மின் நூல்

Friday, August 26, 2016

அழகிய தமிழ் மொழி இது!...

பகுதி--21


முதல் நாள் இரவு பாண்டிய அரசி கோப்பெருந்தேவி நடுக்கும் கனவு ஒன்றைக் கண்டாள்.

அவள் கண்ட கனவில் பாண்டிய வேந்தனின் வெண்கொற்றககுடையும், செங்கோலும் சரிந்து கீழே விழுந்தன. அரண்மனை வாயிலில் கண்டாமணி தன் நடுநா நடுங்க இடைவிடாது அசைந்து அசைந்து ஒலி எழுப்பியது.   கருந்திட்டென எழுந்த இருள் பட்டப்பகலில் பகலவனை விழுங்கியது.  வான்வில் இரவில் தன் ஏழு வண்ணங்களுடன் ஜொலித்தது.  நண்பகலில் எரிகொள்ளிகளாக விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்தன.  ஒரேகனவில் பகல் இரவு  என்று அடுதடுத்த காட்சிகளைக் கண்டாள் கோப்பெருந்தேவி.

கண்ட கனவை காலையிலும் மறக்க முடியவில்லை.  முதலில் தன் நெருங்கிய தோழியிடத்தும் பின் அரசனிடத்தும் இந்த எதிர்மறை நிகழ்வுகள் கனவைச் சொன்னாள்.  அரிமா ஏந்திய அமளியில் அமர்ந்திருந்த அரசன் அவள் சொல்வதைக் கேட்டு திகைத்தான்.  ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டது போல அவன் உணர்வு அவனை உந்தித் தள்ளியது.

அந்த சமயத்தில் தான் கண்ணகி அரண்மனை வாயிற் புறத்தில் புயலெனச் சீறி நின்றாள்.  “வாயில் காப்போனே! வாயில் காப்போனே!  அறிவு அற்றுப்போகிய அறநினைவு அழிந்து அரச நீதியிலிருந்தும் நழுவியவனின் வாயில் காப்போனே!  ஒற்றைச் சிலம்பை ஏந்திய கையினளாய் கணவனை இழந்த ஒருத்தி அரண்மனை வாசலில் நிற்கிறாள் என்று உன் அரசனிடம் அறிவிப்பாயாக,  அறிவிப்பாயாக..” என்று ஓங்கி ஒலித்த உரத்த குரலில் சீறினாள்.

ஒன்றைச் சிலம்பேந்திய ஆவேச கண்ணகியைப் பார்த்த மாத்திரத்தில் நடுங்கிப் போனான் வாயில் காப்போன். அவள் சொன்ன விஷயத்தை அரசனிடம் சொல்ல அரண்மனை உள்ளே வேகமாக ஏகினான்.  அந்த நேரத்தில் தான் அரசனிடத்து அரசி தான் கண்ட தீக்கனவைப் பற்றிச் சொல்லி முடித்திருந்தாள்.

“கொற்கை வேந்தன் வாழி!  தென்னம் பொருப்பின் தலைவ வாழி! செழியனே வாழி!  பாண்டிய அரசே வாழி!  இது வரை பழிஎதுவும் படராத பஞ்சவ வாழி!  வெட்டு வாயிலிருந்து பீறிட்டெழும் குருதி நீங்காத பிடர்த் தலைப் பீடம் ஏறி வெற்றிவேல் ஏந்தியிருக்கும் கொற்றவையும் அல்லள்!  கன்னியர் எழுவருள் பிடாரியும் அல்லள்! இறைவன் ஆடல் கண்டு அருளிய பத்திர காளியும் அல்லள்!  செறிந்த காட்டுப் பிரதேசத்தை நேசிக்கும் காளியும் அல்லள்! தாருகனின் விரிந்த மார்பைப் பிளந்த துர்க்கையும் அல்லள்!  கருவு கொண்டவள் போலவும் கோபம் கொண்டவள் போலவும் தோற்றம் தருகிறாள்.  ஒற்றைச் சிலம்பொன்றை தன் கையில் தூக்கிப் பிடித்தவளாய் நிற்கிறாள்.. கணவனை இழந்த கைம்பெண்ணாய் அரண்மனை வாசலில் நிற்கிறாள், அரசே!”  என்று நடுக்கத்துடன் அறிவித்தான்.

“அப்படியா?..  அப்பெண்ணை  ‘வருக’ என்று கூறி இங்கு அழைத்து வருக!”  என்று  ஆணையிட்டான் மன்னவன்.

வீசியடிக்கும் காற்றென உள்ளே புகுந்த கண்ணகியை, “நீர் தளும்பும் கண்களுடன் எம்முன் வந்தோய்! நீ யாரோ?” என்று மன்னன் கேட்டான்.

‘நீ யாரோ?’  என்று மன்னன் கேட்ட்து உசுப்பி விட்டது போலும் அவளை. படபடவென்று பொறிகிறாள்:  “தேரா மன்னா!  சொல்கிறேன், கேள்!   தேவர்களும் வியக்க தன் தொடைச்சதை அறுத்து தராசுத் தட்டிலிட்டு புறா ஒன்றின் துயரத்தைத் தீர்த்த மாமன்னன் சிபியின் நாட்டினள் நான்.    அரண்மனை வாசலில் கட்டிய மணியின் நடு நா நடுங்க, அந்த மணிக்கயிற்றை அசக்கிய பசுவின் கடைக்கண் வழி ஒழுகிய நீர் தன் நெஞ்சைச் சுட,  தவறு செய்த தன் அருமைப் புதல்வனைத் தேர்க்காலில் இட்டு நீதியை நிலை நாட்டிய மனுநீதிச் சோழனின் புகார் என் ஊர்.  அவ்வூரில் சிறப்பு மிக்க இசை விளங்கு பெருங்குடி வணிகன் மாசாத்துவானின் மகள் நான்.  வாழ்தல் வேண்டி  ஊழ்வினை துரத்த உன் மாமதுரை நகருக்கு  என் கணவனுடன்   வந்தேன்.  என் கால் சிலம்பை விற்க வேண்டி  உன்னிடத்துக் கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி நான்.  கண்ணகி என்பது என் பெயர்!”  என்றாள்.

“பெண்ணணங்கே!  கள்வனைக் கொல்லல் கொடுங்கோல் இல்லை.  அதுவே அரச நீதி” என்றான் பாண்டியன்.

“நல்லறம் கொள்ளாத  கொற்கை வேந்தே!  என் கால் பொற்சிலம்பு மாணிக்கங்களைப் பரல்களாகக் கொண்டது, தெரியுமா?”  என்றாள் கோவலனின் மனைவி.

“தேன்மொழி சொன்னது நன்மொழி.. களவு போன எம் சிலம்போ  முத்துக்களைப் பரல்களாகக் கொண்டது” என்று சொன்ன மன்னவன், ஏவலரை அழைத்து “கோவலன் கவர்ந்த எம் சிலம்பைக் கொணர்க!” என்று பணித்தான்.

மன்னனிடத்திலிருந்த அந்த  ஒற்றைச் சிலம்பு வந்தது.  வந்த சிலம்பை கண்ணகி முன் வைத்தான்.

கண்ணகியின் ஜோடிச் சிலம்பில் ஒன்று  மன்னனால் கண்ணகியின் முன் வைக்கப்பட்டிருந்தது.  மற்றது கண்ணகியின் கையில்.

தன்னது மாணிக்கப் பரல்கள் கொண்டது என்பதை நிலை நாட்ட வேண்டுமென்ற ஆவேசம் கண்ணகிக்கு.  அதனால் சற்றும் தாமதிக்காது தன் சிலம்பை பிளக்க வேண்டி வீசி எறிந்தாள்.  தரையில் மோதிச் சிதறிய அதனிடமிருந்து தெறித்த
மாணிக்கப் பரல் ஒன்று மாமன்னனின் வாயருகே தெறித்து கீழே விழுந்தது.

பாண்டியன் நெடுஞ்செழியன் திடுக்கிட்டுத் தடுமாறிப் போனான்.  தாழ்ந்த குடையனனாய், தளர்ந்த செங்கோலனாய், “பொன்செய் கொல்லன் சொல் கேட்ட நானா அரசன்?..  நானே கள்வன்..” என்று துடித்துப் போனான்.  “மக்களை காக்கும் பாண்டிய குல அரசுக்கு என்னால் தவறு நேர்ந்து விட்டதே!  இனியும் நான் பிழைத்திருக்கலாமா?.. இக்கணமே கெடுக என் ஆயுள்..”  என்று மயங்கி விழுந்தான்.  தவறு செய்தோமே என்ற பிழை பொறுக்காக நெஞ்சு விழுந்த கணமே தன்  துடிப்பை நிறுத்திக் கொண்டது.

மன்னன் விழுந்ததும்  அதிர்ச்சியில்  உறைந்து போனாள் பாண்டிய அரசி.  முதல் நாள் இரவு கண்ட கனவு அதற்குள் பலித்துப் போன ஊழ்வினைத் தாக்குதலில் அலமந்து போய் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து நழுவினாள்.  நழுவியவள் மாமன்னனின் காலடி பற்றித் தொழுதாள்.  கணவன் ஆவி துறந்தான் என்று உணர்ந்த அக்கணமே அவள் உயிர் உடல் விட்டு நீங்கியது.

கண்ணகியோ தன்நிலை மறந்த ஆவேச நிலையில் நிற்கிறாள்.  பாண்டிமா தேவி உயிர் துறந்த நிலையைக் கூட அறியாதவளாய் சூளுரைக்கிறாள்:  “கோவேந்தன் தேவியே!  அநியாயமாய் கணவனைப் பறி கொடுத்த நான் எதையும் உணர முடியாத நிலையில் உங்கள் முன் நிற்கிறேன்!  இருப்பினும் ஒன்று தெளிவாக எனக்குத் தெரிகிறது.  முற்பகலில் ஒருவருக்கு கேடு செய்தவன்  தன் கேட்டினை அன்றைப் பிற்பகலிலேயே  காணுவான். வினையின் விளையாட்டு அந்தளவு தீவிரமானது என்பதனை நீயும் உணர்வாயாக!...

