மின் நூல்

Saturday, May 14, 2016

அழகிய தமிழ் மொழி இது!...

பகுதி-- 10


கோவலன் இன்னொருத்தியை மனசில் நினைத்துப் பாடுகிற மாதிரி யாழிசைத்துப் பாடி முடித்ததும் மாதவியின் முகத்தில் எந்த சலனமும் இல்லை.  கோவலனின் அருகாமை கிடைக்கும் போதெல்லாம் மகிழ்ந்திருப்பதைப் போலவே வெளிக்குக் காட்டினா;லும் உள்ளத்தின் உள்ளே ஊடல் கொண்டவளாய் கோவலனின் கையிலிருந்த யாழை வாங்கினாள். வாங்கி அதை. மீட்டி, அவனுக்கு எந்தவிதத்திலும் கானல்வரி பாடல் பாடுவதில் தானும் சளைத்தவள் அல்ல என்று காட்டும் வித்த்தில் பாடத் தொடங்கினாள்.

பாடலுக்கான உட்பொருளை கோவலனே கொடுத்திருந்த்து அவளுக்குக் கொண்டாட்டமாகியது.. அதே பொருளில் அவள் இசைப்பதற்கும் அதுவே சுலபமும் ஆயிற்று.

மாதவிக்கும் வழக்கமான இளங்கோவின் கணக்குப்படி மூன்று தான்.  கோவலன் பாடியதற்கு மாற்றுப் பாடலாக மாதவி தன் முதல் பாடலிலேயே பூடகமாக உள் அர்த்தத்தைச் சொருகிப் பாடுகிறாள். 

“காவிரிப் பெண்ணே!  இருமருங்கிலும் வண்டுகள் ரீங்கரிக்க, பூவாடை போர்த்தி கயல் போலவான விழிகள் அசைத்து நீ அசைந்து வரும் அழகு  தான் என்னே! உன் கணவன் சோழ மன்னனின் வளையாத செங்கோலின் வல்லமையே அசைந்தாடி வரும் உன் அழகுக்கு அழகு சேர்த்ததோ?”” என்று மாதவியின் உதட்டிலிருந்து கசிந்த இசையும் பாடலும் ஓர் உருக்கொண்டு இசைப்பாடலாய் அந்த இடத்தை நிறைத்தது.

மாதவி பாடிய இந்த கானல்வரிப் பாட்டின் ஆரம்பம் கோவலனுக்குப் புரிந்தும் புரியாததும் மாதிரி இருந்தது.

‘கற்பையே அணிகலனாய்க் கொண்ட பெண்கள், பிற பெண்டிருடன் தம் கணவர் கூடினாலும் அவர்களை வெறுக்க மாட்டார்கள்; அப்படி வெறுக்காமல் இருபதும் அத்தகைய பெண்டிரின் கற்பின் சிறப்பே!’ என்று கோவலன் பாடியதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டுமென்பது மாதவியின் எண்ணம். அதைத் தனது இரண்டாவது பாடலில் குழைத்துத் தருகிறாள்:  ‘

ஆடவரின் ஒழுக்கமே பெண்ணின் கற்பிற்கு அடித்தளம்’ என்ற அர்த்த்த்தில் சோழனின் செங்கோல் வழுவாத  சிறப்பே காவிரியின் ஒசிந்து வரும் நடையழகுக்கு காரணமாயிற்று’ என்பதைத் தான் பாடிய  பாட்டினுள் ஊடாடிய கருத்தாகக்  கொண்டாள்  மாதவி.

மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூவாடை அது போர்த்துக்
கருங்கயல்கண் விழித்து ஒல்கி நடந்தாய் வாழி, காவேரி!
கருங்கயல்கண் விழித்து ஒல்கி நடந்தவெல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி!

பூவார் சோலை மயில் ஆலப்புரிந்து குயில்கள் இசை பாடக்
காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி!
காமர் மாலை அருகசைய  நடந்த எல்லாம் நின் கணவன்
நாம வேலின் திறங்கண்டே அறிந்தேன் வாழி காவேரி!

‘காவிரிப் பெண்ணே!  பூக்கள் நிறைந்த  சோலையில் மயில்கள் ஆட, குயில்களோ இசை இசைக்க, மலைகள் இடையே நீ ஒயிலாய் அசைந்து அசைந்து வந்தனை!  பகைவர்க்கு அச்சம் தரும் சோழமன்னனின் வேலின் சிறப்பே உன் அசைந்து வந்த நளினத்திற்குக் காரணம் என்பதை நானறிவேன் காவிரி!’’ என்று மாதவி ஊடலில் விளைந்த சிணுங்கலில் உள் அர்த்த்த்தைப் பாட்டில் பொதித்து வைத்துப் பாடுகிறாள்!

