதுமதியாளனின் திட்டமே வேறு.   பாண்டிமாதேவியின் பொற்சிலம்பைத் தான் திருடி வைத்துள்ள இரகசியம் காப்பாற்றப்பட வேண்டுமெனில்  அதற்கு வெளிநாட்டிலிருந்து வந்துள்ள இந்த இளைஞன் இரையாக வேண்டுமென்று திட்டம் தீட்டுகிறான் அவன். காணாமல் போன தேவியின் அரச குலச் சிலம்பை கோவலனிடமிருந்து கைப்பற்றினேன் என்று கதையை மாற்றி விட்டால் போச்சு என்று வெகு சுலபமாக கணக்கு போடுகிறான் அந்த மாபாதகன்.

விதி தன் சிலந்தி வலையை வெகு அழகாகத் தான்   பின்னுகிறது.

அரண்மனையிலோ பாண்டிய மன்னன் ஆடல் பாடல் கேளிக்கையில் சொக்கிப் போகிறான்.  கூடல் மாநகரத்து நாடக மகளிரினரின்  ஆடல்  அசங்கல்களும், பாடல் நேர்த்தியும், பண்ணின் சுருதி ஏற்ற இறக்கங்களும், யாழிசையின் சொக்கலும் மன்னனை இந்திர லோகத்திற்கே இழுத்துச் சென்ற நேரம் அது.  மன்னன் தன்னையே மறந்து நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருக்க,  பாண்டிமாதேவியோ ஆடல் மகளிரிடம் மன்னனின் கவனம் பதிந்தது என்று தவறாக நினைத்து மாமன்னனிடம் ஊடல் கொண்டவள்  உண்மைக் காரணம் மறைத்து  தலைநோய் தன்னை வருத்துவதாக சொல்லி   பாதியில் எழுந்து அந்தப்புரம் விரைகிறாள்.  

உடனே அரசனும் தன் அமைச்சர் குழுவிடமிருந்து விடுபட்டு  செவ்வரி படர்ந்த ஏவல் கண்ணழகிகள் சிலருடன் கோப்பெருந்தேவியின் அந்தப்புறம் நோக்கி விரைகின்ற நேரத்து மிகச் சரியாக  வாயில் புறத்தில் அந்த கபட பொற்கொல்லன் மாமன்னனின் காலடிகளில் விழுகிறான்.  

வாய்பொத்தி பயம் வெளிக்காட்டி “அரசே!  கன்னக்கோல் இன்றியும், கவைக்கோல் இன்றியும் தன் மந்திரம் ஒன்றையே துணையாகக் கொண்டு காவலர்களை மயக்கி அரசியாரின் சிலம்பைக் கவர்ந்தவன், என் சின்னச் சிறுகுடிலின் புறத்தே இருக்கிறான்..” என்று பவ்யமாகச் சொன்னான்.

மன்னனின் தீவினை அவனது வாய்மொழியாகிறது.  அவனிருந்த அசந்தர்ப்ப சூழ்நிலையில் பொற்கொல்லனின் சொற்களை ஆராயாமல், “தாழ்பூங்கோதை அரச மாதேவியின் சிலம்பு இவன் குறிப்பிடும் கள்வன் வசம் இருக்குமாயின் கொன்ற சிலம்பு கொணர்க ஈங்கென..” என்று  வாய் தவறிய வார்த்தைகள் அரசனிடமிருந்து  வெளிப்படுகின்றன.  ‘அவனைக் கொன்று சிலம்பை இங்கு கொண்டு வாருங்கள்’  என்ற அரசனின் ஆணையைப் பெற்ற காவலர் பொற்கொல்லனுடன் விரைந்து அவன் காட்டிய கோவலனைச் சூழ்கின்றனர். 

