மின் நூல்

Saturday, April 9, 2016

அழகிய தமிழ் மொழி இது.!,,,

பகுதி--6

தொல்காப்பியர் இதைச் சொல்லியிருக்கிறார் என்றால்  அதற்கு  அப்பீலே கிடையாது.  அந்த அளவுக்கு பழந்தமிழர் வாழ்க்கை நிலையை படம் பிடித்துக் காட்டியிருக்கும் நூல் தொல்காப்பியம்.  அதுமட்டுமல்ல, தமிழுக்கென தனித்தன்மையாய் இலக்கிய வடிவில் அமைந்த  ஓர் இலக்கண நூலாய்த் தொல்காப்பியம்  திகழ்வது தான் தமிழ் மொழிக்கான வித்தியாசப்பட்ட சிறப்பாகிப் போகிறது.

பொதுவாக இலக்கணம் என்றால் ஒரு மொழியை தவறில்லாமல் எழுதுவதற்கும் பேசுவதற்கும் நெறிப்படுத்தும் விதி முறைகளே இலக்கணம் என்று பரவலாகக் கருதப்படுகிறது.  இப்படியான இலட்சணம் கொண்ட இலக்கண வரைமுறைகளில் இலக்கியம் சமைப்பது எப்படி  என்பது ஒரு அடிப்படை வினா.

இந்த  அடிப்படை வினாவிற்கு விடையளித்திருப்பது தான் தொல்காப்பியம்.

தொல்காப்பியர் இயற்றியதால் அது தொல்காப்பியம் என்று பெயர் பெற்றதா இல்லை தொல்காப்பியத்தை இயற்றியமையால் அவர் தொல்காப்பியர் என்று அழைக்கப்பட்டரா என்பது ஒன்றில்  ஒன்று புதைந்த ஒரு கேள்வி.

எது  எப்படியாயினும் தொல்காப்பியம் என்பது தொன்மையான  நூல் என்று அதன்  பெயரிலிருந்தே பெறப்படுகிறது.

தொல்காப்பியத்தின்  தோற்றத்திற்கு  முன்பே அதன் பழமைக்கு முன்பேயே  இலக்கிய, இலக்கண நூல்கள் இருந்தன என்பது தெரிகிறது. அவர் காலத்தில் ஐந்திரம் என்னும் வடமொழி இலக்கண நூல் இருந்திருக்கிறது. அகத்தியரால் இயற்றப்பட்ட அகத்தியம் இருந்திருக்கிறது.  அவற்றையெல்லாம் ஆராய்ந்ததின் அடிப்படையில் அவற்றைப் பற்றியதான ஓர் ஆராய்ச்சி நூல் போன்றே இயற்றப்பட்டது தொல்காப்பியம்.  இந்த ஆராய்ச்சியில் இதெல்லாம் இப்படி இருந்தால் தான் இது;  இல்லையென்றால் இது இல்லை என்று சொல்வது போல இருந்தவற்றை ஆராய்ந்து அவற்றிலிருந்து பெறப்பட்டதை அவற்றிற்கான இலக்கணமாகக் கொண்ட அரிய படைப்பு  தொல்காப்பியம்.

ஒன்றைப் பற்றிச் சொல்வதற்கு அது இருந்தாக வேண்டும் என்ற இருத்தலியக் கொள்கைக்கு சரியான சான்று தொல்காப்பியம்.

பனம்பாரனார் தொல்காப்பியருடன் பயின்றவர்.  இவர் தான் தொல்காப்பியத்திற்கு பாயிரம் எழுதியிருக்கிறார்.  பாயிரம் என்றால் தற்காலத்தில் நூல்களுக்கு முகவுரை என்று எழுதுகிறோமே அது தான். பாயிரம்  இல்லாமல் நூலில்லை என்பது அக்கால வழக்கமாகவே இருந்தது.

வடவேங்கடம்  தென்குமரி
ஆயிடை
தமிழ்கூறு நல்லுலகத்து

----என்று ஆரம்பமாகும் பனம்பாரன் எழுதிய அந்தப் பாயிரத்தில்,

அதன் கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோன்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே

--என்ற வரிகள் காணக்கிடக்கின்றன.
 
முதல் தழிழ்ச் சங்கம் தென்மதுரையிலும், இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்திலும், மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையிலும் அமைந்திருந்ததாக அறியப் படுகிறது.  முதல் தமிழ் சங்கம் அமைந்திருந்த தென்மதுரையும், இரண்டாம் தமிழ் சங்கம் அமைந்திருந்த கபாடபுரமும் கடல்கோளில் மூழ்கடிக்கப்பட்டன. . வால்மீகி இராமாயணத்தில் கபாடபுரம் பற்றிய குறிப்பு உண்டு.

