மின் நூல்

Wednesday, February 29, 2012

பார்வை (பகுதி-30)

                    அத்தியாயம்--30

"அவங்க வருவாங்க..  நீங்க உள்ளே வாங்க.." என்று அந்தப் பெண் செளஜன்யமாக அழைத்தது ஊர்மிளாவுக்கு ரொம்பப் பிடித்திருந்தது.  செருப்பை முன் தாழ்வாரத்தில் கழட்டி விட்டு அவள் நிமிர்வதற்கும் லஷ்மணன் அந்த இன்னொருவருடன் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது.

"ஊர்மிளா! இவர் தான் விஜி! இதோ, 'பார்வை' விஜியைப் பார்த்துக்கோ.." என்றான் லஷ்மணன்.

அவன் சொன்னதைக் கேட்டு ரிஷி சிரித்து விட்டான்.  ஊர்மிளாவைப் பார்த்து "ஹலோ.." என்றான்.

"உங்களை உங்க அந்தக் கதையைப் படிச்சதிலேந்து சந்திக்கணும்னு ஆவலா இருந்தேன்.  இன்னிக்குத் தான் முடிஞ்சது" என்று அவள் சொல்லிக் கொண்டிருந்த பொழுது "ஏன் நின்னுகிட்டே இருக்கீங்க.. உக்காருங்க" என்று சோபாவைக் காட்டினாள் அந்தப் பெண்.

"என் மனைவி வித்யா.."என்று ரிஷி தன் மனைவியை அவர்களுக்கு அறிமுகப்படுத்த பரஸ்பரம் நமஸ்காரங்களைப் பறிமாறிக் கொண்டார்கள்.

"லஷ்மணன்! நீங்க யாருன்னு தெரிஞ்சா என் மனைவி ரொம்ப ரொம்ப ஆச்சரியப்பட்டுப் போவாங்க.." என்றவன் வித்யா பக்கம் திரும்பி, "அபராஜிதன்னு கதையெல்லாம் எழுதறார் இல்லையா? அவர் தான் இவர்!"என்றான்.

"ஹையோ.. அபராஜிதனா, இவர்?.."என்று திகைத்துப் போய்விட்டாள் வித்யா.
"இவர் வர்றான்னு ஏங்க மின்னாடியே சொல்லலே?"என்று புருஷனிடம் கோபித்துக் கொண்டாள்.

முன்னாடியே சொல்லியிருந்தால் என்ன செய்திருப்பாள் என்று ஊர்மிளாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. இருந்தாலும் தன் வியப்பை அடக்கிக் கொண்டு, "பரவாயில்லையே, இவரை முன்னாடியே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கே" என்றாள்.

"என்ன ஊர்மிளா! அப்படிக் கேட்டுட்டீங்க.. அபராஜிதனைத் தெரியாதவங்க தமிழ் நாட்டிலே இருப்பாங்களா, என்ன?" என்று வித்யா குழந்தைத்தன வியப்போடு தலையைச் சாய்த்துக் கேட்டாள். "அபராஜிதன் வந்திருக்கிறாருன்னு இப்போ ஒரு குரல் கூவி விட்டால் போதும்.  இந்த ஸ்டோரே இங்கே குழுமிடும்" என்று சொல்லி விட்டு, லஷ்மணன் உட்கார்ந்திருந்த சோபாவிற்கு எதிர் சோபாவில் அமர்ந்து கொண்டாள். "ஸார்.. நேத்திக்குத் தான் உங்களோட 'காந்தளூர் சாலை' இந்த அத்தியாயம் படிச்சேன்.  இளவரசி பெருநிலச்செல்வி கழுத்து மாலையில் பூட்டியிருக்கற லாக்கெட்டில் தானே அவள் பிறப்பு ரகசியம் இருக்கு?.. ஆமாவான்னு சொல்லிடுங்க.. நான் யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன்."

"உண்மையைச் சொன்னா அப்படி இல்லைங்க..  இந்த லாக்கெட் சமாச்சாரமெல்லாம் அப்படியிருக்குமோன்னு நீங்க யூகிச்சுக் குழம்பறத்துக்காக திசை திருப்பற வேலை.. நம்பாதீங்க" என்றான் லஷ்மணன்.

"ஓ.." என்று அவள் உதடு குவித்த பொழுது அவள் முகமே ஓவல் சைஸ்ஸூக்கு மாறி ஊர்மிளாவே பொறாமைப்படுகிற மாதிரி அழகாகத் தெரிந்தது. "அப்படியா சமாச்சாரம்?.. பின்னே எதுக்கு அவ சங்கிலிலே ஒரு லாக்கெட் பூட்டியிருக்கறதா சொல்லியிருக்கீங்க.."

"சட்டுனு இப்போ அதுக்கெல்லாம் காரணம் தெரியாது.  ஏதாவது இப்படி ஒண்ணு ரெண்டு எழுதிண்டு போறச்சேயே அங்கங்கே போட்டு வைச்சிருந்தா, சமயத்லே ஏதாவது உபயோகப்படும்.  அதுக்காகத் தான்."

"உபயோகப்படாம போயிட்டா?.."

"உபயோகப்படுத்திக்கறது நம்ம சாமர்த்தியம் இல்லையா?.. அப்படியே உபயோகப்படாட்டாலும் ஒண்ணுமில்லே.  அது அதுவாகவே இருந்திட்டுப் போகட்டுமே? என்ன சொல்றீங்க?.." என்று லஷ்மணன் கேட்ட பொழுது வித்யாவுக்கு அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

'க்ளுக்'கென்று ஒரு சிரிப்பு மட்டும் அவள் தொண்டையில் உற்பத்தியாகி உதடுகளில் வழிந்தது. "ஆமா! எனக்கு இதெல்லாம் தோணலே பாருங்க.. ரசிச்சுப் படிச்சிண்டு வர்றேனா, நீங்க எழுதற ஒவ்வொண்ணுக்கும் மனசு ஒரு காரணம் தேடும். அம்புட்டுத்தான்" என்றாள்.

"அது தான் உண்மையான வாசக குணம் வித்யா" என்றாள் ஊர்மிளா, அவளை உற்சாகப்படுத்தும் விதமாக.

"வாசக குணம்?.. இப்போத் தான் முதல் தடவையா இந்த வார்த்தையைக் கேள்விப்படறேன், ஊர்மிளா!" என்று சொல்லிச் சிரித்தாள் வித்யா. "என்னது.. லைட் ரீடிங் தான்."

"அதனாலே இந்த மாதிரி வார்த்தைகளோட அந்நியப்பட்டுப் போயிட்டீங்க, இல்லையா?"

"அந்நியப்பட்டு?.. இதோ இன்னொரு புது வார்த்தை! உங்களோட கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்தா நிறைய புதுவார்த்தைகளை பழக்கப்படுத்திக் கொள்ளலாம் போலிருக்கே!" என்று மறுபடியும் தலை சாய்த்து, புருவங்கள் நெற்றி மேட்டுக்கு ஏறி, வித்யா ஆச்சரியப்பட்ட பொழுது, "ஸோ க்யூட்!" என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டாள் ஊர்மிளா.

"வாசக குணம்னு சொல்லிட்டீங்க.. அப்போ எழுத்தாள குணம்னும் ஏதாவது இருக்கும் இல்லையா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டான் ரிஷி.

"நாங்க வாசகர்கள். அதனாலே எங்களுக்குத் தெரிஞ்சதைச் சொன்னோம். நீங்க ரெண்டு பேரும் தான் அப்படி ஏதாவது இருந்ததுன்னா சொல்லணும்" என்று நைஸாக கமிட் பண்ணிக் கொள்ளாமல் தெரிந்தே நழுவினாள் ஊர்மிளா.

"ஒரு நிமிஷம்.."என்று வித்யா எழுந்து போய் பிரிட்ஜிலிருந்து பெரிய கோக் பாட்டிலை எடுத்து டைனிங் டேபிளின் மேல் வைத்தாள்.  ஷெல்ப்பிற்குச் சென்று நாலைந்து கிளாஸ் டம்ளர்களையும் எடுத்து கோக்கை நிரப்பிக் டீப்பாயின் மீது கொண்டு வந்து வைத்தாள்.

"வாசகனாய் இருப்பதின் இன்னொரு நிலையே எழுத்தாளன்ங்கறதாலே
அந்த எழுத்தாளன்னுக்குன்னு தனியா ஒரு குணம் இருக்கும்னு நெனைக்கிறீங்க?" என்றாள் ஊர்மிளா.

"இன்னொரு நிலையா?.. இப்போ பாருங்க, இன்னொரு புது வார்த்தை!" என்று சிரித்தாள் வித்யா.

"தான் விரும்பறதைப் படிச்சு சந்தோஷப்படும் பொழுது வாசகன்.  அப்படிப் படிக்கறதினாலே, பார்கறதாலே ஏற்பட நினைப்புகளை எழுத்தில் வெளிப்படுத்தும் பொழுது எழுத்தாளன். இல்லையா?.. ஆக வாசகன்-எழுத்தாளன்னு இந்த ரெண்டு நிலைலேயும் ஒண்ணா இருக்கறதுங்கறது அவங்களோட விருப்பம் தான். விருப்பத்தின் அடிப்படையிலேயே குணம் அமையறதாலே இந்த ரெண்டு நிலைலேயும் பெரிசா குணம் மாறிடாதுன்னு சொல்ல வந்தேன்" என்றாள் ஊர்மிளா.

"நினைப்பும் எழுத்தும் ஒண்ணா இருந்தா நீங்க சொல்ற மாதிரி குணத்திலேயும் வித்யாசம் இருக்காது. ஒப்புக்கிறேன். சொல்லப்போனா அப்படித்தான் இருக்கணும்.  ஆனா---" என்று ரிஷி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது வாசல் பக்கம் ஏற்பட்ட சலனத்தில் சொல்லி வைத்தாற் போல லஷ்மணனும், ஊர்மிளாவும் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தனர்.

புத்தகப் பையுடன் உள்ளே நுழைந்த சிறுவன் அவர்களைப் பார்த்ததும் ஒரு நிமிடம் திகைத்து பின் பக்கத்து ரூமில் பையை வைத்து விட்டு பின்பக்கம் போனான்.

"என் பையன் கெளதமன்.."என்று ரிஷி சொன்ன பொழுது 'வாவ்' என்று ஆச்சரியப்பட்டுப் போனாள் ஊர்மிளா. "அப்படியே அம்மா ஜாடை.  இந்த வயதில் உங்களுக்குப் பையனா? உங்களைப் பாத்தா அப்படி நினைக்கத் தோணலை.." என்று வித்யாவைப் பார்த்து அவள் சொன்ன பொழுது வித்யா கலகலவென்று சிரித்தாள்.  'இப்படி வெளிப்படப் பாராட்டியிருக்க வேண்டாமே' என்று லஷ்மணனுக்குத் தோன்றினாலும், அதனால் வித்யா ரொம்ப மகிழ்ந்தமாதிரித் தெரிந்ததால் சமாதானப்பட்டு விட்டான்.

"ஆனா?.. என்ன சொல்ல வந்தீர்கள், விஜி?" என்று ஊர்மிளா கேட்ட பொழுது, "விஜி இல்லே ரிஷி.." என்று திருத்தினாள் வித்யா.

"ரிஷியா?.." என்று ஊர்மிளா திகைத்த பொழுது, "கதையெல்லாம் எழுதறத்தே ரிஷி, விஜியா மாறிடுவார்" என்று சிரித்தாள் வித்யா.

"ஃபைன்.. நான் உங்க பேரே விஜிதானாக்கும் நெனைச்சேன். விஜயக்குமார் விஜியாயிட்டாரோன்னு.. ரிஷி கூட ரேர் நேம் தான்.  இல்லையா?"

"நான் பொறந்தப்போ எங்க மாமா வைச்ச பேராம் ரிஷி.  இந்த விஜி என் மனைவி வைச்சது.  'விஜி'யாய் அவளும் பையனும் இந்தப் பெயரில் ஒளிந்திருக்கிறார்களாம்" என்றான்.

"வி ஃபார் வித்யா.  ஜி ஃபார் கெளதம்.  இல்லையா?.. ஜீவின்னு கூட வைச்சிருக்கலாம் இல்லையா?"

"ஜீவிங்கற பேர்லே இன்னொரு எழுத்தாளர் இருக்கறதாலே அது வேண்டாம்னு நெனைச்சோம். அப்புறம், என் வாழ்க்கைலே முதல் அறிமுகம் வித்யா. அதனாலே அவளுக்கு முதல் இடம்.  அடுத்த அறிமுகம் கெளதம். அதனாலே அவனுக்கு அதற்கு அடுத்த இடம். சரி தானே?"

"அறிமுகமா?"

"ஆமாம். பெயரின் மூலமாகத் தானே ஒவ்வொருத்தரும் நமக்கு அறிமுகம் ஆகறாங்க?.. கல்யாணம் ஆகறச்சே அவ பெயர் மட்டும் தான் எனக்குத் தெரியும்.  நாளாவட்ட வாழ்க்கைப் பயணத்லே அவ எப்படிப்பட்டவள்னு தெரிஞ்சது.  யோசிச்சு யோசிச்சு நாங்க வைச்ச பேர் தான் கெளதம். எப்படிப் பட்டவனா அவன் உருவாகப் போறான்னு..." பின்பக்கம் சென்றிருந்த கெளதம் ஹால் பக்கம் வந்ததினால் ரிஷி சொல்ல வந்ததை நிறுத்திக் கொண்டான் என்று தெரிந்தது.

கைகால் அலம்பி முகம் துடைத்து வந்தான் போலும்.  பளிச்சிட்ட முகம் நிர்மலமாக இருந்தது. ரிஷியின் மகன் ரிஷியை விட சிறந்து வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் ஊர்மிளா.


(இன்னும் வரும்)





























Saturday, February 25, 2012

பார்வை (பகுதி-29)


                              அத்தியாயம்--29

ர்ய கெளடர் ரோடில் ஏகப்பட்ட நெரிசல்.  விஜியுடன் சேர்ந்து வெளியே எங்கானும் போகவேண்டியிருந்தாலும் இருக்கலாம் என்று முன்னேற்பாடாக தன் காரை எடுத்து வந்திருந்தான் லஷ்மணன்.  நெரிசலில் நீந்திக் கடக்க அது கொஞ்சம் அசெளகரியமாக தான் இருந்தது.

லேண்ட் மார்க்காக அயோத்தியா மண்டபம் என்று விஜி சொன்னதும் நினைவிருந்தது.   மாம்பலம் அயோத்தியா மண்டபம் லஷ்மணனுக்கு பழக்கப்பட்ட இடம் தான்.  ஸ்ரீராம நவமி பொழுது இந்த மண்டபத்தில் தினமும் நடக்கும் சங்கீதக் கச்சேரிகளுக்கு வரவில்லையென்றால் அவன் மண்டை வெடித்து விடும்.  மண்டபம் நெருங்க நெருங்க, அதன் பக்கத்துத் தெருவாகவே விஜி சொன்ன தெரு இருந்தது ரொம்பவும் செளகரியமாகப் போய்விட்டது.  அந்த இடத்தில் திடீரென்று ஏற்பட்ட டிராஃபிக் ஜாமை ஒருவாறு சமாளித்து தெருவிற்குள் நுழைந்த பொழுது அஸ்வமேத யாக குதிரையின் மீது ஏறி சவாரி செய்ததே போன்ற வெற்றிக் களிப்பு தான் அவனுக்கு ஏற்பட்டது. 

