மின் நூல்

Tuesday, May 15, 2018

நெஞ்சில் நிறைந்த பாலா

(எழுத்தாளர்  பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது.   தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியாத எழுத்துக்குச் சொந்தமானவர் பாலா.   சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் எனது  'ந. பிச்சமூர்த்தியிலிருந்து  எஸ்.ரா. வரை'  என்ற நுலில் பாலகுமாரனை வாசித்ததில் மனதில் படிந்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தேன்.    மனக்குளத்தில் கல் எறிந்த மாதிரி அந்த நினைவின் அதிர்வுகள் ...)


 நெஞ்சில் நிறைந்த பாலகுமாரன்



பாலகுமாரனின் எழுத்துக்களை வாசிப்பதே ஓர் அனுபவம். மிகவும் சுகமான ஒன்று அது. பளிச்சென்று அங்கங்கே வாழ்ந்து பார்த்த வாழ்வின் வெளிச்சம் பளிச்சிட்டுப் போகும். அது அவரது அனுபவமாய் மட்டுமல்ல, நமக்கும் அனுபவமாக ஆகிப்போன ஒன்றாய் அது இருப்பின் கேட்கவே வேண்டாம். அவரது எழுத்துக்கள் நமக்கு வெகு அந்நியோன்யமாய் ஆகிப்போய், பார்த்ததை அல்லது பட்டு அனுபவித்ததை படம் பிடித்தாற் போல் எவ்வளவு ரசனையுடன் எழுதியிருக்கிறார் என்று ரசித்து வியக்கத் தோன்றும்.
                                                                                       
சொல்லப்போனால் இப்படி எழுதுவதே கிடைத்தற்கரிய ஒரு வரம். தனக்குள் வேள்வியாய் கேள்விகள் கேட்டுக் கொண்டதன் தேடலின் விளைவாய் விடைகண்ட விநோதங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்கையில் படைத்தவருக்கும் படிப்போருக்கும் விளையும் ஒன்றிய மனஉணர்வு ஒருவரை ஒருவர் உணர்ந்து புரிந்து கொண்ட நிலையில் விகசிக்கும்.

மனம் விளைவிக்கும் குறளி வித்தைகள் தாம் எத்தனை எத்தனை?.. புரிதலின் அடைப்படையில் ஒருவருக்கொருவர் மனநெருக்கம் கொள்ளும் தருணங்கள் உன்னதமானவை. பலதரத்து உணர்வுகள் மோதும் உள்ளத்து அடிமன படிமானத்தில் வேற்றுமைகளில் ஒற்றுமை காண்பது விவேகமானவை. ஆனால் மன உணர்வுகள் முரண்பட்டு தலைவிரித்தாடுகையில் அந்தத் தத்தளிப்புகளிலிருந்து மீண்டு வர பிரயத்தனப்படுவதே விதவிதமான கதைகளுக்குக் கருவாகிப் போகிறது. மனிதப் பிறப்பின் ஆனந்தத்தை அள்ளிப்பருகிட, இத்தகைய சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கு வழிசொல்லும எழுத்துக்கள் ஆரோக்கியமானவை. ‘எங்கேயிருந்தாலும், சந்தோஷமாக இருக்கப் பழகிக்கணும்; விடாப்பிடியாக சந்தோஷமாக இருக்க வேண்டும்என்று பிரகடனப்படுத்திய எழுத்துக்கள் பாலகுமாரனது.

கிருஷ்ண மந்திரம்ஆஸ்ரமம் அல்ல; ஆஸ்ரமம் போன்ற செயல்பாடுகள் கொண்டதாயினும், அதை ஒரு ஹோம் என்றே சொல்ல வேண்டும். மகன், மருமகள், சொந்த வீடு என்று எல்லாம் இருந்தும், வரலஷ்மிக்கு வயதான காலத்தில் இந்த ஹோமில் வாழ நேரிடுகிறது. மனைவிக்கும் பெற்ற தாய்க்கும் ஒத்து வராத பொழுது இந்த இருவரின் நிம்மதிஅதை ஒட்டிய தன் நிம்மதிக்காகவும் மகனே தாயைக் கொண்டு வந்து பணம் கட்டி இந்த ஹோமில் சேர்க்கிறான்.

நாற்பத்தாறு ஆண்கள் மத்தியில் இவனின் தாயும், அந்த ஹோமில் பொது வேலைகளைக் கவனித்துக் கொள்ளும் சுசீலாவையும் சேர்த்து இரண்டே பெண்கள். ஆரம்பத்தில் அந்த ஹோமில் தனித்து எப்படி காலம்  தள்ளப்போகிறோம் என்று மிரளும் அந்தத்தாய், எல்லோருக்குமான தாயாய் மிளிர்ந்து அந்த மொத்த ஹோமின் நிர்வாகப் பொறுப்பேற்றுக் கொள்ளும் அளவுக்கு பரிமளிப்பது தான் கதை.


நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் குட்டியூண்டு குடும்பம் ஒன்றைக் கட்டி அழுது கொண்டு மகன், மகள், மனைவி, மருமகள், மருமகன் என்று மயங்கி சொந்த பந்தங்களுக்கிடையே வாழ்க்கையை முடக்கிப் போட்டிருக்கையில், அந்த வாழ்க்கையின் பிணக்குகளையும், சுணக்கங்களையுமே பெரிதாய் நினைத்து அலமந்து அல்லாடுகையில், அப்படிப்பட்ட ஒரு அல்லாட்டச் சுழலில் சிக்கியும் விதிவசத்தால் அதனின்று விடுபட்ட வரலஷ்மி, சொந்த பந்தக் குடும்ப உறவுகளைத் தாண்டி வெளியே தன் அன்பையும் ஆதுரத்தையும் எதிர்பார்த்து இருக்கும் விதவிதமான மனிதர்களைப் புரிந்து கொண்ட ஒரு தரிசனத்தை எவ்வளவு நேர்த்தியாக பாலகுமாரன் சொல்லிவிட்டார் என்று இந்த புதினத்தைப் படிக்கையில் மிக ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

இந்தகிருஷ்ணமந்திரம்இதற்கு முன்னால் இவரே எழுதிய இன்னொரு நாவலின் வேறுபட்ட  வளர்ச்சியடைந்த பார்வை. பெற்ற தாய் ஒரு புறம், மணந்த மனைவி மறுபுறம் என்று மகன் மாட்டிக்கொண்ட இவரது இன்னொரு நாவல்நிழல் யுத்தம்’.

லலிதாவை முரளி முதன் முதல் சந்தித்தது ஒரு விபத்து. பின்னால் வரப்போவது எதுவும் முன்னால் தெரிவதில்லை. இப்படித் தெரியாமல் இருப்பது தான் வாழ்க்கையாகத் தெரிகிறது. முரளி மட்டும் விதிவிலக்கல்லவே; அவன் வாழ்க்கையிலும் அப்படித்தான் அமைந்தது.

முரளி அம்மா வளர்த்த பிள்ளை. விதவை வளர்த்த குழந்தை அவன். வளர்த்தது கூடப் பெரிசில்லை. வளர்த்த குழந்தையை வகை தெரியாமல் திருமணம் செய்து கொடுத்தது தான் பெரிசாகப் போய்விட்டது. மிலிட்ரியில் மேஜராக இருந்த சங்கரன் முதலில் அந்தக் குடும்பத்திற்குப் பழக்கமாக, அவர் தன் பெண் லலிதாவின் ஜாதகம் கொண்டு வந்து கொடுத்து லலிதாவுடனான முரளியின் திருமணம் முடிந்தது. மாமனார் சங்கரன் தனக்குத் தெரிந்த இடத்தில் சொல்லி வைத்து முரளிக்கு வேலையும் கிடைக்கிறது. அதாவது மாமனார் தயவில் கிடைத்த நல்ல வேலை.

பின்னால்த் தான் தெரிகிறது. ‘பெண்ணாட்டி உலகம் தான் புருஷன் உலகம்; புருஷன் உலகத்தில் பெண்ணாட்டி இருக்கணுங்கறது வேதனை தருகிற விஷயம்என்று நினைப்பவள் லலிதா என்று. எல்லா உறவுகளையும், உணர்வுகளையும் சிக்கலாக நினைப்பவள் அவள். ஒரு நாள், ‘நான் ஆம்பிளை வளர்த்த பெண் குழந்தை; அதனால் தான் எதிர் எதிர் துருவமாக இருக்கிறோம்என்கிறாள்.

இன்னொரு நாள் சொல்கிறாள். ”மனுஷா செல்ஃபிஷா இருக்கணும். சுயநலம் தான் ஆரோக்கியம். நான் முக்கியம். நான் முதல். நானே இந்த உலகத்தின் மையம். நான் இல்லாவிடில் இந்த உலகம் இல்லை. நான் இல்லாத போது இருக்கும் உலகம் பற்றி எனக்குத் தெரியப்போவதில்லை. நான் நன்றாக இருந்தால் தான் இந்த உலகம் எனக்கு நன்றாக இருக்கும். எனக்குத் தலைவலிச்சா உலகத்தில் எப்பேர்ப்பட்ட விஷயம் இருந்தாலும் எனக்குத் தேவை இல்லை. எனக்குத் தலைவலி முக்கியம். அதை யார்கிட்டேயும் கொடுக்க முடியாதுஎன்கிறாள்.