இரண்டாம் தமிழ்ச் சங்க காலம்  கி.மு. 3600 முதல் 1500 வரை
தொல்காப்பியரின் காலம் இரண்டாவது தமிழ்ச்சங்கம் இருந்த  காலம்.
நிலந்தரு திருவிற் பாண்டிய அரசன் முன்னிலையில் தமிழ்ச்சங்க அவைக்கு அதங்கோட்டாசான் தலைமை தாங்கிட இரண்டாவது  தமிழ்ச்சங்கத்தில் தொல்காப்பியம் அரங்கேறுகிறது.  தலைமை தாங்கிய அதங்கோட்டாசான் இடையிடையே எழுத்து பற்றிய சில சந்தேகங்களை எழுப்புகிறார்.  அதற்கு தொல்காப்பியர் தமிழுக்கான எழுதிலக்கணம் பற்றி விளக்கிச் சொல்ல தொல்காப்பியம் அரங்கேறுகிறது.

எழுத்து, சொல், பொருள் என்று மூன்று பிரிவுகளாக தொல்காப்பியம்  பகுக்கப் பட்டுள்ளது.  எழுத்தும் சொல்லும் தமிழ் மொழியின் இயல்பழகைக்  கூறுகின்றன.   பொருளதிகாரமோ  பழந்தமிழரின் வாழ்வியலை படம் பிடித்துக் காட்டுகின்றன. பொருளதிகாரத்தில் ஒன்பது அதிகாரங்கள் உள்ளன.

அகத்திணையியல்,புறத்திணையியல்,  களவியல்,கற்பியல்,பொருளியல்,  மெய்ப்பாட்டியல், உவமயியல், செய்யுளியல்,  மரபியல்  என்கிற ஒன்பது இயலியலும்  படைப்பாக்கங்களுக்கு  இட்டுச் செல்கிற கூறுகள் நிரம்பியிருப்பது தான் ஆச்சரியம்.

இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் நுண்மாண் நுழைபுலம் கொண்ட பேராசான்  தொல்காப்பியர் செய்யுளில் கருத்துச் சொல்லும் வழக்கம் இருந்த காலத்திலேயே செய்யுளின் இயல்பையும் அதன் இயல்பின்மையும்  ஒருசேர கற்பிதம் கொள்ளும் அளவுக்கு  உரைவகை நடை ஒன்றை சொன்னதோடு எவ்வகைத்தானது அது என்று விளக்கமும் கொடுக்கிறார்.

பாட்டிடை வைத்த  குறிப்பினாலும்
பாவின்றி எழுந்த கிளவியானும்
பொருளோடு புணர்ந்த நகைமொழியானும்
பொருளோடு புணர்ந்த பொய்ம்மொழியானும்
உரைவகை நடை மொழியே நான்கென மொழிய

                      (தொல்காப்பியம்  செய்யுளியல்-- 173)

செய்யுள்களுக்கு உரை எழுதுவதையும், செய்யுளின்  கருத்தை மட்டும் எழுதும் உரை வகையையும், கற்பனையாய் புனையும் கதைகளையும், உணமையான செய்திகளில் நகைச்சுவை கலந்து எழுதுவதையும் குறிப்பிடும் பொழுது நம் வியப்பு  எல்லை மீறி திகைக்கிறது.

இன்றைய உரைநடைக்கு முந்தியது  உரையிடையிட்ட  பாட்டுடைச் செய்யுள். செய்யுளுக்கு இடையிட்டு  உரைநடை போலவான வரிகளும் வருவது அது.   உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளுக்கான  தமிழின் முதல் படைப்பு ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம்.

அதே மாதிரி இன்றைய நாவல்களுக்கு முந்தியது அன்றைய காப்பியங்கள்..சொல்லப் போனால் அன்றைய  காப்பியங்களே காலத்தில் மாற்றங்களில் மாற்றம்  கொண்டு இன்றைய நாவல்களாகியிருக்கின்றன.

இத்தாலி நாட்டினர் நூவெல் (Novella)  என்று பெயர் கொண்டு அழைத்த கற்பனை கலந்த கதைகள் தாம் நாவல்கள் என்று காலப்போக்கில் அழைக்கப்பட்டன என்று சொல்வார்கள்.  நாவல் என்பதற்கு புதுமை என்றும் அர்த்தம் கொள்ளலாம்.  இதன் அடிப்படையில் வந்த  சொல், நவீனம்.

