மின் நூல்

Friday, February 12, 2010

ஆத்மாவைத் தேடி....36 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


36. பிரபஞ்சக் கூறுகள்


"மனிதப் படைப்பில் அவன் வாழ்க்கை நெடுகப் பார்ப்போமானால், ஒரு விஷயம் தெளிவாகத் தெரியும்" என்று தொடர்ந்தார் தேவதேவன். "மனிதன் தன் மனத்தின் குரலுக்கு செவிசாய்க்காமல் அதை ஓரங்கட்டிவிட்டு,உடலால் மட்டும் வாழ்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனது அப்படிப்பட்ட வாழ்க்கை என்பது மனிதப் படைப்பிற்கே அர்த்தமில்லாத அன்னியமான ஒன்றாய்ப் போய் முடியும். உடலால் வாழ்வது என்பது உடலின் தேவைகளை மட்டுமே கவனித்துக் கொண்டு வாழ்வது. உடலின் தேவை என்பது முற்றிலும் உயிர் வாழ்வதற்கான தேவை தான். வெறும் உயிர் வாழ்வதற்கான வாழ்க்கை மட்டுமே வாழ்வது என்பது மிகவும் வரட்டுத் தனமானது; மிருகத்தனமானது. அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையைத் தவிர்த்து ஆறறிவு படைத்த மனித வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பது, உடலோடு மனம் ஒன்றிய ஒரு வாழ்க்கைமுறைதான்.


" மனத்தின் குறுக்கீடு இல்லாத உடலின் தேவை என்பதைக் கறாராகக் கணிப்பது ரொம்பவும் கடினமான வேலை. அந்த அளவுக்கு உடலும் மனமும்ஒன்றிய ஒன்று. இன்னும் சொல்லப் போனால், உடல் இயங்குவதே மனத்தின் தேவைகளை, அதன் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்காகத்தான். மனத்தின் நியாயமான குரலைப் புறக்கணித்த உடல் என்பது வாசமில்லாத காகிதப் பூவைப் போல. சரியா?.." என்று தான் சொல்வது கேட்போருக்கு சரியான புரிதலை ஏற்படுத்துகிறதா என்பதைப் புரிந்து கொள்ளும் விதத்தில், அவையை ஒரு சுற்று பார்த்து நிச்சயப்படுத்திக் கொண்டு மேலும் தொடர்ந்தார் தேவதேவன்.


"அதனால் தான் சொல்கிறேன். மனம் என்பது பற்றி அறிதல் இல்லாத ஒற்றையாக நிற்கும் உடல் உறுப்புகள் சம்பந்தப்பட்ட இன்றைய உடற்கூறு விஞ்ஞானம் என்பது முழுமையான ஒன்றல்ல. முழுமையான ஒன்றல்ல என்பது தானே தவிர இதுவரை அறியப்பட்ட அளவில் ஒப்பற்ற ஒன்று என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், உடல் என்பதுதான் அத்தனைக்கும் ஆடுகளம். அப்படி ஒரு நிலைக்களன் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை; மனம், புத்தி என்று எல்லாமே தாங்கள் இயங்குவதற்கு உபயோகப்படுத்திக் கொள்வது இந்த உடலைத்தான். அப்படிப்பட்ட கியாதி பெற்ற உடலைப் பற்றி, அதன் நலனைக் காப்பது பற்றி, செப்பனிடுவது பற்றி சிந்திக்கிற உடற்கூறு விஞ்ஞானத்தின் பெருமை பெருமைபடத்தக்கது. இன்றைய அதன் வளர்ச்சிக்கு அயராத தமது உழைப்பை காணிக்கையாக்கிய அத்தனை விஞ்ஞானிகளுக்கும் என்றென்றும் நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். உடற்கூறு சாத்திரத்தின் முழுமைக்கு இன்னொரு பகுதியான மனவியல் பற்றிய விவர சேகரிப்புகள் தேவையென்கிற எண்ணம் இப்பொழுது வலுப்பெற்றிருக்கிறது. அப்படிப்பட்ட தேவை வெறும் விவர சேகரிப்புகளோடு நின்றுவிடாமல், தற்காலத்திய உடற்கூறு விஞ்ஞானம் மனம் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு உடற்கூறு சாத்திரத்தை செழுமைபடுத்தி முழுமையாக்க வேண்டுமென்கிற ஆவல் நமக்கிருக்கிறது. உடற்கூறு சாத்திரத்தில் துறைபோகிய ஞானம் கொண்டோர் இது விஷயத்தில் கவனம் செலுத்த இப்பொழுது தலைப்பட்டுள்ளனர்.

"இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உடலின் செயல்பாடு என்பது மனம், புத்தி இவற்றைப் பிரநிதித்துவப் படுத்துகிற வேலை தான். உடம்பை வளர்த்து உயிர் வளர்ப்பதும் இதற்காகத்தான். மனத்தை நிறைக்கிற எண்ணங்களும், புத்தி விளைவிக்கின்ற விஷய ஞானமும் பிரபஞ்ச மன, புத்தி வளர்ச்சிகளோடு சம்பந்தப்பட்டவை. மனிதனும் பிரபஞ்சத்தின் ஒரு துணுக்கு ஆதலால்,எல்லாவற்றிலும் பிரபஞ்சவளர்ச்சியையே அவனும் பிரதிபலிக்கிறான். அதனால் பிரபஞ்ச வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதும், சூட்சுமங்களைப் புரிந்து கொள்கின்ற ஞானத்தை வளர்ப்பதும் அவனது எதிர்கால வளர்ச்சிக்கும், புதிய தலைமுறைக்கு சேர்த்துக் கொடுக்கும் செல்வங்களாவும் ஆகிறது.

"இந்த அடிப்படையில், மேற்கொண்டு பார்ப்போம். தைத்திரீய உபநிஷதம் சொல்லும் மனிதனின் ஐந்து உடம்புகளில், புற உடம்பைப் பற்றியும், பிராண உடம்பைப் பற்றியும் பார்த்தோம். அடுத்தது மனமாகிய உடம்பு. இந்த மனம் புற உடம்புக்கு உள்ளேயே உள்ளது. அதே நேரத்தில், பிராண உடம்புக்கு ஆதாரமாக இருப்பதும் இந்த மன உடம்பு தான் என்று தைத்திரீய உபநிஷதத்தில் குறிப்பு கொடுக்கப் படுகிறது" என்று முன்னோட்டமாகச் சொல்லி விட்டு கொஞ்சம் நிறுத்தி மேலும் தொடர்ந்து உரையாற்றத் தொடங்கினார் தேவதேவன்.


(தேடல் தொடரும்)

2 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

உடல், உடல்சார்ந்த அல்லது உடலின் தேவைகளால் எழும் உணர்வுகள் மிருகத் தன்மை உடையவை.

மனதினால் ஆளப்படுபவனே மனிதன்.

ஆனால், இதுவும் முழுமையானதாக இல்லாமல் கடவுட் தன்மைக்கும் மிருகத் தன்மைக்கும் இடைப்பட்டதாக இருக்கிறது என்பதை ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தத் தொடர் மிக நன்றாக வளர்ந்துகொண்டிருக்கிறது. நீளம் கருதிச் சுருக்காமலும், அதிக இடைவெளி விழுந்துவிடாமலும் எழுதும்படி வேண்டிக் கொள்கிறேன்.

ஜீவி said...

வாருங்கள், கிருஷ்ணமூர்த்தி சார்!

தங்கள் அன்பான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. நீளம் கருதி சுருக்கிய இடங்களை நீங்கள் அறிவீர்கள். அதனால் தான் அது பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறீர் கள்.வரும் அத்தியாயங்களில் அந்தக் குறையை நிவர்த்தி செய்து விடுகிறேன். அதிக இடைவெளி விழுந்து விடாமலும் பார்த்துக் கொள்கிறேன்.

உபநிஷத்துக்கள் உள்ளிட்ட வேதங்களில் கூறியிருக்கும் விவரங்களைத் தொகுப்பதின் வழியாக ஆத்மாவைத் தேடுதலாக இந்தத் தொடரைத் தொடரவேண்டுமென்றே உத்தேசித்திருந்தேன். அதற்கு முக்கிய காரணமும் தங்களுக்குத் தெரிந்ததுதான்.

'உபநிஷதங்களில் இந்த விஷயங்கள் எல்லாம் அலசி ஆராயப்படுகின்றன' என்கிற ஒருஎளிய அறிமுகத்திற்காகத் தான். மேலும் விவரங்களைத் தேடுவதில் ஆர்வமிருப்பவர்கள் நேரடியாக மூலநூல்களையும் அவற்றிற்கான உரைகளையும் தேடிப் படிப்பார்கள் என்கிற எண்ணத்தில் தான்.

ஸ்ரீஅரவிந்தரும்,அன்னையும் சொல்லியுள்ளதாக கூறும் புதுவை ஆசிரமத்தின் கையேடுகள் போன்ற வெளியீடுகளைப் படித்திருக்கிறேன்.
மேலும் ஆழப்படித்து முழுமையான எண்ணங்களைத்திரட்டிக்கொள்கிறேன். அவை நிச்சயம் நேர்வழி காட்ட வழித்துணைவனாய் உதவும்.
கருத்துக்களை எடுத்தாள்வதற்கு துணைபுரியும்.
தகுந்த நேரத்தில் சொன்ன தங்களின் அன்பான வழிகாட்டலுக்கு மிக்க நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

Related Posts with Thumbnails