“வன்னி மரமும், மடப்பள்ளியும் சான்று கூற இயலாத அஃறிணைப் பொருட்கள்! சான்றோர் அறிவர் இதனை; இருப்பினும் அந்த வன்னி மரத்தையும், மடப்பள்ளியையும் தனக்குச் சான்று பகர சான்றோர் முன் கொண்டு வந்து நிறுத்தினாள் அடர்ந்த  கூந்தலை உடைய பத்தினிப்பெண்  ஒருத்தி!

“பொன்னி நதிக்கரையில் மணல்பாவை செய்து விளையாடினர் இரு மங்கையர்.  ‘இப்பாவை உனக்கு கணவனாம்’ என்று ஒருத்தி இன்னொருத்திக்குச் சொல்லி விட, வீடு திரும்பாது இரவு முச்சூடும்  சீறியெழுந்த கடலலையால் அந்த மணல்பாவைக்கு அழிதல் ஏதும் நேரிட்டு விடாதவாறு சுற்றிலும் ஆற்று மணல் கொணர்ந்துக் கொட்டி  அங்கேயே அம்மணல்பாவையை  தன் கணவணாக கருதிக் காத்து நின்றாள், வரி பொருந்திய அகன்ற அல்குலைக் கொண்டிருந்த ஒரு பத்தினைப் பெண்! 

“பெரும் புகழ் கொண்ட மன்னன் கரிகால் வளவனின் மகள் ஆதிமந்தி.  வஞ்சி நகரத்துத் தலைவனான ஆட்டனத்தியைக் கணவனாகக் கொண்டவள்.  இருவரும் புனலாடச் சென்ற பொழுது காவிரிப் பெருவெள்ளத்தில் ஆட்டனத்தி அடித்துச் செல்லப்பட்டான்.  ஆதிமந்தியோ பொன்னி நதிக் கரையோரம் எங்கும்  அலைந்துத் தேடி கணவனைக் காணாது கதற்னாள்.  ‘மலையொத்த தோளைக் கொண்ட எம் பெருமானே, எங்கே சென்றீர்?’  என்று   கூவிக் கூவி சோர்ந்து போனாள். அவள் கற்பின் மாண்பை அறிந்த கடல் அன்னை தன் அலைக்கரங்களால் ஆட்டனத்தியை ஏந்தி வந்து ஆதிமந்தி முன் நிறுத்தினாள்.  தொலைந்த  கணவனைக் கண்ட மகிழ்ச்சியில் அவனைத் தழுவிக்கொண்டு  பொன்னாலான பூங்கொடி போலத் திரும்பி வந்தாள், பத்தினிப்பெண் ஆதிமந்தி.

“மணல் மிகுந்த கடற்கரைச் சோலையிலே கல்லுருவாய் நின்று, வரும் மரங்கலங்கள் எல்லாம் நோக்கியிருந்து,   பொருளீட்டச் சென்ற கணவனின் திரும்பும் வருகையை எதிர்பார்த்து எதிர்பார்த்துக் காலமெல்லாம் காத்திருந்தாள் பத்தினிப் பெண் ஒருத்தி!  ஒருநாள்  கணவன் வர, தன்  கல்லுருவம் நீங்கி நல்லுருவம் பெற்று அவனுடன் கூடிக் களித்தாள் அந்த கள்ளி அழகி!

“கணவன் வேற்று நாட்டிற்கு சென்றிருக்குங்கால்,  மாற்றான் ஒருவன் தன்னைத் தொடர்ந்து காமுற்று நோக்குவதை உணர்ந்து நிறைமதியை ஒத்த தன் அழகிய முகத்தை தன் கற்புத் திறத்தால் குரங்கு முகம் ஆக்கிக் கொண்டாள் ஒருத்தி.  வேற்று நாட்டுக்குச் சென்ற கணவன் திரும்பி வரவும்,  தன் குரங்கு முகத்தைப் போக்கிக் கொண்டு இயல்பு  முகம் கொண்டாள்,   அந்த பூம்பாவை..
                                                                                                                                  
---  “இத்தகைய நுண்மனம் படைத்த கற்புடை மகளிர் பிறப்பெடுத்த பூம்புகார் நகரில் பிறந்தவள் நான்.  அந்த நகரில் பிறந்த யானும் ஒரு பத்தினியே யாமாகில், ஒருக்காலும் விட மாட்டேன்!  அரசனோடு சேர்த்து இம்மாமதுரை நகரையும் அழிப்பேன்!  என் சினம் தணியாச் செயல்களை நீ இப்போதே பார்பாயாக!”  என்று சூளுரைத்த கண்ணகி  பொங்கிப் புதுப்புனல் போலவான வேக சீற்றத்துடன் பாண்டியனின் அரண்மனை விட்டு வெளியேறினாள்.

“ஓ!  நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும், வானக் கடவுளரும், மாதவம் செய்தோரும்  கேட்டுக் கொள்ளுங்கள்!  நான் நேசித்த என் கணவனைக் கொலை செய்த  மன்னன் பாலும்,  அவன் ஆட்சி செய்த இந்த மண்ணின் பாலும் சீற்றம் கொண்டேனே தவிர வேறேதும் குற்றம் செய்திலேன்..” என்று மக்களுக்குத் தெளிவித்து,  தானும் தெளிந்து மாமதுரை நகரை மூன்று முறை வலம் வந்தாள்.  தேன் நிறைந்த மணமுடைய தெருவில் நின்று,  தன் இடப்பாகக் கொங்கையைத் திருகி எடுத்துச் சுழற்றி விட்டெறிந்தாள்!

அப்படி அவள் எறிந்த பொழுது நீல நிறமும், முறுக்கு கொண்ட நீள்சடையும், வெண் பற்களையும் கொண்டவனாய்  தான் பற்றியதை எரிக்கும் அக்னி தேவன் அவள் முன் தோன்றினான்.  தோன்றி, “போற்றுதலுக்குரிய பத்தினி தெய்வமே!  உனக்கு மிகவும் கொடுமை இழைத்த அந்தாளிலே இந்நகரைச் சூழ்ந்து எரியூட்டவதான ஏவலை ஏற்கனவே பெற்றுள்ளேன்.  ஆதலால் இந்நகரை எரியூட்டுவது என் வேலையாயிற்று.    அந்த எரியூட்டலில் ஈங்கு   யார் யார் பிழைப்பார்?”  என்று கேட்ப, “அறவோர்,  பசுக்கள்,, பத்தினிப் பெண்டிர், முதியோர்,  குழந்தைகள் இவர்களை கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்க!” என்று சினம் கொண்ட கண்ணகி ஏவ, நல்ல தேரையுடைய  பாண்டிய வேந்தனின் கூடல் நகரை புகையுடன் கூடிய தீப்பிழம்பு பற்றியது. 


 (தொடரும்)

படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.

57 comments:

ஸ்ரீராம். said...

அமளி என்கிற வார்த்தைக்கு இருக்கை (சிம்மாசனம்) என்கிற பொருளும் உண்டா? நமக்குத் தெரிந்த பொருள் கலவரம்!

ஸ்ரீராம். said...

//இது வரை பழிஎதுவும் படராத பஞ்சவ வாழி!//

"இதுவரை!!!!

ஸ்ரீராம். said...மன்னன் செய்த பிழைக்கு மதுரை மண்ணையே எரித்தல் என்ன நியாயமோ? கோபம் கண்ணையும், அறிவையும் மறைக்கும் என்பதும் எவ்வளவு உண்மை? பொதுவாக அந்தக் காலத்தில் எல்லாச் சம்பவங்களுக்கும் ஒரு முன்கதை சொல்வார்கள். அந்த வகையில் மதுரை எரிந்ததற்கும் ஒரு முன்கதை உண்டா?

அந்தக் காலத்தில் அவர்களுக்குள் இருந்த சேர, சோழ, பாண்டிய வேற்றுமைகளே இப்படி எழுத வைத்தன போலும்!

பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளை சேரும் என்பதுபோல, மன்னனின் பாவம் மக்களையும் பாதிக்கும் போல!

ஸ்ரீராம். said...

//தன் இடப்பாகக் கொங்கையைத் திருகி எடுத்துச் சுழற்றி விட்டெறிந்தாள்!//


அவ்வளவு எளிதா அது?!!!

மோகன்ஜி said...

நான் சிறுவனாய் இருக்கையில், 'தேரா மன்னா!'செய்யுள் வரிகளை என் அண்ணன் மனப்பாடம் செய்ய உருபோட்டபடி இருந்ததை கேட்டே அதை மனப்பாடம் செய்ததும், அதை பெரியவர்களிடம் சொல்லும் போது பாராட்டுகள் பெற்றதும் பசியநினைவுகள். உங்கள் பதிவைப் படித்தவுடன் ஒருமுறை பாடலை சொல்லிப் பார்த்துக் கொண்டேன். எப்படி மறக்கும்? தாய்ப்பால் அன்றோ அன்று கற்ற இலக்கியம்?!

பன்னிரெண்டு வயதில்,என் தந்தையுடன் ஒருமுறை திருச்சி அருகே சிறுவாச்சூர் கோவிலுக்கு போனபோது,அந்த அம்மனைப் பற்றி அவர் சொன்னதை நினைவுகூர்கிறேன்.