தெருவில் நுழைந்தவுடன் ஊர்மிளாவிடம் கையில் கொண்டு வந்திருந்த சீட்டில் குறித்திருந்த வீட்டு இலக்கத்தைப் பார்க்கச் சொன்னான் லஷ்மணன்.  அவள் தன் ஹேண்ட் பாக்கில் குடைந்து பார்த்து 89Z என்றாள்.  தாண்டிச் சென்ற ஒரு வீட்டின் காம்பவுண்ட் ஹாலில் பதித்திருந்த எண்ணைப் பார்த்த பொழுது ஒரு புதுப் பிரச்சனை ஏற்பட்டது.  ஒவ்வொரு வீட்டு காம்பெளண்ட் சுவரிலும் பழைய எண் என்று ஒன்றைப் போட்டு அதற்குக் கீழே புதிய எண்ணையும் எழுதியிருந்தார்கள்.  விஜி கொடுத்திருந்தது, பழைய எண்ணா இல்லை புது எண்ணா என்று தெரியவில்லை. 

"புது எண்ணாத் தான் இருக்கும்.  இப்போத்தான் 69 வருகிறது.  இன்னும் இருபது எண்கள் தாண்டிப் போகவேண்டும்" என்றாள் ஊர்மிளா.

"போனாப் போச்சு.."என்று சொல்லிக்கொண்டே குறுக்கே திடீரென்று பந்துடன் பாய்ந்த சிறுவனைத் தவிர்த்து வண்டியை செலுத்தினான் லஷ்மணன்.  எண்கள் ஏறுவரிசையில் தான் செல்கிறதா என்பதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு வந்த ஊர்மிளாவுக்கு ஒன்று புரிந்தது.  

திடீர் என்று கிளம்பிய ஞானோதயத்தில் "ஏங்க.. எண்கள் இரண்டிரண்டாகக் கூடி வருதுங்க.." என்றாள்.

"ஒன்றுமில்லை.. இந்த வீட்டுக்கு அடுத்த எண் எதிர் வீட்டுக்கு.  அதற்கடுத்த எண் இந்த வீட்டின் அடுத்த வீட்டிற்கு.  அப்படிப் பார்த்துக் கொண்டே வா.  பாண்டிச்சேரியில் இந்த மாதிரி கதவிலக்கம் கொடுக்கிற பழக்கமுண்டு" என்றான் லஷ்மணன்.

அவன் சொல்லி வாய் மூடுவதற்குள் 88-ம் எண் வந்து விட்டது.  அதோடு அந்த தெரு முடிந்து விட்டது.   ஊர்மிளா எதிர்வீட்டு இலக்கத்தைப் பார்த்து, "அதோ, அந்த வீட்டில் 87 போட்டிருக்கு" என்றாள்.

"அது 87.  இது 88.  சரிதான்.  அப்போ இதற்கு அடுத்தது தான் 89 வரவேண்டும்.  ஆக இந்த தெரு இடைவெளி தாண்டி எதிர்த்த வீடு.." என்று சொல்லி லஷ்மணன் காரை நகர்த்தினான்.

ஊர்மிளா கையிலிருந்த அந்தத் துண்டுக் காகிதத்தைப் பார்த்து விட்டு"89-க்கு பக்கத்தில் ஒரு Z வேறே இருக்கிறதே! அது என்னன்னு தெரியலேயே?"என்று ஒரு புது சந்தேகத்தைக் கிளப்பினாள்.

"முதல்லே எண்பத்தொம்பதைக் கண்டுபிடிக்கலாம்.  அதுக்கப்புறம் அந்த Z- பத்திப் பாத்துக்கலாம்."

தெருவின் நடுவாந்திரத்தில் இடைவெளி விட்டு குறுக்குத் தெருவாக இன்னொரு தெரு போயிற்றே தவிர, இடைவெளியைத் தாண்டி தொடர்ந்த தெருவில் 88-த் தாண்டி கதவிலக்கம் தொடர்ந்தது நம்பிக்கையைக் கொடுத்தது.   ஆனால், அவர்கள் துரதிர்ஷ்டம் எதிர்த்தாற்பலே இருந்த வீட்டுக்கு 89-A என்று இலக்கமிட்டிருந்தது.

அதைப் பார்த்த முகச்சுளிப்பில், "போச்சுடா.."என்று தொய்ந்து போன லஷ்மணன் ஓரு ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கினான்.

"இனிமேலே A -யிலேந்து Z வரைப் போய் அதைத்தாண்டித் தான் 90 ஆரம்பிச்சிலாலும் ஆரம்பிக்கும்.  யாரையாவது கேக்கலாமா?" என்று ஊர்மிளா சுற்றும் முற்றும் பார்த்தாள்.

பத்து தப்படி தாண்டி நான்கு சக்கர சைக்கிள் வண்டியில் தென்பட்ட இஸ்திரிகாரர் தான் இந்த மாதிரியான டவுட்டுகளின் தீர்வுக்கு சரியான நபராக லஷ்மணனின் கண்களுக்குத் தென்பட்டார்.   அவரிடம் போனான். லஷ்மணன் கேட்டதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை அவர்.  ஊர்மிளாவும் என்ன நடக்கிறது என்று பார்க்க அருகில் வந்த பொழுது ஏற்பட்ட சலனத்தில் அவர் கவனம் அவர்கள் பக்கம் திரும்பியது.

'என்ன வேணும்' என்று இப்பொழுது தான் பார்த்துக் கேட்கிற மாதிரி நிமிர்ந்தவரிடம் விஷயத்தைச் சொன்னான்.

"அதோ.." என்று 89-A வீட்டையே இஸ்திரிகாரரும் காட்ட,

"அது 89-A-ன்னா.." என்றான் லஷ்மணன்.

"அதான்.  அங்கணயே சந்து மாதிரி தெரியும்.  உள்ளாற போங்க..  கட்ஸி வீடு" என்றார்.

நம்பியும் நம்பாமலும் இருவரும் மறுபடியும் 89-A-க்குப் போனார்கள். சாத்தியிருந்த ஒற்றை கிரில் கதவைத் திறந்ததும் தான் இஸ்திரிகாரர் சொன்ன சந்து தென்பட்டது.   உள்ளே பார்த்தால் நீண்ட சந்தின் பக்கவாட்டில் ஒரு ஸ்டோர் போல வரிசையாக வீடுகள் நீண்டு கிடந்தன...  இங்கு தான் 'A' யிலிருந்து 'Z' வரை அத்தனை வீடுகளும் இறைந்து கிடக்கின்றனவா! வெளியிலிருந்து பார்க்கையில் தெரிந்ததற்கு நம்ப முடியாமல் தான் இருந்தது.  முதல் வீட்டுக்காரரின் வீட்டு இலக்கமான 89A மட்டும் ரோடிலிருந்து பார்க்கையில் பளிச்சென்று தெரிந்து எல்லாவற்றையும் மறைத்திருக்கிறது!

வெளியே வந்த லஷ்மணன் காரை ஓரமாகப் பார்க் பண்ணி பூட்டி விட்டு வந்தான்.  'A'--யிலிருந்து வரிசையாகப் பார்த்துக் கொண்டு வருகையில் ஓரிரண்டு ஆங்கில எழுத்துக்கள் தவிர்க்கப் பட்டிருந்தது தெரிந்தது. ஏதாவது வாஸ்து மாதிரி சமாச்சாரங்கள் காரணமாக இருக்கலாம்.

முன்னால் சென்று கொண்டிருந்த ஊர்மிளா, 'Z' வந்ததும் பிரேக் போட்ட மாதிரி நின்றாள்.  திரும்பிப் பார்த்தால் பின்னால் யாருடனோ லஷ்மணன் பேசிக் கொண்டு தேங்கி விட்டது தெரிந்தது.  கணவனும் வரட்டும் என்கிற நினைப்பில் ஊர்மிளா தயங்கி நிற்கையில் அந்த வீட்டுக் கதவு திறக்கப் பட்டது.

வெளியே வந்த பெண் லட்சணமாக இருந்தாள்.  ஊர்மிளாவை அவள் பார்த்ததும், "யாரைப் பாக்கணும்?" என்று கேட்டாள்.  கேட்ட குரல் ரொம்பவும் மிருதுவாகப் பட்டது ஊர்மிளாவுக்கு.

"இங்கே விஜின்னு.." என்று அவள் இழுக்கையிலேயே, "வெளியேயே ஏன் நிற்கிறீர்கள்? உள்ளே வாருங்கள்.." என்று புன்முறுவலுடன் அவள் அழைத்த பொழுது தயங்கியபடியே லஷ்மணன் வருகிறானா என்று பின்னால் திரும்பிப் பார்த்தாள்.

லஷ்மணன் அந்த இன்னொருவருடன் பேசியபடியே 89-Z நோக்கி வந்து கொண்டிருப்பது தெரிந்தது.


(இன்னும் வரும்)




Tuesday, February 21, 2012

பார்வை (பகுதி-28)

                      அத்தியாயம்--28

ராத்திரி ரொம்ப நேரம் கழித்துத் தான் லஷ்மணன் வீட்டிற்கு வந்திருந்தான். வழக்கமாக இப்படி நேரம் கழித்து வந்தால் வெளியிலேயே சாப்பிட்டிருப்பான் என்று ஊர்மிளாவுக்குத் தெரியும்.  அவளுக்கும் அசதி மிகுந்திருந்ததால், கதவைத் திறந்து விட்டுத் தூங்கி விட்டாள்.

காலையில் அவள் எழுந்த பொழுது அவன் அலுவலக அறையில் விளக்கு எரிந்து கொண்டிருப்பது தெரிந்தது.  எழுந்து பார்த்தால் லேப் டாப்பில் எழுதிக் கொண்டிருந்தவனுக்கு எதிரே தேனீர் கோப்பையிலிருந்து, தேய்த்த அலாவுதீன் விளக்கு மாதிரி ஆவி புகைந்துகொண்டிருந்தது.

போய் பல் விளக்கி தலை கோதி அவளுக்கும் தேநீர் கலந்து ஓவனில் சூடேறிக் கொண்டு அவன் எதிரே வந்து அமர்ந்தாள்.

தலை நிமிர்ந்து ஊர்மிளாவைப் பார்த்தவன் புன்முறுவல் பூத்தான். அவளும் லேசாகச் சிரித்தாள். "என்ன செஞ்சிருக்கீங்கன்னு தெரியும்.." என்றாள்.

"அப்படியா? சொல்லு பாக்கலாம்.." என்று சொன்ன பொழுது லஷ்மணனின் புன்னகை இன்னும் விரிந்தது.

"சொன்னா என்ன தருவீங்க?.."

"முதல்லே சொல்லு. தர்றதுதான் என்னிக்கும் இருக்கே.."

"அதானே கூடாதுங்கறதுங்கறது.." என்றவள் அவனுக்கு இன்னும் கொஞ்சம் நெருங்கி அமர்ந்து கொண்டாள். லேப் டாப்பில் பார்த்தும் பார்க்காதது மாதிரி விழி சுழற்றியவளுக்குத் தெரிந்து விட்டது.. "அதானே சமாச்சாரம்?.." என்று சிரித்தாள்.

"எதானே சமாச்சாரம்?.. "

"உங்களால் சும்மா இருக்க முடியாதே! அந்த காந்தளூர் சாலை பெருநிலச்செல்வியை மயக்கத்லேந்து எழுப்பிட்டீங்க, அதானே?"

ஒரு நிமிஷம் அவன் ஆச்சரியப்பட்டுப் போனாலும் படாதது மாதிரி காட்டிக் கொண்டு, "நீ நெருக்கமா உக்காந்தப்போ கொஞ்சம் அசந்திட்டேன்ங்கறது வாஸ்தவம் தான்.  அதுக்குள்ளாற லேப் டாப்லே பாத்திட்டே.. இல்லையா?"

"ப்ராமிஸா இல்லீங்க.." என்று ஊர்மிளா சிரிக்காமல் சொன்னாள்.

"சரி. நம்பறேன்.  எப்படிக் கண்டுபிடிச்சே?"

"தினம் விடியற்காலை அந்த பெருநிலச்செல்வியோட நீங்கக் கொஞ்சிக் கூத்தடிக்கறதுதெல்லாம் தெரிஞ்ச விஷயம் தானே?..  அதுக்குத்தான் மயங்கிப் போனவளை எழுப்பிட்டீங்க.."

"ஒதை விழும்.." என்று பொய்க்கோபத்துடன் முறைத்தான்."உன்னை எழுப்பலாம்ன்னு தான் நெனைச்சேன். அசந்து தூங்கிண்டிருந்தையா.."

"என் ஞாபகம் வேறே உங்களுக்கு இருக்காக்கும்?  உங்களுக்குத் தான் அந்த பெருநிலச்செல்வி, நிரஞ்சனா, நித்ய கன்னி, மோஹனா, சொப்பன சுந்தரி, செளந்தர வல்லின்னு கூட்டங்கூட்டமா இருக்காங்களே?"

"ஸீ.." என்று அவள் மோவாயை விரல் தொட்டுத் தூக்கினான் லஷ்மணன்.  "ஒரு விஷயம் தெரியுமா?' என்று அவளை அவன் உற்றுப் பார்த்த பொழுது விலக வேண்டும் என்று எச்சரிக்கை அவள் உள்ளுக்கு உள்ளே ஒளிர்ந்தாலும் ஏனோ விலகத் தோன்றவில்லை..

"என் கதைக் கதாநாயகிகள் எத்தனையோ பேர் இருக்கலாம்.  உங்கிட்டே இருந்து தான் அத்தனை பேரும் புறப்பட்டிருக்காங்கங்கறதைத் தெரிஞ்சிக்கோ. அவங்கள்லாம் நிழல்ன்னா, நீ நிஜம்.  அவங்கள்லாம் சந்திரன்னா, நீ தான் சூரியன்."

"அவங்கள்லாம் குளுகுளுன்னு இருக்காங்க.  நான் சுட்டெரிக்கிறேன். அப்படித்தானே?"

"இந்த பொண்ணுங்களே இப்படித்தான்.  எப்படிச் சொன்னாலும் அதை மாத்திச் சொல்றதுக்கு அவங்களுக்குன்னு ஏதாவது இண்டு இடுக்கு கிடைச்சிடும்."

"ஒரேடியா வெறுத்துப் போயிடாதீங்க; சும்மாக்காச்சும் சொன்னேன்.  போகட்டும்.  விஜியோட அட்ரஸ் கிடைச்சிருச்சின்னு மெஸேஜ் அனுப்பிச்சிருந்தீங்களே!  டெல்லிலேயா இருக்கார் அவர்?" என்று பூத்துவாலையால் துடைத்த அந்த அதிகாலை பளிச் முகத்தில் ஆர்வம் கொப்பளிக்கக் கேட்டாள்.

"அப்படித்தான் யாரோ சொல்லி நெனைச்சிண்டிருந்தேன்.  டெல்லி இல்லேன்னு இன்னிக்குத் தான் தெரிஞ்சது."

"எப்படி?"

"சாயந்திரம் பூரா அவரோடத் தான் கழிஞ்சது."