பொற்கொல்லன் கோவலனைப் பார்த்து, “அரசனின் படைவீரார்கள் உன்னிடமுள்ள சிலம்பைப் பார்க்க விரும்புகிறார்கள்..” எனறு அவனிடம் கைச்சிலம்பைக் கேட்டு வாங்குகிறான்.  சிலம்புடன் வீரர்களை தனி இடத்திற்கு அழைத்துச் செனறு  அரசியாரின் சிலம்பும் இந்தச் சிலம்பும் எவ்வகைகளிலெலாம் ஒத்து இருக்கிறது என்பதை அவர்களுக்கு விளக்குகிறான்.

விதியின் கைகளே வலுவிழந்து லேசாக நெகிழ்வது போல காவல் வீரர்களில்  ஒருவன், "இவன் தோற்றமும் உடல் அடை யாளங்ளையும் பார்த்தால் இவன் கள்வனாகவும் தெரியவில்லை ;  கொலைபடு மகன் இவனுமல்லன்” என்கிறான்!  அவன் சொல்வதைக் கேட்டு சட்டென்று கபட பொற்கொல்லனின் முகம் மாறிப்போனாலும், அந்த வீரர்களுக்கு களவு நூலின் அத்தியாயங்களை விவரமாக எடுத்தோதுகிறான்.

“மந்திரம், தெய்வம், மருந்து, நிமித்தம், தந்திரம் என்ற ஐந்தோடு இடம், காலம், கல்வி என்ற மூன்றும் சேர்கின்றது. ஆக, எட்டிலும் கொண்டுள்ள தங்கள் திறமையை ஆற்றல் மிக்க படைக்கலன்களாக இப்படிப்பட்ட கள்வர் கொண்டுள்ளனர்.  "இவனை மட்டும் தப்ப விட்டு விடுவீர்கள் ஆயின் அரசரின் கடுந்தண்டனையிலிருந்து நீங்கள் தப்ப மாட்டீர்கள்..” என்று காவலர்களை எச்சரிப்பது போலச் சொன்னான் பொற்கொல்லன். அதோடு மட்டுமில்லை, தான் சொல்வதை நியாயப்படுத்தும் விதத்தில்  கதை போலவான சில நிகழ்வுகளையும் சொன்னான்.

பொற்கொல்லனின் சாமர்த்தியமான பேச்சு காவலர்களை மயக்கியது. வேலேந்தி அங்கிருந்த காவலன் ஒருவன் தன் அனுபவம் ஒன்றைச் சொன்னான்: “முன்பு ஒரு நாள் ஒரு மழைக்காலத்து இரவில் நீல உடையுடன், கையில் உளியுடன் கள்வன் ஒருவனைப் பார்த்தவுடன் உடை வளினை உருவினேன்.   ஆனால் அவனோ அசரவில்லை. நொடியில் என் மீது பாய்ந்து  என் வாளை அவன் பறித்தது தான் தெரியும்.  அதற்குப் பிறகு இன்று வரை அவன் என் கண்ணில் படவே இல்லை!  இந்த மாதிரியான கள்வர்கள் மிகவும் சாமர்த்தியசாலிகள்.  இவனைத் தண்டிக்காமல் விட்டால் அரசர் நம்மைத் தான் தண்டிப்பான்.  ஆக அடுத்து என்ன செய்வது என்பதை உடனே சொல்லுங்கள்..” என்றான்.

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் தான் அது நடந்தது.  

கல்லா களிமகனை ஒத்த காவல்வீரன் ஒருவனின் கைவாள்  கோவலனின் தலை நோக்கி இறங்கியது.  என்ன நடக்கிறது என்று கோவலன் சுதாரிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்தது.   குருதி கொப்பளித்து நாலாபுறமும் சிதறியது.  மண்ணக மடந்தை வான்துயர் கொள்ள, பாண்டியனின் வளையா செங்கோல் வளைந்தது.  இதற்காகத் தான் காத்திருந்தது போல கோவலனின் பண்டை ஊழ்வினை வலிந்து செயல்பட கண்ணகியின் கணவன் மண்ணில் சாய்ந்தான்.

பொழுது புலர்ந்தது.  