கிருஷ்ண மந்திரத்தில் மருமகள் ஆடிய ஆட்டத்தில் மாமியார் 'ஹோமி'ற்கு போக வேண்டியதாயிற்று. ‘நிழல் யுத்தத்து மருமகள் மாமியாரை மனம் வெதும்பி நோகச் செய்து உயிருக்கே உலை வைக்கிறாள்.
படித்தவர்களுக்குத் தெரியும். பெண்ணின் இருப்பை அவளின் ஆளுமையை நுணுகி நுணுக்கமாகச் சொன்னவர் பாலகுமாரன். பெண்களின் இயல்பான நேர்த்திகள் நேர்பட இருக்கும் பொழுது அவளைச் சுற்றி இருப்போர் அடையும் சந்தோஷத்தையும், அதுவே கோணலாகிப் போகையில் நேருகின்ற வேதனைகளையும் படம் பிடித்துக் காட்டியவர் அவர். ஆணின் அமைதிக்கோ, பரிவிற்கோ, பரிதவிப்பிற்கோ, பாசத்திற்கோ, மேன்மைக்கோ அவர்களே காரணமாகிப் போகிறார்கள். இயக்குபவள் அவள்; இயங்குபவன் அவன். பெண்டாட்டிக்கேற்ற புருஷனாய், அம்மாவிற்கேற்ற மகனாய், அக்கா-தங்கைக்கேற்பவனான சகோதரனாய் பெண்களின் கைகளில் அவர்கள் இஷ்டம் போல் விளையாடக் கிடைத்த பொம்மையாகிப் போகிறான் அவனும். ஆட்டத்தில் ஈடுபடுவோர் அவனும் அவளுமாய் இருப்பினும் ஆட்டத்தின் போக்கை நிர்ணயிப்பவள் அவளே. தன் இஷ்டத்திற்கேற்ப எப்படி வேண்டுமானாலும் ஆட்டத்தை திசைதிருப்பவும், தீட்சண்யப்படுத்தவும் அவளால் முடியும் என்பதினால், உறவுகளின் ஒட்டலுக்கும் விரிசலுக்கும் இதுவே விளைவாகிப் போவதினால் அவள் ஆடும் முறையில் நேர்மையும், நியாயமுடனான பொறுப்பும் முக்கியமாகிறது.

நிழல் யுத்தம்’ 27 அத்தியாயங்களாய் வாராவாரம்கல்கியில் வெளிவந்தது. இருப்பத்தேழு அத்தியாயங்களும் காவியம். ‘பெண்ணைப் பொருள் போகம் என்று நினைத்தவனுக்கு சிரமமுமில்லை; சந்தோஷமும் இல்லை. செம்புலப்பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்று உருகுகிறவனுக்குத் தான் சந்தோஷம், சிரமம் எல்லாம்என்று சொல்ல வந்த கதை. துன்பம் நேர்கையில் பாரதிதாசனுக்குக் கூட யாழெடுத்து இசைத்து இன்பம் சேர்க்க வேண்டியிருக்கிறது. வாழ நேர்ந்த வாழ்க்கையில் துன்பமெனும் நிழல் படியும் போது இப்படிப்பட்ட எழுத்துக்கள் வெளிச்சம் காட்டி நிழலைத் துறத்தவும் செய்கிறது.

ஊருக்குத் தெரிந்து கணவன்-மனைவி பிரிந்து வாழ்வது டைவோர்ஸ் என்று அழைக்கப்பட்டால், எல்லா திசைகளிலும் வந்து நெருக்கும் அழுத்தங்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் அவர்களுக்குள்ளேயே ஏற்படுத்திக்கொண்ட சைலண்ட் டைவோர்ஸோ ஊருக்குத் தெரியாமல் போனதில் ஆச்சரியமில்லை. சொல்லப் போனால் அதுவும் ஒரு நிழல் யுத்தம் தான். உயிரின் விளைவை, உறவின் மதிப்பைக் கற்றுக் கொள்ளாமல் போனால் யுத்தங்களைத் தவிர்ப்பதும் சாத்தியமில்லாது போகின்றது.