"அட!" என்று ஆச்சரியப்பட்டாள் ஊர்மிளா. "அப்போ நேரேயே பாத்து அறிமுகம் ஆச்சுன்னு சொல்லுங்க.."

"எஸ்.  அவருக்கும் சென்னை தான்.  எல்.எல்.ஏ. பில்டிங் போகணும்னு நேத்தே சொல்லியிருந்தேன், இல்லையா?   அங்கே தான் பாத்தேன்."

"ஏதோ 'கவிதை' நூல் வெளியீட்டு விழானுன்னா சொல்லியிருந்தீங்க..அவரும் வந்திருந்தார்னா,  அவருக்கும் கவிதைலேலாம் இண்ட்ரஸ்ட்டுன்னு சொல்லுங்க.."

"அவரோட பேசிண்டிருந்ததை வைச்சுப் பார்த்தா அப்படித்தான் தெரியறது."

"அதானே பார்த்தேன்.  மென்மையா எழுத்து இருக்கறவங்கள்லாம் கவிதைகள் ஆகர்ஷிப்பிலே மாட்டிக்காம இருக்க முடியாது."

"மாட்டிக்கறதா?.. வாட் யூ மீன்?.."

"சீரியஸா எடுத்திக்காதீங்க.. மாட்டிக்கறது மீன்ஸ் சிக்கிக்கறது.. சிக்கிக்கறதுன்னா.." ன்னு ஒரு வினாடி கீழுதட்டில் ஆள்சுட்டி விரல் பொருத்தி யோசித்தாள். "ஐ மீன்.. நான் உணர்றதை எப்படிச் சொல்றதுன்னு தெரிலே.   'சிக்கிக்கறது'ங்கற இந்த வார்த்தை தான் உங்களை உபத்திரவப்படுத்தறதா? அப்ப வேறே மாதிரி சொல்றேன்.  ஒரு விஷயத்தோட இன்ஃப்ளூயனஸ் கொஞ்சம் கொஞ்சமா நம்மை ஆக்கிரமிக்கறதைச் சொல்றேன்."

"புரியறது."

"இன்னும் புரியற மாதிரி சொல்ல முயற்சிக்கிறேன். கேளுங்க. ஒரு தடவை எங்க ஆபீஸ் ஸ்டாஃப் போனாங்கன்னு உபந்நியாசம் ஒண்ணுக்குப் போயிட்டேன்.  அந்த அட்மாஸ்ப்பியரே எனக்கு ஒரு மாதிரி இருந்தது.  அந்த ஹால் பூரா பவானி ஜமக்காளம் விரிச்சிருந்தது.  அத்தனை பேரும் காலை மடிச்சிண்டு அதிலே தான் உக்காந்திருந்தாங்க.  நாற்காலிலேயே உக்காந்து பழக்கப்பட்ட நான் எப்படி இப்படி உக்காந்திருக்க முடியும்னு யோசனையா போயிடுத்து.  சரிடா, வகையா மாட்டிகிட்டோம்னு நெனைச்சேன்.

"மாட்டிகிட்டோம்னு?"

"எஸ். அதான் சரியான உணர்வு.  பின்னே என்ன? க்ளோஸ்டு ஹால். வெளிக்கதைவை அடைச்சாச்சு. முன்பக்கம் வேறே போயிட்டோமா? பாதிலே எழுந்திருந்தோம்னா அசிங்கமா எல்லாருக்கும் தெரியும்.  அதுக்குக் கூச்சப்பட்டுண்டு தேமேன்னு காலை மடக்கிண்டு உக்காந்திட்டேன். இராமயண உபந்யாசம்.  வாலி வதை படலம். உபந்நியாசம் செய்யறவர்... யாரோ தீஷிதர்ன்னு பேரைப் போட்டிருந்தது.  ஆற்றோட்டமா அற்புதமா சொல்றார்.  சே! சான்ஸே இல்லை.  தமிழ் எவ்வளவு அற்புதமான மொழின்னு அன்னிக்கும் உணர்ந்தேன்.  நேரம் போனதே தெரிலே.  எல்லாம் முடிஞ்சி தீபாராதனைக்கு எழுந்திறக்கறச்சே தான் கால் மரத்துப் போனது கூடத் தெரிஞ்சது.  அப்படி ஒரு சுவாரஸ்யம்.  கம்பன்லே ஒரு வரி.."என்று மீண்டும் ஒருதடவை அதே மாதிரி கீழுதட்டில் ஆள்சுட்டி விரல் வைத்தாள்.. "ஆவியை ஜனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை..'ங்கற வரி இன்னும் ஞாபகச்சரட்டிலே கோத்து இருக்கு..."

"முன்னாடி மாட்டிண்டோம்னு நெனைச்சது தப்புன்னு தெரிஞ்சது. இல்லையா?"

"தப்புன்னு சொல்ல முடியாது.  அந்த 'மாண்டிண்ட உணர்வு' இல்லேனா, இந்தண்டை அந்தண்டை கவனம் சிதறாம அதே குறியா அவர் சொன்னதை அந்தளவுக்கு மனசிலே வாங்கிண்டிருக்க முடியாதுன்னும் தோண்றது. ஆம் ஐ கரெக்ட்?"

"கரெக்ட்டுன்னு தான் சொல்லணும்..."

"அதென்ன சொல்லணும்?.. தொங்கலா..."

"கேட்ட விஷயத்தை, அப்படி ஆழ்ந்து கேக்கற மாதிரி ஒருத்தர் சொன்ன விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காம, ஒரு மாத்து குறைச்சுச் சொல்ற மாதிரி இருக்கு. அப்படிக் கதவை அடைக்கலேனா, கம்பனை அந்தளவுக்கு ரசிச்சிருக்க முடியாதுன்னு சொல்ற மாதிரி..."

"அப்படீங்கறீங்க.. ஓக்கே.. மாத்திக்கறேன்.  ஆனா ஒண்ணு.  இந்த மாதிரி மாட்டல்லாம், இன்னொரு தடவை அப்படி மாட்டிக்க மாட்டோமான்னு உணர்வை ஏற்படுத்தறதே?.. அதுக்கு என்ன சொல்றீங்க..?"

"இப்ப சொன்னேயே இது சரி.  இப்படி சிக்கிக்கற சில சிக்கல்லே சிலது சுகமாவும் இருக்கு... மனசுக்கு சந்தோஷத்தையும் கொடுக்கறது. பொதுவா 'சிக்கல்'ன்னு நாம நினைக்கற அர்த்தத்தைக் இதுகளுக்குக் கொள்ளக் கூடாது.. அவ்வளவு தான்."

"ஆயுசிலே இப்பத் தாங்க நான் சொன்ன ஒண்ணை அங்கீகரிச்சு மனசார ஏத்திண்டிருக்கீங்க.."

"மனசார?.."

"போதும். மறுபடியும் ஆரம்பிக்காதீங்க.. நிறைய உங்ககிட்டே சொல்லணும்னு நெனைச்சிண்டிருக்கேன்.  மறந்திடப்போறேன்.." என்று சொன்னவள் எழுந்திருந்து 'ஓட்ஸ்' டின்னை எடுத்து வைத்துக் கொண்டு காலைக் கஞ்சி கரைக்கத் தயாரானாள்.

லேப் டாப்பை மூடிவிட்டு லஷ்மணனும் அவள் பின்னாடியே போனான்.  "எட்டாச்சு பார்.  இப்ப ஆரம்பிச்சாத்தான் சரியா இருக்கும்.  பிரிட்ஜ்லே என்ன இருக்கு பாரு.  ரசம் வேண்டாம்.  குழம்பும் கறியும் போதும்.  காரெட் நிறைய இருக்குன்னு நெனைக்கிறேன்.  எலும்பிச்சையும் இருந்தா வேணும்னா கோசுமல்லியும் பண்ணிடலாம்."

"மெதுவா செஞ்சிண்டாப் போச்சு.  இன்னிக்கு சனிக்கிழமை தான்.  மறந்திட்டீங்களா?.."

"மறக்கலே.  உனக்கும் ஹாலிடேங்கறதாலே தான், நாளைக்கு வீட்டிற்கு வர்றீங்களான்னு விஜி கேட்டப்போ சரின்னுட்டேன்.  உன்னையும் கூட்டிண்டு வர்றதா சொல்லியிருக்கேன்.  உனக்கு செளகரியப்படும் தானே?"

"என்னங்க இப்படி மெதுவா சொல்றீங்க?.. அப்பவே சொல்லியிருந்தா குக்கரையாவது அடுப்பிலே ஏத்திருப்பேன்லே?"

"மத்தியானத்துக்கு மேலே தான், ஒரு நாலரை வாக்கில் கிளம்பினா போதும். அஞ்சு அஞ்சரைக்கெல்லாம் போய்ட்லாம்.  சாப்பிட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு.."

"அந்த 'பார்வை' கதையை மேலோட்டமானும் ஒரு தடவை பாக்கணும்ங்க..
நிறைய அவர் கிட்டே கேக்க வேண்டியிருக்கு. அப்புறம் இன்னொண்ணு ஒங்க கிட்டே சொல்லணும்.."

"விஜியை பத்தியா?" என்று கேட்ட லஷ்மணன் பிரிட்ஜிலிருந்து அவள் எடுத்த வைத்த கோஸை நறுக்குவதற்கு முன் அதை இதழ் இதழாகப் பிரித்துக் கொண்டான்.  அப்படிப் பிரித்துப் பொடிப்பொடியாக நறுக்கினால் தான் அவனுக்குப் பிடிக்கும்.

"ஆமாம்.  என்னிக்கு விஜியோட அந்தக் கதையைப் படிச்சோமோ, அன்னைலேந்தே நடக்கறதெல்லாம் அவரைச் சுத்தியே சுத்திண்டிருக்கு.  நேத்து என்ன நடந்தது தெரியுமா?..  நீங்க ஃபோன் செஞ்சப்போ அப்பத்தான் அவசரமா டிஸ்கஷனுக்குப் பெரியவர் கூப்பிட்டிருந்தாரா... அதான் அப்பவே பேசமுடிலே"

லஷ்மணன் நிமிர்ந்து உட்கார்ந்தான்."பெரியவரா?.. சுவாரஸ்யமான மனுஷர், அவர்! ரொம்ப அனுபவம்.  அறுபது வருஷ கால பத்திரிகை உலகை கரைச்சுக் குடிச்சவர் இல்லையா? உன்பாடு பரவாயில்லை.  நான் தான் எந்தத் தகவல் வேணுண்ணாலும் அதுக்காகத் தேடித் திரிய வேண்டியிருக்கு. உனக்கு அப்படியில்லை பாரு.  பெரியவரே ஒரு தகவல் சுரங்கம்.."

"ஆரம்ப காலங்கள்லே பத்திரிகைலே ஒரு கதை பிரசுரமாகறத்துக்கு அவர் பட்ட ஏக்கத்தைப் பத்தி நேத்திக்குச் சொன்னார். அந்த ஏக்கமே ஒரு கதையா உருவெடுத்ததா சொன்னார். உருக்கமா இருந்தது."

"ஐ ஸீ..  கடைசிலே அந்தக் கதை பிரசுரமாயிடுத்து, இல்லையா?"

"ஆமாம். 'கங்கை'ங்கற பத்திரிகைலே பிரசுரமானதாம்."

"கங்கைலேயா?.. பகீரதன்னு பேரு.  'கல்கி'க்கு பிடிச்சமானவர். 'கல்கி'லேயும் துணையாசிரியரா இருந்திருக்கார்.  அவர் நடத்தின பத்திரிகை 'கங்கை'.  சரியான ஆசாமிங்க.  தன் புனைப்பெயருக்கு ஏத்த மாதிரி பத்திரிகை பேரையும் இந்த பகீரதன் எப்படி செலக்ட் செஞ்சிருக்கார், பாரு!"-- கோஸ், கத்தி பட்டு தேங்காய்த் துருவல் போல அழகாக பேஸினின் பாதி அளவுக்கு வந்திருந்தது.

"விஷயத்துக்கு வர்றேன்.  தன்னோட சிறு வயசு பத்திரிகை அல்லாடல்கள் அடிப்படைலே, இதுவரை எந்தப் பத்திரிகையாலேயும் பிரபலமாகாத ஒருத்தர் நாவலைப் போடணும்னு பெரியவர் அபிப்ராயப்படறார்.  நான் விஜி பேரைச் சொல்லலாம்னு நெனைச்சேன். எதுக்கும் உங்க கிட்டே கேட்டுகிட்டு.."

லேசான பதட்டத்துடன், "சொல்லிட்டியா?" என்றான் லஷ்மணன்.

"சொல்லலே.  அதான் சொன்னேனே, உங்க கிட்டே கேட்டுகிட்டு.."

"நல்ல வேளை சொல்லாமப் போனே.." என்று லஷ்மணன் சொன்னது புதிராக இருந்தது ஊர்மிளாவுக்கு.


(இன்னும் வரும்)

















Tuesday, February 14, 2012

பார்வை (பகுதி-27)

                      அத்தியாயம்--27

மிழ் எழுத்தாளர்களில் அகிலனை பெரியவருக்கு ரொம்பவும் பிடிக்கும்.  தமது வாலிப வயதில் அகிலன் நாவல்களைத் தேடித் தேடிப் படித்திருக்கிறார்.  அகிலன் தொடர்கதைகளைப் படிப்பதற்காகத் தான் வீட்டில் 'கலைமகளு'ம், 'கல்கி'யும் வாங்கும் பழக்கம் ஏற்பட்டு நாளாவட்டத்தில் அவரே கதைகள் எழுதி அந்தப் பத்திரிகைகளுக்கு அனுப்ப பல திரும்பி வந்திருக்கின்றன..

இதையெல்லாம் பற்றி ஊர்மிளாவிடம் நிறையச் சொல்லியிருக்கிறார் அவர்.  பெரியவர் எதைப் பற்றிப் பேசினாலும் அந்த உரையாடல் போக்கே கதை சொல்கிற மாதிரி தான் இருக்கும்.  பேச்சின் நடுநடுவே இளம் வயதில் அவர் கொண்டிருந்த விருப்பங்கள், சாதாரண விருப்பங்களைத் தாண்டிய தாபங்கள் எல்லாம் வெளிப்படும்.

சின்ன வயசில் பத்திரிகைகளில் வெளிவரும் கதைகளைப் படித்து படித்து தானும் அந்த மாதிரி எழுத வேண்டும் என்கிற ஆசை அவரைப் பிடித்து ஆட்டியிருக்கிறது. அப்படியான ஆசை நெஞ்சில் கிளர்ந்தெழுந்த பொழுது பார்க்கும் விஷயத்தை எல்லாம் கதைகளாக்கக் கைகள் பரபரத்திருக்கின்றன.  அப்படியாகத் தான் அவரது ஆரம்ப கால கதைகள் உருவாகியிருக்கின்றன.  அப்படி உருவான கதைகளில் ஒன்றாவது அச்சு வாகனமேறி ஏதாவது ஒரு பத்திரிகையில் பிரசுரமாகிவிட வேண்டும் என்று படாத பாடு பட்டிருக்கிறார்.

இப்பொழுது பெரியவர் அவளிடம் கேட்ட கேள்வி நெஞ்சில் கிளர்த்திய நினைவுகள் இப்படியான நினைப்புகளாய் ஊர்வலம் வந்தன.