மதுரையை எரியூட்டியபின் கண்ணகி வடக்குதிசை நோக்கி ஏகலானாள். அந்த இரவுபகலாய் ஒரு பாழடைந்து கொண்டிருக்கும் கோவிலில் தங்க உத்தேசித்து உள்ளே வந்தவளை, அந்தப் கோவிலின் தெய்வமாக இருக்கும் செல்லியம்மன் எதிர்கொண்டாள். அங்கே தங்கினால், தன்னைப் பீடித்திருக்கும் மாந்த்ரீகன் ஒருவன் அவளைக் கொன்று விடுவானென்றும், எனவே போய்விடும்படியும் சொல்ல, மாந்த்ரீகன் பற்றி கண்ணகி வினவுகிறாள். தன்னை உபாசித்த அவனுக்கு தான் தந்த வரங்களாலேயே, அவன் ஏவல்களை நான் செய்யும் நிலை வந்துவிட்டது. நாளுக்கு நாள் அவன் கொட்டம் அதிகமாகிறது என்றும் செல்லியம்மன் சொல்ல, கண்ணகி மாந்த்ரீகனை சம்ஹரிக்க காளியை வேண்ட, கண்ணகி மேல் ஆவிர்பவித்த காளி, அவனை கொல்கிறாள். அந்த காளியாகவே அங்கு செவ்வாய்,வெள்ளி என இரண்டு நாட்கள் அவ்வூரில் குடிகொண்டு காப்பதாக உறுதி அளித்துப் போகிறாள். அந்த அம்மனே மதுரகாளியம்மன் .
(மதுரையிலிருந்து வந்த அம்மன்)

பின்னாளில் ஒரு அந்தணப் பெரியவர், கண்ணகி அந்த அம்மன் என்பது சரியல்ல என்றும், எப்போதும் உக்கிரமாய் இருக்கும் காளி, அங்கே சாந்தஸ்வரூபியாக இருப்பதால் மதுரகாளி என்னு அழைக்கப் படுவதாயும் சொன்னார். எனினும் இலக்கிய நாயகியான கண்ணகியே அந்த அம்மனாக இருப்பதை மனம் ஏற்கிறது.

கண்ணகி மலையாள தேசத்தில் நம்மைவிட அதிகமாய்ப் போற்றப் படுவதாய்த் தோன்றுகிறது.
கொடுங்கல்லூர் பகவதியும் ஆட்டுக்கால் அம்மையும் கண்ணகியே. அங்கே பயங்கலந்த பக்தி செய்யப்படும் தெய்வம் அவள்.

கல்லூரி நாட்களில் மதுரையை கண்ணகி எரித்தது அறச்செயலா என்ற வழக்காடு மன்றத்தில் தவறு என்று வாதிட தேர்ந்தெடுக்கப் பட்டதால், தப்பு என்று கட்சிகட்டினேன்.நன்றாக வாதிட்டதாய் பாராட்டப் பட்டாலும் தோற்றுப் போனது என் கட்சி!

இன்னும் வருவேன்!

மோகன்ஜி said...

ஶ்ரீராம்! மிக ஆர்வமாக வாசிக்கிறீர்கள்.

கண்ணகி இடமுலை பறித்து எறிந்து மதுரையை எரித்தாள் என்று பொருள் கொள்வதற்கு இன்னொரு விளக்கம் எங்கள் தமிழய்யா சொல்லியிருக்கிறார்.

'முலை' எனும் வார்த்தைக்கு கண் மற்றும் இமைகள் என்ற பொருளும் உண்டு.
பழைய இலக்கியங்களிலும் இப்போது திளைக்கும் சிலம்பிலும் கூட, கண் எனும் பொருள்பட முலை எனும் பதம் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.
உடனே நினைவுக்கு வருவது, புறஞ்சேரி இறுத்த காதையில் வரும் கீழ்கண்ட வரி
'கதிர் இள வன முலை கரை நின்று உதிர்த்த கவிர் இதழ்ச் செவ்வாய்' (பிரகாசமான இளமை ததும்பும் வனப்பு மிக்க ,விழியோரம் சிவப்போடிய முருக்கமலர் போன்ற கண்கள்)
மார்பகம் என்று இங்கே பொருளாவதில்லை.

திருகி எறியப்படும் கட்டத்தை சொல்லும் வரிகள்:

இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள்

' மட்டார் மறுகின்' என்றால் பூங் கள்ளை சுற்றியலையும் வண்டு. அந்த வண்டு போன்ற கண்மணிகளை உடையவள். கண்மணி தான் வண்டுபோல் இருக்கும்.

ஆக இடக்கண்ணை திருகி எறிந்தாள் பத்தினித் தெய்வம். என்று பொருள் கொள்வது அந்தக் குலமகளுக்கு உரிய மரியாதை என நம்புகிறேன் . அவள் எதை எறிந்திருந்தாலும், எரித்தது அவள் கற்புக்கனல்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்தப்பகுதியிலும் ஒவ்வொன்றையும் மிகவும் அற்புதமாகவும் புரிந்துகொள்ளும்படியாகவும் வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

ஸ்ரீராமின் கேள்விகளில் சில சிந்திக்க வைப்பதாக உள்ளன.

சிறுவாச்சூர் மதுரகாளியம்மனை நானும் ஓரிருமுறை சென்று வழிபட்டு வர நேர்ந்துள்ளதால், திரு. மோகன்ஜி அவர்கள் சொல்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

//“அறவோர், பசுக்கள், பத்தினிப் பெண்டிர், முதியோர், குழந்தைகள் இவர்களை கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்க!” என்று சினம் கொண்ட கண்ணகி ஏவ,//

கோபத்திலும் உள்ள அவள் பேச்சிலும் இதுபோல ஏதோ ஓர் நியாயம் தெரிகிறது.

பாராட்டுகள். வாழ்த்துகள்.

மேலும் தொடரட்டும்.

”தளிர் சுரேஷ்” said...

தமிழ்ச்சுவை பருகினேன்! கண்ணகியின் கோபம் கண் முன்னே விரிகிறது உங்கள் தமிழ்நடையில்! மோகன் ஜி மற்றும் ஸ்ரீராம் ஆகியோரின் பின்னூட்டங்கள் சிந்திக்கவும் வைக்கின்றன. சிறுவாச்சூர் மதுரகாளி நானும் சென்று தரிசித்து இருக்கிறேன்! அதன் வரலாறு இன்று அறிந்தேன். மோகன் ஜி சொன்ன வரலாறு பொருந்தி வருகின்றது! நன்றி!

ஸ்ரீராம். said...

நன்றி மோகன் ஜி. பல வார்த்தைகளுக்கு அந்நாட்களுக்கும் இந்நாட்களுக்கும் நிறைய மாறுபட்ட அர்த்தங்கள் வந்து விடுகின்றன. அமளியையே எடுத்துக் கொள்ளுங்களேன்! திருகி எரிவதால் பற்றி எரிவது, இதெல்லாம் ஒரு குறியீடு என்று தெரியும். ஆனாலும் நியாயம் என்று பார்க்கும்போது தன்னுடைய இழப்புக்கு ஒரு ஊரையே எரிக்கும்போது கண்ணகியின் நியாயம் அடிபட்டுப் போகிறது! இருகோடுகள் தத்துவம் போல நாம் சந்தித்த தவறுக்கு பதில் தேடும்போது அதை விடாய் பெரிய தவறு செய்தால், நாம் சந்தித்த தவறு சிறிதாகி விடுகிறது இல்லை?!!

வே.நடனசபாபதி said...

// தன்னது மாணிக்கப் பரல்கள் கொண்டது என்பதை நிலை நாட்ட வேண்டுமென்ற ஆவேசம் கண்ணகிக்கு. அதனால் சற்றும் தாமதிக்காது தன் சிலம்பை பிளக்க வேண்டி வீசி எறிந்தாள். தரையில் மோதிச் சிதறிய அதனிடமிருந்து தெறித்த மாணிக்கப் பரல் ஒன்று மாமன்னனின் வாயருகே தெறித்து கீழே விழுந்தது.//

தன்னுடைய சிலம்பு மாணிக்க பரல்கள் கொண்டது என்பதை நிலைநாட்ட அரசனிடம் உள்ள (கோவலனிடம் கைப்பற்றிய) சிலம்பை அல்லவா வீசி எறிந்திருக்கவேண்டும்?

திரு ஸ்ரீராம் அவர்கள் சொல்வதுபோல் மன்னன் செய்த பிழைக்கு மதுரையை எரித்தல் என்ன நியாயம்?. குற்றம் செய்தவர் துணைவியாருடன் உயிர் துறந்தபின் ஒன்றுமறியா மதுரை வாழ் மக்களை அழித்தது சரியில்லை என நினைக்கிறேன். அறவோர், பசுக்கள், பத்தினிப் பெண்டிர், முதியோர், குழந்தைகள் ஆகியோருக்கு தந்த சலுகையை அனைவருக்கும் தந்திருக்கலாமே ?

G.M Balasubramaniam said...

மதுரையைக் கண்ணகி எரித்ததால் மதுரை மக்களுக்குக் கோபம் போலும் இந்நிகழ்ச்சிகள் குறிக்கும் கோவில்களோ மற்றவையோ மதுரையில் இல்லை என்று கேள்வி.

மோகன்ஜி said...


அன்பின் ஶ்ரீராம்,
கண்ணகி மதுரையை எரித்தது பற்றிய இலக்கிய சர்ச்சைகள் எந்த காலத்திலும் இருந்தபடி தான் கவனம் பெற்றவை.