ஊருக்குத் தெரிந்த டைவோர்ஸுடுடன் ஆரம்பமாகிறது பாலகுமாரனின்இரண்டாவது சூரியன்’. ஆணவம், அகம்பாவம், தன்தானைத் தானே தூக்கிச் சுமந்து எல்லா நேரங்களிலும் தன்னையே முன்னிலைப் படுத்தத் துடிக்கும் தன்னகங்காரம் என்று எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துக் குழைத்ததின் வடிவம் கவிஞன் கதிரேசன். கதிரேசன் பட்டிமன்ற கவிஞன், தமிழ் இலக்கியத்தில் முதுகலை படித்த பேராசிரியன், சமூகத்தில் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதற்காக சகல உபாயங்களையும் கற்றுத் தேர்ந்த வித்தகன். ரசாயனத்தில் எம்.எஸ்ஸி., படித்த பள்ளி ஆசிரியை பானுமதி அவனுக்கு வாழ்க்கைப்படுகிறாள். ஆரம்பத்தில் கதிரேசனின் சாதுரியங்கள் அவளைக் கவர்ந்தாலும், சுயநலமும் சுயபுராணமும் தன்னைச் சுற்றியே பின்னிப் பின்னி சகலத்தையும் அவன் சமைத்துக் கொள்வது அவளுக்கு சலிப்பேற்படுத்துகிறது. அவனது மமதையும் மனைவி உட்பட சகல உறவுகளையும் கிள்ளுக் கீரையாக நினைக்கும் அவனது உதாசீனமும் அவளுக்கு வெறுப்பேற்படுத்துகிறது. தினமும் சண்டை, அடிதடி என்று தொடர்கதையாகிப் போகும் அத்தனை அவமானங்களும் கடைசியில் விவாகரத்தில் முடிகிறது. பெற்றோர்களுடனும் இருக்க முடியாமல் போய் இரண்டு குழந்தைகளுடன் தனிக்குடித்தனம் துவங்குகிறாள் பானுமதி. துணையாய் இவளைப் போலவேயான வாழ்க்கை அமைந்து போன, குடும்ப நீதிமன்றத்தில் இவளதும் அவளுதுமான வழக்குகள் நடக்கையில் மனதுக்குப் பிடித்துப் போன பூக்காரி நாகம்மா துணையாகி வீட்டு வேலைகளையும், இவளது குழந்தைகளையும் கவனித்து பராமரிக்கும் தோழியாகிறாள். வாழ்க்கையின் போக்கில் நிகழும் அறிமுகங்கள், பிறர் நலனுக்காக தான் அல்லாடுகையில் கிடைக்கும் மகிழ்ச்சி, அதில் தனக்குத் தானே பிர்மாண்டமாய் உணரும் மனிதாபிமானம் எல்லாமே உலகையும், மானுட உறவுகளின் உன்னதத்தையும் பானுமதிக்கு பாடமாக எடுத்தோதுகின்றன. ‘கிருஷ்ண மந்திரத்து வரலஷ்மிக்கு கிடைத்த மாதிரிஇரண்டாவது சூரியன்பானுமதிக்கும் கிடைத்த வேறுபட்ட வேறோரு ஞானோதயம். பெண் தண்ணென்று குளிர் பொழியும் நிலவல்ல; கனவுகளோ கற்பனை ஊற்றுகளோ அல்ல; சுட்டெரிக்கும் இரண்டாவது சூரியன் என்று சொல்ல வந்த கதை இது.

தஞ்சை மாவட்டத்து திருக்காட்டுப்பள்ளிக்கு அருகாமையில் உள்ள பழமார்நேரியில் பிறந்தவர் பாலகுமாரன். ஆசிரியையாய் இருந்த தாயார் சுலோச்சனா அம்மையார் சிறுவன் பாலகுமாரனின் பொது அறிவு வளர்ச்சியில் பெரும் கவனம் கொண்டார். எழுதுதலின் ஆரம்பத் தொடக்கம் கணையாழி, கசடதபற போன்ற சிற்றிதழ்களில் இவருக்கு ஆரம்பித்தது. 'குமுதம்' பத்திரிகை சார்ந்த பால்யூவின் அறிமுகம், வெகுஜன பத்திரிகைகளின் பக்கம் இழுத்தது. சாவி, கல்கி போன்ற இதழ்களில் மனதைக் கவர்ந்த கதைகளை எழுதியிருக்கிறார். இரும்பு குதிரைகள், மெர்க்குரி பூக்கள், கரையோர முதலைகள், பச்சை வயல் மனது, தாயுமானவன் போன்ற புதினங்கள் வாசகர்களின் மனதை மயக்கின. அவரின் எழுத்து நடையும், கட்டிப்போட்ட சொல்வளமும், பழைமையின் மெருகு கலையாத புதுமைக் கருத்துக்களும் இலட்சக் கணக்கான இளைஞர்களின் மனம் கவர்ந்தன. பிற்காலத்து திருவண்ணாமலை விசிறி சாமியார் யோகி ராம்சுரத் குமாரின் அருகாமை கிடைத்த யோகத்தில் ஆன்மிக சிந்தனைகளைக் கொஞ்சம் தூக்கலாக சொல்ல ஆரம்பித்தார்.