---இந்த இடத்தில் தான் சிலப்பதிகாரக் காப்பியத்தில் தற்கால நாவல் போக்கில் காணபடுவதே போன்ற ஒரு அழுத்தமான முடிச்சு விழுகிறது.  காவிரியை பார்த்து தன் காதல் மனைவி கண்ணகி நினைப்பில் பாடிய கோவலன், சோழமன்னனை காவிரியின் கணவனாய்க் கொண்டு மாதவி பாடிய கானல்வரிப் பாட்டில் இவளும் இன்னொருவனை நினைத்துப் பாடுகிறாளே’ என்று கொதிப்பு கொண்டான்.  ஆற்றாமை அவனை  அள்ளி விழுங்கியது.

காவிரியில் கோவலன் கண்ணகியைக் கண்டான் என்றால், மாதவியோ நேரடியாக சோழ மன்னனையே காவிரியின் கணவனாக்கிப் பாடுகிறாள். மனத்திற்குள் அவளே காவிரியானது போல கோவலன் அர்த்தம் கொள்ளும்படிப் பாடுகிறாள்.

உரைநடை போலவே இந்த இடத்தில் இளங்கோவின் வரிகள் வந்து விழுகின்றன:

--- எனக்கேட்டு,
கானல்வரி யான் பாடத் தான் ஒன்றின் மேல் மனம் வைத்து
மாயப்பொய் பல கூட்டு மாயத்தாள் பாடினாள் என
யாழிசை மேல் வைத்துத் தன்  ஊழ்வினை வந்து உருத்த்தாகலின்
உவவுற்ற திங்கள் முகத்தாளைக் கவ்வுக்கை ஞெகிழ்ந்தனனாய்ப்
பொழுதீங்குக் கழிந்ததாகலின் எழுமென்று உடனெழாது-----

‘பொழுது போயிற்று; புறப்படலாம், எழுக!’ என்று மாதவியிடம் கூறிவிட்டு எழுகிறான் கோவலன். எழுநதவன் தன்னுடன் மாதவியும் வருகிறாள் என்று நினைத்தே ஏவலாளருடன் அவ்விடம் நீங்குகிறான். ஆனால் அவனுடன் மாதவி செல்லவில்லை.  கோவலன் போன பின்னர் தான் மாதவி தன் நிலை அறிந்து  திகைக்கிறாள். இருந்தும் தன் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.  அவள் தோழிகளின் ஆரவாரம் அடங்குமாறு கை கவித்து உள்ளுக்குள் புழுங்கும் நெஞ்சத்துடன் காதலனுடன்  செல்லாது  தனியே தன் இல்லம் அடைந்தாள்.

‘மாயப்பொய் பல கூட்டு மாயத்தாள்’ என்ற வரியில் தனது அத்தனை உளைச்சலையும் கோவலன் கொட்டுவது போல அழுத்தமாக அந்த ஒற்றை வரியைப்  போடுகிறார் இளங்கோ.  ‘மாய்ப்பொய் பல கூட்டு மாயத்தாள்!’—ஆஹா.... என்னே அர்த்தம் பொதிந்த வரி!  கோவலனின் வெள்ளை உள்ளத்தில் கரும் புள்ளி விழுந்து விட்டதைத் துல்லியமாகத் தொட்டுக் காட்டுகிறார் அடிகளார்!..“ஊழிற் பெருவலி யாவுள?’ என்னும் பிற்காலத்து வள்ளுவர் சொன்னது நம் நினைவுக்கு வருகிறது.

‘பொழுது  போயிற்று, புறப்படலாம், எழுக!’ என்று மாதவியிடம் கோவலன் சொல்லும் பொழுதே அவளுடன் சேர்ந்து அவள் இல்லம் செல்லத்தான் அவன் நினைத்திருக்கிறான் என்று புரிகிறது. ‘உடனெழாது...’ என்று ஒன்றை வார்த்தையில் மாதவியின் அந்த நேர  மன நிலையை படம் பிடித்துக் காட்டுகிறார் இளங்கோ.