கண்ணகி தன்னிலை மறந்த கோபாவேசத்தால் அக்னிக் கடவுளுக்கு ஆணையிட்டாள் என்று உணர்வின் உச்சத்தை வாதமாக முன்வைப்பவருண்டு.
கண்ணகி சார்ந்த வணிக இனத்தார் கோவலன் கொலை கேட்டு செய்த புரட்சியில் ,
மதுரை அங்கும்இங்கும் எரியூட்டப்பட்டது என்பாருண்டு.
கோவலன், பாண்டியன், பாண்டிமாதேவி ஆகியோரைச் சாய்த்த விதியின் விளையாட்டு, மதுரையையும் பொசுக்கியது என்று விதியின்பால் அதை சாற்றுவாருமுண்டு.

இலங்கையை எரித்த அனுமன் செயல் அறமா? அரக்கர் பட்டிணமேயாயினும் அங்கும் முதியோர், சிறார், விலங்குகள் உண்டே?
போர் தர்மமாக நீர்நிலை அழித்தலும், ஊர்களுக்கும் வயல்களுக்கும் எரியூட்டலும் எத்தனை
முறை நடந்தேறியிருக்கிறது? பல பாடல்கள் அவற்றை வீரச்செயல்களாய் அங்கீகரிக்கின்றனவே!

நான் மதுரை எரித்தலை இளங்கோ எனும் காவியம் செய்தோன் கொண்ட உயர்வு நவிலலாக காணுகிறேன்.
முதலாவதாய்,விதியின் தாக்கத்தை ஐயம் திரிபற உணர்த்துவதையும் ,இரண்டாவதாக கற்பின் மேன்மையை முன்வைப்பதையுமே மையமாய் வைத்து சிலப்பதிகார காவியம் அமைக்கிறார் இளங்கோ.

கோவலன் கொலையுண்டபின் மதுரையை எரித்த கண்ணகியின் கற்பின் சக்தி, கொலைக்கு முன்னரே ஏன் கணவனை காப்பாற்ற இயலவில்லை எனும் கேள்வி வரலாம். விதியின் கரங்கள் எதையுமே விட வலுவானது என்பதால் விதிக்கும் அங்கே இளங்கோ வழிவிடுகிறார்.

அவள் கற்பு எவ்வளவு சக்திமிக்கது என்பதை, ஒரு ஊரையே மாய்த்துவிடும் அளவு என காவியகர்த்தாவின் கவிமனம் விரிகிறது. சாதாரண ஆத்மாக்களான நம் சாதாரண மனைவிமார் வத்தக்குழம்பு வைத்தால் வாசம் 'ஊரையே' தூக்கும் போது, பேரிலக்கியம் சமைக்கும் இளங்கோ ஊரை விடுவாரா?! மேலும் வயோதிகர்,பெண்டிர்,குழந்தைகள் போன்றோரை அந்த அக்னி தீண்டாது என்று முன்ஜாமீனும் வாங்கி விடுகிறார்.

தனியொருவனுக்கு உணவில்லையெனில்
இந்த ஜெகத்தினை எரித்திடுவோம்!
என்று பாரதி ஊறுமியது இந்த இலக்கிய டி.என்.ஏ வின் செயலே !

பூவனத்தில் வானவில்லின் சாயம் ஏறுகிறதே! ஜீவி சார் என்னைத் திட்டப் போகிறார்!

ஜீவி said...

@ மோகன்ஜி
//பூவனத்தில் வானவில்லின் சாயம் ஏறுகிறதே! ஜீவி சார் என்னைத் திட்டப் போகிறார்!//

நான் ஓர் ஓரத்தில் உட்கார்ந்து உங்கள் எழுத்து வன்மையை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.
எழுதியவனுக்கு அது தானே பெருமை?.. அதனால் பின்னால் வரலாம் என்று காத்திருந்தேன்.

பூவனத்தில் வானவில்லின் நேர்த்தி படிவது இன்னும் அழகு சேர்ப்பதற்குத் தானே?.. உங்கள் அழைப்பையும் புரிந்து கொண்டேன். வந்து விடுகிறேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

அமளி என்றதும் கலவரம் என்ற சொல் உங்கள் நினைவுக்கு வந்தது அற்புதம். மெல்லிய நகைச்சுவையை இழையோட விட்டிருக்கிறீர்கள். ரசித்தேன்.

அந்த இடத்தில் காப்பிய ஆசிரியன் இளங்கோ உபயோகப்படுத்திய வார்த்தை அமளி என்பது. அதனால் அதன் அழகுணர்ந்து அதை அப்படியே போட்டு விட்டேன்.

அமளி = அரியணை. இந்த மக்கள் ஜனநாயக யுகத்தில் அதையே அரசுக்கட்டில் என்றார்கள். :))

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

ஆசிரியர் இளங்கோ ஒரு பாவமும் அறியார். அந்த 'இதுவரை' இயல்பாக அந்த இடத்தில் வந்து விழுந்து விட்டது, இனி நேரப்போகும் அரியணை ஆட்டத்தை மனத்தில் கொண்டதினாலோ என்னவோ?..

மிகச் சரியாக உங்களுக்கும் அது உணர்த்தியிருக்கிறது போலும்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (3)

மதுரை எரிந்ததற்கு என்ன நியாயம் என்று பின்னால் பார்க்கலாம். நமக்குத் தெரிந்த சுனாமிக்கு ஏதாவது நியாயம் இருக்கிறதா என்ன?...

அது மானிடரின் சீற்றம்; இது இயற்கையின் சீற்றம் என்று ஏதாவது அறிவியல் தடுக்கிற்குள் நுழைந்து கொள்ள நாம் முயற்சிக்கலாம். சீற்றம் என்று எடுத்துக் கொண்டாலும் அது இயற்கைக்கு மட்டும் தான் இருக்க வேண்டுமா என்ன?.. இயற்கையையே (அக்னி-- ஐம்பெரும் இயற்கை சக்திகளில் ஒன்று) வசப்படுத்தும் பேராற்றல் கொண்டோருக்கு இருக்காதா என்ன?..

கண்ணகி வேறு 'முற்பகல் செய்யின்'... கோட்பாட்டை பாண்டிமா தேவிக்கு நினைவு படுத்துகிறாள். மதுரை எரிந்ததற்கு முன் காரணம் ஏதாவது உண்டா என்று சட்டென்று தெரியவில்லை; தேட வேண்டும். கீதாம்மாவுக்கு வேண்டுமானால் ஏதாவது தெரிந்திருக்கலாம். அவர்கள் தான் விரல் நுனியில் இந்த மாதிரி விஷயங்களை வைத்திருப்பவர். என்னைப் பொறுத்த மட்டில் இளங்கோவடிகள் வலியுறுத்துவதும் ஊழ்வினை தான் மனசில் ஆழப்பதிகிறது.

மனிதர்களுக்கு மட்டும் தானா ஊழ்வினை?.. ஏன் ஒரு நகருக்கு ஊழ்வினை என்பது இருக்கக் கூடாதா என்ன?.. நகர் என்பது இடவாகு பெயராய் மனிதரைக் குறித்தாலும் சரியே.

'பஃருளி ஆற்று பன்மலை அடுக்கத்து
குமரிக்கோரும் கொடுங்கடல் கொள்ள'..

தென்மதுரையை கடல் கொண்டதும் ஏன்?.. தெரியவில்லை.

ஸ்ரீராம். said...

சுனாமி, மழையாமிக்களையும் இதையும் ஒப்பிட முடியுமா? ஊ..ஹூம். அது தடுக்குக்குள் நுழைவது அல்ல. இவள் கோபத்தில் ஒரு ஊரையே எரிப்பது நியாயமானால், அவர்கள் அறியாமல் ஒரு உயிரைக் கொன்றது பெரிய தவறு இல்லை என்று ஆகிவிடுகிறதே! இயற்கையின் சீற்றத்துக்கு மனிதனின் அலட்சியம் காரணம். இயற்கையை மனிதனே அழிக்கிறான். தனி மனிதரின் கோபம் ஒரு ஊரையே அழிப்பதாக இருக்கலாமா? தர்மத்தைக் காக்க, பொய் சொன்னது கண்ணனானாலும் தர்மம் அவனுக்கும் தண்டனை வைத்திருந்தது. ஊழ்வினை என்றும், வார்த்தைகளுக்கு வேறு அர்த்தம் தேடியும் படைப்பாளி கற்பிக்காத நியாயத்தை நாம் கற்பிக்கிறோம்!

:)))

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//அந்தக் காலத்தில் அவர்களுக்குள் இருந்த சேர, சோழ, பாண்டிய வேற்றுமைகளே இப்படி எழுத வைத்தன போலும்! //

நிச்சயமாய் இல்லை. மூவேந்தரும் பெருமைப்படும் விதத்தில் இந்த காப்பியத்தைத் தீட்டியிருக்கிரார் இளங்கோவடிகள். புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று தமிழ் அரசர்களுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் மூன்று பெரும் பகுதிகளுக்குள் காப்பியத்தை அடைத்து.. சும்மா சொல்லக்கூடாது, தமிழக மூவேர்ந்தர் எவரையும் உயர்த்தி--தாழ்த்தி அரசியல் பண்ணாது, நியாயமாக அவர்களுக்குச் சேர வேண்டிய பெருமைகளை வாரி வழங்கிய வள்ளல் இளங்கோவடிகள்.

'முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது' இந்தக் காப்பியம் என்று பதிகத்திலேயே ஓங்கி உரத்த குரலில் சொல்லப்படுகிறது.

'அரசியலில் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூம்..' என்கிற விஞ்ஞான உண்மையை முதன் முதல் பிரகடனப்படுத்திய மாமேதை நம் அடிகளாரே ஆவார்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

// அவ்வளவு எளிதா அது?..//

'மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்' -- என்று மயங்கி விழுந்த பாண்டியனின் அற வேதனையைக் குறிப்பிட்டு,

'ஆட்சி அதிகாரத்தை தானே இழப்பது, அவ்வளவு எளிதானதா, அது?' என்று கேட்பீர்கள் என்று நினைத்தால், நீங்கள் வேறே எதையோ 'அவ்வளவு எளிதா அது?' என்கிறீர்களே!