"என்ன யோசனை, ஊர்மிளா?.. நான் எதிர்ப்பார்ப்பதற்கேற்ப எந்த நாவலும் கைவசம் இப்பொழுது இல்லையா?.." என்று அவர் திருப்பிக் கேட்ட பொழுது தான், அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மெளனமாக இருந்து விட்டோம் என்கிற உணர்வு மேலிட "சாரி.. நீங்கள் கேட்டதற்கு உடனே பதில் சொல்கிற மாதிரி தயார் நிலையில் நான் இல்லை.  இரண்டே நாட்களில் கையெழுத்துப் பிரதிகளாய் நம்மிடம் இருப்பனவற்றில் தேர்ந்தெடுத்து உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்" என்றாள்.

"அப்படித் தேர்ந்தெடுக்கும் பொழுது ஒன்றைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.  வெகுஜன பத்திரிகைகள் மூலம் வாசகர்களுக்கு இதுவரை தெரிந்திராத எழுத்தாளர் எழுதிய நாவலாய் அது இருக்க வேண்டும். அதான் முக்கியம்" என்றார்.

இப்படி அடிக்கடி அவர் சொல்லியிருக்கிறார்.  'தமிழ்ப் பத்திரிகைகளின் மூலம் வாசகர் உலகிற்கு அறிமுகம் ஆகாத எழுத்தாளர்' என்கிற வார்த்தைத் தொடர் மீது அவருக்கு உள்ள பிடித்தத்தை அவள் அறிவாள்.  ஆரம்ப காலங்களில் பத்திரிகைகள் மூலம் அல்லாது இவர் மூலம் புதுப்புது எழுத்தாளர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார் என்று எண்ணிக் கொண்டாள்.  பிற்காலத்தில் இந்த மாதிரியான எழுத்தாளர் வரிசைக்கு அவர் முக்கியத்துவம் கொடுப்பது விநோதமாக இருந்தது.

இந்தத் தடவையாவது அதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலில், "மன்னிக்கணும்.  நீங்கள் தப்பாக நினைக்கக் கூடாது.  இது வரை இதுமாதிரியான எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களாய் கிட்டத்தட்ட இருபதுக்கு மேலே நாம பிரசுரம் பண்ணி விட்டோம்.  பிரசுரித்து விட்டோமே தவிர, அந்த மாதிரியான நாவல்களை சந்தை படுத்துவதில் நிறைய சிரமங்கள் இருக்கின்றன.  நமது அத்தனை கிளை விற்பனை நிலையங்களுக்கும் இப்படியான நாவல்களை அனுப்பி வைத்து, மற்ற நாவல்களுக்குக் கொடுக்காத முக்கியத்துவதைக் கொடுக்கிற மாதிரி பிரதானப்படுத்தி கிளைகளில் பார்வையில் வைத்திருந்தும் விற்பனையைப் பொறுத்த மட்டில் மந்தம் தான்.  ஆனால் நாம் தான் விடாமல் வாசகர்களுக்கு இதுவரை அறவே தெரிந்திராத எழுத்தாளர்களின் எழுத்துக்களைத் தேடித்தேடி பிரசுரித்துக் கொண்டிருக்கிறோம்.  இப்படிச் செய்வது ஏதோ வீம்புத்தனமாக நாம் செய்வது போலிருக்கிறது.  ஆனால் ஏன் இப்படிச் செய்கிறோம் என்று தெரியவில்லை" என்று அவள் சொன்ன பொழுது பதில் பேசாமல் ஆழமாக அவளைப் பார்த்தபடி மெளனமாக இருந்தார் பெரியவர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அங்கு நிலவிய மெளனத்தைக் கலைத்தவராய், "விற்பனையைப் பொறுத்த மட்டில் நீ சொல்வது சரிதான் ஊர்மிளா! ஆனால் தரத்தைப் பொறுத்த மட்டிலும் நமக்குன்னு ஒரு கணிப்பு இருக்கிறதில்லையா? .. இவர்கள் வாசகர்களுக்கு வெகுவாகத் தெரிந்து பிரபலமாகவில்லையே தவிர, பிரபல எழுத்தாளர்களின் எழுத்துக்கு சவால் விடுகிற மாதிரியல்லவா அவர்கள் எழுத்து இருந்திருக்கிறது?..  நாம் கூட இந்தக் காரியத்தைச் செய்ய வில்லை என்றால், எப்படித் தான் அவர்கள் வாசகர்களுக்கு அறிமுகவாவர்கள்?.. அதனால் தான் அவர்கள் எழுத்தை அறிமுகப்படுத்துவதை ஒரு கடமையாகச் செய்கிறோம்" என்றார்.

"கையைச் சுட்டுக் கொண்டானும் அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டுமா?" என்று ஊர்மிளா கேட்க நினைத்தாள்.  அதிகப் பிரசங்கித்தனமாக இருக்குமோ என்கிற நினைப்பில் அப்படிக் கேட்கவில்லை. ஆனால் அவள் கேட்க நினைப்பதை அவள் முகம் காட்டிக் கொடுத்து விட்டது போலும். ஒரு நிமிடம் அவளைப் படிப்பது போல உற்றுப் பார்த்து விட்டு பெரியவரே தொடர்ந்தார். "பத்திரிகைத் துறை தான் என்று இல்லை. எல்லாத் துறைகளிலும் இன்று பிரபலப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் இல்லை. அவர்களும் ஆரம்ப நிலைகளில் ஜனங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அந்தந்தத் துறைகளில் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு பிரபலமானவர்கள் தான்.  அதைச் சொல்ல வரவில்லை. ஆனால் அடுத்தடுத்து புதியவர்கள் வெளிச்சத்திற்கு வரும் ரேஷியோ ரொம்ப குறைச்சலாய் இருக்கிறது.  என்ன காரணத்தினால் இப்படி என்று வீணாக யோசிப்பதை விட்டு, 'இந்தத் துறையில் நாம் இருக்கிறோம்; இதில் நம்மால் முடிந்ததைச் செய்வோம்'  என்கிற அடிப்படையில் இதைச் சொல்கிறேன்" என்று சொல்லி விட்டு திடுதிப்பென்று "ஒரு கதை சொல்றேன், கேட்கறையா?" என்று அவளைப் பார்த்தார்.

பேச்சின் நடுவில் இப்படி நிறைய கதைகள் சொல்வது பெரியவரின் பழக்கம்.  கூந்தலின் நடுவே சூட்டிக் கொண்ட ரோஜா போல, அப்படி அவர் சொல்கிற கதைகள் அவர் சொல்வதற்கு அழகு சேர்ப்பது போல மிக எடுப்பாகத் தோற்றமளிக்கும்.  அவர் கதை சொல்றேன் என்று சொன்னவுடனே அவர் சொல்லப்போவதைக் கேட்கும் ஆவல் பிரகாசமாய் ஊர்மிளாவின் முகத்தில் பளிச்சிட்டது.

பெரியவர் ஏதோ நினைவுகளில் ஆழ்ந்திருப்பது போல சில நிமிடங்கள் இருந்து விட்டு சொல்லத் தொடங்கினார்."அவன் ஒரு இளம் வாசகன்.  அவனுக்குன்னு ஒரு பேர் தேவையில்லே.  பத்திரிகைகள் படிக்கும் எல்லா இளம் வாசகர்களை யும் அவன் பிரநிதித்துவப் படுத்துவதால், அவனுக்குன்னு தனியா ஒரு பேர் தேவையில்லை. இருந்தாலும் கதை சொல்றத்துக்கு வசதியா அவன் பெயரை கேசவன்னு வைச்சிக்கலாம்.  சரியா?"

கதை கேட்கும் சுவாரஸ்யத்தில், "சரி.." என்றாள் ஊர்மிளா.

"பத்திரிகைகளில்லே வெளிவர்ற கதைங்களைப் படிக்கறதுன்னா, அவனுக்கு சோறு தண்ணி வேண்டாம்.  கதைகள்ன்னு மட்டுமில்லை, சித்திரக்கதைகள், துணுக்குகள், கேள்வி-பதில், தலையங்கம், தொடர்கதைகள்ன்னு ஒரு இதழை எடுத்து விட்டானானால், முதல் அட்டைலேந்து கடைசி அட்டை வரை எழுத்து விடாமல் படிக்கறது கேசவன் வழக்கம்.  படிக்கறதுன்னா, மேலோட்டமா இல்லே.  உன்னிப்பாப் படிப்பான். ஒரு பக்கத்தைப் படிச்சு முடிச்சு, அடுத்த பக்கத்தைத் திருப்பபறத்தே, அடுத்தப் பக்கத்லே முதல் வார்த்தை கேசவன் நினைக்கிற மாதிரியே இருக்கும். அப்படி ஒரு ஆழ்ந்த படிப்பு.  அவன் படிக்கற பல கதைங்க அவன் நினைக்கிறபடியே முடிவு கொண்டிருக்கும்.

"இப்படிப் படிச்சுப் படிச்சு நாளாவட்டத்திலே அவனுக்கும் கதை எழுதணுன்னு ஆசை. ரொம்ப நாளைக்கு அந்த ஆசையைத் தள்ளிப் போட்டுகிட்டு இருக்க அவனாலே முடியலே..  ஒரு நாளைக்கு என்ன செஞ்சான்னா, ஒரு நீள சைஸ் பேப்பர் ஒண்ணை எடுத்து வைச்சிக்கிட்டு முத்து முத்தா தன்னோட கையெழுத்தில அவனே ஒரு கதையை எழுதிட்டான்.

"அந்தக் கதையைப் பத்திரிகைக்கு கேசவன் அனுப்பறான்.  அப்படித்தானே?" என்றாள் ஊர்மிளா.

"பின்னே?.. எழுதிப் படிச்சுப் பாத்தப்போ வழக்கமா பத்திரிகைகள்லே வர்ற கதைங்க போலவே எந்தக்குறையும் சொல்ல முடியாதபடி அந்தக் கதை நன்றாக வந்திருந்தது.   இருந்தாலும் பலதடவை திருப்பித் திருப்பி அதைப் படிச்சு, தேவையில்லாத சில வார்த்தைகங்களை அடிச்சுத் திருத்தி அச்சு அசலா ஒரு பத்திரிகைக் கதையைத் தயார் படுத்திட்டான் அவன்.  எந்தப் பத்திரிகைக்கு அனுப்பலாம்னு யோசிச்சப்போ, ஒரு பிரபல பத்திரிகையோட ஞாபகம் அவனுக்கு வந்தது.  அந்தப் பத்திரிகையில வெளிவரும் கதைகள் எல்லாம் இதோ இப்போ இவன் எழுதியிருக்கிற கதைகள் போலவே இருக்கும்.  அதனால அந்தப் பத்திரிகைக்கே அனுப்பறதுன்னு தீர்மானிச்சிட்டான்.

"அப்படித் தீர்மானம் பண்ணிட்டானே தவிர எப்படி அனுப்பறதுன்னு தெரிலே. ஒரு பத்திரிகையில கதைப்போட்டி ஒண்ணு வைச்சிருந்தாங்க..  அதைப் படிச்சவுடனே பத்திரிகைகளுக்கு கதை அனுப்பணும்னா இப்படித் தான் அனுப்பணும்னு கேசவனுக்குப் புரிஞ்சது.  ஏ4 சைஸ் பேப்பர் ஒண்ணை எடுத்து அதிலே ஒரு பக்கம் மட்டுமே எழுதி பக்க எண்கள் கொடுத்து, எழுதியது கேசவன்ன்னு போட்டு அவன் முகவரியையும் தெளிவாத் தனித்தாளில்லே எழுதி ஒரு பழுப்பு நிற கவரில் போட்டு ஒரு வழியா எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டான்.  அவன் அனுப்ப நினைச்ச பத்திரிகையோட முகவரி கடைசி பக்கத்தில்லே இருந்திச்சி. அதையும் தவறில்லாம கவரின் மேலே எழுதினான்.  போஸ்ட்டாபீஸ் போய் அந்தக் கவரை எடை போட்டு எவ்வளவு ஸ்டாம்ப் ஒட்டணும்னு என்று தெரிஞ்சிண்டு ஸ்டாம்ப்பையும் ஒட்டி அன்றைய தபாலிலேயே அனுப்பிசிட்டான்.

"அடுத்த வார பத்திரிகை வர்ற வரை கேசவன் துடிச்சுப் போய்ட்டான்னு தான் சொல்லணும்..  அழகா கலர்க்கலரா படம் போட்டு, கொட்டை எழுத்தில் தன் பேரை மேலே எடுப்பா எழுதி தன்னோட கதை அந்தப் பத்திரிகையில வரும்ன்னு ஒவ்வொரு நாளும் கேசவன் கனவில மிதந்தான். அடுத்த வாரப் பத்திரிகை கடையிலே தொங்கினதைப் பாத்ததும் கேசவனுக்கு இருப்பு கொள்ளலே.  பத்திரிகையை வாங்கி பரபரப்போட பக்கங்களைத் திருப்பிப் பார்த்தான்.  ஏனோ அவன் கதையைக் காணோம்.  இருந்தாலும் மனசைச் சரிபடுத்திண்டு அடுத்த வார இதழ் வரும் வரை காத்திருந்தான்.  அந்த இதழிலும் அவன் கதை இல்லை.  அடுத்த வாரம், அடுத்த வாரம்ன்னு நாலைஞ்சு வாரங்கள் கழிச்சு ஒரு நாள் அவன் வீட்டு முகவரிக்கு அந்தப் பத்திரிகை அலுவலகத்தினர் கதையைத் திருப்பி அனுப்பிச்சிருந்தாங்க..  திரும்பி வந்திருந்த கதையைப் பார்த்ததும் கேசவனுக்கு பொசுக்னு போயிட்டது.  இருந்தாலும் மனம் தளரலே..  இன்னொரு கதை, இன்னொரு பத்திரிகைன்னு இப்படி எழுதறது, அனுப்பறது, அது திரும்பி வர்றதுன்னு இதுவே வாடிக்கையா போயிட்டது.

"அப்புறம்?" என்று சுவாரஸ்யத்துடன் கேட்டாள் ஊர்மிளா.