'என்னுயிரும் நீயல்லவோ' இன்னொரு மாஸ்டர் பீஸ். ஏலக்காய் எஸ்டேட் ஓனர் நாச்சியப்ப செட்டியார், தனது இரண்டாவது மனைவி பகவதியிடம் எஸ்டேட் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு கண் மூடுகிறார். செட்டியாருக்குப் பின் எஸ்டேட் உரிமை குறித்து பங்காளிகளிடையே கசமுச எழுந்த பொழுது அவர்களை அடக்கி எஸ்டேட்டைப் பார்த்துக் கொள்ளும் பகவதிக்கு பக்கபலமாக தன் மூத்த மகன் கதிரேசனை மலைக்கு அனுப்புகிறார் செட்டியாரின் முதல் மனைவி ஆச்சி. மலைக்கு வந்து ஏலப்பயிர் பற்றியும் அதற்கு உள்ள கிராக்கி பற்றியும் அறிந்து எஸ்டேட்டை விரிவுபடுத்த விரும்பி அதில் அவன் வெற்றியடைந்த  கதை, அவனது காதலுக்கு இடையே ல்லப்பட்டிருக்கிறது.   ஆச்சிக்கும் பகவதிக்கிடையான நேசத்தை, ஏலக்காய் பயிர் பற்றி ஞானம் கொண்டு ஒரு ஆணுக்கு நிகராய் எழுந்து நின்று கட்டிய கணவனின் சொத்தை, தன் மூத்தாளின் பிள்ளை கதிரேசனை காத்து நின்ற பகவதியின் கடமை உணர்வின் மாண்பை, சித்தியின் சொல் பேச்சுக்குப் பணிந்து பெற்ற அன்னையாய் அவளைப் பேணும் கதிரேசனின் குணநலனை என்று பாலகுமாரன் உணர்வுகளை கொட்டி வடிக்க நிறைய வாய்ப்புகள்.

இன்னொன்று. இந்த புதினத்தைப் படிக்கையில் பளிச்சென்று தெரியும் பாலகுமாரனின் வளர்ச்சி. ராஜம் கிருஷ்ணன் புதினங்களில் காணக்கிடைப்பது போலவான அந்த கள ஆராய்ச்சியைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். போடி நாயக்கனூர் பகுதி ஏலக்காய் தோட்டங்களை நிலைக்களனாகக் கொண்டு அந்த மலைப்பகுதி வாழ்க்கை, ஏலக்காய் பயிர், அதன் வளர்ச்சி, தண்ணீரை சாரலாகத் தூவும் ஸ்பிளிங்கர்கள் என்று தூள் கிளப்பியிருக்கிறார். பயிரோடு பயிராக நாமும் அந்த ஸ்பிளிங்கர்களில் நனையும் உணர்வு.

"...ஏலக்காய் ஆட்களை நம்பி செய்கிற பயிர். ஒற்றை ஆளாய் நிர்வகிக்க முடியாத தோட்டம். பயிர் செய்தோம், பறித்தோம், விற்றோம் என்று முடியாது. பறித்ததற்கு பிறகு தான் முக்கியமான வேலை துவங்குகிறது. பழுத்து ஈரமாய் இருக்கிற ஏலக்காயை உடனே உலரச் செய்யணும். உஷ்ணம் காட்டி இறுகச் செய்யணும். இல்லையெனில் பழுத்தது அழுகிவிடும். உஷ்ணமாக்கி உலர வைக்க தனியான அடுப்பும், தகரப்பாய்களும் வேண்டும். உஷ்ணம் அதிகமானால் ஏலக்காய் கருகி விடும். உஷ்ணம் குறைந்தால் ஏலக்காய் அழுகி விடும். மேல் தோலில் இருக்கிற பச்சை கெடாமல், உள்ளே இருக்கிற பயறு கெடாமல் காயை இறுக்கி, தரம் புரிந்து, தூசு தேய்த்து பளபளவென்று கொடுப்பதற்கு ஆட்கள் வேண்டும். இது தன் தோட்டம், தன் காய் என்பது போல உழைக்க வேண்டும்...."