ஜீவி said...

@ மோகன்ஜி

தங்கள் வாதத்தை பிரமிப்புடன் வாசித்தேன்.

அவள் கண்ணழகி என்பதால் தானே, அவள் பெற்றோர் கண்ணகி என்று பெயர் சூட்டினர்?..

அந்தத தாழிருங் கூந்தல் தேவதையை கற்பனையில் கூட இடக்கண் இல்லாதவளாகப் பார்ப்பது எவ்வள்வு குரூரம்?.. அதற்காகவேனும், அந்தக் கற்ப்னை வேண்டாம்!

பின்னே?.. ஒருகாலத்தில் வெகு சரளமாக உபயோகத்தில் இருந்த வார்த்தைகள் பிற்காலத்தில் போர்வை போர்த்திக் கொண்டன எனக் கொள்ளலாம்.
அது ஒரு காரணப் பெயராம். முளைத்து வருவதால் முளை என்பதே சரி என்று ஒருவர் வாதம் வேறே. காரணப்பெயரோ, கடைப்போலியோ சர்வ சாதாரணமாக அந்த வார்த்தையை உபயோகப்படுத்திய காலம் அது.

'அவள் எதை எறிந்திருந்தாலும், எரித்தது அவள் கற்புக்கனல்' என்று சொன்னீர்களே, அதான் உண்மை! ஸ்ரீராம் சொல்வது போல ஒரு குறியீடாகவும் கொள்ளலாம்.

இதைத் தாண்டி விட்டால் மதுரையை எரித்தது நியாயமா என்ற கேள்விக்கு தராசைத் தட்டைத் தூக்குவது வெகு சுலபமாகும்.

ஜீவி said...

@ வை.கோ.

நியாயம் தெரிந்ததில் சந்தோஷம் சார். சில நியாயங்கள் வெளிப்பார்வைக்கு சட்டென்று தெரியாதவாறு மூடுதிரை போட்டுக் கொண்டு தான் இருக்கும். நாம் தான் விலக்கிப் பார்க்க வேண்டும்.

தங்கள் தொடர் வாசிப்புக்கும், கருத்திடுவதற்கும் நன்றி கோபு சார்!

ஜீவி said...

@ தளிர் சுரேஷ்

வாருங்கள், சுரேஷ் சார்!

ரசித்துப் படித்ததும் அல்லாமல் பின்னூட்டங்களையும் பொறுமையாக ஆழ்ந்துப் படித்துக் கருத்துச் சொன்னமைக்கு நன்றி.

சிறுவாச்சூர் மதுரகாளி கோயில் நான் சென்றதில்லை. தாங்கள் அதுபற்றிக் குறிப்பிட்டு மோகன் சார் சொன்னதை நினைவு கொண்டதில் சந்தோஷம்.

தொடர்ந்து வாசித்து வருவதர்கு நன்றி, சுரேஷ் சார்.

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

அரசன் கைப்பற்றிய சிலம்பு அரசனின் உடமையாக இருப்பதால் அரசன் தான் அதை உடைப்பதற்கான வழிவகைகளைச் செய்திருக்க வேண்டும்.

இந்த விஷயத்திலும் பாண்டியன், 'தேரா மன்னனா?' இல்லை.

கோவலனிடமிருந்து கவர்ந்த சிலம்பை உடைத்துப் பார்க்க வேண்டும் என்ற சிந்தனை கூட பாண்டியனிடம் இல்லை. கண்ணகியின் ஆவேசத்தின் சத்தியத்தைப் பார்த்ததுமே ஏதோ தவறு நடந்திருக்கிற உணர்வு வந்து விட்டது அவனுக்கு. அந்த உணர்வு கண்ணகி சிலம்பை உடைத்து மாணிக்கப் பரல்கள் வெளிப்பட்டதும் நிச்சயமாகி நேரிடையான அந்த சத்தியத்தின் தரிசனம் மன்னன் மனசை வாட்டிய தீவிரம் அவன் உயிருக்கு உலை வைக்கிறதாகி போகிறது. பொற்கொல்லனைத் தண்டித்தால் தவறு நேராகி விடும் என்ற 'மூன்றாம் தர' குறுக்கு புத்தி கூட இல்லாமல் பழியைத் தானே ஏற்கிறான். வளைந்த செங்கோலை நேர்படுத்திய மாமன்னன் அவன்.

கண்ணகிக்கோ அவள் முன் மன்னன் எடுத்து வைத்த அவள் சிலம்பை உடைக்க வேண்டும் என்கிற அவசியமில்லாது போகிறது. அதனால் தான் தன் உடைமை கைச்சிலம்பைத் தானே உடைக்கிறாள்.

பொதுவாக நியாயம் நம் பக்கம் தான் என்று முழுசாக நம்புகிறவர்கள் இந்த மாதிரி அசட்டுத்தனங்கள் தான் செய்வர். ஆலோசித்து குயுக்தியாக செயல்படும் யோசனை எல்லாம் அவர்களுக்கு இருக்காது.

பாண்டிய மன்னன், பாண்டிமா தேவி, கண்ணகி --- மூன்று பேரின் பாத்திரப் படைப்புகளும் அற்புதம். இந்த இடத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு சத்தியத்தின் சொரூபமாகவே மூவரும் திகழ்கின்றனர்.

//அறவோர், பசுக்கள், பத்தினிப் பெண்டிர், முதியோர், குழந்தைகள் ஆகியோருக்கு தந்த சலுகையை அனைவருக்கும் தந்திருக்கலாமே ? //

மேற்சொன்னவர்களை விட்டு விட்டு, 'தீத்திறத்தார் பக்கமே சேர்க' என்றும் கண்ணகி
தெளிவாகச் சொல்கிறாள்.

தொடர்ந்து வாசித்து வருவதற்கும் தங்கள் கருத்துக்களைப் பதிவதற்கும் நன்றி, நண்பரே!

சிவகுமாரன் said...

முலை என்பதற்கு கண் எனப் பொருள் கண்டு வியந்தேன். அதுவே சரியானதாகவும் தோன்றுகிறது எனக்கு.

சிவகுமாரன் said...

படிக்க படிக்க கண்முன் காட்சிகள் விரிந்தன. மோகன் அண்ணாவின் பின்னூட்டங்கள் மேலும் மெருகூட்டுகின்றன.

சிவகுமாரன் said...

\\\பொதுவாக நியாயம் நம் பக்கம் தான் என்று முழுசாக நம்புகிறவர்கள் இந்த மாதிரி அசட்டுத்தனங்கள் தான் செய்வர். ஆலோசித்து குயுக்தியாக செயல்படும் யோசனை எல்லாம் அவர்களுக்கு இருக்காது////

மிகச் சரியாய் சொன்னீர்கள் ஜீவீ சார்

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

//அறவோர், பசுக்கள், பத்தினிப் பெண்டிர், முதியோர், குழந்தைகள் ஆகியோருக்கு தந்த சலுகையை அனைவருக்கும் தந்திருக்கலாமே ? //

நீங்கள் சலுகை என்று சொன்ன வார்த்தை ரொம்ப நேரம் மனசை உறுத்திக் கொண்டே இருந்தது.

Geetha Sambasivam said...

எல்லோருடைய கருத்துகளையும் ஊன்றிப் படித்தேன். :)

ஜீவி said...

@ GMB

மதுரைப் பாசம் என்றில்லை. தனி நபர் ஒருவரின் துயருக்காக ஊரையே கொளுத்துவானேன் என்பது ஸ்ரீராமின் கேள்வி.

நீங்கள் சொல்லியிருப்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. கோயில்கள் ஏன், கண்ணகி பற்றிய சரித்திர தரவுகளைத் திரட்ட வேண்டும். சிலப்பதிகாரம் ஒரு காப்பியப் புதினம் போலத் தோன்றினாலும் நடந்த நிகழ்வுகளை நடந்த மாதிரியே சொல்லும் யதார்த்த வடிவு கொண்டிருக்கிறது. இதுவே காப்பியத்தின் நிகழ்வுகளின் மேல் நம் உணர்வு படிந்து பற்றிக் கொள்வதற்கான தலையாய காரணமும் கூட.

கண்ணகி பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை தமிழ் அறிஞர்கள், முனைவர்கள் ஆராயலாம்.
வரலாற்று ஆய்வுகளின் தரவுகள் இருக்கின்றன என்றால் அவற்றைப் பற்றித் தெரிந்தவர்கள் சொல்லலாம்.

சிலப்பதிகாரக் கருத்துக்களை விமரிசிக்கும் நிலையிலேயே சிலப்பதிகாரம் பற்றிய வாசிப்பு முழுமை பெறாமல் போய்விட்டது இன்னொரு நிலை.

தாங்கள் வாசித்து வருவது குறித்து மகிழ்ச்சி.

ஜீவி said...

@ மோகன்ஜி

எத்தனை அர்த்த பூர்வமான கேள்விகள்?..

அனுமன் உதாரணம் அட்டகாசம்.

பாரதியின் உறுமலை இலக்கிய டி.என்.ஏ. செயலாகப் பார்த்தது உச்சம்.

காவிய கர்த்தாவின் கவிமனத்தை உணர்வது பாம்பறியும் பாம்பின கால் சமாச்சாரம். சிவகுமாரன் இது பற்றி ஏதும் சொல்லாமல் விட்டு விட்டாரே!

ஜீவி said...