"சொல்றேன்.." என்ற பெரியவர்.   எவர்சில்வர் வெற்றிலைப் பெட்டி திறந்து கொஞ்சம் சீவல் எடுத்து அண்ணாந்து வாயில் போட்டுக் கொண்டு நாலைந்து துளிர் வெற்றிலை எடுத்துத் துடைத்து அவற்றின் முதுகில் மூணாவதைத் தடவினார். "அத்தனை கதைங்க திரும்பி வந்தும் கேசவன் கொஞ்சம் கூட மனம் தளரலே., .  நாளாவட்டத் திலே ஒரு பத்திரிகைக்கு அனுப்பின கதையை இன்னொரு பத்திரிகைக்கு அனுப்ப ஆரம்பிச்சான்.. அனுப்பித் திரும்பின கதைலே முதல் பக்கத்திலே மேலே பத்திரிகைகாரங்க அந்தக் கதை தங்களுக்கு வந்த தேதி தெரியும்படியா ரப்பர் ஸ்டாம்ப் குத்தியிருப்பாங்க..  அதனாலே அந்தப் பக்கத்து மேட்டரை மட்டும் இன்னொரு தனிப்பேப்பரில்லே எழுதி மற்றப் பக்கங்களுடன் அதை இணைச்சு அனுப்புவான்.   தான் அனுப்பற ஒவ்வொரு கதையும் பிரசுரமாகற மத்த கதைகங்களை விட சிறப்பா இருக்கறதா கேசவனுக்கு பட்ட ஒரு விஷயம் தான் அவன் தொடர்ச்சியா இப்படி அனுப்பறதுக்குக் காரணம் ஆயிற்று.  என்னைக்காவது ஒரு நாள் தன் கதை நிச்சயம் ஏதாவது ஒரு பத்திரிகையில் பிரசுரமாகியேத் தீரும்ன்னு உறுதியா அவன் நம்பினான்.  அந்த நம்பிக்கை கொடுத்த சக்திலே இப்படியான தனது அனுபவத்தையே ஆவேசத்துடன் ஒரு கதையாக்கி, அதற்கு 'நெஞ்சு வேகுமா?'ன்னு தலைப்பிட்டு 'கங்கை'ங்கற பத்திரிகைக்கு அனுப்பி வைச்சான்.

' ச்ச்ச்'சென்று உச்சுக்கொட்டினாள் ஊர்மிளா.  'நெஞ்சு வேகுமா?'  என்ன பரிதாபகரமான தலைப்பு, சார்! பாவம், கேசவன்..  கட்டக் கடைசியா இந்தக் கதை பிரசுரமாயிடறது.. இல்லையா? அதானே, கதை?"

"அதுக்குள்ளே முடிவுக்குப் போய்ட்டா எப்படி?" என்று குதப்பிய வெற்றிலை சீவலை கன்னக் கதுப்பின் ஒரு பக்கம் ஒதுக்கிக் கொண்டார் பெரியவர். "தமிழ் நாட்டிலே அந்தக் காலத்தில் வெளிவந்த ஒவ்வொரு பத்திரிகையையும் மறைமுகமாகக் குறிப்பிட்ற மாதிரி கேசவன் அதுக்குப் பெயர் வைச்சான்.. 'விகடன்'னா 'ஹாஸ்யன்',  'கல்கி'ன்னா 'எமன்'.  'குமுதம்'னா 'அல்லி.' இப்படி ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு பெயர் கொடுத்து, அதுக்கெல்லாம் ஒரு எழுத்தாளர் வாராவாரம் சிறுகதை அனுப்பி அவை பிரசுரமாகாம திரும்பி வர்றதாக் காட்டி, ஒரு கதையாவது ஏதானும் ஒரு பத்திரிகையில் பிரசுரமானால் தான் தன் நெஞ்சு வேகும்' என்று சொல்லி கதையின் கடைசியில் கேசவன் ஒரு பரிதாபகரமான கிளைமாக்ஸை வைச்சிருந்தான்."

"அடடா..!" என்று ஊர்மிளா நெட்டுயிர்த்த பொழுது அவள் குரல் தடுமாறிக் குழைந்தது.   "அப்புறம்?..."

"கதைப்படி கேசவன் இறந்து விடுகிறார்.  அந்தக்கடைசிக் கதை பிரசுரமானதைப் பாக்கக் கூட அவருக்குக் கொடுத்து வைக்கலே.  அழகழகா படங்கள் போட்டு அந்தக் கதை பிரசுரமாகியிருக்கிறது.  அந்தக் கதை பிரசுரமான இதழையும், ஒரு மணியாடர் பாரத்தையும் கையிலே வைச்சிண்டு தபால்காரர் ஒருத்தர் அவர் வீட்டு வாசல் பக்கம் நிற்கிறார்.   இனி கேசவனின் நெஞ்சு வேகும் என்கிற மாதிரி கதை முடியும்.." என்று சொல்லி முடித்து விட்டு வெற்றிலைப் பெட்டியை மூடினார் பெரியவர்.

கலங்கிய கண்களுடன் ஊர்மிளா, "உண்மையைச் சொல்லுங்கள்.. நீங்கள் தானே கேசவன்?" என்றாள்.

"அதை எப்படிக் கண்டுபிடிச்சே?"

"இன்னொருத்தர் எழுதிய கதையை யாரொருத்தாரேலேயும் இப்படி உணர்வு பூர்வமா நேரேட் பண்ண முடியாது.. அதான் உங்களைக் காட்டிக் கொடுத்திடுச்சி.."

"குட்.." என்றார் பெரியவர்.  "இதாம்மா, ஆரம்ப கால எழுத்தாளர்களோட நிலைமை.. நூறு பேர்னா பிரபல பத்திரிகைகளோட மோதிரக் கையாலே குட்டுப் பட்டு வெளிச்சத்துக்கு வந்தவங்க நாலைஞ்சு பேர் தான்.   ஏதாவது போட்டி, விசேஷ கால மலர்கள்னா புதுசா ஏழெட்டு பேருக்கு சான்ஸ் கிடைக்கும். அவ்வளவு தான்.  இப்போ சொல்லு.  புதுசா எழுத வர்றவங்களை ஆதரிக்கணும்னு நான் நெனைக்கிறதிலே தப்பில்லை தானே?" என்று அவர் சொன்ன பொழுது தனது பதிப்பக முதலாளியை நினைத்து அவளுக்குப் பெருமையாக இருந்தது.

இந்த சமயத்தில் கூட, விஜியைப் பற்றி, அந்த 'பார்வை' கதைபற்றி பெரியவரிடம் சொல்ல வேண்டுமென்று ஊர்மிளா நினைத்தாள். இருந்தாலும் லஷ்மணனிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு பிறகு பெரியவரிடம் அது பற்றி பிரஸ்தாபிக்கலாம் என்கிற எண்ணமே மேலோங்கியது.



(இன்னும் வரும்)













Thursday, February 9, 2012

பார்வை (பகுதி-26)

                  அத்தியாயம்--26       

ண்ணா சாலையில் மேம்பாலம் கடந்து கிரீம்ஸ் ரோடிற்குள் நுழைந்ததும் அஞ்சலகத்திற்கு முன்னாடியே ஒரு காம்ப்ளக்ஸூக்குள் இருந்தது அந்த பதிப்பகம்.  நாற்பதுக்கு இருபதில் கொஞ்சம் விசாலமாக இருந்த கட்டிடத்தில் முன்பகுதியில் அந்தப் பதிப்பகத்தில் பதிப்பித்திருந்த புத்தகங்களின் விற்பனைக் கூடத்தையும் அமைத்திருந்தார்கள்.   இந்த விற்பனைக் கூடத்தைத் தவிர்த்து வேலூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் சிறிதும், பெரிதுமாக புத்தக விற்பனை நிலையங்களையும் கொண்டிருந்தார்கள்.  அந்த வெளியூர் புத்தக நிலையங்களில் மற்ற பதிப்பகப் புத்தகங்களும், சாகித்ய அகாதமி, என்பிடி வெளியீடுகளும் ஏன் புத்தம் புதிய பிற மொழிப் புத்தகங்களும் கூட கிடைக்கிற மாதிரி புத்தக விற்பனையில் தனி கவனம் செலுத்துகிற அக்கரையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  எல்லா புத்தக விற்பனைக் கூடத்திலும் தமிழகத்தில் வெளிவரும் சிற்றிதழ்களும் கிடைக்கும்.  இதுவே இந்தப் பதிப்பகத்தின் தனி முத்திரையாய்த் தெரியும்.

அண்ணா சாலையில் டிஎம்எஸ்ஸூக்கு முன்னாடியே டிராஃபிக் ஜாமில் மாட்டிக் கொண்டு விட்டாள் ஊர்மிளா.  வழக்கமாக அலுவலகத்திற்கு வரும் நேரத்தைத் தாண்டி அரைமணி ஆகிவிட்டது. கிரீம்ஸ் ரோடில் கொஞ்சம் நெரிசல்.  சமாளித்து காம்ப்ளக்ஸின் பொது பார்க்கிங்கில் வண்டியை விட்டு விட்டு அலுவலத்திற்குள் நுழைகையில் முன் டெஸ்க்கில் அமர்ந்திருந்த கிருஷ்ணவேணி புன்முறுவலுடன் காலை வணக்கம் சொல்லி தன் அன்பைக் காட்டிக் கொண்டாள்.

பதில் வணக்கம் சொன்னாள். "ஸார் வந்திட்டாரா வேணீ?"

"பெரியவர் வந்திட்டார்.  சின்னவர் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவதாக வெளிலேந்து போன் பண்ணினார்" என்று சொன்ன படியே கணினியில் புத்தகப் பட்டியல்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்த தன் வேலையைத் தொடர்ந்தாள் கிருஷ்ணவேணி.

தன் கேபினுக்குள் நுழைந்து சொந்த சமாச்சாரங்களை லாக்கரில் வைத்து விட்டு, வாஷ் பேசினில் கை நீட்டி சுத்தம் செய்தபடியே, மேல் நிலைக் கண்ணாடியில் முகம் பார்த்து, கொஞ்சம் கேசத்தைச் சீர் செய்து கொண்டு தன் இடத்திற்கு வந்தாள் ஊர்மிளா.

புதுசாகப் பதிப்பிக்க வேண்டிய புத்தகங்களுக்கான கையெழுத்துப் பிரதிகள் கணினிக் காப்பியாகக் காத்திருந்தன.  வழக்கமாக பத்திரிகைகளில் வெளிவரும் சமாச்சாரங்கள் தான் தமிழகத்தில் புத்தகங்களாக உருவாகும் என்கிற பழக்கத்தைத் தாண்டி இவர்களே முதல் ப்ரிட்ண்டாக பல புத்தகங்களை பல தலைப்புகளில் வெளியிடுவதால் அதற்கான வாசகர்கள் இந்தப் பதிப்பகத்தின் தனிப்பட்ட வாடிக்கையாளர்களாக உருவாகியிருந்தார் கள்.  அவர்களுக்கெல்லாம் இலவச மெம்பர்ஷிப் கார்டுகள் கொடுக்கப்பட்டிருந்தன.  புதுசாக எந்த வெளியீடு வெளிவந்தாலும் அவர்களுக்கு தனி அஞ்சலில் தெரிவிக்கிற பழக்கமும் இருந்தது.  இதைத் தவிர ஆன்-லைன் விற்பனை வேறு. இந்தப் பணிகளையெல்லாம் சமாளிக்கிற விதத்தில் இந்த தலைமை அலுவலகத்தில் மட்டுமே இருபதிற்கு மேற்பட்டவர்கள் பணியில் இருந்தார்கள்.  அவர்கள் அத்தனை பேரும் புத்தகம், அவற்றை வெளியிடுதல், அவற்றை சந்தையில் விற்பனைப்படுத்து வது போன்ற கல்வியைப் பெற்றிருந்தார்கள் என்பது தான் சிறப்பு.  அவ்வப்போது புத்தக விற்பனைத் தொடர்பான அவர்கள் அறிவை மேம்படுத்துவதற்காக புதுசு புதுசாக முளைக்கும் கல்வி என்னன்ன தேவையோ அதை அவர்களுக்குக் கற்பிப்பதில் அந்த நிறுவனமே பொறுப்பேற்றுக் கொண்டது தான் அந்த விற்பனை நிலையத்தின் கூடுதல் சிறப்பு.  ஊர்மிளா சமீபத்தில் எழுதிய பரிட்சை தொடர்பான முயற்சிகளை எடுத்தது கூட அவளது நிறுவனம் தான்.

பெரியவரும் சின்னவரும் அண்ணன் தம்பிகள்.  அவர்கள் அப்பா காலத்தில் டிரெடிலில் கல்யாணப் பத்திரிகை அச்சிடுவதற்காக ஆரம்பித்த அச்சாபீசை காலத்தின் வளர்ச்சிகளுக்கேற்ப வளைந்து கொடுத்தும் நிமிர்த்தியும் கதைப் புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பகமாக இந்த அளவுக்கு மேம்படுத்தியிருக் கிறார்கள். இத்தனை வளர்ச்சியிலும் அப்பா வைத்த பிரஸ்ஸின் பெயரான குகன் அச்சகம் மட்டும் என்ற மாற்றமுமில்லாமல், அதே பெயரில் குகன் பிரசுரமாகத் தொடர்கிறது.    குகன் மட்டும் இராமாயண குகன் இல்லை; அப்பாவின் அப்பா பெயர் அது.

ஊர்மிளா இந்த பதிப்பகத்தின் சப்-எடிட்டர்.  அவள் பார்வையில் படாமல் பதிப்பக வேலை எதுவும் இறுதி ஷேப் அடையாது.  சின்னவர் எடிட்டர் என்றாலும் பெரும்பாலான வேலைகள் இவள் பார்த்து ஓக்கே செய்த பிறகு தான், இறுதிக்கட்ட அனுமதிக்காக சின்னவர் பார்வைக்கு வரும்; சின்னவரின் பெயரும் குகன் தான்.  தாத்தாவின் நினைவில் வைத்தது.

ஊர்மிளா அன்றைய வேலை சுவாரஸ்யத்தில் ஆழ்ந்து விட்டாள்.  அன்றாட வேலைச் சுழலே, அவளுக்கு தியானம் மாதிரி.  அந்தத் தியானத்தைக் கலைக்கிற மாதிரி அவள் காபின் கனெக்ஷன் சிணுசிணுத்தது.  லைனில் சின்னவர்.

"குட்மார்னிங்.. ஊர்மிளா சார்."

"குட்மார்னிங், ஊர்மிளா.  எக்ஸாம்லாம் எப்படி?"

"ஃபைன் சார்.  மனசுக்குத் திருப்தியா இருந்தது."

"அதான் வேணும்.  பை த பை டிஸ்க்கஷன் இருக்கு.  கொஞ்சம் வர்ற முடியுமா?"

"இதோ வர்றேன்.."

பார்த்துக் கொண்டிருந்த வேலையைப் பாதியில் நிறுத்தி விட்டு சின்னவர் அறையை அடைந்தாள்.  சின்னவர் அறையில் ஃபாரின் லாங்குவேஜ் செக்ஷன் சுந்தர வதனனும், விற்பனை செக்ஷன் சுலோச்சனாவும் இருந்தனர்.  இவள் உள்ளே நுழைந்து நாற்காலியில் அமர்ந்ததும் அவளுக்குக்காகத் தான் காத்திருந்த மாதிரி ஏதோ பாதியில் விட்டிருந்த டிஸ்கஷனைத் தொடருகிற தோரணையில் சின்னவர் அடுத்து பிரசுரம் செய்வதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டிருந்த ப்ரெஞ்ச் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களைப் பற்றி சொன்னார்.  மொழிபெயர்ப்பு நூல்களில் பெரியவர் அபிப்ராயப் படுகிற சில மாற்றங்களைப் பற்றியும் பிராஸ்தாபித்தார்.  அதெல்லாம் எந்தளவுக்கு அமுல்படுத்துவதற்கு சாத்தியமாகும் என்பது பற்றி சுந்தரவதனன் தனது கருத்துக்களை விலாவாரியாக எடுத்து வைத்தார்.   இதுவரை பிரசுரமான பிரெஞ்சு மற்றும் ஆங்கில நாவல்கள் ஒவ்வொன்றும் எத்தனை பதிப்புகள் கண்டிருக்கின்றன,  அவற்றின் விற்பனைக்கான சந்தை எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி ஒரு லிஸ்ட்டை வைத்துக் கொண்டு சுலோச்சனா ரிப்போர்ட் செய்த பொழுது இந்த இரண்டு மொழிகளிலும் விரைவில் ஓரிரண்டு மொழிபெயர்ப்புகளையாவது கொண்டு வரவேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பு தான் தூக்கலாகத் தெரிந்தது.  ஆனால் எந்தந்த நூல்கள் என்று தீர்மானிக்க முடியாமல் இருந்தது.  பெரியவரிடம் கலந்து கொண்டு ஊர்மிளா இதற்கான முடிவான ப்ரொபோசலை இன்னும் இருவாரங்களுக்குள் தயாரிக்க வேண்டும் என்று முடிவாயிற்று.