ஆண்களுக்கு நீடித்த ஊடல் என்று எப்பொழுதுமே கிடையாது.  சும்மாக்காச்சும் புருபுருவென்று வரும் கோபம் அது.  இன்னொரு சுகமான ஆசையும் அந்த ஊடலோடையே ஒட்டிக் கொண்டிருக்கும். 'இந்த ஊடலின் முடிவு கூடல் அல்லவா?’ என்று ஒரு கற்கண்டு ஆசை!  ஊடல் என்பது ஊடலுக்காகவே என்றும் அதுவும் கூடலுக்கு வழிநடத்திச் செல்லும் துணையே என்ற கற்பனை கொடுக்கும் தணியாத தனிச்சுகம் அது!  அதனால் ஆடவருக்கு ஆசையுடன்  கூடியதான சாதாரண பொய்க்கோபம் தான், அவர்களின் ஊடல் என்று ‘பெரிய பெயர் கொள்கிறது.. 

ஆனால் பெண்களுக்கு அப்படியல்ல. அழுத்தத்தில் வடிகட்டிய அழுத்தமானவர்கள் அவரகள் பொய்க்கோபத்திற்கும் நிஜக் கோபத்திற்கும் அதிக இடைவெளி இல்லாதவர்கள். வித்தியாசம் தெரியாதவர்க்ள்.  பொய்க் கோபம் நிஜக் கோபமாவது அவர்களில் சர்வ சாதாரண நிகழ்வு.  'போகிற வரை போகட்டும், கடைசியில் அவன் மண்டியிடும் வரை போகட்டுமே' என்று நினைக்கிற அகங்காரம் அது. 

போதாக்குறைக்கு காதலரைத் துன்புறுத்திக் காதல் கொள்வதும் ஊடலில் ஒரு கலை என்று எண்ணம் கொண்டவர்கள் பெண்கள்.  அவர்களுக்கு ஆண்களை எந்த நேரத்தும் தன் பிடியில் வைத்துக் கொள்ளும் வசியக் கலை அது.. . ஆறாம் வேதத்தின் ஆரம்ப அத்தியாயமே அவர்களுக்கு  அது தான்!..

இந்த ஆண்—பெண் மனநிலைகளை மிகச் சரியாக இந்த இடத்தில் உபயோகப்படுத்திக் கொள்கிறார் இளங்கோ.   இன்றைய நாவலுக்கான கூறுகளை அன்றே அவரது காப்பியத்தில் எவ்வலவு அழகாகப் பதித்திருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

தீவலம் வந்து மாமுது பார்ப்பான் முன்னிலையில் தாலி கட்டிய திருமணத்தில் கோவலனுக்கு வாய்த்தவள் கண்ணகி.  ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் மதிப்பு வாய்ந்த மாலையை வாங்கியதற்கு ஈடாக வணிகர் வீதியில் அவனுக்குக் கிடைத்தவள் மாதவி.

ஆடவன் ஒருவன்.  ஆனால் அவனுக்கு வாய்த்த காதல் துணைகளோ இருவர். திருமண பந்தத்தால் உறவானவள் ஒருத்தி...  கொடுத்த பொற்கழஞ்சுகளுக்கு ஈடாகப் பெறப்பட்டவள் இன்னொருத்தி.. அந்த இருவரும் வெவ்வேறு நிலைகளில் அவனுக்கு உரிமையாகிறார்கள். இருவரிடம் தன் மனம் ஏங்கும் அன்பைப்  பெறத் துடிக்கும் ஆடவனாக கோவலன் இடையே மாட்டிக் கொள்கிறான்.

விளையாட்டின் ஆட்டக்காரர்கள் கண்ணகியும் மாதவியும். ஆட்ட சுகத்திற்காக அவர்கள் கையில் கிடைத்த பந்தாகிறான் கோவலன். பந்து, ஆட்டக்காரர் இருவர் கையிலும் மாறி மாறிப் போவது இயல்புதான். ஆக மாதவி விசிறி எறிந்த பந்து கண்ணகி கைக்குப் போகிறது.

ஊடலின் முடிவு கூடல் தான்.  இருந்தாலும் தப்பாட்டம் ஆடுகிறவர்களுக்கு அப்படியே தான் முடிவு சாசுவதமாக இருக்கும் என்பதும் இல்லை.

(தொடரும்..)
படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.

. . 

17 comments:

ஸ்ரீராம். said...

காவியத்தின் இந்த பாகங்கள் ஆண் சார்பாகவே போகிறது போலும். ரசித்துத் தொடர்கிறேன்.