பாண்டிய மன்னனின் அரண்மனையில் பள்ளியெழுச்சி முரசம் ‘திம்திம்’ என்று முழங்கியது. 

மாதுரி எழுந்து விட்டாள்.  எழுந்தவுடனேயே அவளுக்கு இன்று அரண்மனையில் நெய்ம் முறை என்பது நினைவுக்கு வந்தது.   அரண்மனைக்கு நெய் கொண்டு செல்ல வேண்டும் என்ற அந்த நினைவின் உந்ததில் தன் மகள் ஐயையைக் கூவி அழைத்து தயிர் கடையும் மத்தையும் கயிற்றையும் எடுத்து வரச்சொல்லி தயிர் தாழியிடத்தே வந்தாள்.

தயிர்த் தாழிகளைப் பார்த்த பொழுது நேற்று உறையிட்ட பால் தோயாதிருந்தது தெரிந்தது.  மாட்டுக்  கொட்டிலில் பார்த்தால் ஆணேற்றின் கண்களில் நீர் வழிகிறது.  

மாதுரிக்கு திடுக்கென்றிருந்தது.  கொஞ்சம் கொஞ்சமாக இனம்புரியாத அச்சம் அவளைப் பற்றிக் கொண்டது.  ஏதோ தீது நேருவதற்கு  இந்த தீய நிமித்தங்கள் அறிகுறியோ என்று உள்ளுணர்வு பயமுறுத்தியது.  நெஞ்சம் உலைக்களமாயிற்று.

உறியிலே முதல் நாள் வைத்த வெண்ணையை எடுத்து உருக்க முயற்சித்த பொழுது அது உருகவில்லை.  கிடையில் ஆட்டுக்குட்டிகளோ துள்ளி விளையாடமல்  சோர்வுற்றிருந்தன.  இந்த நிகழ்வுகள் அவளை இன்னும் பயப்படுத்தின.

திடீரென்று எழுந்த பசுக்களின் நீண்ட அ..ம்..மாவென்ற நடுக்கும் குரல் அவளை நடுக்கியது.  தொடர்ந்து அவற்றின் கழுத்து மணி அறுந்து தரையில் விழுந்தன.  ஏதோ தீமை நிகழப்போகிறது என்பது மாதுரிக்கு நிச்சயமாயிற்ரறு.


“ஐயை....” என்று பெருங்குரலெடுத்து  மகளை  அழைத்தாள்.  வந்தவளுக்கு நிகழந்த தீய நிமித்தங்களைச் சொன்னாள்.  “இருந்தாலும் பயப்படாதே...”என்றாள். “ஆயர்குலத்து ரட்சகன் கண்ணபிரான் இருக்கிறான், கலங்காதே..” என்று மகளுக்கு நம்பிக்கை ஊட்டினாள். “நற்குலத்து நங்கை கண்ணகியும் நல்லவேளை நம்முடனேயே இருக்கிறாள்.  ஒன்று செய்வோம்.  நம் பெருமான் கண்ணபிரான் தன் தமையன் பலராமனோடு  ஆயர்பாடி எருமன்றத்தில் விளையாடிய  பாலசரித நாடகங்களைப் பற்றி உனக்குச் சொல்லியிருக்கிறேன்.   வேல் நெடுங்கண் நப்பின்னையோடு குழல் அழகன் ஆடிய குரவைக்கூத்தினை நாம் ஆடுவோம்.  கரவைப் பசுக்களின், கன்றுகளின் துயர் நீங்குக என்றே குரவையாடி வேண்டுவோம். ..” என்று மாதுரி உணர்வு மல்க மகளிடம் சொன்னாள்.

(தொடரும்)

படங்கள் உதவிய  நண்பர்களுக்கு நன்றி.

Wednesday, August 3, 2016

அழகிய தமிழ் மொழி இது!...