இந்த மாதிரியான டிஸ்க்கஷனுக்குப் போவதற்கு முன்பு செல்லை அணைத்து விடுவது ஊர்மிளாவின் வழக்கம்.  தனது கேபினுக்கு வந்து செல்லை உயிர்ப்பித்த பொழுது லஷ்மணனிடமிருந்து வந்திருந்த கால் மிஸ்ஸாகி இருப்பது தெரிந்தது.  அந்த அழைப்பைத் தொடர்ந்து அடுத்த இரண்டு நிமிஷங்களிலேயே அவன் அனுப்பியிருந்த மெஸேஜும் இன்பாக்ஸில் பளிச்சிட்டது: 'விஜி முகவரி கிடைத்து விட்டது.  மற்றவை நேரில்'.

இதான் அவளை லஷ்மணன் கவர்ந்ததில் தலையானது.  அவள் எதுசொன்னாலும் மறக்காமல் அதை நிறைவேற்றுவதற்காக அவன் எடுக்கும் முயற்சிகள்.

விஜியைப் பற்றி சின்னவரிடம் ஒரு குறிப்பு கொடுத்திருக்கலாம் என்று இப்பொழுது அவளுக்குத் தோன்றியது.  மறுநிமிடமே லஷ்மணனிடம் இது பற்றி கலந்து கொண்டு செய்வதே உசிதம் என்று பட்டது.

பக்கத்து கேபின் அனுராதா லச்சுக்கு கிளம்பும் தோரணையில் லஞ்ச் பேக்கும் தோளுமாக அவளைப் பார்த்து 'கிளம்பலை?' என்று கேட்கிற விதமாய் ஜாடை காட்டினாள்.

"இதோ.." என்று ஊர்மிளாவும் எழுந்து கொண்டாள்.  அப்படி உடனே எழுந்து கொண்டது அனிச்சையாக அவளுக்கே பட்டது.   மனம் பூராவும் ஏதேதோ எண்ண அலைபாயலில் சிக்குண்டிருக்க நடக்கும் நிகழ்ச்சிகளில் மெளனமாக பங்கு கொள்வது போன்ற உணர்வு தான் அவளுக்கு இருந்தது.

சாப்பாடு முடிந்து வருவதற்காகவே காத்திருந்த மாதிரி கை துடைத்துக் கொண்டு அவள் இடத்திற்கு அவள் வருவதற்கும் சுந்தரவதனன் அவளை நாடி வருவதற்கும் சரியாக இருந்தது.

அதே சமயத்தில் கேபின் டெலிபோன் கிணுகிணுத்தது.  காலர் ஐடியில் பார்த்தால் பெரியவர்.

"ஊர்மிளா, சார்!"

"ஊர்மிளா.  கொஞ்சம் வர்றீங்களா.  வரும் பொழுது இந்த வருஷம் நாம போட்ட தமிழ் நாவல்கள் ஃபைலையும் எடுத்திண்டு வாங்க."

"சரி சார்.  இதோ வர்றேன்."

நகத்தைக் கடிக்கற பாவனையில் இருந்த சுந்தரவதனனிடம், "பெரியவர் கூப்பிடறார்.  கேட்டுட்டு வர்றேனே?" என்றாள்.

"அவர் கூப்பிடுவதற்குள் உங்கள் கிட்டே சொல்லிடணும்ன்னு தான் அவசரமா வந்தேன்.  அதற்குள் அவர் முந்திக் கொண்டு விட்டார்."

எதற்காக வதனன் அப்படிச் சொன்னார் என்று அவளுக்குக் குழப்பமாக இருந்தது.  பெரியவர் அறைக்குப் போனால் அதற்கான காரணம் தெரிந்து விடும் என்கிற யோசனையில் பெரியவர் கேட்டதற்கான ஃபைலை ராக்கிலிருந்து எடுத்துக் கொண்டு நிமிரும் பொழுது அவள் செல் லேசாக சிணுங்கியது.  செல் திரையில் லஷ்மணனிடமிருந்து அழைப்பு என்று தெரிந்தது.

அவசர அவசரமாக எடுத்து "கொஞ்ச நேரத்தில் நானே பேசுகிறேன்.." என்று சொல்லி விட்டு அவன் பதிலுக்குக் காத்திராமல் ஆஃப் செய்தாள்.

பெரியவர் அறையை நோக்கி அவள் நடக்கையில் 'என்னவாக இருக்கும்?' என்கிற கேள்வியே அவள் மனம் பூராவும் நிரம்பி இருந்தது.


(இன்னும் வரும்)













Thursday, February 2, 2012

பார்வை (பகுதி-25)

                    அத்தியாயம்--25       

திர்பார்த்த மாதிரியே எல்லாம் அமைந்ததில் ஊர்மிளாவுக்கு ஏக குஷி.

பரிட்சையின் 'கதை அலசல்' பேப்பருக்கு 'பார்வை' கதையைத்தான் எடுத்துக் கொண்டிருந்தாள்.  முதல் நாள் கணவனோடு அந்தக் கதை பற்றி விவாதித்தது பரிட்சை எழுத சுலபமாக இருந்தது.    அந்தக் கதையின் நிகழ்ச்சிப் போக்குகள் ஒன்று மாற்றி ஒன்று நினைவுக்கு வந்து ஒரு மணி நேரத்தில் மனசுக்குத் திருப்தியாய் பரிட்சை எழுதி விட்டு ஹாலை விட்டு வெளியே வந்த பொழுது பெருமையாக இருந்தது.

வெளியே வந்ததும் இந்த சந்தோஷத்தை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று துடிப்பாக இருந்தது.  அவளுக்குத் தெரிந்த ஓரிரண்டு பேரை தேர்வு எழுதப் போவதற்கு முன்னாடியே மரத்தடிகளில் உட்கார்ந்து ஆளுக்கொரு புத்தகத்தை அவர்கள் புரட்டிக் கொண்டிருக்கும் பொழுது பார்த்தாள்.  அவர்களில் யாரும் இன்னும் தேர்வை எழுதி முடித்து விட்டு வெளியே வரவில்லை.  சுற்று முற்றும் பார்த்த பொழுது சுற்றுப்புறம் பூராவுமே வெறிச்சோடிக் கிடந்தது.  பார்வைக்குத் தட்டுப்படும் கொஞ்ச தூரத்தில் வயசான ஒருத்தர் நியூஸ் பேப்பர் ஒன்றில் ஆழ்ந்திருந்தார்.
அவர் தன் பெண்ணை பரிட்சைக்குக் கொண்டு விட வந்தவராய் இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டாள். இல்லாமலும் இருக்கலாம்.  அடுத்த கணம் இதையே கொஞ்சம் தீவிரமாக யோசித்தால் ஒரு கதை கிடைக்கும் போலிருந்தது. கிடைத்தால் லஷ்மணன் ரொம்பவே மகிழ்ந்து போவார்.

அந்த மரத்தடி நண்பி சொன்ன ஒன்று இப்பொழுது ஊர்மிளாவின் நினைவுக்கு வந்தது.  தனக்குத் தெரிந்தவளைப் பார்த்த உற்சாகத்தில், "ஹாய், உஷா! நீயும் இந்த பரிட்சைக்கு வந்திருக்கையா? சர்ப்ரைஸா இருக்கே!" என்றாள்.

"நான் கேட்க நினைத்ததை நீ கேக்கறையா?" என்றாள் உஷா.  ஊர்மிளாவுக்கு அந்த பதில் சொரேல் என்றிருந்தது.  தான் எழுத வந்ததில் அவளுக்கு என்ன ஆச்சரியம் என்று தெரியவில்லை. இவள் இப்படி பதில் சொல்லும் அளவுக்கு தானும் அப்படிக் கேட்டிருக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டாள். அடுத்த நிமிஷமே அதை மறந்து விட்டு, "உன் பிரப்ரேஷன்லாம் எப்படிடீ?" என்று அவள் புரட்டிக் கொண்டிருந்த புத்தகத்தைப் பார்த்தாள்.  அது, டாக்டர் மு.வ.வின் 'கரித்துண்டு'.

"என்னடி, அரதப் பழசா இருக்கே?.. சமீபகால புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டிருக்கலாமிலே" என்றாள்.

"எல்லாம் காரணத்தோடத் தான்.." என்று சொன்ன உஷா, சொன்ன காரணம் தான் ஊர்மிளாவுக்குத் திகைப்பாய் இருந்தது.  'ஊர்மிளா! இந்த பரிட்சை பேப்பர் திருத்தறவங்களுக்கு,  பரிச்சயம் உள்ள சப்ஜெக்ட்டா நாம எழுதப் போறது இருக்கணும்னு நான் நெனைக்கறேன்.  புதுசா எதையாவது எழுத எடுத்திண்டா நாம சொல்ல வர்றது அவங்களுக்குப் புரியாமப் போகலாம்..  அதுனாலே தான் மு.வ. என்னோட செலக்ஷன்..." என்றாள்.  "இன்னொண்ணும் தெரிஞ்சிக்கோ.." என்று அவளே தொடர்ந்தாள். "மு.வ. ஒரு பேராசிரியாய் இருந்தவர் இல்லையா?.. அதனாலே அவர் கிட்டே இவங்களுக்கு ஒரு மரியாதை, சாஃப்ட் கார்னர் எல்லாம் உண்டு.  இவங்களும் அவரை நிறையப் படிச்சிருக்க வாய்ப்பு இருக்கு.  அதான் என்னோட செலக்ஷன், மு.வ!.  எப்படி என்னோட சாய்ஸ்?..  நான் என்ன எழுதினாலும், நான் எழுத எடுத்திண்டவருக் காக மார்க் கிடைச்சிடும்.. என்ன சொல்றே?" என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டு ஊர்மிளாவுக்கு மயக்கமே வந்து விடும் போலிருந்தது.  ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விஷயத்தையும் எப்படில்லாம் யோசிக்கறாங்கன்னு அவளுக்குத் திகைப்பா இருந்தது.  'ஒரு வேளை உஷா சொல்ற மாதிரியே இருந்து விட்டால்?..   பட்ட சிரமம், தயாரிப்பு அத்தனையும் அவ்வளவு தானா?.. ஏன் இந்த மாதிரி கோணத்தில் சிந்திக்க லஷ்மணனால் கூட முடியாது போயிற்று?'--என்று எண்ணுகையிலேயே, கணவன் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.  செல்லிலாவது அவனைக் காண்டாக்ட் பண்ணி இந்த விஷயத்தைச் சொல்லி அவன் ஆறுதலைப் பெற வேண்டும் என்று நினைத்துக் கொண்ட தருணத்திலேயே, 'அசடே! இதுக்கெல்லாம் போய் அலட்டிக்கிறையா?  உன் ப்ரப்பரேஷன் எக்ஸலண்ட்! கோ அஹெட்!' என்று அவன் தன்னை உற்சாகப்படுத்துவது போல அவள் நினைவில் படிந்தது.  அந்த உற்சாகம் கொடுத்த தெம்பில் தான் தேர்வு தொடங்குவதற்கு கால்மணி முன்னாலான முதல்மணி அடித்ததும் பரிட்சை ஹாலுக்குள்ளேயே அவள் போனாள்.

வீட்டிற்குப் போனால் கணவன் இருப்பானா என்று தெரியவில்லை.  செல்லில் தொடர்பு கொள்ளலாமா என்ற எண்ணத்தைத் தவிர்த்தாள். காலம்பற விடியறத்தேயே கன்னிமாரா போக வேண்டும் என்று சொல்லியிருந்தான்.  'காந்தளூர் சாலை' சரித்திர நாவலில் பல்லக்கில் அந்த இளவரசி வேறு மயங்கிக் கிடக்கிறாள். அவளுக்கும் ஒரு வழி பண்ண வேண்டும்.  அதற்காகத் தான் கன்னிமாரா என்று அவளுக்கும் தெரியும்.

நேரே கன்னிமாராவிற்கே போய் லஷ்மணனைப் பார்த்து விட வேண்டுமென்று ஊர்மிளாவிற்குத் தோன்றிய சமயத்தில் அந்தத் தேர்வு மையத்தின் மணல்வெளிப் பிரதேசத்தில் வேகமாக நுழைந்து ஸ்கூட்டர் பார்கிங்கில் வண்டியை விட்டு விட்டுத் திரும்பிய லஷ்மணனைப் பார்த்த சந்தோஷத்தில் "இப்போத் தான் நெனைச்சேன்; உடனே வந்திட்டீங்களே?" என்று மலர்ந்தாள்.

"நினைத்தேன்; வந்தாய்!  நூறு வயது'ன்னு பாடினாக் கூட ஓக்கே தான்! கூடற வயசை ஞாபகப்படுத்தின மாதிரியும் இருக்கும்!" என்று அவன் சொன்ன போது,  "வவ்வே.." என்று அழகு காட்டியவளைக் கண்டு லஷ்மணன் சிரித்தான்.
"இந்த ஆக்ஷன் எப்படி வந்தது தெரியுமா?"

"எந்த ஆக்ஷன்?"

"இந்த வவ்வே தான்."

"அது எப்படி வேணா வந்திருக்கட்டும்.  ஆனா, இதுக்கு 'வவ்வே'ன்னு இந்தப் பேர் எப்படி வந்தது தெரியுமா?"

"முதல்லே ஆக்ஷன்.  அப்புறம் தான் அதுக்கேத்த பேர். இல்லையா?"

"இதுக்கு மட்டும் பேருக்கு ஏத்த ஆக்ஷன்னு இருக்கக் கூடாதா, என்ன?"

"போதும்மா, தாயே! எனக்குத் தலைக்கு மேலே வேலை கெடக்கு. ஒரு கிரைம், ஒரு சோஷியல், ரெண்டு ஹிஸ்டாரிகல்னு வண்டி ஓடிகிட்டிருக்கிருக்கு.  கிரைம்லே கதாநாயகி பெருநிலச்செல்வி அந்த திருட்டு கும்பல் கிட்டே மாட்டிண்டிருக்கா.  ஹிஸ்டாரிக்கல் காந்தளூர் சாலையிலோ கந்தர்வ கன்னியாய் மோஹனா பல்லக்கில் மயங்கி கிடக்கறா.."

"என்ன கரிசனம்?.. அவளைத் தண்ணி தெளிச்சு எழுப்ப வேண்டியது தானே?" என்று வெகுண்டாள் ஊர்மிளா.  "அதுசரி, கிரைம் கதாநாயகியும், சரித்திரக் கதாநாயகியும் இண்டர்சேஞ்ச் ஆயிட்டாங்களா,  என்ன?.. நேத்திக்கு கிரைம் கதாநாயகி பேர்னா மோஹனான்னு சொல்லியிருந்தீங்க?" என்று அவள் பேச்சில் குறும்பு கொப்பளித்தது.