@ ஸ்ரீராம் (6)

ஊரை எரித்தது நியாயம் என்று சொல்ல வரவில்லை, ஸ்ரீராம். தனக்கு நேர்ந்த கொடுமையை அவள் கற்பின் கனல் இந்த விதத்தில் எதிர்கொண்டிருக்கிறது என்று காப்பியம் சொல்வதாக நாம் கொள்ளலாம். காப்பியத்தில் சொல்வதெல்லாம் நிகழ்வுகளாக இருந்தால் இதையும் ஒரு நிகழ்வாகக் கொள்ளலாம். அது நிகழ்வாக இருப்பின் இளங்கோவும் ஒரு நிகழ்வை நேரடியாக வர்ணித்த அந்த வரலாற்று கால பார்வையாளர் ஆகிறார். அதனால் அவரைச் சொல்லியும் குற்றமில்லை என்பதை விட ஒரு வரலாற்று நிகழ்வை இன்றைய நாம் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பளித்த சரித்திர கதாசிரியாகிறார்.

தர்மத்தைக் காக்க கண்ணகி பொய் சொல்லவில்லை; மாறாகப் போராடியிருக்கிறாள். தன் கணவன் மேல் விழுந்த களங்கத்தைத் துடைப்பதற்கு அவனது இறப்பிற்கு பின்னும் தனி மனுஷியாக அற தெய்வங்களின் துணை கொண்டுப் போராடி ஜெயித்து அவளே தெய்வமாகி விட்டாள்!.. இதுவே அவளின் சிறப்பாக காப்பியம் வடிவம் கொண்டுள்ளது.

இதில் என்ன குற்றம் காணுகிறீர்கள்?.. தெரியவில்லை.

அந்த சரித்திர நிகழ்வுகளின் சாரம்சத்திற்கு உயர்வு கூட்ட அவர் தம் வாழ்க்கையில் கற்றுணர்ந்த பாடங்களுடன் அந்த நிகழ்வுகளை குழைத்துத் தருகிறார்.

1. ஊழ்வினை ஒருவரின் வாழ்க்கை பூராவும் தொடர்ந்து வரும். அதை அனுபவித்துத் தான் தீர்க்க வேண்டும். அப்படி தீர்ப்பது தான் நல்லனவற்றிற்கு நகர்வதான புடம் போடப்படும் வாழ்க்கை.

இது முதல் பாடம். மற்ற இரண்டு பாடங்களை நீங்கள் அறிவீர்கள்.

நடந்து முடிந்த சுனாமியை, நாம் பார்த்த சுனாமியை நாளைக்கே ஒருவர் இதே மாதிரி கதை நிகழ்வுகளுடன் சுனாமி வந்ததற்குக் காரணம் இது தான் என்று தன் கற்பனையை விரித்தால் நாம் என்ன நியாயம் கேட்டு இப்படியா கேள்விகள் கேட்கப் போகிறோம்.
மேனாட்டு புதினங்களில் இப்படி எவ்வளவு விஷயங்கள் சுவைபடச் சொல்கிறார்கள்?.. தமிழுக்கு மட்டும் அவை மாதிரி வேண்டாமா, என்ன?..

விளக்கம் வேண்டிய தங்கள் நியாயமான கருத்துக்களுக்கு நன்றி, ஸ்ரீராம்!

ஜீவி said...

@ சிவகுமாரன்

ஒரு வியத்தல், ஒரு விரித்ததை ரசித்தல், ஒரு உணர்தல்--

மூன்றையையும் கச்சிதமாக அடக்கி விட்டீர்கள்.

பாரதியாரின் உறுமலைப் பற்றி ஏதுமில்லையா?..

வாசித்து வருவதற்கு நன்றி, கவிஞரே!

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

ஊன்றிப் படித்து?...

வே.நடனசபாபதி said...

ஒரு அரசன் செய்த தவறுக்கு அவனது குடிமக்களைத் தண்டிப்பது எந்த விதத்திலும் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. அப்படி தண்டிக்கும்போது எல்லோரையும் தண்டிக்காமல் அறவோர், பசுக்கள், பத்தினிப் பெண்டிர், முதியோர், குழந்தைகள் ஆகியோருக்கு மட்டும் விதி விலக்கு அளித்தது, ஒரு சலுகை போல் எனக்குத் தோன்றியதால் அவ்வாறு குறிப்பிட்டேன். மற்றபடி சம்பந்தமே இல்லாத பொதுமக்களைத் தண்டித்தது சரியல்ல என்பது என் கருத்து.

Yaathoramani.blogspot.com said...

பூவனத்தில் அழகிய தமிழிது
பதிவினையும் பின்னூட்டங்களையும்
படித்து ரசித்து மலைத்தேன்
ஆம் அத்தனையும் மலைத்தேன்
மீண்டும் ஒருமுறைப் படிக்கவேண்டும்
வாழ்த்துக்களுடன்.....

Geetha Sambasivam said...

திரு நடனசபாபதியின் கருத்தே என் கருத்தும். ஆனால் மதுரை அனல்மாரியாலும், உறையூர் மண் மாரியாலும் காவேரிப்பூம்பட்டினம் நீர் மாரியாலும் அழிய வேண்டும் என்பது விதி! இது குறித்து முன் கூட்டியே சொல்லப்பட்டும் இருக்கிறது. விரிவாக எழுத நேரமில்லை; குறிப்புகள் கைவசம் இல்லை. :(

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

சிலப்பதிகார மதுரை எரிப்புக்கு வரலாற்று ஆதாரம் ஏதாவது உண்டா என்று தெரியவில்லை.
தாங்களும் தேடிச் சொல்லுங்களேன்.

அடிகளாரின் காப்பிய வரிகள் எந்த மாற்றமும் இல்லாமல் என் உரைநடையாகிறது. அவ்வளவு தான்.

தங்கள் மீள் வருகைக்கு நன்றி, சார்.

ஜீவி said...

@ Geetha Samasivam

சிலப்பதிகார காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று அராய்ச்சியாளர்கள் கணித்திருக்கிறார்கள்.

விதி இருக்கட்டும். அந்த காலகட்டத்தில் நீங்கள் சொல்கிற அனல்மாரி ஏற்பட்டதா என்று சொல்லுங்கள். அது போதும். திரு. நடனசபாபதியிடம் இது பற்றிக் கேட்டிருக்கிறேன்.
வரலாறு முக்கியம், இல்லையா?.. சரியான தரவுகள் இல்லாமல் நம் எண்ணப்படி வரலாற்று நிகழ்வுகளை விமரிசிக்க்க் கூடாது.

ஏன் கேட்கிறேன் என்றால்--

ஸ்ரீராமிற்கு (6) கொடுத்துள்ள் பின்னூட்டத்தின் படி அந்த நிகழ்வை ஆராயலாம். அப்படி ஆராயும் பொழுது உங்கள் கருத்து எவ்வளவு தவறானது என்பது தெரியும்.

உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளவேனும் அந்த வரலாற்றுத் தகவலை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

பின்னூட்டத்திற்கு நன்றி.

Geetha Sambasivam said...

தவறான கருத்து எனில் மாற்றிக் கொள்ளத் தான் வேண்டும். ஆனால் இந்தத் தகவல்கள் வரலாற்றில் படித்ததாக நினைவில் இல்லை! :) ஆகவே என்னிடம் வரலாற்றுக் குறிப்பெல்லாம் கிடையாது. மதுரை அனலில் எரிக்கப்பட்டது கண்ணகியால் என்றாலும் அதுவே முன்கூட்டி நிர்ணயிக்கப்பட்டது என்பார்கள். கண்ணகியால் மதுரை அனல் மாரியில் எரிந்து சாம்பலாக வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்று படித்த நினைவு இருக்கு! அது போலவே உறையூரில் மண்மாரி ஏற்பட்டதும் தெரிந்திருக்கலாம். காவிரிப் பூம்பட்டினம் கடல் பொங்கி அழிந்ததும் தெரிந்திருக்கும். இவை எல்லாவற்றிற்கும் சரித்திரக் குறிப்புகளும் கிடைக்கும். மூன்று நகரங்களும் அழிந்ததன் காரணம் குறித்தும் படித்திருக்கேன். ஆனால் எதில் என்று தான் நினைவில் இல்லை. ஆகவே என்னுடைய தகவல்களுக்கு ஆதாரம் இருக்கிறது என்றோ அவை தான் உண்மை என்றோ நான் எங்கும் சொல்லவும் இல்லை. தற்சமயம் இதில் முழுமனதையும் செலுத்தும்படியான சூழ்நிலையும் இல்லை! :) மற்றபடி நீங்கள் ஆராய்ந்து எழுதுங்கள். படித்துக் கருத்துச் சொல்கிறேன்.

Geetha Sambasivam said...

. //சரியான தரவுகள் இல்லாமல் நம் எண்ணப்படி வரலாற்று நிகழ்வுகளை விமரிசிக்க்க் கூடாது. //

என் எண்ணப்படி எதையும் சொல்லவும் இல்லை. மூன்று பெருநகரங்கள் அழிந்தது முறையே அனல், மணல், நீர்(கடல்) ஆகியவற்றால் என்பது வரை தெரியும்.

ஜீவி said...

"ஒரு அரசன் செய்த தவறுக்கு அவனது குடிமக்களைத் தண்டிப்பது எந்த விதத்திலும் நியாயம் இருப்பதாக தெரியவில்லை"

-- இது திரு. வே. நடன்சபாபதி அவர்கள் கருத்து இல்லையா?

இதைத் தான் நீங்களும் வழி மொழிந்திருக்கிறீர்கள், அல்லவா?..

சரி விஷ்யத்திர்கு வருவோம்.