பகுதி-- 18


கோவலன் தன் வணிக நிமித்தமாக மாமதுரையின் உள்பகுதி கடைவீதிகளில் அலைந்து திரிந்தாலும் போகுமிடமெல்லாம் காதல் மனைவி கண்ணகியையும் அவன் கூடக் கூட்டிச் செல்ல வேண்டாமென்று கவுந்தி அடிகள் அபிப்ராயப்பட்டார்.    நடந்து நடந்து நடை சோர்ந்திருந்த அந்த மெல்லியலாளை தகுந்த பாதுகாப்புள்ள ஒரு இடத்தில் விட்டு விட்டுச் செல்வதே மேல் என்பதே அவர் எண்ணமாக இருந்தது. அப்படிப் பாதுகாப்பான நபர் யார் என்று யோசனையில்  ஆழ்ந்த பொழுது தான் ஆயர் குல மூதாட்டி மாதுரி, கவுந்தி அடிகளை வணங்கிச் செல்வதற்காக அங்கு வந்தாள்.

அறவோர் தங்கியிருந்த அந்த புறஞ்சேரியில் பூப்போலும் கண்ணுடைய இயக்கி என்னும் தெய்வம் எழுந்தருளியிருந்தது. அந்தத் தெய்வம் தொழுது பால்சோறு படைத்துத் திரும்பிய மாதுரி, கவுந்தி அடிகளாரையும் வணங்கி வருவதற்காக வந்திருந்தாள். கண்ணகியை யாரிடம் அடைக்கலமாக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தவருக்கு மாதுரி அங்கு வந்த்து, தெய்வமே தகுந்த ஆளை அங்கு கொண்டு வந்து சேர்த்திருப்பதைப் போலிருந்தது. நமக்கோ, ஊழ்வினை தன் செயல்பாட்டிற்காக கோவலனைச் சார்ந்து போடும் பெரிய வட்டத்தில் இப்பொழுது இன்னொருவரையும் கொண்டு வந்து சேர்த்த உணர்வு.


"மாதுரி! கேள்..” என்று மாதிரிக்கு புரியும் படி சொல்ல ஆரம்பித்தார் கவுந்தி அடிகள். கண்ணகியைக் காட்டி, “இந்தப் பெண்ணின் கணவனின் தந்தை யார் என்று தெரிந்தாலே ஒரு பெரும் வணிகக் கூட்டம் தம் வீட்டு விருந்தினாரக இவர்களை உபசரிக்கத் தயாராக இம்மாதுரை நகரத்தில் உள்ளனர். அப்படி செல்வமுடையார் இல்லத்துக்கு இவர்கள் செல்லும் வரையில் இடைக்குலப் பெண்ணான உன்னிடம் இவர்களை அடைக்கலம் அளிக்கிறேன்..” என்றார். “நீயே இவளுக்குத் தோழியும் செவிலித் தாயுமாகும். இந்த அழகிய பெண்ணை நன்னீராட்டி, கண்களுக்கு மை தீட்டி, கூந்தலில் மலர்கள் சூட்டி ஆடைகள் அளித்து அடைக்கலம் அளிப்பாயாக!” என்று அறிவுறுதினார்.


அடைக்கலத்தின் மேன்மையை தெரிவிக்கும் கதை ஒன்றைச் சொல்ல வேண்டுமென்று இந்த இடத்தில் இளங்கோவிற்கு ஆசை. கவுந்தி அடிகள் மூலமாக அந்தக் கதையைச் சொல்கிறார். “சாயலன் என்பான் பட்டினி நோன்பிருக்கும் நோன்பிகளுக்கு உணவு அளிக்கும் கடைமையைச் செய்து வந்தான். ஒரு நாள் தவத்தில் சிறந்த ஒருவருக்கு உணவு அளிக்கும் பேறு பெற்ற சாயலனின் மனைவி தன் தீவினை அகல அவரை வேண்டினாள். அந்த சமயத்தில் குரங்கொன்று ஒதுங்கி அந்த மனையினுள் புகுந்தது. அந்த முனிவரின் பாதம் வணங்கி அவர் உண்டு மீதமிருந்த எச்சில் சோற்றையும் ஊற்றிய நீரையும் உண்டு கொடிய பசி தீர்ந்த மகிழ்ச்சியில் அந்த முனிவரின் முகம் பார்த்தது. அந்த முனிவன் கனிந்த பார்வையுடன் சாயலனின் மனைவியை நோக்கி, “சிறந்த இல்லறத்தாளே! இக்குரங்கை உன் மக்களைக் காப்பது போலக் காப்பாயாக!” என்று சொல்லி விட்டுச் சென்றார்.