பாலகுமாரனுடைய எழுத்து நடை, நம் பக்கத்தில் கூட உட்கார்ந்து முகத்தைப் பார்த்து கதை சொல்கிற நடை. அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் படிக்கிற நம் மனமும் தாவித்தாவி போகும். சிலம்பம் விளையாடறச்சே முன்னே, பின்னே, பக்கவாட்டில் என்று கால்களை நகர்த்தி பாவிப்பாவி விளையாடற மாதிரி எழுதற கருத்துக்களோடு அவரும் முட்டி, மோதி, வளைந்து, பின்வாங்கி, விழுந்து மீண்டும் எழுந்து எழுத்தின் உள் ஜீவனைக் கண்டு பிடித்து நமக்குச் சொல்கிற மாதிரி எழுதுவார்.

அது பிரிட்டிஷார் நாட்டை ஆண்ட காலம். கிட்டத்தட்ட எம்டன் குண்டு சென்னையில் வீழ்ந்த காலம். மாயவரத்து செம்பொனார் கோயில் சார்ந்த சாம்பசிவ சாஸ்திரிகள், அவர் மைத்துனன், பிள்ளை, பிள்ளையின் பிள்ளை என்று எல்லோரும் சப்ஜாடா தங்கள் குலத்தொழிலான வைதீகம் விடுத்து வாழ்க்கையின் அமுக்கி அடித்துப் போகும் சூழலின் சுழலில் துணிந்து மூழ்கி எதிர் நீச்சல் அடித்து நிமிர்ந்த கதை, 'அப்பம்,வடை,தயிர் சாதம்'. காலத்திற்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்வதில் எந்தவித கவலையும் படாமல் கம்பீரமாக நிமிர்ந்ததற்குப் பின்னாடி வழிவழி வரும் தலைமுறைக்கு காயத்ரி ஜபமும் சொல்லித் தரணும்,   'அப்பம்,  வடை,  தயிர்சாதம்'ன்னு தோள்லே கூடையைத் தூக்கிக்கொண்டு கூவிப்போகவும் சொல்லித் தரணும் என்று புரிந்து கொள்கிற முறையில் கதையை முடித்து வைக்கிறார்.

பாலகுமாரனின் எழுத்துக்களில் ஒன்றிப் படிக்கும் பொழுது ஒன்று தெரியும். தான் உணரும் பல விஷயங்களை சாவதானமாக அழகுபடுத்திச் சொல்வதற்குத் தான் இவர் கதை வடிவை எழுதத் தேர்ந்தெடுத்தாரோ என்று. கதை மாந்தர்களின் மூலமாக மற்றும் தானே தனியாகக் கொஞ்சம் என்று சொல்ல வாய்ப்பு இல்லாத நேரத்தும் அப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு பேசுவார். சில சமயங்களில் துண்டாகத் தனியே துருத்திக் கொண்டு தெரிகிற மாதிரி அவை தோற்றமளித்தாலும் அவரது உணர்வுகளைப் புரிந்து கொண்டு படிப்போருக்கு அதுவும் பிடித்துப் போகிற அளவில் அமைந்து விடும்.

இரும்பு குதிரைகள், மெர்க்குரிப் பூக்கள், கரையோர முதலைகள் போன்ற பாலகுமாரனின் புதினங்கள் அவருக்கு நிறைய வாசகர்களைத் தேடித் தந்தன என்பது உண்மை. திருப்பூந்துருத்தி, பலாமரம் போன்ற படைப்புகள் வேறொரு காலகட்டத்தில் வேறொரு விதமாய் அவரைப் பாதித்த எண்ண ஓட்டங்களைப் பிரதிபலித்தவை. எழுதுகின்ற எழுத்தாளனின் மன வளர்ச்சியோடு கூடச் சேர்ந்து அந்த எழுத்தாளனுக்கென்று அமைந்து போகிற வாசகர்களும் கூட வளரச் சொல்லிய கதைகள்.