"ஏதோ ஒண்ணு.  இதெல்லாம் பெரிய விஷயமில்லை.  தனித்தனியா ரெண்டு கதைக்கும் அடுத்து வர்ற அத்தியாயத்தை யோசிச்சாலும் பின்னாடி ஒண்ணுக்கு ஒண்ணு வெட்டி ஒட்டி கனெக்ட் பண்ணிக்கலாம்.  நான் அதைப் பாத்துக்கறேன்."

"கன்னிமாரா போகணும்னு சொல்லியிருந்தீங்களே?"என்று கேட்ட பொழுது ஊர்மிளாவின் புருவங்கள் உயர்ந்தது அவனை வெகுவாக டிஸ்டர்ப் செய்தது.

இருந்தாலும் ஒருவழியாய் மனசை சமனப்படுத்திக் கொண்டு சொன்னான். "கன்னிமாரா போனேனா?..  போய் நிறைய குறிப்பெல்லாம் எடுத்திண்டிருக்கேன்.  இராஜராஜசோழன் மெய்க்கீர்த்தி ஒண்ணு.  'தேசுகொள் ஸ்ரீகோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜத் தேவர்' ன்னு முடியும். இந்த ஒத்தை வரிலே தான் கதையோட அத்தனை அழுத்தமும் குவியறது.  நீயே பாரேன். இந்த 'காந்தளூர் சாலை' என்ன அருமையா டெவலப் ஆகப் போறதுன்னு."

"அப்போ நம்பிக்கை கிடைச்சாச்சு.  இப்பவே பெருநிலச் செல்வியை மயக்கத்லேந்து எழுப்பிடலாம்னு சொல்லுங்க."

"ஹஹ்.. இந்தக் குறும்பு தானே வேண்டாங்கறது?.."

"பின்னே என்னங்க?.. அவளும் எத்தனை காலம் தான் மயக்கத்லே கிடப்பா.. சரியா போன மாசம் ஒண்ணாம் தேதி அவளை மயக்கத்தில் ஆழ்த்தினது. அதுக்கு மேலே ஒரு வரி எழுதலே.  ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடப்போறது.."

"ஒண்ணும் ஆகாது... தேசுகொள் ஸ்ரீகோவிராஜராஜகேசரி..... கவசம் மாதிரி அந்த மெய்க்கீர்த்தி இருக்கு..  நீ ஒண்ணுக்கும் கவலைப் படாதே. அவளை மயக்கத்திலிருந்து எழுப்பினதும் மறுவேலையா..."

"அதையெல்லாம் வீட்டுக்குப் போய் வைச்சிக்கலாம். அதுக்கு முன்னாடி ஒண்ணு."

"சொல்லு." என்று அவன் சொன்ன போதுதான் அந்த எக்ஸாம் எழுதிவிட்டு அவளுக்குப் பின் வந்த முதல் ஆளாய் ஒருத்தர் வெளியே வந்து கொண்டிருந்தார்..  உஷா வருகிறாளா என்று பார்த்தாள்.  ஊஹூம்.  'கரித்துண்டு' மட்டுமில்லை, 'கள்ளோ காவியமோ',  'அகல் விளக்கு' என்று எல்லாத்தையும் ஒருகை பார்க்கிறாளோ என்று நினைத்துக் கொண்டாள்.

"இந்த எக்ஸாம் பேப்பர்லாம் திருத்தறவங்க டேஸ்ட் பத்தி என் ப்ரண்ட் ஒருத்தி ஒரு ஒப்பீனியன் சொன்னா. அப்போ, மு.வ. பத்தி பேச்சு வந்தது." என்று அவள் சொன்ன போது, லஷ்மணனின் முகம் பிரகாசமடைந்தது.

"ஓ. ஃபைன்.. மு.வ.வோட 'கரித்துண்டு' படிச்சிருக்கையா?.."

"சரியாப் போச்சு! நீங்களும்.."

"பின்னே?.. மு.வ.ன்னா மு.வ. தான்.  ஹி இஸ் கிரேட்! ஒரு காலத்தில் காலேஜ் ஸ்டூடன்ஸ் எல்லாருக்கும் அவர் எழுத்துன்னா ஒரு கிரேஸ்.." என்று காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான் லஷ்மணன்.

"அதான் விஷயமே.  அந்தக் காலத்திலே ஸ்டூடன்ஸா இருந்தவங்க, இப்போ பேப்பர் திருத்தறவங்களா இருந்தாங்கன்னா..."

"இருந்திட்டுப் போகட்டுமே! நீ என்ன சொல்ல வர்றேன்னு தெரியலை.  மு.வ.வைப் பிடிச்சவங்களுக்கு பண்பட்ட எல்லா எழுத்தையும் பிடிக்கும்.  அப்படிப்பட்டவங்க எக்ஸாம் பேப்பரைத் திருத்தினா, உன்னைப் பொருத்த மட்டில் அது ஒரு அட்வான்ட்டேஜ் தான்.  இந்த 'பார்வை' சப்ஜெக்ட் நிச்சயம் அவங்களைக் கவரும்."

"எதுன்னாலும் அசர மாட்டீங்களே! இப்படி ஏதாச்சும் ஒண்ணு ரெடியா கைவசம் வைச்சிருக்கறதல்ல ஒண்ணும் கொறைச்சலில்லை" என்று வெளிக்குச் சொன்னாலும்  ஊர்மிளாவுக்கு அவன் சொன்னது மனசுக்கு ரொம்ப நிம்மதியைக் கொடுத்தது. அவளுக்குக் கிடைத்த நிம்மதியில், வழக்கத்தை விட இன்று லஷ்மணன் அழகாகத் தெரிவதாக மனசுக்குப் பட்டது.

"இன்னிக்கு என்ன முழுநாளும் ஆபிசுக்கு டேக்கா கொடுத்திட்டே தானே?"

"ஏறக்குறைய அப்படித்தான்."

"அது என்ன ஏறக்குறைய?"

"ஒண்ணுமில்லே.  ஒரு முன்னேற்பாடா அப்படிலாம் சொல்லிக்கறது தான்."

"வர வர நீ பேசறதெல்லாம் ஒண்ணும் புரியவே மாட்டேங்கறது. ஏதோ யட்சிணி உள்ளிருந்து பேசறது மாதிரி."

"யட்சிணி! ஹை! பேரு நன்ன இருக்கே! அடுத்த கதை நாயகி பேர் இது தான்."

"போனாப் போறதுன்னு விட்டுக் கொடுக்கறேன். அப்போ ஒண்ணு செய்."

"அந்த 'பார்வை' கதை இன்ஷ்பிரேஷனா நமக்குத் தோணின கதையை நம்ம பார்வைலே வேறே மாதிரி டெவலப் பண்ணணும்.  அவ்வளவு தானே?"

"நீதான் வெட்டிண்டு வான்னா, கட்டிண்டு வருவேயே, கண்ணு! கோ ஆன் வித் யுவர் ஒர்க்..  நடுவிலே 'காவேரி' ஆசிரியரோட பேசி கதை ரெடிங்கற நியூஸை கன்ஃபர்ம் பண்ணிடறேன்."என்று செல்லை பாக்கெட்டிலிருந்து எடுத்தான் லஷ்மணன்.

"கதையின் அவுட்லைனே ரெடியாகலே.  அதுக்குள்ளாற கன்ஃபர்மேஷனா?.. என்ன கதையா, இருக்கு?.."

"எதுக்குன்னா இப்பவே கஃன்பர்ம் பண்ணிட்டா அடுத்த இதழில் விளம்பரம் கொடுக்க தொடர்கதைக்குத் தலைப்பு கேப்பாங்க.. அப்படி தலைப்பு கேக்கறது தான் நம்மை உசுப்பி விடற மாதிரி! அப்படி கேக்கற நேரத்லே மனசிலே என்ன படறதோ, அதான் தலைப்பு. தலைப்பு கொடுத்து கமிட் ஆனாத்தான் கதையே தோணும். இதானே வழக்கம். என்ன புதுசா கேக்கறே?"

"அந்த விஜி என்னமாய் எழுதியிருக்கார் பாருங்க.. அந்த மாதிரி இந்தப் புதுத் தொடர்கதைக்காவது ஏதாவது புதுசா யோசனை பண்ண மாட்டீங்களா.."

"எல்லாத்துக்கும் நான் ரெடி.  நீ ரெடியான்னு சொல்லு."

"நான் என்னத்துக்கு ரெடியாகணும்?.."

"விஜி மாதிரி எழுத முயற்சித்தா மாசத்துக்கு ஒண்ணு தான் எழுத முடியும்.  இப்ப மாதிரி நாலு பத்திரிகைலே நாலு தொடர்கதை எழுத முடியாது. வர்ற இன்கம்லே முக்காவாசி கட்டாயிடும். இப்போ சொல்லு. இதுக்கா, அதுக்கா எதுக்கு ரெடியாகணும் சொல்லு."

"............................."

"'ஆகாசகங்கை'லே சினிமாச் செய்திலாம் எழுதறாரே உத்தமபுத்திரன், அவர் நேத்திக்குச் சொன்னார்.  டைரக்டர் சந்திரமோகன் என் கதை ஒண்ணை எடுத்து வைச்சிண்டு ரொம்ப சிலாகிச்சாராம்.  சினிமாக்கேத்த அவுட்பிட்ன்னாராம்.  'இந்த எழுத்தாளர் எனக்கு ரொம்பத் தெரிஞ்சவர் தான். நான் வேணா அவர் கிட்டே சொல்லி கதையை வாங்க ஏற்பாடு செய்யட்டுமான்'னு அவர் கிட்டே உத்தமபுத்திரன் கேட்டாராம்."

"அடிசக்கை.  அதுக்கு சந்திரமோகன் என்ன சொன்னாராம்?"

"வகையா ஏதாவது தயாரிப்பாளர் கிடைச்சதும் சொல்றேன்னு சொல்லியிருக்காராம்."

"உம்? வகையா அவருக்குக் கிடைக்க என்ன செய்யறது?"

"அவர் அப்படி சொல்லிட்டாரேன்னு உத்தமபுத்திரனும் இந்த மேட்டரை விட்டுடலையாம்.  வர்ற இதழ் 'ஆகாசகங்கை'லே ஒரு தயாரிப்பாளரைப் பேட்டி காணப் போறாங்களாம்.  ஒரு வித்தியாசமா, அந்தத் தயாரிப்பாளரைப் பேட்டி காண்றது டைரக்டர் சந்திரமோகனாம்.  அந்த சமயத்தில் என் கதையை பிரஸ்தாபித்து ரெண்டு பேரும் விவாதிக்கறதா உத்தமபுத்திரன் ஏதோ அரேன்ஜ் பண்ணியிருக்காராம்.  எப்படிப் போர்றதுன்னு பாக்கலாம்."

"எது எப்படிப் போனாலும் அந்த விஜியை பத்தி உங்களுக்குத் தெரிஞ்ச நாலு பத்திரிகைகாரங்ககிட்டே சொல்லி வையுங்க.. நன்னா எழுதறார்; அவருக்கும் ஒரு வழி கிடைக்கட்டும்."

"டன்" என்றான் லஷ்மணன்.  வருங்காலத்தின் வயிற்றில் இருப்பதைத் தெரியாது சொன்ன வார்த்தையாக அது இருக்கப் போவது அந்த நேரத்தில் அந்த இரண்டு பேருக்குமே தெரியாது.

(இன்னும் வரும்)

Wednesday, February 1, 2012

பார்வை (பகுதி-24)

                     அத்தியாயம்--24

"பார்வையிழந்தோரைப் பற்றிய கதைகளை நிறையப் படிச்சிருக்கேன், ஊர்மிளா! நானும் அந்த மாதிரி ஒண்ணிரண்டு கதைகளை எழுதியிருக்கேன். ஆனா இந்தக் கதையோ சந்தர்ப்ப வசத்தால பார்வையிழந்த ஒருத்தரை நாயகனாகக் கொண்ட கதை; அதுவும் அவரே அவரது நினைவுகளைச் சொல்கிற மாதிரியான ஒரு கதை, இல்லையா?" என்று சொல்ல ஆரம்பித்த லஷ்மணன் ஒரு நிமிடம் நிறுத்தினான்.

ஊர்மிளா மடியில் ஒரு சின்ன நோட்டுப் புத்தகத்தை வைத்துக் கொண்டு அவன் சொல்வதை குறிப்புகளாகக் குறித்துக் கொண்டு வந்தாள்.

"பார்வையற்ற ஒருத்தர் தனது கடந்த கால நினைவுகளை நினைவுப்படுத்திக் கொண்டு சொல்றதா எழுதறது சுலபம்.  ஆனால் அவர் தனது நிகழ்கால நடவடிக்கைகளையும் நேரடியாக வர்ணிக்கிற மாதிரி இந்தக் கதையை எழுதினவர் எழுதினதைப் படிக்க ஆரம்பிச்சவுடனேயே இப்படி எழுதறதர்லே இருக்கற அந்த சிரமம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாப் புரிய ஆரம்பிச்சது.  நானும் எழுத்துத் துறைலே இருக்கறதால தெரியற அனுபவம் இது. எதையும் பார்த்துத் தான் நம்மாலே உள்வாங்கிக் கொள்ள முடியறது, இல்லையா?... ஆனா அவருக்கு அதுக்கான வழியும் இல்லேன்னு தெரியறப்போ தன்னைச் சுத்தி நடக்கற விஷயங்களை உணர்வதினாலே மட்டுமே அதையெல்லாம் எப்படி அவர் கிரக்சிக்கிறார்ங்கறதை துல்லியமா சொல்ல இவர் ரொம்பவுமே முயற்சித்திருக்கார்.  இந்தக் கதை எழுதியதின் சிறப்பம்சங்கள்லே முக்கியமானது அது.."என்று லஷ்மணன் சொல்லிக் கொண்டு வருகையிலேயே, "அதை இந்தக் கதைலே வர்ற நிகழ்ச்சிகளூடேயே ரெண்டு மூணு உதாரணம் காட்டி விளக்கிச் சொன்னா மனசில நன்னாப் பதியுமே?" என்றாள் ஊர்மிளா.

"ரெண்டு மூணு கூட வேண்டாம்.  ஒரு இடத்தைச் சொல்றேன்.  அதுமாதிரி இருக்கிற நிறைய இடங்களை நீயே படிச்சு ரசிக்கலாம்.." என்று சொன்ன லஷ்மணன், அந்த தீபாவளி மலரை எடுத்து, அந்த 'பார்வை' கதை பிரசுரமாகியிருக்கிற பக்கங்களைப் புரட்டினான். "எஸ்.. இப்போ இடத்தை எடுத்துக்கோ.."என்று கதையின் அந்த இருபதாம் பகுதியின் ஆரம்பத்தைப் படிக்க ஆரம்பித்தான்.

'புரொபசர் இன்னும் வரலே. கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி சுவர் பெண்டுல கடியாரத்தில் அடிச்ச மணியை எண்ணினதிலே மணி ஒன்பதுன்னு தெரிஞ்சது. தம்பி மாடிப்பக்கம் தன்னோட வயலினை எடுத்து வைச்சிண்டு சுருதி கூட்டிண்டிருக்கான் போலிருக்கு...'