அந்த தவத்தோன் சொன்னபடியே சாயலன் மனைவியும் அந்தக் குரங்கை எந்தத் துன்பமும் அதற்கு நேரிடாதவாறு காப்பாற்றி வந்தாள். காலம் கழிய அந்த குரங்கு இறந்த பின்பும் வழக்கமாக யாருக்காவது தானம் செய்யுங்கால் ஒரு பகுதியை தனியாக ஒதுக்கி, அந்த குரங்கின் மேம்பட்ட பிறப்பிற்காக தானம் செய்து வந்தாள். அவள் செய்த தானப்பயனால் அந்தக் குரங்கு வாரணாசி நகரத்து உத்தம கெளத்தன் என்பானுக்கு ஒரே மகனாகப் பிறந்து தான தருமங்களில் சிறந்து முப்பத்திரண்டு ஆண்டுகள் போற்றத்தக்க வாழ்ந்த வாழ்க்கைக்குப் பின் தேவ வடிவம் பெற்றது. அவன் பெற்ற தேவ வடிவும், சாயலன் மனைவியின் தான தருமத்தால் விளைந்தது என்பதைத் தெரியப்படுத்துவதே போன்று முற்பிறப்பில் கொண்டிருந்த குரங்கின் கை போன்று சிறிய கையை ஒரு பக்கம் கொண்டிருந்தது. வறியவர்களுக்கு தானம் செய்வதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த சாயலனும் அவன் மனைவியும் விண்ணுலகம் எய்தினர். ஒப்பற்ற தான தரும அறநெறிகளை மேற்கொண்டோர் அடைக்கலப் பெருமைகளையும் அறிவர். இந்த தெய்வ மகள் கண்ணகியை இக்கணமே அடைக்கலமாகக் கொள்வாயாக...” என்று கவுந்தி அடிகள் கதை வடிவில் சாயலன் மனைவிக்கு அடைக்கலப் பெருமைகளாய் உணர்த்தினார்.


ஞாயிறு மேற்கு திசையில் மறையும் வேளையில் தான் அடைக்கலமாகக் கொண்ட கோவலன், கண்ணகியோடு மாதரி தன் குடியிருப்பு நோக்கிப் புறப்பட்டாள்.


கொட்டிலில் தாம் விட்டு விட்டு வந்திருந்த கண்றுகளின் நினைப்போடு வீடு திரும்பும் பசுக்களும்,  ஆட்டுக்குட்டியுடன் கோடறியும் உறியுமாக தோளில் சுமந்து வரும் இடையரும்,  அணிந்திருக்கும் வளையல் கலகலக்க அவரைச் சூழ்ந்து வரும் இடைச்சியரும், காவற்காடும், அகழியும், விற்பொறிகளும், கறுத்த விரல் கொண்ட  கருங்குரங்கு தோற்றத்தில் பொறிகளும், கல்லினை வீசும் கவண்களும்,  எண்ணெய் நிரம்பிய   மிடாக்களும்,  செம்பு—இரும்பு காய்ச்சி உருக்குவதற்கான உலைகளும்,  கழுத்தை நெறித்து முறுக்கும் சங்கிலிகளும், மதிலேற உபயோகிக்கும் கவறுபட்ட கொம்புகளும், அம்புக் கட்டுகளும்,  மறைந்திருந்திருந்து போரிடுவதற்கு வாகான ஏவறைகளும்,  மதிலின் உச்சி பற்றி ஏற்வோர் கைகளை நெறிக்கும் ஊசிப்பொறிகளும், கதவின் உட்பகுதியில் குறுக்குச் சட்டம் போன்று பொருத்தப்படும் கணையமும், களிறுப் பொறி—புலிப்பொறி போன்ற ஏகப்பட்ட பொறிவகைகளும் நிரம்பப்பெற்ற  நீண்ட நெடிய கோட்டை வளைவுகளின் மீது பாண்டியரின் கயல் சின்னம் பொறித்த கொடிகள் காற்றில் அசைந்து  கொண்டிருந்தன. அத்தகைய மதில் வாயில் ஒன்றைக் கடந்து ஆயர்குலப் பெண் மாதுரி தான் அடைக்களமாகப் பெற்ற  கண்ணகி—கோவலனுடன் தன் வீட்டை நெருங்கினாள்.