மோகன்ஜி said...

பதிவு படிக்க சுகமாக இருக்கிறது. இந்த கானல் வரிப் பாடலை எழுபதுகளில் வந்த கரும்பு என்னும் படத்தில் ஜேசுதாஸ் பாடியிருக்கிறார். சலீல் சௌதரியின் உறுத்தாத இசை .

தமிழிலக்கியத்தின் எவ்வளவு சிறந்த திருப்பத் தருணம் இது?!

ஊடலில் உள்ள மனோவியல் கூறுகளைத் தொட்டு சென்றிருக்கிறீர்கள். தொடருங்கள் ஜீவி சார்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தொடரும் படங்களும் அருமை. தொடர்ந்து வாசிக்கிறேன்.

கோமதி அரசு said...

விளையாட்டு வினை ஆனது, மாதவி எதிர்பார்க்காத முடிவு.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

பெண் ஆணைச் சார்ந்தும், ஆண் பெண்ணைச் சார்ந்தும் இருக்கிற வாழ்க்கை அமைப்பில் ஆண் சார்ந்து என்று தனித்துப் பார்க்க முடியவில்லை. உன்னிப்பாகப் பார்த்தீர்கள் என்றால் ஆண்-பெண் சார்தல்கள் அவ்விருவர் மகிழ்ச்சிக்காகத் தான் என்று போய் முடியும்.

கட்டுரையின் தலையாய நோக்கம், அன்றைய காப்பியங்களில் இன்றைய நாவல் அம்சங்கள் எப்படிப் பதிவாகியிருக்கின்றன என்று பார்ப்பது. அந்த கோணத்தில் இந்தத் தொடரை அலசத் தவறாதீர்கள். அதான் முக்கியம். மற்றவை அந்தந்த நேரத்து சுவாரஸ்யத்திற்காக எழுதப்படுபவை.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, ஸ்ரீராம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அழுத்தத்தில் வடிகட்டிய அழுத்தமானவர்கள் அவர்கள். பொய்க்கோபத்திற்கும் நிஜக் கோபத்திற்கும் அதிக இடைவெளி இல்லாதவர்கள். வித்தியாசம் தெரியாதவர்க்ள். பொய்க் கோபம் நிஜக் கோபமாவது அவர்களில் சர்வ சாதாரண நிகழ்வு. 'போகிற வரை போகட்டும், கடைசியில் அவன் மண்டியிடும் வரை போகட்டுமே' என்று நினைக்கிற அகங்காரம் அது.//

அருமையான விளக்கம். அங்கீகரிக்கப்பட வேண்டிய அகங்காரமாகத்தான் உள்ளது.

//போதாக்குறைக்கு காதலரைத் துன்புறுத்திக் காதல் கொள்வதும் ஊடலில் ஒரு கலை என்று எண்ணம் கொண்டவர்கள் பெண்கள். அவர்களுக்கு ஆண்களை எந்த நேரத்தும் தன் பிடியில் வைத்துக் கொள்ளும் வசியக் கலை அது.. . ஆறாம் வேதத்தின் ஆரம்ப அத்தியாயமே அவர்களுக்கு அது தான்!..//

ஆறாம் வேதத்தின் ஆரம்ப அத்தியாயமே வசியக்கலைதான் என்பது வசீகரிப்பதாக உள்ளது.

//இந்த ஆண்—பெண் மனநிலைகளை மிகச் சரியாக இந்த இடத்தில் உபயோகப்படுத்திக் கொள்கிறார் இளங்கோ.//

ஆஹா, அருமை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

கோவலன்:
கோ....வலன்.
’கோ’க்களாக (பசுக்களாக) நினைத்து கண்ணகியையும் மாதவியையும் சுற்றிச்சுற்றி வலம் (பிரதக்ஷணம்) வந்தவன் ..... அதனால் .....கோவலன்.

கண்ணகி:
கண் .... நஹி
தாகத்துடனும், மோகத்துடனும், மாதவியிடம் செல்லும் தன் கணவனைக் கண்டும் காணாமலும் இருந்துள்ள அவளுக்குக் கண்.....நஹி. [நஹி = இல்லை]

மாதவி:
மா.....தவி
கோவலனுடன் எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டி,
மிகவும் தவியாய்த் தவிப்பவள்
மா (மாபெரும்) தவி (தவிப்பானவள்)

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான இந்த இலக்கியத்தொடர் தங்களின் ரஸனையான எழுத்துக்களில் மேலும் தொடரட்டும்.

