மின் நூல்

Friday, February 19, 2010

ஆத்மாவைத் தேடி…. 38 இரண்டாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


38. தூய மனம் என்னும் தீபம்


"சொல்கிறேன்---" என்று மீண்டும் ஒருமுறை கூறிவிட்டுத் தொடர்ந்தார் தேவதேவன்.

"தைத்திரீய உபநிஷதம் சொல்லும், ஆன்மாவைப் போர்த்தியிருக்கும் ஐந்து உடம்புகளான உடல், பிராணன், மனம், புத்தி, ஆனந்தம் என்றிவற்றை மேலிருந்து உள்ளுக்கு உள்ளாகப் பார்க்குமிடத்து அவை ஆன்மாவை நெருங்க நெருங்க ஒன்றை விட ஒன்று நுண்ணியதாகத் தெரிகிறது.


"உடல், பிராணன் தாண்டி இப்பொழுது மனப்பகுதிக்கு வந்திருக்கிறோம். புறப் பார்வைக்குத் தெரிகிற புறவுலகக் காட்சிகளைத் தாராளமாக புலனுருப்புகளால் காணலாம். அதற்கு மாறான அகவுலக தரிசனம் பெற அற்புதமான ஆடியாகச் செயல்படுகிறது மனம். இதை விட்டால் வேறு வழியில்லை.


"ந சக்ஷூஷா க்ருஹ்யதே நாபி வாசா
நான்யைர்தேவைஸ் தபஸா கர்மணா வா
ஜ்ஞானப்ரஸாதேன விசுத்தஸத்வஸ்-
ததஸ்து தம் பச்யதே நிஷ்கலம் த்யாயமான: "

"-- என்பது முண்டக உபநிஷத்து மந்திரம்.


"ஆத்ம தரிசனம் என்பது கண்களால் கிரகிக்கப்படுவதில்லை; வாக்கினாலும் மற்ற புலன்களாலும் தெரியப்படுத்தப்படுவதில்லை; தவத்தாலும், மற்ற கர்மங்களாலும் அறியப்படுவதில்லை. புத்தியின் தெளிவால், தூய்மையும் நுண்மையும் பெற்ற மனத்தால் தியானித்து முழுமையாக அதைக் காணலாம்.


"என்ன இவ்வளவு சுலபமாகச் சொல்லிவிட்டார், முனிவர் என்று
தோன்றும். 'புத்தியின் தெளிவால், தூய்மையும் நுண்மையும் பெற்ற மனத்தால்' என்கிற சொற்றொடரில் நிறைய அர்த்தம் பொதிந்துள்ளது. இப்போதைக்குப் படித்தும், சொல்லியும், பிறர் சொல்லிக் கேட்டும் சாத்தியப்படாத காரியம் இது என்று மட்டும் தெரிந்து கொள்வோம். குறைந்தபட்சம் எப்படி சாத்தியப்படுத்துவது அதற்கான முயற்சிகள் என்னன்ன என்றாவது தெரிந்து கொள்ளலாம் இல்லையா? அப்படி தெரிந்து கொள்ளுதலுக்கான ஒரு வழிகாட்டல் தான் நடக்கப்போகும் இந்த சதஸ். மற்றபடி அவரவர்களின் சுய ஈடுபாட்டின் அடிப்படையில் அமையக் கூடியதே மற்றதெல்லாம்...


"இன்றைய அனுதின அனுபவங்களினால் உருவாக்கப்பட்டிருக்கும் சாதாரண மனம் என்பது இந்த காலகட்ட வளர்ச்சியாகக் கொள்ளப்படுபவனவற்றையே தன் வளர்ச்சியாகக் கொண்டது. 'உனக்குப் பிழைக்கத் தெரியலையே' என்கிற ஒரு சாதாரண வார்த்தையையே எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாதாரண வார்த்தை, இன்றைய வாழ்க்கை அமைப்பில், பல அசாதரண அர்த்தங்களைக் கொண்டது. பிழைப்பதற்கு அது பிரதிநிதித்துவப் படுத்தும் காரியங்கள், எதெல்லாம் தர்மங்கள் அல்ல என்று ஒரு காலத்தில் கருதப்பட்டனவோ, அதெல்லாம். வெளிப்புலன் களால், அன்றாடம் வாழ்க்கையை நடத்த நியாயங்களாகிப் போன நமது செய்கைகளினால் பாதிக்கப்பட்ட அறிவின் ஆளுகையில் உள்ளது இந்த மனம். இப்படிப்பட்ட சாதாரண கவைக்குதவாத மனதைப் பற்றி இங்குக் குறிப்பிடப்பட வில்லை.