கண்ணகி தன் வீட்டிற்கு வந்ததில் ஏகப்பட்ட சந்தோஷம் மாதுரிக்கு.  ஆய்சியர் வாழ்வு வாழும் தன் வீடு கண்ணகிக்கு அசெளகரியமாய் இருக்கும் என்ற எண்ணத்தில், வேலி சூழ்ந்த பந்தலையும் கொண்ட ஒரு சிறிய அழகிய வீட்டை அந்த இளம் தம்பதிகளீன் தங்கலுக்காக ஏற்பாடு  பண்ணினாள்.  ஆயர்க்லப் பெண்கள் சிலரையும் கூட்டுவித்து புது நன்னீரில் கண்ணகி நீராடும்படிச் செய்தாள்.  இந்த இடத்திற்கு கண்ணகி புதுசு என்பதினால் தன் மகள் ஐயையை கண்ணகியின் சிறுசிறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஏற்பாடு செய்தாள்.  ஆயர்குல மகளிர் சிலரை அழைத்து கண்ணகியின் சமையல் தேவைக்காக புதுப் பாத்திரங்களை வரவழைத்தாள்.  அவர்கள் பாத்திரங்களோடு மட்டுமல்லாது  காய்கறிகளையும் பழங்களையும் கொண்டு வந்தனர்.   அவை என்னன்ன என்று பட்டியலிடவும் செய்கிறார் இளங்கோ.


பூவாது காய்க்கும் திரண்ட சதைப்பிடிப்பு கொண்ட முதிர்ந்த பலாக்காய், வரிகளிட்ட வெள்ளரிக்காய், மாதுளங்காய், மாங்கனி, வாழைக்கனி, செந்நெல், அரிசி,  தம் குலத்திற்குரிய பால், நெய் இவற்றுடன் சென்று “வளையல் அணிந்த அழகான பெண்ணே! இவற்றைக் கொள்வாயாக!” என்று கொடுத்தனர். 

புன்முறுவலுடன் அவற்றை வாங்கிக் கொண்ட கண்ணகி, அரிவாள்மனை கொண்டு காய்களை அரிந்தாள். அவள் விரல்கள் சிவந்தன; வியர்த்தது முகம்;  சிவந்தன கண்கள். உதவிக்கு சமையல் அறையில் ஐயை..  வைக்கோல் உதவியுடன் தீ மூட்டி ஐயையுடன் சேர்ந்து தன் காதல் கணவனுக்கு ஏற்ற உணவை சமைத்து முடித்தாள்.


 தொழிலில் வல்லவரால், வெண்மையான பனை ஓலையில் முடையப்பட்ட தடுக்கு அது.  அதில் கோவலனை அமர்த்த வைத்து புதிய மண் பாத்திரத்து நீர் கொண்டு தன் கணவனின் கால்களை தன் மலர் விரல் அழுந்த கழுவித் துடைத்து வணங்கினாள் கண்ணகி.  நிலத்தில் நீர் தெளித்து மெழுகினாள்.  குமரி வாழையின் குருத்தை மெழுகிய இடத்தில் பரப்பினாள்.  அதில் உணவை இட்டு, “அடிகளே! இப்போது அமுதை உண்பீராக..” என்று அன்புடன்  கணவனைப் பார்த்துச் சொன்னாள்.