Ajai Sunilkar Joseph said...

தொடர் பதிவுகள் அருமை நண்பரே
தொடர்ந்து வந்து வாசிக்கிறேன்...

ஜீவி said...

@ மோகன்ஜி

படிக்க சுகமாக இருந்தால் பதிவு என்பது மறந்து போகுமே மோகன்ஜி!

ஆமாம், காப்பியத் திருப்பம் தமிழ் இலக்கியத்தில் அத்தனையையும் புரட்டிப் போட்டத் திருப்பம் தான்.

ஊடலில் உள்ள மனோவியல் கூறுகள் என்றா சொல்கிறீர்கள்?.. நான் அப்படி நினைக்கவில்லை. படைப்பின் ரகசியம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஊடல் என்பது என்னவென்றே தெரியாத காலம் இது. ஆண்-பெண் உறவுகளுக்கு ஊடல் சாத்தியப்படாத காலமும் இதுவே. இன்றைய ஆச்சா-போச்சா காலத்தில் அன்றைய ஊடல் இன்று இருபாலருக்கும் எரிச்சல் ஏற்படுத்தும். ஊடல் என்பது இன்றைக்கும் உயிர் வாழ்ந்து கொண்டு இன்றைய காதல் அகராதியில் வேறு பெயர்களும் பெற்றிருக்கலாம். இதில் வேடிக்கை என்னவென்றால், அன்றைய காதலுக்கே வேறு அர்த்தம் இன்றைய காதல் அகராதியில்.

ஜீவி said...

@ Dr. Jambulingam

நன்றி ஐயா. தொடர்ந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

ஜீவி said...

@ கோமதி அர்சு

விளையாட்டு என்றா சொல்கிறீர்கள்?..

ஆரம்பம் எப்படி இருந்தாலும் தொடருவது அவரவர் இயல்புப்படி தானே இருக்கிறது?.. அவரவர் இயல்பு தான் வினையாகவும் உள்ளே புகுந்து ஆட்டுவிக்கவும் செய்கிறது, இல்லையா?..

மாதவி ஆளப்பிறந்தவள். கண்ணகியோ அடங்கப் பிறந்தவள்.
ஆணுக்கு அவன் செள்கரியப்படி இரண்டும் வேண்டியிருப்பதால் தான் இந்த இடைஞ்சல்கள் எல்லாம்.

பெண் ஆளுகின்ற நேரத்தில் அடங்கலும், அவள் அடங்குகிற நேரத்தில் ஆளுதலும் சாத்தியப்படுகிற ஆண்களுக்கு இந்த வம்பெல்லாம் இல்லை.

சிலர் ஆளுதல், அடங்குதல் என்பதையெல்லாம் பெரிசாக எடுத்துக் கொள்ளாமல் எப்படியிருந்தாலும் அட்ஜெஸ்ட் செய்து கொண்டு போவர்.

இதையெல்லாம் பொருட்டாகவே நினைக்காத காரியவாதிகளும் உண்டு.

கோவலனும் மாதவியும் இருவருமே கூர்மையான உள்ளம் படைத்தவர்கள். சுயம் இருவருக்குமே அதிகம். அதே நேரத்தில் தொட்டால் சுருங்கிகள். இசை, பாடல், உடல் என்று பொருத்தங்கள் இருப்பினும் உள்ளப் பொருத்தமில்லாத ஜோடிகள். நல்ல வேளை, இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.

ஆனால் மாதவி--கண்ணகி இருவருக்குமே கோவலனுடன் வாழ கொடுத்து வைக்கவில்லை என்பது தான் பரிதாபம். இதையே கோவலனுக்குக் கொடுத்து வைக்கவில்லை என்றும் கொள்ளலாம்.

ஜீவி said...

@ வை.கோ.

அகங்காரத்தில் கூட பாருங்கள், அங்கீரிக்கப்பட வேண்டிய அகங்காரம், அங்கீகரிக்கப்படக்கூடாத அகங்காரம் என்று இருக்கிறது பாருங்கள்.! :))


//ஆறாம் வேதத்தின் ஆரம்ப அத்தியாயமே வசியக்கலைதான் என்பது வசீகரிப்பதாக உள்ளது. //


64 அத்தியாயங்களில் முதல் அத்தியாயம். ஆரம்பப் படிக்கட்டு. பால பாடம்.
வசியம் என்பது மனம் சம்பந்தப்பட்டது. எதற்கும் மனம் ஒத்துழைக்க வேண்டும். அதன் ஒத்துழைப்பு இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை.