பத்திரிகைகள் வேண்டுவனவற்றை எழுதிக் கொடுக்கிற எழுத்தாளர்கள் உண்டு. இவர்களால் ஒவ்வொரு பத்திரிகையின் போக்குக்கும் அதன் தேவைக்கும் ஏற்ப எழுத முடியும். 'தோசை வேண்டுமா இந்தா தோசை, இல்லை, இட்லியா, இந்தா இட்லி' என்கிற நிலை இது. சில எழுத்தாளர்கள் ஆரம்ப காலகட்டங்களில் வாசகர்களை அடைய பத்திரிகைகளை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டாலும், வாசகர்களின் அபிமானம் பெற்ற பிறகு நாளாவட்டத்தில் தனது வாசகர்களுக்குப் பிடித்தவற்றை எழுதத் தொடங்குகிறார்கள். இவ்வளவுக்கும் இணங்கிப் போகிற எழுத்தாளருக்கு அவருக்கென்று ஒரு வளர்ச்சி இருக்கிறதல்லவா?.. அந்த வளர்ச்சி அவரது மனதோடு தொடர்பு கொண்டது. மனம் கொள்ளும் எண்ணங்களே எது குறித்து எழுதினாலும் அதில் படியும். எழுத்தே அவர் மனத்தை வெளிப்படுத்தும் ஒன்றாகவும் அமையும் நிலை இது.   தன் மனம் சொல்வதை வாசகர்களிடம் மறைக்காமல் எழுதும் எல்லா எழுத்தாளர்களுமே இப்படித்தான்.
                 
                                                                                                                                 

14 comments:

கோமதி அரசு said...

திரு, பாலகுமரன் அவர்களுக்கு சிறந்த அஞ்சலி.
அவரின் சிறந்த கதைகளை மாலைகளாய் கோர்த்து அவருக்கு அஞ்சலி செய்து விட்டீர்கள்.
அவர் கதைகள் மூலம் என்றும் வாழ்வார்.

நெல்லைத் தமிழன் said...

கொஞ்சம் அறிமுகமில்லாத கதைகளை/நாவல்களை எடுத்துக்கொண்டு, ஆழ்ந்த வாசிப்பின்மூலம் மிகச் சிறப்பான அஞ்சலிகளை உடனுக்குடன் பாலகுமாரனுக்குத் தெரிவித்திருக்கிறீர்கள். சாதாரண வாசகன் எழுதுவதற்கும் தேர்ந்த வாசகர் எழுதுவதற்குமான வித்தியாசம் உங்கள் எழுத்தில் தெரிகிறது. மிகுந்த பாராட்டுகள்.

அவரது ஆரம்பகால கதைகளைப் படித்து ரசிகனானேன். இருந்தாலும் சுஜாதாவுக்குப் போட்டி என்று மனதிலேயே இருந்ததால் பாலகுமாரனை ஒரு மாற்றுக் குறைவாகத்தான் மதிப்பேன் (அவரது கதைகளை). இருந்தாலும் அவர் எழுத்து அருமையா இருக்கும்.

அவரே, அவரது உடையார் நாவலை மிகச் சிறப்பாக சிலாகித்திருக்கிறார். மிகவும் நன்றாக உணர்ந்து, உள்வாங்கி அந்த வரலாற்று நாவலை எழுதியிருப்பார்.

பாலகுமாரனுக்கு எங்கள் அஞ்சலிகளும்.

Thulasidharan V Thillaiakathu said...

ரொம்பவே அருமையாக அவரது படைப்புகளை சிலாகித்து சிற்ப்பாக எழுதியிருக்கிறீர்கள் ஜீவி அண்ணா. நீங்கள் எவ்வளவு ஆழ்ந்து வாசித்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது உங்கள் எழுத்தில். மிகச் சிறப்பான அஞ்சலி. எங்கள் அஞ்சலிகளையும் சமர்ப்பிக்கிறோம்.

கீதா

ஸ்ரீராம். said...

வேலைக்குச் சேர்ந்த புதிதில் சம்பளம் கைக்கு வந்த அன்றே எழும்பூர் சென்று அங்கிருக்கும் புத்தகக்கடையில் ஓரிரண்டு பாலகுமாரன் நாவல்கள் வாங்கி வந்து விடுவேன். என் தங்கை, அவள் தோழிகள், நான், என் நண்பர்கள் சிலர், எல்லோரும் பாலகுமாரனின் ரசிகர்கள் அப்போது. இப்போதும் என்னிடம் அப்போது வாங்கிய புத்தகங்களில் பெருமளவு இருக்கிறது.

ஸ்ரீராம். said...

நிழல் யுத்தமும் என்னிடம் இருக்கிறது. அதுதான் பின்னர் கிருஷ்ண மந்திரமாக பரிமளித்தது என்பது எனக்குத் தெரியாது. நான் வாசித்ததில்லை. வாசித்திருந்தாலும் ஒப்பிடும் அளவுக்கு நினைவில்லை. நடுவில் பாலகுமாரன் எழுத்துக்களோடு ஒரு இடைவெளி விழுந்து விட்டது.