அரிய வேதததில் அரசர்களுக்கு அடுத்தபடியான வணிகர்க்கு உணவு உட்கொள்ளத் தொடங்குவதற்கு முன்பு என்ன நியமனம் கூறப்பட்டிருக்கிறோ அந்த கடனைச் செய்த பின் உணவை உட்கொள்ள ஆரம்பித்தான் கோவலன்.  'இந்த ஆயர்பாடியில் கோவலன் உணவு உட்கொள்வதைப் பார்த்ததும், அந்த ஆயர்பாடியில் உணவு உண்ட யசோதை பெற்றெடுத்தச் செல்வன் கோபாலன் தானோ' என்ற எண்ணம் மாதுரிக்கு வந்ததாம்.  அதைத் தொடர்ந்து இந்த கோபாலனுக்கு உணவு படைக்கும் வளைக்கரம் கொண்ட இப்பெண் கண்ணகி, முன்பு தன் குலத்தில் தோன்றிய நப்பின்னையோ’ என்று வியப்பு மேலிட்டதாம்.


விருந்து முடிந்தபின் கண்ணகி கோவலனுக்கு வெற்றிலை—பாக்கு தருகிறாள். அவளைப் பார்த்து நெகிழ்ந்த கோவலன், “பருக்கைக் கற்கள் நிறைந்த பாதையிலே உன் மென்மையான பாதம் பதிந்து நீ பட்ட துன்பத்தை என் தாய்-தந்தையர் அறிந்து எத்தகைய துன்பத்தை அடைந்தனரோ?” என்று வருந்துகிறான். “நான் இவ்விடத்தில் இருப்பதே கனவோ?.. இல்லை, இது நிஜம் தான் எனில் இதுவும் நான் முற்பிறப்பில் செய்த தீவினையின் இன்னும் ஒரு காட்சிப்படுத்துதலோ?..  கனவையும் நிஜத்தையும் பிரித்துப் பார்க்க வல்ல நினைவு சக்தியை நான் இப்போது கொண்டிலேன்... என்  மனம் மிகவும் கலக்கமுற்றிருக்கிறது... வறுமொழியாளரோடு, வம்பப் பரத்தையரோடு கூடிக் கலந்து திரிந்தேன்.. என்னைப் பிறர் தாழ்வாகப் பேசுவதற்கும், அவர்தம் நகைப்புக்கு இடம் கொடுத்தவனாகவும் ஆகிப் போனேன்.. மேலோர் போற்றி வணங்கும் நல்லொழுக்கத்தைப் புறக்கணித்தேன்..  நான் என் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய ஏவல்களையும் செய்யாது ஒழித்தேன்..  எனக்கும் ஒரு நற்கதி வாய்ப்பதற்கு வாய்ப்புண்டோ?..   இளம் வயதிலேயே பேரறிவு படைத்த உனக்கு சொல்லவொண்ணா துயரத்தை அளித்து விட்டேன்.. என் செயல்கள் பழிப்புக்கு இடம் கொடுப்பவை என்பதைக் கூட அறியாதிருந்தேன்..  ‘மதுரைக்குப் புறப்படலாம், எழுக’  என்றவுடன் என்னுடன் புறப்படத் தயாராக எழுந்தாய்!   என்ன செய்தனை, கண்ணகி?..” என்று புலம்பும் அளவுக்குத் துயர் கொண்டான் கோவலன்.