1. கண்ணகியின் மதுரை எரிப்பு ஒரு வர்லாற்று நிகழ்வு என்றால், அந்த நிகழ்வைக் காப்பியமாக்கிய இளங்கோவிடம், நிகழ்வு மாறான எந்த மாற்றத்தையும் எதிரிபார்ப்பது தவறு. ஒரு வர்லாற்று உண்மையை வைத்து காப்பியம் வடிக்கும் பொழுது வரலாற்று உண்மைகள் சிதைவு படாமல் பார்த்துக் கொள்வது எழுதுபவரின் பொறுப்பு.

2. கண்ணகியின் மதுரை எரிப்பு இளங்கோவின் கற்பனை, அது வரலாற்று நிகழ்வு இல்லை என்றால், மதுரை எரியவே இல்லை. அது ககப்பியத்தில் வந்த கற்பனை. அப்படிப் பார்க்கும் பொழுது நிஜமாக எரியாத ஒன்றை எரிந்ததாகக் கொண்டு கருத்தே சொல்ல வேண்டாம். அது எழுதியவரின் கற்பனைச் சிறப்பை குறை சொல்வதாகும்.

-- இதற்காகத் தான் மதுரை எரிந்ததற்கு வரலாற்று சான்று ஏதாவது உண்டா என்கிற தகவலுக்காகத் தேடி அலைகிறேன்.

இப்பொழுது சொல்லுங்கள். இதையே தான் ஸ்ரீராமிற்கான (6) பதிலாகவும் சொன்னேன்.

இதன் அடிப்படையில் சிந்தியுங்கள். தொடர் வருக்கைக்கு நன்றி, கீதாம்மா.

சிவகுமாரன் said...

\\\\பாரதியின் உறுமலை இலக்கிய டி.என்.ஏ. செயலாகப் பார்த்தது உச்சம்.

காவிய கர்த்தாவின் கவிமனத்தை உணர்வது பாம்பறியும் பாம்பின கால் சமாச்சாரம். சிவகுமாரன் இது பற்றி ஏதும் சொல்லாமல் விட்டு விட்டாரே!/////

மோகன் அண்ணா மிகச் சரியாய் சொன்னார். கண்ணகியின் கோபம் தலைமுறைகளை தாண்டி பாரதியிடம் வந்திருக்கிறது.
''' இது பொறுப்பதில்லை தம்பி எரிதழல் கொண்டு வா
கதிரை வைத்த்திழந்தான் - அண்ணன்
கையை எரித்திடுவோம்.""

''''மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம் '''

"தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை எரித்திடுவோம் ""

அவனும் கண்ணகியின் நெருப்பைத் தான் தூக்கிக் கொண்டு திரிந்திருக்கிறான். சந்தேகமில்லை அது இலக்கிய DNA தான்

சிவகுமாரன் said...

"கபீரும் நானும் " காண அழைக்கிறேன்

sury siva said...

மதுரைக்குள்ளே கோவலன் நுழையும்போது வந்த நான்,
மதுரை எரிந்தபின்பு தான்
மறுபடியும் வந்து படிக்கிறேன்.

சிலப்பதிகார நிகழ்வுகளைக் கண்முன்னே கொண்டு வந்து
மற்றும் ஒரு முறை நிகழ்ச் செய்து இருக்கிறீர்கள்.

மோகன்ஜி எங்கே காணோம் என்று நினைக்கின்ற வேளையில் அவர் கருத்துக்கள் முன் நின்று முறுவலிக்கச் செய்கின்றன.

சிலப்பதிகாரம் முடிவுற்ற வேளையில் அடுத்த காவியத்தைத் துவங்குவீர்கள் என்று எதிர்பார்த்தால்,

குடு குடுப்பைக்காரன் வாசலில் வந்து நிற்கிறான்.


சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.comn

ஜீவி said...

@ சிவகுமாரன்

பாம்பறியும் பாம்பின கால் சமாச்சாரத்தை சாந்தமாக உணர்த்தி விட்டீர்கள். அந்த இலக்கிய DNA சமாச்சாரம் உங்கள் வரை தொடர்ந்து வருவதையும் பார்த்திருக்கிறேன்.
அது வெள்ளைமனம் படைத்தார்களின் சொத்து. கவிஞர்கள் இந்த சொத்துக்குப் பட்டா போட்டுக் கொண்டவர்கள். உறுமல் அவர்கள் உள்ளம் வெந்து போனால் வெளியே பற்றிக் கொள்ளும்.

வருகிறேன், சிவகுமாரன்.

ஜீவி said...

@ Sury Siva

எப்பொழுது வந்தாலும், தொடர்ச்சியை வாசித்திருப்பீர்கள் என்று தெரிகிறது.

இனிமேல் தான் 'அழற்படு காதை'யே. கண்ணகி மதுரையை எரித்தது என்பது வரலாற்று நிகழ்வா, இல்லை இளங்கோவடிகளாரின் கற்பனையா என்ற பூதாகரக் கேள்வி எனக்குத் தெரிந்து இப்பொழுது தான் எழுந்திருக்கிறது.

எழுந்திருப்பதற்கான காரணம்: 1. தனி ஒருவரின் பாதிப்புக்காக ஒட்டு மொத்த நகரத்தையே எரிப்பது என்ன நியாயம் என்ற கேள்வி. 2. எரித்ததே தப்பு என்கிற பொழுது அதில் என்ன சிலருக்கு சலுகை?

பொதுவாகவே சரித்திர நிகழ்வுகள் அத்தனையுமே அந்த அந்த காலகட்ட நியாயங்களுக்கும் அல்லது அநியாயங்களுக்கும் சொந்தமாக இருக்கின்றன. அந்த நியாய அநியாயங்களை இன்னொரு காலகட்ட நியாய அநியாயங்களோடு பொருத்திப் பார்த்து சாட்டையை சுழற்றுவது நியாயமில்லை தான். இருப்பினும் வரலாற்று நிகழ்வுகளை ஒட்டி இந்தக் காப்பியத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம் என்ற நோக்கில் அந்த பூதாகரக் கேள்வி எழுந்தது. இந்த அடிப்படை கேள்விக்கு பதில் இல்லை எனில், மேற்குறித்த இரண்டு கேள்விகளுக்கும் இயல்பாகவே பதில் இல்லாமல் போகிறது.

தொடர்ந்து சிலப்பதிகாரம் பற்றி தொடராக எழுதுவது சிலருக்கு சோர்வேற்படுத்தலாம்.
அதனால் அதற்கு நடுவில் ஒரு குறுக்குப் பாய்ச்சல் தான் குடுகுடுப்பைக்காரன் வாசலில் நின்றது. சிலப்பதிகாரமும் அது பாட்டுக்கத் தொடரும்.

குடுகுடுப்பைக்காரன் பக்கமும் கொஞ்சம் பார்வை பதியட்டும், ஸ்வாமி. உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்த சப்ஜெக்ட் தான் அதுவும்.

தங்கள் அன்பான கருத்துப் பதிவுக்கு நன்றி, சுதாஜி!


sury siva said...

குடுகுடுப்பைக்காரன் வாசலில் நின்றது. //

75 வயதிலே குடுகுப்பைக்காரன் சொல்லித்தான் தெரியவேண்டியது எதுவும் இருக்காது. அவன் சொல்லித்தான் தெரியவேண்டும் என்ற நிலை இருப்பின், வாழ்ந்த காலத்துக்கு ஒரு பொருள் இருக்காது.

இருப்பது இன்னும் சில நாட்களோ மாதங்களோ ?
இன்னும் தெரியவேண்டியதோ பற்பல இருக்கும் வேளையில்,

சிலப்பதிகாரம் எனக்கு பாரம் அதிகமாக தோன்றவில்லை.
சாரம் அதில் தான் இருக்கிறது. அதனால் அடுத்த
வாரமாவது தொடருங்கள்.

சுப்பு தாத்தா.

ஜீவி said...


@ Sury Siva

//வாழ்ந்த காலத்துக்கு ஒரு பொருள் இருக்காது. //

வாழ்ந்த காலத்துக்கு ஒரு பொருள் கொடுக்கப்போகும் கதை தான் அது. அது ஒரு தொடர்.
எதை எழுதினாலும் எதை வலியுறுத்த வேண்டும் என்று நினைக்கிறோமோ, எதற்காக பேனா பிடித்திருக்கிறோம் என்று நினைக்கிறோமோ அது தான் எழுத வரும்.
அதனால் அந்தப் பக்கமும் தங்கள் பார்வை பதியட்டும்.

நாளை, சிலம்பின் அடுத்த பகுதி பிரசுரமாகிறது. வந்து விடுங்கள், சுதாஜி!

G.M Balasubramaniam said...

என் பின்னூட்டத்தை மீண்டும் பாருங்கள் ஸ்ரீராமின் புரிதலைப் பற்றியதல்ல அது பெயர் பெற்ற கண்ணகியின் வரலாறோ நினைவையோ கூறும் இடங்கள் மதுரையில் இல்லை என்றே தெரிகிறது அதையே மதுரை மக்களின் கோபமோ என்று குறிப்பிட்டேன்

ஜீவி said...

@ G.M.B.

உங்கள் பின்னூட்டத்தின் முதல் வரியில் 'மதுரையைக் கண்ணகி எரித்ததால் மதுரை மக்களுக்குக் கோபம் போலும்' என்று சொல்லியிருக்கிறீர்கள், அல்லவா?

ஸ்ரீராம், கீதாசாம்பசிவம் போன்ற நம் பதிவுலகைச் சார்ந்தவர்கள் மதுரைக்காரர்கள். 'மன்னன் செய்த பிழைக்கு மதுரை மண்ணையே எரித்தல் என்ன நியாயமோ?' என்று ஸ்ரீராமும் தன் முந்தைய பின்னூட்டத்தில் கேட்டிருக்கிறார். அதனால் இயல்பாகவே ஸ்ரீராம் உங்கள் பின்னூட்டத்தில் வந்தார். அவ்வளவு தான்.