இதெல்லாம் பிற்காலத்துச் செய்திகள்.  இதெற்கெல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு  முன்பே உரைநடையும் செய்யுளும் கலந்த உருவில் உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுளாய் காப்பியங்கள் என்ற  உருவில் நாவல்கள் தமிழில் முகிழ்த்திருக்கின்றன என்பதே இங்கு எடுத்தாளக் கூடிய கருத்தாகும்.


(தொடரும்)


படங்களை உதவியோருக்கு நன்றி.14 comments:

Ajai Sunilkar Joseph said...

அழகிய தமிழ் மொழி இது.!,,,

தொல்காப்பியம் குறித்து
அருமையான பதிவு
தந்தீர் நண்பரே நன்றி....
தொடர்ந்து தாருங்கள்
பதிவுகளை....
நாங்களும் தொடர்கிறோம்....


தாங்கள் விரும்பினால்
எம் தளத்திற்கும் அடிக்கடி
வந்து செல்லுங்களேன்....
http://ajaisunilkarjoseph.blogspot.com

sury siva said...

வால்மீகி இராமாயணத்தில் கபாடபுரம் பற்றிய குறிப்பு உண்டு.//

வாவ் !!
கிஷ்கந்தா காண்டத்தில் எங்கெல்லாம் ,சீதை யைத் தேடவேண்டும் என்று சொல்லும்போது வருகிறது. 14 வது ஸ்லோகம்.

அது சரி.

அது என்ன// இருத்தலியக் கொள்கைக்கு //

//அது மாதிரி ஒரு சொல் தொல்காப்பியத்தில் இல்லையே !!
உங்கள் கூற்றும் இதுவே:
இதெல்லாம் இப்படி இருந்தால் தான் இது; இல்லையென்றால் இது இல்லை என்று சொல்வது போல இருந்தவற்றை ஆராய்ந்து அவற்றிலிருந்து பெறப்பட்டதை அவற்றிற்கான இலக்கணமாகக் கொண்ட அரிய படைப்பு தொல்காப்பியம்.//

ஊன்றிப் படிக்க உற்சாகத்துடன் படிக்க உதவுகிறது.

இது போன்ற கட்டுரைகளை எழுதுங்களேன். !!

சுப்பு தாத்தா.

G.M Balasubramaniam said...


@ தொல்காப்பியம் என்னும் பழமை வாய்ந்த நூல் இருந்தது ( இருக்கிறது ?)/ அது பற்றி வாசித்தது மிகக் குறைவே . இருந்தாலும் தொல்காப்பியத்திலிருந்து மேற்கோள் காட்டியுள்ளேன் என் கடைசிப் பதிவில் ..........! நிறைய ஆராய்ச்சிகள் நிறையச் செய்திகள்.. பாராட்டுக்கள்

ஜீவி said...

@ Ajai

வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

ஜீவி said...

@ Sury Sir

ஓ! உங்களுக்குத் தெரியாததா?.. கிஷ்கிந்தா காண்டம் என்று மட்டும் குறிப்பு கொடுக்க நினைத்தேன். த்ட்டச்சும் செய்து விட்டேன். அப்புறம் அப்பொழுதிய நினைப்பில் இவ்வலவு விளக்கம் தேவையா என்று நீக்கி விட்டேன்.

'வாழ்க்கை அபத்தமானத்கா?' என்பது கேள்வி என்றால் அதற்கு பதில் சொல்வதற்கு வாழ்க்கை என்ற ஒன்று இருநாக வேண்டுமில்லையா?.. 'ஒன்றின் இருப்பு இருந்தால் தான் அது பற்றிய மற்றதெல்லாம்' என்கிற அர்த்தத்தில் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னாலும் இலக்கணம் என்பது இருந்தது எனபதைச் சொல்ல பிற்பட்ட காலத்து இருத்திலியக் கோட்பாட்டை அதற்கு உதாரண்மாக்கினேன். அவ்வளவு தான்.