அறவோருக்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும், துறவோருக்கு பணிவிடைசெய்தலும், சான்றோர் போற்றும் விருத்தினருக்கு உபசாரம் செய்தலும் இல்லறத்தாரின் கடமைகள்.  ஐயனே, தாங்கள் என்னைப் பிரிந்திருந்த காலத்து இந்தக் கடமைகளை நிறைவேற்ற உரிமையற்றிருந்தேன்.  பெரும் புகழும், அரசர் போற்றும் சிறப்பும் கொண்டிருக்கும் உங்கள் தந்தையார் உங்கள் தாயாரோடு வந்து என்னைக் காண வரும் காலத்தெல்லாம் தாங்கள் என்னைப் பிரிந்திருந்த துன்பத்தை அந்த முதியோரிடம் காட்டிக்கொள்ளாது ஒழுகினேன்.  அதை உணர்ந்திருந்த அவர்கள் என் மேல் பாசம் கொண்டு தங்கள் அருட்சொற்களால் தேற்றுவர்.  இருப்பினும் என் புன்சிரிப்பில் புதைந்து போயிருந்த சோகத்தை அவர்கள் அறிந்து கொண்டு வருந்துவர்.  பெற்றோர் வருந்துமாறு போற்றுதற்கல்லாத ஒழுக்கம் தங்களை ஆட்கொண்டிருந்தது.  எக்காலத்தும் தங்கள் மனவிருப்பற்கேற்பவான வாழ்க்கையை நான் மேற்கொண்டிருந்தமையால், நீங்கள் மதுரைக்குப் புறப்பட வேண்டும் என்று கூறியவுடனேயே தங்களுடன் புறப்பட்டு விட்டேன்” என்று நேர்பார்த்து அல்லாது நிலம் பார்த்துப் பதிலளித்தாள் கண்ணகி.


கண்ணகி சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்து போனான் கோவலன். “குடும்பத்தின் முக்கிய சுற்றத்தாராகிய பெற்றோரையும், பணிமகளிரையும் நெருங்கிய தோழியரையும் விட்டு விட்டு நாணமும், மடனும், நல்லோர் ஏத்தும் பேணிய கற்பையும் பெரும் துணையாகக் கொண்டு என்னோடு வந்து இங்கு என் துயர் களைந்த பொன்னே, கொடியே, பூங்கோதாய், நாணின் பாவாய், நீனில விளக்கே, கற்பின் கொழுந்தே, பொற்பின் செல்வி..” என்று தன் அப்போதைய உணர்வுகளுக்கு வடிகாலாய் பலவாறு கண்ணகியைப் பாராட்டி 'இனிமேல் அவள் இல்லாமல் தான் இல்லை' என்கிற நிலையில் ஒன்றிப் போகிறான்.  


ஒரு வினாடி தாமதித்து, “நின் சீறடி சிலம்புகளுள் ஒன்றை விற்று வருவேன்.  நான் வரும் வரை எந்தக் கலக்கமும் இல்லாமல் நீ இருக்க வேண்டும்.. அதுவே நான் வேண்டுவது..” என்றவன், சட்டென்று தன் கயல் நெடுங்கண் காதலியைத் தழுவிக் கொண்டான். கண்ணகி அந்தக் குடிலில் தான் திரும்பி வரும் வரை தனித்து இருக்க வேண்டுமே என்ற துயரில் அவன் கண்கள் கலங்குகின்றன. அந்தக் கலக்கத்தில் துளிர்ந்த கண்ணீரை கண்ணகி அறியாதவாறு மறைத்து சமாளித்து ஒற்றைச் சிலம்புடன் அந்த ஆயர் வீட்டை விட்டு வெளி வந்து தளர்ந்த நடையுடன் தெருவில் காலடி பதிக்கிறான்.


அதே தருணத்தில் எதிரே எருது ஒன்று பாய்ந்து வருகிறது.  அவன் சார்ந்த குலம் இதை ஒரு சகுனத்தடையாகக் கருதுவதில்லையாதலாலும் எருது எதிர்த்து வருவதை இழுக்கென அறியாதவனாய் கோவலன் தளர்ந்த நடையிலேயே அருகிலிருந்த பூதாதுக்கள் சொரிந்திருந்த மன்றத்தைக் கடந்தான்.  திருக்கோயில்களில் பணிபுரியும் மாதர் வாழும் தெருவையும் கடந்து கடைத் தெருவிற்குள்  நுழைந்தான்.   


  (தொடரும்)


படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி


Related Posts with Thumbnails