ஸ்ரீராம். said...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள். உங்கள் புத்தகத்திலிருந்துதான் எடுத்துக் போட்டிருக்கிறீர்கள். ஒப்பிடும் அளவு ஆராய்ந்து அலசி எழுதி இருக்கிறீர்கள்.

ஸ்ரீராம். said...

அவர் இப்பொழுதும் நிறைய எழுதிக் கொண்டிருந்தார் என்பது விசேஷம். இரண்டு வாரங்களுக்கு முன் ஆனந்த விகடனில் பாலகுமாரன், சிவசங்கரி, இன்னும் இரண்டு எழுத்தாளர்கள் பழைய நினைவுகளை பற்றிக் கலந்துரையாடியது பற்றி படத்துடன் கட்டுரை வெளியிட்டிருந்தார்கள். நான் அப்போதே அதை எபி வாட்ஸாப் குழுமத்தில் பகிர நினைத்து வேண்டாமென்று விட்டுவிட்டேன்.


அவர் மறைவு வருத்தத்தைத்தான் தருகிறது.

G.M Balasubramaniam said...

என் தம்பி tafe ல் பணியில் இருந்தபோதுபல குமாரனுமங்கு பணியில் இருந்தார் என்று சொல்லி இருக்கிறான் பாலகுமாரன் எழுத்துக்சள் அதிகம்வாசித்ததில்லை வலைத் தளத்தில்வருண் அவர்களெழுதி இருந்ததையும் படித்தேன்

R. Vijayalakshmi said...

திரு. பாலகுமாரன் அவர்களின் மறைவிற்க்கு அவர் எழுதிய ககைளின் தாெகுப்புச் சரம் அருமை.

Bhanumathy Venkateswaran said...

கலைஞர்களுக்கு மரணம் கிடையாது. பாலகுமாரன் எப்போதும் நம்மோடுதான் இருப்பார்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அசாத்திய எழுத்தாளரைப் பற்றிய அருமையான நினைவுகூறல்.

முற்றும் அறிந்த அதிரா said...

ஓ உங்கள் போஸ்ட் மூலம் தான் அறிகிறேன் அவர் இறந்த சேதி... ஆத்மாவுக்கு என் பிரார்த்தனைகள்.

சமீபத்தில்தான் அவரின் ஒரு ஸ்பீச் கேட்டேன்.. அதில் அவர் தன் குழந்தைப் பருவத்துக் கதைகள்.. சின்ன வயதில் எதிர்வீட்டு அண்ணாவுக்கு காதல் தூது போய்.. அதை தப்பாக நினைத்து இவர்தான் ஆரையோ காதலிக்கிறார் என அவசரப்பட்டு அப்பா அடிக்க.. வீட்டை விட்டு வெளியேறி எங்கோ போய் தனியே இருந்து கஸ்டப்பட்டு.. பின்னரே எழுத்தாளரானாஅர் என மிக சுவாரஷ்யமாகச் சொன்னார்..

நிறைய நம்பிக்கை ஊட்டும் தகவல்கள் சொன்னார்.. கேட்க இனிமையாக இருந்தது.

இராய செல்லப்பா said...

தீபம் நா.பார்த்தசாரதிக்குப் பிறகு, பெண்களின் உள்ளுணர்வுகளை தெள்ளத் தெளிவாக வெளிக்கொண்டுவந்த எழுத்து, பாலகுமாரனின் எழுத்து. சாண்டில்யனுக்குப் பிறகு, மணமான தம்பதிகள் இரவில் மெய்ம்மறந்து காதல் உறவில் foreplay ஆகப் பயன்படுத்திக்கொண்ட காதல் எழுத்து பாலகுமாரனுடையதே. மற்றப்படி அவரது ஆன்மிகம் எல்லாம் அவரது இலக்கியத்தின் இன்னொரு முகமாகப் பார்க்க இயலாது. காதல், காதல், காதல்...அது ஒன்றே பாலகுமாரனின் இலக்கணம். அதை அவ்வளவு அற்புதமாக எழுத இனி யாரும் இல்லை.

பாலகுமாரனைப் படிக்கும் இளம்பெண்களுக்கு அவர்கள அறியாமலேயே சேலை அவிழ்ந்து, விழும் - என்று ஒரு விமர்சகர் எழுதினார். அத்தகைய காதல் எழுத்து இன்று ஓய்ந்துவிட்டது.

-இராய செல்லப்பா சென்னை

அப்பாதுரை said...

ஒரு சில சிறுகதைகள் படித்திருக்கிறேன். பெரிய விசிறி இல்லை.
எழுத்தின் ஆளுமை தேய்ந்து வருகிறது என்பது வருத்தம் தான்.

Related Posts with Thumbnails