தொடர்கிறேன். தாங்களும் தொடர்ந்து வந்து தொடர் கட்டுரையை செழுமைபடுத்த வேண்டுகிறேன்.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

நானும் தங்கள் மேற்கோளை வாசிக்கிறேன். வருகைக்கு நன்றி, சார்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//தொல்காப்பியர் இயற்றியதால் அது தொல்காப்பியம் என்று பெயர் பெற்றதா இல்லை தொல்காப்பியத்தை இயற்றியமையால் அவர் தொல்காப்பியர் என்று அழைக்கப்பட்டரா என்பது ஒன்றில் ஒன்று புதைந்த ஒரு கேள்வி. எது எப்படியாயினும் தொல்காப்பியம் என்பது தொன்மையான நூல் என்று அதன் பெயரிலிருந்தே பெறப்படுகிறது.//

தொல்பொருள் ஆராய்ச்சி போல பலவிஷயங்களை ஆராய்ந்து அழகாகத்தான் சொல்லி வருகிறீர்கள்.

அழகிய தமிழ் மொழி இது.!
அதற்குள் பகுதி--6ஐ எட்டி விட்டதில் மகிழ்ச்சி. தொடரட்டும்.

ஸ்ரீராம். said...

தொல்காப்பியப் பெயர் சர்ச்சை "கா கா ன்னு கத்தறதால" வசனத்தை நினைவு படுத்துகிறது!

சுப்பு தாத்தா எல்லாவற்றிலும் முத்திரை பதிக்கிறார்.

எனக்கு மட்டும் தொல்காப்பியம் போன்றவை ஏன் கடினமாகவே இருக்கிறது?

:)))

ஜீவி said...

@ வை.கோ.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, கோபு சார்.

இன்று நீங்கள் கதைகளெல்லாம் எழுதுகிறீர்களே அவற்றின் பல நூற்றாண்டுகளுக்கு முன்னான தொடக்க நிலையான தவழும் பகுதியிலிருந்து ஆரம்பித்திருக்கிறேன்.

இன்னும் சில அத்தியாயங்கள் கழித்து சூடு பிடிக்கும் பொழுது உங்களுக்கு இந்தப் பகுதி இன்னும் பிடித்துப் போகும். ஆனால் பலாப்பழத்தை கீறி விளக்கெண்ணையைத் தேய்த்துக் கொண்டு உரித்து சேதமடையாமல் சுளைசுளையாக எடுத்து கிண்ணத்தில் போடுவதற்குள் போதுமடா, சாமி என்று ஆகிவிடும். சுளை கண்ணுக்குத் தட்டுப்படும் பொழுதே சந்தோஷம் வந்து விடும்.

அந்த சந்தோஷத்திற்காக தொடர்ந்து வாருங்கள்.

Bhanumathy V said...

நல்ல சுவாரஸ்யமான பதிவு!. மேலும் சுவாரஸ்யங்களை எதிர்பார்க்கிறேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

சுஜாதா கூட தொல்காப்பிய வசிப்பு அனுபவத்தைச் சொல்லியிருக்கிறார்க, இல்லையா? அதை நீனைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பதிவில் ஆழ்ந்து இலக்கண விதிகளுக்கெல்லாம் போகவில்லை.

தமிழில் உரைநடை இலக்கியம் பற்றிய அறிதல் எப்பொழுது (எந்த காலத்தில்) ஏற்பட்டது என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள். பதிலை யோசித்து வையுங்கள். இந்தத் தொடருக்கு அது ஒரு முக்கியமான தகவலாக அமையும்.

தொடர்ந்து வருவதற்கு நன்றி, ஸ்ரீராம்.

ஜீவி said...

@ பானுமதி.வி.

நன்றி சகோதரி!

வே.நடனசபாபதி said...


//அன்றைய காப்பியங்களே காலத்தில் மாற்றங்களில் மாற்றம் கொண்டு இன்றைய நாவல்களாகியிருக்கின்றன.//

தாங்கள் கூர்ந்தாய்ந்து தந்திருக்கும் இந்த அனுமானம் இது பற்றி அறியாத என் போன்றோருக்கு புதிய தகவலே.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

வாருங்கள், ஐயா. தமிழ் இலக்கியத்து பண்டைய காப்பியங்கள் தாம் இன்றைய நாவல்கள் ஆகியிருக்கின்றன என்று இதுவரை யாரும் சொன்னதில்லை. ஆனால் அப்படியான என் அனுமானத்தை நிரூபிக்கத் தான் இந்தத் தொடரை எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த கூற்றை வாசிப்பவர் ஏற்றுக் கொண்டுவிட்டால் இது குறித்து சொன்ன முதல் நபர் நானாகத் தான் இருப்பேன்.

தொடர்ந்து வருவதும் பின்னூட்டமிடுவதும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

Related Posts with Thumbnails