ஒருவினாடி பேசுவதை நிறுத்தித் தொடர்ந்தார் தேவதேவன். "'அதெற்கென்ன செய்வது?.. நான் பெற்றிருப்பது இந்த மனம் தானே?.. சரி. அந்த விசேஷ மனம் எங்கு கிடைக்கும்?' என்பதே நம் கேள்வியாக இருக்குமானால், அதற்கும் பதில் கிடைக்கிறது. கிடைத்த மனதை எப்படிப் பக்குவப்படுத்த வேண்டும் என்பதற்கு வழி தெரிகிறது. இந்த மனமும் இறைவன் கொடுத்த சரக்கு. அதனால் தான், இதுவும் அவனின் கூறு--அவன் சம்பந்தப்பட்டது என்பதினால் தான், அவனை அறியும் முயற்சிக்கு இதுவும் சாதனமாகப் பயன்படுகிறது என்கிற பணிவு வேண்டும். இந்தப் பணிவு தான் அவன் அருளால் அவன் தாள் வணங்கி என்பது.


"அவன் நமக்கு இதை அளித்தபொழுது மாசுமருவற்றிருந்ததை அசிங்கப்படுத்தியது நாம் தான் என்கிற உணர்வு வந்தால், அதை சுத்தம் செய்கிற பொறுப்பும் தன்னால் வரும். அந்த சுத்தமும் நம் நன்மைக்காகத்தானே தவிர இன்னொருவருக்காக அல்ல. உலகுக்கே சொந்தமான தெய்வப்புலவர் திருவள்ளுவப் பெருமான், 'மனத்துக்கண் மாசிலன் ஆதல், அனைத்து அறன், ஆகுல நீர பிற' என்று சொன்னது இதைத்தான். 'மனம் வெளுக்க மார்க்கம் காணீர்' என்றான் எங்கள் ஊர் பாட்டுக்கொரு புலவன். 'காதறுந்த ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே' என்றிருக்க, போகும் ஊருக்குக் கொண்டு போக பெரிய பொக்கிஷமே கூட வருகிறது என்னும் பொழுது யாருக்குத் தான் இதன் மேல் ஆசை வராது?.. இந்த பொக்கிஷத்தில் ஒரு விசேஷமும் உண்டு. இப்பூவுலகில் சேர்த்து வைத்திருக்கும் வீடு,நகை,காசு இன்னபிற ஆஸ்திகளெல்லாம் கூடவராத செல்லாக் காசாகிப்போகும் போது, போகும் ஊரில் செல்லும் காசு இது மட்டுமே. அங்கு நல்ல மரியாதையை அளிக்ககூடிய நல்லாத்மா என்கிற சுமக்கக் சுமக்க சுகமளிக்கிற பொக்கிஷ மூட்டை இது" தொடர்ந்து உரையாற்றிக் கொண்டிருந்த தேவதேவன் லேசாக உணர்ச்சி வயப்பட்டாரோ என்று கூடத் தோன்றியது. அந்த அளவுக்கு தான் உரையாற்றும் செய்தியில் ஒன்றிப் போயிருந்தார் அவர்.


"நான் தென்னகத்து கோயில் நகரத்தில் பிறந்து வளர்ந்தவன். 'நகரேஷூ காஞ்சி' என்று பெருமைக்குரிய காஞ்சிபுரத்தில் சின்ன வயது பூராவும் சுற்றித்தெரிந்தவன். பெரிய காஞ்சிபுரத்தில் உலகளந்த பெருமாளுக்கு ஒப்பற்ற கோயில் ஒன்று உண்டு. கோயில் சந்நிதியில் திருவிக்ரம அவதாரக் காட்சியாய், வலது கால் ஊன்றி, இடது கால் தூக்கிய நிலையில் பிர்மாண்டமாய் பெருமாள் எழுந்தருளியிருப்பார்.. திருவடியைக் காண்பவர், அண்ணாந்து நம் பார்வை எட்டும் தூரம் தாண்டி தலைநிமிர்த்தி 'யாம் பெற்ற பேறு என்னவோ, பெருமானே' என்று அன்று உலகை ஓரடியாய் அளந்தவனின் திருமுடியைத் தரிசித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அதுவும் எப்படி?.. மூலசந்நிதியில் கும்மிருட்டாய் இருக்கும். பட்டாச்சாரியார் பெருமாளுக்குத் தீபாராதனைக் காட்டிய பின், அப்படியே அந்த குடவிளக்கைத் தூக்கி பெருமாளை கீழிருந்து மேலாகக் காட்டி, 'உலகளந்த பெருமாளைச் சேவிச்சுக்கோங்கோ.." என்று காட்டுவார். அவர் கையுயர்ந்து தீபவிளக்குச் சுடர் மேலே போகையில், பெருமாளின் முகதரிசனம் கிடைத்து அவன் அழகு நம்மை ஆட்கொண்டு 'அம்மாடி' என்றிருக்கும்...