-- "இந்த இடத்தை எடுத்துக்கோ.  அந்த பார்வையற்றவர்..." என்று சொல்ல ஆரம்பித்த லஷ்மணன் கொஞ்சம் தயங்கி அவளைப் பார்த்தான். "அவரைக் குறிப்பிட்டுச் சொல்றத்தேலாம், 'பார்வையற்றவர்,  பார்வையற்றவர்' ன்னு அடிக்கடி சொல்றது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.  இந்தக் கதையை எழுதினவர் வேணும்னா அவருக்கு ஒரு பேரைக் கொடுத்திருக்காம இருந்திருக்கலாம்.. நாம அவருக்கு ஒரு பேர் வைச்சிடலாமே! என்ன சொல்றே?" என்று கேட்டு அவளைக் கூர்மையாகப் பார்த்தான்.  லஷ்மணனின் கலங்கிய கண்களூடே, அந்த கதாபாத்திரத்தின் மீது அவன் கொண்டிருந்த அன்பு பளிச்சிட்டதை ஊர்மிளாவால் உணர முடிந்தது.

அந்தக் கலக்கம் அவளையும் பற்றிக் கொண்ட நா தழுதழுப்பில்,"நீங்களே அவருக்கு ஒரு பேரை வைச்சிடுங்க.. அவரைக் குறிப்பிட்டுப் பேசறத்தேல்லாம் இனிமே அந்த பெயர் கொண்டே அவரை அழைக்கலாம்.." என்றாள்.

"அதான் சரி.. ம்.. என்ன பேர் வைக்கலாம்?"ன்னு முணுமுணுத்த லஷ்மணன்," "உண்மைலே பார்வைங்கறது என்ன?.. கண்ணால் பார்க்கிற செயலின் பலனைத்தான் பார்வைன்னு பொதுவா நாம வழக்கத்லே கொண்டிருக்கோம்.  ஆனா, யோசிச்சுப் பார்த்தா அப்படி நினைக்கறது கூட ஓரளவு தான் சரின்னு தோண்றது.  ஒரு விஷயத்தைப் பத்தி ஒருவர் கொண்டிருக்கிற எண்ண வளர்ச்சிதான் பார்வைங்கற வார்த்தைக்கு முழு அர்த்தத்தைக் கொடுக்கறதுன்னு தெரியும்.  அப்படிப் பார்த்தா அவருக்கு அறிவழகன்'னு பேர் வைச்சுடலாமா?" என்று கேட்டான்.

"ஓ.. நல்ல பேர் தாங்க.. இனிமே அப்படியே அவரைக் கூப்பிடலாம்.."

"ஒரு வேடிக்கை பாத்தையா?.. இந்தக் கதையை எழுதினவர் யாரோ. பத்திரிகைலே பார்த்தா 'விஜி'ன்னு போட்டிருக்கு.  ஆணோ, பெண்ணோ தெரிலே.  அவ்வளவு வெகுஜன அறிமுகம் ஆகாத எழுத்தாளர் தான்;  டெல்லிலே இருக்கறதா யாரோ சொன்னது ஞாபகம் வர்றது.  அவர் எழுதின கதையைப் பத்தி தொடர்ச்சியா நாம பேசறதே இன்னொரு கதைக்கான அடித்தளமா அமையும் போலிருக்கு... இதை நீ உணர்றையா?"

"எக்ஸாட்லி.. இந்த வினாடி நானும் இதையேத் தாங்க நினைச்சேன்.  உடனே நீங்களும் சொல்லிட்டீங்க.... நம்ம கதையையும் இப்படியே ஆரம்பிக்கலாம்.. எப்படிப் போர்றதுன்னு தான் பாக்கலாமே?"

"நன்னா ஒரு ஷேப் கிடைக்கும்னு தோண்றது.  'காவேரி' பத்திரிகை ஆசிரியர் கூட ஒரு தொடர்கதைக்கு என்னைத் தொணப்பிண்டே இருக்கார். நன்னா வந்தா கொடுத்திடலாம்.. என்ன சொல்றே?"

"கொடுக்கலாம்னா மேலே தொடரணும்.  'பார்வை' பத்தி சொல்லிண்டே வந்தீங்கள்லே.. அதை அப்ரப்ட்டா எங்கே விட்டீங்கங்கன்னு ஞாபகம் இருக்கா?.." என்று கேட்டுக் கொண்டே குறிப்பு நோட்டைப் பார்த்தாள். "ஆங்! அந்த பெண்டுலம் கடிகாரம்..."

அவள் எடுத்துக் கொடுத்த ஞாபகச் சரடைப் பற்றிக் கொண்டான் லஷ்மணன். "எஸ்.. அவரோ பார்வையற்றவர்.  மணி ஒன்பதாகிறதுன்னு அவர் புரிஞ்சிக்கணும்.  கடியாரத்தில் தான் மணியைப் பாக்க முடியும்.  அப்படிப் பாக்க அவரால முடியாது.  அதனாலே கிட்டத்தட்ட இந்த காலகட்டத்தில் மறந்தே போன அந்தப் பெண்டுல கடிகாரம் வர்றது. அந்த ஒலி கொண்டு அவர் நேரத்தை அறியறதா வர்றது.. அதே மாதிரி, மாடிலேந்து வர்ற வயலின் சுருதி கூட்டற ஒலியால் தம்பி மாடிலே இருக்கான்னு உணர்றது. இப்படி காதே அவருக்கு கண்ணா இருக்கறதை பல இடங்கள்லே ரொம்பப் பிரமாதமா உபயோகப்படுத்தியிருக்கிறார்.  நான் கூட இந்த விஷயத்தை எங்கேயானும் அவர் கோட்டை விட்டுடுவாரோன்னு உன்னிப்பா படிச்சேன்.. ஊஹூம்.. ஒரு இடத்லே கூட இந்த விஷயம் ஸ்லிப் ஆகலே.  இந்தக் கதைலே இந்த சாமர்த்தியதை விஜி மெயிட்டன் பண்ணினது தான் அவரோட சூரத்தனமா எனக்குத் தெரியறது.." என்றான்.

"ஓரளவு நல்ல பாயிண்ட்டைத் தான் எடுத்துக் கொடுத்திருக்கீங்க..  இருந்தாலும்.."

"என்ன இருந்தாலும்?.."

"என்னமோ தோண்டித் துருவி சொல்ற மாதிரி இருக்கு.  பளிச்சின்னு கண்ணுக்குப் படற மாதிரி.."

"ஸீ.. அந்த மாதிரி வெளிப்படையா தெரியற விஷயம்ன்னு நிறையச் சொல்லலாம். ஆனா, இந்த மாதிரி உன்னிப்பா கவனித்துச் சொல்றதைத் தான் உன்னோட ஆப்ஸர்வேஷனா எக்ஸாம்லே எடுத்திப்பாங்க.. அன்டர்ஸ்டாண்ட்?.."

"கொஞ்சம் ஏமாந்தா வகுப்பே எடுப்பீங்க போலிருக்கு..?"

"ஏன் அப்படில்லாம் நெனைச்சிக்கறே?..  உனக்கு ஈடுபாடு இருக்கற விஷயத்திலே உனக்குத் தெரியாததை இன்னொருத்தர் கிட்டேயிருந்து தெரிஞ்சிக்கறே.. உனக்குத் தெரிஞ்சிருக்கறதை நீ இன்னொருத்தருக்கு சொல்றே... அவ்வளவு தான். ரொம்ப சிம்பிள்"

"ஒவ்வொருத்தர் ஈகோவும் ஒவ்வொரு மாதிரி. நீங்க அப்படி நெனைக்கிறீங்க.. எல்லாரும் அப்படி நெனைக்க மாட்டாங்கள்லே?"

"ஆரம்பத்லே அப்படித் தான் தோணும்.  ஆனா புதுப்புது விஷயங்களைத் தெரிஞ்சிக்கணுங்கற ஆர்வம் வர்றச்சே, தனக்கு அதுவரை அதுபத்தி தெரியாததெல்லாம் எந்த வழிலே தெரிஞ்சாலும் அதுபத்தி மேலும் மேலும் எந்த வழிலேயானும் தெரிஞ்சிக்கணும்ங்கற ஆர்வம் தான் கூடும். இதிலே இன்னொரு ஸ்டெப்பும் இருக்கு.  தனக்குத் தெரிஞ்சதை தான் சொல்றத்தே லாம் அதை இன்னொருத்தர் ஆர்வத்துடன் காது கொடுத்துக் கேக்க ஆரம்பக்கிறச்சே, இன்னொருத்தர் சொல்றத்துக்கும் தான் காது கொடுக்கணுங்கற உணர்வு தன்னாலே வரும்.  நாளாவட்டத்தில் இதுவே பழக்கமாயிடும்.. இப்படி பழக்கமாறது ரொம்ப ஆரோக்கியமான விஷயம். நிறைய விஷயங்கள் எங்கெங்கிருந்து எல்லாமோ நம்மைத் தேடி வர்றதை அனுபவபூர்வமா உணரலாம். உலகமே தகவல் கோளமாக இப்போ மாறிண்டு வர்றது தான் உண்மை.  எல்லாரும் எல்லாமும் தெரிஞ்சிக்கிறதுங்கறது அவ்வளவு சாத்தியமில்லாத விஷயமா மாறிப்போச்சு.  அந்த அளவுக்கு நிறைய விஷயங்கள்; அது பத்தின நிறைய தகவல்கள். புதுசு புதுசா ஜனிக்கற தகவல் சரடுகளோட நம்மையும் சேர்த்துக் கட்டிக்கலேனா, நாம மட்டும் தனியா கத்தரிக்கப்பட்டு அந்தரத்லே தொங்கற மாதிரி ஆயிடும்.  அப்படி ஆனா, அப்புறம் போன நூற்றாண்டில்லே நடந்த விஷயங்களைத் தான் இரண்டாயிரத்து பன்னெண்டிலும் பேசற பழமைவாதிகளா நமது அறிவு குறுகிடும்."

"இன்னொண்ணு ஞாபகத்துக்கு வர்றது.  மறந்து போயிடப்போறது. சொல்லிடறேன்.."

"சொல்லு.."

"கிட்டத்தட்ட ஈகோங்கற வார்த்தையோட சம்பந்தப்பட்ட ஒண்ணு தான், அந்தப் பார்வை கதைலே வர்ற ஒரு இடம்.. அந்த அறிவழகனுக்குப் பார்வை திரும்பி கிடைச்சதும் ஒரு வரி வரும்.  'முதல்லே பார்வை இருந்தப்போ எல்லாத்லேயும் எனக்கு இருந்த தன்முனைப்பு, பார்வை இல்லாத போது இல்லாது போனதுன்னு சொல்லி அந்த அவலம் மீண்டும் வந்திடக்கூடாது' ன்னு அவர் நெனைச்சிக்கற மாதிரி ஒரு வரி வரும். அவர் பட்ட கஷ்டங்களே மற்றவர்கள் மேல அவர் கொண்டிருந்த பிடிப்பினாலே என்கிற மாதிரி அவரை உருவாக்கிட்டு, இந்த மாதிரி தன்முனைப்பு கொண்டிருந்த ஆசாமியா அவர் இருந்திருந்தார் என்கிறதை ஏத்துக்க முடியலே.  கதையின் நடுவே நுழைக்கப்பட்ட இந்த ஒத்தை வரி கதைக்கு ஒட்டாம இருக்கறது மட்டுமில்லை,  இது அந்த அறிவழகன் மேலேயே சேற்றைக் குழைத்துப் பூசற மாதிரி இல்லே?"

"குட்! டீப்பாத் தான் படிச்சிருக்கே..  இதான் வேணும்.  நீ சொல்றது சரிதான்.  ஆனா எல்லாத்தையும் கதைலே சொல்லணும்னு அவசியம் இல்லே. அந்த அறிவழகன் அவரது ஆரம்ப வாழ்க்கைலே அப்படி இருந்தார்ன்னு அவரே நெனைச்சிண்டார்ன்னா,  சரின்னு விட்டுட்டுப் போயிட வேண்டியது தான். ரெண்டாவது-- கண் பார்வை அவருக்கு இருந்த காலம், அது இல்லாத காலம், மறுபடியும் வந்த காலம்ன்னு இந்த மூணு பருவத்திலேயும் வாழ்ந்த வாழ்க்கைலே ஏதாவது உள்ளுக்கு உள்ளே இருந்து அவர் உணர்ந்ததா காட்டணும் இல்லையா, அதுக்காக விஜி அப்படி அவர் மனசுக்குப் பட்ட எதையாவது அந்த பாத்திரத்தின் மீது ஏத்திச் சொல்லியிருக்கலாம்.  அந்த மட்டில் இதை எடுத்துக்க வேண்டியது தான்.  என்ன சொல்றே?.."

"ஓக்கே.. அப்புறம் வேறே என்ன இருக்கு?"

"முக்கியமானதை விட்டுட்டேயே?..  அறிவழகனுக்குப் பார்வை போகற இடம்-அந்தப் பார்வை அவருக்கு மீண்டும் வர்ற இடம்-- இந்த இரண்டு இடமும் டாப் இல்லையா?..  எதார்த்தமா, நாம ஏத்துக்கற மாதிரி உணர்வு பூர்வமா எழுதியிருக்கார் இல்லையா?"

"ஆமாங்க.. அதுவும் பார்வை அவருக்கு மீண்டும் வர்ற இடத்திலே, அந்த 'மானஸ சஞ்சரரே..' பாடலை எடுத்தாண்டிருக்கிறார் இல்லையா.. அற்புதம்ங்க.. மனசை அப்படியே உருக்கிடுத்து..  அந்த நேரத்லே, விஜி மனசிலே எப்படித்தான் இந்த 'மானஸ சஞ்சரரே..' வந்ததோ தெரிலே!
அந்தப் பாட்டு அருமையான செலக்ஷன்ங்க... சங்கராபரணம் சினிமாலே அந்தப் பாட்டைக் கேக்கறச்சே அலைஅலையா இசை மனசிலே ரொம்பி ததும்பி கொஞ்சம் கொஞ்சமா வழியற உணர்வை நான் அடைஞ்சிருக்கேன்"

"அடுத்ததா கதையை நகர்த்திண்டு போன பாத்திரங்களா வந்தவங்களைப் பத்தி, குறிப்பா அந்த டாக்டர் சாந்தி பத்தி, நிறையச் சொல்லலாம்.  மொத்தத்திலே இந்தக் காலத்திலே பத்திரிகைலே வர்ற கதைகள்லேந்து இது வேறுப்பட்டு வேறே மாதிரி இருந்தது..  அதுவே இதை எழுதினவர் பத்தியும், அவர் எழுதின கதையைப் பத்தியும் வித்தியாசமா நெனைக்க வைச்சது'ன்னு முடிச்சிடு.  அம்பதுக்கு நாப்பதாவது மார்க் வந்திடும்.. நான் கேரண்டி..."

ஊர்மிளா அந்த அளவுக்கு மதிப்பெண் பெற்று விட்ட மாதிரியே லஷ்மணனைப் பார்த்தாள்.

(இன்னும் வரும்)




Related Posts with Thumbnails