கண்ணகி பெண் தெய்வமாகப் போற்றப்படுபவர். அவர் மேல் யாருக்குக் கோபம் வரும்?
கண்ணகிக்காக சிலை எடுத்தது, சீர்காழியை அடுத்த பூம்புகாரில் சிலப்பதிகார காட்சிகளை விளக்கும் அரங்கு அமைத்து அதைச் சுற்றுலாத்தலமாக்கியது எல்லாம் கண்ணகியின் மேலான நம் மரியாதையையும் அன்பையும் காட்டத்தான்.

தி.தமிழ் இளங்கோ said...

எனது பள்ளிப் படிப்பின் போதும், இந்த கண்ணகி வழக்குரை காதையை பாடமாக வைத்து இருந்தார்கள். இந்த தொடரின் ஒவ்வொரு வரியிலும் உங்களது சிலப்பதிகார ஈடுபாட்டையும், தமிழ் உணர்வையும் உணரமுடிகிறது. தொடர்கின்றேன்.

Geetha Sambasivam said...

//கண்ணகி பெண் தெய்வமாகப் போற்றப்படுபவர். அவர் மேல் யாருக்குக் கோபம் வரும்?//

கோவலனோடு வாழ்ந்து குழந்தையப் பெற்றெடுத்தது மாதவி. கண்ணகி கடைசியில் சில நாட்களே கோவலனோடு இருந்திருக்கிறாள். அதுக்குள்ளாகப் பெண் தெய்வமாகப் போற்றப்படுவது தான் ரொம்பவே ஆச்சரியமானது!

ஜீவி said...

@ தி. தமிழ் இளங்கோ

அப்படியா, நண்பரே! அன்றைய நாட்களில்.. தமிழ் வகுப்பு என்றால் வெல்லக்கட்டியாய் இனிக்கும். தமிழ் பாடநூலும் அற்புதமான தொகுப்புக்களைக் கொண்டிருக்கும். நான் சிறப்புத் தமிழ்ப் பிரிவு எடுத்திருந்தேன்.

நான் படித்த காலத்து ஆறாவது பாரம் வாரை-- Sixth Form-- தான். (அதுவே எஸ்.எஸ்.எல்.சி.க்கான இறுதி வகுப்பு.) நான் வாசித்ததும் எஸ்.எஸ்.எல்.சி. வரை தான்.
கல்லூரி செல்லவில்லை.

காமராஜர் காலத்தில் பஞ்சாயத்து யூனியன் துவக்கம். எஸ்.எஸ்.எல்.சி. படித்தோர்க்கெல்லாம் வேலை. வேலைவாயிப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த SSLC முடித்தோருக்கு வீடு தேடி வேலைக்கான உத்தரவு வந்தது.

எனக்கு அப்போது வயது 16. அரசு வேலையில் சேர்வதற்கு 18 வயது ஆகியிருக்க வேண்டும் என்பதால் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் வேலை இல்லாமல் போயிற்று.

அடுத்த இருவருடங்களில் நிறைய அரசு இலாகாக்களில் 10A1 (தற்காலிக வேலைகள்-- Leave vacancies)

கர்மவீரர் முதவராய் இருந்த காலத்தில் தமிழக அரசு வேலைக்கான உத்தரவு வீட்டுக் கதைவைத் தட்டியது. அதே வருடத்தில் மத்ய அரசுப் பணிக்காக விண்ணப்பித்திருந்ததில் தேர்வாகி தபால் தந்தி இலாகாவிலிருந்த தொலைபேசி துறையில் புதுவையில் பணியில் சேர்ந்தேன்.

அந்த வருடமே புதுவை கடற்கரைக் கூட்டத்தில் தோழர் ஜெயகாந்தனைச் சந்தித்தது, அதைத் தொடர்ந்த நிகழ்வுகள் எல்லாம் மறக்க முடியாத நினைவுகள்.

தங்கள் அழ்ந்த வாசிப்புணர்வுக்கு நன்றிகள். தொடர்ந்து வாருங்கள். நிறைய பேசலாம்.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

பெண்தெய்வமாகப் போற்றப்படுவதற்கான உங்கள் வரையறைகள் வேடிக்கையாய் இருக்கின்றன.

அடுத்து வஞ்சிக்காண்டம் வரப்போகிறது. அங்கு தான் பத்தினித் தெய்வமாகிறாள்.

அங்கே தொடர்ச்சியைப் பார்க்கலாம். தாங்கள் தொடர்ந்து வாசித்து வருவதற்கு, நன்றி.

Geetha Sambasivam said...

மறுபடி மறுபடி படித்தால் கண்ணகி ஆரம்பத்திலிருந்தே கோவலனிடமிருந்து விலகி நின்றதையும் தன் பத்தினித் தனத்தை மட்டுமே காட்டும் ஆவல் இருந்ததையும் உணரலாம். இது என்னோட கருத்து. தனிப்பட்ட கருத்து! ஏற்கவேண்டும் என்னும் அவசியம் ஏதும் இல்லை. :)))))))))

ஜீவி said...

@ கீதாசாம்பசிவம் (2)

கண்ணகி மீது எதனாலோ ஒரு அவெர்ஷன் உங்களுக்கு இருக்கிறது. இயல்பாகவே கொண்ட கருத்தை மாற்றிக் கொள்ள அவ்வளவு சிரமப்படாத நீங்கள், கண்ணகி பற்றி உங்கள் ஆழ்மனத்தில் பதிந்து போன கருத்தை மாற்றிக் கொள்ள சிரமப்பட்டு மறுக்கிறீர்கள்.
கண்ணகி பற்றி நிறைய பேசப்பேச எங்கே அவள் பற்றி நாம் கொண்டிருக்கிற கருத்து மாற்றம் கொண்டு விடுமோ என்று தவிர்க்கிறீர்கள்.

மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்க்ள் கண்ணகி பற்றி 'திண்ணை' இணைய இதழில் எழுதியிருந்ததைப் பற்றி முன்பே இந்தப் பகுதியில் குறிப்பிட்டு அதற்கான சுட்டியையும் கொடுத்திருந்தேன். இதே திரு. இந்திரா பார்த்தசாரதி இப்பொழுது நாவல் வடிவில் சிலப்பதிகாரத்தை எழுத ஆயத்தங்கள் செய்து கொண்டிருப்பதாக குமுதம் லைஃப் இதழில் ஒரு பேட்டியில் சொன்ன நினைவும் வருகிறது. அவர் கூட முன்பு தான் சொன்ன கருத்துக்கு பிராயசிக்கம் வேண்டி இப்பொழுது எழுதப் போவதை மாற்றி எழுதலாம்..
நீங்கள் மாற்றிக் கொள்ளாதற்குக் காரணம், உங்களுக்கு 'மாற்றி யோசிக்கும்' பழக்கம் இல்லாமலும் இருக்கலாம்.

பொதுவாக கருத்துக்களை இன்னொருவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்வதில்லை. தான் கொண்டிருக்கும் கருத்திற்கு மாற்றாக இன்னொருவர் சொல்லும் அந்தக் கருத்தின் இன்னொரு பக்கத்தையும் அவர் பார்க்க வேண்டும் என்பதியற்காகத்தான். இதனால் தான் பூவுலகில் எது பற்றிய கருத்துக்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன.

Geetha Sambasivam said...

இந்திரா பார்த்தசாரதி எழுதி இருந்ததை ஏற்கெனவே படிச்சேன். ஶ்ரீராமரைக் குறித்து எத்தனை விதமான கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன. கேள்விகள் பிறக்கின்றன. ஆனால் கண்ணகி குறித்துச் சொன்னால் மட்டும்! :)))) போகட்டும், என்னைக் குறித்த உங்கள் கருத்தைச் சொல்வதற்கு நன்றி. இது உங்கள் கருத்து மட்டுமே தான்! உண்மையில் நான் எதையும் எப்போதும் எங்கும் எதற்காகவும் தவிர்த்தது இல்லை. கண்ணகி குறித்த என் கருத்தை பேசுவதன் மூலமெல்லாம் அவ்வளவு எளிதில் மாற்ற முடியாது. அதற்காகவெல்லாம் நான் தவிர்க்கவில்லை என்பதே உண்மை. முதலில் இதை உங்களுக்கு எழுத வேண்டாம்னு நினைச்சிருந்தேன். ஆனால் என்னைக் குறித்த உங்கள் கருத்தைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது. தவறான கருத்து என்றாலோ, தவறாகச் சொன்னாலோ உடனே மன்னிப்புக் கேட்கும் சுபாவம் உடைய எனக்கு உங்கள் இந்த கருத்து ரசித்துச் சிரிக்க வைத்தது. நன்றி. என்னுடைய வேலைப்பளுக் காரணமாகவும் வேறு சில அடுத்தடுத்த சொந்தப் பிரச்னைகள் காரணமாகவுமே இணையத்தில் இருப்பதும் பதிவுகள் படிப்பதும் கருத்துகள் சொல்வதும் குறைந்திருக்கிறது. மற்றபடி மற்றவர் பேசினால் எல்லாம் கருத்து மாற்றம் ஏற்படும் என்றெல்லாம் பயப்படவில்லை. அப்படி ஒண்ணும் கண்ணகி பெரிய கதாபாத்திரமே இல்லை. சிலப்பதிகாரத்தில் மாதவிக்கு உள்ள இடம் கண்ணகிக்கு என்றுமே கிடையாது! கோவலனைத் திருமணம் செய்து கொண்டு பின்னர் மாதவியிடம் அனுப்பி வைத்ததைத் தவிர அவள் அதிலே என்ன செய்தாள்? போகட்டும், இந்த வாதம் இதோடு முடித்துக் கொள்கிறேன், காலை நேரம், வீட்டு வேலை! :)

Related Posts with Thumbnails