ஜீவி said...

@ வை.கோ.

//ந.ஹி... ந.ஹி.. //

அந்த இ.தி.எதிர்ப்பு பதிவுக்குப் போய் வாசித்துப் பிறகு இந்தப் பதிவுக்கு வந்தீர்களா கோபு சார்?..

ஜீவி said...

@ வை.கோ.

தொடர்கிறேன். நீங்களும் வாசித்து உடனே பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்துங்கள். நன்றி.

வே.நடனசபாபதி said...


எனக்கென்னவோ கோவலனுக்கு வந்த கோபம் தன்முனைப்பாற்றலால் (Egoism) வந்தது என நினைக்கிறேன். அவன் கண்ணகியை மறக்கமுடியாமல் பாடலாமாம். மாதவி மட்டும் எதிர்பாட்டு பாடக்கூடாதாம். என்ன நியாயம்? இது நிச்சயம் ஆணாதிக்க மனப்பான்மை தான். அன்றும் இன்றும் இதுதான் தொடர்கிறது.


கண்ணகியை மனதார நேசித்தவனாக இருந்திருந்தால் ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் மதிப்பு வாய்ந்த அந்த மாலையை வாங்கி, மாதவியை அடைந்திருக்கக்கூடாது. தங்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்.

ஜீவி said...

@ வே, நடனசபாபதி

//அவன் கண்ணகியை மறக்கமுடியாமல் பாடலாமாம். மாதவி மட்டும் எதிர்பாட்டு பாடக்கூடாதாம். என்ன நியாயம்?//

அது அந்தக்காலத்து ஊடல் சமாசாரம். பெரும்பாலும் அது பற்றிய அறிவு இன்று இல்லை. அதுவும் ஊடல் எல்லாம் இந்தக் கால்த்து எடுபடாது. வம்பில் தான் முடியும். அதனால் அது பற்றி கற்பனையாகத் தான் எது ஒன்ரும் சொல்ல முடியும்.

ஊடல் உறவுக்கு கைபிடித்துக் கூட்டிச் செல்கிற மாதிரி தொடர்ந்திருக்கலாம்.
ஆனால் அவர்களுக்கிடையான உறவு முறிய ஊழ்வினை இடையில் நுழைகிறார் என்கிறார் இளஙகோ.

ஊழ்வினையில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் சர் ஐசக் நீயூட்டன் சொன்னதை தொடர்பு படுத்தி அடுத்த அத்தியாய பின்னூட்டத்தில் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறேன். ஏற்றுக்கொள்ள முடியுமா பாருங்கள்.

// இது நிச்சயம் ஆணாதிக்க மனப்பான்மை தான். அன்றும் இன்றும் இதுதான் தொடர்கிறது. //

ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் என்று பேச்சுக்குப் பேச்சு சொல்கிறோமே தவிர ஆழ யோசித்தால் இருபாலாரும் இந்த மாதிரியான ஆதிக்கங்களை விரும்புவதாகவே தோன்றுகிறது.

சில பெண்கள் தன் கணவனால் ஆளப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
அப்படிப்பட்ட ஆளுகையில் தாங்கள் அடங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
அப்படிப்பட்ட ஆளுகை தான் அவர்களுக்கு எதிர்பாலின வேட்கையையும் ஈர்ப்பையும் ஏற்படுத்துகிறது என்கிற மனரீதியான உளவியல் உண்மைகள் உண்டு. கேட்டால் புருஷ லட்சணம் அது தான் என்பார்கள். பெண்களை சுற்றி சுற்றி வருவதும், அவர்களை 'மானே,தேனே' என்று வர்ணிப்பதும் புருஷ லட்சணமில்லை என்பது சில பெண்களின் தீர்மானமான முடிவும் கூட.

இப்படியான ஆதிக்கத்தை கொண்டிராத ஆண்கள் அதை எதிர்பார்க்கிற பெண்களுக்கு கணவனாக அமையும் பொழுது அவர்கள் தாம்பத்திய உறவில் விரிசல் ஏற்படுகிறது. இளங்கோ அடிகளாரைக் கேட்டால் 'பார்,பார், இதான் நான் சொல்லும் ஊழ்வினை' என்பார்.

தொடர்ந்து வாருங்கள்.

Related Posts with Thumbnails