"அப்பொழுது தரிசித்த அந்த தரிசனம் தான் இப்பொழுது இந்த வார்த்தைகளைச் சொல்கையில் என் நினைவில் நிழலாடுகிறது. 'தூய்மையான புத்தியால் துலக்கப்பட்ட மனம் பளிச்சென்று தீபமாய்த் திகழும்; இந்த தீபம் ஆன்மாவின் மூலை முடுக்கெல்லாம் தெற்றெனக் காட்டக்கூடிய வல்லமை மிக்கது' என்பார் பாரதத்தின் தவச்செல்வர் சுவாமி விவேகானந்தர்.


"அந்த ஞானச்சுடரை, தவயோகியை நெஞ்சில் நிறுத்தி மேலும் தொடருவோம்" என்றார் தேவதேவன்.


(தேடல் தொடரும்)
4 comments:

கபீரன்பன் said...

///எதெல்லாம் தர்மங்கள் அல்ல என்று ஒரு காலத்தில் கருதப்பட்டனவோ, அதெல்லாம். வெளிப்புலன் களால், அன்றாடம் வாழ்க்கையை நடத்த நியாயங்களாகிப் போன நமது செய்கைகளினால் பாதிக்கப்பட்ட புத்தியின் ஆளுகையில் உள்ளது இந்த மனம். இப்படிப்பட்ட சாதாரண கவைக்குதவாத மனதைப் பற்றி இங்குக் குறிப்பிடப்பட வில்லை.///

தர்மம் என்று தெரிந்தும் நடமுறைப்படுத்த தைரியமற்ற மனதை கவைக்குதவா மனம் என்று குறிப்பிட்டிருப்பது மிகவும் பொருத்தம்.

//..மற்றபடி அவரவர்களின் சுய ஈடுபாட்டின் அடிப்படையில் அமையக் கூடியதே மற்றதெல்லாம்...////

குதிரையை நீர் வரைக்கும் அழைத்துத் தான் செல்ல முடியும். நீர் அருந்துவதும் அருந்தாததும் அதற்கு விட்டது.

//அசிங்கப்படுத்தியது நாம் தான் என்கிற உணர்வு வந்தால், அதை சுத்தம் செய்கிற பொறுப்பும் தன்னால் வரும். அந்த சுத்தமும் நம் நன்மைக்காகத்தானே தவிர இன்னொருவருக்காக அல்ல.//

தேவதேவன் அளவான வார்த்தைகளில் பெரும் கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். தொடரட்டும் அவர் சொற்பொழிவு.
நன்றி

ஜீவி said...

தொடர்ந்து வருவதற்கும் உற்சாக- மூட்டலுக்கும் மிக்க நன்றி, கபீரன்ப!

கிருத்திகா ஸ்ரீதர் said...

""அவன் நமக்கு இதை அளித்தபொழுது மாசுமருவற்றிருந்ததை அசிங்கப்படுத்தியது நாம் தான் என்கிற உணர்வு வந்தால், அதை சுத்தம் செய்கிற பொறுப்பும் தன்னால் வரும். அந்த சுத்தமும் நம் நன்மைக்காகத்தானே தவிர இன்னொருவருக்காக அல்ல."
ரொம்ப எளிமையா ஆத்ம சுத்தி ஏன்வேண்டும் என்ற கேள்விக்கு விடை சொல்லிட்டீங்க...

ஜீவி said...

@ கிருத்திகா!

தொடர்ந்து வருதலுக்கு நன்றி, கிருத்திகா!

Related Posts with Thumbnails